அக்டோபர் 2 நற்கூடுகை – செயல்வழி ஞானம்

குக்கூவில் சில நாட்கள்…

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

சத்திய சோதனையின் இறுதி அத்தியாயம் இவ்வாறு முடியும், அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெற்றிருக்கச் செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால்இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கடினமான பாதை என் முன்னால் இருக்கிறது என்பதை அறிவேன். என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டுவிட வேண்டும். தன்னுடன் உயிர்வாழ்வன எல்லாவற்றுக்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக்கொள்ளாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது. அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சை”.

முத்துராமன் முத்துராமன்

எண்ணத்தையும் செயலையும் ஒன்றெனக்குவிக்கும் சங்கமிப்புகளின் நீட்சியாக, வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி தினத்தில், குக்கூ காட்டுப்பள்ளியில் ‘செயல்வழி ஞானம்’ நற்கூடுகை நிகழவிருக்கிறது.

இக்கூடுகையில், கல்வியாளர் முத்துராமன் அவர்கள் பங்கேற்றுத் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார். [ ஈழத்தமிழருக்கு உதவி ]கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காகத் தன்னையும் தனது செயல்களையும் அர்ப்பணித்துள்ளார். அக்குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கான எல்லா சூழ்நிலைச் சாத்தியங்களையும் ஏற்படுத்துகிறார். முத்துராமன் அவர்களின் அனுபவ உரையாடல் நமக்கு நிச்சயம் ஓர் நற்திறப்பை உண்டாக்கும்.

மோஹனவாணி

இந்நிகழ்வில், மோகனவாணி அவர்கள் முன்னெடுக்கும் ‘பனையோலை பொம்மைகள் தயாரிப்பகம்’ துவங்கப்படவுள்ளது. [மோகனவாணி பற்றி] பனையோலை மூலம் பொம்மைகள் செய்வதை வாழ்வுப்பாதையாக ஏற்றுக்கொண்டிருக்கும் வாணி அக்காவின் செயல்முயற்சிகளின் அடுத்தபடிநிலையாக இது அமையும்.

மேலும், பொன்மணி முன்னெடுக்கும் ‘துவம்’ தையல்பள்ளி வாயிலாக ‘வண்ணத் துணிப்பைகள்’ தைத்து உருவாக்கும் செயலசைவும் துவக்கம் கொள்கிறது. அதுமட்டுமின்றி, ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் மூலமாக தூர்வாரி மீட்கப்படும் பொதுக்கிணறுகளைக் கணக்கெடுத்து ஆவணப்படுத்தும் ‘ஊர்க்கிணறு கணக்கெடுப்பு’ முயற்சியும் தொடங்கப்படுகிறது.

செயலில் தாங்கள் தொய்வுகொள்கையில் எல்லாம் காந்திய வார்த்தைகள் காந்தவிசையாக ஈர்த்தெடுத்து எழச்செய்வதை ஒவ்வொரு காந்தியர்களும் உள்ளுணர்வதுண்டு. அத்தகைய அகவிசையை நாமும் உள்ளுணர்வதற்கான நற்கூடுகையாகவே இச்சந்திப்பு அமையவுள்ளது. ஓர் பெருங்கனவினை அகமேற்றுச் செயலாற்றத் துடிக்கும் யாவருக்குமான அழைப்பு இது! வாய்ப்புள்ள தோழமைகள் இக்கூடுகையில் இணைந்துகொள்ளுங்கள். ‘செயலே ஞானம்’ என்ற அறைகூவலுக்குச் செவிசாய்க்கும் சாத்தியங்கள் நமக்குள் நிகழ இந்நிகழ்வு அனுபவத் துணையாக உடனிருக்கும்.

எங்களுடைய அனைத்துச் செயல்வழிக்கும் எழுத்துத்துணையாக உடன்வரும் உங்களுக்கு இவ்வறிவிப்பைப் பகிர்வதில் நிறைவுகொள்கிறோம். 2019ம் ஆண்டு, அக்டோபர் மாதம் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ‘செயல்வழி ஞானம்’ காந்திய நிகழ்வினையும், அதில் நீங்கள் ஆற்றிய உரையினையும், அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களையும் இக்கணம் மனதில் நிறைத்துக்கொள்கிறோம்.

உங்களுடைய கட்டுரையொன்றின் நீங்கள் குறிப்பிட்ட, “செய்வதே செயலை அறியும் ஒரே வழி; முற்றீடுபாடே செயலை யோகமென்றாக்குகிறது; நிறைவடைந்த செயல் நமக்குரியது அல்ல; செயலில் இருந்து இன்னொரு செயல்வழியாக விடுபடுவதே சரியான வழி”… என்கிற இவ்வார்த்தைகள் செயலூக்கம் தருபவைகளாக தற்கணம் வேர்கொண்டு அகத்துள் விரிகிறது.

எல்லாம் செயல் கூடும்!

~

கரங்குவிந்த நன்றியுடன்,

குக்கூ காட்டுப்பள்ளி

புளியானூர் கிராமம்

சிங்காரப்பேட்டை அஞ்சல்

thannarame@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2021 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.