Jeyamohan's Blog, page 914
September 19, 2021
நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம்
நூற்பு – கைத்தறி நெசவுக்கான கூட்டுறவின் செயற்பயணத்தில் முக்கியமானதொரு நல்லசைவினைத் துவங்குகிறோம். காந்தி தன்னுடைய சத்திய சோதனை நூலில் கதரின் பிறப்பு அத்தியாயத்தில், “என் அறையில் ராட்டை சுழன்று இனிய கீதத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. நான் நோயினின்றும் குணம் அடைவதற்கு அந்த கீதம் பெருமளவு துணை செய்தது என்று நான் கூறினால் அது மிகையாகாது. அதனால், உடலுக்கு ஏற்பட்ட நன்மையைவிட மனதிற்கு ஏற்பட்ட நற்பலன் அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயார். அப்படியானால் மனிதனின் உடலில் மாறுதலை உண்டாக்குவதற்கு மனதிற்கு அபார சக்தி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஆகவே, நானும் ராட்டையில் நூற்க ஆரம்பித்தேன்” எனத் தன்னுடைய அனுபவத்தை பதிவுசெய்திருப்பார்.
அவ்வகையில், கைத்தறியின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் அறத்தையும் இயன்றளவு நவகால பொதுச்சமூகத்தில் முயன்று கொண்டுசெல்வதே நூற்பு துவங்கப்பட்டதன் முதன்மை நோக்கங்களுள் ஒன்று. பொருளொன்றின் முழுசுழற்சியை ஒரு குழந்தை நேரிடையாக அறிந்துகொண்டால், அதன்பின் அக்குழந்தை எக்காலத்தும் தேவைக்கு அதிகமாக நுகராது; பூமியைப் பாழ்படுத்தும் நுகர்வுவெறியின் பெருங்கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும்; உண்மையிலேயே ஒரு பொருள் ‘வீண்’ என்ற இறுதிநிலைக்கு வந்துவிட்டதா என மீளமீள தற்பகுப்பாய்வு செய்யும்.
நெசவின் ஒட்டுமொத்த உற்பத்திச் சுழற்சியினையும் குழந்தைகளுக்குள் ஆழப்பதியவைக்கும் முயற்சியாகவும், கல்லூரி மாணவர்களுக்கு நெசவின் பின்னார்ந்த தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பதற்கான கற்றல் பள்ளியாகவும் அமையுமாறு நூற்பு நெசவுப்பள்ளியின் கற்பித்தல் செயல்பாடுகளைத் துவங்குகிறோம். காந்தி அரையாடை ஏற்று நூறு ஆண்டுகள் நிறைவுகொள்ளும் செப்டம்பர் 22 அன்று நூற்பு நெசவுப்பள்ளியில் குழந்தைகளுக்கான நெசவுக்கற்றல் துவங்குகிறது.
அகக்குரலுக்குச் செவிசாய்த்து நான் இந்தத் துறைக்குத் திரும்பி வாழ்வமைத்துக் கொண்டதன் பின்னனியில் உங்களுடைய படைப்புகளும், ஏராளமான அனுபவக் கட்டுரைகளும், நீங்கள் சுட்டிக்காட்டிய காந்தியர்களின் வாழ்வும் காரணமாக இருந்திருக்கின்றன. உங்களுடைய அம்மாவும் நூல் நூற்றதாக நீங்கள் சொல்லியிருந்தீர்கள். என் மகள் புவியாழுக்கும் நான் அந்தத் தகவலை பலமுறை சொல்லியே வளர்த்து வருகிறேன். உங்கள் வழிகாட்டும் சொற்கள் எனக்கு என்றென்றைக்கும் ஆத்மபலம் நல்குவது.
ஈரோடு மருத்துவர் ஜீவா அவர்களால் துவங்கப்பட்டு, அவரது தங்கையான ஜெயபாரதி அவர்களால் நடத்தப்படும் சித்தார்த்தா பள்ளிக்கூடத்தின் இருபது குழந்தைகள் இக்கற்றலில் பங்கேற்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்குக் கைத்தறி நெசவைக் கற்பிப்பதனை முதற்படியாகக் கொண்டு நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம் கொள்கிறது. இந்தக் கற்றல்நிகழ்வை பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நதான் அவர்கள் தன்னுடைய ஆசிக்குரலால் அருட்பெருஞ்சோதி அகவல் துதிசொல்லி துவங்கிவைக்கிறார்.
நூற்பு உட்பட என்னுடைய எல்லா முயற்சிகளையும் உங்களிடம் அறியப்படுத்துகையில் என் நம்பிக்கையும் பொறுப்பும் பன்மடங்கு விரிவுகொள்வதாக நான் பொருள்கொள்கிறேன்.
நெஞ்சார்ந்த நன்றிகளோடு,
சிவகுருநாதன். சி
நூற்பு நெசவுப்பள்ளி
nurpuhandlooms@gmail.com
நீலம், கோவை விஷ்ணுபுரம் விவாத அரங்கு
நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் ஒன்பதாவது வெண்முரசு கூடுகை 26-09-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான திரு. கடலூர் சீனு அவர்கள் “நீலம்” நாவல் குறித்து ஒரு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அமர்வில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நாள் : 26-09-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
September 18, 2021
தனிக்குரல்களின் வெளி
அன்புள்ள ஆசிரியர்க்கு,
இதுகுறித்து விரிவாக பேச ஆள் இல்லாமல் கட்டுரை கணக்கில் எழுதிவிட்டேன். பொறுத்துக்கொள்ளவும்.
மக்களின் புறவய துன்பங்கள்– அரசியல், மதம், சாதி, மொழி, இனம், வணிகம் இவைகளாலானவை. என்னை மிகவும் அலைக்கழிக்கும்.
தலித்துக்கள், ஈழத்தமிழர், கருப்பினத்தவர், சிறுபான்மையினர், ஏழைகள், சுற்றுசூழல் என யார் படும் துன்பங்களும். ஆனால் இஸ்லாமியர் இன்று சந்திக்கும் இந்திய/உலகளாவிய புறக்கணிப்புகள், ஒடுக்குமுறைகள்தான் முதன்மையில் நின்று என்னை அலைக்கழிக்கின்றன. அவர்கள் என் மதத்தவர் எனும் மனப்பான்மையால் அல்ல. முஸ்லிம்களாக அவர்கள் செய்பவைக்கு, பெறுபவைக்கு, இழப்பவைக்கு நானும் பங்குகொள்பவன் என்பதனால்.
பிற புறக்கணிப்பு போல அல்லாமல், இஸ்லாமியர் சந்திக்கும் புறக்கணிப்புக்கு அவர்களே (புரிந்துகொள்ளாமல்) ஒரு கட்டத்தில் காரணமாய் இருக்கின்றனர் என்பதனால். கொரோனா வேகத்தில் ஒரு புற்றுநோயாக ‘அடிப்படைவாதம்’ இஸ்லாமியரை இன்று ஆட்கொண்டு வருகிறது. வரலாற்றில் இஸ்லாம் வன்முறையால் சிலபல இடங்களில் பரவினாலும், எத்தனையோ நிலங்களில் வணிகம், சூஃபித்துவம் வழியே அந்த கலாச்சாரத்தோடு உரையாடி ஒன்றாகி பரவியிருக்கிறது – உம்: தென்னிந்தியா, அக்பர் போன்றோர் காலத்து வடஇந்தியா, மாலி பேரரசைச் சுற்றிய ஆப்பிரிக்கா (பழங்குடி கலாச்சாரத்தை ஒடுக்காமல் உள்வாங்கி.. ஆனால் அங்கும் மாலி பேரரசு காலத்தில் ஒரு அடிப்படைவாதி கலகம் செய்திருப்பதாக படித்த நினைவு), இந்தோனேஷியா என.
இப்படிப்பட்ட ஒரு சகிப்புதன்மை கொண்ட அந்த இன்னொரு வரலாற்று முகம் இன்று உலக இஸ்லாமியரிடம் காணாமல் போய் வருகிறது. பிற மதத்தை நேரடியாக மறுப்பது, மதத்தில் உள்ள பிற்போக்கு அம்சங்களை எதிர்க்க ஆளில்லாமல் இருப்பது என பல கூறுகள். இஸ்லாமியர் முழுவதுமாக பிற சமயத்தோரை விட்டு விலகியாதாகத் தென்படவில்லை. ஆனால் பிரிக்கும் நோக்கத்தை ஒளித்து வைத்து செயல்படும் வஹாபிய தலைவர்களை ஏற்று வருகின்றனர். மிகச்சிறிய உதாரணம், பிற சமய பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதன் கட்டுப்பாடுகள் முதல் பிற மதத்தோரின் மறுமை நிலை குறித்த நிலைப்பாடுகள். அது பிற மதத்தினரிடம் ஏற்படுத்தும் கசப்பு/வருத்தம். அது ஒரு எதிர் அடிப்படைவாதத்திற்கு தீனி போடுவது.
இந்த பிரச்சனையை நீங்களும் பல முறை பேசியிருக்கிறீர்கள். இதை கேட்டாலே இஸ்லாத்தை வசைபாடுவதாக நினைக்கிறார்கள் -”மார்க்கத்தை அப்படியே பின்பற்றினால் என்ன தவறு? இவர் போன்றோர் என்ன சதி தீட்டுகிறார்கள்” என்று…(நானும் நினைத்தேன்.. ஒரு காலம்). இந்த வஹாபிய-ஸலாஃபிச அடிப்படைவாத சிந்தனை, ஒவ்வொரு நாட்டு, மொழி, இன இஸ்லாமியர்களுக்கு தீவிரம் அதிகம்/குறைவு என மாறுபட்டு காணப்படுகிறது.
இனம், சாதி, மொழி புறக்கணிப்பு போல இஸ்லாமியர் தங்கள் மதத்தால் சந்திப்பது வெறும் மேட்டிமைவாத ஒடுக்குமுறை/புறக்கணிப்பு மட்டுமே இல்லை. பிற சமயங்கள் காலத்திற்கேற்றாற் போல் தன்னை தகவமைத்துக்கொள்வது போல இஸ்லாமியர் மதத்தில் மாற்றம் செய்யாமல் இருப்பது, இஸ்லாத்தை மாற்றம் செய்வது “பித்அத்”(தீய ஒரு புதுமை) என்று கூறி ஏழாம் நூற்றாண்டுக்கு பொருந்திய ஆனால் ஜனநாயக யுகத்துக்கு பொருந்தாத சிலபல கூறுகளை (சமூகங்கள் கூட்டாக, சம உரிமையோடு வாழும் நவயுகத்திலும்) இன்னும் தக்க வைத்துக்கொண்டு இருப்பது இஸ்லாமியர் சந்திக்கும் புறக்கணிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
சராசரி மக்களின் மனக்கசப்பை தாண்டி அடிப்படைவாதம் எனும் அந்தக் காரணம் இஸ்லாமியர் மீது ஏவப்படும், அவர்கள் பற்றி சராசரி மக்கள் மனதில் பரப்பப்படும் காழ்ப்புகளுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு இஸ்லாத்தின் வெறுப்பாளர்களால் [பெரும்பாலும் உலகமெங்குமுள்ள இஸ்லாமியர் அல்லாத வலதுசாரிகளால்] குற்றஉணர்ச்சி எதுவுமின்றி பயன்படுத்தப்படுகிறது.
ஏழாம் நூற்றாண்டு, மக்கா மாநகரில் உள்ள பெண்குழந்தைகளை உயிரோடு புதைக்கும் மூடநம்பிக்கைகள், இனவாதம், சிலை வழிபாடு இவை மீது நம்பிக்கை இழந்து நபிகள் (ஸல்), அப்போதிருந்த கிறிஸ்தவம், யூத மதம், அரபு நாட்டார் மதக்கூறுகள் இவற்றைக் மனதில் கொண்டு தனிமையில் அந்த மக்களுக்காக தியானித்ததில் ஏற்பட்ட மதம் இஸ்லாம்.
1) அது அவரது ஆழுள்ளத்தில் ஆன்மீகமாக இறையருளாய் பெரும் ஒரு நிலையான உண்மையாய் உதித்ததோ..
அல்லது
2) நபியின் முழு நினைவுடன் ஒரு சமூகப்புரட்சி இயக்கமாக அரபுலகை ஒரு இறைதேசமாக ஒன்றிணைக்க அதே வேளையில் எளிமையான ஒழுக்கமான ஆன்மீக வாழ்வு முறையை சொல்லிக்கொடுக்க எழுந்ததோ… அது ஆன்மீக பக்தியாளர்களும், பகுத்தறிவாளர்களும் தேர்ந்தெடுத்து நம்பவோ, ஆராயவோ வேண்டியது.
தானுண்டு தன் தொழுகை உண்டு என்று தனிமனிதனாக இருப்பவர் 1) வது பார்வையை கொண்டிருப்பது தவறில்லை.
1) வது பார்வையை நவயுக ஆட்சி அரசியலுக்கு புகுத்தினால்… அது பிறருக்கும் முஸ்லிம்கள் தமக்கும் ஏற்படுத்தும் இழப்புகளை பார்த்து வருகிறோம்…
[1) பார்வையை கூட அதனுடன் ஒத்த/மாறுபடுகிற பிற மதக்கொள்கைகளுடன் உரையாடி ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியதே.. மாட்டோம் என்றால் தன் சமயத்தின் பரிணாம வளர்ச்சி, தன் கலாச்சாரத்தின் நிறம் கூடுதல் தடைபடுகிறது.. அவ்வளவு தான்]
2) வது பார்வை தான் அரசியலில், சமூகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபடும் எந்த ஒரு ஜனநாயகயுக முஸ்லிமும் கொள்ள வேண்டியது… (தனி மனிதனாக அல்ல பொது மனிதனாக)
அந்த 2) வது பார்வையே இஸ்லாமிய சீர்திருத்தம் நிகழ தேவை. (கூடவே “அல்லாஹ் பேரன்பன்… உயிர்களுக்கு துன்பம் விளைவிப்பது தவிர ஒரு காலத்து சட்டத்துடன் முரண்பட்டாலே தண்டிக்க மாட்டான் எனும் நம்பிக்கையும்)
குர்ஆன், சுன்னாஹ் முன்மொழிந்த சமூக அமைப்பு அதற்கு முன்பிருந்த அமைப்பை விட நன்றாக இருந்தது. மேலும் அன்றைய இஸ்லாம் ஒரு theocratic தேசமாக இருந்தது. குறைநிறைகளுடன் அந்த காலத்துக்கு சரிப்பட்டு வந்தது. ஆனால் அன்றைய முஸ்லிம்கள் மதப்பிரக்ஞை உள்ளவர்களாகவே தேங்கி விடாமல் உலக வரலாற்றில் ஒரு நீண்ட அறிவு, தத்துவம், கலையிலக்கிய செயல்பாட்டின் முன்னெடுப்பாளர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட மறக்கப்பட்ட கிரேக்க, ரோமனிய அறிவுச்செல்வங்களை அரபு-பாரசீக யூத, கிறிஸ்தவர்கள் துணையுடன் மொழிபெயர்த்து உள்வாங்கி மேம்படுத்தியது, ஆட்சியாளர்களின் இந்திய ஆக்ரமிப்பின் மத்தியில் இந்து அறிஞர்களுடன் உரையாடி அறிவுத்துறையினை விரிவு செய்தது என மதங்கள் இணங்கி செயல்பட்ட “இஸ்லாமிய பொற்காலத்தின்” நாயகர்களாக “பாக்தாத் ஞானகளஞ்சியத்தின்” செல்வர்களாக இருந்தனர். மதமாக அது சூஃபித்துவம் எனும் தூய ஆன்மீக நோக்கை அன்று வார்த்தெடுத்தது.
அறிவியல் குறித்த பெருமிதம் போக.. மதம் கடந்த சூஃபித்துவ ஆன்மிகம், தத்துவங்கள் மற்றும் இசை உள்ளிட்ட சில கலைகள் இன்று ‘பித்அத் ‘(தீய புதுமை) என்று வஹாபியர் கூறுவதை நம்பும் நிலை முஸ்லிம்களுக்கு வந்துவிட்டது.
இணைய வெளியில், இஸ்லாத்தை ஏதோ வாளேந்தி, பாலைவன கொடுந்தெய்வத்தை வணங்கி, கலாச்சாரங்களை அழிக்க மட்டுமே ஏற்படுத்தப்பட்ட cult ஆக காண்பித்து “வரலாறெங்கும் இஸ்லாம் ‘அழிவை மட்டுமே’ செய்திருக்கிறது.. இஸ்லாத்தை முற்றிலும் கைவிட்டால் தான் முஸ்லிம்கள் மனிதர்களாக ஆவார்கள், இல்லையென்றால் முஸ்லிம்கள் இரும்புக்கரம் கொண்டு மனித உரிமையற்று ஒடுக்கப்படுவது மிகச்சரி” எனும் பெருகி வரும் வலதுசாரிகளின் வடிகட்டிய வெறுப்பு சித்தரிப்பு ஒரு புறமிருக்க…
சிறுபான்மையினர் மீது பரிவு கொண்டு அல்லது அரசியல் காரணமாக வஹாபியம் குறித்து பெரிதாக பேசாத இடதுசாரிகள் ஒரு புறமிருக்க..
மறுபுறமோ இஸ்லாமியர்களில் –ஆம் இஸ்லாம் ஒரு தீய வழி அதை நாங்கள் முற்றிலும் துறந்து வெளிவந்து விட்டோம் என ஒரு சாராரும்…
விமர்சனம் என்ற பெயரில் முழு நிராகரிப்பை பார்த்து வெறுத்து, வஹாபியமும் ஆட்கொண்டு-“இஸ்லாம் எக்காலத்துக்கும் பொருந்தும் முழு அமைதி மார்க்கம். (ஒளரங்கசீப் போன்ற) இஸ்லாமிய மன்னர்கள் வரலாற்றில் திரிக்கப் பட்டு தீயவர்களாக காட்டப்படுகிறார்கள்” அல்லது “அவர்கள் போன்றோர் செய்தது மிகச்சரி” என்றும் “இப்படி அதை இவர்கள் வெறுப்பதே அது உண்மை என்பதற்கு சான்று..” அதை வெறுப்போர் போக, “விமர்சிக்கும் கேள்வி கேட்கும் எவரும்’ காஃபிர்கள், மறுமையில் பதில் சொல்வீர்கள்” என ஒரு சாராரும் பல்வேறாக அகன்று பிரிந்து கிடக்கின்றனர்.
“*ஏழாம் நூற்றாண்டில் எழுந்த ‘நபிகால‘ துவக்க இஸ்லாம், இஸ்லாமிய பெருஞ்சமயத்தின் மையம் அல்ல. அது இஸ்லாத்தின் தொடக்கம் மட்டுமே..* ”
என எந்த தீவிர ஆதரவு/மறுப்பு துருவங்களும் இந்த விஷயத்தை ஏற்க, உணர தயாராய் இல்லை. “மாறாமல் இருப்பதுதான் இஸ்லாத்தின் பெருமை. பிற்காலத்து தத்துவ ஞான பிதற்றல்கள் எல்லாம் பிற்சேர்க்கைகள். அதற்கு மார்க்கத்தில் இடம் கிடையாது” என நினைக்கும் மதத்தலைவர்களின் போக்கு இருக்கும் வரை இந்த உண்மையை பெரும்பாலான முஸ்லிம்கள் உணர்வது மிகக் கடினம் (ஆகையால் பிற மதத்தோர்க்கும் கடினம்)
ஏழாம் நூற்றாண்டை தாண்டி இஸ்லாம் பல்வேறு சமய உரையாடல்கள் வழியே வளர்ச்சிகள் அடைந்தது. அது தேங்கி நின்று பிற்போக்குவாதம் பேசவில்லை. உதாரணம்: 8ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை செழித்த இஸ்லாமிய பொற்காலத்தில், அபு பக்ர் அல் ராஸி முதல் உமர் கய்யாம் வரை நீண்டு வந்தடைந்த ‘இஸ்லாமிய நாத்திகம்’ (நேரடி இறைமறுப்பு இல்லை எனினும் மதத்தை வேதங்களை நியாயமாக பகுத்தறிவுடன் கேள்விகேட்கும் நிலை முதல் இருத்தலிய நிராகரிப்பு கொள்கை வரை), அத்வைதத்திற்கு நெருக்கமான ‘வஹ்தத் அல் வுஜுத்’ போன்ற இப்னு அரபியின் monist ஆன்மிக கொள்கைகள், இன்று சராசரி இஸ்லாமியர் ஏற்க மறுக்கும் பரிணாம வளர்ச்சி கொள்கைகளின் மிக அடிப்படை வடிவங்களை முன்வைத்த அல் ஜாஹிஸ்-ன் எழுத்துக்கள் என (இவையனைத்தும் அன்று சில சக அறிஞர்களால் மறுக்கப்பட்டாலும் அன்றைய அரசால் ஒடுக்கப்படவில்லை) ஒரு பெரும் சிந்தனை மரபு எழுந்து வீழ்ந்து, இன்று வகாபிய பாதங்களின் கீழ் கண்ணில் படாமல் மூச்சு திணறிக்கொண்டு இருக்கின்றது.
வஹாபிய சித்தாந்தங்களின் தந்தை போன்ற, அன்று இஸ்லாமிய அரசால் தண்டிக்கப்பட்ட இப்னு தய்மிய்யா போன்றோர் இன்று ஹீரோவாகி விட்ட நிலை.
இன்று இஸ்லாத்தை முற்றாக மறுத்து ஒதுக்கும் இஸ்லாமியர்களை விட இஸ்லாமிய மரபு மற்றும் துவக்க இஸ்லாத்தில் இருக்கும் நல்ல, முற்போக்கான விஷயங்களை ஆதரித்து பழைமையை, ஒவ்வாததை எதிர்ப்போர் குழப்பவாதிகள் என புறக்கணிக்கப் படுகின்றனர். கண்ணில் கூட படாது இருக்கின்றனர். நீங்கள் அறிமுகப் படுத்திய ஹெச்.ஜி. ரசூல் நினைவுக்கு வருகிறார்.
இஸ்லாத்தை முழுமுற்றாக மறுப்பது எளிதாதலால் நிறைய பேர் ex -muslims என ஒன்று கூடி அமைப்பாய் தன் குரலை வெளிகாட்ட முடிகிறது. இஸ்லாத்தை மறுத்தால் மரணதண்டனை (இந்த theocratic தேசத்தை கைவிட்டால் தேசதுரோகம்) எனும் சட்டங்கள் மத்திய கிழக்கு இஸ்லாமியரை இஸ்லாத்தை விட்டு தூர விலக வைத்திடுகிறது. இஸ்லாமிய அடையாளம் கொண்ட எதையும் அவர்கள் பயப்படும்/வெறுக்கும் மனநிலைக்கு இந்த வகாபியம் மிக முக்கியக் காரணம்.
சீர்திருத்தங்களுக்கு தடையாய் இருப்பதன் காரணங்கள்: குர்ஆனும், ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மையமாக இருப்பது, தன்னை முழு மதப்பிரக்ஞையுடன் தன்னை “இஸ்லாம்” எனக் கூறிக்கொள்வதும் ‘மார்க்கம் இத்தோடு நிறைவு பெற்றது’ என கூறுவதும், அதை எதிர்ப்பது பாவம் என்பதும், மறுமை நாள் குறித்த அதன் dramatic ஆன மறுப்பு, ஏற்பு மையப்படுத்திய சித்தரிப்பும், இவையனைத்தையும் விட முக்கிய காரணம், மக்களிடம் ஆன்மீக அடையாளமாக ஏற்கனவே வேரூன்றி இருக்கும் நபிகள் (ஸல்) அவர்கள், குர்ஆன் போன்றவை அடிப்படைவாத தலைவர்களால் அரசியல் அடையாளமாக மீள்உருவாக்கம் செய்யப்படுவது. இயற்கையாகவே அந்த அடையாளங்களை அதைக்கொண்டே மதஅரசியல் படுத்துதல் வேண்டாத பழைமை விழுமியங்களையும் மேலே கொண்டுவந்து விடுகிறது.
இந்த மொத்தத்தையும் கொஞ்சமேனும் சிந்தித்து உணர இன்னொரு தடை : ஜாகிர் நாயக் போன்றோரின் “குர்ஆனில் அறிவியல் அதிசயங்கள், பிற மத நூல்கள் எப்படி இஸ்லாத்தை போதித்த பின்பு சதியால் மாற்றப்பட்டன” போன்ற மிகுகற்பனை கதைகள். அதன் அறிவார்ந்த மாயையிலிருந்து வெளிவர வஹாபியத்தின் தீவிரம் குறைந்த இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சையாவது கவினித்து தெளிவு பெற வேண்டும்!
ஒரு theocratic தேசத்தை முன்மொழியும் நூல் கண்டிப்பாக மேற்சொன்ன மத வரையரைகள் பேசியாக வேண்டும். அதைக்கொண்டு ஏழாம் நூற்றாண்டு அப்போது பெரும் ஒரு அரசியல் மாற்றம் & சமயப் புரட்சி ஏற்பட்டது. குர்ஆனை ஹதீஸ்களை இன்னும் மாற்றமில்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதிலிருந்தும், அப்படியே பொருள் கொள்வதிலிருந்தும், முஸ்லிம்கள் வெளிவர வேண்டும்.
என் புரிதல், நிலைப்பாடு இதுதான்:
பிற மதங்களை, கோட்பாடுகளை விமர்சிப்பது போல் ஒருவர் தன் மதத்தை விமர்சித்தால் அதை மூர்க்கமாக எதிர்க்காமல் அல்லது உள்ளூற வெறுக்காமல், மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நான் அனைத்து மதங்கள் சென்றடையும் ஆன்மீக நிலைப்பாடு ஒன்றே என நம்புபவன்.
அல்லாஹ், பிரம்மம், சிவம், Kingdom of God, நாத்திகர் கூறும் Nothingness என அனைத்தையும் அறிவுக்கு, இருத்தலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை குறிக்கும் சொல் என நம்புபவன். இறைவன், குர்ஆனில் சொல்வது போல் பிடரி நரம்பை விட நெருக்கமாக.. அதே சமயம் ஏழுவானம் வரை விரிந்து பரவியவன். இறைவன் ஒவ்வொரு உயிர்க்குள்ளேயும் அதே சமயம் அண்டம் எங்கும் விரிந்து இருக்கிறான். இஸ்லாம் என ஏழாம் நூற்றாண்டு ஏற்பட்ட theocratic தேச கூறுகளில் ஒற்றுமை விசைகளை மட்டும் தேர்ந்துதெடுத்துக் கொள்வேன்.
அதிலிருந்து முளைத்து.. ஆதரித்தும், முரண்பட்டும் வளர்ந்த அனைத்து மரபும் எனக்கு இஸ்லாம் தான். இஸ்லாம் அல்லாததும் மனித மரபாய் எனக்கு சொத்து தான். அத்தனையிலும் உள்ள பிழைகளை கேள்வி கேட்கவும் முரண்படுவும் கூட செய்வேன்.
நபிகளை, குர்ஆனை நாம் எப்படி பார்க்கிறோமோ அப்படியே பொருள் கொள்கிறோம். அதிகார வெறியுடன் நோக்கினால் தீவிரவாதிகளை உருவாக்கும் அதே “குர்ஆன் & ஹதீஸ்கள்” தான், திறந்த மென்மனதுடன் நோக்கியதால் மதம் கடந்த சூஃபிக்களையும் உருவாக்கியது. இன்றைய ஜனநாயக யுகத்திற்கு ஒத்துவரும் துவக்க இஸ்லாத்தின் கூறுகளை மற்றும் தூய ஆன்மீகத்தை தக்கவைத்து, ஒத்துவராத அரசியல், சட்ட கூறுகளை விமர்சித்து இஸ்லாமியர் பேச வேண்டிய பெரும் கட்டாயம் இருக்கிறது.
இந்த கடிதத்தை எழுதி முடிக்கையில் நான் கண்டுகொண்டது இதுதான்:எனக்கு இன்னும் எழுதி வெளிப்படுத்த தெரியவில்லை. இந்த பிரச்சனையை இன்னும் ஆழமாகவும் ஆராய்ந்திருக்கவில்லை. வேறு பல அம்சங்கள் என் கண்ணில் படாமல் இதில் இருக்கிறது-அதை நான் பார்க்கவில்லை.
நான் இதுவரை சொல்லியதில் பிழைகள் இருக்கலாம். ஆனால் மதத்தை முழுவதுமாக ஏற்பதும், முழுதாக மறுப்பதும் தவறு எனும் தெளிவாவது இருக்கிறது. இவ்வளவு புரிதல் தாண்டி ஏதோ ஒரு போதாமை, குழப்பம் எஞ்சியிருக்கும் உணர்வு. என் பார்வையில் பிழைகள் இருந்தால் திருத்துங்கள். முதிராத பார்வைகள் இருந்தால் உரமிடுங்கள். போதாமை இருந்தால் நிறைவு செய்யுங்கள். இன்னும் புத்தகங்கள், மனிதர்களை பரிந்துரையுங்கள்.
இந்து மதத்தை (புறக்கணிக்காமல்) கேள்வி கேட்டு திருத்தும் இந்துக்களைபோல், கிறிஸ்தவத்தை (புறக்கணிக்காமல்) கேள்வி கேட்கும் கிறிஸ்தவர்கள் போல், இஸ்லாத்தை (புறக்கணிக்காமல்) கேள்வி கேட்டு திருத்தி சீர்படுத்தும் இஸ்லாமியர்களின் குரல் அன்று ஒலித்தது போல் இன்று ஓங்கி ஒலிப்பதற்க்கு என்ன செய்ய? அந்தக் குரல்களையும் அறிமுகப்படுத்துங்கள் தமிழ், இந்திய, உலக சூழலிலிருந்து.
எனக்கு என் மக்களிடம் உரையாட வேண்டும். (ஆமாம்.. பெரிய புரட்சியாளன்!!) எதை பேச.. எதை விட்டுவிட எனவும் தெரியவில்லை. தெரிந்துகொண்டதும் கம்மிதான் போல. சிறுபிள்ளை கேள்விதான் ஆயினும்: என்னைப்போல ஒரு முஸ்லிமாக நீங்கள் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
அவன் பார்த்துக்கொள்வான்.. எதிர்காலம் எப்படியும் சிறப்பாக தான் அமையும், நல்லதே நடக்கும் என இருப்பதா? அல்லது நல்வழி படுத்த நினைத்து தன்னைக் கொண்டாடிய குறைஷியரின் எதிர்ப்பையே வாங்கி கட்டிக்கொண்டாலும் பொறுமை காத்து மக்களிடம் மக்காவில் 13 ஆண்டுகள் உரையாடிய நபிகளை (காந்தி வழியில்) பின்பற்றுவதா.
நான் ஓங்கி ஒலித்து பேச போகிறேனா என்றால் தெரியவில்லை. எதிர்காலம் எப்படி அமைகிறதோ… ஆனால் பேசுவேன்- யாரிடமாவது அல்லது எனக்குள் & இறைவனிடம் பிரார்த்தனையாகவாவது.
மதங்கள் பிரிவடையாளம் நீங்கி ஆன்மீக ஒற்றுமை கண்டு கலந்து ஒன்றி போகும் நாள் [மறுமையில் மட்டும்தான் வாய்ப்புண்டு என விதியிருப்பினும்] ஏற்பட வேண்டிக்கொள்கிறேன்.
அன்புடன்,
சஃபீர்
***
அன்புள்ள சஃபீர்,
என் பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. முன்பென்றால் நான் சொல்வது வேறொன்றாக இருக்கும். இன்று உங்களைப் போன்றவர்கள் என் மகனின் வயது கொண்டவர்கள். ஆகவே தந்தையின் நிலையில் நின்றல்லாமல் ஒன்றையும் சொல்ல முடியவில்லை. உங்கள் முழுப்பெயரை அல்லது படத்தை போடவே எனக்கு தயக்கமாக இருக்கிறது. கசப்புகளும் காழ்ப்புகளும் உங்கள் மதச்சூழலில் இருந்து வந்து கொட்டும். எதிர்த்திசையில் இருந்தும் அதே காழ்ப்புகள் வந்து பொழியும். அதைவிட முற்போக்காளர்கள் உங்களை தூற்றுவார்கள். இன்றைய சூழலில் வன்முறைகூட வரலாம். அதை ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும், இளையவர்கள் அவர்களுக்குரிய இனிய வாழ்க்கையில் திளைக்கட்டுமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
நான் திரும்பத் திரும்பச் சொல்லும் உறுதியான ஒரு கருத்துச்சட்டகம் உண்டு. அது மொத்த மதச்சூழலையும் புரிந்துகொள்ள மிக உதவியானது. மதம் என்பது மூன்று அடுக்குகள் கொண்டது. மெய்யியல், ஆசாரம் , அமைப்பு.
மதத்தின் மெய்யியலில் மூன்று உள்ளடக்கங்கள் உண்டு. ஆன்மிகம், தத்துவம், பண்பாட்டுக்கூறுகள். ஆன்மிகம் என்பது முழுமைநோக்கு, ஆழ்நோக்கு. அதை அறிவைக்கடந்த ஒன்றாக, தூய உள்ளுணர்வின் மூலம் சென்றடையக்கூடிய ஒன்றாக நான் வகுத்துக்கொள்வேன். இறையனுபவம் என்பது அதுவே. மெய்மை என்றும் முழுதறிவு என்றும் அதைச் சொல்கிறோம்.
அந்த ஆன்மிக மெய்மையை அறிவாக ஆக்கும்பொருட்டு தத்துவம் உருவாகிவருகிறது. அடிப்படை வினாக்களாகவும், அவற்றை சென்றடையும் சிந்தனை அலகுகளாகவும், அறிதல்களை விளக்கும் தர்க்கங்களாகவும் அது செயல்படுகிறது.
அந்தத் தத்துவம் நம் அன்றாட வாழ்க்கையில் உள்ள செயல்பாடுகளை அடையாளங்களாகவும் குறியீடுகளாகவும் ஆக்கிக் கொள்கிறது. அதன் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கையில் அது செயல்வடிவமாக ஆகிறது. அதையே பண்பாட்டுக் கூறுகள் என்கிறோம்.
மதத்தின் மெய்யியலை அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் நடைமுறையாக்குவதையே ஆசாரம் என்கிறோம். ஆசாரங்கள் வழியாகவே மதம் அன்றாடத்தில் வாழ்கிறது. அந்த ஆசாரங்களை நிகழ்த்தவும் நிலைநிறுத்தவும் அமைப்புகள் உருவாகி வருகின்றன. ஆலயங்கள், மசூதிகள், திருச்சபைகள், மடங்கள் எல்லாம் அத்தகைய அமைப்புகளே.
மதத்தை ஒட்டுமொத்தமாக ஏற்பது, ஒட்டுமொத்தமாக மறுப்பது இரண்டுமே அறிவார்ந்தவர் செய்யக்கூடியது அல்ல. ஒட்டுமொத்தமாக மறுப்பவர்கள் அதன் மெய்மையை நிராகரிக்கிறார்கள். அதன் தத்துவம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை நிராகரிக்கிறார்கள். அதன் தொன்மையான உள்ளுணர்வுத் தொடர்ச்சியை நிராகரிக்கிறார்கள். அவ்வாறு நிராகரித்தால் அதன்பின் மானுடகுலத்தின் இதுவரையிலான வரலாற்றுப் பரிணாமத்தில் இருந்து எதுவுமே நமக்குக் கிடைக்காது. உள்ளுணர்வுகளின் பதிவுகள், தத்துவங்கள், இலக்கியங்கள் ஆகியவை மதம் என்னும் வடிவில்தான் உள்ளன.
இன்றைய உள்ளுணர்வின் வெளிப்பாடுகள், தத்துவங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றின் வேர்கள் அந்த தொன்மையின் தொடர்ச்சியில்தான் உள்ளன. இன்றிருக்கும் அறம், இன்றைய தத்துவ சிந்தனைகள், கலைகள் ஆக அனைத்துமே அவற்றின் நீட்சியாகவே வரமுடியும். நேற்றை வெட்டிவிட்டு இன்று ஒன்றையும் உருவாக்க முடியாது. நினைத்தாலும் நடக்காது.
ஒரு தனிமனிதனின் அகம் என்பதே பல ஆயிரமாண்டுகளாக உருவாகி வந்திருப்பதுதான். ஆழ்படிமங்களாக, பண்பாட்டுக்கூறுகளாக, மொழிக்கூறுகளாக அவனுள் அது உருவாகியிருக்கிறது. அவையனைத்தும் நேற்றுவரை மதங்களாகவே இருந்தன. மதம் என்னும் வடிவிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. ஆகவே மதத்தை துறப்பது எல்லாம் ஒரு வகையான பாவனைகள் மட்டுமே. இளமையின் முதிர்ச்சியின்மையில் அப்படி ஒருவர் பாவனை செய்வதை மன்னிக்கலாம்.
ஒட்டுமொத்தமாக மதத்தை துறக்கமுடியாது. அதிலிருந்து மெய்மை, தத்துவம், பண்பாடு மூன்றும் நமக்கு வேண்டும். அதேபோல மதத்தை ஒட்டுமொத்தமாக, அப்படியே ஏற்பதும் அது மாற்றமே அற்றது என நினைப்பதும் அபத்தமானது. மதம் என்பது அதன் மெய்மையும் தத்துவமும் பண்பாடும் மட்டும்தான். ஆசாரமும் அமைப்பும் மெய்யியலின் ஊர்திகள்தான். அவை அந்தந்த காலகட்டத்திற்குரிய பாத்திரங்கள். காலம் மாறும்போது அவை மாற்றப்படவேண்டியவை. மாறாவிட்டால் உள்ளடக்கத்தை அவை தேங்கவைக்கும், திரிபடையச்செய்யும்.
திரும்பத் திரும்ப எல்லா ஞானிகளும் சொல்வது இதையே. சாராம்சத்தை வலியுறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கலத்தை, ஊர்தியை மாற்றிக்கொள்ளும்படிச் சொல்கிறார்கள். ஆனாலும் சாமானியர்களுக்கு அது எளிதல்ல. அவர்கள் கண்கூடாக காண்பது மதம்சார் அமைப்புகளை. அவர்கள் அறிந்து பழகியிருப்பது ஆசாரங்களை மட்டுமே. ஆகவே அவையே மதம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு அப்பால் சென்று மதத்தின் பண்பாட்டுக்கூறுகளை, தத்துவத்தை, மெய்மையை அடைய அவர்களால் எளிதில் இயல்வதில்லை.
ஆனால் சென்றகாலங்களில் ஞானிகளால் மெல்லமெல்ல எளிய மதநம்பிக்கையாளர்களைச் சென்றடைய முடிந்தது. சென்ற நூற்றாண்டு வரை மதம் வளர்ச்சியடைந்து மாற்றமடைந்து கொண்டேதான் இருந்தது. எந்த மதத்தை எடுத்துப் பார்த்தாலும் அதில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய ஞானிகளை பார்க்கலாம். தமிழகத்திலேயே தாயுமானவர் முதல் வள்ளலார் வரை ஒரு நிரை இந்துமதத்தில் உள்ளது. சதக்கத்துல்லா அப்பா முதல் பீர்முகமது அப்பா வரை ஒரு நிரை இஸ்லாமிய மதத்திலும் உள்ளது.
மதம் மாற்றத்தை மறுப்பதாக ஆனது நவீன காலகட்டத்தில்தான். மதவெறி என்றுமுண்டு. ஆனால் மத அடிப்படைவாதம் என்பது ஒரு நவீனகால கருத்துரு. மதப்பழமைவாதம் வேறு மத அடிப்படைவாதம் வேறு. இதை விரிவாக எழுதியிருக்கிறேன். மதப்பழமைவாதம் ஒரு தேங்கிப்போன நம்பிக்கை மட்டுமே. மதஅடிப்படைவாதம் என்பது நவீன மொழியில் பேசுவது, கற்றவர்களிடமிருந்து உருவாவது. அது முதன்மையாக மதத்தை ‘சீர்திருத்தும்’ பாவனை கொண்டது. அந்தச் சீர்திருத்தம் என்பது மதத்தின் நெகிழ்வுகளையும், ஜனநாயகப் பண்புகளையும், உள்விரிவுகளையும் அழித்து அதை ஒற்றைப்படையான இறுக்கமான அமைப்பாக ஆக்கும்பொருட்டு மட்டுமே.
மத அடிப்படைவாதம் எவ்வகையிலும் மதம்சார்ந்த இயக்கம் அல்ல. அது முழுக்க முழுக்க அதிகார நோக்கம் கொண்ட அரசியலியக்கம் மட்டுமே. நவீன ஜனநாயகம் உருவான பிறகுதான் அது உருவாகிறது. சொல்லப்போனால் அது நவீன ஜனநாயகத்தின் எதிர்விளைவு. ஜனநாயகத்தில் மக்களிடம் அதிகாரம் உள்ளது. மக்களைத் திரட்டுபவர் அதிகாரத்தை அடைவார். மக்களை திரட்ட இலட்சியக்கனவுகள், பொதுவான நோக்கங்கள், கூட்டுநலன்கள் ஆகியவை நேர்நிலை வழிகள். மொழி, இனம், மதம் ஆகிய பொது அடையாளங்களைப் பயன்படுத்தி வெறியை ஊட்டி எதிரிகளை கற்பித்து மக்களை ஒருங்கிணைப்பது எதிர்மறை வழி.
ஹிட்லரும் முஸோலினியும் இனவெறியை பயன்படுத்தினர். இனத்தின் இடத்தில் மதத்தை வைத்தால் அது மத அடிப்படைவாதம். அதன் நோக்கம் அரசியல், பொருளியல் அதிகாரத்தை அடைவது மட்டுமே. அது மதத்தை பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்ளும், மதத்தைச் சீர்திருத்துவதாக பாவனை செய்யும். ஆனால் அது மதத்தை பயன்படுத்துமே ஒழிய அதற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிகாரத்திற்குத் தேவை என்றால் மத அடிப்படைவாதம் அந்த மதத்தையே அழிப்பதையும் கவலைகொள்ளாது. உதாரணம் தாலிபான். அவர்களுக்கு சீன ஆதரவு வேண்டும், உய்குர் இஸ்லாமியர் கூண்டோடு அழிந்தாலும் கவலை இல்லை.
மதத்தை அரசியலதிகாரமாக பயன்படுத்தும் அடிப்படைவாதிகளுக்கு மதத்தின் அமைப்புகளும் ஆசாரங்களும்தான் தேவை. ஏனென்றால் அவை வெளிப்படையான தூலமான அடையாளங்கள். அவர்கள் செய்வது அடையாள அரசியல். மதம் அந்த அடையாளங்களால் ஆன ஓர் அமைப்பு அல்ல. மதத்தின் மெய்மை எப்போதுமே அதிகாரக் கட்டமைப்புகளுக்கு அப்பால்தான் இருக்கும். அதன் தத்துவம் பண்பாடு இரண்டுமே சுதந்திரமானவை. ஆகவே மத அடிப்படைவாதிகள் எவராயினும் அந்த மதத்தின் மெய்மைக்கு எப்போதுமே எதிரானவர்கள். அவர்கள் மதத்தை ஆசாரமாகவும் அமைப்பாகவும் மட்டுமே நிலைநிறுத்திக்கொண்டு அதிகாரத்தின் அடித்தளமாக அவற்றை மாற்றவே முயல்கிறார்கள்.
அதிகார நோக்கு கொண்ட மதவாதம் மிகத்தீவிரமானது. அது மூன்று அடிப்படைகளில் செயல்படுகிறது. தங்கள் மக்களை எளிய அடையாளங்களின் அடிப்படையில் திரட்டுகிறது. அதே போல சில அடையாளங்களின் அடிப்படையில் எதிரிகளை கட்டமைத்து அவர்களை வெறுக்கவைக்கிறது. தாங்களே ரட்சகர் என நினைக்கச் செய்கிறது. எல்லா மதங்களிலும் இதுவே வழி. அந்த தீவிரம் எளியோரை மிக எளிதாக ஈர்த்துக்கொள்கிறது. அவர்களுக்கு திரளுணர்வை, பாதுகாப்புணர்வை, போராட்ட உணர்வை உருவாக்குகிறது.
இஸ்லாமின் நவீனயுக வரலாற்றைப் பாருங்கள்.அது அடிப்படைவாதமாக ஆனது முழுக்க முழுக்க அதிகார அரசியலை இலக்காக்கிய நவீன இயக்கங்கள் வழியாகத்தான். இஸ்லாம் மதத்தின் மெய்யியலுக்கும் அந்த அடிப்படைவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அடிப்படைவாதிகளுக்கு இஸ்லாம் என்னும் அடையாளம் மக்களை தொகுத்து அதிகாரத்தை அடைவதற்கான கருவியாக ஆகியது. அவர்களுக்கு ஆன்மிகம், தத்துவம், பண்பாடு எதுவும் ஒரு பொருட்டு அல்ல. ஆசாரங்களும் அமைப்புகளும் மட்டுமே அவர்களுக்குத் தேவை.
இருநூறாண்டுகளில் கீழைஉலகமெங்கும் உருவான வெவ்வேறு அரசியலியக்கங்கள்தான் இஸ்லாமிய மதவெறியை உருவாக்கி நிலைநிறுத்தி அதை அதிகாரத்திற்கான படிகளாக ஆக்கிக்கொண்டன. வஹாபிய, சலாஃபிய இயக்கங்கள் அவற்றின் இன்றைய நீட்சிகள்தான். ‘நாம் x பிறர்’ என்பதே அவற்றின் இயக்கவியல். ஆகவே நாம் என்பதை வலுவான மாறாத அடையாளங்களுடன் வரையறை செய்துகொள்வது அவற்றின் வழி. பிறரை எதிர்த்தரப்பாக கட்டமைத்துக் கொள்ளும். பிறர்மேல் விலக்கம் அவற்றின் அடிப்படைச் செயல்முறை. அதை பிறர்மீதான அச்சம், காழ்ப்பு ஆக மாற்றிக்கொண்டே இருந்தாலொழிய அவை அதிகாரத்தை அடையமுடியாது.
ஆகவே எல்லாவகையான உரையாடல்களையும் அவை வெறுக்கும். உரையாட வருபவர் எவரானாலும் அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், ஏமாற்ற முயல்கிறார்கள் என்று சித்தரிக்கும். எல்லாவகையான சமரசப்போக்குகளையும் துரோகம் என வரையறுக்கும் ஒத்துவாழ்தல், இசைந்துபோதல் என்பவை எல்லாம் அடிபணிதல், தோல்வியடைதல் என்று விளக்கும். தன்னை முன்வைத்து பிற அனைத்தையும் மறுத்தலே அவற்றின் வழி.
மத அடிப்படைவாதத்தின் சொல்லாடல்கள் மிக எளியவை. அவர்கள் தங்கள் மதத்தினரை பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிப்பார்கள். ஆழமான தன்னிரக்கத்தின் மொழியில் பேசுவார்கள். கூடவே தங்களை அசாதாரணமானவர்கள், தோற்கடிக்க முடியாதவர், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வெற்றிபெற்றே ஆகவேண்டியவர்கள் என்றும் சித்தரித்துக் கொள்வார்கள். கழிவிரக்கமும் உயர்வுமனநிலையும் ஒரே இடத்தில் முயங்குவது அடிப்படைவாதத்தில் மட்டுமே.
அடிப்படைவாதத் தரப்புகளுக்கு பொதுஎதிரி மறுபக்கத்திலுள்ள அடிப்படைவாதி அல்ல. ஏனென்றால் அவர் இவரை வலுவாக்குபவர். அவர் வரையறுக்க எளிதானவர். ஆகவே உண்மையில் அவர் ரகசிய நண்பர். இஸ்லாமிய அடிப்படைவாதிக்கு இந்து அடிப்படைவாதியைப் போல உதவியான இன்னொருவர் இல்லை. அவர்கள் அனைவருக்கும் பொதுவான எதிரி சமரசத்தையும், உரையாடலையும் இணைவாழ்வையும் முன்வைப்பவர்தான்.
ஒருவரை ஒருவர் எதிர்க்கும் எல்லா அடிப்படைவாதத் தரப்புகளும் சேர்ந்து அவரையே முதல் எதிரியாக சித்தரிக்கும். அவர் விலைபோய்விட்டவர் என அவர் சார்ந்திருக்கும் மதத்தின் அடிப்படைவாதிகள் சொல்வார்கள். அவர் சூழ்ச்சிக்காரர் பசப்புக்காரர் என மாற்றுமதத்தினர் சொல்வார்கள். காந்தி வாழ்நாள் எல்லாம் அவ்வாறுதான் வசைபாடப்பட்டார். இறந்தபின் பன்மடங்கு வசைபாடப்படுகிறார். நடுநிலையில் இருப்பவர்கள் சிலுவையிலேற்றப்படும் காலம் இது. ஆனால் வேறுவழியில்லை, அவர்களிடமே தீர்வு உள்ளது.
இன்றைய சூழலில் எல்லா தரப்பிலும் அடிப்படைவாதம் இறுகிக்கொண்டே செல்கிறது. இதில் எவரை குற்றம்சாட்டினாலும் நீங்கள் அடுத்த தர்ப்பினராக ஆகிவிடுவீர்கள். அடிப்படைவாதத்தின் நுட்பமான ஆற்றல் இதுவே. அது எல்லா மறுப்புகளையும் ஐயங்களையும் எதிரிகளின் சூழ்ச்சியாகச் சித்தரிக்கிறது. ஆகவே அதனுடன் சற்று மாறுபட்டு விவாதித்தாலே நீங்கள் எதிரியோ எதிரியின் கையாலோ ஆகிவிடுவீர்கள். அவர்களை எதிர்க்க எதிர்க்க அவர்கள் வலுவடைவார்கள். எப்படி தர்க்கபூர்வமாக வாதிட்டாலும் சரி.
ஆகவே செய்யக்கூடுவது ஒன்றே. தொடர்ச்சியாக உரையாடல்வெளியை உருவாக்கிக்கொண்டே இருப்பது. பொதுக்களங்களை முன்வைத்துக் கொண்டே இருப்பது. ஒன்றையொன்று முரண்பட்டு வெறுக்கும் தரப்புகள் நடுவே ஒரு சந்திப்புப் பகுதியை கண்டடைவது. எல்லா தரப்பிலும் வாழவிரும்பும் எளியோரும், கற்றறிந்தவர்களும் சமரசத்தையே விரும்புவார்கள். அவர்களுக்கு இடம் உருவாக்கி அளிப்பது. அதற்கு எல்லா தரப்பிலுமுள்ள ஞானிகளை, அறிஞர்களை பயன்படுத்திக் கொள்வது. எவரையும் எதிக்காமல், எவருடனும் மோதாமல் இதை நேர்நிலைச் செயல்பாடாகச் செய்துகொண்டே இருப்பது.
அந்தக்குரல்
நாற்பத்தைந்து ஆண்டுகளாகின்றது இந்தப்படத்தை திரையில் பார்த்து. இந்தப்பாட்டு ஒரு காலத்தில் கொஞ்சம் பிடித்திருந்தது. அதன்பின்னர் மறந்துவிட்டேன். எப்போதாவது அரைகுறையாக காதில் விழும். நாங்களெல்லாம் சட்டென்று இளையராஜா அலையால் அடித்துச்செல்லப்பட்டவர்கள். எழுபத்தெட்டுக்குப்பின் இந்தப்பாட்டையெல்லாம் விட்டு மனம் விலகிவிட்டது. ஆகவே காதில்விழுந்தாலும் கவனிப்பதில்லை.
இப்போது சட்டென்று ஓர் ஆர்வத்தில் யூடியூபில் இதைக் கேட்டேன். கடந்தகால ஏக்கமாக இருக்கலாம், இனியதாக ஒலித்தது. முக்கியமாக இப்போது கவனித்தது ஜெயலலிதாவின் இனிய குரல். தேர்ந்த பாடகிக்குரிய குரல். இயல்பான உணர்ச்சிகரமும் இனிமையும் கொண்டிருக்கிறது. ஏன் ஜெயலலிதா தொடர்ந்து பாடவில்லை என்று தெரியவில்லை. நானறிய ஓரிரு பாடல்களே பாடியிருக்கிறார்.
அன்றெல்லாம் எல்லா பாட்டும் சுசீலாதான். அவ்வப்போதுதான் வாணி ஜெயராம், எல். ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி. சுசீலாவின் குரல் உண்மையில் அன்றெல்லாம் அவ்வளவு சலித்துவிட்டிருந்தது எங்களுக்கு. எம்.எஸ்.விஸ்வநாதன் அலுத்துப்போய் நாங்களெல்லாம் இளையராஜா பக்கம் சென்றதற்கு டி.எம்.எஸ்- சுசீலா குரலே திரும்பத்திரும்ப ஒலித்ததுதான் முக்கியமான காரணம் என நினைக்கிறேன். இருவருக்குமே ஓங்கிச் சுழலும் நாதஸ்வரக்குரல். பாட்டுகளும் அதற்கேற்பத்தான் இருக்கும்.
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கேட்ட எல்லா பாட்டும் ஒரே பாட்டுபோல ஒலித்தன என இப்போது என் நினைவு சொல்கிறது. உண்மையில் யூடியூப் வந்தபின் பழைய பாட்டுக்களைக் கேட்கையில்தான் அப்படியொன்றும் ஒரேமாதிரி டியூன் இல்லை என்ற எண்ணம் வருகிறது. மெட்டுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் பல வகைகளில் விரிந்திருக்கிறார். டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும்தான் ஒரே மாதிரி பாடி எங்களைப்போன்ற சிறுவர்களை ஓட ஓடத் துரத்தியிருக்கிறார்கள்.
இன்றும் தனிப்பட்ட முறையில் எனக்கு டி.எம்.எஸ் குரல் பிடிக்காது. சிவந்தமண் படத்திலுள்ள ’பார்வை யுவராணி கண்ணோவியம்’ போன்ற சில அபூர்வமான பாடல்கள் அவற்றின் மெட்டுக்காக மட்டும் பிடிக்கும். டிஎம்எஸ் குரல் இல்லாமல் அதைக் கேட்கவேண்டும் என்றால் எவராவது கருவியிசையாக வாசித்திருக்கவேண்டும். அதற்காக யூடியூபில் தேடியிருக்கிறேன். டி.எம்.எஸின் எந்த பாட்டானாலும் கருவியிசை வடிவில் இருக்கிறதா என்றுதான் தேடுவேன். நெடுங்காலம் சுசீலா மீதும் அந்த ஒவ்வாமை இருந்தது. சுசீலாவின் மலையாளப்பாட்டுக்கள்தான் பிடிக்கும். தமிழில் இருக்கும் சுருதிசுத்தமான கணீர்த்தன்மை இல்லாமல் சாதாரணமாகவே மலையாளத்தில் அவரை பாடவைத்திருப்பார்கள்.
எனக்கு பிடிக்காதது அவர்களின் பிழை அல்ல. என் மாமா ஒருவர் உயிரே போனாலும் பன்ரொட்டி சாப்பிட மாட்டார். அவர் ஏழாண்டுக்காலம் ஹாஸ்டலில் தினமும் பன்ரொட்டி- அஸ்கா சக்கரைதான் சாப்பிட்டார். அப்போது உருவான ஒவ்வாமை. சட்டென்று ஜானகியின் மென்குரல் அன்னக்கிளி முதல் ஒலிக்க ஆரம்பித்தபோது அந்த வேறுபாடே அவ்வளவு பெரிய பரவசத்தை அளித்தது. அதன்பின் இளையராஜா கொண்டுவந்த புதுக்குரல்கள். ஜென்ஸி, எஸ்.பி.ஷைலஜா குரல்கள் எல்லாம் பிசிறற்ற கணீர்க்குரல்கள் அல்ல. சாதாரணமாக கேட்கும் குரல்கள். மென்மையான உடைசலோசைகள், கம்முதல்கள் எல்லாம் கொண்டவை. அந்த வேறுபாடு அன்று உருவாக்கிய பெரும் பரவசத்தை இன்றுள்ளவர்கள் உணர முடியாது. ஒரு காலத்தில் போஸ்டரில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை என்று போட்டிருந்தாலே நாங்கள் சின்னப்பயல்கள் உள்ளே போகமாட்டோம். போனாலும் பாடல்போடும்போது எழுந்து “பாட்ட ஆஃப் பண்ணுடா!” என்று ஆர்ப்பாட்டம் செய்வோம். அவ்வளவு சலிப்பு.
ஆனால் இன்று இந்தப்பாடல் இனியதாக இருக்கிறது. இன்று எனக்கு அக்காலத்தைய பல பாடல்கள் கனவை எழுப்புவனவாக உள்ளன. திரும்பத்திரும்ப ஒரே குரல்களை பயன்படுத்தியதற்குப் பதிலாக ஜெயலலிதாவைப்போல புதியகுரல்களை எம்.எஸ்.வி பயன்படுத்தியிருக்கலாமே என்னும் ஆதங்கம் ஏற்படுகிறது.
பிரான்ஸிஸ் கிருபா, கடிதங்கள்
ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
அன்பின் ஜெ
வணக்கம். பிரான்சிஸ் கிருபாவின் அஞ்சலி வாசித்தேன். உடன் பயணித்து துக்கத்தில் பங்கெடுத்ததாக உணர்ந்து அழத்தொடங்கிவிட்டேன்.
நேற்று ஒரு சம்பவம் நடந்திருந்தது, ஒருமுறை பிரான்சிஸின் கவிதை தொகுப்பை விற்பனைக்கு எடுத்திருந்தேன்.
நண்பரிடம் அவர் பற்றி அறிமுகம் செய்து புத்தகம் விற்பனையில் உள்ளதாகக் கூறினேன். கொஞ்ச நேரம் யோசித்தவர், முகநூலில் யாரும் அந்த நூலை பற்றி பேசினார்களா என கேட்டார். என்னால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. இக்கேள்வி என்னைக் கோவப்படுத்தியது.
எதிரில் இருக்கும் ஒருவன் சொல்வதை விட முகநூலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
நேற்று அந்த நண்பர் அழைத்திருந்தார். அன்று நான் சொல்லும் போதே புத்தகத்தை வாங்கியிருக்க வேண்டும். இன்று முகநூல் முழுக்க பிரான்சிஸ் கிருபாவின் முகங்கள் இருப்பதை சொல்லி புத்தகம் கைவசம் உள்ளதா என்று கேட்டு வருந்தினார்.
ஒரு கவிஞன் இருக்கும் போதே வாசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அந்தப் பாக்கியத்தை நீங்கள் தவறவிட்டீர்கள் என்று சொல்லி கைவசம் புத்தகம் இருந்தும் இல்லையென்றேன்.
உங்கள் அஞ்சலியை வாசித்ததும் இதனை பகிரத் தோன்றியது.
அன்பும் நன்றியும்
தயாஜி
அன்புள்ள ஜெ,
பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி” நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல். புனைவுகளால் நம்மை கதைகளத்துக்குள் இட்டுச் செல்கிறது நாவல். கனவில் வரும் தேவகுமாரன் சுமந்த சிலுவையை பிரான்சிஸ் சந்தன பாண்டி சுமக்க நேர்கிறது காதலால். சத்ராதியால் பீடிக்கப்பட்டு மனப் பிறழ்வில் நினைவுகளால் வாழும் பாண்டிக்கு மருத்துவம் பார்க்கும் நிகழ்வுகளால் முடியும் முதல் பாகம்.
இரண்டாம் பாகமோ பாண்டியின் அக்கா வயதுள்ள அமலாவோடு வரும் அளவுகடந்த அன்பில் பயணிக்கிறது. அவர்களுக்கிடையில் இருப்பது அன்பிற்கும் காதலுக்கும் இடையேயான கண்ணி. பெண் துறவிக்காக பயிற்சியிலிருக்கும் அமலா கடல் அலையைப் போல நெருங்கி பாண்டியிடமிருந்து விலகுகிறாள்.
மூன்றாம் பாகத்தில் சாராவை திருவிழாவில் காண்கிறான். தன் அத்தையின் சாயலை ஒத்த அவள் மீது தீரா காதலில் அலைகிறான் ஆனால் இறுதியில் அவளும் கன்னியாஸ்திரி ஆகிறாள். பாண்டி பித்தேறி கிடப்பதோடு முடிகிறது கன்னி. பாண்டி வாழ்வில் அமலா, சாரா, விஜிலா என கன்னியர்களின் தாக்கம் அதிகம். ஆனால் நேசித்த கன்னியர்களோ தேவகுமாரனுக்கு சேவை செய்யச் செல்வதால் சிலுவையை நிரந்தரமாக சுமக்கும் தேவகுமாரனாகிறான் பாண்டி.
பிரான்சிஸ் கிருபா கவிஞராதலால் வார்த்தைகள் எல்லாம் வானவில்லாய் விழுகின்றன. கடலும் தேவாலயமும் கதாபாத்திரங்களாக உலவுகின்றன. படிக்கும் போதே கண்களில் கடல் தெரிகிறது. கிருபாவின் கவித்துவ வரிகளில் சில
* இருளை அடிக்க ஓங்கிய பிரம்பு போல இருந்தது டியூப்லைட்
* தண்ணீரில் நடந்து போனவனின் பாதச்சுவடுகள் துடுப்பற்ற படகுகளாக அலைந்தன.
* பாதமளவு பருத்த மீனொன்று நீர் நிலை தேடி நிலத்தில் துள்ளிச் சென்றது போல் குருத்து மணல் பரப்பில் சுவடுகள் புதைந்து பதிந்து கிடக்கிறது.
* மாலைக்கண் வியாதியில் கூரை விளக்குகள் மங்கலான ஒளியைப் பரப்பியிருந்தன.
* தேவாலய கோபுரங்கள் வானத்தில் எதையோ எழுதப் போகும் பென்சில்களாக சீவி வைக்கப்பட்டிருந்தன அதன் உச்சியில் ஏறி விளக்கைப் பற்ற வைப்பதை விட ஒரு நட்சத்திரத்தை அதில் இறக்கி வைப்பது சுலபம்.
வார்த்தைகளெல்லாம் வானவில்லாய் வந்து விரிகிறது கிருபாவின் வானில்.
ஒரு நாவலில் என்னை உறங்கவிடாமல் செய்தவனே எப்படி ஒரு நாளில் உறங்கிப் போனாய்…..
செல்வராஜ்
திசையெட்டும் தமிழ்
பட்டுக்கோட்டை
அன்புள்ள ஜெ
பிரான்ஸிஸ் கிருபா அவர்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து அவருடைய கன்னி நாவலில் கையெழுத்து வாங்கியிருக்கிறேன். திடீரென்று அந்தக் கையெழுத்து எத்தனை முக்கியமானதாக ஆகிவிட்டது என்னும் ஆச்சரியம் ஏற்பட்டது. நான் சந்தித்தபோதே உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது.
ஒரு கவிஞர் என்ற வகையில் அவருடைய வாழ்க்கை பற்றியெல்லாம் நான் பேச நினைக்கவில்லை. அவருடைய பழக்கவழக்கங்கள் எல்லாம் எனக்கு முக்கியமில்லை. அவற்றை கொண்டாடுவதோ அல்லது இகழ்வதோ சமமானதுதான். அவருக்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. மனச்சிக்கல்களை அவரே சொல்லியிருக்கிறார். அவருடைய கவிதை அந்த இருட்டிலிருந்து அவர் தேடித்தேடித் தவித்த ஒளியை காட்டுகிறது. நமக்கும் அந்த ஒளிதான் முக்கியமானது. ஆகவேதான் அவர் நமக்குரிய கவிஞர்
அன்புடன்
ஆர்.எஸ்.
ஜெ
புத்தகச் சந்தையில் வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகன் வந்திருக்கிறார். திரும்ப வருவார் எனச் சொன்னார். வெளியேறி காத்திருந்தேன்.
அப்போது ஒரு இளைஞன் சிரித்தபடியே வந்து என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என விசாரித்தார்…. நான் காடு, மணற்கடிகையை காண்பித்தேன். அவரது தோற்றத்தை கண்டு கொஞ்சம் எச்சரிக்கையோடே சம்பாஷித்தேன்.
“கன்னி புத்தகம் வாங்குங்க அண்ணா என்றார் நல்ல புத்தகம்” …என்றார்.
“யார் ரெகமண்ட் செய்திருக்காங்க?” என்றேன்.
“நான்தான்” என்றார்.
“நீங்க யார்?”என்றேன்
”நான் பிரான்சிஸ் கிருபா” என்றார்.
சிரித்த படியே மறுபடி உள்ளே போய் கன்னியை வாங்கினேன். அந்த வருடத்தின் அற்புதம் வாங்கிய எந்த புத்தகமே சோடையல்ல.
சுப்ரமணியம் ரமேஷ்
காந்தி, இரு ஐயங்கள்
அன்பிற்கினிய ஜெ
வணக்கம், உங்களின் இன்றைய காந்தி மற்றும் உரையாடும் காந்தி புத்தகத்தின் வழியாக எனக்கு காந்தியின் அறிமுகமும் அவரின் மேல் இருந்த வெறுப்பும் விலகியது. நீங்கள் காந்தி பற்றி ஆற்றிய உரைகள் அனைத்தையும் you tube ல் பார்த்திருக்கிறேன். நீங்கள் அவரை பல கோணங்களில் அணுகுவது எனக்கு இன்னும் அவரை மேலும் உள்வாங்கவும் படிக்கவும் ஊக்கம் அளிக்கிறது. உங்கள் புத்தகங்களை தொடர்ந்து சத்திய சோதனை, தென்னாப்பிரிக்காவில் காந்தி, Hindu swaraj,நவகாளி யாத்திரை ,the life of Mahatma Gandhi by Louie Fisher ,காந்தியின் கடைசி 200 நாட்கள் புத்தகங்களையும் வாசித்திக்கிறேன். இன்னும் சில புத்தகங்களை படிக்கவும் விரிவாக காந்தியை அறியவும் முயன்று கொண்டு இருக்கிறேன். finally I found my hero and role model to lead my life.நன்றி.
இரு கேள்விகள்:
காந்தியின் கடைசி 200 நாட்கள் புத்தகத்தில் ஒரு நிகழ்வு.காந்தி பேத்தி மனுவுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. சிகிச்சை ஏதும் வேண்டாம், ராம நாமம் சொன்னால் குணமாகிவிடும் என்கிறார். மிக சிறந்த நடைமுறைவாதி,பிரமாண்ட போராட்டங்களை முன்னெடுத்துவர், அவர் எப்படி அந்த இடத்துக்கு வந்தார்? அவர் வயது காரணமாக இருக்க வாய்ப்பில்லை.என் தர்க்கம் இங்கே ஏற்க மறுக்கிறது.காந்திக்கு இந்து சடங்குகளில் மேல் நம்பிக்கை இருந்ததா? அவர் மார்ச் சால்ட் தொடங்குவதற்கு முன்பு சில பூஜைகளை செய்ததாக படித்த நினைவு.You tube காணொலியிலும் பார்த்தேன். என் புரிதல்களில் தவறு இருந்தால் மன்னிக்கவும். உங்களின் விரிவான பதிலை எதிர்நோக்குகிறேன்.அன்புடன்
மணிகண்டன்
கலிபோர்னியா
***
அன்புள்ள மணிகண்டன்,
நான் நினைவிலிருந்து சொல்கிறேன். காந்தியின் மருத்துவம் சார்ந்த கொள்கைகள் வெவ்வேறு வகையாக பரிணாமம் அடைந்தவை. அவை சீரான மருத்துவ ஆய்வுகள் என்று சொல்லமுடியாது. அவற்றை மருத்துவ நோக்கில் எவ்வகையிலும் கருத்தில்கொள்ள முடியாது. அவை ஒரு மேதையின் கிறுக்குத்தனங்கள் என்று மட்டுமே கொள்ளத்தக்கவை. அல்லது அவருடைய அகத்தை அறிய உதவும் குறியீட்டுச் செயல்பாடுகள். காந்தி அதே குழந்தைத்தனத்துடனும் கிறுக்குத்தனத்துடனும் வானியல் உட்பட எல்லாவற்றிலும் ஆர்வம் செலுத்தியிருக்கிறர்.
காந்தியின் மருத்துவச் சோதனைகளில் இருந்து நாம் அறியவேண்டியவை இரண்டே. ஓர் அறிவுவாதி தன் உடலை கவனித்தபடியே இருக்கவேண்டும் என அவர் நம்பினார். வலியை பொறுத்துக் கொண்டு நோயை தாங்கிக்கொள்ளுதல் நோயை வெல்லும் வழிகளில் ஒன்று என நினைத்தார். அவருடைய பொதுவான வழியே ’சகிப்புப் போராட்டம்’ என்பதுதான். அவையிரண்டும் பழைய சமண மரபின் அடிப்படைகள்கூட. வைணவத்திலும் அவை கடைப்பிடிக்கப்பட்டன.
நாம் உடலை கவனிப்பதில்லை. அதை முழுக்கமுழுக்க மருத்துவருக்கு விட்டுவிடுகிறோம். விளைவாக நம் வாழ்க்கை முறைக்கும் நோய்களுக்குமான உறவை அறிய முடிவதில்லை. நம் உடலுக்கே உரிய தனித்தன்மைகளை அறியமுடிவதில்லை. உடல் நம்முடன் இணைந்தும் விலகியும் செயல்படுவதன் விதிகளை அறியமுடிவதில்லை.
பெரும்பாலும் வலி மற்றும் சாவு பற்றிய அச்சத்தால் நாம் மிகைசிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். நோயைக் குணப்படுத்திக்கொள்ளும் விழைவு நம் உடலுக்கே உண்டு. குணப்படுத்திக் கொண்டதென்றால் அந்த முறையை உடலே கற்றுக்கொள்ளும். அதை நினைவாக வைத்திருக்கும். நோயை எதிர்க்கும் ஆற்றலையும் பெறும். அச்சத்தால் நாம் அந்த வாய்ப்பை வழங்குவதில்லை.
காந்தி மருத்துவம் பற்றிச் சொன்னவற்றில் இவையிரண்டு கூறுகளும் முக்கியமானவை. ஆனால் அவர் சேற்றுச்சிகிச்சை, நீர்ச்சிகிச்சை என பலவகைகளில் முயன்று பார்ப்பது சீரான வகையில் இல்லை. உடனடித்தேவை என்றால் நவீன மருத்துவ உதவியையும் நாடியிருக்கிறார். தன் உற்றாரிடம் அவர் ஒரு உணர்வுரீதியான கட்டாயத்தைச் செலுத்தி தன் சிகிச்சைமுறைகளை பரிசோதனை செய்ததும் நல்ல விஷயம் அல்ல.
மனுவிடம் அவர் சகித்துக்கொள்வதனூடாக நோயை வெல்வதைத்தான் சொல்லியிருப்பார். அவ்வாறு பல ஆசிரமவாசிகளிடம் நோயை கவனித்தபடி, பிரார்த்தனை செய்தபடி சகித்துக் கொண்டிருக்கும்படிச் சொல்லியிருக்கிறார். நோயை பிரார்த்தனையால் எதிர்கொள்வது ஒருவகை ஆன்மிகப்பயிற்சி என்று அவர் சொன்னதுண்டு. உண்மையில் இப்போதும் பல குருகுலங்களில் இந்த வழி உண்டு. நித்யா குருகுலத்திலேயே சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] இந்த வழியை நம்புபவர். எனக்கும் சொல்லியிருக்கிறார்.
காந்தி சடங்குகளைச் செய்தவர் அல்ல. அவ்வகையில் ஓர் ஐரோப்பியரின் வாழ்க்கை கொண்டவர் அவர். ஆனால் சடங்குகளில் முற்றிலும் நம்பிக்கை இல்லாதவர் அல்ல. ஆன்மிக விஷயங்களிலும் அவருக்குக் குழப்பங்கள் இருந்தன. அவர் யோகப்பயிற்சிகள் செய்தவர். பின்னாளிலும் அவற்றைத் தொடர்ந்தவர். அதில் அவருக்கு ஆசிரியர்கள் இருந்தனர். அதை நூலில் விவரித்திருப்பேன்.
ஆன்மிக வழியில் பக்தி மற்றும் சடங்குகளை முற்றாகத் தவிர்ப்பவர்கள் இருவகையினர். ஒன்று, அத்வைதிகள். இரண்டு, தூய யோகம் பயில்பவர்கள். காந்தி இரண்டு தரப்பையும் சார்ந்தவர் அல்ல. அவர் பக்தியை வழியாகக் கொண்டவர். ஆனால் பஜனை, பிரார்த்தனை இரண்டையும் செய்தவர். யோகபயிற்சிகள் சிலவற்றில் நம்பிக்கை இருந்தது. ஆனால் முழுமையாக அதில் ஈடுபடவில்லை. சில மறைஞானச் சடங்குகளை செய்திருக்கிறார். தனக்கே உரிய வகையில் அவற்றையெல்லாம் கலந்துகொண்டார். சோதனைகள் செய்துபார்த்தார்.
அவருடன் யோகப்பயிற்சி மற்றும் சடங்குகளில் நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தனர். காந்தி அத்தகைய சடங்குகளை அல்லது மறைஞானப் பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்க வாய்ப்புண்டு.
ஜெ
அத்தர் – கடிதம்
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
ஊரெங்கும் மழை பெய்து மண் குளிர்ந்து இருக்கிறது. ஈரட்டிக் காற்றின் மழை வாசனையின் இனிமையில் உள்ளம் ஆழ்ந்து, ஊழ்கமே பொழுதுகளாய், வாழ்வின் முழுமை உணர்வில் திளைத்த வண்ணம் உங்கள் நாட்கள் இனிதே நகர்ந்து கொண்டிருப்பதை இங்கிருந்தும் உணர முடிகிறது.
வியாச பூர்ணிமை நன்நாளில் ஞானநிலவின் தன்னொளிபோல் வெண்முரசை குறித்த உங்கள் நல்வார்த்தைகளை சூம் நேரலையில் கேட்டுக் களித்தது மிக்க மனநிறைவை அளித்தது. வியாச பீடம் என்பது ஞானத்தின் எடையின்மையும் பொறுப்புணர்வின் பேரெடையையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டது என்பதை அகத்தே முழுதுணர்ந்ததின் உண்மை வெளிப்பாடாகவே அன்றைய உங்களது ஒவ்வொரு சொல்லும் அமைந்திருந்தது.
எத்தனை கசக்கப் பட்டாலும் மணம் மட்டுமே அளிப்பது மலரின் குணம். எந்நிலையிலும் பிறருக்கென கசிந்து உருகி கனிந்திறங்குவது ஞானியின் மனம். மலரென இலகுவாய் இருந்த வண்ணம் நண்பர்களின் கேள்விகளுக்கு கனிவோடு நீங்கள் பதிலளித்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்ற பொழுது எனக்கு வெண்முரசுக்குப் பிறகு இவர் எத்தனை மலர்ந்தும் கனிந்தும் இருக்கிறார் என தோன்றியது.
இன்று சிங்கப்பூர் எழுத்தாளர் முகமது ரியாஸ் எழுதிய “அத்தர்” ( https://vallinam.com.my/version2/?p=7650 ) சிறு கதையை வல்லினம் இதழில் வாசித்த பொழுது, குரு பூர்ணிமா அன்று உங்களை நேரலையில் கண்டு எனக்கு சிந்தையில் உதித்த மலரோடு கூடிய ஒப்புமை சட்டென்று சிந்தையில் மின்னல் அடித்துச் சென்றது.
இந்தக் கதையை முகமது ரியாஸ் வெகு அழகாக எழுதி இருக்கிறார். இஸ்லாமிய பின்புலம், சூஃபி மர்மம், தொன்மம், ஞானம், தத்துவம், வரலாறு மற்றும் மொழி என அனைத்தையும் இணைத்து அத்தர் என மணக்கும் சிறுகதையை வாசத்தோடு கவித்துவமான மொழியில் வடித்துக் கொடுத்திருக்கிறார். சூஃபி ஞானம் என சுகந்தம் வீசி உன்னத வாசிப்பு இன்பத்தோடு ஒரு உயர் தத்துவ தரிசனத்தையும் சட்டென்று ஒளிக்கீற்றாய் அளித்துச் செல்கிறது இந்தக் கதை.
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் நாவலின் தாக்கம் சற்றே இருந்தாலும்கூட இந்த சிறுகதை தனது மொழியாலும் அது காட்டுகின்ற தத்துவ தரிசனத்தாலும் தனித்து நிற்கிறது.
ஆண்டுக்கணக்காக குளிக்காமல் இருந்த பொழுதும் அவர்களின் உடல் அற்புதமான மணம் வீசிக்கொண்டிருந்த எத்தனையோ துறவிகளின் அருகாமை வாசம் எனக்கு பல பொழுதுகளில் கிட்டியிருக்கிறது. ஞானியின் மனத்தை போல அவர் உடல் வீசுகின்ற சுகந்தமும் நம்மால் எண்ணி வகுத்துவிட முடியாததுதான். ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருக்கின்ற பொழுதுகளில் என்னவென்று பிரித்தறிய முடியாத எத்தனையோ இனிய நறுமணங்கள் அனுபவம் ஆனதுண்டு. ஆன்ம சாதனைகளுக்கும் தெய்வீக மணங்களுக்கும் நேரடி தொடர்பு காலம் காலமாக பல கீழை மரபுகளில் முன்வைக்கப் பட்டிருக்கிறது. நிமித்தங்கள் என அவை அழைக்கப்படுகின்றன. இந்தக் கதை மற்றும் இதில் அளிக்கப்பட்டு இருக்கின்ற தகவல்கள் பலருக்கு பல புதியத் திறப்பு களை அளிக்கக்கூடும்.
ஒரு சில கதைகளையே எழுதி இருந்த பொழுதும் இந்தக்கதையில் ஒரு தனித்துவமான நடை சிங்கப்பூர் முகமது ரியாஸ் அவர்களுக்கு கைகூடி வந்திருக்கிறது.
உதாரணத்துக்கு ஒரு சில
கதவைத் திறந்ததும் வெளிச்சம் உள்ளே புக, தூசுகள் ஒளியில் விண்ணேற்றம் சென்றன.
தோல்வி வலியது. நீரில் நிற்கும் எண்ணெய்க் குமிழ் போல் சமூகத்தில் இருந்து அது விலகி நிற்க வைக்கிறது.
அத்தர்காரனுக்கு சூத்திரம் மட்டுமல்ல – அவன் கைகளுக்கு எதை கலந்தால் மனிதர்களை வாசனையால் பரவசப்படுத்த முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் லட்சணம் தொழில் அல்ல ஞானம் .
உன்னத லட்சியங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் லட்சியங்களால் ஞானிகள் வாழ்கிறார்கள்.
சேத்துக்குள்ள போறவனோடு கைய புடிச்சிப்போனா நாமளும் சேத்துக்குள்ள போகணும்
அம்மா காயவைத்த பால் சட்டி பொங்கி வழியும் வாசனை கருகலாக வந்துகொண்டிருந்தது
ஒய்யார பெண்களின் கழுத்துப்போல நீண்ட குப்பிகள், காதலிகளை கவரும் வகையில் அதை அடைக்கும் சுருக்குப்பைகள்
உள்ளங்கை விரிய குழந்தையின் வாய் திறப்பதுபோல் குவிக்கும் உதடுகள் கொண்ட குப்பிகளில் ஊத்திக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.
பூக்கள்தான் ஞானம்- அதனை எத்தனை முறை கசக்கினாலும் கசக்கிய கரங்களுக்கு வாசனையைத் தவிர வோறொன்றும் தராது.
எல்லோருக்குள்ளயும் பூ இருக்குதானே..
உள்ளம் உருகி எல்லாம் வல்ல பேரறிவிடம் வேண்டி நின்றால் எந்தத் துயருக்கு தான் தீர்வும் வழியும் கிடைக்காமல் போய்விடும்?. நேர்மறை உணர்வோடும், ஒரு உன்னத தத்துவ தரிசனம் காட்டியும், உணர்வெழுச்சி அளிக்கும் கதை இது.
பொதுவாக சராசரி வாசகர்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத பல தகவல்களும் பேசு பொருட்களும் இருந்தபோதும், வாசம் வாசனை என பல சொற்றொடர்கள் திரும்பத் திரும்ப வந்த போதும், இந்தக்கதை அதன் கவித்துவ மொழியின் அழகியலால், கச்சிதமான வடிவத்தால், உள்ளுறை ஆன்மீக தரிசனத்தால் தனித்து சிறந்து நிற்கிறது.
இஸ்லாமிய பின்புலத்தில் எழுத வருபவர்கள் மிகக்குறைவாகவே இருக்கின்ற தமிழ் இலக்கியத்தில் முகமது ரியாஸ் இஸ்லாம் மற்றும் சூஃபி மறை மொழியில் எழுதத் தொடங்கியிருப்பது மிக்க மகிழ்வளிக்கிறது.
என்னைக் கவர்ந்த இந்த கதையை எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய ஆளுமையான தங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
திருவண்ணாமலை
September 17, 2021
மொழிக்கு அப்பால்…
அன்புள்ள ஜெ
மொழியை பேணிக்கொள்ள… கட்டுரை வாசித்தேன். என்னுடைய சந்தேகம் இதுதான். மொழியை அளிக்காமல் பண்பாட்டை அளிப்பது எப்படி? மொழிதான் பண்பாடு என்று நான் நினைக்கிறேன். மொழியை அளிக்கவில்லை என்றால் பண்பாட்டையே தவறவிட்டுவிடுவோம். ஆகவேதான் மொழியைக் கற்பிக்க அவ்வளவு முயற்சி எடுத்துக்கொள்கிறோம்.
ஆனால் உண்மையில் நீங்கள் சொல்வதுபோல இங்கே வெளிநாட்டிலுள்ள குழந்தைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து தமிழ் எழுத்துக்களைக் கற்பித்தாலும்கூட ஆறுமாதம் தொடர்ச்சியாக தொடர்பு விட்டுப்போனால் மறந்துவிடுகிறார்கள். இதுதான் மும்பையிலும் டெல்லியிலுமுள்ள என்னுடைய உறவினர்களின் குழந்தைகளிடமும் காண்கிறேன். மொழியை கற்பிக்காவிட்டால் அவர்களுக்கு வெறுமொரு இன அடையாளம் மட்டும்தான் மிஞ்சும் என்று நினைக்கிறேன். அதுகூட காலப்போக்கில் இல்லாமலாகிவிடக்கூடும். இங்குள்ள கலவையான திருமணமுறையில் இன அடையாளமே அழிந்துகொண்டிருக்கிறது.
இதை எப்படிச் சமாளிப்பதென்பது பெரிய சிக்கல்தான். இங்கே இருக்கும் சீனர்கள், ஜப்பானியர்கள் எல்லாம் அவர்களின் தோல்நிறம் தவிர மற்றபடி அப்படியே அமெரிக்கர்களாகவே இருக்கிறார்கள்.
அரவிந்தன் மகாதேவன்
***
அன்புள்ள ஜெ,
மொழியைப் பேணிக்கொள்ள என்ற கட்டுரையை வாசித்தேன். மொழியை பேணிக்கொள்ளவே முடியாது என்று ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. புலம்பெயர்ந்த ஊர்களில் ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிகள் இல்லாத இடமே இல்லை. ஆனால் தமிழில் ஒரு பத்தி வாசிக்கும் குழந்தைகள் அனேகமாக ஒரு சதவீதம்கூட இல்லை. தமிழில் பேசும் குழந்தைகளே பெரும்பாலும் இல்லை. தமிழை கொஞ்சம் புரிந்துகொள்ளும் குழந்தைகள் உண்டு. அவ்வளவுதான். இனி இவர்களின் பிள்ளைகளின் காலத்தில் கண்டிப்பாக தமிழின் சாயலே இவர்களிடம் இருக்காது.
அப்படியென்றால் மிஞ்சுவது என்ன? அப்படியே கடலில் கற்பூரம் போல கரைந்துவிடவேண்டியதுதானா? அந்தக்கேள்விதான் என்னிடம் உள்ளது.
ஆர்.ராகவேந்தர்
***
அன்புள்ள நண்பர்களுக்கு,
இந்த தளம் தொடங்கியதிலிருந்தே சில தலைப்புக்கள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன, அதிலொன்று இது. ஏனென்றால் இணையத்தின் சர்வதேசத்தன்மை காரணமாக இந்தத் தளமும் ஒரு புலம்பெயர்’ தன்மையுடன் உள்ளது.ஆகவே அவர்கள் சந்திக்கும் அடிப்படைப்பிரச்சினையான இது இங்கே பேசப்படுகிறது. என்ன கூடுதலாகியிருக்கிறதென்றால் இன்று இந்தப்பிரச்சினை தமிழகத்தின் பெருநகரங்களுக்குரியதாகவும் ஆகிவிட்டது.
நான் முந்தைய கட்டுரையில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். தமிழ்ப்பண்பாடு என்பது தமிழ்மொழி மட்டுமே என்றும், தமிழ் மொழி என்பது தமிழ் எழுத்துக்கள் மட்டுமே என்றும் எண்ணும் இடத்தில்தான் சிக்கல் உள்ளது. தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்திலேயே புழங்கும் குழந்தைகளுக்குக் கற்பித்தால் அவை அவ்வெழுத்துக்களை அடிக்கடி பயன்படுத்தாத நிலையில் விரைவிலேயே அவற்றை மறந்துவிடும். அவ்வெழுத்துக்கள் ஓரளவு நினைவில் நின்றால்கூட அவற்றைக்கொண்டு சரளமாக வாசிக்கவோ, தமிழிலக்கியங்களையும் பிறநூல்களையும் பயிலவோ இயலாது. தமிழ் எழுத்துக்களைக் கற்றேயாகவேண்டும் என்னும் பிடிவாதம் உண்மையில் இளையதலைமுறைக்கு தமிழே சென்றுசேராமல் ஆக்கிவிடும். ஆக்கிக்கொண்டிருக்கிறது. இதுவே நடைமுறை யதார்த்தம்.
எனக்கு வந்த கடிதங்களில் சிலர் குழந்தைகள் இருமொழி கற்றுக்கொள்ள முடியும், குழந்தைமூளை அப்படிப்பட்டது என்றெல்லாம் எழுதியிருந்தனர். கண்முன் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தங்கள் பற்றுகளிலேயே நின்றிருக்கும் பிடிவாதம் மட்டும்தான் இது. இருவகை எழுத்துக்களையும் குழந்தைகளால் நினைவில் வைத்திருக்க முடியவில்லை, ஒன்றை தவறவிட்டுவிடுகின்றன என்பது நடைமுறை உண்மை. கண்முன் உள்ள யதார்த்தம். அதிலிருந்தே பேச ஆரம்பிக்கிறோம். இரு எழுத்துக்களையும் குழந்தைகள் எளிதாக நினைவில் வைத்திருக்கும் என்றால் பிரச்சினையே இல்லையே. இதையெல்லாம் பேசவே வேண்டாமே. நம் கற்பனைக்கு ஏற்ப யதார்த்த நிலையை வளைத்தபின் பேச ஆரம்பிப்பது வெட்டிவேலை.
எந்த மொழியானாலும் தொடர்ந்து புழங்காவிடில் அது மறக்கப்படும். தமிழைப் புழங்கும் சூழல் உலகமெங்கும் குறைந்தபடியே வருகிறது. வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் அது அறவே இல்லை. தமிழகத்திலேயே நகர்களில் மிகக்குறைவு. ஏனென்றால் நவீன வணிகம், தொழில், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மொழியாக ஆங்கிலமே உள்ளது. இதுவே உண்மை. நான் என்னுடைய திரைத்துறையில் உயர்தொழில்நுட்பத்தைக் கையாளும் தமிழ் இளைஞர்களைச் சந்திக்கிறேன். அவர்களால் ஒருவகை மழலைத்தமிழ் பேசமுடியும், அவ்வளவுதான். மற்றபடி எல்லாமே ஆங்கிலம்தான். அனைவருமே சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள்.
மொழியிலுள்ள பண்பாட்டுக்கூறுகளின் பெரும்பகுதி மொழியாக்கங்கள் வழியாகவும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கப் படலாம். தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு, தமிழிலக்கியம் சார்ந்த நல்ல மொழியாக்கங்களின் பயன் தவிர்க்கமுடியாதது. நான் பொன்னியின்செல்வனின் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த ஏராளமான இளைஞர்களை இப்போது சந்திக்கிறேன். அவர்களுக்கு கல்கி தமிழில் நம்மிடம் உருவாக்கிய அந்த இளமைக்கனவை ஆங்கில மொழியாக்கமும் அளித்துள்ளது. ஒலிநூல்கள் வழியாக தமிழிலக்கிய அறிமுகம் கொண்ட ஏராளமானவர்களை காண்கிறேன். ஆகவே கூடுமானவரை ஆங்கிலத்தில் தமிழகம் பற்றிக் கிடைக்கும் நூல்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம்.
ஆங்கில எழுத்துக்களில் தமிழ் படைப்புக்கள் கிடைக்குமென்றால், அவற்றை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி இளமையிலேயே அமையுமென்றால் மிக எளிதாக தமிழ்மொழி, அதன் இலக்கியம், அதன் பண்பாடு ஆகியவற்றுடன் அடுத்த தலைமுறை உறவை மேற்கொள்ளும். சிலநூறாண்டுகளுக்கு அந்த தொடர்பு நீடிக்கவும் செய்யும்.எப்படியும் அதுவே நிகழப்போகிறது, இன்றில்லை என்றால் சற்றுப் பிந்தி. இங்குள்ள அசட்டுப் பற்றுகளின் யுகம் முடிந்தபின்னர்.
ஆனால் எளிதாகக் கைவிட்டுப் போகாமலிருப்பது மதம் என்பதை காண்கிறேன். ஆப்ரிக்காவிலேயே முந்நூறாண்டுகளுக்கு பின்னரும் இந்து மதம் அம்மக்களிடையே நீடிக்கிறது. அவர்கள் அறிந்த மொழிக்கு மாறிக்கொள்கிறது. அங்கிருக்கும் மரபுகளுடன் உரையாடி கொஞ்சம் உள்ளிழுத்து தன்னை மாற்றிக்கொண்டு, அங்கிருக்கும் வாழ்க்கைமுறைக்கேற்ப சற்றே மாற்றம் கொண்டு நீடிக்கிறது.
மதத்தை இறைபக்தி என்று மட்டும் கொள்ளவேண்டியதில்லை. அது மாபெரும் பண்பாட்டுத்தொகை. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கே நம் முன்னோர் வாழ்ந்து, சிந்தித்து, ஊழ்கம் கொண்டு அறிந்தவை குறியீடுகளாகத் திரண்டுள்ள ஒரு பேரமைப்பு.மதம் என்பதே குறியீடுகளும் படிமங்களும் ஆழ்படிமங்களும்தான். அவை எல்லாம் ஆழுள்ளம் சார்ந்தவை. ஆகவேதான் அவை எளிதில் மாறாமலிருக்கின்றன. கருத்துக்களை மாற்றிக்கொண்டாலும் உள்ளம் மாற்றத்தை ஏற்காமலிருக்கிறது. அவை நம் கனவில் வாழ்பவை. நம் கற்பனைகளுக்கு வேர்நிலமாகி விரிந்தவை.
ஆகவே மதத்தை குழந்தைகளுக்கு அளித்தால் மொத்தப் பண்பாட்டையே அளிப்பதுதான். சொற்களாக அல்லாமல் படிமங்களாக அளிப்பது அது. முருகனும் கொற்றவையும் தென்னாடுடைய சிவனும் நின்றசீர் நெடுமாலும் தமிழில் இருந்து வேறானவர்கள் அல்ல. நீராட்டும், சுடராட்டும், மலர்செய்தலும்,நோன்பும்,வழிபாடும் நேரடியாகவே நம் பண்பாடுகள்தான். அவை வாழ்க்கைமுறையென ஆனால் எளிதில் அழியாமல் நீடிக்கும். அவை ஆழுள்ளத்தில் பதிந்தால் பண்பாட்டுத்தொகையென்றே நிலைகொள்ளும்.
இங்குள்ள அரைகுறை மொழியரசியலாளர் மதமறுப்பை மேற்கொள்ளலாம். அந்த இடத்தில் மொழியை அல்லது இனத்தை வைக்கலாம். அவர்களுக்குரிய அரசியல் கணக்குகள் அதிலுண்டு. அதற்கப்பால் ஒரு சர்வதேச மதமாற்றத் திட்டமும் அதிலுண்டு. மதத்தை மனிதர்களை அடிமைப்படுத்து போதை என்றும் பிரிவினைப்படுத்தும் சூது என்றும் மதமில்லாத மனிதனே சமத்துவ உலகை உருவாக்க முடியும் என்றும் சொல்வது ஒரு மோஸ்தர். அது சென்ற நூற்றாண்டில் பிரபலமாக இருந்த சிந்தனை. இன்று இளைஞர்களுக்கு ஒரு தோரணைக்காக அது பயன்படலாம். ஆனால் இங்குள்ள தமிழர்கள் பெரும்பாலும் மதநம்பிக்கையாளர்களே. அவர்களின் ஆழுள்ளத்தில் சைவம் வைணவம் நீடிக்கும் வரை தமிழ்ப்பண்பாடும் நீடிக்கும்.
அவ்வண்ணம் மதம் என பண்பாடு அளிக்கப்பட்டால் பின்னர் தேவையென்றால் தமிழை அவர்கள் கற்கமுடியும். தங்கள் அடையாளங்களை இழக்காமலிருக்கவும் தங்கள் பூர்வநிலத்துடனும் மரபுடனும் உள்ள உறவை அறுத்துக்கொள்ளாமலும் இருக்கமுடியும். பலநிலங்களில் அன்றாட வாழ்க்கையில் தமிழே இல்லாமலானவர்கள்கூட வழிபாட்டு மொழியாக தமிழைக் கொண்டிருக்கிறார்கள். ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் அன்றாடம் ஓதுகிறார்கள்.
தமிழ் தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்பவர்களின் புழக்கமொழியாக இல்லாமலானால்கூட அகமொழியாக நீடிக்கலாம். அதற்கும் மதம் என்னும் உறுதியான அமைப்பே ஒரே வழியாகும். வெறும் மொழிக்கூச்சல்களும் அரசியல்களும் அதைச்செய்ய முடியாது. ஏனென்றால் மதம் அளிக்கும் வேர்ப்பிடிப்பு மிக ஆழமானது. கரீபியன் தீவுகளுக்கு முந்நூறாண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழர்கள் மழுங்கிய தமிழில் தோத்திரங்கள் சொல்வதை முன்பு என் நண்பர் வெங்கட்ரமணன் பதிவுசெய்து கொண்டுவந்து காட்டினார். தமிழ் வெறும் ஒலியாக மருவிவிட்டது. மாரியம்மனும் முருகனும் மறையவில்லை.
ஆனால் மதத்தை அதன் செழுமையான தத்துவப்பின்னணியுடன், அறப்பிறழ்வு இல்லாமல் கற்பிக்கவேண்டுமென்பது முக்கியம்.மதம் என்னும் பெயரில் மானுடவிரோத மேட்டிமைவாதத்தை, சாதிக்காழ்ப்புகளை, மூடஆசாரங்களை அளித்தால் அது குளிப்பதற்குப் பதில் சேறுபூசிக்கொள்வதே ஆகும். மதத்தை பழைய மரபுப்படி வெறும் நம்பிக்கையாகவும், பழமையான புராணக்கதைகளாகவும் அளித்தால் இன்றைய நவீனக் கல்விச்சூழலில் குழந்தைகளிடம் அது கேலிக்குரியதாக ஆகும். அற்ப மேட்டிமைவாதத்தை அளித்தால் அது இன்றைய நவீன அறவியலுக்குள் வாழும் நம் அடுத்த தலைமுறையால் வெறுக்கப்படும். நவீன உலகுக்கு உரிய அழகியல்- தத்துவ – ஆன்மிக முழுமையாகவே மதம் அளிக்கப்படவேண்டும்.
அதற்கு பெற்றோர் மதத்தை உரியமுறையில் கற்கவேண்டும். இந்தியாவை விட்டு வெளியே சென்றதுமே நம் மக்களுக்கு குற்றவுணர்ச்சி வந்து விடுகிறது. ஆகவே இந்தியாவில் தங்கள் இளமையில் அறிந்த ஆகப்பழைய சம்பிரதாயங்களை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள். மூளைமழுங்கி பழைய உலகில் வாழ்பவர்களை நாடுகிறார்கள். அவர்கள் சாரத்தைவிட்டு சக்கையை மென்று துப்பும் சொற்களை ஏற்று அவற்றை தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்க முயல்கிறார்கள். நடை உடை வாழ்க்கை அனைத்திலும் நவீன உலகிலும் உள்ளத்தால் பழைய உலகிலும் புழங்கி கேலிக்குரியவர்களாக ஆகிறார்கள்.
மதத்தை இளமையிலேயே அளிக்கலாமா? இளமையில்தான் அளிக்கவேண்டும். நாம் அளிப்பது ஒட்டுமொத்தமான ஒரு கலாச்சாரத் தொகுதியை. எதிர்காலத்தில் அதிலிருந்து இறைவழிபாட்டை அந்தக்குழந்தை நீக்கிக்கொள்ளும் என்றால், நாத்திகனாக ஆகும் என்றால் அது அக்குழந்தையின் சுதந்திரம். நாமறிந்ததை நாம் அதற்கு கொடுக்கிறோம். அவ்வளவே நம்மால் செய்யமுடியும். அது நம் கடமை. எல்லாவற்றிலும் அதைத்தானே செய்கிறோம்? ஒன்றுமே கொடுக்காமல் இருப்பதே பிழையானது.
குழந்தை வளர்ந்த பின் மதத்தை வேண்டுமென்றால் அடையட்டுமே என்று சொல்பவர்கள் உண்டு. அக்குழந்தை மதத்தின் நம்பிக்கையை மட்டுமே வந்தடையும். அதன் ஆழ்படிமங்களை, அதன் நுண்ணுணர்வுகளை அவ்வாறு வளர்ந்தபின் உள்ளம் உருவானபின் எளிதில் வந்தடையமுடியாது. அது பெரிய இழப்பு. அக்குழந்தையின் வரலாற்றுணர்வு, அழகியலுணர்வு, மொழிநுண்ணுணர்வு எல்லாமே குறைப்பட்டதாகவே இருக்கும். அதனால் எளிய தர்க்கத்துக்கு அப்பால் செல்ல முடியாது. வெறும் மூளையோட்டல்களையே அது கற்றுக்கொள்ளும், கற்பனையும் ஆழுணர்வும் இல்லாமலிருக்கும்.
மதமோ தனிப்பண்பாடோ இல்லாமல் ‘மானுட’ பண்பாட்டுடன் குழந்தையை வளர்க்கலாமே என்று ஒரு கேள்வி அடிக்கடி வருவதுண்டு. அப்படி ஒரு பொதுவான மானுடப்பண்பாடு இல்லை. அது அமெரிக்கப் பண்பாடு அல்லது ஐரோப்பியப் பண்பாடாகவே இருக்கும். அதற்குள் கிறிஸ்தவ அல்லது தாராளவாதப் பண்பாடாக இருக்கும். எந்தப் பண்பாட்டை அளிக்கிறோம் என்பது நம் தெரிவு. நான் பண்பாடு என்பது கற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டு ஒழுகும் ஒன்று என நினைக்கவில்லை. பண்பாடு என்பது தலைமுறை தலைமுறையாக கைமாறி வந்துசேரும் ஒரு ஆழ்படிம -நுண்ணுணர்வுத் தொகை என நினைக்கிறேன். அதுவே கலைகள், சிந்தனைகளுக்கு அடிப்படையானது. நம் குழந்தைகளுக்கு அதை அளித்தாகவேண்டும். மனிதர்கள் கால்களால் வாழ்ந்துவிடலாம். ஆனால் அவர்களுக்குச் சிறகுகளும் தேவை.
ஜெ
வளர்பவர்கள்
அருண்மொழியின் குடும்பத்தில் எனக்கு முதலில் அணுக்கமாக ஆனவர்கள் அவளுடைய மாமாவும் அத்தையும்தான். திரு.வடிவேல் உற்சாகமே உருவானவர். உயரமாக சிவப்பாக பெரிய மீசையுடன் போலீஸ்களையுடன் இருப்பார். ஏதாவது அரசியல்கட்சி கூட்டங்கள் நடந்தால் கூட்டம் நடைபெறுவதற்கு அரைமணிநேரம் முன்பு பைக்கில் ஊரையும் களத்தையும் ஒரு சுற்றுசுற்றி வருவார். ஏராளமான போலீஸ்காரர்கள் அவருக்கு சல்யூட் அடித்துவிடுவார்கள். அதில் அப்படி ஓர் இன்பம். அஹ்ஹஹ்ஹா என நமக்கு அடிவயிறு கலங்கவைக்கும் வெடிச்சிரிப்பு.
மறைந்தவர்கள் வளர்வதைப்பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சங்கசித்திரங்கள் நூலில்.
பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதல் பாகன்
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினேன் அல்லனோ யானே! பொலந்தார்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே.
பெரிய கவளம் கொடுத்து பல ஆண்டு பேணிய பேருருவ யானையை இழந்த ஏழைப்பாகன் அது நின்றிருந்த கொட்டிலின் வெறுமையைக் கண்டு கண்ணீர் உகுப்பதுபோல நானும் இதோ தேர்த்திறன் மிக்கவனும், பொன்னணி அணிந்தவனுமாகிய கிள்ளி மறைந்தபின் அவனில்லாத இந்த முழங்கும் தொல்நகரின் நகர்மன்றத்தைக் கண்டு கலங்குகிறேன்.
நிலை- அருண்மொழிநங்கைஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்
பிரான்ஸிஸ் கிருபா மறைந்த செய்தி 16 மாலை வந்துசேர்ந்தது. உண்மையில் அது எதிர்பாராத ஒன்று அல்ல. அவருடைய உடல்நிலை சீர்கெட்ட நிலையிலேயே சில ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது. வலிப்பு அவ்வப்போது வந்துசென்று கொண்டிருந்தது. அவருடைய உடல் விடியற்காலையில் அவருடைய சொந்த ஊரான பத்தினிப்பாறைக்கு கொண்டுவரப்படும் என்று கவிஞர் நரன் சொன்னார்.
நேரில் செல்லவேண்டும் என முடிவுசெய்தேன். எப்போதும் அந்த முடிவையே உடனே எடுப்பேன். ஏனென்றால் இலக்கியவாதி மறைந்தால் சொல்லஞ்சலிகள் நிறைய வரும். நேரில் மிகக்குறைவான கூட்டமே வரும். ’ஊரில் இருந்தீர்களே, ஏன் செல்லவில்லை?’ என்று கேட்டால் பெரும்பாலானவர்களுக்கு அந்த எண்ணமே வந்திருக்காது என்பதை காணமுடியும். சிலர் சில்லறை காரணங்களால் கடைசியில் தயங்கிவிடுவார்கள். “அங்க நான் போய் எதுக்கு?” என்று சொல்பவர்கள் உண்டு. இதனால்தான் எழுத்தாளர்களின் இறுதிநிகழ்வுகள் பெரும்பாலும் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டதுபோலத் தோன்றுகின்றன.
இலக்கியவாதிகளின் இறுதிநாளை கௌரவிக்க ஆள்திரட்டிவர அமைப்புகள் இருப்பதில்லை. குழுவாக எவரும் கிளம்பி வருவதுமில்லை. பிறதுறைகளின் ஆளுமைகள் மேல் அவர்களின் ரசிகர்களுக்கு இருப்பதுபோன்ற பற்று பெரும்பாலும் இலக்கிய வாசகர்களிடம் இருப்பதில்லை. இசை, கலைத்துறை ஆளுமைகள் மேல் பற்று கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை முன்வைக்காதவர்கள். அர்ப்பணிப்பு கொண்டவர்கள். இலக்கியவாசகர்களுக்கு உண்மையில் தாங்கள்தான் முக்கியம், இலக்கியவாதி இரண்டாம்பட்சம்தான். இலக்கியமே கூட அவர்களுக்கு அவ்வளவு முக்கியமல்ல. அரிதான விதிவிலக்குகள் சிலரே.
பெரும்பற்று கொண்டவர்களே இலக்கியத்திலும் உண்மையில் சாதனையாளர்களாகிறார்கள். வாசகர்கள் என்னும் நிலையில் இலக்கியத்தை ஆழமாக பெற்றுக்கொள்பவர்கள் பற்று கொண்டவர்களே. பிரான்ஸிஸ் கூட அத்தகையவர்தான். அவரை நான் எங்கெல்லாம் பார்த்திருக்கிறேன் என எண்ணும்போது பல இறுதிநாட்களும் அஞ்சலிகளும் நினைவுக்கு வருகின்றன. பாலகுமாரன் மறைந்தபோது எங்கிருந்தோ நெடுந்தூரம் நடந்து வந்தவர் போல வியர்த்து களைத்து ஓரமாக நின்றிருந்தார். நான் அவர் தோளை மட்டும் தட்டிவிட்டு வெளியே நடந்தேன்.
ஜெயகாந்தன் பொதுவான சமூக ஆளுமை. ஓர் இலக்கிய ஆளுமைக்கு தானாகவே இறுதிநாள் அஞ்சலிக்கு இலக்கியவாசகர்கள் பெருமளவுக்குத் திரண்டது என்றால் கடைசியாக சுந்தர ராமசாமிக்குத்தான். எவ்வகையிலோ இலக்கிய வாசகனின் ஆணவத்தை கடந்து எழுந்து நிற்பதாக அவருடைய ஆளுமை இருந்தது. வேறெந்த எழுத்தாளருக்கும் பெருமளவில் வாசகர்கள் இறுதிநாள் செலவுக்கு திரண்டதில்லை. எனக்கு எப்போதும் உருவாகும் அச்சம் என்பது படைப்பாளியின் இறுதிநாள் நிகழ்வுக்கு இலக்கிய வாசகர்கள் என ஒருவர்கூட வரவில்லை என்னும் நிலை அமைந்துவிடக் கூடாது என்பதுதான். ஆகவே தொலைபேசியில் அழைத்து அருகிலிருப்பவர்களிடமெல்லாம் செல்லும்படி மன்றாடுவதுண்டு. கூடுமானவரை நான் சென்றுவிடுவேன்.
வாசகர்களிடம் சொல்ல விரும்புவது இதுதான், ஒரு படைப்பாளியின் இறுதிநாளுக்குச் செல்வதென்பது வாசகனின் கடமைகளில் ஒன்று. ஒருவேளை அவன் அவருக்குத் திருப்பிச் செய்யக்கூடுவதும் அது ஒன்றுதான். படைப்பாளியை ஊராரும் வீட்டாரும் கொண்டாடாமல் போகக்கூடும். வாசகனும் அவனை புறக்கணித்தான் என்றால் அது அப்பண்பாட்டுக்குப் பெரும்பழி. அது ஒருபோதும் நிகழலாகாது. சென்னையில் ஞானக்கூத்தன் மறைந்தபோது நான் ஒவ்வொருவராகக் கூப்பிட்டுச் சொல்லியும்கூட என் சென்னை நண்பர்களில் பலர் செல்லவில்லை. அவர்கள்மேல் அந்த மனத்தாங்கல் இன்றும்கூட எனக்கு தீரவே இல்லை.
பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதிநாள் அஞ்சலிக்கு நல்லவேளையாக சென்னையில் இருந்து சாம்ராஜ் போன்று பிரான்ஸிஸின் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். நெல்லையிலும் நாகர்கோயிலிலும் பிரான்ஸிஸை அறிந்த இலக்கிய நண்பர்கள் பத்துப்பதினைந்துபேர் இருந்தனர். மற்றபடி அரசியல்சார்ந்த இலக்கிய அமைப்புகளோ, அவற்றின் உறுப்பினர்களோ கண்ணில் படவில்லை. வாசகர்கள் என்றும் எவருமில்லை. ஆனால் இந்தச் சிறுதிரளே நிறைவளித்தது.
நான் காலையில் தொலைபேசியில் அழைத்து நான் இறுதிநாள் நிகழ்வுக்குச் செல்வதாகவும், வரவிரும்புவோரைச் சேர்த்துகொள்வதாகவும் நண்பர்களிடம் சொன்னேன். நட்புக் குழுமங்களிலும் தெரிவித்திருந்தேன். ஆனந்த்குமார் திருவனந்தபுரத்தில் இருந்தார். சுஷீல்குமாருக்கு காய்ச்சல். லக்ஷ்மி மணிவண்ணனின் மாமியார் ஆஸ்பத்திரியில் இருந்தார். போகன் மட்டும் வருவதாகச் சொன்னார்
கிளம்பும்போது மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு லக்ஷ்மி மணிவண்ணன் வந்துவிட்டார். லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தவர். அவர்களுக்கிடையே இருந்த நட்பு இனிமையும் சித்திரவதைகளும் நிறைந்த ஒன்று. லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவை கூடுமானவரை தாங்கிக் கொண்டவர்களில் ஒருவர்.
மதியம் கிளம்பி வள்ளியூர் சென்றபோது சிறில் அலெக்ஸ் அழைத்தார். அவர் வடக்கன்குளத்தில் அவருடைய அன்னையைப் பார்க்க வந்திருந்தார். அவரும் வருவதாகவும், பேருந்தில் வரும் ஜெயராம், அருள் இருவரையும் சேர்த்துக்கொள்ள காத்திருப்பதாகவும் சொன்னார். வள்ளியூரில் அவர்களை இணைத்துக்கொண்டு பத்தினிப்பாறைக்குச் சென்றோம்.
பிரான்ஸிஸ் கொண்டு வரப்பட்டிருந்தார். வாங்கிக்கொண்டு சென்ற மலர்வளையத்தையும் மலர்மாலையையும் அவருக்கு வைத்து அஞ்சலி செலுத்தினோம். அவருடைய நண்பர்களான கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து அவர் அருகே நின்று அவர் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் உடல் மாதாகோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
பத்தினிப்பாறை சின்னஞ்சிறு ஊர். எழுபது வீடுகள்தான். ஏரிப்பாசனம் இருந்தாலும் ஒரு பாலைவனத்தன்மை தோன்றிய நிலம். 1930ல் கோஸ்தா குடும்பம் என்னும் நிலவுடைமையாளர்களால் கட்டப்பட்ட சிறிய மாதாகோயில் பழைய பாணியில் அமைந்தது. சுதையாலான வளைவுகளுக்குமேல் ஓட்டுக்கூரை. வட்டமான ஓளிச்சாளரங்கள்.
ஐம்பதுபேர் அமரக்கூடிய அளவுள்ளது அக்கோயில்.புனித ஜார்ஜியார் ஆலயம் என நினைக்கிறேன். பெஞ்சுகள் இல்லை, தரையில் அமரவேண்டும். அழகிய ஆல்டர். பிரான்ஸிஸின் உடல் அங்கே வைக்கப்பட்டது. அங்கே அரங்கு நிறைய அமர்ந்து கொண்டோம். அங்கும் கவிஞர்கள் பிரான்ஸிஸின் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். ஒருவேளை பிரான்ஸிஸின் கவிதைகள் அவர் மண்ணில் ஒலிப்பது அதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.
நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் ஓரிரு சொற்கள் சொல்லவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டோம். நான் “பிரான்ஸிஸ் துன்பப்பட்ட ஆத்மா. துன்பப்படுபவர்கள் கிறிஸ்துவுக்கு அணுக்கமானவர்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. பிரான்ஸிஸ் இன்னும் கிறிஸ்துவுக்கு அணுக்கமாகிவிட்டிருக்கிறார். அவருக்கு அஞ்சலி” என்று நான்கு சொற்றொடர்கள் சொன்னேன். லக்ஷ்மி மணிவண்ணனும் சில சொற்கள் சொன்னார். சிறில் அலெக்ஸ் பைபிளில் இருந்து சில வசனங்களை வாசித்தார்.
பாதிரியார் பிரார்த்தனையையும் ஜெபத்தையும் நிகழ்த்தினார். தரையில் அமர்ந்து அந்த சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். வழக்கமாக அனல்கொளுத்தும் நிலம். அன்று மழைத்துளிகளுடன் குளிர்காற்று எல்லா ஜன்னல்கள் வழியாகவும் பீரிட்டுக்கொண்டிருந்தது. வானம் இருண்டு முகில்படர்ந்திருந்தது. அந்தவேளையில் அச்சொற்கள் ஒரு நிறைவை அளித்தன. நிறைவுதான், வழக்கமாக இறப்புகளில் மெல்ல மெல்ல துயர் விலகும்போது அந்நிறைவு வரும். பிரான்ஸிஸ் ஏற்கனவே எல்லா துயரையும் பிறருக்கு அளித்துவிட்டவர்.
எல்லா மதங்களிலும் சாவுச்சடங்குகளின் சொற்றொடர்கள் ஏறத்தாழ ஒன்றே. சாவு என்பது அழிவு அல்ல, அது அழிவற்ற ஒன்றுடன் இணைதல். அழிவின்மை கொள்ளுதல். சாவு என்பது முறிந்துபோதல் அல்ல, அது ஒரு முழுமை. திரும்பத் திரும்ப மானுடம் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. சாவு என்பது என்ன என அறியவே முடியாது. இந்த சொற்கள் அந்த அறியமுடியாமைமேல் நாம் அமைத்துக்கொள்பவை. அவற்றின் அர்த்தம் நாம் இங்கு வாழ்ந்து திரட்டிக்கொள்வது.
கிறிஸ்தவ இடுகாடு சற்று தொலைவில் இருந்தது. அறுவடை முடிந்த வயல்கள் வழியாக நடக்கவேண்டும். மழை பெய்யுமென தோன்றியதென்றாலும் அந்நிலத்தில் மழை அவ்வாறு எளிதில் பெய்துவிடுவதில்லை. முள்மண்டிய இடுகாட்டில் இந்த ஓராண்டுக்குள் புதைக்கப்பட்டு, இன்னும் கல்லறை எழுப்பப்படாத பல புதைமேடுகள் தென்பட்டன.
பிரான்ஸிஸுக்காக தோண்டப்பட்ட குழி அவ்வளவு ஆழமில்லை. செம்மண் பாறைபோல இறுகிய தரை. குழியெடுப்பது எளிதல்ல என்று தோன்றுகிறது. பாதிரியார் ஜெபித்தபின் பிரான்ஸிஸின் பெட்டி கயிறுகளில் பெட்டி கட்டப்பட்டு மண்ணுக்குள் இறக்கப்பட்டது. மூன்றுமுறை மண் அள்ளிப்போட்டு விடைகொடுத்தேன்.
இந்த நிகழ்வின் நிறைவுக்குக் காரணம் பாதிரியார் ஜோ. இலக்கியம் அறிந்தவர். தன் உரையிலேயே புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டார். நெல்லையில் வழக்கறிஞர் வேலைபார்ப்பவர் இங்கே பாதிரியார் இல்லாததனால் பகுதிநேரப்பணியாக வந்திருந்தார். ஆழ்ந்த குரலில் பாடி பிரார்த்தனை செய்தார். அவருக்கு எங்கள் வணக்கங்களையும் மரியாதையையும் தெரிவித்துவிட்டு திரும்பி நடந்தோம்.
கிறிஸ்டியேன் என்னும் நண்பர் கூட நடந்தபடி பேசிக்கொண்டு வந்தார். பிரான்சிஸ் ஒரு கவிஞர் என அந்தச் சிற்றூரில் அறிந்தவர் அவரே. பிரான்ஸிஸ் விருதுபெற்ற போது அந்த விழாநிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறார். அந்த ஊரே மணப்பாடு ஊரைச்சேர்ந்த மீனவர் குடியினரான நிலச்சுவான்தார்களான கோஸ்தா குடும்பத்துக்கு சொந்தமானது. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர். ஊரில அனைவரும் அவர்களின் வேலைக்காரர்கள் என்றார்.
சுதந்திரத்துக்குப்பின் நிலச்சீர்திருத்தத்தின்போது அக்குடும்பத்தின் நிலம் கைப்பற்றப்பட்டு உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கோஸ்தா குடும்பம் நீதிமன்றம் சென்றது. வழக்கு நடக்கும்போதே நிலத்தை விற்றுவிட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டது. இன்று நிலத்தின் பட்டா நிலத்தை வாங்கியவரிடமும் நிலஉரிமை ஊராரிடமும் உள்ளது. ஆகவே இடுகாட்டுக்கு வழியை அடைய முடியவில்லை. பிரான்ஸிஸ் கூட சில சாவுகளின்போது அதைப்பற்றி பேசியிருக்கிறார் என்றார்.
ஊர் நடுவே கோஸ்தா குடும்பத்தின் நூறாண்டுப் பழமையான மாளிகை உள்ளது. அது கைமாறி இன்று ஒரு பண்ணை விடுதியாக இருக்கிறது. பெரிய சுற்றுவேலியுடன், காவலுடன் வேறொரு உலகமாக ஊர் நடுவே நின்றிருக்கிறது. அதற்குள் சென்று பார்த்ததே இல்லை என்றார் கிறிஸ்தியோன். பிரான்ஸிஸும் அதைப் பார்த்ததில்லை. அவர்கள் அணுகமுடியாத ஒரு மிதக்கும் கலம் போல அது.
அந்தி சாயத் தொடங்கியபோது விடைபெற்று திரும்பி வந்தோம். ஒரு கவிஞனின் இறுதிநாள். அவனுடைய எளிய ஊர். அவன் உறவினர்கள் முன் ஒலித்த அவர்கள் அறிந்தே இராத அவனுடைய கவிதையின் சொற்கள். அந்த மாதாகோயிலில் அவனுக்காக ஒலித்த புனித வேதாகமத்தின் அழிவற்ற சொற்கள்.
[புகைப்படங்கள் இணையத்திலிருந்து]
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

