நாணயங்களுடன் ஓர் அந்தி

நாகர்கோயில் கோட்டாறில் இருசக்கரவண்டிகள் பழுதுபார்க்கும் நிலையம் வைத்திருப்பவர் மணி. அவர் நாகர்கோயிலின் முக்கியமான நாணயச்சேகரிப்பாளர் என்று ஷாகுல் ஹமீது சொன்னார். பழைய திருவிதாங்கூர் நாணயங்களில் ஒன்றிரண்டு தவிர பெரும்பாலானவை அவரிடம் உள்ளன என்றார். அவற்றை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது.

நேற்று [19-09-2021] அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறுமணிக்கு அவரைப் பார்க்க வருவதாக சொல்லியிருந்தோம். ஷாகுல் அவருடைய பைக்கில் வந்திருந்தார். இன்னொரு இளம்நண்பர் பார்க்க வந்தமையால் தாமதமாக ஆறரை மணிக்கு நானும் ஷாகுலும் கோட்டாறு செட்டியாத்தெருவிலுள்ள அவர் வீட்டுக்குச் சென்றோம். [செட்டியாத் தெருவில் சாதிப்பெயர் நீக்கம் செய்து யாத் தெரு என அதை ஏன் மாற்றம் செய்யவில்லை இன்னும்?]

மணி சாலையில் வந்து நின்று அழைத்துச்சென்றார். அவருடைய மனைவி ஆசிரியை. அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் அந்தமான் போர்ட்பிளேயரில் என்று சொன்னார். திருமணத்துக்குப் பின்னர்தான் தமிழகம் வந்திருக்கிறார். இரு பெண்கள். ஆச்சரியமாக மணியின் மனைவிக்கும் அவருடைய நாணயச் சேகரிப்பில் ஆர்வம் உண்டு. நாணயங்களின் தகவல்களை எல்லாம் அவர்தான் எழுதியிருக்கிறார்.

பார்பரா மியர்ஸ்
https://soas.academia.edu/BarbaraMears

மாடிக்குச் சென்று அவருடைய சேகரிப்புகளை பார்த்தேன். பெரிய ஆல்பங்களாக நாணயங்களை தொகுத்து காலக்குறிப்பு, உள்ளடக்கக் குறிப்புகளுடன் வைத்திருந்தார். எனக்கு நாணயவியலில் தேர்ச்சி எல்லாம் இல்லை. என்னுடையது பொதுவான வரலாற்று ஆர்வம். அந்நாணயங்கள் உருவாக்கும் உணர்வுகளும், அவை பின்னர் என் நினைவில் படிமங்களாக எழுவதும்தான் எனக்கு முக்கியம்.

பொதுவாக திருவிதாங்கூர் வரலாற்றில் நாணயங்கள் பற்றிய பேச்சில் ‘கலியன்பணம்’ ‘புத்தன்பணம்’ என்னும் இரு நாணயங்களைப் பற்றிய பேச்சு உண்டு. கலியன்பணம் அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா திருவிதாங்கூரை சுதந்திர நாடாக ஆக்கி, திருவனந்தபுரத்தை தலைநகரமாக அறிவித்தபின் வெளியிடப்பட்டது.

கலியுகத்தின் முதல்நாள் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி ஆலயம் நிறுவப்பட்டது என்று நம்பிக்கை. கலியுகத்தின் 950 ஆண்டு அனந்தபத்மநாபசாமி சிலை மறுபடியும் நிறுவப்பட்டது. இந்தக் கணக்கு மலையாள ஆண்டு அல்லது கொல்லவர்ஷம் எனப்படுகிறது. ஆங்கிலக் கணக்குப்படி அது 1774. அந்த ஆண்டுக்கணக்கை கலிவர்ஷம் என்றும் சொல்வதுண்டு. அப்போது அச்சிடப்பட்ட நாணயங்கள் கலியன்பணம் என்கிறார்கள்.

புத்தன் பணம்

அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே திருவிதாங்கூர் சென்றபின், பிரிட்டிஷ் நாணயக்கணக்குகளுக்கு ஒத்துவரும்படி, பிரிட்டிஷ் நாணயங்களின் பாணியில் அச்சிடப்பட்ட பிற்கால நாணயங்கள் புத்தன்பணம் [புதியபணம்] எனப்படுகின்றன.

கலியன்பணம் பொன்னாலும் வெள்ளியாலும் ஆனது. மணியின் சேகரிப்பில் இருந்த கலியன்பணங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அக்காலத்தில் ஒரு பொன்பணம் மிக உயர்குடி,உயர்நிலையில் இருந்தவர்களால்தான் கண்களால் பார்க்கப்பட்டிருக்கும். மற்றவர்கள் செம்புநாணயங்களையே கண்டிருப்பார்கள். அதற்கும் கீழே ஏராளமானவர்கள் வாழ்நாள் முழுக்க ஒரு நாணயத்தைக்கூட பார்த்திருக்காமலிருக்க வாய்ப்புண்டு.

திருவிதாங்கூரின் மலைப்பகுதிகளில் நூறாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலும் பண்டமாற்றுமுறையே நிலவியது. என் நினைவிலேயே நாற்பதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட அந்திச்சந்தைகளில் ஒருவகை பண்டமாற்று உண்டு. கருப்பட்டி, தேங்காய் கொடுத்து மீன் மற்றும் பொருட்களை வாங்கிக்கொள்வார்கள்.

கலியன் பணம்

நாணயங்கள் மிகச்சிறியவை. பொன்நாணயங்கள் பெண்கள் நெற்றியில் வைக்கும் சிறிய பொட்டு அளவுக்குத்தான் இருந்தன. ஒரு கிராம் அல்லது இரண்டு கிராம் எடைகொண்டவை. வெள்ளிப்பணம் கட்டைவிரலால் மறைத்துவிடுமளவுக்குச் சிறியது. என் அப்பாவின் பெரியப்பா திருவிதாங்கூர் அரசுப் பணியில் இருந்தார். அந்த வெள்ளிப்பணத்தில் ஒன்று ஒருமாதத்துக்கான ஊதியம்.

திரைப்பணம் என்னும் ஒரு அரிய வகை உள்ளது. குறைவாக அடித்திருக்கிறார்கள், ஒவ்வொன்றிலும் ஒரு சிற்ப அடையாளம் உள்ளது. நந்தி, அன்னம், மகரம் [முதலை] என கேரள ஆலயங்களிலுள்ள சிற்பங்கள் ஒருபக்கம் செதுக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் பெரும்பாலும் சங்கு. திரைப்பணத்தின் எல்லா வகைமைகளையும் சேகரிப்பது என்பது ஒரு பெரிய சவால். மணி அதை பெரும்பாலும் எட்டிவிட்டிருக்கிறார்.

திரப்பணம்

திருவிதாங்கூர் நாணயங்களின் மிகப்பெரிய கலைப்பொருள் சந்தையைப் பற்றி மணி சொன்னார். பார்பரா மியர்ஸ் என்னும் லண்டன் பெண்மணி அதில் ஒரு முன்னோடி. அரியநாணயங்களைச் சேர்த்திருப்பவர். கேரளம் முழுக்க பலர் நாணயச்சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். நாகர்கோயிலிலேயே பத்துபேருக்குமேல் இருப்பதாகச் சொன்னார். நாணயச் சந்தையில் அரிய நாணயங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு ஏலம்போகின்றன.

மணி அவரிடமிருக்கும் பெரும்பாலான நாணயங்களை ஏலத்தில்தான் எடுத்திருக்கிறார். இப்போது பெரும்பாலும் ஆன்லைன் ஏலம்தான். நாணயங்களை சரியான தருணத்தில் வாங்கி அவற்றை அடையாளம் கண்டு சரியான தருணத்தில் நல்ல விலைக்கு விற்றுவிடுவதை தொழிலாகவே பலர் செய்கிறார்கள் என்றார்.

சமீபகால இந்திய நாணயங்கள் வரை பல தொகுதிகளாக வைத்திருக்கிறார். எழுபதுகளில் வந்த பித்தளையான இருபதுபைசா நாணயத்தை பார்த்தேன். அன்று அதை உருக்கி மோதிரம்செய்துகொள்வார்கள். இருபதுபைசா நாணயம் இரண்டு ரூபாய்க்கு விற்றது.

நாணயங்கள் வழியாக ஒரு சிறு காலப்பயணம் செய்து வந்தேன். பழைய கால நாணயங்களில் அரசர்களின் முகங்கள் இல்லை. தெய்வ உருவங்கள்தான் பெரும்பாலும். பிரிட்டிஷ் அரசு இங்கே வந்தபின்னர்தான் அரசர்களின் உருவங்கள். ஐந்தாம் ஜார்ஜ், விக்டோரியா அரசி. சுதந்திர இந்தியாவில் காந்தி அதிகமாக. நேரு அதன்பின். இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தபோது நாணயங்களில் இந்திரா காந்தியின் முகமே அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டேன். ஆச்சரியமாக இருந்தது. அதன்பின் எவரும் அவ்வாறு செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

நாணயங்களில் இன்று தெய்வங்கள் முற்றாகவே இல்லாமலாகி விட்டிருக்கின்றன. அது எதையோ குறிப்பதாக நினைத்துக் கொண்டேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.