Jeyamohan's Blog, page 917
September 13, 2021
சுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு
அன்புள்ள ஜெ
நேற்று (11/09/2021) புனைவுக் களியாட்டு தொகுப்பின் நூறாவது கதையான வரம் கதையை சுக்கிரி குழுமத்தில் வாசித்து உரையாடி நிறைவு செய்தோம். 2020 ஏப்ரல் ஆரம்பத்திலேயே ஓரிரு நட்பார்ந்த உரையாடல்களுக்குப் பிறகு உடனேயே ஆனையில்லா கதையை எடுத்து உரையாட ஆரம்பித்தோம். [உங்கள் வாசகர்கள் நேர்சந்திப்பில் மாத்திரம் அல்ல, ஸூம் முதலான மெய்நிகர் சந்திப்புகளிலும் ராணுவ ஒழுங்கோடு இருப்போம் என்பதை முதல் உரையாடலிலிருந்தே நிரூபித்து வந்திருக்கிறோம் !!]. கதையைத் தாண்டி உரையாடல் வெளியில் செல்லும்போதோ, அல்லது இந்த இடத்தில் மட்டுறுத்தல் தேவை என்ற நிலை உருவாகும்போதோ தயங்காமல் உறுதியாக அதேசமயம் நட்புணர்வோடு அவை செய்யப்பட்டு வெகுவிரைவிலேயே பயனுள்ள ஒரு உரையாடல் களமாக இது மாறியது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு என இதை ஆரம்பித்தோம். இரண்டு மணி நேரம் நீளும் வகையிலான உரையாடல் என ஆரம்பித்தது, விரைவிலேயே பங்குபெற்றோர் அதிகரித்ததாலும் உரையாடல் சுவையேறியதாகவும் ஆனதால் இரண்டரை, மூன்று மணி நேரம் என நீண்டது. முதலில் ஒவ்வொரு வாரமும் இரண்டு கதைகள் என உரையாட ஆரம்பித்தோம். இருபத்தி ஐந்து கதைகளைத் தாண்டும்போது, ஒவ்வொரு வாரமும் ஒரு கதை போதும் என முடிவெடுத்தோம். நீங்கள் பங்குபெறும் பிற ஸூம் சந்திப்புகள், ஆளுமைகளுடனான விஷ்ணுபுர ஸூம் கலந்துரையாடல்கள் தவிர வேறு எதற்கும் இந்த வாராந்திர உரையாடல்கள் தள்ளிவைக்கப்படவில்லை. விஜயராகவன் ஸார், பழனி ஜோதி, மதுசூதனன் சம்பத், ராஜேஷ் ஆகியோர் இவ்வார நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும் மட்டுறுத்தியும் வருகின்றனர். கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து பின்னர் அதன்மீதான உரையாடல்கள், கேள்விகள், விவாதங்களை முன்வைப்பது என்னும் வடிவத்தை இவ்வுரையாடல்கள் கொண்டுள்ளன.
குழுமத்திற்கு என்ன பெயர் வைப்பது என ஆரம்பித்து, புனைவுக் களியாட்டின் “இடம்” கதையில் தோன்றி “சூழ்திரு” கதையில் பெயர்பெற்ற குரங்கின் பெயரான சுக்கிரி என்பதையே சூட்டினோம். குழும உறுப்பினர்களின் இயல்புக்கேற்ற பெயரைத்தான் குழுமம் தானே சூடிக்கொள்கிறது என்பதை நாங்களும் நிரூபிக்கிறோம். மெய்நிகர் சந்திப்பு என்பதால் வெளிநாட்டிலுள்ள நண்பர்கள் இதில் கலந்துகொள்வது சாத்தியமானது. நானும் ஒன்றரை வருடங்கள் வெளிநாட்டிலிருந்து பின்னர் இதில் கலந்துகொண்டேன் என்பதால் இச்சந்திப்புகள் கொடுத்த நிம்மதியை வார்த்தையில் சொல்லிவிடமுடியாது. உண்மையிலேயே உலகின் எல்லா மூலையிலிருந்தும் கலந்துகொண்டு உரையாடினார்கள். ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நள்ளிரவுவரை விழித்திருந்து கலந்துகொண்டார்கள் என்றால், அமெரிக்காவில் தங்களின் அதிகாலை நேரத்தில் வந்து உரையாடினார்கள். நிலத்திலிருந்து கலந்துகொண்டவர்கள் போதாதென்று நீரில் பயணித்துக் கொண்டிருந்த ஷாகுலும் இணையம் அனுமதிக்கும்போதெல்லாம் வந்து கலந்துகொண்டார். பயணத்தின்போது காரை சாலையோரத்தில் நிறுத்தி கலந்துகொண்ட பழனிஜோதி, காரை ஓட்டிக்கொண்டே விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, பயணத்தை முடித்த சூட்டோடு பேசவந்த ராஜேஷ், வடஇந்தியாவில் பணியில் ஈடுபட்டுக்கொண்டே கிடைத்த இடைவெளியில் கலந்துகொண்டு 2ஜி நெட்வொர்க்கிலும் ஸூம் வேலை செய்யும் என நிரூபித்த கோகுல், திருவண்ணாமலையில் தனது குடிலிலிருந்து பங்குபெறும் ஆனந்த் ஸ்வாமி அவர்கள், தனது வேலைப்பளுவிற்கு நடுவிலும் முடிந்தபோதெல்லாம் இங்கு வந்து கலந்துகொள்ளும் சந்தோஷ் லாவோசி, ரமேஷ் அண்ணா முதலானோர் என விதவிதமான பங்கேற்புகளால் இந்த ஒன்றரை வருடமும் சந்திப்புகள் நிரம்பியிருந்தன.
உரையாடலுக்கென சந்தித்துக் கொண்டவர்கள் வெகுவிரைவிலேயே இறுக்கமான ஒரு நண்பர் வட்டம் எனவும் ஆனோம். தனிப்பட்ட நட்புகளும் உருவானது. ஷாகுல் நீரிலிருந்து நிலத்திற்கு வந்துவிட்டதால், நண்பர்கள் குழுவாக சேர்ந்து இக்கதைகள் நிகழ்ந்த இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற திட்டமிருக்கிறது. அதுவும் கூடிய சீக்கிரமே நிகழும் என நினைக்கிறேன்.
இக்குழும நண்பர்கள் இக்காலகட்டத்தில் உருவாக்கும் தங்களது படைப்புகளை பகிரும் ஒரு தளம் எனவும் இக்குழுமம் ஆனது. ஷாகுல் தங்களது வெண்முரசால் உந்தப்பட்டு, தனது கப்பல்பணி தொடர்பான விவரங்களையும் அன்றன்றைய வேலைகுறித்த தகவல்களையும் கட்டுரையாக பகிர்வேன் என அறிவித்து அவ்வாறே தினமும் இக்குழுமத்தில் எழுதி பகிர ஆரம்பித்தார். அவற்றுக்கென ஒரு வலைப்பூவை உருவாக்கி அவற்றை பதிவுசெய்ய ஆரம்பித்தோம். இதுவரை எழுபதிற்கும் மேலான பதிவுகளை எழுதியிருக்கிறார். அவற்றில் பல வெகு ஆழமானவை. சிறந்த வாசிப்பை கொடுப்பவை. நாங்களறியாத ஒரு புதிய உலகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்துபவை. நண்பர் செந்தில்வேல் தினமும் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லி அந்த வீடியோவை யூட்யூபில் வலையேற்றி வருகிறார். தற்போது முன்னூறாவது குறளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இவைதவிர குழும நண்பர்கள் தமது ரசனை சார்ந்த பதிவுகளை பகிர்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நானுமே உந்தப்பட்டு ஒரு சிறிய தொடர் ஒன்றை இக்குழுமத்திற்கு எழுதிப் பகிர்ந்தேன்.
எல்லா குழுமங்களையும் போல முதலில் வாட்ஸாப்பில் ஒரு குழுவை உருவாக்கி நட்பையும் உரையாடலையும் பேணிக்கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் தீவிரமான உரையாடல்கள் வாட்ஸாப்பிலும் நிகழத் தொடங்க, கோகுலின் யோசனையை ஏற்று குழுமத்தை வாட்ஸாப்பிலிருந்து ஸ்லாக் என்னும் செயலிக்கு மாற்றினோம். இம்மென்பொருளில் ஒவ்வொரு தலைப்பிலும் தனித்தனியே சேனல்கள் உருவாக்கி உரையாடலாம் என்ற வசதியிருப்பதால் இவ்வகை உரையாடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. வாரவாரம் விவாதிக்கும் கதைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சேனல் என்பதுபோக கதாநாயகி, குமரித்துறைவி போன்ற தங்களது பிற படைப்புகளுக்கும் தனிச் சேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுஷில்குமாரின் மூங்கில் தொகுப்பிற்கும் அவ்வாறே தனிச்சேனலை உருவாக்கி உரையாடினோம். வாட்ஸாப்பிலிருந்து ஸ்லாக்கிற்கு மாறிய வகையில் உரையாடல் இன்னமும் செறிவானதாக மாறியிருக்கிறது.
முழுக்கவே அரசியல் பற்றி பேசாத ஒரு குழுமமாக இது இருந்து வந்திருக்கிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதனாலேயேதான் இந்த நட்புச்சூழல் சாத்தியமாகியிருக்கிறது என நினைக்கிறேன். அரசியலையும் பேசலாம், நாம் அந்தளவு முதிர்ச்சியானவர்கள்தான் என்ற எண்ணம் அவ்வப்போது எங்களிடையே எழுந்து வந்தாலும், எதற்கும் இருக்கட்டும் என அதை விலக்கியே வைத்தோம். அது நிச்சயம் பலனளித்திருக்கிறது என்று சொல்வோம். கதை பற்றிய உரையாடல்களைத் தவிர ஸ்லாக்கிலும் வாட்ஸாப்பிலும் பகிரப்பட்டவை என்று பார்த்தால், இசைக்கோவைகள், கதைகளின் சம்பவங்களை நினைவூட்டும்படி வெளியில் நிகழ்ந்த சில நிகழ்வுகள், பிற படைப்புகளுக்கான லிங்க்குகள் என விரல் விட்டு எண்ணிவிடும்படியான தலைப்புகளிலேயே உள்ளன. இந்த நோயச்ச காலகட்டத்தைத் தாண்டிவர இது மிகவும் உதவியாக இருந்தது. உண்மையில் கொரோனா பற்றியும்கூட வெகு அரிதாகவே இக்குழுமத்தில் பேசப்பட்டுள்ளது! ஆரம்பத்தில் சிற்சில மட்டுறுத்தல்களுக்குப் பிறகு வெகு எளிதாக இந்தத் தரம் என்பது குழும நண்பர்களின் இயல்பு என்றே மாறியுள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இயல்பாக வெளிப்படும் தளமாக இது அமைந்துள்ளது.
இதுபோன்ற ஒரு மனநிலையையும் சூழலையும் நிமித்தத்தையும் உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
மிக்க அன்புடன்,
கணேஷ் பெரியசாமி.
கல்லின் காலத்தினூடாக ஒரு நாள்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
பேருந்துகளை அவிழ்த்து விட்டு, கோயில்களையும் தொல்லியல் களங்களையும் திறந்து விட்டு விட்டதால், வார இறுதிகளில் மீண்டும் பயணம் துவங்கி விட்டேன். சென்ற சனி ஞாயிறு போட்ட பயண திட்டம் அடுத்த வாரத்துக்கு மாறி விட்டதால், இந்த வாரத்தை அப்படியெல்லாம் விட்டு விடக்கூடாது என்று முடிவு செய்து, வழியில் சில இடங்களை பார்த்தபடி செஞ்சி சிங்கவரம் வரை செல்வது குறித்து நான் போட்டு வைத்திருந்த வரைபடத்தை புதுவை தாமரைக் கண்ணனுக்கு அனுப்பி போகலாமா என்று கேட்டேன். வழக்கம் போல புதுவை மணி, தாமரைக்கண்ணன், திருமாவளவன் வந்து சேர, மணியின் காரில் ஞாயிறு காலை 7.30 கு பயணம் துவங்கியது.
பொதுவாக இந்திய நிலத்தில் தமிழ்நாட்டில் கடலூர் பகுதி மட்டும் தனித்த பருவச் சூழல் கொண்டது. எங்களுக்கு மட்டும் கோடைப் பருவம் மார்ச் 15 இல் துவங்கி ஜூலை 15 இல் முடியும். ஒரே ஆறுதல் எங்களுக்கு அக்னி நட்சத்திரம் கிடையாது. காரணம் மொத்த கோடையும் எங்களுக்கு அதுதான். ஜூலை 15 கு பின்னர் வானம் சற்றே கனியும். இது வானம் கனியத் துவங்கி விட்ட பருவம். காலை எட்டு மணிக்கு மொத்த புதுவையும் மெல்லிய சாரல் மழையில் கூலிங் க்ளாஸ் வழியாக பார்ப்பது போல குளிர்ந்து துலங்கியது. தாமரையும் திருமாவும் விழுப்புரம் போகும் வழியில் வந்து இணைந்து கொள்ள, “முதல்ல சாப்ட்டு போய்டலாமா” என்று தாமரை உரையாடலை துவங்க, திருமா அவர் மனைவியின் அன்பு தொல்லையை தட்ட இயலாமல் ஐந்து இட்லி சாப்பிட்டுவிட்டே கிளம்பினேன் என்றார். சென்ற பயணம் அளித்த பீதி. மொத்த நாளுக்கும் அதிகாலை துவங்கி இரவு முடிய ஒரே ஒரு தேநீர் மட்டுமே சென்ற முறை திருமாவுக்கு வழங்கப்பட்டது. சதி ஏதும் இல்லை. சூழல் அவ்வாறு அமைந்து விட்டது.
விழுப்புரம் செஞ்சி நெடுஞ்சாலையில் ஏசாலம் அருகே, (இங்கிருந்தே ஊருக்குள் உள் வழியாக மண்டகப்பட்டு, எண்ணாயிரம் சமணர் குன்று, எல்லாம் போக முடியும்) குடும்பத்தினர் கூடி நடத்தும் உணவகம் ஒன்றில் ருசியான காலை உணவு உண்டபடியே தளவானூர் கிராமத்துக்கு வழி கேட்டோம். அருகில்தான் இருந்தது. சாரல் பொழியும் சாம்பல் வண்ண வானின் கீழ், இருண்ட செம்பு வண்ண உருண்டைப் பாறைகள் குவிந்து மலைத்தொடர் என்றான எல்லை நோக்கி, பச்சை முளைத்த வயல் சதுரங்களுக்குள் ஆட்கள் வேலை செய்யும் கிராமங்கள் வழியே சென்று சேர்ந்தோம்.
தளவானூர் சத்ரு மல்லேஸ்வரர் குடைவரை.பெரும் பாறையை பிணைத்து நின்றதொரு பேராலமரம். கோடி நாவுகள் கொண்டு காற்றுடன் பேசிக்கொண்டிருந்தது நானறியா மொழியில். மரம் பிணைந்த பாறைக்குப் பின்னே நீளும் ஒற்றையடிப்பாதை. எக்ரா கணக்கில் உழுது புரட்டப்பட்ட நிலத்தின் உளை சேற்றில் நடந்து ஆலமரத்தை அடைந்தோம். மரத்தின் கீழ் நிலமெங்கும் மட்கிய இலை தழைகள் மெத்தை போல் படிந்திருக்க, பாம்பு பீதியுடன் அதில் நடந்து, பெரும் பாறையை சுற்றி வந்து ஒற்றையடிப் பாதையை கண்டு பிடித்தோம். அங்கே வைத்திருக்கும் தொல்லியல் துறை பதாகையையே ஒரு புதையல் வேட்டையின் க்ளு போலத்தான் கண்டுபிடிக்க வேண்டும். தடத்தில் நடந்து பெரும் பாறைகள் சரிந்த தொடரின் இறுதிப் பாறையில் குடையப்பட்டிருந்த சத்ரு மல்லேஸ்வரர் கோயிலைக் கண்டோம்.
முதலாம் மகேந்திர பல்லவன் எழுப்பிய கோயில். இரு பக்கமும் கேஷுவல் போஸ் இல் நிற்கும் துவார பாலகர்கள். இடதுபுற துவாரபாலகன் தலை அலங்காரம் முதல் பாதம் வரை அத்தனை நளினம். இடது கை சுட்டும் பாவத்தின் பெயர் விஸ்மையா. வியப்பு. முகப்புத் தூண்கள் சென்று இணையும் விதான விளிம்பு முழுக்க, வெவ்வேறு பாவங்களில் உறைந்த கீர்த்தி முகங்கள். செறிவாக நுட்பமாக செதுக்கப்பட்ட வாயிலின் மகர தோரணம். தூண்களில் பட்டுச் சேலை எம்பிராய்டரி போன்ற பூவேலைப்பாடுகள். அதன் மேலே இறுக்கி அமைக்கப்பட்ட இரும்பு வளையங்கள். பிறந்த குழந்தையின் சுண்டுவிரலை கட்டிங் பிளேயர் கொண்டு இறுக்கியது போன்றதொரு குரூர சித்திரம்.
முக மண்டபத்துக்கு உள்ளே இடது புறம் தனி குடைவரையில், இருபுறமும் எழிலார்ந்த துவாரபாலகர்கள் நிற்க சத்ரு மல்லேஸ்வரர் கருவறை. உள்ளே செல்ல முடியாது. ஊருக்குள் சிலர் தனியே நந்தி செய்து கோவிலுக்குள் கொண்டு வந்து வைத்து இதை ஊர் வழிபாட்டு கோவிலாக மாற்ற முயற்சிக்க, அரசு தலையிட்டு இரும்பு வளையங்கள் அறைந்து மரக்கதவு போட்டு குடைவரையை மூடி வைத்திருக்கிறது. சற்று நேரம் அங்கேயே இருந்து ஒவ்வொன்றையும் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தோம். தொல்லியல் துறை வைத்திருந்த வரலாற்று குறிப்புப் பலகை கிட்டத்தட்ட அழிந்த நிலையில் நிற்க, அதன் மேல் படுத்திருந்த ஆட்டை விரட்டிவிட்டு தாமரை அந்தப் பலகை எழுத்துக்களை கிட்டத்தட்ட ஆதித் தமிழ்க் கல்வெட்டு ஒன்றை படிப்பது போல விரலோட்டிப் படித்து வரலாற்றை இயம்பினார். சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்து விட்டு வேலிக்கு வெளியே அம்போவென குந்திக் கிடக்கும் நந்தி தேவரைக் கடந்து, குடைவரைப் பாறையை சுற்றிக்கொண்டு அடுத்த இலக்கினை நோக்கி பயணித்தோம்.
தளவானூர் சமணர் குன்று.அடுத்த இலக்கு சத்ர மல்லேஸ்வரம் கோவிலுக்கு பின்னால் குன்றேறி காண வேண்டிய சமணர் படுகை. பொதுவாக நாம் பள்ளிப் பாடம் வழியே பல்லவர்கள் களப்பிரர்களை ‘விரட்டி அடித்த’ கதையை மட்டுமே அறிந்திருக்கிறோம். அவர்கள் உருவாக்க முனைந்த கலாச்சார சங்கிரஹ முயற்சிகள் கலை வரலாற்று ஓட்டத்தில் பெரிதாக பேசப்படுவது இல்லை. காஞ்சிபுரம் துவங்கி தென்னாற்காடு வரை சமணமும் பௌத்தமும் செழித்த இடத்தில் எல்லாம், வைணவ, சைவ, சாக்த மரபுகளுக்கான வழிபாட்டு இடங்களை அமைத்தவர் பல்லவர்கள். இங்கேயே செஞ்சிக்கு அருகே 15 கி மி குள் தொண்டூர் என்றொரு சமண மையம் உண்டு. அதன் அருகே 18 அடி நீள அனந்த சயணப் பெருமாள் புடைப்பு சிலை உண்டு.
பல்லவர் கலை. வெறுப்பு நிலை சார்பு நிலை (எல்லாமே உண்மையான தரவுகள்தான்) மைய வரலாற்று உருவாக்கத்துக்கு வெளியே விளிம்பில் கிடக்கிறது இத்தகு நேர் நிலை வரலாறு. ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் சொல்லை கடன் வாங்கினால் ‘உள் மெய்’ வரலாறு. ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சமுக உள் கட்டமைப்பு இரண்டிலும் முதன்மை பங்கு வகிக்கும் வணிக குலங்கள், அவற்றால் புறக்கப்பட்ட ஒரு மார்க்கம் அதை எந்த அரசனாலும் முந்தைய அரசுடன் சேர்த்து விரட்டி ஒடுக்கி இருக்க முடியவே முடியாது. பாரத நிலத்தின் பல நூறு ஆண்டுகால பண்பாட்டு அசைவின் மைய விசை என்பது சங்கிரஹம் எனும் அடிப்படையே. அதன் சான்றே இங்கே பல நூறு ஆண்டுகள் இயங்கிய சமண மையத்துக்கு அருகே மகேந்திரன் எடுப்பித்த இந்த சத்ரு மல்லேஸ்வரம் கோவில்.
எங்களுடன் கோவிலில் முன்பே வந்து நின்றிருந்த நால்வர் இணைந்து கொண்டனர். உண்மையாகவே முதல் அடுக்கில் துல்லியமான உருண்டை வடிவப் பாறைகளை ஏறிக் கடக்க வேண்டும். மென் மழையில் மேலும் வழுக்க எல்லோரும் பல்லி டெக்னீக்கில் மேலே ஏறினோம். அடுத்த உயர்வில் உருண்டைப் பாறையின் மத்தியில் ஒரு பாதம் மட்டும் வைக்க இயன்ற படிக்கட்டுகள். அதில் உயர்ந்து, முத்தமிட்டுக்கொள்ளும் இரண்டு பாறைகளின் இடுக்குக்குள் நுழைந்து வலது புறம் திரும்பினால், ஆறு ஏழு பேர் குந்தி அமரும் வண்ணம், ( மேலே கீழே என எங்கும் பெயின்ட் கொண்டு யார் யாருடைய இதயத்தில் அம்பாக துளைத்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் வரலாற்றுத் குறிப்புகள்) பாறை மேல் அமர்ந்த மற்றொரு பாறையின் கீழ்ப்பகுதி இடைவெளி உருவாக்கும் பால்கனி. மொத்தமே ஐந்தடி அகலம் உயரம். தப்பினால் மண்டை சென்று மோதும் முதல் பாறையே 100 அடிக்கு கீழேதான்.
அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அறிய நேர்ந்தது, எங்களுடன் வந்தவர் ஒரு வில்லிசைக் கலைஞர். ஊர் உத்ரமேரூர். பெயர் முருகன். அவரும் முருக உபாசகர். இன்னும் வீடுகளுக்கு கொண்டு சென்று ஜவுளி விற்கும் சிறுபான்மை வணிகர்களில் ஒருவர். எதையேனும் இசை மீட்டி வாசித்து பாடும் தனது ஆர்வத்தால் அவரே சென்று கற்றுக் கொண்டது வில்லிசை. அவரை அவரது குரு பாரதி கண்டெடுத்து பாரதம் வில்லிசைக்க கற்றுத் தந்து இதில் ஆற்றுப்படுத்தி இருக்கிறார். பத்து வருடமாக பாரத வில்லிசை இசைத்துக் கொண்டிருக்கிறார்.
இங்கே வட ஆற்காடு பகுதிகளில் இந்த மாதம் துவங்கி மாதம் விட்டு மாதம் அடுத்தடுத்து திரௌபதி அம்மன் கோவில்களில் விழா நடக்கும். எல்லாவற்றிலும் 10 நாள் 18 நாள் வில்லிசைக் கச்சேரி உண்டு. அத்தகு கச்சேரி கலைஞர்கள் பலரில் இவரும் ஒருவர். தனது மகன்கள் மூவரில் கடைக்குட்டியை இதில் இறக்கிவிடப் போகிறார். அவர் மகன் அவருடனே அமர்ந்து அவரையே நெருங்கி கவனித்துக்கொண்டு இருந்தான். தாமரை சும்மா ஒரு நேர்காணல் போல கேட்க அவர் சொன்னவை இவை. சந்தோஷமா இருக்கேன் சார் மொத்தத்துல என்றார். பொதுவாக பாரத கூத்துக்கள் அது சார்ந்த நாட்டார் கலைகள் எல்லாம் முதன் முதலாக அமைப்பு ரீதியாக ஊக்குவிக்கப்பட்டது பல்லவர் காலத்தில்தான்.
அங்கே துவங்கி இதோ இன்று 2021 வரை அறுபடாது ஓடிக்கொண்டிக்கிறது அந்த அந்தர்வாகினி. சுதந்திரம் வாங்கியதில் துவங்கி இந்தியா முழுக்க நிகழ்ந்த நவீனமாதல் அதன் தமிழ்நாட்டுத் தாக்கம், தமிழ்நாட்டில் நவீனத்துவம் என நிகழ்ந்த பெரியாரிய பகுத்தறிவு, எல்லாம் கூடி நிகழ்த்திய நேர்நிலை அம்சங்களுக்கு இணையாகவே அவை நிகழ்த்திய சிதைவுகளும் அதிகம். இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் நமது பண்பாட்டு அசைவின் முக்கிய கண்ணிகளை அது சிதைத்தது. நமது வேருக்கு நாமே நஞ்சு பெய்யும் அந்த நிலையை தீவிர இலக்கியம் உள்ளிட்ட, கலை பண்பாட்டு ஆளுமைகளும் ஆதரிக்கவே செய்தனர். நவீன தத்துவங்களால், தீவிர இலக்கியத்தால் மறுதலிக்கப்பட்டு, அரசு அமைப்புகளால் முற்றிலும் கைவிடப்பட்டு, கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளி எனும் ஆக்கப்பூர்வ விமர்சன உரையாடலே நிகழாமல், நமது பண்பாட்டு வெளியின் அடிப்படை அலகுகள் கைவிடப் பட்டது.
இதோ இந்த பாரதி குரு, முருகன் இவர்களை போல பெயர் வெளியே தெரியா எவர் எவரோதான் இன்று உண்மையில் நமது பண்பாட்டின் காவலர்கள். “வில்லுப் பாட்டா பாட க்ரிஷ்ணன் தூது எனக்கு ரொம்ப புடிக்கும். என்னா மனுஷன் பாருங்க இந்த க்ரிஷ்ணன். மொத்த மகாபாரதத்துலயும் யார் யார் எப்படினு அவனுக்கு நல்லா தெரியும். நான் கூப்பிட்டா போதுங்க முருகன் ஓடோடி வருவான். பாரதம் பாடி முடிச்சா நிறைய பேரு கால்ல விழுவாங்க. நான் என்னவோ வியாசன்னு நினைச்சிக்குவாங்க. நான் அப்படியே எல்லாத்தையும் முருகன் கிட்ட குடுத்துடுவேன்” மகிழ்ச்சியும் தற்பெருமையும் பணிவும் என மாறி கொந்தளிக்கும் வெள்ளந்தி மனிதர்.
பேசிக்கொண்டிருக்கையில் பாறை மூலையில் ஓரமாக ஒரு பாம்பு வந்து உறைந்து நின்றது. முடிந்த பின்னும் அங்கேயே இருந்தது. கண்ணாடிக் குழாய் போல பளபளக்கிறது ஆகவே அது கண்ணாடி வீரியன் என்றது ஒரு தரப்பு, இல்லை அது மழையில் நனைந்து நிற்கும் காளியாங் குட்டி, மழையில் நனைந்ததால் கண்ணாடி வீரியன் போல தோற்றம் அளிக்கிறது என்றது மற்ற தரப்பு. உள்ளதே ஐந்தடி அகலம். அவர் புஸ் என்றால் ரிஃப்ளெக்ஸ் இல் இயல்பாக துள்ளினால் கூட காக்கா போல பறக்கத் துவங்கி விடுவோம். எனவே பாம்பு ஆராய்ச்சியை அங்கேயே நிறுத்திக்கொண்டு கீழே இறங்கினோம்.
இறங்குகையில் எங்களுடன் வந்த நால்வரில் இருந்த ஒரு மஞ்ச சட்டை தாமரையை பிடித்து உலுக்கி நானும் கவிஞன் தான் நான் எழுதிய கவிதையை கொஞ்சம் கேளுங்க என்றார் . முருகன் உஷார் ஆகி, “அய்யா எல்லாம் வழுக்கு பாறை கொஞ்சம் பேசாம இருந்து கவனமா இறங்குவோம்” என்று சொல்லி காப்பாற்றினார். சமதளம் வந்ததும் மீண்டும் சிக்கல் தலை தூக்கியது. ஒரே ஒரு கவிதையை கேளுங்களேன் என்று ஆரம்பித்து கவிதையை பொழிந்தார் மஞ்ச சட்ட. எல்லாம் ஸ்டாலின் அவர்கள் மீதான புகழ்க் கவிகள். மணி திகைத்து விரைந்து ஓடி காருக்குள் அமர்ந்து கிளப்பி எங்களை வர சொல்லி ஹாரன் அடித்தார். காருக்குள் தப்பி ஏறிய தாமரையை ஜன்னல் வழியே குனிந்து சார் என் கவிதை தொகுப்பு என்று மஞ்சள் நீட்ட, ” ஞான் தெலுங்காணு தமிழ் அறியில்லா” என்று தாமரை ஈனக் குரல் எழுப்ப,மணி காரை உறுமிக் கிளப்ப, தப்பி ஓடி எங்கள் அடுத்த இலக்கு நோக்கி விரைந்தோம்.
பஞ்சான் பாறை.எங்கள் அடுத்த இலக்கானது வேங்கட ரமணர் அல்லது வெங்கட் ராமர் கோவில் என்றழைக்கப்படும் நாயக்கர் கலைக்கோயில். செல்லும் வழியில் ஒரு மஞ்சள் அறுகோண பலகை கண்டு தாமரை “நில்லுங்க அங்க ஏதோ இருக்கு” என்று கூவினார். சென்று பலகையை பார்த்தோம். சேரானூர் எனும் கிராமத்தில் பஞ்சான் பாறை எனும் பாறையில் அருக ஆசிரியர் ஒருவரின் பாதச் சுவடு உண்டு என்று கண்டிருந்தது. வாங்க பாத்திருவோம் என்று காரைத் திருப்பி, தேடிச் சென்றோம். வழி கேட்க யாரும் இல்லை. குத்து மதிப்பாக இது சமணர்கள் வாழ்ந்திருக்க சாத்தியமான இடம் என்று ஒன்றை நாங்களே ஊகித்து, ஒற்றையடிப் பாதையில் பாறை கோலிகுண்டுகளின் குவியலை நோக்கி நடந்தோம்.
பாதை சென்று முடிந்த இடத்தில் ஒரு சிறிய மண்டபம். அடடா இதேதான் கண்டுபிடித்தே விட்டோம் என்றபடி தாமரை ஓடிச்சென்று பார்த்தார். அங்கே ஒன்றும் இல்லை. வெறும் மண்டபம் மட்டுமே நின்றிருந்தது. இந்த இடத்துல எதுக்கு மண்டபம் மட்டும் நிக்குது பெரிய வரலாற்று புதிரா இருக்கே என்று திருமா தாடையை தடவி யோசித்துக் கொண்டிருக்கையில், இங்க ஏதோ இருக்கு என்று தூரத்திலிருந்து மணியின் அழைப்பு கேட்க, சென்று பார்த்தோம். ஒரு பாறை. அதன் மேல் ஏதோ எழுத்துக்கள். “வ, ய, ர, உ, தமிழ் மாதிரிதான் இருக்கு” என்று வாசித்து அபிப்ராயம் சொன்னார் மணி. கல்வெட்டில் வாமனர், பத்மம் எல்லாம் இருந்தது. நிச்சயம் ஏதோ புதையல் குறிப்புதான். மீண்டும் சாலைக்கு வந்து, வழிப்போக்கர் ஒருவர் வழிகாட்ட, சேராணூர் வந்தோம்.
கீழ் மேல் ஊர்களில், கீழ் மொத்தமும் ஏசுவே வழியும் ஜீவனும் உண்மையும் சர்ச்சுமாக இருக்க, மேல் மொத்தமும் மாம்பழத்தை கார்பைட் போட்டு பழுக்கவைக்கும் முயற்சியில் இருந்தது. கிராமம் லாட வடிவ மலைப் பிறையில் முட்டு சந்து போல முடிந்தது. ஒரே ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் அந்த பாத தடத்தை பார்த்திருக்கிறான். அதற்கான பாதை கைவிடப்பட்டு இருக்க அவனுக்கு வேறு வழி சொல்லத் தெரியவில்லை. சரி இந்த ஊர்ல அந்த ஆசிரியர் இருந்திருக்கார் அந்த ஊருக்கு நாம வந்திருக்கோம் அது போதும் என்று ஒட்டுமொத்தமாக ஏக மனதாக சமாதானம் கண்டு திரும்பினோம். வழியில் மீண்டும் நிறுத்துங்க என்று கூவினார் தாமரை. இடதுபுறம் ஒரு சிறிய பாறை மேல், புதிதாக கட்டப்பட்ட சிறிய கோயில். ஒருக்கால் அந்த கோவிலுக்குள் அந்தக் கால் இருந்தால்? தாமரை சென்று பார்த்துவிட்டு வந்தார். அங்கும் கால் இல்லை. சரி போலாம் என்று அரை மனதாக தாமரை டிக்ளேர் செய்ய, வெங்கட் ராமர் கோவில் நோக்கி நகர்ந்தோம்.
கோணை ராமர் கோயில்.வழியில் கோணை எனும் ஊரைக் கடக்கையில் இடதுபுறம் மலைத்தொடர் சரிவை நோக்கி திருமா சுட்டிக்காட்டினார். அதோ கோயில் வந்திருச்சு. வெங்கட் ராமர் கோயில் இங்கா? அது செஞ்சி கோட்டை செல்லும் சாலையில் அல்லவா வரும் இங்கே எப்படி? குழம்பினேன். ஆனால் கண் முன்னால் எழடுக்கு கோபுரத்துடன் நாயக்கர் காலக் கோயில். சரி திருப்புங்க பார்த்துடுவோம் என நான் முழங்க, கார் கோயிலை நோக்கி திரும்பியது.
தமிழ் நிலத்தின் நாயக்கர் கலையின் தலையாய அற்புதங்களில் ஒன்றான மற்றொரு நெடிதுயர்ந்த முன் மண்டபம். அதன் தூண்களை பார்த்த முதல் கணமே தெரிந்து விட்டது. புதுவை கடற்கரை காந்தி சிலையை சுற்றி நிற்கும் அதே தூண்கள். மணி இணையம் இயக்கிப் பார்த்து “ஆமாங்க அந்த சிலையை சுத்தி உள்ள தூண் எல்லாம் செஞ்சியில் இருந்து கொண்டு வந்தது அப்படித்தான் போட்ருக்கு” என்று ஆமோதித்தார். கடந்தால் எழடுக்கு ராஜ கோபுரம். வாயில் உட்சுவர்களில் மிக அழகிய சிற்ப வரிசை. கஜேந்திர வரதர். வாலி சுக்ரீவர் யுத்தம். ஏழு மரங்களை அம்பால் துளைக்கும் கோதண்ட ராமர், இன்னும் பல. இரு பக்கமும் மோகினிகள்.
கடந்தால் இன்ப அதிர்ச்சி. முற்றிலும் திகைத்து விட்டேன். ஒரு கணம் ஹம்பி நிலத்தில் நிற்கிறேன் என்றொரு உள மயக்கு. இல்லை ஹம்பியே தான். உள்ளே இடது புறம் விதானம் அற்று, தூண்கள் மட்டுமே நிற்கும் மண்டபம். ஒரே கல்லால் குடைந்து ஒரு தூண் முன்னால் இரு சிறிய தூண்கள் நிற்கும் வண்ணம், நாயக்கர் பாணி கலை அழகு, சரிந்த தூண்கள், ப்ரகாரமோ, அர்த்த மண்டபமோ, கருவறையோ அற்ற வெறும் கோயில், ஆங்காங்கே சிறிய கோபுரங்கள் கொண்ட மூலவர் அற்ற சன்னிதிகள். கோவிலை சூழ்ந்து பாறைக் குவியல்கள். கலசங்கள் சிதைந்த ராஜகோபுரம் ஆங்காங்கே செடி முளைத்து நிற்க, கோவில் களம் எங்கெங்கும் கால் வைக்கும் இடமெங்கும் நெருஞ்சி.
என்ன கோயில் யார் கட்டியது? எந்த குறிப்பும் இல்லை. பாணியைக் கொண்டு நிச்சயம் இது நாயக்கர் கோயில், உள்ளே உள்ள புடைப்பு சிற்ப வரிசை கொண்டு இது ராமர் கோயில் அல்லது பெருமாள் கோயில், கோட்டை கீழே வேங்கட ராமர் கோவிலை கட்டிய அதே முத்தியாலு நாயக்கர் (1550) தான் இதையும் கட்டி இருக்கக் கூடும். முள் குத்தியும் பொருட்டின்றி சுற்றி வந்தோம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஹம்பிக்கு இணையான கலை வெளி உண்டு என்பதையும், அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதையும் நம்பவே இயல வில்லை. சற்று நேர ஓய்வுக்குப் பின் வெளியேறி, வேங்கட ராமர் கோவிலை தேடிச்சென்றோம்.
வேங்கட ராமர் கோயில்.அக் கோயில், செஞ்சிக் கோட்டை வாயிலை கடந்து ஒரு கிலோமீட்டர் போனதும் தென்பட்டது. இந்தக் கோயிலின் அருகேதான் சக்கரைக் குளம் எனும் இடத்தில் தேசிங்கு ராஜன் இறுதியாக எரியூட்டப்பட்டார் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. முந்தைய கோயிலின் அதே எழில். ஏழடுக்கு கோபுரம். ஒவ்வொரு நிலையிலும் குரங்குப் பட்டாளம். வாயிலின் உட்பக்கம் இருபுறமும் ராமாவதார காட்சிகள், பாற்கடல் கடையப்படும் புரானக் கதை என வெவ்வேறு அழகிய புடைப்புச் சிற்பங்கள். கடந்தால், தூண்களால் ஆன காடு.
இடதுபுறம் யானை குளிக்க ஒரு குளம். ஆம் யானை குளிக்கும் குளம் என்றுதான் இணையக் குறிப்புகள் சொல்கிறது. இருண்டு குளிர்ந்த பிரகாரம். சுற்றிலும் சிறிய சிறிய மண்டபங்கள். அனைத்திலும் நாயக்கர் பாணி மூன்று கொத்து தூண்கள். கருவறை அருகே உயர்ந்த துவாரபாலக சிற்பங்கள். உள்ளே அழகிய ராமர் சீதை. வணங்கி மீண்டு கோயிலை சுற்றினோம். தாமரை உவகையில் தத்தளித்தார். என் அம்சமய்யா நீர் என எண்ணிக்கொண்டேன். மீண்டும் மீண்டும் முற்றிலும் வேறு நினைவே இன்றி, இப்போது ஹம்பியில் நிற்கிறேன் எனும் உளமயக்கே என்னை நிறைத்தது.
கருவறை முன்பான மண்டபத்தின் குளிர்ந்த தரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். பேச்சு நாயக்கர் கலை ஹம்பி என சென்று திருமாவின் வினாக்கள் வழியே இயல்பாக அந்நியர் படையெடுப்பு நோக்கி சமீபத்தில் அடிப்படைவாதம் அழித்த ஆப்கன் புத்தர் சிலைகள் குறித்து என நகர்ந்தது. நான் பல்லிரை வழிபாடு கொண்ட அரேபிய சூழலில் கெனான் என்பதை மையமாக்கி உருவான முகமதியத்தின் துவக்கம் சார்ந்த சிறிய வரைவை சொன்னேன். கேனானில் உள்ள செய் செய்யாதே வரையறைகள் காலத்துடன் பிணைந்து. ஆகவே அதை அவ்வாறே ‘என்றும்’ நடைமுறைப் படுத்துவது என்பது என்றென்றும் காலத்துக்கு ஒவ்வாத செயலே.
ஆனால் அந்த கெனான் பேசும் மெய்மை அது மானுடப் பொதுவானது. எல்லா காலங்களுக்கும் உரியது. காலாவதி ஆன செய் செய்யாதே என்பதன் வரலாற்றுத் தடம் ஹம்பி அழிவுகள் எனில் அதன் மானுடப் பொதுவான எல்லா காலங்களுக்கு உரிய மெய்மை அதன் வெளிப்பாடுதான் பஷீர். பஷீர் இல்லாத இந்தியப் பண்பாடு நிச்சயம் குறைபாடு கொண்ட ஒன்றே. இவை போக எல்லா செய் செய்யாதேக்களையும் சீரமைக்க ஒவ்வொரு சூழலிலும் ஏதோ ஒன்று நிகழும். அப்படி நிகழும் போது ஊஞ்சல் மறுமலர்ச்சி எனும் எல்லையிலும், சூழல் மாறி செய் செய்யாதே என்பதன் அதிகாரம் அதிகரிக்கையில் ஊஞ்சல் அடிப்படை வாதம் எனும் எல்லையிலும் வந்து நிற்கும். அந்த முனைக்கும் இந்த முனைக்கும் ஆடிக்கொண்டு இருக்கும் ஊஞ்சலை எதிர்நிலை முனையில் வைத்து மட்டுமே சித்தரித்துக் காட்டுவது வேறு வகை அடிப்படைவாதம். வேறு வகை அரசியல் அது.
அரசியல் என்று கொண்டாலுமே கூட, சத்ரபதி சிவாஜியின் குதிரைப்படைக்கும் கப்பல்படைக்கும் தளபதிகள் முஸ்லிம்கள். அக்பரின் வலது கை மான்சிங் ஒரு இந்து. கலாச்சாரம் என்றும் இப்படித்தான் சுழித்தோடுகிறது. இதில் துருவப்படுத்தி ஒன்றை புரிந்து கொள்ள முயல்வது குறுகல் பார்வையை மட்டுமே அளிக்கும். இறுதியில் என் மார்க்கம் அளிக்கும் மெய்மை மட்டுமே மெய். பிற மார்க்கம் பேசும் மெய்மை எல்லாம் பொய் என்று சொல்லுவதில் வந்து முடியும் அது. ஆக ஒற்றைப் பரிசீலித்துப் புரிந்து கொள்ள பண்பாட்டின் விரிந்த நேர்நிலை அம்சங்களில் இருந்தே துவங்க வேண்டுமே அன்றி கலாச்சார அடிப்படைவாத குறுகிய நோக்கிலிருந்தல்ல.
எனில் இத்தகு அபிரகாமிய மதங்களில் கிறிஸ்துவம் பேசும் கனானிசம் எவ்வாறு கலைகளுக்கு எதிர்வினை செய்கிறது என்று தாமரை வினவினார். நான் பாலஸ்தீனிய யூதர்களின் பின்புலம் துவங்கி கான்ஸ்தான்திநோபல் நகரில் கிறிஸ்துவம் அரச மதம் ஆவது வரை பைபிள் வளர்ந்த கதையை சொன்னேன். சமீபத்தில் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யூதாஸ், மக்தலேனா சுவிஷேசம் வரை. ஒப்பு நோக்க பைபிளின் செய் சேயாதே அடுக்கும், மெய்மை அடுக்கும் பிற அபிரகாமிய கெனான்களை விட இலகுவானது. நெகிழும் தன்மையும் கொண்டது.
பைபிளின் மெய்மையின் கலைச் சான்றுகள் கி பி 4 ஆம் நூற்றாண்டு முதலே கிடைக்கிறது. ஆராவாரமான கலை நியமிக்க சிலுவைகள். பின்னர் 8,9 நூற்றாண்டு வாக்கில் சிலுவைப்பாடு எனும் கருதுகோள் உயர்ந்து, சிலுவையில் தொங்கும் ஏசு கலையில் எழுந்து வருகிறார். 10,11 களில் கன்னி மேரி கருதுகோள் வளர்ந்து அதன் மீதான கலை செழிக்கிறது. 1220 வில் கட்டப்பட்ட பிரான்சின் ஸாட்ரஸ் பேராலயம் கிறிஸ்துவ கலையின் சிகர முனைகளில் ஒன்று. கலை நோக்கில் மெய்ஞானிகிறிஸ்துவே ஒரு கவிஞர்தான். கிறிஸ்துவில் துவங்கி தால்ஸ்தோய் கசான்ஸ்கி வரை ஒரு அறுபடாத கோடு ஒன்றை போட்டுவிட முடியும்.
இங்கும் அதேதான் சர்ச் வழியே நிகழும் செய் செய்யாதே எனும் அடிப்படைவாதமோ அரசியல் வழியாகவோ அல்ல, பண்பாட்டின் பதாகை வெளிப்பாடு எதுவோ அதன் வழியாக மட்டுமே அறியப்பட வேண்டிய ஒன்றே கிறிஸ்துவம். சமூக நோக்கில் எந்த மார்க்கம் எனினும் எந்த நிலம் எனினும், அந்த மார்க்கம் அந்த நிலத்தின் பண்பாட்டின் பதாகையாக எதை அளித்திருக்கிறதோ அதை முதன்மையாகக் கொண்டு மட்டுமே அவை சார்ந்த பிற விசாரணைகளில் இறங்க வேண்டும். அதுவே சரியான நோக்காக இருக்க முடியும். அப்போதுதான் கவனித்தேன் புதிதாக நால்வர் எவரோ எங்களை சுற்றி அமர்ந்து உரையாடலை கேட்டுக்கொண்டு இருந்தனர். கண்ட கணம் உரையாடல் அறுபட, இயல்பாக கலைந்து எழுந்து அடுத்த இலக்கு நோக்கிப் பயணமானோம்.
திருநாதர் குன்று.அடுத்த இலக்கான திருநாதர் குன்று, சிங்கவரம் குன்றுக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாகவே பிரியும் மண் சாலை ஒன்றின் முனையில் மஞ்சள் அறுகோண பலகை வழிகாட்டியது. மண் தடத்தில் மேடேறி நடந்து, நாற்பது ஐம்பது படிகள் உயர வேண்டும். பாதிப் படி ஏறும்போதே தாமரை இடதுபுறம் சுட்டிக் காட்டினார். முக்குடையின் கீழ் தவமியற்றும் மகாவீரர் புடைப்பு சிற்பம் புனைந்த பாறை இரண்டாக பிளந்து கிடந்தது. கடந்து மேலே சென்றால் பிரம்மாண்ட உருண்டைப் பாறையில் 24 தீர்த்தங்காரர்களின் புடைப்பு சிற்பம்.
சுற்றி வந்து தேட, மணிதான் கண்டுபிடித்தார். தமிழின் முதல் ‘ஐ’ எனும் எழுத்து உள்ள கல்வெட்டு. பிராமி மருவி தமிழி எனும் நிலைக்கு எழுத்துக்கள் பரிணமித்த கல்வெட்டு வரிசைகளில் ஒன்று. பஞ்ச பரமேஷ்டிகளில் மூன்றாம் பரமேஷ்டியான சந்திர நந்தி ஐம்பத்தி ஏழு நாள் சல்லேகன நோன்பு இயற்றி அருகன் அடி சேர்ந்ததை கூறும் கல்வெட்டு. அடுத்த தமிழ்க் கல்வெட்டு 36 நாள் நோன்பிருந்து அருகன் அடி சேர்ந்த பட்டாரகர் குறித்து கூறும் கல்வெட்டு. இங்கே விளக்கெரிய சாவா மூவா பேராடுகளை தானம் அளித்தது குறித்த மூன்றாவதை கண்டுபிடிக்க இயலவில்லை.
எண்ணென்ப எனை எழுதென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. வெறும் உயிர் அதனை ‘வாழும்’ உயிராக்க கல்விக் கண் திறந்த ஆசிரியர்கள் நிறையில் ஒருவரான சந்திர நந்தி கணக்காசிரியர் என்று சொல்கிறது குறிப்புகள். ஐம்பத்து ஏழு நாள் என்று துவங்குகிறது கல்வெட்டு. ஐ எப்போதுமே எனக்கு பிடித்த ஒலி, ஐ என்று கூவும் தருணம் வாய்க்கும் போதெல்லாம் அப்படிக் கூவ நான் தவறியதே இல்லை. ஒரே ஒரு கணம் என்றாலும் உங்களுக்குள் உள்ள குழந்தையை மலரச் செய்துவிடும் ஒரு சொல். ஐ. மெல்ல அவ்வெழுத்தில் விரலோட்டிப் பார்த்தேன். கொஞ்சம் கொடூர வடிவிலான திரிசூலம் போல இருக்கும் இதுதான் தொல்லியல் சான்றின் படி தமிழ் லிபியில் பதிவான முதல் ஐ. மெல்ல அந்தப் பாறை மீதே தளர்ந்து அமர்ந்தோம். எதிரே கீழே நீர் ததும்பும் பெரிய ஏரி. ஆங்காங்கே வெவ்வேறு மரங்கள் செறிந்த பச்சை சதுர வயல்கள், வீடுகள், வகிர்ந்து செல்லும் சாலை, தூரத்தில் இடதுபுறம் செஞ்சிக் கோட்டை. வலதுபுறம் சிங்கவரம் குன்று. மெல்லிய சாரல் தெளிக்கும் காற்று.
இந்தியப் பண்பாடு எனும் முழுமையில், தென்னிந்தியப் பண்பாடு தனித்துவம் கொண்ட ஒன்று என்ற புரிதல் வாசிக்க வாசிக்க வலுப்பட்டபடியே செல்கிறது. குறிப்பாக சமணம் சார்ந்து. தமிழ் நிலம் வரை பரவிய தென்னிந்திய சமணத்துக்கு இரண்டு ஊற்று முகங்கள். முதல் ஊற்று முகம் கர்நாடகம். கி மு மூன்றில் கர்நாடகம் துவங்கி, கொங்கு மண்டலம், பாண்டி மண்டலம் வழியே குமரி வரை பரவிய ஓடை ஒன்று. மற்ற ஓடை கி பி இரண்டு வாக்கில் ஆந்திராவில் துவங்கி, காஞ்சிபுரம் வட ஆற்காடு விழுப்புரம் தென்னாற்காடு என்று பரவிய ஒன்று. இந்த இரண்டு ஓடைகள்தான் தென்னிந்திய குறிப்பாக சங்க காலம் துவங்கி தமிழ் நிலத்தின் கல்வி அறிவு பரவலாக்கத்தின் உந்திச் சுழி. பல சான்றுகள் உண்டு. முக்கியமான சான்று, பிராமி தமிழ் என மாற்றம் பெற்ற வரிசையும் காலமும். கி பி 6 வாக்கில்தான் கன்னட தெலுங்கு லிபிகள் கல்வெட்டில் இடம் பிடிக்கும் நிலையில், அதற்கெல்லாம் பல காலம் முந்தியே இங்கே தமிழ் கிடைக்கிறது. சமண ஆசிரியர்களே அதன் காரணம். இந்தப் புள்ளியில் வைத்து பரிசீலித்தால் சமணத்தின் தென்னிந்திய பண்பாட்டுக் கொடை மேலும் துலக்கம் பெறுகிறது.
இந்த திருநாதர் குன்று கிபி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து செயல்பாட்டில் உள்ள சமண மையம் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. சந்திர நந்தி கல்வெட்டு கிபி ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது. பட்டாரகர் கல்வெட்டு கிபி எட்டாம் நூற்றாண்டையும், பேராடுகள் கொடை கல்வெட்டு கி பி பத்தாம் நூற்றாண்டையும் சேர்ந்தது. 700 ஆண்டுகள். களப்பிரர் காலம் முடிந்து, பல்லவர் காலம் முடிந்து, சோழர் காலம் துவங்கி விட்டது. சோழ அரசியர் எடுப்பித்த குந்தவை ஜினாலயம் போன்ற வரலாறு பின்னர் தொடர்கிறது. எப்படிப் பார்த்தாலும் தென்னிந்திய சமணத்தின் வரலாறு இதுவரை ‘பொதுவில்’ வழங்கி வந்த அழித்தொழிப்பு ‘வரலாற்று கதைகளுக்கு’ நேரெதிராகவே இருக்கிறது என்பதன் மற்றொரு சான்று இந்த திருநாதர் குன்று.
புடைப்பு சிற்பங்கள் கொண்ட உருண்டைப் பாறையை சுற்றி வந்தோம். உருண்டை பாறையின் சரிவின் கீழ் உருவாகும் இடமே சமண துறவிகள் புழங்கும் இடம். முழுக்க சாராய பாட்டில்களை நொறுக்கி குமித்து வைத்திருந்தார்கள். வழக்கம் போல பெயின்ட் கொண்டு எழுதப்பட்ட காதல் குறிப்புகள். சற்று நேரம் சுற்றி வந்துவிட்டு இறங்கினோம். இறங்கும்போது மேலிருந்து கண்டேன். மகாவீரர் அமைந்த பாறை பிளந்து கிடந்த காரணத்தை. பாறை மேல் வரிசையாக ஆப்புகள் அறைந்து இரண்டாக உடைக்கப்பட்டிருக்கிறது. தன்னிலிருந்து வந்த அமுதூட்டிய அருகனுக்கு, தன்னிலிருந்து வந்த நஞ்சினை எவரோ பரிசளித்திருக்கிறார். உடைந்து சரிந்த மறு பாதியில், குரங்கு ஒன்று போங்கடா நீங்களும் உங்க வரலாறும் என்ற மேனிக்கு எங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தது. இறங்கினோம் தூரத்து சிங்கவ
ஒரு பேரிலக்கியம், கடிதம்
ஒரு பேரிலக்கியத்தின் வருகை
அன்பு நிறை ஜெ.
உங்களுடைய கிறிஸ்துவ கதைகள், பால் சக்கரியாவின் இயேசு கதைகள், சில உலக இலக்கிய கிருஸ்துவ கதைகளுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை, நாம் அதை படித்துக்கொண்டு இருக்கும்போதே, மனித குமாரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதையும், நம்மோடு உரையாட எத்தனிப்பதையும் உணர முடியும். க.நா.சு மொழிபெயர்த்த ‘பாரபாஸ்’ நாவல் முழுவதும் அவனும், இயேசுவும் உரையாடிக்கொண்டே இருக்க, நாம் நடுவில் அமர்ந்து உற்சாகமாகவும், கண்ணீர் மல்கியும், அனுதாபம் கொண்டும், கேட்டுக்கொண்டே இருப்போம்.
இன்று தளத்தில் வந்த ‘மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன்’ சுபஸ்ரீ அவர்களின் அபாரமான மொழிபெயர்ப்பு. ஒரு முழு நாளும் தேவ சாந்நித்யத்தில் திளைக்க செய்தது. ஒரு சிறு சொல்லைக்கூட இடம்பெயர்க்க இயலாத வண்ணம், மிகவும் கூர்ந்து அல்லது அவனிடம் ‘தயை கூர்ந்து’ செய்யப்பட்ட ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பு. இது குறித்து நண்பர் சுபஸ்ரீ அவர்களோடும் பேசினேன்.
இந்த நாவலிலும், நம் அகத்தை வைத்து விளையாட, நம்மை முழுவதுமாக ஒப்படைக்க, நம் போதாமையை ஒரு கதாபாத்திரத்தின் வழியாக, ஏற்றிப்பார்க்க என எண்ணற்ற சாத்தியங்கள் உள்ள நாவல். இந்த சிறிய உடலுக்குள் மட்டும், இன்று நான் ”ஜீன் பாடோ” என, குழந்தைகள் ஹென்றியும், பாபெட்டும், என, பருத்த சரீரம் கொண்ட மேடம் பாடொ என, விருந்தினனாக வந்த கிளாட் காஸோ, என இவர்கள் அனைவரோடும் சொற்களாக ஊடாடிக்கொண்டிருந்த, தேவ மைந்தன் என, மாறி மாறி உணரவும், நாவலின் வழியாக அவர்களை என்னுள் உயிர்த்தெழவும் செய்ய வைத்த மொழிக்கு நன்றி.
கார்டினலின் உள்ளிருந்து வரும் குரல் என, “மனிதகுமாரன் பூமிக்கு வரும்போது அவர் மண்ணில் விசுவாசத்தைக் காண்பார் என எண்ணுகிறீர்களா?” என்கிற கேள்விக்கு அவரே ஓரிடத்தில் ‘இல்லை’ என்றும் ஒருசிலரேனும் அந்த விசுவாசத்திற்கு பாத்திரமாக இருப்பார்கள் என்றும் சொல்லும் இடங்கள் அனைத்தும், இது கர்னலின் குரல் அல்ல நம் ஆன்மாவின் குரல் தான் அப்படி ஒலிக்கிறது என்று தோன்றியது.
“ஆம், நிச்சயமாக அவர் விசுவாசத்தைக் காண்பார். ஒரு சிலரிலேனும். சிலபேர் ஆயினும் சர்தையிலும் உண்டு!- என்கிற வரிகளில். எதோ ஒரு உந்துதலில், ‘அந்த ஒரு சிலரில் நானும் ஒருவனாக இருக்க கடவுக’ என கையுயர்த்த தோன்றுகிறது. நாவலின் மையம் ‘ இறையுணர்தல் ‘ என நிறைவுறுகிறது.
ஆகவே “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்,…..எனத்தொடங்கும் அந்த வசனங்கள், உன் செயல்கள் அனைத்தையும் ஈஸ்வரனுக்கு அர்ப்பணி என்கிற. ”ஈஸ்வர ப்ரணிதானா” என்கிற வரிகளுடன் இயல்பாக வந்து பொருந்திக் கொள்கிறது. மேலும் சுபஸ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்புக்காக காத்துகொண்டிருக்கிறேன்.
அவருக்கு அன்பும், நன்றியும்.
சௌந்தர்
***
அன்புள்ள ஜெ
சுபஸ்ரீ மொழியாக்கம் செய்த பகுதிகளை வாசித்தேன். அற்புதமான சரளம். மூலத்துடன் ஒப்பிட்டால் சொல்லுக்குச் சொல் மொழியாக்கமாகவும் இருக்கிறது. தமிழில் பல மொழியாக்கங்களை வாசித்து மனம் வருந்தியவள் நான். இந்த மொழியாக்கம் மொழிபெயர்ப்பாளர் தன் ஆன்மாவைக் கொடுத்து செய்தது என்று தோன்றச் செய்கிறது. இத்தனைக்கும் மிகமிக நீளமான சொற்றொடர்கள் கொண்ட பழையபாணி பிரிட்டிஷ் ஆங்கிலம். இதை வாசிப்பது ஒரு தவம் போல அப்படியே உள்ளிழுத்துக் கொள்கிறது.
கிறிஸ்தவ விழுமியங்களைப் பற்றிய நாவல். நவீனத்துவமும் ஆன்மிகமும் மோதிக்கொள்ளும் புள்ளியை அற்புதமாகச் சித்தரித்த நாவல். நான் இந்நாவலை வாசித்திருக்கிறேன். ஆனால் எனக்கும் நீங்கள் சொல்லித்தான் அறிமுகம். நீங்கள் தஞ்சையில் ஓர் உரையில் இந்நாவலின் கதையை அனேகமாக முழுமையாகவே சொன்னீர்கள். உணர்ச்சிகரமாக இருந்தது அந்த உரை. அன்று சேக்கிழார் அடிப்பொடி, மரபின் மைந்தன் முத்தையா எல்லாம் பேசியதாக நினைவு. இன்றைக்கும் இந்நாவல் இந்தியச் சூழலுக்கு மிகப்பொருத்தமானதாக உள்ளது. என்றைக்குமான அடிப்படைக் கேள்விகளை எழுப்பும் பெரும்படைப்பு
தமிழ்ச்செல்வி மாணிக்கவாசகம்
***
விருதுபெற்ற கவிஞரிடம் விளையாட்டு காட்டிய பிரபல இயக்குநர்!
ஜோதிடத்திலும், கர்ம வினையிலும் நம்பிக்கையுள்ளவன் என்கிற அடிப்படையில், எனக்கு வரவேண்டியிருந்தால் அது வந்துசேரும். இல்லையென்றால் அதைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை, அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் சுந்தர ராமசாமிக்கு, நகுலனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்படவில்லை. அதனால் விக்கிரமாதித்தனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்படவில்லை என்பதால், விக்ரமாதித்தன் குறைந்துபோய்விடமாட்டான், கவலைகொள்ள மாட்டான்.
விருதுபெற்ற கவிஞரிடம் விளையாட்டு காட்டிய பிரபல இயக்குநர் !மண்ணுள் உறைவது, கடிதங்கள்
மண்ணுள் உறைவது
அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாட்டிலிருந்து வரும் கதைகளுக்கே ஒரு தனி ஃப்ளேவர் உள்ளது. அந்த மொழிநடை தமிழின் பொதுவான வட்டார வழக்குகளில் இருந்து விலகி நிற்கிறது. நாஞ்சில்நாடன், நீங்கள், தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின் எழுத்திலுள்ள வட்டாரவழக்கு முதல்பார்வைக்கு ஒன்றுபோல இருந்தாலும் கூர்ந்த வாசிப்பில் வேறுவேறாகவே இருக்கிறது. அதேபோலத்தான் சுஷில்குமாரின் நடை. நாஞ்சில்நாடனின் நடைபோல இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் நாலைந்து கதைகளை வாசிக்கையில் தனியான சுவை தெரிய ஆரம்பித்துவிட்டது.
தமிழகத்தின் மற்ற நிலத்திலுள்ள கதைகளுடன் ஒப்பிடுகையில் நாஞ்சில்நாட்டுக் கதைகளிலுள்ள சிறப்பம்சம் என்று எனக்குத் தோன்றுவது அங்கே உள்ள மாயம்தான். அதை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும் முன்னுரையில் என்று ஞாபகம். பேய்க்கதைகள் சிறுதெய்வங்களின் கதைகள் நிறைந்த நிலம் அது. அந்த மாயம்தான் நாஞ்சில்நாட்டுக் கதைகளின் சிறப்பம்சம். சுந்தர ராமசாமியே அதை ஒரு புளியமரத்தின் கதையில் எழுதியிருக்கிறார். தாமோதர ஆசான் ஒரு மகத்தான கதாபாத்திரம். சுந்தர ராமசாமி முதல் நீங்களும் நாஞ்சிலும் எழுதினாலும்கூட இன்னமும் கதைகள் மிஞ்சியிருக்கின்றன என்பதற்குச் சான்று சுஷில்குமாரின் கதைகள்.
மண்ணுள் உறைவது அந்த மாயம் கொண்ட கதை. நாம் பயன்படுத்தும் நீர் எல்லாம் மண்ணில் இருந்து வருகிறது. மண்ணுக்கே திரும்பிச் செல்கிறது. நாம் அழுக்காக்கி அளிக்கிறோம். அது தூய்மைப்படுத்தி திருப்பித்தருகிறது. நமது ஆழத்து அழுக்குகள் அங்கே தூய்மை செய்யப்படுகின்றன. ஆனால் மண்ணே தூய்மை செய்யமுடியாத அழுக்குகளும் உண்டு என தோன்றியது அந்தக்கதையை வாசிக்கும்போது.
ஆர். முருகானந்தம்
****
அன்புள்ள ஜெ
மண்ணுள் உறைவது என்பது மண்ணாலான உடலுள் உறைவது. அங்கு சுரக்கும் கிணற்றின் ஊற்றுநீர் என்பது நம் மனதின் அன்புணர்ச்சியே ஆகும். அந்நீர் வற்றுகையில் நடை பிணமென்றான வாழ்க்கை. அவர்கள் தேடும் ஊற்று தங்கள் ஆணவத்தால் அறியாமையால் தொலைத்த அவ்வூற்றை தான்.
அகழ்ந்தெடுக்கப்படும் அனைவரின் ஆழங்களும் வகுத்துசொல்ல முடியாதவை. புவியில் ஒவ்வொரு உறவும் மற்றொரு உறவுடன் பிணைந்துள்ளவை. அந்த கிணற்றின் துர்நாற்றம் அத்தையின் வருகையை உவக்காத குடும்பத்தின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். கணவர் இல்லாத அம்மா அத்தை தேடிப்பிடித்து அன்பு கொள்வது குடும்பத்தில் தன் மீது காட்டப்படும் கரிசனத்திற்கு மறுபக்கமும் கூட.
மாமாவை ஏற்றுகொள்ளும் தாத்தா மயங்கி சரிவது, தந்தைக்கும் மகனுக்கும் இடை நடக்கும் ஆடல். தன்னை மீறிய மகனை தண்டிக்க விரும்பும் தாத்தாவிற்குள்ளிருக்கும் ஆணும், தன் பெண்ணே அவனை அழைத்து வந்து முன்நிறுத்துகையில் தனக்குள் வெட்கும் ஆணாக கனியும் தந்தையுமாக உள்ள தாத்தா. தன்னுள்ளே கொதிக்கும் நஞ்சால் மயங்கி சரிந்து மறைகிறார்.
தந்தையை இழந்த கசப்பை ஆணாக நின்று அத்தையின் மேல் கொட்டியதால் தானே எப்போதும் அவளிடமிருந்து மாமாவுக்கு அந்த கெடுசொற்கள். முதல்முறை காதல் கொண்ட அந்த கன்னியாக மாமாவை ஏற்றுகொள்ளும் அவள், பெண்ணாக அவ்வெறுப்பை நீலனிடம் ஏற்றிகொள்கிறாள் போலும். அதே சமயம் அன்னையாக பாலூட்ட முடியாது கண்ணீர் வடிக்கிறாள். அவள் அடிவாங்கி நீலாவுக்கு பாலூட்டும் நாளுக்கு பிறகு அம்மா செய்ததை போல பாலூற்றி வழிபடுவது தன் குற்றவுணர்வினால் போலும். அதற்கு முன் நீலாவுக்கு பாலுட்டாமல் இருப்பது தன் மகனை இழந்த அன்னையாக, அவளுள் வாழும் காதல் கன்னிக்கு கொடுக்கும் பதில் என நினைக்கிறேன். இறுதியாக அவள் தன் தவறை முழுமையாக ஏற்கையில் எந்த குழந்தையும் அன்பில் குறை வைப்பதில்லை என புரிந்து கொள்கையில் நீலனின் பாலை கண்டுகொள்கிறாள்.
அம்மாவுக்கும் அத்தைக்குமான உறவு அக்கை தங்கையாக, அதன் உள்ளோடும் அம்மையும் மகளுமாக பிணைப்பும் கண்ணறியா பிணக்கும் கொண்டுள்ளது. கதைசொல்லி அம்மாவை சந்திக்கையில் அவள் ஆசுவாசமடைவது நமக்கு ஒரு மகன் உள்ளான் என்பதால் போலும். அடுத்த நாளில் இருந்து அம்மா மீண்டும் பாலூற்றுவது ஏதோ ஒரு வகையில் தானும் நீலனின் இறப்புக்கு காரணம் என நினைப்பதாலா? அத்தை அம்மாவை நோக்கி கெட்ட வார்த்தையை சொல்லும் உளநிலைக்கு செல்வது தான் அம்மா போர் போட சொல்லுவதற்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். அவள் ஆழம் அறிகிறது அது வழியென்று. ஆனால் எல்லோர் மனமும் மேல்நிலையில் அது நோக்கி அச்சமும் கசப்பும் கொண்டுள்ளதே அந்த பதினைந்து நிமிட கெடு நாற்றம். நீலாவின் கண்ணீர் பலவருட துன்பமொன்று நீங்குவதன் வெளிப்பாடென நினைக்கிறேன்.
இத்தனைக்கும் பிறகும் அந்த உறவுகளின் ஊடுபாவுகளை எவராலாவது முற்றாக வகுத்துவிட முடியுமென்று தோன்றவில்லை.
அன்புடன்
சக்திவேல்
மரம்போல்வர்- சுஷீல்குமார் மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார் கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்புதுவை வெண்முரசு கூடுகை 42
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம், நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 42 வது கூடுகை 18-09-2021 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது. அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும், ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” ,
பகுதி மூன்று. இருகூர்வாள்
1 முதல் 6 வரை
பகுதி நான்கு. அனல்விதை
1 முதல் 6 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர்
திருமாவளவன் உரையாடுவார்
இடம்:
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001
தொடர்பிற்கு:-
9943951908 ; 9843010306
September 12, 2021
பயிற்சிகளில் நான்…
ஊட்டியில் டாக்டர் ஜீவா ஒருங்கிணைத்த சூழியல் பயிற்சி வகுப்பு, 1991
பயிற்சிகள் உதவியானவையா?
அன்புள்ள ஜெ,
பயிற்சிகள் உதவியானவையா என்னும் கட்டுரை கண்டேன். நீங்கள் அத்தகைய பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறீர்களா? அவை உதவியானவை என நேரடியக உணர்ந்திருக்கிறீர்களா?
ராஜா சிவக்குமார்
டாக்டர் ஜீவா ஒருங்கிணைப்பில் இன்னொரு பயிற்சி முகாம் 1990அன்புள்ள ராஜா,
நான் ஒன்றைச் சொல்கிறேன் என்றால் அது பெரும்பாலும் என் சொந்த அனுபவம் அல்லது நான் கண்ட அனுபவமாகவே இருக்கும். நான் அனுபவங்களுக்காக என்னை திறந்துகொண்டவன். அனுபவங்களைத் தேடிச்செல்பவன்.
நான் பள்ளிப்பாடங்களுக்கு வெளியே தமிழை முறையாக கற்றவன். பழைய முறைப்படி ஆசிரியர் வீட்டுக்குச் சென்று பாடம் கேட்டிருக்கிறேன். அன்று தொடங்கிக் கற்பதற்கான எந்த வாய்ப்பையும் தவறவிட்டதில்லை. எல்லாமே உதவியாக இருந்துள்ளன. நான் சுயம்பு, ஏற்கனவே பெரியஆள் என்று எப்போதும் தயங்கியதில்லை. எந்தக்கூச்சமும் அடைந்தது இல்லை. என் தனித்திறன் என்ன என எனக்குத் தெரியும். அது மிக அசாதாரணமானது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் எந்தப் பயிற்சியையும் தவிர்த்ததில்லை.
என்னென்ன பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்? இளமையில் போர்க்கலை வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அது அக்கால குமரிமாவட்டத்து வழக்கம்.பின்னர் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நடத்திய பேச்சு – பொது உரையாடல் சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். அங்கேதான் ஒரு ஸ்காட்டிஷ் கிறிஸ்தவப் போதகர் நவீனக் கழிப்பறையை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித்தந்தார். உடலை ஒவ்வொரு நாளும் கண்ணாடியில் பார்க்கவேண்டும், தேமல் போன்றவை தெரிந்தால் தொடக்கத்திலேயே மருத்துவம் பார்க்கவேண்டும் என்று அவர் சொன்னது அன்று ஒரு திகைப்பூட்டும் அறிதலாக இருந்தது.
“வியர்வையுடன் ஓரு மூடிய அறைக்குள் நுழையவே கூடாது. வியர்வை ஆற ஐந்து நிமிடம் நின்றுவிட்டு நுழையுங்கள். இல்லையேல் முதல் கணத்திலேயே உங்கள் மேல் ஒவ்வாமையை உருவாக்கிக் கொள்வீர்கள். செருப்பு பழையதாக இல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ ஓர் உள்ளுணர்வால் மனிதர்கள் பிறருடைய செருப்பை கவனிக்கிறார்கள்”. அந்த துரை மழலைத்தமிழில் பேசிய சொற்கள் அப்படியே நினைவிலிருக்கின்றன. எனக்கு அது நவீன உலகுக்குள் நான் நுழைவதற்கான முதல் காலடி.
“எந்நிலையிலும் இன்னொருவருடைய உடையைப் பற்றி எதிர்மறையாக ஏதும் சொல்லாதீர்கள். அவர்கள் மேல் உரிமை எடுத்துக்கொண்டு எதையும் கேட்காதீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் உணவு தேவையில்லை என்றால் அன்பாக மறுக்கலாம். ஆனால் அதன் தரம் பற்றிய குறையைச் சொல்லவே கூடாது. பலர் சாப்பிடும் இடத்தில் உணவின் சுவை, தரம் பற்றிய எதிர்மறைக் கருத்தைச் சொல்லாதீர்கள். அது கெட்டுப்போன உணவென்றால் மட்டும் சொல்லுங்கள். உங்களைவிடப் பெரியவர்களை நீங்கள் என நேராகச் சுட்டுவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள்” இதெல்லாம் அவர் அன்று சொன்னபோது இந்தியப்பண்பாட்டையே மறுப்பதாக அமைந்தது.
முழுக்கோடு, மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ நிறுவனங்கள் அன்று மிக ஆக்கபூர்வமான அமைப்புகளாக இருந்தன. ஆண்டுதோறும் கோடைவிடுமுறையில் அவர்கள் நடத்தும் பயிற்சிவகுப்புகள் மிகப்பெரிய அளவில் ஆளுமைவளர்ச்சி அளிப்பவை. எனக்கு மின்சாரத்தின் அடிப்படைகளை அங்கேதான் சொல்லித்தந்தனர். ஃப்யூஸ் போட அங்கேதான் கற்றேன். ஸ்பானர், ஸ்க்ரூடிரைவர் போன்ற எட்டு கருவிகளை கையாள்வதற்குக் கற்றுத்தந்தனர்.
எண்பதுகளில் திருவனந்தபுரம் பல்கலைகழகத்தில் பேராசிரியர் நாராயணபிள்ளை நடத்திய தமிழ் அடிப்படை இலக்கணப் பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அங்கே வேதசகாயகுமார் எனக்கு வகுப்பு எடுத்திருக்கிறார். கோழிக்கோடு பல்கலையில் சம்ஸ்கிருத அடிப்படைப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். ’ஆயிரம் சம்ஸ்கிருத வார்த்தைகள்’ என ஒரு பயிற்சி வகுப்பு மொழிகள் பற்றிய என்னுடைய பார்வையையே மாற்றியமைத்தது. கண்ணாடி மாற்றினால் சட்டென்று ஒரு தெளிவு வருமே அதுபோல. அதன்பின்னர்தான் பழைய மலையாள இலக்கியத்திற்குள்ளேயே நுழைய முடிந்தது.
முரளிதரன் மாஸ்டர் முன்னெடுப்பில், காசர்கோடு ஃபிலிம் சொசைட்டி சார்பில், விமர்சகர் சானந்தராஜ் நடத்திய சினிமா பார்ப்பதற்கான பயிற்சிமுகாம்கள் நான்கில் கலந்துகொண்டிருக்கிறேன். உலகசினிமாவின் வரலாற்று வரைபடமே அப்போதுதான் கிடைத்தது. ஒன்றில் ஜான் ஆபிரகாம் வந்து அமர்ந்திருந்தார். மூத்த மலையாள எழுத்தாளர்கள் நடத்த, மலையாள மனோரமா இதழ் ஒருங்கிணைத்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறைகள் இரண்டில் கலந்துகொண்டிருக்கிறேன். ஒரு பட்டறையில் வகுப்பு ஒன்றை நடத்தியவர் எம்.டி.வாசுதேவன் நாயர்.
நாகர்கோயிலிலும் திரிச்சூரிலும் கேரள சாகித்ய அக்காதமி நடத்திய மொழியாக்கப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டிருக்கிறேன். நாகர்கோயில் பட்டறையில் சுந்தர ராமசாமி வகுப்பு எடுத்தார். அதைப்பற்றி எழுதிய கட்டுரையில் அத்தகைய பட்டறைகளின் தேவை பற்றிச் சொல்லியிருக்கிறார்.
நாட்டார்கலைகளை ரசிப்பதற்கான பட்டறை ஒன்றை கேரள ஃபோக்லோர் அக்காடமி நடத்தியது. திருவந்தபுரம் வைலோப்பிள்ளி ஹாலில். அதில் கலந்துகொண்டேன். எனக்கு எம்.வி.தேவன் வகுப்பு நடத்தினார்.கேரள சங்கீத நாடக அக்காடமி நடத்திய நாடகரசனைப் பட்டறையில் பயிற்சியாளனாகப் பங்கெடுத்திருக்கிறேன். பயிற்சிக்காக ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். அது பின்னர் ’வெளி’ நாடக இதழில் வெளியானது. சிற்பக்கலை ரசனைக்காக டெல்லி அருங்காட்சியகம் நடத்திய ஒருநாள் பட்டறையில் கலந்துகொண்டிருக்கிறேன். கதகளி ரசனைக்காக கேரள கலாமண்டலம் நடத்திய இரண்டுநாள் பட்டறையில் கலந்துகொண்டிருக்கிறேன். அதில் வகுப்பெடுத்தவர் கலாமண்டலம் கோபி. ஊட்டி குருகுலத்திலும் கோபி ஒரு வகுப்பு நடத்தியிருக்கிறார், நவரசங்களைப் பற்றி மட்டும்.
காஸர்கோடு தொலைதொடர்பு தொழிற்சங்கம் நடத்திய பல பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அதிலொன்று மலையாள மேடைப்பேச்சுப் பயிற்சி. காசர்கோடு சூழியல் கழகம் நடத்திய செடிகளை அடையாளம் காணும்பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். ’நூறு பூச்சிகள்’ என்ற தலைப்பில் பூச்சிகளை இயற்கைச் சூழலில் அடையாளம் காணும் ஒரு பயிற்சியில் கலந்துகொண்டிருக்கிறேன். எளிய மலையேற்றப் பயிற்சி ஒன்றை எடுத்திருக்கிறேன்.
மருத்துவர் ஜீவா அவர்கள் ஊட்டியிலும் ஈரோட்டிலும் நடத்திய சூழியல் பயிற்சி அரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழில் எழுதத்தொடங்கிய பல இளம் படைப்பாளிகள் அதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவை அவர்களின் எண்ணங்களில் மிக ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன.
தொலைபேசித்துறை ஒருங்கிணைத்த பல பயிற்சி வகுப்புகளில் ஆளுமைத்திறன், பொதுமக்களுடன் பேசும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் எவ்வகையிலோ உதவியானவையாகவே இருந்திருக்கின்றன. என் தயக்கங்களை போக்கியிருக்கின்றன. மிக முக்கியமான பாடம் என இன்று நினைப்பது, முற்றிலும் புதியவர்களைச் சந்திக்கையில் அவர்கள் தங்களை எளிதாக்கிக்கொள்ளும் பொருட்டு நேரம் அளிக்கவேண்டும். அதற்காக சில அன்றாட உலகியல் விஷயங்களை உரையாடவேண்டும் என்பது. “உங்க வீடு எங்க? என்ன வேலை பாக்கறீங்க?” என்பதுபோல.
ஊட்டி குருகுலத்தில் பீட்டர் மொரேஸ் நடத்திய நேரத்தை திட்டமிடுவதற்கும் செயல்களை சீராக முடிப்பதற்குமான பயிற்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். புனைவு, புனைவல்லாத எழுத்து ஆகியவற்றுக்கான குறிப்புகளை தயாரிப்பது பற்றி அவர் அளித்த பயிற்சி என் வாழ்க்கையின் திருப்புமுனைகளில் ஒன்று. குறிப்புகளை முழுமையான சொற்றொடர்களில்தான் எழுதவேண்டும், உடைந்த சொற்றொடர்கள் பயனற்றவை என அவர் சொன்ன வரியை நான் திரும்பத்திரும்ப இன்றும் பிறரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
ஊட்டி குருகுலத்தில் சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] ஒருங்கிணைக்க ஒரு ஜப்பானியர் நடத்திய மாக்ரோ பயாட்டிக்ஸ் [முழுமைவாழ்க்கை] பயிற்சி அரங்கும் முக்கியமானது [ மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை ]காய்கறிகளை வெட்டுவது சமைப்பது முதல் பாத்திரங்களை கழுவுவதுவரை கற்பிக்கப்பட்டன. மிக எளிமையான விஷயம், எண்ணைப் பிசுக்கேற்ற சமையல்பாத்திரங்களையும் டீக்கோப்பை போன்றவற்றையும் ஒரே சிங்கில் சேர்ந்து போடக்கூடாது, சேர்ந்து கழுவக்கூடாது. அது வேலையை இருமடங்கு பெரிதாக்கும். பாத்திரங்களை நான்கு வகையாக பிரித்தாலே பாத்திரம் கழுவும் வேலை எளிதாகிவிடும் [டீக்கோப்பைகள், சாப்பிடும் தட்டுகள், ஊறவைக்கவேண்டிய சமையல்தட்டுகள், எண்ணைப்பிசுக்கேறிய தட்டுகள் என நான்கு] இதைக்கூட ஒரு ஜப்பானிய நிபுணர் நமக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.
ஹிப்பி பின்னணி கொண்ட டெரெக் ஒரே ஒரு பக்கெட் நீரில் குளிப்பது, ஒரே பக்கெட் நீரில் மொத்த துணியையும் துவைப்பது, இரண்டே செட் ஆடையுடன் பயணம்செய்வது, மிகக்குறைவான பொருட்களுடன் பெட்டியை பேக் செய்வது, மிகக்குறைவான இடத்தில் தூங்குவது, ஜீன்ஸின் அழுக்கான பகுதிகளை மட்டும் துவைப்பது, உள்ளாடைகளில் அழுக்கான பகுதிகளை மட்டும் துவைப்பது, மிகக்குறைவான செலவில் வயிறுநிறையும் உணவை தெரிவுசெய்வது ஆகியவற்றுக்கு ஓர் இரண்டுநாள் பயிற்சி அளித்திருக்கிறார்.
அவர் சொன்ன ஒன்று உதாரணத்துக்காக. பல் தேய்க்க பிரஷ் இல்லையேல் என்ன செய்வது? கையால் பல்விளக்காதீர்கள். ஒரு சொரசொரப்பான துணியால் அழுத்தமாக மேலிருந்து கீழே இழுத்து துடைத்து துலக்கினால் தொண்ணூறு சதம் பல்விளக்குவதுபோல ஆகிவிடும். அன்று கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. ஆனால் பின்னர் அது மிகப்பெரிய வாழ்க்கைப்பாடம் என தெரிந்தது.
எல்லாமே பயிற்சிகளால் மிக எளிதாக அடையப்படத்தக்கவை. பயிற்சியால் அடையமுடியாத ஒன்றுக்காக மட்டுமே நாம் நம் தனியுழைப்பைச் செலுத்தவேண்டும். அதுவே வாழ்க்கையை வாழும் வழி. வாழ்க்கையில் வீணடிக்க நேரமே இல்லை.
நான் சிறுகதை எழுதும் பயிற்சிகள் அளித்திருக்கிறேன். அவற்றிலிருந்து சிறந்த எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் நான் பயிற்றுவித்த மாணவர்கள் எழுதிய 12 கதைகள் அடங்கிய தொகுதி வெளியாகியிருக்கிறது. எல்லாமே அவ்வெழுத்தாளர்களின் முதல் கதைகள். எல்லாருமே அதற்குமுன் எதுவுமே எழுதாதவர்கள். அவற்றில் ஐந்து கதைகள் முக்கியமான படைப்புகள். எழுத்தாளர் ஆகாதவர்களுக்குக் கூட சிறுகதை வாசிக்கும் ரசனை அமைந்திருக்கும். அவர்கள் அதைச் சொல்லியிருக்கிறார்கள்.
ஈரோட்டில் தர்க்கபூர்வமாக விவாதிப்பது, பேசுவதற்கான ஒரு பயிற்சிவகுப்பை நடத்தினோம். இரண்டுநாட்களிலேயே சில அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தோம். கவிதை ரசனைக்காகவும், சிறுகதை எழுதுவதற்காகவும் தொடர்ந்து பயிற்சி அமர்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். கருவிலே திரு கொண்டவர்கள் தாங்கள் என்னும் எண்ணத்தையும், தேவையில்லா கூச்சத்தைவும் உதறி கலந்துகொள்பவர்கள் சிலரே. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு இங்கே திறந்திருக்கவேண்டும் என்பதே எண்ணம்.
உண்மையில் மேலும் பல பயிற்சிகளை அளிக்கலாம் என்னும் எண்ணம் உள்ளது. அதற்கான நிபுணர்களை அறிவேன். சிலவற்றை நானே அளிக்கமுடியும். தொழில்களுக்கு, வேலைக்கு, பொதுவெளிப்புழக்கத்துக்கு, சிந்தனைக்கு இன்றியமையாத பயிற்சிகள் அவை.
வெளிநாடுகளில் இத்தகைய பயிற்சிகள் ஏராளமாக உள்ளன. இங்கே இன்னும் முறைப்படி அவை கிடைப்பதில்லை. அறிவுஜீவிகளின் சுயம்புவாதமும், பொதுமக்களின் அசட்டுத்தனமான எதிர்மனநிலைகளும், கற்பவர்களின் தயக்கங்களும் பெரிய தடைகளாக உள்ளன.
அவற்றை எல்லாம் விட மோசமானது இங்கே கற்பவர்களிடம் உள்ள பொறுப்பின்மை. “என் மச்சான் கூட சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன் சார், ஒரு அமர்விலே மட்டும் கலந்துக்க முடியுமா?” என்று கூசாமல் கேட்பார்கள். அமர்வுகளுக்கு முன் செய்யவேண்டிய முன்பயிற்சிகளைச் செய்யாமல் வருவார்கள். வந்தபின் அரைக்கவனத்துடன் அமர்ந்திருப்பார்கள். எதையுமே கூர்ந்து கவனிக்க மாட்டார்கள், தீவிரமாகப் பயிலமாட்டார்கள். ஆனால் ஆசிரியர் அக்கல்வியை தனக்குள் செலுத்தவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். இந்த மூளைச்சோம்பல் ஒரு தேசியகுணம். எல்லாமே தனக்கு தெரியும் என எண்ணி எல்லாவற்றுக்கும் எதிர்நிலை எடுத்து வாதிடுவது, நையாண்டி செய்வது நம்முடைய தேசிய மனநோய்.
விவாதப்பட்டறை, ஈரோடுஎன் அனுபவத்தில் இங்கே கல்லூரிகளில் நடத்தப்படும் பயிற்சிவகுப்புகள் எல்லாமே வீண்தான். மாணவர்கள் தேர்வுக்குத் தேவையானவற்றை மட்டும் ஒப்பேற்றிப் படித்தால்போதும் என்னும் மனநிலையிலேயே இருப்பார்கள். மறைந்த பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ஆர்வம் காட்டியமையால் நான் மாணவர்களுக்கான ஒரே ஒரு பயிற்சி வகுப்பை திண்டுக்கல் காந்திகிராமத்தில் நடத்தினேன். அனைவருமே உயர்கல்வித்தகுதி கொண்ட பொறியியல் மாணவர்கள். ஆனால் என் கண்முன் நூற்றைம்பது மொக்கைகளின் கண்கள் விழித்திருக்கக் கண்டேன். தமிழகத்தில் எந்தக் கல்லூரியிலும் இனி எந்தப் பயிற்சியையும் நடத்தமாட்டேன் என்று முடிவுசெய்தேன். நாங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில்கூட கல்லூரி மாணவர் என்றால் கூடுமானவரை தவிர்த்துவிடுவோம். இயல்பாகவே அவர்கள் அகம் மூடிய முட்டாள்களாகவே இருப்பார்கள். அப்படியல்ல என்று அவர்களே நிரூபிக்கவேண்டும்.
நான் புரிந்துகொண்ட உண்மை இது. இங்கே இலவசமாக, அல்லது குறைந்த செலவில் அளிக்கப்படும் எதற்கும் மதிப்பில்லை. அத்தகைய பயிற்சிகளுக்கு வருபவர்கள் கற்றுக்கொள்வதுமில்லை. உண்மையான ஆர்வம்கொண்டு தகிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவும் அளிக்கலாம் – எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் அத்தகைய சிலருக்கு அவ்வாறு இடமளிப்பது உண்டு. பொதுவாக கற்பிக்கப்படும் எதற்கும் உயர்ந்த கட்டணம் வைக்கவேண்டும். அக்கட்டணத்தை அந்த நபரே கட்டவேண்டும், பெற்றோர் அல்லது நிறுவனம் கட்டக்கூடாது. அவ்வாறு உயர்ந்த கட்டணம் கட்டி கலந்துகொள்ளும் தொழில்நிறுவனம் சார்ந்த பயிற்சிகள், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் நடத்தும் பயிற்சிகளிலேயே மக்கள் கொஞ்சமாவது முயற்சி எடுத்து, பொழுதை வீணடிக்காமல் எதையாவது கற்க முயல்கிறார்கள். இது நவீன வணிக யுகம். விலையற்ற எப்பொருளும் குப்பைதான்.
ஜெ
பசுமை முகங்கள்முன்னிலை மயக்கம்
சதீஷ்குமார் சீனிவாசன்கவிதை என்பது பொருள்மயக்கம் வழியாக பொருளுணர்த்தும் ஒரு கலை. பொருள் என நாம் எண்ணுவது ஒரு நிலைப்புள்ளி. அதை எண்ணியிராச் சொற்கூட்டின் வழியாகக் கவிதை அசைக்கிறது. ஜப்பானில் ஒரு கலையைக் கண்டேன். ஒரு சிறு களிமண் சிற்பம். அதைத் தலைகீழாக திருப்பி வைத்தால் மற்றொன்று.
பொருள்மயக்கம் கவிதையில் அடிக்கடி நிகழும் புள்ளிகளில் ஒன்று முன்னிலை. ‘நீ’ என்றும் ‘உன்’ என்றும் கவிதை சொல்வது எவரை? உலகில் எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகளை காதல்கவிதைகளாக வாசிக்கமுடியும் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. அத்தனை காதல்கவிதைகளையும் பக்திக் கவிதையாகவும் வாசிக்கமுடியும். அனைத்திலும் உள்ள இந்த ‘நீ’ தன்னை உருவழித்து உருவாக்கிக்கொண்டே தழலாடுகிறது.
அது தன்னை நிரப்பும் எதிர்பாலினம் ஆக இருக்கலாம். தன்னை உள்ளடக்கிய பெருவெளியாக, முழுமையாக இருக்கலாம். அல்லது தானேயாக இருக்கலாம். அந்த நீயை எளிதாக வரையறை செய்யாமலிருக்கும் வாசகன் கவிதையில் மேலும் மேலும் எதையோ அடைந்துகொண்டிருக்கிறான்.
சதீஷ்குமார் சீனிவாசனின் இரு கவிதைகள்:
அழைக்கும் தீ
காற்றில் அலையும்
ஒரு சுடர்போல் தீண்டு என ஏங்குகிறாய்
தீண்டிவிட்டு விலக முடிந்த
தீயா இதுவென
யோசித்தவன்
குளத்தில் குதிக்கும் சிறுவன்போல்
அச்சுடரில் ஆழக் குதிக்கிறேன்
சுடர் அணையும்வரை
அத்தனை வெளிச்சம்
இருளென்ற ஒன்று
இல்லவே இல்லை என்பது மாதிரி
*
இந்தக் கவிதையை உடனடியாக ஒரு காதல்கவிதையாக வாசிக்கவே இன்று நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டிலென்றால் பக்திக்கவிதையாக வாசிக்கப்பட்டிருக்கலாம். இரண்டையும் ரத்துசெய்துவிட்டு தன்னையோ தானல்லாத பிறிதொன்றையோ அந்த ‘நீ’யில் நிறுத்தி பார்க்கலாம். மெல்லவந்து தொடும் சுடர். இருளிலா வெளிநோக்கி ஈர்க்கும் விசை.
தளும்பும் சொல்
அவலமான சொற்கூட்டத்தில்
நாலைந்தை பொறுக்கி
உடைத்து உடைத்து
ஒரு அற்புத சொற்றொடரை
உருவாக்கிவிட்டேன்
நீர்க்குமிழிபோல அந்தச் சொற்றொடர்
பழைய ஸ்திதிக்கு உடைந்துபோகத் தளும்புகிறது
நீ அதை சட்டென புரிந்துகொள்
அல்லது
எதிலாவது இப்போது
குறிப்பெடுத்து வை
ஏனெனில் மீண்டுமொருமுறை
அதை என்னால் சொல்ல முடியாமல் போய்விடலாம்
நீயும் அதை புரிந்துகொள்ளும்
புலனை இழந்துவிடலாம்
அந்த அற்புத சொற்றொடர்
உடைந்துபோக
எப்படி தளும்பி நிற்கிறது பார்.
*
எவர்முன் தளும்பிச் சொட்டிவிட்ட சொல் அது? காலவெளியென்றான ஒன்றிடமா? கண்முன் எழுந்த ஒருத்தியிடமா? அல்லது தனக்குத்தானேயா?
சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள் இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன் பிறிதொன்று கூறல்விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது – வாழ்த்துக்கள்
இலக்கியம் ஒரு வாழ்க்கைமுறை என்பதாக வாழ்ந்த இருவருக்கு ஒரே நேரத்தில் விருதுகள் கிடைத்திருக்கின்றன. இலக்கியம் மட்டுமே தொழிலாகவும் வாழ்வாகவும் வாழ்ந்தவர்கள் இவர்கள. பாணர்களின் தொடர்ச்சி. அதே சமயம் எந்த அரசனையும் பாடாத பாணர்கள். ஒருவரின் மொழி புதுமைப்பித்தன் சொல்வது போல தரை தெளிவாகத் தெரிவதாலேயே ஆழம் பற்றிய நம் மதிப்பீடுகளை தவறாக்கிவிடும் எளிமை கொண்டது. இன்னொருவரது மொழி ஒரே நேரத்தில் ஒரு உடலின் மூலமாக முன்னோர்களின் பல ஆவிகள் பேசுவது போன்ற செறிவும் இருண்மையும் கொண்டது. இருவருக்கும்
வாழ்த்துகள்
போகன் சங்கர்
***
2009 களில்தினமும் அவரை தரிசித்திருக்கிறேன்.கவிஞனை தேடிப்போய்பார்ப்பதே சுகம்,காலத்தின் ஆசி..மகாகவி என்றாலே தந்தி போல்வந்துவிடுவதில்லை எதுவும் கவிஞர் விக்ரமாதித்தியன் அண்ணாச்சிக்குவிஷ்ணுபுரம் விருது தந்தஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி.
அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்
சீனு ராமசாமி
***
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நம் மரபின் அடையாளம். விருது பற்றிய செய்தியை நான் கொஞ்சம் தாமதமாகவே பார்த்தேன்.
என் ஆசிரியர் வகுப்பில் கவிதை பற்றிச் சொல்லும்போது ஆத்மாநாம் தற்கொலைசெய்துகொண்டதைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்னார். கவிஞர்கள் என்பவர்கள் நாம் மின்சாரத்தில் கட்டும் ஃபியூஸ் கம்பி போல என்றார். அதுதான் அந்த மின்சாரம் ஓடுவதிலேயே மென்மையான கம்பி. அதுதான் அதிகமாகச் சூடாகும். அதுதான் எளிதாக அறுபடும். அதேபோன்றவர் ஆத்மாநாம். அவர் அறுந்துவிட்டார். விக்ரமாதித்யன் நம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான மின்சாரத்தையும் ஏந்தியும் சுட்டுப்பழுத்தாலும் அறுபடவில்லை. அவருடைய மரபுக்கல்வியும் பாணனின் வாழ்க்கையும் அதற்கு உதவியிருக்கலாம்.
அவருடைய கவிதைகளை நான் கல்லூரிக்காலம் முதலே வாசிக்கிறேன். பலவரிகள் பழமொழி போல ஞாபத்தில் நிற்கின்றன. பழக்கப்பட்ட ரதவீதி குறுகிப்போயிற்று. திசைமுடிவில் தெரிவதெல்லாம் ஆகாயம் நீலநிறம் போன்ற வரிகளை நான் அடிக்கடிச் சொல்லிக்கொள்வதுண்டு. விக்ரமாதித்யன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ராஜேஷ் மாணிக்கம்
***
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது நிறைவளிக்கிறது. அவரை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவருடைய கவிதைகள்மேல் ஈடுபாடுண்டு. அவருடைய கருத்துக்கள் மேல் ஈடுபாடில்லை. அவர் பெண்களையும் சமூக அமைப்பையும் மதத்தையும் மிகவும் மரபார்ந்த நெல்லைப்பிள்ளைமாரின் பார்வையிலேயே பார்க்கிறார். முற்போக்கான சிந்தனைகளை அடையவில்லை. அவற்றைக் கிண்டல்செய்யவும் தயங்குவதில்லை. ஆனால் அவருடைய கவிதைகளில் நேரடியாக வாழ்க்கையிலிருந்து வரும் ஆழமான வெளிப்பாடுகள் பல உள்ளன.அவை தமிழ்மொழியின் அழகையும் கூர்மையையும் வெளிக்காட்டுபவை. அவை முக்கியமான படைப்புக்கள். விக்ரமாதித்யன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சண்முகசுந்தரம் எம்
***
கிரானடா நாவலும் அச்சமும், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கொள்ளு நதீமின் கிரானடா நாவலும் அச்சங்களும் வாசித்ததும் கிரானடாவை வாங்க அனுப்பாணை பிறப்பித்தேன். அவரின் நூலறிமுகம் ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை அளித்தது. கிரானடா என்று பெயரிட்டிருக்கப்பட்ட அந்த வீடும், கிரானடா என்னும் பெயரும் வசீகரித்தது. அவர் குறிப்பிட்டிருப்பது போல pomegranate எனப் பெயரிடப்பட்டிருக்கும் மாதுளையின் அறிவியல் பெயர் Punica granatum. இந்த பெயரில் பல மொழிகளின் கலப்பு இருக்கிறது.
லத்தீன மொழியில் pōmum என்றால் ஆப்பிள் grānātum என்றால் விதைகள் செறிந்த என்று பொருள். ’’ஆப்பிளை போலவேயான கனி ஆனால் விதைகள் நிறைந்த’’ என்ற பொருளில் பழைய ஃப்ரென்சு சொல்லான pomme-grenade என்பதிலிருந்தே இந்த லத்தீன் சொல் பெறப்பட்டது…ஆங்கிலத்தில் “apple of Grenada” என்றழைக்கட்ட இக்கனி லத்தீன -granade என்பதை ஸ்பெயினின் நகரான ‘Granada’ வை தவறாக நினைத்திருக்கலாமென்றும் ஒரு கருத்து இருக்கின்றது.Pomegranate என்பதற்கான ஃப்ரென்ச் சொல்லான grenade, மாதுளம் கனிகள் கையெறி குண்டுகளின் வடிவத்தை ஒத்திருப்பதால் வைக்கப்பட்டது என்றும் தாவரவியல் குறிப்புக்கள் உள்ளன.
பல பொருள்கள் கொண்ட லத்தீன grānātum என்பதற்கு அடர் சிவப்பு நிறமென்றும் ஒரு பொருள் இருப்பதால் இது மாதுளங்கனியின் சாற்றின் நிறத்தையும் குறிக்கின்றது..மாதுளையின் நிறத்திற்கென்றே பிரத்யேகமாக balaustine என்னும் சொல் இருக்கின்றது. ’இறப்பின் கனி’ எனப்படும் மாதுளை குறித்த ரோமானிய, கிரேக்க தொன்மங்களும் வெகு சுவாரஸ்யமானவை.. The Color of Pomegranates என்னும் 1969 ல் வெளியான ஒரு ஆர்மினிய திரைப்படம் இசைஅரசனனான 18 அம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆர்மீனிய கவி Sayat-Nova வின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.மாதுளைகளின் நாடான ஆஃப்கானிஸ்தானின் கந்தகாரின் அம்மண்ணிற்கே உரிய ஜம்போ மாதுளைகளுக்கு சர்வதேச கிராக்கி இருக்கின்றது.
கொள்ளு நதீமின் இந்த கட்டுரை மாதுளையின் பின்னால் என்னை போகச்செய்துவிட்து
கிரானடா வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
கிரானடா பற்றிய குறிப்பை வாசித்தேன். அதிலுள்ள ஒரு பதற்றம் தொந்தரவு செய்தது. அது ஒர் இந்திய இஸ்லாமியருக்கு உருவாகும் சூழல் இன்றிருக்கிறதென்றால் அது நம் குழந்தைகளுக்கு நாமே உருவாக்கும் பேரழிவு என்று தோன்றியது. ஸ்பெயினின் வரலாறு காட்டுவது அதுவே. மூர் என்னும் சொல் அத்தனை நஞ்சு கொண்டது. ஸ்பானிஷ் இன்குவிசிஷன் பற்றியெல்லாம் இன்று பொதுவெளியில் எவரும் பேசுவதில்லை. இஸ்லாமிய வன்முறை என கட்டமைப்பவர்கள் அதை குறிப்பிடுவதில்லை.
ஜே.ஆர். ராஜன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

