Jeyamohan's Blog, page 913
September 20, 2021
நாணயங்களுடன் ஓர் அந்தி
நாகர்கோயில் கோட்டாறில் இருசக்கரவண்டிகள் பழுதுபார்க்கும் நிலையம் வைத்திருப்பவர் மணி. அவர் நாகர்கோயிலின் முக்கியமான நாணயச்சேகரிப்பாளர் என்று ஷாகுல் ஹமீது சொன்னார். பழைய திருவிதாங்கூர் நாணயங்களில் ஒன்றிரண்டு தவிர பெரும்பாலானவை அவரிடம் உள்ளன என்றார். அவற்றை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது.
நேற்று [19-09-2021] அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறுமணிக்கு அவரைப் பார்க்க வருவதாக சொல்லியிருந்தோம். ஷாகுல் அவருடைய பைக்கில் வந்திருந்தார். இன்னொரு இளம்நண்பர் பார்க்க வந்தமையால் தாமதமாக ஆறரை மணிக்கு நானும் ஷாகுலும் கோட்டாறு செட்டியாத்தெருவிலுள்ள அவர் வீட்டுக்குச் சென்றோம். [செட்டியாத் தெருவில் சாதிப்பெயர் நீக்கம் செய்து யாத் தெரு என அதை ஏன் மாற்றம் செய்யவில்லை இன்னும்?]
மணி சாலையில் வந்து நின்று அழைத்துச்சென்றார். அவருடைய மனைவி ஆசிரியை. அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் அந்தமான் போர்ட்பிளேயரில் என்று சொன்னார். திருமணத்துக்குப் பின்னர்தான் தமிழகம் வந்திருக்கிறார். இரு பெண்கள். ஆச்சரியமாக மணியின் மனைவிக்கும் அவருடைய நாணயச் சேகரிப்பில் ஆர்வம் உண்டு. நாணயங்களின் தகவல்களை எல்லாம் அவர்தான் எழுதியிருக்கிறார்.
பார்பரா மியர்ஸ்https://soas.academia.edu/BarbaraMears
மாடிக்குச் சென்று அவருடைய சேகரிப்புகளை பார்த்தேன். பெரிய ஆல்பங்களாக நாணயங்களை தொகுத்து காலக்குறிப்பு, உள்ளடக்கக் குறிப்புகளுடன் வைத்திருந்தார். எனக்கு நாணயவியலில் தேர்ச்சி எல்லாம் இல்லை. என்னுடையது பொதுவான வரலாற்று ஆர்வம். அந்நாணயங்கள் உருவாக்கும் உணர்வுகளும், அவை பின்னர் என் நினைவில் படிமங்களாக எழுவதும்தான் எனக்கு முக்கியம்.
பொதுவாக திருவிதாங்கூர் வரலாற்றில் நாணயங்கள் பற்றிய பேச்சில் ‘கலியன்பணம்’ ‘புத்தன்பணம்’ என்னும் இரு நாணயங்களைப் பற்றிய பேச்சு உண்டு. கலியன்பணம் அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா திருவிதாங்கூரை சுதந்திர நாடாக ஆக்கி, திருவனந்தபுரத்தை தலைநகரமாக அறிவித்தபின் வெளியிடப்பட்டது.
கலியுகத்தின் முதல்நாள் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி ஆலயம் நிறுவப்பட்டது என்று நம்பிக்கை. கலியுகத்தின் 950 ஆண்டு அனந்தபத்மநாபசாமி சிலை மறுபடியும் நிறுவப்பட்டது. இந்தக் கணக்கு மலையாள ஆண்டு அல்லது கொல்லவர்ஷம் எனப்படுகிறது. ஆங்கிலக் கணக்குப்படி அது 1774. அந்த ஆண்டுக்கணக்கை கலிவர்ஷம் என்றும் சொல்வதுண்டு. அப்போது அச்சிடப்பட்ட நாணயங்கள் கலியன்பணம் என்கிறார்கள்.
புத்தன் பணம்அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே திருவிதாங்கூர் சென்றபின், பிரிட்டிஷ் நாணயக்கணக்குகளுக்கு ஒத்துவரும்படி, பிரிட்டிஷ் நாணயங்களின் பாணியில் அச்சிடப்பட்ட பிற்கால நாணயங்கள் புத்தன்பணம் [புதியபணம்] எனப்படுகின்றன.
கலியன்பணம் பொன்னாலும் வெள்ளியாலும் ஆனது. மணியின் சேகரிப்பில் இருந்த கலியன்பணங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அக்காலத்தில் ஒரு பொன்பணம் மிக உயர்குடி,உயர்நிலையில் இருந்தவர்களால்தான் கண்களால் பார்க்கப்பட்டிருக்கும். மற்றவர்கள் செம்புநாணயங்களையே கண்டிருப்பார்கள். அதற்கும் கீழே ஏராளமானவர்கள் வாழ்நாள் முழுக்க ஒரு நாணயத்தைக்கூட பார்த்திருக்காமலிருக்க வாய்ப்புண்டு.
திருவிதாங்கூரின் மலைப்பகுதிகளில் நூறாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலும் பண்டமாற்றுமுறையே நிலவியது. என் நினைவிலேயே நாற்பதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட அந்திச்சந்தைகளில் ஒருவகை பண்டமாற்று உண்டு. கருப்பட்டி, தேங்காய் கொடுத்து மீன் மற்றும் பொருட்களை வாங்கிக்கொள்வார்கள்.
கலியன் பணம்நாணயங்கள் மிகச்சிறியவை. பொன்நாணயங்கள் பெண்கள் நெற்றியில் வைக்கும் சிறிய பொட்டு அளவுக்குத்தான் இருந்தன. ஒரு கிராம் அல்லது இரண்டு கிராம் எடைகொண்டவை. வெள்ளிப்பணம் கட்டைவிரலால் மறைத்துவிடுமளவுக்குச் சிறியது. என் அப்பாவின் பெரியப்பா திருவிதாங்கூர் அரசுப் பணியில் இருந்தார். அந்த வெள்ளிப்பணத்தில் ஒன்று ஒருமாதத்துக்கான ஊதியம்.
திரைப்பணம் என்னும் ஒரு அரிய வகை உள்ளது. குறைவாக அடித்திருக்கிறார்கள், ஒவ்வொன்றிலும் ஒரு சிற்ப அடையாளம் உள்ளது. நந்தி, அன்னம், மகரம் [முதலை] என கேரள ஆலயங்களிலுள்ள சிற்பங்கள் ஒருபக்கம் செதுக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் பெரும்பாலும் சங்கு. திரைப்பணத்தின் எல்லா வகைமைகளையும் சேகரிப்பது என்பது ஒரு பெரிய சவால். மணி அதை பெரும்பாலும் எட்டிவிட்டிருக்கிறார்.
திரப்பணம்திருவிதாங்கூர் நாணயங்களின் மிகப்பெரிய கலைப்பொருள் சந்தையைப் பற்றி மணி சொன்னார். பார்பரா மியர்ஸ் என்னும் லண்டன் பெண்மணி அதில் ஒரு முன்னோடி. அரியநாணயங்களைச் சேர்த்திருப்பவர். கேரளம் முழுக்க பலர் நாணயச்சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். நாகர்கோயிலிலேயே பத்துபேருக்குமேல் இருப்பதாகச் சொன்னார். நாணயச் சந்தையில் அரிய நாணயங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு ஏலம்போகின்றன.
மணி அவரிடமிருக்கும் பெரும்பாலான நாணயங்களை ஏலத்தில்தான் எடுத்திருக்கிறார். இப்போது பெரும்பாலும் ஆன்லைன் ஏலம்தான். நாணயங்களை சரியான தருணத்தில் வாங்கி அவற்றை அடையாளம் கண்டு சரியான தருணத்தில் நல்ல விலைக்கு விற்றுவிடுவதை தொழிலாகவே பலர் செய்கிறார்கள் என்றார்.
சமீபகால இந்திய நாணயங்கள் வரை பல தொகுதிகளாக வைத்திருக்கிறார். எழுபதுகளில் வந்த பித்தளையான இருபதுபைசா நாணயத்தை பார்த்தேன். அன்று அதை உருக்கி மோதிரம்செய்துகொள்வார்கள். இருபதுபைசா நாணயம் இரண்டு ரூபாய்க்கு விற்றது.
நாணயங்கள் வழியாக ஒரு சிறு காலப்பயணம் செய்து வந்தேன். பழைய கால நாணயங்களில் அரசர்களின் முகங்கள் இல்லை. தெய்வ உருவங்கள்தான் பெரும்பாலும். பிரிட்டிஷ் அரசு இங்கே வந்தபின்னர்தான் அரசர்களின் உருவங்கள். ஐந்தாம் ஜார்ஜ், விக்டோரியா அரசி. சுதந்திர இந்தியாவில் காந்தி அதிகமாக. நேரு அதன்பின். இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது நாணயங்களில் இந்திரா காந்தியின் முகமே அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டேன். ஆச்சரியமாக இருந்தது. அதன்பின் எவரும் அவ்வாறு செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
நாணயங்களில் இன்று தெய்வங்கள் முற்றாகவே இல்லாமலாகி விட்டிருக்கின்றன. அது எதையோ குறிப்பதாக நினைத்துக் கொண்டேன்.
விளையாட்டு, கடிதம்
எங்கள் ஒலிம்பிக்ஸ்
அன்புள்ள ஜெ
எங்கள் ஒலிம்பிக்ஸ் பதிவை வாசித்தேன். நீங்கள் சொன்னது போலத் தான், உங்களுடைய வாசகர்கள் யாரும் அப்படி கேட்கமாட்டார்கள். இங்கு உள்ள ஒரு பொது வழக்கமே மற்றவர்கள் பேசுவதைத் தான் எழுத்தாளனும் பேச வேண்டும், போற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது.
சமூகக்கொண்டாட்டம் என்பதே இல்லாமலாகிவிட்டது. வாழ்க்கை என்பது வேலை மற்றும் வீட்டில் தனிமையில் ஓய்வு மட்டுமே என்பதாக மாறிவிட்டது. என் நினைவில் முன்பெல்லாம் ஆண்டில் நூறுநாட்கள் ஏதேனும் சமூகக் கொண்டாட்டங்கள் இருக்கும். அத்தனை பேரும் கொண்டாடும் விளையாட்டுக்கள், விழாக்கள். வறுமையிலும் அது மகிழ்ச்சியான வாழ்க்கையோ என்று இன்று தோன்றுகிறது.
மேலுள்ள வரிகள் முற்றிலும் உண்மையானவை. சில வருடங்களாக என் மனதில் அருவமாக இருந்தவற்றிற்கு திட்டவட்டமாக உருவம் கொடுத்துவிட்டீர்கள். எங்கள் தலைமுறைக்கு பெரும்பாலும் வறுமை இருப்பதில்லை. ஆனால் நான் இந்த ஊருக்கு ஐந்தாறு வயதில் வருகையில் இருந்த விழா கொண்டாட்டம் இன்று முற்றாக இல்லை. சில ஆண்டுகளாகவே விழா நாட்களின் போது உணரும் வெறுமை ஒன்றுண்டு. முன்பெல்லாம் அந்நாட்களில் எல்லோரும் கூடி விளையாடி கொண்டாடுவோம். இப்போது விழாக்களுக்கு உண்டான அனைத்தும் நடந்தாலும் சாரமிழந்த சடங்குகளாகவே அவை உள்ளன. அந்த உயிர்த்துடிப்பு எங்கே போயிற்று என ஏங்கி எண்ணி வியக்கும் நாட்கள் உண்டு.
இந்த ஊரில் கபடியும் கில்லி தாண்டும் விளையாட்டு கொண்டாட்டங்களாக இருந்ததை அப்பாவின் மூலம் அறிவேன். கில்லி தாண்டு கிரிக்கெட் அலையில் அடித்து செல்லப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி இருக்கும் என்ற சித்திரத்தை என் அப்பாவைப் போல முந்தைய தலைமுறை ஆட்களிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கபடி ஒப்புக்கு ஊருக்கு ஒரு மூலையில் உள்ளது.
விளையாட்டுகளை பார்த்து ரசிப்பதற்கு பெருங்கூட்டம் உள்ளதென்றால் அதை விட பப்ஜி போன்ற மெய்நிகர் விளையாட்டுகளுக்கு பிள்ளைகளிடையே பெருமளவு வரவேற்புள்ளது. நமக்குள் உறையும் கொலை விலங்கிற்கு அதுவே மிகப் பிடித்தமானதாக உள்ளது. என்ன இருந்தாலும் இவை எதுவுமே அந்த சமூக கொண்டாட்டங்கள் கொடுக்கும் நிறைவளிப்பதில்லை. இந்த விளையாட்டுகள் மிக எளிதில் வெறுமையை கொண்டு வருகின்றன. சிலர் அதிலிருந்து விலகி வேறொன்றில் விழுந்து அங்கிருந்து இன்னொன்றுக்கு தாவியபடியே உள்ளனர். மீள முடியாதவர்கள் அங்கேயே இருந்து பித்து பிடிக்கிறார்கள்.
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள ஜெ
விளையாட்டு பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். எனக்கும் இந்த எண்ணம் வந்தது. விளையாட்டு என்பதில் ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. கடுமையான பயிற்சி, உடலையும் வாழ்க்கையையும் அதற்காகவே தயாரித்துக் கொள்வது, இதெல்லாம் விளையாட்டு அல்ல. போட்டி மட்டுமே. போட்டி இல்லாத விளையாட்டில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கமுடியும். அந்தவகையான விளையாட்டுக்கள்தான் முன்பு இருந்தன. விளையாட்டில் தேசியவெறி, கார்ப்பரேட் முதலீடு, ஊடக வியாபாரம் எல்லாம் கலந்ததும் அது விளையாட்டு அல்லாமலாகிவிடுகிறது.
உண்மைதான், அவையும் தேவையாக இருக்கலாம். குறியீட்டு ரீதியாக அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கலாம். ஆனால் விளையாட்டு என்பது வேறு. பார்வையாளராக இருப்பது விளையாடுவது அல்ல. விளையாடுவது என்பது சகமனிதர்களிடம் நாம் கூடிக்களிப்பது. அதன் வழியாக சமூகவாழ்க்கையைக் கொண்டாடுவது.
எம்.பாஸ்கர்
***
இலட்சியவாதம்,கருத்தியல் -கடிதம்
வணக்கம்,
நேற்றிரவு நான் அழுதேன். கடைசியாக எப்போது என்று நினைவில்லை அந்த அளவுக்கு அழுகை மறந்திருந்தேன். நேற்றிரவின் அழுகைக்கு காரணம் நீங்கள். உங்கள் உரை – கல்லெழும் விதை.
நானும் என் உயர் அதிகாரியும் அடிக்கடி சில விவாதங்களில் ஈடுபடுவதுண்டு. பெரும்பாலும் வரலாறு மட்டுமே. அவரிடம் தமிழகம் குறித்த மிக தெளிவான வரலாற்று சித்திரம் உண்டு. மரபுகள் பற்றி நல்ல மதிப்பீட்டையும் கொண்டவர். ஒரு விவாதத்தின் போது 1800 களுக்கு முன்னாள் இயற்றப்பட்ட நூல்களுக்கென நான் வளர்ந்த கிராமத்தில் ஒரு சிறிய அளவிலான ஒரு நூலக சேவை தொடங்குவேன் என்று அவரிடம் சொன்னேன்.
அது உண்மையாக என் மனதின் ஆழத்தில் தோன்றிய எண்ணம். அவர் “காலச்சக்கரத்தின் ஆணைப்படியே எதுவும் நடக்கும்” என சிரித்தார். நான் அதை அப்போது எள்ளல் நினைத்தேன்.
சில தினங்களுக்கு முன்பு, எனது கிராமத்தில் ஒரு இயக்கத்தின் அலுவலகம் திறக்க வேண்டும் என்றும், அதில் ஆள்சேர்த்து ஒரு தத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்று எனது மனதில் தோன்றியது. நேற்று உங்கள் கல்லெழும் விதை உரை கேட்டேன். நான் அதிர்ந்து போனேன்.
இலக்கியத்தில் மட்டுமே இயங்க விரும்பினேன். அப்படிப்பட்ட நான் எவ்வாறு இந்த இடத்தை வந்து அடைந்தேன் என்று எனக்கு உரைத்தது. IDEALIST ஆக வாழ எண்ணம் கொண்ட வெகுளியான கிராமத்து இளைஞன் எவ்வாறு ideologist ஆக மாறினேன் அல்லது அதற்கான விளிம்பில் இப்போது உள்ளேன்? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. உங்கள் உரையின் முடிவில் நான் என்னை நினைத்து வெட்கினேன். உனது நேர்மறையான லட்சியவாதம் எப்படி உன்னை விட்டு விலகியது? என என்னை நானே கேட்டுக் கொண்டு இருந்தேன்.
இரவு மணி 1. பதில் தெரியாமல் அழுதுவிட்டேன். நீங்கள் வேறு அத்தகையோருக்கு சிகிச்சை கூட பலன் தராது என்று சொன்னீர்கள். நான் அவ்ளோதான் என நினைத்து தூக்கம் வரவில்லை. பின்னர் உங்கள் மற்றொரு கட்டுரையில் கேரளம் தன் மரபை மிகச்சரியான நேரத்தில் மீட்டது என சொன்னது நினைவில் வந்தது. உங்கள் உரையின் நுகர்வு என் மீட்பின் தருணம் என நான் சொல்லிக்கொண்டேன். கல்லை விதை உடைக்கும் தருணம். அப்படி ஒன்றும் நேரம் ஆகிவிடவில்லை என தோன்றியது. மணி 2.
மீள்வது சரி. ஆனால் ஆசானே, நான் எப்படி இந்த இடத்தை வந்து அடைத்து இருப்பேன்? என்னளவில் நான் Facebook – 4 ஆண்டுகளுக்கு முன்பே நான் கணக்கை அழித்து விட்டேன். ஒரு வேளை செய்திகள் மூலமாக இருக்கலாமோ? எது எப்படியோ உங்களிடம் கேட்டால் ஒரு தெளிவு பிறக்கும் என எழுதிவிட்டேன்.
குழப்பத்தினை முழுமையாக சொல்லிவிட்டேன் என் நினைக்கிறேன்.
அன்புடன்,
எல்
***
அன்புள்ள எல்
நீங்கள் எழுதியிருப்பது ஒரு குழப்பமான கடிதம். நீங்கள் தன்மீட்சி வாசிக்கலாமென நினைக்கிறேன். அதில் இந்தவகையான குழப்பங்களுக்கு தெளிவான விளக்கங்கள் உள்ளன
நான் ஐடியாலஜி என்று சொன்னது ஒருங்கிணைவுள்ள, திட்டவட்டமான விடைகளும் செயல்திட்டங்களும் கொண்ட, அதிகார இலக்குள்ள சிந்தனைகளை. அவை அந்தச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நம்மை ஆக்குகின்றன. நாம் அதிகாரம் செய்ய ஆரம்பிக்கிறோம். நம் மீது அதிகாரம் செயல்படுகிறது.
ஐடியலிசம் என நான் சொன்னது ஒருவன் தன் இயல்பாகவே வெளிப்படுத்தும் இலட்சியங்களையும் அதையொட்டிய செயல்பாடுகளையும். அதில் அதிகார இலக்கு இல்லை. அறுதி விடைகளும் இல்லை.
கருத்தியல் நம்பிக்கையாளன் மூர்க்கமான ஒற்றைப்படைப் பார்வை கொண்டவன். ஆகவே பூசலிடுபவன். இலட்சியவாதி அர்ப்பணிப்பு மட்டும் கொண்டவன். அளிப்பவன்.
ஜெ
***
யோகம்- ஒரு கடிதம்
கீதை : முரண்பாடுகள்
வணக்கம் ஜெ,
“கீதை : முரண்பாடுகள்” (https://www.jeyamohan.in/501/) என்ற கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சந்தேகம்:
“யோகம்” என்ற சொல்லின் மூன்று வகையான அர்த்தங்களைப் பேசும் பகுதியில்,
அ. ஞானத்தேடலுக்காக உடலையும் மனதையும் பயிற்றுவிப்பதும் ஞானத்தை படிப்படியாக நம் சுயமாகவும் இருப்பாகவும் மாற்றிக்கொள்ளுதலும் (அதுவே ஆதல்) யோகம் என்று கூறப்படுகிறது. ‘யோகம் என்பது மனச்செயல் தடுத்தல்’ (யோக: சித்தவிருத்தி நிரோத என்று முதல் சூத்திரத்திலேயே பதஞ்சலி அதை வரையறை செய்கிறார்.
ஆ. ஆறு தரிசனங்களில் ஒன்று
இ.யோக மீமாம்சை நோக்கு – முரண்படும் இரு போக்குகளை இணைத்து அதன் மூல உருவாகும் ஒரு நோக்கு அது
இதில் “இரண்டாவது அர்த்த தளம்தான் தரிசனம் சார்ந்தது. மூன்றாவது அர்த்த தளம்தான் தியானப் பயிற்சி சார்ந்தது.” என்று வருகிறது.
பதஞ்சலி யோகம் சொல்லும் முதல் அர்த்தம் தியானம் சார்ந்ததுதான் இல்லையா? மூன்றாவது அர்த்த தளத்தை அறிதல் அணுகுமுறை எனப் புரிந்துகொள்வது சரியா?
சுபா
***
அன்புள்ள சுபா
ஆம், நீங்கள் புரிந்துகொண்டது சரி. யோகம் என்ற சொல் முதல் அர்த்தத்தில் பதஞ்சலி சொல்லும் தியானம், அகப்பயிற்சி சார்ந்தது. இரண்டாவது அர்த்தத்தில் அது ஒரு பிரபஞ்சதரிசனம், ஆறு தரிசனங்களில் ஒன்று. மூன்றாவது அர்த்தத்தில் தொன்மையான முரணியக்கப் பார்வை
ஜெ
***
இ.பாவுக்கு விருது
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்காக அளிக்கப்படும் வாழ்நாள் அங்கீகாரங்களில் ஒன்று இது.
இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்த்துக்கள்
September 19, 2021
செப்டெம்பரின் இசை
கம் செப்டெம்பர் படம் எம்.எஸ் மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோரால் பலமுறை பார்க்கப்பட்ட பெருமை கொண்டது. ஜீனா லோலாபிரிகிடா என்னும் அழகிக்காக. பரவசத்துடன் எம்.எஸ் சொன்னார். “ஆட்டுக்குட்டி மாதிரி துள்ளிட்டு இருப்பா”. அந்தக் காலத்தில் வந்துகொண்டிருந்த வழக்கமான போர்ப்படங்களில் இருந்து மாறுபட்டது. ரொமாண்டிக் காமடி. அதற்கு முன் அவர்களை கொள்ளை கொள்ள ரோமன் ஹாலிடே என்னும் படம் வந்திருந்தது. ஆட்ரி ஹெப்பர்ன் என்னும் அழகியோடு.
கம் செப்டெம்பர் திருவனந்தபுரத்தில் ஒரு மாதம் ஓடியபடம். அடுத்தடுத்த ஆண்டுகளில் வந்து மீண்டும் மீண்டும் ஓடியது. “அதிலே நமக்கு இங்க பழக்கமே இல்லாத ஒரு உலகம் இருந்தது. நமக்கு இங்க எல்லா அகவாழ்க்கையும் இருட்டிலேதான். கற்பனையிலேதான். அதிலே ரொமான்ஸோட ஒரு கொண்டாட்டம் இருந்தது” என்றார் சுந்தர ராமசாமி. “அதிலே ஒரு டியூன் உண்டு. அற்புதமான டியூன் அது. படம் போடுறதுக்கு முன்னாடி அதை ஸ்பீக்கர்லே போடுவான். அப்பவே அந்த மூட் உண்டாயிரும்”
நான் கம் செப்டெம்பரை 1985 செப்டம்பரில் மங்களூரில் பார்த்தேன். பரவசமாக சுந்தர ராமசாமியை அழைத்து “அற்புதமான டியூன் சார். ஜீனா லோலாபிரிகிடா பழசாயிட்டாங்க. டியூன் அப்டியே பிறந்து வந்தது மாதிரி இருக்கு” என்றேன். சுந்தர ராமசாமி சிரிக்கும் ஒலி தொலைபேசியில் அற்புதமாக ஒலிக்கும்.
பாபி டாரின்கம் செப்டெம்பரின் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜே. சால்ட்டர் [Hans J. Salter] ஆனால் அதன் தலைப்பிசைக்கு இசையமைத்தவர் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான பாபி டாரின். புகழுடன் இருக்கையிலேயே தன் முப்பத்தேழாவது வயதில் இதயநோயால் பாபி டாரின் மறைந்தார்.
கம் செப்டெம்பரின் இசைத்துணுக்கை கேட்காதவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இலங்கை வானொலி உட்பட சில வானொலிகளில் இடைவெளியை நிரப்பும் இசையாக அது ஒலித்திருக்கிறது. அதன் நூற்றுக்கணக்கான திரிபுகளும் மருவுகளும் விளம்பரங்களில் இசைத்துணுக்குகளாக ஒலித்திருக்கின்றன. பாபி நிறைய பாடியிருக்கலாம். ஆனால் இந்த ஒரு இசைக்கீற்றை எதிர்காலத்திற்காக விட்டுச் சென்றார். ஒரு கவிதை மட்டும் எழுதி இலக்கியத்தில் வாழ்பவர்களைப்போல. இது அவருடைய கையொப்பம்.
இந்த செப்டெம்பர் தொடக்கத்தில் சிங்கப்பூர் நண்பர் சித்ரா ரமேஷ் இந்த தீம் மீயூசிக்கை வாட்ஸப் வழியாக அனுப்பியிருந்தார். குளிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று முதல் பனித்துளி உடலில் விழும் அனுபவத்தைப் பெறுவது போலிருந்தது. அன்று முழுக்க மயக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன். நடனத்திற்கு உகந்த மெட்டு. இரண்டு மென்மையான அசைவுகள் ஓரு விரைவான அசைவு என எவரும் ஆடிவிடலாம். நெடுங்காலம் மும்பை டிஸ்கொதேக்களில் இதுதான் ஓடியது என்று திரைநண்பர் சொன்னார்.
பலவகையிலும் இங்கே இதை நகலெடுத்திருக்கிறார்கள். நான் படத்திற்காக ஜெயலலிதா ஆடும் ‘வந்தால் என்னோடு’ நல்ல நகல். கொஞ்சம் முன்னால் சென்றிருக்கிறார்கள். அத்துடன் தொடர்பே இல்லாமல் ஒரு முகப்பு இசை கொடுத்திருக்கிறார்கள். அது ஒரு பேய்ப்பாடலின் தன்மையுடன் இருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் இந்தியக் கற்பனை விளையாடியிருக்கிறது. அதன் இந்தி வடிவம் ராஜா என்ற படத்தில். அது மிகசுமாரான நகல்தான்.
இந்த இசையுடன் இணைந்து எழும் பல நினைவுகள். கம் செப்டெம்பர்தான் அன்பே வா என்ற பெயரில் தமிழில் தழுவி எடுக்கப்பட்டது. இந்தியிலும் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் கம் செப்டெம்பர் எடுக்கப்பட்டுள்ளது. கம் செப்டெம்பரில் நடித்த ராக் ஹட்ஸன் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்த முதல் பிரபலம். எண்பதுகளில் அவரே அதை அறிவித்துக்கொண்டார். அவர் ஓரினச்சேர்க்கையாளர்.
இணையம் முழுக்க கம்செப்டெம்பரின் வெவ்வேறு வடிவங்களை வெவ்வேறு இசைக்கலைஞர்கள் வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசித்து வலையேற்றியிருக்கிறார்கள். எத்தனைமுறை கேட்டாலும் அந்த குமிழியிடும் பகுதி ஓர் உற்சாகத்தை உருவாக்கத்தான் செய்கிறது
காந்தள்
அன்புள்ள ஜெ,
வணக்கம். நலந்தானே?
பி. எல். சாமி அவர்கள் எழுதியுள்ள சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், புள்ளின விளக்கம் முதலிய நூல்களின் தகவல்களை கவிதை வாசிப்புக்காக எந்த அளவுக்கு நம்பலாம்? உதாரணமாக காந்தள் பற்றிக் கூறுகையில், வேலிகளில் படரும் காந்தள் கொடியினை பிற தாவரங்களிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அரிது ஆனாலும் கார்காலத்தில் பூக்கும்போது தனித்துத் தெரியும் என்கிறார். (பேராசிரியர் கு. சீனிவாசன் இத்தகவலை சங்க இலக்கியத்தில் தாவரங்கள் என்னும் நூலில் குறிப்பிடவில்லை.) சாமி சொல்வதிலிருந்து பூக்கும்வரை வெளித்தெரியாதது, மழைக்காலத்தில் பூக்கும் நெருப்பு, மழைக்காலத்தில் பூக்கும் குருதிமலர் என்றெல்லாம் காந்தள் என்னும் படிமத்தை வாசித்தால் மிகைவாசிப்பாகிவிடுமா?
சங்க இலக்கியத்தின் இயற்கை சார்ந்த முழுமையான புரிதலுக்காக, ஒரு கவிதை வாசகனாக யார்யாரை வாசிக்கலாம்?
அன்புடன்
யஸோ
பி.எல்.சாமிஅன்புள்ள யசோ,
பி.எல்சாமி இந்திய அரசுப்பணியில் இருந்த அதிகாரி. தாவரவியலாளர் அல்ல. அவர் சங்க இலக்கியம் மற்றும் பழந்தமிழ்ப்பண்பாடு பற்றி எழுதிய நூல்கள் ஐம்பதாண்டு பழமை கொண்டவை. அவர் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வில் முன்னோடி. அவருக்கு அந்த இடம் உண்டு.
ஆனால் அவருடைய ஆய்வில் தொல்லியல், இயற்கை சார்ந்த பிழைகளும் போதாமைகளும் உண்டு. அவருடைய ஆய்வுகள் முக்கியமானவை, ஆனால் இன்று அறுதியாக எடுத்துக்கொள்ளவேண்டியவை அல்ல.
பேராசிரியர் கு.சீனிவாசன் தாவரவியலாளர். ஆகவே அவருடைய ஆய்வுகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். அப்போதுகூட இன்றைய தாவரவியலாளர் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும்.
சங்க இலக்கியம் நூற்றாண்டுகள் தொன்மையான ஒரு பண்பாட்டுவெளி. அதை ’முழுமையாக’ ஒருவரைக்கொண்டே கற்க முடியாது. ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு அறிஞர்களையே நாடவேண்டும். அவர்களில் வெற்று ஆராய்ச்சியாளர் பலர் உள்ளனர். பண்பாட்டுப்பெருமையை போலியாக நிறுவும்பொருட்டு, அரசியல்நோக்குடன் வாசிப்பவர்கள். அவர்களை தவிர்க்கவேண்டும். அறிஞர்களை மட்டுமே கருத்தில்கொள்ளவேண்டும். இன்னும்கூட ஆய்வுகள் போதுமான அளவு நிகழவில்லை.
காந்தள் மலர் பற்றிய உங்கள் வாசிப்புக்கு பி.எல்.சாமியின் கருத்து அவசியமானது அல்ல. காந்தள் புதர்களோடு புதராக படர்ந்திருந்தாலும் எளிதாக கண்டடையத்தக்கதே. ஆனால் நீங்கள் சொல்வதுபோல மழைக்காலத்தில் எழும் நெருப்பு என்பது ஒரு நல்ல வாசிப்பே. அதை குருதிப்பூ என்றுதான் கபிலர் சொல்கிறார்
ஜெ
பிரான்ஸிஸ் கிருபா, அஞ்சலி – லாஓசி
பிரான்சிஸ் கிருபா… இலக்கிய அறிமுகம் கிடைக்கும் முன்பே அறிமுகமான கவிஞர். இணைய வெளியில் அதிகம் பகிரப்படும் வரிகள் இவருடையவை. அத்தகைய அறிமுகம் இருந்தும், அவரது கவிதைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. நேற்று அவர் காலமான செய்தி அறிந்தவுடன், மிக நெருக்கமான ஒருவரை இழந்த தவிப்பு… அவரது வரிகளின் மூலம் அவருடன் சிறிது பொழுதை கழிக்க வேண்டும் என மனம் விரும்பியது. அவரது தொகுதிகள் எதுவும் கிண்டிலில் கிடைக்கவில்லை. எனவே இணையத்தில் தேடி வாசிக்க தொடங்கினேன்… கிட்டத்தட்ட 2009ல் இருந்து அவரது வாசகர்கள் பகிர்ந்திருந்த வரிகளுடன் நேற்றைய இரவு விடிந்தது.
அவரது கவியுலகம் இணைந்து முயங்கும் மூன்று வேவ்வேறு உலகங்களால் ஆனது…
“கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது…
ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது!”
என அவளிடம் இறையும் போதும் சரி,
“உன்னை உன்னிடம் மட்டுமே கேட்பேன் கடவுளிடம் கூட அல்ல” என நவிலும் போதும் சரி பெண்ணை, காதலை சுற்றி நகர்கிறது அவரது உலகம். நெருப்பைத் தத்தெடுத்து வளர்க்கும் அவள், அங்கு பிரகாசமான இருளாகவும் இருக்கிறாள்.
“உறக்கத்தில் உதிரும்
சிறு புன்னகை
உயிரைப் பிழிகிறதே
ஏன் வாழ்வே ?”
என்பதில் அவரது வாழ்வாக இருக்கும் அவளிடம் நெருங்க அவளின் அனுமதி கிடைக்கும் என தெரிந்தும் அவரது அனுமதி அவரை அனுமதிக்க மறுக்கிறது.
காதலின் உச்ச தீவிரத்தின் உலகிலிருந்து பிரிந்து வாழ்வின் வலிகளால் மட்டுமே நிறைந்த ஒரு உலகை அடைகிறார்.
அங்கு, பிரியத் தெரியாத ஐந்து விரல்களையுடைய கரத்தை பிரியத்தோடு நீட்டும்போது பற்றிக் குலுக்கிவிட்டுப் பிரியும் மனிதர்களிடையே, ஆயிரம் சுத்திகளால் சூழப்பட்ட ஆணியை ரட்சிக்க வேண்டுகிறார். “கண்ணீர் துளிகளும்……..விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை வேறு சட்டென்று நிறுத்த வேண்டிய நிலையிலும் வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களை பகிர்கிறார்.
தனித் தனியே செல்லவும் தெரியாமல்
பின்னிப் பிணையவும் முடியாமல்
தொட்டும் விலகியும்
தொடர்ந்து செல்கின்றன
தபால்காரனின்
சைக்கிள் தடங்கள்.
வலிகளை பகிர்ந்தாலும், வாழ வழி சொல்லாமலும் இல்லை அவர்….
ஒரு வாழைப்பழத்தைப் போல
ஒரு நாளின் தோலை உரிக்க
உன்னால் கூடுமெனில்
நீ வாழத் தோதானதுதான்
நீ வாழும் உலகம்.
“இறுதியாக அவனை அவனே கைவிட்டான். அதற்குப் பிறகுதான் நிகழ்ந்தது அற்புதம்” , “சலிப்பையும் ரசிக்க முயலும்போது தொடங்கி விடுகிறது சகிக்கமுடியா வியப்பு.” போன்ற வரிகளில், தத்துவார்த்தமாகவும் வாழ்வை அணுகுகிறார். ஆனால், அவை தத்துவமா, அல்லது நிதர்சனத்தின் கசப்பா என்ற கேள்வி எழாமல் இல்லை.
வாழ்வின் வலியிலும், தனிமையிலும் பாறையை உண்டு பசியாறுகிறார், அவர் ஓரிரவு விரித்த பாயில் மீதமிருந்த இடத்தில் படுத்து ஒடுங்குகிறது குளிர்காலம். ஆம், முதல் இரண்டு உலகங்களின் பகுதியாகவும், தன்னளவில் தனி உலகமாகவும் அவரது கவிதைகளில் எழுகிறது இயற்கை. அங்கு பறவைகளும், மரங்களும், கடலும், மர நாற்காலியும்… ஏன் காபி கோப்பையிலிருந்து எழும் ஆவி கூட சிந்திக்கின்றன.. சிந்தித்ததை அவருடன் பகிர்கின்றன.
முத்தமிடும் பறவைக்கு மீனை பிடித்துக் கொடுக்கும் கடலின், கிழவனை வைத்து சூதாடும் பூவரச மரங்களின், தன்னையும் செல்லமாக தோளில் ஏந்தி வருடினால் என்ன என கேட்கும் மர நாற்காலியின் குரலாய் அவரது கவிதைகள் வெளிப்படுகின்றன. காபி கோப்பையில் இருந்து எழுந்து நடனமிடும் ஆவி ஒரு நேர்கோடு கிழிக்க படும் பாட்டை பேசுகின்றன.
பறவைகளை பலர் நினைத்து பார்க்கிறார்கள் பறவைகளை யாருமே பறந்து பார்ப்பதில்லை என கவலை படுபவரின் கவிதைகளை அவரது வார்த்தைகளை கொண்டே வர்ணிக்கலாம் என தோன்றுகிறது.
“என் கவிதைகளில் மொழியின் சிலிர்ப்பு இருப்பதாக நம்புகிறேன்” என ஒரு பேட்டியில் கூறுபவர், கவிமொழியில்,
“இருந்தும் இங்கே ஏன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்றால் உயிர்த்தெழும்
இந்த சொற்களுக்காகத் தான்
அதன் பொய்யான
மெய் சிலிர்ப்புக்காகத்தான்”
என கூறுகிறார்.
ஆம், அந்த சிலிர்ப்பு தான் அவரது கவிதைகளின் அடிநாதம்!
சிறகுகளைச் சுமந்தபடி
தரையில் நடப்பவனை
உங்களுக்குத் தெரியும்
என்ன செய்வதென்று
எனக்குத்தான் தெரியவில்லை
உறக்கத்தில் அழுபவனை.
சுக்கிரி வாசகர் குழுமம் நூறாம் சந்திப்பு- கடிதம்
சுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு
அன்புள்ள ஜெ ,
நலம்தானே? சென்ற சனிக்கிழமை (11.09.2021) அன்று புனைவுக் களியாட்டின் “வரம்” சிறுகதை கலந்துரையாடலோடு சுக்கிரி இலக்கியக் குழுமத்தின் நூறாவது கலந்துரையாடல் நிகழ்வு நிறைவுற்றது. கடந்த பிப்ரவரி 2 அன்று தளத்தில் வெளியான கப்பல்காரர் ஷாகுல் ஹமீது அண்ணாவின் கடிதத்திலிருந்துதான் சுக்கிரி குழுமத்தைப் பற்றி அறிந்தேன். வீடடங்கு காலத்தில் Zoomஇல் இயங்கும் இலக்கியக் கூடுகை என்பது ஒரு நல்ல வசதியான பொழுதுபோக்காக அமையும் என்று நினைத்துதான் அந்த வாரம் நடைபெற்ற “தங்கப்புத்தகம்” சிறுகதைக் கலந்துரையாடலில் இணைந்தேன். அதுதான் என் முதல் இலக்கியக் கலந்துரையாடல் அனுபவம். அந்த அனுபவமே மிகப்பெரிய அதிர்ச்சிதான்.
இலக்கியக் கலந்துரையாடல் என்றால் நான்கு பேர் நான்கு விதமாக கதையின் மையக்கருத்தைப் பற்றி ஏதாவது பேசுவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். அதற்குமேல் என்னிடம் கல்லூரியில் பொட்டலம் கட்டிக்கொடுத்த ரோலண்ட் பார்த்தின் “Death of the author” வேறு கொஞ்சம் மிச்சம் இருந்தது (உண்மையாகவே சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தில் ரோலண்ட் பார்த், ஃபூக்கோ எல்லாம் இருக்கிறார்கள்). அதை கதைக்குள் பொருத்தி ஒரு சுழற்று சுழற்றிவிட்டால் போதும், அத்தனை பேரும் அசந்துவிடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளே சென்றால் அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு என்னைவிட நன்றாகவே ரோலண்ட் பார்த்ஸையும் உங்களையும் தெரிந்திருந்தது. அவர்கள் முன்வைத்த ரசனைகளும் வாசிப்புகளும் என் வாசிப்பைவிட பல மடங்கு நுட்பமானதாகவும் கதையில் நான் அறியாத பல தளங்களை வெளிக்கொணர்வதாகவும் இருந்தது. (அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஒரு முக்கியமான விஷயமே எனக்கு தெரியவந்தது. ரோலண்ட் பார்த்தே இலக்கிய விமர்சகர்தானாம். அவருடைய கோட்பாட்டை கடன்வாங்கித்தான் சட்டத்தில் பயன்படுத்துகிறார்களாம். இதைத்தானே என்னிடம் முதலில் சொல்லியிருக்கவேண்டும்?)
அன்று என் திட்டம் படுதோல்வி அடைந்திருந்தாலும், அன்றைய கலந்துரையாடல் எனக்கு பல திறப்புகளை அளித்தது. ஒரு படைப்பு எத்தனை தளங்களை கொண்டிருக்கமுடியும் என்பதையும், அவற்றை அறிய ஒரு வாசகன் எத்தனை நுட்பமான ரசனையும் உழைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் எனக்கு உணர்த்தியது. அன்று முதல் தொடர்ந்து முப்பது வாரங்களாக சுக்கிரியின் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டிருக்கிறேன்.
இந்த முப்பது வாரங்களில் எத்தனையோ முறை, இந்த கதையில் அப்படி என்ன வாசிப்பை நிகழ்த்திவிடமுடியும்? என்ற ஆர்வத்துடன் சென்று, இதை இப்படியெல்லாம் வாசிக்க முடியுமா? என்ற ஆச்சரியத்துடன் மீண்டிருக்கிறேன். “அருகே கடல்” கலந்துரையாடலில் பழனி ஜோதி sir முன்வைத்த வாசிப்பை கலந்துரையாடலின் முடிவுவரை முழுவதுமாக விளங்கிக்கொள்ள இயலாமல் தவித்து, மறுநாள் விழித்தபொழுது “இன்று என் அறையில் நிறைவது, கடலைப் புணரும், காற்றுணரும் தடையின்மைகள்” என்ற கவிஞர் மனுஷ்யபுத்திரன் சாரின் கவிதையாய் அது துளங்கி வந்தது ஒரு அசாத்தியமான அனுபவம்.
இப்படி இந்த கலந்துரையாடல்களில் ஒவ்வொரு வாரமும் எவ்வளவோ கற்றுக்கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் அங்கு யாரும் எதையும் கற்பிப்பதில்லை. எந்த சித்தாந்தமோ, கோட்பாடோ, வாசிப்புமுறையோ முன்னிறுத்தப்படுவதில்லை. அங்கு நிகழ்த்தப்படுவது மிக எளிமையான ஒன்றுதான். எவருடைய தனி அகங்காரமும் முன்னிருத்தப்படாமல் இலக்கியம் சார்ந்த உரையாடல் நிகழ்வதற்கான ஒரு நட்பார்ந்த சூழல் அங்கு உருவாக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் மூத்த வாசகர்களும், என்னைப்போன்ற ஒரு சாதாரண தொடக்கநிலை வாசகனும் தொடர்ந்து உரையாடும் சூழல் அங்கு அமைக்கப்படுகிறது. ஒரு படைப்பு சார்ந்த என் வாசிப்பையும், என்னைவிட குறைந்தது நான்கு மடங்கு அதிக வாசிப்பு கொண்ட மூத்த வாசகர்களின் வாசிப்பையும் நான் ஒப்பிட்டுக்கொள்ள அங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அப்படி என் வாசிப்பில் நிகழ்ந்த பல பிழைகளையும், நான் செல்ல வேண்டிய தொலைவையும் உணர்ந்த தருணங்கள் ஏராளம்.
இந்த முப்பது உரையாடல்களில் சில பயங்கரமான அனுபவங்களும் உண்டு. சிறகு, கணக்கு, மணிபல்லவம் கதைகளின் கலந்துரையாடல்கள், “தீவிர” இலக்கிய வாசிப்பு என்ற அடைமொழி எப்படி உருவாகி வந்தது என்று உணர்த்தியவை. அத்தனை தீவிரமாக ஒரு இலக்கியப் படைப்பையும் அது சார்ந்த வாசிப்புகளையும் விவாதிக்கமுடியும் என்பதை இலக்கிய விவாதங்களைப் பற்றிய உங்கள் எழுத்துக்களின் வழியே அறிந்திருந்தாலும், நிஜத்தில் அவற்றில் கலந்துகொள்வது கொஞ்சம் திகிலூட்டும் அனுபவமாகவே இருந்தது. ஆனால் அத்தகைய திகிலூட்டும் விவாதங்களின் முடிவிலும் எந்த அகங்காரமும் இன்றி அனைவரும் புன்னகையோடு விடைபெற்றுச் செல்லும் ஒரு நட்பார்ந்த சூழல் சுக்கிரியில் சாத்தியப்பட்டிருக்கிறது. எந்த விதமான இருக்கமுமற்ற ஒரு நட்பார்ந்த சூழலில் அதிதீவிர விவாதங்களும் நகைச்சுவை உணர்வோடு முன்னெடுக்கப்படுவதாலும், மூத்த வாசகர்களால் தொடர்ந்துமட்டுறுத்தப்படுவதாலும் அவை எக்காரணத்தைக்கொண்டும் படைப்பைவிட்டு விலகுவதேயில்லை.
இந்த குழுமம் உங்கள் கருத்துக்களால் வடிவமைக்கப்பட்டது என்றே சொல்லலாம். இதன் கருத்துக்களும், செயல்பாடுகளும் உங்கள் நண்பர்களாளும் வாசகர்களாலும் வடிவமைக்கப்படுபவை. இலக்கிய உரையாடல்கள் சார்ந்த உங்கள் கருத்துக்களால் வழிநடத்தப்படுபவை. சுக்கிரியின்தொடக்கத்திலும், செயல்பாட்டிலும், தீவிரத்திலும், உங்கள் கருத்துக்கள்தான் உள்ளன.
நான் மீண்டும் ரோலண்ட் பார்த்ஸிடமே செல்கிறேன். பார்த்ஸ் Author என்னும் நிலை ஒரு தேவையற்ற கட்டமைப்பு என்றார். அதனால் அவர் authorஇன் அதிகாரத்தை நீக்கி அவன் வெறும் scripter மட்டும்தான் என்று வாதிட்டார். அதாவது ஒரு மொழியில் நிகழும் அத்தனை வாசிப்புகளுக்கான சாத்தியங்களும் சமமாகவே பார்க்கப்பட வேண்டும் என்றார். அந்த கருத்து அதனளவில் உலகில் பலராலும் ஏற்க்கப்பட்டும் மறுக்கப்பட்டுமிருந்தாலும், நான் அதை அரைகுறையாக படித்தது என்னவோ இரண்டு வருடங்களுக்கு முன்தான். அந்த அரைகுறை புரிதலை வைத்துக்கொண்டு, நான் எல்லா வாசிப்புகளும் சமம்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனவே என்னளவில் நான் வாசிப்பில் அடைவதே போதுமானது. அதற்குமேல் எந்த வாசிப்பும் தேவையில்லை. என் வாசிப்பைப் பற்றி விவாதிப்பது அதன் தனித்துவத்தையும் கவித்துவத்தையும் கெடுத்துவிடும் என்று ஆழமாக நம்பியிருந்தேன்
நான் அந்த கருத்தை கைவிட காரணமாக அமைந்தது சுக்கிரி இலக்கிய குழுமம். ஒரு மொழியில் பல்வேறு படைப்புகளை ஆழக்கற்ற ஒரு மூத்த வாசகர் நிகழ்த்தும் வாசிப்புக்கும் ஒரு தொடக்கநிலை வாசகன் நிகழ்த்தும் வாசிப்புக்கும் வாசிப்புத் தரத்தின் அடிப்படையிலேயே பெரும் வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசத்தை உணர்ந்து உழைப்பதே அந்த நிலையை நோக்கி என் வாசிப்பையும் ரசனையையும் வளர்த்துக்கொள்ள தேவையான அடிப்படை தகுதி என்று சுக்கிரியின் கலந்துரையாடல்கள் உணர்த்தின. இலக்கியம் சார்ந்த தரமான கலந்துரையாடல்களும், சுக்கிரி போன்ற ஒரு குழுமமும் ஒரு வாசகனுக்கு அளிக்கும் மிக முக்கியமான கொடையாக நான் கருதுவது இந்த புரிதலைத்தான்.
அன்புடன்
விக்னேஷ் ஹரிஹரன்
தொடர்புக்கு .
சந்தோஷ்-99653-15137
ஆபரணம், கடிதங்கள்-3
ஆபரணம், பா.திருச்செந்தாழை
அன்புள்ள ஜெ,
ஆபரணம் ஒரு நல்ல கதை. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று அவ்வப்போது குரல்கள் உருவாகும். அப்படி ஒரு குரல் எண்பதுகளில் வந்தபோது இமையம், சோ.தர்மன், ஜோ டி குரூஸ் போன்று ஒரு அணி வந்து யதார்த்தவாதம் அதுவரை தொடாத இடங்களை தொட்டுக்காட்டியது. அதேபோலத்தான் இப்போதும். தமிழ்ச்சிறுகதையில் இன்றைக்கு ஆண்பெண் உறவு, மிடில்கிளாஸ் சிக்கல்களை எழுதும்போக்கு உருவாகிவிட்டது. கொஞ்சம் பெர்வெர்ஷன். பெர்வெர்ஷனை எழுதுவதற்காக செயற்கையாக அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுவதுபோல ஒரு பாவனை.
நேர்மையான எழுத்தின் வலிமையை நாம் திருச்செந்தாழையின் எழுத்திலே காண்கிறோம். இதுவரைச் சொல்லப்படாத உலகம். பேரமும் சூதும் வாழும் ஓர் உலகம். அங்கே உள்ள அறமும் கருணையும். அந்த உலகத்தை மிகையாக்காமல் நம்பகமாகச் சொல்கிறார். அத்தனை ஆண்டுகளுக்குப்பின் குழந்தையைப் பார்க்கச் செல்லும்போதுகூட மனமறிந்து ஒரு நல்ல தின்பண்டம் துணி வாங்கப்போகாத மரியத்தின் உள்ளம் அழகாக வந்திருக்கிறது. இன்னும் எழுத எவ்வளவோ இருக்கிறது நம்மைச்சுற்றி.
எஸ். பிரபாகர்
***
அன்புள்ள ஜெ,
பா.திருச்செந்தாழையின் ஆபரணம் ஒரு அற்புதமான கதை. மெய்யான ஆபரணம் எது என்னும் இடத்தை தொட்டுச்செல்கிறது. இதே கதைக்கருவுடன் சுஜாதா ஒரு கதை எழுதி வாசித்த ஞாபகம். ஆனால் அதிலுள்ள கூர்மை செயற்கையாக இருந்தது. இதிலுள்ள சிதைவும் மழுங்கலும் இந்த உலகுக்கு உரிய யதார்த்தமாக தோன்றியது
ஆர்.கே
***
அன்புள்ள ஜெயமோகன்,
“ஆபரணம்” கதை ஒரு நுட்பமான வாழ்க்கைத் தருணத்தை மொழியால் அள்ளி முன்வைக்கிறது. கதையின் துவக்கத்திலும் மத்தியிலும் சித்திரை மேல் குவிக்கப்படும் பரிதாப உணர்ச்சி கதை முடிவில் மரியத்தின் மீது திருப்பப்படுகிறது. நிராயுதபாணிகளின் மீது கொலை ஆயுதத்தை எறிந்து அவர்களை நிர்மூலமாக்கும் ரௌத்திரம் கொண்ட மரியத்துக்கு இறுதிவரை நிம்மதியே ஏற்படவில்லை. சித்திரைக்குள்ளிருக்கும் ஏதோ ஒன்று மரியத்தைத் தொடர்ந்து வென்றபடியே உள்ளது. அதை மரியம் மட்டுமே தெளிவாக உணர்ந்து அமைதியிழந்தபடி இருக்கிறாள். சித்திரைக்கும் அது தெரியும் என்றாலும் அதைத் தனது இயல்பான கள்ளமின்மையால் கவனிக்காமல் இருக்கிறாள்.
ஆனாலும் அவர்கள் இருவரை மீறிய ஏதோவொன்று அவர்களின் உண்மையான இடத்தை இருவருக்குள்ளும் காட்டிச்சென்று விடுகிறது. கதையின் துவக்கத்தில் புகைமூட்டமாகத் தென்படும் சூழலும் மனிதர்களும் மிக விரைவிலேயே வாசக மனதுக்கு அணுக்கமாகிவிடுகின்றன. மிகக் கனமான கதை. பெரிய பாம்பொன்று இயல்பாக தன் புற்றுக்குள் சென்று மறைவது போல கதை நடந்து முடிந்துவிடுகிறது.
திருச்செந்தாழை பயன்படுத்தும் சொற்கள் உவமைகள் யாவும் புதுமையாக இருக்கின்றன. புதுத் துணியை முகர்ந்து பார்ப்பதைப் போலிருக்கிறது ஒவ்வொரு உவமையும்.
“அழுக்கான பழைய மெழுகுவர்த்தியைப் போல சித்திரை வியர்வைக்குள் நின்றிருந்தாள்”
“பழைய சதுரங்கப் பலகையொன்றில், அழுகைகளோடும் கோபங்களோடும் பிரிந்து சென்ற யானைகளும் குதிரைகளும் ஆண்டுகளின் களைப்போடு மீண்டும் எதிர்கொள்கின்ற சித்திரத்தைப் போல கிடந்தது வீடு”
“ நீரடிக் கூழாங்கல்லாக அவர் அறிந்தே இருந்தார்”
“திலகரின் கடை முழுக்க முழுக்க நன்னீரால் குளிப்பாட்டிய சிறிய தாவரம் போல எளிய மகிழ்ச்சிகளில் நிறைந்திருந்தது”
“திசையெங்கும் சூன்யமாகி கண்பார்வை இழந்தவனைப் போல அவன் உடைந்தமர்ந்திருந்தான்”
“வாளின் கூர்நுனியால் வெட்டிட முடியாத நுரைக்குமிழி போல அந்த மகிழ்வு மிதந்தேறி அவளுக்கு அகப்படாமல் விலகிச்சென்றது”
இப்படிப்பட்ட புதிய உவமைகளும் சொல்லாட்சிகளுமே வாசகனைக் கதைக்குள் மேலும் மேலும் ஈடுபட வைக்கிறது.
மிக்க அன்புடன்
கணேஷ்பாபு
சிங்கப்பூர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

