Jeyamohan's Blog, page 909
September 27, 2021
ஒரு யுகசந்தி
காந்தி தன் ஆடையை துறந்த கூட்டம் நிகழ்ந்த இடம் மதுரைமணல்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் ஒரு தியானநிலை எனக்குக் கைகூடுவதுண்டு. மேலிருக்கும் குடுவையில் இருந்து மணல் மெல்ல கொட்டிக்கொண்டே இருக்கும். கடைசித் துளி மணலும் விழுந்ததும் சட்டென்று குடுவைகள் தலைகீழாக திரும்பிக்கொள்ள, மேலிருக்கும் குடுவை கீழே வரும். இன்னொரு நாழிகை ஓடத் தொடங்கும். அந்தத் தருணம் ஓர் இனிய திடுக்கிடலை உருவாக்கும்.
வரலாற்றிலும் அவ்வாறு காலம் புரளும் கணங்கள் உண்டு. முந்தைய யுகம் முடிந்து அடுத்த யுகம் ஆரம்பிப்பதன் புள்ளி அது. அதை அடையாளம் காண்பதற்கு மொத்த வரலாற்றையும் கவனிக்கவேண்டும். அது நிகழ்வதை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அத்தகைய ஒரு புள்ளி காந்தி தன் உடையை மாற்றிக்கொண்ட தருணம்.
நூறாண்டுகளாகின்றன அது நிகழ்ந்து. 22-09-1921. முந்தையநாள் இரவு நடந்த கூட்டத்தில் காந்தி இந்தியர் அனைவரும் உள்ளூரில் நெய்யப்பட்ட ஆடைகளை அணியவேண்டும் என்று சொன்னபோது அனைவரும் அவர் அப்போது அணிந்திருந்தது போன்று நீண்ட வேட்டியும் சட்டையும் மேலாடையும் தலைப்பாகையும் அணிவதற்கு தேவையான துணி இந்தியாவில் நெசவாகிறதா என்று கேட்கப்பட்டது. காந்தியின் சிந்தனைகளை நிலைகுலையச் செய்தது அக்கேள்வி.
மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்த காந்தி மறுநாள் காலையில் எளிய அரையாடை மட்டும் அணிந்தவராக தோன்றினார். அவருடைய தோற்றம் எப்போதைக்குமாக மாறியது. இன்று நம் கண்ணில் நின்றிருக்கும் காந்தியின் தோற்றம் அதுவே. அன்றிருந்த எளிய தமிழ் விவசாயியின் உடை அது. கத்தியவார் திவானின் மகனாகப்பிறந்த பாரிஸ்டர் காந்தி முற்றிலும் மறைந்தார். மகாத்மா என கோடிக்கணக்கானோர் அழைத்த இன்னொருவர் தோன்றினார்.
1921 மதுரையில் காந்திஅது காந்தியின் ஆளுமையில் ஒரு திருப்புமுனை. ஒரு உயிர்த்தெழலின் தருணம். தன் வாழ்நாளில் இறந்து மீண்டும் பிறக்காதவன் வாழவே இல்லை என்று சொல்வேன். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏறத்தாழ அதைப்போன்ற ஒரு தருணம் வாழ்க்கையில் அமைந்திருக்கும். நம்மை நாம் கண்டடையும் கணம் அது. ஆனால் முன்பிருந்த நாம் எச்சமில்லாமல் அழிந்து, முற்றிலும் புதிய ஒருவர் நம்மில் எழுவாரென்றால்தான் அது மறுபிறப்பு. மறுபிறப்பு எடுத்தவனுக்கு வாழ்க்கையில் குழப்பங்கள் இல்லை. அலைச்சல்களும் இல்லை. அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கும்.
காந்தியின் வாழ்க்கையில் அவ்வண்ணம் இரண்டு மறுபிறப்புத் தருணங்கள் உண்டு. இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு 1893 ஜூன் ஏழாம் தேதி அவர் தென்னாப்ரிக்காவில் இருந்து பிரிட்டோரியாவுக்கு செல்லும்வழியில் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட தருணம் முதலாவது. அன்று அந்த அநீதியை எதிர்த்தேயாக வேண்டும் என்று அவர் கொண்ட தன்னுறுதியில் இருந்தே அகிம்சைப்போர் என்னும் வழி நவீன அரசியலில் உருவானது. மதுரையில் நிகழ்ந்தது இரண்டாவது மறுபிறப்பு.
ஆனால் வரலாற்றுக்கு அதைவிடவும் முக்கியமானது அந்தத் தருணம். சாலார்ஜங் அருங்காட்சியகத்தில் ஹைதராபாத் நவாப் அணிந்த ஆடைகள் உள்ளன. எத்தனை அலங்காரமானவை, எவ்வளவு ஆடம்பரமானவை என்று பார்த்தால் திகைப்பு உருவாகும். அசல் தங்கநூல்களால் பின்னல்வேலை செய்யப்பட்டவை. வைரங்கள் பதிக்கப்பட்டவை. ஆகவே மிகுந்த எடைகொண்டவை. அவற்றை அணிந்துகொண்டு நடமாடவே முடியாது. அமர்ந்திருக்கவோ நிற்கவோதான் முடியும்.
அந்த ஆடையின் தேவை என்ன? அந்த ஆடைதான் நம்மைப்போன்ற ஒரு மனிதரை நவாப் ஆக நமக்குக் காட்டுகிறது என்பதே அதன் பதில். அஜந்தா ஓவியங்களிலும், ஹொய்ச்சாலச் சிற்பங்களிலும் பழங்காலத்தைய அரசர்களின் ஆடைகளைக் காண்கிறோம். மூன்று அடுக்குகள் கொண்ட மணிமுடிகள். பொன்னாலான மார்புக்கவசங்கள். உடலில் நகைகள் இல்லாத இடமே இல்லை. அதே ஆடையும் அணிகளும்தான் தெய்வங்களுக்கும். அரசன் அந்த ஆடைகள் வழியாகத்தான் தெய்வத்துக்குச் சமானமானவனாக காட்டப்பட்டான்.
அதன்பின் டெல்லி சுல்தான்களின் ஆடம்பரமான அரச உடைகள் இங்கே வந்தன. சீனச் சக்கரவர்த்தியின் ஆடைகளை மாதிரியாகக் கொண்டு மங்கோலியச் சக்கரவர்த்திகள் அந்த ஆடைகளை உருவாக்கிக் கொண்டனர். பின்னர் மங்கோலியர்களின் வாரிசுகளான ஆப்கானியச் சுல்தான்கள் அந்த ஆடையை மேலும் அலங்காரமாக ஆக்கிக்கொண்டனர். அந்த ஆடையை இந்தியாவின் மற்ற அரசர்களும் அணிந்தனர். தஞ்சை சரபோஜி மன்னரின் ஆடை அதுதான். திருவிதாங்கூர் அரசர் அணிந்த ஆடையும் டெல்லி சுல்தான்களின் அரச உடைதான்.
பின்னர் அத்தனை ஜமீன்தார்களும் அரச ஆடைகளை அணியலாயினர். முகலாய ஆடையும் பிரிட்டிஷ் ஆடையும் கலந்த அரச ஆடைகள் அவை. அதிகாரம் என்பதே ஆடைதான். ராணுவச் சீருடைகளும் ஒருவகை அரச ஆடைகள்தான். இந்திய ராணுவத்தளபதி அணியும் ஆடை பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட அரசகுடியினரின் ஆடை.
மன்னராட்சி யுகத்தில் உண்மையான அதிகாரம் இருந்தது ஆடையில்தான்.அரசரின் ஆடையை இன்னொருவர் அணியமுடியாது. அரசகுடியினரின் ஆடையை பிறர் அணியமுடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் அதிகாரத்துக்கு ஏற்ற ஆடை இருந்தது. ஆதிக்க சாதிக்கு அவர்களுக்கான உடைமரபு உண்டு. ஒருவரின் உடையை இன்னொருவர் நகல் செய்வதே கடுமையான குற்றமாக கருதப்பட்டது.
சென்ற யுகத்தில் நடந்த உரிமைப் போராட்டங்களில் பெரும்பகுதி உடைக்காகத்தான். தலைப்பாகை அணியும் உரிமை, மேலாடை அணியும் உரிமை, தோளில் துண்டு போடும் உரிமை, கால்வரை வேட்டி அணியும் உரிமை ஆகியவற்றுக்கான பல போராட்டங்கள் நடந்துள்ளன. அரசர்கள் ஒரு குலத்தை அல்லது ஒரு மனிதரை அங்கீகரிப்பதே மேலாடை, தலைப்பாகை அணியும் உரிமையை அளிப்பதன் வழியாகத்தான். இன்றுவரை தொடரும் பொன்னாடை மரபு அவ்வாறு வந்ததுதான். ஒருவருக்கு மேலாடை அணிவிப்பதென்பது மிகப்பெரிய கௌரவமாக நினைக்கப்பட்டது.
அச்சூழலில் கோடிக்கணக்கானவர்களால் தலைவராக கருதப்படும் ஒருவர் தன் மேலாடையை களைவதற்கு என்ன பொருள்? மக்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டு, தன்னை மேலே தூக்கிக் கடவுளுக்கு நிகராக்கிக் கொண்டு, ஆட்சிசெய்த அதிகாரத்தின் காலம் முடிவதன் குறியீடு அது. அதிகாரம் மக்களின் வடிவை மேற்கொள்வதன் சித்திரம் அது.
அது வேறுவகையான அதிகாரம். மக்களை ஒடுக்கி அவர்களை ஆளமுயல்வதில்லை அது. மக்களின் கூட்டான சக்தியின் மையமாக உருவாகி வருகிறது. மக்களின் ஏற்பே அதன் ஆற்றல். அது மக்களின் பிரதிநிதி மட்டுமே. அந்த மக்களதிகாரத்தின் உருவம்தான் மக்களைப்போல் உடையணிந்த காந்தி.
அந்த தோற்றம் மக்களிடம் சொல்வதென்ன? “நான் உங்களில் ஒருவன், உங்களை விட மேலிருப்பவன் அல்ல, உங்களுடன் இருப்பவன். உங்கள் குரலாக ஒலிப்பவன். அந்த ஏற்பை எனக்கு அளியுங்கள்”. அதை மக்கள் அவருக்கு அளித்தனர். மொத்த இந்தியாவே அவருக்குப்பின் அணிவகுத்தது. அத்தகைய ஆதரவு இந்தியாவில் அவருக்கு முன் எவருக்கும் கிடைத்ததில்லை. அக்பரோ அசோகரோகூட அப்படி முழு இந்தியாவையும் கட்டுப்படுத்தியதில்லை.
எண்ணிப் பார்த்தால் பெரும் வியப்புதான் எழுகிறது. இந்தியாவின் மன்னராட்சி எத்தனை தொன்மையானது. மகாபாரதத்தை வைத்துப்பார்த்தால் எப்படியும் நாலாயிரம் ஆண்டுகளாக அது இங்கே நிலைகொண்டிருக்கிறது. எத்தனை பேரரசர்கள், எத்தனை மாவீரர்கள். நாம் மன்னராட்சிக்கு மனம்பழகியவர்கள். அரசனை தெய்வமாக வழிபட்டவர்கள். இன்றுகூட தெய்வத்தை அரசனைப்போல வழிபடுபவர்கள்.
மன்னராட்சி இருந்த பிற நாடுகளில் படிப்படியாக பலவகையான போர்கள் மற்றும் வன்முறைகள் வழியாகத்தான் மன்னராட்சி அகற்றப்பட்டது. முதல் உலகப்போர் நிகழாவிட்டால் உலகில் மன்னராட்சி ஒழிந்திருக்காது என்பவர்கள் உண்டு. இன்னும்கூட உலகில் பாதிநாடுகளில் மன்னராட்சி நீடிக்கிறது. ஆனால் நாம் மிக இயல்பாக, எந்த வன்முறையும் இல்லாமல் மக்களாட்சிக்குரிய மனநிலைக்கு வந்தோம்.
பொன்னலங்காரம் கொண்ட ஆடையும் மணிமுடியும் அணிந்த அரசர்களை தலைவர்களாக கொண்டிருந்தவர்கள் நாம். அரையாடை அணிந்து, மேலாடை இல்லாமல் நின்றிருந்த ஒருவரை எந்த தயக்கமும் இல்லாமல் தலைவராக ஏற்றுக்கொண்டோம். கோடிக்கணக்கில் அவர்பின்னால் திரண்டோம். சத்தமே இல்லாமல், அலைகளே இல்லாமல், மன்னராட்சியுகம் முடிந்து மக்களாட்சி யுகம் தொடங்கியது.
அந்தக் கணம்தான் நூறாண்டுகளுக்கு முன்பு மதுரையில் காந்தி எளிய ஆடைக்கு தன்னை மாற்றிக்கொண்ட அந்த நிகழ்வு. வரலாற்றின் ஒரு திருப்புமுனைப் புள்ளி. ஒரு மகத்தான யுகசந்தி.
ஜூனியர் விகடன் செப்டெம்பர் 2021
பழங்குடிகளுக்கான நீதி
அன்புள்ள ஜெ
கீழ்க்கண்ட செய்தியை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். இந்த வழக்கு எப்படி செல்கிறது என்று கவனித்துக்கொண்டிருக்கிறீர்களா?
நாகராஜன்
அன்புள்ள நாகராஜ்,
இந்த வழக்கு பற்றி எழுதியபோதே இது இப்படித்தான் செல்லும் என எனக்குத் தெரியும், எழுதியுமிருக்கிறேன். கேரளம் ஆதிவாசிகளின் காலனி என்று ஒரு சொல்லாட்சி உண்டு. பழங்குடி மக்களை பொதுவாக மலையாளிகள் எதிரிகளாக, இழிமக்களாகவே பார்க்கிறார்கள். தலித்துக்கள்கூட. அவர்கள் மொத்த கேரளத்தாலும் ஒடுக்கப்படும் மக்கள். எந்தக் கட்சியும் அவர்களுக்கான கட்சி அல்ல என்பது மட்டுமல்ல எல்லா கட்சியினரும் அவர்களை ஒடுக்கும் மக்களின் வாக்குகளால் வாழ்பவர்களும்கூட.
நம் நீதிமன்றங்கள் திட்டவட்டமான சாட்சிகள் இருந்தாலே ஒரு குற்றவழக்கில் ஒருவரை தண்டிக்க பற்பல ஆண்டுகள், ஒரு தலைமுறைக்காலம், எடுத்துக்கொள்ளும். அதுவரை வழக்கை எடுத்து சலிக்காமல் நடத்த ஆள்வேண்டும். பழங்குடிகளுக்காக அப்படி எவரும் அங்கில்லை. ஏதாவது தன்னார்வக்குழுவினர் அவ்வழக்கை ஏற்று நடத்தினால்கூட காவல்துறை ஒத்துழைக்கவேண்டும். காவல்துறை ஒட்டுமொத்த கேரளத்தையே பிரதிநிதித்துவம் செய்யும், பழங்குடிகளை அல்ல. ஆகவே நீதி அனேகமாக கிடைக்காது. கேரளத்தில் பெரும்பாலும் எந்த வழக்கிலும் பழங்குடிகளுக்கு நீதி வழங்கப்பட்டதில்லை.
ஜெ
ரவிசுப்பிரமணியன் ஆவணப்படங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம்.
இந்த வருட செப்டம்பர் பதினொன்று அன்று பாரதியின் பாடல் ஒன்றை கேட்டு நாளை ஆரம்பிப்போம் என்று , சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் பாடி வெளியிட்டிருந்த, ‘பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுக்கு’ கேட்டேன். அன்று பற்றிய தீ, வார இறுதி விடுமுறையில் பாஞ்சாலி சபதத்தை, தனியறையில் அமர்ந்து சத்தம் போட்டு வாசிக்க வைத்தது. அன்றே எதேச்சையாக நான் பார்த்த, கவிஞர் ரவிசுப்பிரமணியன் எடுத்திருந்த ஒரு ஆவணப்படம், ‘நீ ஒரு நாள் வாசித்ததற்கே, இப்படி அலட்டிக்கிறயே’ என்று நாணமுற செய்தது. அது பாரதியை ஞானகுருவாக ஏற்றுக்கொண்ட கவிஞர் திருலோக சீதாராம் பற்றிய ஆவணப்படம்.
அவர் பாரதியின் அனைத்துக் கவிதைகளையும் மனப்பாடம் செய்து மேடையேறி பாடி பாரதியை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர். பாஞ்சாலி சபதத்தை, அந்தந்த பாத்திரமாக மாறி பாடி, மக்களை மெய்மறந்து கேட்கசெய்தவர்.
இந்தப்படத்தை முன்னூறுக்கும் குறைவான வாடிக்கையாளர்களே பார்த்திருந்தனர். இந்தப் படத்தின் நிரலை கண்டுபிடிக்க, கூகுளிலும் , யூட்யூபிலும் எப்படி தேடுவது என்று தெரிந்த கில்லாடியாக இருக்கவேண்டும். நான் கவிஞர் ரவிசுப்பிரமணியத்துடன் தொடர்பில் இருப்பதாலும், அவர் இசையமைத்து வைத்திருக்கும் கவிதைகளை அடிக்கடி கேட்பவன் என்பதாலும், ஒரு வேளை, தானியங்கி செயலிகள் அவைகளாக எனக்குப் பரிந்துரைத்திருக்கலாம். 2015-ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, 2016-ல் டில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய நிகழ்வு ஒன்றில் பார்த்ததாக, தளத்தில் ஒரு வாசகரின் பதிவு உள்ளது என்பதை பின்னர் தேடி அறிந்துகொண்டேன்.
‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ படத்தை எடுக்கும்பொழுது ரவி சுப்பிரமணியம் அவர்களிடம் எட்டே எட்டு புகைப்படங்கள்தான் இருந்ததாம். ‘இலக்கிய வரலாறுகளில் அவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை. அவர் எழுதிய புத்தகங்கள் அச்சில் இல்லை. திருலோகம் அவர்களின் நண்பர் டி.என். ராமச்சந்திரன் கூறிய செவிவழி செய்திகள்தான் படத்திற்கு முக்கிய ஆதாரம்’ என்று திருலோகம் சீதாராம் நூற்றாண்டு விழா உரையில் குறிப்பிட்டிருப்பார். அந்த எட்டு புகைப்படங்களை மட்டும் வைத்து எப்படி ஒரு முழு நீளப்படம் எடுப்பது? ஆளுமையின் அந்தந்த வயதின்படி நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். தொண்டைமான்துறை ராமசாமி படையாச்சியிடம் முறையாக தமிழும் இலக்கணமும் கற்றுக்கொள்ளும்பொழுது எட்டு வயது சிறுவன். பதினெட்டு வயதிலேயே பத்திரிகையில் உப ஆசிரியராக வேலை பார்க்கும் காட்சிகளில், ஒரு பதின்ம வயது பையன் அச்சு எந்திரங்களின் பின்னனியில் தெரிகிறான்.
திருலோக சீதாராமின் நண்பர், த.ந. ராமச்சந்திரன், அவரது சீடர் என சொல்லிக்கொள்ளும் சக்தி சீனுவாசன், பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன், திருச்சி சத்யசீலன், எழுத்தாளர் அசோகமித்திரன் ஆகியோரின் நேர்முகங்கள் கொடுக்கும் தகவல்கள் படத்தை நிறைக்கிறது. த.ந. ராமச்சந்திரன் சொல்லும் தகவல்கள் ஒவ்வொன்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியவேண்டியவை. உதாரணத்திற்கு இரண்டு. பாரதியின் சில பாடல்களைக் கேட்டுவிட்டு, சில வரிகளை இது பாரதி எழுதியதுபோல் இல்லையே என்பாராம். கைப்பிரதியை எடுத்துப் பார்த்தால் இவர் சொன்னதுதான் சரியாக இருக்குமாம். பாரதியாரின் மனைவி இறக்கும் தருவாயில், மூன்று மாதம் திருலோகம் அவருடனேயே தங்கியுள்ளார். இவரது மடியில்தான் அவர் தலை சாய்ந்ததாம்.
“நேரில் பாடிக்காட்டுவதிலும் கேட்பதிலும்தான் கவியின்பம் முழுமை பெறுகிறது என்பதில் நம்பிக்கை உடையவன் நான்” என்று சொல்லும் சீதாராம், பாரதி தாசனின் குடும்ப விளக்கையும் பாடியே மக்களிடம் சேர்த்துள்ளார். நிகழ்வு ஒன்றுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் போய்விட்ட பாரதிதாசனை பார்த்து, தனது கோபத்தை தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு ஆவணப்படத்தில் எல்லா விஷயங்களையும் சொல்லமுடியாது என்று சொல்லும் ரவிசுப்பிரமணியன் இந்தப் படத்தில், ஒரு புது இலக்கிய வாசகனுக்கு திருலோகம் பற்றிய நல்ல குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கொடுத்துள்ளார். கொள்கைகள் வேறுபாடு பார்க்காமல் அண்ணாதுரையுடனான உறவு, தொழிலதிபர் ஜி.டி. நாயுடனான உறவு, சுஜாதாவின் முதல் கதை வந்த சிவாஜி என்ற பத்திரிகையின் ஆசிரியர், 19 வயதில் பத்து வயது ராஜாமணியுடன் திருமணம், மூன்று பெண்களுக்கும், நான்கு பையன்களுக்கும் தகப்பன், முழு நேரத்தை பாரதியாருக்கும், பாரதிதாசனுக்கும் கொடுத்துவிட்டு பொருளாதாரத்தில் திண்டாடும் வாழ்க்கை, என ஒவ்வொன்றையும் படம் தொட்டுச் செல்கிறது.
கவி ஆளுமை பாடியிருந்தால் எப்படியிருக்குமென இனிமையான இரவல் குரல்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘பாரதியின் பாடலை அவர் பாடிக் கேட்கவேண்டும்’ என்று த.ந. ராமச்சந்திரன் சொல்லி முடித்ததும், வானில் பறக்கும் சிட்டுக்குருவிகள் பறக்க, ’விட்டு விடுதலையாகி நிற்பாய், இந்தச் சிட்டுக்குருவியைப் போலே’ என்று கனீரென குரலில் பாரதியின் கவிதை ஒலிக்கிறது. கவிஞர் திருகோலம் சீதாராம் அவர்களின் ‘முன்பொரு பாடல் எழுதினேன். அந்த மூலப்பிரதி கைவசம் இல்லை’ என்ற பாடலை பாடியவரின் குரல் இனிமையும், கவிஞரின் அன்றாட வாழ்க்கையை சித்தரிப்பதைப்போல எடுக்கப்பட்ட காட்சிகளும், தனிப்பாடலாகவும் வெளியிடலாம் எனும் அளவுக்கு தரம்
ஜெயகாந்தனை நிகழ்காலத்தில் அதே கம்பீரத்துடன் உலவவிடும் படம் ரவிசுப்பிரமணியனின் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம். ஜெயகாந்தன், மஹாபாரதம் பற்றி பேசும் ஒரு சின்ன கிளிப்பை, ரவியின் அனுமதியுடன் அவரது படத்திலிருந்து எடுத்து, வெண்முரசு ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
சூரியனுக்கும் லைட் அடித்துக் காட்டக்கூடிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். பாரதியைத் தெரிந்த அனைவரும், திருலோகத்தையும் அறிந்தே பேச, ரவிசுப்பிரமணியனின் ‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ வழி வகுக்கும். அவரது அனைத்து ஆவணப்படங்களையும் இங்கே காணலாம்.
அன்புடன்,
சௌந்தர்
ஆஸ்டின்.
ரவிசுப்பிரமணியன் ஆவணப்படங்கள்மயக்கும் மாயப்பொன்
எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பான ‘மாயப்பொன்’ -ஐ கவிஞர் பி. ராமன் மொழிபெயர்த்து மாத்ருபூமி பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுப்பைப் பற்றிய மதிப்புரையை பிரசித்தா மனோஜ் எழுதியிருக்கிறார்.
மயக்கும் மாயப்பொன் ഊതിക്കാച്ചി മയക്കിയ ‘മായപ്പൊന്ന്’……
தமிழும் மலையாளமும் கலந்து ஒழுகக்கூடிய நாஞ்சில் நாட்டின் எல்லை கிராமங்களின் மனிதர்களைப் பற்றிய வாழ்வியல் சித்திரத்தை “மாயப்பொன்” தொகுப்பு மூலமாக ஜெயமோகன் படைத்திருக்கிறார். உணர்வுகள் உருகி வழியும், மகிழ்ச்சியான தருணங்கள் வழியாக அதை வாசகர்களுக்குக் கடத்தியிருக்கிறார். வாழ்க்கையின் அப்பட்டமான புறக் காட்சிகளை ஜெயமோகன் தன் அகக் கண்ணால் பார்க்கிறார். அதன் ஆழத்தை அறிந்து மானுடனின் அற்புதத் தருணங்களை தன்னுடைய எழுத்துக்களில் அவர் காட்சிப்படுத்துகிறார்.
இக்கதைகள் யாவும் கொரோனா நோயச்ச காலத்தில் எழுதப்பட்டதாகும். நோயச்ச காலத்தனிமையில் அவரின் படைப்பாற்றல் இரட்டிப்பாகியிருக்கிறது. எளிமையான ஓர் அறிமுகத்தில் துவங்கி அங்கிருந்து கதையைச் சொல்லி சொல்லி சிறிது சிறிதாக நம்மை மாயப்பொன்னின் ஒளிவீசும் தருணத்தை நோக்கி அவர் இட்டுச் செல்வதை நாம் இக்கதைகளில் பார்க்கலாம். தமிழில் எழுதப்பட்ட இக்கதைகளின் தனித்துவமும் உண்மையும் குறைவுபடாமல் அதே சுவையுடன் மலையாளத்தில் கொண்டு வரக்கூடிய கவிஞர் நமக்கு வாய்க்கப்பெற்றிருக்கிறார்.
பி.ராமனில் இருக்கும் ஒரு கவிஞனின் கண்கள் கதைசொல்லியின் சுவாசத்தைக் கூட கதைகளில் கண்டடைந்திருக்கிறது. அவரிலிருக்கும் மொழித்திறமையால் இந்தக் கதைகளை கவிதைகளாக்கி எந்த சிக்கலுமில்லாமல் அதை மலையாளத்தில் வடித்து எடுத்திருக்கிறார். கதையுலகத்திற்கு அறிமுகமில்லாத ஒரு கவிஞனை இந்த மொழிபெயர்ப்பின் மூலமாக புத்தம் புதிய ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்ல ஜெயமோகனின் இக்கதைகளுக்கு முடிந்திருப்பது மலையாளக் கதையுலகின் கனவையும் நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது.
முதல் கதையான ‘தேவன்’ (தமிழில்: “இறைவன்”) வாசித்து முடிக்கும் போது கண்களினின்று சிந்திய துளியானது இதயத்தின் ஆழத்திலிருந்து பெயர்ந்து விழுந்த ஏதோ ஒன்றுதான். மனிதனுடைய ஆத்மாவில் எரியும் தீ ஒன்று உண்டு. அது செயல்தீவிரத்தின் தீயேயாகும். உண்மையின் வழி நிற்கும் மனிதர்கள் தன்னை எரித்து சுடர் விடவும், அதற்காக தன்னை அர்பணித்துக் கொள்ளவும் தூண்டும் தீவிரம் நிறைந்த தீ அதுவாகும்.
தேவனும், மாயப்பொன்னும் பேசும் அந்த ஆத்மாவின் தீயில் இருந்து தான் எழுத்தாளனும் படைப்பின் பிரம்மாண்டத்தை எடுத்து சமைத்திருக்கிறார். “இப்ப நாம கிணறு தோண்டுதோம்லா? மண்ணுக்கு அடியிலே இருந்து தண்ணி அதிலே ஊறி வருதுல்லா?” என்பது தான் படைப்புச் செயல்பாட்டைப் பற்றிய மாணிக்கம் ஆசாரியின் எளிமையான பார்வையாகும். கதையில் வரும் ‘இசக்கியம்மை’ என்னும் கதாப்பாத்திரம் சுவற்றில் தெய்வமாகி எழுந்தருளும் பகவதியைவிட தீவிரமாக படைக்கப்பட்டுள்ளது. அது அனுபவத்தின் வலிமையால் உருவான கதாபாத்திரம். தான் இழந்ததை இசக்கியம்மைக்கு மீட்டெடுத்துக் கொடுக்கும் கனிவும் திறனும் மாணிக்கத்திற்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. யாராலும் கண்டுகொள்ளப்படாத மனிதரின் அகத்தை ஊடுருவிப் பார்க்கும் கடவுள்தன்மையை தன் படைப்புத் திறனின் மூலம் சில கலைஞர்கள் அடைகிறார்கள் என்பதை மாணிக்கம் என்ற கதாப்பாத்திரத்தின் வழி கதைசொல்லி சொல்லாமல் சொல்லிச் செல்கிறார்.
‘பாப்பாவின் சொந்த யானை’. ஒரு குழந்தை தான் இழந்து போன வீட்டை மீட்டெடுக்கும் கதை. யானை விளையாட்டு மூலம் எப்படி ஒரு மனிதன் கொரானா வீடுறைவு காலத்தில் சிறைபட்டிருக்கிறான் என்பதை உணரக்கூடிய தருணம் இக்கதையில் சொல்லப்படுகிறது. குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைத் திரும்பப் பெறுவதும், அவர்களை யானைப் பாகனாய் இருந்து கட்டுப்படுத்துவது, மந்திரவாதியாக மாறி டப்பாவில் அடக்குவது போல இனிமையான காட்சிகளாக அமையப் பெறுகின்றன. இந்த கதை நிகர்வாழ்க்கை அனுபவம் போல சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குட்டிக் கதை வழியாக மிகப்பெரிய தரிசனத்தை உணர்த்தியிருக்கிறது.
‘ரயில்’ (தமிழில்: தீவண்டி) கதையும் கடந்து போன ஒரு காலத்தின் கதையாகும். ஜான் என்ற சினிமா வெறியனின் பைத்தியக்காரத்தனமும் கனவுகளும் நிறைந்த வாழ்க்கையின் எச்சங்களைப் பற்றி பேசும் கதையாக இது விரிகிறது. கோழிக்கோடு பேச்சுவழக்கின் அழகில் இக்காவும் அப்துல் அஜீஸும் நடத்தும் உரையாடலாக இக்கதை சொல்லப்படுகிறது. நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தை நோக்கி விரிந்து இறங்கி மயங்கிச் செல்ல வாசகனை இது அழைக்கிறது. கெஸ்ஸு பாடல்கள், ஜானின் நடிப்பு பாவனைகள், மது பாட்டில்கள் நிறைந்த ஒரு சிதறுண்ட உலகம் ஆகியவற்றை நமக்குக் காட்டுகின்றது. உள்நின்று தீ நுரைத்துப் பொங்கி வழியும் மனிதர்களின் வாழ்க்கையையும் அதன் வெதுவெதுப்பையும் இங்கே காணலாம். இதன்மூலம் திரைப்பட உலகிற்குப் பழகிப்போன ஓர் உலகத்தை கதைசொல்லி வழி நினைவு கூர்கிறார்.
‘வண்ணம்’ ஒரு கதையா அல்லது ஒரு வரலாற்றுப்பயணமா என்று நம்மால் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் பயணத்தின் வழியிடையே கண்டு சிலாகித்துப் பழக்கமான கோவில்கள், வயல்கள் மற்றும் உப்பளங்கள் ஆகியவற்றைச் சொல்லும் பழங்கதைகளின் உணர்வுகளுக்கு ‘வண்ணம்’ கதை நம்மை அழைத்துச் செல்கிறது. மகாராஜா வீரகேரளவர்மாவுக்காக கப்பம் வசூலிக்க அயக்கரை கிராமத்திற்குச் சென்ற சர்வாதிகாரர், போர்வீரர்கள் மற்றும் அதை செலுத்த வழியற்று நிர்கதியான கிராமவாசிகளின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது இக்கதை. விவசாய நிலத்தைப் பற்றி தெரியாமல் வரி வசூலிக்கும் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவும் புத்திசாலித்தனமான கிராம மக்களின் சுவாரஸ்யமான வரலாற்றினூடே பயணித்து அமுதகலம் ஏந்திய பூமாதேவி சமேதராக அமர்ந்திருக்கும் விஷ்ணு அமிர்தாமயன் வாழும் கோவிலின் பெருமையை நோக்கி கதைசொல்லி நம்மை கொண்டு செல்கிறார். சிலைகளாக வேடமிட்டு அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பித்த கிராமவாசிகள் மற்றும் அவர்களின் ராஜாவின் கதை இது.
‘குருவி’ கதையின் ஆழத்திற்குச் சென்றால், இயற்கையில் வாழும் உயிரினங்களுக்கென தனித்தன்மைகள் இருப்பதைப்போல சில மனிதர்களுக்கும் இருப்பதைக் காணலாம். மாடன் பிள்ளை தான் விரும்பிய வேலையையல்லாது தொலைபேசித் துறையில் கடைமட்ட ஊழியராக வேலை செய்பவர். தனது சொந்த ஆசைகள் மற்றும் ரசனையைத் தியாகம் செய்ததன் விளைவாக, ஒரு முழுக்குடிகாரனாக மாறி, தனது வேலையில் இருந்து இடைநீக்கத்தையும் பெறுகிறார். அதே நேரத்தில் ஓவியனும் சிற்பியுமான ஒரு கலைஞனைத் தனக்குள் சுமந்தலைகிறார். மனிதன் உள்ளுணர்வோடு பிறந்தவன். அதைத் தடுக்க முயற்சிக்கும் எதையும் சமாளிக்கும் ஒருவன் அவனுக்குள் இருப்பான். அது சாத்தியமற்றுப் போகும் போது அவன் சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறான். அவனுடைய வாழ்க்கை யாருக்காகவும் இல்லாமல் தன் ஆன்மாவின் மகிழ்ச்சிக்கு மட்டுமேயானது என்று மாடன் பிள்ளை மூலம் கதைசொல்லி கூறுகிறார்.
நிறபொலி (தமிழில்: சூழ்திரு) ஒரு திருமண விழாவின் தனிச்சிறப்புகளைக் கொண்டிலங்குகிறது. அனந்தன் என்ற பையன் தன் வகுப்பு தோழிகளான இரட்டையரின் அக்காவின் திருமணத்திற்குச் சென்ற கதையாக இக்கதை அமையப் பெறுகிறது. அருமையான நாட்டுப்புறத் திருமணக் கொண்டாட்டத்தைப் பற்றிய தகவல்கள் காணக்கிடக்கின்றன. இந்தக் கதை விவரிப்பது திருமண விருந்தின் சிறப்பையும் அதன் சுவை வகைகளையும் ஆகும். ஓவியம் போல, கவிதை போல, தனித்திறனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களால் மட்டுமே சுவையின் கொண்டாட்டத்தை உருவாக்க முடியும். வெவ்வேறு படைப்புச் சுவைகளை ஒரே போலப் பாவிக்கும் சமன்வயப்பார்வை ஒரு திருமண விருந்தின் கொண்டாட்டத்தில் வெளிப்படுகிறது. ‘நாதஸ்வர’ இசையின் பரவசமும் விருந்து சுவையின் அதே பரவசத்துடன் வெளிப்படுத்தப்படுவது சிறப்பு.
‘ஏதேன்’ சொர்க்கத்தைக் கனவு கண்டு அதை அடையமுடியாத மனிதர்களின் கதை. தனது சொந்த நிலத்தை விற்று, ‘விவசாயத்தை’ ஒரு பெரிய தொழிலாக மாற்ற வெளிநாடு புறப்பட்ட ஒரு மனிதனின் கதை இது. ஆனால் அங்கிருந்த மகிழ்ச்சியான கள்ளமில்லாத பூர்வகுடி மக்கள் அவனின் உழைப்பின் பயனைத் துய்க்கின்றனர். இறுதியில் மீட்ட இயலாத ஓர் இழப்புடன் ஏதேனை விட்டு வெளியேறிய ஒரு நிராதரவான மனிதனின் கதையாக இது அமையப் பெறுகிறது.
‘தேனீ’ கதையும் படைப்பாற்றலின் தாள இடைவெளிகளுக்குள் நடக்கும் உரையாடலைத் தான் சொல்கிறது. சுசீந்திரத்தைச் சேர்ந்த ஒரு நகை ஆசாரியின் கைவினைத் திறன் மற்றும் அவர் வழிபடும் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையின் நினைவுகளில் உருவாகிய கதை இது. நகைத் தொழிலில் நிபுணராக இருந்தவர் அவர். தேனீ போல ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு நகரும் வேலைத் திறமும் அர்ப்பணிப்பும் அவர் வேலையில் இருந்தது. அதைப் போலவே தான் இசை அவருள் விழும் தருணங்களும் இருந்தன. பழைய தென் கேரளாவில் அமைந்த புராதனமான சுசீந்திரம் கோவிலின் தெருக்களில் முழங்கும் ஒலியும், அதன் அழகும் இக்கதையின் சாரமாகும்.
ஒரு திருமண வீட்டிற்கு ‘அணஞ்சியம்மை’ என்ற கிழவியின் வருகையே ‘கோட்டை’ சிறுகதை. பண்டுவச்சி அணஞ்சியின் மனித உடல் பற்றியுள்ள அப்பழுக்கற்ற நேரடியான கேலிகளும் தத்துவநிலைபாடுகளும் நாம் ரசித்து வாசிக்கும் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘சுகு’ என்ற பையனின் இளமை அறிதலின் ஆர்வத்தினூடே இந்தச் சிறுகதை முன் நகர்கிறது.
‘மாயப்பொன்’ சிறுகதை சாராயம் காய்ச்சும் தொழிலை படைப்புத் தீவிரத்துடன் செய்யும் நேசையனின் நேர்மை மற்றும் அவர் தயாரிக்கும் பொருட்களின் தரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவருக்குத் தன் சொந்த வாழ்க்கையை விட அவரது படைப்பு தான் முக்கியம். ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவரவர் உச்சம் என்ற ஒன்று உள்ளது. நேசையனுக்கு அது அவன் காய்ச்சும் சாராயத்தின் மிகச் சிறந்த ஒரு துளியில் உள்ளது. அந்த தருணத்திற்கான காத்திருப்பு தான் அவரைப் போன்ற படைப்பாளிகளின் வாழ்க்கை என்று இந்த கதையில் எழுத்தாளர் கூறுகிறார். ‘மாயப்பொன்’ தான் அவர்களுக்குக் காத்திருக்கும் அற்புதம். இந்தக் கதையின் பயணம் அந்த மாயையை அடிப்படையாகக் கொண்டது.
இவ்வாறு வெவ்வேறு தளங்களில் சொல்லப்பட்டு, நாட்டுப்புறக்கதைகளின் பின்னணியில் வாசகனை ரசிக்க வைத்து சிந்தனையைத் தூண்டும் பத்து கதைகளின் தொகுப்பு இதுவாகும்.
எல்லா கதைகளிலும் அடிப்படையாக இழையோடும் படைப்பாற்றலின் சக்தியும் படைப்பாளியின் ஆன்மாவின் நெருப்பும் எவ்வளவு தீவிரமானது என்பதை கதைசொல்லி அறிவுறுத்துகிறார். வட்டார வழக்கின் அழகு குறையாமல் கவிஞர் பி. ராமன் மொழிபெயர்த்திருப்பதால் வாசிப்பின்பமும் குறைவுபடாமல் இக்கதைகளில் இருக்கிறது.
ஜெயமோகனின் இந்தக் கதைத் தொகுப்பு வாசகர்களின் மனதை ‘மாயப்பொன்’ போல் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழில்: ஜெயராம் மற்றும் இரம்யா
இந்து என்றிருப்பது – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நேரடியான கடுமையான நம்பிக்கையையோ அல்லது பாரம்பரியமாக வந்த ஆசாரசீலங்களையோ சாராமல் எப்படி மதநம்பிக்கையை கைக்கொள்வது ,எப்படி அதைப்பேணிக்கொள்வது என்பது இன்றைய தலைமுறையில் மிகப்பெரிய கேள்வி. அதைத்தான் இன்றைய ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் இன்று மதம் பற்றிப் பேசுபவர்கள் மூன்று வகையானவர்கள். நவீன குருமார்கள் கடைசியாக அவர்களை வழிபடச்சொல்கிறார்கள். ‘cult’ களை உருவாக்குகிறார்கள். இன்னொரு சாரார் வழிவழியாக வந்த ஆசாரங்களை அப்படியே கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லி நம்மை அனாசாரவாதிகள் என்கிறார்கள். மூன்றாவது சாரார் மதம் என்றாலே கடைசியில் கட்சியரசியலும் கவர்மெண்டும்தான் என்கிறார்கள். இந்துமதத்தை காப்பாற்றுவதுதான் இந்து செய்யவேண்டிய ஒரே வேலை என்கிறார்கள்.
நான் கேட்பது ஏன் காப்பாற்றவேண்டும் என்றுதான். எனக்க்குத்தேவை என்னுடைய மனம் நிறைவடையும் ஒரு பதில்தான். அதை நான் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். ஒன்று புளித்துப்போன பழமைநம்பிக்கை. அல்லது நவீன சிந்தனை என்றபெயரில் சூடோ சயன்ஸ். இரண்டும்தான் கிடைக்கின்றன. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. என்னுடைய ஏமாற்றங்களைச் சொன்னேன்.
எனக்கு மிகத்தெளிவான ஒரு பதிலாக, ஆழமான திறப்பை அளிப்பதாக இருந்தது இந்துவாக இருத்தல் பற்றி எழுதப்பட்ட கட்டுரை. அதை நான் பலருக்கும் அனுப்பினேன். ஆனால் அதை பலரும் வாசிக்கத் தயங்குகிறார்கள். அவ்வளவு நீளமாக தமிழிலே வாசிக்கும் வழக்கம் இல்லை. ஆனால் அதன் உள்ளடக்கத்தைச் சொன்னால் மிக ஆர்வமாக கேட்டு பிரமிப்படைகிறார்கள். அதை நீங்கள் சிறிய உரைகளாகச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
அந்த முதல் கட்டுரை எனக்கு அடிப்படையான தெளிவை அளித்தது. மதம் ஏன் தேவை என்றால் மனிதன் சமகாலத்திலேயே சுருங்கிவிடாமலிருக்கத்தான். சமகாலத்தில்தான் நம் அன்றாட வாழ்க்கை உள்ளது. நம் அரசியலும் ideology யும் உள்ளது. ஆனால் நம்முடைய உள்ளத்தின் ஆழம் சமகாலம் சார்ந்தது அல்ல. அது சிந்தனைகளைக் கடந்த இமேஜ்களால் ஆனது. அல்லது archetypes களால் ஆனது. அவை பல்லாயிரமாண்டுக்காலமாக மானுட உள்ளத்திலே நிலைகொண்டு கைமாறப்பட்டு வருபவை.
அந்த image களையும் archetypes களையும் அறிந்துகொள்ள புத்தகம் போதும். அவற்றை போட்டு ஆராய்ந்து பகுத்துப்பார்க்க அறிவு போதும். அவை நம் கனவாகவும் subconscious ஆகவும் ஆக நாம் அவற்றில் இருக்கவேண்டும். அவற்றை inherit செய்யவேண்டும்.அவையெல்லாம் மதமாகத்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அதற்குத்தான் மதம் தேவை. மதத்தை அந்த Traditon of insights என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதன் ஆசாரமும் நம்பிக்கையும் பெரிய விஷயமல்ல. அந்த insights தான் நம்மை கற்கால மனிதனில் இருந்து இன்றுவரைக்குமான ஒரே தொடர்ச்சி ஆக மாற்றுகிறது. நாம் நம்முடைய existence ஐ எப்படி வைத்துக்கொள்கிறோம் என்பதே முக்கியமானது. இங்கே தின்று தூங்கி போராடி வாழும் ஒரு அரசியல்ஜீவியாகவோ அல்லது consumer ஆகவோ நம் existence இருந்துவிட்டு போகலாமென்றால் மதம் தேவையில்லை. கலை இலக்கியம் ஒன்றும் தேவையில்லை. சரித்திரமே தேவையில்லை.
ஆனால் அதற்கு அப்பால் ஒரு “timeless existence” நமக்கு வேண்டுமென்றால் மதம் உருவாக்கும் ஆதாரமான images நமக்குத்தேவை. இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன். சிவனைப்பற்றிய அந்த age old தொடர்ச்சி என்னை மலைக்க வைத்தது. அதன்பின் இப்போது கணேசா பற்றி எழுதியிருந்தது.
இதில் நான் காணும் ஒரு விஷயம் என்னவென்றால் தொன்மையான pagan மதங்களில் இவ்வளவு பெரிய imagery இருந்தது. பிரம்மாண்டமான archetyopes இருந்தன. அவையெல்லாம் கற்காலம் முதல் மனிதனின் மனதில் திரண்டு வந்தவை. நடுவே ஒரு இரண்டாயிரமாண்டுகாலமாக prophetic religion அந்த பெரிய தொகுப்பில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது. ஒரு disconnection.
பிற்கால ஐரோப்பா தன்னுடைய சிந்தனைகள் கலைகள் எல்லாவற்றிலும் அந்த இடைவெளியை இல்லாமலாக்கவே முயல்கிறது. அவர்கள் இன்றைக்கு தங்கள் Celtic Norse பாரம்பரியங்களை தேடிச்செல்வதே அதனால்தான். நமக்கு அதிருஷ்டவசமாக நம்முடைய அந்த தொன்மையான பாரம்பரியம் அறுபடாமல் கிடைக்கிறது. நாம் அதை வெளியே நின்று ஆராய்ந்து அறியவேண்டிய நிலையில் இல்லை. உள்ளே சென்று அதிலேயே இருந்துகொண்டிருக்க வாய்ப்பு அமைந்திருக்கிறது. unconscious inheritance கிடைக்கிறது. அந்த வாய்ப்பு மனிதகுலத்திலேயே சில சமூகங்களுக்குத்தான் உள்ளது. நாம் அப்படிப்பட்ட நல்வாய்ப்பை தவறவிடக்கூடாது.
Prophetic religion உருவாக்கும் மனநிலையும் இன்றைய டெக்னாலஜி உருவாக்கக்கூடிய மனநிலையும் இந்த spiritual unconscious நிலைக்குச் சம்பந்தமே இல்லாமல் வேறு எங்கோ இருக்கும் தளங்கள். அவற்றைப் பேசுபவர்கள் நம்மை இந்த தொடர்ச்சியிலிருந்து வெட்டிவிடுகிறார்கள். நமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. அதேபோல வெறும் ஆசாரவாதமும் நம்பிக்கையும் பேசுபவர்கள் அந்த ஆழத்தை நாம் பார்க்கமுடியாமல் செய்துவிடுகிறார்கள். அவற்றை நாம் கடந்து செல்லவேண்டும். நாம் நம்மை ஒரு deep cultural subjectivity யாக நாம் உருவாக்கிக்கொள்ள இந்த புரிதல் மிக அவசியமானது. பலமுறை வாசித்த கட்டுரைகள் இவை. நன்றி.
என்.ஆர்.கார்த்திகேயன்
அன்புள்ள ஜெ,
இந்துவாக இருப்பது, மதத்தை அளிப்பது பற்றிய இரு கட்டுரைகளுமே மிக முக்கியமானவை. அவை இன்றைய ஒரு நவீன மனம் இந்துமதத்தை எப்படி உள்வாங்கிக்கொள்ளவேண்டும் என்று சொல்கின்றன. வெறும் நம்பிக்கைகளை இன்றைய பகுத்தறிவுவாதம் உடைத்துவிடும். அந்நம்பிக்கைகள் செயல்படும் விதத்தையே அறிவியல்பூர்வமாக அறிந்திருந்தால் நாம் அந்த எளிமையான பகுத்தறிவுவாதத்தைக் கடந்துசெல்லலாம்.
ஆனால் நீங்கள் இவற்றைப் பேசும்போது இந்து மதத்தை வெறும் கலாச்சாரத் தொகுப்பாக மட்டுமே பார்க்கிறீர்களோ, கலாச்சாரவாதம் முன்வைக்கிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. கடவுள்களை எல்லாம் வெறும் குறியீடுகளாகப் பார்ப்பது இந்து மதத்தின் ஆன்மிக அம்சத்தை தவிர்த்துவிடுவதுதான்.
ஆனால் கட்டுரையில் இறுதியில் நீங்கள் அதையும் சொல்கிறீர்கள். அந்த விஷயத்தால்தான் இந்தக் கட்டுரை ஆன்மிகத்தை கலாச்சாரமாக குறுக்குவதில் இருந்து மேலே செல்கிறது. பிள்ளையார் ஒரு குறியீடுதான் என்றாலும் எதன் குறியீடு என்பது முக்கியம். அந்தக்குறியீடு வழியாக மட்டுமே சொல்லமுடிகிற ஒன்று உள்ளது. அதை அறிந்தவர் அக்குறியீடாக அதைச் சொன்னார்கள். அக்குறியீடு வழியாக அந்த குறிப்பீட்டுப் பொருளை நோக்கி நாம் செல்லமுடியும். அதுவே மதத்தின் உச்சகட்டமான நோக்கம்.
சிவ சிதம்பரநாதன்
இந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள். இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும் இந்து என உணர்தல்- கடிதம் இந்து என உணர்தல் – மறுப்புSeptember 26, 2021
கடவுள் என்பது…
அன்பின் ஜெ
முதலில் வணக்கம். நீங்கள் ஜப்பான் வந்தபோது உங்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். வெண்முரசு வாயிலாக பலமுறை. உங்களுக்கு எழுதுவது இதுவே முதல். பலமுறை எழுத வேண்டும் என நினைப்பேன், என் மனதில் தோன்றும் கேள்வியை யாரவது ஒருவர் கேட்டு இருப்பார் வாசித்தவுடன் எழுதாமல் விட்டு விடுவேன்.
இன்று https://www.jeyamohan.in/149040/ வாசித்த போது இன்னும் சில கேள்விகள் எழுந்தது, ஒரு தொடக்கமாக இந்த மெயிலை எழுதிக் கொன்டு இருக்கிறேன்.
நானும் இவர் சொன்னதை போல ஒரு கஷ்டம் வரும் போது கடவுளை கூடுதலாக வழிபட்டு இருக்கிறேன் ஆனால் கடவுள் என்பவர் வேண்டுவன கொடுப்பவர் மட்டுமல்ல என்றொரு எண்ணம் எப்போதும் உண்டு.
ஞானத்தை அறிவதற்கு பக்தி ஒரு கருவி என்றால் இத்தேடலில் கடவுள் என்பவர் யார்? கடவுளின் சமூக வரலாறு என்ன? அதெப்படி உலகத்தின் எல்லா மக்களுக்கும் கடவுள் என்று ஒருவர் தேவைப்பட்டிருக்கிறார். உலகமே ஒரு பெரும் ஒத்திசைவென்று கொண்டால் கடவுள் அதை நிகழ்த்துபவரா? இல்லை அந்த ஒத்திசைவின் பிரம்மாண்டம் புரியாததால் மனிதன் அதற்கு வைத்த பெயர் கடவுளா? நிச்சயம் வெறும் வேண்டுவன கொடுப்பவர் அல்ல, பின் மனிதனுக்கு கடவுளின் தேவை என்ன?
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். மனதுக்குள் பல உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன சற்று அடங்கியபின் எழுதுவதாக எண்ணம்.
நன்றி
முத்து
***
அன்புள்ள முத்து,
நீங்கள் கேட்டிருப்பதெல்லாம் ஆழ்ந்த தத்துவ -ஆன்மிகக் கேள்விகள். அவற்றுக்கான பதில்களை வெறுமே மூளையை உழப்பிக்கொண்டு கண்டடைய முடியாது. அதற்கு இரு வழிகள் உள்ளன. அவற்றைப்பற்றிய தொல்ஞானத்தை முறையாக அறிய முயல்வது. இரண்டு அறிந்தவற்றை அனுபவமாக ஆக்குவதற்குரிய பயிற்சிகள், பழக்கங்களில் ஈடுபடுவது. கல்வியும் ஊழ்கமும்.
அவ்வாறு நீங்களே உங்களுக்கென அறிவதுதான் கடவுள். ஒருவரின் அறிதல் இன்னொருவருக்குரிய பதிலாக இருக்கமுடியாது. ஒருவர் அறிந்தமுறை இன்னொருவருக்கான வழிகாட்டலாக மட்டுமே இருக்கமுடியும். ஆகவே கடவுள் பற்றிய பிறருடைய வரையறை, வர்ணனை எதற்கும் எப்பதிலும் இல்லை.
கடவுளை அறிவதன் இரு நிலைகள் நம்மைச் சூழ்ந்து காணப்படுகின்றன. அவை கடவுளின் இருநிலைகள் அல்ல. மனிதனின் இரு நிலைகள். மனிதன் உலகியல் மனிதனாகவும் ஆழத்தில் தூயஅறியும் தன்னிலையாகவும் ஒரேசமயம் இருக்கிறான். இருநிலைகளிலும் அவன் தெய்வத்தை அறிகிறான்.
விழைவில், வறுமையில், நோயில், துயரில் இருக்கையில் உலகியல் மனிதர்கள் ஒரு தெய்வத்தை நாடுகிறார்கள். துணைவர, ஆறுதலளிக்க, வழிகாட்ட அத்தெய்வம் தேவையாகிறது. அவ்வண்ணம் ஒன்றை அவர்கள் கண்டடையவும்கூடும்.
தூயதன்னிருப்பாக மட்டுமே தன்னை உணர்கையில் தன்னைச் சூழ்ந்திருக்கும் ஒரு மாபெரும் பிரபஞ்ச உணர்வாக அவர்கள் தெய்வத்தை உணர்கிறார்கள். ஒரு மலையுச்சியில், உலகியல் கவலை ஏதுமில்லாமல், தன்னை மறந்து நீங்கள் வெட்டவெளி நோக்கி நின்றிருக்கிறீர்கள் என்று கொள்வோம். அப்போது ஓர் மாபெரும் உணர்வாக அடையும் தெய்வத்தின் இருப்பு அது.
முதல்தெய்வத்திடம் வேண்டிக் கொள்வீர்கள். பேரம்பேசுவீர்கள். கோபம் கொள்வீர்கள். அடைக்கலம் புகுவீர்கள். இரண்டாம் தெய்வத்திடம் அவற்றையெல்லாம் செய்ய மாட்டீர்கள். வெறுமே உடனிருப்பீர்கள். முதல் தெய்வத்திடம் நீ தெய்வம் நான் பக்தன் என்பீர்கள். இரண்டாம் தெய்வத்திடம் ’நானே நீ’ என்பீர்கள்.
இரண்டும் ஒன்று. இரண்டாக்குவது நாம்.
ஜெ
***
சிவோஹம்!
அன்புள்ள ஜெ
நான் கடவுள் படத்தை இப்போதுதான் பார்த்தேன். அதற்கு முன்பு ஓம் சிவோஹம் பாடலை கேட்டேன். ஒரு மாதம் கிட்டத்தட்ட தினமும் நாலைந்துமுறை அந்தப்பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன். கிறுக்கு பிடிக்கவைக்கும் பாட்டு. சரி, அந்தப்பாட்டை எங்கே கேட்டேன் என நினைக்கிறீர்கள்? கல்கத்தா கங்கைக்கரையில் ஒரு ஹிப்பி கூட்டம் அதைப்போட்டு கேட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த கிறுக்கு என்னையும் பிடித்துக் கொண்டது.
முழுக்க முழுக்க கண்வழியாகவே அறியவேண்டிய படம் நான் கடவுள். கொஞ்சம் மப்பு போட்டுக்கொண்டு பார்த்தால் நம்மை கனவுக்குள் கொண்டு போய்விடும். கதை, கதாபாத்திரம், அறிவு எதுவுமே இருக்கக்கூடாது. அந்த உலகம் நிலைகுலையச் செய்யக்கூடிய ஒன்று. தமிழில் இத்தனை ஆற்றலுடைய ஒரு சினிமா வந்திருப்பதே எனக்கு தெரியாமலிருந்தது ஆச்சரியம்தான். எனக்கு அந்த சினிமா பற்றிச் சொன்னதே ஒரு பங்காலி நண்பர்தான்
என்.ஆர்.மணிகண்டன்
அன்புள்ள மணிகண்டன்,
சென்ற ஆண்டு இணையத்தில் சினிமாக்கள் பார்க்கப்படுவதைப் பற்றி புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் நிபுணர் ஒருவர் சொன்னார், நான் கடவுள் மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று என. அது எனக்கு முன்னரே தெரிந்திருந்தது.
அந்தப்படம் வந்தபோது தமிழின் விமர்சகர் எவருக்கும் அதன் காட்சிச் சட்டகங்களின் ஆற்றல் என்ன என்று தெரியவில்லை. மும்பையிலும் கல்கத்தாவிலும் திருவனந்தபுரத்திலும் இருந்த விமர்ச்கர்களே அதைப் போற்றி எழுதினர். குறிப்பாக அனுராக் காஷ்யப்.
இங்கே அதில் வழக்கமான கதையைத் தேடினர். அரசியல் சரிகளை ஆராய்ந்தனர். பாதி விமர்சனங்களில் ருத்ரன் என்ற பெயரே இல்லை, ஆரியாவின் நடிப்பு ஆரியாவின் தலைமுடி என்றே எழுதிக் கொண்டிருந்தனர்.
அத்துடன் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் அது வெற்றிப்படமா, வசூல் என்ன என்றே பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கும்பல் அது வசூல்செய்யவில்லை என நிறுவ முயன்றது. வசூல் என்பது தயாரிப்பாளர் கவனிக்க வேண்டிய விஷயம். அது வசூல் ஆகவில்லை என்றால் நான் அடுத்த பதிமூன்றாண்டுகள் சினிமாவில் இத்தனை வெற்றிகரமாக நீடித்திருக்க முடியாது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது.
இன்று அந்தப்படம் ஒரு கல்ட்கிளாஸிக் என கருதப்படுகிறது. ஒரு வணிகப்படம் அல்ல. அதனுடன் வந்த பல வணிகப்படங்கள் இருக்குமிடமே தெரியவில்லை. அது இன்று அடுத்த தலைமுறையால் பார்க்கப்படுகிறது. ஆனால் அனைவருக்குமான படம் அல்ல. நிலைகுலைவை ஓர் அக அனுபவமாக அறிபவர்களுக்கான படம்.
அதை விடுங்கள், அந்தப்பாடல் எனக்கும் ஒரு அரியநினைவு. நான் அதை ராஜா உருவாக்கும்போது உடன் இருந்தேன். உருகிய உலோகத்தாலானது போலிருக்கும் அவர் உடலும் முகமும் அப்போது. மற்ற பாடல்களை அமைக்கும்போது சொப்பு, டப்பா வைத்து விளையாடும் குழந்தை போல் இருப்பார்.
நான் அவர் அதை உருவாக்கிக் கொண்டிருக்கையில் அந்தப்பாட்டில் ஏதோ சொல்ல விரும்பி, “சார்” என்றேன். அவர் நிமிர்ந்து பார்த்து “ம்?” என்று உறுமியபோது முகம் உக்கிரமாக இருந்தது. ஒன்றுமில்லை என்று தலையசைத்துப் பின்னடைந்தேன். என் மேல் எப்போதும் மதிப்பும் கனிவும் கொண்டவர். கொஞ்சநேரம் கழித்து நிமிர்ந்து புன்னகைத்து “என்ன?” என்றார். நான் மீண்டும் ஒன்றுமில்லை என்றேன்.
காசியில் அந்தப்பாடல் படமாக்கப்படும் போதும் உடனிருந்தேன். இந்தப்பாடலில் வரும் காட்சிகள் கிட்டத்தட்ட ஒருமாதகாலம் எடுக்கப்பட்டன. காசியின் படித்துறைகளில் அந்த மொத்த அமைப்பும் செட் போடப்பட்டது. மொத்த கூட்டமும் துணைநடிகர்கள். ஏற்கனவே இருந்த காட்சியை அப்படியே மீண்டும் அதேபடி அமைத்து அதற்குள் விருப்பப்படி காமிராவை உலவவிட்டு எடுக்கப்பட்டது. நேரடியாக எடுப்பதென்றால் ரகசியக் காமிராதான் பயன்படுத்தவேண்டும், வேண்டியபடி காட்சிச் சட்டகங்கள் அமைந்திருக்காது.
பதிநான்காண்டுகள் கடந்துவிட்டன. நினைவுகள் இன்றும் கிளர்ச்சியடையச் செய்கின்றன. சினிமா எனக்கு ஒரு தொழில் மட்டுமே என எப்போதும் சொல்லிவருகிறேன். ஆனால் எந்தத் தொழிலிலும் இத்தகைய இனிய நினைவுகள் வந்தமைய முடியாது.
ஜெ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராயவீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….அண்டப்ரமாண்ட கோடி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷணா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹனா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ண போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சத்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதிஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
நான் கடவுள் – சில கேள்விகள் – 2
அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை- உஷாதீபன்
எந்தவிதத் திட்டமும் இல்லாமல் எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் அசோகமித்திரன். முழுக்க முழுக்க மனோதத்துவ ரீதியிலான எண்ண ஓட்டங்களும், உரையாடல்களும் கலந்து ஒரு பூடகமான மனநிலையிலேயே நாவல் நம்மை நகர்த்திச் செல்கிறது. அசோகமித்திரனின் எழுத்து மனதுக்குள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் பலம் கொண்டது. நம் குடும்பங்களில் ஒருவரைப்பற்றி இவர் சொல்லியிருக்கிறார் என்று எண்ண வைக்கும். இம்மாதிரிச் சிலரும் நம் வீட்டிலும் உண்டே என்று தோன்றும். அவர்கள் படும் துயரங்கள் எல்லாம் இந்த மனிதருக்கு எப்படித் தெரிந்த்து என்று வியக்க வைக்கும்.
சாதாரண, எளிய மக்களின், அன்றாடங்காய்ச்சிகளின் துயரங்களும், கஷ்டங்களும் இவரை ஏன் இப்படி வதைக்கின்றன என்று எண்ணி, நம்மையும் சங்கடம் கொள்ள வைக்கும்.இவற்றையெல்லாம் நாமும் கவனித்திருக்கிறோம், ஆனால் மனதில் இருத்தியதில்லை என்பது புரியும். அதை ஒருவர் அவருக்கேயுரிய தனி மொழி நடையில் அமைதியாக, அழுத்தமாகச் சொல்லும்போது எப்படி உறைக்கிறது? என்ற எண்ணம் வரும். உலக நடப்புகளின் பல விஷயங்களுக்காக தன் மனதுக்குள் இவர் எவ்வளவு துயருறுகிறார், வேதனைப்படுகிறார் என்பதை நாவலின் ஏதேனும் ஒரு கதாபாத்திரமாவது வெளிப்படுத்தும்போது, அந்த எழுத்தின், விவரிப்பின் ஆழமான துயரம் நம்மையும் பற்றிக்கொள்ளும்.
வெறும் கதை சொல்லல் என் வேலையல்ல. பொழுது போக்காய்ப் பக்கங்களை நகர்த்த வைத்தல் என் நோக்கமல்ல. ஒரு குறிப்பிட்ட நபரின், அவன் குடும்பத்தின் வாழ்க்கைப் பாடுகளை – அந்தந்தக் காலகட்ட சமுதாய நடைமுறைகளை , இயற்கை நிகழ்வுகளை, மாற்றங்களை, உறவுகளின், வெளி மனிதர்களின், வேலை செய்யும் நிறுவனத்தின் இப்படிப் பலரின் தொடர்புகளால் ஏற்படும் நன்மை, தீமை, லாபம், நஷ்டம், மகிழ்ச்சி, சோகம் ஆகிய பல்வேறு நிலைகளின் ஏற்ற இறக்கங்களை, பாதிப்புகளை உள்ளடக்கி, ஒருவனின் சிந்தனையைத் தூண்டுவதும், அவனை பொறுப்புள்ள மனிதனாக மாற்றுவதும், அவனால் சமுதாயத்திற்கு எந்தவிதக் கேடும் ஏற்படாவண்ணம் பக்குவப் படுத்துவதும், தீமைகளிலிருந்து விலகியிருக்கச் செய்தலுமான பற்பல அனுபவங்களை உள்ளடங்கிய மாற்றங்களை ஏற்படுத்துதலே என் எழுத்தின் தலையாய நோக்கம் என்பதை நமக்குள் ஆணித்தரமாய்ப் பதிய வைக்கிறார் அசோகமித்திரன்.
ஒரு கதையை உண்டாக்கவில்லை, அது தானாய் இயல்பாய் நடந்த்து என்பதாகச் சொல்லி இந்நாவல் பயணிக்கிறது. நாயகன் வேலைக்காக அலைகிறான். யாராவது வாங்கித் தரமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. அதுவும் அவர்கள் இஷ்டமாய், அதுவாக, தானாய் நடந்ததாய் இருக்க வேண்டும் என்பதுவும் அவனது விருப்பமாய் உள்ளது. தனக்கென்று உள்ள சிற கௌரவத்தை விட்டுக் கொடுக்க ஏலாமல் அதற்கு எந்தவகையிலும் பங்கம் வந்துவிடாமல் அதுவாக நடந்தால் நடக்கட்டும் என்று விலகி இருக்கிறான்.
ஓவியக் கண்காட்சி ஒன்ற நடத்துகிறான் நாயகன். அதற்கு ஒரு வெளி உதவித் தூதுவர் ஏற்பாடு செய்கிறார். சிறப்பாகக் கண்காட்சி நடந்தேறுகிறது. அக மகிழ்ந்து ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் தூதுவர். அந்த விருந்து நடைபெறும் பிரம்மாண்டமான இடம், அந்த வளாகம், பெருத்த, படாடோபமான செலவினை உள்ளடக்கிய ஏற்பாடுகள், பல முக்கியப் பிரமுகர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தி நாயகனைப் பயமுறுத்துகிறது.
உள்ளே செல்லவே அஞ்சி, தயங்கி, செக்யூரிட்டியால் தடுக்கப்பட்டு, பின் வேறு வழி ஏதேனும் உண்டோ என்று மானசீகமாய்த் தேடி, திரும்பி விடலாமா என்று யோசிக்கையில் கடைசியில் அந்தத் தூதுவரின் பார்வைக்கே பட்டு, கைபிடித்து அழைத்துச் செல்லப்படுகிறான். வாழ்க்கையில் முதன் முறையாய் முற்றிலும் அவனுக்குப் பொருந்தாத அந்த இடம் அவனைக் கூச வைத்து, ஒதுங்கச் செய்து, பேச நா எழவிடாமல் ஊமையாக்கி, அந்தப் பெரியதனக்காரர்களின் சூழலிலிருந்து எப்படியாவது விலகி ஓடினால் சரி என்று அவன் மனம் பதைத்துக் கொண்டேயிருக்கிறது.
சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி, அந்த வளாகத்தின் இன்னொரு விருந்து நடக்கும் பகுதியில் சென்று ஒன்றும் புலப்படாமல் மாட்டிக் கொள்கிறான். அங்குதான் அந்த தனவந்தரைச் சந்திக்கிறான். அவரோடு பேச விருப்பமின்றி நழுவ நினைக்கையில் இழுத்து வைத்து அவனை வலியப் பேசப் பண்ணுகிறார் அவர். சூழலுக்கு ஏற்ப அவனை நடந்து கொள்ளச் செய்ய யத்தனிக்கிறார். நாயகன் ரகுராமன் தனக்குப் பொருந்தாத இடத்தில் வந்து சிக்கிக் கொண்டதாய் நினைத்து, அங்கிருந்து எந்தக் கணமும் வெளியேறத் துடிக்கிறான். அவனை அவரோடு சேர்த்து மது அருந்த வைக்க முயற்சிக்கிறார் அந்த செல்வந்தர் ராஜப்பா. மறுத்து விடுகிறான் ரகுராமன். எவ்வளவோ முயற்சித்தும் அவனைத் தன் வழிக்குக் கொண்டு வர முடியாத நிலையில் ரகுராமனை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அங்கிருந்தும் வெளியேறுகிறான் நாயகன். எப்பொழுது வேண்டுமானாலும், எதற்காகவேனும் நீ என்னை நாடி வரலாம் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் அவர்.
நாயகன் வாழ்வில் அடுத்தாற்போல் மாலதி குறுக்கிடுகிறாள். அவள் தனக்கு உதவக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறான் ரகுராமன். ஆனால் அவனைப் பலமுறை கேலிக்குள்ளாக்கும், விமர்சிக்கும் அவள், அவனுக்காக எதுவும் செய்யாமலேயே விலகிச் சென்று விடுகிறாள்.
ஆரம்பத்தில் தன் சொந்த முயற்சியில் கிடைத்த சொற்ப சம்பளத்திலான வேலையில் அவனையறியாமல் நடந்தேறிவிட்ட ஒரு தவறுக்காக சஸ்பென்ட் பண்ணப்பட்ட நிலையில், மறுபடியும் ஒரு நல்ல வேலையில் அமருவதற்காக நாயகன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போகின்றன. வேலை எதுவுமற்ற நாயகனின் மன ஓட்டங்களை, அன்றாட வாழ்க்கையின் கஷ்டங்களை, அவன் தாயுடன் கூடிய வருத்தங்களை, மனமுருகி நினைத்துப் பார்ப்பதும், புழுங்குவதுமாய், வேதனையோடு கழிப்பதும், விரக்தியினால் தோன்றும் மன வெறுப்பும், யாரையும் நம்பத் தகாத தன்மையும், ஏமாற்றமும், தத்துவ ரீதியிலான சிந்தனையைக் கிளறி விடுகிறது நாயகன் ரகுராமனுக்கு.
எந்த நிறுவனத்திலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டானோ அந்த நிறுவனமே அவனை மறுபடி அழைத்துத் தாங்குகிறது. முன்பிருந்த பணிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்து விட்டதாய்ச் சொல்லி, அதனிலும் மூன்று படி நிலைகள் உயர்ந்த ஸ்தானத்திலான ஒரு பதவியில் இவனை அமர்த்துகிறது. யாருக்கு இவனைப் பிடித்துப் போனதாய் – எந்த நேரமும் என்னை நீ அணுகலாம் என்று தன் கௌரவம் பார்க்காமல் – அந்த ஒரு விருந்து நாளில் பல பேர் முன்னால் சத்தமிட்டு, உரக்கச் சொன்னாரோ அந்தச் செல்வந்தரே திரு ராஜப்பா அவர்களின் சிபாரிசினால்தான் தனக்கு இந்த உயர்ந்த ஸ்தானத்திலான வேலையும், அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை உணர்கிறான் நாயகன் ரகுராமன். அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த நிறுவனத்தின் வெற்றிக்காக உழைக்கத் தன்னை முனைப்பாக நிறுத்திக் கொண்டு உழைக்க ஆரம்பிக்கிறான்.
வேலை கிடைக்காத நாட்களில், தற்காலிகப் பணி நிறுத்தத்தில் இருக்கையில் ஏற்படும் மன உளைச்சல்களும், வெறுப்பும், ஏமாற்றமும், அதனால் விளையும் முரணான செயல்பாடுகளும், வீட்டில் அம்மாவுடன் ஒத்துழைக்காத, உதவாத போக்கும், வெளி நபர்களிடம் தோன்றும் அர்த்தமற்ற கோபங்களும், தடித்த வார்த்தைகளும் என ரகுராமன் அல்லாடுவது நாமும் இப்படியெல்லாமும் இருந்திருக்கிறோம்தானே என்பதாய்ப் பல இளைஞர்களின் அனுபவ எண்ணங்களைக் கிளறி விடக் கூடும். அதே சமயம் சுயமாய் நல்ல வளர்ப்பால் படிந்திருக்கும் இரக்கம், கருணை, நேயம் இவைகளும் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கின்றன.
வசதியற்ற, அன்றாட வாழ்க்கைக்கே ஆதாரமின்றித் தவிக்கும் மக்களைப் பார்க்கையிலும், அவர்கள் படும் அல்லல்களை நோக்குகையிலும், ஐயோ, இந்த மனிதர்கள் தங்கள் உடன் பிறப்புகளைக் கரையேற்ற, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்….துயருறுகிறார்கள் என்று நாயகனின் மனம் படும் வேதனை நம்மையும் மிகுந்த சோகத்திற்குள்ளாக்குகிறது. ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் இல்லாமையையும், வறுமையையும், பற்றாக்குறையையும் கண்ணுறும்போதுதான், அனுபவிக்கும்போதுதான், அடுத்தவர்களின் பசியும் பட்டினியும் அவலமும் அவன் சிந்தைக்குள் வருகிறது, உறுத்துகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் அசோகமித்திரன்.
ஆகாயத்தாமரை என்பது இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றைக் கூடப் பெயரிட்டு அழைத்துத்தான் சுட்ட வேண்டியிருக்கிறது. மனம் எவ்வளவோ கற்பனை செய்து கொள்ளலாம். விண்ணில் பறக்கலாம்…ஆகாயத்தை முட்டலாம்….நடப்பதுதான் நடக்கும், நடக்கும்போதுதான் நடக்கும்…ஆகாயத்தாமரை ஏதோ நிஜமானது போல…இருக்கு. ஆனால் அதற்கு ஆதாரம் கிடையாது. அது சாத்தியமானதும் கிடையாது….என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை நாவல் முழுக்கப் பரவ விட்டிருக்கிறார் அசோகமித்திரன்.
இதையெல்லாம் சொல்லலாமா, அப்படிச் சொன்னால் நாவல் ஸ்வாரஸ்யப்படுமா? என்று சந்தேகிக்கும், தயங்கும்விதமான மிக மிகச் சாதாரண விஷயங்களைக் கூட மனதில் வைத்திருந்து அவர் சொல்லிச் செல்லும் முறை…இவற்றையெல்லாம் அசோக மித்திரன் சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பெருமைப்பட வைக்கிறது.
சைதாப்பேட்டை பாலத்தினடியில் இரவில் சலவையாளர்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவில்தான் துணி துவைப்பார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருந்த ரகுராமன், பகலிலும் துணி துவைப்பதைப் பார்த்ததை நினைத்துக் கொள்கிறான். அத்தோடு போகவில்லை. அவர் துவைக்கும் துணிகளில் என் சட்டையும் பேன்ட்டும் இருக்கலாம். ஐயா…சற்று மெதுவாக அந்தக் கல்லில் தோயுங்கள். பலமாக அறையாதீர்கள். ஒவ்வொரு முறையும் நான் உடையுடுத்தும்போது ஒரு பொத்தானாவது இல்லாமல் இருப்பதைச் சங்கடமாக உணர்கிறேன் நான். சற்று தயவு செய்யுங்கள். பட்டன்கள் உதிராமல் துவைக்கப் பாருங்கள் என்று மானசீகமாய் வேண்டிக் கொள்கிறான். எவ்வளவு பண்பான எழுத்து என்று அசோகமித்திரன் மீது நம் மதிப்பு உயர்கிறது.
ஒரு பெரிய தலைவரின் இறப்பின்போது ஊர் எப்படியெல்லாம் கொந்தளித்துப் போகிறது? பெரும் கூட்டம் கூடி கடைசியில் அது எப்படி ஒரு திருவிழா மாதிரித் தோற்றம் கொண்டு விடுகிறது? பெரும் கூட்டம் கூடும்போது தனி மனிதத் துக்கம் கூட உருமாறி விடுகிறதே…! என்கிறார்.
அன்றாடச் செயல்களில் நமது சின்னச் சின்னத் தடுமாற்றங்களைக் கூடச் சுட்டிச் செல்கிறார். இவற்றையெல்லாம் எழுதலாமா என்று தயக்கம் கொள்ளும் பலவற்றை அவர் சொல்லிச் செல்லும் விதத்தால் அந்தச் சாதாரண விஷயம் கூட, போகிற போக்கிலான காட்சிகள் கூடப் பெருமை பெற்று விடுகிறது.
1973 காலகட்டம் இந்நாவலில் பயணிக்கிறது. 1980-ல் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இப்பொழுது படிக்கும்போதும் இந்நாவலுக்கான தேவை இருக்கிறது என்ற எண்ணம் எழுகிறது நமக்கு. இதில் வரும் நாயகன் ரகுராமன் போல் இங்கே பலர் இருக்கிறார்கள். வேலையில்லாமல் வீட்டிலும் வெளியிலும் அவமானத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். கூச்ச சுபாவம் உள்ளவர்களாக, தங்களைத் தாங்களே சுருக்கிக் கொண்டு, வார்த்தைகளை அளந்து அளந்து பேசிக் கொண்டு, பேசாமல் முழுங்கிக் கொண்டு பல கேவலங்களை, அவமானங்களை, எந்த எதிர்வினையும் காட்டாமல் தாங்கிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ரகுராமன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவதும், மனிதர்களிடம் நடந்து கொள்ளும் விதமும், அவனை மற்றவர்கள் நடத்தும் முறையும், மனோதத்துவ முறையில் சொல்லப்பட்ட இந்த நாவல் வாழ்க்கையில் யாரும் யாருக்காகவும் எதுவும் செய்து விட முடியாது?, அவரவருக்கு அமைந்த வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தே கழித்தாக வேண்டும் என்கிற பொது விதியை முன்னெடுத்துச் செல்கிறது என்கிற எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் கூற்று…அசோகமித்திரனின் இந்நாவலுக்கு முற்றிலும் பொருந்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
உஷாதீபன்
***
கேரள தலித்துக்கள் – கடிதங்கள்
கேரள கம்யூனிசமும் தலித்துக்களும்
அன்புள்ள ஜெ
கேரள கம்யூனிசமும் தலித்துக்களும் ஒரு முக்கியமான குறிப்பு. இங்கே தரப்புகளை எடுத்துக்கொண்டு காழ்ப்புகளைக் கொட்டும் அரசியல் விவாதங்களே நடைபெறுகின்றன. அக்கட்டுரைபோல நம்பகமான தரப்பாக, நடுநிலைப்பார்வையாக ஒலிக்கும் கட்டுரைகள் மிகமிகக் குறைவு. கேரள தலித்துக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை ஆழமாக காட்டும் கட்டுரை
அழகுவேல் முருகேசன்
***
அன்புள்ள ஜெ
தமிழ்நாட்டிலும் தலித்துக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சினை பிஸினஸில் அவர்களுக்கு இடமில்லை என்பதுதான். அவர்கள் அரசியலில் இனிமேல் பெரிதாக சாதிக்கமுடியாது. இட ஒதுக்கீடு அரசுவேலை எல்லாம் எல்லைக்குட்பட்டவை. சிறுதொழில்களில் அவர்கள் ஈடுபட்டு பணமீட்டியாகவேண்டும்.
அதற்கான வழிகள் தமிழ்நாட்டில் இல்லை. ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகமும் தலித் மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. சாதாரணமாகச் செய்யப்படும் உணவுத்தொழில், கடைத்தொழில் போன்றவற்றை தலித்துக்கள் செய்யமுடியாது. இங்கே எல்லா சந்தைகளும் பிற்படுத்தப்பட்டோர் கையிலேயே உள்ளன. செருப்பு, இரும்பு போன்றவை முஸ்லீம்களின் கையில் உள்ளன. கழிப்பறை காண்டிராக்ட் கூட தேவர்களே மிகுதி.
தலித் மக்கள் செய்யக்கூடிய தொழில்களே இல்லை. தலித்துக்கள் போராளிகள், அடாவடிக்காரர்கள் என்று சொல்லியே மக்கள் மனதில் நிறுத்திவிட்டார்கள். அதை உணர்ந்து அந்த தலித் அடையாளத்தையே துறக்க கிருஷ்ணசாமி முயல்கிறார். அது அவர்களுக்கு புதிய அடையாளத்தை அளிக்கிறது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொழில்களில் காலூன்றிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள்தான் இன்னமும் விவசாயக்கூலி, அடிமைத்தொழில் என வாழ்கிறோம். அதிகபட்சம் சர்க்கார்வேலைதான் எங்களுக்கு
குணா
***
அன்புள்ள ஜெ,
கேரள தலித்துக்கள் பற்றிய கட்டுரை சிறப்பான விளக்கம். நடுநிலை நின்று எழுதப்பட்டது. கேரளத்தின் காலனிதான் ஆதிவாசிகள் என நீங்கள் எழுதிய குறிப்பு நியாபகம் வந்தது.
கணேஷ்குமார்
***
விகடன் பேட்டிகள்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நலமாகவிருப்பீர்களென எண்ணுகிறேன். உங்களது விகடன் பேட்டிகளை கேட்கும் வாய்ப்புக்கு கிடைத்தது. கேள்விகளும், பதில்களும் ஆர்வத்தைத் தூண்டின. குறிப்பாக நீங்கள் ஓரிடத்தில் தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் அனுபவத்தில் படைப்பாக்கங்களில் குறிப்பாக நாவல், சிறுகதை என்று வரும்போது இன்மூன்றினதும் இடமென்ன? படைப்பின் வடிவத்தைப் பொறுத்து ஒன்று மற்றையதிலும் மேலோங்கி நிற்கும் யதார்த்தம் உள்ளதா?
அன்புடன்
யோகன் (கன்பரா)
***
அன்புள்ள யோகன்,
புனைவாக்கத்தில் தர்க்கம் உள்ளுணர்வு ஆகியவற்றின் இடம் பற்றி விரிவாகவே பேசியிருக்கிறேன். தர்க்கம் என்பது ஒரு படைப்பின் வடிவம், அதன் அறிவார்ந்த உள்ளடக்கம் ஆகியவற்றை முடிவுசெய்கிறது. கற்பனை என்பது அந்தப்படைப்பின் நுண்செய்திகள், உரையாடல்கள், உணர்ச்சிச் சித்தரிப்புகள், மன ஓட்டங்களின் மொழிவடிவம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. உள்ளுணர்வு ஒரு படைப்பின் உள்ளுறையாக திகழும் வாழ்க்கைப்பார்வையை, மெய்மையை கண்டறிகிறது. படைப்பில் வெளிப்படாமல் நிற்பது அதுதான்
ஜெ
***
அன்புள்ள ஜெ
விகடன் பேட்டியின் எல்லா பகுதிகளையும் பார்த்தேன். மிகச்சிறப்பாக இருந்தது. உங்களுக்கு பேட்டி எடுத்த இருவர் மீதும் இருக்கும் நட்பு உங்கள் முகமலர்வில், சிரிப்பில் தெரிந்துகொண்டே இருந்தது. சில பேட்டிகள் ஃபார்மலாக ஆகிவிடும். அப்போது பேட்டி அளிப்பவரும் ஃபார்மலாக பேசுவார். என்னைப் பொறுத்தவரை பேசும் கருத்துக்களை விடவும் பேசும்போதுள்ள முகபாவனைகளும் மனநிலைகளும் முக்கியம் என நினைக்கிறேன்.
ரா.சிவக்குமார்
அன்புள்ள சிவக்குமார்
ஆமாம், அந்தப்பேட்டியின்போது மிக உற்சாகமான மனநிலையில் இருந்தேன். மூன்றுமணிநேரம் இயல்பாக ஓடியது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

