Jeyamohan's Blog, page 906
October 3, 2021
நீலம் கடலூர் சீனு உரை, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். யாருளர் நம் இனிய சீனுவைப்போல்? சொல்முகத்தின் இம்மாத வெண்முரசு கூடுகையில் கடலூர் சீனுவின் நீலம் குறித்த உரை இனிது நிகழ்வுற்றது. சீனுவுடன் பாண்டிச்சேரி நண்பர்கள் சிலர் ஈரோடு கிருஷ்ணனுடன் ஈரோடு நண்பர்கள் சிலர் அத்துடன் கோவை நண்பர்கள் பலர் என சொல்முகம் சுடர்முகம் கொண்டது.
நீலம் குறித்து ஏற்கனவே பல உரைகள் நிகழ்த்தி இருந்த சீனு நீலத்தின் உணர்ச்சிகரம் தவிர்த்தே இந்த உரை நிகழ்த்தபோவதாக துவங்கினார். உணர்ச்சிகரம் தவிர்க்கக் கூடியதா என்ன நீலத்திற்கும் சீனுவிற்கும்? வெண்முரசு பற்றிய ஒரு விரிவான வரைபடத்தை அளித்தார். வேத காலத்திலிருந்து இன்று 2020 வெண்முரசு வரை இந்தியா என்னும் இப்பெருநிலத்தில் நடைபெற்ற சங்கிரஹம் என்னும் தொகுப்பு செயல்முறையை விளக்கினார்.
கீதை இதைத் தொடங்கியது. அதற்குமுன் இம்மண்ணிலிருந்த மெய்யியல் வழிமுறைகள் அனைத்திலும் -அசுரர்களுடையது நாகர்களுடையது என அனைவருடையவற்றிலும் ஏற்கவேண்டியதை ஏற்று தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்து கண்ணன் அதைச் செய்தான். பின்னர் கீதையின் வழியை சங்கரர் தொடர்ந்தார் வேத மதத்துடன் வேதாந்த அத்வைதம், பௌத்தர்களின் அனாத்மா, சூனியமென்னு கொள்கைகளை மாயாவாதம் என்று உள்ளிழுத்துக் கொண்டு அவர் எட்டாம் நூற்றாண்டில் இப்பெருநிலத்தின் அனைத்தையும் தொகுத்தார்.
ஒவ்வொரு யுகசந்தியிலும் இம்மண்ணில் தொடர்ந்து நடைபெறும் இப்பணியை சங்கரருக்குப் பிறகு நவீன யுகத்தில் ஸ்ரீ நாராயணகுரு தொடர்ந்து நடராஜகுரு, குரு நித்யா, ஜெயமோகன் வெண்முரசு என்று நிகழ்ந்திருப்பதை விவரித்தார். பின்லாந்தில் நடைபெற்ற சங்கிரஹம் எவ்வாறு அவர்களது தொன்மை பாகன் பண்பாட்டை மெய்யியலை மீளகொணர்ந்தது என்பதையும் அவ்வாறான ஒன்று அமெரிக்க செவ்விந்தியர்களிடம் நடைபெறாமல் போனதன் காரணங்களையும் விளக்கினார்.
மெய்யியல் வரலாறு பண்பாடு மட்டுமல்லாம் நவீன உளவியல் நரம்பியல் என 2020 வரையிலான அனைத்தையும் வெண்முரசு தன்னுள் கொண்டிருப்பதைச் சுட்டினார். வெண்முரசின் விரிவின் முன் பின் நவீனத்துவத்தின் எல்லைகள் எவ்வாறு சிறியவை ஆகின்றன என்று விளக்கினார். விளிம்புநிலையினரை மையப்படுத்தும் பணியை வெண்முரசு எவ்வாறு விரிவாக மேற்கொள்கிறது என்பதை கூறி வண்ணக்கடல் கூறும் அசுரர் குலத்தின் கதைகளையும் அவர்களுடன் வெண்முரசு நாவல்கள் முழுவதும் விரவிக்கிடக்கும் நாகர்களின் வரலாற்றையும் சுட்டினார்.
மொத்த வெண்முரசில் கண்ணன் அமைந்திருக்கும் விதம் பற்றிக் கூறினார். மாறாப் பெருந்தன்மை கொண்ட திருதிராஷ்டிரரின் ஸ்தூல பாவத்தையும் விஷயி பாவம் மட்டுமே கொண்டு விளங்கும் கண்ணன் இணையற்ற mystic-க்காக இருப்பதையும் குறிப்பிட்டார். நீலத்தின் கண்ணனை ராதையும் கம்சனும் நேரெதிர் திசைகளில் இருந்து சென்றடைந்தது. நந்தகோபர், யசோதை, பூதனை என அனைவருக்கும் அவன் வழங்கும் வாய்ப்புகளைக் விளக்கினார். எல்லை கடக்கவொண்ணாதென தாய், தந்தை என்றே நின்றுகொள்ளும் நந்தகோபரையும் யசோதையையும் குறிப்பிட்டார்.
யோகியர் அடையும் அனுபவங்கள் அவர்கள் அறியும் இருள் என மெய்மைக்கான பாதை அமைந்திருப்பதைக் குறிப்பிட்டார். கனவுக்குள் கனவு என பீலியின் பெருமை என விழிகள் என நீக்கமறநிறை நீலம் என கண்ணனின் வண்ணங்கள் மீண்டு தீட்டப்பெற்றது சீனுவின் இவ்வுரையில். ஆழ்வார்களின் பாசுரங்களிலும் கம்பராமாயணத்திலும் நிகழ்ந்திருக்கும் மொழியின் எழில் நீலத்தில் உச்சமென நிகழ்ந்திருப்பதை விவரித்தார். நீலம் உணர்த்திய தமிழனாய் இருப்பதன் சுவையை பயனைக் குறிப்பிட்டார். நீலத்தின் சந்தங்கள் – அது எவ்வாறு இசையுடன் துய்த்தற்கு உரியது அகனமைவது ஆழங்கொள்வது நேரடி ஆன்மிக அனுபவமாவது என்பதை விளக்கினார்.
தாங்கள் நீலத்தின் முன்னுரையில் குறிபிட்டவாறு ஆத்மானந்தர் குறித்துக் கூறி அத்வைதத்தின் இறுக்கம் விலக்கி ராதாமாதவம் பெருங்காதல் எனப்பெறும் பேரன்பில் அவர் திளைத்தது கூறி ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உடலில் கூட பெண்மைக்குரிய மாற்றங்கள் விளைவித்த அதனியல் குறிப்பிட்டார்.
அத்துடன் குருதியால் ஈடுசெலுத்தப் பெறும் பாவம் என்னும் கிறிஸ்துவ கருத்தைக் குறிப்பிட்டு கண்ணன் அதனுடன் பொருந்தும் இடம் கூறினார். தெய்வமெனவே நிற்கும் கண்ணனும் மானுடகுமாரனாக நிற்கும் ஏசுவும் வேறுபடும் விதமும் விளக்கினார். அவிர்பாகத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி இந்திரனிடமிருந்து அதைப்பறித்து இந்திரஜித் ஆகிய கண்ணன் எவ்வாறு ஒவ்வொரு வெண்முரசு நாவலிலும் ஒவ்வொருவனாகிறான் என்பதைக் குறிப்பிட்டு அத்துடன் நீலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கூட அவன் ஒவ்வொருவனாவதைச் சுட்டினார்.
சீனு உரை முடித்தபோது லோகமாதேவி நீலம் வாசித்ததாகவே தோன்றவில்லை. இனிதான் வாசிக்கவேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது என்று கூற சீனு ”அதுதான் வேணும்” என்று புன்னகைத்தார்.
உண்மையில் இவ்வுரை ஒரு வாசகரின் உரை என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. ஒரு யோகியின் உரை. சத் சங்கத்தின் பெருமை அறிந்தவர்கள் உணர்வார்கள். இங்கு நான் குறிப்பிடுபவை சிலவே அத்துடன் சீனுவின் உரையை என் சிறு திறனுக்கு ஏற்ப கொண்டவை. உண்மையில் ஆகாயகங்கையை தலையில் தரிக்க வல்லவன் அரனே எனினும் தன் தலைக்குமேல் தொலைவில் விண்ணில் பாயும் அக்கங்கையின் எழிலை மண்நின்று கனவெனக் காணும் ஒருவனின் பேருவகை எனக்கு வாய்த்தது.
சீனுவிற்கு நன்றி. என்றுமுள்ள தங்களுக்கு என்றுமுள்ள நன்றி.
அன்புடன்
விக்ரம்
கோவை
வெண்முரசு கொண்டாட்டம் – இசை வெளியீட்டு விழா
நண்பர்களுக்கு வணக்கம்,
வெண்முரசு நிறைவை கொண்டாடும் வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தயாரித்து வழங்கும் “வெண்முரசு கொண்டாட்டம்” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தங்களை அன்புடன் அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். (ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை இங்கு காணலாம்). இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெண்முரசின் பிரம்மாண்டத்தின் குறியீடாக உருவாகியுள்ள பிரம்மாண்ட இசைக்கோர்வையில் ஜெர்மன் பிராஸ் இசைக்குழு (German Brass Band), வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசை கலைஞர்கள் (Strings by North Carolina based Symphony musicians), சிதார் ரிஷப் ஷர்மா, புல்லாங்குழல் பரத்வாஜ், ஆஃப்கன் ருபாப் மீர் ஹமீதி ஆகியோர் பங்களித்துள்ளனர்.
வெண்முரசின் நீலம் நாவலில் இருந்து எடுக்கப்பட்ட அபார வரிகளை கமல் ஹாசன், சைந்தவி, ஶ்ரீராம் பார்ததசாரதி, ராஜன் சோமசுந்தரம் ஆகியோர் பாடியுள்ளனர்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இப்படத்தின் இசைத்தொகுப்பை வெளியிடுகிறார். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், ஜெயமோகன், கவிஞர் ரவிசுப்பிரமணியன், பாடகி சைந்தவி, இயக்குநர்கள் வசந்தபாலன், அப்பு பட்டாத்ரி, சித்தார் ரிஷப் ஷர்மா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
யூடியுபில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
அக்டோபர் மாதம் 9-ம் தேதி
இந்திய நேரம் மாலை 5:30 மணி
https://bit.ly/vmtribute
பேட்டிகள், கடிதங்கள்
அன்பு ஜெ,
பேட்டி எங்கும் நிறைந்திருந்த பச்சை நிறம், நீரும் மனதை சாந்தப்படுத்திக்கிறது, எங்கோ என்னுள் வாழும் ஆதிமனிதனுக்கு அது செழிப்பையும், அதன் மூலம் வாழ்வை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையே அளிக்கறதோ என்னவோ. உங்களது asianet பேட்டி கண்டேன் – நல்ல இசை கோர்ப்பு, காணொளி மிக கவித்துவமாக தொகுக்கப்பட்டிருந்து. ஒரு பேட்டியாளனாக, subject மையப்படுத்தி கேள்விகளை கேட்டது மிகவும் பிடித்தது
உங்களுடனே காலைநடை சென்றது போல உணர்ந்தேன்.
பேரன்புடன்
கோபி
***
அன்புள்ள ஜெ
ஆசியாநெட், கைரளி பேட்டிகள் அழகான உணர்வை உருவாக்கின. அவை உங்களை உங்கள் நிலத்தில் வைத்து அறிமுகம் செய்திருக்கிறார்கள். பொதுவான வாசகர்களுக்கான பேட்டிகள். ஆகவே சுருக்கமாக இருபது நிமிடங்களில் முன்வைக்கிறார்கள். நீங்கள் எழுதும் உலகத்தின் ஒரு விரிவான சித்திரத்தை அவை அளிக்கின்றன.
தமிழிலும் முக்கியமான எழுத்தாளர்களை அவர்களின் வீடுகளுக்கும் மண்ணுக்கும் அழைத்துச்சென்று இதேபோல பதிவுசெய்து ஒரு தொடர்கூட வெளியிடலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் மல்லாங்கிணறு, யுவன் சந்திரசேகரின் கரட்டுப்பட்டி எல்லாம் பதிவாகவேண்டும். அப்போதுதான் நாம் இலக்கியத்திற்குள் உண்மையாக நுழைகிறோம்
இன்றைக்கு நம் டிவியில் இதெல்லாம் சாத்தியமில்லை. ஆளில்லை. யூடியூப் சானல்களில் இதை எவராவது செய்யலாம்.
சாரங்கன்
ஏசியாநெட் பேட்டி, கடிதங்கள்வெண்முரசுக்குப் பின் ராமன் கதையா?
அன்புள்ள ஜெ
நலம் தானே. சில இளைய தலைமுறை (20-40) நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் மகாபாரதம் குறித்த சில கூடுதல் புரிதல்களை அவர்கள் வெண்முரசின் மூலம் அடைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. பெற்றோரால், ஆசிரியர்களால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை, அணுக முடியாத தளத்தை உங்களால் செய்ய முடிந்திருக்கிறது என்பது மிகப் பெரிய விஷயம்.
அந்த வரிசையில், இராமாயணத்தையும் நீங்கள் முன்னெடுத்து உங்களது ஆக்கத்தில் வெண்முரசைப் போன்ற விரிவான வடிவத்தில் கொடுப்பது மனித குலத்திற்கு நீங்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய விஷயமாக இருக்கக் கூடும். தாங்கள் முனைவீர்களா. உங்களால் மட்டுமே இதை இத்துனை நேர்த்தியாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க முடியும் என்பதினாலாயே இந்தக் கோரிக்கையை உங்கள் முன்னர் வைக்கிறேன்.
இது குறித்த உங்கள் எண்ணத்தை தெரியப்படுத்தினால் மகிழ்வாக இருக்கும்.
நன்றி
கிருத்திகா ஸ்ரீதர்
அன்புள்ள கிருத்திகா,
நான் வெண்முரசை எழுதுவதற்கான காரணங்கள் பல. முதலில் நீண்ட நாட்களாகவே மகாபாரதத்தை எழுத வேண்டுமென்னும் கனவு இருந்தது. இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக. அதற்காக தகவல்கள் சேகரித்துக் கொண்டும், பயணங்கள் செய்துகொண்டும், அறிஞர்களுடன் உரையாடியபடியும் இருந்தேன். மகாபாரதத்தை ஒட்டி பல கதைகளை எழுதினேன். 1988ல் வெளிவந்த திசைகளின் நடுவே தொடங்கி தொடர்ச்சியாக அவை வெளிவந்தன. அவை எல்லாமே இன்று வெண்முரசில் அடக்கம்.
ஆனால் மகாபாரத மறுபுனைவை பலமுறை எழுதத் தொடங்கி சரியாக அமையாமல் கைவிட்டேன். பல கைப்பிரதிகள் இன்னும் உள்ளன. மெல்ல மெல்ல அதை எழுத என்னால் இயலாது என்று எண்ணினேன். ஆகவே மெல்ல மெல்ல எழுதவேண்டிய தேவையில்லை என்று எண்ணத்தலைப்பட்டேன். அத்திட்டத்தைக் கைவிட்டேன்.
நடுவே கீதைக்கு ஓர் உரை எழுதத் தொடங்கினேன். ஆனால் அதை என்னால் தொடரமுடியவில்லை. என் வாசிப்பை விட என் தன்னறிதல் குறைவென்று உணர்ந்தேன். நான் ஊழ்கம் வழியாக அறியாமல் மேலே எழுதலாகாது என்று தோன்றியது. ஆனால் தூய ஊழ்கப்பயிற்சி எனக்குரியது அல்ல என்பது என் ஆசிரியரின் வழிகாட்டல். என்னுடையது வேறொரு முறை. அதை படைப்பூழ்கம் எனலாம். பிரதிபா யோகம் எனலாம்.
அதைச் செய்யும்பொருட்டு பலவகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். சட்டென்று வெண்முரசு எழுதும் எண்ணம் உருவானது. அது மிகக்கடினமான ஓர் அறைகூவல். ஆனால் ஓர் ஊழ்கம் என்னும் நிலையில் அவ்வளவு கடினமானதும் அல்ல. அதை எழுதத் தொடங்கி ஓரு யோகப்பயிற்சியிலுள்ள எல்லா அலைக்கழிப்புகள், கொந்தளிப்புகள், வீழ்ச்சிகள், எழுச்சிகள், பேரின்பங்கள், நிறைநிலைகள், மெய்யறிதல்கள் வழியாக வந்து நின்றேன். கண்டடைந்தபின் எழுதியதல்ல அது, எழுதுவதனூடாகக் கண்டடைந்தது.
இன்று மீண்டும் வெண்முரசு எழுதிய தொடக்க நாட்களுக்குச் செல்லமுடியாது. இன்று எழுதியதென்றால் குமரித்துறைவி. அதிலுள்ள மங்கலமும் அழகுமே இயல்பாக வருகிறது. சாதாரணமாக ஒரு புனைவெழுத்தாளன் அவன் எழுதும் பெரும்புனைவின் உச்சியில் அடையும் நிறைநிலை அது. அது அந்நாவலின் எல்லாப் பக்கங்களிலும் உள்ளது.
இன்று ராமாயணத்தை எழுதுவதென்றால் ராமனின் மங்கலத்தை எழுதலாம். துயரை, போரை என்னால் எழுத முடியாது. அது வெண்முரசை எழுதத்தொடங்கிய போதிருந்த உளநிலை கொண்டிருந்தால் மட்டுமே எழுதத்தக்கது. இனி நான் என்ன எழுதுவேன் என்று சொல்லத் தெரியவில்லை.
ஜெ
October 2, 2021
இதழியலாளன் மொழியாக்கம் செய்தல்…
அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்)
அன்புள்ள சார்,
மிக்க நன்றி. ‘அந்த முகில் இந்த முகில்’ புத்தகத்தின் முன்னுரையில் என் பெயரைப் பார்த்து நானும், என் குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். நான் செய்த அந்த ‘சரிபார்த்தல்’ (உதவி என்பது பெரிய வார்த்தை) உங்கள் முன்னுரையில் குறிப்பிடும் அளவிற்கு முக்கியமானது அல்ல என்றுதான் இப்பொழுதும் நினைக்கிறேன். முன்னரே சொன்ன மாதிரி இது ராமருக்கு அணிலின் உதவி (உடுத்த சாயம்!) போன்றதுதான். இது ஒன்றும் தன்னடக்கம் அல்ல, உண்மை அதுதான். என் பெயரைக் குறிப்பிட்டது உங்கள் அளி மட்டுமே. காலத்துக்கும் நிலைக்கக்கூடிய ஒரு ஜீவநதியில் ஒரு சருகுபோல் என் பெயரை இட்டுள்ளீர்கள். அதற்கு நானும், என் குடும்பமும் கடன் பட்டுள்ளோம்.
இந்த நாவல் தளத்தில் வெளியானபோது திரு அரங்கா அவர்கள் வாட்சப்பில் தொடர்புகொண்டார். ‘இதை தெலுங்கில் மொழிபெயர்க்கலாமே..!’ என்றார். எனக்கும் அந்த ஆசை உண்டுதான். இதற்குமுன், உங்களின் ‘விசும்பு’ கதையை மொழிபெயர்க்கும் முயற்சியை மேற்கொண்டு விட்டுவிட்டேன். அது மட்டுமல்ல, தெலுங்கின் குரஜாடா அப்பராவ், சலம், புச்சிபாபு முதல் இன்றைய வாடரேவு வீரபத்ருடு (Vadrevu Chinna Veerabadrudu) வரையிலான மாஸ்டர்களின் ஆக்கங்களையெல்லாம் தமிழில் கொண்டுவர விருப்பம் உண்டு.
தமிழில் ‘முதல் கட்ட’ (Raw) மொழிபெயர்ப்பு செய்வதின் மூலமாக. எழுத்துத் துறையில் (இதழியலும் எழுத்துத் துறைதான் என்று நீங்கள் எங்கோ குறிப்பிட்டு இருக்கிறீர்கள்) எனது அடுத்த கட்ட நகர்வு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனாலும், என் வேலையின் அன்றாடங்கள் அந்த நேரத்தை எனக்கு கொடுப்பது இல்லை. இங்கு என்னை முழுதளித்தே ஆகவேண்டும். பத்திரிகைக்காக சில வெற்றியாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் எழுதுவதில் அப்படி ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஆனால், அன்றாட செய்திகளைத் தாண்டி அதுபோல் எப்பொழுதும் அமைவதும் இல்லை. இந்தத் தடையை தாண்டினாலும், தெலுங்கில் சில மொழியாக்கங்கள் செய்ய எனக்கு சிறு தயக்கங்கள் உள்ளன. முக்கியமாக மொழியைச் சார்ந்து.
இப்பொழுது நான் எழுதிக்கொண்டு இருப்பது பத்திரிக்கை மொழி. அதாவது எதையும் எளிமைப்படுத்தும் நடை. ஒரு பெரிய சொற்றொடரோ, வாக்கியமோ, பத்தியோ எழுதவே கூடாது என்கிற நியமம். இது நான் சுமார் 20 ஆண்டுகளாக கற்ற நடை. இதைவைத்து மொழிபெயர்த்தால் மூல எழுத்துக்கு அநீதி இழைத்தது போல் ஆகிவிடாதா, என்கிற தயக்கம் வருகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஒரு மொழிபெயர்ப்பின் நடையில் ஒரிஜினல் ஆக்கத்திற்கு சமானமான செறிவு இருக்கவேணும் என்று. அது தனி மொழியாகவே அமையவேண்டும் என்று. உங்களின் மொழியாக்கங்களை அப்படி நான் உங்களின் எழுத்துக்களாகவே பார்க்கிறேன்.
அதீதமான எளிமைப்படுத்தலும் (பத்திரிகைகள் செய்வது போல), ஒரு ஒழுங்கே இல்லாத அர்த்தமற்ற மொழியாக்கங்களும் (சாகித்ய அகாதெமியின் பெரும்பாலான நூல்கள் போல்) இருக்கக் கூடாது என்று எண்ணுகிறேன். அப்படி இருக்கையில் என் சொந்த நடையை உருவகிப்பது எப்படி? 20 ஆண்டுகள் பத்திரிகை நடையில் மட்டும் (இதிலும் எனக்கென்று தனித்துவம் உண்டுதான் ஆனால் அது மிகச்சிறியது) எழுதும் நான்… அதை அடைய முடியுமா?
ஒரு மொழிபெயர்ப்பு முயற்சிகூட எடுக்காத நான் இப்படி கேள்விகளெல்லாம் கேட்பது நியாயம் இல்லை தான். ஆனால், இந்த சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
அன்புடன்,
ராஜு
அன்புள்ள ராஜு,
1986ல் எனக்கு இதழியலில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு வந்தது. அன்று நான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைவிட பன்னிரண்டு மடங்கு ஊதியத்துடன். ஆனால் ஆற்றூர் ரவிவர்மா இதழாளன் இழப்பது மொழிநடையை என்று என்னிடம் சொன்னார். ஆகவே தவிர்த்துவிட்டேன். இதழாளன் பொதுவான இதழ்நடைக்குள் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.
ஆனால் எதுவும் முயற்சியால் இயல்வதுதான். உங்கள் நடையை நீங்களே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாலே போதுமானது. அதற்குச் சில பயிற்சிகள் உள்ளன.
அ. நம்முடைய தேய்வழக்குகள் சில இருக்கும். [க்ளீஷேக்கள்] என்னென்ன என்று பார்த்து அவற்றை தனியாக ஒரு ஒரு கோப்பில் எடுத்து வைக்கவேண்டும். உரைநடையில் அவற்றைத் தேடிக் களைந்துவிட வேண்டும். அந்த தேய்வழக்குகளைப் பற்றிய தர்க்கபூர்வமான புரிதலிருந்தாலே அவை அகன்றுவிடும்.
ஆ. நம்முடைய சொற்றொடர் அமைப்பை அனிச்சையாக நாம் கடைப்பிடிக்கக் கூடாது. நாம் எதை மொழியாக்கம் செய்கிறோமோ அந்த படைப்பின் சொற்றொடரமைப்பை நாம் பின்தொடர்ந்தால் போதும். நம் மொழி மாறிவிடும். சொல்லப்போனால் நம் மொழிநடையை மாற்றிக்கொள்ள சிறந்த வழி என்பது மொழியாக்கம் செய்வதுதான்.
இ. எந்த மொழியாக்கத்தையும் இன்னொரு முறை திருப்பி எழுதவேண்டும். அப்போது நம்முடைய மொழியில் நம்மை மீறி வந்துள்ள வழக்கமான வடிவத்தையும், சொற்களையும் நாம் அகற்றிக்கொள்ள முடியும். அதாவது மொழிநடைக்காகவே ஒரு மறுஎழுத்தைச் செய்தால் போதும்.
இதழியல் என்பது மொழியை ‘கொல்லும்’ ஒரு துறை. அதிலிருந்து தப்புவது ஓர் அறைகூவல். ஆனால் அதையே ஒரு ஆர்வமூட்டும் வாழ்க்கை நோக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஜெ
***
சுவாமி சகஜானந்தர்- ஸ்டாலின் ராஜாங்கம்
தமிழக அடித்தள மக்கலின் உரிமைக்காகவும் கல்வி மறுமலர்ச்சிக்காகவும் போராடிய மகத்தான ஆளுமையாகிய சுவாமி சகஜானந்தர் பற்றி ஸ்டாலின் ராஜாங்கத்தின் உரை
ஆடை களைதல் – கடிதம்
ஆடை களைதல் “மெய்நாடுவோர் அனைவரும் செய்வது தங்களைத் தாங்களே ‘சித்தரித்துக்கொள்வது’ தான். அதை நடிப்பு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அது பொய் அல்ல. அது ஒருவகை உண்மை. ஒருவன் தன்னை ஒருவகையாக முன்வைத்துக்கொண்டே இருக்கையில் உண்மையாகவே அப்படி தன்னை ஆக்கிக்கொண்டும் இருக்கிறான். அப்படியே திகழ்கிறான்.” (ஆடை களைதல் May 7th ’21)
எளிதாக சொன்ன இந்த உங்கள் கருத்தில் எத்துனை உண்மைகள் பொதித்துள்ளன. என்னுள் பல எண்ண குமிழ்களை தோற்றுவித்தன. பல ஆளுமைகளை படித்த பாத்திரங்களை நிணவிற்கு கொண்டு வந்தன. ஆர்ச்பிஷப் தாமஸ் பெக்கட், சமகாலத்தில் வாழ்ந்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி என. தாமஸ் பெக்கட் ஆர்ச்பிஷப்பான பிறகு – அப்பதவி தன் நண்பன் மன்னன் ஹென்றியால் ராஜவிசுவாசத்துடன் இரு என்ற ஒப்பந்த அடிப்படியில் கொடுக்கப்பட்டாலும் பிஷப்பின் அங்கி அணிந்தவுடன் அதுவாகவே மாறி சர்ச்சுக்கு விசுவாசியாகி ராஜாங்கத்தை பகைத்து உயிரையும் துறக்கிறார். சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி கட்டளையிட்டும் அதனை ஏற்க மறுத்த சோம்நாத் சட்டர்ஜியின் செயலும் இதனை ஒட்டியதே. இந்த பிடிவாதம் – இந்த மறுப்பு – போராட்டக்காரர்கள் “வந்தே மாதரம் ” என்று கூவச் சொல்லி வற்புறுத்தியும் மறுத்து நிற்கும் சு.ராவின் (“ஜெ.ஜெ.சில குறிப்புகள்”) ஒரு பாத்திரத்தின் மெளனம் போன்றவைகள் ஒரு அறத்தின் வழி உறுதியாக நிற்பதே. அடிபணிய மறுப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்தே இவர்கள் வினையாற்றியுள்ளார்கள்.
நாம் ஏற்றுக் கொண்ட பணிக்கு நியாயம் செய்யவேண்டும். இது அறம்சார்ந்து நிற்பவர்களுக்கே சாத்தியம். “மெய்நாடுவோர்” என நீங்கள் ஒற்றை வரியில் அழகாக சொல்லியுள்ளீர்கள். இவர்கள் எண்ணிக்கையில் சொற்பானவர்கள். அரிதானவர்கள் என்றாலும் எல்லா இடங்களிலும் ஊருக்கு ஓரரிருவர் இருப்பார்கள் – இருக்கிறார்கள். ஆயினும் பெரும்பான்மையோர் (- நாம் தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்கள் உதாரணம்) வேஷங்களை கலைத்து அதுவாகவே என்றும் மாறுவதில்லை என்பது வேதனைக்குரியதுதான். கால வெளிச்சதில் – சொற்ப எண்ணிக்கையென்றாலும் வைரங்களே ஜொலித்து நிற்கும். வெறும் கண்ணாடிகள் வெப்பம் உமிழ்ந்து உலர்ந்து காய்ந்து காலாவதியாகிவிடும்.
icf சந்துரு
பிரஸ் காலனி, கோவை-19
***
சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள் இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன் பிறிதொன்று கூறல்குழந்தைகளும் நாமும் – கடிதம்
அன்புள்ள ஆசானுக்கு,
உங்கள் பதில் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எதிர்பார்க்கவில்லை. என்ன கேட்பது என்றும் சட்டென தோன்றவில்லை. உங்கள் பிறந்தநாள் அன்று கன்னியாகுமரி பயணம் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி. இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. சில தினங்களுக்கு முன், சமூகப்பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, மேலும் சிற்சில கட்டுப்பாடுகள் செயல்படுத்தியுள்ளனர்.
ஒருமுறை ZOOM சந்திப்பில் உங்கள் உழைப்பிற்கு ஈடு கொடுக்கும் – உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கங்களை குறித்து கேட்டு இருந்தேன். அதற்கு தாங்கள், “அந்த வேலைக்கென்று ஒரு தனி சக்தி இருக்கிறது” என்றவாறு பதிலளித்தீர்கள். என் அலுவலுக பணிகளில் நான் மூழ்கி இருக்கும் தருணங்களை நினைத்து பார்க்க முயன்றேன். எனினும், எனக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றியும், கொரோனா காலத்தில் நீங்கள் மும்பை மற்றும் பல பயணங்கள் செய்தது பற்றியும் அவ்வப்போது நினைத்து பார்ப்பேன்.
உங்கள் சமீபத்திய பதிவில், நீங்களும் அஜிதனும் பாதிக்கப்பட்டீர்கள் என அறிந்து கவலையுற்றேன். மீண்டது குறித்தும், அதன் தாக்கம் சற்றும் தெரியாமல் உங்கள் ஈடுபாடு குறித்தும் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நெடுங்காலம் தமிழ் சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பை தர வேண்டுமென்பது பல வாசகர்களை போல எனக்குமான வேண்டுதல்.
ஆங்கிலவழி பள்ளி படிப்பில் அவ்வளவாக தமிழிலக்கிய அறிமுகம் இல்லாத சூழலிலே வளர்ந்தேன். “சிவாஜி – MGR” பதிவு மூலம் உங்களை பற்றி அறிந்து, “யானை டாக்டர்” படித்ததிலிருந்து உங்கள் வாசகன் ஆனேன். உங்கள் ஆக்கங்களை/வலைப்பக்கங்களை படிக்கும் போது, ஒரு கலவையான உணர்வு எனக்குள் இருக்கும். நிறைவு + ஆற்றாமை + எச்சரிக்கை உணர்வு. நிறைவு: பற்றி விளக்கவேண்டியதில்லை. ஆற்றாமை: நீங்கள் எழுதும் வேகத்தில் பாதி அளவு கூட படிக்க முடியாமல் போவதால். ஒவ்வொரு முறை சிங்கை நூலகம் சென்று, அந்த பெரிய வெண்முரசு வரிசைகளை பார்த்ததும் (படம் இணைத்துள்ளேன்) ஒரு மிரட்சி கலந்த குற்றவுணர்வு தோன்றும். பிறகு சிறிய புத்தகம் ஒன்றை எடுத்துக்கொள்வேன்.
எச்சரிக்கை உணர்வு: நேரத்தை பணமாக்கும் காலத்தில் வாழ்வதால், உங்கள் எழுத்துக்களில் மூழ்கிவிடாமல் பார்த்துக்கொள்வது பெரும் சவால். ஒருவிதமான obsession ஆகிவிடுகிறது. எனவே சில நாட்கள் எதுவும் படிக்காமல் break எடுத்து கொள்வேன். “தன்மீட்சி”யில் வரும் “நான்கு வேடங்கள்” பற்றி நினைத்து கொள்வேன். இதுவரை நான் படித்த உங்கள் புத்தகங்கள் – அறம், விஷ்ணுபுரம், பனிமனிதன், காடு, இந்தியப்பயணம், குறுநாவல்கள் மற்றும் பல சிறுகதைகள். இன்னும் சென்றடைய வேண்டிய தூரம் நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. சீரான வாழ்க்கைக்கு எது சிறந்தது என்று சமூகம் அறிவுறுத்துவதற்கும், வீட்டில் பெற்றோர்கள் சொல்லித்தருவதற்கும், ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் (90-களில்) அவ்வளவு வித்தியாசம் இருந்ததாக தோன்றவில்லை.
ஆனால் இன்று அறச்சிந்தனை செறிந்த எழுத்துக்கும், இலக்கிய வாசிப்பிற்கும் அன்றாட முக்கியத்துவம் குறைந்து, YouTube, TikTok, Social Media -இல் மூழ்கி அதில் shallow கருத்து பகிர்தலும், followers பெறுதலும், அதன்மூலம் கிடைக்கும் celebrity status-ஐ கொண்டாடுவதும் – நிகழ்ந்துகொண்டிருக்கும் வேலையில், குழந்தைகளுக்கு நல்லது-கெட்டது அறிவுபுகட்டி, அதே நேரத்தில் அவர்கள் காலத்தில் (contemporary) outcast-ஆக ஆகாமல் தவிர்ப்பது எப்படி என்று அடிக்கடி சிந்திப்பேன்.
உங்களுக்கு நேரமிருந்தால் பதிலளிக்கவும்.
மிக்க நன்றி.
அன்புடன்
– மகேஷ்.
***
அன்புள்ள மகேஷ்,
குழந்தைகளை ‘வளர்ப்பது’ என்ற சொல்லாட்சியே காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு குறைவு. பள்ளி, அரசு, சமூகம், ஊடகம் என பொதுச்சூழலின் செல்வாக்கே மிகுதி. ஆகவே நம் குழந்தைகள்மேல் நம்மை முழுமையாக பதியவைக்க முடியாது. நாம் செய்யக்கூடுவது ஒன்றே. கூடுமானவரை குழந்தைகளுடன் உரையாடலில் இருப்பது. ஒருபோதும் அந்த உரையாடல் அறுபடாமல் பார்த்துக் கொள்வது.
ஜெ
***
வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் – சிகாகோ – கடிதம்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலம்தானே?
அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக சிகாகோவில் வெண்முரசு நாவல் பற்றிய ஆவணப்படம் கடந்த ஞாற்றுக்கிழமை (செப்டம்பர் 26, 2021) மதியம் 3:00 மணியளவில் திரையிடப்பட்டது.
திரு. பாலா நாச்சிமுத்து மற்றும் திருமதி.ஜமீலா இருவரும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதை அறிந்தவுடன், நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். திரு. சௌந்தர் மற்றும் திரு.ராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் படி நாங்கள் மூவரும் சேர்ந்து கடந்த மூன்று வாரமாகத் திட்டமிட்டு பல்வேறு முறையில் இந்த திரையிடல் பற்றிய செய்திகளை அவரவர் உள்ளூர் மக்களைச் சென்றடையச் செய்தோம். தமிழ் “ஆர்வலர்கள்” இதனை எப்படிப் பரிசீலிப்பார்கள் என்று தெரிந்திருந்ததால், அவர்களை விட உங்கள் எழுத்துக்களைப் படித்து ருசித்திருக்கும் பலபேர் இங்கு இருப்பார்கள் அவர்களையாவது இத்திரையிடல் செய்தி சென்றடைய வேண்டும் என்பதே எங்களுடைய குறைந்தபட்ச நோக்கமாக இருந்தது.
பாலாநான் தனிப்பட்ட முறையில் இந்த ஆவணப்படத்தைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக இருந்தேன். ஆதலால், நாட்கள் நெருங்க நெருங்க மனதுக்குள் ஒரு களியாட்டம் மெல்ல ஆரம்பித்திருந்தது. என் மகளும், மகனும் புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள். அவர்களிடம் ஏற்கனவே வெண்முரசு புத்தகம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்திருந்ததால், இந்த ஆவணப்படம் பற்றிய தகவலை சொன்னவுடன் என் மகள் மகிழ்ந்து, “அப்புத்தகத்தை ஒரு சூப்பர் ஸ்டார் போல கொண்டாடுகிறீர்கள்” என்றாள். முந்நூறு மைல்கள் கார் பயணம் செய்ய வேண்டியிருந்ததால், நான் முதல் நாளே கிளம்பி சிகாகோவில் தங்கிக்கொண்டேன். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் பேசிக்கொண்டபடி, என் நான்கு வரிகளே கொண்ட “நன்றியுரையை” சிகாகோவிலிருந்த கோவில் ஒன்றில் அமர்ந்து மனதுக்குள் தொகுத்துக் கொண்டு பெருமிதமாக நிமிர்கையில், எதிரில் இருந்த விவேகானந்தர் சிலை கண்டு திடுக்கிட்டுத் திரும்பி அமர்ந்து கொண்டேன்.
அன்று மதியம் திரு.பாலா குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் பட்டு வேஷ்டி சட்டையுடன் வந்திருந்தது மனதுக்குள் ஒரு விழாவுக்கு வந்திருப்பதை உறுதிசெய்தது. சிறிது நேரத்தில் திருமதி.ஜமீலாவும் பட்டுச் சேலை சர சரக்க வந்து சேர நாங்கள் மூவரும் ஒரே மன நிலையில் இருப்பதைக் காட்டியது. நாங்கள் மூவரும் முதல் முறையாகப் பார்த்துக்கொண்டாலும், எங்களிடம் எந்த விதமான தயக்கமும் வேறுபாடும் இல்லாமல் பேசிக்கொண்டது உங்களின் எழுத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகவே கருதுகிறேன். நீங்கள் உங்கள் எழுத்தின் வழியே எங்களை எப்போதும் இணைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அது ஒரு மாயவலையைப் பின்னிக்கொண்டே எங்கள் அனைவரையும் இணைக்கிறது என்பது நிஜம்.
ஜமீலாமற்ற பார்வையாளர்களும் வருவதற்குள் நாங்கள் பிற வேலைகளை முடித்து வைத்தோம். பலபேர் வருவேன் என்று சொல்லியிருந்தாலும் வரும் வரை எந்த உறுதியும் இல்லை என்பதால் பாலா பதட்டமாகவே இருந்தார். ஒரு இந்திய ஜோடி உள்ளே நுழைந்தவுடன் நாங்கள் கைகூப்பி புன்னகையுடன் வரவேற்பதைக் கண்டு மிரண்டு போனவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஒரு தெலுங்கு படம் பார்க்க வந்திருந்தவர்கள் என்று தெரிந்தவுடன் பாலாவின் பதட்டம் இன்னும் அதிகமாகியது. சிறிது நேரத்தில் தெரிந்த முகங்கள் ஒவ்வொருவராக வர அந்த இடத்தின் சூழ்நிலை இயல்பாகி, அறிமுகங்கள், விசாரிப்புகள், சிரிப்புகள், ஆச்சரியங்கள், புகைப்படங்கள் எனப் பற்றிக்கொண்டது.
அதுவரை வெளியே பேச்சும் சிரிப்புமாக இருந்த மொத்த கூட்டத்தையும், அந்த இருளான திரையரங்கினுள் அமர்த்தப்பட்டவுடன் ஏனோ காதோடு காதாகப் பேசிக்கொண்டிருந்தது வியப்பாகவே இருந்தது. அது ஒரு பழகிய மன நிலை போல. திரு.பாலா சிறப்பான ஒரு தொடக்க உரை கொடுத்துத் தொடங்கி வைக்க, திருமதி.ஜமீலாவின் மிகச் சிறப்பான உணர்ச்சி மிகு உரையில் அங்கிருந்த அனைவரும் அவரின் பேச்சில் இருளோடு இருளாக உறைந்திருந்தோம். அவரின் பேச்சு முடிந்ததை ஒரு சில கணங்கள் கழித்தே உணர்ந்து சட்டென மொத்த கூட்டமும் கைதட்ட எனக்கு ஏனோ “ஓங்காரமாக முழங்கும் இருள்” என்ற வரி நினைவுக்கு வந்து போனது. என் நன்றியுரையுடன் முடித்துக்கொள்ள, ஆவணப்படம் தொடங்கியது.
வெங்கட்ஆவணப்படம் எந்த விதத்திலும் எங்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. பெரும் தொற்று காலத்தில் இவ்வளவு சிறப்பான ஒரு ஆவணப்படம் எடுப்பது என்பது சரியான திட்டமிடல் இருந்தாலொழிய சாத்தியமேயில்லை. மிக நேர்த்தியாக, பேட்டியும் காட்சிகளும் பின்னப்பட்டு அதன் ஊடே தேவையான இடங்களில் பின்னணி இசையை நுழைத்து எங்குமே தொய்வில்லாமல் இருந்தது இந்த ஆவணப்படத்தின் மிகப் பெரிய வெற்றி. பெயர்கள் மட்டுமே அறிந்திருந்த பலர் முகம் பார்த்து பரவசம் அடைய வைத்தது. இதிலிருந்த ஒரு மகத்தான அம்சம் ஒவ்வொருவரும் வேறு வேறு கோணத்தில் வெண்முரசு நாவலை அணுகியிருக்கும் விதத்தை வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தியது. திரு. ராஜன் அவர்கள் பேசும்போது “நீலம்” நூலிலிருந்து வரிகளைப் பொறுக்காமல் கை விட்டு அள்ளி எடுத்ததெல்லாம் கவியாக இருந்தது என்று சொல்லியபோது எனக்கு மயிர்க்கூச்செறிந்ததது. அதில் தொகுப்பட்ட பாடலும் அதன் இசையும் எங்களை “கட்டி போட்டுவிட்டது” என்று சொல்லுவது சம்பிரதாயமான வார்த்தை என்றாலும், அதை விட வேறு சிறப்பான சொல் எங்களின் நிலையை விளக்க இல்லை என்றே எண்ணுகிறேன். வெண்முரசு நாவல் மதங்களைக் கடந்து, மனித உணர்வுகளைப் பேசுகிறது என்பதை இந்த ஆவணப்படத்தில் பேசியவர்கள் குறிப்புணர்த்தியது சிறப்பு. திரு.ஷண்முகவேல் அவர்களின் ஓவியத்தைக் காணும் போதெல்லாம் நம் மனசுக்குள் ஏற்படுத்திய அந்த உணர்வை இசையால் வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. படம் முடிந்து வெளியே வந்தவர்களின் பலருடைய மனநிலை எங்களைப் போன்றே இருந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
வெண்முரசு நாவலைப் பற்றி இலக்கிய எழுத்தாளர்கள் பலர் பேசியது, வாசகர்களாக எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. நாங்கள் வாசிக்கும், மதிக்கும் மற்ற சமகால இலக்கிய எழுத்தாளர்கள் திரு. எஸ்.ராமகிருஷ்ணன், திரு. பவா செல்லத்துரை, திரு. சாரு நிவேதிதா மற்றும் பலரும் வெண்முரசு நாவலைப் பற்றிய அவர்களின் கோணத்தைப் பேசியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பெரும் தொற்று காலத்தில் ஒருவரைச் சந்திப்பதென்பது சிரமமான காரியம்தான்.
வாழ்க்கையில் மிகப்பெரிய மன எழுச்சியை வெண்முரசு நாவல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு எங்களுடைய நன்றிகளும், வணக்கங்களும்.
இத்துடன் ஒரு சில புகைப்படங்களையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
அன்புடன்,
வெங்கட்.சு
October 1, 2021
மின்பரப்பியமும் மாற்றும்
அன்புள்ள ஜெ,
சமஸின் அருஞ்சொல் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் பல்வேறு இணைய இதழ்களையும் அச்சிதழ்களையும் வாசிக்கிறேன்.
அச்சிதழ்கள் பெரிய நிறுவனங்களால் வெளியிடப்படுபவை. ஆகவே அவற்றுக்கு ஒரு நம்பகத்தன்மையும் உறுதிப்பாடும் இருந்தது. இன்றைக்கு வெளிவரும் இணைய இதழ்கள் சிலர் கூடி சிறிய செலவில் வெளியிடும் குடிசைத்தொழில் இதழ்கள். அல்லது அரசியல் அமைப்புக்களால் பணம் தந்து உருவாக்கப்படும் பிரச்சார மீடியாக்கள். அல்லது வம்புகளையும் கிசுகிசுக்களையும் நம்பி நடத்தப்படும் மஞ்சளிதழ்கள்.
பெரிய நிறுவனங்களும் இணைய இதழ்களை கொண்டுவரலாம். ஆனால் அவற்றுக்கும் சாதாரண குடிசைத்தொழில் இணைய இதழுக்கும் ஒரே வகையான வாசிப்புதான் கிடைக்கும். அந்நிலையில் பெரிய இதழ்களுக்கு போதிய நிதி இல்லாமல் அவை படிப்படியாக நின்றுவிட நேரும்.
இன்றைக்கே நடந்துகொண்டிருப்பது இதுதான். பெரிய நிறுவனங்கள் அச்சிதழ்களின் இணையப்பதிப்புகளையே வெளியிடுகின்றன. இணைய இதழ்களாக மட்டுமே அவற்றால் வெளியிடப்படுபவை குடிசைத்தொழில் இணைய இதழ் போல பெரும்பாலும் ஒரே ஒரு ஊழியரைக்கொண்டு நடத்தப்படுகின்றன. பல்வேறு திறன் மிக்க பங்களிப்பாளர்களை உள்ளே கொண்டுவர முடிவதில்லை. செய்திக்காகவும் கருத்துக்காகவும் பணம் செலவு செய்யும் நிலையே இருப்பதில்லை.
அச்சிதழ்கள் நின்றுவிட்டால் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட்ட, முறையான செய்தி என்பதே இல்லாமலாகிவிடும். செய்தித்தாள்களுக்கு முன்பு செய்தி என்பதே இல்லை. தன்னிச்சையாகப் பரவும் தகவல்கள்தான் இருந்தன. அவற்றில் எவை உண்மை எவை பொய் என்றே கண்டுபிடிக்க முடிந்ததில்லை. அதாவது வதந்தியே செய்தி. செய்தி என்பதை உருவாக்கியவையே மாபெரும் அச்சு ஊடகங்கள்தான். அவை அழிந்தால் மீண்டும் உலகம் ‘செய்தியில்லாத’ உலகமாக ஆகிவிடுமா?
ஆர். எஸ்.ராகவ்
அன்புள்ள ராகவ்,
முதல் விஷயம், அச்சிதழ்களால் ’செய்தி’ என்பது உருவாக்கப்படவில்லை. செய்தியை ஒரு விற்பனைப்பொருளாக, ஒரு நிறுவனமாக ஆக்கியதே அச்சிதழ்களின் சாதனை. அதற்கு முன்னரும் செய்தி வேறு வதந்தி வேறு என்றே இருந்தது.
கும்பமேளாக்கள், மகாமகங்கள், புஷ்கரங்கள் போன்ற பெருங்கூடுகைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓர் இடத்தில் நிகழ்பவை. அங்கே அத்தனை தரப்புகளும் கூடும் முறைமை இருந்தது. கும்பமேளாக்களில் எவர் எங்கே அமரவேண்டும் என்பதே வகுக்கப்பட்டிருந்தது. அங்கே முறையான செய்திகள் விவாதிக்கப்பட்டன, ஏற்கப்பட்டன. அவையே அங்கிருந்து நாடெங்கும் கொண்டு சென்று சேர்க்கப்பட்டன. செய்தி என்பது எவரால் சொல்லப்படுவது என்பதை ஒட்டியே ஏற்கப்பட்டது.
*
அச்சிதழ்களின் யுகம் முடிவுக்கு வருவதைக் காண்கிறேன். கொரோனா அதை விரைவாக்கியிருக்கிறது. அது ஒரு யுகமாற்றம். தொழில்நுட்பத்தால் உருவாவது. ஒன்றுமே செய்யமுடியாது. காகிதம் செலவேறியது. மேலும்மேலும் செலவேறியதாக ஆகிக்கொண்டிருக்கிறது. அதை அச்சிடவும் வினியோகம் செய்யவும் பெரிய அமைப்பு தேவைப்படுகிறது. அதுவும் செலவேறியதே. மறுபக்கம் மின்னூடகம் அனேகமாக இலவசம் என்னும் நிலைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
நாளிதழ்கள் இன்னும் கால்நூற்றாண்டுக்காலம் வரைகூட அச்சிலேயே வெளிவரும். ஏனென்றால் இன்றும் நம் கலாச்சாரம் காலையில் ஒரு நாளிதழுடன் தொடங்குகிறது. டீக்கடைகளில் நாளிதழ் இல்லை என்றால் நாம் ஏமாற்றமடைகிறோம். நாளிதழ் இல்லாத டீக்கடைக்குச் சென்றால் அது என்னை ஏமாற்றிவிட்டது என்னும் உணர்வையே அடைகிறேன். நாளிதழ்களை வாசித்துப்பழகிய கடைசித் தலைமுறை நான். என் மகனின் தலைமுறைக்கு அச்சில் வரும் நாளிதழ் முக்கியமானதல்ல.
புத்தகங்களும் கொஞ்சகாலம் நீடிக்கும். ஏனென்றால் இன்று இந்தியாவில் வாசகர்கள் தாங்கள் வாசிப்பதற்காக வாங்கும் நூல்கள் பத்து விழுக்காடு மட்டுமே. எஞ்சியவை நூலகங்களுக்காக வாங்கப்படுகின்றன. பல்கலை மானியக்குழு கல்லூரிகளுக்கும், மத்திய கல்வியமைப்பு பள்ளிகளுக்கும் அளிக்கும் நூலகநிதிக்கு நூல்கள் வாங்கியாகவேண்டும். அவ்வாறு வாங்கப்படும் நூல்களாலேயே பதிப்புத்தொழில் இயங்குகிறது. ஆகவே அச்சுநூல்களை நூலகங்கள் வாங்குவது வரை பதிப்பகங்களும் செயல்படும்.
மெல்ல அரங்கொழிபவை வார, மாத இதழ்கள்தான். பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை [’ஃபேஷன்’], நவீனத் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான இதழ்கள் பெரும்பாலும் நடுத்தவர்க்கத்துக்கானவை. அவை இன்று இணைய இதழ்களால் ஈடுகட்டப்படுகின்றன. ஆகவே அவை நின்றுகொண்டிருக்கின்றன
இந்தியாவெங்கும் முதலில் நின்றவை சினிமா இதழ்கள் என்று ஒர் ஊடக நண்பர் சொன்னார். அதன்பின் சிறுவர்களுக்கான இதழ்களும் பெண்களுக்கான இதழ்களும். இணையத்தில் அவற்றுக்கான மாற்று குவிந்துகிடக்கிறது. சிறுவர்கள் வாசிப்பதையே விட்டுவிட்டார்கள். கணினி விளையாட்டுக்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.
இன்று செய்திப்பகுப்பாய்வு செய்யும் அச்சிதழ்களும் மறைந்து வருகின்றன. நாளிதழ்கள் செய்திகளை அளிக்கலாம். ஆனால் செய்திகளைத் தொகுத்து விவாதித்து கருத்துக்களை உருவாக்குபவை செய்தியிதழ்களே. அவை அனைத்துத் தரப்புகளில் இருந்தும் கருத்துக்களை ஒரு பொதுமையத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றன. அவற்றுக்கிடையே ஆக்கபூர்வமான உரையாடலை உருவாக்குகின்றன. அவற்றுடன் வாசகன் விவாதிக்கிறான். இந்தியாவில் அத்தகைய ஆங்கில இதழ்களுக்கு பெரும் செல்வாக்கு ஒரு காலத்தில் இருந்தது.
அவ்விதழ்களின் இடத்தை இன்று தொலைக்காட்சிகளின் செய்திவிவாதங்களும், சமூகவலைத்தளங்களின் அரட்டைகளும், கட்டற்றுப்பெருகும் தனிப்பட்ட இணையப்பக்கங்களும், யூடியூப் காணொலி நிலையங்களும் எடுத்துக் கொண்டிருக்கின்றன. செய்திவிவாதம் இன்று அவற்றில்தான் நிகழ்கிறது. அரசியல் கொள்கைகள், வரலாற்றுச் செய்திகள், சமூகவியல் கருத்துக்கள் எல்லாமே அவற்றில்தான் பேசப்படுகின்றன. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக இன்றைய செய்திக்களத்தை ஆள்வது மின்பரப்பியம் என்று வகுக்கலாம். [Electronic Populism]. எப்போதுமே பரப்பியம் இருக்கும். [பரப்பியம்] அது ஜனநாயகத்தின் ஒரு விளைகனி. ஒரு ஜனநாயக சக்தியும்கூட. பாப்புலிசம் அல்லது பரப்பியம் என்பது மூன்று அடிப்படைகள் கொண்டது.
அ. மக்களை பெருந்திரளாக மட்டுமே அணுகுவது.
ஆ. மக்கள்திரளின் விழைவையும் உணர்வுகளையும் கணித்து அதற்கு உகந்த கொள்கைகளை உருவாக்கி அவர்களுக்கு அளிப்பது. அவர்களை தங்கள் கருத்துநோக்கி இழுக்காமல் அவர்களை நோக்கி தாங்கள் செல்வது. அவர்கள் சொல்வதையே பெரிதாக்கி அவர்களுக்குச் சொல்வது.
இ. மக்கள்திரளின் ஏற்பைப் பெற்று அதிகாரம் நோக்கிச் செல்வது.
உலகம் முழுக்க ஜனநாயகத்தை பரப்பியமே இன்று தீர்மானிக்கிறது. புரட்சிகர இயக்கங்களேகூட பரப்பியத்தையே வழிமுறையாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை இருந்த பரப்பியத்திற்கும் மின்பரப்பியத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு. மின்பரப்பியம் பரப்பியத்தின் உச்சகட்ட வடிவம். ஒரு ராட்சத அலை.
ஏன் மின்பரப்பியம் என்னும் சொல்லை பயன்படுத்துகிறேன்? அதுவும் ஓர் ஊடகம்தானே? காகிதத்திற்குப் பதில் மின்பக்கம் வந்துவிட்டால் அடிப்படை மாறிவிடுமா?
மாறிவிடும் என்பதையே கண்கூடான நிகழ்வுகள் காட்டுகின்றன. எப்படி என்பதை சில இயல்புகளைக் கொண்டு விளக்கலாம். அச்சிதழ்களின் காலத்தில் அனைவரும் அச்சிதழ்களை நடத்த முடியாது. அதை பரவலாக நடத்த பெரிய நிறுவன அமைப்பு தேவை. அத்தகைய பெருநிறுவனங்களுக்கு மாற்றாக சிற்றிதழ்கள் நடத்தப்படலாம். இந்தியாவில் ஆங்கிலத்தில் செய்தி விமர்சனங்களுக்காகவே சிற்றிதழ்கள் பல வந்தன. பலவற்றை நான் வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அவை குறைவாகவே வெளிவரமுடியும். மாத இதழ் அல்லது மும்மாத இதழாக. வெளிநாட்டு இதழ்கள் கிடைப்பது அரிது.
ஆகவே ஒட்டுமொத்தமாக நமக்கு கிடைக்கும் அச்சிதழ்கள் ஓர் எல்லைக்குட்பட்டவை. அவற்றுக்குள் நாம் நம் தெரிவை நடத்திக்கொள்ளலாம். ஆனால் இன்றைய மின்னூடகப் பரப்பு எல்லையே அற்றது. பல்லாயிரம் இணையதளங்கள். பல்லாயிரம் தனிப்பட்ட சமூகவலைதளப் பக்கங்கள். ஒவ்வொரு நாளும் நமக்கு இணைப்பு அளிக்கப்படும் பலநூறு காணொலிகள், வலைப்பக்கங்கள். வாட்ஸப்பில் சுற்றிவரும் செய்தித்துண்டுகள் மற்றும் கருத்துக்கள்.
இந்த ‘கட்டற்ற பெருக்கம்’ உருவாக்கும் முதல்விளைவு நம்முடைய தெரிவுக்கான வாய்ப்புகளை இல்லாமலாக்குவதுதான். நமக்கு கிடைப்பவற்றை நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். தர்க்கபூர்வமாக நமக்கானவற்றை தெரிவுசெய்ய நமக்கு வாய்ப்பே அமைவதில்லை. இத்தனை ஆயிரம் வாய்ப்புகளில் இருந்து நாம் நமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்ள நம்மிடம் அளவுகோலே இல்லை. அதற்கான பொழுதும் பயிற்சியும் நமக்கு இல்லை.
இந்த கட்டற்றப்பெருக்கம் பற்றி பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் எண்பதுகளிலேயே எழுதியிருந்தனர். டில்யூஸ்- கத்தாரி, லியோடாட் போன்றவர்களின் ஊடக ஆய்வுகள் ‘பெருக்கமே இன்மையாக ஆவது’ என்னும் விபரீத நிலை பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார்கள். ஒளியால் குருடாவது போன்ற நிலை இது.
செய்திகளில் ‘பொதுப்போக்கு’ [டிரெண்டிங்] எல்லாக் காலத்திலும் உண்டு. ஆனால் அது ஒரு மைய ஒழுக்கு, பிற சரடுகளும் கூடவே இருக்கும். இன்று பொதுப்போக்கு மட்டுமே உள்ளது. மற்றவற்றை கவனப்படுத்த வழியே இல்லை. சென்ற ஓராண்டில் நீங்கள் கவனித்தவை என்னென்ன என்று பாருங்கள். அந்தந்தக் காலகட்டத்து பொதுப்போக்குகளை மட்டுமே என்று காண்பீர்கள். ட்ரென்டிங் செய்திகள், டிரெண்டிங் பொழுதுபோக்குகள்…
டிரெண்டிங் என்பது மிகச்செயற்கையானது. அது திட்டமிட்டு பணம் செலவிட்டு கட்டமைக்கப்படுவது. ஒன்று டிரெண்ட் ஆனால் அது மேலும் டிரெண்ட் ஆவது ஒருவகை அற்புதம். மானுட உள்ளத்தின் இயல்பை அது காட்டுகிறது. அது நீர் போல, ஒரு திறப்பு கிடைத்தால் அவ்வழியே பெருக்கெடுக்கிறது. டிரெண்டிங் உச்சகட்டத்தை அடைந்து இன்று இரண்டு நாளுக்கு ஒரு டிரெண்ட் உருவாகிறது. அனைவருமே அதைப்பற்றிப் பேசுகிறார்கள். அடுத்தது உடனே வந்துவிடுகிறது. முந்தையதை அது அப்படியே கவனத்தில் இருந்து மறைத்துவிடுகிறது.
இன்று எந்தச் செய்தியையும் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்றால் அதை டிரெண்ட் ஆக்கவேண்டும். ஆனால் டிரெண்ட் என்பது சிலநாட்களுக்கே நீடிக்கும். ஒரு மாபெரும் மானுட அழிவு அல்லது அநீதி டிரெண்ட் ஆகும். இரண்டு நாட்களிலேயே ஒரு சினிமாப்பாட்டு டிரெண்ட் ஆகி அதை அழித்துவிட்டு வந்து அமரும்.
இங்கே தனிச்சிந்தனைக்கே இடமில்லை. தனித்த தேடல்களே இல்லை. இருப்பது ஒட்டுமொத்தமான ஒரு மானுட வெள்ளப்பெருக்கு. இதுபோன்ற ஒரு சூழல் உலகவரலாற்றில் முன்பு இருந்ததில்லை. பல்லாயிரம் கோடிப்பேர் தொழில்நுட்பத்தால் ஒன்றாகத் திரட்டப்பட்டுவிட்டனர். ஒரே உள்ளம் கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். இதையே மின்பரப்பியம் என்கிறேன்.
மின்பரப்பியத்தின் இன்னொரு பக்கமாக இந்த ஒருங்குதிரட்டப்பட்ட மக்கள்பெருக்கின் கூட்டான விழைவைச் சொல்லலாம். மக்கள் பிரச்சினைகள் எப்போதும் ஒரு வட்டாரம், ஒரு சமூகம் சார்ந்தவை. மக்கள் நாடளாவ, உலகளாவ திரட்டப்படும்போது அவற்றுக்கெல்லாம் இடமே இல்லாமலாகிறது. நாடளாவ, உலகளாவ ஒரு விழைவு அல்லது தேவை உருவாகி வருகிறது. அத்தனை பேருக்கும் பொதுவான ஒன்று. அதுவே முன்னிற்கும். மற்ற அனைத்தும் இல்லாமலாகும். மின்னூடகம் அதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்.
இந்த மக்கள்பெருக்கு தனக்கு என்ன வேண்டுமென்று ஆணையிட்டுக் கொண்டே இருக்கிறது. ஊடக ஆய்வு என இன்று நிகழ்வன எல்லாமே மக்கள்பெருக்கின் விழைவென்ன என்று அறியும் கணக்குகள் மட்டுமே. தொலைக்காட்சி ஊடகத்தை டிஆர்பி தீர்மானிக்கிறது. சமூகவலைத்தளங்களை பல்வேறு ‘அல்காரிதம்’கள் தீர்மானிக்கின்றன. ராட்சத வடிவம்கொண்ட மக்கள் திரள் ஆணையிடுவதையே மின்னூடகம் அளிக்கமுடியும். வேறுவழியே இல்லை. ஆகவேதான் அதை மின்பரப்பியம் என்கிறேன்.
இன்றைய மின்பரப்பியத்தின் மிகமூர்க்கமான விசைக்குக் காரணமென ஒன்றைச் சொல்லமுடியும். முன்பு பரப்பியத்தை எதிர்கொள்ளும் விசையாக மறுபக்கம் இருந்தது ‘நிபுணர்கள்’ என்னும் விசை. இதழியலில், வெவ்வேறு அறிவுத்துறைகளில் தேர்ந்த நிபுணர்கள் அச்சு ஊடகங்களில் எழுதினார்கள். அவர்களின் கருத்துக்களை ஊடகங்கள் வலிமையாக முன்னிறுத்தின. வாசகர்கள் அவற்றை வாசித்து எதிர்வினையாற்றினர்.
நிபுணர்களை வாசகர்களின் பெருந்திரள் மனநிலை வழிநடத்த முடியாது. பெருந்திரளின் தேவைக்கு ஏற்ப அவர்கள் கருத்துக்களை உருவாக்குவதில்லை. தங்கள் துறைசார் அறிவின் விளைவாகவே கருத்துக்களைச் சென்றடைந்தனர். அவர்களின் குரலை வாசகர்கள் ஏற்றும் மறுத்தும் தங்களுக்குள் விவாதித்து தங்கள் தரப்பை அடைந்தனர். பெருந்திரள் ஒருபக்கம் மறுபக்கம் நிபுணர்கள் என ஒரு முரணியக்கம் இருந்தது. அதுவே அன்று பரப்பியத்தை கட்டுப்படுத்தியது.
இன்று மின்னூடகங்களில் நிபுணர்களுக்கான இடம் இல்லாமலாகி விட்டிருக்கிறது. நிபுணர்கள் இங்கும் வந்து பேசுகிறார்கள். ஆனால் உடனடியாக அவர்களும் பொதுத்திரளின் ஒரு துணுக்காக ஆகிவிடுகிறார்கள். அவர்களின் தனித்தன்மை மறுக்கப்படுகிறது. அவர்களின் கருத்துக்கள் சிறுமையாக்கப் படுகின்றன.
மின்னூடகங்களில் உள்ள ‘அனைவருக்கும் இடம்’ என்னும் வாய்ப்பே இதை உருவாக்குகிறது. முன்பு அச்சு ஊடகங்களில் பொதுமக்களின் குரல் பதிவாகும். ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றில் உணர்ச்சிகளில் நிதானமும், அறிவார்ந்த அடிப்படையும் கொண்ட எதிர்வினைகளே பிரசுரமாகும். மின்னூடகங்களில் எவரும் வந்து எதுவும் சொல்லலாம்.
அவ்வாறு கிடைக்கும் வெளியை பெருந்திரள் எவ்வாறு பயன்படுத்திறது என்று பார்க்கவேண்டும் என்றால் இணையத்திலுள்ள எந்த ஒரு காணொலிக்கு கீழேயும் எதிர்வினைகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தால்போதும். பெரும்பாலும் மனச்சிக்கலின் வெளிப்பாடுகள். எஞ்சியவை அறியாமையின் பதிவுகள். மேலே இருக்கும் பேசுபொருளுடன் ஏதாவது ஒருவகையில் தொடர்புள்ள எதிர்வினைகளே அரிதினும் அரிது. பேச ஓர் இடம் கிடைத்தால் அங்கே சொற்களை கக்கி வைப்பது, அறியப்பட்ட ஆளுமைகளை வசைபாடுவது, அவ்வளவுதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் முகமிலிகளும்கூட.
இந்தப் பெருந்திரள் அத்தனை அறிஞர்களையும் நிபுணர்களையும் ‘காலி செய்து’ விடுகிறது. அவர்கள் சமூக வலைத்தளங்களில் பேச வந்தார்கள் என்றால் சில நாட்களிலேயே அவர்களை பொறுமையிழக்கச் செய்து அவர்களையும் இவர்களின் தரத்துக்கு இழுத்துவிடுவார்கள். ஓர் அறிஞரின், துறைநிபுணரின், ஆய்வாளரின் நீண்டநாள் உழைப்புப் பின்புலமும் சாதனைகளும் இந்த பெருந்திரளுக்கு ஒரு பொருட்டே அல்ல. மாறாக அதுவே இவர்கள் அவர்களை சிறுமைசெய்ய, இழிவுசெய்ய காரணமாகவும் அமைகிறது. அற்பமான ஓர் அரசியல்கட்சித் தொண்டன் ஒரு மூத்த ஆய்வாளரை இழிவாக ஏளனம் செய்ய, மேலும் நூறு அற்பர்கள் கூடிக் கெக்கலிப்பதை நாம் ஒவ்வொரு நாளும் இணையவெளியில் காண்கிறோம்.
பெருந்திரள் இன்றைய அறிவுச்சூழலை ஊடுருவ, ஆக்ரமிக்க, திரித்து அழித்து பொருளற்றதாக ஆக்க மின்பரப்பியம் வழியமைக்கிறது. பெருந்திரள் கண்டடைந்த வழிகள் இரண்டு. ஒன்று போலிச்செய்திகள், ஆதாரமில்லாத கருத்துக்களை தாங்களும் உருவாக்கி பெருக்கி பரப்பி சூழவிடுவது. நிபுணர்களின் பேச்சும் அதிலொன்றாக ஆகிவிடுகிறது.
உதாரணமாக சித்தர்கள், அல்லது கீழடி, வேதமரபு, இஸ்லாமிய அறிவியல் என எதையாவது தேடிப்பாருங்கள். திகைக்கவைக்கும் அறியாமைகளே பல்லாயிரக்கணக்கில் கிடைக்கும். அறிஞர்களின் குரல் அவற்றிலொன்றாக எங்கோ கிடக்கும். எளிமையாக்கல்கள், வெற்றுக்கற்பனைகள், சாதிமதஇனப் பெருமிதங்கள், காழ்ப்புகள். பொய்யான எதிரிகளைக் கட்டமைக்கும் வெறுப்பரசியல்.
பாமரப்பெருந்திரளுக்கு அவர்களைப் போலவே ஒரு பாமரர் பேசினால்தான் புரிகிறது. அவருடைய பாமரத்தனத்துடன் அடையாளம் கண்டுகொள்வதனால் அது பிடித்திருக்கிறது. ஓர் அறிஞனின் குரலைப் புரிந்துகொள்ள கொஞ்சம் பயிற்சி தேவையாகிறது. அதற்கு அவர்கள் சித்தமாக இல்லை. ஆகவே எது ஆகப்பெரிய முட்டாள்தனமோ அதுவே பெரும்புகழ் பெறுகிறது.
மின்னூடகத்தின் தானியங்கிக் கணிப்புமுறை அதையே அனைவருக்கும் பரிந்துரைக்கிறது. அதுவே டிரெண்ட் ஆகிறது. உதாரணமாக ஹீலர் பாஸ்கர் பெரும் எண்ணிக்கையில் பார்க்கப்படுகிறார். எந்த மருத்துவ அறிஞரும் கவனிக்கப்படுவதில்லை. இதுவே மின்பரப்பியத்தின் இயங்குமுறை.
பெருந்திரள் இன்றைய அறிவியக்கத்தை எதிர்கொள்ளும் இரண்டாவது வழி என்பது கேலி, நையாண்டி, இளக்காரம். இதையே நாம் ‘மீம் கலாச்சாரம்’ என்கிறோம். எல்லாவற்றையும் எள்ளி நகையாடுவது. எல்லாவற்றையும் சிறுமைசெய்வது. ஆரம்பத்தில் சில முதிராப்புரட்சியாளர்களும் குழம்பிய கலகக்காரர்களும் அது ‘அதிகாரத்துக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்புமுறை’ என்றெல்லாம் விளக்கமளித்தனர். ‘பகடியே அதிகாரத்துக்கு எதிரான ஆயுதம்’ என எழுதினர். அன்றே நான் இது பெருந்திரளின் சிறுமையின் வெளிப்பாடாக மட்டுமே அமையும் என எழுதியிருந்தேன்.
பெருந்திரள் அதிகாரத்தை வழிபடுவது. ஆகவே அது ஒருபோதும் ஆதிக்கத்தை கேலிசெய்யாது. மெய்யான ஆதிக்கத்தைக் கேலிசெய்தால் உதைவிழும் என அதற்கு தெரியும்.பெருந்திரள் எப்போதுமே தன்னை மாற்றமில்லாமல் வைத்துக்கொள்ள முயல்வது. அறிவுக்கு எதிராக எளிய நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் முன்வைப்பது. ஆகவே பெருந்திரளால் ஏளனம் செய்யப்பட்டு அழிக்கப்படுபவை மாற்றத்துக்கான வாய்ப்புகளை அளிக்கும் புதிய சிந்தனைகளும் கலைப்படைப்புகளுமாகவே இருக்கும். அறிவியக்கத்தை கேலிசெய்து அழிக்கவே பெருந்திரளின் மீம்கலாச்சாரம் முயலும்.
ஒரு மாபெரும் நோய்போல நம்மைச் சூழ்ந்திருக்கிறது மின்பரப்பியம். நம்மைச் சிந்திக்கவே விடாமல் செய்கிறது. பழைய அச்சு ஊடகங்களை விட பல்லாயிரம் மடங்கு பெரியது இது. ஏனென்றால் இதில் நுகர்வோரே செய்தி உற்பத்தியாளரும் செய்தியை பரப்புபவருமாக இருக்கிறார். இதற்கு முதலீடோ நிர்வாகமோ தேவையில்லை. அச்சு ஊடகம் ஒரு செடி போல. அது விதையிலிருந்து முளைத்தெழுந்து வளர்ந்து விதைகளை உருவாக்க நிலமும் நீரும் வெயிலும் காலமும் தேவை. மின்பரப்பியம் என்பது வைரஸ் போல. தன்னைத்தானே பன்மடங்காகப் பெருக்கிக்கொள்வது. பெருகுவதன் வழியாகவே நிலைகொள்வது.
இன்றைய சூழலில் மின்பரப்பியத்தை எதிர்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. புயல்காற்றிலிருந்து தப்ப உறுதியான பாதாள அறைகளைக் கட்டிக்கொள்வதுபோல மின்பரப்பியத்தின் பெருங்கொந்தளிப்புகளுக்கு அப்பால் நிற்கும் செய்திவட்டங்கள், கருத்துவிவாதக் களங்களை தக்கவைத்துக்கொள்வது. மின்பரப்பியத்தை முழுமையாகவே தவிர்த்துவிடுவது.
அதற்கு பெருநிறுவனங்கள் முயலமுடியாது. அவற்றுக்கு நிதி வந்தாகவேண்டும். ஆகவே அவை பெருந்திரளுக்கு உரியவையாக ஆகவேண்டும். பெருநிறுவனங்கள் இனி மின்பரப்பியத்தின் முகங்களாகவே இருக்கும். பெரிய முதலீடு தேவையில்லாத, வலுவான மாற்று ஊடகங்களே அதைச் செய்யமுடியும். தன் எல்லையை தானே வகுத்துக்கொண்ட ஊடகங்கள். பேருருக்கொண்டு வளர்வதைவிட நீண்டகால அறிவுத்தளச் செயல்பாடே முக்கியம் என முடிவுசெய்துகொண்டவை. பெருந்திரளை முழுமையாக தவிர்த்துவிட்டு அறிவியக்கத்தை மட்டுமே முன்னெடுப்பவை. அறிவியக்கத்தில் ஈடுபாடுள்ளவர்களிடம் மட்டுமே பேசுபவை.
அத்தகைய ஊடகங்கள் அறிவுக்குழுக்களாலோ அல்லது மையமாகச் செயல்படும் ஒர் ஆளுமையாலோ முன்னெடுக்கப்படுவனவாகவே இருக்கமுடியும். அந்த ஊடகத்தின் நம்பகத்தன்மையை அந்த ஆளுமைகளே உருவாக்குகின்றன. அத்தகைய ஊடகங்களே இனி வரவேண்டியவை. மாற்றாக நிலைகொள்ள அவற்றால்தான் முடியும்.
ஜெ
பரப்பியம் பரப்பியம் மீண்டும் கலைச்சொற்கள்-கடிதம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

