Jeyamohan's Blog, page 908

September 29, 2021

இன்றைய தற்கொலைகள்

அண்ணா,

மறுபடியும் ஒரு தற்கொலை நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமை என்பதைவிட அதனால் வரும் தோல்வி அந்த மாணவனுக்கு ஒரு விதமான பதட்டம் முக்கியமாக there is no plan B.

இதையும் அரசியலாக்கி மிக எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம். இதற்கு கூட்டு பொறுப்பாக முதலில் தாய் தந்தை, ஆசிரியர்கள் கடைசியாக சமூகத்தை பொறுப்பாக்கலாம்.

இங்கே சில சுட்டிகளை இணைத்திருக்கிறேன் ஜெ

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/jul/05/lockdown-effect-suicide-rate-remains-high-in-tamil-nadus-central-zone-2325790.html

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/oct/03/at-least-36-people-kill-themselves-in-tamil-nadu-every-day-shows-ncrb-data-2205367.html#:~:text=in%20the%20state.-,A%20total%20of%2013%2C493%20people%20killed%20themselves%20in%202019%20in,giving%20it%20a%209.7%25%20share.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/with-13896-deaths-tn-second-in-suicides/article30528007.ece

The male to female suicide ratio in 2019 was 70.2:29.8

However, if the rate of suicides (number of suicides per 1 lakh of population) is compared statewise, it shows the southern states have far higher rates of suicide than the northern ones.

Compare this to states such as Bihar, Uttar Pradesh and Jharkhand — among the poorest in the country. At 0.5, Bihar has the lowest suicide rate in the country among states. UP recorded a suicide rate of 2.4 and Jharkhand 4.4.

அடிப்படையாகவே  தமிழ் நாட்டின் மக்கள் பலவீனமானவர்கள் என்பது புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தெளிவாகிறது .

குறிப்பாக தெற்கு மாநிலங்களில் அதிகம் என்கிறது.  தெற்கு மாநிலங்களில் தான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிப்பின் மீது பெரும் மோகம்கொண்டு திணிக்கிறார்கள் . so பெற்றோர்கள் தான் almost தொண்ணூறு சதம் இந்த பொறுப்பை தூக்கி சுமக்க வேண்டும்.

அதற்கு நிச்சயம் அவர்கள் போலிப் பாவனைகள்   இடம் கொடுக்காது. அதனால் அரசியலாக்கி தாங்கள் பொறுப்பல்ல என்று திரும்ப திரும்ப தங்களுக்கே சொல்லி கொள்கிறார்கள் .

அன்புடன்
பன்னீர் செல்வம் ஈஸ்வரன் 

***

அன்புள்ள பன்னீர்செல்வம்

இந்தச் சூழலில் இதைப்பற்றிப் பேசுவதில் ஒரு சிக்கல் உள்ளது. நம் பொதுக்களத்தில் உள்ள அத்தனை விவாதங்களும் அன்றைய செய்தியைச் சார்ந்தவை. அன்றைய தலைப்புச்செய்தியை ஒட்டி தங்கள் அரசியலையும் சார்புகளையும் முன்வைத்து, எதிரிகளை வசைபாடி முடித்துவிடுவதே இங்கே விவாதமென நிகழ்கிறது. இச்சூழலில் எதைப்பேசினாலும் அப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் விவாதங்களின் ஒரு பகுதியாக அக்கருத்து ஆகிவிடுகிறது. எதிர்வினைகளும் அந்த நிலையில் இருந்தே வருகின்றன. எவருமே பொருட்படுத்தி யோசிப்பதில்லை. இக்காரணத்தால் நான் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதில்லை. கொஞ்சம் காலம் கடந்து, அதன்பின்னரும் அந்த விஷயத்தில் ஆர்வம் நீடிப்பவர்களிடம் மட்டுமே பேச விரும்புகிறேன்.

தமிழகத்தை விட கேரளமே தற்கொலையில் முன்னிற்கும் மாநிலம். கேரளம் இந்தியாவிலேயே கல்வியறிவு மிக்க மாநிலம். பொருளியல்நிறைவு கொண்ட மாநிலம். பண்பாட்டுச்செறிவும் இலக்கியமும் தொடர் அரசியல் விழிப்புணர்வும் கொண்ட மாநிலம். ஆனால் அதுவே இந்தியாவில் தற்கொலையில் முதலிடம். ஏன்? இன்று உளச்சோர்வும் தற்கொலை என்பது நவீனமயமாதலின் ஒரு உடன்விளைவாக உள்ளன. பொருளியல் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் அடையுந்தோறும் உளச்சோர்வும் தற்கொலையும் பெருகுகிறது. தமிழகத்திலும் நிகழ்வது அதுவே.

தற்கொலையை ஒரு ஓர் அபூர்வமான மானுடநிகழ்வாகக் கொள்ளவேண்டியதில்லை. வெவ்வேறுவகையில் மானுட வரலாறு முழுக்க தற்கொலை இருந்துகொண்டிருக்கிறது. சென்ற யுகத்தில் தற்கொலை என்பது சமூகக் கூட்டுநலனுக்காக மேற்கொள்ளப்பட்டது. சமூகமே அதைநோக்கி மானுடரை உந்தியது. அந்த தற்கொலைகள் போற்றிக் கொண்டாடப்பட்டன. போர்களில் தற்பலி கொடுப்பவர்கள், அரசனுக்காகவும் தெய்வத்திற்காகவும் ‘இட்டெண்ணி தலைகொடுப்பவர்கள்’ பெருவீரர்களாக நிலைநிறுத்தப்பட்டனர். பெண்கள் நீரிலும் எரியிலும் புகுதல் போற்றப்பட்டது. துறவியர் உண்ணாநோன்பிருந்தும் புனிதநீரில் மூழ்கியும் மறைதல் சிறப்பான முடிவென கொள்ளப்பட்டது. தமிழகம் முழுக்க நாம் நவகண்டம் என்னும் தற்பலி கொடுத்துக்கொண்டவர்களின் சிலைகளைக் காண்கிறோம். நம் நாட்டுப்புறத் தெய்வங்களில் கணிசமானவை தற்கொலை செய்துகொண்டவர்கள்.

அந்த மனநிலைக்கு இன்றும் மதிப்புள்ளது. புரட்சிப்படையினரில் தற்கொலை அணியினர் பெருவீரர்களாகக் கருதப்படுகின்றனர். பெரும்பாலான புரட்சிவீரர்கள் ஒருவகை தற்கொலை மனநிலையுடன் செயலில் இறங்கி உயிர்நீத்தவர்களே. பொதுவான சமூகநோக்கத்துடன் தற்கொலை செய்துகொண்டவர்களை நாம் இன்றுகூட கொண்டாடுகிறோம். மொழிப்போர் தியாகிகளில் தொடங்கி வெவ்வேறு நிகழ்வுகளில் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கான நினைவிடங்கள் இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை. தற்கொலை செய்துகொண்ட தொண்டர்களை கட்சிகள் போற்றிப்புகழ்கின்றன. அவர்களை உரிமைகொண்டாட போட்டியிடுகின்றன. அவர்களின் குடும்பங்களுக்கு நிதி அளிக்கின்றன. அவர்களின் தற்கொலையின் தேவை பற்றி ஐயம்கொள்வதே அவமதிப்பாக கருதப்படுகிறது.

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் தற்கொலை இன்னொரு அர்த்தத்தை அடைந்துள்ளது. சென்ற யுகத்து மனிதனுக்கு திட்டவட்டமான தனியாளுமை இல்லை. ’நான்’ என அவன் நினைப்பது அவனுடைய குடியாலும் இனக்குழுவாலும் மதத்தாலும் சமூகத்தாலும் உருவான ஓர் திரள்அடையாளத்தையே. அவன் அவனும் உட்பட்ட திரளின் ஒரு பகுதி. அந்த குடும்பம், இனக்குழு, அல்லது சமூகம் அவனை முழுமையாக வடிவமைத்து வாழ்நாள் முழுக்க கட்டுப்படுத்தியது. அவனும் தன்னை அந்த குழுவாகவே எண்ணிக்கொண்டான். அவனுடைய கேள்விகளுக்கு அத்திரளின் பொதுவான பதில்களே ஏற்புடையவையாக இருந்தன. அவனுடைய இலக்குகளை அத்திரளே தீர்மானித்தது. அவனுடைய  தெரிவுகள் முடிவுகள் அனைத்துக்கும் அதுவே பொறுப்பேற்றுக்கொண்டது

ஆனால் இன்றைய  நவீனயுகத்து வாழ்க்கையில் மனிதன் தனியாளுமையாகவே கருதப்படுகிறான். அவ்வாறே வாழ்கிறான். அவனுடைய செயல்கள் எல்லாம் அவனுடைய தனியாளுமையின் வெற்றிக்காகவும் நிறைவுக்காகவும் மட்டுமே. அவன் தனக்கான எல்லா முடிவுகளையும் அவனேதான் எடுக்கவேண்டும். தானே அதற்குப் பொறுப்பாகவேண்டும். அவனுடைய வெற்றியும் தோல்வியும் அவனுடையவை மட்டுமே.இது பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாகிய ஒரு தத்துவப்போராட்டத்தின் விளைவு. Free will movement என அதைச் சொல்கிறார்கள். தன் வாழ்வை, தன் மீட்பை தானே முடிவுசெய்வதற்கான சுதந்திரத்திற்கான போராட்டம் அது. அதை முந்நூறாண்டுகளில் மானுடம் அடைந்தது. நாம் அந்த சுதந்திர யுகத்தில் வாழ்கிறோம்.

ஆனால் சுதந்திரம் என்பது பொறுப்பும்கூட. பொறுப்பு பெரும் பதற்றத்தை அளிக்கிறது. நாம் நம் வாழ்க்கையை முழுதாக அறிவதற்கு முன்னரே அதைப்பற்றிய உறுதியான ஒரு முடிவை எடுத்தாகவேண்டியிருக்கிறது. நமக்கு சமூகம் பற்றியோ, வரலாறு பற்றியோ ஒன்றுமே தெரியாமலிருக்கையிலேயே எல்லா முடிவுகளையும் எடுத்தாகவேண்டியிருக்கிறது. அம்முடிவுக்கான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இங்கிருந்து தொடங்குகிறது இந்த யுகத்தின் எல்லா சிக்கல்களும்.இதைத்தான் angst என்று இருத்தலியலாளர் சொல்கிறார்கள். பறதி என்பது இதற்கான தமிழ்ச்சொல். மார்ட்டின் ஹைடெக்கர் முதல் சார்த்ர் வரை இதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். இன்று தற்கொலை என்பது இந்த பறதியின் விளைவாக நிகழ்கிறது. Free Will இயக்கத்தின் இயல்பான விளைகனியே existentialism.

இன்று சமூகத்தின் இயல்பும் இடமும் மாறிவிட்டிருக்கிறது. நேற்று அது உருவாக்கி, வழிகாட்டி, ஆட்கொண்டு, தப்பவிடாமல் கட்டி கொண்டுசெல்லும் ஒரு பேரமைப்பு. பொறுப்பேற்றுக்கொள்ளும் தெய்வம். இன்று அது போட்டிக்களத்தை உருவாக்கி அளித்துவிட்டு ஒதுங்கிநின்று தீர்ப்புசொல்லும் நடுவர். வென்றால் கொண்டாடுவதும் தோற்றால் இழிவுசெய்வதும் அதன் இயல்புகள். தோல்வியுற்றவர்களை மிதித்துக்கொண்டு வென்றவர்களை முன்னெடுத்தபடி அது வரலாற்றில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இங்கே ஒவ்வொருவரும் அந்தச் சமூகப்பார்வையைத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே ஒவ்வொன்றையும் செய்கிறார்கள். தெய்வத்துக்கு நிகரான இடம் அதற்கு இன்று உள்ளது. எல்கேஜியில் பையன் முதலிடம் வராவிட்டால் “வெளியே தலைகாட்ட முடியாது” என்று நம்மவர் மனம் புழுங்குகிறார்கள். குழந்தைகள் ‘நாலுபேர்’ மெச்சும்படி பெரிய இடத்தில் இருந்தாகவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதன்பொருட்டே எல்லா போட்டியும்.

எண்ணிப்பாருங்கள், இன்று நமக்கு நினைவு தெரியும்போதே சமூகம் அறிமுகமாகிவிடுகிறது. அது உருவாக்கி அளிக்கும் போட்டிக்களத்தை நம் பெற்றோர் நமக்கு பழக்கப்படுத்துகிறார்கள். எல்கேஜி நிலையிலேயே நாம் போட்டிபோட ஆரம்பிக்கிறோம். எல்கேஜியிலேயே வெற்றியின் இனிப்பையும் தோல்வியின் கசப்பையும் அறிய ஆரம்பிக்கிறோம். அந்த ஓட்டம் முடிவதே இல்லை. இந்த ஓட்டத்தின் வெற்றிதோல்விகளே நம் வாழ்க்கையின் சாராம்சமாக, விழுப்பொருளாக ஆகிவிட்டிருக்கின்றன.

நேற்றைய சமூகம் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு விழுப்பொருட்களை நமக்கு அளித்தது. [தர்ம, அர்த்த, காம, மோட்சம்] அறம் என்பது நம் சமூகத்துடனும், இயற்கையுடனும், இங்கு நிகழும் வாழ்வுடனும் இசைந்து போதல். அவற்றின் இயல்பான கூறாக இருத்தல். அந்நிலையில் நாம் ஆற்றவேண்டியவற்றை ஆற்றுதல்.  அவற்றின் நெறிகளே அறம். அவற்றை அறிந்து இயைந்து ஒழுகுபவனே உண்மையாக வாழ்பவன். பொருள் என்பது அந்த அறத்தின் எல்லைக்குள் நின்றபடி இவ்வுலகில் ஈட்டிக்கொள்ளும் உலகியல் நன்மைகள்ளான அதிகாரம், செல்வம், போகம் போன்றவை. காமம் என்பது நாமே நமக்கென அடையும் அக இன்பங்கள். ஒரு கட்டத்தில் இம்மூன்றையும் விட்டுவிட்டு நாம் அடையும் முழுமையே வீடு.

இன்று அர்த்தமும் காமமும் மட்டுமே விழுப்பொருள் என இச்சமூகம் நமக்குக் கற்பிக்கிறது. உண்மையில் பொருள் ஒன்றே விழுப்பொருள் எனச் சொல்லித்தருகிறது. காமம் என்பது அதன் வழியாக நாம் அடையும் லாபம். இதை நாம் நம் குழந்தைகளுக்கு அளிக்கிறோம். மிக இளமையிலேயே அவர்களுக்கு உலகியல் இலக்குகளை அளித்துவிடுகிறோம். அவர்கள் தங்கள் இயல்பென்ன, தங்கள் ருசிகள் என்னென்ன, தங்கள் திறன்கள் என்ன என்று அறிவதற்குள்ளாகவே அந்த இலக்குகள் அவர்களுக்குரியவையாக வகுக்கப்பட்டுவிடுகின்றன. அவர்கள் அதற்காக மிகமிகக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அவர்களின் இளமைப்பருவமே அதற்காகச் செலவிடப்படுகிறது. அவர்களுக்கு இளமையின் கொண்டாட்டங்களே இல்லை. அவர்கள் வாழ்வதே இல்லை. அவர்கள் போட்டியில் ஓடிக்கொண்டே இளமையைக் கடந்துவருகிறார்கள்.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். இலட்சியம் வேறு, இலக்கு வேறு. இலட்சியம் என்பது ஒருவன் தன் இயல்பென்ன என அறிந்து, அதற்கேற்ப கண்டடையும் ஒரு செல்வழி. சென்றடையும் இடம் அதில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருப்பதில்லை. செல்லும் திசை மட்டுமே அவனால் கண்டடையப்படுகிறது. அவன் மேம்படுத்திக்கொண்டபடியே சென்று ஓர் நிறைவுப்புள்ளியை அடையலாம். ஆனால் அது மெய்யான இலட்சியம் என்றால் செல்லும் வழியில் ஒவ்வொரு இடத்திலும் அவன் அதற்குரிய நிறைவை, வெற்றியை அடைந்துகொண்டேதான் இருக்கிறான். ஆகவே ஒவ்வொருநாளும் அது மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அதில் ஏமாற்றமே இல்லை. எங்கே சென்று நின்றாலும் அதுவே அவனுக்கான உச்சப்புள்ளி. இலட்சியவாதம் என்பது அந்தப்பயணம்தான்.

ஆனால் இலக்கு என்பது ஓர் உலகியல் சார்ந்த இடம் அல்லது பெறுபொருள். அதை அடையாவிட்டால் அதுவரையிலான பயணமே வீண்தான். வாழ்க்கையில் இலக்கு கொண்டவர் வேறு, இலட்சியவாதி வேறு. இலட்சியவாதிக்கு சோர்வுக்கணங்கள் இருக்கலாம், வெறுமையுணர்வு இருக்காது. இலக்கு கொண்டவர்கள் எய்தாவிட்டால் வெறுமையை அடையவேண்டியிருக்கும். எய்தினாலும் தற்காலிக நிறைவுக்குப்பின் அடுத்த இலக்கு தேவைப்படும்.

நான் இப்போது வரும் பல இளைஞர்களை கூர்ந்து பார்க்கிறேன். அவர்கள் அனைவரையுமே ஒரே சொல்லில் ’இளமையை இழந்தவர்கள்’ என்று வரையறை செய்வேன். அவர்களுக்கு இளமை என்பது மிகக்கடுமையான கல்விப்பயிற்சி மட்டும்தான். விளையாட்டேகூட இளமையில் ஒருவகை கல்விதான். இவர்களுக்கு விளையாட்டும் வெறும் போட்டிதான். ஆகவே கற்பதிலுள்ள இன்பத்தை அவர்கள் அறிந்ததே இல்லை. கல்வி என்பது போட்டி என்று ஆகிவிடும்போது கல்வியில் மகிழ்ச்சியே இருப்பதில்லை.

அவர்களை ‘இலக்கு கொண்டவர்கள் ஆனால் இலட்சியவாதம் என்பதையே அறியாதவர்கள்’ என அடுத்தபடியாக வரையறைசெய்வேன். ஆகவே அவர்களுக்குச் செயல் என்பதிலுள்ள நிறைவும் மகிழ்வும் தெரிந்திருப்பதே இல்லை. அவர்கள் எப்போதுமே பதறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இளமையிலேயே பெரிய இலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் அந்த இலக்கை தவறவிட்டதைப் பற்றி வருத்ததுடன் சொல்கிறார்கள். ஐஐடி படிப்பு, மருத்துவப்படிப்பு இப்படி எதையாவது. மிகப்பெரும்பான்மையினர் தங்கள் வாழ்க்கை எப்போதைக்குமாக பாழாகிவிட்டது என்னும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆட்சிப்பணித் தேர்வில் தோல்வியடைந்த சிலரை எனக்கு தெரியும். அரசுப்பணியில் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் வாழ்க்கை ஒரு பெருந்தோல்வி என்னும் எண்ணத்திலேயே நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பேச ஆரம்பித்தாலே அதைத்தான் சொல்வார்கள்.

இன்று பத்துபேர் தற்கொலை செய்துகொண்டால் ஆயிரம்பேர் கடுமையான உளச்சோர்வில் தற்கொலையின் மிக அருகே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தற்கொலை பற்றி கற்பனை செய்தபடி, அந்த விளிம்பிலேயே நிரந்தரமாக வாழ்கிறார்கள். அவ்வாறு வாழவைப்பவை இன்றைய மாத்திரைகளும் போதையும்தான். அந்த சோர்வுக்குக் காரணம் உலகியல் இலக்குகளும் அதைநோக்கியே வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பதும்தான். இலக்குக்காகவே வாழ்பவர்கள் மற்ற அனைத்தையும் அதன்பொருட்டு இழக்கிறார்கள். அதை அடையவில்லை என்றால் வாழ்க்கையை இழந்ததாக உணர்கிறார்கள்.

இலக்கு ஒன்றுக்காகவே வாழ்க்கையைச் செலவிடுபவர்கள் தங்கள் இயல்பென்ன, சுவை என்ன என்று கண்டுகொள்வதில்லை. ஆகவே தங்களை மகிழ்விக்கும் எதையுமே அவர்கள் அறிந்திருப்பதில்லை. தங்களுக்குரிய அகப்பயணம் எதுவுமே அற்றவர்களாக இருப்பார்கள். அத்துடன் கற்பதன் இன்பம் இல்லாத ஒரு தளத்தில் நீண்டநாட்கள் முழு மூளையையும் செலவிடுபவர்களுக்கு நரம்புரீதியாகவே கூட ஏதாவது பாதிப்புகள் இருக்கலாமென எனக்கு தோன்றுகிறது. ஆகவே அவர்கள் மிக இயல்பாக உளச்சோர்வுக்குச் செல்கிறார்கள்.

இன்றைய உலகில் உளச்சோர்வு [Hyper Depression] நோய்க்கு ஆளாகிறவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் உயர்குடியினர் மற்றும் உயர்நடுத்தர குடியினர். பெரும்பாலானவர்கள் நல்ல கல்வி பெற்று மற்றவர் பார்வையில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கென வைத்துக்கொண்ட இலக்கை அவர்கள் எட்டியிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் போட்டியாளர்களாக நினைப்பவர்கள் அவர்களை விட முந்திவிட்டதாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். இலக்கு ஒன்றுக்காகவே வாழ்வதனால் அவ்விலக்கு தவறுகிறது என்னும்போது வாழ்க்கை வெறுமையாகிவிட்டதாக உணர்கிறார்கள்.

அடுத்தபடியாகத்தான் மாணவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் உச்சகட்ட இலக்கே ஒரு தேர்வு, ஓர் இடம்தான் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் முழுமூச்சாகச் செயல்படவேண்டும் என்பதற்காக அதை மீண்டும் மீண்டும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி அவ்வெண்ணத்திலேயே வளர்க்கிறார்கள். அதை இழந்தால் எஞ்சுவதொன்றும் இல்லை என்று அவர்களுக்குச் சொல்பவர்கள் பெற்றோர்தான். பெரும்பாலானவர்கள் சமூகத்தின் கண்ணில் தாங்கள் வெற்றிபெற, தங்கள் குழந்தைகள் சமூகத்தை வெற்றிபெற இதைச் செய்கிறார்கள்.

இலக்குகள் கொண்டிருப்பவர் அனைவரும் அவ்விலக்கை அடையமுடியாது. தகுதி மற்றும் உழைப்பு போன்றவை ஒருபக்கம் இருக்க, வெறும் சந்தர்ப்பசூழலே கூட அதைத் தீர்மானிக்கும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இடங்கள் வரையறை செய்யப்பட்டிருக்கையில் மயிரிழையில் வாய்ப்பு தவறுவது மிக இயல்பு. அந்நிலையில் வெல்பவர்களைவிட தோற்பவர்களே மிகுதியாக இருப்பார்கள். வெறுமையை அடைந்து உயிரை மாய்த்துக்கொண்டால் அதற்கு முழுப்பொறுப்பும் அந்த பெற்றோரே. அருண்மொழி மருத்துவ நுழைவுத்தேர்வில் ஒரு மதிப்பெண் வேறுபாட்டில் தோற்றபோது தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லியிருக்கிறாள். பதினேழு வயதில். இன்று அதை எண்ணினால் அவளுக்கு சிரிப்புதான் வரும்.

பள்ளிநாட்களில் இலக்குகள் தேவைதான். அவை நம் முயற்சியை ஒருங்கிணைக்கும் என்பதும் உண்மைதான். இன்றைய வாழ்க்கை போட்டிமிக்கதாக இருப்பதனால் போட்டியைச் சந்திக்கும்பொருட்டு கடுமையான பயிற்சி எடுத்துக்கொள்வதையும் தேவையில்லை என்று சொல்லமாட்டேன்.வேறு வழியில்லை. ஆனால் அதன் எல்லைகளை நாம் உணர்ந்திருக்கவேண்டும், இச்சமூகம் அதை குழந்தைகளுக்குச் சொல்லவேண்டும். பெற்றோருக்கும் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

சமூகம் போட்டியை உருவாக்கி தீர்ப்பளிக்கும் இரக்கமற்ற அமைப்பாக மட்டும் நின்றுவிடலாகாது. கொஞ்சமேனும் அரவணைக்கும்தன்மையும் அதற்குத்தேவை. உலகியல் இலக்குகளே ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. உலகியல் இலக்குகளில் வென்றவர்கள் எல்லாவற்றையும் அடைந்தவர்கள் அல்ல. தவறியவர்கள் எல்லாவற்றையும் இழந்தவர்களும் அல்ல. உலகியல் இலக்குகள் உலகியல் சார்ந்தவை மட்டுமே. அவை நான்கு விழுப்பொருட்களில் ஒன்றான ‘பொருள்’ என்னும் எல்லைக்குள் மட்டுமே நிற்பவை. பொருள் மட்டுமே வாழ்க்கை அல்ல. பொருள் இவ்வுலக வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கியமான இடம் வகிக்கிறது. ஆனால் அதன் பொருட்டு மற்ற மூன்றையும் இழந்தால் பொருளாலும் பயனில்லாமல் ஆகும்.

பொருள் மட்டுமே வாழ்க்கை என்று தன் குடிகளுக்குக் கற்பித்தது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய- அமெரிக்கச் சமூகம். அதன் விளைவாக பொருளியல்வெற்றி பெற்ற சமூகமாக அது ஆகியது. அதன்பொருட்டு அது ஒவ்வொரு தனிமனிதரையும் பொருள்வேட்டையாடுபவராக ஆக்கியது. அவ்வேட்டையில் ஆயிரம்பேர் கலந்துகொண்டால் ஒருவரே வெல்லமுடியும் என்னும்போது எஞ்சிய அனைவருக்கும் தோல்வியின் வெறுமையையே அதனால் அளிக்கமுடியும்.  அந்த அமைப்பின் பின்விளைவே உளச்சோர்வு. உலகிலேயே அதிகமாக உளச்சோர்வு மாத்திரைகளை உண்ணும் சமூகங்கள் அவை. உளச்சோர்வு மாத்திரை உற்பத்தி உலகின் மாபெரும் வணிகமாக ஆகிவிட்டிருக்கின்றது.

உளச்சோர்வு மற்றும் தற்கொலை நோக்கிக் கொண்டுசெல்வதில் பொருளுலகின் இலக்கு நோக்கிய போட்டிக்குச் சமானமான இடம் இன்று அகவுலகின் உறவுச்சிக்கல்களுக்கு உள்ளது. தமிழகத்தைவிட கேரளத்தில் இந்த அம்சம் மிக அதிகம். அகவுலகிலுள்ள உறவுகள் என்பவை ஒட்டுமொத்தமாக  இன்பம் அதாவது காமம் என்னும் சொல்லுக்குள் அடங்குபவை. எல்லா உறவுகளும்தான். அவை இனியவை, மனிதனுக்கு இன்றியமையாதவை. ஆனால் அவை வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியே. அது இளமையில் தெரிவதில்லை. பலருக்கு முதுமை வரை புரிவதில்லை.

காதல், அன்பு என்பவை போன்றவை ஆழமான உணர்வுகள். ஆனால் மிகமிகக் குறுகிய எல்லைக்குள் மட்டுமே நின்றிருப்பவை. அந்த எல்லைக்கு வெளியே அவற்றுக்கு  எந்த மதிப்பும் இல்லை. அந்த எல்லைக்குள் நின்றிருக்கையில் அவையே வாழ்க்கையின் எல்லாமும் என்று தோன்றும். மிக உச்சகட்டமாக நாம் சொல்லும் பெற்றோர்பாசம் கூட மிகமிக எல்லைக்குட்பட்ட எளிமையான உணர்வுதான். ஒரு மனிதன் அன்புக்காக, காதலுக்காக, பாசத்துக்காக மட்டுமே வாழ்ந்தான் என்றால் அவன் மிகமிகச் சிறிய மனிதன். எந்த உறவாவது ஒரு மனிதனை முற்றிலும் கட்டிப்போடும் என்றால், எந்தப் பிரிவாவது மூன்றுமாதங்களுக்கு மேல் ஒருவனை சோர்வில் ஆழ்த்தும் என்றால் அவன் மிகமிகமிகச் சிறிய வாழ்க்கை வாழ்பவன்.

இன்றைய சூழலில் நாம் எடுக்கும் ஓர் இரட்டைநிலைபாடு அடுத்த தலைமுறையிடம் பெரும்குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. சென்றகாலகட்டத்தின் உளநிலைகளின் நீட்சியாக நாம் அவ்வப்போது தற்கொலைகளைக் கொண்டாடுகிறோம். நீட் தற்கொலையை ஓர் அரசியல்நிகழ்வாக ஆக்குகிறோம். ஈழத்துக்காக ஒரு பெண் எரிபுகுந்தால் அவளை கிட்டத்தட்ட தெய்வமாக ஆக்குகிறோம். மறுபக்கம் ஒரு மாணவர் இலக்கை தவறவிட்ட சோர்வில் தற்கொலை செய்துகொண்டால் அது பெரிய பிழை என்கிறோம். இளையோருக்கு அந்த வேறுபாடு தெரிவதில்லை.

ஒரு சூழலில் எது மையப்பேசுபொருளாக உள்ளதோ அது அனைத்து தனியுள்ளங்களையும் ஆட்கொள்கிறது. ஒரு பண்பாட்டுச்சூழல் தற்கொலை பற்றிப்பேசிக்கொண்டே இருந்தால் உளச்சோர்வில் இருப்பவருக்கு இயல்பாக தற்கொலை எண்ணம் வருகிறது. கொலையை போற்றி ஆர்வத்துடன் பேசிக்கொண்டே இருக்கும் சமூகத்தில் ஒர் எளிய தூண்டுதலிலேயே கொலை நடக்கிறது. தென்மாவட்டங்களில் இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் எந்த டீக்கடையிலும் கொலைதான் பேசுபொருளாக இருக்கும். அன்றாடம் கொலை விழுந்தபடியும் இருக்கும்.

தற்கொலைகள் நிகழும் குடும்பங்களைப் பார்த்தால் அங்கே முன்னரும் தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். உதாரணம் என் குடும்பம். குடும்பச்சூழலிலேயே தற்கொலை பற்றிய பேச்சு இருந்துகொண்டிருப்பதே காரணம். ஆகவே தற்கொலையை எதன்பொருட்டும் விதந்தோதுவதை தவிர்க்கவேண்டும். தற்கொலை செய்துகொள்வது அனுதாபத்தை கொண்டுவரும் என தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணும் சூழலே தற்கொலைகளை நிறைய நிகழச்செய்கிறது. தற்கொலையை முன்வைத்து செய்யப்படும் அரசியல், தற்கொலையை வைத்து நிகழ்த்தப்படும் சமூக ஆய்வுகள் எல்லாமே தற்கொலைக்கான தூண்டுதல் காரணங்களே.

என் வாழ்க்கையின் பின்னணியில் பார்த்தால் தற்கொலைசார்ந்த கதைகளை அதிகமாக எழுதியிருக்கவேண்டியவன் நான். என் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டவர்கள். நானும் தற்கொலை மனநிலையுடன் இருந்திருக்கிறேன். ஆனால் என் எழுத்தில் நான் கண்டவற்றைப் பற்றியே எழுதுகிறேன்.

என் நோக்கில் தற்கொலை என்பது பாவம் ஒன்றும் அல்ல. அது ஒரு வீண்செயல். உற்றாருக்கு மீளாத்துயரை அளிப்பது. அதற்கு எவருக்கும் உரிமை இல்லை. என் பெற்றோர் எனக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்தார்கள் என்றே இன்று உணர்கிறேன். இன்று அவர்கள்மேல் எனக்கு பெரிய அன்போ அனுதாபமோ இல்லை.  தற்கொலை ஒரே ஒரு தளத்தில்தான் ஏற்றுக்கொள்ளத் தக்கது. ஒரு மெய்யறிவர் தன் வாழ்க்கையை நிறைவு என உணர்ந்து, உடலை முடிவுக்குக் கொண்டுவருவது. அது சமணம், பௌத்தம், இந்து மதங்களிலுள்ள வழக்கம். அது தற்கொலை அல்ல,உடல்நீப்பு.

இன்றைய சூழலில் பொருளும் காமமும் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று சொல்லிக்கொண்டே இருப்பதொன்றுதான் வழி. அறம் என்று நூல்கள் சொல்வது ஒருவன் தன் வாழ்நாளில் கடைக்கொள்ளவேண்டிய மேலும் பெரிய பணிகளும் பொறுப்புகளும் அடங்கியது. இப்பிரபஞ்ச இயக்கத்தில் இசைவுகொண்டு, இங்கே தான் ஆற்றியே ஆகவேண்டிய செயல்களை ஆற்றுவது அது. சமூகப்பணி, அறிவுப்பணி, அதற்கும் அப்பால் செல்லும் பணிகள் பல இங்குள்ளன.

அவற்றில் இருந்து நம்மை விலக்கி பொருளிலும் காமத்திலும் மட்டுமே நிலைநிறுத்துவது நம் ஆணவம் மட்டுமே. வெல்லவேண்டும், பிறர்மேல் செல்வாக்கு செலுத்தவேண்டும், உடைமையுடன் இருக்கவேண்டும் என நம்மை ஆட்டுவிக்கும் விசை ஆணவமே. ஒருவன் ஒரு பாறையுச்சியில் நின்று தன்னைச் சுற்றியுள்ள காட்டை ஆணவத்தை சற்றேமறந்து நோக்கினான் என்றால்கூட இங்கே என்ன செய்கிறேன், எவ்வளவு அபத்தமாகத் துருத்திநிற்கிறேன் என உணர்வான். அந்த பெருவெளியுடன் இசைவுகொள்ள அவனுடைய அகம் துடிப்பதை உணர்வான். அவன் தன்னுடைய அகம்நாடும் செயல் வழியாகவே அதை அடையமுடியும் என்றும் உணர்வான்.அதுவே மெய்யின்பம். பொருள் இன்பம் எல்லாம் அதற்கு அடுத்தபடியாகத்தான் முக்கியமானவை. அந்த அறத்தை இயற்றத் தேவையான துணைகள் அவை.

அத்துடன், அனைத்தையும் கடந்துசென்று அடையும் முழுமை என ஒன்று உண்டு என நம் முன்னோர் ஈராயிரமாண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை வாழ்வில் திளைக்கையில் உணரமுடியாது. வாழ்வு நிறைகையில் அது நம் முன் வந்து உண்மை என தன்னைக் காட்டும். அப்போது அதை தவிர்க்கலாகாது. நம்முடைய எளிய தன்னலங்களும் ஆணவங்களும் அதற்குத் தடையாக ஆகக்கூடாது.

உண்மையில் தொல்பழங்காலம் முதல் இருந்துவரும் ஒரு மெய்யறிதலையே நாம் உணர்ந்து அடுத்த தலைமுறைக்கும் சொல்லவேண்டியிருக்கிறது. அது மனிதவாழ்க்கையின் விழுப்பொருள் ஒன்றல்ல, நான்கு என சொல்கிறது. இங்குள்ள நுகர்வுக்கலாச்சாரம், பொருளியல் முறைமை, அரசியல்கோட்பாடுகள் அனைத்துமே அதற்கு எதிரானவை. இங்குள்ள எல்லா ஊடகங்களும் நுகர்வுக்கலாச்சாரத்தை, போட்டிப்பொருளியலை, ஆதிக்க அரசியலையே சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதற்கு மாற்றாக சொல்லப்படும் எல்லாவற்றையும் இழிவுசெய்து கேலிசெய்து ஒதுக்கிக் கொண்டிருக்கின்றன.

ஏனென்றால் வெறிகொண்ட நுகர்வோராக, அதன்பொருட்டு கண்மூடித்தனமாக உழைப்பவராக, அதற்குரிய அரசியலை நம்புபவராக ஒவ்வொருவரையும் ஆக்குவதே அவற்றின் நோக்கம். அதனால் உளச்சோர்வடைந்து உடைபவர்கள் அச்சுழற்சி உருவாக்கும் வெறும் குப்பைகள், அவர்கள் அள்ளி அப்பாலிடப்படுவார்கள். சுழற்சி நடந்துகொண்டே இருக்கும். அதற்குரிய எல்லா கொள்கைகளும் கோட்பாடுகளும் அந்த அமைப்புகளால் சமைக்கப்படுகின்றன.

உண்மையில் இலக்கியங்களே கூட அத்தகைய நுகர்வுமனிதனை , உழைப்பு மனிதனை, அரசியல்மனிதனை, தனித்த மனிதனை உருவாக்கும் பொருட்டு செயற்கையாக படைக்கப் படுகின்றன. உயர்தர இலக்கியமேகூட இந்த பேரமைப்புகளால் மறைமுகமாக உருவாக்கப்படுகிறது. சென்ற நூறாண்டுகளில் மனிதனை தனிமையானவனாக கட்டமைக்கும் இலக்கியங்கள் முன்னிறுத்தப்பட்டன. அவை பரிசும் புகழும் பெற்று ஒவ்வொருவர் கைக்கும் வந்து சேர்ந்தன.

சென்ற நூறாண்டுகளில் புகழ் வழியாக நமக்கு கிடைத்த இலக்கியங்களை எண்ணிப்பாருங்கள். அவை மதம், ஆன்மிகம், இலட்சியவாதம் எல்லாவற்றையும் மறுத்து எள்ளிநகையாடின. குடும்பம், காதல், காமம் உறவுகள் அனைத்தையும் எளிய நுகர்வின்பங்களாக கட்டமைத்தன.நம் சிந்தனையை அவை இன்றும் ஆள்கின்றன. நாம் சொந்தச்சிந்தனை என நினைப்பவை பெரும்பாலும் இவ்வாறு நமக்கு அளிக்கப்ப்பட்டவை மட்டுமே.இன்றைய உலகின் உளச்சோர்வை உருவாக்கியதில் அந்த இலக்கியங்களுக்கு மிகமுக்கியமான பங்குண்டு.

அவ்வாறு ஊடகங்கள் வழியாக வந்துசேர்வனவற்றை விமர்சனமே இல்லாமல் ஏற்று, நம்பி, எங்கும் வந்து அதைச்சொல்லி இளிக்கும் பெருந்திரள் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. பெரிய சுழி போல அவர்கள் தாங்களும் சுழன்று மூழ்கி, தங்களைச் சூழ்ந்தவர்களையும் இழுத்துச் செல்கிறார்கள். ஆயினும் விடாப்பிடியாக இதைச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும். பொருளும் காமமும் மானுட வாழ்க்கையில் ஒரு சிறிய பங்குதான் வகிக்கின்றன. மானுட வாழ்க்கை ஒருவன் தானே கண்டடடைந்து தானே ஆற்றிநிறையும் அறத்தால் ஆனது.

ஜெ

வேலைகிடைத்ததால் தற்கொலை

வடக்கிருத்தல் தற்கொலையா?

தற்கொலை தியாகமாகுமா?

ஒரு தற்கொலை

அம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்

தற்கொலை -கடிதங்கள்

அபிராமானந்தரின் கங்கை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2021 11:35

அருஞ்சொல்,தேவையும் எதிர்பார்ப்பும்

https://www.arunchol.com/

சமஸ் தொடங்கியிருக்கும் புதிய ஊடகம் அருஞ்சொல். இப்போது இணையப்பத்திரிகையாக உள்ளது. எதிர்காலத்தில் அச்சிதழாகவும் வெளிவரும் என நினைக்கிறேன். காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் சுதந்திரமான ஊடகங்களின் தேவை மேலும் மேலும் பெருகிவருகிறது. இன்று வெறிகொண்ட ஒற்றை நிலைபாடுகளே கருத்துக்களாக முன்வைக்கப்படுகின்றன. நேற்றுவரை அறிவுத்தளத்தில் அத்தகைய ஒற்றைப்படைக் கூச்சல்கள் மேல் இருந்த ஒவ்வாமை இன்று அருகிவிட்டது. கூட்டத்துடன் சேர்ந்து கூச்சலிடுவதன் நலன்களை அறிவுஜீவிகள் கண்டடைந்துவிட்டனர். பொதுக்கூச்சலை மேலும் ஓங்கி ஒலிப்பவர்களாக மாறிவருகின்றனர்.

தமிழில் இலக்கியத்துக்காகத் தொடங்கப்பட்ட காலச்சுவடு, உயிர்மை போன்ற நடு இதழ்களின் சரிவுக்கு அவை எடுத்த அதீத அரசியல் நிலைபாடு, அதன் விளைவான பிரச்சார நெடியே காரணம். ஒரு நிலைபாடு எடுத்து கூச்சலிட்டால் அதன் ஆதரவாளர்களான சில வாசகர்கள் உடனடியாக வந்து சேர்வார்கள். நீண்டகால அளவில் இலக்கிய வாசகர்கள், பொதுவாசகர்கள் ஆர்வமிழந்து விலகிச் செல்வார்கள். அதுவே இங்கே நிகழ்ந்தது.

ஆகவே இங்கே விவாதத்துக்கான பொதுக்களம் இல்லை. பொதுவாசகன் எல்லா தரப்பையும் அறிந்துகொள்ளும் நடுநிலை ஊடகமே இல்லை. உணர்ச்சிக் கொந்தளிப்புகள், மிகைச்சொல்லாடல்கள் இல்லாமல் செய்திகளும் கருத்துக்களும் முன்வைக்கப்படும் தளம் என ஒன்று இல்லை. அவ்வாறு சில ஊடகங்கள் உருவாகியே ஆகவேண்டும். இல்லையேல் நம்முடைய சிந்தனைத் திறனே இல்லாமலாகிவிடக்கூடும்.

நேற்றுவரை ஊடகம் என்பது எப்படியோ அதன் நிதியாதாரத்துக்கு கட்டுப்பட்டிருந்தது. நிதியாதாரத்தை அரசு கட்டுப்படுத்த முடியுமென்ற சூழலும் இருந்தது. இன்றைய சூழலில் மிகக்குறைவான முதலீட்டுடன் சுதந்திரமான ஊடகங்கள் உருவாக முடியும். அவற்றின் நம்பகத்தன்மையே அவற்றின் முதலீடு. ஆங்கிலத்தில் அதற்கான சிறந்த முன்னுதாரணங்கள் ஏற்கனவே உள்ளன.

சமஸ் அவருடைய நிதானமான அணுகுமுறை, அனைத்துக் குரல்களையும் ஒலிக்கவைக்கும் பொதுப்பார்வை ஆகியவற்றுக்காக ஏற்கனவே அறியப்பட்டவர். அவர் தொடங்கியிருக்கும் அருஞ்சொல் என்னும் இணையஊடகம் தமிழில் அத்தகைய ஒரு தொடக்கமாக அமையவேண்டும்.

ஏற்கனவே தமிழ் ஹிந்து அப்படி ஒரு அடையாளத்தை நோக்கிச் சென்றது. அது நம்பிக்கையூட்டியது. ஆனால் அதில் சட்டென்று ஒரு அசட்டு திமுக ஆதரவு மனநிலை உருவாக ஆரம்பித்தது. அதிலுள்ள சிலர் தங்கள் முதிரா அரசியலுக்கான ஊடகமாக அதை ஆக்கியதன் விளைவு அது. அவ்விதழின் நிர்வாகத்தேவையும் காரணமாக இருக்கலாம். தமிழ் ஹிந்து ஒற்றைப்படையாக ஒலிக்க ஆரம்பித்தது. அதில் ‘போற்றிப்பாடும்’ குரல்கள் எழுந்து அதன் நம்பகத்தன்மை அடிவாங்கியது. இன்று எவ்வகையிலும் அது வாசக ஏற்புள்ள ஊடகம் அல்ல. நாம் போற்றிப்பாடடியை வாசிக்க வேண்டுமென்றால் அதற்கே உரிய ஊடகங்கள் இருக்கின்றன.

அத்தகைய புகழ்மொழிகள் ஒரு நடுநிலை ஊடகத்தால் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். உதாரணமாக, ‘தெற்கில் இருந்து ஒரு சூரியன்’ என ஒரு நூலை ஓர் ஊடகம் வெளியிடுமென்றால் அந்த ஊடகம் மேல் அக்கணமே நம்பிக்கை போய்விடுகிறது. காந்தியைப் பற்றிக்கூட அப்படி ஒரு மிகைச்சொல் பயன்படுத்தப்படலாகாது, ஆசிரியர் குறிப்புகளில் மகாத்மா என்ற சொல்லையே தவிர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

இன்றைய ‘அருஞ்சொல்’ நிதானமான மொழியில் அமைந்த பலதரப்பட்ட கட்டுரைகளால் ஆன நல்ல இணைய இதழாக உள்ளது. இது மேலும் விரிவாக வேண்டும். கட்டுரைகளில் வேகம் இருக்கலாம், ஆனால் வம்புகள் அல்லது நேரடித் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும். புகழ்மொழிகளும் வசைமொழிகளும் இருக்கலாகாது.

அத்துடன் ஒரு புதிய செய்தியை, அல்லது கருத்தை முன்வைக்காமல் பொத்தாம் பொதுவாக எதையாவது எழுதும் கட்டுரைகள் தவிர்க்கப்பட வேண்டும். தமிழில் அத்தகைய கட்டுரைகள் ஏராளமாக எழுதப்படுகின்றன. தினமணி நடுப்பக்க கட்டுரைகள் அனைத்துமே அத்தகையவைதான்.

இலக்கிய இதழ்கள் ஏற்கனவே நிறைய வருகின்றன. ஆகவே அதற்கு அதிக இடம் அளிக்க வேண்டியதில்லை. இணையத்தில் ஏற்கனவே பேசி நைந்த விஷயங்களை தவிர்த்துவிட வேண்டும். இலக்கியம் பற்றியோ சினிமா பற்றியோ கட்டுரைகள் வெளிவருமென்றால் ஏற்கனவே பேசப்பட்டவற்றுக்கு மேலதிகமாக அவை எதையாவது சொல்லியிருக்க வேண்டும்.

என் ஆலோசனைகள் சில உண்டு. அவை செவிகொள்ளப்பட்டால் நன்று.

அ அனைத்துத் தரப்புகள்

சமூகவலைத்தளச் சூழலில் உள்ள சில்லறைத்தனங்களான நக்கல், நையாண்டிகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் மீம் ஆக மாற்றும் மனநிலை, எதையுமே ஒருவகை பொறுக்கித்தன பாவனையில் அணுகும் போக்கு ஆகியவற்றுக்கு இடமே அளிக்கலாகாது. எவராயினும் அத்தளத்தில் மதிக்கப்படுபவர்களே எழுதவேண்டும்.

தெளிவான மொழியில், தாக்குதல்நோக்கு இல்லாமல் முன்வைக்கப்பட்டால் அத்தனை அரசியல் தரப்புகளையும் கேட்டு வாங்கி வெளியிடலாம். இடதுசாரிக் குரல்கள், திராவிட அரசியல் குரல்கள், தலித் அரசியல்குரல்கள், இந்த்துவ அரசியல் குரல்கள் அனைத்தும் ஒன்றையொன்று மறுத்து தங்கள் தரப்பை முன்வைத்து வாதிட இடம் அளிக்கப்பட வேண்டும். மறுப்புகள் வழியாகவே விவாதம் ஆழமானதாக ஆகும்.

காந்தியப் பொருளியல் நோக்குடன்  கட்டுரைகள் வந்தால்  அதை மறுத்து முதலாளித்துவ பொருளியல் நோக்குடன் எழுதப்படும் கட்டுரையும், அவற்றை மறுக்கும் இடதுசாரிப் பார்வையுடன் எழுதப்படும் கட்டுரையும் ஒரே இடத்தில் வெளியாக வேண்டும். அப்படி ஒரு ஊடகம் உருவாகுமென்றால் அது மிகப்பெரிய ஒரு வரவாக இருக்கும்.

தமிழில் ஒரு வழக்கம் உண்டு. ஓர் இதழ் ஒரு குறிப்பிட்ட கருத்தை வெளியிட்டால் அந்தக் கருத்தின் எதிர்ப்பாளர்கள் அந்த இதழையே எதிர்த்தரப்பாக எடுத்துக் கொண்டு வசைபாடுவார்கள். அந்த இதழை முத்திரை குத்த முயல்வார்கள். அத்தகைய மூளைக் கொதிப்பாளர்கள் ஒரு சூழலின் சிந்தனைத் திறனையே மழுங்கடிப்பவர்கள். அவர்கள் சமூகவலைத்தளங்களை நாறடித்திருக்கிறார்கள். அவர்கள் அங்கேயே கிடக்கட்டும்.

இன்றைய இதழ் அந்த மனநிலையில் இருந்து வெளியே வரவேண்டும். எல்லா தரப்பும் ஒலிக்க இடமளிக்கும் ஓர் ஊடகம் அந்த வசையை எதிர்கொண்டாலும் காலப்போக்கில் ஒரு வலுவான அறிவுமையமாக நிலைகொள்ளும். நடுநிலையாளரும் அனைவருக்கும் இனியவருமான சமஸ் அவர்களால் அது இயலும்.

ஆ. இந்திய விரிவு.

தமிழ் ஊடகங்கள் செய்யாத ஒன்று இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைப் பற்றிய செய்திகளை அங்குள்ளவர்களைக் கொண்டு நேரடியாக எழுதி வாங்கி வெளியிடுவது. அந்தந்த பகுதிகளில் வெளிவரும் இதழ்களில் இருந்து கட்டுரைகளை வெளியிடலாம்தான். ஆனால் அவை அவற்றை வெளியிட்ட இதழ்களின் நோக்கு கொண்டவை. சமஸ் அவரே சான்றளிக்கும் ஒரு கட்டுரையாசிரியரின் நேரடிக் கட்டுரையை வெளியிட்டால்தான் அதற்கு மதிப்பு.

கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் முதல் வடகிழக்கு வரை அத்தனை அரசியல் பிராந்தியங்களில் இருந்தும் சமஸுக்கு ஏற்புடைய ஓரு நடுநிலை இதழாளர் அப்பகுதியின் அரசியல்- பண்பாடு பற்றி வாரம் ஒரு சிறு கட்டுரை எழுதலாம். ‘கேரளா குறிப்புகள்’ ‘தெலுங்கானா கடிதம்’ என்பதுபோல. சமஸுக்கே தொடர்புகள் இருக்கலாம்.

இ. உலக விரிவு

அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியக்கிழக்கு, கீழைநாடுகள் என எல்லா நிலப்பகுதியில் இருந்தும் அங்குள்ள அந்த ஊர் இதழாளரிடமிருந்து ஒரு மாதாந்திரக் குறிப்பை வாங்கி வெளியிட முடிந்தால் அது தமிழுக்கு மிகப்பெரிய வரவாக இருக்கும். இன்றுவரை அப்படி ஒன்று நிகழ்ந்ததே இல்லை. அதற்குரிய தொடர்புகள் இன்று பெரிய பிரச்சினை இல்லை. எண்ணிப் பாருங்கள் சிரியாவில் இருந்தோ ஆப்கானிஸ்தானில் இருந்தோ ஒரு நேரடி அறிக்கை தமிழில் வெளியாகுமென்றால் அதன் மதிப்பென்ன என்று.

அறைகூவலாக எடுத்துக் கொண்டு சமஸ் இதைச் செய்து வெல்லவேண்டும். வாழ்த்துக்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2021 11:34

அக்டோபர் 2 நற்கூடுகை – செயல்வழி ஞானம்

குக்கூவில் சில நாட்கள்…

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

சத்திய சோதனையின் இறுதி அத்தியாயம் இவ்வாறு முடியும், அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெற்றிருக்கச் செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால்இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கடினமான பாதை என் முன்னால் இருக்கிறது என்பதை அறிவேன். என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டுவிட வேண்டும். தன்னுடன் உயிர்வாழ்வன எல்லாவற்றுக்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக்கொள்ளாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது. அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சை”.

முத்துராமன் முத்துராமன்

எண்ணத்தையும் செயலையும் ஒன்றெனக்குவிக்கும் சங்கமிப்புகளின் நீட்சியாக, வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி தினத்தில், குக்கூ காட்டுப்பள்ளியில் ‘செயல்வழி ஞானம்’ நற்கூடுகை நிகழவிருக்கிறது.

இக்கூடுகையில், கல்வியாளர் முத்துராமன் அவர்கள் பங்கேற்றுத் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார். [ ஈழத்தமிழருக்கு உதவி ]கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காகத் தன்னையும் தனது செயல்களையும் அர்ப்பணித்துள்ளார். அக்குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கான எல்லா சூழ்நிலைச் சாத்தியங்களையும் ஏற்படுத்துகிறார். முத்துராமன் அவர்களின் அனுபவ உரையாடல் நமக்கு நிச்சயம் ஓர் நற்திறப்பை உண்டாக்கும்.

மோஹனவாணி

இந்நிகழ்வில், மோகனவாணி அவர்கள் முன்னெடுக்கும் ‘பனையோலை பொம்மைகள் தயாரிப்பகம்’ துவங்கப்படவுள்ளது. [மோகனவாணி பற்றி] பனையோலை மூலம் பொம்மைகள் செய்வதை வாழ்வுப்பாதையாக ஏற்றுக்கொண்டிருக்கும் வாணி அக்காவின் செயல்முயற்சிகளின் அடுத்தபடிநிலையாக இது அமையும்.

மேலும், பொன்மணி முன்னெடுக்கும் ‘துவம்’ தையல்பள்ளி வாயிலாக ‘வண்ணத் துணிப்பைகள்’ தைத்து உருவாக்கும் செயலசைவும் துவக்கம் கொள்கிறது. அதுமட்டுமின்றி, ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் மூலமாக தூர்வாரி மீட்கப்படும் பொதுக்கிணறுகளைக் கணக்கெடுத்து ஆவணப்படுத்தும் ‘ஊர்க்கிணறு கணக்கெடுப்பு’ முயற்சியும் தொடங்கப்படுகிறது.

செயலில் தாங்கள் தொய்வுகொள்கையில் எல்லாம் காந்திய வார்த்தைகள் காந்தவிசையாக ஈர்த்தெடுத்து எழச்செய்வதை ஒவ்வொரு காந்தியர்களும் உள்ளுணர்வதுண்டு. அத்தகைய அகவிசையை நாமும் உள்ளுணர்வதற்கான நற்கூடுகையாகவே இச்சந்திப்பு அமையவுள்ளது. ஓர் பெருங்கனவினை அகமேற்றுச் செயலாற்றத் துடிக்கும் யாவருக்குமான அழைப்பு இது! வாய்ப்புள்ள தோழமைகள் இக்கூடுகையில் இணைந்துகொள்ளுங்கள். ‘செயலே ஞானம்’ என்ற அறைகூவலுக்குச் செவிசாய்க்கும் சாத்தியங்கள் நமக்குள் நிகழ இந்நிகழ்வு அனுபவத் துணையாக உடனிருக்கும்.

எங்களுடைய அனைத்துச் செயல்வழிக்கும் எழுத்துத்துணையாக உடன்வரும் உங்களுக்கு இவ்வறிவிப்பைப் பகிர்வதில் நிறைவுகொள்கிறோம். 2019ம் ஆண்டு, அக்டோபர் மாதம் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ‘செயல்வழி ஞானம்’ காந்திய நிகழ்வினையும், அதில் நீங்கள் ஆற்றிய உரையினையும், அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களையும் இக்கணம் மனதில் நிறைத்துக்கொள்கிறோம்.

உங்களுடைய கட்டுரையொன்றின் நீங்கள் குறிப்பிட்ட, “செய்வதே செயலை அறியும் ஒரே வழி; முற்றீடுபாடே செயலை யோகமென்றாக்குகிறது; நிறைவடைந்த செயல் நமக்குரியது அல்ல; செயலில் இருந்து இன்னொரு செயல்வழியாக விடுபடுவதே சரியான வழி”… என்கிற இவ்வார்த்தைகள் செயலூக்கம் தருபவைகளாக தற்கணம் வேர்கொண்டு அகத்துள் விரிகிறது.

எல்லாம் செயல் கூடும்!

~

கரங்குவிந்த நன்றியுடன்,

குக்கூ காட்டுப்பள்ளி

புளியானூர் கிராமம்

சிங்காரப்பேட்டை அஞ்சல்

thannarame@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2021 11:33

இமையம் பற்றிய உரை, கடிதம்

அன்புநிறை ஜெ,

இன்று திருவண்ணாமலையில் தாங்கள் எழுத்தாளர் இமையம் மற்றும் கே.வி.ஜெயஸ்ரீ குறித்து ஆற்றிய உரையைக் கேட்டேன்.

பவா தொடக்கத்தில் சொன்னது போல ஒரு சொல்லையும் நீக்க முடியாத செறிவான உரை.

ஒரு எழுத்தாளரது படைப்புலகை தொகுத்து முன்வைக்க எண்ணும் எவரும் இப்படித்தான் தொகுத்துக் கொள்ள வேண்டும் என்பதுபோல, ஒரு கச்சிதமான வடிவம்.

முதலில் இமையம் எழுத வந்த காலகட்டம், அதற்கு சுந்தர ராமசாமி போன்ற முன்னோடிகளிடமிருந்து கிடைத்த வரவேற்பு, அங்கீகாரம், விமர்சனம் போன்றவை; பின்னர் யதார்த்தவாதம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட காலத்தில் அவர் எழுத வந்ததைச் சொல்லி அந்த வரலாற்றுச் சித்திரத்தை முழுமை செய்கிறீர்கள்.

அதன் பின்னர் யதார்த்தவாத அழகியலுக்குள் எழுத்தாளர் இமையத்தின் தவற விட்டு விடக்கூடாத சிறப்புகளாக சிலவற்றை தொட்டுக்காட்டுகிறீர்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது எழுத்தின் சமரசமின்மை, பல பட்டைகள் கொண்ட வைரம் போல அமைவதே கலை, கலைஞன் தொடும்போது தன்னிச்சையாக அவ்விதம் பல ஆழங்களைத் தொடுவது போன்ற பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறீர்கள்.

அவற்றுக்கு அப்பால் இன்றைய உரையில் சிறப்பான புதிய திறப்புகளாக மனதில் பதிந்தவற்றைத் தொகுத்துக் கொண்டேன்.

முதலாவதாக, கதை ஒரு எழுத்தாளனுக்காகக் காத்திருப்பதை, இமையம் மட்டுமே சொல்லக் காத்திருந்த கதைகளின் வரிசையை சொல்வதற்கு,  தாங்கள் சொன்ன அரேபியக் கதை இன்றைய உரையின் உச்சம் எனத் தோன்றியது. குறளுரையில் விரித்துச் சொன்ன ஆற்றாது அழுத கண்ணீர் போல, அதைக்  கவித்துவமாகச் சொல்லும் கதை இது. “ஒரு துக்கம், ஒரு அநீதி, ஒரு முறையீடு அங்கு யுகயுகமாக ஒரு கவிஞனுக்காகக் காத்திருக்கும்” என்பது மிக அற்புதமான வரி. எத்தனை முறை சொன்ன பின்னும் இது ஒரு தெய்வ சன்னதம் போல நம்பிக்கை அளிக்கிறது. அதைச் சொல்லக் காத்திருக்கும் கலைஞனை தெய்வத்தின் அணுக்கனாக்குகிறது.

ஒரு ஆளற்ற இரவில் உடலற்ற ஒரு குரல், வரலாற்றின் குரல் போல கேட்ட ஒரு அழுகுரலைச் சொல்லி, அதுபோல ஒரு காலம்கடந்த ஒன்றின் குரலை யதார்த்தவாதத்தில் சொன்னவர் இமையம் எனச் சொன்னது அருமை. அவரது எழுத்தை, அதன் யதார்த்தவாத அழகியலைப் பேசும்தோறும் அதனூடாக வந்தமரும் நாட்டுப்புறக் கவிஞனின், தெருக்கூத்துக் கலைஞனின் குரலைத் தவற விட்டு விடக்கூடாது என்ற பார்வை முக்கியமானது.

மூன்றாவதாக ‘செல்லாதபணம்’ நாவலின் நாயகி செய்வது, காலம்காலமாக பெண் உணர்வு பூர்வமாக செய்யும் முடிவு போலத் தோன்றுவதை குருதிபலி கொடுக்கும் பக்தனுக்கும் மலர் வைக்கும் பக்தனுக்கும் இடையேயான தேர்வாகச் சொல்வதும், அக்கதையை  சமூகவியல் அர்த்த தளங்களைத் தாண்டிப் பார்க்க வேண்டிய என்றைக்குமான ஆண்-பெண் ஆடலை ஆழமாகத் திறந்து செல்லும் படைப்பாகக் காட்டியது பெரிய திறப்பாக இருந்தது. வென்றெடுக்கக் கூடிய பொருள் மேல் வென்றவனுக்கு இருக்கக் கூடிய அதீதமான உரிமை, அந்தப் பொருளை உடைத்தழிப்பது வரை செல்வது  போன்ற உளவியலும், காலம்காலமாக உடைமை கொள்ளும் வெறி கொண்ட ஆணுக்கும் தன்னை அவனுக்கு முழுதளித்து ஒருகட்டத்தில் தன்னை மீட்டுக் கொள்ள வேண்டிய பெண்ணுக்கும் இடையேயான ஆடல் என்றதும் எப்போதும் நினைவிருக்கும். ஒரு எழுத்தாளரோடு பொதுவில் இணைத்து நாம் வைத்திருக்கும் பிம்பஙகளைத்தாண்டி இலக்கியத்தை அணுக வேண்டியதை மீண்டும் நினைவுறுத்தியது.

நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலைச் சொல்லும் போது அகநானூறு காட்டும் வாழ்வியலுக்கும் புறநானூறு காட்டும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லி அகத்துறை கடந்தகாலத்தை காட்டுவதும், புறத்திணை நிகழ்காலத்தைக் காட்டுவதையும் சொன்னது அழகு.

மிகச் சிறப்பான உரையை உடனுக்குடன் இணையத்தில் தொகுத்து வெளியிட்ட ஸ்ருதி டீவிக்கும் நன்றிகளைச் சொல்ல வேண்டும்.

மிக்க அன்புடன்,

சுபா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2021 11:32

நாட்டார் தெய்வங்கள் – கடிதம்

நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்

அன்புள்ள ஜெ,

விருதுநகரிலிருந்து சாத்தூர் செல்லும் நான்குவழிச் சாலையில் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலைக்கு  அடுத்த சிறிய “பிரதம மந்திரி கிராமிய சாலைத் திட்டத்தின்” ஒற்றைக் கிராமியச் சாலையில் திரும்பினால் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ”கோவில் புலிகுத்தி” இருக்கிறது. ஊரின் பெயரே “கோவில் புலிகுத்தி” தான்.  எங்கள் குலதெய்வம்.

வண்ணமயமான பெரிய கோபுரம், அதன் முகப்பில் ஸ்ரீ வாலகுருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி அம்மன் என்ற பெயர்ப்பலகையுடன் மைய தெய்வமாக இருவரும் குடிகொண்டுள்ளனர்.

பொதுவாக குலதெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வது ஓர் அனுபவம் என்றால் தனியாகச் செல்வது தனிஅனுபவம், பூசாரிகளின் “எதிர்பார்ப்பு” குறைவாக இருக்கும். நாமும் குடும்பத்திற்கு முன் சிறிது மேலானவனாக பொறுப்போடு காட்டிக்கொள்ளத் தேவையில்லை.

அன்று குடும்பத்தின் தொலைநோக்கு நன்மையெனக் கருதி அவர்களை சிலபல தற்காலத் தொந்தரவுக்கு ஆளாக்கிவிட்டு தலைநிறைய பாரத்துடன், சரி கோவிலுக்குத்தான் சென்று வருவோமே என்று வண்டியைத் திருப்பினேன். முதல்நாள் “நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்” உங்கள் தளத்தில் வாசித்திருந்தேன்.

இந்தக் கோவிலின் சிறப்பு இது பல சாதிகளுக்கு குலதெய்வம் என்பதுதான். நாடார்கள், ஆசாரிகள், பிள்ளைகள், அய்யர்களின் ஒருபிரிவினர் மற்றும் சில சாதிகளுக்கு இது குலதெய்வம். கோவில் சுற்றுக்குள் குடியிருக்கும் விநாயகர், முருகன், பைரவர் போன்ற தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு சமூகத்திற்கு குலதெய்வமாக இருக்கிறது.

மையத்தெய்வமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீ வாலகுருநாத சுவாமி, எல்லோரையும் ஒருங்கிணைத்து எல்லோருக்கும் முன்பாக பூஜையும், படையலையும் பெறுகிறார். காவல் தெய்வமாக மதில்சுவரின் வெளியே கோவிலின் வலதிடது பக்கமாக “புலிக்குத்தி கார்மேக சாமி”யும், “சங்கிலிக் கருப்பசாமி”யும்.

வாலகுருநாத சாமி

நிறைய சாதிகளின் குலதெய்வமாக இந்தக் கோவில் தொகுதி (அப்படிச் சொல்லலாமா) இருந்தாலும், புலிகுத்தி கார்மேக சாமிக்கு வருகை மற்றும் செல்வாக்கு அதிகம். அது நாடார்களின் குலதெய்வமாக இருப்பதும் அவர்களின் செல்வாக்கும் காரணமாக இருக்கலாம். அவர்களே சமீபத்தில் முழுக்கோவிலையும் எடுத்துக் கட்டி சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகமும் செய்துமுடித்தார்கள்.

கதைப்படி புலிகுத்தி கருப்பர் அந்தப் பகுதியில் பலகாலம் தொந்தரவு செய்துவந்த புலியைக் கொன்று அந்தப் போராட்டத்தில் உயிரிழந்தார். அவர் சந்நிதி கோவிலின் வெளியே வலது மூலையில் கோவிலின் மதில் சுவரைத் தொடாமல் இருக்கிறது.

ஏற்கனவே கொஞ்சம் குற்றவுணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்த எனக்கு கோவிலில் நுழைந்தவுடன் மனம் பொங்க ஆரம்பித்திருந்தது. உள்ளே கருவறையில் வாலகுருநாத சாமிக்கும், அங்காள பரமேஸ்வரிக்கும் விரிவான அபிஷேக அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.

பூணுல் அணிந்த அய்யர் அல்லாத குடும்பம் (ஆசாரியாக இருக்கலாம்) மிக விரிவாக பூஜை ஏற்பாடுகள் செய்து கொண்டு வந்திருந்தனர். இரண்டு பெண்கள், ஒருவர் வயதில் குறைந்தவர் என்பது பிறகு கவனித்தேன். பன்னீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம், புத்தாடை, மாலை, சந்தான அலங்காரம் என்று நீண்டுகொண்டே சென்றது.

கோவிலின் உள்அறைக்குச் சென்றதிலிருந்தே கேவ ஆரம்பித்துவிட்டேன். என்னை அறியாத ஏதோ, உடம்பு முழுவதும், பரபரப்பாக, தலையிலிருந்து உடல் வழியாக, நிறைந்து,  கண்வழியாக வழிந்து, கரைந்து சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது விசும்பல்கள். காரணமறியாத, காரணமறிய முடியாத காரணங்கள். பலநிமிடங்கள் அப்படியே கழிந்தது.

பூஜை முடியும் நேரத்தில் ஒரு வயதான தம்பதி கோவிலுக்குள் நுழைந்தனர். பார்த்தவுடன் பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் போன்ற தோற்றம் மற்றும் உடல்மொழி கொண்டிருந்தனர்.

பூஜை முடிந்தவுடன் அவர் “நீங்கள் எண்ணிவந்திருக்கும் காரியம் எல்லாம் நல்லபடியாக சிறப்பாக முடியும்” என்று நல் வார்த்தை சொன்னார்.

அந்த வார்த்தை பூஜை செய்த குடும்பத்திற்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. நன்றிசார் நன்றிசார் என்று சொல்லி ஊர் தொழில் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

குலப்பூசகர் சாமிக்கு ஆராதனை செய்து பிரசாதம் வழங்கினார். என் பர்ஸிலிருந்தது நூறு ரூபாய் தட்டில் கொடுத்து பூசிக்கொண்டு, புலிகுத்தி சாமிக்கு ஆராதனை செய்யுங்கள் என்றேன்.

பூசகரோடு புலிகுத்தி சாமிக்கு ஆராதனை செய்து வரும் வழியில் வேறொரு பூசகர் கருப்பசாமி கோவிலுக்கு முன், கோவிலுக்கு வெளியே சேவல் அறுத்து கத்தியைத் துடைத்துக் கொண்டிருந்தார். சேவல் துடித்துக் கொண்டிருந்தது.

மறுபடியும் உள்ளே சென்று கொடிமரத்தின் கீழ் சிறிதுநேரம் அமர்ந்திருந்தேன். பெரியவரும் அவர் மனைவியும் அருகில் அமர்ந்தனர்.

அப்போது பெரியவர் மறுபடியும் சொன்னார்.

“நல்ல சிறப்பாக நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும், துடியான சாமியாக்கும் இது” என்றார்.

சட்டென்று நான் “நான் எதுவுமே கேட்கலையே என்றேன்.”

திரும்பி சற்றுநேரம் கூர்ந்து பார்த்தார். நான் திரும்பிக்கொண்டேன்.

முகம் சிறுத்து, மூக்கு சிவந்துவிட்டது. மனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.

பிரகாரத்திலிருந்து வெளியே வரும்போது அமர்ந்திருக்கும் அந்த ஊர் கோவில் சார்ந்தவர்களுக்கு சில்லறையாக இருந்த பணம் எல்லாம் எடுத்து பிரித்துக் கொடுத்தேன்.

மிச்சம் இருந்த சில்லறை நாணயங்களையும் ஒருவருக்கு அளித்துவிட்டு காருக்கு அருகில் செல்லும் போது கோவிலின் உள்ளேயிருந்து வயது நிரம்பிய பெரியம்மா ஒருவர் வந்தார்.

“அய்யா நான் இம்புட்டு நேரம் உள்ளே இருந்தேன், எனக்கும் குடுத்துட்டுப் போங்க” என்றார்.

உண்மையிலேயே என்னிடம் சில்லறை இல்லை.

இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே பர்சின் உள்பையில் இருந்தது. சில்லறையாக இருந்த அனைத்தையும் முன்பே கொடுத்து விட்டிருந்தேன்.

அவர் விடவில்லை, நானும் காரில், கொண்டுசென்ற பைகளில் என எங்கேனும் கொஞ்சமாவது இருக்குமா என்று தேடி சில்லறைகள் சில எடுத்துக் கொடுத்தேன். வாங்க மறுத்துவிட்டார்.

அப்போதிருந்த மனநிலையில் நூறு ரூபாய் இருந்தாலும் கொடுத்து விட்டிருப்பேன்.

இறுதியில் இரண்டாயிரம் இருக்கும் உள் மடிப்பைக் கொஞ்சம் மறைத்துவிட்டு பர்சைத் திறந்து காட்டியவுடன் ஒரு சலிப்போடு திரும்பிச் சென்றார்.

வழியிலெல்லாம் அவர் திரும்பிச் சென்ற காட்சியும் அந்த சலிப்பும் கண் முன்னாடியே நின்றுகொண்டிருந்தது.

அன்று அலைந்த அலைச்சலும் தூக்கமின்மையும் சேர்ந்து இரவில் காய்ச்சல் பிடித்துக் கொண்டது. ஹோமியோபதி மாத்திரை எடுத்துக் கொண்டு படுத்தால் விதவிதமான, கலவையான எண்ணங்கள். கோர்வையில்லாத கனவுகள்.

சட்டென ஒரு கணம் தோன்றியது. அந்த “மதிப்பு மிக்கதென மறைத்து வைக்கப்பட்டதைத் தேடித்தானே அந்த அம்மா வந்தார்கள்” என. உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. பாதம் முதல் கண்கள் வரை கொப்பளித்து வியர்த்துவிட்டது. சிறிது நேரத்தில் காய்ச்சலும் இறங்கிவிட்டது.

அடுத்த முறையாவது கோவிலுக்குச் சென்றால் “பர்சைக்” காலி செய்துவிட்டு வரமுடியுமா என்று முயற்சி செய்யவேண்டும்.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா

***

அமேசான் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்  மின்நூல் வாங்க தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் நூல் வாங்க ஜெயமோகன் நூல்கள் வடிவமைப்பு, கீதா செந்தில்குமார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2021 11:31

September 28, 2021

இடதுசாரிகளும் வலதுசாரிகளும்

Gheorghe Virtosu – Socialist Fraternal Kiss இரு சொற்கள்

அன்புள்ள ஜெ..

உங்கள்  தளத்தில்  ஒரு வாசக சகோதரர் இப்படி எழுதி இருக்கிறார்.இரு சொற்கள்

“மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையாக இயற்கையிலேயே அமைந்தவை’ என்பதே வலதுசாரித்தனம். அதன் விளைவாக பேசப்படும் நிறவாதம், இனவாதம் எல்லாம் கூட வலதுசாரித்தனம் தான். அந்த ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல என்பது பொருளியல் வலதுசாரித்தனம்.”

வலதுசாரி என்பதற்கு இந்த வரையறையை நீங்கள் ஏற்கிறீர்களா?

தீவிர இடதுசாரி எதிர்ப்பாளரான அயன் ராண்ட் ,   இனவாதம் நிறவாதம் போன்றவை  ஹிட்லரின் நாஜியிசத்துக்கும்  சோவியத் யூனியனின் கம்யூனிசத்துக்கும் பொதுவான அம்சம் என்கிறார்.நாஜி ஜெர்மனியில்  தாங்கள் பரம்பரை பரம்பரையாக தூய ஜெர்மானியர்கள் என நிரூபித்தாக வேண்டும் .  அதற்கேற்ப  கேள்விப்படிவம் அளிக்கப்படும்

சோவியத் யூனியனில் அதே போல பலதலைமுறைகளாக தாங்கள் பாட்டாளிகள், பரம்பரை பரம்பரையாக நிலமற்றவர்கள் என தமது ரத்த தூய்மையை நிரூபித்தாக வேண்டும். சில தலைமுறைகளாக கம்யூனிச சர்வாதிகார ஆட்சி நடந்தால் ,  கம்யூனிசம் என்பது ஜீனில் கலந்து , அதன் பின் பிறக்கும் சோவியத் குழந்தை பிறக்கும்போதே கம்யூனிஸ்ட்டாக பிறக்கும் என சோவியத் கம்யூனிஸ்ட் தலைமை நம்புவதாக எழுதுகிறார்

சமத்துவம் , அனைவரும் சமம் போன்ற  கம்யூனிச கருத்துகளின் இன்னொரு வடிவம்தான்  இனவாதம் , நிறவாதம் போன்றவை என்கிறார் அவர்.மாற்று நம்பிக்கைகளை , கலாச்சாரத்தை அழிக்க முயலும் சீனா உட்பட  பல இடதுசாரி நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியை வைத்து இனவாதம் மதவாதம் போன்றவை இடதுசாரித்தனம் என சொல்லிவிட முடியாது.ஆக்கப்பூர்வமான  இடதுசாரிகளை வைத்துதான் இடதுசாரிக்கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டும்

இலக்கியத்தைப் பொருத்தவரை இடதுசாரி அழகியல்பற்றிப் பேசும் இக்கட்டுரை முக்கியமானது இடங்கை இலக்கியம்

ஆனால் வலதுசாரி என்பது , ஏன் அதன் எதிர்ப்பாளர்கள் சொல்லும் வரிகளை வைத்தும் வலதுசாரிகளில் இருக்கும் தவறான ஆளுமைகளை வைத்தும் வரையறை செய்யப்படுகிறது? குறைந்த பட்ச அல்லது பூஜ்ய அரசாங்கம் என்ற வலதுசாரிக்கருத்துகளை வலியுறுத்திய எம் எஸ் உதயமூர்த்தி ,  சோசலிஷப்பாதை இந்தியாவுக்கு என்றல்ல  எந்த நாட்டுக்குமே உதவாது என்று சொல்லி  , சுதந்திராகட்சி நடத்திய ராஜாஜியை ஏன் கருத்திக்ல்கொள்ளவில்லை..

கஷ்டப்பட்டு  ரிஸ்க் எடுத்து  என் அறிவை பயன்படுத்தி நான் செய்யும் தொழிலுக்கு நான் ஏன் அரசுக்கு வரி செலுத்த வேண்டும் ? எந்த  சமூக பங்களிப்பும் ஆற்றாமல் வெறுமனே எங்கள் உழைப்பை ருசிக்கும் சோம்பேறிகளிடம் வரி வாங்கி அரசு அல்லவா எங்களுக்கு ஊக்கத்தொகை  தர வேண்டும்?தகுதி இருப்பவன் சட்டத்துக்கு உட்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து விட்டுப் போகிறான் . அனைவருக்கும் சம வாயப்பு என்ற பெயரில் திறமைகளை ஏன் முடக்கப்பார்க்கிறீர்கள் ?   ஓட்டபந்தயத்தில் அனைவருக்கும்,சம வாய்ப்பு வழங்க இத்தனை வேகத்துக்கு மேல் யாரும் ஓடக்கூடாது என தடை போடுவீர்களா?-என்று எழுதிய அயன்ராண்ட் , இதே கருத்துகளை  வலியுறுத்தி , அரசுக்கு வரி கட்ட மறுத்து தன் கண்டுபிடிப்புகளை அழித்து ஒழித்த ஜிடி நாயுடு போன்ற வலதுசாரிகள் இனவாதம் , நிறவாதம் பேசுபவர்கள் அல்லவே?

ஜாதி அழிப்பு என்ற பெயரால் ஜாதித்தொழில் சார்ந்த குற்ற உணர்வால் நூற்றுக்கணக்கான நூல் நூற்பு முறைகள் , கட்டட தொழில் நுணுக்கங்கள் ,  உலோகவியல் என பலவற்றின் அரிய ஞானக்களஞ்சியங்களை நாம் இழந்து வருகிறோம் என்றும் குறைந்தபட்ச அரசு என்றும் பேசும் ஜக்கிவாசுதேவ் ஒரு வலதுசாரி என வைத்துக்கொண்டால் அவரும் இனவாதம் பேசுபவர்  இல்லையே?

அல்லது  வலதுசாரி என்பதே ஒரு எதிர்மறை வார்த்தைதானா ?  இனவாதம் பேசுவது வலதுசாரித்தனம் என்பதுதான் வரையறையா ? பிற்போக்கு என்பதற்கான இன்னொரு சொல்தான் வலதுசாரியா ?

அன்புடன்

பிச்சைக்காரன்

 

அன்புள்ள பிச்சைக்காரன்

இன்றைய சூழலில் ஒருவர் வலதுசாரி, இடதுசாரி போன்ற சொற்களை திட்டவட்டமான வரையறைகளாகக் கொண்டு, வரலாற்றையும் அரசியலையும் பேசுவது பொருத்தமானதல்ல. பொதுவான அரட்டைகளில் அந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை நாம் அப்படியே எடுத்துக்கொள்கிறோம். அதை தவிர்த்தாகவேண்டும்.

இன்று அச்சொற்களை ஒரே அடிப்படையில்தான் பயன்படுத்தலாம். ஒரு சாரார் தங்களை இடதுசாரிகள், அல்லது வலதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டால், அவர்களைச் சுட்ட அதை பயன்படுத்தலாம். அது ஒரு பெயர்ச்சுட்டு மட்டுமே. அந்த அளவிலேயே நான் பயன்படுத்துகிறேன்.

ஏனென்றால் இந்த இடது வலது அல்லது நடு என்னும் பிரிவினைகள் காலந்தோறும் மாறுபடுபவை. ஹிட்லரின் நாஸி கட்சியின் பெயர் நேஷனல் சோசலிச கட்சி. அதன் நோக்கம் சோஷலிசம்தான். அது ஓர் இடதுசாரி அமைப்பாகவே தன்னைச் சொல்லிக் கொண்டது. ஆனால் இனவாதம் அதன் அடிப்படையாக இருந்தது. ஃபாஸிஸத்தின் சிற்பியான முஸோலினி இடதுசாரி அமைப்புக்களில் இருந்து வந்தவர், தன்னை இடதுசாரி என்றே சொல்லிக்கொண்டவர்.

பொதுவாக உலகமெங்கும் கம்யூனிஸ்டுகள் தங்களை இடதுசாரிகள் என்று சொல்லி தங்கள் எதிரிகளை வலதுசாரிகள் என்று சொல்வார்கள். இடதுசாரி அரசியல் என்பது மானுடவிடுதலைக்கும் மானுட சமத்துவத்துக்குமானது என்றும், வலதுசாரி அரசியல் அதற்கு எதிரானது என்றும் அவர்கள்தான் சொல்லி நிலைநாட்டியிருக்கிறார்கள். அரசியல்பிரச்சாரத்தின் விளைவாக உருவான ஒரு பொதுப்புத்திப்புரிதல் அது, அவ்வளவுதான்.

ருஷ்யாவின் கம்யூனிச ஆட்சியில் மைய ருஷ்யாவின் ஐரோப்பிய இனவாதம் ஆசிய இனங்களை ஒடுக்கியது. அவற்றின் பண்பாடுகளை ஒழித்தது. ஆகவேதான் சோவியத் ருஷ்யா உடைந்து சிதறி பலநாடுகளாகியது. சுதந்திரத்திற்குப் பின் ஒவ்வொரு நாடும் அதன் பண்பாட்டை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர்தான் அந்த ஒடுக்குமுறையே நமக்கு தெரியவந்தது. அதுவரை ரஷ்யாவின் மாபெரும் பிரச்சார இயந்திரமும் வாயை வாடகைக்குவிடும் இடதுசாரிகளின் கூச்சல்களுமே நம் சிந்தனைகளை வார்த்திருந்தன.

உக்ரேனின் தேசிய பண்பாட்டு தனித்தன்மை எப்படி ருஷ்யகம்யூனிஸ்ட் ஆட்சியால் அழிக்கப்பட்டது என்றும், அதன் தலைவர்கள் எப்படி உலகளாவிய தளத்தில் இழிந்தோராக இலக்கியம் வழியாகச் சித்தரிக்கப்பட்டார்கள் என்றும், உக்ரேன் தனிநாடானபின் அந்த அடையாளங்கள் எப்படி மீட்கப்பட்டன என்றும், எப்படி அந்தத்தலைவர்கள் மீண்டும் வரலாற்றில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்கள் என்றும் இணையத்தில் மிக விரிவாக வாசிக்கலாம். ஒரு சிறு குறிப்பில் நான் அதை எழுதியிருக்கிறேன். [உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது? ] 

அக்கட்டுரையைப்  படித்திப்பருங்கள், சைமோன் பெட்லியூராவுக்கு இழைக்கப்பட்டது எவ்வளவு பெரிய அநீதி என்று புரியும். அது கொலை மட்டுமல்ல, வரலாற்றில் இருந்தும் அழித்தொழிக்கும் மாபெரும் கருத்தியல் வன்முறையும்கூட. ஒவ்வொரு முறை எண்ணும்போது பெட்லியூராவுக்காக என் நெஞ்சு கொதிக்கிறது. எத்தனை லட்சம் கொசாக்குகள், எத்தனை மாபெரும் சிந்தனையாளர்கள், எத்தனை தலைவர்கள் அப்படி அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வரலாற்றை ஒரு நூறாண்டுக்காலம் வெள்ளைபூசியவர்கள் தங்களை இனவாதத்துக்கு எதிரான தரப்பினர் என்று எப்படிச் சொல்லமுடியும்?

சீனாவின் கம்யூனிச அரசு என்பது முழுக்க முழுக்க ஹான் சீன இனத்தின்  மேலாதிக்கம் கொண்டது. தென்மேற்கு உய்குர் இஸ்லாமியர்களும், வடமேற்கு மங்கோலியர்களும் கிழக்கின் மஞ்சூரியர்களும் அங்கே ஒடுக்கப்படுகிறார்கள். திட்டவட்டமான இனவாதம் இன்றும் இங்குள்ள கம்யூனிச கோஷங்களால் மறைக்கப்படுகிறது.

கம்போடியாவின் போல்பாட்  முதல் இன்று வடகொரியாவின் கிம் ஜோங் வரை மாபெரும் மானுடவிரோதிகள் இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்து உருவானவர்களே. போல்பாட்டை கடைசிவரை சீனா ஆதரித்தது, உலகளாவிய இடதுசாரிகள் அவரை ஆதரித்தனர். இன்றும் கிம்மின் பின்னணிச் சக்தி சீனாதான் என்பதை மறக்கலாகாது.

உண்மையில் வரலாற்றில் எவர் இடதுசாரி என்று வரையறை செய்வது மிகக்கடினம். இடதுசாரிகள் என முன்வைக்கப்படுபவர்களின் இனவெறியும் அழித்தொழிப்பும் வெளிப்பட்டதுமே அவரை வலதுசாரி என்று அவர்கள் சொல்லிவிடுவார்கள். அப்படி ஏராளமானவர்களை வரலாற்றில் பார்க்கலாம். கம்போடியாவின் போல்பாட்டும் கொரியாவின் கிம்மும் உதாரணங்கள். இடதுசாரிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களுக்குள்ளேயே ஒரு சாரார் இன்னொரு சாராரை வலதுசாரிகள் என்று சுட்டிக்காட்டி எதிர்ப்பதைக் காணலாம்.

தமிழகத்தில் திமுகவை எந்த வகையில் சேர்ப்பீர்கள்? அது இனவாதத்தை, மொழிவாதத்தைப் பேசும் கட்சி. பழமைமீட்புக் கனவு கொண்டது. ஆனால் சோஷலிசக் கருத்துக்களையும் பேசுகிறது. சமூகநீதியை முன்வைக்கிறது. சமூகநீதியின்பொருட்டு உண்மையிலேயே போராடியுமுள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் தன்னை சோஷலிசத்தை ஏற்றுக்கொண்ட இடதுசாரிக் கட்சியாகவே முன்வைத்தது. ஆனால் சோஷலிஸ்டுகள் அதை வலதுசாரிக் கட்சி என்றனர். கம்யூனிஸ்டுகள் காங்கிரஸையும் சோஷலிஸ்டுகளையும் வலதுசாரிக் கட்சிகள் என்றனர்.

சரி, வலதுசாரிகள் எனப்படுபவர்கள் அனைவரும் மானுடசமத்துவத்துக்கு எதிரான கருத்தையா முன்வைக்கிறார்கள்? நடைமுறை என்னவாக இருந்தாலும் பாரதிய ஜனதாக் கட்சி ‘வசுதைவ குடும்பகம்’ [உலகமே ஒரு குடும்பம்] என்னும் கருத்தைத்தானே முன்வைக்கிறது? இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இஸ்லாமை மானுடசமத்துவத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு என்று தானே முன்வைக்கிறார்கள்?

மிகத்தோராயமாக ஒரு விளக்கத்தை அடையலாம். இடதுசாரிகள் பொதுவாக இறந்தகாலத்தை நிராகரித்து எதிர்காலக் கனவு ஒன்றை முன்வைப்பவர்கள். வலதுசாரிகள் இறந்தகாலத்தின் மறுவரவையோ அல்லது இயல்பான நீட்சியையோ, அல்லது மேம்படுத்தப்பட்ட வடிவையோ முன்வைப்பவர்கள். ஆனால் இதுகூட அமெரிக்க,ஐரோப்பிய தாராளவாத அரசியல் கொண்டவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் மரபை பொருட்படுத்துவதில்லை. ஆனால் இடதுசாரி அரசியலை ஏற்பதுமில்லை.

மற்றபடி இடதுசாரிகள் மானுடசமத்துவம் அல்லது விடுதலை பேசுபவர்கள் வலதுசாரிகள் அதற்கு எதிரானவர்கள் என்பதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரம் மட்டுமே. தேவைக்கேற்ப இந்த அடையாளங்கள் மாறுபடும்.

உண்மையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஜனநாயகப் பண்புகளை தளராது முன்வைப்பவர்கள், மானுடசமத்துவத்திற்கும் மானுட உரிமைக்குகான அமைப்புகளை உருவாக்கி அவற்றை உலகமெங்கும் கொண்டுசென்றவர்கள், உலகமெங்கும் அப்பண்புகளை பரப்பி நிலைநாட்ட உழைப்பவர்கள் ஐரோப்பிய- அமெரிக்கத் தாராளவாதிகள்தான். அவர்கள் இடதுசாரிகளை ஏற்காதவர்கள். ஆகவே அவர்களை வலதுசாரிகள் என்றுதான் இடதுசாரிகள் முத்திரையிடுகின்றனர். ஆனால் இன்றும் உலகமெங்கும் வறுமை,சுரண்டல், ஒடுக்குமுறைக்கு எதிரான மெய்யான சக்தி அவர்களே.

அதே தாராளவாதிகள் இடதுசாரிப் பொருளியலை முழுமையாக நிராகரிப்பார்கள். சோஷலிசம் என்ற பெயரில் திறமையானவர்களையும் திறமையற்றவர்களையும் இணையாகக் கருதுவதும், திறமையானவனின் உழைப்பை சுரண்டி திறமையற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்று சொல்வதும் மோசடி என்பார்கள். அயன் ராண்ட் சிறந்த உதாரணம்.

இந்தியாவில் மானுடசமத்துவம், மானுட உரிமை, மானுட விடுதலைக்கான பெருங்கனவை விதைத்தவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்கள். அவர்கள் மரபின் நீட்சியாக எதிர்காலத்தை கண்டவர்கள், மரபின் மறு ஆக்கத்தை முன்வைத்தவர்கள். ஆகவே கம்யூனிஸ்டுகளால் வலதுசாரிகள் என முத்திரைகுத்தப்பட்டவர்கள்.

தனியுரிமையை ஏற்பவர்கள் வலதுசாரிகள் மறுப்பவர்கள் இடதுசாரிகள் என்பது மிக அபத்தமான ஒரு வரையறை. அப்படியென்றால் இன்று உலகில் இடதுசாரிகளே இல்லை என்று பொருள். சீனா உட்பட அத்தனைநாடுகளும் தனியுடைமையை ஏற்றுக்கொண்டுவிட்டன. உலகில் வாழும் அனைவருமே தனியுடைமை கொண்டவர்கள்தான்.

இந்த அடிப்படைகளின்படிப் பார்த்தால் முற்போக்கு- பிற்போக்கு என்பதும் அபத்தமான பிரிவினை. முற்போக்கு என்னும் சொல்லை நான் அவர்கள் அவ்வாறு தங்களைப்பற்றிச் சொல்லிக்கொள்வதனால் அவர்களைக் குறிக்கும் பெயர் என்ற அளவில் மட்டுமே கையாள்கிறேன். இயல்புகளின் அடிப்படையில் அல்ல.

ஒவ்வொரு தரப்புக்கும் அவர்கள் முற்போக்கு, எதிர்ப்பவர்கள் பிற்போக்கு அப்படித்தான். இன்று ஒருவர் மார்க்ஸியர்கள் மொத்தப்பொருளியலையும் சமூகவியலையும் இருநூறாண்டுகள் பழைய மார்க்ஸியக் கொள்கைக்கு இழுத்துக்கொண்டுசெல்ல முயல்கிறார்கள், ஆகவே அவர்கள் பிற்போக்கினர் என்று சொல்லமுடியும் அல்லவா?

இந்தவகையான எளியபிரிவினைகளைச் செய்யாமலிருப்பது இன்றைய சிந்தனையின் அடிப்படை நெறிகளில் ஒன்று. இப்பிரிவினைகள் சென்ற நூற்றாண்டில் தோராயமாகச் செய்யப்பட்டவை. அந்த சொற்சூழலே இன்றில்லை.

ஜெ

https://www.virtosuart.com/blog/10-best-political-art-pieces-and-their-creators-you-must-know

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2021 11:35

திருவண்ணாமலையில் ஒருநாள்

இமையத்திற்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருப்பதாக பவா செல்லத்துரை சொன்னார். இப்போது நோயெச்சரிக்கைக் காலம் என்பதனால் பரவலாக பாராட்டு விழாக்கள் நிகழவில்லை. இவ்விழாக்களின் நோக்கம் என்பது ஒன்றே. இத்தகைய விருதுகள், அதையொட்டிய விழாக்கள் வழியாக ஓர் ஆசிரியரை மேலும் பலரிடம் கொண்டு செல்ல முடியும். அது ஓர் இலக்கியப்பணி.

நாஞ்சில்நாடன் ஏற்கனவே பிரபலமான எழுத்தாளர். ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கிடைத்து, இருநூறுக்கும் மேல் பாராட்டுக்கூட்டங்கள் நிகழ்ந்தபோது அவருக்கு முற்றிலும் புதிய ஒரு வாசகர் வட்டம் உருவானதை நான் கண்டேன். அவர்களில் பலர் இலக்கியத்துக்கே புதியவர்கள். தமிழகத்தில் கல்வித்துறை வழியாகவோ பொது ஊடகம் வழியாகவோ ஒருவர் இலக்கியத்துக்கு வரும் இயல்பான பாதை என ஒன்று இல்லை என்பதனாலேயே இத்தகைய இலக்கியவிழாக்கள் தேவையாகின்றன.

25 மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி அதிகாலை விழுப்புரம் சென்று சேர்ந்தேன். எழுத்தாளரும் பேச்சாளரும் கல்வியியலாளருமான ஜி.கே.ராமமூர்த்தி அதிகாலையில் ரயில்நிலையம் வந்து என்னை வரவேற்றார். அவருடைய ஊர் விழுப்புரம்தான். இமையத்துக்கு நெருக்கமானவர். வழி முழுக்கப் பேசிக்கொண்டே சென்றோம்.

முகையூர் அசதாவின் ஊரான முகையூர் வழியில்தான். அங்கே புனித மகிமைமாதா திருத்தலம் உள்ளது. மழைச்சாரல் இருந்த விடியற்காலையில் காரில் இருந்து இறங்கி மெல்லிய ஒளியில் மழையீரத்தில் மின்னிய மாதாகோயிலை சுற்றிப்பார்த்தேன். ஸ்பானிஷ்- பைசண்டைன் பாணியில் இருந்து உருவான மாதா கோயில் வடிவம். மையத்தில் அரைவட்ட டோம் கொண்டது. ஒலிப்பெருக்கியில் பிரார்த்தனை ஒலித்துக் கொண்டிருந்தது. அங்கே அப்போது எவருமில்லை.

பத்தாயம்

முகையூர் அசதா எனக்கு அணுக்கமானவர், நல்ல மொழியாக்கங்கள் செய்திருக்கிறார். வார்த்தைப்பாடு என்னும் சிறுகதைத் தொகுதி தமிழினி வெளியீடாக வந்திருக்கிறது

திருக்கோயிலூர் வழியாகச் செல்லும்போது விடிந்துவிட்டிருந்தது. காரில் தல்ஸ்தோய் -தஸ்தயேவ்ஸ்கி பற்றியும், வெள்ளையானை நாவல் பற்றியும் பேசிக்கொண்டே சென்றோம். வழியில் ஒரு கடையில் சிறந்த காபி. ராமமூர்த்தி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பவர். அவருடைய தந்தை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர். தோழர் பி.ராமமூர்த்தி நினைவாக போடப்பட்டது அவர் பெயர்.

முகையூர் மகிமைமாதா ஆலயம்

நேராக பவா செல்லத்துரையின் ’பத்தாயம்’ என்னும் அமைப்பைச் சென்றடைந்தோம். மலையாளத்தில் பத்தாயம் என்றால் களஞ்சியம். வீட்டின் முகப்பிலேயே மரத்தாலான நெற்களஞ்சியம் இருக்கும். அதேபோன்ற நெற்களஞ்சியங்களை இப்போது ஆலயங்களில் காணலாம்.

குதிர் என்றால் மண்ணால் உருவாக்கப்பட்ட பெரிய கலையம் போன்ற நெற்களஞ்சியம். முன்பு வைக்கோலாலேயே குதிர் செய்து நெல்லை உள்ளே போட்டு மேலே களிமண் பூசி உலரவைப்பார்கள். எலி துளைக்காமலிருக்க வைக்கோல் உருளைக்கு வேப்பிலை, எருக்கிலை, கைநாறி போன்ற சில இலைகளை வைத்து அதன்மேல் களிமண் பூசுவதுண்டு.

பத்தாயம் பொதுவாக காஞ்சிர மரத்தால் செய்யப்படும். காஞ்சிரத்தை எலி துளைக்காது. அதன் மடிப்புகளில் எலி துளைக்காமலிருக்க உலோகப்பட்டைகள் அறைவதுமுண்டு.

கேரளத்தின் பழையபாணி வீடுகளில் முகப்புத்திண்ணையில் வலப்பக்க எல்லையில் பத்தாயம் இருக்கும். அதன்மேலேயே ஒருவர் படுக்கும்படி கட்டில் வடிவம் இருக்கும். அத்தகைய வீடுகளுக்கு அக்காலத்தில் பத்தாயப்புரை என்று பெயர். பத்தாயப்புரையில் பத்தாயத்தில் படுப்பது குடும்பத்தின் மூத்த தாய்மாமனின், அதாவது காரணவரின், உரிமை.

பவா இலக்கியக் களஞ்சியம் என்றபொருளில் பத்தாயம் என பெயர் வைத்திருக்கலாம். அதன்மேல் படுத்திருக்கும் காரணவர் யாரென்று தெரியவில்லை. கி.ரா இருந்தவரை அவரைச் சொல்லியிருக்கலாம்.

பத்தாயம் இருக்குமிடம் பவாவின் அப்பாவால் வாங்கப்பட்ட விளைநிலம். நான் அங்கே முதல்முறையாக வந்தது 1988ல். அக்காலத்தில் அதன் மிக அருகே காடு இருந்ததாக நினைவு. பின்னர் பவா அங்கே சில குடில்களை அமைத்தார். அவை இன்று விருந்தினர் தங்குமிடங்களாக விரிவாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

அருகே ஒரு சிறிய அரங்கும் கட்டியிருக்கிறார். இரு கிணறுகள் உள்ளன, இறங்கி நீந்திக்குளிக்கும்படியாக. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்குபுறமாக இருந்த இடம் இன்று நகருக்குள் வந்துவிட்டது. சென்னையிலிருந்தும் பக்கம். ஆகவே அங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள்.

காலையில் பவா அங்கிருந்தார். மற்றும் நண்பர்கள். பவா பேசிக்கொண்டே இருந்தார். நினைவுகள், வேடிக்கை நிகழ்வுகள். பவாவிடம் பேசிக்கொண்டிருந்தால் மொத்தத் தமிழிலக்கியமும் இனிய வேடிக்கைகள் வழியாக ஒழுகி வந்திருப்பதாகத் தெரியும். அவர் உலகப்போரையே கூட அவ்வாறுதான் நினைவில் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

சென்னையில் இருந்து சண்முகம், ராஜகோபாலன், காஞ்சி சிவா வந்திருந்தார்கள். நாகர்கோயிலில் இருந்து ராம்தங்கமும், ராகுலும் வந்திருந்தனர். மதுரையிலிருந்து குக்கூ நண்பர்கள் ஸ்டாலின் தலைமையில் வந்திருந்தனர். பெங்களூரில் இருந்தும் சென்னையிலிருந்தும் ஏராளமான நண்பர்கள்.

பத்துமணிக்கு நிகழ்ச்சி. மெல்ல மெல்ல கூட்டம் திரண்டு கிட்டத்தட்ட நாநூறு பேர் வந்துவிட்டனர். அரங்கு அத்தனை பெரிய கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. பாதிப்பேர் வெளியே நின்றிருக்க வேண்டியிருந்தது.

நிகழ்வுகளை இப்போது விவரிக்க வேண்டியதில்லை. அவை உடனே சுருதி டிவி கபிலனால் அவருடைய சுருதி இலக்கியம் தளத்தில் காணொலியாக வெளியாகிவிடுகின்றன. இமையம் ஒர் அமைச்சர் போல கட்சிக் கொடிபோட்ட காரில் வந்திறங்கினார். உற்சாகமாக இருந்தார். நீண்ட நாட்களுக்குப்பின் நண்பர் எஸ்.கே.பி.கருணாவைப் பார்த்தேன்.

இமையம், கருணா இருவரின் தமையன்களும் இன்று மாநில அமைச்சர்கள். ஆனால் இருவருமே அதற்கு முற்றிலும் அப்பால் அவர்களுடைய பொருளியல் சிக்கல்களுடன் வாழ்கிறார்கள் என எனக்குத் தெரியும். இமையம் இன்னமும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்தான். அமைச்சரின் ஒன்றுவிட்ட சித்தப்பாக்களின் மூன்றாம் வீட்டுக்கு பக்கத்தில் வீட்டில் குடியிருப்பவர்கள் கோடீஸ்வரர்களாக ஆகும் தமிழக அரசியல் சூழலில் இது அரிதான ஒன்று.

மதியம் இரண்டு மணிக்கு நிகழ்ச்சி நிறைவு. அதன்பின் உணவு. வழக்கமாக பிரியாணிதான். அன்று அதற்கான சமையல்காரர் வராததனால் ஆட்டுக்கறிக் குழம்பு தனியாக. சைவ உணவுக்காரர்களான ராஜகோபாலன், காஞ்சி சிவா இருவரும் மகிழ்வடைந்தனர். பிரியாணி என்றால் வெறும் சோறும் ரசமும் சாப்பிட வேண்டியிருக்கும்.

ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக்கொண்டு சொல்லிக்கொண்டு கிளம்பினர். இமையம் சாயங்காலம் ஐந்து மணிவரை இருந்தார். அதுவரை பேசிக் கொண்டிருந்தோம். நான் முந்தையநாள் சரியாகத் தூங்கவில்லை. விடியற்காலையில் எழவேண்டும் என்றாலே நான் இரவில் தூங்குவதில்லை. ஆகவே நல்ல தூக்கக்கலக்கம். ஒருமணிநேரம் தூங்கினேன்.

ஆறரை மணிக்கு எழுந்து வந்தேன். மீண்டும் நண்பர்களுடன் உரையாடல். இரவு பதினொரு மணிக்குத்தான் தூங்கச் சென்றேன். ஆனால் அதன் பின்னரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன்பின் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இனிய நாட்களை நினைவில் சேர்த்துக் கொண்டே இருப்பதுதான் இலக்கியப் பயணங்களின் பேறுகளில் முக்கியமானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2021 11:34

நீலம் உரை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்

வெண்முரசு நாவல் நிரையின் முதல் வாசிப்பில் முதற்கனலை துவங்குகையில் வெண்முரசின் மொழிச்செறிவு எனக்கு தயக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது, எனினும் துணிந்து அந்த ஆழத்தில் இறங்கினேன் மெல்ல மெல்ல வெண்முரசின் மொழிக்கு என்ன பழக்கப்படுத்திக் கொண்டேன் ஆனால் வண்ணக்கடலுக்கு அடுத்து நீலத்தில் என்னால்  உடனே நுழைய முடியவில்லை .

நீலம் அதுவரை நான் பழகியிருந்த வெண்முரசின் மொழிநடையில் இருந்து பெரிதும் மாறுபட்டதாக,  வசனகவிதை போல, சந்தங்களுடன் கூடிய பாடலைப் போல என்னை விலக்கி வைத்தது மேலோட்டமாக வாசித்துவிட்டு பிரயாகைக்கு சென்று விட்டேன். ஆனால் ஒரு நிறைவின்மை என்னுடன் ஒட்டிக்கொண்டது. தேர்வுக்கு செல்லும் முன்னால் முக்கியமான பகுதியை படிக்க விட்டுபோன உணர்வு வருமே அதுபோல,  பயணத்துக்கு முன்பாக மிகத் தேவையானதொன்றை வீட்டில் மறந்து வைத்து விட்ட உணர்வு வருமே, அதைப்போல பிரயாகைக்குள் முழு நிறைவுடன் என்னால் இறங்கி வாசிக்க முடியவில்லை மீண்டும் நீலத்துக்கு திரும்பினேன்.

மெல்ல மெல்ல அதை  அறிந்து கொண்டு நீலத்தை என் மீதள்ளி அள்ளி பூசிக் கொண்டு நீலப்பித்தில்  முழுமையாக திளைத்தேன் எனினும், 26 நூல்களில் மீள மீள  பலவற்றை வாசிக்கும் நான் நீலத்தை பின்னர் மீள் வாசிப்புக்கு எடுக்கவேயில்லை, வாசிப்பின் போது கூடிய  அந்த பித்துநிலை என்னை அச்சுறுத்தியது .

கடலூர் சீனு இன்று நீலம் குறித்த சிறப்பு உரையின் பொருட்டு சொல்முகம் கூடுகைக்கு வந்திருந்தார். சொல்முகம் கூடுகை தொடங்கிய நாளிலிருந்து இன்றைய கூடுகையில் தான் அதிக வாசகர்கள் கலந்துகொண்டிருந்தனர். நிறைய புதுமுகங்கள், அதிலும் இளையவர்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.  ஈரோடு கிருஷ்ணன், குவிஸ் செந்தில், மீனாம்பிகை உள்ளிட்ட பலர் நீல உடையில் வந்திருந்தனர். மிகச்சரியாக 10 மணிக்கு நரேன் அறிமுகத்துக்கு பின்னர், சீனு உரையை துவங்கினார். நீலத்தை அவர் தொடவே அரைமணி நேரமாயிற்று இந்திய பண்பாடு, தொன்மம், அரசியலமைப்பு என்று ஒரு பெருஞ்சித்திரத்தை  முதலில் விளக்கினார் பண்பாடும், அரசு பரிபாலனமும் ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்தியதையும், பகவத்கீதை அதற்கு அடித்தளமாக இருந்ததையும் சொல்லி, கிருஷ்ணனுக்கு அடுத்து, ஷண்மத சங்கிரகம், சங்கரர், தத்துவரீதியாக கீதையை கட்டமைத்தது எல்லாம்  விளக்கினார்.

பின்னர் நாராயண குரு, அவரை தொடர்ந்து உலகப்போர் சூழலில் நடராஜ குரு, அவரைத் தொடர்ந்து குரு நித்யா என்று அந்த மரபின் தொடர்ச்சியை, விரிவாக ஆனால் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொன்னார் இந்த மரபில், எழுத்தையே யோகமாக கொண்ட  நீங்கள் வந்து வெண்முரசு எழுதியதை சீனு சொல்ல கேட்கையில் பெரும் திகைப்பு எனக்கு உண்டானது. வெண்முரசின் மீதிருக்கும் பிரமிப்பு மேலும் மேலும் பெருகியபடியே இருந்தது

வெண்முரசின் விதை விஷ்ணுபுரத்தில் இருப்பதை பல உதாரணங்களுடன் அழகாக சீனு விளக்கினார். வெண்முரசென்னும் இப்பேரிலக்கியத்தை வாசிப்பவர்கள் எல்லாம், வெறும் வாசகர்கள் மட்டுமல்ல,  இப்பேரிலக்கியத்தின் பங்குதாரர்கள் என்றார். இதை கேட்கையில் உடல் மெய்ப்பு கண்டது. எனக்கு வெண்முரசு முழுவதும் புரிந்தது என்பதே என் இத்தனை வருட வாழ்வின் ஆகச்சிறந்த பெருமையாக, கெளரவமாக நான் எப்போதும் நினைப்பேன் என்னை வெண்முரசின் வாசகியாக எப்போதும் எங்கும் மிகப் பெருமையுடன் முன்வைப்பேன். இன்றைய இந்த கூடுகைக்கு பின்னர் அந்த பெருமிதம் பல மடங்காகி விட்டிருக்கிறது.

வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் அசுரகுல, நாகர்குல  வரலாறுகளை சுட்டிக்காட்டி, இந்தியப் பண்பாடு எதைப் பேசுகிறதோ அதையே பேசும் வெண்முரசு,  மாமனிதர்களின் வரலாறை காவிய அழகுடன் சொல்லும் பேரிலக்கியத்தின்  கூறுகளை கொண்டிருப்பதை விளக்கினார்.

வெண்முரசின் ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது எனபதை, நிலையாக இருப்பதற்கு துருவன், நிலையற்றவளாக ஓடிக்கொண்டிருக்கும் கங்கை, பெருந்தன்மையின் வடிவமாக திருதிராஷ்டிரர் ஆகியோரை சொல்லி, ஸ்தாயி பாவம், விஷயபாவம் என்று பெரிய முக்கியமான விஷயங்களையும் எளிமையாக அங்கிருந்த அனைவருக்கும் புரியும்படி  விளக்கினார்.

நீலத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் எப்படி வேறு வேறு ஆளுமையாக வருகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொன்ன சீனுவின். இன்றைய உரையின் சிறப்பான பகுதியாக ராதா மாதவ பாவம், பகவத்கீதை இந்த இரு முனைகளுக்கிடையேயான  ஊசலாட்டத்தை  அவர்  விவரித்ததை சொல்லுவேன்.

மேலும் நீலம் எதை சொல்கிறது  என்பதை விட எப்படி சொல்லுகின்றது என்பதை கவனிக்க வேண்டும் என சொல்லியபோது மீண்டும் திகைப்படைந்தேன். வெண்முரசை முழுமையாக வாசித்தவள் என்னும் என் பெருமிதங்களை சீனு உடைத்துக் கொண்டே இருந்தார்.

கம்சனின் குரோதமும் ராதையின் பிரேமையுமாக எப்படி இரு பாதைகளும் கண்ணனையே சேருகின்றது என்பது மிக புதிதான  ஒரு திறப்பாக இருந்தது எனக்கு.

பின்னர் கண்ணனின் லீலைகளை  படிப்படியாக சொல்லிக்கொண்டு போனார் முதலில் அன்னையிடம் காட்டிய லீலை பின்னர் தோழர்களுடன், பின்னர் கோபியர்களுடன். ராதையின் பிரேமையை, பித்தை சொல்லுகையில் சீனுவின் அன்னையை குறிப்பிட்டார். அவர் மீது  பெரும் காதல் கொண்டிருந்த தந்தையின் மறைவுக்கு பின்னர் //அவர் இல்லாத உலகில் தான் எதற்கு  வாழவேண்டும் என்னும் உணர்வும், அவர்  விரும்பி வாழ்ந்த மிக அழகிய உலகிலிருந்து  ஏன் போகவேண்டும் என்னும் உணர்வுமாக// இரு நிலைகளில் ஊசலாடிய அவரது அன்னையின் மனத் தடுமாற்றத்தை சீனு  சொன்னது ராதா மாதவபிரேமையை எனக்கு மிகச்சரியாக சொல்லிவிட்டது.  மீண்டும் எனக்கு உடல் மெய்ப்பு கொண்டது.

அவரது சொல்லாட்சி பிரமாதமாயிருந்தது இன்றைய உரை முழுவதிலுமே. //ஹளபேடில் கல்லால் வடித்த காளிங்க நர்த்தனத்தை  நீலத்தில் ஜெயமோகன்   சொல்லால் வடித்திருக்கிறார்// என்றார்.

நீலக்களேபரம்,  நீலத்தாலான இருட்டிலிருந்து ராதை என்னும் சொல் வருவது இவற்றையெல்லாம்   சொல்லுகையில்,  தெளிவாக உரையை கேட்கும் பொருட்டு மின்விசிறிகள் அணைக்கப்பட்டிருந்த அந்த நிசப்தமான அறையில் சீனுவின் தொடர் உரையில் நீலப்பெருங்கடலலைகள் பெருகிப் பெருகி வந்து எங்களை மூழ்கடித்து, கரைத்து காணாமலாக்கியது.

பெண்பித்தின் மெய்யியல் என்கிறார் நீலத்தை சீனு. வந்து கொண்டிருக்கும் கண்ணனும், காத்திருக்கும் ராதையுமாக இருக்கும் சித்திரம், காத்திருக்கும் கண்ணனாகவும்,  வந்துகொண்டிருக்கும் ராதையாகவும் தலைகீழானது, அப்போது உடலால் அடையப்படும் இரு நிலையின் போது உணர்வுரீதியாக என்ன நிலைமாறுதலும், நிலையழிவும் உண்டாகின்றது என்பதை சொல்ல விஷ்ணுபுரத்தின் சாருகேசியை உதாரணமாக சொன்னது மிக பொருத்தமாக அழகாக அமைந்தது .

கோபியர்கள் மற்றும் ராதையின் ஊடலை, ஞானச்செருக்கை, ராதையின் அணிபுனைதலில் துவங்கும் கண்ணனின் ராசலீலைகளை எல்லாம் சீனு சொல்ல சொல்ல நான் நீலம் இன்னும் வாசிக்கவில்லை என்று எனக்கு தோன்றியது புத்தம் புதிதாக  நீலத்தை,  என் முன்னே ஒவ்வொரு பக்கமாக  சீனு திறந்து வைத்துக்கொண்டே  இருந்தார்

இடையிடையே ராமகிருஷ்ண பரமஹம்சரை,  விவேகானந்தரை, பின் தொடரும் நிழலின் குரலை,  ஏசுகிறிஸ்துவை,  இணைத்தும்  விளக்கினார். நீலம் போன்ற பெரும்படைப்பை எப்படி வாசிப்பது என்னும் ஒரு பயிற்சியை  சீனு இன்று எங்களுக்கு அளித்தார் என்று சொல்லலாம்.

குழலிசையை, பீலியை, பிரேமையை, குழந்தைகளின், குருதியில் நனைந்த வாளை எல்லாம் சீனு சொல்ல சொல்ல கனவிலென கேட்டுக் கொண்டிருந்தேன்.  நீலத்தை  வாசிக்கையில் வரும் பித்தை சீனு சொல்ல சொல்ல மீண்டுமடைந்தேன். நீலம் அளிக்கும் கற்பனையின் சாத்தியங்களை எப்படி விரிவாக்குவது என்பதை  பலமுறை, பலவற்றை உதாரணமாக காட்டி சொல்லிச் சென்றார்.

ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக சரளமாக எந்த தங்குதடையுமின்றி இடையில் நீர் கூட அருந்தாமல், எந்த குறிப்பையும் பார்க்காமல் தன் மனமென்னும் நீலக்கலமொன்றிலிருந்து எடுத்து எடுத்து அளிப்பது போலவும், சீனுவே நீலமென்றாகி தன்னையே எங்கள் முன்னால் படைபப்து போலவும் உணர்வுபூர்வமாக உரையாற்றினார். அவர் முகத்தின் பாவங்கள் அவர் சொல்லும் பகுதியின் உணர்வுகளுகேற்ப குரலின் ஏற்ற இறக்கங்களுடன் ஒரு நடனக்கலைஞரின் முகம் போல இருந்தது. நீலத்தை வேறெப்படி பேச முடியும்?

குடுமியும், தாடியுமாக ரிஷிகுமாரனை போலவும், ரஷ்யஎழுத்தாளரை போலவும் இருந்த,  தாடியின் நிறபேதங்களுக்கிணையான நிறத்திலிருந்த உடையணிந்திருந்த, சீனுவின் தேசலான அந்த தேகத்தினுள்ளிருந்து அவரை இத்தனை விசையுடன் எது இயக்குகிறது என்றுதான் யோசனையாக இருந்தது. இடைவேளையிலும் அவர் தேநீர் அருந்தவில்லை

10 நிமிட இடைவேளைக்கு பிறகு நீலம் குறித்த சீனுவின் உரையின் மீதான கலந்துரையாடல் நிகழ்ந்தது.

நீலம் போன்ற இலக்கியத்தை அணுக என்ன தடைகள் இருக்கும் என்பதை முதலில் விவாதித்தோம்

அதன் மொழிச்செறிவு முதல் தடையாக இருக்கலாம் என்றாலும் அந்த மொழிச்செறிவுடன்தான், எந்த குறுக்குவழியுமில்லாமல்  அம்மொழியின் ஆழத்தில் இறங்கினாலே நீலம் வாசிக்க முடியுமென்னும்  சீனுவின் கருத்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது

பக்தி மரபு வழியே நீலத்துக்கு வரலாம் என்னும் யோசனையும் சீனுவால் முன்வைக்கப்பட்டது ஆழ்வார் பாடல்களை சொல்லி சொல்லி பழகுதல் போல நீலத்தை வாய்விட்டு பாடியும் உச்சரித்தும் கூடு வாசிப்பிலும்  மனதுக்கு அம்மொழியை பழக்கலாமென்று உரையாடல்  தொடர்ந்தது.

நீலம் முதன்மையாக காட்டுவது காட்சி அனுபவமா? மொழி அனுபவமா? ராதையைவிட கம்சன் ஒரு படி மேலே வைத்து சொல்லப்படுகிறானா? என்றெல்லாம் விவாதம் மிக சுவாரஸ்யமாக தொடர்ந்தது.

ஈரோடு கிருஷ்ணன் நத்தை கொம்புணரும் காலம் பாடலை சொல்லி ’’காலில்லா உடலிலெழுந்த புரவி’’ என நத்தை சொல்லப்படுவதை விளக்கி மொழியின் இனிமையை சுட்டிக் காட்டி, ’மொழிக்கு பின்னரே காட்சி, என்றார்

அடிப்படையில்  உணர்வுபூர்வமானவர்களுக்கு  நீலம் அணுக்கமானதாகிவிடும் என்ற வாதத்தின் போது, பிற இலக்கியங்களைப் போல காரண காரியங்களின் தொடர்ச்சியை சொல்லி, அந்த சங்கிலியால் நீலம் முன்னகர்த்த படவில்லை, ஒற்றைப் பேருணர்வின் வேறு வேறு பக்கங்களை காட்டும் நூலென்பதால் சந்தங்களுடன் கூடிய பாடல்கள் வாசிப்பிற்கு துணையாகிறது என பாலாஜி சொன்னது அழகான பொருத்தமான விளக்கமாக இருந்தது. சுபாவின் குரல்பதிவுடன் வாசிப்பையும் இணைப்பது நல்ல அனுபவமாக இருக்கிறதென்பது அதை முயன்றவர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.

சீனு சந்தங்களுடனான பாடல் இல்லாத குமரித்துறைவியும் நீலத்தை போல வேதானென்று சொன்னதும் அழகு. நீலத்தின் குழலிசையின் வேறு வேறு பொருளையும் பேசினோம் அக்ரூரருக்கு கொல்லும் இசையாக, அந்தணர்களுக்கு இடையூறாக, ராதைக்கு பிரேமையின் பித்தெழச்செய்யும் இசையாக இருக்கும் குழழிசை என்று தொடர்ந்த உரையாடல், நீலம் அத்வைதத்திற்கா அன்றி விசிஷ்டாத்வைததுக்கா எதற்கு மிக அருகில் இருக்கிறது என்று நீண்டது. சீனு  ரதிவிகாரி குறித்த கேள்விக்கு மிக அழகாக காமத்தில் இணையாமல் காமத்தில் விளையாடுவதை விளக்கினார்.

நீலம்

விவாதத்தில்  கம்சனின், சிசுபாலனின் வெறுப்பின் வேறுபாடுகளும் அலசப்பட்டது.. அதீத வெறுப்புக்கும் அதீத விருப்புக்கும் இடையே நின்றாடும் கண்ணனை அனைவருமே உணர்ந்தோம் இன்று.

குரூரங்களின், வன்முறையின் அதிகபட்ச சத்தியங்களை கம்சன் மீறுவதையும், பிரேமையின் மானுட எல்லைகளின் சாத்தியங்களை ராதை மீறுவதையும் பேசினோம்.

யோகம், அன்னம், ஞானம், பிரேமம்  என பல பாதைகள் வழியே சென்று சேரும் ஓரிடம் குறித்தும், இமைக்கணத்தின் பாஞ்சாலியை, நீலத்தின் ராதையுடன் ஒப்பிட்டும் உரையாடல்  தொடர்ந்தது.

மதியம் கூடுகை நிறைவுற்றது. இளங்காற்றில் மேகப்பிசிறுகளின்றி துல்லிய நீலத்திலிருந்த வானை பார்த்தபடி ஊர் திரும்பினேன்.  ஒரு பேரிலக்கியத்தை எப்படி வாசிப்பது என்னும் அறிதலும், அதன் அழகிய கூறுகளை அருமையாக விவாதித்து அறிந்துகொண்ட நிறைவுமாக மனம் எடை கூடியிருந்தது. கூடவே நீலம் நான் இன்னும் வாசிக்கவில்லை என்னும் உணர்வும் நிறைந்திருந்தது. மீண்டும் நாளையிலிருந்து நீலத்தை வாசிக்க துவங்குகிறேன்.

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2021 11:33

குமரித்துறைவி, அச்சுநூல்

அன்பு ஜெ

எல்லோரும் சொல்வது போலவே குமரித்துறைவி was a true bliss. திருமணம் என்னும் மங்கள நிகழ்வை கடவுளுக்கே செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்னும் கதைக்கறு கேட்கும் போதே மனதுக்குள் ஒரு பிரம்மாண்டம் எழுந்து அடங்குகிறது. அதனுடன் வரலாறு சேரும் போது சொல்ல முடியாத உணர்வெழுச்சி . நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு முந்தைய நாள் படிக்க நேர்ந்தது.  video streamingல் பார்த்தாலும் அத்திருமனத்தில் என்னை ஒரு தந்தையாகவே பாவித்து கொண்டேன். வீடியோவில் ஒரு இடத்தில் தோழி தன் தந்தையை பார்த்து அழவேண்டாம் என பார்வையில் சொல்வதை பார்த்து நானும் அழுதேன். நிகழ்வு முழுக்க எனக்கு அவள் மகளாகவே தெரிந்தாள்.

என் இரு வயது மகள் நாளை திருமணம் செய்யும் தருணம் பலமுறை வந்து சென்றது. கதையை என் மனைவியிடமும் அண்ணியுடமும் சொன்னபோது அவர்களுக்கும் அழுகை. படித்த கதையை இனொருவரிடம் சொல்லும் போதே அழுகை வருகிறதென்றால் கதை எப்பேற்பட்டது என்று புரிகிறது . இப்புத்தகத்தை விவரிக்க சொற்கள் இல்லை கண்ணீர் மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே பலர் இந்த கண்ணீர் பற்றி பேசி இருப்பதால் எதையும் வெளியிட வில்லை என்று எழுதி இருந்தீர்கள். படித்த அனைவரது உணர்வையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது . இந்த உணர்வு பெருக்கை வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை என்று நினைக்கிறேன்.

இப்புத்தகம் Kindle கிடைக்கிறது புத்தகமாக வெளியுட எதுவும் திட்டம் இருக்கிறதா. அம்மா விற்கு படிக்க கொடுக்க வேண்டும். கணினி பார்த்து படிக்கும் அளவிற்க்கு அவர்கள் கண் இன்னும் பழகவில்லை. புத்தகமாக வந்தால் நிறையா பேருக்கு பரிசாக அளிக்க வேண்டும். புத்தகம் வாங்க ஏதும் வழி இருந்தால் சொல்லவும் .

நன்றி

முத்து

***

அன்புள்ள முத்து,

விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் அச்சுநூலாக குமரித்துறைவி இன்னும் சில நாட்களில் வெளியாகும். எல்லா நூல்களுமே அச்சில் வெளிவரும். இந்த கொரோனா சூழல் காரணமாக கொஞ்சம் தாமதமாகிறது

ஜெ

 

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா” முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில் உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள் இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு இன்றைய காந்தி சங்கச்சித்திரங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி நத்தையின் பாதை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2021 11:32

நூற்பு, தொடக்கம்

நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

நூற்பு ஆரம்பித்து ஐந்து வருடம் முடியும் தருவாயில், வெகுநாட்களாக மனதில் கனவாக வீற்றிருந்த செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் கொண்டு நிறைவேற ஆரம்பித்துள்ளது. எப்படியாவது கைநூற்பு மற்றும் கைநெசவு எனும் அரும் கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது நூற்பு ஆரம்பித்த தினத்தில் இருந்து ஆழமாக இருந்தது. தொடர்ச்சியாக அதே துறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதே எனக்குள் இருந்த தடையை உடைத்து கற்றுக் கொடுப்பதற்கான ஆத்மபலத்தை கொடுத்துள்ளது.

நூற்பு நெசவு பள்ளிக்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஈரோடு சித்தார்த்தா மேல்நிலைப் பள்ளியில் இருந்து இருபது மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் வந்திருந்தனர். காந்தி அரையாடை ஏற்று நூறாம் ஆண்டின் முதல் தினத்தில் பயிற்சிக்கான நாளாக அமைந்தது இறையின் அருள் என்றே கருதுகிறேன்.

முதலில் மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் இணைந்து காந்தியின் சர்வசமய பிரார்த்தனை பாடலை பாடினர். அவர்களுடைய ஒட்டுமொத்த குரலின் அதிர்வுகள் என்னையறியாமல் கண்ணீரை வரவழைத்தது. காரணம் நானும் சிவராஜ் அண்ணாவும் இதே காட்சியை பலமுறை கனவாக பேசியிருக்கிறோம். அதை நிதர்சனமாக உணருகையில், இறைக்கு நன்றிகடனாக அகம் உணர்ந்த கண்ணீரை மட்டுமே படையலாக கொடுக்க முடிந்தது.

அந்த தருணத்தில் காந்தியை, வினோபாவை, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவை, உங்களை, சிவராஜ் அண்ணாவை நன்றியோடு நினைத்துக் கொண்டேன். நீங்கள் யாரும் இல்லையென்றால் என்வாழ்வு இவ்வளவு நம்பிக்கையாக கடந்து வந்திருக்காது. இதற்காக வாழ்வின் இறுதி நொடிவரை எல்லோருக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.

பிரார்த்தனை முடிந்து, அந்த நாளின் முக்கியதுவத்தை பற்றியும் காந்தியை பற்றியும் சிறு உரையாடல் இருந்தது. பிறகு என் வாழ்வு பயணம் பற்றிய அறிமுகத்தோடு, ஆடையின் ஒட்டுமொத்த சுழற்சி பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். நிறைய பதில்கள் அவர்களிடமிருந்து விதவிதமாக வந்தது. இன்னும் ஆழமாக மாணவர்களிடத்தில் செல்ல வேண்டும் என்ற சக்தி கிடைத்தது. அந்த இளமைத்துடிப்பும் வேகமும் எனக்கான ஆர்வத்தை இன்னமும் அதிகப்படுத்தியிருக்கிறது.

உரையாடல் முடிந்து, பெட்டி இராட்டையில் இருந்து  கைநூற்பின் மூலம் பஞ்சு நூலாகும் செயல்முறையை செய்து காண்பித்தேன். அதன் பிறகு ஐந்து ஐந்து குழுவாக மாணவர்கள் பிரிந்து  அவர்களால் இயன்ற அளவில் நூல் நூற்றார்கள். நூற்பு முடிந்தவுடன், சிறியவர்களுக்கு சொல்லிக் கொடுப்பத்றாகாக இருந்த கைத்தறியில் அமர்ந்து கைநெசவு முறையில் நூல் எப்படி துணியாக மாறுகிறது என்பதையும் செயல்முறையாக செய்து காண்பித்தேன். நெசவு நெய்யும் போதே, ஒரு மாணவர் நானும் செய்கிறேன் என்று முன்வந்தது மிகவும் மகிழ்ச்சியான மனநிலையை கொடுத்தது.

ஒவ்வொருவராக சிறிய கைத்தறியில் அமர்ந்து நெய்து வந்த சப்தத்தோடு அவர்களின் சிரிப்பும் இந்த பிரபஞ்ச வெளியில் அன்று கலந்தது. அந்த தருணம் நானாக இல்லை. கைத்தறி நெசவு குறித்து பெரும் கனவு கொண்டு மறைந்த M.P நாச்சிமுத்து அய்யாவாகவும், இன்று வரை சிறிதும் குறைகூறாமல் கைத்தறி நெசவு எனும் கலையை பிடித்துக் கொண்டிருக்கும் கணபதி தாத்தாவாகவும் முத்துவின் குழந்தை ஆழிகையாகவும் மாறி மாறி நினைவு வந்துகொண்டிருந்தது. ஏன் என்று தெரியவில்லை. ஆனால், பல்லாயிரக்கணக்கான கைகள் மாறி வந்த கலையின் ஏதோ ஒரு கண்ணி அறுபடாமல் தொடரப்போகிறது, அதற்கு நூற்பு ஒரு சிறு கருவியாக இருக்கிறது என்பதை அந்த தருணத்தின் சாட்சியமாக உணர்ந்தேன்.

செயல் முறைகள் முடித்துவிட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர். ”இதற்கு முன்பு அப்பா அம்மா கடைக்கு துணி எடுக்க அழைத்துச் செல்லும்போது, அந்த கலர் பிடிக்கலை, இந்த மாடல் பிடிக்கலை என்று குறை கூறுவேன் அத்தோடு நிறைய துணிவாங்கி வைத்துக்கொள்வேன். ஆனால் இன்னிக்கு துணி எப்படி உருவாகுது,  அதற்கு எவ்வளவு பேரு வேலை செய்யறாங்க என்பதை  தெரிஞ்சுக்கிட்டேன். இனி துணியெடுக்கும்போது இதையெல்லாம் யோசிப்பேன்” என்று ஒரு மாணவி கூறினாள்.

இந்த பதில் இத்தனை வருடம் கடந்து வந்த அத்தனை கஷ்டங்களையும் காயங்களையும் தகர்த்து சிறு பூ மெல்லிய வாசனையுடன் என்னுள் மலராக மலர்ந்ததை மனப்பூர்வமாக உள்வாங்கிக் கொண்டேன்.

இது முதல் நூற்பு நெசவுப்பள்ளியில் தொடர்சியாக வகுப்புகள் நடத்துவதற்கான திட்டமிடல்களோடு பயணப்படுகிறோம் என்பதை உங்களிடம் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பெரும் செயலின் தொடக்கத்துக்கு தனது மாணவர்களை அனுப்பிய சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெயபாரதி அம்மாவுக்கும், மாணவர்களை அழைத்துவந்த ஆசிரியர்களுக்கும், பயிற்சி முடியும் வரை உதவியாய் இருந்த கோவர்த்தனன் அண்ணாவுக்கும் ராதிகா அக்காவுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் குக்கூ நண்பர்களுக்கும் சிரம் தாழ்த்தி வாழ்வின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில் கிடைத்த ஒட்டுமொத்த நல் அதிர்வுகளை உங்கள் எழுத்துக்கும், குக்கூ நிலத்திற்கும் காந்தியத்திற்கும் சமர்ப்பனம் செய்கிறேன்.

நன்மை மலர்கிறது…

நெஞ்சார்ந்த நன்றிகளோடு,

சிவகுருநாதன். சி
நூற்பு நெசவுப்பள்ளி

www.nurpu.in

நூற்பு -சிறுவெளிச்சம்

நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.