அழகிகள், மர்மங்கள், கற்பனைகள்

தமிழில் பொதுவாக நடிகைகளை ரசிப்பார்கள், ஆராதிப்பதில்லை. ஆகவே சீக்கிரமே நடிகைகள் திரையிலிருந்து விலகிவிட நேர்கிறது. புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கேரளத்தில் அப்படி அல்ல, நடிகைகளை பெண்கள் ஆராதிக்கிறார்கள். ஆகவே நடிகைகளில் சூப்பர்ஸ்டார்கள் உருவாகிக் கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்காலம் நீடிக்கிறார்கள். கடைசி சூப்பர் ஸ்டார் என்றால் மஞ்சு வாரியர்தான்.

முன்பு ஷீலா, சாரதா, ஜெயபாரதி போன்ற பல சூப்பர் ஸ்டார்கள் மலையாளத்திரையை ஆண்டிருக்கிறார்கள். நடுவே ஓர் அலையென வந்து சென்றவர் விஜயஸ்ரீ. நான் மாணவனாக இருந்த நாட்களில் அவர்தான் கேரளத்தின் பிரியத்திற்குரிய அழகி. கேரளத்தில் சிவப்பாக குண்டாக இருக்கும் நடிகைகளுக்குத்தான் பெரும்பாலும் செல்வாக்கு, சாரதா விதிவிலக்கு.

1953ல் திருவனந்தபுரத்தில் மணக்காடு என்னுமிடத்தில் விளக்காட்டு வாசுபிள்ளைக்கும் விஜயம்மைக்கும் மகளாக பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. 1966ல் தன் பதிமூன்றாம் வயதில் சித்தி என்ற தமிழ் சினிமாவில் தோன்றினார். 1969 ல் பதினாறாவது வயதில் பூஜாபுஷ்பம் என்னும் மலையாளப் படத்தில் நாயகியானார்.

விஜயஸ்ரீ ஐந்தாண்டுகளில் 41 மலையாளப் படங்களில் நடித்தார். ஆண்டுக்கு பத்துபடங்கள் வரை. அவற்றில் பல படங்கள் அன்றைய முதன்மை நடிகர்களான சத்யன், பிரேம்நஸீர், மது போன்றவர்கள் நடித்தவை. உதயா, நவோதயா போன்ற பெரிய ஸ்டுடியோக்கள் தயாரித்த சரித்திரப்படங்களும் அவற்றிலுண்டு. மிகவெற்றிகரமான நடிகையாகத் திகழ்ந்தார். பல படங்களின் போஸ்டர்களில் நடிகர்களைவிட அவருடைய முகம் பெரிதாக தெரிகிறது.

1974ல் தன் 21 ஆவது வயதில் விஜயஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரில் ஒரு படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது அவர் டீ குடித்தார், அங்கேயே மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர்துறந்தார். ஆனால் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை. அவர் இயற்கையாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய சினிமா இதழ்கள் அவர் தற்கொலை செய்துகொண்டதாக எழுதின. காலப்போக்கில் பல நடிகர்கள், நடிகைகள் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதிப்படுத்தினர்.

விஜயஸ்ரீயின் கடைசிப்படமான யௌவனம் புகழ்பெற்ற கலைப்பட இயக்குநரான பாபு நந்தங்கோடு இயக்கியது. [தமிழின் முக்கியமான கலைப்படமான தாகம் அவரால் இயக்கப்பட்டது]. யௌவனம் படத்தின் கதைநாயகனாகிய நடிகர் ராகவன் பின்னாளில் ஒரு பேட்டியில் விஜயஸ்ரீ பெரிய திரைநிறுவனங்களுக்கு இடையே நடந்துவந்த சண்டைக்கு பலியானவர் என்று சொன்னார். மாத்ருபூமி நாளிதழில் ரவிமேனன் எடுத்த பேட்டி.

விஜயஸ்ரீயின் தோழியும் நகைச்சுவை நடிகையும் பின்னாளில் கர்நாடக சங்கீத பாடகியுமான ஸ்ரீலதா நம்பூதிரி விஜயஸ்ரீக்கு ஒரு காதலன் இருந்தான், அவனால் கைவிடப்பட்டதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றார். வெப்துனியா பேட்டி.

எண்பதுகள் வரை மலையாள சினிமா பெரிய ஸ்டுடியோக்களின் ஆட்சியில் இருந்தது. உதயா, நவோதயா, மஞ்ஞிலாஸ், மெரிலாண்ட் போன்ற ஸ்டுடியோக்கள் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்தன. அன்று அவர்களுக்கு எதிராக நடிகர்கள் வாய் திறக்கவில்லை.

ஆனால் சில சினிமா ஊடகங்கள் விஜயஸ்ரீயின் சாவு பற்றி எழுதிக்கொண்டே இருந்தன. குறிப்பாக மலையாள திரையிதழான நானா. அதில் விஜயஸ்ரீ அளித்த ஒரு பேட்டியில் சிலர் தன்னை பிளாக்மெயில் செய்வதாகச் சொல்லியிருந்தார். விஜயஸ்ரீயின் சாவுக்குக் காரணம் உதயா ஸ்டுடியோவின் நிறுவனரும் தலைவருமான இயக்குநர் குஞ்சாக்கோ தான் என அவ்விதழ் குற்றம் சாட்டியது.

நானா சொன்ன கதை இதுதான். பொன்னாபுரம்கோட்டை என்னும் சினிமாவின் படப்பிடிப்பின்போது காட்டுக்குள் ஓர் அருவியில் விஜயஸ்ரீ நீராடும் காட்சி எடுக்கப்பட்டது. தூரத்தில் காமிரா இருந்தது. காமிராமேன் என்.ஏ.தாரா என்பவர் [ஆண்]. அந்தப்பாட்டு ‘வள்ளியூர் காவிலே கன்னிக்கு வயநாடன் புழயில் இந்நு ஆறாட்டு’

அருவியில் விஜயஸ்ரீயின் ஆடை அவிழ்ந்து போயிற்று. அவர் தவிக்க உடனே இயக்குநரும் காமிராமேனும் ஸூம் போட்டு அவருடைய நிர்வாணக் காட்சியை படம்பிடித்தனர். அக்காட்சியை வெளியிட்டு விடுவதாகச் சொல்லி விஜயஸ்ரீயை மிரட்டினர். பல தவறான செயல்களுக்கு இழுத்தனர்.

விஜயஸ்ரீ ஓர் இஸ்லாமியரை திருமணம் செய்வதாக இருந்தார். அதன்பொருட்டு மதம் மாறி இஸ்லாமியப் பெயரையும் சூட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப்படம் வெளிவந்தபோது விஜயஸ்ரீயின் அரைநிர்வாணக் காட்சிகள் அதில் இடம்பெற்றன. அதைக்கண்டு அவருடைய காதலர் அவரை கைவிட்டார். மன உளைச்சல் தாளாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தக் கதை பலவகையாக இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளது. சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. தீதி தாமோதரன் எழுத ஜெயராஜ் இயக்கத்தில் நாயிகா என்னும் ஒரு சினிமா இந்தக் கருவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அது நடிகை சாரதாவுக்கும் மறைந்த விஜயஸ்ரீக்கும் இருந்த நெருக்கத்தைப் பற்றியது. சாரதாவே சாரதாவாக நடித்தார். சாரதாவின் இளம்பருவத்தை பத்மபிரியா நடிக்க பிரேம்நஸீராக ஜெயராம் நடித்தார்.

நிர்வாணக் காட்சியை காட்டி பயமுறுத்தப்பட்ட இளம்நடிகை எல்லா உண்மையையும் ஊடகங்களில் சொல்வேன் என திருப்பி பயமுறுத்தியதனால் அவர் லிப்ஸ்டிக்கில் விஷம் சேர்க்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று நாயிகா சினிமா காட்டியது. மனம் வெறுத்துப்போன சாரதா மலையாள சினிமாவையே உதறி ஹைதராபாத் செல்கிறார் என்றும் மீண்டும் நீண்டநாட்கள் கழித்து திரும்ப மலையாளத்தில் நடிக்க வருகிறார் என்றும் கதை காட்டியது.ஆனால் திரைக்கதை ஒழுக்குடன் இல்லாததனால் படம் வெற்றிபெறவில்லை.

அசல் நசீர்

https://youtu.be/5-hyR2UqYfQ

நகல் நசீர்- நாயிகா

உண்மையில் என்ன நடந்தது? அதை இனிமேல் தெரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் உதயா ஸ்டுடியோவுக்கு பெண்சாபம் விழுந்தது என மக்கள் நம்புகின்றனர். படங்கள் ஓடாமலாகி பெரிய நஷ்டம் வந்து குஞ்சாக்கோவின் ஸ்டுடியோ நொடித்தது அதனால்தான். அவர் குடும்பத்திலும் பல இழப்புகள். குஞ்சாக்கோவின் பேரன்தான் புகழ்பெற்ற நடிகர் குஞ்சாக்கோ போபன். அவர் காலத்தில்தான் அக்குடும்பம் மீண்டு எழுந்தது என்கிறார்கள்.

மர்லின் மன்றோவின் சாவு பற்றி எத்தனை கதைகள் உள்ளனவோ அதேயளவு கதைகள் விஜயஸ்ரீ சாவுபற்றி உள்ளன. இப்போது மூன்றாம் தலைமுறையாக அவற்றைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு மலையாள எழுத்தாளரைப் பார்த்தேன். விஜயஸ்ரீ சாவு பற்றி ஒரு நாவல் எழுதப் போவதாகச் சொன்னார்.

சினிமா உலகம் என்பது மூன்று விசைகளால் உருவாக்கப்படும் ஒரு பெரும்புனைவு. சினிமா என்னும் புனைவு, சினிமாக்காரர்களின் வாழ்க்கை என்னும் புனைவு, பார்வையாளர்களின் கற்பனை என்னும் புனைவு. அது வானம்போல முடிவில்லாதது. அதில் விண்மீன்கள் தோன்றி மறைகின்றன. எரிநட்சத்திரங்கள் சுடர்ந்து மறைகின்றன. உண்மை என ஒன்றை அங்கே தேடிக் கண்டடையவே முடியாது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.