Jeyamohan's Blog, page 900
October 12, 2021
ஈழத்திலிருந்து ஒரு நேர்காணல்.
இலங்கையில் இருந்து வெளிவரும் வனம் இணைய இதழில் வெளிவந்துள்ள என்னுடைய நீண்ட பேட்டி. என் உரையாடல்கள் வெவ்வேறு வடிவில் வெளியாகியிருக்கின்றன. இப்போது பார்க்கையில் பெரும்பாலும் எல்லா இதழும் தொடங்கும்போது என் பேட்டி அல்லது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது என தோன்றுகிறது. வனம் இதழ் ஈழ இளைஞர்கள் ஷாதிர் யாசீன், சாஜித் அஹமட், சப்னாஸ் ஹாசிம் ஆகியோரால் நடத்தப்படுகிறது. ஒரு நீண்ட சூம் உரையாடலை ஒட்டி தயாரிக்கப்பட்ட பேட்டி இது. அப்போது சூமில் மேலும் பல நண்பர்கள் இருந்தனர்.
பொதுவான பிற பேட்டிகளுக்கும் இதற்குமிடையே உள்ள வேறுபாடு என்பது ஈழத்து இலக்கியம் மற்றும் ஈழத்தவருக்கு இங்குள்ள இலக்கியச்சூழல் பற்றி இருக்கும் குழப்பங்கள் பற்றி சற்று கூடுதலாகப் பேசப்பட்டுள்ளது என்பதுதான்.
கோவை கவிதைவிவாதம் – கடிதம்
அன்பு ஜெ,
கவிதை முகாமில் கலந்து கொண்ட இரண்டு நாட்களும் அறிதலுடன் கூடிய மகிழ்வான நாட்களாக நினைவில் தங்கிவிட்டது. அதைத் தொகுத்துக் கொள்ள எத்தனித்து இந்தக் கடிதம்.
தேர்வுப்பாடமாக வரலாற்றுப் பின்புலத்தோடு சங்கக் கவிதைகள் முதல் நவீனக் கவிதைகள் வரை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அறிதலுக்காக படிக்கும் முதிர்ச்சி தருணத்தில் புறநானூற்றின் பொருண்மொழிக் காஞ்சித் துறைப் பாடல்களும், குறளும் தன்னை திறந்து கொண்டு என் முன் நின்றன. வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் அவை வந்து முன் நிற்கும் போதெல்லாம் மேலும் மேலுமென அவை திறந்து கொண்டே இருக்கின்றன.
தீவிர இலக்கிய வாசிப்பை குழுவாக முன்னெடுக்கலாம் என்றெண்ணி நண்பர்கள் சகிதம் ஜெ -வின் “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” என்ற புத்தகத்தோடு வாசிப்பைத் தொடங்கினோம். அந்தப் புத்தகத்தில் நவீனக் கவிஞர்களாக ஜெ அறிமுகப் படுத்தியிருந்த கவிஞர்களை, கவிதைகளை இணையம் வழி கண்டடைந்தேன். ஜெ வின் இணையதளத்தில் கவிதையைப் பற்றி கவிஞர்களைப் பற்றி எழுதியிருந்த பல கட்டுரைகள் மேலும் உதவி புரிந்தன. எல்லாம் சுற்றி வந்து என் மனதிற்கு அணுக்கமாகி அமர்ந்தது பிரமிளின் கவிதைகள் தான்.
மதாரின் கவிதை வெளியீட்டு விழாவின் போது ஜெ ஆற்றிய உரை கவிதையின் வரலாற்றுப் பின்புலத்தோடு பின் நவீனத்துவக் கவிதைகளை அறிமுகம் செய்தது. அதற்குப் பின் நண்பர் மதாருடனான கவிதை உரையாடலில் மேலும் மேலுமென கவிதைத் தருணங்களை சிலாகித்திருந்தேன். தேவதேவன், தேவதச்சன், இசை என அவர் சிலாகிக்கும் கவிதைகளின் வழி கண்டடைதல் நிகழ்ந்து கொண்டே இருந்தது.
ஒருவகையில் இவையாவுமே வாசகனாய் கவிதைகளுக்குள் சென்று அதன் அனுபவத்தின் வழி கவிஞனுக்குள் சென்று அவன் அடைந்த கணத்தை அடைந்து கரைந்து மேலும் மேலும் வாசகனாக உள்நுழைந்து செல்ல என்னை மயக்கி நின்றது.
கோவை கவிதை முகாம் நிகழ்ந்த இந்த இரண்டு நாட்களும் வாசகராக பல கேள்விகளைக் கேட்டு தெளிபடுத்திக் கொண்டோம். பிறரின் கேள்விகளில் பல திறப்புகள் கிடைத்தன. கேள்விகளில் பிரதானமாக நின்றது “எது நல்ல கவிதை? ஒரு நல்ல கவிதையின் அளவுகோல் தான் என்ன? ” என்பது. இதை இரண்டு நாட்களுமாக வெவ்வேறு விதமாக மாற்றி மாற்றி கிருஷ்ணன் அவர்கள் கவிஞர்களிடம் கேட்டுப்பார்த்தார். அவர் கேள்வி வாசகர்களுக்குள் நுழைந்து இன்னும் ஆழமாக அப்படி ஒரு கேள்வியின் தேவையைச் சொல்லி கேட்டுப் பார்த்தாயிற்று. முழுமுற்றான எந்தப்பதிலும் கிட்டவில்லை. அப்படியொரு வரையரையால் வாசகனுடைய பார்வை சுருங்க வாய்ப்புள்ளதாகச் சொல்லியே யுவன் இந்தக் கேள்வியை தவிர்த்துக் கொண்டேயிருந்தார். வெண்முரசின் இளைய யாதவனைப் போல அரங்கம் அடித்துக் கொண்டு அமைதியாகும் தருணத்தில், அதுவும் மேலதிக விளக்கம் தான் ஏதும் சொல்ல வேண்டுமென இருந்தால் இறுதியாகப் பேசினார் ஜெ.
இரண்டாம் நாள் யுவன் மற்றும் மோகனரங்கன் அரங்கில் “கவிதை வாசிப்பு முறைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அப்பொழுதும் அந்தக் கேள்வி வந்து நின்றது. யுவன் காலங்காலமாக பிடிகொடுக்காமல் இதே பதிலைச் சொல்வதாக கிருஷ்ணன் குறைபட்டார். நண்பர் விஜய் எழுத்தாளனாக கவிஞனாக வாசகனாக புதிதாகப் பிரவேசிக்கும் ஒருவனுக்கு அந்த அளவுகோல்கள் எத்தனை முக்கியத்துவம் என்பதை அழாத குறையாகவும் எடுத்து வைத்து விட்டார். யுவன் எப்படி சுற்றி வலைத்துக் கேட்டாலும் தன்னுடைய டிரேட்மார்க் சிரிப்போடு அந்த வரையறை தேவையில்லை என்ற கருத்தோடு வாதத்தை முடித்து வைப்பார். முடிக்கும் கணந்தோறும் ஏமாற்றத்தோடுதான் அரங்கு அமைந்து போகும்.
இந்த ஒரு இறுக்கமான கேள்வியும், பிடிகொடுக்காத பதிலும் கவிஞர் மதாரின் “தற்கால கவிதைகள்” அரங்கில் தவிடுபொடியானது. பின்நவீனத்துவக் கவிதைகளை கவிஞர்கள் மிக ஆவலாக விவாதித்தது தான் கவிதையின் இலக்கணத்தை வரையறை செய்தது எனலாம். இலக்கணம் என்பதைக் காட்டிலும் அவர்கள் எந்தக் கவிதையை சிலாகித்தார்கள், எந்தக் கவிதையை எந்தக் காரணங்களை எல்லாம் சொல்லி புறந்தள்ளினார்கள் என்பதை கண்ணுற்று நாங்கள் வரையறுத்துக் கொண்டோம் எனலாம். மதாரின் அரங்கில் கவிஞர்கள் பேசியது ஒருவாராக பல காலமாக உட்பொதிந்திருந்த மனக்குமுறல் போல தென்பட்டது.
வைப்பு முறையின் ஒழுங்கு, தொனி, உணர்வுகள், உள்ளொளி என சிலாகிப்பதைத் தாண்டி எங்கெல்லாம் கவிதை கவிதையில்லாமல் ஆகிறது என்பதைக் கூறினார்கள். கலைச்சொற்களையெல்லாம் இட்டு நிரப்பி சமைக்கும் கவிதைகள், ஒன்றை முதலில் கவிதையில் சமைத்துவிட்டு அதை அப்படியே விட்டுவிட்டு வேறொன்றை சமைக்க ஆரம்பித்து வாசகனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் (SHIFT FALLACY/ THEME SHIFT) கவிதைகள் (இதே theme shif -ஐ கவிதையில் ஓர் உச்சத்தை நிகழ்த்திக் கடப்பவர்களும் இருக்கிறார்கள் தான் என்றார் யுவன்), தேவையில்லாமல் அதிக சொற்களைப் பிரயோகப்படுத்தி கவிதையெனும் தன்மையையே குலைத்துவிடும் கவிதைகள் (நீள் கவிதைகளில் உச்சம் அடைந்த கவிதைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை), ஏற்கனவே பிரபலமான கவிதைகளை நகலெடுக்க எண்ணி குழப்பமாக்கி காலப்போக்கில் அதை கிளிஷேவாக்குதல் (அபியின் வாழ்வின் தரிசனமாக நிற்பது கோடுகளும் புள்ளிகளும். அதை மேலதிகமாக சொல்ல முடியுமானால் எழுதலாம். ஆனால் அதையே தரிசனமேயில்லாமல் குழப்பி எழுதுவது கவிதையே அல்ல. அது காலத்தில் நிலைக்காது என்றார் ஜெ.
கவிதையின் புறத்தில் இசையை நிகழ்த்தக்கூடிய நவீன யாப்பு கவிதைகள் எழுதப்படுகின்றன. ஆனால் கவிதையின் அகத்தில் நிகழக்கூடிய இசை (INNER MUSIC, RHYTHM) ஒன்றுள்ளது. அதை வாசகன் நுகரக்கூடியவாறு அமைப்பது ஒரு நல்ல கவிதை என்றார் ஜெ.
ஒரு வாசகனாக கவிதையை என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான பதிலை அங்கொன்றும் இங்கொன்றுமாக கவிஞர்கள் சொல்லியதை வைத்து தொகுத்துக் கொள்ள முடிந்தது. “ஒரு கவிதையை உடைத்து உடைத்து மறுஉருவாக்கம் செய்து குலைப்பது. வாசக /ஊடு பிரதி என அதற்காக அலைந்து அலைந்து கவிதையின் சுவையைத் தவற விடுவது, கோட்பாடுகளைத் தேடுதிறேன் பேர்வழி என கோட்பாட்டுப் புத்தகங்களின் சுமையை அதில் ஏற்றி வைப்பது, பல வகை விமர்சனங்களையும் முன்னரே படித்துவிட்டு அந்தப் பார்வையோடே அதை அணுகுவது” ஆகியவை கவிதையின் சுவையைக் கெடுக்கும் என்றார்கள்.
“ஒரு கவிதையை கவிதையாக அப்படியே பாருங்கள். அதனுடன் உரையாடுங்கள். உங்கள் அனுபவத்தைக் கொண்டு அதை உணர முற்படுங்கள்” என்று கவிஞர்கள் திரும்பத்திரும்ப கூறினார்கள்.
கவிஞர் யுவன் அவர்கள் சொல்லும்போது தி. ஜா -வின் யமுனா தனக்கு காலத்தில் எவ்வாறெல்லாம் மாறி நிற்கிறாள் என்று சொல்லிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் அவர் என் மனதில் நின்றுவிட்டார். உள்ளம் கலங்கி நின்று அவரை அது கேட்டுக் கொண்டிருந்தது. “யமுனாவை பருவ வயதில் கேட்டபோது அவளைக் காதலித்து அவளுடன் வாழ வேண்டும் என்று தோன்றியது. நடு வயதில் ஒரு முறையேனும் அவளுடன் இருந்தால் போதும் என்று தோன்றியது. நாற்பது வயதுக்கு மேல் ஒரு தந்தையாக நின்று அவளுடைய நிலைக்காக பரிதாபப்பட்டேன். இப்பொழுது அவளை நினைத்தால் அந்தத் துயர் அவளுக்கு வந்திருக்கக்கூடாது என்று மட்டுமே தோன்றுகிறது. தி. ஜா வின் யமுனா அப்படியே தான் இருக்கிறாள். நான் மாற மாற அவள் தன்னை மாற்றிக் காட்டுகிறாள். ஒரு நல்ல கவிதை என்பது அது தான்.” என்றார் யுவன். இந்த அவரின் வரிகளின் வழி என்னை நோக்குகிறேன். வள்ளுவனை மனனம் செய்வதிலிருந்து அவரைக் கவிஞனாகக் கண்டடையும் தருணத்தை நோக்கி வந்திருக்கிறேன். முதிர்ச்சியாகுந் தருணந்தோறும் எனக்கு குறள் திறக்கும் தருணம் வியக்க வைக்கிறது. சில கவிதைகளும் அப்படித்தானே!
ஜெயமோகன், யுவன், போகன், மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன், சாம்ராஜ், இசை, மதார் என கவிஞர்களால் அரங்கம் நிறைந்திருந்த இடத்தினுள் ஒரு வாசகராக அமைந்து அவர்களைக் கேட்பது மகிழ்ச்சியளித்தது.
போகனின் சீனக் கவிதைகளோடு முதல் நாள் துவங்கியது. சீன வரலாற்றுப் பின்புலத்தைச் சொல்லி கவிதைகளுக்கான பேசு பொருள் எவ்வாறெல்லாம் அங்கு உருவாகி வந்துள்ளது என்பதை விளக்கி சில மொழிபெயர்ப்பு கவிதைகளைப் பற்றிக் கூறினார். கவிதைகளை விடவும் போகன் அவர்களின் உரை மிகவும் கவர்ந்தது. முற்றிலும் நிலத்தாலும் பண்பாட்டாலும் வேறுபட்ட மொழியிலுள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பை சுவாரசியமாகக் கடத்திய பெருமை அவரையே சாரும்.
சமகால இந்தி கவிதைகளைப் பற்றி கோபாலகிருஷ்ணன் அவர்கள் அரங்கில் உரையாடினார். ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தையளித்து குறிப்பிடத்தக்க இந்தி கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருந்தார். பார்ப்பதற்கும் ஒரு இந்தி பண்டிட் போல இருந்ததால் அவர் சொல்வது நம்பும்படியாக இருந்தது. அக்ஞேய, அசோக் வாஜ்பேயி, கிரிராஜ் போன்ற பெயர்கள் மனதில் பதிந்துவிட்டன. கிரிராஜின் கவிதையின் சாரம் இரண்டு நாட்களும் ஏதோவோர் வகையில் கோடிட்டு காட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.
“தேநீர் தயாரித்துத் தருமாறு அவன் கனவில் என்னிடம் கேட்டான்
பல ஊர்களைச் சுற்றிவிட்டு நீண்ட யாத்திரையிலிருந்து திரும்பியிருந்தான்
அவனுக்காக வெண்டைக்காய்களை நறுக்கத் தொடங்கினேன்
இட்லி சாப்பிட விரும்புவதாக அவன் சொன்னான் நான் அதைத் தயாரிக்கத் தொடங்கினேன்
அவன் துணிகளைத் துவைக்க ஏற்கெனவே ஒதுக்கி வைத்திருந்தேன்
அப்போது அவன் சிறியவொரு செடியாக மாறினான்
இப்போது அவன் தனக்கு நீருற்ற வேண்டுமென அவன் என்னிடம் எப்படிச் சொல்வான் என்று நான் எண்ணினேன்
இரண்டு மூன்று நாட்களாகவே வீட்டில் தண்ணீர் இல்லை
என்னுடைய மனக்குழப்பத்தை அறிந்தவன்போல் அவன் நீராக மாறி வழியத்தொடங்கினான்
அவன் வீட்டிலிருந்து வெளியே பெருக்கெடுக்க நேரும் என்பதால் அவனை நான் கையில் அள்ளி குடத்தில் ஊற்றினேன்
தேநீர் தயாரித்துத் தர இத்தனை நேரமா என்று அப்போது அவன் கத்தினான் என்னிடம் இரண்டு கைகள்தான் உள்ளன என்னை ஏதாவது ஒரு வேலையைச் செய்ய விடு என்றேன்
பிறகு சொன்னேன் என்னவோ நாம் இருவரும் ஏற்கெனவே சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டதைப்போல இப்படி ஆத்திரப்படுகிறாய் நீ.”
-கிரிராஜ் கிராது
ஜெ இந்தக் கவிதையை எடுத்துக் காட்டும் போது “தேநீர் போடப் போகும் அந்த சிறு பொழுதுக்குள் என்னவெல்லாம் அவன் ஆகிறான் பாருங்கள்! செடியாக, நீராக, மாறும் அவனை அவள் எதிர் கொண்டு சினுங்கி நிற்கிறாள். அதுவும் ஒரு நொடிக்குள்… கனவில்…
கடைசி நேரத்தில் மலையாளக் கவிதைகளைப் பற்றி அரங்காட வேண்டிய கவிஞர் ஆனந்த்குமார் வர இயலாமல் போன வருத்தம் இருந்தது. அவர் கவிதைகளை சிலாகிக்கும் விதம் மிகவும் பிடிக்குமென்று மதார் கூறுவார். அவருடைய ஆழ்ந்த குரலில் சிலாகிக்கும் கவிதைகள் எங்கோ இருளின் ஆழத்திலிருந்து ஒளிர்ந்து நம்மை நோக்கி வருவது போலத் தோன்றும். அதை ஒரு அமர்வாக அனுபவிக்க முடியவில்லையெனினும் மதாரின் அரங்கில் அனைவருக்கும் பிடித்துப்போன கவிதையாக அவரின் ஒரு கவிதை அமைந்தது.
“குழந்தை
எப்போது
என் குழந்தை?
ஒரு குழந்தையை
கையிலெடுக்கையில்
அது என் குழந்தை.
வளர்ந்த குழந்தையை
அணைக்கும்போதெல்லாம்
அது என் குழந்தை
விலகும் குழந்தையை
நினைக்க நினைக்க
என் குழந்தை
என் குழந்தை.”
-ஆனந்த் குமார்
என் குழந்தை என் குழந்தை என அனைவரும் அந்தக் கவிதையை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். மதாரின் இந்தக் கவிதைத் தேர்வு ஆனந்த்குமாரை அரங்கிற்கு சிறப்பாக அறிமுகப்படுத்தியது எனலாம்.
முதல் நாள் மனதை நிறைத்தவர்களில் கவிஞர் இசை முதன்மையானவராக எனக்குத் தோன்றினார். அகழ் மின்னிதழில் “நாட்படுதேறல்” என்ற மூன்று தொடர் கட்டுரைகளின் நீட்சியாக எழுதப்பட்டது என்று கூறி அரங்கை ஆரம்பித்தார். சங்க காலம் முதல் இன்று வரை பசியைப் பற்றி, சோற்றுக் கவலையைப் பற்றி கவிதைகளின் வழி எடுத்துக் கூறினார்.
தன்னுடைய வாழ்க்கைப்பாட்டை எடுத்துக் கூறி அதை ஆரம்பித்தது அவரை மேலும் அணுக்கமாக்கியது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் மருந்தாளனாக தென்படாத ஒரு கவிஞனை, கவிதையை சிலாகிக்குங் கணந்தோறும் உணர்வின் உச்சத்தத்தை அடைந்து புன்னகைப்பவனை என்ன சொல்லி விளக்குவது. மயங்கிப் போய் தான் அவனைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.” என்று கவிதையை மட்டுமே தொழிலாகக் கொண்டு செறுக்கிச் சென்ற ஒளவையைக் காணித்தான். “பசிப்பிணி மருத்துவன் இல்லம்.
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!” என்று பிணியோடிருந்த சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் காணித்தான். சற்றே மதுரகவியாரின் தனிப்பாடலைப் படித்துக் காணித்து புன்முறுவலுடன் எங்களைப் பார்த்தான். “சோறே இல்லயாம். என்ன செறுக்கு பாருங்க” என்று புன்னகையோடு மீண்டும் அந்தக் கவிதையை வாசித்தான்..
“நீளத்திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே – காளத்தி
நின்றைக்கே சென்றாக்கால் நீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே யிரு.”
“இன்றைக்கே சற்றே இருங்கறான்” என்று செய்கையோடு இறுதி வரியைச் சொல்லி அவன் சிரிக்கும்போது கண்கள் கலங்கிவிட்டது.
“இதுக்குமேல ஒருத்தன் இருக்காம்பாருங்க அவன் நமக்குத் தொழில் கவிதை… ங்கறான்” எனும் போது சிரித்துவிட்டோம்.
அங்கிருந்து கவிஞர் யூமாவாசுகியின் கவிதையைச் சொல்லும்போது அவரின் தொனி கராராகியிருந்தது.
“என் பங்கு சோற்றை
நீங்களே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்…. ”
என்ற கவிதை அது. நிகழுலகில் கவிஞனாக மட்டுமே இருந்து வாழ்க்கைப்பாட்டை நடத்த கவிஞனால் இயலாமல் இருப்பதன் மனக்குமுறலில் வரும் வரிகள் தான் “ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதும் “பறந்து கெடுக உலகியற்றியான்” என்பதும் என்றான். உழைப்பதைப் போலத்தானே கவிதை எழுதுவதும் என்று சொன்னான். உடனே அரங்கிலிருந்த ஒருவர் அ.முத்துலிங்கம் ஐயா கம்பனைப் பற்றிச் சொன்ன வரிகளை நினைவுகூர்ந்தார். “கம்பன் தன் வாழ்நாளில் எத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறான்! எத்தனை ஓலைகள்! எத்தனை எழுத்துக்கள்! எத்தனை முறை ஓலைகளை அடுக்கியிருப்பான். அதற்கு இணையான உடலுழைப்பு எது. எதை அத்துடன் நிகர் செய்ய முடியும்” என்ற வரிகளை நினைவுகூர்ந்தார். அப்படியே இசை யூமாவின் கவிதையோடு அதைத் தொடர்பு படுத்தி “என் பங்கு சோற்றை” என்பதை மேலும் விரித்தார்.
“என் பங்கு சோற்றை
நீங்களே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்
எனவே என் பசிக்கு
பொறுப்பாவது நீங்களேதான்
எனக்குண்டானதை விடுவிக்கச் சொன்னால்
உழைத்துப் பெறும்படி அறிவுரைக்கிறீர்கள்
உங்களுடையதை விட
நூறு மடங்கு அதிகமானதென் உழைப்பு
உணவின் பொருட்டாய் அமையவில்லை
என்னைப் போன்றவர்களிடத்தில் நீங்கள்
ஒரு போதும் நியாயம் காட்டியதில்லை
அறியாத்தனங்களை
கண்டுகொள்ளாதிருப்பதற்கும்
ஒரு எல்லை உண்டு
செல்வந்தனாவதற்குரிய சூத்திரத்தை
உபதேசிக்காதீர்கள் தயவு செய்து
எனக்கு
கவிதை வசப்பட்டாக வேண்டும்
நான் நடக்கத் தரையிருக்கிறது
என்னுடைய காற்றிருக்கிறது
எழுத்திடையில் பசியெடுக்கும் போதுதான்
இருந்திருக்க வேண்டிய
என்னுடைய சோற்றைத் தேடுகிறேன்
நான் மீண்டும் கடவுளாகும்படி
ஒரு கவிதை கட்டாயப்படுத்துகிறது
நான் எழுதப் போகிறேன்
முடிந்த பின்
இந்த படகினுள்ளே பார்க்கும் போது
எச்சரிக்கை
என் சோற்றுத்தட்டு வந்திருக்க வேண்டும்
உங்களுக்கு ஒரு
சிறிய சலுகை தர முடியும்
கடற்கரை வெளிச்சம் மறைந்து
வெகுநேரம் கழிந்த பின்பே
படகினுள் பார்ப்பேன்”
என்று அவர் படித்து முடிக்கும் போது மனம் கனமாகியது. அப்போதும் அவரில் மருந்தாளனின் சாயல் தெரியவில்லை. மதாரையும், லஷ்மி மணிவண்ணனையும், போகனையும் ஒரு முறை கண்களால் தொட்டு வந்தேன். யாவரும் அதை வழிமொழிந்திருக்கக் கூடும். கவிஞன் வாழ்க்கைப்பாட்டுக்கும் சேர்த்தே கவிஞனாக மட்டும் இருந்துவிடும் காலம் கனியுமா! என்ற தொனியோடு இசையின் அரங்கு முற்று பெற்றது.
எழுத்தாளர் சுனீல் அவர்கள் ஆன்மீகக் கவிதைள் என்ற தலைப்பில் பேசினார். ரிக் வேதம் தொடங்கி தாவோ, யுவனின் பெயரற்ற யாத்ரீகன், கபீர், மீரா, அக்கம்மா தேவி, ரூமி என நீண்ட ஆன்மீகக் கவிதை மரபை விளக்கி கவிதைகளை வாசித்தார். பக்தி இலக்கிய காலம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நவீனத்தில் பாரதியைத் தொட்டு அதனோடு வெண்முரசின் நீலம் நாவலின் கவிதைத்தன்மையில் கொணர்ந்து நிறுத்தினார்.
அதைத் தொடர்ந்த விவாதத்தில் தத்துவப் பொருளைச் சொல்வதும், திறப்பதுமே நல்ல கவிதையா என்ற விவாதம் சுவாரசியமாக இருந்தது. எப்படியும் இறுதியில் “அதுமட்டுமல்ல கவிதை” என்று முடித்துவிடுவார்கள் எனினும் விவாதத்தின் போக்கு அறிதலுக்கானவையே.
கவிஞர் சாம்ராஜ் அவர்களின் அரங்கில் “கவிதைகளில் உடல்மொழி” என்ற தலைப்பில் பேசினார். அவரின் அமர்வில் யாவரும் சிலாகித்த கவிதை கவிஞர் இசையின் “நளினக் கிளி”
“அந்த சிமெண்ட் லாரிக்கு வழி வேண்டும்
டிரைவரின் கீழ்படியும் “கிளி”
தன் ஒற்றைக்கையை வெளியே நீட்டுகிறது.
விறைத்து நீண்ட ஒரு உலக்கையைப் போலல்ல..
ஐயா ..அவசரம்.. என்று கெஞ்சுகிற பாவனையிலல்ல..
அது கையை நீட்டியதும்
அதன் மணிக்கட்டில் உதித்த சாம்பல்நிறப்பறவை
அலையலையாய் நீந்துகிறது.
நான் காண்கிறேன்..
இந்த மீப்பெருஞ்சாலையின் அந்தரத்தில்
ஓர் அற்புதநடனமுத்திரை.
அதன் நளினத்தின் முன்னே
உலகே ! நீ வழிவிட்டொதுங்கு!.”
அந்த கவிதைத் தருணத்தை இசை விளக்கும்போது “ஆஹா! ” என்று தோன்றியது. அந்தக் கிளீனர் பையன் எத்தகைய மனநிலையில் இருந்தால் அவ்வளவு நளினமாகக் கையசைப்பான். அவன் முகத்தில் அத்துனை புன்னகை. அந்த அசைவின் முன்
“உலகே ! நீ வழிவிட்டொதுங்கு!.”
என்றார். மயங்கிவிட்டோம். ஒரு சைகையின் வழி கவிதை உருவாகி வரும் கணத்தை காட்சிப்படுத்தினார். கவிஞர் சாம்ராஜ் தேர்ந்தெடுத்த கவிதைகளை அவர் விளக்கிய விதமும் அவருடைய வாசிப்புப் பார்வையும் அருமையாக இருந்தது. அரங்கின் இறுதியில் ஜெ இத்தகைய கவிதைகள் கவிதையாக முற்றுபெறாமல் ஒரு பிளாஷ் தருணமாக படம்பிடித்துக் காணிப்பது கலை காட்சி ஊடகமாக தன்னை நிகழ்த்திக் கொண்டபின் தேவை தானா என்ற விவாதத்தை ஆரம்பித்தார். அது போன்ற ஃபிளாஷ் கவிதைகளைச் சொல்லி அதன் இறுதியில் “அதனால் என்ன (so what)? ” என்ற தொனியில் கொணர்ந்து நிறுத்தியது சைகைக் கவிதைகளின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. எப்படி ஒரு உடல் மொழி கவிதையாக நிகழ்ந்தது என்பதை மீண்டும் இசையின் அதே கவிதையின் வழி அதன் மறுபக்கத்தையும் நிறுவினார். திரைப்படத்துறையில் இயங்குபவராக கவிஞராக சாம்ராஜ் அவர்கள் உடல்மொழி/சைகைக் கவிதைகளுக்கான சாத்தியம் உள்ளது எனவும். அவை இன்னமும் உச்சமடையவில்லை எனவும் கவிஞர்கள் அதை முயன்று பார்க்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த அரங்கிற்கான கவிதைகளை தேர்வு செய்ததாகச் சொன்னார். அது யாவரும் ஏற்கும்படியும் இருந்தது.
அந்தியூர்மணி அவர்கள் “பழந்தமிழ்க் கவிதைகளில் அறிவும் கல்வியும்” என்ற தலைப்பில் முதல் நாளின் இறுதி அமர்வாகப் பேசினார்.
“…மம்மர் அறுக்கும் மருந்து.” என்று கல்வியைப் பற்றிய நாலடியார் பாடலுக்கு ஜெ மேலதிக விளக்கமாக மம்மர் என்பதை மூவினை என விளக்கினார். அதாவது சஞ்சிதம் (தொல்வினை), பிராப்தம் (முன்வினை), ஆகாமியம் (புதுவினை) ஆகிய மூன்றையும் அறுக்கும் மருந்து என்று கூறியது திறப்பாயிருந்தது.
நிகழ்வின் இறுதி அரங்காக கவிஞர் லஷ்மி மணிவண்ணன் அவர்கள் “விக்ரமாதித்யன் கவிதைகள்” பற்றி பேசினார். கவிதை அரங்கு லஷ்மி மணிவண்ணனில் தொடங்கி லஷ்மி மணிவண்ணனில் நிறைவு கொண்டது எனலாம். முதல் நாளின் அறிமுக உரையில் அவர் கவிதை ஏன் எழுதப்படுகிறது என்று கூறினார்.
“ஒரு சமநிலை இல்லாதவர்கள்/ ஏதோவோர் பிசகு இருப்பவர்கள்/பள்ளம் இருப்பவர்களே தாங்கள் கைப்பற்ற முடியாமல் இழந்த கணத்தை மீட்கும் முயற்சியாக கவிதை எழுதறாங்க. சமநிலையுடன் எழுதப்படுவது செய்யுள்” என்றார்.
இதே கேள்வி கவிஞர் இசையின் அரங்கின் நிறைவிலும் வந்தது. ஒருவேளை இந்த வறுமையும், சோற்றுப்பாடும் பள்ளமாக அமைந்து தான் கவிஞனை கவிதை எழுத உந்தித்தள்ளுகிறதா என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஜெ தாகூரையும் பாரதியையும் ஒப்பு நோக்கினார். தாகூரின் செல்வமும் வசதியான வாழ்வும் அவரை உலகக் கவியாக ஆகுவதினின்று தடுக்கவில்லையே என்றார். பாரதி அதிக கவிதைகளை எழுதியது அவர் வசதியாக இருந்த போது தான் என்றார். இன்னது தான் கவிஞனாக்குகிறது என்று சொல்லிவிட முடியாது என்று ஜெ முடித்தார்.
லஷ்மி மணிவண்ணன் அவர்கள் தொடர்ந்து சொல்லிவரும் இன்னொரு கருத்து “கவிஞனை கவிஞனாக மட்டுமே பாருங்கள்” என்பது. சாதியை மதத்தை, கொள்கையை, அரசியலை, அவன் சார்ந்திருக்கும் அமைப்பை வைத்து ஒரு கவிஞனை மதிப்பிடாதீர்கள் என்பது. அறிமுக உரையில் மீண்டும் அவற்றை நினைவுகூர்ந்தார். “கவிஞன் என்பதே ஒரு இயக்கம் தான். எதை நோக்கி நகர்கிறானோ அதில் அமைவதே அவன் கவிதை. அரசியல் போன்ற எளியவற்றுக்கு இடமில்லை. எது ஒரு கவிஞனின் அழகியலை வடிவமைக்கிறது என்று சொல்லிவிடமுடியாது” என்றார்.
கவிஞர் விக்ரமாதித்யனுக்கும் தனக்குமான உறவு மற்றும் அவரின் சில கவிதைகள் வழி அவரை இறுதி அமர்வில் எடுத்துரைத்தார். விஷ்ணுபுரம் விருது வழங்கப்படவிருக்கும் இந்த நேரத்தில் கவிஞர் விக்ரமாதித்யனை அவருடன் உடனிருந்த நண்பராக, சக கவிஞர் என்ற முறையிலும், நல்ல கவிதை வாசகனாகவும் இருந்து லஷ்மி மணிவண்ணன் அவர்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது நிறைவாக இருந்தது.
கவிதை முகாமின் நிறைவில் கவிதையாய் என் மனதில் நின்றது இசையும், யுவனின் அந்த புன்சிரிப்பும் தான். கவிஞர் போகனும், யுவனும், சாம்ராஜ் -ம் துருதுருவென விவாதத்தை நகர்த்திச் சென்றார்கள். கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பகிர்வுகள், விளக்கங்கள் மேலும் பயனுள்ளதாக்கியது. ஆசிரியர் ஜெயமோகனுடனான இரண்டு நாள் அருகமைவு மகிழ்வும் அறிதலும் அணுக்கமும் நிறைந்ததாக அனைவருக்கும் அமைந்தது. குற்றாலக் கவிதை முகாம் பற்றி அதில் கலந்து கொண்ட கவிஞர்கள் பற்றியும் ஜெ பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மலையாளம்-தமிழ்க் கவிஞர்கள் சந்திப்புகளைப் பற்றி பகிரும்போது அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். “குற்றாலம் எஃபெக்ட்” என்று மலையாளத்தில் இன்றும் பரவலாக அறியப்படக்கூடிய ஒன்றை உருவாக்கியது குற்றாலக் கவிதை முகாம். அது செயல்படாமல் போனதற்குப் பிறகு பத்து வருடங்கள் கடந்து இந்தக் கவிதை முகாம் நடந்திருக்கிறது. இது மேலும் தொடர வேண்டும் என்று ஜெ சொன்னபோது இந்த இரண்டு நாளின் முக்கியத்துவத்தை முழுதுணர்ந்தோம்.
இனிய நினைவாக மனதில் பதித்துக் கொள்ளக் கூடிய இரண்டு நாட்களாக மாற்றித் தந்த பெருமை கிருஷ்ணன் சார், கதிர் அண்ணா, பாலு அண்ணாவையே சாரும். கவிதை அரங்கிற்கான தலைப்புகள், கவிஞர்களுக்கான கவிதைகள், வாசகர்கள் அவற்றை நகலெடுதஅது படித்து வரச் செய்வது என நிகழ்வு நிகழ வேண்டுமென நினைத்த கணம் முதல் அது நிறைவுறுவது வரை சிறப்பாக செயல்படுத்தியது கிருஷ்ணன் சார் தான்.
பாலு அண்ணாவின் தோட்டத்தில் இந்த முறை சிறுகோட்டுப் பெரும்பழங்கள் தொங்கவில்லை, நாவல் பழங்கள் பழுத்துத் தொங்கவில்லை, எலுமிச்சம் பழங்கள் அதன் வாசனையை மண்ணில் புதைக்கத் தரையிறங்கவில்லை. சப்போட்டாக்கள் சில பழுத்திருந்தது, மந்தாரைப்பூக்கள் பூத்து சிரித்துக் கொண்டிருந்தது. முன்பு பார்த்த நாய்களும் அதன் குட்டியும் பெரிதாகியிருந்தது. இந்தப் பண்ணை பருவங்கள் மாறுகின்றன என்ற சிரத்தையே இல்லாமல் எப்பொழுதும் நிறைந்து பூத்து கனிந்து கிடப்பது போலவே நான் நினைத்துக் கொள்வதுண்டு. பாலு அண்ணாவின் மனதைப் போலேயே. பாலு அண்ணாவின் பண்ணைத்தோட்டம் மேலுமொரு நினைவாக இந்த நிகழ்வை தன்னில் பதித்துக் கொண்டது.
சிறப்பாக ஒருங்கமைக்கப்பட்டு அறிதலாக, இனிய நினைவாக அமைந்த கவிதை முகாமிற்காக மிக்க நன்றி ஜெ.
பிரியமுடன்
இரம்யா
நூறுநாற்காலிகள், ஒரு கேள்வியும் பதிலும்
அன்புடையீர்,
வணக்கம்.
நான், பேராசிரியர் அ வெங்கடேஸ்வரன். ஒய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர். வயது 77.
தங்கள் சொற்பொழிவுகள் கேட்டுள்ளேன். புதினங்கள், கதைகள் படித்துள்ளேன். தங்கள் புலமையைக் கண்டு மலைத்துள்ளேன். நீங்கள் தமிழுக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம்.
தங்களின் நூறு நாற்காலிகள் கதையைப் படித்தபின் என் மனதில் தோன்றிய எண்ணங்களைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலின் வெளிப்பாடே இம்மடல்.
நூறு நாற்காலிகள் கதையில் ஒரு ST IAS அதிகாரியின் அனுபவங்களைப் பல்வேறு கோணங்களில் பதிந்துள்ளீர்கள்.
அவ்வளவு உயர் கல்வி படித்து, IAS தேர்ச்சி பெரும் அளவிற்கு அறிவாளியான திறமை மிக்க ஒருவர் ஆளுமை மிக்கவராக இல்லாதிருப்பது போல சித்தரிக்கப் பட்டுள்ளார். அவர் படித்த படிப்பிற்கு, வகிக்கும் பதவிக்கு நிலைமைகளை வேறு விதமாக, தனக்கும் தன தாயாருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக, கையாண்டிக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியாத காரணத்தினால் இம்மடல் வரைகிறேன். மேலும் அவரது தாயார் பாத்திரம் கதையின் துவக்கத்திலிருந்தே ஏற்றுக் கொள்வதற்குச் சற்று கடினமானதாகவே இருக்கிறது. எவ்வளவுதான் தாழ்த்தப்பட்ட ஒரு வகுப்பைச் சார்ந்தவராக, தனது வகுப்பிற்கான பழக்க வழக்கங்களைப் பெற்றவராக இருந்தபோதிலும், தனது மகன் உயர் நிலைகளுக்குச் செல்லும்போது தனது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்களா?
கதா நாயகன் ஒரு அழுத்தமிக்க சூழலிலேயே இருப்பதாகக் காட்டியுள்ளீர்கள். 64 ஆண்டுகள் ( தாங்கள் கதை எழுதிய காலத்தில்) அரசியலமைப்புப் பாதுகாப்புகள் தரப்பட்டிருந்தும், அவற்றினால் அரவணைத்துக் கொண்டு வரப்பட்ட பின்னரும் அவர்களால் இயல்பு நிலைக்கு, பிற சமூகத்தினருடன் சம நிலைக்கு வரவில்லை, வர இயலவில்லை என்பதை நிலை நாட்டியுள்ளீர்கள். உண்மை நிலை அவ்வாறுதான் உள்ளதா? ஆமெனில், எவ்வளவு விழுக்காடு?
கதை மாந்தர்களின் போக்கு கதையால் நிர்ணயிக்கப் படுகிறது (வாசகரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அல்ல) என்ற திரு ஜெயகாந்தனின் கூற்று நினைவிற்கு வருகிறது.
இருப்பினும்,
தங்களைப் போன்ற ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் நேர்மறைக் கருத்துக்களைப் பதிப்பித்தால் இளைஞர்கள் பயனடைவார்கள் அல்லவா?
வரும் காலங்களில் அது போன்ற, நேர்மறைக் கருத்துக்களைக் கொண்ட, கொடூரமான, அழுத்தும் சூழல்களை, தான் அரசியலமைப்புப் பாதுகாப்புகள் மூலம் பெற்ற, கற்ற கல்வி மூலமாகவும், வளர்த்துக் கொண்ட பண்புகள் மூலமாகவும் எவ்வாறு வெற்றிகரமாக, கதை மாந்தர்கள் சமாளித்தார்கள், சமாளித்து வெற்றி கண்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையிலான கதைகளைப் படைத்தளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ஏ.வெங்கடேஸ்வரன்
***
அன்புள்ள வெங்கடேஸ்வரன்,
அந்தக்கதை அறம் தொகுதியிலுள்ளது. அத்தொகுதியின் எல்லா கதைகளுமே உண்மையான மனிதர்களின் கதைகள். அவை ‘உண்மை மனிதர்களின் கதைகள்’ என்ற பேரில்தான் வெளியாயின. அக்கதை வெளியான பிறகு என் நண்பர் வே.அலெக்ஸ் அக்கதையை தனிநூலாக வெளியிட்டார். அதில் சில உயரதிகாரிகளின் கருத்தை கேட்டு வெளியிட்டிருந்தார். அவற்றில் அவர்கள் அச்சூழல் இன்றும் நிலவுவதையே பதிவுசெய்திருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணப்பிரியா என்னும் ஐபிஎஸ் அதிகாரி இங்கே தற்கொலை செய்துகொண்டார். அவர் தலித். அவருடைய தற்கொலைக்கான காரணம் மேலதிகாரிகளால் இழிவுசெய்யப்பட்டதுதான். அவர்கள அவரை ’ஏப்’ குரங்கு என பொதுவெளியிலேயே அழைத்தனர் என அப்போது குற்றம்சாட்டப்பட்டது. என்ன ஆயிற்று அந்த வழக்கு? அந்த மரணம் அப்படியே வசதியாக மறக்கப்பட்டது.
இங்கே நாம் வசதியாக பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையில் மெய்யான சாதிவெறியை மறைத்துக் கொண்டிருக்கிறோம். மெய்யான சாதிஅடக்குமுறைக்கு எதிராக இங்கே எவருமே பேசமுடியாது. அடக்குமுறையை நிகழ்த்துபவர்கள் அவர்களே சமூகநீதி பேசிக்கொண்டு பொதுவெளியில் திரிகிறார்கள்.
இத்தகையச் சிக்கல்கள் சமூகப்பிரச்சினைகள், அவற்றை தனிமனிதன் வெல்வது அரிதாக நிகழலாம். ஆனால் அது உதாரணம் அல்ல. சமூகப்பிரச்சினைகளை கதைகள் சுட்டிக்காட்டுவதே அப்பிரச்சினைகளின் தீர்வை நோக்கி பொதுவான சிந்தனைத்தளம் நகர்வதற்கான வழி. வெல்லும் கதைகளையும் எழுதியிருக்கிறேன். வணங்கான் போல. ஆனால் தலித்துக்கள் இன்னும் வெல்லவில்லை.
ஜெ
***
அன்புள்ள ஜெ,
தங்கள் மடலின் கடைசி வரிவரி மனதை மிகவும் புண் படுத்துகிறது. நான் பணி புரிந்த கல்லுரி ஒரு அரசினர் கல்லுரி. அடித்தட்டு மாணவர்கள் அதிகம் படித்த கல்லுரி. நான் என்.சி.சி-யிலும் அதிகாரியாகப் பணி புரிந்துள்ளேன். என் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்தேன்.
என்னிடம் படித்த ஏராளமான அடித்தட்டு மாணவர்கள் தற்போது நடுத்தர மனிதர்களாகவும் மேல்தட்டு மனிதர்களாகவும் நல்ல நிலையிலேயே உள்ளனர். தலித் இன மக்களைக் கழிவிரக்க உணர்விலிருந்து மீட்டெடுத்தாலே அவர்களின் பல சிக்கல்கள் தீரும் என நினைக்கிறேன். நகரச் சூழலில் இருப்பதால் கிராமச் சூழல் தெரியவில்லை.
எது எப்படி இருப்பினும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்கள் வாசகர்களை, தங்கள் எழுத்துக்கள் மூலம் நல்வழிப் படுத்தும் பணி தொடரட்டும்.
ஏ.வெங்கடேஸ்வரன்
***
அன்புள்ள வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு,
ஆம், எழுத்தின் நோக்கம் அதுதான். வணங்கான் கதைபோல அவர்கள் வென்றெழும் தருணத்தை எழுதும் வாய்ப்பும் அமையுமென்றால் அதுவே எழுத்தின் வெற்றி. அதற்கான ஊக்கத்தை அளிப்பதே எழுதின் கடமை.
பேசாதவர்கள் போன்ற கதையில் உள்ளது அந்த எழுச்சியின் சித்திரம் [பேசாதவர்கள்[சிறுகதை] ]
ஜெ.
புதியகாலம், ஒரு மதிப்புரை
ஜெயமோகன் தனது சமகால எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் நிறைகளையும், எல்லைகளையும் மதிப்பிடும் ஆகச்சிறந்த இலக்கிய அறிமுக நூல். அவர்களின் படைப்புகளைப் பற்றி பேசும் போக்கிலேயே இலக்கிய உத்திகள் (techniques / isms), உலகளாவிய இலக்கிய போக்குகள் (trends), இந்திய அளவில் ஏனைய மொழிகளில் பெரும் எழுத்தாளர்கள், தமிழின் சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் ஆகியோருடன் இவ்வெழுத்தாளர்கள் இணையும் புள்ளி, வேறுபடும் புள்ளி என எல்லாத் தளங்களிலும் ஜெமோவின் விமர்சனம் பயணிக்கிறது.எஸ்.ரா மற்றும் யுவன் சந்திரசேகர் ஆகியோரின் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் பற்றிய மதிப்பீடுகளில் தொடங்கி பரவலாக அறியப்பட்ட சு.வெங்கடேன், ஜோ டி குரூஸ், சாரு நிவேதிதா என நீண்டு, அந்தளவு கவனம் பெறாத எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன் ஆகியோரின் படைப்புலகம், படைப்பூக்க பின்புலம் என மிக விரிவாகப் பேசுகின்றன ஒவ்வொரு கட்டுரையும்.கடைசி அத்தியாயத்தில், நான் சற்றும் எதிர்பாராத விதமாக ஜெமோ தான் செயல்படாத கவிதைத் தளத்தை பற்றி, மனுஷ்யபுத்திரனின் படைப்புலகம் பற்றி விரிவாக எழுதியிருப்பது சுவாரஸ்யமான ஒரு திருப்பம்.சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்தை படிப்பது ஒரு பேரனுபவம் என்றால், ஜெமோவின் காவல்கோட்டம் பற்றிய விமர்சனத்தை படிப்பது அலாதியான அனுபவம். நாவலின் முக்கிய உச்சங்களாக அமைந்த பகுதியை அவர் தொகுத்தும் விரித்தும் சொல்லிச் செல்வது, கடலறிந்த கடலோடியுடன் சிறுவன் முதன்முதலாக கப்பலில் பயணிப்பது போன்ற பிரமையை உண்டாக்க வல்லது.உண்மையில் இந்நூல் தீவிர வாசிப்பைக் கோருவது. வாசிப்பதில் நன்கு பழக்கமுள்ள வாசகனுக்கும், ஒரே அமர்வில் ஒரு முழு கட்டுரையை சிதறாத கவனத்துடன் வாசிப்பது பெரும் சவால். ஏனெனில் உள்ளடக்கம் அத்தனை அடர்த்தியும் செறிவும் உடையது.வழக்கம் போல் ஜெமோவின் வலதுசாரி அரசியல் நிலைப்பாடுகள், இலக்கிய மதிப்பீட்டில் அனாவசியமாக நுழைந்து துருத்தித் தெரிகின்றன. அதையும் தாண்டி இது ஒரு முக்கியமான நூல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.மோ.மணிகண்டன்
புதியகாலமும் மனுஷ்யபுத்திரனும்
வெண்முரசு வாசிப்பு- பிரவீன்குமார்
வெண்முரசு வாசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகவும் மற்ற வாசிப்புகளை முடக்கிவிடாதபடியும் முடித்துவிட வேண்டும். மகாபாரத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களில் காணப்படும் மாயத்தன்மை இவர்களில் இல்லை. இவர்கள் கால்கள் தரையில் பதிந்த மனிதர்கள். அவர்களது பண்புகளின், வாழ்க்கையின் அதீதம் உடனடியாக சூதர்களால காவியமாக்கப்படுகின்றன.
இவர்களுள் என்னை எந்த கதாப்பாத்திரத்துடன் தொடர்பு படுத்திக் கொள்வது என்ற ஆர்வத்தில் தான் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அணுகுகிறேன். பலவீனன், நோயாளி விசித்ரவீர்யன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்வுமீது எழும் ஆழ்ந்த கசப்பும், கசப்பு உண்டாக்கும் ஏளனமும் கனம் மிகுந்தவையாக இருக்கின்றன. வசீகரமான பாத்திரம். விதுரன் அறிமுகமாகும் கணத்திலிருந்து வசீகரிக்கிறார். ஆனால் நான் விதுரர் இல்லை. காலையெழுந்தவுடன் முதல் வேலையாக காவியங்களை வாசிக்கிறார். (எனக்கும் இக்குணமிருக்கிறது). அவர் பதினெட்டு வயதிலேயே ஒரு நாளைக்கு ஓருணவு உண்ணும் சிறந்த பழக்கத்தைக் (பேலியோ??) கொண்டிருக்கிறார்.
சிறந்த மதியூகியாக இருக்கிறார். பணிவும் பண்புமாக இருக்கிறார். நான் விதுரன் இல்லை. நான் பீஷ்மரும் இல்லை. சிகண்டியின் முரட்டுத்தனம் எனக்கில்லை. சாப்பாடு சில மணிநேரங்கள் பிந்திப்போன நாளில், தான் நானென்னை திருதராஷ்டரன் என்று கண்டுகொண்டேன். அத்தனை வேகமாக அத்தனை வெறியோடு சாப்பிடுபவன் திருதராஷ்டரன். ஆனால் எனக்கு அவனைப் போல இசை நுண்ணுணர்வு இல்லை. என்னை மிக மிகக் கவர்ந்த கதாப்பாத்திரமென்றில் அது ஓரிரு பக்கங்களுக்குள் வந்து செல்லும் அகத்தியர் தான். சிறுவனைப் போல குள்ளமான குறுகிய உடல்வாகு கொண்ட வயது மூத்த முனிவர், விசித்திரவீர்யனுக்கு மருத்துவம் பார்க்க வருகிறார். குழந்தையிடம் விளையாட்டுப் பொருள் கிடைத்ததைப் போன்ற ஆர்வத்திலும், பரபரப்பிலும் அந்த மருத்துவசாலைப் படிக்கட்டுக்களில் வியப்புடன் ஏறி இறங்கி ஆடுகிறார். படிகட்டில் ஏறி இறங்கும் போது வரும் ஒலி தனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று குழந்தைத்தனமாக சொல்கிறார் மகாமுனி.
ஆரம்பித்த போதிருந்தே நாவலில் தோன்றும் மரங்கள், மலர்கள், மதுவகைகள், நாடுகள் போன்றவற்றில் என் மனம் சாய்ந்துவிட்டது. சுனைபோல பொங்கி ஊறிக் கொண்டேயிருக்கின்றன.
முதற்கனல் தாண்டி, மழைப்பாடலில் இருக்கிறேன். இந்த 800 சொச்சம் பக்கங்களுக்குள், இந்தியா முழுமையும் வந்துவிட்டது. குஜராத், ஆஃப்கானிஸ்தான், ஆந்திரம், டெல்லி, இமயம், ராஜஸ்தான் இப்படி இந்தியா முழுமையாக தொட்டுக்காட்டியாகிவிட்டது. திருதராஷ்டரனுக்கு பெண் பார்க்கச்செல்லும் பீஷ்மர் வழியில் ஹரப்பா மொகஞ்சதாரோவைக் காண்கிறார். காந்தாரத்தில் வைத்து திருதராஸ்டரனிடத்து தமிழ்ப் பாடலைப்பற்றி சிலாகிக்கிறார். யாதவர்களின் நெய்யும் பாலும் தயிரும் விற்பனைக்காக செல்வதற்காக “எட்டு வண்டிச் சாலை”கள் இருந்தனவாம். உள்ளங்கையைத் திருப்பி புறங்கையைப் பார்ப்பதைப் போல பாரதவர்ஷத்தைப் பற்றி மிக லகுவாக எழுதிச் செல்கிறார்.
அரசர்கள் பயணப்படும் குதிரை வண்டிகள் குலுங்காமல் இருக்கும் படி எப்படி அவை உருவாக்கப்படுகின்றன என்பதற்கான தகவல் இருக்கிறது. அம்புகள், வேல்கள் துருவேறாமல் இருக்க என்ன தொழில்நுட்பம் செய்யபடுகிறதென்று அறியத் தருகிறார். விஷ அம்புகள் செய்ய எந்தெந்த பொருட்களிலிருந்து விஷமெடுக்கப்படுகிறதென்று கூறுகிறார். வெவ்வேறு மதுக்கள் உருவாக்கும் முறைகள் வருகின்றன.
பாலைவனத்தில் ஒரு ஓநாய் நடந்து செல்கிறது. காலைவெயிலில் அந்த நிலம் பொன்னிறப்பட்டு துணியைப் போல இருப்பதாகவும், அதில் ஓநாயின் கால்தடங்கள் பட்டுத்துணிமேல் ஒரு ஊசித் தையலைப் போல செல்வதாகவும் எழுதுகிறார். உற்சாகம் முட்ட உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு துள்ளு துள்ளி அமர்ந்துகொண்டேன். கூழாங்கல் நிறைந்த தடத்தில் நடந்து செல்லும் குதிரைகளின் குளம்பொலி அம்பைத் தீட்டும் ஒலியை உண்டாக்கியது என்றொரு வர்ணனை. காந்தாரி திருதராஸ்டரின் மார்பில் மோதி அணைக்கிறாள். பெரிய முரசின் மேல் சிறுகோல் பட்டதைப் போலிருந்தது என்று எழுதுகிறார். யாதவர்களின் மாட்டுக்கூட்டத்தை நிரம்பி நிற்கும் ஏரியோடு உவமிக்கிறார். மழை மேகங்கள் உலவிச் செல்வது பட்டியிலிருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டது போலிருந்தது என்றொரு வரி.
தொடர்ச்சியாக ஜெயமோகனை வாசித்த வகையில் இவ்வர்ணனைகளை உவமைகளை இதற்கு முன்பு எழுதியிருக்கிறாரா என்று யோசித்தால் எதுவுமில்லை. வெண்முரசில் காண்பது புதிய ஜெயமோகன். அதற்கு பிறகு எழுதிய நூறு கதைகளில் கண்டது வேறொரு புதிய ஜெயமோகன். ஒவ்வொரு நாளும் வாசிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, இதுவரை அள்ளிக் கொண்டவற்றை நிதானமாக எடுத்து பார்த்து ரசித்துக்கொண்டிருக்கலாமா அல்லது அடுத்தடுத்து வேட்கையுடன் முன்னேறி போகலாமா என்று மனம் அலைபாய்கிறது. தேனுக்குள் விழுந்த ஈக்கு இந்த மாறி இரண்டு வாய்ப்புகள் தான் இருக்க முடியும்.
பிரவீன் குமார்
October 11, 2021
மெய்யறிவின் முதலடையாளம்
சவரக்கத்திமுனைப் பாதை
[இக்கடிதம் நான் பெரிதும் மதிக்கும் துறவி ஒருவருக்கு எழுதப்பட்டது. அவர் வேதாந்த நூல்களைக் கற்பிக்கும் இன்னொரு துறவி ஒருவரைப் பற்றிய செய்தியை எனக்கு அனுப்பி அதை பகிரும்படி கோரியிருந்தார். அத்துறவியின் கல்வி முழுமையானது என்றும், மொழி தெளிவானது என்றும் சொல்லியிருந்தார். அவருக்கு நான் அளித்த மறுமொழி இது]
அன்புள்ள சுவாமி அவர்களுக்கு,
இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதற்கு முன்பு ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்த காலத்தில் இதேபோல சில வேதாந்த ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளை, மதக்கல்வி அளிப்பவர்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்திருக்கிறேன். நம் நண்பர்கள் ஆர்வத்துடன் சென்றுமிருக்கிறார்கள். ஆனால் ஒரு மாதத்திற்குள் அவர்கள் அனைவருக்கும் ஒன்று தெரியவரும். அந்த ஆசிரியர் கடுமையான சாதிநோக்கு கொண்டவராக இருப்பார். பிராமணர்களுக்கு இது, மற்றவர்களுக்கு அது என்று பேசுவார். உயர்சாதிக்கே ஞானமும் மீட்பும் உண்டு, மற்றவர்கள் பக்தி வழியாக மறுபிறப்பில் உயர்சாதியாக பிறப்பதே ஒரே வழி என்பார்.
குறிப்பாக கீதை உரையில் சாங்கிய யோகம் வரும்போது இப்பேச்சு தொடங்கும். மெய்நூல்களான சுருதிக்களுடன் எளிய ஸ்மிருதிகளையும் ஆசாரநூல்களையும் இணைத்துக்கொள்வதில் வளரும். ஒரு கட்டத்தில் நேரடியாகவே பிராமண மேலாதிக்கம், மற்றவர்களுக்கு முக்திக்கான முழுத்தகுதி இல்லை என்ற அளவில் பேச்சு உருவாகும். கசப்படைந்து நண்பர்கள் விலகுவார்கள். என் வாசகர்களில் தலித் நண்பர்கள் பலர் உண்டு என அறிந்திருப்பீர்கள். குலத்தால்தான் குணம் அமையும், குலக்கலப்பு கூடாது, தாழ்ந்தகுலத்தில் பிறந்தால் சரணாகதியும் பக்தியும்தான் வழி, ஞானம் அல்ல என்றெல்லாம் இவர் பேசினால் அவர்கள் கொதிப்படைவார்கள். அவர்கள் என்னிடம் வந்து முறையிடுவார்கள். நான் சமாதானம் செய்யவேண்டும். நான் பரிந்துரை செய்த ஒருவர் சொல்வது நானே சொல்வதாக எடுத்துக் கொள்ளப்படும். அது இயல்பும்கூட.
மிக நல்ல வாசகர் சிலர் இரண்டு ஆண்டுக்கு முன் நான் என்ன சொன்னாலும் நிறைவடையாமல் நிரந்தரமாக பிரிந்து சென்றனர். அது என் உள்ளத்தில் ஆழ்ந்த வடு. அவர்களை நானே சிறுமை செய்ததாகவே இன்று உணர்கிறேன். ஆகவே நான் மிகக்கவனமாக இருக்கிறேன். வேதாந்தநூல் ஞானம், சம்ஸ்கிருத ஞானம் பெரிய தகுதி அல்ல. மெய்யான அகக்கனிவை அடையாமல் பெறப்படும் அக்கல்வி ஒரு பெரிய கொலை ஆயுதம்போல அத்தகையோர் கையில் திகழ்கிறது. அறவுணர்வால் தெளிந்து, பெருங்கருணையால் தூய்மையாவதே ஞானத்தின் பெறுபொருள். புலமைக்கு மதிப்பு வருவது அப்போது மட்டுமே. அது இல்லாத புலமை ஒரு வகைநோய். தொற்றுநோயும்கூட. “கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்” என நம் ஞானி சொல்லி பதினைந்து நூற்றாண்டுகளாகின்றன. அறவுணவும் கருணையும் இல்லாத மூளை என்பது ஒரு புற்றுநோய்க் கட்டியில் இருந்து வேறல்ல.
மரபுநூல்களை ’அப்படியே’ கற்று ‘அப்படியே’ ஏற்கிறோம் என்னும் பாவனை இங்குண்டு. அப்படியே ஏற்றால் இன்று எவரும் வாழமுடியாது. ஆகவே தேவையான எல்லா சமரசங்களையும் தங்களுக்காக அவர்கள் செய்துகொள்வார்கள். ஆனால் தங்களுக்கு வசதியான, தங்கள் நலன்களுக்கு உகந்தவற்றை மட்டும் மூலநூல்களைச் சுட்டிக்காட்டி, மூத்தோர்சொல்லை மாற்றக்கூடாது என வாதிட்டு ஆசாரவாதம் பேசுவார்கள்.
ஆசாரவாதம் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் உதவுகிறது என்றால், அதை அவர் பற்றுகோலெனக் கொண்டிருக்கிறார் என்றால் அது அவருடைய தனிப்பட்ட நம்பிக்கை, அவர் கொண்ட வழி. அதனுடன் நான் உரையாட மாட்டேன். பொதுவெளிக்கு வந்து பிறரை சிறுமைசெய்ய முற்படாதவரை அது எப்படி இருந்தாலும் என் பிரச்சினையும் அல்ல. ஆனால் ஆசாரவாதத்தை மெய்ஞானத்துடன் ஒருவர் கலந்தால் அதை மறுத்தாகவேண்டும். ஆசாரவாதம் அடிப்படையில் உலகியல் சார்ந்தது, தன்னலம் சார்ந்தது, தேங்கிப்போனது. மெய்ஞானத்தை அது மலினப்படுத்துகிறது. மெய்ஞானம் என்பது ஒரு பரிணாமம், ஒரு மலர்வு. ஆசாரவாதத்தில் நகர்வும் மலர்வும் இல்லை.
மெய்ஞானத்துக்கும் உலகியல் அறத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்வதே இன்றைய ஆன்மிகக்கல்வியில் முக்கியமான அம்சம். உலகியல் அறம் என்பது காலந்தோறும் மாறுவது, மாறியே ஆகவேண்டியது. மெய்ஞானநூல்கள் கற்பிப்பது உலகியல் நெறியையோ தன்னலவழியையோ அல்ல. மெய்ஞான நூல்கள் ஆசாரங்களை வகுத்துரைப்பன அல்ல. ஆணைகளை விடுப்பவை அல்ல. உய்த்துணர்வதற்கான சொற்களை மட்டுமே அவை முன்வைக்கின்றன. எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு வெளிப்படுத்துகின்றன, வெளிப்படுத்தப்பட முடியா விரிவு அவற்றுக்கு அப்பால் நீண்டுகிடக்கிறது.
அவற்றை உய்த்துணர்வதே மெய்ஞானக் கல்வி. அதற்கே ஞானியர் அணுக்கமும் கற்றோர் வழிகாட்டலும் தேவை. கால இடத்துக்கு என மாறாதது மட்டுமே மெய்ஞானம் என்னும் தெளிவை அதன் விளிம்பைத் தொட்டவர்களே அடைந்துவிட்டிருப்பார்கள். அத்தகையோரை நான் கண்டிருக்கிறேன், அடிபணிந்து அமர்ந்திருக்கிறேன் கால. இடம் கடந்த மெய்ஞானம் ஒரு காலஇடச்சூழலில் மொழியில் வெளிப்பட்டமைதான் மெய்ஞான நூல்கள் எனப்படுகின்றன. ஆகவே அவற்றை கற்பதல்ல, கற்றபின் செல்வதே மெய்ஞானப்பயணம்.
மெய்ஞானத்தை உணர்த்தும் நூல்களே சுருதிகள், ஆணைகளையோ வழிகாட்டுதல்களையோ அளிப்பவை ஸ்மிருதிகள். ஸ்மிருதி என்பது ஒரு நூலின் இயல்பிலிருந்து வரும் அடையாளம். எந்த ஸ்மிருதியும் கால இடத்துக்கு உட்பட்டது. ஒவ்வாமலாகும் கணமே தூக்கி வீசப்படவேண்டியது. சுருதிகளில் இருந்து தெளிவை அடைபவரால் ஸ்மிருதிகளை நிராகரிக்கமுடியும். நிராகரித்த ஞானிகளை ஏற்று ஒழுகுவதும் இயலும். ஸ்மிருதிகளில் சிக்கி நின்றிருப்பவர்கள் வெறும் ஆசாரவாதிகள். எல்லா மதங்களிலும் காலந்தோறும் ஞானிகள் தோன்றி மெய்மையை ஆசாரவாதத்தின் பிடியிலிருந்து மீட்க முயன்றுகொண்டே இருக்கிறார்கள். அவ்வண்ணம் மீட்டுக்கொண்டேதான் இருக்கவேண்டும்.
[இது மதங்களுக்கு மட்டுமல்ல, எந்தச் சிந்தனைக்கும் பொருந்துவதே. மார்க்ஸியத்தையே எடுத்துப் பாருங்கள், அதன் சம்பிரதாயவாதிகளின் பிடியில் இருந்து அதன் சாரமான தரிசனத்தை மீட்கும்பொருட்டே அத்தனை புதியசிந்தனையாளர்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏனென்றால் நடைமுறைக்கு வரும் எந்த மெய்மையும் உடனே உலகியல்நோக்கி புரிந்துகொள்ளப்பட்டு, காலப்போக்கில் சம்பிரதாயங்களாகவும் ஆசாரங்களாகவும் இறுகிவிடும். ]
இன்றைய அறவியல் மானுடசமத்துவத்தால் ஆனது. அதை மெய்ஞான நூல்களை கற்பிப்பவர் முழுமையாக உணர்ந்திருக்கிறாரா என்பது முக்கியம். மிகப்பெரும்பாலும் அப்படி இல்லை. துறவியர் மற்றும் மெய்யியல் நிறுவனங்களை நடத்துபவர்கள் என அறியவருபவர்களிலேயே கற்ற கல்வியை முழுக்க, ஆற்றிய நோன்புகளை முழுக்க, அடைந்திருக்கும் பதவிகளை முழுக்க தன் சொந்தசாதியின் மேன்மையை நிரூபிக்கவும் நிறுவுவவும் மட்டுமே பயன்படுத்திவருபவர்களே இங்கே மிகுதி. மெய்யியலை கற்பிப்பவர்கள் என தோன்றுபவர்களிலேயே தனக்கு பிறப்பால் ஒரு படி மேலதிகத் தகுதி உண்டு என்று எண்ணிக்கொள்பவர்கள் உண்டு
அவ்வெண்ணம் ஒரு துளி இருந்தால், ஒரு சாயல் தெரிந்தால்கூட அவர் அடைந்திருப்பது ஞானம் அல்ல, மாபெரும் இருள் என்றே பொருள். மீட்பில்லாத அகழி அது. அறியாமையும் பழியும் கொண்டு வாழும் தீயூழ் கொண்ட எளியமக்களுக்காவது மீட்புண்டு. இவர்கள் கற்ற கல்வியால் மாபெரும் சுவரை தாங்களே கட்டி தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டவர்கள். ஆகவே ஒருபடி கீழானவர்கள். அத்தகையோரிடம் நான் என்னை நம்பி வந்து வாசிக்கும் என் வாசகர்களைச் செலுத்துவேன் என்றால் அவர்களுக்கு பெருந்தீங்கு இழைப்பவன் ஆவேன்.
ஆகவே இப்போது மிகக்கவனமாக இருக்கிறேன். எந்த துறவியானாலும், எந்தப் பண்டிதரானாலும், அவர் என்ன கற்பிக்கிறார் என்பதை கூர்ந்து கவனிக்கிறேன். அவருடைய மெய்யான தகுதி என்ன என்பதை மதிப்பிடுகிறேன். என் முதல் அளவுகோல் அவருடைய அறவியல் என்ன என்பதே. மானுடரில் பேதம் பார்ப்பவர் என்றால், ஒரு அணுவேனும் அவ்வெண்ணம் கொண்டவர் என்றால், அதன்பின் அவரை ஒரு பொருட்டென எண்ணுவதில்லை. அவருடைய இருள் என்னை தொட்டுவிடலாகாது, என் அகப்பயணங்களையும் பயிற்சிகளையும் மலினப்படுத்திவிடலாகாது என்றே கவனம் கொள்வேன். அவரை எந்நிலையிலும் வணங்க மாட்டேன். வெறும் முகமன் கூட அவருடன் உரையாடமாட்டேன். ஏனென்றால் நாம் பல ஆண்டுக்கால ஊழ்கத்தால் எய்தியவற்றை அவர் ஒரே கணத்தில் அழித்துவிடக்கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன் என் இல்லத்திற்கு நான் மதிக்கும் ஒரு துறவியுடன் இன்னொரு துறவி வந்திருந்தார். அவர் பின்னாளில் ஒரு பெரிய ஆன்மிக நிறுவனத்தின் தலைமையில் இருந்து சமீபத்தில் இறந்தார். தீவிரமான சாதிநோக்கு கொண்டவர். அன்று அது எனக்கு தெரியாது. ஆனால் அன்று அவருடைய அருகமைவு என் நுண்ணுணர்வுகளை கூசவைத்தது. ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு கிரிமினல் என் வீட்டுக்கு வந்துவிட்டதைப்போல. பின்னர் இணையத்தில் அவர் உரைகளை கேட்டேன், இழிந்த சாதியவாதம் பேசிக்கொண்டிருந்தார். அவரை சந்திக்க நேர்ந்ததை ஈடுசெய்ய நான் உடனே ஊட்டி குருகுலம் சென்று நித்யாவின் நிறைவிடம் அருகே அமரநேர்ந்தது.
நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நடுங்கும் சுடரை பொத்திக் கொண்டு செல்வதைப்போல. என்னை இலக்கியவாதி என ஏற்பவர்களுக்கு அந்த ஒளியை மட்டுமே அளிக்கவேண்டும். அதுதான் என் உறுதி
ஜெ
கருநீலத் தழல்மணி- கடிதங்கள்
வணக்கம். நலம் விழைகிறேன்.
நீலம் வாசிக்கும் பொழுதே ஆண்டாள் பாடல்களைப் போல இசைமை உணர்வை தருவது. அதை நீங்கள் எழுத எழுத அதிகாலையில் வாசித்த பரவசமான நாட்களை நினைத்துக்கொள்கிறேன். வார்த்தைகளுக்கு ஔியும் சிறகும் முளைத்து மின்மினி கூட்டம் போன்று மனமெங்கும் பறந்தநாட்கள். வார்த்தைகளாக நினைவில் நிற்கும் நாவல். மொழியின் பரவசத்தின் உச்சத்தை மீளமீள பக்தி இலக்கியங்களே தொடுகின்றன.
நீலம் பக்திஇலக்கியம் தான். வேண்டுதல் எதுவுமில்லை என்றாலும் கூட தாய்தந்தையை போல நம்மனக்கட்டமைப்பிற்கு தேவைப்படும் ஒன்று. கள்ளமின்றி, தேவைகள் இன்றி,நிர்மலமாக ஒன்றின் மேல் அன்பு செலுத்தினால் மட்டுமே அமைதிகொள்ளக்கூடிய யச்சி மனம். மனிதர்களிடம் பூரணமாக நம்மை வைக்கமுடியாது என்று அந்த இடத்தை வசதியாக நம் முன்னவர்களே காட்டி சென்றுவிட்டார்கள். அங்கு சென்று சிறிதேனும் அமைக என்று.
அவ்வாறான சிறுபொழுதை இந்த பாடல் எனக்கு அதிகாலையில் கொடுத்தது. இது எனக்கு இன்னுமொரு கண்ணன்பாடல். கேட்டுக்கொண்டே இருக்கப்போவது.
சைந்தவிபாடும் போது இதுவரை இல்லாத ஒன்றை புதிதாக உணர்ந்தேன். தங்கைக்கு குழந்தை பிறந்து இன்றுடன் சரியாக முப்பதுநாள். பாப்பாவுடனே இருக்கிறேன்.அதுதான் காரணம். பாப்பா பெயர் கிருஷ்ணவிகா. மருத்துவமனையிலிருந்து வந்ததும் பாப்பா கருப்பா போயிடுச்சே என்று வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது ‘இது கிருஷ்ணை…பேரழகி’ என்று சொன்னேன்.
கமல் குரலில் ,கையாட்டலில்,நெற்றி சுருக்கங்களின் தீவிரத்தில்…
ஞானப்பெருவிசையே
ஞானப்பெருவெளியே
யோகப்பெருநிலையே
இங்கெழுந்தருள்வாயே…
என்று சொல்லும்போது தீயின் முன் அமர்ந்து பிரபஞ்சத்தின் முன் ஆணையிடும் ஒருவராக தெரிந்தார். ஸ்ரீராம் பார்த்தசாரதியின் ‘கண்ணானாய் …’ மனதை ஆட்கொண்டுவிட்டது.
இந்தப்பாடல் ஆலயங்கள் தோறும்…அதாய் இருக்கும் மனங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கப்போகும் மற்றுமொரு கிருஷ்ணமதுரம்.
மனம் நிறையும் ப்ரியங்களுடன் காலை வணக்கம்.
அன்புடன்,
கமலதேவி
இனிய ஜெ..
வலியோடும், பாதி தெளிந்த மயக்கத்தோடும்
வெண்முரசு நீலம் இசை கேட்டேன் . கண்மூடி எங்கோ ஏதோ பெரும் பர வெளியில் உடலற்று வெறும்.. வெறும் இசையோடு மட்டுமே கிடந்தேன். எத்தனையோ முறை நீலத்தை உள்வாங்கியும் இது வேறுவிதமான கொஞ்சலாக, தவிப்பாக, பழத்தின் முதல்கடி இனிப்பென உடலெங்கும் தித்திப்பு. எது அவன்? இதுவா? இதல்ல இதோ வேறு ரூபமாக எங்கே அவன்? அவனா இவன்? இல்லையே! என்னடா கண்ணா? தவிப்பின் மொழி இசையாகுமென முதன்முதல் கண்ணீரோடு கண்டுகொண்டேன். அதனுள் ஆழமாக.. பேராழமாக.. இதுவென்றறியாத ஒன்றோடு இதோ முயங்கியே கிடக்கிறேன். தெளிவே வேண்டேன். இது போதும் நிறைவு.. இது போதும் நிறைவு…
அமைக என் தலைமேல்…
ஜெயந்தி
அன்புள்ள ஜெ
ஓராண்டுக்கு முன் எனக்கு ஓர் அறுவைச் சிகிச்சை. நான் நீலம் நாவலை கையில் கொண்டுபோனேன். வாசிக்கும் மனநிலை இல்லை. நெஞ்சோடு அணைத்து வைத்திருந்தேன். எட்டுநாளும் படுக்கையிலேயே வைத்திருந்தேன். அவ்வப்போது எடுத்து ஒரு வரி படிப்பேன். அதை நெஞ்சில் சுவைத்தபடி படுத்திருப்பேன். நீலம் எனக்கு ஒரு நாவல் அல்ல. ஒரு புத்தகம்கூட அல்ல. அதிலுள்ள எல்லா வரிகளும் எனக்கு மந்திரம். அதை நான் வாசிக்காத நாள் இல்லை. அதன் வரிகள் என் மனதில் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும். அதைப்போல Female sensibility வெளிப்பட்ட இன்னொரு நவீனக் கவிதையோ நாவலோ தமிழிலே இல்லை. அது ஒரு பெரிய கொந்தளிப்பும் அமைதியும். ஆனால் வெறும் sensual படைப்பு இல்லை. அது ஒரு பிரபஞ்சதர்சனம்.
அந்த உணர்வை மறுபடியும் அடைந்தது நீலம் இசை கேட்கும்போது. எவ்வளவு உச்சம். அதேசமயம் ஒரு சொல்கூட வீணாகாமல் எவ்வளவு அர்த்தச் செறிவு. மொத்த நீலத்தையுமே இப்படி இசையமைத்துவிடலாம். மொத்த நீலமும் இப்படி கேட்கும் ஒரு காலம் வரும். கமல், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோருன் குரல் அற்புதமாக குழைகிறது. கருநீலத்தழல்மணியே என்று ஏங்கிக் கசியும் ஒரு குயிலோசைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
ராஜி
THE ELEPHANT MEN
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
யானை டாக்டர் சிறுகதை படித்தப்பிறகு அதில் நீங்கள் குறிப்பிட்ட HARRY MARSHALL இயக்கிய “THE ELEPHANT MEN” என்ற ஆவணப்படம் குறித்த தகவலை அறிந்தேன். அதுகுறித்து இணையத்தில் தேடிய பொழுது YOUTUBE இல் சில துணுக்குகள் கிடைத்தன, அதன் பிறகு தேடிய பொழுது ஒரு இணையதளத்தில் முழு ஆவணப்படமும் பதிவேற்றப்பட்டிருந்தது. அதன் இணைய முகவரி உங்கள் பார்வைக்கு.
https://archive.org/details/TheElephantMenஅன்புடன்பார்த்தசாரதி.வைரம்- கடிதங்கள்
நவீன்
வைரம் [சிறுகதை] ம.நவீன்
அன்புள்ள ஜெ
ம.நவீன் எழுதிய வைரம் கதை ஒரு பேரபிள் போன்ற தன்மையுடன் இருந்தது. நவீனக் கதை இன்று அதிகமும் அடையமுற்படுவது அதைத்தான். பழைய நவீனத்துவக் கதைகள் வெறும் நெரேட்டிவ்கள்தான். அவற்றைச் சொல்ல முடியாது. பின்நவீனத்துவம் அடைய முற்பட்டது இந்த பேரபிள்தன்மையை. அதாவது தேவதைக்கதைபோல மாயக்கதைபோல சொல்லும் தன்மையை. அந்த அம்சம் கதையில் வந்துள்ளது
இதன் அமைப்பு ஓர் உதாரணகதை போல உள்ளது. இருவரின் குணாம்சங்களும் வேறுபட்டவை. இருவர் வாழ்க்கையை எதிர்கொண்ட விதமும் வேறுவேறானவை. அவர்கள் நடுவே இருக்கிறது அந்த கல். கண்ணாடியா வைரமா? அது கண்ணாடியும் வைரமும் ஆவது அவர்களின் குணாம்சத்தாலும் வாழ்க்கையாலும்தான்.
கண்ணாடியை வைரமாக்கும் வாழ்க்கையும் சரி, வைரத்தையும் கண்ணாடியாக ஆக்கும் வாழ்க்கையும் சரி தெரிவுகள்தான். ஒரு மைய உருவகத்தைக்கொண்டு ஒரு வாழ்க்கைப்பார்வையை முன்வைக்கும் கதை. சிறப்பு
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ,
ம.நவீன் எழுதிய வைரம் கதையில் அந்த அழகான மர்மம்தான் அதை நல்ல கதையாக ஆக்குகிறது. அது வைரமா, அல்லது காட்சிப்பிழையா? அந்த வைரத்தை எவர் வைத்துக்கொள்ளப்போகிறார்கள்.? என் நிலம், ஆகவே வைரம் என்னுடையது என்கிறான். ஆனால் அவன் தோண்டிப்பார்த்தால் அங்கே வைரம் இருக்குமா? அவனுக்கு கண்ணாடிதான் கிடைக்குமா? பலவாறாக யோசித்த கதை.
அருண்குமார்
புனைவு, தன்னுரையாடல்- கடிதம்
வெண்ணிற இரவுகள்- பிரவீன்
வணக்கம் ஜெ,
சமீபத்தில் தளத்தில் வெளியாகியிருந்த “வெண்ணிற இரவுகள்” பற்றிய கடிதம் ஒன்றை கண்டேன். இது வரை அக்கதையை படிக்காத வாசகர்களுக்கு உதவும். அறிமுக கட்டுரை என்று வகைப்படுத்தலாம்.
அக்கட்டுரையை படித்தப் போது நான் நிலவறைக் குறிப்புகள் படித்து பித்துப் பிடித்த நாட்கள் நினைவில் எழுந்தன. தஸ்தாயாவ்ஸ்கியின் எந்த ஆக்கத்தைப் படித்தாலும் அதில் மூழ்கி எழுவது ஒரு வகையான பழக்கம்போல் ஆகி விட்டது. என் நெருங்கிய தோழன் ஒருவன் சிறந்த ஆங்கில இலக்கிய வாசகன். நான் சற்று வினோதமாக நடந்துக்கொண்டால் அல்லது மிகவும் சோகக் கலையுடன் காணப்பெற்றால், “Dostoevsky படிச்சியா? நீ முதல்ல அந்தாள படிக்கறத நிப்பாட்டு” என்று மிகுந்த அக்கறையுடன் கூறுவான்.
இரண்டு வருடங்களுக்கு முன் நிலவறைக் குறிப்புகள் படித்து விட்டு தீவிரமாக நாவலின் சில வரிகளை யோசித்துக் கொண்டே இருந்தேன். அதை விட்டு வெளியேற அதை பற்றி எழுதினால் மட்டுமே சாத்தியம் என்றெண்ணி ஒரு நீண்ட கட்டுரையை எழுதினேன். கட்டுரை என்பதை விட தன்னுரையாடல் எனலாம். [புதினத்தால் உருவான தன்னுரையாடல்]
இது போன்ற கட்டுரை சாயலில் இருக்கும் தன்னுரையாடலுக்கு வாசகர்கள் இருப்பார்களா என்றறியேன். வாசகர்களிடம் நான் கோரி நின்றது “நாவலை படித்து விட்டு இக்கட்டுரையை படி. எனக்கு தோன்றியவை அனைத்தையும் இங்கே கொட்டி வைத்திருக்கிறேன். நீ இதையெல்லாம் படித்து விட்டு நீ உன் மனதுக்குள் என்னுடன் உரையாடு”. இரண்டு வருடத்திற்கு முன் இருந்த மன நிலை அது. I was immersed in that novel.
நான் என் அக அமைதிக்காக, நாவலிலிருந்து விடுபடவே இந்த நீண்ட கட்டுரையை எழுதினேன். சில நாட்களுக்கு முன் கூட இதே போன்று Charli Kaufman இன் உரையை ஒட்டி ஒரு கட்டுரை போன்ற தன்னுரையாடலை எழுதினேன்.
என் கேள்வி என்னவென்றால், இது போன்ற கட்டுரைகளுக்கு objective value இருக்கிறதா? பல நாவல்களில், ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடிட வேண்டிய வாக்கியங்கள் நிறைய இருக்கும். அவை ஒவ்வொன்றையும் எடுத்து அதையொட்டிய எண்ணங்களை பகிர்ந்து கட்டுரை போன்று எழுத முயன்றிருக்கிறேன். இன்னொரு வகையில் இக்கட்டுரையை நான் running commentary போலவும் பார்க்கிறேன்.
பிரசன்ன கிருஷ்ணன்
***
அன்புள்ள பிரசன்னா,
எந்த எழுத்தும் உதவிகரமானதே. ஆகவே எழுதியதில் பிழையில்லை. அது உங்களுக்கு ஒரு வெளிப்பாட்டுநிறைவை அளித்திருக்கும். குழப்பங்களும் கொந்தளிப்புகளும்கூட எழுதினால் அமைதிகொள்பவைதான். ஆகவே அந்த எழுத்து பிழையானது அல்ல.
ஆனால் எழுத்தின் நோக்கம் என்பது ஒழுங்கமைவுதான். உள்ளம் ஒழுங்கற்ற பெரும்பாய்ச்சல். சிந்தனை என்பது அதில் நிகழும் ஒழுங்கு. தர்க்கம், அழகியல்வடிவம் ஆகியவை அவ்வொழுங்கை உருவாக்குபவை. அவற்றிலொன்று நிகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் அது வெறும்சொற்பெருக்கு.
ஏனென்றால் ஒருவரின் உள்ளம் இன்னொருவரிடம் தொடர்பகொள்வது தர்க்கம், அழகியல்வடிவம் ஆகிய இரண்டின் வழியாகவே. அவற்றிலொன்று இல்லையேல் அச்சொற்கள் தொடர்புறுத்தாமலாகிவிடுகின்றன. ஆகவே எழுத்தை நம்மை ஒழுங்கமைக்க, அதனூடாக தொடர்புறுத்தவே நாம் ஆள்கிறோம். எழுதுவதன் வழியாக நாம் நம்மை தொகுத்து முறைப்படுத்தவேண்டும். கட்டற்று எழுதிச்செல்லலாம். ஆனால் மறுபடியும் எழுதி அதை ஒழுங்குக்குள் கொண்டுவந்தாகவேண்டும்.
கட்டற்ற அகவெளிப்பாட்டுக்கு இலக்கியத்தில் இடமில்லையா? இல்லவே இல்லை. கட்டற்ற அகவெளிப்பாடு என்னும் புனைவுப்பாவனை இலக்கியத்தில் உண்டு. ஆனாலும் அது ஒரு வடிவம்தான். தேர்ந்த எழுத்தாளனால் உருவாக்கப்படுவது அது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


