Jeyamohan's Blog, page 910
September 25, 2021
சாத்தானைச் சந்திக்க வந்தவர்
ஓர் இளம் நண்பர் என்னைச் சந்திக்கவேண்டும் என்றே வந்திருந்தார். இஸ்லாமியர். இங்கே ஆளூர் பக்கம் ஏதோ திருமணம், அதற்காக திருநெல்வேலியில் இருந்து வந்தவர் என்னை விசாரித்து வந்துவிட்டார். முன்னர் எனக்கு அவரை தெரியாது. நண்பர் என ஏன் சொல்கிறேன் என்றால் அவர் என் வாசகர் அல்ல. அறம் தொகுதியின் ஓரிரு கதைகள் மட்டும்தான் பவா செல்லத்துரை சொல்லி கேட்டிருக்கிறார். இணையதளத்தை அவ்வப்போது பார்ப்பதாகச் சொன்னார்.
அவர் பதறிக்கொண்டிருந்தார். பலர் அப்படி இருப்பதுண்டு. ஆகவே இயல்பாக பேச்சுக்கொடுத்தேன். அவருடைய சூழல், வேலை ஆகியவற்றைப் பற்றி கேட்டேன். வியாபாரம் செய்கிறார். இளம்வயதுதான், ஆனால் மணமாகி குழந்தைகள் இருக்கின்றன
சட்டென்று சொற்களை சேர்த்துக்கொண்டு “உங்களை எனக்கு சுத்தமா புடிக்காது சார்” என்றார்.
“ஓகோ” என்றேன். “அப்டீன்னா எதுக்கு பாக்கவந்தீங்க?”
“சும்மா” என்றார் “பாத்துட்டு போகலாமேன்னு தோணிச்சு.”
நான் சற்று ஆர்வம்கொண்டேன். ஏன் பிடிக்கவில்லை என்று கேட்கவில்லை. அவரே சொல்வார் என தெரியும்.
“நீங்க பொம்புளைங்களைப்பத்தி கேவலமா பேசுறீங்க. அவங்க இலக்கியம்லாம் படைக்கக்கூடாதுன்னு சொல்றீங்க.”
“அப்டியா? நான் எங்க அப்டி சொல்லியிருக்கேன்?”
“சொல்லியிருக்கீங்க” என்று திக்கினார். முகம் வியர்வையுடன் படிக்காமல் வந்த பள்ளிக்குழந்தைபோல இருந்தது.
“இதோ பாருங்க, ஒரு குற்றச்சாட்டைச் சொல்றீங்க. நீங்கதானே ஆதாரம் குடுக்கணும்… இல்லை அதுக்கு நான் ஆதாரம் குடுக்கணுமா?”
“அப்டீன்னு பொம்புளைங்க சொல்றாங்க.”
“எந்தப் பொம்புளைங்க?”
“நெறையபேர்”
“என்னுடைய இணையதளத்திலேதான் இப்ப நிறைய பெண்கள் எழுதறாங்க. பல பெண்எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கேன். தமிழிலே எழுதுற எல்லா முக்கியமான பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் விரிவா எழுதியிருக்கேன். நான் எப்டி பொம்புளைங்க எழுதக்கூடாதுன்னு சொல்வேன்னு நீங்க நினைக்கலையா?”
“நீங்க பொம்புளைங்களுக்கு எதிரானவர்னு பலபேரு சொல்றாங்க.”
வழக்கமாக இந்தவகையானவர்களை ஐந்தே நிமிடத்தில் மென்மையாகப் பேசி அனுப்பிவிடுவேன். அன்றைக்கு எழுத எண்ணியது சரியாக வரவில்லை. பொழுதுபோகாத நிலை. ஆகவே இது எதுவரை போகும் என்று பார்க்கலாமென முடிவுசெய்தேன்.
“நல்லா யோசிச்சுப்பாருங்க, நான் எனக்கு நல்லா எழுதுறாங்கன்னு தோணுறவங்களைப் பத்தித்தான் பாராட்டி எழுத முடியும் இல்லியா? அப்டி நாலஞ்சுபேர்தான் இருக்கமுடியும். ஆனா எதையாவது எழுதுற பெண்கள் நூறுபேர் இருப்பாங்க. அவங்களுக்கு என் மேலே கோபம் இருக்கலாம் இல்லியா? அத்தனை பேரையும் நான் பாராட்டினா நீங்க ஏத்துக்கிடுவீங்களா?”
”பொம்புளைங்க தப்பான வழியிலே போய் எழுத சான்ஸ் தேடுறதா நீங்க எழுதினீங்க.”
“அப்டி எழுதினா என் தளத்திலே இத்தனை பெண்கள் ஏன் எழுதறாங்க? அவங்களுக்கு ரோஷம் இல்லியா?”
அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
நான் விளக்கினேன் “பத்து வருசம் முன்னாடி நான் சொன்னது இதுதான். பரவலா அறியப்படுற பல பெண்கள் தங்களை முன்வைக்கிற அளவுக்கு படைப்புகளை முன்வைக்கலை. ஊடகங்களிலே தொடர்ச்சியா பேட்டிகள், கட்டுரைகள் வழியா அவங்க ஒரு பிம்பத்தை முன்வைக்கிறாங்க. சமூகச் செயல்பாட்டாளர்ங்கிற பிம்பம், கலகக்காரர்ங்கிற பிம்பம் இதையெல்லாம் முன்வைச்சு படைப்பாளியா அறியப்படுறாங்க. அவங்க படைப்புகள் அந்த அளவுக்கு இல்லை. படைப்பாளியா அவங்க வெளிப்படணும். இவ்ளவுதான் நான் சொன்னது.”
நான் சொன்னேன். “அதுகூட அப்ப இருந்த சில முகங்களைப் பத்தி. அவங்க யாரும் இப்ப கவனத்திலே இல்ல. யாராலேயும் தொடர்ந்து எழுதி நிலைகொள்ள முடியலை. ஏன்னா அப்ப இருந்த ஊடகங்கள் இப்ப இல்லை. இப்ப இருக்கிற வாசகர்களுக்கு அவங்க என்ன எழுதியிருக்காங்கங்கிறதுதான் முக்கியம்… எழுத்திலே அவங்க தேறலை. நான் சொன்னதுதான் காலத்திலே உறுதியாகியிருக்கு.”
அவர் அசைந்து அமர்ந்தார். நடுங்கும் விரல்கள், நடுங்கும் உதடுகள், தடுமாறும் விழிகள். “நீங்க எழுத்தாளர்களை எல்லாம் அவமானப்படுத்துறவர். செத்துப்போன எழுத்தாளர்களை அவமானப்படுத்திறீங்க.”
நான் புன்னகையுடன் “தமிழிலே எழுதிய எல்லா முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றியும் மிகவிரிவான விமர்சனங்கள் எழுதியிருக்கேன். பல எழுத்தாளர்களைப் பற்றி என்னைத்தவிர யாருமே ஒருவரிகூட எழுதினதில்லை. என் தலைமுறையிலே எழுதிட்டிருக்கிற எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் விரிவா எழுதியிருக்கேன். இளம் எழுத்தாளர்களை பற்றி எழுதியிருக்கேன். அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செஞ்சிருக்கேன். எல்லாமே புத்தகங்களா வந்திருக்கு”
அவர் எதையும் அறிந்ததில்லை என்று கண்களில் இருந்து தெரிந்தது.
“தமிழிலே எழுத்தாளர்களோட முழுமையான விரிவான பேட்டிகளை எடுத்திருக்கேன். சிலரோட முழுமையான பேட்டிகள் முதல்முறையா நான் எடுத்ததுதான். எழுத்தாளர்களோட படங்களை அட்டையிலே போட்டு வந்த முதல் இலக்கியஇதழ் என்னோடதுதான். சொல்புதிதுன்னு பேரு. பல எழுத்தாளர்களுக்கு விழாக்கள் எடுத்திருக்கேன். அவங்களைப்பற்றி கருத்தரங்குகள் நடத்தியிருக்கேன். மலர்கள் போட்டிருக்கேன். இப்ப எழுத்தாளர்களுக்கு விருதுகள் கொடுக்கிறோம். ஆவணப்படங்கள் எடுக்கிறோம். புத்தகங்கள் போடுறோம்.”
நான் சொன்னேன் “நான் எழுத வந்த ஆண்டிலே இருந்து இந்த முப்பதாண்டுகளிலே இன்னொரு எழுத்தாளரைக் கொண்டாடுறதுக்கு விழாவோ கூட்டமோ நடத்தாத ஒரே ஒரு ஆண்டுகூட இருந்ததில்லை. எனக்காகவோ என் நூல்களுக்காகவோ ஒரு கூட்டம்கூட நான் ஏற்பாடு செய்ததில்லை. இனிமேல் செய்யப்போறதுமில்லை. நான் செய்தது எல்லாமே தமிழிலே யாரெல்லாம் முக்கியமோ அவங்களுக்காகத்தான்.”
அவர் மறுப்பதுபோல தலையசைத்தார்.
“சரி சொல்லுங்க, தமிழிலே இதையெல்லாம் என்னைத்தவிர வேறு யாராவது செய்திருக்காங்களா? சரி, தமிழிலக்கிய வரலாற்றிலேயே இன்னொரு எழுத்தாளர் செஞ்சிருக்காங்களா? இன்னொரு எழுத்தாளருக்காக எதையாவது செய்த வேறு ஏதாவது ஒரு எழுத்தாளரோட பெயரை கொஞ்சம் சொல்லமுடியுமா?”
அவர் என்னை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
“பட்டியல் வேணுமானா தரேன்” என்றேன்.
அவர் என்ன என்று புரியாமல் தலையசைத்தார்.
“இப்பவும் எழுத்தாளர்களுக்கான நிதியுதவிகள் வரை செஞ்சிட்டிருக்கோம். இப்ப ஒரு எழுத்தாளருக்கு விருது கிடைச்சா அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிக்குடுக்க எந்த பத்திரிகையாளரும் முதலிலே கேட்கிறது எங்கிட்டதான். நான் உறுதியா எழுதுவேன்னு அவங்களுக்கு தெரியும். இங்க ஒரு எழுத்தாளரோட பாராட்டுவிழாவுக்கு இன்னொரு எழுத்தாளர் போகமாட்டார். நான் எந்த தயக்கும் இல்லாம போவேன். இப்பகூட இமையம் சாகித்ய அக்காதமி விருது வாங்கினதுக்கான பாராட்டுவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு போகப்போறேன்” என்றேன்.
“இவ்வளவுக்கு அவர் என் மேலே நல்லெண்ணம் உள்ளவர் கிடையாது. இதுவரை பலமுறை என்னை திட்டி மட்டும்தான் எழுதியிருக்கார். அது அவரோட நிலைபாடு. எனக்கு அவர் முக்கியமான எழுத்தாளர்ங்கிற எண்ணம் இருக்கு. அவரோட நூல்களைப்பற்றி விரிவா எழுதியிருக்கேன். அவ்ளவுதான் என்னோட நிலைபாடு…சொல்லுங்க, நான் எந்த எழுத்தாளரை அவமானப்படுத்தினேன்?”
“நீங்க சுகுமாரனை திட்டினீங்க” என்று அவர் சொன்னார்.
“ஆமா, ஆனா அவரைப்பற்றி தமிழிலேயே கூடுதலா பாராட்டி எழுதினவன் நான்தான். பல கட்டுரைகள். அவரோட ஒரு தனிப்பட்ட சிறுமை எனக்கு கோபம் வரவழைச்சது. அதனாலே ஒரு வரி சொன்னேன். அதுக்கு மன்னிப்பும் கேட்டுகிட்டேன். சரி, அப்றம்?”
”நீங்க மனுஷ்யபுத்திரன் ஊனமுற்றவர்னு எழுதினீங்க.”
“எங்க எழுதினேன்?”
“நீங்க எழுதினீங்க” என்று உரத்தகுரலில் சொன்னார்.
“சொல்லுங்க, எங்க?”
“பலபேரு சொல்றாங்க.”
“முப்பதாண்டுகளா நான் அவரோட கவிதைகளைப் பற்றி எழுதிட்டிருக்கேன். அவர் சின்னப்பையனா இருந்த காலம் முதல் அவரை வாசிச்சு முன்வைச்சிட்டிருக்கிற விமர்சகன் நான். அவரை அவர் தலைமுறையிலே தமிழிலே பெரிய கவிஞர்னு விடாம இந்த நாள் வரைச் சொல்லிட்டிருக்கிறவன் நான்.”
“அப்டியா?”
“அவரோட கவிதைகளைப் பாராட்டி விரிவா ஆராய்ஞ்சு ஒரு கட்டுரை எழுதினேன். அவரோட ஆரம்ப கவிதைகளிலே அவரோட உடற்குறை பற்றிய தன்னிரக்கம் இருக்கு. அவர் தன் உடல்குறையை முன்வைச்சு எழுதியிருக்கார். அந்த கவிதைகளிலே இருக்கிற அந்த தன்னிரக்கம் பின்னாடி எல்லாவகை ஒடுக்கப்பட்டவர்களோடயும் அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு விரிவான மனநிலையா மாறிட்டுது. அந்த மாற்றம் நடந்தபிறகுதான் அவரோட கவிதைகள் இன்னும் ஆழமா ஆச்சுன்னு எழுதியிருக்கேன். அதைத்தான் திரிச்சு இப்டி சொல்றாங்க.”
“ஓ” என்றார். அதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை.
“அவர் உடற்குறை உள்ளவர்ங்கிறதை பற்றி வேறு என்ன சொல்லியிருக்கேன், எங்க சொல்லியிருக்கேன்? சொல்லுங்க…”
“இல்ல, மத்தவங்க சொல்லித்தான் தெரியும்”
“சரி, படிச்சுப்பாருங்க. எல்லாமே என் இணையதளத்திலே இருக்கு.”
அவர் “நீங்க பாப்ரி மசூதி இடிப்பை ஆதரிச்சீங்க” என்றார்.
“இல்லை, நேர்மாறா நான் 1989 முதல் தொடர்ச்சியா பத்து கட்டுரைகளுக்குமேல் பாப்ரி மஸ்ஜித் விவகாரம் பத்தி கண்டிச்சு எழுதியிருக்கேன். தினமணியிலேயே ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்.”
“நீங்க கல்பூர்கி, கௌரி லங்கேஷ் கொலையை ஆதரிச்சு எழுதினீங்க.”
“அப்பட்டமான பொய். தெளிவா திட்டவட்டமா கடுமையா அதை கண்டிச்சு எழுதியிருக்கேன். ஒரு கட்டுரை இல்லை, பல கட்டுரைகள். ஒருமொழியிலே இல்லை, மூணுமொழியிலே. அந்தக் கொலையை இந்துத்துவ அமைப்புகள் செஞ்சிருக்கலாம்னு சொல்லி அவங்களைக் கண்டிச்சே எழுதியிருக்கேன். எல்லாமே என் இணையதளத்திலேயே இருக்கு. நீங்க படிக்கலாம்.”
அவர் திகைத்து அமர்ந்திருக்க, நான் தொடர்ந்தேன் “அதுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னாடி எம்.எஃப்.ஹுசெய்ன் இந்துத்துவர்களால் தாக்கப்பட்டப்ப அவரை ஆதரிச்சு பல கட்டுரைகள் எழுதியிருக்கேன். மூணுமொழிகளிலே. அவருக்கு வெண்முரசு நாவல்களிலே ஒண்ணை சமர்ப்பணம் செஞ்சிருக்கேன். எம்.எம்.பஷீருக்கு எதிரா இந்துத்துவர்கள் தாக்குதல் நடத்தினப்ப தமிழிலேயும் மலையாளத்திலேயும் கண்டிச்சு எழுதியிருக்கேன். அந்நிலைபாட்டிலே மாற்றமே இல்லை…”
அவர் தன் நினைவில் தேடுகிறார் என்று தெரிந்தது. பிறகு “பெரியார் வைக்கம் போராட்டத்திலே கலந்துக்கவே இல்லைன்னு நீங்க அவதூறு எழுதினீங்க” என்றார்.
“வைக்கமும் காந்தியும்னு விரிவா எழுதியிருக்கேன். படிச்சிருக்கீங்களா.”
“இல்லை, அதப்பத்தி வந்த புக்கை படிச்சேன்.”
“நான் சொன்னது இதுதான். வைக்கம் போராட்டம்கிறது பல ஆண்டுகள் நடந்தது. காந்தி, நாராயணகுரு உட்பட பல பெரிய தலைவர்கள் அதிலே கலந்திட்டிருக்காங்க. அதை தொடங்கி நடத்தினவர் டி.கே.மாதவன். அவரோட வாழ்நாள் சாதனை அது. பல பத்திரிகைகளே அதுக்காக ஆரம்பிச்சாங்க. அதை தொடங்கி நடத்தி முடிச்சவங்க அந்தத் தலைவர்கள்தான். பெரியார் மூணுமாசம் மட்டும் அதிலே கலந்துகிட்டார், சிறைசென்றார். ஆனா அவர் அதை தொடங்கலை. தலைமைதாங்கி நடத்தலை.. அதை அவர் முடிச்சும் வைக்கலை” என்றேன்.
“ஆனா இங்க உள்ள வரலாறுகளிலே பெரியார் வைக்கம் போராட்டத்தை தொடங்கினார்னு எழுதியிருக்காங்க. Periyar launched Vaikkom struggle னே எழுதியிருக்காங்க. நாம நடத்தின ஒரு போராட்டத்தைப் பற்றி மலையாளிகள் இப்டி எழுதினா நாம ஒத்துக்குவோமா? அங்கே தலைவர்கள் இல்லைன்னு பெரியாரை அழைச்சாங்கன்னு புத்தகங்களிலே எழுதியிருக்காங்க. அது இந்தியாவுக்கே முன்னோடியான அவ்ளவுபெரிய போராட்டத்தை தொடங்கி விடாப்பிடியா பல ஆண்டுகளா நடத்தி ஜெயிச்ச தலைவர்களை இழிவுபடுத்துறதுதானே? அப்டி செய்யலாமா? நம்ம தலைவர்களை அப்டி இழிவுசெய்ய நாம விட்டிருவோமா? நான் சொல்றது அவ்ளவுதான்.”
“நீங்க இலங்கையிலே படுகொலைகள் நடக்கலைன்னு சொன்னீங்க” என்று அவர் இன்னொருபக்கம் தாவினார்.
“இல்லை, சொல்லலை.”
“சொல்றதா பலபேர் சொல்றாங்க”
“சொல்லுங்க, நான் எங்க சொன்னேன்? ஆதாரம் காட்டுங்க.”
“பலபேர் எழுதியிருக்காங்க.”
“சரி, அவங்க காட்டுற ஆதாரம் என்ன?”
அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
“இலங்கையிலே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டாங்க அப்டீன்னுதான் நான் சொல்லியிருக்கேன். ஆனா இலங்கையிலே நடந்தது ஒரு உள்நாட்டுப்போர். அங்கே ஆயுதமேந்திய ஒரு அரசராணுவம் சிவிலியன்ஸை கொன்று இன அழித்தொழிப்பு செய்யலை.விடுதலைப்புலிகளும் ஆயுதமேந்திய ராணுவம்தான்.முதல் வன்முறையை தொடங்கியது புலிகள்தான். அவங்களும் சிங்களர்களை கொன்னிருக்காங்க. அது உலகம் முழுக்க தெரியும். அப்ப சர்வதேச அரங்கிலே சிங்கள அரசு தமிழர்களை இனப்படுகொலை பண்ணினாங்கன்னு சொன்னா அது எங்கயுமே எடுபடாது. மாறாக இலங்கை அரசு போர்நெறிகளை மீறி சாதாரணக் குடிமக்களை கொல்லுது, அது போர்க்குற்றம்னுதான் சொல்லணும். அப்பதான் உலகம் கவனிக்கும். ஏதாவது நல்லது நடக்கும். இதான் நான் சொன்னது.”
“இது நான் சொல்றது மட்டுமல்ல. இது எரிக் சோல்ஹைம் மாதிரி இலங்கையை கவனிக்கிற அத்தனை பேரும் சொல்றதுதான். இனப்படுகொலைன்னு சொல்லிக்கிட்டா நமக்குக் கொந்தளிப்பா இருக்கலாம். ஆனா உலகம் அதை ஏற்றுக்கொள்ளலைன்னா அதனால என்ன பயன்? இப்பவரை உலகத்தின் எந்த சபையும் அதை ஏத்துக்கலைங்கிறதுதான் உண்மை. போர்க்குற்றம்னு சொல்லியிருந்தா உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பிருந்தது. அதை தவறவிட்டாச்சு… ”
“அப்டியா?”
“தடம் இதழிலே வந்த பேட்டி அது. நீங்க படிச்சுப்பாக்கலாம். சரி, நான் சொன்னது இது. இதை ஒருத்தர் மறுக்கலாம். ஆனா படுகொலைகளே நடக்கலைன்னு நான் சொல்றதா நேர் தலைகீழா அதை ஏன் திரிக்கிறாங்க? அப்டி திரிக்கிறவங்களோட நோக்கம் என்ன?”
“இலங்கை எழுத்தாளர்களை பூச்சிமருந்து அடிச்சு கொல்லணும்னு நீங்க சொன்னீங்களே.”
நான் சிரித்துவிட்டேன் “தமிழ்நாட்டிலே இலங்கைத்தமிழ் எழுத்துக்களைப் பற்றி விரிவா ஆராய்ஞ்சு அனேகமா அத்தனை பேரை பற்றியும் கட்டுரை எழுதி புத்தகங்களா போட்ட இன்னொரு விமர்சகரோட பேரைச் சொல்லுங்க.”
அவர் “நீங்க எழுதியிருக்கீங்களா?” என்றார்.
“பல புத்தகங்களா நான் எழுதினதெல்லாம் கிடைக்குது… நான் கவனிக்காத ஒரு நல்ல ஈழ எழுத்தாளரோட பெயரை நீங்க சொல்லுங்க.”
“அப்ப ஏன் பூச்சிமருந்து அடிக்கணும்னு சொன்னீங்க?”
“இலங்கையிலே இருக்கிற நல்ல கவிஞர் நாலைஞ்சுபேரோட பெயரைச் சொன்னேன். மு.பொன்னம்பலம்னு ஒருத்தர் கிட்டத்தட்ட அம்பது அறுபது கவிஞர்களோட பெயர்களைச் சொல்லி அத்தனைபேரும் நல்ல கவிஞர்கள்னு சொன்னார். அப்டி ஒரு பட்டியல்போட்ட அதுக்கு என்ன அர்த்தம்?”
“என்ன?”
“தமிழ்நாட்டின் தலைசிறந்த நடிகர்கள்னு சிவாஜி, கமல், நாசர்னு ஆரம்பிச்சு நூறுபேரை மொத்தமாப் பட்டியல்போட்டா ஏத்துக்கிடுவீங்களா?”
“அதெப்டி?”
”அது சிவாஜிக்கும் கமலுக்கும் அவமானம்தானே?”
“ஆமா”
“அதைத்தான் சொன்னேன். அப்டி அம்பது நூறுன்னு கவிஞர்கள் இருக்கக்கூடாது, அது களை மாதிரி. களைக்கு பூச்சிமருந்து அடிக்கலாம்னு வேடிக்கையாச் சொன்னேன்”
நீண்ட அமைதி. அவர் என் நூலகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.
“அவ்ளவுதானா?” என்றேன்.
“கமலாதாஸ் அசிங்கமா இருக்காங்கன்னு நீங்க சொல்லலியா?”
”கமலாதாஸ் எனக்கு தனிப்பட்டமுறையில் நெருக்கமானவங்க. என் ஆசிரியர் நித்யசைதன்ய யதிக்கும் அவங்க நெருக்கம். நான் ஏன் அவங்களைப்பற்றி அப்டி சொல்லணும்?”
“நீங்க சொன்னதாச் சொன்னாங்களே”
“சரி, கமலாதாஸோட முதல் சிறுகதைதொகுதி எப்டி தமிழிலே வெளிவந்தது?”
“எப்டி?”
“என்னுடைய முன்னுரையோட, என் முயற்சியிலே, என் நண்பர் நிர்மால்யா மொழியாக்கத்திலே வந்தது. அப்ப கமலா தாஸ் உயிரோட இருந்தாங்க…”
“அப்ப ஏன் அப்டி சொன்னீங்க?”
“நான் என்ன சொன்னேன்னு தெரியுமா உங்களுக்கு?”
“அதப்பத்தி சிலர் சொன்னதை வாசிச்சேன்.”
“கமலாதாஸ் என் கதைன்னு ஒரு புத்தகம் எழுதினாங்க. அதில் அவங்களோட திருமணம் மீறிய பாலுறவைப்பற்றி எழுதினாங்க. அது புகழ்பெற்ற நூல். பின்னாடி அவங்களே அந்தப்புத்தகம் அவங்க பொய்யா கற்பனையிலே எழுதினதுன்னு சொன்னாங்க. அதனாலே அந்த புத்தகத்தை ஒரு புனைவாத்தான் எடுத்துக்கிடணும், அதைவைச்சு அவங்களை மதிப்பிடக்கூடாதுன்னு சொன்னேன். அவங்களை அந்த ஒரு புத்தகத்தை வைச்சு கொண்டாடி அவங்க ஒரு சுதந்திரப்பாலியல் கொண்ட பொம்புளைன்னு அடையாளப்படுத்துறவங்களுக்கான பதிலா அதைச் சொன்னேன்” என்றேன்.
“அவங்களை தத்தளிப்பும் அலைமோதலும் கொண்ட கலைஞராத்தான் எடுத்துக்கிடணும். அவங்க தெளிவான சிந்தனையும் நிலைபாடும் கொண்ட ஆக்டிவிஸ்ட் கிடையாது. இதான் நான் சொன்னது. இதை அவங்க இருக்கிறபோது அவங்களோட சிறுகதைத் தொகுதிக்கு எழுதின முன்னுரையிலேயே சொல்லியிருக்கேன். அவங்களே வாசிச்சிருக்காங்க…” என்று தொடர்ந்தேன்.
“அவங்களுக்கு தான் அழகா இல்லை, தன் குடும்பத்திலே மத்தவங்க அழகா இருக்காங்ககிற காம்ப்ளெக்ஸ் இருந்தது. அதனாலேயே அதீதமான நிலைபாடுகளை எடுக்கிறவங்களா இருந்தாங்க. அவங்க அதிதீவிர கிருஷ்ணபக்தையா ஆனாங்க. சட்டுன்னு இஸ்லாமுக்கு மாறினாங்க. பிறகு இஸ்லாமிலே இருந்து வெளியேறப்போறேன்னு சொன்னாங்க. அதெல்லாமே கலைஞரோட அந்த நிலையில்லாமைதான்… நான் சொன்னது அதுதான்.”
“அவங்க அசிங்கமா இருக்காங்கன்னு சொன்னது?”
“அது நான் சொன்னது இல்லை. அவங்களே அவங்களைப்பற்றிச் சொல்லிக்கிட்டது. நான் அவங்களோட அந்த தாழ்வு மனநிலையைத்தான் வாசகன் கவனிக்கணும்னு சொன்னேன்…”
அவர் தெளிவடைந்தாரா என எனக்கு தெரியவில்லை. ஆனால் நடுக்கம் நின்றுவிட்டது.
சம்பந்தமே இல்லாமல் “தமிழை இங்கிலீஷ்லே எழுதணும்னு சொல்றீங்க, அது தமிழை அழிக்கிற முயற்சி” என்றார்.
“இந்தியமொழிகளை ரோமன்லிபியிலே எழுதணும்னு சொன்னவர் அம்பேத்கர்” என்றேன்.
அவர் அதற்கு பதில் சொல்லாமல் இன்னொரு பக்கம் தாவி “இஸ்லாமியர்கள் பக்கத்திலே வந்தாலே புடிக்கலைன்னு நீங்க சொன்னீங்களே?”
“எப்ப?”
“நீங்க சொன்னதா பலபேர் எழுதியிருக்காங்க”
“பாருங்க, இது பெரிய பழி. இதைச் சொல்ற நீங்க ஆதாரம் காட்டணும் இல்லியா? இப்ப நீங்க ஒரு திருடர்னு நான் சொன்னா கொதிச்சுப்போக மாட்டீங்களா? ஆதாரம் கேப்பீங்களா இல்லியா?”
“நெறைய ஆதாரம் இருக்கு”
“ஒரு ஆதாரம் சொல்லுங்க”
“…. எழுதியிருக்கார்”
“அவர் ஏதாவது ஆதாரம் குடுக்கிறாரா?”
“அவரு சொல்றது ஆதாரம்தானே?”
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “உங்களைப்பத்தி நான் சொல்றதை ஆதாரமா எடுத்துக்கிட்டு இன்னொருத்தர் உங்களை திருடர்னு சொன்னா ஏத்துக்குவீங்களா?”
“அப்ப நீங்க சொல்லலையா?”
”எனக்கு ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. சதக்கத்துல்லா ஹசனிங்கிற நண்பரோட சேர்ந்துதான் சொல்புதிது இதழையே நடத்தினேன். விஷ்ணுபுரம் அமைப்பிலேயே இஸ்லாமியர் உண்டு. குடும்பநண்பர்களா இஸ்லாமியர் உண்டு… எங்களோட எந்த விழா ஃபோட்டோவிலயும் நீங்க அதைப்பாக்கலாம். நான் இஸ்லாமிய தர்காக்களுக்கு போறதைப் பத்தி எழுதியிருக்கேன். என் வெண்முரசு நாவல்களில் ஒண்ணு ஓச்சிற உப்பாங்கிற சூஃபிக்கு சமர்ப்பணம் பண்ணியிருக்கு… அப்ப நான் எப்டி அப்டி சொல்லமுடியும்?”
“நீங்க அப்ப என்ன சொன்னீங்க?”
“நான் சொன்னது இதுதான். எந்தவகையிலும் அடிப்படைவாதிகளை என்னாலே ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மதமானாலும் அப்டித்தான். என்னை அழைச்சு பேசவைச்ச ஒரு அமைப்பு சில ஆண்டுகள் கழிச்சு அர்ஜுன் சம்பத்தை கூப்பிட்டபோது நான் கடுமையா எதிர்வினை ஆற்றினேன். அடிப்படைவாதத்தை ஏத்துக்க முடியாதுன்னு சொன்னேன். அப்ப அந்த விவாதத்திலேதான் இன்னொண்ணையும் சொன்னேன். ஒருமுறை ஒரு மேடையிலே இதேமாதிரி ஜவஹருல்லாகூட உக்காரவேண்டிய சூழல்னு தெரிஞ்சுது, நான் தவிர்த்திட்டேன். அவரைமாதிரி ஒரு அடிப்படைவாதிகூட அமர்வதை நினைச்சாலே நடுக்கமா இருந்ததுன்னு சொன்னேன். நான் சொன்னது இதுதான்.”
“அவரு இஸ்லாமியர்தானே?”
“அடிப்படைவாதிகூட சேரமுடியாதுன்னு நான் சொன்னதை முஸ்லீம்கூட சேரமுடியாதுன்னு யாரு மாத்தினது? முஸ்லீம்கள் எல்லாருமே அடிப்படைவாதிகள்னு சொல்றதுமாதிரிதானே அது?” என்றேன்.
அவர் பேசாமலே அமர்ந்திருந்தார்.
“யோசிச்சுப்பாருங்க. நான் சொல்றது எல்லாமே அச்சிலே, இணையதளத்திலே இருக்கு. யார் வேணும்னாலும் உடனே தேடி படிச்சுப்பாக்கலாம். என்னைப்பத்தி இங்க உலவுற எல்லா குற்றச்சாட்டுகளையும் சொல்லிட்டீங்க. எல்லாமே நான் சொன்னதை திரிச்சு, தப்பா அர்த்தம் கொடுத்து மத்தவங்க சொல்றது. நான் சொல்றதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை. பலசமயம் நான் சொல்றதை நேர் எதிராகூடத் திரிச்சிருக்காங்க. நீங்க நான் சொன்ன எதையுமே படிக்கலை. என்னைப்பத்தி திரிச்சு சொல்லுற எல்லாத்தையும் தேடித்தேடி படிச்சு அபிப்பிராயம் உண்டு பண்ணியிருக்கீங்க…”
“அதெல்லாம் இல்லை” என்றார்.
”இதே பாணியிலே நான் மத்தவங்களைப்பத்தி வேணும்னே திரிச்சு அவங்க சொல்லாததை சொன்னதா எடுத்துக்கிட்டு பேசினா நீங்க ஏத்துக்கிடுவீங்களா? நான் எழுத்தாளர்களை திட்டுறேன்னு பொய் சொல்றாங்க. என்னை இவங்க திட்டுற இந்த ஆபாச மொழியிலே நான் எப்பவாவது யாரையாவது திட்டினா என்ன சொல்லுவீங்க? சரி, என்னை இந்த ஆபாசமொழியிலே திட்டுறவங்களைப் பத்தியாவது நான் திரும்பி ஏதாவது திட்டியிருக்கேனா?”
அவர் கண்கள் அலைமோதின. திணறிக்கொண்டிருந்தார்.
“சொல்லுங்க, வெறும் மோசடியாலே உங்களோட எல்லா அபிப்பிராயங்களையும் இன்னொருத்தர் உருவாக்கிறார்னா அவர்தானே உங்களை ஏமாத்துறவர்? தன்னொட தனிப்பட்ட காழ்ப்புகளை உங்கமேலே ஏத்தி உங்களை தூண்டிவிடுறார்னா அவர்தானே உங்களுக்கு எதிரி?”
சட்டென்று அவர் உரத்தகுரலில் “நீங்க அப்டியெல்லாம் மழுப்ப முடியாது. எல்லாத்தையும் சொல்லிட்டு அதை மழுப்பறீங்க… உங்களைப் பத்தி சொன்னாங்க. உங்களை வாசிக்கக்கூடாது. வாசிச்சா பேசிப்பேசி கன்வின்ஸ் பண்ணிடுவீங்கன்னு. நீங்க அபாயமான ஆள். எல்லாத்தையும் சமாளிச்சிருவீங்கன்னு சொன்னாங்க. சாத்தான் எல்லாத்தையும் சமாளிச்சிரும்னு சொன்னாங்க. இப்ப அப்டித்தான் பேசுறீங்க….” என்றார்.
நான் புன்னகைத்தேன். வேறென்ன செய்ய?
”நீங்க என்ன சொன்னாலும் ஏத்துக்கிட முடியாது. நான் மறுபடி போய் எல்லாத்தையும் படிச்சுட்டு வாறேன். உங்க தர்க்கபுத்தியாலே என்னை மடக்கிட்டீங்க… அதெல்லாம் உங்களோட திறமைதான்.”
”சரி பாருங்க… மறுபடி பார்ப்போம்.”
அவர் எழுந்து சென்றபோது முகம் கசப்பில் நிறைந்திருந்தது. கண்களில் கண்ணீர்ப்படலம் போல ஈரம். தாடை இறுகியிருந்தது.
“ஒண்ணு சொல்லவா?” என்றேன். “நாம இப்ப பேசினதையேகூட நீங்க இங்கேருந்து போற வழியிலேயே திரிக்க ஆரம்பிப்பீங்க… நான் உங்களை அவமானப்படுத்தினதாக்கூட உங்க நண்பர்கள் கிட்ட போய்ச்சொல்வீங்க.”
அவர் கோபமாக ஏதோ சொல்வதுபோல உதட்டை அசைத்தார். ஆனால் சொல்லவில்லை.
“நான் நம்ம பேச்சை ரெக்காட் பண்ணியிருக்கேன்” என்று புன்னகைத்தேன்.
அவர் திகைத்தவர் போல பார்த்தார்.
“பயப்படாதீங்க. உங்க நண்பர்கள் நான் ரெக்கார்ட் பண்ணினதை காட்டினாக்கூட நீங்க சொல்றதைத்தான் நம்புவாங்க” என்றேன்.
அவர் வேகமாக நடந்தார். நான் ஒன்றும் ரெக்கார்ட் பண்ணவில்லை என்று சொல்லியிருக்கலாம். அவருக்கு மேற்கொண்டு ஊக்கத்துடன் செயலாற்ற ஒரு வாய்ப்பு கொடுத்தது போல் இருந்திருக்கும், கொஞ்சம் உற்சாகமாகத் திரும்பிப் போயிருப்பார் என நினைத்துக்கொண்டேன். என்ன இருந்தாலும் வீடு தேடி வந்தவர்.
ஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்
அன்புள்ள ஜெ,
வழக்கம்போல விருது செலவுகளுக்காக ரூபாய் 50 ஆயிரம் அனுப்பியுள்ளேன்; விழா நடக்கவில்லை என்றாலும் மற்ற செலவுகள் இருக்கும் என நினைக்கிறேன், அப்படி இல்லாவிட்டால் கோவிட் காலத்தில் நம் வாசகர் வட்டம் செய்த உதவிகளுக்கான செலவில் என் பங்காக இதை வரவு வைத்துக் கொள்வோம்.
இந்த வருட ஆரம்பத்தில் உங்களிடம் எழுதத் துவங்குகிறேன் என சொல்லியிருந்தேன். உங்கள் கதைகளுக்கு ரசனை குறிப்பு எழுதியது போக நினைத்த அளவுக்கு எழுத முடியவில்லை; குடும்பத்தில் எதிர்பாராத மரணம் அதன் விளைவாக என் தாயாரை தனியாக(தற்காலிகமாக) இந்தியாவில் இருக்க விட வேண்டிய கட்டாயம் என்று நெருக்கடியான நிலை, கோவிட் பற்றி எரிந்த மே மாதம் முழுவதும் கோவையில் தான் இருந்தேன், மருத்துவமனை, பிணவறை, இடுகாடு என டார்த்தீனியம் நாட்கள், எந்த இலக்கியத்தையும் விட வாழ்க்கை தீவிரமாக இருந்த நாட்கள். அந்த நாட்களில் தான் கதாநாயகி வந்துகொண்டிருந்தது வாசித்தாலும் ஆழமாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.
எண்ண எண்ணக் குறைவது கதையை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன், எழுதத் துவங்க வேண்டும், இதை மீண்டு வருதல் என நினைக்கவில்லை வாழ்க்கையில் அப்படி ‘மீண்டு வருதல்’ ஏதும் இல்லை என்று தான் நினைக்கிறேன், வாழ்க்கையில் வெற்றிகளும் மகிழ்ச்சியும் நிறையும் போது மீண்டு வருவதை பற்றி சிந்திக்கவில்லை என்றால் துயரத்தின் போது மீட்சியை பற்றி நினைக்கும் உரிமை இல்லை என்று எனக்கு சொல்லிக்கொள்கிறேன்.
வண்ணக்கடலில் பீமனும் துரியனுக்கும் இடையிலான அன்பு விஷமேறி பகையாக மாறும் தருணங்களை வாத்துக்கொண்டிருக்கிறேன்.
வெண்முரசை வாசிக்கும்போது திடுக்கிட வைக்கும் சில சம்பவங்கள் நிகழ்கின்றன,
‘கொதி’ சிறுகதை வாசிக்கும் போது “பசியை பசி உண்டு பிரபஞ்சம் பல்கி பெருகுகிறது” என்ற வாக்கியம் என்னுள் எழுந்தது அதை கடிதத்தில் எழுதினேன், அப்போது மழைப்பாடல் வசித்து முடிக்கவில்லை ஆனால் ஒரு சில மாதங்களுக்கு பிறகு “ஒவ்வொரு அன்னமும் பிற அன்னத்தை உண்டு தன்னுள் வாழும் அனலுக்கு அவியாக்குவதற்கே முயல்கிறது.” என பலாஹாஸ்வரின் சொற்களை கண்டபோது திகைத்துவிட்டேன்.
உங்கள் எழுத்துகளில் தோய்ந்த உள்ளங்கள் நீங்கள் சொல்லப் போவதை கூட கொஞ்சம் முன்னே அனுமானிக்க முடியுமா?
என் மனைவி பூதனை கதையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள், பூதனை ஒரு அரக்கி, வில்லன் என்றெல்லாம் வழக்கமான கதை சொல்லல், என்னிடம் கேட்டபோது நான் கதையை மாற்றி பூதனை எப்படி தாய்மைக்கான ஏக்கத்தில் இருந்தாள் அந்த ஏக்கம் எப்படி அவளை அனைவரும் வெறுக்க கூடியவளாக மாற்றியது , குழந்தை கண்ணன் எப்படி அந்த ஏக்கத்தை தீர்த்து அவளுக்கு முக்தி வழங்கினார் என்றெல்லாம் சம்பவங்கள் சேர்த்து விரிவாக சொன்னேன், அப்படி சொல்லும் போது நீங்கள் இப்படி தான் இந்த கதையை விவரித்திருப்பீர்கள் என்று கற்பனை செய்தபடியே தான் சொன்னேன். குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு பரபரவென பூதனையை நீலத்தில் தேடினேன், நான் கிட்டத்தட்ட நீங்கள் எழுதியது போல தான் சொல்லியிருக்கிறேன். மறுபடியும் திகைத்து விட்டேன்.
அன்பும் வணக்கங்களும்
சங்கர் பிரதாப்
***
அன்புள்ள சங்கர்,
இவ்வாண்டு விஷ்ணுபுரம் விழாவை கோவையில் வழக்கம்போல நடத்தவே எண்ணியிருக்கிறோம். இன்றுவரை கூட்டம் சம்பந்தமான கட்டுப்பாடுகளில் மறு ஆணை வரவில்லை. வருமென எண்ணுகிறோம். அக்டோபரில் மூன்றாம் அலை வரும் என ஓர் எச்சரிக்கை இருந்தது. அதையும் பார்த்துவிட்டே ஆணையிடுவார்கள் என நினைக்கிறேன்.
என்னுடைய பல வாசகர்கள் நீங்கள் எழுதுவதைப்போல எழுதியிருக்கிறார்கள். நீங்கள் கவனித்திருக்கலாம். வெண்முரசு வெளிவந்துகொண்டிருந்தபோது பலசமயம் பல வாசகர்கள் அடுத்தடுத்த அத்தியாயங்கள் எப்படி இருக்குமென எழுதியிருக்கிறார்கள். நானே வாசகர்களை எழுதவிடலாமோ என கேலியாக எழுதியிருக்கிறேன். சில வாசகர்கள் வரப்போகும் அத்தியாயங்களை அப்படியே கனவு கண்டிருக்கிறார்கள்.சிலருடைய கனவுகளில் நான் எழுதாதவை வந்திருக்கின்றன. அவை நாவலில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டு தேடி பிறகு அவை கனவே என அறிந்திருக்கிறார்கள்.
இது ஏன் என்பது எளிதில் சொல்லக்கூடியதுதான். வெண்முரசுக்கு ஒரு மையத்தரிசனம் உள்ளது. அதை நான் ‘உலகியலாக கனிந்த வேதாந்தம்’ என்று சொல்வேன். வேதாந்தத்தின் அடிப்படை மெய்மை அன்றாடத்தின் அத்தனை தளங்களிலும் எவ்வண்ணம் செயல்படுகிறது என்பதே வெண்முரசு காட்டுவது. அதை தர்க்கபூர்வமாக வகுத்துக்கொள்ளாவிட்டாலும்கூட வெண்முரசின் வாசகர்கள் இயல்பாக அந்த ஞானத்தை அதன் வாசிப்பினூடாக அறிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் கதைகளை அந்த தரிசனத்தின் அடிப்படையில் விரித்தெடுக்கிறார்கள்.
உண்மையில் வெண்முரசின் வாசகனும் வெண்முரசை புனைந்துகொண்டிருக்கிறான். சொற்களில் இருந்து ஓர் நிகர்மெய்யுலகைப் புனைந்துகொள்வதுதான் வாசிப்பு. வெண்முரசு மிகப்பெரிய நாவல். அதை வாசிப்பவர்களுக்கு அதை புனைவதில் பல்லாண்டுக்கால பயிற்சி அமைந்துவிடுகிறது. ஆகவே அவர்கள் நாவலுடன் ஓடிவருகிறார்கள். அவ்வப்போது கடந்து முன்னாலும் சென்றுவிடுகிறார்கள். நாவலின் வெற்றி அது.
அடிப்படைத் துயர்கள் நம்மைக் கடந்தவை. நாம் ஒன்றும் செய்யமுடியாதவை. ஆகவே அவற்றுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதும், அவற்றிலிருந்து முடிந்தவரை விரைவாக மீள்வதுமே நாம் செய்யக்கூடுவது. இங்கே நம்மைச்சூழ்ந்துள்ள வாழ்க்கை என்பது நமக்கு விடுக்கும் செய்தி இன்றே முதன்மையானது, வாழ்வென்பது ’இன்று’ மட்டும்தான் என்பதே. துன்பங்கள் உடனடியாக நேற்று என ஆகிவிடுகின்றன என்பதே நமக்கு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. அவற்றை நம்மால் காலம் வழியாக கடந்துசெல்ல முடிகிறது.
இங்கிருக்கும் இந்நாட்கள் மிகக்குறுகியவை. சிறியவற்றுக்காகச் செலவிட எவருக்கும் பொழுதில்லை. துயருற்றிருக்க எவருக்கும் இயற்கையின் ஒப்புதலும் இல்லை. சற்றே கைநழுவ விட்டால் ஒரு நாள், ஒரு ஆண்டு ,ஒரு காலகட்டமே அப்படியே நம்மை கடந்துசென்றுவிடும். அந்த தன்னுணர்ச்சி இருந்தால் நாம் தொடர்ச்சியாக நம்மை விடுவித்துக்கொண்டே இருப்போம்.
நீங்கள் குறிப்பிட்டதுபோன்ற துயர்களில் உள்ள மையமான சிக்கல் என்பது நம் உள்ளத்தின் அரற்றல்தான். ’நான் என்ன தவறு செய்தேன்? ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?’ ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’ ஆகிய மூன்று கேள்விகளும் முந்நூறாயிரம்கோடி கேள்விகளாக பெருகி மண்டையை நிறைப்பதையே நாம் உண்மையில் துயர் என்கிறோம்.
அந்த கேள்விகள் அனைத்தும் எழுவது ‘நான்’ என்னும் ஆணவநிலையில் இருந்து. இப்பிரபஞ்சத்தின் செயல்முறை எனக்கு புரிகிறவகையில் தெளிவடைந்து எனக்கு கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையே அதற்குப்பின்னால் உள்ளது. ஏனென்றால் ‘நான் – பிரபஞ்சம்’ என ஒர் இருமையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நம்மை பிரபஞ்சம் அளவுக்கு பெரிதாக ஊதிப்பெருக்கி வைத்திருக்கிறோம்.
இந்தவகையான துயர்களை ஆதிதெய்வீகம் என மரபு வரையறை செய்கிறது. தெய்வச்செயலான துயர்கள். அதில் மானுடர் செய்வதற்கேதுமில்லை. மானுடர் அதைப்புரிந்துகொள்ளவும் இயலாது. தெய்வம் அல்லது அறியமுடியா பிரபஞ்சப்பெருநியதிக்கு அதை அப்படியே விட்டுவிடுதலையே ஒப்புக்கொடுத்தல் என்கிறேன்.
இவை வெறும் சொற்களாகவே தோன்றும். ஆனால் இச்சொற்கள் நம்முள் இருந்தால் சிலசமயம் நம் உளப்பெருக்கின் தீவிரக்கணத்தில் இவை சட்டென்று அனுபவ உண்மையாகவும் ஆகிவிடும். அப்போது நமக்குரிய தெளிவை நாமே கண்டடைவோம்.
ஜெ
***
பிகு
நிதியுதவிக்கு நன்றி. விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழவில்லை என்றாலும் தொடர்ச்சியாக பலருக்கும் உதவிகள் செய்வதனாலும் வேறுநிகழ்ச்சிகளாலும் நிதி தொடர்ந்து தேவைப்படுகிறது.
நிதியளிக்கவேண்டிய முகவரி
Bank Name & Branch:ICICI Bank, Ramnagar Branch, CoimbatoreAccount Name:VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAICurrent Account No:615205041358IFSC Code:ICIC0006152வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
jeyamohan.writer@gmail.com
நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஜெ
நேருவின் வாழ்க்கை வரலாறு- கடிதம்
நேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதைப்பற்றிய கட்டுரையை வாசித்தேன். என்னுடைய முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது. நீங்களே எம்.ஓ.மத்தாய் எழுதிய கிசுகிசு வரலாறு பற்றி எழுதியிருந்தீர்கள். அதில் நேருவின் பெண் தொடர்புகள் பற்றி அவர் சொன்னவற்றை எடுத்து எழுதியிருந்தீர்கள். அப்படியிருக்க பி.கே.பாலகிருஷ்ணன் நேருவின் வரலாறு ஒளிவுமறைவுகளற்றது என்று எப்படிச் சொல்கிறார்? எம்.ஓ.மத்தாயின் நூல் வெளிவருவதற்கு முன்னரே எழுதப்பட்ட கட்டுரையா அது?
திவாகர்
***
அன்புள்ள திவாகர்,
எம்.ஓ.மத்தாயின் நூல் வெளிவந்த பின் எழுதப்பட்ட கட்டுரை அது. பாலகிருஷ்ணன் மத்தாயை தனிப்பட்ட முறையில் அறிந்தவர். அவரை ஒரு ஆளாக பாலகிருஷ்ணன் கருதவில்லை என்றே சொல்லவேண்டும்.
பாலகிருஷ்ணன் அக்கட்டுரையில் சொல்வது நேரு ‘ஒழுக்கமான’ பள்ளிவாத்தியார் என்றல்ல. ரகசியங்களற்ற மனிதர் என்றுதான். லேடி மௌண்ட்பேட்டன் முதல் பத்மஜா நாயிடு வரை நேருவின் தொடர்புகள் அனைவருக்கும் தெரியும். அவர் எதையும் ஒளிக்கவில்லை. பத்மஜா நேருவின் இல்லத்திலேயே தங்கியிருந்தார் என்பதையே எம்.ஓ.மத்தாயும் பதிவுசெய்கிறார்.
நேருவுக்கு பலவீனங்கள் உண்டு. அவர் தன் தங்கையின்பால் கொண்ட அன்பு அவரை அவரிடம் பணியச்செய்தது. தன் நண்பர்களான வி.கே.கிருஷ்ணமேனன் போன்றவர்களுக்கு அவர் மிகையாக இடம் கொடுத்தார். அவர்களின் குறைகளை காண மறுத்தார். பின்னாளில் இந்திரா காந்தியால் பிழைகளை நோக்கிச் செலுத்தப்பட்டார் – மிகப்பெரிய பிழை கேரளத்தின் முதல் கம்யூனிச அரசை கவிழ்த்தது.
ஆனால் இவையெல்லாமே வெளிப்படையானவை. இந்தப் போதாமைகளுக்குமேல் ஓங்கியிருப்பது அவருடைய இலட்சியவாதம், தன்னலமின்மை, இந்தியமக்கள்மேல் நிறைந்திருந்த பேரன்பு, இந்தியாவை ஆழ அகல புரிந்துகொண்ட மேதமை. அதுவே அவர்.
அரசியல்தலைவர்களின் வாழ்க்கை சூழ்ச்சிகளால், அரசியல் உள்ளோட்டங்களை தனக்கேற்ப கையாளும் சாதுரியங்களால் ஆனது. அது ஒரு சதுரங்க விளையாட்டைப் பார்க்கும் ஆர்வத்தை நமக்களிப்பது. நேருவிடம் அந்த வகையான ‘திரில்’ இல்லை. அவருடையது ஓர் அரசியல்வாதியின் வாழ்க்கை அல்ல. ஏனென்றால் அவர் அரசியலதிகாரத்திற்காக போராடும் நிலையில் என்றுமே இருந்ததில்லை.
நேரு அவரைச்சூழ்ந்திருந்தவர்களால் மதிக்கப்பட்டு பேணப்பட்டார். அவருடைய அரசியல் எதிரியாக இருந்த பட்டேலே காந்தியின் ஆணைக்குப்பின் அவருடைய காவலரும் மூத்தவருமாக ஆனார். நேருவின் வாழ்க்கை பரபரப்பற்ற ஒரு நிர்வாகி, ஓர் அறிஞனின் வாழ்க்கை. பாலகிருஷ்ணன் சொல்வது அதையே
ஜெ
உடலுக்கு அப்பால்…
அண்ணா
The diving bell and butterfly புத்தகம் 200000 கண் சிமிட்டால் மூலம் எழுதப்பட்ட புத்தகம். Jean-Dominique Bauby பிரெஞ்சு பேஷன் பத்திரிக்கையின் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு குழந்தைகளும். நன்றாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் 1995 வருடம் locked in syndrome என்ற நோயினால் கோமா நிலைக்கு சென்று, 3 வாரம் கழித்து மீண்டு வருகிறார். ஆனால் தனது உடம்பின் எந்த பாகத்தையும் தானாக அசைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த உலகத்தினுடன் அவரது தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, கண் அசைவுமட்டும் இருக்கிறது.
ஒரு நாள் அவரது நண்பர் Bernard அவரை பார்கவருகிறார். அப்போது Bauby இடது கண்ணை மட்டும் சற்று அதிகமாக அழுத்தி முழிக்கிறார். Bernard உடனடியாக தனது நண்பர் ஏதோ சொல்லவருகிரர் என்பதை புரிந்து கொள்கிறார். Bernard Bauby யை silence speech therapist யிடம் கூட்டி செல்கிறார்.
அங்கு தெரபிஸ்ட் ஒவ்வொரு எழுத்தாக சுட்டிக்காட்டுவார். அது சரியாக இருந்தால் Bauby தனது கண்ணை சிமிட்டி காட்டுவார். இதைவைத்து வார்த்தைகளை உருவாக்க Bauby க்கு சொல்லித்தரப்படுகிறது
பின்பு தான் உடம்பிற்குள் அடைபட்டு கிடப்பதை பற்றி ஒரு புத்தகம் எழுத ஆசைப்படுகிறார். இதற்காகவே ஒரு சிறப்புச் செவிலியர் Claude Mendibil தினமும் மூன்று மணி நேரம் Bauby உடன் செல்வழிக்கிறார். இருவருக்குமான ஒரே தொடர்பு கண்சிமிட்டுதல் தான்.
Speech therapist சொன்ன வழிகளை பின்பற்றி அவர் வார்த்தைகளை உருவாக்குகிறார். செவிலியர் சென்றவுடன் Bauby தனது மனதிற்குள்ளே இரவில் தான் என்ன சொல்லவேண்டுமா அதை உருவாக்கி மனப்பாடம் செய்துகொள்வார். பின் செவிலியர் வந்தவுடன் தனது மனதில் நினைத்து உருவாக்கிய வைத்த வார்த்தைகளை செவிலியர் சுட்டிக்காட்ட தனது கண்சிமிட்டல் மூலம் Bauby தெரியப்படுத்துவார்.
இப்படி உருவானதுதான் “The Diving Bell and the Butterfly”. என்ன ஒரு கவித்துமான தலைப்பு. அந்த புத்தகத்தில் உள்ள ஒரு வரி
” My diving bell becomes less oppressive, and my mind takes flight like a butterfly. There is so much to do. You can wander off in space or in time, set out for Tierra del Fuego or for King Midas’s court.”
தனது புத்தகம் வெளிவந்த இரண்டாவது நாளில் Bauby இறந்துவிடுகிறார் .
அன்புடன்
பன்னீர் செல்வம் ஈஸ்வரன்
***
அன்புள்ள பன்னீர் செல்வம்,
இன்று, பிரான்ஸிஸ் கிருபா பற்றிய கட்டுரையை ஒட்டி சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது வந்த இந்தக் கடிதம் எனக்கு நான் எப்போதுமே நாடும் உறுதிப்பாட்டை மீண்டும் அளித்தது. உடலை முப்பாட்டன் சேர்த்து வைத்த செல்வத்தை அள்ளி வீணடிக்கும் அசட்டு ஊதாரிபோலச் செலவிடுபவர்கள், அதை ஏதோ புரட்சி என்றும் கலகம் என்றும் பாவனை செய்பவர்களைப் பார்த்துச் சலித்த நேரத்தில் இது மீண்டும் மெய் என்ன என்று காட்டுகிறது. மனிதனின் உள்நின்று இயக்கும் அழியாவிசை ஒன்று உண்டு. உடல் அதன் ஊர்தி மட்டுமே. உடலால் அறிவதும் உடலால் வெளிப்படுவதும் அல்ல மனிதன். உடல் அல்ல மனிதன்.
ஜெ
ஆட்கொள்ளும் கொற்றவை
அன்புள்ள ஆசிரியருக்கு,
நெடுநாட்களாகவே கொற்றவை படிக்க வேண்டுமென்ற ஆவல் அண்மையில் நிறைவேறியது. தொடக்கத்தில் அதன் பழந்தமிழ் நடையும் செறிவும் சற்றே கூடுதல் உழைப்பையும் ஈடுபாட்டையம் கோரினாலும், தொல்தமிழகத்த்தின் அப்புனை வரலாறு என்னை வசீகரித்து மேலும் மேலுமென உந்தியது. குமரிக்கோட்டையும் பஃறுளியாற்றையும் அகமெனக்கொண்ட மூதாதையரில், வாழ்வாங்கு வாழ்ந்தோர் வானுறையும் தெய்வங்களாகவும் ஏனைய வாழ்ந்தவிந்தோர் தென்புலத்தாராகவும் ஆகி, அவர்களுள் தோன்றி அவர்களால் வளர்ந்து அவர்களின் உள்ளத்திலும் உணர்விலும் நிறைந்து, அருவமாய் திகழ்ந்த அக்கன்னிக்கு “தமிழ்” என பெயர் சூட்டி “தாம் ஒரு பேர் கொண்ட குடி”யாக மாறியதை வசிப்பதென்பது, நம்மை நாமே எவரென, நம் வேரும் கொடிவழியும் யாதென உணரும் உன்னத தருணம்.
கண்ணகை கண்ணகியாதலும், “சிறுமியை பெண்ணாக்கும் தெய்வம் நானென” வந்த நீலி (கவுந்தி அடிகள்) ஐந்து நிலங்களினூடே பல்வேறு கன்னியரையும் அன்னையரையும் காட்சியளித்து அவளை தெய்வமாக்குகிறாள். வெண்ணி, மருதி எனத்தொடங்கி நப்பின்னை வரை நீளும் அப்பெருநிரையில் “அவளை தெய்வங்களில் கொற்றவையாக” மாற்றியதில் பாலை நிலத்தின் ஒரு கன்னிக்கும் ஓரன்னைக்கும் பெரும் பங்குண்டு. முன்னவள் சிறுவயதில் கொற்றவையின் கோலம் பூட்டி வணங்கப்பட்டு, முதிர்ந்ததும் தன் இனத்தால் கைவிடப்பட்டு தனிமையின் தாழ்வரையில் தன்னிலையிழந்தழிந்து வெள்ளெல்லுகளின் மாடக்குவையான மணல்மேட்டில் மறையும் முதுகன்னி. மற்றவள் தான் ஈன்ற நான்கில் ஒன்றை புசித்துக்கொண்டே பிறக்குருளைகளுக்கு முலையூட்டும் அன்னைநாய்.
அறம் தளர்ந்து மறம் பிறழ்ந்து எரிமுன்னர் வைத்தூறு போல விளங்கிய பாண்டியன் மண்ணில், கூம்பும் பருவத்து குத்தென கொற்றத்தாளின் முதற்கனல் வீழவே மதுரைப் பேரூர் பேராச்சிக்கு அவியாகிறது. பின் குடமலை சென்று அறிவமர் செல்வியாகி ஊழ்கத்திலமர்ந்து உய்கிறாள். யாண்டு பல கழிந்து குடமலை குறும்பர் கோர, சேரன் செங்குட்டுவன் செங்குன்றம் சேவித்து திருமாபத்தினிக்கு திருக்கோவிலையும் அவன் இளவல் செய்தவக்கொழுந்தின் செவ்வியல் காப்பியத்தையும் நாட்டினர்.
கதை இவ்வளவேயெனினும், காப்பியத்தின் எண்ணற்ற கூறுகள் ஒவ்வொன்றும் தன்னளவில் உச்சத்தைத்தொட்டு ஒருங்கே முழுமைகொள்வதை எண்ணி எண்ணி வியப்பதன்றி வேறு வழியில்லை.
காவியம் முழுமைக்கும் ஊடாடும் எண்ணற்ற பழந்தமிழ்ச் சொற்கள்
இச்சொற்களைக்கண்டு முதலில் மிரண்டு பின் பழகி இறுதியில் அவற்றில் தோய்ந்தே போனேன். உங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் அதில் பேர்பாதி சொற்களையேனும் தடையின்றி பொருளறிவர். எனினும் மற்றவற்றை (திரங்கல், மடங்கல், உமல், நுகம், மையான்…..) இணைய அகரமுதலிகளின் அருந்துணைக்கொண்டே அறிந்தேன். ஆயினும் சில சொற்களை உங்கள் தளத்திலும் அகரமுதலிகளிலும் இணையத்திலும் மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் பொருள் கிடைப்பதரிது (காட்டாக, குணமொழியும் குடமொழியும்). இளங்கோவடிகள் கற்ற மொழிகளாக வரும் தமிழும் செஞ்செயல்மொழியும் அனைவருமறிவர். குணமொழியும் குடமொழியும் ஏது மொழிகளென எங்கும் தடயங்களில்லை. ஆயினும் உங்களை நெடுங்காலம் தொடர்வோர் காப்பியத்தின் ஒழுக்கில் இயல்பாக பொருள்கோடக்கூடும். நீங்கள் தொடர்ந்து முன்மொழியும் பாரதத்தின் செம்மொழிகள் நான்கினுள் எஞ்சிய பாளியும் பிராகிருதமுமாக (முறையே) இருக்குமெனவே எண்ணுகிறேன். மேலும் சொற்றொடர்களின் அமைப்பும் அழகும் நெஞ்சையள்ளுவன. “மலைக்குகை பெண்கடவுளைப் போற்றி” என்னும் நம் இன்றைய செந்தமிழ் வழக்கு “குடைவரை எழுதிய நல்லியல் பாவையின் நலம்கூறி” எனும் செழுந்தமிழாகி மாறி மயக்கும் கணங்களே காவியம் முழுவதும்.
சங்ககால வாழ்க்கைச்சூழலை கண்முன் விரிக்கும் கதைக்களம்
வேட்டுவன் முதல் வேந்தன் வரை உண்பதும் உடுப்பதும் உறைவதும் உழைப்பதும் மொழிவதும் தொழுவதும் இசைப்பதும் இசையோடசைப்பதும் வசைப்பதும் வதைப்பதும் எல்லாம் சங்ககால வாழ்வின் நிகர்ச்சித்திரங்கள். கொற்றவைக்கு சற்றுமுன்புதான் ராஜ் கௌதமன் அவர்களின் “பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்” ஆய்வுநூலை வாசித்தேன். சங்ககால வாழ்க்கைக்கூறுகளை அறிய எண்ணற்ற தகவல்களால் நிறைந்த ஆவணக் களஞ்சியம் பாட்டும் தொகையும். அது கொற்றவையில் வெளிப்படும்போது மேலும் கவித்துவமாக, வாழ்வின் அரிய தருணங்களாக, தரிசனங்களாக முழுமை கொள்கிறது.
குறிஞ்சி நிலத்தில் இரவில் குறவர்கள் எரியூட்டி சுற்றியமர்ந்து வேட்டையுணவை பகிர்ந்தும் (ராஜ் கௌதமனில் பாதீடு) கள்ளுண்டும் களிக்கும் அன்றாட கூட்டு உண்டாட்டில் கலந்துகொள்ளும் கோவலனை நோக்கி ‘உங்கள் நாட்டில் இதுபோன்ற குடிமகிழ்வு கொண்டாடுவீர்களா’ எனக்கேட்கும் முதுகுறவனுக்கு ‘எப்போதாவது எதிரிகளை வெல்லும் போது கொண்டாடுவோம்’ எனக் கூறும் கோவலனிடம் ‘வென்று வென்று பின் எதிரிகளே எஞ்சவில்லையென்றால் நீங்கள் மகிழவே இயலாதே’ என ஒரு சிறுவன் சொல்ல “எரிப்பதனால் மட்டுமே தானிருக்கும், எரிந்தவை அழிந்தால் தானுமழியும் எரி” என்ற கூற்று என்னை நாட்கணக்கில் ஆட்கொண்டது. பலநூறு வேளிர்களுடனும் சிற்றரசர்களுடனும் போரிட்டு அழித்து உருவாகி வந்த மூவேந்தர்கள் ஓயாது தமக்குள் தாம் பொருதி அடுத்த சில நூற்றாண்டுகளில் மூவரும் வீழ்ந்து தமிழ்மண் முழுவதையும் அயலவர்க்கு கையளித்த ஒட்டுமொத்த சங்ககால அரசியலையும் உள்ளடக்கும் ஒற்றை வரி அது.
‘முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை’ வாழும் எளிய குறவர்களிடமுள்ள களிப்பும் மகிழ்வும் ‘புலவும் நெய்யும் பெய்த கொழுஞ்சோறும் யவன நறுந்தேறலும்’ அருந்துவோரிடம் இல்லையென்பது இன்று வரை நீளும் உலகியல் வாழ்வின் என்றுமுள முரண். அண்மையில் ஒரு வாசகரின் கேள்விக்கு (வாசிப்பு, இலக்கியம், சில ஐயங்கள்) புனைவிலக்கிய வாசிப்பும் அறிவுத்துறை வாசிப்பும் ஒன்றையொன்று நிறைவுசெய்ய முடியும் என்ற தங்களின் பதில்தான் எத்தனை உண்மை (கொற்றவையும் பாட்டும் தொகையுமே அதற்குச்சான்று).
நவீனஇலக்கியத்திற்கேற்ப நிகழ்வுகளின் தகவமைவு
கண்ணகியின் ஆளுமைப் பெருவளர்ச்சியில் ஐவகை நிலப்பயணக் காட்சிகளும் உடன்வரும் நீலியின் பங்கும் சிலம்பில் எதிர்பார்த்திராத ஒரு (பொருத்தமான) வன்பாய்ச்சல். மதுரை தீக்கிரையாவதற்காக எல்லாவிதத்திலும் முன்பே ஒருங்கியிருந்த நேரத்து கண்ணகி தன் அறத்தின் ஆற்றலால் ஆயிரமாயிரம் அணங்குகளை அழல்மூட்ட ஆற்றுப்படுத்தும் பேரணங்காக (தன் ஒற்றை முலையரிதல் ஒரு குறியீடே) நீங்கள் ஆக்கியதை, வெண்முரசின் துகிலுரிதலில் உடுக்கையிழந்த கைகளுக்கு உடையளித்து இடுக்கண் களைந்த நூற்றுக்கணக்கான மனையாட்டிகள் (மாதவன் பேரால்!) நினைவுக்கு வருகிறார்கள். ஈராயிரம் ஆண்டுகளாய் தமிழ் நிலத்திலும் பாரத மண்ணிலும் புழங்கிய புகழ்மிக்க நாடகீய தொன்மங்களை முதன்முதலில் நவீன உள்ளங்களுக்கேற்ப உரைத்தது ஒப்பதும் மிக்கதும் இல்லாத தகவமைவு.
சிலம்பின் பயணங்களும் கொற்றவையின் பயணங்களும்
கண்ணகியின் மதுரைப்பயணம் சிலம்பிலிருந்து மாறுபடும் விதம் விரிவாகவே பேசப்பட்டுவிட்டது. நான் வியந்தது வஞ்சிக்காண்டத்தின் பயண வேறுபாடுகளையே. சிலம்பில் சேரன் செங்குட்டுவன் சிலைவடிக்க கல்தேடி இமையம்வரை மறப்பயணம் மேற்கொள்கிறான் (கொற்றவையிலோ அவன் சேரநாட்டு எல்லையைத் தாண்டியதாகத் தெரியவில்லை). ஆனால் சிலம்பில் பயணிக்காத இளங்கோவடிகளோ, கொற்றவையில் தன் அகத்தேடலால் அறிவமர் செல்வியின் அறுதி ஆறினூடாகச் சென்று பண்டைமதுரையை தரிசித்துத் தெளிந்து, தெற்கு நோக்கிக் கடுஞ்சுரம் கடந்து கன்னியன்னையைக் கண்ட கணம் முழுமைகொள்கிறார். சிலம்பில் பார்போற்றும் மறவன் பயணமெனில் கொற்றவையில் வான் போற்றும் அறிவன் பயணம்.
புதிய இறைநிலைகளும் சமயங்களும்
தமிழகத்து இசைபட வாழ்ந்து இறைநிலையெய்தியோரின் நீள்நிரையில் காப்பிய நிறைவில் மேலும் இருவர் சேர்கின்றனர். கண்ணகி வஞ்சியில் “மங்கல மடந்தை”யாகவும் இளங்கோவடிகள் சபரண மலையில் “ஐயப்பனாகவும்” கோவில்கொள்கின்றனர். இருவரும் தம் வாழ்நாளில் சமண மதத்தைப் பின்பற்றியவர்கள். ஆனால் இறைநிலை எய்தும்போது பௌத்தக் கடவுளராக அறியப்படுகின்றனர். காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களுக்குப் பிறகு இன்று இந்துக்கடவுளராக அருள்புரிகின்றனர். இந்தியப்பெருநிலத்தின் மூன்று பெருமதங்களையும் ஒருங்கே கோர்த்த ஒற்றையிழையாக விளங்குகிறது கொற்றவை. இன்றும் இந்துமதத்தின் ஆறுதரிசனங்களில் பெரும்பிரிவுகளாக நிலைக்கொண்ட மூன்று தரிசனங்களையும் முன்வைக்கும் இறைகளாகத் தொடர்கின்றனர் இருவரும் (கொடுங்கல்லூரம்ம சாக்தத்தையும் ஐயப்பன் சைவ-வைணவ ஒருமைப்பாட்டையும்).
துணைக்கதைகளும் மரபு ஆய்தலும்
கொற்றவையின் சிறப்புகளில் தலையாயவொன்று துணைக்கதைகள். அவையில்லாமலும்கூட கதையின் ஓட்டம் குறைபடாதெனினும் அவற்றின் இருப்பு கதைக்களத்தை வேறொரு உயர்தளத்திற்கு கொண்டுச்செல்கிறது. மண்மகளறியா வண்ணச்சீரடியாள் மதுரையை மாய்க்கும் மாமடந்தையாக மாறும் சித்திரத்தை, ஐவகை நிலத்தின் துணைக்கதைகளல்லாது நவீனஉள்ளம் உள்வாங்க இயலாது. துணைக்கதைகள் நம் மரபார்ந்த நம்பிக்கைகளையும் நெறிகளையும் (கற்பு, நிறை, தாய்மை, மானுடம்….) தொடர்ந்து அறக்கேள்விகளால் ஆய்ந்தும் அலசியும் நம்மை மேலிருந்து கீழ்நோக்கும் முறையிலிருந்து மாற்றி, அடித்தளத்தின் அல்லல்களும் ஆற்றாத கண்ணீரும் நிறைந்த விழிகளால் இம்“மேதகு” விழுமியங்களை நோக்க வைக்கிறது. மேலும் கௌதம புத்தர் மற்றும் மணிமேகலையின் கதைகள் காப்பியத்தின் நோக்கையும் போக்கையும் செறிவூட்டி முழுமை கொள்ளச்செய்கின்றன.
வஞ்சியின் வளமையும் வழமையும்
பண்டுமுதலே மதுரை மாநகரின் மாட்சியும் புகாரின் பெருமையும் அதன் நுண்தகவல்களையும் நிறையவே செவிக்கொண்டுள்ளோம். ஆனால் சிலம்பில் செங்குட்டுவனின் இமையப்பயணம் பேசப்பட்ட அளவு வஞ்சி மாநகரின் வழக்கங்களும் வாழ்வியலும் பெரிதும் பேசுபொருளானதில்லை. கொற்றவையில் சேரநாட்டின் நீர்வளமும் மலைவளமும் மிகவிரிவாகவும் அழகாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பேரியாற்றின் கரையிலமைந்த வஞ்சியில் மரக்கால்கள் ஊன்றிய, மரச்சுவர்களாலான வீடுகள். கையாறுகளாலும் அருகமைந்த பெருங்காயல்களாலும் ஆன நீர்வழிகளூடே பலவகை வஞ்சிகளிலும் தொலைதூரபயணத்திற்கு பெருவள்ளங்களிலுமென பயணங்கள். புகாரின் நாளங்காடி அல்லங்காடி போல வஞ்சியில் நீரங்காடி. யவன மற்றும் சோனக நாவாய்கள் வந்தணையும் முசிறித் துறைமுகமும் அதன் செயல்பாடுகளும்.
அகில், மிளகு (திரங்கல்), யானை வெண்கோடுகள், மான்மயிர், புலியுகிர், பல்வகை வேர்கள் என நீளும் மலைவளங்கள். வேந்தன்குழாமின் மலையேற்ற விவரணைகள், மலைப்பழங்குடிகளின் வாழ்வியல் காட்சிகள், அவர்களின் வழிபாட்டு முறைகள். மழை இழை முறியாது பெய்யும் அதே குளிர்நிலத்தில், மேழ மாதத்தின் வெக்கையும் பருத்திமேலாடை தோய்க்கும் உடல் வியர்வையும், உருளி போன்ற அகன்றவாய் கொண்ட அடுக்கலங்களும், பலவகை அப்பங்களுமென அத்தனை சிறுசிறு கூறுகளும் கோர்க்கப்பட்டிருப்பது கேரளத்தில் ஆறாண்டுகளாய் வசிக்கும் எனக்கு ஒரு நிகரனுபவமாகவேத் தோன்றியது.
தமிழ் நிலத்தில் வடக்கின் தாக்கங்களும் ஆக்கங்களும்
சங்ககாலத்தின் தொடக்கத்தில் தமிழகம் ஏனைய பாரத நிலப்பரப்பினோடு தொடர்புகொண்டிருந்தாலும், அத்தொடர்பு அளவோடே அமைந்த ஒன்றாக இருந்த்தது. ஆனால் சிலம்பின் காப்பிய நிகழ்வு காலத்தில் தமிழகம் வடக்கினோடு பெருமளவில் அளவளாவி, கொடுத்தும் கொண்டும் புதியதொரு பரிணாமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தமிழகத்தில் வடக்கின் மொழிகளும் சமயங்களும் கலந்துரையாடி, தம் செல்வாக்கையும் சிலவிடங்களில் ஆதிக்கத்தையும் செலுத்தத் தொடங்கியிருந்தது (பாட்டும் தொகையும் நூலில் இதை விரிவாகக் காணலாம்). கொற்றவையில் இம்மாற்றங்களைக் காண்பிப்பது மையநோக்கு இல்லையெனினும் ஆங்காங்கே அவற்றைத்தூவிச் சென்றிருக்கிறீர். ‘வெண்ணைப்பெருவூர்’ என்ற இடம் ‘வில்வாரணி’ என வடமொழிப்பெயர் கொள்வதும், அரசர்களும் நகரத்தாரும் மட்டும் செய்து வந்த ‘வேள்விகள்’ சிற்றூர்கள் வரை பரவி வருவதும் போகிறபோக்கில் பதியப்பட்டுள்ளன. கொல்லாநெறி மற்றும் கள்ளுண்ணாமை போன்ற சமணமத கருத்துக்களை, சங்ககால வாழ்வியல் புதிதாக எதிர்கொள்கிறது.
சமணமும் பௌத்தமும், சமூகஅளவிலும் அறிவுத்தளத்திலும் பல நேர்நிலை தாக்கங்களையம் ஆக்கங்களையும் ஏற்படுத்தி இருந்தாலும் (காப்பியம் என்னும் வடிவமே அவரகளின் வருகைக்குப் பின்னரே தமிழுக்கு வாய்த்தது!), இல்லத்தாரிடம் கூட உரைக்காமல் இளைஞர்கள் ஏராளமானோர் சாக்கிய இரவர் (பௌத்த பிக்ஷூ)களாக ஆகிவரும் காலகட்டத்தில் ‘எங்கே தன் மகனும் இப்படிப் போய்விடுவானோ’ என்ற பேரச்சம் அன்னையரை ஆட்டிப்படைக்கும் சித்திரம் அதன் வேறொரு பக்கத்தைக் காட்டுகிறது (சங்கச்சித்திரங்களில் ஔவையின் ‘கால்கழி கட்டிலில் கிடப்பித் தூவெள்ளறுவை போர்ப்பித்திலதே’ எனப் பாடும் சங்ககால அன்னையும், அந்த அண்மைக்காலத்து ஈழ அன்னையும் நினைவுக்கு வந்தனர்). சிலஅன்னையரின் அடிவயிற்றுத்தீ ‘தன் சிறுவனை மழித்து இருத்தி துவராடை அணிவித்திலதே’ என்று புத்தன் புது நெறியைத் தூற்றியிருக்கவும்கூடும் (என்றும் எந்நிலையிலும் அன்னையர் அன்னையரே!).
தத்துவங்களும் உளவியலும்
காப்பியத்தின் கட்டமைப்பை ஐம்பெரும் பருக்களின் பேரால் பகுத்து, அவற்றின் முன்னுரைகளில் மொழியப்படும் ஒவ்வொரு வரியும் சிந்தனைச்சிறகை விரிப்பவை. நிலம் பகுதியில் ஐந்திணை நிலங்களினூடே கூறிச்செல்லும் வாழ்க்கை முறைகளும் நிலக்காட்சிகளும் கதைமாந்தர்களிடையேயான உரையாடல்களும், தமிழ்ப் பண்பாட்டுக்கே உரித்தான நிலம்சார் மெய்ம்மையும் தரிசனங்களும் நிறைந்தவை. சமணம் பௌத்தம் சைவம் வைணவம் சாக்தம் அளவைவாதம் பிரம்மவாதம் எனப்பல்வேறு இந்தியத் தத்துவச் சிந்தனைகள் மட்டுமல்லாது யவன மற்றும் சீனத்து மெய்யறிவுகளும் உரையாடும் ஒரு களமாக கொற்றவை விளங்குகிறது. வேளாப் பார்ப்பனர்கள் தம்அன்றாட வாழ்வில், அவர்களின் சார்வாகச் சிந்தனைகளை சிந்திச்செல்வதுபோல பற்பல கதைமாந்தர்களின் வழி உதிர்க்கும் கருத்துக்களும் எண்ணற்றவை.
சிலம்பில் பெரிதும் உளச்சலனங்களற்ற, அந்நேரத்து நேரடி உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைமாந்தர்களான பலரும், கொற்றவையில் பல்வேறு எண்ணஓட்டங்களும் உளக்கொந்தளிப்பும் கொண்டவர்களாக உள்ளனர். மாதவியைக்கண்டதும் அவளுடன் தற்செயலாகச்செல்லும் சிலம்பின் கோவலனோ, கொற்றவையில் உளஅலைக்கழிப்புகளில் உழன்றுகொண்டு மாதவியைப் போன்றொருத்திக்காக முன்பே காத்திருக்கிறான் (தீ காற்றைத் தழுவ விழைவதைப்போல). கணவன் மாய்ந்ததும் தானும் மாயும் சிலம்பின் ஒற்றை வரி வேல்நெடுங்கண்ணி எனும் கோப்பெருந்தேவி, கொற்றவையில் உடலோடும் உள்ளத்தோடும் உற்றவனோடும் மற்றவரோடும் ஓயாது பொருதும் ஊடல்மாதேவியாக காப்பியப்போக்கை உச்சத்திலேற்றும் ஒரு தவிர்க்கவியலாத மையக்கதாபாத்திரமாகிறாள். தேவந்திஎனும் தோழி கூட பல்வேறு வாழ்வனுபங்களோடு தீராக்கதைகளின் தீஞ்சுனையென திகழ்கிறாள். இத்தகு கதைமாந்தர்களை, குறிப்பாக பெண்களை, உளவியல் நோக்கில் அணுகுவதென்பது மேலும் சுவைக்கூட்டக்கூடியதாக இருக்கும். எனினும் இவ்விரு தளங்களிலும் ஓர் எளிய வாசகனாகவே இவற்றைக் குறிப்பிடுகிறேன். தத்தம் துறைசார் வல்லுந வாசகர்கள் எவரேனும் நாளை இவற்றின் மீது மீயொளி புலர்த்தக்கூடும்.
பின்னை வினைகளும் விளைவுகளும்
மதில்நிரை மாநகர் அழலுக்கு அவியானபின் வஞ்சி மூதூரில் திருமபத்தினிக்கு பேராலயம் எழுப்பியதும், புகாரில் ஈன்றோர்களான மாநாய்க்கனும் மாசாத்துவானும் மாற்றாள் மாதவியும் மாமகள் மணிமேகலையும் துறவுபூண்டதை குறிப்புணர்த்தி சிலம்பு அமைகிறது. ஆனால் கொற்றவையில் காட்சிகள் மேலும் நீள்கின்றன. புகைகொண்ட மதுரை மாற்றுநிலத்தில் குடம்பியென தொடங்கி கொற்கைக்காவலன் இளஞ்செழியனின் செங்கோலோச்சி குற்றம் கடிந்து குடிபுறங்காத்தோம்பவே அவன்தன் தண்வெண்கொற்றக்குடையின்கீழ் பையப்பைய வளர்ந்து கொங்குதேர் தும்பியென மிளிர்ந்து, நகைகொள்கிறது நான்மாடக் கூடல்.
ஊழின் பெருவலி யாரும் அறிகிலார். பதியெழு அறியாய் பழங்குடிகளின் பரன் பரை ஊரும் மொழிபெயர் தேயத்து புலம்பெயர் மாக்களின் புத்தேள் உலகுமான புகார் நகர் பௌவத்து புக்கும், நீர்க்கலமென நின்ற சீர்கெழு வஞ்சியும் பேரியாற்றின் சீற்றொழுக்கால் நீர்க்கோலமென நிலையாது, காலாழியின் சுழற்சியில் பேராச்சியின் உறுபசிக்கு ஊணாகின்றன. அறிவமர் செல்வியின் ஆலயமோ சோழர்கள், பிற்காலச்சேரர்களான குலசேகரப்பெருமாள் மற்றும் உதய மார்த்தாண்ட வர்மன், திருவடி சங்கரன் (சங்கரர்) என பலரால் மாற்றங்களையும் மீட்டுருவாக்கங்களையும் காண்கிறது. அன்னையும் கொற்றவை, காளி/துர்க்கை, மங்கல தேவி என பலப்பெயர்களால் அறியப்படலாகிறாள்.
சேரன் செங்குட்டவனால் எதிர்கொண்டு வரவேற்கப்பட்டு தன் அருகமர்த்தி உரையாடும் நிலையிலிருந்த மலைநில குறுமர்கள், உதயவர்மன் காலத்தில் அவர்கள் நின்ற இடம் பசுஞ்சாணியால் தெளித்து தூய்மை செய்யப்படும் நிலைக்கு ஆளாவதிலிருந்து, அவர்களின் சமூக நிலையிலும் ஆலய உரிமையிலும் நிகழ்ந்துவிட்டிருந்த வீழ்ச்சியை உணர முடிகிறது. பின் அவர்கள் ‘காவு தீண்டல்’ நிகழ்வால் ஆலயத்தின் மீதான தம்உரிமையை ஆண்டுக்கு ஒருநாளென மீட்டெடுக்கின்றனர். கண்ணகை- கண்ணகி-அறிவமர் செல்வி- கொற்றவை- காளி- மங்கல தேவி என்று தீயின் அழலென தொடர்மாற்றம் கொள்ளும் அன்னை, டச்சுப் படையின் ‘வான் – கோய்ஸ்’க்கு அவர்களின் ‘தூய மாதா’ வாக காட்சியளித்ததிலோ, இல்லை இனி சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு வேறொரு தோற்றத்தில் வேறொரு பெயரில் அவள் அறியப்படலானாலோ வியப்பதற்கொன்றுமில்லை. மாற்றமொன்றே மாறாததல்லவோ.
மாக்கோதையும் கோளூரும் கல்லூரும் – கன்னிநுன்
நோக்கேறியச் சேரலாண்ட வஞ்சியின் கண்ணிகளே
தோற்றம் தொடர்மாற்றம் கொளினும் – தாயேநின்
ஆற்றலும் அருளும் என்றுமுள
மாநிலம் போற்றும் மங்கல மடந்தையே – யாயே
நின்னின் பெருந்தக்க யாவுள
அம்மே நின் திருச்சிலம்படிகளே சரணம்.
பி.கு: இக்காப்பியத்தை வாசித்து முடித்த பேருவகை உளநிறைவையும், ‘இனி என்ன?’ என்ற ஒரு வெறுமையும் ஒருங்கே ஆட்கொண்டது. பாட்டும் தொகையும் என்ற அடிவாரம் கடந்து கொற்றவையென்னும் மாமிசை ஏகி, மாமுகட்டிலிருந்து சட்டென இடறி வீழாமல் சங்ககாலத்தில் சற்றுகாலம் பயணித்து பையஇறங்க “நிலம் பூத்து மலர்ந்த நாளில்” அடி வைக்கிறேன் (அந்நூலின் அறிமுகமும் தங்கள் வழியே!). ஆசிரியருக்கு நன்றியும் அன்பும் வணக்கங்களும்.
அன்புடன்
இரா. செந்தில்
கொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்
கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை
கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)
கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.
வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?
விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்
தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்
இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா
September 24, 2021
26 ஆம் தேதியின் நிகழ்வுகள்
விஷ்ணுபுரம் அமைப்பு தொடங்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகள் இடைவிடாத செயலூக்கத்துடன் நிகழ்ந்த அரசியல்கட்சி சாராத இலக்கிய இயக்கம் வேறேதும் தமிழில் இல்லை. இதன் வெற்றிக்கு முதன்மையான காரணம், இது ஓர் இறுக்கமான அமைப்பு அல்ல என்பதுதான். திட்டமிட்டு உருவானது அல்ல என்றாலும் இதன் நெகிழ்வான வடிவம் மிக உதவியானது என்பதை பின்னர் கண்டடைந்தோம். இதற்கு தலைவர், பொருளாளர், செயலாளர் என பதவிகள் ஏதுமில்லை. எந்த பொறுப்பாளருமில்லை. அவ்வப்போது வசதிப்பட்டவர்கள் பொறுப்பேற்றுச் செய்கிறார்கள். அனைவருக்கும் இணையான இடம்தான். ஒரு பெரிய நட்புக்கூட்டமைப்பு மட்டும்தான் இது.
சமீபத்தில்தான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஓர் அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளது, இந்தியாவில் அல்ல அமெரிக்காவில். அங்கே அவ்வாறு செயல்படவேண்டிய தேவை இருப்பதனால். இங்கே இன்னமும்கூட இது ஒரு நண்பர்கூட்டம்தான். இதில் தொடர்ச்சியாக தொடர்பிலிருப்பவர்கள் அனைவருமே இதன் உறுப்பினர்கள் என்று கொண்டால் ஏறத்தாழ நாநூறுபேர் சேர்ந்த அமைப்பு இது என்று சொல்லலாம். நிதியளித்தும், விழாக்களில் பங்குகொண்டும், விவாதங்களில் ஈடுபட்டும் உடனிருக்கிறார்கள்.
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்ந்து ஆண்டு தோறும் கோவையில் ஒரு விருதுவிழாவும், சென்னையில் குமரகுருபரன் விருதுவிழாவும், ஊட்டியில் குரு நித்யா ஆய்வரங்கும் நடத்துகிறோம். இதைத்தவிர புதியவாசகர் சந்திப்புகள் ஆண்டுக்கு குறைந்தது மூன்று. இரண்டு ஆண்டுகளாக குருபூர்ணிமா அன்று வெண்முரசுநாள் கொண்டாட்டம். அவ்வப்போது நூல்வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இவை தவிர தொடர்ச்சியான விவாதக்குழுமங்கள் நாலைந்து உள்ளன. லண்டனிலும் அமெரிக்க நகரங்களிலும் உள்ளவர்கள் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் உள்ளன.
விஷ்ணுபுரம் அமைப்புடன் தொடர்புள்ள நண்பர்கள் வெவ்வேறு நகரங்களில் தொடர்ச்சியாக நடத்திவரும் தனி இலக்கிய அமைப்புகள் பல உள்ளன. அவர்கள் மாதந்தோறும் சந்தித்துக் கொள்கிறார்கள். இணையவழி தொடர்ச் சந்திப்புகளும் உள்ளன. என் இணையதளத்தில் சிலவற்றுக்கே அறிவிப்புகள் வெளியாகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எல்லா வார இறுதிகளிலும் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்புடன் தொடர்புடைய இலக்கியநிகழ்வுகள் நாலோ ஐந்தோ தமிழகம் முழுக்க நிகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலும் எவற்றிலும் நான் கலந்துகொள்வதில்லை.
ஒரு சிறு முயற்சியாக ஆரம்பித்த இந்த இலக்கியச்செயல்பாடு ஓர் இயக்கமாக மாறிவிட்டிருப்பது நிறைவளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு க.நா.சு. ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்’ என இதையே கனவுகண்டார். ஜெயகாந்தன் [இலக்கியவட்டம்] பிரமிள் [இன்னர் இமேஜ் வர்க்ஷாப்] ஜி.நாகரானன் [பித்தன்பட்டறை] சுந்தர ராமசாமி [காகங்கள்] என பல்வேறு முயற்சிகள் தமிழில் நடந்திருக்கின்றன. இன்றைய தொழில்நுட்ப வாய்ப்புகளால் அந்த கனவு நடைமுறையாகியிருக்கின்றது.
இந்த இயக்கத்தில் இருந்து உருவான அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை காண்கிறேன். எந்த இலக்கிய இதழை எடுத்தாலும் அதில் எழுதியிருப்பவர்களில் நேர்பாதியினர் இங்கிருந்து எழுந்தவர்கள் என்பது பெருமிதத்தை அளிக்கிறது. இச்செயல்பாட்டின் வெற்றிரகசியம் என்பது இரண்டுவிஷயங்கள்தான். ஒன்று, அரசியலை முற்றிலும் தவிர்த்துவிடுவது. இரண்டு, எந்நிலையிலும் எல்லா விவாதங்களும் தனிப்பட்ட நட்பு எல்லையை கடக்காமல் இருந்தாகவேண்டும் என்னும் கட்டாயம். சென்றகாலத்தில் பல இலக்கியச் செயல்பாடுகள் இவ்விரு காரணங்களால்தான் சிதைந்தன.
26-09-2021 அன்று மட்டும் பல இலக்கிய நிகழ்வுகள்.நீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல் கோவையில் நிகழ்கிறது.கடலூர் சீனு கலந்துகொள்கிறார். சென்னை நற்றுணை இலக்கிய அமைப்பு சிறில் அலெக்ஸுடன் ஓர் இலக்கியச் சந்திப்பை இணையத்தில் ஒழுங்கு செய்கிறது . உப்புவேலி பற்றி அவர் பேசுகிறார்.வெண்முரசு ஆவணப்படம் சிகாகோவில் வெளியாகிறது.வெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ
இதே நாளில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற இமையத்துக்கு ஒரு பாராட்டுவிழாவை பவா செல்லத்துரை ஒருங்கிணைக்கிறார். திருவண்ணாமலையில் நிகழும் அந்த விழாவில் நான் கலந்துகொள்கிறேன்.திருவண்ணாமலையில் பாராட்டுவிழா.
அடுத்தவாரமே 2-10-22 அன்று கோவையில் விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஈரோடு கிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் ஒர் உள்ளரங்கக் கவிதை விவாத அரங்கு. இரண்டுநாட்கள் நிகழும் அந்நிகழ்வில் பத்து கவிஞர்களும் இருபது வாசகர்களும் கலந்துகொள்கிறார்கள்.நான் பேசாத பார்வையாளனாக மட்டும் கலந்துகொள்கிறேன். கவிஞர்கள் அரங்கு நடத்தி, விவாதத்தையும் நிகழ்த்துவார்கள்.
எல்லாவற்றிலும் முடிந்தவரை அனைவரும் கலந்துகொள்ளவேண்டுமென கோருகிறேன்
ஜெ
பிரான்ஸிஸ் கிருபா, சில எதிர்வினைகள்
அன்பான ஜெ,
வணக்கம்.
நீங்கள் பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதி நிகழ்விற்குச் சென்று கலந்து கொண்டதை நானே நேரில் சென்று நின்றதைப்போல உணர்ந்தேன். அவருடைய இறுதிப் பயணம் நிராதரவாக அமைந்து விடக் கூடாது என்ற உங்கள் உணர்வைப் பாராட்டுகிறேன். ஒரு தந்தையாக, மூத்த சகோதரனாக, இனிய தோழனாக நீங்கள் அங்கே கிருபாவுடன் நின்றீர்கள். போகனும் லஷ்மி மணிவண்ணனும் சாம்ராஜூம் கூட நின்றது மேலும் ஆறுதலாக இருந்தது.
எப்பொழுதும் இந்த மாதிரித் தனித்த வாழ்க்கையை தேர்வு செய்கின்ற எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஏற்படுகின்ற அவலத்தையும் கைவிடல்களையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை ஒரு சமூகக் குற்றமாகப் பின்னர் பேசியும் வருகிறோம். ஆனால் நாமே இந்தக் குற்றத்தின் நிஜமாகவும் நிழலாகவும் இருக்கிறோம் என்பதை மறந்தும் மறைத்தும் கொள்கிறோம். இதை, இந்தக் கடப்பாட்டினை உங்களுடைய இன்றைய பிரான்ஸிஸ் கிருபாவைப் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.
உண்மையில் இவ்வாறான சூழலில் நாம் உடனிருப்பதே அவசியமானது. இது ஒரு பண்பாடாக உருவாக வேண்டும் என நானும் சாம்ராஜூம் இன்று பேசினோம். எப்பொழுதும் துயரடைந்தவர்கள், நிராதரவானவர்களோடு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு சான்று. எல்லாவற்றுக்கும் அப்பாலான உணர்வும் பேரன்பின் அடையாளமும் இது. மிக்க நன்றி.
நிறைந்த அன்புடன்,
கருணாகரன்
இலங்கை
அன்புள்ள கருணாகரன்,
பிரான்ஸிஸ் கிருபாவின் இறப்பின் உணர்வலைகள் முடிந்தபின் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது, நம் சூழலில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
அவருடைய மறைவை ஒட்டி பலவகையான உணர்ச்சிக் கொந்தளிப்புகள் முன்வைக்கப்பட்டன. பெரும்பாலும் அந்நேரத்திய எதிர்வினைகள். அவரை இதுவரை எவ்வகையிலும் கவனிக்காதவர்களின் கருத்துக்கள். சில அவரை மேலோட்டமாக அறிந்து, அவருடைய வேறுபட்ட வாழ்க்கையை மட்டுமே வைத்து அவரை மதிப்பிடுபவர்களின் விதந்தோதல்கள். சில அவருடைய நண்பர்கள் எழுதியவை. அவரைப் போன்ற ஒருவரின் இறப்பு உங்களைப்போல சிலரிடம் உண்மையான ஒரு குற்றவுணர்ச்சியையும் உருவாக்குகிறது.
முதலில் சொல்லவேண்டியது இதுதான், பிரான்ஸிஸ் ’அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை அவர் விரும்பியபடி வாழ்ந்தார்’ என்பது உண்மையல்ல. அது எவ்வகையிலும் அவருடைய தெரிவு அல்ல. இளமையிலேயே வலிப்புநோய் கொண்டவர். அந்த சிகிச்சையினாலோ என்னவோ மூளைப்பாதிப்படைந்து கடுமையான உளநோயாளியாக இருந்தவர். அவரை மரபார்ந்த சிகிழ்ச்சைமையம் ஒன்றில் சிலகாலம் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர்.
அவர் குணமாவதற்கு உறவில் தமக்கை முறையான ஒருவர் எடுத்த முயற்சிகள் காரணம். குணமானபின் சென்னை வந்தார். சென்னையில் இருந்த தொடக்ககாலமே அவருடைய சிறந்த காலகட்டம். அப்போதுதான் முக்கியமான கவிதைகளை எழுதினார். தமிழினி வசந்தகுமாருக்கு அணுக்கமானவரானார். கன்னி நாவலை எழுதினார். அப்போது அவர் போதை அடிமை அல்ல.
பிரான்ஸிஸ் சினிமாக்கள் சிலவற்றில் வேலைபார்த்திருக்கிறார். குடிப்பழக்கம் அவரைப்போன்ற உளச்சிக்கல் கொண்ட ஒருவருக்கு மிக அபாயகரமானது. ஆனால் அச்சூழல் அவரை இழுத்துச் சென்றது. அது சினிமாவின் அடிமட்டத்தில் மிகச்சாதாரணமாக காணக்கிடைப்பது. அவரைக் கட்டுப்படுத்த அவரால் முடியவில்லை. அது அவருடைய பிழை அல்ல. கற்பனையும் உணர்வுநெகிழ்ச்சியும் கொண்ட எவருக்கும் குடியை கட்டுப்படுத்துவது மிகமிகக் கடினமானது. அவர்களின் மூளை ரசாயனங்களின் இயல்பு அத்தகையது.
குடிப்பவர்களுக்கு தேவை ஆலோசனை அல்ல. சிகிழ்ச்சை. அதுகூட சிலருக்கு சாத்தியமே அல்ல. ஏற்கனவே மூளைநரம்புகளில் சிக்கலுள்ளவர்கள் குடியை கட்டுப்படுத்தும் சிகிழ்ச்சைக்கு ஆளாக முடியாது. கட்டுப்பாடான குடி என்பது பெரும்பாலும் கணக்குவழக்கு கொண்ட, கறாரான மூளைக்காரர்களுக்கே சரிவரும். குடி சிலரை மிகச்சீக்கிரத்திலேயே அடிமையாக்கும். சிலரை அடிமையாக ஆக்கவே ஆக்காது. அது அவருடைய தெரிவோ அவருடைய தனிதிறமையோ அல்ல. அது மூளைரசாயனங்களின் விளைவு. பெரும்பாலும் பாரம்பரியம் சார்ந்தது.[நமக்குள் இருக்கும் பேய் ]
எனக்கு எந்த உடற்சிக்கலும், மூளைநரம்புப் பிரச்சினையும் இல்லை. இன்றுவரை முற்றிலும் ஆரோக்கியமானவன். ஆனால் புனைவிலக்கியம் எழுதுவதிலுள்ள உளக்கொந்தளிப்புகள் என்னை தற்கொலைமுனை வரை கொண்டுசென்றிருக்கின்றன. பைத்தியம் போல் அலைய வைத்திருக்கின்றன. அப்படி இருக்கையில் மெய்யாகவே நரம்புச்சிக்கல் கொண்ட ஒருவர், புனைவுத்தீவிரம் கொண்டிருப்பதும், கூடவே குடிப்பழக்கமும் எத்தனை அபாயகரமான பொறி என்று சொல்லவேண்டியதில்லை. வெளிவரவே இயலாத சுழி அது.
பிரான்ஸிஸ் வெளிவரவே விரும்பினார். நான் அவரைச் சந்தித்த போதெல்லாம் “இப்ப விட்டுட்டேன்” என்றோ “உடனே விட்டுடணும்” என்றோதான் சொல்வார். கண்ணீர் விடுவார். பலமுறை அவருடைய நண்பர்கள் அவரை மதுஅடிமைத்தனத்தில் இருந்து மீட்க முயன்றுள்ளனர். அவரே விரும்பி வருவார். பாதியில் தப்பிச் செல்வார். அவர் எந்த குடிநோயாளிகளையும் போல தீராத அலைக்கழிப்பிலேயே இருந்தார். மருத்துவர் ஜீவா அவரை பரிசோதனை செய்துவிட்டு அவர் மீள்வதற்கான வாய்ப்பு அனேகமாக இல்லை, அவர் மூளையின் சிதைவு அவ்வாறு என்றார். அவருக்கு எப்போதுமே வலிப்புநோய் இருந்தது.
இது ஒரு தனிப்பட்ட துயரம், அவ்வளவுதான். இது அவருடைய வாழ்க்கைப் பார்வை அல்ல. அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அல்ல. அவருடைய கொள்கைப்பிரகடனம் அல்ல. இதற்கு தத்துவ விளக்கமோ, தரிசன விளக்கமோ அளிக்க வேண்டியதில்லை. இதன்பொருட்டு அவரை கொண்டாடுபவர்கள், இதை அவருடைய அடையாளமாக ஆக்குபவர்கள், மிகப்பெரிய அவமதிப்பையே அவருக்கு இழைக்கிறார்கள்.
’சமூகம் அவரை கைவிட்டது, ஆதரிப்பாரின்றி வறுமையில் இறந்தார்’ என்று சொல்வது அவரை வாழ்நாளெல்லாம் பேணிய நண்பர்களையும் வாசகர்களையும் அவமதிப்பது. அவரை அனைவரும் பேணினர். அவர்தான் மேலும்மேலும் தொலைந்து கொண்டிருந்தார். பல ஆண்டுகள் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் மறைந்தார். மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவரை கண்டடைந்தனர். அவருக்கு வாடகை வீடு எடுத்து அளிக்கப்பட்டது. அவரால் அங்கே தங்க முடியவில்லை. முழுநேரமும் குடி, அவ்வப்போது வரும் வலிப்பு, பிற சிக்கல்கள்.
அவர் கடைசியில் சிக்கிய சிக்கலைப்போல சிலவற்றில் முன்னரும் சிக்கியிருக்கிறார். அவருக்கு அவ்வப்போது இனம்புரியாத அச்சமும் வன்முறைவெறியும் உருவாவதுண்டு. அப்போது உடனிருப்போர் பாதிக்கப்படுவதுண்டு. எல்லாவற்றிலிருந்தும் நண்பர்களே அவரை காத்தனர். எவராலும் அவரை மீட்க முடியாது. அவர் அவ்வளவேனும் மீண்டு வந்து எழுதியதே ஒரு அற்புதம்தான்.
அவருக்கு பணம் அளித்தோர் பலர். நான் குடிக்கு பணம் கொடுப்பதில்லை என்னும் கொள்கை கொண்டவன். ஆனால் கொடுக்காமலிருக்க முடிந்ததும் இல்லை. கொடுக்கும் பணம் அவரை மேலும் அழிக்கிறது என்று தெரியும். அது சார்ந்த குற்றவுணர்வு உண்டு. ஆனால் கொடுத்துவிட்டு நகர்வது ஒன்றே நான் செய்யக்கூடுவது. நான்கொடுத்த பணத்தில் குடித்துவிட்டு பார்வதிபுரம் சந்திப்பில் அவர் கிடப்பதை நானே காண்பதெல்லாம் ஆழமான பழியுணர்ச்சியை அளிப்பவை. ஆனால் அனைவருக்கும் அது ஒன்றே வழி.
இந்த தவிர்க்கமுடியாத சிக்கலில் இருந்து கொண்டு அவருடைய ஆழம் மீட்புக்காக, ஒளிக்காக ஏங்கியதை அவருடைய கவிதைகள் காட்டுகின்றன. ஆகவேதான் அவர் முக்கியமான கவிஞர். குடித்தமையால், அலைந்தமையால் அவர் கவிஞர் அல்ல. கவிதையில் வெளிப்பட்ட ஒளியால் அவர் கவிஞர். கவிதையின் பொருட்டு அவர் குடிக்கவும் அலையவும் இல்லை. அந்தக் குடியை, அதன் விளைவாக அவர் வாழநேர்ந்த வாழ்க்கைச் சூழலை, மிகைப்படுத்தி கற்பனாவாதத்தை பூசி கொண்டாட வேண்டாம்.
அவ்வாறு கொண்டாடுவது என்ன விளைவை உருவாக்குகிறது என்றால், அவரைப் போலவே குடித்து அலைந்தால் கவிஞர் என்னும் படிமம் கிடைக்கும் என இளையவர்களை எண்ணச் செய்கிறது. குடியும் அலைச்சலும் கலகம் என்றும், புரட்சி என்றும், சுதந்திரம் என்றும் எண்ணிக் கொள்ளச் செய்கிறது. அதைப்போல அபத்தம் வேறில்லை. அது வேடம்போட்டு ஆடுதல் மட்டுமே. ஆனால் இந்த வேடம் கலைக்க முடியாதது. சிக்கிக்கொண்டால் உள்ளே இழுத்துவிடுவது. பிரான்ஸிஸுக்காவது கவிதைகள் எஞ்சுகின்றன. மிகப்பலருக்கு ஒன்றுமே இல்லை. முற்றிலும் வீணான வாழ்க்கைகள் அவை.
நான் இந்த வயதில் இவர்களுடன் அல்ல, இவர்களின் தந்தையருடன் மட்டுமே என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன். கவிஞன் என நடித்துச் சாகும் ஒருவன் என் மகன் என்றே அகம் பதறுகிறது. அவர்களை குடிக்க வைத்து, முச்சந்தியில் விழச்செய்து தங்கள் ரகசியக்கிளுகிளுப்புகளை கொண்டாடிக்கொள்ளும் நடுத்தரவர்க்க அற்பர்கள்மேல் சீற்றமே எழுகிறது.
கவிதைக்கு போதை தேவையில்லை. கவிஞன் செயற்கையாக தன்னை சமூகத்தில் இருந்து விலக்கிக்கொள்ளவும் வேண்டியதில்லை. உண்மையான கவிஞனுக்கு இயல்பான உன்மத்தம் உண்டு. அவன் அன்றாடத்தில் இசைந்து வாழும்போதுகூட அவனுக்குள் கவிதையின் கனவு நுரைத்துக்கொண்டிருக்க முடியும். அக்கனவால் அவன் தன்னிச்சையாகவே சமூகத்திலிருந்து விலகியவனாக, அயலவனாக இருப்பான்.
உண்மையில் மதுவின் போதை அந்த இயல்பான கனவை, பித்தை மறைத்து வெறும் போதையை மட்டுமே எஞ்சவிடுகிறது. அது படைப்புரீதியாகப் பேரிழப்பு. மூளைமேல் எந்த மயக்கத்தையும் படியவிடாமலிருப்பது படைப்பிலக்கியவாதியின் கட்டாயத் தேவைகளில் ஒன்று. எல்லாமே அனுபவங்கள்தான். எதையும் இழக்கலாகாது. ஆகவே போதைப்பொருளை மட்டுமல்ல தூக்கமாத்திரைகளைக்கூட தவிர்ப்பதே நல்லது.
நான் வலிமரப்பு மாத்திரைகளைக்கூட தவிர்த்துவிடுவேன். வலிமரப்பு இல்லாமலேயே கையில் சிறிய அறுவைசிகிழ்ச்சைகளைச் செய்திருக்கிறேன். துடிக்கவைக்கும் வலியில்கூட அதை உற்றுநோக்கவே முயல்வேன். எனக்கு நிகழ்கின்ற எல்லாமே எனக்குரிய அகஅனுபவங்கள், எனக்குரிய செய்திகள் என்பதே என் எண்ணம். மூளை மிகமிகச் சிக்கலான ஒரு உறுப்பு. அதை மழுங்கடித்துக்கொண்டு படைப்பிலக்கியத்தை அடையமுடியாது. அதைக் கூராக்கிக்கொண்டே அடையமுடியும்.
கூராக்கிக்கொள்ளுந்தோறும் துயர் மிகுகிறது. வலி கூடுகிறது. அவற்றைவிட மேலாக அர்த்தமில்லாத சோர்வும் சலிப்பும் பெருகுகிறது. ஆனால் அதெல்லாம்தான் மானுட அனுபவம். படைப்பியக்கத்தின் கச்சாப்பொருளே அவைதான். அவற்றை அறிவதனூடாக நாம் அடையும் உன்மத்தநிலை ஒன்று உண்டு. அவற்றை கடந்துசெல்லும் மாபெரும் உன்மத்தநிலையும் உண்டு.
ஒரு படைப்பூக்கம் கொண்ட மனம் தனிமை நிலவொளியில், மலைமுகட்டில் அடையும் பெரும் பித்தை எந்தப் போதையிலும் அடைய முடியாது. போதை அந்த மெய்யான பித்தை மறைத்துவிடுகிறது. தியானத்தில் அடையப்பெறும் உளச்சிதறல் அனுபவம், உளத்திரிபுநிலைகள், உளக்குவிதல் நிலைகள் எந்த உச்சகட்டப் போதைப்பொருளாலும் அமைவன அல்ல. உண்மையில் போதைப்பொருட்கள் கற்பனைத்திறனும் நுண்ணுணர்வும் இல்லாத சாமானியர்களுக்கானவை.
சாமானியர்களுக்கு தற்பிடித்தங்கள் இருக்கும். உளத்தடைகள் பல இருக்கும். போதை அளிக்கும் சிறிய சுதந்திரம் வழியாக அவற்றை மீறி கொஞ்சம் களியாட்டமிடுகிறார்கள். சாமானியர் அவ்வப்போது கொஞ்சம் குடிப்பது நல்லது என்பதே என் எண்ணம். அது அவர்களை அன்றாட லௌகீக விஷயங்களுக்கு அப்பால் களியாட்டம் என ஒன்று உண்டு என உணரச்செய்யும். அது அவர்களுக்கு நல்லது.
ஆனால் கற்பனையும் படைப்பூக்கமும் கொண்டவர்களுக்கு குடியோ போதையோ எந்தவகையிலும் தேவையில்லை என்பதுடன் மெய்யாகவே அவர்கள் அடையவேண்டிய உச்சகட்ட உன்மத்த நிலைகளை அந்த சின்னப்போதை இல்லாமலாக்கிவிடுகிறது என்பதே என்னுடைய எண்ணம்.
‘உளம்கடந்து செல்லும்’ ஒரு நிலை உண்டு. நம்மை இங்கே நிலைநிறுத்தும் எல்லா தர்க்கங்களையும் கடந்துசெல்வது அது. ஊழ்கத்தில் அதைத்தான் ‘மது’ என்கிறார்கள். அந்த மதுவை அடைந்தவர்களுக்கு இந்த மது வெறும் திரவம். என்றேனும் அந்த அக மதுவை அருந்த வாய்ப்புள்ளவர்கள் எல்லா படைப்பாளிகளும். சிலர் அந்த வாசலை எளிய மது வழியாக எப்போதைக்குமாக மூடிவிடுகிறார்கள்.
தமிழின் தலைசிறந்த கவிஞரான தேவதேவன் குடிப்பவரோ அலைபவரோ அல்ல. ஆனால் அவர் தனக்கே உரிய உன்மத்த நிலையில்தான் எந்நேரத்திலும் இருந்துகொண்டிருக்கிறார். தேவதச்சன் நகர்மையத்தில் நகை வியாபாரம் செய்பவர்தான். அபி கல்லூரி ஆசிரியர்தான். பிரான்ஸிஸ் கிருபாவைவிட மிக மேலான கவிஞர்கள் அவர்கள். பிரான்ஸிஸ் கிருபா சென்றடைந்த உன்மத்த நிலைகளைவிட அரிய பித்துநிலைகளை சொல் வழியாகவே சென்றடைந்தவர்கள்.
அவர்களை அறிந்தவர்கள் ஆச்சரியத்துடன் நினைவுகூரலாம். ஒரு பொருள் இன்னொரு பொருளுடன் இணையும் விதமே, அல்லது ஒரு இறகு மெல்ல விழும் அசைவே தேவதேவனை பித்தெழுந்து மெய்ப்பு கொள்ளச் செய்வதை கண்டிருக்கிறேன். வெறும் அந்தியே அபியை உயர்மயக்க நிலைக்கு இட்டுச்செல்கிறது. உச்சிவெயில் போல உச்சகட்ட போதை வேறில்லை என்று தேவதச்சன் ஒருமுறை சொன்னார். அதுதான் கவிஞனின் போதை. எந்தக்குடிகாரனும் அருந்தும் அந்த மது அல்ல இது. இது கலைஞனின் மது. யோகியின் மதுவுக்கு பலவகையிலும் நிகரானது.
[இந்த வேறுபாட்டை பாரதி ஒரு கவிதையாகவே எழுதியிருக்கிறார். அவர் இரண்டு மதுவையும் அறிந்தவர்.பாரதியாரின் தனிப்பாடல்கள்/14. மது .பச்சை முந்திரிப் பழம்கொண்டு உருவாக்கும் மதுவை அருந்திக் களிக்கும் போகிகளை நோக்கி யோகி இன்னொரு மகத்தான மதுவைப்பற்றிச் சொல்கிறார்.]
பிரான்ஸிஸ் இயல்பாகவே கவிஞர். எப்படியும் அவர் அவ்வண்ணமே வெளிப்பட்டிருப்பார். அவர் கவிதை எழுதியது உளநோயும் குடியும் இணைந்த அந்த வாழ்க்கைச்சூழலை கடந்தும் மீறியும்தானே ஒழிய, அந்த வாழ்க்கைச்சூழலின் விளைவால் அல்ல. குடிக்காமலிருக்க முடிந்திருந்தால் அவர் இன்னும் முழுமையாக வெளிப்பட்டிருப்பார். அவர் சிறப்பான படைப்புகளை எழுதிய காலகட்டத்தில் குடிநோயாளியாக இல்லை என்பதை நண்பர்கள் அறிவார்கள். குடி அவரை படைப்பியக்கத்திலிருந்தே விலக்கிக் கொண்டுசென்றது என்பதுதான் உண்மை.
அவருடைய குடியை, அலைச்சலைக் கொண்டாடுபவர் எவர்? நம் நடுத்தரவர்க்கத்தின் ரகசியக் கிளுகிளுப்பே அவருடைய அவ்வாழ்க்கையை கொண்டாடச் செய்கிறது. முச்சந்தியில் கம்பிவளையத்தில் நுழையும் கழைக்கூத்தாடிபோல நம் நடுத்தரவர்க்க லௌகீகர் கவிஞனைப் பார்க்கிறார்கள். தங்களை மகிழ்விக்க, தங்களால் இயலாத ஒன்றைச் செய்துகாட்டுகிறவன் அவன் என நினைக்கிறார்கள். அவன் தங்களைவிட கீழான நிலையில் இருந்தால் அவர்களுக்குள் ஒரு நிறைவு ஏற்படுகிறது, அதை மறைத்துக்கொண்டு உச் உச் கொட்டுகிறார்கள். அவன் தேவதச்சன்போல நன்றாக, நிறைவாக இருந்து மேலும் சிறப்பாக எழுதியிருந்தால்கூட அவரை கண்டுகொள்ளாமலேயே விட்டிருப்பார்கள்.
கவிஞன் மேல் இரக்கத்துடன் பேசப்படும் சொற்கள் பெரும் ஒவ்வாமையையே அளிக்கின்றன. எந்நிலையிலும் கவிஞனை வாசகன் குனிந்து பார்க்கக்கூடாது. அவன் மேல் அனுதாபம் கொள்வதைப்போல அவமதிப்பு வேறில்லை. அவன் யாராக இருந்தாலும் ஒரு சமூகத்தின் ஆசிரியனே. அவனுடைய சிக்கல்களை வைத்து அவனை மதிப்பிடலாகாது.அவன் தன் எல்லைகளைக் கடந்து வெளிப்படும் கவிதைகளை வைத்தே அவனை மதிப்பிடவேண்டும். பிரான்ஸிஸ் அவருடைய கவிதைகளால் மட்டுமே நினைக்கப்பட வேண்டும்.
ஜெ
ஜெ,
பிரான்சிஸ் கிருபாவின் மரணம் பற்றிய கட்டுரை படிப்பதற்கே மனதுக்கு மிக வேதனையாக உள்ளது. நாம் நேரில் சென்றிருந்தாலும், இவ்வளவு மனம் வருந்தியிருக்குமா என்பது சந்தேகம் தான் மிக உருக்கமாக உண்மையாக சொன்னார் எப்பொழுதுமே நம்மவர்களுக்கு கவிஞர்களும் எழுத்தாளர்களும் உயிரோடிருக்கும் கொண்டாட மாட்டார்கள், மனமில்லையா, பெருந்தன்மை இல்லையா, அறிவில்லையா, என்ன இல்லை என்றே தெரியவில்லை, இருக்கின்ற போது நாலு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சொல்ல மிக மிக தயங்குகிறார்கள் நிறைய யோசிக்கிறார்கள்
நடிகர்களுக்கு பாடகர்களுக்கு, இசை அமைப்பாளர்களுக்கு, ரசிகர் கூட்டம் உள்ளது போல் இவர்களுக்கு வரவும் தயங்குகிறார்கள் இதுவுமு ஒரு குறைதான், நமக்காக நம் சமூக நலனுக்காக எழுதும் இவருகளையும் கொண்டாட வேண்டும், கொண்டு செல்லும் போது நாமும் உடன் சென்று அஞ்சலி செய்ய வேண்டும், இனி வரும் காலத்திலாவது, நடக்கும் என நம்புவோம் நல்ல கவிஞனை இழந்து விட்டோம் இனி இருப்பவர்களையாவது கொண்டாடி மகிழ்வோம்
வேலுமணி
கோவை
அன்புள்ள வேலுமணி,
உண்மைதான். இங்கே ‘செய்திக்கு’த்தான் எதிர்வினை. படைப்புகளுக்கு அல்ல. ஒரு படைப்பைப் படித்துவிட்டு இங்குள்ள கும்பல் ஏதேனும் சொல்வது அரிதினும் அரிது. எந்தப்படைப்பைப் பற்றியும் இங்கே பேச்சுக்கள் மிகக்குறைவு. இவர்களைப் பொறுத்தவரை பிரான்ஸிஸின் மரணம் ஒரு செய்தி. அச்செய்திக்குத்தான் எதிர்வினையாற்றுகிறார்கள். இன்றும் தமிழில் வாசிக்கப்படாத, பேசப்படாத கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஒரு நான்கு வரியேனும் எழுதவேண்டும் என இவர்கள் நினைத்தாலே நம் சூழல் மாறிவிடும். ஆனால் ஒரே நாளில் பிரான்ஸிஸையே மறந்துவிடுவார்கள். அடுத்த செய்தி வந்துவிடும். இந்தக் குறிப்புகள் நாலைந்து நாட்கள் கழித்து வெளியாகும்போது பிரான்ஸிஸ் பற்றி பேச்சே இருக்காது, கவனியுங்கள்.
பிரான்ஸிஸின் உடல்நிலை அவருடன் பிறந்து வந்த ஒன்று. அதற்கு அவரோ நாமோ ஒன்றும் செய்துவிடமுடியாது. அவருடைய அந்நிலையைக் கடந்து அவர் எழுதியதனால் அவரை முக்கியமான கவிஞர் என்கிறோம். அக்கவித்துவம் இல்லாதவர்கள் அவருடைய உடல்நிலை கொண்டிருந்தால் பிறர் அறியாமல் மறைந்திருப்பார்கள்.
அவருடைய படைப்புலகம் அவருடைய அந்த கொந்தளிப்பான நிலையின் சாதக அம்சங்களும் பாதக அம்சங்களும் கொண்டது. அவருடைய படைப்புகளை வாசிக்க, உள்வாங்க முயல்வோம். அதுவே நாம் அவருக்குச் செய்யக்கூடுவது. எந்நிலையிலும் கவிஞனிடம் நாம் அனுதாபமோ பரிதாபமோ கொள்ளலாகாது. அது ஒருவகை அவமதிப்பு
ஜெ
அரசமரத்தின் நிமிர்வு
’நினைவு என்பதும் எண்ணம் என்பதும் கோடிக்கணக்கான இணைவுகளின் தொகுதி, மூளை என்பது அவ்விணைவுகளை உருவாக்கும் உயிர்மின்சார சுழல்தொடுப்புகளின் தொகுதி’. பல ஆண்டுகளுக்குமுன் ஆலிவர் சாக்ஸின் ஒரு நூலில் வாசித்த வரி. புனைவு என்பது ஒருவகை நினைவுகூர்தல். ஆனால் நினைவுகூர்தலுக்கும் புனைவுக்குமான முதன்மையான வேறுபாடு என்பது எதை எதனுடன் இணைத்துக்கொள்கிறோம் என்பதிலுள்ள ஒரு தன்னிச்சையான இயங்குமுறை. இணைவுகள் வழியாக உருவாகும் புத்தம்புதிய பொருள்கோடலின் வெளி. அருண்மொழியின் இக்கட்டுரை ஒரு நல்ல புனைவும்கூட. மிக இயல்பாக அமைந்திருக்கும் அந்த இணைவால். அது உருவாக்கும் கேள்வியால்.
ஊர் நடுவே ஓர் அரசமரம்நன்கொடை அளிப்பது பற்றி…
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
அய்யா, தங்களுடைய மகாபாரத படைப்புகளை கணினி வாயிலாக இலவசமாக படித்தேன்.படைப்பாளிக்கு உரிய மரியாதையை செலுத்தாமல் இலவசமாக படித்தது என் மனதை உறுத்துகிறது.
எனவே குரு தட்சணையாக தங்கள் வங்கி கணக்கிற்கு Rs. 10,000- RTGS செய்ய விரும்புகிறேன்.தங்களின் தொலைப்பேசி எண் எனக்கு அறியவில்லை. மின்னஞ்சல் முகவரியும் – சரியானதா என அறியமுடியவில்லை.
Demand draft (or) RTGS எது செய்தால் தங்களுக்கு உகந்தது எனும் அய்யாவின் விருப்பத்திற்கு இணங்க செய்கிறேன்.தயவு கூர்ந்து அனுமதிக்கவும்.
உயர்திரு. நாஞ்சில் நாடன் அய்யா அவர்களுக்கும் இதைப்போன்றே உரிய மரியாதை செலுத்த விரும்பி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.
தங்கள் உண்மையுள்ள
கமலக்கண்ணன்
***
அன்புள்ள கமலக்கண்ணன்,
உங்கள் உணர்வுகள் நிறைவளிக்கின்றன. என் இணையதளமும் எழுத்துக்களும் இலவசமாக இருப்பதற்கான காரணம் இலக்கியம் பரவலாகச் சென்று சேரவேண்டும் என்றும் நோக்கமே. இங்கே இலக்கியத்துக்கு வாசகர்கள் மிகமிகக் குறைவானவர்கள். அவர்களுக்கும் இலக்கியம் தற்செயலாகவே அறிமுகமாகிறது. அவர்கள் தயங்கித்தயங்கித்தான் வாசிக்க வருகிறார்கள். தொடக்கத்தில் அவர்களுக்கு இலக்கியம் பிடிகிடைப்பதுமில்லை. வாசிப்பவை மிரட்சியையே உருவாக்குகின்றன. சிலசமயம் எரிச்சலை அளிக்கின்றன. தொடர்ந்து வாசித்தார்கள் என்றால் ஏதோ ஒரு புள்ளியில் அவர்களுக்கு ஆர்வம் உருவாகிறது. மெல்ல இலக்கியம் வசமாகிறது.
என் தளம் என்னுடைய எழுத்துக்களாலானது மட்டுமல்ல. அது இலக்கிய அறிமுகத்துக்கான மையம். இலக்கியப்படைப்புக்கள், இலக்கிய எழுத்தாளர்கள், இலக்கியக் கொள்கைகள், இலக்கிய நிகழ்வுகள் என அதில் விரிவான அறிமுகம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இலக்கியம் பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் தளம் இதுவே. எந்நூலைத் தேடினாலும், எந்த ஆசிரியரைத் தேடினாலும் கூகிள் இங்கே அனுப்புகிறது. அவ்வாறு இலக்கியத்திற்கு வரும் இளைய வாசகர்கள் ஏராளமானவர்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்பது ஓர் இலக்கிய இயக்கம். அதன் முகப்பு இந்த இணையதளம்.
ஆகவே இதை கட்டணம் கொண்டதாக ஆக்கமுடியாது. கட்டணம் அறிமுக வாசகர்களை வெளியேதள்ளிவிடும். ஏனென்றால் இதற்குள் என்ன உள்ளது என அவர்களுக்குத் தெரியாது. அவற்றை வாசிக்க அவர்கள் பழகவுமில்லை. ஆகவே இலவசத்தளமாக நடத்துகிறோம். இதற்கு ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் செலவாகிறது. அதை நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பு ஆண்டுக்கு இரண்டு விருதுகளை அளிக்கிறது. விழாக்களை நடத்துகிறது. சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறது. மேலதிகமாக இலக்கியவாதிகளில் தேவைகொண்டவர்களுக்கு நிதியுதவியும் வழங்குகிறது. முழுக்கவே நண்பர்களின் நன்கொடைதான். இதுவரை நிறுவனங்களிலிருந்து நன்கொடைகள் பெறவில்லை. பெருவாரியான வாசகர்களின் பங்கேற்புடன் ஓர் இலக்கிய இயக்கம் நிகழவதே நல்லது என்னும் எண்ணமே காரணம்.
விஷ்ணுபுர கணக்கு எண் மற்றும் தகவல்களை அளித்திருக்கிறேன். நன்கொடையை அதில் செலுத்தலாம். இந்த நிதி நடைமுறையில் இலக்கியம் வாசித்து தேர்ந்தவர்கள் வாசிக்கவிருப்பவர்களுக்கு அளிப்பதாகவே பொருள்கொள்ளும். உங்களைப்போல நன்கொடை அளிப்பவர்கள் மிகமிக இன்றியமையாதவர்கள். இப்பெரும்பணியில் நீங்களும் பங்குகொள்வதில் நிறைவடைகிறேன். என் மனமார்ந்த நன்றி.
ஜெயமோகன்
நிதியளிக்கவேண்டிய முகவரி
Bank Name & Branch:ICICI Bank, Ramnagar Branch, CoimbatoreAccount Name:VISHNUPURAM ILAKKIYA VATTAM TAMIL EZHUTHALARGAL ARAKKATTALAICurrent Account No:615205041358IFSC Code:ICIC0006152வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
jeyamohan.writer@gmail.com
நன்கொடை அளித்தவர்கள் meetings.vishnupuram@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஜெ
யானை, ஒரு கடிதம்
யானை – புதிய சிறுகதை
அன்புள்ள ஜெ.,
நீங்கள் வல்லினத்தில் எழுதிய ‘யானை’ கதை குறித்து ஏதும் கடிதம் வந்திருக்குமா என்று தேடினேன். ‘யானை, கடிதம் ‘ என்று தளத்தில் தேடினால் ‘யானை டாக்டர்’ குறித்துதான் கிடைக்கிறது. சரிதான், உச்சவழு, தீவண்டி வரிசையில் ‘உங்களுக்கு நீங்களே எழுதிப்பார்த்துக்கொண்ட கதை’ போல என்று நினைத்துக்கொண்டேன்.
‘யானை’, அனந்தன் என்கிற, பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கிற சிறுவனைப் பற்றிய கதை. எந்த அளவிற்கென்றால், காலையில் அம்மாவிடம் ‘இன்னைக்கி என்ன கிழமை?’ என்று கேட்கிறான். ‘திங்கட்கிழமை’ என்றவுடன் ‘ஞாயித்துக்கிழமைனு சொல்லு…ஊஊ.. ‘ என்று ஒரே அழுகை. ‘கெட்ட பசங்க, கெட்ட டீச்சர்’ என்று தினம் ஒரு புகார். ‘அங்க ஒரு ஆனை இருக்கு’ என்று அடிக்கடி வீட்டில் புகார் சொல்கிறான். டீச்சரும் ‘எதைக்கேட்டாலும் சரியா பதில் சொல்றதில்ல, ஒரு டாக்டர்ட்ட காட்டிருங்க’ என்கிறார். வீட்டில் மிருகங்களை, தன் மனம்போன போக்கில் வரைந்துகொண்டு தனக்கென ஒரு உலகத்தில் இருக்கிறான். எது குறித்தாவது சத்தம்போட்டால் ‘ஓ’ வென்று அழுது, உச்சத்தில் சென்று, மயக்கநிலைக்குச் செல்லும் ஒரு அழுகை. ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்ப வந்தவுடன் ‘ஸ்கூல்ல என்னடா நடந்துச்சு?’ என்று கேட்கிறாள். ‘கருப்பு யானை, நூறு பிள்ளைகளை குத்திக்கொன்னுருச்சு, ஒரே ரத்தம், கொடுங்கையூர்ல கொண்டுபோய் போட்டாங்க’ என்கிறான். அவள் பதற்றத்தோடு அவனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடுகிறாள். ‘யானை உள்ள நின்னுட்டிருக்கு, வெள்ளையா இருக்கு’ என்கிறான். அதோடு கதை முடிகிறது.
என் தம்பிக்கு சிறுவயதில் இதுபோல பிரச்சினை இருந்தது. ஏதாவது கேட்டு கொடுக்கவில்லையென்றால், அழுகை உச்சத்தில்போய், மூச்சு நின்று, உடல் நீலம் பாரித்து, மயக்கமாகி விடுவான். டாக்டரிடம் எடுத்துக்கொண்டு ஓடுவோம். அன்னையரால் பள்ளிக்குக் கொண்டுவிட்டு, அழைத்துச் செல்லப்படும் குழந்தைகள் கொடுத்துவைத்தவை. சிறுபிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவரும் காலங்கள் எனக்கு உவப்பானவை. நீண்ட நான்கு மணிநேரப் பிரிவுக்குப் பிறகான அந்த ‘ரீயூனிய’னைப் பார்க்க வேண்டுமே? ஒரே முத்தா மழைதான். எல்லா அம்மாக்களும் அழகாகிவிடும் தருணமது. ஆனால் இந்தக் கதையில் அனந்தனின் அம்மாவேகூட அவனிடம் கடுமையாகத்தான் நடந்து கொள்கிறாள். தனியாய் இருப்பதன் பதற்றத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறாள். இத்தனைக்கும் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இந்தத் தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டவள் அவள். அவன் அப்பாவோ ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று எளிதாக இருக்கிறார். இந்தக் கதைக்கு வந்த பின்னூட்டங்களைப் படிக்க சுவாரசியமாக இருந்தது. ‘வகுப்பறைகள் கொட்டிலாக மாறாது இருக்க வேண்டும் எனில் ஆசிரியர் அன்னையாக இருக்க வேண்டும்’ ‘அருமையான கதை. குழந்தைகளை உணர்வதற்கு அவர்களாக நாம் மாற வேண்டும் அப்போதுதான் அவர்கள் பிரச்சனைகளை நாம் நன்கு அறிந்து தீர்வு காண முடியும்’.போன்ற அறிவுரைகள். ஒற்றை வரிப் புளகங்கள் தனி. ‘அது பெரிய கதை….ஆனை கதை…நல்லா இனிப்பா புளிப்பு முட்டாய் மாறி… பெருசா வீட்ட விட பெருசா….அந்த காக்கா தான் வரல…நான் பாத்தேன்…சிருச்சேன் படிச்சட்டே…ஆனை காக்கா கதை….(அய்யா கடைசில என்னையும் இப்படி ஆக்கிட்டீங்களே?)’ என்ற ‘கமெண்ட்’ ரசிக்கும்படியும், நேர்மையாகவும் இருந்தது.
நீங்கள் ‘நூறு குழந்தைகள்’ என்றவுடன், உடனே நினைவுக்கு வந்தது 2004ல் கும்பகோணத்தில் நடந்த தீவிபத்து. அனந்தன் பார்த்த கருப்புயானை பள்ளியேதானா? எனில் வீட்டில் பார்த்த வெள்ளையானை எது? அம்மாவை கடைசியில் அப்படி திடுக்கிட்டு ஓடச்செய்தது எது? ‘ஆழ்ந்து படித்து உரையாட வேண்டிய கதை’ என்று ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். உரையாடலின் துவக்கப் புள்ளி எது? என்றுதான் புரியவில்லை.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

