Jeyamohan's Blog, page 916
September 15, 2021
இலக்கிய நிதிவசூல்கள்
இன்று என் நட்புக்குழுமத்தில் விவாதித்துக்கொண்டிருந்தபோது இயல்பாக ஒரு பேசுபொருள் எழுந்துவந்தது. பண உதவி மற்றும் நிதி கேட்பவர்கள் பற்றி. உடனே ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். எனக்கு இங்கே என்ன நிகழ்கிறது என ஒரு பொதுச் சித்திரம் உண்டு. ஆனால் இன்று கேட்டவை திகைப்பூட்டின.
இலக்கியவாதிகளில் சாரு நிவேதிதா பற்றித்தான் பொதுவாக பணம் கேட்கிறார் என்னும் குற்றச்சாட்டு உண்டு. அவரை ஏளனம் செய்பவர்களும் ஏராளம். ஆனால் அவர் கேட்பது வெளிப்படையாக. அவருடைய வாசகர்கள், அவர்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் அனுப்புகிறார்கள். அவர் சார்ந்த எதுவுமே ரகசியம் அல்ல. அப்பட்டமாக முச்சந்தியில் நின்றிருக்கும் மனிதர். அவர் நிதிகேட்பது முற்றிலும் நேர்மையான ஒரு செயல்.
ஆனால் பல எழுத்தாளர்கள் இங்கே வாசகர்கள் என அறிமுகம் ஆகிறவர்களை மின்னஞ்சல் வழியாக தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு நிதி உதவிகள் கேட்கிறார்கள். கடன் கேட்டுப் பெறுபவர்கள் அதை திருப்பி அளிப்பதில்லை. அளிக்கமுடியாத நிலை இருந்தால் தாங்கள் இலக்கியத்துக்காகவே வாழ்வதாகவும், தவம் செய்வதாகவும், கடும் துயரில் இருப்பதாகவும் சொல்லி ஆழமான குற்றவுணர்வை உருவாக்குகிறார்கள். இளம் வாசகர்கள் அந்த குற்றவுணர்வால் வசைகளை வாங்கிக்கொண்டு பணம் அனுப்புகிறார்கள். கொஞ்சம் பழகியவர்களுக்கு என்ன ஏது என்று தெரியும்.
சில சிற்றிதழாளர்கள் முகநூலில் உள்டப்பிக்கு வந்து இதழ் நடத்தவும், விழாக்கள் நடத்தவும் வேறுபலவற்றுக்குமென நிதி கோருகிறார்கள். கிட்டத்தட்ட உணர்ச்சிகர மிரட்டல். கொடுக்காவிட்டால் வசைபாடல்.
பெரும்பாலும் என் இணையதளத்தில் வாசகர்களாக அறிமுகமாகிறவர்கள்தான் இதற்கு இரையாகிறார்கள். நான் இதை அஞ்சியே மின்னஞ்சல் அளிப்பதில்லை. ஆனால் பெயர்களை முகநூலில் அல்லது இன்ஸ்டகிராமில் தேடி கண்டடைந்து தொடர்புகொள்கிறார்கள். வெளிநாட்டு வாசகர்கள் என்றால் இன்னும் தீவிரமான வேட்டை நடக்கிறது. வெளிநாட்டு வாசகர்களுக்கு அவர்கள் அங்கே வசதியாக இருப்பதனால் இங்கே இலக்கியத்துக்கு ஏதும் செய்வதில்லை என்னும் குற்றவுணர்ச்சி இருக்கிறது. இவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இவ்வாறு நிதி கோருபவர்கள் எத்தனை பேரிடம் கேட்கிறார்கள், எங்கே எவ்வளவு பெற்றுக்கொள்கிறார்கள் என எதுவுமே நமக்குத் தெரியாது. அவர்கள் அந்நிதியை சரியாகச் செலவழிக்கிறார்களா என்று அறிய வழியே கிடையாது. உண்மையில் இங்கே வறுமையிலிருக்கும் பல முக்கியமான படைப்பாளிகளுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. இந்த நிதி முழுக்க இணையவெளியில் வசூல்வேட்டையாடும் போலிகளால் கைப்பற்றப்படுகிறது.
பலர் புலம்பியபோது ஒன்று தோன்றியது. உண்மையில் பிழை நிதி அளிப்பவரிடம்தான். சரியான மனிதருக்கு, தேவையான இடத்துக்கு நிதியை அளிக்கவேண்டியது கொடுப்பவரின் கடமை. அவ்வாறு தேடி கண்டடையச் சோம்பல்பட்டு ஒன்றுக்கு நான்குமுறை கேட்பவர், உணர்ச்சிகர மிரட்டல் விடுப்பவர், கடன் என்று கேட்பவருக்கு பணத்தை அளிப்பது அளிப்பவரின் அறியாமையையும் அலட்சியத்தையுமே காட்டுகிறது. முக்கியமான பல நிதிவசூல்களுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்ப யோசிப்பவர் ஒருவர் தன்னிடம் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு புகழ்ந்து, கெஞ்சி, மிரட்டி கேட்டால் பெருந்தொகையை அள்ளிக்கொடுக்கிறார் என்றால் அவரை எப்படி எடுத்துக்கொள்வது?
என்னுடைய வாசகர்கள் பலர் தங்கள் அனுபவத்தைச் சொல்லிவிட்டமையால் நான் இதை பொதுவெளியில் வைக்கிறேன்.
அ.ஓர் எழுத்தாளருக்கு நிதியுதவி அளிப்பதென்றால் அவரை நன்கறிந்து, அவர்மேல் உள்ள மதிப்பால் அளியுங்கள். அவருடைய தகுதியை, தேவையை விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். திரும்பத்திரும்பக் கேட்டதனால் கொடுத்தேன், பரிதாபமாகக் கேட்டதனால் கொடுத்தேன் என்றீர்கள் என்றால் அது நீங்கள் செய்யும் பெரும்பிழை. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் பொதுவாக அப்படி எல்லாரிடமும் போய் கேட்பதில்லை.
ஆ.எந்த அமைப்புக்காவது நிதி அளிக்கவேண்டும் என்றால் அதற்கு முதல் நிபந்தனை அந்த அமைப்பு அந்த நிதிவசூலை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்பது. எவ்வளவு வசூலாயிற்று, அதை என்ன செய்தோம் என்றும் அறிவிக்க வேண்டும். முழுக் கணக்கையும் பொதுவாக அறிவிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அதனால் சிக்கல் வரலாம். ஆனால் நிதியளித்தவர் தனிப்பட்ட முறையில் கேட்டால் கணக்குகளை அனுப்பியாக வேண்டும். அவர்கள் செய்யும் செயல் முக்கியமானதாக, வெளிப்படையானதாக இருக்கவேண்டும்.
இ.நிதிவசூல் ஒருபோதும் தனிப்பட்டமுறையில் செய்யப்படலாகாது. தனிப்பட்டமுறையில் நிதி கோரப்படுகிறது என்றால் அது மோசடியே. அவ்வாறு கோருபவருக்கும் உங்களுக்கும் நெருக்கமும் நம்பிக்கையும் இருந்தால் அது உங்கள் தனிவிவகாரம்.
ஈ. இங்கே இலக்கியத் தியாகிகள், இலக்கியக் களவீரர்கள், இலக்கியத் தலைமறைவுப் போராளிகள் என ஒரு வேஷம் திடீரென்று மதிப்பு பெற ஆரம்பித்திருக்கிறது. அப்படி எந்தத் தோற்றம் உங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதன் உண்மையான மதிப்பு என்ன, சம்பந்தப்பட்டவரின் பங்களிப்பென்ன, இடமென்ன என்று விசாரித்து மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். அது உங்களால் இயலாதென்றால் பேசாமலிருங்கள்.
ஈ.நிதி அளிப்பது ஓர் இலக்கியச் செயல்பாடு. ஒரு பொதுச்செயல்பாடு. அதை முடிந்தால் முடிந்த அளவுக்குச் செய்யலாம். அது நட்புணர்வுடன் இயல்பாக இருக்கட்டும். முடியாவிட்டால் குற்றவுணர்ச்சி அடையவேண்டியதில்லை.
கடைசியாக, என் நண்பர் அல்லது தெரிந்தவர் என்ற அடையாளத்துடன் வருபவரோ அல்லது என் இணையதளத்தில் பெயரைத் தேடி உங்களை வந்தடையும் ஒருவரோ நிதி கோரி, நீங்களும் அதை அளித்தால் அதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. எனக்காக அதை அளித்தோம் என்று சொல்ல வேண்டியதில்லை.
வெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம். மே 8, 2021 ஆரம்பித்த வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் பணி ஐந்து மாதங்களாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாங்கள் குறிப்பிட்ட அதே வாக்கியம்தான்.- அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் தொடர்பு எண் ஒலித்துக்கொண்டே உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு அமெரிக்க மாநிலத்திலிருந்து, உலகின் ஏதாவது வேறு ஒரு நகரத்திலிருந்து நண்பர்கள் அழைத்து, திரையிடலை ஒருங்கமைப்பதற்கான தேவைகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் கேட்டு அறிந்தவண்ணம் உள்ளனர். லண்டனில் திரையிட, வெண்முரசு வாசக நண்பர்கள் வாட்ஸப் குழுமம் ஆரம்பித்து, ஆலோசனைகளை பகிர்ந்துகொள்கிறார்கள். அக்டோபர் மாதத்தில் லண்டனில் ஆவணப்படத்தைப் பார்க்கலாம் என உங்கள் நாட்குறிப்பில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்
இந்த மாதம் சிகாகோ-வில் திரையிடலுக்கான ஏற்பாடு செய்துள்ள நண்பர்கள் இப்பெரும் மாநாகரிலிருந்து 200-240 மைல் (மூன்று / நான்கு மணி நேரப் பயணம்) தூரத்தில் வசிப்பவர்கள். அனைவரும் ஓர் இடத்தில் இணைந்து விழாவென கொண்டாடும்படி மத்தியமாக சிக்காகோவை தேர்ந்தெடுத்துள்ளனர்.
செப்டம்பர் 26, 2021 – ஞாயிற்றுக்கிழமை, 2:45 PM CST, சிகாகோ
Cinemark at Seven Bridges and IMAX
6500 IL-53, Woodridge, IL 60517
தொடர்புக்கு –
பாலா நாச்சிமுத்து, hibalu@gmail.com, Phone – 1-608-471-0190
ஜமீலா கணேசன், ishrajganesan@gmail.com, Phone – 1-309-533-0337
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
விக்ரமாதித்யன் பேட்டிகள்
யோசித்துப்பார்க்கையில், நான் எப்படி கவிஞன் ஆனேன் என்று எனக்கே இன்னமும் விளங்கவில்லை. தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது. அதே சமயம், திட்டமிட்டு வளர்த்துக்கொண்டது என்றும் கூற முடியாது. அடிநாள்களிலிருந்து அலசி ஆராய்ந்தால், ஏதாவது கிடைக்கும் என்று தோன்றுகிறது.
கவிதை கவிஞன் நான் – விக்ரமாதித்யன்
தல புராணங்களிலுள்ள புனைவுகள் பெரும் புலவர்களால் கட்டப்பட்டவை. அதனாலேயே அவை மாயம் கொண்டவையும்கூட. மாயம் கலை இலக்கியத்தில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு வசீகரமே உண்டாகிறது.
சக்தியை வணங்குவதே எண்ணம்- விக்ரமாதித்யன் பேட்டி
நிறைய மாயக்கவிதைகள் வேண்டும். முற்போக்காளர்கள், தமிழின உணர்வாளர்கள் இப்படி கவிதைக்கு சம்பந்தமில்லாதவர்களைக் கடந்து மாயக்கவிதைகள் தோன்றிவருகையில்தான் நவீனகவிதை நின்று நிலைக்கும், நீடித்து இருக்கும். மாயக்கவிதைகள் செய்வோர்தம் தமிழுக்கு நல்லது செய்வோர் ஆவார்கள்.
மாயக்கவிதை-விக்ரமாதித்யன்யெஸ்.பாலபாரதி

அண்ணா
பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அளிக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி உங்கள் தளத்தில் தேடினேன். என் தேடலுக்கு கிடைக்கவில்லை. இதை பற்றி உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கடிதம்.
யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது: ஸ்டாலின் வாழ்த்து
அன்புடன் பன்னீர் செல்வம் ஈஸ்வரன்அன்புள்ள பன்னீர்செல்வம்,
பயணத்தில் இருந்தேன். உங்கள் கடிதம் கண்டுதான் நானும் செய்தியை அறிந்தேன்.சென்ற 2010 முதல் கேந்த்ர சாகித்ய அக்காதமி பாலசாகித்யபுரஸ்கார் விருதுகளை அளித்துவருகிறது. குழந்தை இலக்கியத்திற்கான விருது இது. அந்த துறை இலக்கிய வாசகர்களின் கவனிப்புக்கு வெளியே இருக்கிறது. ஆகவே அந்த விருதுகளும் இங்கே கவனிக்கப்படுவதில்லை.
மா.கமலவேலன், ம.இலெ.தங்கப்பா, கொ.மா.கோதண்டம், ரேவதி, இரா.நடராஜன்,செல்ல கணபதி, குழ.கதிரேசன், வேலு சரவணன், கிருங்கை சேதுபதி, தேவி நாச்சியப்பன் ஆகியோருக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது.
நான் வாசித்தவரையில் ம.இலெ.தங்கப்பா ஓரு தமிழறிஞர் என முக்கியமானவர். மற்ற எவரையும் நான் பெரிதாக அறியவில்லை. யெஸ்.பாலபாரதி மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி சார்ந்து செயல்பாட்டாளராகவும் எழுத்தாளராகவும் பங்காற்றியிருக்கிறார் என்று தெரியும். மற்றபடி அவர் எழுதியவற்றை கவனித்ததில்லை. இந்த குழந்தையிலக்கிய விருதுகளின் தகுதி பற்றி அத்துறை சார்ந்தவர்களே சொல்லவேண்டும்.
யெஸ்.பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்.
ஜெ
புகழ், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சமீபத்தில் தளத்தில் வெளிவந்த சிறு கட்டுரை ஒரு புதிய புரிதலை உருவாக்குவதாக இருந்தது. புகழை விரும்பாதவர் என்பது இன்றைக்கு நமக்கு ஒரு பெரிய விழுமியமாகத் தெரிகிறது. ஆனால் நம் முன்னோர் தங்கள் முன்னோரின் புகழை நிலைநிறுத்த முயன்றுகொண்டே இருந்தவர்கள். அதைப்பற்றி எப்போதுமே பேசியவர்கள். எங்கள் வீட்டில்கூட குடும்பப்புகழ், முன்னோர் புகழ் இரண்டையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புகழை ஏன் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன். சலிப்புடன் அதைச் சொல்லியிருக்கிறேன்
ஆனால் இந்தக்குறிப்பு புகழ் என்பது வேறு பாப்புலரிட்டி என்பது வேறு என்று சொல்கிறது. வடமொழியிலும் கீர்த்தி யஸஸ் என்னும் சொற்கள் உள்ளன. அவை வேறுவேறானவை. அதைப்போலத்தான். நற்பெயர் என்பது வேறு நாலுபேருக்கு தெரிந்திருப்பது வேறு. நற்பெயர் புண்ணியம்போல ஈட்டப்படவேண்டிய ஒரு செல்வம் என்று தெரிகிறது. நன்றி
ஆ.சிவஞானம்
***
அன்புள்ள ஜெ
தோன்றிற் புகழொடு தோன்றுக என்றால் உயர்குடியில் தோன்றுக என்ற அர்த்தம் பல நூல்களில் உள்ளது. ஆனால் அது புகழுடைய குடும்பத்தில் பிறப்பதன் பேறு பற்றித்தான் சொல்கிறது. நம் முன்னோர் நமக்கு சேர்த்துவைக்கும் பெருஞ்செல்வம் புகழே என்று சொல்கிறது. அது செல்வம் என்பதனால் அதை சரியாக செலவழிப்பதும், அதை இழக்காமலிருப்பதும் நம் பொறுப்பும் ஆகிறது. நாம் நம் வழித்தோன்றல்களுக்குச் சேர்த்துவைக்கவேண்டியதும் புகழ்தான்.
ஆர்.மாணிக்கவாசகம்
September 14, 2021
இரு சொற்கள்
“(பிரிட்டிஷ்) ஆட்சி இங்கே மூன்றுவகையில் தலித் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியது. ஒன்று அது நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து ஆரம்பகட்ட முதலாளித்துவத்தை உருவாக்கியது”
தமிழில் நீங்களும் மற்றும் பலரும் பயன்படுத்தும் இரு சொற்களைப் பற்றிய குழப்பங்கள்…
முதலாளித்துவம் என்று இங்கு நீங்கள் குறிப்பது உண்மையில் தனிச்சொத்துரிமை (Private property) என்பதையே என்று கருதுகிறேன்.
முதலாளித்துவம் (Capitalism) என்பது வேறு – அதில் சொத்துரிமை முக்கியமான அம்சம் தான், ஆனால் அதை விட முக்கியமாக பணச்சக்தி குவிதல், முதலீடு, ரிஸ்க் என்று உள்ளன. சொல்லப்போனால் அதீதமான பெருமுதலாளித்துவமானது பரவலான தனிச்சொத்துரிமையையே அழித்துவிடும் (excessive concentration of capital is against broadbased private property rights) என்று ஒரு கருத்துத்தரப்பு உண்டு.
பிரிட்டிஷ் ஆட்சியில் முதல்முறையாக தலித்கள் நிலத்தை உரிமை கொள்ளத்தொடங்கினர். அந்த இயக்கம் இன்றுவரை தொடர்கிறது. ஆனாலும் இது முதலாளித்துவம் அல்ல, தனிச்சொத்துரிமை தான். பிரிட்டிஷ் அரசும் இந்திய அரசும் அவர்களை முதலீடு செய்து பணம் ஈட்டும் வணிகர்களாக கருதவில்லை. இந்த வேற்றுமையின் முக்கியத்தை புரிந்துகொண்டு சொற்களை தேர்ந்தெடுப்பது அவசியம் என நினைக்கிறேன்.
அதுபோலவே, இன்று தமிழ் அரசியல் சமூக உரையாடல்களில் ‘வலதுசாரி’ என்ற சொல் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ‘மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையாக இயற்கையிலேயே அமைந்தவை’ என்பதே வலதுசாரித்தனம். அதன் விளைவாக பேசப்படும் நிறவாதம், இனவாதம் எல்லாம் கூட வலதுசாரித்தனம் தான். அந்த ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல என்பது பொருளியல் வலதுசாரித்தனம்.
ஆனால் இன்று அதற்கு சற்றும் தொடர்பற்ற மதவாதம், பெரும்பான்மைவாதம் எல்லாம் வலதுசாரி என்ற சொல்லால் சுட்டப்படுகிறது. இது விவாதங்களை எளிய பைனரி நோக்கி செலுத்துகிறது, நுண்மைகளை கருத்தில் கொள்வதில்லை.
அன்புடன்
மது
***
அன்புள்ள மது
நாம் இலக்கியவிவாதத்தில் சொற்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். இலக்கியவிமர்சனம் தனக்கான அழகியல்கலைச்சொற்களை உருவாக்கிக் கொள்ளும், அதற்கான வரையறைகள் இருக்கும். உதாரணம், யதார்த்தவாதம் [ரியலிஸம்] நவீனத்துவம் [மாடர்னிசம்]
பிற கலைச்சொற்களை இலக்கியம் அறிவியல், வரலாறு, சமூகவியல், பொருளியல், அரசியல் உள்ளிட்ட பிறதுறைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்தந்த துறைகளில் அச்சொற்கள் எப்படி மிகக்கறாராக வரையறை செய்யப்படுகின்றனவோ அப்படி அச்சொற்களை எடுத்துக்கொள்வதில்லை. அந்தத துறைகளில் அச்சொற்களின் மேல் நிகழும் விவாதங்களையும் கருத்தில்கொள்வதில்லை. அச்சொற்கள் பொது விவாதத்தளத்திற்கு வந்தபின் பொதுவான அர்த்தத்தில்தான் அச்சொற்களை இலக்கியம் கையாள்கிறது
ஆகவே மொழியியலில் அல்லது மானுடவியலில் உள்ள ஒரு கலைச்சொல்லை இலக்கியத்தில் பார்த்ததுமே அதை அந்த அறிவுத்துறையின் விவாதங்களுடன் தொடர்புபடுத்திக்கொண்டு இலக்கியத்திற்குள் கொண்டுவரலாகாது. இலக்கியக் கலைச்சொற்களுக்கான அகராதியிலேயே இச்சொற்களுக்கு ஒரு நிலையான பொருள் அளிக்கப்பட்டுள்ளது. அதுவே இங்கே பொருள்கொள்ளப்படுகிறது
இலக்கியச் சொல்லாடலில் நிலப்பிரபுத்துவம் என்றால் என்ன? நிலத்தை அடிப்படை உற்பத்தி அலகாகக் கொண்டிருந்த பழைய காலகட்டம். நிலவுடைமையே சமூக அதிகாரத்தை தீர்மானித்தது. அனைவரும் வெவ்வேறு வகையில் நிலத்துடன் தொடர்புகொண்டு வாழ்ந்தனர். அதற்கான அறங்களும் விழுமியங்களும் வாழ்க்கைமுறைகளும் இருந்தன.
நிலம் அந்த இடத்தை இழந்து முதல் [காப்பிடல்] சமூக அதிகாரத்தை தீர்மானிக்கும் காலகட்டமே முதலாளித்துவம் எனப்படுகிறது. முதலாளித்துவம் அதற்கான விழுமியங்கள் கொண்டது. மனிதனை உழைப்பின் வழியாக மதிப்பிட்டது. ஒரேவகையான உழைப்பவனாகவும் நுகர்பவனாகவும் மனிதனை ஆக்கும்பொருட்டு அது பொதுக்கல்வி போன்றவற்றை உருவாக்கியது. செய்தித்தொடர்பு, போக்குவரத்து ஆகியவை உருவாயின. வணிகம் முதன்மைப்பட்டது. வணிகத்தின்பொருட்டு புதுநிலங்கள் கண்டடையப்பட்டன. உலகம் ஒற்றை வணிகப்பரப்பாக ஆகியது.
காலனியாதிக்கக் காலகட்டம் ஆரம்பகட்ட முதலாளித்துவம் என்றும் சென்ற நூறாண்டுகள் முதலாளித்துவத்தின் முதிர்வுக்காலகட்டம் என்றும் கருதப்படுகின்றன. பெருமுதல் உருவாகி வந்தது காலனியாதிக்கம் வழியாக. அந்த பெருமுதல் நாடு,நிலம் போன்ற பிடிமானங்களை இழந்து ஒரு உலகப்பொதுச் சக்தியாக ஆகியிருப்பது இன்றைய முதலாளித்துவ முதிர்வுக்காலகட்டத்தில்.
இலக்கியம் சமூகத்தின் சில பண்புக்கூறுகளைச் சுட்டிக்காட்ட நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் போன்ற கலைச்சொற்களைக் கையாள்கிறது. நிலப்பிரபுத்துவம் உறுதியான மாறாத அமைப்புக்களை உருவாக்கும். அவற்றை நிலைநிறுத்த அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய ஆசாரங்களை உருவாக்கும். நம்பிக்கைகளின்படி நிலைகொள்ளும்.ஆகவே வட்டாரத்தன்மை கொண்டிருக்கும்
முதலாளித்துவம் முதலீட்டைச் சார்ந்தது. உற்பத்தி வினியோகம் ஆகியவற்றைச் சார்ந்தது. ஆகவே அதன் நெறிகள் உற்பத்தி வணிகம் ஆகியவற்றை ஒட்டியவையாக அமையும்.
நீங்கள் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தனிச்சொத்துரிமை என்பது நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் இரண்டுக்கும் பொதுவானது. ஆதிப்பழங்குடிகளிலும் பொதுவுடைமை அமைப்பிலும் மட்டுமே அது இருக்காது.
தனிச்சொத்துரிமையில் இருந்து நிலவுடைமை உருவாகியது. நிலவுடைமை உருவாக்கிய நிதியில் இருந்து முதல் உருவாகியது. முதல் முதலாளித்துவமாக மாறியது
ஜெ
சின்னஞ்சிறிய ஒன்று – கடலூர் சீனு
வானுயர்ந்த கோபுரங்களை முதலில் கண்ட கணம் வியக்கும் சராசரி மனம், அடுத்த கணமே அதன் சரிவை கற்பனை செய்யும்.
எதில் வரும்? விஷ்ணுபுரத்திலா? அல்லது தாஸ்தாவெஸ்கி சொன்னதா? திடுக்கிடச் செய்யும் உண்மை. நேர் எதிர் நிலையும் சராசரி மானுட உள்ளத்தில் உண்டு என நினைக்கிறேன். ஹம்பி கலைவெளி, கொனார்க் பேராலயம் என சிதைவுகளை கண்ட போதெல்லாம் மனம் அவற்றின் முழுமையை கற்பனை செய்து தவித்தது.
பின்னர் தேடியபோது ஹம்பி கோபுரங்கள், கொனார்க் விமானம் எல்லாம் முழுதாக இருந்தால் எப்படி இருக்கும் என இணையத்தில் பல வரைகலை படங்கள் கண்டேன். அத்தனைக்குப் பிறகும் கொனார்க் கோயில் விமானத்தின் உண்மை உரு கற்பனை செய்ய இயலாத பிரம்மாண்டம் என்றே அகத்தில் நிறைந்து கிடக்கிறது.
கொனார்க்கில் கண்காட்சி அரங்கில், அந்தப் பேராலயம் சரிந்ததன் பின்னுள்ள வரலாறு, கதைகள் இவற்றை சித்தரித்துக் காட்டும் காணொளி ஒன்று கண்டேன். அதில் ஒரு கதை. வழக்கம் போல சிற்பிக்கும் அரசனுக்குமான மோதலை மையம் கொண்ட கதை. அந்தக் கோயிலை கட்டும் ராஜா அதற்கு சொன்ன கெடு தேதி நெருங்கி விட்டது. அந்தக் கோயில் பணியின் இறுதி நிலை என்பது, கோயில் விமானத்தின் உச்சியில் நிகழ்த்த வேண்டிய ‘பூட்டு’ எனும் நிலை. சரியாக பூட்டா விட்டால், கற்கள் அடுக்கிய விகிதத்தின் பாரம் தாளாமல் விமானம் சில ஆண்டுகளில் சரிந்து விடும்.
இதுவரை அந்த சிற்பி கட்டியிராத பிரம்மாண்டம். ஆகவே ‘இறுதிப் பூட்டு’ எனும் கணக்கு அவருக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்க, நாள் நெருங்க நெருங்க அரசனின் கோபத்துக்கு சக சிற்பிக்கள் அஞ்சத் துவங்க, தலைமைசிற்பியின் வாரிசான அவரது ஒரே மகன் தனக்கு அதை பூட்டும் கணக்கு தெரியும் அதை செய்து முடிக்கிறேன் என முன்வருகிறான். குறிப்பிட்ட நாளுக்குள் அதை செய்தும் காட்டுகிறான்.
கும்பாபிஷேக விழாவில் ராஜா சிற்பிகளை பரிசு மழையில் முழுக்காட்டுகிறான். எல்லோரும் மகிழ்ந்திருக்க, தலைமைசிற்பியின் தனது மகன் தனது கலை எனும் பெருமிதத்தில் இருக்கையில்தான் அரசன் இறக்குகிறான் இடியை. இத்தகு கலை மேன்மைக்கு இணையான ஒன்று இனி எழக் கூடாது. இது ஒன்று மட்டுமே இருக்க வேண்டும், அதன் பொருட்டு சிற்பிகள் அனைவரையும் தலை கொய்ய உத்தரவிடுகிறான். தலைமைசிற்பியின் மகன் மட்டும், விமானம் ஏறி அங்கிருந்து குதித்து சாக ராஜா வசம் உத்தரவு வாங்கி, விமானம் ஏறுகிறான். விமான உச்சியில் அவன் அமைத்த பூட்டில் ஒரு சின்னஞ்சிறு புள்ளியில் கால் கட்டை விரல் கொண்டு அழுத்துகிறான். எங்கோ ஒரு மெல்லிய விரிசல் ஒலி எழ, திருப்தியுடன் அங்கிருந்து விழுந்து சாகிறான். (விஷ்ணுபுரம் நாவலில் மகா சிற்பி ப்ரசேனரை, விஷ்ணுபுர கோயில் ராஜகோபுரத்துக்கு இதை செய்ய வைக்கவே சித்தன் முயலுவான்). அவன் அம்மா என் கண் முன்னால் என் மகன் விழுந்து உடல் சிதறி இறந்ததை நான் கண்டதைப் போல, உன் கண் முன்னால் இந்த கோயில் உடைந்து சிதறுவதை நீ பார்ப்பாய், என அரசனுக்கு சாபம் போட்டு விடுகிறாள். அவள் சபித்த கோயில்தான் இப்போது நாம் காணும் கொனார்க் இருக்கும் நிலை.
மொத்தக் கதையிலும் சுவாரஸ்யம் ‘ப்ரும்மாண்டத்தைக் கட்டிவைக்கும் சின்னஞ்சிறு புள்ளி’ எனும் வினோத எதிரிடை நிலை. இந்த எதிரிடை தன்மை எப்போதும் என்னுள்ளே ஒரு மூலையில் கிடந்து உறுத்தி, எதையோ கிளறிவிட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு துணை நிற்கும் வண்ணம் சமீபத்தில் இசையின் கவிதை ஒன்று கண்டேன்.
சின்னஞ்சிறியது.
நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று
ஏலத்திற்கு வந்தது.
பிரம்மாண்ட அரண்மனையின் விண்முட்டும் கோபுரம்
அதன் உச்சியில் ஒரு சிறுபுறா
வாங்கி வந்து
வரவேற்பறையில் மாட்டி வைத்தேன்.
ஒவ்வொரு நாளும்
அந்தப்புறா இருக்கிறதாவென
தவறாமல் பார்த்துக் கொள்வேன்
எனக்குத் தெரியும்
அது எழுந்து பறந்துவிட்டால்
அவ்வளவு பெரிய பிரம்மாண்டம்
சடசடவென சரிந்துவிடும்.
இசை.
கவிதை வாசித்து முடித்த கணமே, பிடி விட்டு சிறகெழுந்து பறக்கும் பறவையால் சரியும் பிரம்மாண்டம் ஒன்றின் சித்திரம் மனதில் விரிந்து விடுகிறது. அந்தப் புறா எழுந்து பறந்துவிடாதிருக்க கவி உள்ளம் கொள்ளும் தவிப்பும் அக் கணமே நம்மை வந்து தீண்டி விடுகிறது.
புறாவின் சிறகு போல அத்தனை மெல்லியது, அது விரிந்து பறந்து விட்டால், நியதி கொண்டு சுழலும் வலிய கோள்கள் யாவும் சிதறி ஓடி விடுமா? புறாவின் கால் விரல்கள் போல அத்தனை சிறியது, அதுதான் நமதிந்த பிரபஞ்ச பிரம்மாண்டத்தை சிதறிவிடாது பற்றிப் பிடித்திருக்கிறதா?
எதிரிடையின் விசித்திரம் அளிக்கும் வினோத அனுபவம் ஒன்றை வாசிப்பின்பம் என வழங்கும் வசீகரக் கவிதை.
விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் கடிதங்கள்-15
ஆசிரியருக்கு வணக்கம்,
இன்றைய இலக்கிய சூழலில் விஷ்ணுபுரம் விருது மிக மதிப்பு வாய்ந்தது. இவ்வாண்டு விருபெறும் மூத்த கவிஞர் விக்ரமாதித்யன் அண்ணாச்சியை அழைத்தேன்.
“ஒரு கவிதை சொல்லணும்” என்றேன்.
“சொல்லுங்கோ”
பொருநைவண்டல் பூராவும்
புதுமைபித்தன்
காவேரித் தீரம்
கு.ப.ரா.,
அந்த கொங்குச்சீமைக்கு
ஆர்.சண்முகசுந்தரம்
கரிசலுக்கொரு
கி.ராஜநாராயணன்
விக்ரமாதித்யனை
வகைபடுத்து பார்ப்போம் .
அண்ணாச்சி சப்தமாக சிரித்தார்.
பின்னர் தான் என் பெயர் சொல்லி அறிமுகபடுத்திவிட்டு வாழ்த்து சொன்னேன்.
“நாமோ ஒருக்கா சந்திசிருக்கோம்” என்றேன்
“அப்படியா”
“ஜெயமோகன் அவருக்க வீட்டுல ஒரு புத்தாண்டுக்கு நீங்கோ வந்தப்போ பாத்தோம்”
“அப்படியா, நினைவுல இல்ல, உங்களுக்கு எங்க வேல”
“கப்பல்ல,இப்பம் வந்து ஒரு வாரம் ஆச்சி”
“கப்பல் உள்நாடா,வெளிநாடுக்கு போவுமா” என கேட்டவர் எனது சொந்த ஊர் எது என கேட்டுவிட்டு.மீண்டும் சப்தமாக சிரித்தார்.
“நான் மணவாளக்குறிச்சி கிராமத்துக்கு வந்துருக்கேன் பழைய அபூர்வ புத்தகங்களை சேகரிக்கும் போது அந்த ஊரில் உள்ள ஒரு ஆசிரியர் ஒருவர் அழைத்து இரு புத்தகங்கள் தந்தார்.அந்த கிராமம் இந்தியாவில் சிறந்த கிராமம் என தேர்ந்தெடுக்கபட்டது”.எனவும் நினைவு கூர்ந்தார்.
“சரி ஐயா திருநெல்வேலி பக்கம் வந்தா உங்கள பாக்க வாறன்”
“நான் இப்போ தென்காசியில இல்லா இருக்கேன்” மீண்டும் சிரிப்பு.
“அப்போ அங்க வந்து பாக்கேன்”
“லீவு எப்ப முடியும்”
“உங்களுக்கு விருத தந்த பொறவுதான் போவேன்”அதற்கும் சிரித்தார்.
அண்ணாச்சி மிக உற்சாகமாக இருக்கிறார்.
“தொடர்பில் இருங்கள்” என சொன்னார்.
வழக்கம்போல் தகுதியான எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்காத ஒரு மூத்த கவிஞருக்கு விஷ்ணுபுரம் விருது உங்கள் வாசகர் வட்டத்தால் அளிப்பது பெருமகிழ்ச்சி. அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
விருது விழாவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஷாகுல் ஹமீது.
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். நலம் தானே?
‘கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது’, பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இளையதலைமுறையினர் பலரை இவ்விருது அடையாளப்படுத்தியிருக்கிறது. கவிஞருக்கு
அண்ணாச்சி வெண்முரசு சொல்லும் ஆதன் அழிசியின் பாணன் வழி வந்தவர் அல்லவா. அவரின் வரிகளை வாசிக்கையில், எவருக்கும் அஞ்சாத நேர்மையின் வார்த்தைகளை, தூய சிவ நடனத்தின் ருத்ர நாதங்களாகவே
பின்னணியில் ஒலிக்கும். நீர்வீழ்ச்சியென்று அருவியை சொல்லிவிட்டாலே நெஞ்சு பதறும் நாடோடி.
சத்தியத்தையே
எழுதுகிறேன்
அலுத்துப்
போய்விட்டது எல்லாமும்
சலிப்படையச்
செய்கிறார்கள் எல்லோரும்
எனினும்
வாழ்ந்து கொண்டும்
எழுதிக் கொண்டும்தான்
இருக்கிறேன் இன்னமும்.
————————–
ரத்தத்தில்
—————-
ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
————————-
இரு கவிதைகளிலும் அப்பட்டமான சுடும் உண்மைகள்.
அவர் சொன்னவாறே சத்தியமான நிதர்சனங்கள். அவரை நினைக்கும் பொழுதெல்லாம் மது மேசையின் மேலே ஊழித் தாண்டவம் புரியும் காட்சிகளாகவே மனதில் விரிகிறது.
நகரம்
———–
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
எளிய சொல்லாடலில் ஒரு யுகத்திற்கான தரிசனம். நேரடியான,
பூடகங்களைக் கொண்டிராத, அப்பட்டமாகத் தலையிலறையும்
சொற்பிரயோகங்கள்.
சிறுபுற்களுக்கென இல்லாது சிற்றுயிர்களையும்
காத்து ஓம்புவதுதானே ஒரு பேரருவி..!!
வாழ்க கவிஞர்…!!
அன்புடன்,
இ. பிரதீப் ராஜ்குமார்
எண்ணைவித்துக்கள், ஒரு கடிதம்
குரியன்
பசுமைக் கொள்ளை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
’பசுமைக் கொள்ளை’, கட்டுரை படித்தேன். சரியான தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலான தரவுகளைத் தரவே இந்தக் கடிதம்.
1980 களில், இந்தியா, உலக அரங்கில் ‘இந்து வளர்ச்சி விகிதம்’, எனக் கேலி செய்யப்பட்ட 3% வளர்ச்சியை விட்டு, 6% என மிக வேகமாக வளரத் தொடங்கியது. வேகமாக வளரத் தொடங்கும் எந்தப் பொருளாதாரத்துக்கும் அடிப்படைத் தேவை எரிபொருள். அதுதான் பொருளாதார இஞ்சினை இயக்கும் சக்தி. அந்தக் காலகட்டத்தில் ஈரானுக்கும், ஈராக்குக்கும் நடந்த பத்தாண்டு காலத் தொடர் போர் எரிபொருள் விலைகளை வெகுவாக உயர்த்தியது. இது அந்நியச் செலாவணிச் சிக்கலை ஏற்படுத்தியது.
அந்நியச் செலாவணியைக் கோரும் செலவுகள் எவை எவையென ஆராய்ந்த போது, ஒரு முக்கியமான தகவல் வெளிப்பட்டது. பெட்ரோல் இறக்குமதிக்கு அடுத்தபடியாக, அதிகமாக இறக்குமதியாவது சமையல் எண்ணெய் என்பதுதான் அது. இந்தியாவில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரித்தால், இந்த இறக்குமதியைக் குறைக்கலாம் என அரசு யோசித்தது. அப்போது தேசிய பால்வள நிறுவனம், எண்ணெய் வித்துக்கள் துறையில் இறங்கிச் சில முன்னெடுப்புக்களைச் செய்தது. எனவே, ஒன்றிய அரசு, டாக்டர். குரியனை அழைத்து, எண்ணெய் வித்துக்கள் திட்டத்தை முன்னெடுக்கச் சொன்னது. அதே சமயத்தில் தனியார் துறையையும் அழைத்து, இதில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
தேசிய பால் வள நிறுவனம், இத் திட்டத்தை, ஒரு தளங்களில் முன்னெடுத்தது. முதலாவது தளம், சந்தை இடையீடல் (Market Intervention Operation). முதலாம் ஆண்டில், இதற்காக 900 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் நோக்கம் என்னவென்றால், உழவர்களின் உற்பத்தி சந்தைக்கு வருகையில், சந்தை விலை வெகுவாக விழும். அந்தச் சமயத்தில், தேசிய பால்வள நிறுவனம், சந்தையில் இறங்கி, எண்ணெய் வித்துக்களை, எண்ணெயைக் கொள்முதல் செய்யும். சில மாதங்களுக்குப் பின்னர், எண்ணெய் வித்துக்கள் வரவு நிற்க, சந்தை விலை அதிகரிக்கும். உழவர்களின் உற்பத்தி சந்தைக்கு வருகையில், அரசு பெருமளவில் கொள்முதலில் இறங்கினால், உற்பத்தி விலை வீழ்ச்சி தடுக்கப்படும். சில மாதங்கள் கழித்து, உற்பத்தி வரத்து குறைந்து விலை ஏறுகையில், தேசிய பால்வள நிறுவனம், தன்னிடமுள்ள எண்ணெய் வித்துக்களை, எண்ணெயைப் பொதுச் சந்தையில் விற்கும். இதனால், விலையேற்றம் அதிகமாக இருக்காது. இது ஓடும் நதியை அணை கட்டித் தேவைப்படும் போது உபயோகித்துக் கொள்ளும் ஒரு பொதுநலத் திட்டம் போன்றதுதான். உற்பத்தியாளர், நுகர்வோர் இருவருக்கும் பயனளிக்கும் திட்டம்.
இன்னொரு தளத்தில், எண்ணெய் வித்துக்களை பெருவாரியாக உற்பத்தி செய்யும் ராஜஸ்தான் (கடுகெண்ணெய்), குஜராத், மராத்தியம், ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா, தமிழ்நாடு (கடலை எண்ணெய்) மாநிலங்களில், உழவர் உற்பத்திக் கூட்டுறவு வணிக நிறுவனங்களை அமுல் மாதிரியில் உருவாக்குவது.
விடுதலைக்கு முன்பும், விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் வரையிலும், இந்தியா எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு பெற்றிருந்தது. ஆனால், 70 களில், சில வருடங்கள் வறட்சியின் காரணமாக, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைய, சமூகத்தில் பெரும் அதிருப்தி நிலவியது. இந்திரா காந்திக்கு எதிரான ஜெயப்ரகாஷ் நாராயணின், ‘முழுப் புரட்சி’, என்னும் போராட்டத்தின், தொடக்கம், குஜராத் மாநிலத்தில், சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக, உயர்ந்த மாணவர் விடுதிக் கட்டணம்தான் எனில் நம்புவது கடினமாக இருக்கும். ‘அவசர நிலை’ சட்டத்தின் தொடக்கம் இதுதான். எனவே, அடுத்து வந்த ஜனதா கட்சி, வனஸ்பதி, பாமாயில் இறக்குமதி என விலை குறைவான இறக்குமதியை அனுமதித்தது. விலையேற்றம் என்னும் பிரச்சினையைச் சமாளிக்க.. ஆனால், அடுத்த 8-10 ஆண்டுகளில், அது அந்நியச் செலாவணிச் சிக்கலை உருவாக்கியது.
ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பின், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான, சாம் பிட்ரோடாவுடன் இணைந்து, தொழில்நுட்ப இயக்கங்கள் (Techonolgy Mission) தொடங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம், தடுப்பூசிகள், குடிநீர், எண்ணெய் வித்துக்கள், அடிப்படைக் கல்வி, பால் என்னும் துறைகளில் தொடங்கப்பட்டது. இது இந்திய சமூகத்தில், பார தூரமான விளைவுகளை உருவாக்கியது.
எண்ணெய் வித்துக்களுக்கான திட்டம், தங்கத் தாரை (Operation Golden Flow) என அழைக்கப்பட்டது. தொடங்கிய ஐந்தாண்டுகளில், இந்தியாவின் இறக்குமதி குறைந்து, நின்று போனது. இந்த ஆண்டு (1990) நாம் இறக்குமதியை நிறுத்தி விட்டோம், என உழவர்களிடையே டாக்டர்.குரியன் முழங்கிய அந்தக் கூட்டத்தில், நான் ஒரு மாணவத் தன்னார்வலனாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். ஆனால், அன்று அதன் முக்கியத்துவம் எனக்குப் புரியவில்லை.
அதன் பின்னர், இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கிறேன் என்னும் பெயரில், உலக வர்த்தக நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது நரசிம்ம ராவ் அரசு. உலக வர்த்தக நிறுவனத்தின் ஷரத்துக்களில், இந்தியா 300% வரை இறக்குமதி வரி விதிக்கலாம் என இருந்தும், அமெரிக்கவின் சோயா பீன்ஸ எண்ணெய்க்கு 45% இறக்குமதி வரி என்னும் முதல் ஒப்பந்தம் செய்தது. இந்திய எண்ணெய் வித்துக்கள் துறையின் மீதான் முதல் அடி அது.. பின்னர், ப சிதம்பரத்தின் கனவு பட்ஜெட்டில், எல்லா எண்ணெய்க்கும் இறக்குமதி வரியை 20% எனக் குறைத்தார். குறைவான விலையில் பாமாயில் கொட்டத் தொடங்கியது. இதனால், மற்ற எண்ணெய்களுக்கான விலை குறைந்தது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி லாபமில்லா ஒன்றாக மாற, உழவர்கள் வேறு பயிரை நாடத் தொடங்கினர். இந்தியா இறக்குமதியை நம்பியிருக்கும் நாடாக மாறிப் போனது. இன்று நாம் உண்ணும் அனைத்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களிலும் (பிஸ்கட், சிப்ஸ், நெடுஞ்சாலை உணவகங்கள்) பரம்பொருள் போல் இருப்பது பாமாயில்தான். இன்று இந்தியா 70% க்கும் அதிகமான தேவையை இறக்குமதி செய்கிறது
நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில், இந்தியாவில் பாமாயில் உற்பத்தி செய்யலாம் என ஒரு திட்டம் வந்தது. கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, அந்தமான் போன்ற இடங்கள் சரியானவை எனத் திட்டமிடப்பட்டு, தொடங்கப்பட்டன.. ஆனால், பாமாயில் தரும் எண்ணெய்ப்பனை மிக அதீத மழை பொழியும் சூழலில் வளர்வது. எனவே, அதுப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. பாமாயில் திட்டம் சீனாவிலும் வெற்றி பெறவில்லை. ருச்சி சோயா என்னும் எண்ணெய் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிய ஒரு ஒட்டுண்ணித் தொழில் குழுமத்துக்கு உதவுவதற்காக, இந்தத் திட்டம் மீண்டும் தூசு தட்டப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய்த் தொழில் மிகவும் வழுக்கும் ஒன்று. இதில் வழுக்கி விழுந்த நிறுவனங்கள் ஏராளம்.
இந்த வரலாற்றை தொடக்கம் முதல், இன்று வரை அலசும் ஒரு முழுமையான கட்டுரையை அமுலின் முன்னாள் மேலாண் இயக்குநரான வ்யாஸ் அவர்களும், கௌசிக் என்பவரும் இணைந்து எழுதிய கட்டுரைக்கான சுட்டியை இத்துடன் இணைத்துள்ளேன் ( இந்திய எண்ணெய் வித்துகள் உற்பத்தி: தன்னிறைவைத் தாரைவார்த்த கதை – பி.எம். வியாஸ், மனு கௌஷிக் – தமிழினி (tamizhini.in)). விருப்பமுள்ளவர்கள், சொடுக்கி முழுக் கட்டுரையை வாசிக்கலாம்
அன்புடன்
பாலசுப்ரமணியம் முத்துசாமி
September 13, 2021
எழுத்தாளனின் வாழ்க்கை
நண்பர் கே.என்.சிவராமன் இக்குறிப்பை எழுதியிருந்தார்:
தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே அந்த எழுத்தாளரின் நினைவு பொங்கித் தளும்பியது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர் முகமும்…
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு ஃப்ளாட்டில்தான் அந்த எழுத்தாளரின் மகன் குடியிருக்கிறார். சொந்த வீடு. உண்மையிலேயே இது சிறப்பு வாய்ந்ததுதான். ஏனெனில் அந்த எழுத்தாளர் ஒரு பத்திரிகையாளரும் கூட. அவர் காலத்தில் எல்லா பத்திரிகையிலும் சம்பளம் குறைவு. மூன்று டிஜிட்தான். அதை வைத்துதான் குடும்பம் நடத்தினார். ஒரே மகனை படிக்க வைத்தார்.+2 முடித்தப் பிறகு அவர் மகன் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்பினார். அன்று இப்படிப்பு பெரிய விஷயம். மொத்தம் ஆறு செமஸ்டர். ஒவ்வொரு செமஸ்டருக்கும் ஃபீஸ் கட்ட வேண்டும். எழுத்தாளரிடம் அவ்வளவு பணமில்லை. சேமிப்பு? பூஜ்ஜியம்.
அவர் பணிபுரிந்த பத்திரிகையில் அவருக்கு சுதந்திரம் வழங்கி இருந்தார்கள். அதாவது மற்ற நிறுவன இதழ்களிலும் அவர் சிறுகதை, தொடர்கதைகள் எழுதலாம். இதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்த எழுத்தாளர் மிகுந்த தயக்கத்துடன் தனக்குத் தெரிந்த ஒரு நாளிதழின் இணைப்புப் பிரிவு ஆசிரியரை சந்தித்தார். இந்த இணைப்புப் பிரிவின் ஆசிரியர், அந்த நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரும் கூட. இவரை சந்தித்து தன் நிலையை அந்த எழுத்தாளர் விளக்கினார்.
பொறுமையாகக் கேட்ட அந்த இணைப்பிதழின் ஆசிரியர், எதுவும் சொல்லாமல், கதைச் சுருக்கம் கேட்காமல் அந்த எழுத்தாளருக்கு ஆறு தொடர்கதைகளைக் கொடுத்தார். அதாவது ஆறு மாதங்களுக்கு ஒன்று. 24 வாரங்களுக்கு ஒரு கதை. இதைப் பயன்படுத்தி அந்த எழுத்தாளர் ஆறு சரித்திரத் தொடர்கதைகளை அடுத்தடுத்து எழுதினார். இதன் மூலம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணம் பெற்று அதை அப்படியே தன் மகனின் கல்லூரியில் செமஸ்டர் ஃபீஸ் ஆக கட்டினார்.
இந்த ஆறு சரித்திரத் தொடர்கதைகளும் தனித்தனி நூலாகவும், ஒரே தொகுப்பாகவும் வந்திருக்கின்றன. அவை அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அந்த எழுத்தாளரின் முகம் மட்டுமல்ல… அந்த நாளிதழின் இணைப்புப் பிரிவு ஆசிரியரும் நினைவுக்கு வருவார். இன்று அந்த எழுத்தாளர் இல்லை. அவர் மகன் மிகப்பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார்.
அந்த எழுத்தாளர், கெளதம நீலாம்பரன். அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர்..?சொல்வதற்கு முன்னால் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடத் தோன்றுகிறது.
ஒரு பத்திரிகையாளர். எழுத்தாளரும்தான். தொடர்கதைகள் எழுதியதில்லை. ஆனால், ஏராளமான சிறுகதைகளை வெவ்வேறு பெயர்களில் அவர் பணிபுரிந்த பத்திரிகையில் எழுதியிருக்கிறார். திடீரென்று அந்தப் பத்திரிகை நின்றுவிட்டது. வேலை இல்லை. சென்னையில் எப்படி வாழ்வது..? பத்திரிகை அலுவலகமாக ஏறி இறங்கி வேலைக் கேட்டு வந்தார். அந்த வகையில் ஒருநாள் அந்த நாளிதழின் இணைப்பிதழ் அலுவலகத்துக்கும் சென்றார். ரிசப்ஷனிஸ்ட் வழியாக செய்தி அறிந்த இணைப்பிதழின் ஆசிரியர் அந்த பத்திரிகையாளரை அழைத்தார். பேசினார். அவரது சம்பளத்தை அறிந்தார். பின்னர் கேட்டார்:
‘உங்களுக்கு என்ன தெரியும்..?’
‘சிறுகதைகள் எழுதுவேன்…’
‘ஒரு நாளைக்கு எவ்வளவு சிறுகதைகள் எழுதுவீர்கள்..?’
‘ஐந்து…’
‘சரி எழுதிக் கொடுங்கள்!’
‘சார்…’
‘5 சிறுகதைகளை வெவ்வேறு ஜானரில் எழுதிக் கொடுங்கள். இது உங்களுக்கு நான் வைக்கும் டெஸ்ட்…’
அந்தப் பத்திரிகையாளரிடம் கிழிக்கப்பட்ட நியூஸ் பிரிண்ட் தாள்கள் கொடுக்கப்பட்டன.
ஆடாமல், அசையாமல், டீ குடிக்கவும் உணவு அருந்தவும் செல்லாமல் அங்கேயே அமர்ந்து மாலைக்குள் 5 சிறுகதைகளை எழுதி முடித்து கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட இணைப்பிதழின் ஆசிரியர், பிரித்துப் படிக்கவே இல்லை. அதை அப்படியே தன் டேபிளில் வைத்து விட்டு ஒரு கவரை எடுத்துக் கொடுத்தார்.
பிரித்துப் பார்த்த பத்திரிகையாளருக்கு கண்கள் கலங்கிவிட்டன.
இரு மாத சம்பளம்!
‘இது உங்கள் 5 சிறுகதைகளுக்கான தொகை. வாரப் பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவமுள்ள நீங்கள் இன்னொரு வாரப் பத்திரிகையில் பணிபுரிவதுதான் சரி. நாளிதழின் இணைப்பிதழ் உங்கள் திறமைக்கு ஏற்றதல்ல. வேலை் தேடுங்கள். கண்டிப்பாக கிடைக்கும். இரு மாதங்கள் குடும்பத்தைப் பராமரிக்க இத்தொகை உங்களுக்கு உதவும். 60 நாட்களுக்குப் பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால் இன்னொரு 5 சிறுகதைகளுடன் வாருங்கள்!’
நெகிழ்ந்த பத்திரிகையாளர் முழுமூச்சுடன் வேலை தேடினார். இரண்டாம் நாளே இன்னொரு வார இதழில் அவருக்கு உதவியாசிரியர் வேலை கிடைத்தது.
மகிழ்ச்சியுடன் இணைப்பிதழின் ஆசிரியரை சந்தித்து அவர் கொடுத்தப் பணத்தை திருப்பினார்.
‘இதை உங்களுக்கு இனாமாக நான் கொடுக்கவில்லை. உங்கள் சிறுகதைக்கான தொகை அது!’
நிம்மதியுடன் திரும்பிய அந்தப் பத்திரிகையாளர் அதன் பிறகு எண்ணற்ற சிறுகதைகளை, தான் பணிபுரிந்த வார இதழில் வெவ்வேறு பெயர்களில் எழுதினார்.
அதேநேரம், அந்த இணைப்பிதழின் ஆசிரியரிடம் எழுதிக் கொடுத்த 5 சிறுகதைகளை வேறு வடிவத்தில் கூட, தான் பணிபுரிந்த பத்திரிகையில் மறந்தும் எழுதவில்லை.
இதற்கும் மேலே சென்றார் அந்த இணைப்பிதழின் ஆசிரியர்.
இன்று வரை அந்த 5 சிறுகதைகளை அவர் பிரசுரிக்கவே இல்லை! காரணம், எழுதிக் கொடுத்ததை அந்தப் பத்திரிகையாளரே, தான் பணிபுரியும் பத்திரிகையில் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்…
இந்தச் சம்பவம் நடந்தது 1990களின் தொடக்கத்தில்…
இன்று அந்தப் பத்திரிகையாளர் ஓய்வுப்பெற்று பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவர் பெயரை இங்கு குறிப்பிடும் உரிமை எனக்கில்லை…
ஆனால், கெளதம நீலாம்பரனுக்கும் இந்தப் பத்திரிகையாளருக்கும் இக்கட்டான தருணத்தில் உதவிக்கரம் நீட்டி… அதை ‘உதவி செய்யவதாக’ காட்டிக் கொள்ளாமல் அவர்களது எழுத்துக்கான ஊதியமாக கொடுத்து கவுரவித்த இணைப்பிதழின் ஆசிரியர் யார் என்று குறிப்பிட முடியும்.
அவர், சென்னை – கோவை ‘தினமலர்’ வார மலர் ஆசிரியரான அந்துமணி.
*
கே.என்.சிவராமன் எழுதிய இந்தக் குறிப்பை நண்பர் அனுப்பியிருந்தார். நான் வீடுகட்டி கடனில் இருந்தபோது மலையாள மனோரமா இதழும் மாத்யமம் இதழும் இதேபோல எனக்கு உதவின. தமிழில் அப்படியெல்லாம் நிகழ வாய்ப்பில்லை என எண்ணியிருந்தேன். பரவாயில்லை, வணிக எழுத்தாளர்களுக்காவது புரவலர்கள் இருக்கிறார்கள்.
திரு.அந்துமணியின் மெய்ப்பெயர் ரமேஷ் என நினைக்கிறேன். அவரைப்பற்றி சாரு நிவேதிதா சொல்லி கேள்விப்பட்டதுண்டு. அவ்வப்போது அவருடைய குறிப்புகளை வாசித்ததும் உண்டு. இச்செயல் அவர்மேல் மதிப்பை உருவாக்குகிறது.
*
கௌதம நீலாம்பரன் குர்அதுலைன் ஹைதர் எழுதிய ‘அக்னிநதி’ நாவலின் கதாபாத்திரம். வெவ்வேறு மனிதர்களாக ஒரே பெயருடன் இரண்டாயிரமாண்டுகளாக வந்துகொண்டே இருப்பவர். கௌதம நீலாம்பரன் என்ற பெயரில் எழுதிய எழுத்தாளரின் ஒரு கதையைக்கூட நான் வாசித்ததில்லை. நான் தமிழ் வணிக எழுத்தாளர்களில் அனைவரையும் ஓரிரு கதைகளாவது வாசித்துப் பார்க்கவேண்டுமென்ற கொள்கை கொண்டவன். எவ்வாறு தவறியதென்று தெரியவில்லை.
கௌதம நீலாம்பரன் பற்றி பேரா.பசுபதி அவர்கள் பக்கத்தில் ஒரு குறிப்பு வாசித்தேன். பேரா பசுபதி அவர்கள் சென்றகால எழுத்தாளர்களைப் பற்றி எழுதும் குறிப்புகள் சுவாரசியமானவை https://s-pasupathy.blogspot.com
செப்டம்பர் 14. கௌதம நீலாம்பரனின் நினைவு தினம்.
கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களை எழுதியவர் கௌதம நீலாம்பரன். இவர் ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகேயுள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். ஆரம்பக்கல்வியை அவ்வூரிலேயே பெற்றார். விக்கிரமாதித்தன் கதைகள், பெரிய புராணம் ஆகியவை கைலாசநாதனின் வாசிப்பார்வத்தை வளர்த்தன.
விருத்தாசலத்தில் நவாப் ராஜமாணிக்கம் நாடகம் பார்த்து, ஈர்க்கப்பட்டு, அந்த நாடகக்குழுவில் இணைந்து சில மாதங்கள் நடித்தார். தொடர்ந்து நாடகம் மற்றும் திரைப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது. சினிமாவில் நடிக்கும் எண்ணத்துடன் 1965ல் சென்னைக்கு வந்தார். சென்னையில் இவர் சந்தித்தது வறுமையும், கொடுமையுமே. ஹோட்டல் சப்ளையர், பழ விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று வேலைகள் செய்தார். தெருவிலும், நண்பர்களின் அறைகளிலும் இரவில் தங்கினார். நாடகங்களில் சிறுசிறு வேடங்கள் வந்தன. ஓய்வு நேரத்தில் வாடகை நூலகங்களில் நூல்களை எடுத்து வாசித்தார். கல்கி, நா.பா., மு.வ., அகிலன், சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், ஜாவர் சீதாராமன், மீ.ப. சோமு போன்றோரின் நூல்களைத் தொடர்ந்து வாசிக்க எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்தார். ஆனால் எதுவும் வெளியாகவில்லை.
நா.பா.வின் கதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கௌதம நீலாம்பரன் அவரை நேரில் சந்தித்தார். ‘தீபம்’ இதழுக்கு உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார் நா.பா. அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அங்கு பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதை ‘புத்தரின் புன்னகை’ இவரது 22ம் வயதில், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப்பதிப்பில் வெளியானது. இரண்டாவது கதை ‘கீதவெள்ளம்’ அக்பர் – தான்சேன் பற்றிய சரித்திரக் கதையாகும். வித்தியாசமான கதைக்களனில் கற்பனை கலந்து சிறுகதை ஆக்கியிருந்தார். இது கி.வா.ஜ. ஆசிரியராக இருந்த கலைமகளில் வெளியானது. கிட்டத்தட்ட பத்தாண்டுக் காலம் தீபத்தில் பணிபுரிந்தார். அது இவருக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரது அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து வார, மாத இதழ்களில் சிறுகதை, தொடர்கள் எழுதினார். சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுத ஆரம்பித்தார்.
கி.வா.ஜ.வின் பரிந்துரையில் ‘இதயம் பேசுகிறது’ இதழில் உதவியாசிரியராகப் பணிசேர்ந்தார். அதில் இவர் எழுதிய ‘ஈழவேந்தன் சங்கிலி’ என்ற வரலாற்றுத் தொடர் இவருக்குப் பரவலான வரவேற்பைப் பெற்றுத்தந்தது. ஈழத் தமிழ்மன்னனின் பெருமைபேசும் இந்நாவலுக்கு ஜெமினி ஸ்டுடியோ வாசலில் பிரம்மாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டது. தொடர்ந்து குங்குமம், முத்தாரம், குங்குமச்சிமிழ் எனப் பல பிரபல இதழ்களில் பணியாற்றினார். பத்திரிகை அனுபவமும், எழுத்துத்திறனும் இவரிடமிருந்து சிறந்த படைப்பாக்கங்களை வெளிக்கொணர்ந்தன. சுதந்திர வேங்கை, சோழவேங்கை, மோகினிக் கோட்டை, கோச்சடையான், ரணதீரன், ரஜபுதன இளவரசி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித்திலகம், விஜயநந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், கலிங்கமோகினி, பாண்டியன் உலா, புலிப்பாண்டியன், பூமரப்பாவை, மந்திரயுத்தம், வேங்கைவிஜயம், வீரத்தளபதி மருதநாயகம், சேதுபந்தனம், சாணக்கியரின் காதல், சித்திரப் புன்னகை, சிம்மக்கோட்டை மன்னன், மாடத்து நிலவு போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுப் புதினங்களாகும். ‘முத்தாரம்’ வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் ‘புத்தர்பிரான்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்து, தினத்தந்தி ஆதித்தனார் அறக்கட்டளை நினைவுப் பரிசு ஒரு இலட்சம் ரூபாய் வென்றது.
கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. மலேசியாவின் வானம்பாடியிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. காவியமாய் ஒரு காதல், ஜென்ம சக்கரம், கலா என்றொரு நிலா போன்ற சமூக நாவல்களையும் இவர் எழுதியிருக்கிறார். சிறந்த கவிஞரும்கூட. இதயமின்னல், அம்பரம் போன்றவை இவரது கவிதைத் தொகுப்புகள். சேரன் தந்த பரிசு, மானுட தரிசனம், ஞான யுத்தம் போன்றவை குறிப்பிடத்தக்க நாடக நூல்கள். நலம்தரும் நற்சிந்தனைகள் என்பது சிந்தனைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு. இதயநதியை இவரது சுயசரிதை என்றே சொல்லலாம். அருள்மலர்கள், ஞானத்தேனீ, சில ஜன்னல்கள் போன்ற கட்டுரை நூல்களில் தனது வாழ்க்கை அனுபவங்களை, சிந்தனைகளை, சமூக உயர்வுக்கான வழிகளைச் சொல்லியுள்ளார். மாயப்பூக்கள், மாயத்தீவு, நெருப்பு மண்டபம், மாயக்கோட்டை எனச் சிறுவர்களுக்காக நிறைய எழுதியுள்ளார்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 65க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாக “சரித்திரமும் சமூகமும்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
சேலம் தமிழ்ச்சங்கம் இவருக்கு ‘தமிழ்வாகைச் செம்மல்’ விருதளித்துச் சிறப்பித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘பேராசிரியர் கல்கி இலக்கிய விருது’, மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளையின் ‘சிறந்த எழுத்தாளர் விருது’, லில்லி தெய்வசிகாமணி விருது, பாரதி விருது, சக்தி கிருஷ்ணசாமி விருது, இலக்கியப் பேரொளி விருது, கதைக்கலைச் செம்மல் விருது, கவிதை உறவு வழங்கிய ‘தமிழ்மாமணி’ விருது எனப் பல கௌரவங்களை இவர் பெற்றுள்ளார்.
பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்ட போதும், தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியிருந்து தன் படைப்புப் பணிகளை மேற்கொண்டவர். தான்மட்டுமே எழுத்தாளராக இருக்கவேண்டும் என்று நினையாமல் ஆர்வமுள்ள இளந்தலைமுறைப் படைப்பாளிகள் பலரை எழுதத் தூண்டி ஊக்குவித்தவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கிவந்த, கௌதம நீலாம்பரன் செப்டம்பர் 14, 2015 அன்று மாரடைப்பால் காலமானார். இந்தக் கட்டுரையே அவருக்கு அஞ்சலியும் ஆகிறது.
[ நன்றி: தென்றல் ]
தொடர்புள்ள பதிவுகள்:
கௌதம நீலாம்பரன்: விக்கிப்பீடியா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



