Jeyamohan's Blog, page 904
October 7, 2021
மனமென்னும் மாய அன்னம்
கஸல் பாடல்களில் உள்ள கடும்சாயங்களில் அமைந்த காதல் பரவசமும் பிரிவுத்துயரும் விசித்திரமான ஓர் இருநிலைக்கு என்னை தள்ளுவதுண்டு. அவற்றை வரிகளாக, கவிதையாக, வாசித்தால் சல்லிசாக இருக்கின்றன. பொய்யுணர்ச்சிகள் என்று தோன்றச்செய்கின்றன. அவற்றையே பாடிக்கேட்கையில் அவ்வுணர்ச்சிகள் என்னை ஆட்கொள்கின்றன. கொந்தளிப்பும் அமைதியும் அடையச் செய்கின்றன.
கற்பனாவாதம் இசையுடன் மட்டுமே இணையக்கூடியது, இசையால் மட்டுமே நிலைகொள்ளக்கூடியது. உன்னைப் பற்றிய பரவசத்துடன் சாகும்வரை இருந்தேன் என்றால் என் வாழ்க்கை நிறைவுற்றது என்று ஒருவன் ஒரு பெண்ணிடம் சொல்வான் என்றால் அது அசட்டுத்தனம். பாடுவான் என்றால் அது கலை.
கஸல் போல அமைந்த இப்பாடல் வெறுமே பாடப்படுகிறது. தாளம் இல்லை. மெல்லிய பின்னணி இசை மட்டும்தான். பலசமயம் நல்ல குடிக்கொண்டாட்டங்களின்போது எவராவது இதைப் பாடுவார்கள். அப்போது இது வேறொன்றாக ஒலிக்கும்.
அனஹ சங்கல்ப காயிகே மானச
மணி விபஞ்சிகா வாதினீ நின்னுடே
மிருது கராங்குல ஸ்பர்சன ஆலிங்கன
மதலகரியில் என்றே கினாவுகள்
முகபடவும் முலக்கச்சையும் மாற்றி
சுகத நர்த்தனம் செய்யுந்நு சுற்றிலும்
தரள மானச மாயா மராளிக
தவ மனோஹர கான யமுனயில்
சமய தீரத்தின் பந்தனமில்லாதே
மரணசாகரம் பூகுந்ந நாள் வரே
ஒரு மதாலஸ நிர்விருதீ பிந்துவாய்
ஒழுகுமெங்கிலோ ஞான் நித்ய திருப்தனாய்.
ஜி.தேவராஜன்பி பாஸ்கரன்
களங்கமற்ற கற்பனையில் எழுந்த பாடகி,
மனமென்னும் மணிவீணையை ஏந்தியவளே
உன் மென்கரத்து விரல் தொட்டு தழுவும்
காதல் மயக்கத்தில் எழுகின்றன என் கனவுகள்
முகத்திரையும் மார்புக்கச்சையும் அவிழ்த்துவைத்து
சுற்றி வந்து இனியநடனம் செய்கின்றது
நெகிழ்ந்த மனமென்னும் மாய அன்னம்
இன்னிசைப் பெருக்கெனும் யமுனையில்
காலக்கரையின் கட்டுகளை கடந்து
மரணப்பெருங் கடலை அடைவதுவரை
இக்காதல் களிப்பின் ஒரு துளியாக
ஒழுகிச்செல்வேன் எனில்
நிறைவடைந்தவன் நான்.
குமரி-கடிதங்கள்
குமரித்துறைவி வாங்க
அன்புள்ள ஜெ
குமரித்துறைவி கதையை வாசிக்கும் முன் தளத்தில் நீங்கள் வெளியிட்ட “ஒரு சொல்” என்னை சோர்வடைய செய்தது.
அறிமுக வாசகனென்பதனால் ஒவ்வொரு கதை வாசித்த பின்பும், வாசகர் கடிதங்கள் மூலமாகவே கவனிக்க தவறிய நுட்பங்களை அவர்களின் வார்த்தைகள் வழியாக சென்று என்னைப் புதுப்பித்து கொள்வேன். ஆனால் கதையை வாசித்த பிறகு நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய புண்ணியம் என எண்ணிக்கொண்டேன். இல்லையேல் இப்போதைய மனநிலையில் அவை எனது மனக்களிப்பை வேறு ஒன்றாக்கி இருக்கும். நன்றி ஜெ.
நடந்து இரண்டு மாதமே ஆகிய தங்கையின் திருமணத்தில் இருந்த, என் அக ஓட்டத்தினை உங்கள் எழுத்தின் வழியாக வார்த்தைகளாக கண்டேன். அந்த 10 நாட்களில் என்ன செய்கிறேன் எதற்காக செய்கிறேன் என்று எதுவும் தெரியாமல் ஓடி மட்டுமே கொண்டிருந்த ஓட்டம் அது. தாலி ஏறிய பொழுதின் பின்பும் துக்கமோ மகிழ்ச்சியோ ஏதும் இல்லாத வெற்று மனநிலை.
இன்று குமரித்துறைவி வாசித்து அந்த நாட்களை மனதில் ஓட்டிப் பார்க்கிறேன். அன்றைய மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். அம்மை மீனாட்சி வேணாட்டு மண்ணை விட்டு பல்லக்கில் ஏறிய போதும், பல்லக்கு சரிந்தது அம்மையின் வளையல் வீழ்ந்தபோதும் என்னை அறியாமல் கண்ணீர் வீட்டுக் கொண்டிருந்தேன். புனைவு வாசிப்பில் முதல் முறையாக என்னை மீறிய அழுகை.
பேரானந்த அனுபவம் தந்த உங்களுக்கு நன்றி ஜெ.
கு.ஜெயபாலகணேஷ்
***
அன்புள்ள ஜெ
ஏப்ரல் 10 விடியற்காலை ஒரு கனவு- ஒருவர் என்னிடம் முக்கோணம் ஒன்றையும் வட்டம் ஒன்றையும் தந்து இவற்றை ஒன்றாக்கு என கூறுகிறார். நான் நெடுநேரம் பலவிதமாக முயன்றும் முடியவில்லை. அப்போது சட்டென ஒரு பிம்பம் தோன்றுகிறது. முக்கோணத்தினுள்ளிருந்து வெளியேறப்போகும் வட்டம், அதைச் சுற்றி என்றென்றுமென சுழலும் இரட்டை மீன்கள்.
அச்சித்திரம் என்னுள் விழித்த பின்பும் இருந்துகொண்டே இருந்தது. அதை புரிந்துகொள்ள என் reason-ஐ கொண்டு பலவாறாக முயன்றேன். ஆனால் குமரித்துறைவி இரண்டாம் பகுதி வாசிக்கத் துவங்கியபோதே அக்கனவும் இக்கதையும் ஒன்றாகிவிட்டன. என் reasonஆல் அன்று intuitionஆல். அதை விளக்கிக்கொள்ள போவதில்லை. உணர்ந்து நம்புகிறேன்.
இவ்வருட துவக்கத்தில் திருவட்டாரு பெருமாளை முதல்முறையாக தரிசனம் செய்தேன். நான் சென்ற நேரம் கும்பாபிஷேக பணிகள் நடந்துகொண்டிருந்தன என நினைக்கிறேன், மேலும் கொரோனா காரணமாக யாருமே இல்லை. அவ்விருட்டறையில் கண நேர மலைப்பில் நான் என்ன உணர்தேன் என தெரியவில்லை. சற்று நேரத்திலேயே வெளியே வந்துவிட்டேன். பின்னர் பேருந்தில் திரும்புகையில் வழி எங்கும் நீர். அத்தனை நீரை நான் வளர்ந்த காஞ்சியிலோ வேலூரிலோ கண்டதில்லை. வீடுகளின் முன் ஓடும் நீர், அதில் குழந்தைகளை பாட்டிகள் குளிப்பாட்டி கொண்டிருந்தார்கள். வளமை! அதை பார்த்துக்கொண்டே சென்றதில் திடீரென ஓடும் நீர் நின்று, அதன் மேல் பள்ளிகொண்ட ஆதிகேசவபெருமாளை கண்டேன். என் கற்பனையில் விரிந்து விரிந்து சென்றது அவ்வுருவம். கலை நிகழ்வது அக்கற்பனையில் தான், அந்த ஆழ்மனதில்.
இப்போது குமரித்துறைவி வாசித்ததும் உணர்ந்ததும் அதுவே. இதுவரை அக்கனவை வரைந்து பார்த்து சரியாக வரவில்லை இன்று ஏனோ வரையாமல் வேறு எதுவும் செய்ய முடியாது என்றொரு நிலை. வண்ணங்களில் அப்பிம்பத்தை அளக்க முயன்றேன். இருந்தும் அது என் மனதில் இருக்கும் அவ்வடிவில் வரவில்லை. ஆனால் இதை பார்க்கும் போது அந்த ஆழ்மன பிம்பத்தை கூர்ந்து உணர முடிகிறது.
நெடுநாட்கள் பிறகு முதல் வரி முதல் இறுதி வரை முகத்தில் புன்னகையுடன் அவ்வப்போது கண்ணில் நீருடன் வாசித்த கதை. ஆழ் உள்ளம் இதே போல் குறையாமல் வழங்க வேண்டும். நன்றி.
ஸ்ரீராம்
***
விஷ்ணுபுரம் விழா நன்கொடை
நண்பர்களே
2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா வழக்கம்போல நிகழ்த்தலாம் என நினைத்திருக்கிறோம். அப்போதைய சூழல் சார்ந்து முடிவெடுப்போம். சென்ற இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே கையிலிருந்த நிதியிலேயே விருதுகள் வழங்கப்பட்டன, நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிதி திரட்டப்படவில்லை. இவ்வாண்டு நிதி தேவையாக உள்ளது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். வாசகர்கள், நண்பர்கள் கூடி செய்யும் நிகழ்வாக இது இருக்கவேண்டும் என்னும் எண்ணம் எப்போதும் இருந்தது
சென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே விஷ்ணுபுரம் அறக்கட்டளையை நிறுவி அனைவரிடமும் நன்கொடை பெறத் தொடங்கினோம். இவ்வாண்டும் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் விழா நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்கவேண்டுமென கோருகிறேன்.
நிதியளிக்கவேண்டிய முகவரி
Bank Name & Branch:ICICI Bank, Ramnagar Branch, CoimbatoreAccount Name:VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAICurrent Account No:615205041358IFSC Code:ICIC0006152வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
jeyamohan.writer@gmail.com
நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஜெ
வெண்முரசில் மிளிரும் மானுடம்-மணி வேலுப்பிள்ளை
ஓவியம்: ஷண்முகவேல்“எழுக புதியவேதம்! ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக!” (பன்னிரு படைக்களம் – 87) என்று கூவுகிறாள் திரெளபதி.
“கால-இட-சூழலை மீறிய அறத்தையே நாம் ‘அறம்’ என்கிறோம்… அரசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக வரும் அறம் என்பது அதுவே என்கிறார் ஜெயமோகன் (அறமெனப்படுவது யாதெனின்…)
இளங்கோவரின் “அறம் கூற்றாகும்”, பூங்குன்றனாரின் “யாவருங் கேளிர்”, வள்ளுவரின் “மறத்திற்கும் (அன்பே) துணை,” கம்பரின் “வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்றதம்மா” உட்பட தமிழ்ப் பேரிலக்கிய விழுமியங்கள் பலவும் 26 நாவல்களிலும் மண்டிக் கிடக்கின்றன.
நாவல்-திரட்டு முழுவதும் “உளச்சான்று” எனும் சொல் திரும்பத் திரும்ப எடுத்தாளப்படுகிறது. திருதராஷ்டிரர், பாண்டு, விதுரர் மூவரிடமும் இது ஆழ வேரூன்றியுள்ளது. காந்தாரி, பானுமதி, கிருஷ்ணை, அசலை… உட்பட கெளரவப் பெண்குலம் முழுவதையும் உளச்சான்று ஆட்கொள்கிறது. துரியோதனன் அதிலிருந்து வழுகுந்தோறும் பிதாமகராலும், பிதாவினாலும், கர்ணனாலும் கண்டிக்கவும் தண்டிக்கவும் படுகிறான்.
பிதாமகர் இறக்குந் தறுவாயில் தமது அரசகுலநெறியை துரியோதனினுக்கு அறிவுறுத்துகிறார்: “குருதியும் குடியும் காப்பவனே நல்லரசன்… மைந்தா, வஞ்சத்தைவிட, மண்ணைவிட, நெறிகளைவிட, அறத்தைவிட, தெய்வங்களைவிட குலம் வாழ்வதே முதன்மையானது” (திசைதேர் வெள்ளம் – 76).
பிதாமகரின் பட்டியலில் மானுடமோ உளச்சான்றோ இடம்பெறவில்லை! திரெளபதி எழுப்பும் வினாக்களுக்கு பிதாமகர், துரோணர், கிருபர் இறுக்கும் விடைகளில் அவை ஒப்புக்கொள்ளப்படவில்லை.
துரோணர்: “தேவி, நால்வேதங்களும் வேந்தனை வழுத்துபவையே… அறங்கள் வாழவேண்டுமென்றால் அரசன் ஆற்றல்கொண்டு அரியணையில் அமர்ந்திருக்க வேண்டும்… மறம் இழக்காது கோல்கொண்டமைய அரசர் எவராலும் இயலாது.”
கிருபர்: “நான்கு வேதங்களையும் பேணி அவையமர்ந்த ஷத்ரியன் மண்ணுக்கு வந்த தெய்வத்திருவுருவே என்பதுதான் வேதநெறி என்றறிக!… அவனுக்கு சொல்லளிக்க கடமைகொண்டிருக்கிறோம், அவன் கோலை மறுக்க உரிமைகொண்டவர்கள் எவருமிருக்க இயலாது. தனியொருவருக்கு இழைக்கப்படும் தீயறத்தின்மேல் அரசின் வெற்றியும் அதன் குடிகளின் பெருநலனும் வாழும் என்றால் அதுவும் அரசனுக்கு அறமே.”
பிதாமகர்: “பெண்ணே, ஆசிரியர்கள் முறைமையேதென்று சொல்லிவிட்டனர்… எதன்பொருட்டும் வேதக்கொடி இறங்கலாகாது… இங்கெழுந்தது அரசாணை. அவையில் அதை குடிகள் மீறலாகாது. நானும் குடியே… ஒருநாளும் அவையில் அமர்ந்து அரசனை ஆளமுயலமாட்டேன்… இது வேதம்புரந்த வேந்தர் அமர்ந்தாண்ட அரியணை. வேதம் காக்க வாளேந்தி எழுந்த அரசு…”
திரௌபதி: (துச்சாதனனை நோக்கி கைசுட்டி) “இதுவா அரசன் சூடும் அறம்? பிதாமகரே, இதுவா நால்வேதம் ஈன்ற குழவி?”
பிதாமகர்: “ஆம், இதுவும்தான். ரஜோகுணம் எழுந்தவனே ராஜன் எனப்படுகிறான். வெல்வதும் கொள்வதும் அவனுக்குரிய நெறியே. விழைவே அவனை ஆளும் விசை. காமமும் குரோதமும் மோகமும் அவனுக்கு இழுக்கல்ல. புவியை பசுவென ஓட்டிய பிருதுவையே பேரரசன் என்கிறோம். வான்கங்கையை ஆடைபற்றி இழுத்துக் கொண்டுவந்த பகீரதனையே வேந்தர்முதலோன் என்கிறோம். பெருவிழைவால் உருவாகிறார்கள் பேரரசர்கள். அரசன் கொள்ளும் விழைவுகளுக்காகவே பூதவேள்விகளில் அனலோன் எழுகிறான். மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் அவனுக்களிக்கவே அதர்வவேதச் சொல்லுடன் வைதிகர் அவியளிக்கிறார்கள்… ஆம், இங்கு நிகழ்ந்தது குலநெறி அழியும் தருணம்… இது அறப்பிழை… ஆம், இது பெரும்பழியே… ஆனால் இதன்பொருட்டு நான் தந்தைக்களித்த சொல்லைத் துறந்தால் அஸ்தினபுரி அழியும். பாரதவர்ஷத்தில் வேதப்பெருநெருப்பு அழியும். வேதம் மறந்த கீழோர், புறவேதம் கொண்ட பகைவர், வேதம் மறுக்கும் விலங்கோர் வேல்கொண்டெழுவர். எங்கும் இருள்சூழும். என் குடிக்கு நூறுமடங்கு பழிசூழும்… அரசாணையை மீற எவருக்கும் உரிமையில்ல, பெண்ணே!” (பன்னிரு படைக்களம் – 87).
திரெளபதிக்கு கிடைக்கும் விடைகளில், வள்ளுவர் கூற்றுக்கு மாறாக, அன்புசாரா மறமே அறமென நிலைநாட்டப்படுகிறது. சில திறனாய்வாளர்கள் இதை “நக்குண்டார் நாவிழந்தார்” என்று சொல்லிக் கடந்து செல்வதுண்டு. “எங்கே உனது செஞ்சோற்றுக் கடன்?” என்று துரியோதனன் கர்ணனிடம் வினவுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுவதுண்டு.
அவையில் அவர்கள் உதிர்த்த சொற்கள் அரச சூழ்வியலின் பாற்பட்டது என்பதில் ஐயமில்லை. அரச சூழ்வியலுடன் கூடிய அவர்களின் வாய்மொழி எதுவாயினும், பாண்டவருக்கும், திரெளபதிக்கும் அநீதி இழைக்கப்படுவது, அவர்களின் உளச்சான்றுக்குப் புலனாதல் திண்ணம்.
மானுடர் எவர்க்கும் உளச்சான்று உண்டு. அதை எல்லோரும் எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. ஆனானப்பட்ட பிதாமகரோ, ஆசிரியர்களோ கூட தத்தம் வாயினால் அதை ஒப்புக்கொள்ளவில்லை. எனில், அவர்களின் மைந்தனும் மாணவனுமாகிய துரியோதனன் அரசனென அரியணையில் அமர்ந்துகொண்டு அதை தனது வாயினால் ஒப்புக்கொள்வது எங்ஙனம்?
எனினும், “அரசவையில் திரௌபதி ஆற்றிய வஞ்சினம் (பிதாமகரின் உள்ளத்துள்) குற்றவுணர்வை உருவாக்கியிருந்தது. அவருடைய கனவுக்குள் அம்பையின் வஞ்சத்துடன் அதுவும் கலந்துவிட்டிருக்கக்கூடும். பிதாமகர் பீஷ்மர் கொல்லப்படவில்லை, தற்கொலை செய்துகொண்டார். அதனூடாக அவர் தன்னுள் உணர்ந்த ஒரு பழியை நிகர் செய்துகொண்டார்” (திசைதேர் வெள்ளம் – 77). பிதாமகரை இங்கு சரியாகவே மட்டுக்கட்டுகிறான் துரியோனன்!
துச்சாதனன் திரெளபதியை அவைக்கு இழுத்துவரும்பொழுது, தம்மை அறியாமல் கைகூப்பும் துரியோதனனும் கர்ணனும், அவளது மணத்தன்னேற்பில் தமக்கு நேர்ந்த ஏமாற்றம் மற்றும் இந்திரப்பிரஸ்தத்தில் துரியோதனன் விழ திரெளபதி உதிர்த்த புன்னகை நினைவுக்கு வர, தமது உளச்சான்றை அடியோடு உதறித்தள்ளி விடுகிறார்கள்.
வெகுண்டெழுந்து பாய்ந்துவரும் கிருஷ்ணை தனது மேலாடையை திரெளபதிமீது வீசி தாய்க்குலத்தின் மானத்தைக் காக்கிறாள். தன்னைத் தடுக்க முனைந்த துரியோதனனை – தந்தையை – அரசனை விளித்து, “அன்னைப்பன்றி என எரியும் விழிகளுடன் உறுமினாள். “விலகி நில்! மூடா. உன் நெஞ்சு பிளந்து குருதி உண்பேன்!” அவன் கால்தளர்ந்து நடுங்கும் கைகளுடன் விலக, அவள் ஓடிச்சென்று திரௌபதியை தழுவிக்கொண்டாள்… அசலை ஓடிவந்து அவர்கள் இருவரையும் தழுவினாள். பானுமதியும் துச்சளையும் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் ஓடிவந்து ஒருவரை ஒருவர் தழுவி ஒற்றை உடற்சுழிப்பென்றாயினர். பன்னிரு பகடைக்களத்தின் நடுவே அச்சுழி மெல்ல சுழன்றது. அவள் அதன் மையமென்று தெரிந்தாள்…” (பன்னிரு படைக்களம் – 87).
காந்தாரியின் ஒன்பது சகோதரிகள், பானுமதி, நூற்றுவர் மனைவியர், ஆயிரத்தவர் மனைவியர், கிருஷ்ணை, மாயை… உட்பட அரண்மனைப் பெண்டிர் அனைவரும் தமது உளச்சான்றை மட்டுமே நிலைக்களனாகக் கொண்டு, மேலாடை ஈந்து, திரெளபதியை அரவணைக்கும் காட்சி மானுடத்தின் உச்சத்தை எட்டுகிறது. “வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்றதம்மா!”
“அறம் வெல்க!” என்று மும்முறை மொழிந்து துரியோதனனுக்கு விடைகொடுக்கிறார்கள் திருதராஷ்டிரரும் காந்தாரியும். கெளரவர் வெல்க என்றோ, பாண்டவர் வெல்க என்றோ அவர்கள் மொழியவில்லை. பிதாமகரும் ஆசிரியர்களும் எடுத்தியம்பிய வெற்றுவெறிதான அரசமறத்தைக் கடந்த மானுட விழுமியத்தின் ஊற்றிடமாக விளங்கும் உளச்சான்றே அவர்களை உறுத்துகிறது. “அறம் வெல்க!” எனும் அவர்களின் வாழ்த்து “மானுடம் ஓங்குக!” என்றே பொருள்படுகிறது.
பாண்டவர் தரப்புக்கு மாறிய யுயுத்சுவிடம் “நீங்கள் உங்கள் உள்ளத்தில் எழுந்த அறத்தின்பொருட்டு எடுத்த முடிவு அது. அதுவே உங்களுக்கு உகந்தது” என்று சம்வகி கூறுவதும் உளச்சான்றில் நிலைகொண்ட மானுட விழுமியமே (நீர்ச்சுடர் – 35: 5).
வெண்முரசு பற்றிய தமது உரைகளில் ஹோமரின் இலியத், ஒடிசி, தால்ஸ்தாயின் போரும் வாழ்வும்… பற்றிக் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். இம்மூன்று படைப்புகளிலும் நிகழும் போர்கள் முற்றிலும் மறம் சார்ந்தவை. எடுத்துக்காட்டாக, இலியத் காவியத்தில் துரோயின் பட்டத்து இளவரசனும் தானைத்தலைவனுமாகிய எக்டரை தனிப்போருக்கு அறைகூவி அழைக்கிறான் கிரேக்க மறவனும் காவிய நாயகனுமாகிய அகிலீசு:
எக்டர்: சமரில் தோற்பவரின் உடலுக்கு உரிய மரியாதை அளிக்க உடன்படுக!
அகிலீசு: மூடா, உடன்பாடுகள் பற்றி என்னிடம் உளறாதே! மனிதனும் சிங்கமும் உடன்பட முடியாது; ஓநாயும் ஆடும் உடன்பட முடியாது. அவை ஒன்றன் மீதொன்று தீராத காழ்ப்புடையவை அல்லவா? ஆகவே எம் இருவருள் ஒருவர் மடியும்வரை எம்மிடையே புரிந்துணர்வோ, உடன்பாடோ எழமுடியாது.
அகிலீசு வீசிய வேல் கழுத்தில் ஏறி மாளும் எக்டரின் கணுக்காலைத் துளைத்து, அதில் ஒரு தோல்நாடாவைக் கோத்து, தேர்க்காலில் கட்டி இழுத்துச்செல்கிறான் அவன். இது வெறும் மறத்தை – வள்ளுவர் கடியும் அன்புசாரா மறத்தை – உரைக்கிறது. ஆம், அதுவே போர்மறம். அதன்படியே என்றென்றும் போர்கள் தொடுக்கப்பட்டு வந்துள்ளன. அன்றுதொட்டு இற்றைவரையும், இனிமேலும் போர்களின் இலக்கு எதிரிகளை ஒழித்துக்கட்டுவதே. அகிலீசும் எக்டரும், நெப்போலியனும் அலெக்சாந்தரும், கண்ணனும் வீமனும் அதை அறிவார்கள்.
அதையே பிதாமகரிடமும், துரோணரிடமும், கர்ணனிடமும் கோருகிறான் துரியோதனன். பாண்டவர்களை அவர்கள் கொல்லவேண்டும். வாரணாவதம் முதல் குருசேத்திரம் வரை அதுவே அவன் இலக்கு. வெற்றுவெறிதான மறநியதிகளின்படி அவனது கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே எவர்க்கும் தென்படும். எனினும் துரியோதனனின் தீயூழ் எனும்படியாக, அவர்கள் அவனிடம் அளிக்கும் வாக்குறுதிகள் அவர்தம் அகத்தின் ஆழத்தில் உறங்கும் உளச்சான்றை எதிரொலிக்கவில்லை.
என்றென்றும் செல்லுபடியாகும் மறநெறியின்படி அல்லது படைநெறியின்படி பிதாமகர், துரோணர், கர்ணன் மூவரையும் துரியோதனன் தனது படைநீதிமன்றின் விசாரணைக்கு உட்படுத்தி, கழுவேற்றியிருக்க முடியும். அப்படிச் செய்வதற்கு, அவையில் பிதாமகரும் ஆசிரியர்களும் முன்வைக்கும் நியாயங்களே போதும். ஆனால் அப்படிச் செய்தால் அவன் யாரை வைத்துப் போரில் வெல்வது? உண்மையில் அவன் நிலை வருந்தத்தக்கது.
கி. மு. 5ம் நூற்றாண்டில் பாரசீக மன்னன் செர்செஸ் கிரேக்கம் மீது போருக்கு எழுந்தறுவாயில், “பைதியாஸ் எனும் முதிய மறவன் மன்னனிடம் மன்றாடுகிறான்: ‘அரசே, எனது ஐந்து மைந்தர்களும் தங்கள் படையில் இருக்கிறார்கள். தள்ளாத வயதில் என்னைப் பராமரிக்க மூத்தவனை மட்டும் விட்டுச் செல்லுங்கள்! மற்ற நால்வரையும் கொண்டுசென்று வெற்றியுடன் மீளுங்கள்!’ அதுகேட்டு வெகுண்டெழுந்து கர்ச்சிக்கிறான் மன்னன்:, ‘நான் எனது மனைவி மக்கள் அனைவருடனும் போருக்குப் புறப்படுவது உனக்குத் தெரியவில்லையா, அடிமைப் பிறவியே!’ ஈற்றில் மன்னனின் ஆணைப்படி மூத்தவன் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, ஒரு துண்டு படைசெல்லும் பாதையின் வலதுபுறத்திலும், மறுதுண்டு இடதுபுறத்திலும் இடப்படுகிறது, படையினருக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்பதற்காக…” (Herodotus, Histories).
என்றுமுள படைமறம் அது, படைநெறி அது. கண்ணனும் வீமனும் அதே படைமறத்தையே கைக்கொள்ளுகிறார்கள். அதற்கமையவே அருச்சுனனைக் கொண்டு பிதாமகரையும், கர்ணனையும் கொல்லுவிக்கிறான் கண்ணன். வீமன் நூற்றுவரைக் கொல்கையில் அவர்கள் “மூத்தவரே! மூத்தவரே!” என்று விம்முகிறார்கள். ஆயிரத்தவர் “பெரியதந்தையே! பெரியதந்தையே!” என்று தேம்புகிறார்கள். அவற்றை எல்லாம் வீமன் பொருட்படுத்த வேண்டியதில்லை; பொருட்படுத்தக்கூடிய நிலையிலும் அவன் இருக்கவில்லை.
அதேவேளை தாமே ஊட்டிவளர்த்த பாண்டவ இளவரசர்களை கெளரவர்களால் கொல்ல முடியவில்லை (அபிமன்யுவைத் தவிர). அபிமன்யு மடியும்பொழுது துரியோதனன் கலங்குகிறான். தனது புதல்வர்களும், பேரப்பிள்ளைகளும் களம்படுகையில் வாய்விட்டுப் புலம்பாத காந்தாரி, அபிமன்யு களம்படுவதை அறிந்து வாய்விட்டுப் புலம்புகிறாள்.
குருசேத்திரத்தில் நிகழ்வது வழியுரிமைப் போர் (அல்லது அரசுரிமைப் போர்). இவை உலக வரலாற்றில் இடைவிடாது நிகழ்ந்துவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய அரசுகளிலும், கண்டி-கோட்டை-யாழ்ப்பாண அரசுகளிலும் இவை தொடர்கதைகள். இவை ஒரே அரச குடும்பத்தவரிடையே இடம்பெறுபவை. வள்ளுவரின் அன்புசார் மறத்துக்கு இங்கு இடமில்லை. அப்பழுக்கற்ற மறமே இங்கு கைகூடுவது.
பிதாமகரும், துரோணரும், கர்ணனும் பாண்டவர்களைக் கொல்லும் வல்லமை படைத்தவர்களாய் விளங்கியும் கூட, அதை அவர்கள் தவிர்த்துக் கொள்வதில் மானுடத்தின் உறைவிடமாய் விளங்கும் உளச்சான்று வெளிப்படுகிறது. அவர்கள் வாரணாவதத்துக்காக தன்னை வஞ்சிக்கப்பதாக குமுறும் துரியோதனனில் உளச்சான்றின் தாக்கம் புலப்படுகிறதே!
போரைத் தவிர்ப்பது மிகவும் கடினம் என்பது வள்ளுவருக்கு நன்கு தெரியும். 10 அதிகாரங்களை (100 குறள்களை) அவர் போருக்கு ஒதுக்கியுள்ளார். அதேவேளை மறத்துக்கும் அன்பே துணை என்பதை அவர் இடித்துரைக்கத் தவறவில்லை. கண்ணணின் கீதை அதையே ஓதுகிறது.
பாண்டவருக்கும் கெளரவருக்கும் இடையே போர் மூள்வதை ஆனானப்பட்ட கண்ணனால் தடுக்க முடியவில்லை. அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே ஒளவைப் பாட்டியால் அமைதியை நிலைநாட்ட முடிகிறது. அத்தகைய அமைதி வரலாற்றில் அரிதாக நிகழ்வது. சேர, சோழ, பாண்டியர்கள் இடைவிடாது போரிட்டவர்கள் அல்லவா?
“யாவரும் கேளிர்” என்பதை ஆட்சியாளரால் உளமார ஏற்க முடியாது. உலக வரலாற்றில் எந்த தரப்பினால், எந்த நாட்டினால், எந்த அரசினால் கணியனின் வாக்கை உளமார ஏற்க முடியும்?
மணி வேலுப்பிள்ளை
October 6, 2021
மௌன வாசகர்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இது உங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதம். கடந்த பத்து வருடங்களாக உங்கள் படைப்புகளின் தீவிர வாசகன் நான். என்னுடை கேள்வியே இந்த தீவிர வாசகன் என்கிற சொல்லை நான் பயன்படுத்த எனக்கு தகுதி இருக்கிறதா என்று தான். நான் இது வரை எந்த இலக்கிய கூட்டத்திலும் கலந்து கொண்டதில்லை. சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் உங்களின் உரை ஏதாவது நிகழ்ந்தால் கூட்டத்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து கேட்டு விட்டு சென்று விடுவேன். கூட்டம் முடிந்து உங்களை சூழும் வாசகர்கள் மத்தியிலும் கடைசியாக நின்றுகொண்டு உங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன் இருப்பேன். அருகில் வந்து உங்களிடம் பேசவோ அறிமுக படுத்திக்கொள்ளவோ என்றுமே முயன்றதில்லை.
ஒரு முறை 2016ல் ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டு உங்களை சந்தித்திருக்கிறேன். அங்கும் வெறும் பார்வையாளனாக மட்டுமே இரண்டு நாட்கள் இருந்தேன். அதன் பிறகு உங்களின் உரை நிகழ்வுகள் தவிர மற்ற உரையாடல் கூட்டம் எதிலும் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். ஏன் என்றால் உங்களிடம் உரையாடடக்கூடிய வேறு நல்ல வாசகனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தான்.
இப்படி வெறும் மௌன வாசகனகவே இருப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா? வாசிப்பு என்பது குறிப்பிட்ட தனி நபர் அகம் சார்ந்த தேர்வுகளால் ஆனது என்று நம்புகிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பக்கங்களாவது வாசிக்காமல் இருந்ததே கிடையாது. கடந்த சில நாட்களாக இந்த கேள்வி என் மனதில் எழுகிறது. ஒரு தீவிர வாசகன் தான் படித்ததை பிறருடன் பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டுமா அல்லது ஒரு மௌன வாசகனாகவே இருக்கலாமா. இந்த கேள்வியில் ஏதாவது பிழை இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
உங்களின் மௌன வாசகன்
ப சந்திரசேகர்
***
அன்புள்ள சந்திரசேகர்,
எனக்கு ஒரு நாளைக்கு சாதாரணமாக இருபது வாசகர் கடிதங்கள் வருகின்றன. அவற்றில் பத்தேனும் புதிய வாசகர்கள். நாள்தோறும் நான்கு வாசகர் கடிதங்கள் பிரசுரமாகின்றன. ஆனால் என் வாசகர்கள் என நான் அறிந்தவர்களிலேயே பத்திலொருவரே எழுதுகிறார். எஞ்சியவர்கள் எழுதுவதில்லை.
எழுதுவதும் எழுதாமலிருப்பதும் தனிப்பட்ட தெரிவு. சில ஆசிரியர்களை நாம் வாசித்து கடந்துசெல்வோம். சிலரிடமே நாம் நிரந்தரமாக ஓர் உரையாடலில் இருக்கிறோம். என் வாசகர்களில் பலர் என்னிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நான் தொடர்ந்து உரையாடுவதும், என் எழுத்து தொடர் வினாக்களை எழுப்புவதும் காரணம். அந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தால் போதும்.
ஆனால் நீங்கள் வாசித்தவற்றை தொகுத்துக்கொள்ள, உங்களுடைய சொந்தச்சிந்தனையாக ஆக்கிக்கொள்ள, நீங்கள் ஏதேனும் வகையில் அவற்றை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். அதற்குத்தான் குழுவிவாதங்கள், நட்புச்சூழல் விவாதங்கள் தேவையாகின்றன. எழுதிக்கொள்ளலாம். அதுவும் சிறந்த வழிமுறையே,
ஜெ
***
சமரசம் உலாவும் இடம்?
மயான காண்டம் அரிச்சந்திர நாடகத்தில் முக்கியமான ஓர் அங்கம். அது நாடகத்தன்மையுடன் அரங்கில் நிகழும் என்பது ஒரு காரணம். அங்கே வாழ்க்கை பற்றிய தத்துவ விளக்கங்களை முன்வைக்கலாம் என்பது இன்னொரு காரணம். இந்தியா முழுக்கவே நாடகங்களில் மயானதத்துவம் இடம்பெறுகிறது. பல புராணக்கதைகளில் மயானத் தருணம் இடம்பெறுகிறது. தமிழகத்தில் பட்டினத்தார் நாடகத்திலும் கேரளத்தில் ஆதிசங்கரர் நாடகத்திலும் மயானம் உண்டு.
மயானம் என்றாலே நினைவுக்கு வருவது ரம்பையின் காதல் படத்தில் 1956ல் வெளிவந்த சமரசம் உலாவும் இடமே. இந்தப்பாடலை நான் பலமுறை கேட்டிருந்தாலும் 1981ல் காசியில் அரிச்சந்திர கட்டத்திலேயே ஒரு பண்டாரம் பாடிக்கேட்டது அபூர்வமான அனுபவம். நள்ளிரவு. எரியும் சிதைகளைச் சுற்றி வெட்டியான்களும் பண்டாரங்களும் அமர்ந்திருக்க இதைக் கேட்டேன். எத்தனை தொன்மையான சிதைவெளிச்சம் என எண்ணிக்கொண்டேன்
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணாசமரசம் உலாவும் இடமே ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடுதொல்லையின்றினே தூங்கிடும் வீடுஉலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமேசேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகிஎல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலேஉண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே இசை டி.ஆர்.பாப்பாபாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்எழுதியவர் மருதகாசி
மருதகாசி
ஆத்ம வித்யாலயமே
அவனியில் ஆத்மவித்யாலயமே
ஆழிநிலயில்லா ஜீவிதமெல்லாம்
ஆறடி மண்ணில் நீறியொடுங்ஙும்
திலகம் சார்த்தி சீகியும் அழகாய்
பலநாள் போற்றிய புண்ணிய சிரசே
உலகம் வெல்லாம் உழறிய நீயோ
விலபிடியாதொரு தலயோடாயி
இல்லா ஜாதிகள் பேதவிசாரம்
இவிடே புக்கவர் ஒரு கை சாரம்
மன்னவனாட்டே யாசகனாட்டே
வந்நிடும் ஒடுவில் ஈ வன்சித நடுவில்
இசை பிரதர் லட்சுமணன்
எழுதியவர் திருநயினார்க்குறிச்சி மாதவன் நாயர்
பாடியவர் கமுகற புருஷோத்தமன் நாயர்
நடித்தவர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர்.
திருநயினார்க்குறிச்சி மாதவன் நாயர்
திக்குறிச்சி சுகுமாரன் நாயர்
கமுகற புருஷோத்தமன் நாயர்
ஆத்மக் கலைக்கூடமே இவ்வுலகின்
ஆத்மக்கலைக்கூடமே
அச்சுநிலை இல்லா வாழ்க்கையெல்லாம்
ஆறடி மண்ணில் எரிந்து அடங்கும்
திலகம் போட்டு சீவி அழகாய்
பலநாள் பேணிய புனித தலையே
உலகம் வெல்ல ஓடியலைந்த நீ
விலையேதுமில்லா மண்டையோடாக ஆனாய்
இல்லை சாதிகள் பேதமெனும் எண்ணம்
இங்கு வந்தவர் ஒரு கைப்பிடிச் சாம்பல்
மன்னவனாகட்டும் யாசகனாகட்டும்
வந்திடுவான் இந்த பெரிய சிதை நடுவே
ஆனால் எனக்கு புரியாத ஒன்றுண்டு. சமரசம் உலாவும் இடமும் ஆத்மவித்யாலயமுமான அந்தச் சுடுகாடு எங்கிருக்கிறது? சுடுகாட்டில்தானே சாதியே வாழ்கிறது? ஏழை பணக்காரன் வேறுபாடு துல்லியமாகத் தெரிவதும் அங்கேதானே?
சரித்திரக்கதைகள், கடிதங்கள்
மாபெரும் கம்பளம் பற்றிய கனவு [சிறுகதை]
சவக்கோட்டை மர்மம் – சிறுகதை
பதிமூன்று விதங்களில் சொல்லப்பட வேண்டிய கதை
வணக்கம் ஜெ,
நடந்தவை, நடப்பவையிலிருந்து நடக்ககூடுபவைக்கு செல்லும் பாதைகளே சாத்தியங்கள். அப்பாதைகளில் பயணிப்பவன் கனவுலகில் பயணிக்கிறான். தரையில் நடந்து கொண்டிருப்பவன் அடுத்த அடியை காற்றில் வைத்து மேகத்துடன் பறந்து செல்கிறான்; விரலிடுக்கில் பின்னும் கம்பளம் பறந்து பொங்கி விரிவது போல. சரித்திரக்கதைகள் என பெயரிட்டிருந்தாலும் இவை ஒருவகையில் மேஜிக்கல் ரியலிச கதைகள்.
டோல்கீன், யீட்ஸ் போன்றோர் அவ்வுலகை Faerie என அழைக்கின்றனர். டோல்கீன் On Fairy Stories என்ற கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார்: The realm of fairy-story is wide and deep and high and filled with many things: all manner of beasts and birds are found there; shoreless seas and stars uncounted; beauty that is an enchantment, and an ever-present peril; both joy and sorrow as sharp as swords. In that realm a man may, perhaps, count himself fortunate to have wandered, but its very richness and strangeness tie the tongue of a traveller who would report them. And while he is there it is dangerous for him to ask too many questions, lest the gates should be shut and the keys be lost.
இச்சரித்திரக்கதைகள் போர்கஸின் சில கதைகளை நினைவுறுத்துகின்றன. அவிழ்க்க இயலாது போன்ற முடிச்சுகளை ஆசிரியன் தரலாம், வாசகனும் அதை விரும்புவான். ஆனால் அம்முடிச்சுகளை அவிழ்க்கும் விதம் ஆசிரியனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவேண்டும், அது அந்த கதை மூலமே வாசகன் அறியக்கூடுவதாகவும் இருக்க வேண்டும்; இல்லையேல் அது வெறும் ஆடும் வரை ஆடி பின் மறக்க கூடிய விளையாட்டு மட்டும் தான். போர்கஸ் போன்ற மேலைநாட்டு எழுத்தாளர்களிடம் ஒரு வலுவான விரிவான தத்துவ அடித்தளம் இல்லை என்பது என் எண்ணம். இந்தியர்களாக நமக்கு சிறு வயது முதலே அது வளர்கிறது. இச்சிறுகதைகளில் Faerie-யின் வெளிச்ச கீற்றுகள் மின்னுகின்றன, அவை உச்சம் கொள்வது விஷ்ணுபுரம் என்னும் பெருங்கனவில்.
நன்றி.
ஸ்ரீராம்
அன்புள்ள ஜெ,
மூன்று சரித்திரக்கதைகள் வெளிவந்த காலத்திலேயே நான் அதை வாசித்திருக்கிறேன். பின்னாளில் நீங்கள் எழுதிய விஷ்ணுபுரம் உள்ளிட்ட நாவல்களின் தொடக்கம் அதுதான். வரலாறு என்பது ஒரு பெரிய கதையாடல் என்னும் உணர்வு, அதைவைத்துக்கொண்டு விளையாடலாம் என்னும் உணர்வு இரண்டும் கலந்தவை அக்கதைகள். அந்த மூன்றுகதைகளிலுமே வரலாற்றை ஒரு பரமபத விளையாட்டாகத்தான் உருவகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
போர்ஹெஸ் போன்றவர்கள் இந்த பாணியில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னரும் பலர் இவ்வகையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். தமிழில் நம் வரலாறு இன்றைக்கு சாதிய வரலாறுகளாக ஊடறுக்கப்படுகிறது. உபவரலாறுகள் பல உள்ளே செயல்படுகின்றன. இன்றைக்கு வரலாறாக உருவகம் பண்ணப்பட்டிருப்பவை எல்லாமே ஒருவகையான கதைகள் என்று சொல்லப்படும் சூழலில் இக்கதைகள் பெரிய முக்கியத்துவத்தை அடைகின்றன. இவ்வகை கதைகள் நிறைய வெளிவருமென்றால் நல்லது.
ஆர்.கிருஷ்ணராஜ்
இரு கதைகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நலம். நலமறிய விழைகிறேன்.
மிக நீண்ட நாட்கள் சென்று உங்களுக்கு எழுத தோன்றியது. நண்பர்களுடனான ஒரு சமூக வலைதள உரையாடலில் உங்கள் மன்மதன் சிறுகதையைப் பற்றி விதந்தோத ஒரு தருணம் கிட்டியது. நண்பர் வில்லிபுத்தூர் கோவிலில் தான் கண்ட சிற்பங்களை பகிர்ந்திருந்தார். மன்மதன் சிற்பம். கரும்பு வில்லேந்தி, “தப்பிக்கவாடா பாக்க” என்ற முறுவல் கமழ மலர்க்கணை தொடுக்க ஆயத்தமாவது போன்றதொரு தோரணையில். தாங்கள் எழுதிய அதே வியாஹ்ர பாவம். புலிப்பதுங்கல்.
நண்பரும் அந்தக் கதையை படித்திருந்தார். கிருஷ்ணனின் ஆற்றாமை அழிந்து ராஜு தான் மன்மதன்களின் உச்சம் என்றுணரும் பெருந்தருணம் உங்கள் எழுத்தின் பிரம்மாண்டத்தில் எழுந்ததை அப்படி பேசினோம்.
குறவன் இடைக்கச்சை சல்லடத்து மணிகள் மூன்று பிரி நூற்கட்டால் கோர்க்கப்பட்டிருந்த நுண்ணழகை அறிந்த ஒருவனை விட மல்லியால் வேறு யாரை காதலித்திருக்க முடியும்.
இறுதியாக நான் உங்கள் கதையின் இணைப்பை பகிர்ந்து இவ்வாறு சொல்லியிருந்தேன். இந்தக் கதையைப் படித்து விட்டு உங்களால் எந்தவொரு சிற்பத்தையும் வழக்கமாகக் கடப்பது போல் கடந்து செல்ல இயலாது என்று.
மிக்க நன்றி.
என்றும் அன்புடன்
சங்கர் கிருஷ்ணன்
புதுச்சேரி.
அன்புள்ள ஜெ,
இரண்டு கதைகள் அவை வெளிவந்தபோது என்னால் அவ்வளவாக ரசிக்கப்படாதவை. ஒன்று மன்மதன். இன்னொன்று பழைய முகம். மன்மதன் கதையில் உள்ள அந்த ‘பார்வை’ ஒரு அபாரமான உருவகம். விரலில் அவன் பார்வை இருக்கிறது. மன்மதன் அனங்கன். அவனுக்கு உடல் கிடையாது. ரதி மட்டும்தான் அவனைப் பார்க்கமுடியும். ஆனால் கண்ணில்லாதவனும் பார்க்கமுடியும். அனங்கனை பார்க்க ஊனவிழி இல்லாமலிருந்தால்தானே நல்லது? மன்மதனின் விரல்களில் மல்லிகைப்பூ வைத்திருப்பதைப்பற்றிச் சொல்வான். அந்த மென்மையை விரலை கண்ணாக்கியவனே உணரமுடியும்.
பழையமுகம் கதையில் அந்த பழைய நடிகையும் அவளுடைய பழைய ரசிகனும் பரிமாறிக்கொள்ளும் பாடல்கள். அவை எல்லாமே கற்பனைப்பாடல்கள். ஆனால் அறுபதுகளின் மூட் அவற்றில் உள்ளது.
இப்போதைய வாசிப்பில் அந்தப் பாடல்களின் வரிகளை நான் தனியாகக் கவனித்தேன். ”நேற்று நீ கண்ட நிலா, இன்று என் தடாகத்திலா !” என்பது முதல்பாட்டு. ”காலங்கள் மாறலாம் கனவுகள் மாறுமா? ராகங்கள் மாறலாம் பாடல்கள் மாறுமா?” அந்தப்பாடல்களில் ஒரு கற்பனையான கொண்டாட்டமான நெகிழ்வான உலகம் இருக்கிறது.”ஆயிரம் மலர்கள் மலர்ந்ததே! ஆனந்தம் எங்கும் நிறைந்ததே! கண்ணும் கண்ணும் கனவு காணும் நாளல்லவா?” எல்லா பாடல்களும் மிகமிக இனியநினைவாக உள்ளன.
முடியும்போது “ராமன் வில்லறியும் ஜானகி நெஞ்சத்தினை” என்னும்பாடல். கடைசியாக “கற்பூரம் கரையும் காற்றிலே எப்போதும் இருக்கும் ராகமே” என்ற பாடல். ஒரு உச்சம். ஒரு சப்ளைம். அதை பகிர்ந்துகொள்கிறார்கள். மலைமேல் ஏறி அங்கே உச்சியில் நின்றுவிட்டு மௌனமாக கீழிறங்குவதுபோல. அந்த கீழ்மையும் துக்கமும் இருந்தாலும் அப்படி ஒரு மானசிக்கமாக பொன்னுலகம் அவர்களுக்கு இருக்கிறது என்பது எவ்வளவு மகத்தான விஷயம்!
எம். ஜானகிராமன்
ஜெயமோகன் நூல்கள் வாங்க
வடிவமைப்பு- கீதா செந்தில்குமார்
பிரயாகையின் உணர்வுத் தருணங்கள்-இரம்யா
பிரயாகை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)கதையின் மாந்தர்கள் யாவரும் வளர்ந்து பாசப்பிணைப்புகளுக்குள் வலுவாக அமைந்து உணர்வுகள் பொங்கி நெகிழும் தருணங்கள் அதிகம் வாய்க்கப்பட்டு அமைகிறது பிரயாகை நாவல். காதலும், ரத்தபாசமும் அதைவிட மேலாக நட்புத் தருணங்களுமென அன்பு நிரம்பித் ததும்புகிறது. உறவுகளுக்குள் ஏற்படும் பொறாமைகளும் பூசல்களும் நிகழ்ந்து ஒரு தூரம் உருவாகும்போது எங்கோ ஒரு தருணத்தில் யாவும் முன்பிருந்தது போலவே சரியாகிவிடாதா என்று மறைந்து கிடக்கும் குழந்தை மனம் ஒன்று கேட்டுக் கொள்ளாமல் இல்லை.
ஆனால் அந்த தருணங்களையெல்லாம் கடந்து காலம் முன்நகர்ந்து ஆறா வடுக்களை சுமந்து வந்து அதன் சாத்தியத்தைக் குலைக்கிறது. துரியன் எங்கோ ஒரு புள்ளியில் பீமனுடன் கரம் சேர்த்து விளையாடிய அந்தத் தருணத்திற்கு ஏங்காமல் இல்லை. பீமனும் அதை எண்ணும்போதெல்லாம் கனிந்து பூரிப்படையாமலில்லை. எல்லாம் ஏதோவகையில் சரியாகிவிடாதா என்று தவிப்பவர்களாக திருதிராஷ்டிரர், விதுரர், தருமன். இந்த ஆடலில் சிக்கி சித்தமிழக்கும் குண்டாசி. அதை கேள்விகளோடே அணுகும் அர்ஜூனன். நீர்வழிப்படும் புனைபோல பீமன். ஆனால் இவற்றிலெல்லாம் சிந்தையைச் செலுத்தாமல் தான் பிறந்த நோக்கத்தை முற்றுணர்ந்து செயல் தீவிரம் கொண்டவர்களாக கண்ணனும், திரெளபதியும்.
அஸ்தினாபுரி எனும் மாபெரும் அரசைச் சுற்றி சுழலும் உறவுகளுக்குள் விழைவுகள் இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம். நாடோடியாக இருந்து ஒரு நிலையான இடத்தில் அமைந்து வாழத்தொடங்கிய காலத்தினின்றே மனிதனைத் தொற்றிக் கொண்ட விழைவு இந்த மண் விழைவு. இந்த நாவலில் சற்றும் எதிர்பாராது விதுரருக்குக் கூட அந்த விழைவு இருப்பதை நான் கண்டு கொண்ட தருணத்தில் தான் விழைவின் சுவடை அனைவரிலும் தேட ஆரம்பித்தேன்.
சத்யவதிக்கும், அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் சிவைக்கும் இருந்த விழைவுகள் கடத்தப்பட்டு பாண்டுவிலும் திருதிராஷ்டிரரிலும் விதுரரிலும் அது நிறைந்து குந்திக்கும், காந்தாரிக்கும், சகுனிக்கும் இருந்த விழைவுகளுடன் இணைந்து பெருகி நூற்றுவரிலும், பாண்டவரிலும் இருப்பதைக் கண்டேன். விதுரரின் மகனே கூட பெருவிழைவு கொண்டு துவாரகையை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த கண்ணனுடன் இணைகிறான். விழைவுகள் உறவுகளிடையே விரிசலுறச் செய்து பகையாக்குகிறது. ஒவ்வொருவரும் தனக்கான ஆட்டத்தில் தன் பக்கம் நிற்க வேண்டியவர்களை அடையாளம் காணுகிறார்கள். அது நோக்கி புதிய உறவை நகர்த்துகிறார்கள். ஆட்டத்தை ஒருக்குவதற்கான ஆளான கிருஷ்ணன் நிலைபெயரா துருவன் போல இந்த உறவுச் சிக்கல்களின் தீவிரத்தில் நுழைந்து விடாது செயல் செயல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.
சற்றே தெளிவாக தீமையின் பக்கமென சகுனியைச் சொல்லிவிடுமளவு நரியால் கடிக்கப்பட்டு உடலும் மனமும் மாறுபட்டு பொழுதும் தன் அருகிலேயே தீமையின் குறியீடான கணிகரை அருகில் வைத்துக் கொள்ளும் போது மனம் பதற்றமடைந்தது. சகோதரப்பாசம் கொண்டவனாக, மதியூகியாக, பீஷ்மர் அணைத்து ஆறுதல் சொல்லிய அந்த சகுனியை இழந்த வருத்தம் என்னை சூழ்ந்து கொண்டது. அங்கிருந்து இனி எப்போதும் மீள முடியாத ஒரு இடத்தில் சகுனி அமைகிறான். அறமற்ற மதியூகமாக கணிகரின் திட்டத்தில் பாண்டவர்களை எரியாக்கும் சதித்திட்டதில் சகுனியும், திருதிராஷ்டிரரும், துரியனும் பங்கு கொள்வது ஊழ் என்பதைத் தவிர என்ன சொல்ல முடியும்.
ஏழு ஆண்டுகளாக அந்த அறச்சிக்கலிலேயே திருதிராஷ்டிரனும், துரியனும் வீழ்ந்து பலமற்றுப்போவது என கீழ்மையை நோக்கிச் செல்லும் போது மனம் கனக்கிறது. அந்த ஒட்டுமொத்த கனத்தையும் குண்டாசியின் வழி கண்டு கலங்கி நின்றேன். ஒரு பிழையின் வழி அறமற்ற ஒரு தரப்பை பிரயாகை உருவாக்கிவிட்டது. அதனாலேயே அதற்கு இணையான அறத்தின் தரப்பாக பாண்டவர்களை எழுப்பிக் கொள்ள மக்கள் தலைப்பட்டாக வேண்டும். இதற்கு நடுவில் நின்று கொண்டு தத்தளிக்கும் விதுரரைப் போல மனம் கலங்குகிறது.
இவற்றையெல்லாம் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் கம்பராமாயணத்தின் இந்த வரி கோர்த்தது ஜெ. “ஒன்றாய் விரி இருல் இரண்டு கூறாய் வெகுண்டன”. இரு எருமைகள் சண்டை போடும் சித்திரத்தை ஒரு இருள் இரண்டு கூராய் விரிந்து வெகுண்டன என்று கூறியது. ஆம்! ஒரே இருள் தான். அதுவே இரண்டு கூராய் பிளந்து நின்று போர்புரிகிறது. அதை வியந்து கொண்டிருக்கும்போதே நண்பர் சக்திவேல் இந்த வரியை பிரம்மத்துடன் ஒப்பு நோக்கினார். பிரம்மம் ஒன்று என்பதை இங்கும் ஒப்பு நோக்குகிறேன். பிரம்மம் தன்னைத்தானே பிளந்து இரு கூராக்கிக் கொண்டு ஆட்டகளத்திற்கு தயாராகிவிட்டது என்று கண்டேன். வெற்றியோ தோல்வியோ; உயிர் தப்பிப் பிழைக்கப்போவதோ உயிர் மாயப்போவதோ யாவும் ஒன்று எனக் கண்டேன்.
இந்த அரசியலையும், விழைவையும் விலக்கி இதில் ஊடாடும் அன்பையும் பாசத்தையும் கண்டு உருகி நிற்கிறேன். எத்துனை உணர்வுத் தருணங்கள்! எத்துனை நெகிழ்ச்சித் தருணங்கள்! எத்துனை காதல்கள்! யாவும் கலங்கடித்து விட்டன ஜெ.
பீமனும் கடோத்கஜனும்: பீமனுக்கும் கடோத்கஜனுக்குமான தந்தை-மகன் உறவை நீங்கள் சொல்லும் இடம் தோறும் மெல்லிய புன்னகையோடே பயணித்துக் கொண்டிருந்தேன். “மண்டையா” என்பது எத்துனை பாசமான விளிச்சொல்! ”திருதிராஷ்டிரன்!” என்று அவன் முதன் முதலில் மழலைச் சொல்லோடு எதிர்பாராத விதமாகச் சொல்லும் போது அவன் சொல்லிய விதமும், பீமனுக்கு தன் பெரிய தந்தை மீதுள்ள அன்பையும் கண்ணோக்கி நெகிழ்ந்தே போனேன். கட்டற்ற ஆற்றலுடையவனாக வளரும் கடோத்கஜனை பீமன் மனதார சங்சலம் கொள்ளும் ஒரு தருணம் அமையப்பெறுகிறது. ஆற்றலின் உச்சமான பீமனே சலனம் கொள்ளுமளவான ஆற்றல் கடோத்கஜனிடம் இருப்பதை உணரமுடிந்தது.
தந்தையின் அத்துனை உணர்வுகளையும் அணுவணுவாக உணரக் கூடியவனாக கடோத்கஜன் இருக்கிறான். பீமனின் நிலைகொள்ளாமையைக் கண்டு ”தந்தையே, நீங்கள் யாரையாவது அஞ்சுகிறீர்களா?” எனும் போது அவன் கர்ணன் தன் கனவில் வருவதாகக் கூறுகிறான். ஒரு வகையில் வண்ணக் கடலிலிருந்தே அவன் கர்ணனை அஞ்சுவதனால் தான் எதிர்த்தான் என்றும், அவமானப்படுத்தினான் என்றும் தோன்றியது. என்றாவது ஒரு நாள் அவன் தன் தமையனுக்கு எதிராக களத்தில் நிற்கக்கூடும் என அஞ்சியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். தான் கர்ணனை கொல்கிறேன் என்ற கடோத்கஜனிடம் “வேண்டாம்… நீ அவனை கொல்லக்கூடாது” என்ற வரியால் மேனி புல்லரித்துக் கொண்டது. கர்ணனின் மேல் அவன் வைத்திருந்த மதிப்பும் கடோத்கஜனின் மேல் வைத்திருந்த பாசமும் ஒன்றாக புலப்பட்ட வார்த்தை “நீ கொல்லலாகாது” என்பது.
திருதிராஷ்டிரரும் தருமனும்: இடும்பவனத்தில் பீமனின் திருமணத்தின் போது “இது என் மூத்த தந்தையார். இவரில்லாமல் இந்நிகழ்ச்சி இங்கு நிறைவுறாது” என்று தருமன் ஒரு கல்லை எடுத்து வந்து வைக்கிறார். குந்தி வெறுத்துக் கூறியும் ”குருதியுறவு ஒருபோதும் அகல்வதில்லை. எங்களை அவரே கொன்றிருந்தாலும் அவர் நீர்க்கடன் செய்யாமல் நாங்கள் விண்ணேற முடியாது என்றே நூல்கள் சொல்கின்றன. எங்களுக்கு இன்றிருக்கும் தந்தை அவரே. அவரை வணங்காமல் இளையோன் அவளை கைப்பிடித்தல் முறையல்ல.” என்கிறார். ”அவர் எங்களை வெறுக்கலாம். நாங்கள் அவ்வெறுப்புக்குள்ளானது எங்கள் தீயூழ். அது எங்கள் பிழை என்றே நான் எண்ணவேண்டும். அதுவே முறை. ஏனென்றால் தந்தையை எந்நிலையிலும் வெறுக்கும் உரிமை மைந்தருக்கு இல்லை” என்று கூறி தன் நிலைப்பாட்டில் உறுதியோடு இருக்கிறார். நீண்ட நேரம் கழித்து அவனுடைய செய்கையை உணர்ந்தவளாக குந்தி “குருகுலத்துப் பாண்டு ஒருகணமும் தன் தமையனின் இளையோனாக அன்றி வாழ்ந்ததில்லை. இன்று அவர் தன் தோளிலேந்தி வளர்த்த மைந்தரை தமையன் கொல்ல ஆணையிட்ட பின்னரும்கூட விண்ணுலகில் இருந்து தன் தமையனுக்காகவே அவர் பரிந்து பேசுவார்… உன்னிலேறி வந்து அவர்தான் இன்று பேசினார்.” என்று மொழிகிறாள். தருமனில் பாண்டு-திருதிராஷ்டிரர் அன்பையும், தேவாபி-பால்ஹிகர் அன்பையும் ஊற்றி நிறைத்து நெகிழ்ந்தேன்.
ஏழு வருடங்களாக பாண்டவர்களின் இறப்பு செய்தியில் மூழ்கிப் போய் உடைந்திருந்த திருதிராஷ்டிரர் அவர்கள் இறக்கவில்லை எனும்போது பெருமகிழ்வு கொள்கிறார். இருந்தாலும் அவர்களை எதிர்கொள்வதன் சங்கடம் அவருக்கு இருக்கிறது. அதை உடைத்தெறிந்தது தருமனின் கடிதம் தான். “எந்தையே, இப்புவியில் பாண்டவர்களாகிய எங்களுக்கு இன்றிருக்கும் வாழும் மூதாதை நீங்கள் மட்டுமே. தங்கள் நல்வாழ்த்துக்கள் இன்றி நாங்கள் முழுமானுடராக வாழமுடியாது. தேவர்களுக்கும் விண்ணவர்க்கும் நீத்தாருக்கும் அறத்திற்கும் எங்களை கொண்டுசென்று சேர்க்கவேண்டியவர் தாங்களே. பாண்டவர்களாகிய நாங்கள் தங்கள் பாதங்களில் சிரம் வைத்து வாழ்த்துக்களை நாடுகிறோம்.” என்று ஆரம்பித்து ”என்றும் எங்கள் பெருமை உங்கள் உதிரத்துக்குரியவர்கள் என்பதே. வேழம் மானுடனாக வந்து அமர்ந்திருந்த பெருமையை ஹஸ்தி வழியாக பெற்றது நம்குலம். இன்றும் அது நீடிக்கிறது. என்றும் அது நீடிக்கும். வேழங்கள் கடந்துசெல்லும் எளிய பாதையே நான் என்று அறிகிறேன். என் பிழைபொறுத்து என்னையும் என் இளையோரையும் வாழ்த்துங்கள்!” என்று முடிந்த கடிதத்தில் கலங்கியது திருதிராஷ்டிரருடைய கண்கள் மட்டுமல்ல. பெருமிதத்தோடே சிவந்தது என் கண்களும் தான். தருமனுடைய அந்த முதிர்ச்சியான வார்த்தைகளும் செயல்களும் என்னை பிரமிக்க வைத்தன.
விதுரரும் குண்டாசியும்: விதுரருக்கும் குண்டாசிக்கும் இடையே நிகழும் உரையாடல் தந்தை மகன் பாசத்தை உணர்த்தக் கூடியது. கௌரவர்களில் குண்டாசி மட்டுமே அவரை தந்தையே என்று அழைத்தான் எனும் போதே அந்த உறவு புலப்படுகிறது. பாண்டவர்களின் இறப்பு செய்திக்குப் பின் குண்டாசி குடித்தே காலத்தைக் கழிக்கிறான். அவனை நீண்ட நாள் கழித்து விதுரர் சந்திக்கும் ஒரு தருணம் சொல்லப்படுகிறது. அப்போது விதுரர், “உன்னை மண்ணில் வந்த தேவருலகக் குழந்தைபோல பார்த்தவன் நான். கௌரவர்களிலும் பாண்டவர்களிலும் நான் உனக்களித்த முத்தங்களை எவருக்குமே அளித்ததில்லை. உனக்காக தனிமையில் நான் விட்ட கண்ணீரை உன் அன்னையும் விட்டிருக்க மாட்டார்.” என்று மனம் உருகுகிறார். பாண்டவர்கள் உயிரோடு இருக்கும் செய்தி அறிந்தபின்னும் பீமன் அவனை ஏற்றுக் கொள்வானா என்று ஐயம் கொள்ளும் குண்டாசியிடம் “மைந்தர் உள்ளங்களில் மூதாதையர் வந்தமரும் கணங்கள் உண்டு மைந்தா. மூதாதையரை வேண்டிக்கொள். நாம் அவர்களின் குருதி. அவர்களின் கனவுகளின் நுனி. அவர்கள் விண்ணுலகில் இருந்து நம்மை கனிந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அவர்கள் கைவிட மாட்டார்கள்” என்று ஆற்றுப்படுத்துகிறார். விதுரரின் வாஞ்சையான கனிவான அந்தப் பேச்சாலும் குண்டாசியின் மரியாதையும் அன்பும் கலந்த மொழியாலும் பாசஉணர்வு மனத்தை நிறைத்துவிட்டது.
குண்டாசியும் பீமனும்: பீமன் குண்டாசியை அடையாளம் கண்டுகொண்ட நொடியில் அவனைக் கண்டு முதலில் கன்னத்தில் ஓங்கி அறைகிறான். அவன் கழுத்தைப்பற்றித் தூக்கி சுவரோடு சாய்த்து “குடிக்கிறாயா? குடிக்கிறாய் அல்லவா? மூடா. இனி ஒரு சொட்டு உன் வாயில் விழுந்ததென்றால் அன்றே உன்னைக் கொன்று கங்கையில் வீசுவேன்” என்று கண்டித்துக் கூறி மறுகணமே அள்ளி அணைத்துக் கொள்கிறான். ஏற்கனவே விதுரரிடம் பீமன் தன்னை ஏற்றுக் கொண்டால் தான் குடிக்காமல் இருப்பேன் என்று கூறியிருப்பான். இந்த நிகழ்வுக்குப் பின் விதுரர் ஆறுதல் அடைந்து குண்டாசியைப் பார்க்க “தந்தையே,. அவரது ஆன்மா என்னை முழுமையாக ஏற்றுத்தழுவியது இப்போது… ஆனால் அவர் உடல் என்னை ஏற்கவில்லை. அது இனி ஒருபோதும் எங்களை ஏற்காது.” என்று உணர்கிறான். “ஒருநாள் அவர் கையால் என் தலை உடைந்து தெறிக்கும் தந்தையே. சற்று முன் அதை அத்தனை அருகே உணர்ந்தேன்” என்று அவன் கூறும்போது உள்ளம் கலங்குகிறது. சேரவியலாத ஒரு விளக்கம் உறவுகளுக்குள் நிகழ்ந்து விட்டதை உணர்ந்து மனம் கனக்கிறது.
கர்ணனும் துரியனும்: வண்ணக்கடலில் துரியன் கர்ணனுக்கு அங்க நாட்டை அளித்து அரசனாக்கி அவமானத்திலிருந்து மீட்ட தருணம் உணர்வுப்பூர்வமானது. பிரயாகையின் கர்ணன் மேலும் தன் வித்தையைக் கூராக்கிக் கொள்ளும் பொருட்டு பரசுராமனிடம் சென்றிருப்பதாக நாவலில் பிறர் சொல்லிக் கேட்டு மகிழ்வடைந்தேன்.
கர்ணன் தன்னை அங்க நாட்டு அரசனாக மணிமுடி சூட்டிய அந்தத் தருணத்தை நெகிழ்ச்சியோடு துரியனிடம் நினைவுகூர்கிறான். “அது வரை நான் என்னை தனியனாக சூதனாக மட்டுமே எண்ணியிருந்தேன். நான் வில்திறன் கொண்டது என் இயல்பினாலும் என் தன்மதிப்பை எங்கும் இழந்துவிடக்கூடாதே என்பதனாலும் மட்டும்தான்.” என்ற கர்ணனிடம் ”என் வாழ்வும் இறப்பும் உனக்காகத்தான் என்பதனால்… நான் விழைவது அந்த நட்பை மட்டுமே” என்று துரியன் கூறும்போது சிலிர்க்கிறது.
”அன்று அக்களத்தில் அறிந்தேன். என்றோ ஒருநாள் பெரும்போர் ஒன்றில் நான் பாண்டவர்களுக்கு எதிராக படைநிற்கப் போகிறேன். உங்களுக்காக, உங்கள் தம்பியருக்காக அதில் நான் வென்றாகவேண்டும்.” அந்தக் காரணத்திற்காகவே பர்சுராமரிடம் சென்றதாக கர்ணன் கூறுகிறான். பரசுராமரிடம் ஷத்ரியர்களுக்கு போரில் துணை நிற்பதில்லை என்ற வாக்குறுதியை அளித்திருந்தால் கர்ணனுடைய வாழ்வு மாறியிருக்கும். இந்த செய்தியை அறிந்து துரியோதனன் விசனப்பட்டு “நீ அந்த வாக்குறுதியை அளித்திருக்கவேண்டும். உனக்கு தென்னகத்தில் ஒரு பேரரசை உன் ஆசிரியர் அமைத்துத் தந்திருப்பார். கர்ணா, நீ அடைந்த அனைத்து இழிவுக்கும் அதுவல்லவா விடை? என்ன மூடத்தனம் செய்துவிட்டாய்? இனிமேல் உன் ஆசிரியரை சந்திக்க முடியுமா? அவ்வாக்குறுதியை அளிக்கமுடியுமா? சிந்தித்துப்பார், அங்கநாட்டை நான் உனக்களித்ததே நீ அடைந்த குல இழிவை சற்றேனும் போக்கத்தான். அதற்குக் கைமாறாக அவ்விழிவை முற்றிலும் அகற்றும் ஒரு பெருவாய்ப்பை தவறவிட்டாய் என்றால்… ஒருபோதும் நீ செய்திருக்கக் கூடாது” என்கிறான். இந்த வரிகளில் துரியனின் நட்பை எண்ணி வியந்தேன். ”எளிய சூதன் என்றாலும் கர்ணன் ஒருபோதும் கொடுத்ததை திரும்ப வாங்குவதில்லை. உங்கள் பொருட்டு களத்தில் நிற்பது என் கடன். எதிரே பரசுராமரே வில்லேந்தி வந்து நின்றாலும்கூட.” என்று கர்ணன் சொல்லி நிறைவு செய்த அந்தத் தருணம் ஏக்கம் நிறைந்த அழுகையில் மூழ்கிப்போனேன்.
கர்ணன் திரெளபதியைக் காணும் முதல் பார்வையில் காதல் வயப்படுகிறான். அதை துருவன் கண்டுகொள்கிறான். ”பாரதவர்ஷத்திலேயே யாதவ கிருஷ்ணனை தவிர்த்தால் அவர்தான் பேரழகன் பெருவீரன் என்கிறார்கள். ஒருபோதும் கர்ணன் வளைந்து நின்றதில்லை. ஓரவிழியால் நோக்கியதில்லை. பணிந்து ஏதும் சொன்னதில்லை. கன்னங்கரியவன். அவளைப்போலவே.” என திரெளபதியை மணம் முடிப்பதற்கான அத்தனை பொருத்தங்களும் கர்ணன் கொண்டிலங்குகிறான். ஆனால் வெறுமே அங்க நாட்டு அரசனாக அந்த விழைவை கைக்கொள்ள இயலாது என்ற நடைமுறைச் சிக்கலும் உள்ளது. திரெளபதியை விரும்பியவனாகவும், அவளை மணம் முடித்துச் செல்லவும் வந்திருந்த துரியன் கர்ணனிடம் ”ஆணும் பெண்ணும் கண்டுகொள்வதை கந்தர்வ கணம் என்கின்றன நூல்கள். அது நிகழ்ந்ததை நான் கண்டேன். உன் விழிகளை நான் நோக்கினேன். அவை கந்தர்வனின் விழிகள். அவள் விழிகளும்தான்.” என்று கூறி “அவளை வென்று துணை கொள்ளப்போவதும் நீயே” எனும்போது மேலும் கண்கள் கலங்கி விட்டது. துரியன் என் மனதில் நின்றுவிட்டான ஜெ. அவன் போரில் வீழ்ந்து இறந்து படும் கணம் ஒன்று உண்டாயின் அந்தத் தருணத்தில் அவன் கர்ணனின் மேல் கொண்ட தீரா அன்பிற்காகவே அழுவேன்.
இந்த நாவலில் வரும் பெரும்பாலான பாசப்பிணைப்புகள் ரத்த பந்தத்தால் வருவன. ஆனால் கர்ணனும் துரியனும் கொண்டிருப்பது அதுவல்லாத ஒன்று. துரியனுக்குக் கர்ணனும், கர்ணனுக்கு துரியனும் கிடைத்தற்கரிய பேறு என்று தான் சொல்ல வேண்டும். ஒன்றுக்கு ஒன்று சலைத்ததல்லாத நட்பைப் பெறுவதன் பேறு அளப்பறியது. அதை வியக்கிறேன்!
பிரயாகையின் காதல் தருணங்கள்
“பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்து வாரும்.” என்ற கம்பனின் வரிகளைப் போலவே பொருந்தும் காதல் தருணங்களைக் கண்டு நாவலில் சிலாகித்திருந்தேன் ஜெ. பொருந்தும் காதலோ திருமணமோ இரண்டையுமே கந்தர்வத் தருணம் எனலாம். சத்யவதி சித்ராங்கதனுக்கு ஏங்கியது போல, குந்தி தன் காதலையெல்லாம் கொட்டித்தீர்த்து சிறுமியாகிவிட எங்கியது போல என ஒரு இணையை நோக்கி மானுட மனம் காதல் கொண்டு கொண்டே தான் இருக்கிறது. தான் அடைய முடியாத இடத்தில் இருப்பினும் அந்த இணையை நோக்கி அது வாஞ்சை கொள்ளாமல் கடந்துவிடுவதில்லை. அங்ஙனம் மானுடர் அனைவருக்கும் சாத்தியமானதல்ல என்பதனாலேயே அது நிகழும் தருணங்களை நோக்கி மனம் இனிமையோடு பயணிக்கிறது. அப்படியான இணை தருணத்தை நாவலில் ரசித்திருந்தேன்.
இடும்பி-பீமன்: மலை போன்று உடலையும், வெளிப்படையான உள்ளத்தையும் கொண்டிலங்கும் பீமனுக்கு இணையானவளாக இடும்பி காணப்படுகிறாள். குந்தி தன் முதல் பார்வையில் இடும்பியையும் பீமனையும் பார்த்து பொறாமை தான் கொள்கிறாள். நகரத்துப் பெண்களின் செயற்கையான அழகை இடும்பியுடன் ஒப்பு நோக்கும் ஒரு தருணத்தில் இடும்பியின் இயல்பான அழகை பீமன் விரும்புகிறான். நிகழ்வுகளுக்கேற்ப, ஆட்களுக்கேற்ப நடிக்கத் தெரியாத இடும்பி அதே இயல்பு கொண்ட பீமனுக்கு பொருத்தமான இணை. இனிமையான உரையாடல்களோ மெல்லிய உரசல்களோ இல்லாத காட்டுத்தனமான காட்டின் மகளுடைய காதல் பீமனுக்கேற்றது. அவளுக்கு இணையான வீரம் கொண்டதால் பீமன் அவளுக்கு ஏற்றவன். கரு வேங்கை பூத்தது போல இருக்கும் இடும்பிக்கும் காற்றின் மகனான பீமனுக்கும் இடையேயான காதலின் விளைவாக பூத்த கடோத்கஜனையும் அதனால் விரும்பலானேன்.
அர்ஜுனனும் கண்ணனும்: தான் வியந்து கண்டோரெல்லாம் சிறியோரக் கண்டு மனம் வருந்தும் அர்ஜுனன் மேல் சற்றே பரிதாபம் கொள்ளாமல் மனம் அமையவில்லை. அன்னையின் தொட்டணைப்பை உணராதவன்; தந்தையின் அருகமைவைக் கொள்ளாதவன் முதன் முதலில் காதல் கொண்டது தன் ஆசிரியர் துரோணரிடம் தான். அவர் நிமித்தம் அவரின் மகனான அஸ்வத்தாமனையே வெறுத்தவன். கர்ணனின் அருகமைவை விரும்பாதவன். அவனின் முதல் மன உடைவு தன் ஆசிரியருக்காக வெற்றி கொண்ட துருபதனை அவர் எதிர்கொண்ட விதத்திலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த மன விலக்கத்தினால் பித்து கொண்டு தீவிரமான விற்பயிற்சியில் ஈடுபடுகிறான். பெண்களின் மேலான காதலை அறிவதற்கு முன்னர் தன் உடலால், காமத்தின் துணை கொண்டு எதையோ தேடித்திழைக்கிறான்.
அர்ஜுனன் கிருஷ்ணனைக் கண்டும் கேட்டும் வியக்கிறான். கிருஷ்ணனின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து நோக்குகிறான். ரசிக்கிறான். கிருஷ்ணனின் அந்தப் புன்னகையை வாய்ப்பு கிடைக்குந்தோறும் சந்திக்கிறான். போரின் போது சக்கரத்தட்டு கொண்டு போர் புரியும் கண்ணனை வியக்கிறான். அவன் கண்ணசைவிற்காக காத்து நின்று திரெளபதியை மணம் முடிக்கிறான். காமத்தினால் ஒரு போதும் அமைந்துவிடாத அர்ஜூனனுக்கு பெருங்காதலாக அமையப்போவது கண்ணனாக மட்டுமே இருக்க முடியும் என்று கண்டேன்.
திரெளபதி-கர்ணன்: அரக்கு நிறப்பட்டாடையில் அழகு மிகுந்திருந்த திரெளபதி தன் முதல் பார்வையில் கர்ணனை சந்திக்கும்போது நடந்தது திகைப்பு தான். கர்ணனின் பொன்னிற கவசகுண்டலத்தை உணர்ந்த மிகச் சிலருள் ஒருவளாக திரெளபதியும் காணக்கிடக்கிறாள். “நிமிர்வும் உடலின் சமநிலையும் ஒன்றா என்ன? ஒருபோதும் கர்ணன் வளைந்து நின்றதில்லை. ஓரவிழியால் நோக்கியதில்லை. பணிந்து ஏதும் சொன்னதில்லை. கன்னங்கரியவன். அவளைப்போலவே.” என்று அந்த நிகழ்வை காணும் துரியன் அவர்கள் இருவரைப்பற்றியும் நினைத்துக் கொள்கிறான். திரெளபதி தன் தோழியான மாயையிடம் யாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை கேட்டபோது “கர்ணன் முன் நீங்கள் பேதைக்காதலியாக ஆனீர்கள். அவ்வண்ணமே அவர் முன் முழுவாழ்நாளையும் கழிக்க முடியும் என்றால் உங்களுக்குரியவர் அவரே!” என்கிறாள். பிறக்கும்போதே சக்கரவர்த்தினியாகப் பிறந்து பாரதவர்ஷத்தையே ஆழும் விதியைக் கொண்டு மண் அமைந்த திரெளபதி கர்ணனுக்கானவள் அல்ல என்பதை நான் எப்போதோ முடிவு செய்திருந்தேன். வெறுமே பேதைக் காதலியாக மட்டும் அமைந்துவிடக்கூடியவள் அல்ல அவள். “கர்ணா நமக்கு அவள் வேண்டாம்டா!” என்று அவனிடம் சென்று சொல்லத்தோன்றியது. ஒருவேளை குந்தி தன் மகனாக அவனை முன்னரே அறிவித்திருந்தால் பாண்டவர்களில் ஒருவராக இருந்து திரெளபதியை மணம் முடித்திருக்கக் கூடும். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் கொடுத்தாலும் தீராக் காதல் கொண்டிருப்பவனின் காதலை பிற ஐவருடன் பகிர்ந்திருக்க அவனால் முடியாது என்றும் நினைத்தேன். ஆட்டுவிப்பவையெல்லாம் முறையாக ஒருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கண்டேன். ஆனாலும் எல்லா வகையிலும் பொருந்தி அமையும் இருவரது முதல் காதல் மனதை நிறத்துக் கொள்கிறது.
வெண்முரசு எனும் தொடர் நாவல் வரிசையில் பிரயாகை எனும் ஒப்பற்ற நாவலுக்காக நன்றி ஜெ.
பிரேமையுடன்
இரம்யா.
October 5, 2021
மகிழ்ச்சியும் பொறுப்பும்
TOWARDS HAPPINESS 2 BY RANJIT SINGH KURMI
குழந்தைகள் தேவையா?
அன்புள்ள ஜெ,
முகநூலில் வெண்முரசை பற்றி ஒரு குழுமத்தில் போடப்பட்டிருந்த பதிவுக்கு கீழே, அது Waste of time, அதை படிக்கும் நேரத்தில் வேறு ஏதேனும் செய்து பணம் ஈட்டலாம் என கமெண்ட் போட்டிருந்தார். ஆனால் பணம் கூட தராத ஒன்றை வாசிப்பின்பம் தரும் என்பதை அவருக்கு புரியவைக்க முடியாது.
இதே பாணியில் தான் குழந்தைகள் வேண்டாம் என்பதற்கான காரணங்களை யுடியூப் கமெண்ட்களில் பார்க்க முடிகின்றன. ‘குழந்தை வளர்ப்பதில் அப்படி என்ன இன்பம் இருக்கிறது’ ‘குழந்தைக்கு செலவழிக்கும் நேரத்தில் வேறு பயனுள்ள காரியங்களை செய்யலாமே’ ‘குழந்தையை வளர்ப்பதற்கு பதில் நாயை வளர்த்துகொள்ளலாமே’
இவர்களுக்கு குழந்தை வளர்ப்பில் இஷ்டமில்லை என்பதைவிட பெற்றோர் எனும் பொறுப்பை ஏற்பதிலேயே தயக்கம் இருக்கிறது என தோன்றுகிறது.
நன்றி
சண்முகசுந்தரபாண்டியன் த
Happiness 2 By Jai Srivastava , Puneஅன்புள்ள சண்முகசுந்தர பாண்டியன்,
நான் அடிக்கடி மலையேற்றம், தொல்லியல் ஊர்களுக்குப் பயணம் என அலைந்துகொண்டிருப்பவன். என்னிடம் அக்காலம் முதலே ‘சாமானியர்’ கேட்கும் கேள்வி என்பது “அதனாலே என்ன லாபம்?” என்பது.
ஆரம்பத்தில் எரிச்சலாக வரும். லாபம் என்ற அந்த சொல் ஒருமாதிரி அருவருப்பூட்டும். அவர்களுக்கு சொல்லிப் புரியவைக்க முடியாது என்று தெரியும். ஆகவே கடுகடுப்பாக ஏதாவது சொல்வேன்.
சிலசமயம் நல்ல மனநிலையில் இருந்தால் “சர்க்காரிலே இருந்து கிராண்ட் கிடைக்கும்ங்க.. ஒரு டிரிப்புக்கு இவ்ளவுன்னு குடுப்பான்” என்பேன்.
உடனே ஆர்வம் கொண்டு “போய்ட்டு வந்தா நமக்கு கையிலே என்ன நிக்கும்?”என்பார்கள்.
நான் பெரிய ஒரு தொகையைச் சொல்வேன். “கிலோமீட்டருக்கு நாப்பத்தஞ்சு ரூபா குடுப்பாங்க சார். வவுச்சர் குடுத்தா போரும்”
பரபரப்பாகிவிடுவார்கள். “அப்டியா? தெரியாமப்போச்சே! எப்டி அப்ளை பண்றது?” என்று கேட்பார்கள்.
மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்பேன். அப்படி விண்ணப்பித்த பலரை எனக்குத்தெரியும். ஒருவர் ஏழு நினைவூட்டல் கடிதங்கள்கூட அனுப்பியிருக்கிறார்.
அந்த கசப்பு இப்போது இல்லை. பாவம், அவர்கள் அவ்வாறுதான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வாறுதான் உள்ளம் அமைத்து தரப்பட்டிருக்கிறது. அவர்களின் பேச்சில் அடிக்கடி வரும் சொற்றொடரைப் பாருங்கள். “இதனாலே பத்து பைசாவுக்கு பிரயோசனம் உண்டா?”.பைசாவாக பிரயோசனம் இல்லாத செயலைச் செய்யவே அவர்களால் இயலாது.
அதேபோல இன்னொரு வரி “நாம நம்ம பொழைப்பைப் பாப்போம்”. பிழைத்தல் என்றால் வாழ்தல் அல்ல.விதியின் கண்ணியில் சிக்காமல் அதன் பிழையினூடாக கடந்து அப்பால் சென்றுவிடுதல். அதாவது தப்பிப்பிழைத்தல்.
நமக்கு வாழ்தலென்றாலே பிழைத்தல் என்று சொல்லித் தரப்பட்டுள்ளது. நம் குடும்பங்களில் இருந்து நாம் பெறும் வாழ்க்கைக்கல்வி என்பது அதுதான். அதுதான் இங்கே இயல்பான உளநிலை. பொதுவான வாழ்க்கைத்தரிசனம். மிகமிகச்சிலரே இயல்பாக அவர்களுக்குள் உள்ள தேடலாலோ, சூழலில் இருந்து பெற்ற அறிதலாலோ, அந்த எல்லையை கடந்து வருபவர்கள்.
அந்த மனநிலை இங்கே உருவாகி வந்ததற்கு மிக நீண்ட வரலாற்றுப்பின்புலம் உண்டு. பெரும்பஞ்சங்கள், நோய்கள், போர்ச்சூழல்கள். அலைக்கழிந்து போராடித் தாக்குப்பிடித்த அடித்தளத்து மக்களின் அன்றாட அனுபவத்தில் இருந்து உருவான ஒரு வாழ்க்கைப் பார்வை அது.
அந்த உளவியலில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது எதிர்காலம் பற்றிய பதற்றம், எதிர்பாராமை பற்றிய அச்சம். ஆகவே மிகமிகத் தேவையான செலவுகளை மட்டும் செய்து எஞ்சியதைச் சேமித்துக்கொண்டே இருப்பார்கள். பைசா பைசாவாக யோசிப்பார்கள். அதைத்தவிர எண்ணமே இருக்காது. வாழ்க்கையே நாளைக்காகத்தான், இன்று என்பதே இருக்காது.
அவர்களுக்கு வாழ்வென்பது பணத்தால் மட்டுமே மதிப்பிடத்தக்கது. தன் அடையாளம் என்பது பணம். ஒருவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார் என்று பாருங்கள். தன் வேலையைச் சொல்வார். தன் பொருளாதார நிலையை அடுத்தபடியாக. பொருளியல்ரீதியாக வலிமையுடன் இருக்கும் உறவினர்களை அடுத்தபடியாக. அவ்வளவுதான் அவர் அறிந்த வாழ்க்கை. நினைவறிந்த நாள்முதல் கட்டை சாயும் வரை அவர் போராடுவதே அதற்காகத்தான்.
அவர் அறிந்த இன்பம் என்றால் முதன்மையாக உணவுதான். அதைப்பற்றிப் பேசினால் சட்டென்று உற்சாகமாகிவிடுவார்கள். அடுத்தபடியாக தங்களுக்குச் சமானமானவர்கள் என நினைப்பவர்களுடன் உடை, வீடு போன்றவற்றில் போட்டிபோடுவதும் வெல்வதும். சின்னச்சின்ன சவால்களில் எதிரிகளை மட்டம் தட்டியதன் கதைகளை சொல்வார்கள், அவையே அவர்கள் அறிந்த மகிழ்ச்சி. அவ்வளவேதான்.
நாம் இப்போதுதான் மெல்லமெல்ல நடுத்தர வாழ்க்கைக்கு வந்திருக்கிறோம். இன்னும் ஓரிரு தலைமுறை இந்த பாதுகாப்பை அடைந்தபின்னர்தான் நமது பதற்றங்கள் நீங்கும். அதன்பின்னர்தான் நாம் மகிழ்ச்சி என்றால் என்ன என்று யோசிக்க ஆரம்பிப்போம். மகிழ்ச்சியாக இருப்பதொன்றும் பிழையல்ல என்ற எண்ணம் வரும். நமது மகிழ்ச்சியை நாம் தேடிக்கொள்ளவேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்கும்.
இன்று கொஞ்சம் மகிழ்ந்தாலே நமக்கு குற்றவுணர்வு வந்துவிடுகிறது. நம் சுற்றம் அந்தக் குற்றவுணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. “இங்கபாரு, உனக்கு பிள்ளைங்க இருக்கு. உனக்கு இதெல்லாம் எதுக்கு? அதுகளுக்கு நாளைக்கு ஒரு நல்லது நடக்கணும்… அதுக்குண்டான வழிய பாரு” என்று நம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
“நான்லாம் மனசறிஞ்சு ஒரு நல்ல டீ குடிச்சதில்லீங்க. குடும்பத்துக்காகவே வாழ்ந்தேன்.” என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கலாம். அது உயர்வான வாழ்க்கை என அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ரயிலில் தவறாமல் சிலர் என்னிடம் அதைச் சொல்வார்கள். அது ஒரு வகை பூச்சிபுழு வாழ்க்கை என அவர்கள் உணர இன்னும் சில தலைமுறை ஆகும்.
சொல்லப்போனால், இங்கே சுற்றுலா செல்வதும் வெளியே சாப்பிடுவதும், தனக்காக சில பொருட்களை வாங்கிக்கொள்வதும் எல்லாம்கூட சென்ற முப்பதாண்டுகளில் உருவான மனநிலைகள். அதாவது நரசிம்மராவின் சீர்திருத்தங்கள் உருவாக்கிய பொருளியல் வளர்ச்சியின் விளைவாக உருவானவை. நூற்றாண்டுப் பழமைகொண்ட நம் பதற்றங்கள் கொஞ்சம் குறைந்தன. [இன்று நம் ஆட்சியாளர்கள் மீண்டும் அந்தப்பதற்றத்தை நிறுவி விட்டிருக்கிறார்கள்]
ஒருவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும் பொறுப்பு இருக்கிறது. தன் மகிழ்ச்சியை தானே தேடி கண்டடைய, முயன்று வளர்த்துக்கொள்ள அவர் கடமைப்பட்டிருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சிறு தருணத்தைக்கூட தவற விட மானுடருக்கு உரிமை இல்லை. அது ஓர் ஒப்பந்தம், இயற்கையுடன் மானுடன் செய்துகொண்டது. அதை மீறுவது ஒரு துரோகம்.
ஆனால் இங்கே நாம் மகிழ்ச்சி தானாக நிகழவேண்டுமென நினைக்கிறோம். அதுவே நம்மில் வந்தமர்ந்து நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறோம். ஆனால் துக்கத்தின் சிறு விதை இருந்தால்கூட அதை பேணி வளர்த்து, மரமாக்கி, காடாக்கிக் கொள்வோம். ஒரு வாய்ப்பைக்கூட தவறவிடமாட்டோம். அதற்காகத் தேடிக்கொண்டே இருப்போம்.
அதற்காகவே வஞ்சங்களை, போட்டிகளை வளர்த்துக் கொள்வோம். எதிரிகளை உருவாக்கிக் கொள்வோம். எப்போதுமே அவர்களை நினைத்து எரிந்துகொண்டிருப்போம். கசப்புகள் ஒவ்வொன்றையும் நினைவில் வைத்திருப்போம். தனிவாழ்க்கையில் எதிரிகள் போதவில்லை என்றால் சமூகவலைத் தளங்களுக்குச் சென்று அங்கே ‘கருத்தியல்’ எதிரிகளை தேடிக் கண்டடைந்து கரித்துக் கொட்டி வெறுப்பிலாடுவோம். அதெல்லாம் உருப்படியான வேலை என்று நம்பவும் செய்வோம்.
மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மை மட்டுமே சார்ந்தது. இன்னொருவர் அளிப்பது அல்ல. மகிழ்ச்சிக்காக எவரையும், எதையும் நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை. எவர் தனிமையில், தானாகவே மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அவர்தான் உண்மையில் வாழ்கிறார்.
கலை, இலக்கியம் ஆகியவை அத்தகைய அந்தரங்க மகிழ்ச்சிகள். படைப்புச் செயல்பாடு எதுவும் மகிழ்ச்சியே. சேவை என்பது மகிழ்வூட்டுவது. மகிழ்ச்சியைப் பற்றிப் பேசிய அனைத்து ஞானியருமே கைகளால் எதையாவது செய்யுங்கள், மகிழ்ச்சிக்கு அது ஒரு பெரிய பாதை என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு கூடை பின்னுவது, ஒரு செடியை வளர்ப்பது, ஒரு பசுவை வளர்ப்பது- எதுவானாலும்.செயல்போல் நிறைவு வேறில்லை.
அந்த மகிழ்ச்சியை உணர்ந்தவர் எவரும் அது பணத்தால் அமைவதல்ல என அறிந்திருப்பார்கள். அதை அடைய மூன்று படிநிலைகள் உண்டு
அ.தன்னை அவதானித்தல். தனக்கு உண்மையில் எது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கண்டுபிடித்தல். வாசிப்பு, இசை, எழுத்து, பயணம், கைத்தொழில்கள், தோட்டம் உருவாக்குதல் எதுவாகவும் இருக்கலாம்.
சமீபத்தில் நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன் சொன்னார். அவர் ஒரு பசுக்கன்றை வாங்கி வளர்க்க ஆரம்பித்தார். அது அத்தனை தூரம் தன்னை மகிழ்விக்கும் என்று, தன்னை அன்றாடவாழ்க்கையில் அவ்வளவு நிறைவடையச்செய்யும் என்று அவர் எண்ணியிருக்கவே இல்லை. ”இத்தனைநாள் இதை இழந்துவிட்டேனே” என்றார். ”எல்லா தத்துவச் சிக்கலும் சரியாயிட்டது” என்று சிரித்தார்
ஆ. தன்னை வடிவமைத்தல். தனக்கு மகிழ்வளிப்பதை செய்வதற்குரிய சூழலையும் அதற்கான உளநிலையையும் உருவாக்கிக் கொள்ளுதல். அதற்காக முயல்தல். அதன்பொருட்டு நேரத்தை வசதிகளை கண்டடைதல்
இ. மகிழ்ச்சியை பேணுதல். தொடர்ந்து திட்டமிட்டு அதைப் பெருக்கிக்கொண்டே இருத்தல்.
மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பதற்கான தத்துவக் காரணங்களைச் சொல்பவர்கள் பலர் உண்டு. நான் நாற்பதாண்டுகளாக அவர்களில் பெரும்பாலும் எல்லா வகைமாதிரிகளையும் கண்டிருக்கிறேன். அவர்கள் தன்னகங்காரம் கொண்டவர்கள், தனக்குத்தானே நடிப்பவர்கள், தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்கள். அந்தப் பாவனைகள் வழியாக அவர்கள் தாங்கள் மிகமுக்கியமானவர்கள் என்று உணர்கிறார்கள். பிரபஞ்சதுக்கத்தின் அத்தனை விசையையும் தாங்கும் அச்சுக்கல் என எண்ணிக்கொள்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருக்க முதன்மைத்தேவை நாம் இங்கே அவ்வளவொன்றும் முக்கியமானவர்கள் அல்ல என்னும் அறிதல். நாம் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும், ஆனால் நாம் இங்கே எதற்கும் பொறுப்பு அல்ல. நம் தலைமேல் எதுவும் இல்லை. நம் இருத்தலென்பது நமக்கு மட்டுமே முக்கியம். நம்மை எவரும் பெரிதாக ஒன்றும் கருத்தில்கொள்வதில்லை.
ஒருவர் மெய்யாகவே துக்கத்தின் உச்சியை அடைந்தால் அங்கே இந்த உண்மை கண்முன் மலை போல நின்றிருக்கக் காண்பார். அக்கணமே விடுதலை அடைவார். நான் அவ்விடுதலையை அடைந்தேன்.
துக்கத்தைக்கொண்டே தனக்கான அடையாளத்தை தேடிக்கொள்பவர் ஒருவகையான நடிகர். பெரும்பாலும் புத்திசாலியான நடிகர். அவர் தனக்குத்தானே விவாதித்து நிறைய சொற்களைச் சேர்த்து வைத்திருப்பார். அவரிடம் பேச முடியாது. அவர் மெய்யான துக்கங்களை அடையவேண்டும் என வேண்டிக்கொள்ளலாம், அது அவருக்கு மெய்யான இன்பம் என்ன என்றும் காட்டும்.
இரு விதிவிலக்குகள் உண்டு. ஒன்று, நோய். உடலில் உருவாகும் நோயும் அதன் வதையும் நம்மை மீறியவை. அவற்றுக்கு எதிராக நாம் நம் ஆன்மவல்லமையை குவிக்கலாம். ஓர் எல்லைவரை அவற்றைக் கடந்துவரவும் முடியும். ஆனாலும் அது தூலமானது, மாற்றமுடியாது. அது ஊழ். ஊழை எதிர்கொள்வதொன்றே உயிர்களுக்கு வழி.
இன்னொன்று, உளச்சோர்வுநிலை. அதுவும் நோய்தான். அது ஒரு சுழல். அது துயரில் மகிழும் தலைகீழ் மனநிலையை உருவாக்குகிறது. உளச்சோர்வு நோய் கொண்டவர்கள் அதை பெருக்கிக்கொள்ளவே முயல்வார்கள். வெளியேறும் வழிகளை உள்ளிருந்து அவர்களே மூடிவிடுவார்கள்.
உளச்சோர்வுநோய் கொண்டவர்கள் அதற்கு வெவ்வேறு தத்துவ விளக்கங்களை அளிப்பார்கள். வாழ்க்கைப்பின்னணியைச் சொல்வார்கள். ஆனால் அதெல்லாமே நோயின் வெளிப்பாடுகள்தான். நோய் நோயேதான், வேறொன்றுமில்லை. மூளையின் ரசாயனங்களின் சிக்கலால்தான் பெரும்பாலும் உளச்சோர்வுநோய் உருவாகிறது. அரிதாக சிலவகை குற்றவுணர்ச்சிகளால்.
குற்றவுணர்ச்சியின் விளைவான உளச்சோர்வுநோயை அக்குற்றவுணர்ச்சிச்சூழலை விட்டு முற்றாக வெளியேறுதல், முற்றாக உள்ளத்தில் இருந்து அகற்றுதல் வழியாக கடக்கலாம். மூளைரசாயனச் சிக்கல்களுக்கு மருத்துவ உதவிதான் தேவை. எளிய பயிற்சிகள், சாதாரண மருந்துகளே மீட்டுவிடும் என்பதை திரும்பத் திரும்ப காண்கிறேன்.
குடும்பம்,குழந்தை ஆகியவற்றை ஏற்பதும் மறுப்பதும் ஒருவரின் தெரிவு. ஒருவர் குழந்தை வேண்டாம் என்கிறார் என்றால் அவர் அதைவிட கூடுதலான மகிழ்ச்சியை அடையும் வழியை கண்டடைந்திருக்கவேண்டும். மேலும் நிறைவு அவருக்கு நிகழ்ந்திருக்கவேண்டும். அவ்வாறென்றால் அது சரிதான்.
மகிழ்ச்சியே அளவுகோல். மகிழ்ச்சியில் உலகியல் மகிழ்ச்சி ஆன்மிக மகிழ்ச்சி என வேறுபாடில்லை. மகிழ்ச்சி தன்னளவிலேயே ஆன்மிகமானது. ஏனென்றால் ஒருவர் பிரபஞ்சம் என தன்னைச் சூழ்ந்திருக்கும் பிரம்மாண்டத்தில் இருந்து அள்ளி அள்ளி தன்னுள் நிறைத்துக்கொள்வது அது. அதுவே பிரம்மம். அதுவாதல் என வேதாந்தம் சொல்வது அதைத்தான்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers




