Jeyamohan's Blog, page 896
October 20, 2021
அஜ்மீர் ஜானே!
மீண்டும் ஓர் இரவு, கவாலியின் பித்தில். அதிலுள்ள மாயம் என்பது ஒருவகையான முரட்டுத்தனம் என்று படுகிறது. யானையில் தெரியும் குழைவு போல அதில் உருவாகும் மென்மையான நளினம்
க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்! குவாஜா ஜி மகாராஜா!இல்லம்தேடி கல்வி- ஒரு மாபெரும் வாய்ப்பு
தமிழக அரசு இல்லம்தேடி கல்வி என்னும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. கோவிட் தொற்று காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டமையால் கிராமப்புறங்களில் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டது. அதை ஈடுசெய்யும் விதமாக தன்னார்வலர்களைக் கொண்டு குழந்தைகளை வீடுதேடிச்சென்று ஆரம்ப எழுத்தறிவிப்பை நிகழ்த்தும் திட்டம் இது. ஒருவகையில் இந்தியாவுக்கே முன்னோடியான முயற்சி. இது வெல்லவேண்டும்,
இல்லம்தேடி கல்வி என்னும் இணையதளம் வழியாக அரசு தன்னார்வலர்களுக்காக அழைப்பு விடுத்துள்ளது. இதில் நண்பர்கள், அவர்களின் மகன்களும் மகள்களும் தன்னார்வலர்களாகச் சற்றேனும் பங்குபெறவேண்டுமென விரும்புகிறேன். சேவை என்பதற்கு அப்பால் இது மெய்யாகவே நம் சமூகமும் நம் கிராமங்களும் எப்படி உள்ளன என்று இளைஞர்கள் அறிவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும். அது பெரிய ஒரு திறப்பு.
முன்பு வயதுவந்தோர் கல்வி இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த நண்பர்கள் பலர் தங்கள் வாழ்க்கைக்கான அடிப்படைக் கல்வி அந்த கிராம அனுபவங்கள் வழியாகவே கிடைத்தது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். வயதுவந்தோர் கல்வி இயக்கத்துடன் தொடர்புகொண்டிருந்த பலர் விற்பனை- விரிவாக்கம் சார்ந்த துறைகளில் சாதனை புரிய இந்த அனுபவமே அடித்தளமாக அமைந்தது. அவர்களின் தயக்கத்தை உடைத்து, அவர்கள் தங்கள் திறன்களை கண்டடைய வழியமைத்தது.குறிப்பாக முறைசார் கல்விக்கு அப்பால் வாழ்வனுபவமே இல்லாத நகர்ப்புற இளைஞர்களுக்கு இது ஆளுமைப்பயிற்சிக்கான களம்.
மக்களைத் தொடர்புகொள்வது, ஏற்கவைப்பது, ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் இருக்கும் திறமையே நவீனத் தொழில்- வணிகக் கல்வியின் அடிப்படையாக இன்று உள்ளது. வருங்காலத்தில் மேலும் அது முக்கியமாக ஆகும். ரிஷிவேலி பள்ளி போன்ற உயர்தரக் கல்வியமைப்புகளில் அவர்கள் பல ஆண்டுகளாக இதை அவர்களே ஒருங்கிணைத்து மாணவர்களை பயிற்றுவிக்கின்றனர். அமெரிக்கக் கல்விநிலையங்களில் இருந்து மாணவர்களை மூன்றாமுலக நாடுகளுக்கே அனுப்பி இந்த அனுபவத்தை அடையவைக்கின்றனர். குறிப்பாக ஆப்ரிக்காவுக்கு. என் நண்பரின் மகள் கனடாவில் இருந்து அவருடைய கல்லூரியால் தமிழகத்தில், திருவண்ணாமலையில் இருளர்களிடம் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டார்
இந்த வாய்ப்பு உயர்தரக் கல்வி நிறுவனங்கள் அல்லாதவற்றில் பயில்பவர்களுக்கு இன்று அரிது.அக்கல்விநிறுவனங்கள் இப்படி ஓர் இயக்கத்தை ஒருங்கிணைக்க முடியாது. அவர்களுக்கு இது பெரிய வாய்ப்பு. இதில் ஈடுபடுபவர்கள் முடிந்தவரை சிற்றூர்களுக்குச் சென்று பணியாற்றவேண்டும். எனில் இது அளிக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஆற்றலாக, இனிய நினைவுகளாக எஞ்சும்.
அரசுசார் செயல்பாடுகளுக்கு பலவகையான முறைமைகள் உண்டு. பல்லாயிரம் பேர் சேர்ந்து செயல்படும் இயக்கம் அதற்கான உள்முரண்பாடுகளும் ஊடுபாவுச் சிக்கல்களும் கொண்டுதான் இயங்கும். ஒட்டுமொத்தமாக இத்தகைய இயக்கத்தின் கனவும் பங்களிப்பும் மிகப்பெரிதாக இருக்கையில் தனித்தனி அலகுகளில் அது மிகுந்த நடைமுறைத் தன்மையுடனேயே இருக்கும். இலட்சியக்கனவுகளுக்கும் நடைமுறைக்கும் இடையேயான இயக்கவியலை, அரசுத்துறைகளின் செயல்பாட்டுமுறைமைகளை அறிய இளைஞர்களுக்கு இது வழியமைக்கும்.
நன்னம்பிக்கையுடன் , சாதகமான உளநிலையுடன் செயல்படவேண்டும். எளிதில் சோர்வுறாமல் செயல்புரியும் பொறுமை வேண்டும். அவற்றை அடைவதைப்போல வாழ்வுப்பயிற்சி வேறில்லை. இளமையிலேயே எதையாவது செய்துவிட்டோம் என்னும் எண்ணம் அளிக்கும் தன்னம்பிக்கை வாழ்க்கை முழுமைக்கும் நீள்வது. எங்கும் தயங்கிநிற்காமல் மேலே செல்லவைப்பது. உண்மையில் ஒரு மாபெரும் கல்வி வாய்ப்பு என எண்ணி பெற்றோர் தங்கள் மைந்தர்களை அனுப்பிவைக்கவேண்டிய பணி இந்த தன்னார்வலர் இயக்கம்.
இல்லம்தேடி கல்வி இணையதளம்ஜெயராம், கடிதங்கள்
கல்வலைக்கோடுகள்,ஜெயராம் கடிதம்
ஜெயராமின் கடிதம் ஒரு பெரிய அனுபவத்தை அளித்தது. மொத்தமாக அந்த உரையாடலே ஒரு அருமையான கதைபோல ஆழமான புரிதல்களை அளித்தது. நீங்கள் அவருடைய ஓவியங்களைப் பற்றி எழுதியது, அதற்கு வந்த கடிதம், அவர் அளித்த பதில் எல்லாமே கலை செயல்படும் விதம் என்ன, கலைஞர்களின் மனநிலைகள் என்ன என்ற புரிதல்களை அளித்தன. மின்னல்கள் போல அற்புதமான பல வரிகள்.
குறிப்பாக போர்ப்பயிற்சிக்கும் ஓவியக் கலைக்குமான உறவு. நான் நினைத்தே பார்த்ததில்லை. ஆனால் போர்ப்பயிற்சிக்கும் இசைக்கும் உறவுண்டு என்று தெரியும். ஓவியக்கோடுகளைக் கொண்டே அவற்றிலுள்ள போர்க்கலைத் தன்மையை உணரமுடியும் என்பது ஆச்சரியமானது
அதேபோல கருமையைப் பற்றி அவர் சொன்னது. அவருடைய புரிதல் கவித்துவமானது. மொழியில் கவித்துவத்தை அடைந்தபின் வண்ணங்களில் முயல்கிறார். மேலைநாட்டு ஓவியர்கள் எல்லாருமே ஆழமாகப் பேசவும்கூடியவர்கள். இங்கே சில்லறை அரசியல்தான் பேசுகிறார்கள். ஜெயராம் அழகியலை, உணர்வுக்ளைப் பேசுகிறார் என்பது நிறைவளிக்கிறது
ஆர்.பாலகிருஷ்ணன்
ஜெயராம் எழுதிய கடிதம் கூர்மையானது. தமிழில் கலை உருவாக்கம் பற்றி எழுதப்பட்ட நல்ல குறிப்புகளில் ஒன்று. அவர் எழுதிய முந்தைய கடிதங்களைப் பார்த்தேன். அவருடைய மொழி உணர்வுபூர்வமானது. முன்பு ஏ.வி.மணிகண்டன் எழுதிய சில கட்டுரைகளில் கலையின் செயல்பாட்டை மொழியால் சொல்லிவிட முயலும் நுட்பமான பதிவு இருந்தது.
ஜெயராமுக்கு வாழ்த்துக்கள்
மகாதேவன்
இந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்
கலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]
ஜெயராமின் கடிதம் ரொம்ப பிடித்தது. கடந்த new இயர் நிகழ்வில் நேரில் பார்த்திருக்கிறேன், ஓவியர் னு தெரியும், கொஞ்சம் பேசியிருக்கேன், இன்று வெளிவந்த கடிதம் பார்த்து அசந்துட்டேன், அவருக்கு என் அன்பு. காமம் காதலாகி பின்பு தூய அன்பாக மாறுவது போல வீரம் தற்காப்பு பின் கலையாக மாறுவது னு சொல்ற வரி படிச்சு அசந்துட்டேன், இந்த வரிசை அடுக்கு அமைப்பு பார்த்து. கடிதத்தின் மொழிநடை கூட நல்லா இருக்கு. அவருக்கு என் வாழ்த்துக்கள்
ராதாகிருஷ்ணன்
கல்வலைக்கோடுகள்- கடிதம்October 19, 2021
அ.மார்க்ஸ்- வாழ்த்துக்கள்
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்- தமிழரசி அறக்கட்டளை வழங்கும் 2021 ம் வருடத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் அ.மார்க்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அஜ்மீர் பயணம்-3
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி இந்தியாவின் சூஃபி மரபின் மையப்பெரும் ஆளுமைகளில் ஒருவர். இசையில் அல்லது இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் அப்பெயரை அவ்வப்போது கேட்டிருக்கலாம். இந்திய சூஃபி, கஸல் இசைமரபுகளின் ஊற்றுமுகம் அவரே. கவிஞர், பாடகர், மெய்ஞானி என்னும் முகங்கள் கொண்டவர்.
முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி [Muhammad Mu’in ud-din Chishti] என்னும் இயற்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கைக்காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. (1141-1230). இந்தியாவில் இஸ்லாம் நுழைந்த காலகட்டம். கரீப் நவாஸ், ஏழைகளின் காவலன் என்று அவருக்கு பட்டப்பெயர் உண்டு. அவருடைய மாணவர்களில் முதன்மையானவர் பக்தியார் காகி. அவரிடமிருந்து பாபா ஃபரீத், நிஜாமுதீன் அவுலியா என ஒரு நீண்ட குரு-சீட வரிசை உண்டு. இந்தியாவெங்கும் ஏராளமான சூஃபி ஞானிகள் அஜ்மீரி என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மொய்னுதீன் ஷிஷ்டி அவர்களின் மரபைச் சார்ந்தவர்கள் என்பது நம்பிக்கை.
மொய்னுதீன் சிஷ்டி அவர்கள் ஆப்கானிஸ்தானின் சிஷ்டான் என்னும் ஊரில் பிறந்தவர். அவர் முகமது நபியின் குருதிவழியில் வந்தவர், ஆகவே சையத் என்னும் குடிப்பெயர் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் பாரசீகத்தில் [இன்றைய ஈரானில்] வளர்ந்தவர். பாரசீகமே சூஃபி பண்பாட்டின் விளைநிலம்.
இளமையில் குடும்பவழியாகப் பெற்ற தன் திராட்சைத் தோட்டத்தில் கொடிகளுக்கு நீரூற்றிக்கொண்டிருந்தபோது புகழ்பெற்ற சூஃபி ஞானியான ஷேக் இப்ராகீம் க்யிண்டுஸி [Shaikh Ibrahim Qunduzi] அவர்கள் அவரைச் சந்தித்து சூஃபி மெய்ஞானத்தை அளித்தார். கதைகளின்படி மொய்னுதீன் அவர்கள் ஷேக் இப்ராகீம் அவர்களுக்கு திராட்சைகளை பரிசாக அளித்தார். அவர் பதிலுக்கு ஒரு துண்டு ரொட்டியை அளித்தார். ஓதி அளிக்கப்பட்ட அந்த ரொட்டி மொய்னுதீன் அவர்களை இவ்வுலகிலிருந்து இன்னொரு உலகுக்கு கொண்டுசென்றது. சூஃபி மெய்ஞானத்தின் திறப்பை அடைந்த அவர் தன் உடைமைகளைத் துறந்து மெய்ஞானக்கல்விக்காக புகாரா நகரத்திற்குப் பயணமானார்.
மொய்னுதீன் அவர்கள் புகாரா, சமர்கண்ட் போன்ற நகர்களில் இஸ்லாமிய கல்வி அளிக்கும் பல்வேறு அமைப்புகளில் கற்றிருக்கிறார். இறுதியாக சிஷ்டி மரபைச் சேர்ந்த மெய்ஞானியான உதுமான் ஹாருனி [Uthman Haruni] அவர்களின் மாணவரானார். அவருடன் மெக்காவுக்கும் மதினாவுக்கும் சென்றார். பின்னர் நபிகள் நாயகம் அவர் கனவில் வந்து அளித்த ஆணையை ஏற்று இந்தியாவுக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி இந்தியாவுக்கு சிஷ்டி மரபை அறிமுகம் செய்தவர். சூஃபி மரபில் தாரிகா [tariqa] என்னும் சிந்தனைப்போக்குகள் உண்டு. அவற்றில் ஒன்று சிஷ்டி மரபு. ஆப்கானிஸ்தானில் ஹெராத் நகர் அருகே உள்ள சிஷ்ட் என்னும் சிற்றூரில் தோன்றிய சிந்தனை மரபு என்பதனால் இப்பெயர். பொதுயுகம் 930 வாக்கில் இது உருவானது. உருவாக்கியவர் அபு இஷாக் ஷாமி [Abu Ishaq Shami]. என்னும் ஞானி. சிஷ்டி, குவாத்ரி, சுஹ்ரவர்தி, நாக்ஸ்பந்தி என்னும் நான்கு மரபுகள் சூஃபி மெய்ஞானத்திற்குள் உள்ளன. (Chishti, Qadiri, Suhrawardi, Naqshbandi) குவாஜா மொய்னுதீன் ஷிஷ்டி அபு இஷாக் ஷாமியின் மாணவர் வரிசையில் ஏழாவது தலைமுறையினர்.
மொய்னுதீன் சிஷ்டி இந்தியா வந்தது சுல்தான் இல்டுமிஷ் காலத்தில். அவர் லாகூரில் சிலகாலம் இருந்தார். அங்கிருந்து டெல்லிக்கும் இறுதியாக அஜ்மீருக்கும் வந்தார். அஜ்மீரிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அஜ்மீரில் அவர் இரண்டு பெண்களை மணமுடித்தார். மூத்த மனைவி சையத் வாஜுதீன் என்னும் தளபதியின் மகள். இரண்டாம் மனைவி உள்ளூர் இந்து அரசர் ஒருவரின் மகள். அவருக்கு அபுய் சையத், ஃபகிர் அலாதீன், ஹூசெய்ம் அலாதீன் என்னும் மூன்று மகள்களும் பீபி ஜமால் என்னும் மகளும் பிறந்தனர்.
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் இறையியல் பங்களிப்பு என்று மூன்று விஷயங்களைச் சொல்லலாம்.
அ. அகநோன்பு. ஒருவர் தன்னுடைய மெய்யறிதலை, விடுதலையை தனக்குள் ஆழ்ந்து சென்று தன் அனுபவமாக இறையை அறிந்து அருகணைவதன் வழியாக அடையலாம். இந்த ’அகவயமான ஆன்மிகப்பயணம்’ இஸ்லாம் முன்வைக்கும் கூட்டான, அமைப்பு சார்ந்த ஆன்மிகப் பயிற்சிகளுக்கு மாறானது. ஆனால் இது சூஃபி மரபின் மையக்கருத்தும்கூட. இந்து மரபில் ஆத்மானுபூதி என்று சொல்வதற்கு மிக அணுக்கமானது இது.
ஒருவர் உலகியலை துறந்து துறந்து செல்வது சூஃபி ஞானத்தின் வழிகாட்டல்களில் முக்கியமானது. அதனூடாக அவர் தன்னை எளிமைப்படுத்திக்கொண்டே செல்கிறார். எளிமை என்பது சூஃபி மரபில் மிக அடிப்படையான கலைச்சொல். அது ஓர் ஆன்மா தன்னை தூய்மையாக்கிக் கொண்டே செல்வது. ஒரு நிலையில் ஆன்மா தன்னை முழுமையாக தூய்மையாக்கிக் கொள்கிறது. விளைவாக இறைவனுக்கும் அந்த ஆன்மாவுக்குமான இடைவெளி அகல்கிறது. அந்த ஆன்மா தன் இன்மையை உணர்கிறது. இங்குள்ள எல்லாம் இறை மட்டுமே என அறிகிறது. அதையே ’அனல் ஹக்’ என்னும் சொல்லாட்சி குறிப்பிடுகிறது. “நான் இறையே” என்று அதற்குப்பொருள்.
இந்த மெய்நிலையை குரானிலுள்ள ரப்பானிய்யா [rabbaniya] என்ற சொல்லாட்சியால் குறிப்பிடுகிறார்கள். ஹதீதுகளில் இஷான் அல்லது சுலுக் [ihsan, suluk] என்று சொல்லப்படும் நிலை இது. சிஷ்டி மரபில் தாரிகாத் [tariqat] என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. சூஃபி வரலாற்று நூல்களில் தாரிகாத் என்னும் சொல்லை சூஃபி மரபு ஷரியத் என்னும் சொல்லுக்கு நிகராகவே பயன்படுத்துகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ஷரியத் என்பது ஓர் இஸ்லாமியன் கடைக்கொள்ளவேண்டிய அன்றாடக் கடமைகள், மற்றும் வாழ்நாள் நெறிகளை வலியுறுத்துவது. தார்காத் என்பது அவன் தன்னகத்தே கொள்ளவேண்டிய ஆன்மிகச் சுத்திகரிப்பை முன்வைப்பது
இதனடிப்படையில் சூஃபி மரபு இரண்டு நடைமுறைகளை முன்வைக்கிறது. ஒன்று மக்கள் பணி, ஏழைகளுக்கான சேவை. இதை பேதமில்லாமல் அனைத்து மானுடருக்கும் ஆற்றவேண்டும். இது மானுடசேவை அதாவது கிதாமத்-இ-கலக் [Khidmat-e-Khalq] எனப்படுகிறது. இரண்டாவது ஒரு ஆன்மசாதகன் தன்னுள் பெருகும் உலகியல் வேட்கை, உடைமைவெறி, ஆணவம், சினம் ஆகிய அழுக்குகளுக்கு எதிராக சலிக்காமல் போராடி ஆன்மாவை தூய்மை செய்துகொண்டே இருத்தல். இதை ஆன்மப்போர் அதாவது ஜிகாத்-பில்-நஃபிஸ் [jihad bil-Nafs] என்கிறது. சூஃபி மரபு சொல்லும் புனிதப்போர் என்பது இதுதான்.
ஆ. இசையும் கலையும். ஆன்மசுத்திகரணம் என்பதை முன்னிலைப் படுத்துவதனால் சூஃபி மரபு, குறிப்பாக சிஷ்டி மரபு இசையையும் கலையையும் மெய்மைக்கான வழியாகக் காண்கிறது. இசை போகத்துடன் தொடர்புடையது என்பதனால் ஆசாரவாத இஸ்லாம் அதை பாவம் என விலக்கியது. ஆனால் மொய்னுதீன் சிஷ்டி இசை ஆன்மிக அனுபவமாக அமையும் என்றால், சினம் ஆணவம் போன்ற அகமலங்களை அழிக்கும்படியாக இசைக்கப்படும் என்றால், அது ஆன்மிக மீட்புக்கான கருவியே என்று சொன்னார். அவருடைய இந்த வழிகாட்டல்தான் இந்தியாவில் இஸ்லாமிய இசைப்பெருமரபு ஒன்று உருவாகி நிலைகொள்ள வழிவகுத்தது.
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களே பெருங்கவிஞர். அவர் இயற்றிய இசைப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவரே பாடகரும்கூட. கஸல் இசைவடிவத்தின் தொடக்கப்புள்ளியான அமிர் குஸ்ரு போன்ற பெருங்கவிஞர்கள் அவருடைய மரபில் வந்தவர்கள். பிற்காலத்தில் மிர்ஸா காலிப் வரையிலான இஸ்லாமியப் பெருங்கவிஞர்களின் முதலாசிரியர் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களே.
இ. ஒத்திசைவு இஸ்லாம் எல்லா ஒருங்கிணைவுள்ள மதங்களையும்போல தன் தரிசனத்தை முன்வைத்து பிறவற்றை மறுக்கும் நோக்கு கொண்டது. அதற்குள் சூஃபி மரபு, குறிப்பாக சிஷ்டி மரபு இரண்டு அடிப்படைக் கருத்துக்களை முன்வைக்கிறது. ஒருவடோருவர் புரிந்து இசைந்து அமைதல் அதாவது சுல்ஹ்-இ-குல் [Sulh-e-Kul] முதன்மையானது. மாற்று மதங்கள் மற்றும் சிந்தனைகளை சிறுமைசெய்யாமல், ஒடுக்காமல் அவற்றுடன் உரையாடலை நிகழ்த்துவதும் அவற்றின் இருப்பை ஏற்றுக்கொள்வதும். இரண்டாவது, மாற்றுத்தரப்புகளுடன் அடிப்படை ஞானங்களை பரிமாறிக் கொள்வது அதாவது முஷ்டாரகா அக்தர் [Mushtaraka Aqdar]
சிஷ்டி மரபு மிக எளிதாக சாமானிய மக்களிடம் பரவுவதற்கும் அன்றைய சாதியமைப்பின் இறுக்கத்தால் அடிமைப்பட்டிருந்த பல்லாயிரம்பேரை இஸ்லாமுக்குள் கொண்டு செல்வதற்கும் காரணமாக அமைந்தவை இவ்விரு கொள்கைகளும்தான். சிஷ்டி மரபுடன் இந்துக்களுக்கும் ஆழ்ந்த ஆன்மிக உறவு இருந்தது. இந்து அரசர்களும் செல்வந்தர்களும் அதை புரந்தனர். எளிய இந்துக்கள் அதை நோக்கி எப்போதும் ஈர்க்கப்பட்டனர். இன்றும் அவர்கள் வந்துகொண்டிருப்பது அதனாலேயே. குவாஜா மொய்னுதீன் சிஷ்டி இன்று அனைவராலும் வணங்கப்படும் மெய்ஞானியாக கருதப்படுவதன் அடிப்படையும் இதுவே.
குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் பல நூல்கள் இன்று கிடைக்கின்றன. அவற்றில் சூஃபி வாழ்க்கை நெறிகளை விளக்கும் அனிஸ் அல் அர்வா போன்ற நூல்களும், சூஃபி மெய்ஞானத்தை விளக்கும் ஹதிஸ் உல் மரிஃப் போன்ற நூல்களும் உள்ளன. அவருடைய பாடல்களே கஸல்-கவாலி வடிவில் அனைவரிடமும் பெரும்புகழுடன் உள்ளன. அவர் தனக்குப்பின் தன் முதன்மை மாணாக்கராகவும் தன் கொள்கைகளின் பரப்புநராகவும் குத்புதீன் பக்தியார் காகி அவர்களை தெரிவு செய்தார். அந்த மரபு பல தலைமுறைக்காலம் நீண்டது.
அஜ்மீரில் சிஷ்டி அவர்கள் சமாதியான இடத்தில் தசுல்தான் இல்டுமிஷ் ஒரு தர்காவை அமைத்தார். 1332ல் அன்றைய டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக், மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் திகழ்விடத்திற்கு வந்தார். அதன்பின் முகலாயச் சக்கரவர்த்தி அக்பர், மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் தர்காவை விரிவாக்கம் செய்தார். தர்காவின் மையக் கும்மட்டமும் சுற்றுமதிகளும் சுல்தான் இல்டுமிஷ் கட்டியவை.
மாளவத்தை ஆட்சி செய்த கியாஸுதீன் கில்ஜி இரண்டு மாபெரும் நுழைவாயில்களை கட்டினார். மூன்றாவது பெருவாயில் ஹைதராபாத் நைஜாமால் 1912ல் கட்டப்பட்டது. உள்ளே இருக்கும் அக்பரி மசூதி முகலாயச் சக்கரவர்த்தி அக்பரால் கட்டப்பட்டது. மையக்கும்மட்டத்தின் பொன்வேய்ந்த மையமலர் பரோடாவின் மன்னர் மன்னரால் அளிக்கப்பட்டது. ராஜபுதன இந்து மன்னர்களும் பஞ்சாபின் சீக்கிய மன்னர்களும் தர்காவுக்கு கொடையளித்து திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.
முதலில் தெரியும் தர்காவின் மூன்றாம் வாயில் முகப்பு இன்றைய நவீன முறைப்படி கட்டப்பட்டிருப்பது ஒரு குறை என்றே தோன்றியது. செருப்புகளை அங்கே விட்டுவிட்டு உள்ளே சென்றோம். நுழைவாயிலின் கதவின்மேல் செம்புத்தகடுகளில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றை தொட்டு கண்ணிலொற்றிக்கொண்டும் தலைசாய்த்து வணங்கிக்கொண்டும் உள்ளே சென்றுகொண்டிருந்தனர்.
உள்வட்டத்திற்குள் உள்வட்டம் என பெருவாயில்கள். உள்ளே ஒரு நகரமே இருப்பது போலிருந்தது. விளக்கொளிகள், சரிகைப் பளபளப்புகள், குழந்தைகளும் பெண்களும் எழுப்பும் ஒலிகள் உள்ளே ஏராளமான கடைகள். வழிபாட்டுக்குரிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டும்தான். இங்கே மலர்த்தட்டமும் சால்வையும்தான் ஹஸ்ரத் அவர்களுக்கு வழிபாடாக அளிக்கப்படுபவை. வேறுமலர்கள் பயன்படுத்தப்படுமா என்று தெரியவில்லை. சிவந்த ரோஜாக்கள் மட்டுமே கண்ணுக்குப் பட்டன.
எங்களை அழைத்துச் செல்ல தர்காவை நன்கு அறிந்தவரும் சிஷ்டி மரபை கற்றவருமான பிரேமாராம் பண்டிட் என்னும் அந்தணரை செங்கதிர் ஏற்பாடு செய்திருந்தார். உடன் காவலர்களும் வந்தனர். பிரேமாராம் தர்காவின் வரலாற்றையும் அங்குள்ள கட்டிடங்களையும் விளக்கினார். அக்பர் கட்டிய மசூதி பெரிய செந்நிறத் தூண்களுடன் வரலாற்றுத் தொன்மையுடன் நின்றிருந்தது. தர்காவுக்குள் சிஷ்டி அவர்களின் மகள் பீபி ஜமால் உட்பட அவருடைய மாணவர்கள், மைந்தர்கள் ஆகியோரின் சமாதிகளும் உள்ளன. அங்கும் வழிபாடு நிகழ்ந்து கொண்டிருந்தது.
தர்காவின் வழிபாடுகளை நிகழ்த்தும் பொறுப்பு காதிம்கள் என்னும் உள்வட்டத்தினருக்குரியது. அவர்கள் சிஷ்டி அவர்களின் கொடிவழி வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. எங்களை அத்தகைய ஒரு காதிம் அவர்களிடம் அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு காதிம் குடிக்கும் அவர்களுக்கான தனி இடங்கள் அங்குள்ளன. பெரிய பெட்டிகளால் தடுக்கப்பட்ட அறை போன்ற இடங்கள். அங்கே திண்டு தலையணை போட்ட மெத்தைமேல் அமர்ந்தோம்.
காதிமின் பெயர் அன்னு மியான் என்னும் ஹாஜி பீர் சையது அன்வர் சிஷ்டி நியாஸி. அவர் ஹாஜி பீர் சையது குலாம் முகம்மது நியாசி என்னும் பியாரி மியானின் மகன். பெரியவர்தான அங்கே பொறுப்பு. ஆனால் அங்கே அப்போது இருந்தவர் அன்னு மியானின் மைந்தர். இளவரசர்களுக்குரிய தோற்றம். சரிகைக்குல்லாய். மென்மையான குரலில் அணுக்கமாகப் பேசினார். பிரேமா ராம் பண்டிட் அவருக்கு நெருக்கமானவர் என நினைக்கிறேன்.
நாங்கள் என்னென்ன வழிபாடுகள் செய்ய விரும்புகிறோம் என்று கேட்டார். நான் வழக்கமான வழிபாடுகளைச் செய்ய விரும்பினேன். ஆகவே ஒரு சால்வையும் மலர்த்தட்டமும் வாங்கிக் கொண்டோம். சால்வைக்கு சட்டர் என்று பெயர். அவற்றை பெரிய மூங்கில்கூடையில் வைத்து தருவார்கள். அவற்றை ஏந்தியபடி தர்காவுக்குச் சென்றோம்.
அவ்வேளையில் நல்ல நெரிசல் இருந்தது. காதிம் எங்களை வழிகாட்டி உள்ளே அழைத்துச்சென்றார். அவர் இருந்தமையால் எளிதாக உள்ளே நுழைய முடிந்தது. சிறிய சலவைக்கல் வாசல் வழியாக தர்காவுக்குள் நுழைந்தோம். குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் திகழ்விடம் சலவைக்கல்லால் ஆனது. அதைச்சுற்றி சலவைக்கல் வேலி. காதிம்கள் மட்டுமே உள்ளே செல்லமுடியும். வேலிக்கு வெளியே நின்று வணங்கினோம்.
தர்காக்களில் எவரும் செல்லலாம். ஆண் பெண் சாதி சமய வேறுபாடில்லை. உடை சார்ந்த கட்டுப்ப்பாடுகளும் இல்லை. ஆனால் பெண்களும் ஆண்களும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். பெருந்திரளான மக்கள் அங்கே நிறைந்திருந்தனர். சுற்றிலுமிருந்த சலவைக்கல் முற்றம் முழுக்க செறிந்து அமர்ந்து வேண்டுதலிலும் தொழுகையிலும் ஈடுபட்டிருந்தனர். பலர் அழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். உணர்ச்சிக் கொந்தளிப்பான முகங்கள். இசையும் வாழ்த்தொலிகளும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அஜ்மீர் தர்கா இரவும் பகலும் இருபத்துநான்கு மணிநேரமும் இதே மக்கள் கொந்தளிப்புடன், இதே ஓசைப்பெருக்குடன் இருந்து கொண்டிருக்கிறது.
காதிம் எங்கள் மலர்களை வாங்கி மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் திகழ்விடம் மேல் வீசினார். அவற்றில் ஒரு கைப்பிடி அள்ளி எங்களுக்கும் அளித்து வீசும்படிச் சொன்னார். ஒரு மலரிதழை ஞானியின் கொடையாக மென்று உண்ணும்படி கூறினார். அந்தச் சால்வையால் எங்கள் தலைகளை மூடி அரபு மந்திரங்களைச் சொல்லி வேண்டிக்கொண்டார். நம் வேண்டுதல்களை, வணக்கங்களைச் சொல்லலாம்.
அதன்பின் சுற்றிவந்து தலைமாட்டில் இருந்த சிறிய இடைவெளியில் அமர்ந்து தியானம் செய்யலாம். அங்கே சில பெண்கள் அமர்ந்திருந்தனர். நான் ஒரு நிமிடம் அமர்ந்து கண்மூடிக்கொண்டேன். அதன் பின் எழுந்து சுற்றிவந்து உள்ளே நுழைந்து குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் திகழ்விடத்தின் கால்பகுதியில் சலவைக்கல்லில் என் தலையை மும்முறை வைத்து வணங்கினேன்.
அமீர் குஸ்ரு தலைவைத்த சலவைக்கல்லாக இருக்கலாம். மிர்ஸா காலிப் தலைவைத்திருக்கலாம். சிவராம காரந்த் வணங்கிய இடம். வைக்கம் முகம்மது பஷீர் அஜ்மீரிலேயே வாழ்ந்திருக்கிறார். நித்ய சைதன்ய யதி அங்கே தலைவைத்து வணங்கியிருக்கிறார். இன்னும் பல தலைமுறைகளுக்கு எவரெவரோ வருவார்கள். அக்பர் முதல் சோனியாகாந்தி வரையிலான ஆட்சியாளர்கள். அறிஞர்கள், செல்வந்தர்கள். பேரரசுகள் வெறும் பெயராக மறைந்தன. நாடுகள் உருமாறின. ஞானியென மெய்யறிந்து, கவிஞன் என சொல்லெடுத்தவரின் அரசாங்கம் மட்டும் ஒருகணம்கூட குடிகளின் வணக்கம் ஒழியாமல் பொலிந்துகொண்டிருக்கிறது.
வழிபாடு முடிந்து திரும்பி வந்தோம். காதிமின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். தேநீர் வரவழைத்துத் தந்தார். ஷாகுல்தான் பேசிக்கொண்டிருந்தார். நான் மொழியறியாத நிம்மதியில் இருந்தேன். வெளியே வண்ணக்கொப்பளிப்பாக ஒழுகிச்சென்று கொண்டிருந்த மக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் தலைக்குமேல் ஒரு வெண்ணிற மணிமுடிபோல ஒளிவிட்டுக்கொண்டிருந்த மினாரத்தை.
நான் என்ன வேண்டிக்கொண்டேன்? ஒன்றுமே வேண்டிக்கொள்ளவில்லை. எதை எண்ணினேன்? ஒன்றுமே எண்ணவில்லை. எண்ணங்கள் இல்லாத ஓர் அமைதி. எல்லா பறவைகளும் சேக்கேறிவிட்டபின் மரம் கொள்ளும் நிறைவு.
[மேலும்]
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3
நீயே என் காதலன்
வேறொருவரையும்
நான் வேண்டேன்…
என் இதயத்தை வென்ற உன்னையன்றி
இன்னொருவரை
நான் வேண்டேன்!
பிரிவின் முள் என் இதயத்தை புண்ணாக்கியது
அந்த இடத்தில் வேறொரு மலரையோ ரோஜாவையோ
நான் வேண்டேன்!
உன் தரிசனத்துக்காக ஈருலகின் செல்வங்களையும் கொடுப்பேன்
நான் உனைக் காண ஏங்குகிறேன்
ஈருலகின் செல்வங்களை
நான் வேண்டேன்!
வெளியில் இருக்கும் மற்றவருக்கு
நீயும் நானும் கொண்ட நேசத்தை ஏனுரைக்க வேண்டும்?
நீயும் நானும் அறிவோம், பிறர் அறிய
நான் வேண்டேன்!
எனது ஆன்மாவின் மிக ரகசியமான இடத்தில்
வேறெவருக்கும் இடமில்லை:
ஆன்மாவின் சரணாலயத்தில் உனையன்றி ஒருவரை
நான் வேண்டேன்!
உனது கரங்கள் எனது ரத்தத்தை பருகச் செய்தன
நான் அடைந்த காதலின் வலியை
உன் மென்மையான இதயம் அறிய
நான் வேண்டேன்!
நீ தராத மதுவை அருந்துவதில்லை நான்
எனக்கு நிரந்தரமான போதை வேண்டும்
வேறொரு மதுநிரப்புவனை
நான் வேண்டேன்!
காதலை விழைகையில்
வேறெதுவும் ஈர்ப்பதில்லை
தோட்டங்களும், நீரோடைகளும், சொர்கத்தின் இன்பங்களும்
நான் வேண்டேன்!
அறியாதவர்கள் இவ்வுலகை விழைகிறார்கள்
அறிந்தவர்கள் சொர்க்கத்தை
கலங்கிய காதலியோ உனையன்றி வேறொன்றும்
நான் வேண்டேன்!
உனது சுயநினைவென்னும் மணிமுடியைத்
துறந்துவிடு மொய்ன்
அவ்விதம் தலையில் அமரும் ஒன்றை
நான் வேண்டேன்!
எனது வாழ்வு முடிந்தது
நித்திய வாழ்வே எஞ்சி இருக்கிறது
பிரிவின் வலியை
உனது சங்கமத்தின் சாத்தியத்தை எண்ணி கடக்கிறேன்
எனது நண்பனாக
உனை மட்டுமே விழைந்தேன்
நீ என் இதயத்தை கவர்ந்து கொண்டாய்
வேறெந்த அன்பையும் விழையவில்லை நான்
எனது வாழ்வெனும் மாளிகையில்
உனைத்தவிர யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை
அந்த அந்தரங்க இடத்தில்
நீயன்றி யாருக்கும் இடமில்லை
அறியாதவர்கள் இவ்வுலகை விழைகிறார்கள்
அறிந்தவர்கள் மறுவுலகை
நான் காதலில் இதயத்தை தொலைத்தவள்
உன்னையே வேண்டுகிறேன்
என்னை வாழ்த்தியபடி
வீதியில் நீ ஓரடி முன்வைத்தால்
நேசத்தில் நான் நூறடிகள்
முன்வைத்து வருவேன்
காதலின் கடலில்
நான் நிற்கிறேனா, நகர்கிறேனா
அலைப்புறுகிறேனா என்றறியேன்
என் மனம் செயலில் இல்லை
மொய்ன், காதலின் நெருப்பில்
உன் இருப்பை எரித்துவிடு
நீ எரிந்துதீராவிடில்
புகையில் குழம்பிப் போவாய்
ஓ நெஞ்சே, அவனது அன்புக்குரிய நீ
விதி விடுக்கும் அம்புகளுக்கு
இலக்காகிறாய் நீ
காதலின் உலை
ஏக்கத்தின் பெருநெருப்பை ஏற்றுமென்றால்
தூய தீப்பொறியென வெளித்தெறிப்பாய் நீ
எனது உடல் ஒரு வட்டம்.. அதன் மையத்தில் ஆன்மா ..
அல்லது இதயம் ஒரு வட்டம்..
அதன் மையத்தில் நீ
நான் கேட்டேன் .. உனைத் திரைமறைவில் நிறுத்துவது எது?
நீ சொன்னாய் – உனது இருப்பே எனது திரை
மறைந்திருப்பது நீ
ஒரு மனித வடிவம் அங்கா-வின்* காதலை தாங்குமா?
உணவுக்கும் நீருக்குமாய்
கூண்டுக்குள் சிக்கிய பறவையாக நீ?
ஒரு வட்டம் போல வாயிலில் காத்திருக்கிறாய்
நீ தேடுபவன் உன் இல்லத்தில்
இருப்பதை அறியாதவன் நீ
மொய்ன் அவைக்கு வந்து காதலின் மொழியைப் பேசு
இன்று காதலின் மலர்படுக்கையில்
கூவும் இசைப்பறவை நீ
* அங்கா – கடந்த நிலையையும், கடவுளையும் குறிக்கும் ஒரு பறவை
இறையே..
ஆன்மாவின் ஆடியில்
தெரிவது யார்?
உள்ளுறையும் திரைச்சீலையில்
தீட்டப்பட்ட
அழகிய ஓவியம் யார்?
படைப்பின் ஒவ்வொரு அணுவும்
முழுமையில் இருக்கிறது
அனைத்திலும் நிறைந்திருப்பவன் யார்?
ஒவ்வொரு தூசித்துகளிலும்
கதிரென
ஒளிர்வது யார்?
இந்த வெளிஉருவில் எலும்பென நாம்
அதன் மஜ்ஜையில்
சாரமென யார்?
சில நேரங்களில் ஆன்மாவில் அமைதியின் புதிய பாடல்
அது திறக்கும் திரைகளுக்கு அப்பால்
தொடப்படுவது யார்?
ஒன்று மற்றொன்றாகி அனைத்தையும் நேசிக்கிறது
நேசிக்கப்படும் அனைவரின் பெயராலும்
நேசிப்பது யார்?
மொய்ன், நீயும் நானும் எவ்வளவு முறை ஈர்க்கப்படுகிறோம்?
உனது நோக்கத்தையும் எனது நோக்கத்தையும்
ஒன்றாக்கியது யார்?
***
தமிழாக்கம் சுபஸ்ரீ
குவாஜா ஜி மகாராஜா!
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்க பல உறங்கா இரவுகளைக் கடக்கமுடியும். அத்தனை இனிய பாடல்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. நுஸ்ரத் சாகிபின் ஆற்றல்கொப்பளிப்புக்குப் பின் அஜ்மத் குலாம் ஃபரீத் சாப்ரி அவர்களின் ‘மோரே அங்குனா மொஹிதீன்’ ஆழ்ந்த அமைதியிலாழ்த்தும் அற்புதம்.
அருண்மொழி உரை, கடிதம்
அன்புள்ள ஜெ,
மனித உடலில் உயிர் எங்கே உள்ளதென்று காண முயன்றால், இருதயத் துடிப்பை பல்வேறு இடங்களில் உணரமுடியும். ஆனால் தர்க்கப்பூர்வமான விஷயங்களைத் தள்ளிவைத்துப் பார்த்தால் நம் அகம், படபடக்கும் பார்வையிலோ, மனம் வெளிப்படும் சொல்லிலோ உயிரை முன்பே கண்டடைந்திருக்கும்.
இதே போன்று கலைகளிலும், கலைப் படைப்புகளிலும் உயிர் கொள்ளும் நொடி அல்லது தருணம் எப்போது நிகழ்கிறதென்று யோசித்துப் பார்த்தால், நம் மனம் அதைப் புரிந்து கொண்டு கை சுட்டி காட்டும் முன்பே நம் அகம் அதைத் தொட்டிருக்கும்.
அருணாம்மாவின் கரமசோவ் சகோதரர்கள் உரையில் பல இடங்களில், அந்த உயிர்ப்புத்தன்மை கூர்ந்த அவதானிப்புகளாக, ஆழ்ந்த ஒப்பிடல்கள் வழியாக நடந்தாலும், அந்த உரையின் உயிர் அவர்களின் சிந்தனை ஓட்டத்தின் நேர்மையான வெளிப்பாட்டில் உள்ளதென்று உணர்கிறேன். பொதுவாகப் பயின்று பேசப்படும் உரைகளில் வெளிப்படும் இது, அவர்களின் பேச்சியில் தன்னியல்பாகவே நிகழ்ந்திருக்கிறது.
எனக்கு அவர்களின் உரையில் பிடித்த விஷயங்கள் –
அ.ஒவ்வொரு படைப்பையும் முழுவதுமாக உள்வாங்கி, தனதாக்கிக்கொண்டு அவர்களின் அனுபவத்தைப் பகிர்தல்.
இந்த உரையில் அவர்கள் தெளிவாக வரையறுத்துக் கொண்டு பேசத் துவங்கினார்கள். பொதுவாக தஸ்தயேவ்ஸ்கியும் அவரது படைப்பும் எந்த பார்வையில் பார்க்கப் படுகிறது, தான் எந்த பார்வையில் அவரது படைப்புக்களை அணுகுகிறார்கள் எனத் துவங்கி, டால்ஸ்டாய்க்கும் தஸ்தயேவ்ஸ்கிக்கும் உள்ள ஒற்றுமைகள், நாவலாசிரியர் கையாளும் கேள்விகள் என இறுதியில் தானே இவான் ஆக மாறி விசாரணை நாடகத்தைக் கண் முன் நிகழ்த்திவிடுகிறார்.
ஆ.இந்திய மரபின் கருவிகளை வைத்து, மேலை தத்துவத்தின் புள்ளிகளை ஆராய்தல்
தந்தை கொலையைத் தத்துவார்த்தமாகப் பார்ப்பதைப் பற்றிக் கூறிவிட்டு, அது இந்திய மரபில் ஒரு பாவம், அதற்கான உதாரணங்களை அளித்தது. பாதர் ஜோசிமா இவானிடம் பூமியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுவதையும், அவரின் மரணத்திற்குப் பிறகு இவான் பூமியைத் தழுவி முத்தமிடும் காட்சியைப் புத்தரின் பூமிஸ்பரிசமுத்திரை உடன் ஒப்பிட்டது. சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையில் கதாபாத்திரங்களை ஆராய்ந்தது, மற்றும் எந்த கதாபாத்திரத்தையும் முழுதாக தீயவன் அல்லது நல்ல கதாபாத்திரம் என்று பார்க்காமல், நன்மைகளையும் தீமைகளையும் ஊடு பாவாக அணுகும் கோணம் அனைத்தும் அவர்களின் சிந்தனையில் இந்திய மரபின் வேரிலிருந்து வந்தவையாக இருந்தது.
இ.சோம்ஸ்கி – பூக்கோ உரையாடலை விளக்கி மைய்ய கேள்வியுடன் ஒப்பிடுதல்
சோம்ஸ்கி – பூக்கோ உரையாடலைக் கூறும் போது இது விலகலாக தோன்றும் ஆனால் இல்லை என்று கூறிவிட்டு அந்த உரையாடலை விளக்குகிறார். இறுதியில் நாவலில் எழும் முக்கியமான கேள்வியுடன் அந்த உரையாடலை, அவர் உரையில் கூறிய பாவம், குற்றவுணர்வு, நீதி உணர்வு, அறவுணர்வு ஆகியவற்றை ஒரே கன்னியால் இணைத்துவிடுகிறார்.
மட்டுமில்லாமல், கிராண்ட் இன்ங்குசிட்டர் நாடகத்தைக் கண் முன் நிகழ்த்திக் காண்பித்தது அதில் எந்த ஆண்டு, எந்த ஊர் என்பதையெல்லாம் கூறியது, அவர்களின் உரை வழியாகவே அவர் கரமசோவ் சகோதரர்கள் நாவலுடன் சென்ற தொலைவைக் காண்பித்து, அந்த அனுபவத்தை எனக்கும் அளித்துவிட்டார்.
அவர்களின் தொடர்ந்த உரையாடலை எதிர் நோக்குகிறேன்.
அன்புடன்,
நிக்கிதா
மரபு, உரை- ஒரு கடிதமும் பதிலும்
அன்புள்ள ஆசானுக்கு
மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி? என்ற உரை எந்த ஒரு நல்ல உரையைப் போலவும் அதை விட மேலும் அதிகமான குழப்பங்களுடன் விட்டுச் சென்றது நிறைவளிக்கிறது. எவ்வித சலனமுமின்றி வேறேந்த சிந்தை இடருமின்றி மூன்று மணிநேரத்திற்குமதிகமாக உரையை நான் கவனித்தது எனக்கே வியப்பளித்தது. கட்டண உரை நிச்சயம் ஓர் நற்புது அனுபவம்.
மரபு என தலைப்பை கண்டதும் எவ்வித சந்தேகங்களும் ஐயப்பாடுகளுமின்றி நேரடியாக இலக்கிய மரபை அல்லது மரபிலக்கிய உரை என யூகித்து ஆர்வத்தோடு காத்திருந்தேன் . ஆனால் தலைப்பின் உண்மைப் பொருள் மேலும் ஆர்வமாக்கியது.
இப்போது யோசிக்க மரபு என்ற வார்த்தையை கூட நான் சரி வர விளக்கி கொள்ளவில்லை என உணர்கிறேன். மரபு என எவற்றை சொல்லலாம் எவற்றை தள்ளலாம் என யோசிக்க முதலில் தோன்றுகின்றன மதமும் மத சடங்குகளும். மதம் மரபல்ல விருப்ப நோக்கில் மதம் மாறுவதும் இயல்பானது ஆனால் மத சடங்குகள் மரபானவை விருப்ப நோக்கில் மாறாதவை . இம்முரனே முதலில் தோன்றி அதிர்ச்சியளிக்கிறது. இவ்வுரை ஏற்படுத்திய குழப்பங்களில் (அல்லது என் அறியாமையின் இடைவெளியை சுட்டி காட்டிய தருணங்களில்) முக்கியமானது மரபின் எல்லைகள் என்னேன்ன ?? பண்பாட்டிற்கும் மரபிற்குமான வேறுபாடு பண்பாடு தனிதன்மையுடையது , தனியுடைமை ஆனது (ஒரு குறுங்குழுவிற்கோ தேசத்திற்கோ உடைமையானது) ஆனால் மரபு என்பது வரம்புகளற்ற ஒரு மேலதிகமான நுண்சொல்லேன தோன்றுகிறது. மரபின் கிளைகளில் பண்பாடு முளைத்தலும் பண்பாட்டில் மரபு பரவியிருப்பதும் இயல்பென கொண்டாலும் மேலும் மேலுமென ஐயம் சூழ்கிறது.
மரபென்பது ஒரு தொடர்ச்சி. ஆதியும் அந்தமும் இன்றி ஆகி பெருகும் நதி. நிற்க. ஆனால் விதை, மரம் மற்றும் மைந்தர், தந்தை போன்றவே தவிர அனைத்து மரபும் முடிவிலியாக சுழலும் மரபல்லவே ?. எங்கேனும் எப்பொருட்டேனும் துவங்கியவே தானே. 30000 வருடங்களின் எடை தாங்கி இங்கிருக்கும் ஒரு பாறை மிக கனமானது. ஆனால் 30000 வருடங்கள் முன் ஒரு சிறு கல் தானே. அச்சிறு கல் 20 வருடங்கள் முன்பு எறியப்பட்டிருந்தால் அது மரபென ஆக எத்தனை காலமாக காத்திருப்பது. அதை இப்போதே மரபென கூறினால் என்ன சொல்லி மறுப்பது ??
மரபு தோன்றியது முதலே மரபை மறுத்தலும் தோன்றியிருக்கிறது , (முளைக்காத விதை மற்றும் பிரம்மச்சாரிகள் போல) அப்போது மரபை மறுத்தலும் மரபென கொண்டால் “மரபை மறுக்கவோ மாற்றவோ கூடாது” என்ற தரப்பை சேர்ந்தவர்கள் “மரபை மறுத்தல்” என்ற மரபை மறுக்கிறார்கள் அல்லவா ?? அல்லது “மரபை மறுத்தல்” என்ற மரபை ஏற்று அதையே மறுக்கிறார்களா??
மரபை ஆதரிப்பது, எதிர்ப்பது மற்றும் நடுநிலைமை என மூன்று தரப்புகளை குறிப்பிட்டு அதற்கான நெடிய வரலாற்றினை கூறினீர்கள். மரபை எதிர்க்கும் ஒரு தரப்பு வளர்ந்து இயக்கமாகி இப்போது இவர்கள் ஒரு மரபு ஆகிவிட்டனர் என குறிப்பிட இயலுமா?? அல்லது மரபு என்பது விதை,மரம் போல ஆதியந்தம் இல்லாதவே மட்டும் தானா??.
மரபு என்பதை எத்தனை யோசித்தும் ஒரு அருப சிந்தனை(எண்ணம்) மட்டுமே என எண்ணவியலவில்லை. இங்கு செய்வது அனைத்துமே மரபு என பழக்கப் படுத்தப் பட்டிருத்கிறோம். இறந்தவர்களின் புகைபடத்திற்க்கு மாலையிடுவது முதல் வாசலில் கோலமிடுவது வரை மரபு என நம்பி கொண்டிருக்கிறோம். அல்லது இவையும் மரபு தானா ?? மரபு அருப சிந்தனை இல்லையா??
ஒரு தனிமனிதன் தன்னுள்ளத்தில் அடியாளத்தில் தன்னந்தனிமையில் எண்ணுபவற்றிற்கும் முன் பின் உதாரணங்களிருப்பின் அவற்றை மரபெனலாகுமா?? உதாரணமாக மரணத்தை பற்றிய ஒரு மனிதனின் முதல் சிந்தனை.
அழகான சில மணித்துளிகளுக்கும் ஆழமான ஒரு உரைக்கும் நன்றிகள்.
இப்படிக்கு
எஸ்.பி.ஆர்
***
அன்புள்ள சிவா,
இவை உங்கள் வினாக்கள். இவற்றுக்கான விடையை நீங்களே சென்றடையவேண்டும். அதற்கான சில வழிகளைத் துலங்கவைப்பதே என் உரையின் நோக்கம்.
எது மரபு? நன்று தீது எல்லாமே மரபுதான். நினைவென, ஆசாரமென , அடையாளங்கள் என எஞ்சியிருப்பவை எல்லாமே மரபின் கூறுகளே. அவற்றில் எவை தேவை, எவை தேவையில்லை என நிர்ணயிப்பதில் முதன்மையிடம் வகிப்பது அறவியலே. இன்றைய அறத்துக்கு உவப்பற்ற எதுவும் தவிர்க்கப்படவேண்டியதுதான்.அறமே அடிப்படை, பிற அனைத்தும் அதன் வழிதொடர்வன தான். மானுடசமத்துவம் ஓர் அறக்கொள்கை. இயற்கையுடன் இயைதல் இன்னொரு அறக்கொள்கை. இவை இன்றைய நூற்றாண்டின் விழுமியங்கள். இவையே முதன்மை அளவுகோல்கள்.
அவற்றில் தேறுவனவற்றையே அழகியல், தத்துவம், மெய்யியல் என்னும் தளங்களில் பரிசீலனைசெய்து கொள்வன கொண்டு அல்லன விலக்கவேண்டும்
ஜெ
***
October 18, 2021
அஜ்மீர் பயணம்-2
அக்டோபர் 11 அன்று காலை சில வேலைகள் இருந்தன. வங்கிக்குச் செல்லவேண்டியிருந்தது. காலையில் இருந்தே மழை. நான் வங்கி வாசலில் நின்றிருந்தபோது நீர்க்கூரை உடைத்துக் கொட்ட ஆரம்பித்தது. எங்கும் ஆட்டோ கிடைக்கவில்லை. ஆகவே மழையை பார்த்தபடி நின்றிருந்தேன். மழைத்தாரைகள் கரிய தார்ச்சாலையில் அறைந்து பல்லாயிரம் பூக்களாக விரிந்து மறைந்து கொண்டிருந்தன. மழை மழை மழை என உள்ளம் நிகழ்ந்தது.
ஆட்டோ கிடைத்து வீட்டுக்கு வந்து பதினொரு மணிக்குத்தான் பெட்டியில் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தேன். மடிக்கணினி எடுத்துச் செல்லவில்லை. மின்னஞ்சல்கள் தவிர இணையம் தேவையில்லை என்பது முடிவு. குளித்துவிட்டு அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தேன். ஷாகுல் ஹமீது நண்பர் சுப்ரமணியம் [சூப்பர் சுப்ரமணி என்னும் பெயரால் நண்பர்களுடன் அன்போடு அழைக்கப்படுபவர். சாகச வாழ்க்கை கொண்டவர்] காரில் வந்தார். மழைச்சாரல் வீசியறைந்து கொண்டிருந்தது.
ஷாகுல் ஹமீது [கப்பல்காரன்]நாகர்கோயில் ரயில் நிலையம் நனைந்திருந்தது. ரயில்நிலையங்களில் ஒரு பக்கமிருந்து காற்று வேகமாக பெய்துகொண்டிருக்கும். ரயில்நிலையம் ஒரு சுவர்போல காற்றை மறைப்பதனால் வீசும் பெருக்கு சுழலாகி வளைவதன் விளைவு அது. காற்றில் ஈரத்துளிகள். ரயில்நிலையம் ஓர் ஊர்தி போல எங்கோ விரைந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.
திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் கூட்டமே இல்லை. எங்களைத் தவிர ஒரு பெரிய குடும்பம். ஏராளமான பெண்குழந்தைகள். அவர்கள் ஏதோ கருவியை வைத்துக்கொண்டு சேர்ந்து பாடி பதிவுசெய்துகொண்டே வந்தனர். உற்சாகமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். நீண்ட இடைவேளைக்குப்பின் பயணம் செய்பவர்களாக இருக்கும்.
திருவனந்தபுரத்தை மதியம் இரண்டு மணிக்குச் சென்றடைந்தோம். மூன்றரை மணிக்கு அகமதாபாத் ரயில். [16334 Veraval Express] திருவனந்தபுரம் மழையில் பளபளத்துக்கொண்டிருந்தது. மழைப்பொழுதுக்குரிய தளர்வான உடலசைவுகளுடன் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். ரயில் ஏற்கனவே நின்றிருந்தது. எங்கள் இடத்தில் அமர்ந்தபோது உடன் எவருமே இல்லை.
வீட்டில் இருந்து கிளம்பியதுமே அஜ்மீர் பயணத்துக்கான உளநிலையை அடைந்துவிட்டேன். ரயில் கேரள நிலத்தின் வழியாக ஓடிக்கொண்டிருக்கையில் முழுமையான நிறையுணர்வுநிலை கூடிவிட்டது. உரையாடல்கள், வேடிக்கை பார்த்தல்கள் எல்லாம் அதன்மேல்தான் நிகழ்ந்துகொண்டிருந்தன.
மழைக்கால கேரளம் பார்க்க மிக அழகானது. கண் நிறைக்கும் பசுமையும் கலங்கிய நீரின் பொன்னிறமும் கலந்த காட்சிவெளி. ஆறுகள் எல்லாம் நிறைந்தொழுகின. நிறைந்தோடும் ஆற்றின் நீரசைவு விந்தையானது. மெல்லிய பட்டுத்துணி ஒசிந்தும் முறுகியும் நெளிந்தேகுவதுபோல. காயல்கள் அதே ஆழ்ந்த நீலவிரிவாக ஒளிகொண்டு கிடந்தன.
காயலோரத்தில் தென்னந்தோப்புகள் எல்லாம் நீரால் நிறைந்து ஒளிகொண்டிருந்தன. தென்னங்கூட்டங்கள் தலைகீழ் தென்னங்கூட்டங்கள் மேல் நின்று தளும்பின. எங்கும் நிறைந்திருக்கும் பறவைகள் குறைவாகவே தென்பட்டன. நனைந்த இறகுகளுடன் அவை திளைத்துத் துழாவி வானில் சென்றுகொண்டிருந்தன.
நான் சில நூல்கள் எடுத்து வந்திருந்தேன். நண்பர் கொள்ளு நதீம் பரிந்துரைத்த கிரானடா என்னும் நாவல். எகிப்தியப் பெண் எழுத்தாளர் றள்வா அஷூர் எழுதியது. அரபு மொழியில் இருந்து நேரடித் தமிழாக்கம் பி.எம்.எம்.இர்ஃபான். ஸ்பானிஷ் பதினைந்தாம் நூற்றாண்டின் மதவிசாரணைக் காலகட்டத்தில் இஸ்லாமிய மதம் ஸ்பெயினில் தடைசெய்யப்பட்டு ஒடுக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையின் சித்திரத்தை அளிக்கும் நாவல். மாலைக்குள் அதைப் படித்து முடித்துவிட்டேன்.
இரவு எர்ணாகுளம் சென்றுவிட்டோம். நான் எட்டுமணிக்கே படுத்துவிட்டேன். காலை நான்கரை மணிக்கு மங்களூரின் ஓசை கேட்டு எழுந்துகொண்டேன். எழுந்து சென்று பார்த்தபோது மழைத்தாரைகள் கொட்டிக்கொண்டிருந்தன. ரயில்நிலையத்தின் ஒளியில் அவை சுடர்கொண்டிருந்தன. கனவில் எழுந்து நின்றிருப்பது போலிருந்தது. மீண்டும் ஒரு சிறு தூக்கம். ஆறுமணிக்கு உடுப்பிக்கு முன்பு பாடுபிதிரி என்னும் சிறிய ரயில் நிலையம்.
காலை ஐந்து மணிக்கே டீ கொண்டு வந்து கூவத்தொடங்கிவிட்டனர். பல்தேய்த்துவிட்டு டீ குடித்தேன். கழிப்பறைக்குச் சென்று ஈரத்துண்டால் உடல் துடைத்து சட்டை மாற்றி வந்தேன். அமர்ந்து வெளியே இருள் விலகிக்கொண்டிருந்த கர்நாடக நிலப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். மிக அகன்ற கண்ணாடிச்சாளரம் கொண்ட ரயில். நிலவெளி மேல் பறந்து ஒழுகிச்செல்வதுபோன்றே தோன்றியது.
மேற்குக்கரை வழியாக எப்போது பயணம் செய்தாலும் பேரழகையே காண்போம். ஆனால் ஜூன், ஜூலை மாதங்களும் அக்டோபர், நவம்பர் மாதங்களும் மேலும் அழகு மிக்கவை. ஜூன் ஜூலையில் ஏராளமான அருவிகள் ரயில்மேல் கொட்ட அவற்றை பிளந்துகொண்டு நாம் சென்றுகொண்டிருப்போம். ஆறுகள் மேலேறி காடுகளை பாதி மூழ்கடித்திருப்பதைக் காண்போம்.
உலகின் பல நாடுகளிலாக நான் இதுவரை பயணம் செய்த ரயில்பாதைகளில் மேற்குக்கரை ரயில்பாதையே அழகானது. எத்தனைகாலம் அப்படி நீடிக்குமெனச் சொல்லமுடியாது. முழுக்கமுழுக்க மலையும் காடுகளும்தான். பாலங்கள் வழியாக, குகைகள் வழியாகச் சென்றுகொண்டிருப்போம். பெரும்பாலும் ரயில் அடர்காட்டின்மேல் உயரத்தில் அமைந்துள்ளது. ஆகவே தாழ்வாக விமானத்தில் பறந்தபடி பார்த்துக்கொண்டே செல்லும் அனுபவம்,
மின்னும் நீர்ப்பெருக்கு அசைவற்றதென ஒழுகிய ஆறுகள். கடல்முகங்களில் அவை ஊழ்கத்திலென நிலைகொண்டிருந்தன. கண்நிறைக்கும் பசுமை. சஸ்யசியாமளம் என்னும் சொல்லின் பொருள் அங்கே தெரியும். பசுமையே இருளென்றாவது. ஏன் திருமாலை பச்சைமால் என்றும் கரியமால் என்றும் நீலவண்ணன் என்றும் சொல்கிறார்கள் என்று தெரியும். மூன்றும் ஒன்றோ என விழிமயங்கும்.
ரயில் பயணங்களில் வசதிகள் மிக மேம்பட்டுள்ளன. பெட்டிகள் தூய்மையானவை, புதியவை. தூய்மைசெய்வதும் சிறப்பாகவே உள்ளது. ரயில் உணவுதான் இன்னும் சற்றும் மேம்படவில்லை. அதை குத்தகைக்கு விடுகிறார்கள். குத்தகைதாரர் பல கைகளுக்கும் வாய்களுக்கும் படியளந்து தன் லாபத்தையும் சம்பாதிக்க வேண்டுமென்றால் மிகக்குறைவான சகிக்கமுடியாத உணவை மிக அதிக விலையில் விற்றாகவேண்டும்.
காலையில் தஸ்தயேவ்ஸ்கியின் அசடன், எ,.ஏ.சுசீலா மொழியாக்கம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். இது இந்நாவலை நான் மூன்றாம் முறையாக வாசிப்பது. மலையாளத்தில் முதன்முறையாக. ருஷ்ய வெளியீடாக ஆங்கிலத்தில் மீண்டும். சுசீலாவின் மொழியாக்கத்தின் சிலபகுதிகளை வாசித்திருக்கிறேன். முழுக்க இன்னொரு முறை வாசிக்கலாமென தோன்றியது. மாலைக்குள் பாதி முடித்துவிட்டேன்.
மதியம் சற்று தூங்கினேன். மீண்டும் பசுமைமேல் பறந்துகொண்டிருந்தேன். வசிஷ்டி என்னும் அழகிய ஆறு. வசிட்டமுனிவரின் மகள். பேரழகிகள் எல்லாம் முனிவர் மகள்கள்தான். சகுந்தலை, தேவயானி. எத்தனை அழகிய ஆறுகள். கிருஷ்ணை கோதை போல பேருருவம் கொண்ட ஆறுகள் எவையுமில்லை. கடல்நோக்கி நெளியும் சிறிய ஒளிவழிவுகள்தான். அவை வந்துகொண்டே இருந்தன
கோவா. அதன்பின் ரத்னகிரி. நாங்கள் சென்ற இடங்களெல்லாம் நினைவிலெழுந்தன. கோவாவின் மாபெரும் தேவாலயங்கள். ரத்னகிரியில் திலகர் சிறையிருந்த கடற்கோட்டை. சிவாஜியின் கோட்டைகளில் முதன்மையானது அது. பழைய நினைவு. அங்கே நானும் நாஞ்சில்நாடனும் வசந்தகுமாரும் பயணமாக வந்தபோது இரவுணவுக்கு பழம் கிடைக்கவில்லை. நான் கடையில் விற்ற ஒரு பாக்கெட் புளிப்பான பழத்தை வாங்கி சாப்பிட்டு படுத்தேன். மறுநாள் என் வயிறு நிர்மலமாகியது. அது அங்கே குழம்புக்கு அரைக்கும் ஒருவகை புளி.
அந்தி இருள்கையில் பசுமை நிறம் மாறிக்கொண்டிருந்தது. சாம்பல்பசுமை, கரும்பசுமை. கண்கள் அறியும் அந்த வண்ண வேறுபாட்டை செல்பேசியில் எடுக்கப்பட்ட எளிய புகைப்படங்களே அற்புதமாக காட்டுவதைக் கண்டேன். நேரில் பார்த்து மீண்டும் செல்பேசி புகைப்படத்திலும் பார்த்து நிறைந்துகொண்டிருந்தேன்.
உண்மையில் முன்பெல்லாம் செல்லுமிடங்களில் புகைப்படம் எடுப்பது அங்கே ஒன்றுவதை தடுக்கிறது என்னும் எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் இன்று இல்லை. ஒன்றுவது ஒரு நிலை. ஆனால் மீளும் கணங்களில் செல்பேசி லென்ஸை நமது இன்னொரு கண்ணாக ஆக்கிக்கொள்ள முடியும். மேலும் ஒரு காட்சிவெளியை கண்டடையலாகும்.
மும்பையின் வெளிநிலையமான பன்வேலுக்கு ரயில் சென்றபோது நான் தூங்கிவிட்டிருந்தேன். இரவு ரயில் மகாராஷ்டிரத்தைக் கடந்து குஜராத்துக்குள் நுழைந்தது. காலை ஐந்து மணிக்கு வடோதராவின் ஓசைகளில் விழித்துக்கொண்டேன். அதன்பின் அரைத்துயில். அகமதாபாதை ஏழரை மணிக்குச் சென்றடைந்தோம். அதற்குள் காலைக்கடன்களை ரயிலில் முடித்திருந்தோம். ரயிலில் விடியற்காலை என்பது ஓர் அருங்கனவு. காலை எழுந்ததும் சட்டென்று மாபெரும் நிலவெளி நம்மைச் சூழ்ந்துகொண்டு சுழல்வது வேறெங்கும் நிகழாதது. இல்லை, வங்கத்தில் படகுப்பயணங்களில் அது நிகழ்வதுண்டு.
அகமதாபாத் ரயில் நிலையத்தில் மூன்றுமணி நேரம். எங்கள் ரயில் புரியில் இருந்து கிளம்பி அஜ்மீர் செல்வது. [18421 – Puri Ajmer Express]. அது வந்து சேரவேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி நடத்தும் ரயில் நிலையக் காத்திருப்பு அறையில் தண்ணீர் இல்லை. அதை முன்னரே சொல்லிவிட்டனர். கழிப்பறைகள் நாறிக்கிடந்தன. அங்கிருந்த சோபாக்களில் அமர்ந்தோம்.
ஓர் இளைஞன் டை கட்டிக்கொண்டு மொழமொழ ஆங்கிலத்தில் ஐ.ஆர்.சி.டி.சியின் வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வெறும் ஆயிரத்தைநூறு ரூபாய் கொடுத்து எடுப்பதன் நன்மைகளைச் சொல்லி ஒரு வழவழ விளம்பரத்தை எங்களிடம் காட்டிக் கவர முயன்றான். சிரிப்பதா என்று தெரியவில்லை. நவகுஜராத்தின் இரண்டு முகங்கள் என்று நினைத்துக்கொண்டேன். பையனைப்பார்க்க பாவமாக இருந்தது.
ஷாகுலை அமரச்செய்துவிட்டு ரயில்நிலையத்திற்கு வெளியே ஒரு காலைநடை சென்று வந்தேன். ரயில்நிலையத்திற்குள்ளேயே இரண்டு பெரிய மினாரங்கள் நின்றிருக்கின்றன. வேலியிடப்பட்டு தொல்லியல்துறையின் பாதுகாப்பிலிருக்கும் கட்டுமானங்கள் என அறிவிப்புடன் தெரிந்தன. செங்கல்லால் ஆனவை. நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டவை. குதுப் மினாரை நினைவூட்டுபவை.
அகமதாபாதின் மிக உயரமான மினாரங்கள் இவை. பொதுவாக நடுங்கும் மினாரங்கள் என அழைக்கப்படுகின்றன. இணையத்தில் அபத்தமான ஏராளமான விவரணைகள் காணக்கிடைக்கின்றன. இந்த மினாரங்கள் மண்ணுக்கு அடியில் ஒற்றைச் செங்கல் அடித்தளம் மீது கட்டப்பட்டிருக்கலாம். அந்த அடித்தளம் பலவீனமாகியிருக்கலாம். ஆகவே ஒரு மினாரத்தை அடித்து அதிரச்செய்தால் சில கணங்கள் கழித்து இன்னொரு மினாரமும் அதிர்ந்திருக்கிறது. இதை ஒரு விந்தை எனக்கொண்டு தொடர்ந்து தட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மினாரங்கள் மிகப்பழுதடைந்த நிலையில் இருப்பதனால் அரசு அருகே செல்வதை தடைசெய்திருக்கிறது. மிக அருகே ரயில்பாதைகள். அவற்றில் ரயில்கள் செல்லும்போது நடுங்கியபடி இவை இன்று நின்றுள்ளன. பழுதுபார்க்கவோ மீட்டெடுக்கவோ இயலாதபடி பழுதடைந்தவை என்றாலும் செங்கல் கட்டுமானத்தின் நேர்த்தியும் சிற்ப ஒருமையும் வியப்படையச் செய்பவை.
இந்த மினாரங்கள் இங்கே இருந்த சிதி பஷீர் என்னும் ஆட்சியாளரால் 1452ல் கட்டப்பட்ட மசூதி ஒன்றின் முகப்பாக இருந்தவை என்று கருதப்படுகின்றன. ஆகவே சிதி பஷீர் மசூதி என அழைக்கப்படுகிறது. இவர் குஜராத் சுல்தானாகிய முதலாம் அகமது ஷாவின் அடிமைகளில் ஒருவராக இருந்தவர். சிலர் குஜராத் சுல்தான்களில் புகழ்பெற்றவரான மஹ்மூத் ஷாவின் அமைச்சரான மாலில் சரங் என்பவரால் 1511ல் கட்டப்பட்ட மசூதி என்கின்றனர்.
1753ல் மராட்டியர்கள் படையெடுத்து வந்து குஜராத் சுல்தான்களை தோற்கடித்தபோது இந்த மசூதி இடித்தழிக்கப்பட்டது. இரண்டு மினாரங்களுடன் மசூதியின் நுழைவாயில் மட்டும் எஞ்சியது.எண்ணூறுகளில் பிரிட்டிஷார் ரயில்நிலையம் அமைத்தபோது இடிபாடுகளின் செங்கல்களை பயன்படுத்திக் கொண்டனர். மினாரங்கள் மட்டும் வரலாற்றின் எச்சங்களாக நிலைகொள்கின்றன.
பதினொரு மணிக்கு ரயில் வந்தது. அதில் பெரும்பாலானவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். ஒரிசாவிலிருந்து கிளம்பிய பின் பல்வேறு இடங்களிலிருந்து ஏறியவர்களாக இருக்க வேண்டும். நள்ளிரவில் பலர் நாக்பூரில் ஏறியிருப்பார்கள். எழுந்தவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அவர்கள் ராஜஸ்தான் வணிகர்கள் எனத் தெரிந்தது. அவர்களின் வணிகச்சுற்று அது.
”ஆரல்வாய்மொழி கணவாய் கடந்து பணகுடிப்பக்கம் போய்ட்ட மாதிரி இருக்கு சார்” என்று ஷாகுல் கருத்து தெரிவித்தார். வெயில் எரிந்தது. கண்தொடும் எல்லையில் கரடுமுரடான மொட்டைப்பாறைக்குவியல்களாக உயரமில்லாத மலைகள். அவற்றில் கருவேலமரக்குடைகள்.
ஆனால் நான் நாற்பதாண்டுகளுக்கு முன்பு பார்த்த ராஜஸ்தான் அல்ல. அன்று பெரும்பாலும் நிலம் வெறுமை மண்டிய செம்மண்வெளியாக கிடக்கும். இப்போது நிலத்தில் பெரும்பகுதி விவசாயத்திற்குள் வந்துவிட்டது. நிலத்தடிநீரை பேணும் வழக்கம் முன்பே இங்கே இருந்தது. ஆகவே ஆழ்குழாய்கள் வழியாக விவசாயம் செய்கிறார்கள்.
இன்றைய ராஜஸ்தான் ஷாகுல் சொன்னதுபோல தமிழகநிலம் போலத்தான் இருக்கிறது. ஜெய்சால்மர் தவிர எங்கும் பாலைவனம் இல்லை. அங்கும் மிகக்குறைவாகவே மணல்பாலை உள்ளது. அங்கே தேயத்தேய சினிமா எடுத்துவிட்டார்கள்.
சென்றமுறை பாலைநிலப் பயணம் சென்றபோது செல்வேந்திரன் கேட்டார் “ராஜஸ்தான் பாலைன்னு சொன்னாங்க ஜெ, பசுமையாத்தானே இருக்கு?” நான் சொன்னேன். “பாலைவனம்தான். ஆனா நீ சாத்தான்குளம் உவரி அளவுக்கு எதிர்பாக்கக்கூடாது”
அஜ்மீரை மாலை ஏழரைக்குச் சென்று சேர்ந்தோம். செல்லும் வழி நெடுக மாபெரும் கட்டுமானங்கள் நடந்துகொண்டிருந்தன. மேம்பாலங்கள்,ஆறுபட்டைச் சாலைகள். ராஜஸ்தானின் முக்கியமான ‘விளைபொருள்’ இன்றைக்கு சலவைக்கல்தான். அது அம்மாநிலத்தை வளமானதாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள்தொகை குறைவு. வீடுகள் நகரங்களை ஒட்டித்தான். எவரும் ஏறி இறங்காத தனியான ரயில்நிலையங்களை பார்த்துக்கொண்டே சென்றேன்.
ரயில்நிலையத்திற்கு என் நண்பர் செங்கதிரின் ஊழியர்கள் வந்திருந்தனர். அவர் அங்கே காவல்துறை தலைவராக இருக்கிறார். முன்பு தர்மபுரியில் என் இளவலாக இருந்தவர். சொல்புதிதில் அழகிய மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். ஒருகாலத்தில் தமிழகத்தின் பெரும்படைப்பாளிகளில் ஒருவர் அவரிடமிருந்து உருவாவார் என எண்ணியிருந்தேன். வாழ்க்கையின் திசைவழிகள் முடிவற்றவை.
அஜ்மீர் தர்காவின் மிக அருகிலேயே விடுதியறை போடப்பட்டிருந்தது. தர்கா சாலை மேலிருந்து ஒரு தாள்விழுந்தால் மண்ணில் விழமுடியாத அளவுக்கு நெரிசலாக இருந்தது. பல்லாயிரம்பேர் தர்கா நோக்கி நீர்ப்பெருக்கென ஒழுகிச் சென்றுகொண்டிருந்தார்கள். அஜ்மீரின் அப்பகுதியில் அறைகள் எல்லாமே சிறியவை. அங்கேயே அறைவேண்டும் என சொல்லியிருந்தோம். எங்கள் அறைமுன் நின்றால் தர்காவின் மிகப்பெரிய நுழைவாயிலைப் பார்க்கமுடியும்.
நான் எண்ணியது போலவே என் நினைவிலிருந்த அஜ்மீர் அங்கே இல்லை. பழைய கட்டிடங்கள் எல்லாமே கான்கிரீட் கட்டிடங்களாக, விடுதிகளாக மாறிவிட்டிருந்தன. சிவப்புக்கற்களாலான பழைய சத்திரங்களை தேடித்தான் பார்க்கவேண்டும். மக்கள் திரளில் எல்லாவகை முகங்களும் இருந்தன. இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் தர்காவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். முன்பு தென்னகத்தார் நிறைய வந்தனர். இன்று கொஞ்சம் குறைவு என நினைக்கிறேன்.
நான் அங்கே கூட்டம் குறைந்திருக்குமென எண்ணியிருந்தேன். தர்கா வழிபாட்டை இஸ்லாமியர்களில் அடிப்படைவாதிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். கல்லறை வழிபாடு என இழிவுசெய்கிறார்கள். அங்கே இந்துக்கள் செல்வதற்கு எதிராக இந்துத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அங்கிருந்த கூட்டம் அவற்றுக்கு அப்பால் இந்தியாவின் எளியமக்களிடம் அந்த தர்காவின் இடம் பெரிதாக மாறுபடவில்லை என்றே காட்டியது. அது அளித்த நிறைவு சாதாரணமானது அல்ல.
சாலையில் சென்றுகொண்டிருந்தவர்களில் இந்துக்கள் பெருமளவில் இருந்தனர். குடும்பம் குடும்பமாக சென்றனர். பொட்டுவைத்து சரிகை ஆடை முக்காடு போட்ட பெண்கள். பைஜாமா அணிந்து பெரிய தலைப்பாகை அணிந்த ராஜஸ்தானிய ஆண்கள். அன்று ஒரு முக்கியமான நாள். தர்காவில் சிறப்பு வழிபாடு உண்டு என்று சொன்னார்கள். ஆகவே உடனே அறைக்குச் சென்று குளித்துவிட்டு தர்காவுக்குக் கிளம்பினோம்.
[மேலும்]
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

