Jeyamohan's Blog, page 912
September 22, 2021
அசோகமித்திரன் என்னும் பெயர்
வெகுநாட்களாக இந்த பெயரை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். இவர் எந்த துக்கம் இல்லாதவனின் நண்பனாக இருந்தார். இந்த பெயரை வேறு யாரும் உபயோகிப்பதாக கூட தெரியவில்லை. இவருக்கு எப்படி தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா?
நன்றி
வைஜெயந்தி சென்னை
***
அன்புள்ள வைஜயந்தி,
அந்தப்பெயரை ஏன் சூட்டிக்கொண்டார் என்று அசோகமித்திரன் சொல்லியிருக்கிறார். அவருடைய நண்பர் ராமநரசுவுடன் இணைந்து இளமையில் அவர் நடித்த ஒரு நாடகத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் அசோகமித்திரன். ஒரு துணைவனின் கதாபாத்திரம் என நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் அவருக்குப் பிடித்துப் போனதனால் அந்தப்பெயர்.
மேலும் அதில் இருக்கும் மித்திரன் என்னும் சொல் அவருக்கு ஈர்ப்புடையது. தன்னை ஒரு சேவகனாக எண்ணிக் கொள்ளவே பிடித்திருக்கிறது, தலைவனாக எண்ணிக் கொள்வதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொன்ன பின்னர்தான் துயரற்றவனின் துணைவன் என அப்பெயர் பொருள்கொள்வது தெரிகிறது.
ஜெ
ஒளியே உடலான புழு
அன்பின் ஜெ,
நலம்தானே?
இரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரோஸ்டமியின் “The Taste of Cherry” படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். 1997-ல் வெளிவந்த படம். அவ்வருடத்தில் கேன்ஸ் திரை விழாவில் “Palme d’Or” விருது பெற்றிருக்கிறது. அபாரமான திரைப்படம் ஜெ. வாழ்வின் தரிசனத்தைச் சொல்லமுயலும் ஒரு நல்ல படைப்பு. ஒரு “மினிமலிஸ்ட்” படம். மொத்தப் படத்திலும் நான்கைந்து கதாபாத்திரங்கள்தான். பின்னணி இசை கிடையாது. இயற்கையான ஒலிகள் மட்டுமே. நீள நீளமான குறைந்த எண்ணிக்கையிலான காட்சிகள். ஒன்றரை மணி நேரப் படம்தான். ஆனால் அந்த எழுத்தும், திரைக்கதையும், ஒட்டுமொத்த காட்சிகளும் திரண்டு உண்டாக்கி அளிக்கும் தரிசனத்தின் துளி ஆச்சர்யப்பட வைப்பது.
“நீ ஏன் ஒண்ணும் சொல்லமாட்டேன்ற. உனக்கு என்ன கடன் தொல்லையா? குடும்பத்துல ஏதும் பிரச்சனையா? மனசைத் திறந்து யார் கிட்டயாவது பேசினயா? போகட்டும், நான்தான் உனக்கு முன்னப்பின்ன அறிமுகமில்ல. புதுசு. உன்னோட நண்பர்கள், உறவினர்கள் யாருகிட்டயாவது பேசினயா? நீ மனசத் திறந்து பேசலைன்னா உன்னோட பிரச்சனைக்குத் தீர்வு எப்படிக் கிடைக்கும்? யாரால உனக்கு உதவமுடியும்? நம்ம எல்லாருக்குமே நம்ம வாழ்க்கையில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது. நமக்கு உண்டாகற சின்னச் சின்னப் பிரச்சனைக்கெல்லாம் விரக்தியடைஞ்சி இந்த மாதிரி வழியைத்தான் தேர்ந்தெடுக்கணுமா? இப்படி எல்லாருமே இந்த முடிவெடுத்தா பூமியில அப்புறம் யார்தான் உயிர் வாழ்றது? சொல்லு” இரானின் அஜெர்பய்ஜன் பகுதியைச் சேர்ந்த துருக்கிப் பெரியவர், காரோட்டும் மத்திம வயது “படியிடம்” பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டே வருகிறார். படி எதுவும் பதில் பேசாமல் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறான். முன்னால் அந்த மண்பாதை இரண்டாகப் பிரிகிறது. கைகாட்டி “அந்தப் பாதையில போ” என்கிறார் பெரியவர். “எனக்கு அந்தப் பாதை பழக்கமில்லையே? சரியாத் தெரியாதே?” என்கிறான் படி. “எனக்குத் தெரியும். நீ போ. கொஞ்சம் சுத்துதான். தூரம் அதிகம்தான். ஆனா மிக அழகான பாதை” என்கிறார் பெரியவர்.
“நல்லா கேளு. என் வாழ்க்கையில எனக்கு நடந்த ஒரு விஷயத்தைச் சொல்றேன். அப்போ எனக்கு கல்யாணமான புதுசு. வாழ்க்கையில என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடாதோ எல்லாம் மொத்தமா சேர்ந்து வந்தது. மன அழுத்தம். விரக்தி. தாங்கமுடியாத கட்டத்துக்கு வந்து எல்லாப் பிரச்சனைகளையும் ஒழிச்சுக் கட்ட இதுதான் வழின்னு முடிவு பண்ணேன். ஒருநாள் விடிகாலையில சூரியன் உதிக்கிறதுக்கு முன்ன இருட்டுல வீட்லருந்து ஒரு கயிறை எடுத்து கார்ல போட்டுட்டு கிளம்புனேன், எங்காவது போய் மரத்துல தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிக்கலாம்னு. இது நடந்தது 1960-ல. மியானே பக்கம் இருக்கற மல்பெரி தோப்புக்குள்ள போனேன். இன்னும் விடியல. இருட்டாதான் இருந்தது. ஒரு மரத்துல கயிறத் தூக்கிப்போட்டேன். அது கிளையில சரியா விழுகல. ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணியும் சரியா கிளையில மாட்டல. நான் அந்த இருட்டுல மரத்து மேல ஏறி கயிறை டைட்டா கட்டினேன். கட்டும்போது என் கையில மெத்து மெத்துன்னு ஏதோ பட்டுச்சு. மல்பெரி பழங்கள். ஒண்ண பிச்சு சாப்பிட்டேன். என்ன ஒரு சுவை! எத்தனை இனிப்பு! ரெண்டு, மூணுன்னு சாப்பிட்டுட்டே இருந்தேன். அப்பதான் கவனிச்சேன். தூரத்துல மலை உச்சியில சூரியன் உதிக்க ஆரம்பிச்சது. என்ன ஒரு அழகான சூரியன்! எத்தனை அற்புதமான ஒரு காட்சி! மலையில இருக்கற பசுமையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா துலங்குது. சட்னு மரத்துக்குக் கீழ பேச்சுக் குரல்கள் கேட்டேன். பள்ளிக்கூடத்துக்குப் போற ஸ்கூல் குழந்தைங்க. அவங்க நின்னு மேல என்னப் பார்க்கறாங்க. மரத்த ஆட்டச் சொல்றாங்க. நான் ஆட்டினேன். மல்பெரி பழங்கள் கீழ விழுந்தது. அந்தக் குழந்தைங்க எடுத்து சந்தோஷமா சாப்பிட்டாங்க. எனக்கும் சந்தோஷமா இருந்தது. நான் கொஞ்சம் மல்பெரி பழங்கள் எடுத்துக்கிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போனேன். என் மனைவி இன்னும் தூங்கிட்டுதான் இருந்தா. அவ எந்திரிச்சப்புறம் அவளும் மல்பெரி பழங்கள் சாப்பிட்டா. மல்பெரியோட சுவை அவளுக்கும் பிடிச்சிருந்தது. தற்கொலை பண்ணிக்கிறதுக்காக போன நான் மல்பெரி பழங்களோட திரும்பி வந்தேன். ஒரு சின்ன சாதாரண மல்பெரி பழம் என்னோட வாழ்க்கையை எனக்கு திருப்பித் தந்தது. என்னைக் காப்பாத்துச்சு. அதுக்கப்புறம் நான் மொத்த்மா மாறிப்போனேன். எல்லாமே தெளிவான மாதிரி மனசுக்குள்ள ஒரு வெளிச்சம். உனக்குப் புரியுதா?” என்கிறார் பெரியவர். படி எதுவும் பேசாமல் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
“நீ உன்னோட கஷ்டத்த எங்கிட்ட சொன்னாதானே நான் அதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்ல முடியும்?. உடம்பு சரியில்லன்னு டாக்டர்கிட்ட போறோம். நமக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னாத்தானே டாக்டர் அதுக்குத் தகுந்த மருந்து தருவார்” பெரியவர் மேலும் பேசிக்கொண்டு வருகிறார். படி அப்போதும் மௌனமாகவே இருக்கிறான். இந்தக் கிழவரிடம் பேசி என்ன ஆகப் போகிறது என்று விரக்தியுடன் மௌனமாய் சலித்துக்கொள்கிறான். “உனக்கு ஒரு ஜோக் சொல்லட்டுமா? ஒருத்தன் டாக்டர்கிட்டப் போயி ‘டாக்டர், எனக்கு உடம்புல எங்க தொட்டாலும் வலிக்குது. தலையைத் தொட்டா தலை வலிக்குது. வயிறத் தொட்டா வயிறு வலிக்குது. கையில, கால்ல எங்க தொட்டாலும் வலிக்குது. என் உடம்புல ஏதோ பெரிய வியாதி வந்துருக்குன்னு நினைக்கிறேன். நீங்கதான் குணப்படுத்தணும்’-னு சொல்றான். டாக்டர் ஃபுல்லா செக் பண்ணிட்டு ‘உனக்கு உடம்புல எந்த வியாதியும் இல்லை. விரல்லதான் சின்னக் காயம். அதான் அத வச்சு உடம்புல எங்க தொட்டாலும் அங்க வலிக்கிற மாதிரி இருக்கு உனக்கு” என்கிறார் பெரியவர்.
பெரியவரை அவரின் குடியிருப்புப் பகுதியில் விட்டுவிட்டு திரும்புகிறான் படி. வழியில் பள்ளி வளாகத்தில் உற்சாகத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்க்கிறான். மாலை நேரம். மேற்கில் சூரியன் இறங்கிக்கொண்டிருக்கிறான். படிக்கு, உட்கார்ந்து அமைதியாய் அஸ்தமனத்தைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. அங்கு போட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து மறையும் சூரியனையும், வண்ணங்கள் மாறும் வானையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
படி, அன்றிரவு தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்திருந்தான். ஆனால் இரவு கவியும் அந்த மாலை வேளையிலும், தனக்கு, தானே வெட்டிய குழியில் இரவில் மல்லாந்து படுத்து வானில் மேகங்களையும் நிலவையும் பார்க்கும்போது அவனுக்குள் ஒரு “தரிசனம்” நிகழ்கிறது.
வெங்கடேஷ் சீனிவாசகம்
September 21, 2021
நீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல்
நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் ஒன்பதாவது வெண்முரசு கூடுகை 26-09-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான திரு. கடலூர் சீனு அவர்கள் “நீலம்” நாவல் குறித்து ஒரு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அமர்வில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நாள் : 26-09-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
மதத்தை அளித்தலின் வழிகள்.
அன்புள்ள ஜெ
மதத்தை அளித்தல் பற்றி எழுதியிருந்தீர்கள்.[மொழிக்கு அப்பால்…]நீங்கள் சொன்னது நடைமுறை உண்மை. மதத்தை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கையளிக்க முடிகிறது. ஏனென்றால் மதம் உலகியலைச் சார்ந்திருக்கவில்லை. அது முழுக்கமுழுக்க அகவயமானது. முழுக்கமுழுக்க அந்தரங்கமானது. மொழி அப்படி அல்ல. அது உலகியல் நோக்கம் கொண்டது. வாழ்க்கையின் பொருட்டு மொழியை கற்கவேண்டும். அந்த மொழியே மனதை ஆக்கிரமித்திருக்கும். இன்னொரு மொழியை ரகசியமாக, தனிப்பட்டதாக பேணிக்கொள்ள முடியாது. அதற்கு மனதில் இடமில்லை.
இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தே சொல்கிறேன். ஒப்பீட்டுக்காக இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களை எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் மதத்தை குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள். முறையாக மதத்தின் கொள்கைகளையும் சடங்குகளையும் சொல்லிக்கொடுத்து சர்ச்சுக்கும் மசூதிக்கும் கூட்டிச்செல்கிறார்கள். அக்குழந்தைகள் மதத்தை ஏற்று மதத்திற்குள் வாழ்கின்றன. பின்னாட்களில் வாழ்க்கையின் பல சிக்கல்களில் மதம் அவர்களுக்கு பெரிய அகத்துணையாக இருக்கிறது.
அதை எந்த முற்போக்கு, பகுத்தறிவுத் தரப்பும் எதிர்ப்பதில்லை. இஸ்லாமியர்களிலும் கிறிஸ்தவர்களிலும் மதமற்றவர்களை நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்லை. பெரியாரியர்களின் நிகழ்ச்சிகளில் அல்லது இடதுசாரி கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். அது பெரியார் இந்துமதத்தை எதிர்த்தார் என்பதனால். தங்கள் மதத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அந்த மேடைகளிலேயேகூட தெளிவாக தங்கள் நிலைபாட்டை முன்வைப்பார்கள். முற்போக்காளர்களும் பெரியாரியர்களும்தான் அவர்களுக்காக சமரசம் செய்து அந்த மதங்களை ஏற்றுக்கொள்வார்கள்.
இந்துக்கள் மதத்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதில் மட்டும்தான் எல்லா சர்ச்சைகளும் வருகின்றன. இந்துக்களுக்கு மட்டுமே இந்தக் குழப்பங்களும் உள்ளன. அது மட்டும்தான் பிற்போக்கு என்று இங்கே பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எப்படியோ அதை நாமும் நம்ப ஆரம்பித்துவிட்டோம். நம் மதநம்பிக்கையை நாம் ஒளிக்கப் பழகிவிட்டோம். வெளியே கொஞ்சம் பாவனையாகவேனும் முற்போக்காகவும் திராவிடமாகவும் பாவனை செய்வோம். “என் பிள்ளைகளுக்கு மதத்தை அறிமுகமே செய்யவில்லை” என்பதை ஒரு பெருமையாகச் சொல்லிக் கொள்வோம். வெளிநாட்டில் அப்படிச் சொல்லிக் கொள்வது மிகப்பெரிய கௌரவம்.
என்ன சிக்கல் என்றால் மதத்தை எப்படிச் சொல்லிக்கொடுப்பது என்பதுதான். நாமறிந்த மதம் என்பது நம் பெற்றோர் நமக்குச் சொல்லித்தந்தது. அது ஆசாரம் மட்டும்தான். எது சாப்பிடவேண்டும், எது சாப்பிடக்கூடாது அதுதான் முக்கியம். சில பண்டிகைகள், சில பூஜைகள், சில புரணக்கதைகள். இதெல்லாம்தான் நாமறிந்த இந்து மதம். அதை நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் அதெல்லாம் அவர்களுக்கே கேலியாகத் தெரிகிறது. அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்க நம்மால் முடியவில்லை.
ஆசாரங்களிலெல்லாம் சாதி இருக்கிறது. இன்றைய சூழலில் சாதிப்பிரிவினைக்கே இடமில்லை. அது நம் குழந்தைகளை நாமே இரும்புக்கூண்டிலே அடைப்பதுபோல. நாம் அடைத்தாலும் அவர்கள் பறந்துவிடுவார்கள். நம்மை காட்டுமிராண்டியாக நினைப்பார்கள். பூசைகள் பண்டிகைகள் ஆகியவையும் இன்றைய காலகட்டத்துக்கு உரியவையாக இல்லை. உதாரணமாக சட்டைபோடாமல் பூஜை செய்ய என் பையனிடம் சொன்னால் அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது. நம்முடைய புராணக்கதைகள் எல்லாமே தமாஷாக தெரிகின்றன. இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு வீட்டில் ஒரு பூஜை வைக்க முயன்று முடியாமல் போயிற்று. எவருக்கும் ஆர்வமில்லை.
அத்தனைக்கும் மேலே ஒன்று உள்ளது. இன்றைக்கு இந்தியாவில் மதவெறியும் சாதிவெறியும் வேறொரு எல்லையில் இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு இருந்த எல்லா தயக்கங்களையும் மீறி ஊடகங்களில் தெம்பாக வந்து பேசுகிறார்கள். என் குழந்தைகள் இயல்பாகவே அவர்களை வெறுக்கிறார்கள். இளைஞர்களில் தொண்ணூறு சதவீதம்பேரும் முற்போக்காக லிபரலாகவே இருக்கத்தான் விரும்புவார்கள். மதவெறியையும் சாதி மேட்டிமைத்தனத்தையும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் பேசும் பழமைவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் இளைஞர்களிடம் கொண்டுசெல்ல முடியாது. அப்படிச் செய்வது மனிதவிரோதமான செயல்.
தெளிவாகவே கேட்கிறேன். இதைத்தாண்டி நான் எப்படி இந்துமதத்தை என் குழந்தைகளுக்குக் கொண்டுசெல்வது. இதையே தமிழில் எழுதமுடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால் என் ஆதங்கத்தைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
என்.சூரியநாராயணன்
அன்புள்ள சூரியநாராயணன்,
மதத்தைக் கொண்டுசெல்லுதல் பற்றிய இந்த வினாவுக்கு வேறு வேறுவகையில் விளக்கம் அளித்துக்கொண்டே இருக்கிறேன். முந்தைய கட்டுரைகளில் சொன்னதை மீண்டும் சுருக்கி இப்படிச் சொல்கிறேன். மதத்தை நமக்கு எப்படி அது வந்து சேர்கிறதோ அப்படியே மாற்றாமல் கொள்வது என்பது அப்படியே நிராகரிப்பதற்கு நிகரான மடமை.
மதம் என்பது அதன் மெய்யியல், அமைப்பு, ஆசாரம் என மூன்றாகப் பகுக்கப்பட வேண்டியது. அதன் மெய்யியலே உண்மையில் காலம் கடந்து நிலைகொள்ள வேண்டியது. அதுவே மதத்தின் உள்ளடக்கம். அமைப்பும் ஆசாரங்களும் அதன் கலங்களும் ஊர்திகளும் மட்டுமே. அவற்றை மதமென நினைக்கலாகாது. அவற்றை மதமென நினைப்பவர் அதன் மெய்மையை அறியாதவர்கள்.
மதத்தின் மெய்யியல் மூன்று கூறுகள் கொண்டது. ஆன்மிகம், தத்துவம், பண்பாட்டுக்கூறுகள். நாம் மதத்தில் இருந்து பெறவேண்டியவை இவையே. இவற்றை மட்டுமே நாம் கைமாறவேண்டும். இந்த மூன்றையும் நிலைநிறுத்த, சிந்திக்க தேவையானவை என்றால் மட்டுமே அமைப்புக்களையும் ஆசாரங்களையும் ஏற்கவேண்டும். அவை இன்றைய மானுட அறத்திற்கு எதிரானவையாக இருக்கலாகாது. இன்றைய சிந்தனைகளுக்கு பொருந்துவனவாக இருக்கவேண்டும்.
இதற்கு நாம் முதலில் மதத்தை சரியானபடி கற்று அறியவேண்டும். முதலில் பிழைப்புக்காக மதத்தை ஒட்டுமொத்தமாக உதறிச்சென்றுவிட்டு, அதன்பின் பிந்தியவேளையில் எதுவும் அறியாமல் மதத்தின் ஆசாரங்களையும் அமைப்புகளையும் வெற்று நம்பிக்கைகளையும் மட்டும் சென்று கவ்விக் கொள்வதே இன்று நடக்கிறது. அது வெளியே நவீன வாழ்க்கையும் உள்ளே தேங்கிய பழைமைவாதமும் கொண்ட விசித்திரமான கோமாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஒருவரிடம் மதம் வெறும் பற்றாகவோ, குழுஅடையாளமாகவோ, சாதிவெறியின் புறவேடமாகவோ இருக்கும்போது அது அடிப்படைவாத அரசியலை நோக்கியே அவரை கொண்டு செல்கிறது. மதம் என்பது நாம் நம் பண்பாட்டின் தொடர்ச்சியை அடைய, நம் முந்தையோரின் சிந்தனைகளின் நீட்சியை உருவாக்க, நமது தனிப்பட்ட ஆன்மிக மீட்புக்காக நமக்குத் தேவைப்படுகிறது. மத அரசியலில் சிக்கிக்கொண்டவர்களுக்கு இவை எதுவும் முக்கியமல்ல. அவர்கள் மதத்தை கற்பதில்லை. ஆனால் மதத்தைக் காப்பாற்றுபவர்களாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள்.
அடுத்த தலைமுறை முன் அவர்கள் இந்த வெளிவேடங்களுடன் சென்று நின்றால் இழிவடைவார்கள். ஏனென்றால் அவர்கள் இவர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் எவர் என அவர்களுக்குத் தெரியும்.
நாம் கற்றுக்கொள்வது, நாம் தெளிந்திருப்பதுதான் முதன்மையான தேவை. அப்போதுதான் நாம் அதை கொண்டுசெல்ல முடியும். நாம் வற்புறுத்த முடியாது. அடுத்த தலைமுறை அதன் வழிகளில் முன் செல்லும். நாம் அவர்களுக்கு அளிக்கவில்லை, வழிகாட்ட முடியாமலிருந்தோம் என்ற நிலை இருக்கலாகாது. அவ்வளவே நாம் செய்யக்கூடுவது.
பிள்ளையார் சதுர்த்தி பற்றி சொல்கிறேன். சமீபத்தில் ஒர் அமெரிக்க நண்பர் எனக்கு எழுதினார். அவருடைய பதிமூன்று வயது மகனுக்கு வினாயகர் வழிபாட்டை அறிமுகம் செய்ய முயன்றார். கொழுக்கட்டை செய்யச் சொன்னார். சாணியில் பிள்ளையாரை உருட்டி வைத்து அருகம்புல் சூட்டி வழிபடவேண்டும் என்றார்.
பிள்ளையார் பற்றி கேட்ட பையனிடம் பார்வதி தன் உடலின் அழுக்கை உருட்டி வைத்து குழந்தையாக ஆக்கியதையும், பார்வதி குளிப்பதை எட்டிப்பார்க்க வந்த சிவனை பிள்ளையார் தடுத்ததையும், சிவன் பிள்ளையாரின் தலையை கிள்ளியபின் யானைத்தலையை வெட்டி அங்கே பொருத்தியதையும் சொல்லி “அந்தக்காலத்திலேயே நம்மூரில் உறுப்புமாற்ற அறுவை சிகிழ்ச்சை இருந்திருக்கிறது” என்றும் சொல்லி வைத்தார். பையனுக்கு குமட்டலே வந்துவிட்டது. இவர் சோகமாக எனக்கு எழுதினார்.
மூன்றாண்டுகளுக்கு முன் இதேபோல கேரளத்தில் ஒரு பதினைந்துவயது பெண்குழந்தை என்னிடம் கேட்டது. அவளுக்கு அவள் தந்தை சொன்ன விளக்கங்கள் மேல் ஒவ்வாமை. நான் சுவாரசியமாக பேச ஆரம்பித்தேன். எங்களுடைய வடகிழக்கு மாநிலப் பயணத்தை பற்றிச் சொன்னேன், அங்கே திரிபுரா மாநிலத்தில், அடர்ந்த காட்டுக்குள் உனக்கோட்டி என்னும் ஊரிலிருக்கும் பாறைச்செதுக்குச் சிலைகளை இணையத்தில் இருந்து காட்டினேன்.[https://www.jeyamohan.in/71940/]
அந்தச் சிலைகள் கிபி ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. பழங்குடிகளின் கலை அது என நன்றாகவே தெரியும். ஆப்ரிக்கச் சிலைகள் போலவே தோன்றும். ஆனால் சிவனுக்குரிய தலம் அது. ஒரு பாறை சிவனின் மாபெரும் தலையாக ஆக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அருவி வழிகிறது.
அங்கிருக்கும் ஏராளமான யானைத்தலைச் சிலைகளை காட்டினேன். கல்லில் பெரிய அளவில் செதுக்கப்பட்டவை. அவையெல்லாம் என்ன என்றேன். அவையெல்லாம் விதவிதமான பிள்ளையார் சிலைகள் என்றாள். “இல்லை, இவையெல்லாம் சிவனின் பூதகணங்கள். இவற்றைச் செதுக்கியவர்கள் இந்த பூதகணங்கள்தான் இந்த கோயிலைக் கட்டின என்கிறார்கள்” என்றேன். உனக்கோட்டியின் கதையைச் சொன்னேன். கோடிக்குக் குறைவாக என்று அந்த இடத்திற்கு பெயர்.
யானைத்தலை கொண்ட பூதகணங்கள் எவ்வாறு உருவாயின என விளக்கினேன். உலகம் முழுக்க தொன்மையான மதங்களிலும் பழங்குடி வழிபாடுகளிலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் தலைகள் கொண்ட தெய்வங்கள் உள்ளன. “ஸ்பிங்க்ஸ்!“ என்று கூச்சலிட்டாள். “ஆமாம், குதிரைத்தலை கொண்டது செண்டோர். உலகம் முழுக்க அப்படி பல உருவங்கள் உள்ளன” என்று சொல்லி அந்த விக்கிப்பீடியா பதிவை காட்டினேன்
தமிழகத்தில் கீழ்வாலை என்ற ஊரில் இருபதாயிரமாண்டு பழமையான குகை ஓவியத்தில் பருந்துதலை கொண்ட மனிதனின் வடிவம் இருக்கிறது. அவன் அரசன் அல்லது பூசாரி போல இருக்கிறான். தமிழ்மொழிகூட உருவாகாத கற்காலத்தில் வரையப்பட்ட ஓவியம் அது. உலகம் முழுக்க குகை ஓவியங்களில் அத்தகைய வடிவங்கள் உள்ளன.
கீழ்வாலை கழுகுத்தலை அரசன், அல்லது பூசாரிஅந்த மரபு எப்படி உருவாகிறது? நாம் இப்படிச் சொல்லிப் பார்க்கலாம். பூசாரிகளும் அரசர்களும் சடங்குகளில் விலங்குத்தலைகளை பொருத்திக் கொள்வது உலகமெங்கும் பழங்குடிப் பண்பாடுகளில் உள்ள வழக்கம். கேரளத்திலும் வடகிழக்கிலும் இன்றும் இந்து வழிபாட்டுச் சடங்குகளில் அவ்வழக்கம் உள்ளது. ஆப்ரிக்காவிலும் உள்ளது.
உருவ வழிபாட்டின் ஒரு தொடக்கம் தெய்வமாக வேடமிட்ட மனிதர்களை வழிபடுவது. இன்றும் வடகேரள தெய்ய வழிபாடு அதன் நீட்சியாக உள்ளது. அந்த தெய்வ வேடங்கள் பின்னர் ஓவியங்களும் சிலைகளும் ஆக மாறின. இவ்வாறு பூசகர்களும் அரசர்களும் விலங்குத்தலைகளுடன் சடங்குகளில் தெய்வங்களாக தோன்றியதில் இருந்தே விலங்குத்தலை கொண்ட தெய்வஉருவங்கள் உருவாகியிருக்கலாம்.
தெய்யம்இது வெறும் அச்சத்தால் உருவான ஒரு சடங்கு அல்ல. அப்படி ஆரம்பகால வெள்ளைக்கார [கிறிஸ்தவ] ஆய்வாளர்கள் சொன்னார்கள். இன்றைய நவீன மானுடவியல் அறிஞர்கள் அவ்வாறு சொல்வதில்லை. அது மிகச்சிக்கலான ஒரு குறியீட்டுச் செயல்பாடு என்றும் மானுட உள்ளத்தின் ஆழம் வெளிப்படும் விதம் என்றும் சொல்கிறார்கள். குளோட் லெவிஸ்ட்ராஸின் பெயரைச் சொல்லி அவரை வாசிக்கலாமென்று சொன்னேன்
எளிமையாகச் சொன்னால் அந்த விலங்கின் சிறப்பியல்பை இயற்கையில் உள்ள ஒரு தெய்வீகமான சக்தியாக காண்பதும் அதை குறியீடாக ஆக்கிக்கொள்வதும்தான் இது. ஒவ்வொரு விலங்கும் பழங்கால மூதாதையருக்கு இயற்கையின் ஓர் அபூர்வமான ஆற்றலின் அல்லது ரகசியத்தின் வெளிப்பாடு. பாம்பு ஓர் உதாரணம். அது கால்களற்றது, ஆனால் விரைவானது. பல்லோ நகமோ அற்றது, ஆனால் மிக அபாயமானது. இமைக்காத கண்கள் கொண்டது. எல்லா ஒலிகளையும் கேட்பது, ஆனால் செவிகள் இல்லாதது. ஆகவே உலகமெங்கும் அது குறியீடுதான்.
யானையும் அப்படி ஒரு மகத்தான குறியீடாகவே இந்தியப் பாரம்பரியத்தில் உள்ளது. பௌத்த, சமண மதங்களிலும் யானை முக்கியமான குறியீடுதான். யானை பற்றிய வர்ணனைகளிலேயே அது கவித்துவக் குறியீடாக இருப்பதைக் காணலாம். மேகரூபன் [மேகத்தின் வடிவம் கொண்டவன்] என யானை சொல்லப்படுகிறது. கிருஷ்ணசிலா [கரும்பாறை] என்றும் சொல்லப்படுகிறது. மிக மென்மையான உருவற்ற மேகமும் உறுதியான கற்பாறையுமாக ஒருங்கே தோன்றுவது. கைகொண்ட விலங்கு என்றபொருளில் தமிழில் அதை கைமா என்கிறார்கள்.
அவ்வாறு இந்தியாவின் தொல்மரபில் எருமைத்தலை, குதிரைத்தலை, மான்தலை கொண்ட தெய்வங்களும் அசுரர்களும் பலர் உள்ளனர். யானைத்தலை கொண்ட பூதங்களும் அசுரர்களும் உண்டு. சூரபதுமனின் தம்பி கூட யானைத்தலை கொண்டவன், கஜமுகன் என்று பெயர். சிவபெருமானின் பூதகணங்களில் பல யானைத்தலை கொண்டவை. இவ்வாறு இருந்த யானைத்தலை பூதங்களில் ஒன்றை கணங்களின் தலைவன் [கணபதி] என வழிபடலாயினர். அதுவே பிள்ளையார்.
இந்த மாற்றம் எப்போது நடந்திருக்கும்? நாம் பேசும் மொழிகள் எல்லாம் உருவாவதற்கு முன்பு. நாம் பழங்குடிகளாக வாழ்ந்த காலத்தில். அனேகமாகப் பெருங்கற்காலத்தில். தெய்வ உருவங்களின் தோற்றம் எப்போது என்று கணிக்கவே முடியாது. அவை எங்கோ எப்போதோ தோன்றி வெவ்வேறு வழிபாடுகளால் எடுத்துக்கொள்ளப்பட்டு, மேலும் மேலும் அர்த்தம் ஏற்றப்பட்டு சென்றுகொண்டே இருக்கும்.
இந்தியாவின் எல்லா நிலங்களிலும், வடகிழக்கின் அடர்காடுகளில்கூட பிள்ளையார் சிலைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் நமக்கு கிடைக்கும் மிகத்தொன்மையான கற்சிலைகளே பிள்ளையார்தான். மிகத்தொடக்க காலத்தில் பிள்ளையார் இங்கே குகைகளில் செதுக்கப்பட்டுதான் வழிபடப்பட்டார். தேர்ச்சியற்ற புடைப்புச் சிற்பங்களாகவே பிள்ளையார் அன்றெல்லாம் காணக்கிடைக்கிறார். தோராயமாக காலம் கணிப்பவர்கள்கூட கிபி நான்காம் நூற்றாண்டு, ஐந்தாம் நூற்றாண்டில் அப்பிள்ளையார் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அவற்றில் வல்லம், பிள்ளையார்பட்டி போன்ற பல தொன்மையான பிள்ளையார் சிலைகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். சிற்பக்கலையே தேர்ச்சிபெறாத காலகட்டத்தில் செதுக்கப்பட்டவை அவை என்று தெளிவாகத் தெரியும். ஆய்வாளர்களின் காலக்கணிப்புக்கும் முற்பட்டவை அவை என்பதே என் எண்ணம்.
இது நாம் ஊகிக்கக்கூடிய வரலாறு. இனி ஆன்மிகமாக இதற்கு என்ன பொருள்? நம்முடைய மூதாதை எவரோ இந்தப் பிரபஞ்சத்தில் எதையோ ஒன்றை தன் உள்ளுணர்வால் அறிந்தார். அந்த அறிவை நமக்குச் சொல்ல இந்த வடிவை அளித்தார். இந்த வடிவில்தான் அவர் அறிந்த அது உள்ளதா என்றால் அதை நாம் சாதாரணமாக அறிய முடியாது. ஆனால் மானுட உள்ளம் தன் உள்ளுணர்வால் பிரபஞ்சத்தின் சாரமாக நின்றிருக்கும் சிலவற்றை உணரமுடியும் என நாம் நம்பினால் அவ்வாறு உணர்ந்த அந்த பேருள்ளம் நமக்கு அளிக்கும் வடிவங்களை ஏற்றே ஆகவேண்டும்
இப்பிரபஞ்சத்தில் அவ்வாறு உணரப்பட்டது ஒன்று இருக்கிறது. அதை இப்படி நாம் உருவகிக்க ஆரம்பித்து பல்லாயிரமாண்டுகள் ஆகின்றன. அதன்பின் பல ஞானிகள் இவ்வடிவில் அதை வழிபட்டு, தியானித்து அதே அறிதலை தாங்களும் அடைந்திருக்கிறார்கள். அது நமக்கு தெளிவான ஒரு பாதை. அந்தப்பாதையை நாம் கடைப்பிடிக்கவேண்டும்.
எளிய கேள்வி, இன்றைய நவீன உலகில் வாழும் இளைஞனிடம் கேட்கப்படவேண்டியது. சென்று மறைந்த எளிமையான ‘பகுத்தறிவுக் காலகட்டத்தில்’ வாழும் பழைய உள்ளங்களுக்கு இந்தக் கேள்வி பொருளற்றது. அவர்கள் தங்கள் எளிய நிரூபணவாத தர்க்கமுறைமையால் உருவாக்கிக் கொண்ட சிறிய உலகில் வாழ்பவர்கள். நான் பேசுவது நவீன இயற்பியலை, உயிரியலை கொஞ்சமேனும் கற்ற இளைய உள்ளங்களைப் பற்றி.
மானுடகுலம் பல்லாயிரமாண்டுகளாக உணர்ந்தும், அறிந்தும் திரட்டியுள்ள இந்த மெய்மைகள் குறியீடுகளாகவும் ஆழ்படிமங்களாகவும் நம்மை வந்தடைந்துள்ளன. அவை நமக்கு வேண்டுமா வேண்டாமா? நியூயார்க்கிலோ டோக்கியோவிலோ உள்ள எளிமையான மோஸ்தர்களையும், சில்லறை அரசியலையும் ,எளிய நிரூபணவாத அறிவியலையும் மட்டுமே மானுடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா? தொழில்நுட்பத்தின் உற்பத்தியாளரும் நுகர்பவரும் மட்டுமாக நின்றுவிடுவது போதும் என நினைக்கிறாயா?
அல்லது, லாஸ்கஸிலும் [Lascaux] பிம்பேட்காவிலும் [https://www.jeyamohan.in/103309/] உள்ள பல்லாயிரமாண்டு தொன்மையான குகைஓவியங்களில் இருந்தும், ஈஸ்டர் தீவிலும் மணிப்பூரிலும் உள்ள பெருங்கற்ககளில் இருந்தும் இன்றுவரை நீளும் ஒரு பெரிய மரபின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறாயா? மனிதகுலம் திரட்டியிருக்கும் எல்லா அறிதல்களையும் நுண்ணுணர்வுகளையும் பெற்றுக்கொள்ள நினைக்கிறாயா?
ஆமென்றால் தொன்மையுடன் உன்னுடைய உறவை உணர்வுபூர்வமாக, ஆழுள்ளம் சார்ந்து அமைத்துக்கொள். மானுடத்தின் தொன்மையை வெறும் ஆய்வுப்பொருளாக வெளியே நின்று பார்த்து, தொகுத்தும் வகுத்தும் வைத்த அறிஞர்களின் காலம் முடிந்துவிட்டது. அந்தப்பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. அவர்கள் சென்றகாலத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைய காலத்தின் சவால் என்பது அந்த தொன்மையின் பகுதியாக ஆவதுதான், அது இன்றே தொடங்கிவிட்டது. அச்சவாலையும் இன்று அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களே பழங்குடி ஊர்களில் அவர்களுடன் ஒருவராக வாழ்கிறார்கள். மடாலயங்களில் ஊழ்கம் பயில்கிறார்கள்.
இந்தியர்களாகிய நாம் வெறும் தொழில்நுட்ப ஊழியர்களாக மட்டுமே இன்று நம்மை அமைத்துக் கொள்கிறோம். அதில் பெருமையும் அடைகிறோம். அது சென்ற தலைமுறையின் மனநிலை. அதிலிருந்து வெளியேறினாலொழிய இந்தியர்கள் சிந்தனையிலும் கற்பனையிலும் மெய்யான பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொள்ள முடியாது. நாம் மரபை அறிவது அல்ல முக்கியம், நாம் உணர்வதும், நம் ஆழம் மரபால் நிறைவதும்தான். அங்கிருந்தே புதியவை முளைக்க முடியும்.
அந்த பெண்ணிடம் நான் சொன்னேன். “பிள்ளையார் என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது என்று யோசித்திருக்கிறாயா? எல்லா எளிய பக்திப்பாடல்களிலும் இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்படும். ஒன்று, பிள்ளையாரின் ஆனைவயிற்றில் அண்டங்கள் அனைத்தும் அடங்கும். இரண்டு அவர் ஓங்காரத்தின் வடிவம். யானையின் கரிய வயிற்றில் அண்டங்கள் அனைத்தும் அடங்கும் என்றால் உனக்கு என்ன தோன்றுகிறது”
“இருள்” என்று அவள் சொன்னாள். தமிழில் சொல்லத் தெரியவில்லை. “ஆமாம், அந்த முழுமையான இருளே யானை. யானையை இருளாகச் சொல்வது சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டிலுமே வழக்கம்” என்று நான் சொன்னேன் “யானையின் ஒலி ஓங்காரம் எனப்படுகிறது. ஓம் என அது முழங்குவதாக நம்புகிறார்கள். ஆகவே கேரளப் பழங்குடிகள் அதன் ஒலியை சின்னம்விளி [அடையாளத்தின் குரல்] என்றே சொல்கிறார்கள். ஓங்காரமாக முழங்கும் இருள் என அந்த உருவகம் பொருள் படுகிறது. எவ்வளவு பெரிய குறியீடு என்று கற்பனைசெய்துபார்.”
[image error]உனக்கோடி பூதவடிவங்கள்அதன் பின்னர்தான் அவள் என்னிடம் கேட்ட முதல் வினாவுக்குச் சென்றேன். அதுவரைச் சொன்னது உயர்நிலை தத்துவப்பொருள். தொன்மையான மதங்களில் உயர்தத்துவத்திற்கு இணையாகவே அடிநிலையில் இருந்து வரும் பழங்குடித்தன்மை கொண்ட அர்த்தங்களும் இருக்கும். இரண்டும் முக்கியமானவையே. இரு எல்லைகளையும் இணைப்பதே மெய்யான சிந்தனை.
அழுக்கை உருட்டி வைப்பதென்றால் என்ன? ஏன் சாணியுருளை? ஏன் அருகம்புல்? பிள்ளையார் இந்தியாவின் தொன்மையான பழங்குடி வழிபாடுளில் மண்ணின் அடையாளமாக கருதப்பட்டிருக்கலாம். பூதம் என்றாலே மண்தான். பிள்ளையார் தலைமைப்பூதம். அதாவது கணபதி. இந்தியா முழுக்க பூதவழிபாடு உண்டு. குமரிமாவட்டத்தில் அது இன்றும் மிக வலுவானது. சங்ககாலம் முதலே இங்கே பூதவழிபாடு இருந்திருக்கிறது. பல சங்ககால கவிஞர்களின் பெயர்கள் பூதம் சார்ந்தவை [உதாரணம் பூதன்சேந்தனார்] சிலப்பதிகாரத்தில் நகரங்களின் மையங்களில் சதுக்கப்பூதம் நிறுவப்பட்டிருந்த செய்தி உள்ளது
ஆரம்பத்தில் பூதம் வெறும் மண்குவியலாக நிறுவப்பட்டு வழிபடப்பட்டது. பின்னரே மண்ணை பிடித்து ஒரு கூம்புவடிவமாக ஆக்கி வழிபட்டனர். நாளடைவில் அதற்கு உருவம் அளிக்கப்பட்டது. [இன்று பல பூதங்கள் மாடசாமிகளாகவும் சங்கிலி பூதத்தான்களாகவும் மாறிவிட்டிருக்கின்றன]. பூதங்களின் பிற்கால உருவங்கள் யானைத்தலை தவிர்த்தால் வினாயகரின் உருவத்துக்கு மிக நெருக்கமானவை என்பதைக் காணலாம்.இதில் சுவாரசியமான சில கவித்துவக் குறிப்புகள் உண்டு. கேரளப்பழங்குடிகள் யானையை “மண்ணுசாமி”என்றும் “மண்ணன்” என்றும் அழைக்கிறார்கள். ஏனென்றால் அது மண்ணை உடல்மேல் போட்டு மண்ணாலானதுபோலத்தான் காட்டில் தென்படும். அதன்மேலேயே சிறுசெடிகள் முளைத்திருக்கும். மண்வழிபாடும் யானை வழிபாடும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்ததே வினாயகர்.
பூதத்திற்கு எப்போதும் சோறுதான் படையலிடப்படுகிறது.மண்ணுக்கு உணவைப் படையலாக்கி வழிபடும் ஒரு முறையின் தொன்மையை, அதன் கவித்துவமான ஆழத்தை புரிந்துகொள்ள கொஞ்சம் நுண்ணுணர்வு இருந்தாலே போதும். மண்ன் என்றாலே அழுக்குதான். மண் உருண்டை, அழுக்கு உருண்டை, சாணியுருண்டை என்பதே அவருடைய வடிவமென பழங்குடிமரபு உருவகித்திருக்கலாம். அழுக்கு என்பதை எதிர்மறையாகப் பார்க்காமல் அதை மண்ணின் ஓரு அம்சமாக, வளத்தின் அடையாளமாக கண்ட தொல்மூதாதையரின் தரிசனம் அது. அன்னையின் அழுக்குதான் பிள்ளையார் என்ற கதையின் பொருள் இது. மண்ணுக்குப் புல்லை படையலிடுவதும் அதைப்போல மிகத்தொன்மையான ஒரு கவித்துவ உருவகம். புல்லே இங்கு அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. புல்லும் மண்ணும் தெய்வமெனக் கொண்ட ஒரு பெருமரபை நான் தொடர்கிறேன் என்றால் நான் தொன்மையானவன், அழிவற்றவன் என்றே பொருள்.
அந்தப் பெண்ணிடம் சொன்னேன். “உன் கனவில் பிள்ளையார் வருவாரென்றால் அதற்கு என்ன பொருள் என்று யோசித்துப்பார். ஐம்பதாயிரம் ஆண்டு தொன்மையான உன் கற்கால மூதாதையின் கனவும் உன் கனவும் ஒன்றாக இருக்கிறது. அது எத்தனைபெரிய வரம்! எவ்வளவு பெரிய வாய்ப்பு! அதை எளிய பகுத்தறிவுகள் அரசியல் சழக்குகளுக்காக தவறவிட்டாயென்றால் நீ இழப்பது எவ்வளவு பெரிய செல்வத்தை…”
“பிள்ளையாரை ஒர் அழகியல்வடிவமாக அணுகலாம். அவ்வடிவின் வரலாற்றுப் பரிணாமத்தை அறியலாம். நீ மேலும் அறிய விரும்பினால் தத்துவ வடிவமாக அணுகலாம். அதற்கும் அப்பால் செல்ல விரும்பினால் அவ்வடிவமாக இங்கே வெளிப்பட்ட அந்த சாரத்தை நோக்கியும் செல்லலாம்” என்றேன்.
நாம் நம் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டியது இந்த விரிவான வரலாற்றுச்சித்திரத்தை. அழகியல், தத்துவம், மெய்மை என விரியும் பல அடுக்குகளை. அது இன்றைய நவீனக்கல்வி அளிக்கும் வினாக்களுக்கான விடைகளை அளித்து அவர்களை மேலதிகமாகக் கொண்டுசெல்லும். தங்கள் மரபைப்பற்றி அவர்கள் பெருமிதம் அடையவேண்டும். அதன் நீட்சியென நின்றிருப்பதன் முக்கியத்துவம் பற்றி எவரேனும் கேட்டால் சொல்லத் தெரியவேண்டும். அப்போதுதான் அவர்களிடம் அது நிலைகொள்ளும், வளரும்.
ஜெ
தனிக்குரல்களின் வெளி மொழியை பேணிக்கொள்ள…
நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்
நற்றுணை கலந்துரையாடல்
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் ஞாயிறு, செப்டம்பர் 26 ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் ‘உப்புவேலி’ புத்தகம் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள் பேசுவார்.
ராய் மாக்ஸம்நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -8
புத்தகம் – எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் உப்புவேலி
கலந்துரையாடல் நாள்:- 26-09-21
நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை
புத்தக அறிமுக உரை :- திரு. கோவர்தன் உதவி பேராசிரியர், கோவை.
(திரு. கோவர்தன் குக்கூ அமைப்பின் களப்பணியாளர் மற்றும் இலக்கிய வாசகர்)
சிறப்புரை:-
திரு. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பாளர்- உப்புவேலி
Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் உப்புவேலி புத்தகம் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
அன்புடன்
சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்
இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு வாங்க
உலகின் மிகப்பெரிய வேலி ராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன் ராய் மாக்ஸம் பற்றி இந்திரா பார்த்தசாரதி உப்புவேலி – தன்னறம் நூல்வெளி உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை உப்புவேலி பற்றி பாவண்ணன் உலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு பஞ்சம்,சுரண்டல்,வரலாறு என்ன பிரயோசனம்? ராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்புடேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு- சுசித்ரா
மனிதன் உருவாக்கக்கூடிய எந்த உச்சபட்ச கலைகளுக்கும் நிகரான அனுபவத்தை ஒரு தூய விலங்கு அதன் முழுமையில் வெளிப்படுகையில் நம்மில் உருவாக்குகிறது. விலங்குகளின் தூய வெளிப்பாட்டை அதன் நிலத்தில் வைத்து படைப்பூக்கத்துடன் படம்பிடிக்கையில் அது ஒரு மகாகலைஞனின் படைப்புக்கு நிகரான கலைப்படைப்பாக நிற்கும் என்பதை டேவிட் அட்டன்பரோ கதைசொல்லும் இயற்கை ஆவணப்படங்களே எனக்குக் கற்பித்தன.
அதன் உச்சமாக சமீபத்தில் ‘Dynasties’ (வம்சங்கள்) என்ற தொலைக்காட்சித் தொடர் இடம்பெற்றது. இந்தத்தொடர் இந்தியாவில் SonyLIV தளத்தில் காணக்கிடைக்கிறது.
இத்தொடரை ‘எபிக்’ என்று மட்டுமே சொல்ல முடியும். போரும் அமைதியும், மோபி டிக், வெண்முரசு போன்ற ஆக்கங்களின் வழி அடையப்பெறும் உணர்வுகளற்ற உச்சத்தை இதில் பெற்றேன். இயற்கையின் காவிய ஒழுங்கமைதியை ஆழமாக என்னில் உணரச்செய்தது இத்தொடர்.
இந்தத்தொடரின் முதல் திரைப்படம் ‘பெயிண்டட் வுல்வ்ஸ்’ (Painted Wolves). ஆப்பிரிக்க வனப்பகுதியில், சான்சீபி நதியை ஒட்டிய நிலங்களில் நிகழ்வது.
பெயிண்டட் வுல்வ்ஸ் எனப்படும் அருகிவரும் ஆப்பிரிக்க காட்டுநாய் இனத்தில் உலகத்திலேயே மொத்தம் 6600 விலங்குகளே மிச்சமிருக்கின்றன. அவற்றில் 280 ‘டெய்ட்’ என்ற ஒற்றைகாட்டுநாய் மூதச்சியின் கொடிவழியிலிருந்து தோன்றியவை.
டெய்ட் சான்சீபி நதிக்கரையை ஒட்டிய அவளது பாரம்பரிய நிலத்தில் அவளுடைய குழுவுடன் வேட்டையாடி வசிக்கிறாள். கிழக்கே சிங்கங்களின் ப்ரைட்லான்டும் பின்னால் கழுதைப்புலிகளின் தேசமும் அவள் நிலத்தைச் சூழ்ந்துள்ளன. படம் தொடங்கும்போது டெய்ட் மெல்ல அதிகாரம் இழந்துகொண்டிருக்கிறாள்.
அவள் நிலத்துக்கு மேற்கே உள்ள புதியநிலப்பகுதியை ஆள்பவள் பிளாக்டிப். பிளாக்டிப் டெயிட்டுடைய சொந்த மகள். வளர்ந்து தனக்கென ஒரு குழுவை உருவாக்கி அதற்கு தலைவியானவள். அவளது குழுவின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பிளாக்டிப் தன்னுடைய எல்லைகளை விரிவாக்க எண்ணி, தன்னுடைய குழுவுடன் டெய்ட்டின் நிலத்தை ஆக்ரமிக்க வருகிறாள்.
காட்டுநாய்க்குழுக்கள் மோதுகின்றன. திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத டெய்ட் கடுமையான யுத்தத்திற்கு பின் தன் குழுவுடன் பின்வாங்குகிறாள். பிளாக்டிப் வெற்றிகரமாக புதிய நிலத்தில் தன் குழுவை ஸ்தாபிக்கிறாள். பின்வாங்கும் டெய்ட் சிங்கங்களின் தேசத்திற்குள் தன் குழுவுடன் செல்கிறாள்.
காட்டுநாய்களின் குழுவில் தலைவி மட்டுமே குட்டி ஈன்பது வழக்கம். மற்ற சகோதரிகளும், மகள்களும், பேத்திகளும் அந்த குட்டிகளை காக்கும் பொறுப்பை கொண்டவை. பிளாக்டிப் ஐந்து குட்டிகளை ஈனுகிறாள். ஆனால் கழுதைப்புலிகள் அவர்களின் எல்லைகளிலேயே காத்துக்கொண்டிருக்கின்றன. விரைவில் கோடையும் வறட்சியும் சேர்கிறது. பிளாக்டிப் குழு உணவு கிடைக்காமல் தங்களைவிட அளவில் பெரியவையும் ஆபத்தானவையுமான பபூன் குரங்குகளை கூட்டமாக சுற்றி வளைத்து வேட்டையாடுகின்றன.
சிங்கநாட்டுக்குள் பின்வாங்கும் டெய்ட் அனுபவமுள்ள மூதச்சி. அவள் தலைமையில் அவளது குழு கடுமையான வெப்பகாலத்தை சிங்கநாட்டில் ஓரு குழு உறுப்பினரைக் கூட இழக்காமல், ஒரு வறண்ட ஆற்றுப்படுகையில் தலைமறைவாக பதுங்கி வாழ்ந்து கடந்துவிடுகிறது. தன் குழு சுற்றும் பாதுகாக்க ஒரு வளைக்குள் டெய்ட் அவளது எட்டாவது ஈற்றில் இருகுட்டிகளை ஈனுகிறாள்.
வெப்பம் மூத்து பஞ்சம் தொடங்கிவிடுகிறது. யானைகள் மழைக்காலத்தில் வைத்த காலடிகள் கோடைச் சூட்டில் வெந்து ஆபத்தான குழிகளாக காட்டுத்தரை முழுவதும் பரவியிருக்கின்றன. அந்நிலத்தில் மானை துரத்தி சென்று வேட்டையாடுவது மிகவும் ஆபத்தானது. தவறான ஒரு அடிகூட காலை முறித்து நடக்கமுடியாமல் செய்துவிடும். அப்படியும் டெய்ட் வெற்றிகரமாக தன் குழுவுடன் வேட்டையாடுகிறாள். ஆனால் அதை முழுதாக உண்ணத்துவங்கும் முன்னேயே சிங்கங்கள் அபகரித்துக்கொள்கின்றன. டெய்ட்டின் சகோதரிக்கு காலில் பலமாக அடிபடுகிறது. நடக்க முடியாத அவளை குழு ஒன்றாக சேர்ந்து பார்த்துக்கொள்கிறது.
டெய்ட்டின் குழுவில் அவளது இளைய மகள் டாம்மி சாதுர்யமாக அன்னையின் குட்டிகளை காக்கிறாள். ஒருமுறை சிங்கங்களுக்கும் காட்டுநாய்களுக்குமான போரில் டாம்மி மட்டும் இரு குட்டிகளுடன் தனியாக போராடுகிறாள், சிங்கங்கள் அவளை நெருங்கும் தருணம் ஒரு அற்புதம் நடக்கிறது. மயிரிழையில் குட்டிகளுடன் தப்பிக்கிறாள்.
பிளாக்டிப் தான் ஆக்கிரமித்த டெய்ட்டின் நிலத்தில் தன் குழுவின் துணையோடு வாடையால் விரிவாக அடையாளப்படுத்துகிறாள். அப்போது ஓரிடத்தில் அவளுக்கு டெய்ட்டின் வாசம் கிடைக்கிறது. அங்கே டெய்ட் வந்து போனது தெரியவருகிறது.
பிளாக்டிப் வெறி கொள்கிறாள். உடனே எல்லையை அடையாளப்படுத்தும் தன் குழுக்களை திரட்டி தன் அன்னையை முழுவதுமாக தோற்கடித்து அழிக்க அவளை தேடித் துரத்திக்கொண்டு சிங்கநாட்டிற்குள் வருகிறாள்.
அது அவள் முன்பின் கண்டிராத நிலம். காட்டுநாய்கள் அமாவாசை நாளில் ஒருபோதும் இரவில் பயணம் செய்வதில்லை. ஆனால் பிளாக்டிப் குழுவில் உள்ள தனது குட்டிகளையும் பொருட்படுத்தாமல் இரவிலும், நிற்காமல் பின் தொடர்ந்து செல்கிறாள்.
இரவில் கழுதைப்புலிகள் அவர்களை சுற்றி வளைக்கின்றன. காட்டுநாய்கள் எதிர்த்து போரிடுகின்றன. போரின் உச்சத்தில் ஒரு கட்டத்தில் பிளாக்டிப் தன் குட்டிகளிலிருந்து பிரிகிறாள். கணப்பொழுதில் கழுதைப்புலிகள் அவள் கண் முன்னே குட்டிகளை கிழித்துக் கொல்கின்றன.
மறுநாள் முழுவதும் பிளாக்டிப் குழு ஒரு குரலும் எழாமல் தலைகுனிந்தபடியே மேலும் தொடர்கின்றனர். பிளாக்டிப் மட்டும் மூர்க்கமாக முன்னே செல்கிறாள். கடைசியாக ஓர் ஆற்றை கடக்கும் போது குழுவின் மூத்த நாய் ஒன்றை முதலை ஒன்று கடித்திழுத்து கொண்டு செல்கிறது. கரையில் நின்று செய்வதறியாது திகைக்கிறது குழு, துள்ளியும் சுழன்றும் அவை கரையில் நின்று ஓலமிடுகின்றன.
பிளாக்டிப்புக்கு கணநேரத்தில் அனைத்தும் தெளிகிறது. அவர்கள் நிலைமையுணர்ந்து பின்வாங்கி ஓடத் துவங்குகிறார்கள். இரவும் பகலுமாக நில்லாமல் ஓடி பல மைல்கள் கடந்து தங்கள் சொந்த நிலத்தை அடைகின்றனர்.
மழை வருகிறது. பஞ்சம் முடிகிறது. சிங்கநாட்டைத் தாண்டிய பாரம்பரிய நிலம் எல்லாமே டெய்ட்டின் வம்சத்துக்கு என்று ஆகிறது. அவளுடைய குழு வென்ற நிலத்தில் குடிபுகுவதற்காக புறப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால் டெய்ட் சிங்கநாட்டிலேயே இருந்துவிடுகிறாள். அவளுக்கு வயதாகிறது, இனி அவளால் திரும்பச்செல்ல முடியாது என்று அவளுக்குத் தெரிகிறது. அவளுடைய இணை நாயும் அவளுடன் தங்கிவிடுகிறான். அவர்கள் அங்கேயே சிங்கங்களுக்கு இரையாகி மறைந்திருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் ஊகிக்கிறார்கள். ஆனால் யாருக்கும் அறுதியாகத் தெரியவில்லை. அதுவரை இருந்தவள் இல்லாமலாகிறாள், அவ்வளவுதான் (டெய்ட்டின் மறைவு)
டெய்ட்டின் குழு தலைவியில்லாமல் சொந்த நிலத்துக்கு திரும்பச் செல்கிறது. செல்லும் வழியில் அவர்கள் சில உதிரி ஆண் நாய்களை சந்திக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் இதுவரை பதிவுசெய்யப்படாத ஒரு வினோதமான சடங்கு நடக்கிறது. காட்டுநாய்கள் சேர்ந்து சுற்றி ஊளையிட்டபடி நடனமிடும் அந்த சடங்கின் முடிவில் இளையவளான டாம்மி தலைவியாக தேர்ந்தெடுக்க படுகிறாள்.
டாம்மி அவளது முதல் ஈற்றில் ஏழு குட்டிகளை ஈனுகிறாள். மழைச் செழிப்பில் அவள் வம்சம் வளர்கிறது. எல்லைக்கு மறுபக்கம் பிளாக்டிப்பின் வம்சமும் பெருகுகிறது. இம்முறை அவளுக்கு பத்து குட்டிகள் பிறக்கின்றன. வழவழப்பான மூக்குகளுடன் எல்லைக்கு இருபுறமும் புத்தும்புது காட்டுநாய்க்குட்டிகள் காட்டில் துள்ளிக் கடித்து விளையாடுகின்றன.
*
ஒரு பெரு நாவலை வாசிக்கும் விரிவை நிறைவை தரக்கூடிய கதை இது. பிளாக்டிப் ஒரு சத்யவதியாக எனக்குத் தோன்றினாள். காவிய உணர்வு வெளிபட்ட இடங்கள் பல இருந்தன. டெய்ட்டின் குட்டிகள் காப்பாற்றப்படும் அற்புதக்கணம். பபூன் குரங்கின் குட்டியை காட்டுநாய்கள் திசைத்திருப்பிக் கவர்ந்துவிடும்போது, அதுவரை வெறியுடன் போரிட்ட ஆல்ஃபா குரங்கு நடந்தது புரியாமல் அப்படியே அமர்ந்து ஓலமிடும் இடம். டெய்ட் அவள் வென்றநிலத்துக்கு குழுவோடு திரும்பாமல் அமையும் இடம். இவற்றைத்தாண்டி சில விலங்குகள் தங்கள் இருப்பின் வழியாகவே காட்டின் அர்த்தத்தை ஆழப்படுத்துகின்றன. மான்கள் காட்டின் எச்சரிக்கையை. சிங்கம் காட்டின் இரக்கமின்மையை. யானை காட்டின் காலாதீதத்தை.
ஆனால் இது திரைப்படம் என்பதால் இதன் முதன்மை அனுபவம் காட்சி. கண்ணில் மட்டுமே திறக்கக்கூடிய அனுபவங்கள் வழியாக இதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக அமைந்தது.
காட்டுநாய்க்குட்டிகள் பிறக்கின்றன. மண்ணுக்கு அடியில், குழிகளில், பொந்துகளில். கண்திறந்து அவற்றை அம்மா வெளியே கூட்டி வருகிறாள். ஒளி கூச முழித்துப் முழித்துப் பார்க்கின்றன. திடீரென்று அவற்றின் கண்களில் விரிவு. அருகே, மடிப்பு மடிப்பாக கனத்த உடல். காற்றைக் குத்தும் தந்தங்கள். வளையும் துதிக்கை. குட்டியின் தலையும் அதன்கூடவே உயர்கிறது. தான் இருக்கும் காடு எத்தகையது என்று கண்டுவிடுகிறது.
இன்னொரு உதாரணம். பிளாக்டிப் பின்வாங்கும் இடம். அதுவரை கொண்டுவந்த துணிவெல்லாம் இழந்து காட்டுநாய்கள் வாலைத் திருப்பிக்கொண்டு வந்தவழியெல்லாம் ஓடுகின்றன. கண்ணை மேலே கொண்டுபோய் அவர்கள் ஓடுவதைக் காட்டுகிறார்கள் படப்பிடிப்பாளர்கள். அத்தனை மாதக்காலம் இஞ்ச் இஞ்சாக கைப்பற்றிய நிலத்தை ஒரே கோட்டில் கடந்து ஓடுகின்றன அவை. அந்திச்சூரிய வெளிச்சத்தில் அவர்களுடைய ஓடும் நிழல்கள் பூதாகரமாக பக்கவாட்டில் விழுகின்றன.
ஆனால் இவற்றுக்கு மேலாகவும் பாதித்த காட்சிகளென்றால் நேரடியான உயிரின், உடலின் சூட்டையும் அவசரத்தையும் துடிப்பையும் உணரச்செய்த காட்சிகள். காட்டுநாய் ஓடும்போது அதன் கண்ணில் பசியும் குறிக்கோளும் ஒருசேரத் தெரிகிறது. இழுத்துக்கட்டியது போன்ற தசைகளின் அசைவு ஒவ்வொரு பாய்ச்சலிலும் ஒரு வில்லாக உடல் மாறுவதைக் காட்டுகிறது. காட்டில் சில விலங்குகள் வேகமானவை. மான்களைப்போல. சில விலங்குகள் ஆர்ப்பாட்டமில்லாதவை. யானைப்போல, முதலையைப்போல. ஆனால் எல்லா விலங்குகளும் உடலே கவனமானவை. பல விலங்குகள் கலந்து நிற்கும் காட்சிகளில் இதைப்பார்க்கலாம். காட்டுநாய்கள் சிங்கத்தைப் பார்த்து சிதறுகின்றன. சிங்கம் எந்தக்கவலையும் இல்லாததாக அதன் பாட்டுக்கு நடுவே நடந்துகொண்டிருக்கிறது. யானைகள் ஓரமாக நின்று புல்லை மெல்லுகின்றன. பறவைகள் அப்பால் நிற்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் முழுமையாக கண்விழித்திருக்கிறது. அந்த விழிப்பின் சரடே காட்டை இணைக்கும் உயிர்.
விலங்குகளின் உடல் பிளந்து சதையும் நிணமும் பொத்திச் சிந்துகிறது. பிடிபடும் கணம் ஒவ்வொரு உடலும் உச்சக்கட்ட உயிராசையில் துடிக்கிறது. பெரும்பாலும் மெல்லிய காலாலேயே விலங்குகள் பிடிபடுகின்றன. காலை ஒன்றும் கழுத்தை ஒன்றும் உடலுக்கடியில் உள்ள மெத்தான பகுதியை இன்னொன்றும் பிடித்து இழுக்க வேட்டைவிலங்குகின் உயிர் ஒவ்வொரு திசையிலும் இழுக்கப்பட்டு ஒரு திமிறல் திமிறி அடங்கி மறைகிறது. அதிலும் குட்டிகள் பிடிபடும்போது உயிர் இறக்கையுள்ள பறவையாக அவற்றின் சின்ன உடலில் படபடவென்று அடித்துக்கொள்கிறது. உயிர் என்பது இத்தனை நொய்மையானதா என்று எண்ணச்செய்கிறது.
ஆனால் இந்தப்படம் நெடுக ஒன்று நிகழ்ந்தது. குட்டிகள் முதன்முதலில் பிடிபடும்போது அடைந்த பதைபதைப்பு படம் வளரவளர இல்லாமலானது. ஒவ்வொன்றும் உண்கிறது. உண்ணப்படுகிறது. சொந்த ரத்தத்தை நக்குகிறது. இரையின் ரத்தத்தை நக்குகிறது. பங்காளியின் ரத்தத்தையும் நக்குகிறது. காட்டுக்குள் ஓடுகிறது ரத்தம். காட்டின் ஊற்று அது. காட்டின் கனிகளின் சாறு.
காட்டுவிலங்குகள் அத்தனை இயல்பாக அதன் அறத்துடன் – காட்டின் தர்மத்துடன் – பொருந்தி வாழ முடிகிறது. ஒரு விலங்கால் விலங்காக இருப்பதன் வழியாகவே அசாத்தியமான பெருந்தன்மையை, மகத்துவத்தை, ராஜகம்பீரத்தை, அடையமுடிகிறது.
மனிதனுக்கு அறமென்ன என்று மனிதன் தான் விலங்கல்ல என்று நிச்சயித்த காலம் தொட்டு தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கும் ஒன்று. அறங்களை சிந்தித்து விவாதித்து வகுக்க நினைத்த எத்தனையோ சான்றோர்களால் நமக்குக் கலாச்சாரம் புகுத்தப்பட்டது. கலாச்சாரம் வளர வளர நாம் விலங்குகளின் சஞ்சலமற்ற தூய உலகிலிருந்து அன்னியப்பட்டுப் போனோம். எந்த ஒரு விலங்கும் தன் சுற்றத்துடன் சரியாக பொருந்திப்போகையில் சுதந்திரமாக தன் தர்மத்தை நிறைவேற்றி வாழ்கிறது. மனிதன் அப்படியொரு மனிதவிலங்காக வாழ்வது எப்படி?
தைத்திரீய உபநிஷத் ரத்தச்சதைக்குள் மூச்சையும் மூச்சுக்குள் மனதையும் மனத்துக்குள் புத்தியையும் புத்திக்குள் பிரம்மானந்தத்தின் நிறைவையும் வைக்கிறது. அந்த உச்சத்தை சொல்லி முடித்தப்பிறகு, பித்தேறிய ஒரு ரிஷி முன்னால் வந்து இவ்வாறாகக் கூத்தாடுகிறான். இந்தத்தொடரை பார்த்து முடித்த இரவின் மௌனத்தில் இந்த வரிகள் மெல்ல உள்ளத்தில் எழுந்தன.
“நான் அன்னம்! நான் அன்னம்! நான் அன்னம்!
நான் உண்ணப்படுபவன்! நான் உண்ணப்படுபவன்! உண்ணப்படுபவன் நானே!
நான் பாடல்களை இயற்றுபவன்! நான் பாடல்களை இயற்றுபவன்! பாடல்களை இயற்றுபவன் நான்!
நான் அறங்களின் முதல்மைந்தன்! தெய்வங்களுக்கு முன்னால் தோன்றியவன்! அமுதத்தின் மூலவன்.
என்னை கொடுப்பவன் என்னை இங்கே நிலைக்கச்செய்பவன்.
நான் அன்னம், உண்பவனையும் உண்பேன்.
இவ்வுலகத்தை முழுவதையும் வென்றுவிட்டேன் நான்
அதன் மகிமையில் சூரியனைப்போன்றது என் ஒளி”
சுசித்ரா
ஞானி- கடிதம்
ஞானி நூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கோவை ஞானி அவர்கள் பற்றிய நினைவுக் கட்டுரைகளை வாசித்தேன். அவை ஒரு புனைவை வாசிக்கும் அனுபவத்தை அளித்தன. அந்த கட்டுரைகளில் தாங்கள் அவரது ஆளுமை, மார்க்சிய மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவரது பங்களிப்பு, உங்கள் வாழ்வில் அவரது இடம் ஆகியவற்றை தெளிவாக வரையறுத்திருந்தீர்கள் அதேசமயம் அவரது மனமாற்றங்கள், முரண்பாடுகளை தொட்டுக்காட்டி அதனை வாசகர்களின் ஊகத்திற்கு விட்டுவிட்டீர்கள்.
கட்டுரையில் மேலும் சில ஆளுமைகளை சுட்டிக்காட்டியிருந்தது, வாசகர்கள் அவர்களை நோக்கி சிந்திக்கவும் தூண்டுகிறது. அதுவே இவற்றில் உள்ள புனைவிற்கான அம்சமாக நான் காண்கிறேன். இந்த கட்டுரைகளில் எனக்கு மிகவும் கிளர்ச்சியூட்டியது விஷ்ணுபுரம், கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல் போன்ற நாவல்களை எழுதுவதற்கான காரணங்கள், தூண்டுதல்கள், அலைக்கழிப்புகளை குறிப்பிட்டிருந்தது. அவை அந்த நாவல்களை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள உதவும்.
எனக்கு எந்தக் கொள்கை அரசியல் சார்பும் கிடையாது. முதலில் மார்க்ஸியம், கம்யூனிஸம் போன்ற அரசியல் கொள்கைகளின் பெயர்களின் மேல் ஒரு மோகம். அவை என்ன என்று தெரிந்துகொள்வதில் மட்டுமே ஆர்வம். அந்த பெயர்களை மக்கள் திரும்பத், திரும்ப சொல்லி அதற்கு ஒரு கனத்தை, உணர்வை ஏற்றி அதை படிமமாக மாற்றிவிட்டதனால் தான் அவ்வாறு தோன்றுகிறது என்று நினைக்கிறேன். தற்போது அவை கிட்டதட்ட வெறும் படிமம் மட்டுமாக ஆகிக்கொண்டிருப்பதையே இந்த கட்டுரைகளின் வழியே காண்கிறேன்.
கட்டுரையைப் படித்து கொண்டிருக்கும் தோறும் மனதில் ஒவ்வாமையே மேலெழுந்து கொண்டிருந்தது. அது கொள்கை பிடிப்பால் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் அழிவுகளை நினைத்தே. அவை தனிமனிதர்களை ஒரு இரும்புச்சட்டகம் போல ஆக்கிவிடுகிறது. அதை ஞானி போன்ற ஆளுமைகள் பிரக்ஞை பூர்வமாக பயன்படுத்தினாலும் இரும்பு சட்டகத்திலிருந்து வெளிவரமுடியாமையே இந்த கட்டுரைகள் காட்டுகின்றன.
ஆனாலும் எஸ்.என்.நாகராஜன், ஞானி போன்ற ஆளுமைகள் மார்க்ஸியத்தை அப்படியே நகல் எடுக்கும் பலநூறு போலிகள் அல்லாத அசல் சிந்தனையாளர்களே. வாழ்க்கை என்பது இப்படி பல்லாயிரம் விசைகளின் முரணியக்கத்தினால் இயங்குவது, அதை யாராலும் மாற்ற முடியாது ஆனால் அறிந்துகொள்ளலாம். அதற்கான வழியே இந்த கட்டுரைகளும். எனினும் ஞானி, எஸ்.என்.நாகராஜன் போன்ற நேர்மறை விசை சில என்றால், எதிர்மறை விசைகள் பலநூறாக இருக்கும் முரண்பாடே ஒவ்வாமையை அளிக்கிறது. ஆனால் எந்த காலகட்டத்திலும் நேர்மறை விசை வென்றே தீரும் என்பதே நமக்கு நம் மரபால் அளிக்கப்பட்டிருக்கும் செய்தி. கிருஷ்ணர், ராமர், காந்தி ஆகியவர்கள் அதற்கான சான்றுகள். அதை நினைக்கும்போதே அந்த ஒவ்வாமை அகன்றுவிடுகிறது.
இந்த கட்டுரைகளில் வாசகர்களுக்கு திறப்பாக அமைவதென்று நான் கருதுவது, மார்க்ஸியம், கம்யூனிஸம் போன்ற கொள்கைகளின் வரையறை, அவை எழுந்து வந்ததற்கான தேவை, அது உலகம் முழுக்க ஏற்படுத்திய விளைவுகள், பண்பாட்டிலும் தனிமனிதர்களிலும் அதன் தாக்கம், அவைகளின் தற்போதைய நிலை. இவற்றையெல்லாம் ஒரு வாசகன் ‘Das capital’ லிருந்து ஆரம்பித்து வாசித்து தெரிந்துகொள்ள குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் என்று நினைக்கிறேன்.
ஆனால் நீங்கள் ஞானி அவர்களுடன் நிகழ்த்திய விவாதங்களின் ஊடாக அவை வாசகனுக்கு சிலமணி நேரங்களில் கடத்தப்பட்டுவிடுகிறது. இதுவே நீங்கள் இன்றைய வாசகர்களுக்கு ஆற்றும் ஆகச்சிறந்த பணியாகும். இன்று நேரமின்மையே மிகப்பெரிய சிக்கல். உங்கள் தத்துவ, இலக்கிய வரையறைகள் மற்றும் விமர்சனங்களைக் கூர்ந்து வாசித்தாலே தேவையல்லாதவற்றை நிராகரித்துவிட்டு, தேவையானவற்றைப் பயின்று நேரத்தைப் பேணிக்கொள்ளலாம். இது தங்களால் வாசகர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய அன்பளிப்பே.
கடைசியாக, இந்த கட்டுரைகளின் வழியே மார்க்ஸிசம், கம்யூனிஸம் பற்றிய விளக்கங்கள், அறிவுத்தள உரையாடல்கள் அனைத்தையும் தாண்டி நான் எடுத்துக்கொள்ள விழைவது ஞானி தங்கள் கரங்களை குழந்தையை போல பற்றிக்கொண்டு உதிர்க்கும் புன்னகையின் தருணங்களையே ஏனெனில் அவர் ஒருமைநிலையை உணர்ந்திருக்கிறார் எனினும், அவரது அகங்காரத்தாலோ, கூரிய தர்க்கபுத்தியாலோ அதனை ஏற்க மறுத்து மார்க்ஸியத்தின் எல்லைக்குள்ளேயே நின்று செயல்பட்டவர்.
கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொண்டு, சக மனிதர்களின் கரங்களை அன்பாய் பற்றி சிரித்த ஞானி. அனைத்து மனிதர்களின் கரங்களையும் அன்போடு பற்றுவதற்காகவே மார்க்ஸியத்தை ஆராய்ந்த லட்சிய மார்க்ஸிஸ்ட் ஞானியையே என்னோடு எடுத்துச்செல்ல விழைகிறேன்.
வேலாயுதம் பெரியசாமி
ஞானி முன்னுரை ஞானி நினைவுகள்- மீனாம்பிகைதனிக்குரல்கள், கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியர்க்கு,
மெயிலில் பதில் கண்டேன். தளத்தில் கடிதத்தை வெளியிட்டால் தான் பதில் போடுவேன் என்று எல்லாம் இல்லை. சில வேலைகள்.
இந்த பதிலை நேரம் கிடைக்கும்போதெல்லாம் இடையிடையே மீண்டும் மீண்டும் கடிதத்தை படித்து உள்வாங்கிவிட்டு எழுதிக்கொண்டுதான் இருந்தேன். இப்போது ஞாயிறு.. இதோ அனுப்பிவிட்டேன்.
உங்கள் பல கட்டுரைகளில் உள்ள, மதத்தை ஆன்மிகம், ஆசாரம், அமைப்பு என பகுத்துப்பார்க்கும் கருத்துச்சட்டகம் தான் என்னை இது பற்றி பேசும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. என் கடிதம் 80 சதவீதத்திற்கு மேல் உங்களின் தாக்கம் கொண்டது.
நீங்கள் சொல்வது போல் சராசரி இஸ்லாமியர்கள் மதஆசாரங்கள் மட்டுமே இஸ்லாம் என நினைக்கிறார்கள். அந்த பார்வையை மிக இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள். பள்ளிபருவம் வரையிலான என் நிலைப்பாடே சாட்சி. அந்த பார்வையை அச்சுறுத்தாமல் குணப்படுத்த வேண்டும்.
நேர்மறை அறிவியக்கம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நீங்கள் சொன்னது எனக்கு பெரும் உத்வேகம். அவ்வாறு உலகில் பல்வேறு இடங்களில் சிறுசிறு வட்டங்களில் நடக்கின்றன. நம்பிக்கையூட்டும் வகையில்.
நீங்கள் என் பெயரை போட காட்டிய தயக்கம், கடிதம் வெளியானதும் ஆனந்த் ஸ்வாமி அவர்கள்-இது போன்ற தேவையும் கூடவே ஆபத்தும் நிறைந்த கருத்துக்களை இலைமறை காயாக சொல்லவேண்டும் என சொல்லியதும் கடிதத்தை மீள்வாசிப்பு செய்தேன். சில வார்த்தைகளை இன்னும் நுட்பமாக சொல்லியிருக்கலாம் என தோன்றியது. ‘பழைய-நான்’ இந்த கடிதத்தை படித்திருந்தால் சில வரிகளுக்கு அதிலுள்ள உண்மைகளை கண்டு, ஒரு ஓரத்தில் கருத்தில் கொண்டாலும், கசப்படைந்திருப்பேன். படிக்கும்போதே ஒருவர் தனக்கே திரித்து எதிர்மறையாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதும் தெரிகிறது. கற்றுக்கொள்கிறேன்.
ஆனால் நீங்கள் தளத்தில் சொன்னதுபோல் முற்போக்காளர்களும் தூற்றுவார்கள் என கூறியதில் மிகச்சிறு மறுப்பு இருக்கிறது. பீஃப் அரசியல் குறித்த ஒரு யூடியூப் உரையாடலில் “நான் இதுவரை சாப்பிட்டதிலேயே சிறந்த மாமிசம் மாட்டிறைச்சியும் பன்றியிறைச்சியும் தான்”, “புர்கா ஒரு பெண்ணடிமைத்தனம்” என கூறிய ஒரு முஸ்லீம் திராவிட அரசியல் முகத்தையும், வடஇந்திய மசூதிகளின் இமாம்களிடம் நேரடியாக ‘பெண்கள் மசூதிகளுக்கு அனுமதிக்க படாதது’ குறித்து கிண்டல் தொனியில் பேட்டியெடுத்த இடதுசாரி முஸ்லீம் நிருபரையும் பார்த்துள்ளேன். அவர்கள் விமர்சனம் செய்பவர்கள் மட்டும் கிடையாது. நாத்திகர்களும் கூட தான். அவர்கள் முற்போக்கு தரப்பினர்தான். அவர்களை அத்தரப்பு ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டது போலி முற்போக்காளர் தரப்பு குறித்து என எடுத்துக்கொள்கிறேன்.
இஸ்லாம் குறித்த விமர்சனத்துக்கு நீங்கள் இன்று தளத்தில் குறிப்பிட்டது போல் இதை சிந்திக்கையில் பழைமைவாதம்×அடிப்படைவாதம் வேறுபாடும் கருத்தில் கொள்ளவேண்டியதன் தேவை புரிந்தது.இடையில் படித்த ‘முற்போக்கின் தோல்வி’ கட்டுரைகளில், என் இன்னொரு கேள்வியான உலகில் வலதுசாரி அரசியல் அடையும் வரவேற்பு குறித்தவைக்கு பதில்கள் கிடைத்தன.நான் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்..
நான் 11-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தான் நீங்கள் எனக்கு அறிமுகம். என்னை இதில் இவ்வளவு சிந்தனை செய்ய வைக்க முதல் பொறியாய் இருந்தது ‘உற்றுநோக்கும் பறவை’ சிறுகதை.மத பிடிமானத்துக்கும், மன பிளவுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்த தம்பியின் உரையாடல்…
ஒழுக்கம் சார்ந்த ஆசாரங்களை எப்படி ஒரு இரட்டைநிலையை எதிர்கொள்ள நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என அந்த கதை முன்வைத்த ஒரு கோணம்.. அப்போது நான் மதம் குறித்து கொண்டிருந்த ‘பஞ்சு போல் இதமான’ சிறு வட்ட பார்வை ஆடி போய்விட்டது. அந்த பார்வையின் வீச்சிலிருந்து மீள்வதற்குள், கதையின் முடிவில் மதம் எப்படி அழிக்க முடியாத ஒரு மனித மன கட்டமைப்பு, அதை தவிர்த்து அழிக்க முயன்றாலும் அந்த தவிர்த்தல் தானும் எப்படி மதமாகவே மீண்டுஎழுகிறது எனும் முடிவு..
அப்போது குளத்து புழு கடலை கண்டு திணறிய நிலைதான் எனக்கு. இப்போது கூட என் வாசிப்பில் பல அடுக்குகள் விடுபட்டிருக்கலாம். (ரொம்ப காலம் கழித்து நேற்று மீள்வாசிப்பு செய்தது..) நான் பல நேரம் உங்கள் படைப்புகளில் நான் கண்டுகொண்டதை கடிதமாக எழுத ஆரம்பித்து கைவிட்டுஇருக்கிறேன். இது குறித்தாவது எழுதினேனே :)
அன்புடன்,
சஃபீர்
***
அன்புள்ள ஜெ
தனிக்குரல்களின் வெளி ஒரு முக்கியமான கட்டுரை. நீங்கள் பலவாறாக சொல்லிவரும் விஷயங்கள்தான், மீண்டுமொருமுறை சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. உண்மையில் இந்த சிந்தனைகளை கொஞ்சம் தெளிவில்லாமல் பலரும் யோசித்திருக்கக் கூடும். ஆனால் இந்த சொற்கள் திட்டவட்டமாகச் சிந்திக்கவைக்கின்றன.
என்னையே எடுத்துக்கொள்வோம். என் அண்ணனின் ஊருக்குள் இருக்கும் சிவன்கோயிலுக்கு முன் சிவலிங்கத்தை குறுக்காக வெட்டி “ஷிர்க் ஒழிப்பு மாநாடு” என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்த ஊரில் இந்துக்கள் கொஞ்சபேர்தான். நான் அந்தப் பலகையைப் பார்த்ததுமே நினைத்த முதல் எண்ணம் அதனால் யாருக்கு லாபம் என்றுதான். இஸ்லாமியருக்கு எந்த லாபமும் இல்லை. இஸ்லாமியரில் சிவலிங்கத்தை வணங்குபவர் எவருமில்லை. அப்படியென்றால் யாருக்கு லாபம்? அன்று அண்னனிடம் பேசும்போது தெரிந்தது, யாருக்கு லாபம் என்று. அவர் திமுகக்காரர். அன்று அவர் பேசியது இந்துத்துவத்தின் மொழியை.
இந்த மூடத்தனம் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. நாத்திகர்களை மேடையேற்றி இந்துமதத்தை இழிவுபடுத்தச் செய்து ரசிக்கும் மத அடிப்படைவாதிகள், நாத்திகமேடையில் சென்று பேசும் இஸ்லாமிய மதவாதிகள் முதலில் உதவுவது இந்துத்துவ அரசியலுக்கே. அதை வேண்டுமென்றேதான் செய்கிறார்கள். ஏனென்றால் இந்து அடிப்படைவாதம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்க்கும். இரு தரப்புமே இதைச் செய்கின்றன. இன்று தேவை நீங்கள் சொல்வதுபோல நடுவே ஒலிக்கும் தனிக்குரல்கள்தான்.
கணேஷ் மகாராஜன்
***
அன்புள்ள ஜெ,
அருமையான கட்டுரை. பல கோணங்களில் தெளிவை அளித்தது இன்று பேசப்படும் எல்லா கேள்விகளுக்கும் ஒரே கட்டுரையில் பதில் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே இக்கட்டுரைக்குரிய மனநிலையை அடைந்தவர்களுக்கே இது பயனளிக்கும். மற்றவர்களுக்கு அல்ல. இக்கட்டுரையை இந்துத்துவரான நண்பர் ஒருவரிடம் காட்டினேன். “ஜெமோ இஸ்லாமிய ஆதரவுக்காக தாஜா பண்ணுகிறார்” என்றார். ஒரு முற்போக்கு நண்பரிடம் காட்டினேன். எங்கள் தொழிற்சங்க தலைவர். “இது இந்துத்துவப் பசப்பு. இஸ்லாமியர்களின் எதிர்ப்பை கரைத்து இல்லாமலாக்குவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சி. இஸ்லாமியர் கவனமாக இருக்கவேண்டும்” என்றார். அவ்வளவுதான். ஆனால் நீங்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பீர்கள். வேறுவழியில்லை.
எம்.ராஜேந்திரன்
நன்னு தோச்சு கொந்துவதே – கடிதங்கள்
என்ன இந்த உறவு, எதன் தொடர்வு?
அன்புநிறை ஜெ,
“நன்னு தோச்சு கொந்துவதே’ பாடல் மனதுக்கு அத்தனை அணுக்கமாகிவிட்டிருக்கிறது. முதல் முறை கேட்ட பிறகு, கடந்த ஒரு மாதத்தில் பல முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள், கண்டசாலா சுசீலா இருவரின் குரல், கருப்பு வெள்ளைப் படங்களின் அந்த மென்மையான நிலவில் நனையும் இரவு அனைத்தும் இப்பாடலை இனிதாக்குகிறது.
ஏனாதிதோ மனபந்தத்தில் கண்டசாலா உணர்ச்சி போல நின்னே நா ஸ்வாமியில் ஒவ்வொரு முறையும் சுசீலா தோய்கிறார். குறைவான எளிய சொற்களிலேயே மிகச் சரியாக மனதை சொல்லிவிடக்கூடிய வரிகள், தெலுங்கில் மட்டுமே சாத்தியமோ எனத் தோன்றியது.
பதிவின் தலைப்பில் ‘எதன் தொடர்வு’ என்பதும் அழகு. தொடர்ச்சி எனும்போது அச்சொல் பாடலின் இழையை சற்று அறுபடச் செய்கிறது. தொடர்வு ஒரு தொடுகை போல மென்மையாய் தொடர்கிறது.
இன்றைய பதிவில் தரப்பட்டிருக்கும் வரிகளுக்கான பக்கத்தில்
(https://www.lyricspulp.com/2021/05/nannu-dochukunduvate-lyrics-gulebakavali-katha.html)
பாடலின் பொருளை கூகுள் மொழிபெயர்ப்பில் பெயர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது
நின்னே நா ஸ்வாமியில் நின்னே thyselfக்கு பதிலாக yesterday ஆகிவிடுகிறது
Kannulalo Dhaachukondhu Ninnee Naa Swamy
Ninne Naa Swamyy
Hiding in the eyes yesterday is my lord
Yesterday was my lord
கந்தம் சந்தனத்துக்கு பதிலாக sand ஆகிவிடுகிறது, அதுவும் non-flying sand
Enni Yugaalaina Idhi Igirii Poni Gandham,
Idhi Igiri Poni Gandham
How many ages has it been without sand
Non-flying sand
இது வேறு ஒரு பாடல் என எண்ணிக்கொண்டேன் .
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள ஜெ
நீங்கள் குறிப்பிடுவதற்கு முன்ன்னரே அருண்மொழி அக்காவுக்கும் ஜமுனாவுக்குமான தோற்ற ஒற்றுமையை நான் கவனித்திருந்தேன். அதை தோழிகளுடன் சொல்லியும் இருக்கிறேன். நீங்களும் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
ராஜேஸ்வரி
September 20, 2021
புனைவு வாசிப்பு அடிமைப்படுத்துமா?
Vincent Van Gogh “The Novel Reader”அன்புள்ள ஜெ,
நலம்தானே?
என் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்கள் மிகக்குறைவு. அவர்களிலேயேகூட பலர் புனைவுகளை வாசிப்பதில்லை. “இருபத்தஞ்சு வயசு வரை கதை படிக்கிறது ஓக்கே. அதுக்குமேலே வாசிச்சா அவன் தத்தி”என்று என் நண்பன் ஒருவன் சொன்னான், கற்பனைக்கதைகள் வாசிப்பது வெட்டிவேலை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. பொதுஅறிவை அளிக்கும் கட்டுரைநூல்களை வாசிக்கிறோம் என்று சொல்வார்கள்.
அவர்கள் கட்டுரைநூல்கள் என்று சொல்வது பெரும்பாலும் அரசியல்நூல்கள். இடதுசாரி அரசியல்நூல்கள்தான் அதிகமும். சிலர் சேப்பியன்ஸ் போன்ற நூல்களைப் படிப்பார்கள். ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை சிலர் வாசிக்கிறார்கள். செய்திகளை தெரிவிக்கும் புத்தகங்களும், வரலாற்றுப்புத்தகங்களும் மட்டும்தான் பயனுள்ளவை என்று பலரும் பொதுவாகப் பேச்சில் சொல்கிறார்கள்.
நான் எங்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்த மூத்த நண்பரிடம் பேசினேன். அவரும் இடதுசாரிதான். அவர் சொன்னார் “புனைவுகள் உண்மைகளைச் சொல்வதில்லை. அவை ஒருவரின் கற்பனைகளைச் சொல்கின்றன. உண்மைகளைச் சொல்லும் புனைவல்லாத நூல்களும், உண்மைகளை அறியும் வழிகளைக் கற்பிக்கும் கொள்கைநூல்களும்தான் வாசிக்கவேண்டியவை. வாசிப்புப்பழக்கம் உருவாவது வரை புனைவுகளை வாசிக்கலாம். வாசிக்க ஆரம்பித்த பிறகு நிறுத்திவிடவேண்டும்”
உங்கள் கருத்து என்ன? எப்படியும் புனைவின் முக்கியத்துவம் பற்றித்தான் சொல்வீர்கள். ஆனால் நீங்கள் இதை எப்படி விளக்குவீர்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.
கிருஷ்ணன் சம்பத்
Gautam Mukherjee,Novel Readerஅன்புள்ள கிருஷ்ணன் சம்பத்,
பொதுவாக நம் அரட்டைகளில் அடிபடும் ஒரு கருத்துதான் இது. அதிலும் இடதுசாரிச்சூழலில். அன்றெல்லாம் எங்கள் தொழிற்சங்கச் சூழலில் ஒருவர் புனைவு படிக்கிறார் என்றாலே எவரோ ஒரு தோழர் கண்டிப்பாக இதைச் சொல்வார். ஏனென்றால் இடதுசாரி அமைப்புகளுக்குள் இளைஞர்களைக் கொண்டுவருவதற்கான வழியாக அவர்களுக்கு முதலில் கார்க்கியின் ‘தாய்’ போன்ற நாவல்களை வாசிக்க கொடுப்பதும், அவர்கள் வாசிக்க ஆரம்பித்ததும் மேற்கொண்டு எளிய கொள்கைவிளக்கப் பிரச்சார நூல்களை அளிப்பதும் வழக்கம். அதன்பின் படிக்கவிடமாட்டார்கள். “கதையா படிக்கிறீங்க?”என்று இளக்காரத்துடன் கேட்கும் தோழர்களைச் சந்திக்காமல் இடது அமைப்புகளுக்குள் எவரும் இலக்கியம் சார்ந்து செயல்படமுடியாது.
அதேபோல பொதுவான ஜனங்களுக்கு கதை என்றாலே இளமைப்பருவத்தில் வாசிக்கும் கிளுகிளுப்பான, விறுவிறுப்பான புனைவுகள்தான் என்னும் எண்ணம் உண்டு. பொழுதுபோக்குக்காக மட்டுமே அவற்றை வாசிக்க வேண்டும் என்னும் உளப்பதிவு. ஆகவே இவர்களிடமிருந்து இரண்டுவகையான எதிர்வினைகள் வரும். “நான்லாம் சின்ன வயசிலே நெறைய கதை படிச்சேன் சார். அதுக்குப்பிறகு குடும்பம் குட்டின்னு ஆயிடிச்சு. இந்த காதல் கீதலிலே எல்லாம் நம்பிக்கை போய்டிச்சு” அதாவது கதை என்றாலே காதல்கதைதான் இவர்களுக்கு. “அதெல்லாம் படிக்கிறதில்லீங்க, எங்கங்க நேரம்?” என்பது இன்னொரு வரி. அதாவது நேரம்போகாமல்தான் கதைபடிக்கிறார்கள் என்னும் புரிதல்
இவ்விரு தரப்புகளின் குரல்களைத்தான் ”புனைவு படிக்க மாட்டேன், கட்டுரைநூல்கள்தான் படிப்பேன்” என்று சொல்பவர்களும் எதிரொலிக்கிறார்கள். அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று பாருங்கள். பொதுவாக இவ்வாறு சொல்பவர்கள் மிகமிகக் குறைவாக வாசிப்பவர்களாக இருப்பார்கள். ஓரிரு நூல்களே மொத்த வாழ்நாளிலும் வாசித்திருப்பார்கள். அவர்களுக்கென சில மூலநூல்கள் இருக்கும். ஒரே புத்தகத்தைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதையொட்டி ஒரு துறைசார்ந்து சில நூல்களைச் சொல்வார்கள். சிலருக்கு அவை தன்னம்பிக்கை நூல்கள். சிலருக்கு பொதுவான ஆன்மிகநூல்கள். சிலர் ’அள்ளஅள்ளப் பணம்’, ‘பங்குமார்க்கெட்டில் பணமீட்டுவது எப்படி?’ வகையான செயல்முறை நூல்களில் இருப்பார்கள். சிலர் “அக்கினிச் சிறகுகள்” “ஸ்டீவ் ஜாப்ஸ்” வகை வாழ்க்கை வரலாறுகளை வாசிப்பார்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் நம்பும் அரசியல் தரப்பைச் சார்ந்த ஓரிரு நூல்களை வாசித்திருப்பார்கள். ஆனால் எவருமே தொடர்வாசகர்களாக இருக்க மாட்டார்கள்.
நூல்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களில் புனைவை வாசிக்கும் வழக்கமே இல்லாதவர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வகையினர்தான். ஆய்வாளர்கள். வரலாறு, சமூகவியல் போன்ற ஏதேனும் தளத்தில் தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்து நூல்களை எழுதிவருபவர்கள் புனைவுகளை வாசிப்பதில்லை. நானறிந்த ஆய்வாளர்களில் அ.கா.பெருமாள் போன்றவர்கள் முக்கியமானவை என்று சொல்லப்படும் புனைவுகளை மட்டுமாவது வாசித்துவிடுவார்கள். ஆனால் புனைவுகளை வாசிக்கும் மனநிலை ஆய்வாளர்களுக்கு இருப்பதில்லை. ஏனென்றால் புனைவுகளை வாசிக்கத் தேவையான கற்பனை அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் ஆய்வுத்துறைக்கு எதிரானது கற்பனை. அவர்கள் கறாரான புறவய நோக்கில் தகவல்களை பரிசீலிக்கவேண்டியவர்கள், திட்டவட்டமான முறைமைகளைப் பேணவேண்டியவர்கள். ஆகவே அவர்கள் புனைவுகளை வாசிக்காமலிருப்பது இயல்பானதே. ஏற்றுக்கொள்ளத்தக்கதே
ஆனால் ஒரு பொதுவான வாசகர் புனைவை வாசிக்காமலிருப்பது உண்மையில் குறைப்பட்ட வாசிப்புதான். வாசிப்பே அல்ல என்றுகூடச் சொல்லலாம். ஏன்?
அ. உலக சிந்தனை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இதுவரையில் எழுதப்பட்டு தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு நீடிக்கும் பெரும்பாலான படைப்புகள் புனைவுகளே.
இது ஏன் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். செய்திகளைச் சொல்லும் நூல்கள் ஒரு தலைமுறைக்குள் காலாவதியாகிவிடுகின்றன. ஏனென்றால் அச்செய்திகள் அடுத்த தலைமுறைக்கு தேவையானவை அல்ல. வரலாற்று நூல்களும் பழையனவாகிவிடுகின்றன. ஏனென்றால் மேலதிகத் தரவுகளுடன் வரலாறு மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. கொள்கைகளையும் தத்துவங்களையும் சொல்லும் நூல்களில் மிகமுக்கியமானவை, செவ்வியல் தகுதி கொண்டவை மட்டுமே நீடிக்கின்றன. அவையும்கூட பலசமயம் மீண்டும் எழுதப்பட்டுவிடுகின்றன.
ஆனால் புனைவுகள் காலம் செல்லச்செல்ல மேலும் தகுதி பெறுகின்றன. வெறும் சித்தரிப்பாக அமையும் எளிய கதைகள்கூட அந்தக் காலகட்டத்தை பதிவுசெய்யும் ஆவணங்களாக மாறி வாசிக்கப்படுகின்றன. புனைவுகளில் இருந்து மேலும் புனைவுகள் உருவாகின்றன. புனைவுகள் வழியாகவே முந்தைய தலைமுறை அடுத்த தலைமுறையை அறிகிறது. புனைவு வழியாகவே அறிவுத்தொடர்ச்சி உருவாகிறது.ஆகவே புனைவை வாசிக்காதவர் பெரும்பாலும் சமகாலத்தில் சிக்கிக்கொண்டவராகவே இருப்பார். புனைவுகளை வாசிப்பவர் அடையும் முழுமையான காலச்சித்திரத்தை அவர் அடையமுடியாது.
ஆ. புனைவுகள் வழியாகவே வாழ்க்கை தொகுக்கப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய வாழ்க்கையை புனைவுகளாக சொல்லியும் எழுதியும் தொகுத்துக்கொண்டே இருக்கிறது. அதன் கனவுகளும் அச்சங்களும் கதைகளிலேயே இருக்கின்றன. அக்கதைகள் அடுத்த தலைமுறையால் தெரிவுச்செய்யப்பட்டு, தொகுத்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சிலசமயங்களில் மறுஆக்கம் செய்யப்படுகின்றன. மறுவிளக்கம் அளிக்கப்படுகின்றன. இவ்வாறுதான் தலைமுறை தலைமுறையாக பண்பாட்டுநினைவுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரே ஒழுக்காக ஆக்கப்படுகின்றன. இனக்குழுக்களின் பண்பாட்டுநினைவுகள், ஊர்களின் பண்பாட்டு நினைவுகள், சமூகங்களின் தேசங்களின் பண்பாட்டு நினைவுகள். அவை இணைந்து மானுடத்தின் பண்பாட்டு நினைவுத்தொகுதியாக ஆகின்றன.
அந்த மாபெரும் நினைவுத்தொகுதிதான் அத்தனை சிந்தனைகளுக்கும் கச்சாப்பொருள். வரலாறு,சமூகவியல், அரசியல் எல்லாமே அதை ஆராய்ந்தே தங்கள் முடிவுகளைச் சென்றடைகின்றன.அந்த மாபெரும் நினைவுத் தொகுதி ஒவ்வொரு தனிமனிதனையும் இலக்கியம் வழியாகவே வந்தடைகிறது. ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு சமூகத்தில் பிறந்து, ஒரு மொழியில் வாழும்போதே கதைகளாக அந்த நினைவுத்தொகுதி அவரை வந்தடைந்துவிடுகிறது. அதுவே அவருடைய உள்ளத்தை உருவாக்குகிறது. அவர் சிந்திப்பதும் கனவுகாண்பதுமெல்லாம் அதைக்கொண்டுதான். சாமானியர்களுக்கு அது ஓர் எல்லையில் நின்றுவிடுகிறது. இலக்கிய வாசிப்பு என்பது அதை தொடர்ந்து பயின்றுகொண்டே இருப்பது. அவ்வளவுதான் வேறுபாடு,
இ. புனைவு இல்லாமல் எவராலும் வாழமுடியாது. புனைவை வாசிக்காதவர்கள் என தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் கூட புனைவுகளில்தான் பெரும்பாலும் புழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவது புனைவுதான். சினிமாக்கள், டிவி சீரியல்கள், பொழுதுபோக்கு எழுத்துக்கள், இலக்கியங்கள் என புனைவுகள் பெருகிச்சூழ்ந்துள்ளன. அவற்றை முற்றாகத் தவிர்ப்பவர் எவர்? செய்திகளும் புனைவுத்தன்மை கொண்டவைதான். புனைவு இல்லாத இடமே இல்லை. புனைவிலக்கியத்தை வாசிப்பவர் புனைவை அது என்ன என்று தெரிந்து, அதன் நுட்பங்களை உணர்ந்து, அறியும் திறமைகொள்கிறார். புனைவிலக்கியத்தை வாசிக்காதவர் அவரை அறியாமலேயே புனைவை விழுங்கி உள்ளத்தில் நிறைத்துக்கொண்டிருக்கிறார்.
ஈ. புனைவிலக்கியமே சமகாலத்து உணர்ச்சிகளை உருவாக்குகிறது. அதை அறிய புனைவிலக்கியத்தை வாசித்தாகவேண்டும். புனைவிலக்கியம் செயல்படும் விதமென்ன என்பது இன்று ஆய்வாளர்களால் விரிவாகவே பேசப்பட்டுவிட்டது. புனைவிலக்கியம் எழுத்தில் இருந்து பேச்சுக்குச் செல்கிறது. நிகழ்த்துகலையாகிறது. மக்கள் நினைவில் தொன்மம் ஆகிறது. தொன்மம் மீண்டும் இலக்கியமாகி விரிவடைகிறது. சிலப்பதிகாரக்கதை தமிழ் மக்களிடையே வாய்மொழிக்கதையாக இருந்தது. சிலப்பதிகாரமாக ஆகியது. மீண்டும் கதையாகி, தொன்மம் ஆகியது. அத்தொன்மம் மீண்டும் நவீன இலக்கியமாக ஆகியது.
இந்த தொடர்ச்சுழல் வழியாகவே நம் உள்ளத்தின் அடிப்படை அலகுகளான ஆழ்படிமங்கள், தொன்மங்கள், படிமங்கள் உருவாகின்றன. அவற்றைக்கொண்டே நாம் சிந்திக்கிறோம். நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். ஒருவர் இலக்கியம் படிக்காவிட்டாலும் இந்த சுழற்சியில்தான் இருக்கிறார். ஆனால் புனைவிலக்கியம் வாசிப்பவர் இது எப்படி நிகழ்கிறது என்னும் தெளிவை அடைகிறார். ஆகவே தன் உணர்ச்சிகளையும், அவ்வுணர்ச்சிகள் உருவாகும் விதத்தையும் அவர் அறியமுடியும்.
உ. புனைவிலக்கியம் வாசிக்காதவர்களால் மானுட உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாது. மனிதர்கள் சிந்தனைகளால் வாழ்வதில்லை, உணர்ச்சிகளால்தான் வாழ்கிறார்கள். அரசியலையும் அன்றாடவாழ்க்கையையும் வணிகத்தையுமேகூட உணர்ச்சிகளே தீர்மானிக்கின்றன. புனைவிலக்கியவாசிப்பே இல்லாதவர்கள் வெறுமே கருத்துக்களையாக கக்கிக்கொண்டிருப்பதை, அக்கருத்துக்களின் அடிப்படையில் எல்லாவற்றையும் எளிமையாக்கி புரிந்துகொள்வதை காணலாம். அவர்களால் தங்கள் உணர்வுகளை, பிறர் உணர்வுகளை, சமூக உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது. இது அவர்களுக்கு ஒரு மூர்க்கமான அணுகுமுறையை, ஒருவகையான பிடிவாதத்தை உருவாக்கிவிட்டிருக்கும்
ஊ. புனைவிலக்கியமே வாசகனின் தனித்தன்மையையும், பயணத்தையும் அனுமதிப்பது. புனைவிலக்கியம் என்பது யாரோ ஒருவரின் கற்பனையை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வது என்றும், புனைவில்லா எழுத்தே ‘உண்மையை’ச் சொல்வதும் என்றும் நம்புவது மேலே சொன்ன ஐந்து அடிப்படைகளையும் அறியாத ஒருவர் உருவாக்கிக்கொள்ளும் மாயை. மிக அபத்தமானது அக்கருத்து.
புனைவிலக்கியம் அல்லாதவை அனைத்துமே தர்க்கத்தின் மொழியில் அமைந்தவை. நாம் அவற்றை நோக்கி நம் தர்க்கத்தையே திருப்பி வைக்கிறோம். அங்கே நிகழ்வது தர்க்கபூர்வமான ஓர் உரையாடல். அந்த நூலாசிரியர் மிகச்சாதகமான நிலையில் இருக்கிறார். அவர் தன் துறையின் நிபுணராக இருப்பார். தன்னுடைய தர்க்கத்தை முன்னரும் பலமுறை முன்வைத்து, பலவகையான எதிர்வினைகளைக் கண்டு பழகி, தேர்ச்சி பெற்றவராக இருப்பார். அவருக்கு தன் தர்க்கங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து சீராக முன்வைக்கும் வாய்ப்பை அந்நூல் வழங்குகிறது. பலசமயம் தேர்ந்த நூல்தொகுப்பாளர்கள் இணைந்து அந்த நூலை பழுதகற்றி அமைத்திருப்பார்கள்.
அந்நூலின்முன் வாசகன் கிட்டத்தட்ட நிராயுதபாணியாக நிற்கிறான். அவனும் அத்துறையில் அதேயளவு நிபுணன் அல்ல என்றால் அவன் அங்கே தோற்கும் தரப்புதான்.நீங்கள் இதை நடைமுறையில் பார்க்கலாம். சேப்பியன்ஸ் நூலை வாசிக்கும் ஒருவாசகர் மிக எளிதாக யுவால் நோவா ஹராரியின் பார்வைக்கு அடிமையாவார். அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார். புனைவல்லா நூலின் வாசகர்கள் அப்படி சில நூல்களையே விதந்தோதிக்கொண்டிருப்பதைக் காணலாம். அப்படி அன்றி அந்நூலால் ஆட்கொள்ளப்படாதவர் இருந்தார் என்றால் அவர் அந்நூலுக்கு எதிரான சிந்தனைகளால் ஏற்கனவே ஆட்கொள்ளப்பட்டவராக இருப்பார். மார்க்ஸியர் சேப்பியன்ஸ் நூலை மூர்க்கமாக ஒற்றைப்படையாக மறுப்பார்கள். அது இன்னும் மோசமான அடிமைநிலை.
சரி, வெறும் செய்திநூல்கள் என்றால்? அங்கும் செய்திகளில் எது முக்கியம், எது தேவையில்லை என்னும் தெரிவு அதை அளிப்பவரிடம் உள்ளது.செய்திகளை அடுக்குவது அந்த ஆசிரியரிடம் உள்ளது. பெரும்பாலான செய்தித்தொகுப்புகள் மிக மறைமுகமாக வலுவான கருத்துநிலையை முன்வைப்பவை. 2000 ஆண்டு நிறைவின்போது இரண்டாயிரமாண்டின் வரலாற்று நிகழ்வுகளைப்பற்றி லண்டன் டைம்ஸின் செய்திச்சுருக்கம் ஒன்றை மலையாள மனோரமா இயர்புக்குக்காக மொழிபெயர்த்தேன். வெறும் செய்திகள், தேதிகள். வேறெந்த கருத்தும் இல்லை. ஆனால் அதில் பிரிட்டனில் ஓர் ஆர்ச்ப்பிஷப் பதவியேற்பது ஒரு செய்தி. சீனாவில் ஓர் அரசவம்சம் முடிவுக்கு வருவதுதான் செய்தி.
பெரும்பாலான துறைசார் நூல்களில் நாம் வெறும் கருத்தேற்பாளர்களாகவே இருக்கிறோம். நம்மையறியாமலேயே நாம் நம் தரப்பை அந்நூல்களை ஒட்டி உருவாக்கிக் கொள்கிறோம். அவ்வாறன்றி உண்மையை நோக்கிச் செல்லவேண்டும் என்றால் அத்துறைசார் நூல்களிலேயே எல்லா தரப்பையும் வாசிக்கவேண்டும். அவ்வாறு எத்தனை துறைகளை ஒருவரால் வாசிக்க முடியும்? அப்படியென்றால் அவர் தனக்கான உண்மையை அறிவது எப்படி? எப்படி தன் நிலைபாட்டை அவர் எடுக்கமுடியும்?
அவருக்கென இருப்பது அவருடைய அனுபவங்கள் மட்டுமே. அந்த அக- புற அனுபவங்களில் இருந்து அவர் நேரடியாக அடைவனவே அவருக்குரியவை. அவற்றை அளவுகோலாகக் கொண்டுதான் அவர் எல்லாவற்றையும் மதிப்பிட்டு தனக்கான முடிவுகளை அடையமுடியும். அத்தனைபேரும் இயல்பாகச் செய்வது அதைத்தான். ஆனால் எவராக இருந்தாலும் ஒருவரின் அனுபவம் என்பது மிகமிக எல்லைக்குட்பட்டது. அதைக்கொண்டு அனைத்தையும் புரிந்துகொள்ளுமளவுக்கு ஆழ்ந்த அறிதல்களை அடையமுடியாது. அதற்குத்தான் புனைவுகளை வாசிப்பது உதவுகிறது.அவை நாம் அடைந்த அனுபவங்களை கற்பனையில் விரிவாக மீண்டும் அனுபவிக்க உதவுகின்றன.
உதாரணமாக, நான் குமரிமாவட்ட வாழ்க்கையையும் தர்மபுரி மாவட்ட வாழ்க்கையையும் மட்டுமே அறிந்தவன். ஆனால் தேவிபாரதியின் நாவல்கள் வழியாக என்னால் ஈரோடு மாவட்ட வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கண்மணி குணசேகரன் வழியாக விழுப்புரம் வட்டார வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கீரனூர் ஜாகீர்ராஜா வழியாக இஸ்லாமிய வாழ்க்கைக்குள்ச் செல்லமுடியும். புனைவுகளினூடாக தமிழகம் முழுக்க வாழ்ந்த அனுபவத்தை நான் அடையமுடியும். அவ்வாசிப்பு எனக்கு உண்மையில் வாழ்ந்த அனுபவத்துக்கு நிகரான அறிதல்களை அளிக்கமுடியும்.
புனைவுகளை வாசிக்காதவர்கள், புனைவல்லாதவற்றை மட்டுமே வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஏதேனும் கருத்துக்களின் அடிமைகளாக இருப்பதைக் காண்கிறோம். அவர்களுக்குச் சுயசிந்தனை மிக அரிதாகவே இருக்கும். நூல்களால் ஆட்கொள்ளப்பட்டு, நூல்களை திருப்பிச்சொல்லும் கருத்தடிமைகள் அவர்கள். காரணம் இதுதான், கருத்துக்களும் செய்திகளும் அவர்களை நோக்கி மலைமலையாக கொட்டப்படுகின்றன. அக்கருத்துக்களை திறன்மிக்க நிபுணர்கள் தேர்ந்த தர்க்க ஒழுங்குடன் அளிக்கிறார்கள். அவர்களுக்கு அந்த கருத்துக்கள் வழியாக அதிகாரத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்கம் உள்ளது.ஆகவே அவர்கள் மிகுந்த விசையுடன் செயல்படுகிறார்கள்.அக்கருத்துக்களை மட்டும் வாசிப்பவர்களுக்கு அவற்றை மதிப்பிடுவதற்குரிய சுயமான அளவுகோல்கள் ஏதும் இல்லை. ஆகவே முற்றான அடிமைத்தனமே எஞ்சுகிறது.
அடிமைகளுக்கு இருப்பது நம்பிக்கை அல்ல, பற்று அல்ல, விசுவாசம் மட்டுமே. ஒரு சிந்தனையாளன் எந்த படையிலும் உறுப்பாக இருக்க மாட்டான். எந்த இடத்திலும் வெறும் எதிரொலியென செயல்படமாட்டான். விரிவான புனைவு வாசிப்பு இல்லாதவர்களின் மூர்க்கம் அந்த விசுவாசத்தில் இருந்து வருவது. அவர்களுக்கு தங்களின் சார்புகள்மேல் சந்தேகமே இருப்பதில்லை. ஆகவே திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள். எத்தனை ஆண்டுகளானாலும் மாறாமல் அப்படியே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் ஆழ்ந்த தன்னம்பிக்கையுடன் பேசமுற்படுகிறார்கள். இணையவெளியில் பாருங்கள். கருத்தடிமைகள் எந்த ஐயமும், எந்த வளர்ச்சியும் இல்லாமல் முழுநேரமாக ஆண்டுக்கணக்கில் இயந்திரம் போல செயல்பட்டுக்கொண்டே இருப்பதைக் காணலாம்.
புனைவுகளை வாசிப்பவர்களுக்கு சுயமான அனுபவங்கள் உள்ளன. அந்த அனுபவங்கள் புதிய கேள்விகளை எழுப்புகின்றன. ஐயங்களை உருவாக்குகின்றன. ஆகவே அவர்கள் மேற்கொண்டு கற்று முன்சென்றுகொண்டே இருக்கிறார்கள். புனைவுகளை வாசிக்காதவர்கள் மிகச்சீக்கிரத்திலேயே அவர்கள் வாசித்த சில வலுவான நூல்களால் முற்றாக ஆக்ரமிக்கப்பட்டுவிடுவார்கள். அந்நூல்களின் நிலைபாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்வதனால் அவர்களின் மூளை நிரம்பிவிடும். விசுவாசம் உருவாகிவிடும்.ஐயங்கள் இருப்பதில்லை. மேற்கொண்டு எதையும் கற்க முடியாது. ஆகவே வளர்ச்சியும் மாற்றமும் இருக்காது. விசைத்தறி ஓடுவதுபோல ஒரே டடக் டக் சடக் சட் ஓசைதான் எழுதுகொண்டிருக்கும் அவர்களிடமிருந்து. எண்ணிப்பாருங்கள் அப்படி எத்தனை முகங்கள் உங்கள் நினைவிலெழுகின்றன என.
ஆனால் புனைவின் வாசகன் வளர்ந்துகொண்டிருப்பான். ஆகவே அவன் நிலையாக இருக்க மாட்டான். அவனைப் பற்றி புனைவல்லாதவற்றை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்பவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டே அவன் உறுதியாக இல்லாமல் ‘அலைபாய்ந்துகொண்டிருக்கிறான்’ ‘குழப்பவாதியாக இருக்கிறான்’ என்பதாகவே இருக்கும். அதாவது அவர்கள் தங்களைப்போல மூளை உறைந்த விசுவாசநிலையை புனைவு வாசகனிடம் எதிர்பார்க்கிறார்கள். இயல்பாக பேசினாலே தெரியும், ஒரு நல்ல புனைவுவாசகன் புனைவல்லாதவற்றை மட்டும் படிப்பேன் என்பவனை விட மிகப்பலமடங்கு நுண்ணிய அவதானிப்புகளும் சுயமான சிந்தனைகளும் கொண்டவனாக இருப்பான். ஆனால் அதை உணருமளவுக்கு அந்த புனைவல்லாதவற்றின் வாசகர்களுக்கு நுண்ண்ணுணர்வு இருப்பதில்லை. அவர்களின் விசுவாசம் அவர்களை ஐம்புலன்களும் முற்றாக மூடப்பட்டவர்களாக ஆக்கியிருக்கும்.
ஆனால் விந்தை என்னவென்றால், இங்கே புனைவின் வாசகர்களிடம்தான் ”புனைவை வாசிக்காதீர்கள், அந்த ஆசிரியரால் அடித்துச்செல்லப்படுவீர்கள்” என்று பலரும் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதைச் சொல்பவர்கள் எவர் என்று பார்த்தால் ஒன்று கருத்தடிமைகள் அல்லது ஒன்றும் தெரியாத பொதுக்கும்பல்.இந்த அபத்தம் எங்குமென பரவியிருப்பதனால் நமக்கு உறைப்பதே இல்லை. புனைவுஅல்லாத நூல்களில்தான் ஆசிரியர் வாசகனை ஆட்கொள்ள, நம்பவைக்க, தனக்கு அடிமையாக ஆக்க முழுமூச்சாக முயல்கிறார். தன் தர்க்கத்திறன், தன் தரவுகள் எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார். புனைவுநூல்களில் ஆசிரியர் அப்படிச் செய்தால் அது பிரச்சாரம் எனப்படும். அதற்கு மதிப்பே இல்லை. புனைவின் மதிப்பு அது எந்த அளவுக்கு வாசகசுதந்திரத்தை அளிக்கிறது என்பதைப் பொறுத்தே உள்ளது.
புனைவு எத்தனை அப்பட்டமாக பிரச்சாரநோக்கம் கொண்டிருந்தாலும்கூட ஒற்றைப்படையானது அல்ல. அது நமக்கு அளிப்பது ஒரு நிகர்வாழ்க்கையை. நாம் ஒரு மெய்யான வாழ்க்கையைப்போலவே அப்புனைவு அளிக்கும் வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அந்த அனுபவத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அறிதல்கள் அந்த ஆசிரியன் சொல்லும் கருத்துக்கள் அல்ல. நாமே அனுபவித்து அறியும் நமது கருத்துக்கள் அவை. நூல்கள் அளிக்கும் அனுபவமே அத்தனை வாசகர்களுக்கும் பொதுவானது. கருத்துக்கள் வாசகர்களால் அவர்களின் அறியும்திறனுக்கு ஏற்ப உருவாக்கப்படுபவை. நீங்களும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறோம். நாம் அடையும் புறஅனுபவம்தான் ஒன்று. அக அனுபவம் வெவ்வேறானது. அதிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அறிதல்களும் வேறுவேறு. அதைப்போலத்தான் இலக்கியம் அளிக்கும் அறிதல்களும்.
புனைவின் செயல்முறையே தரவுகளைக்கொண்டு ஓர் அனுபவக் களத்தை உருவாக்கி வாசகன் அந்த அனுபவத்தை அவனே கற்பனைசெய்துகொள்ளச் செய்வதுதான். எத்தனை செயற்கையாக ஜோடனை செய்தாலும் அதில் ஆசிரியரை மீறி செய்திகளும் தரவுகளும் குரல்களும் இடம்பெற்றிருக்கும். கலைத்தன்மை கொண்ட படைப்பு என்றால் அது முற்றிலும் ஆசிரியரை விட்டு எழுந்து அவனுடைய கனவு போல தானாகவே மொழியில் நிகழ்ந்ததாக இருக்கும். அந்த ஆசிரியனை மீறியதாக இருக்கும். ஆசிரியன் சொல்ல விரும்புவதை அப்படியே அது சொல்வதில்லை. அவனே அறியாதவற்றையும் அது சொல்லும். சொல்லாதவற்றைச் சுட்டிநிற்கும். ஆசிரியனைவிட அது ஆழம் கொண்டதாக இருக்கும். சமயங்களில் அவனுடைய எதிர்மறைத்தன்மையைக்கூட காட்டிக்கொடுக்கும்.
பன்முகவாசிப்புக்கு இடமளிப்பதே இலக்கியப் படைப்பு. ஆகவேதான் இலக்கியப்படைப்பைப் பற்றி முற்றிலும் வேறுவேறான வாசிப்புகள் வரமுடிகிறது.ஒரு வாசகர் காணாததை இன்னொரு வாசகர் காண முடிகிறது வாசிப்பு பெருகுந்தோறும் இலக்கியப்படைப்பின் ஆழமும் கூடுகிறது. காலந்தோறும் அதன் அர்த்தம் வளர்ந்து உருமாறமுடிகிறது. இலக்கிய வாசிப்பு என்பது போதனை அல்ல. ஆசிரியர் கொடுக்க வாசகன் பெற்றுக்கொள்வதில்லை. ஆசிரியரும் வாசகனும் இணைந்து ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆசிரியர் வாசகனின் கனவை தொட்டு அதை வளரச் செய்கிறார். வாசகன் அடைவது அவனுடைய கனவையேதான்.
புனைவுநூல்கள் கட்டுரைநூல்களைப்போல தர்க்கபூர்வமானவை அல்ல. அவை தர்க்கத்தை பயன்படுத்தினாலும்கூட தர்க்கம்கடந்த நிலையிலேயே அவை பொருளுணர்த்துகின்றன. கட்டுரைநூல்களை வாசிக்க ஒரு காலிமூளை கொண்ட வாசகன் போதும். புனைவுகளை வாசிக்க கற்பனைத்திறன் கொண்ட வாசகன் தேவை. புனைவுநூல் தன் வாசகனுக்கு வண்ணங்களையும் சில கனவுகளையும் அளிக்கிறது. அவன் தன் ஓவியத்தை தானே வரைந்துகொள்ளவேண்டும். கட்டுரை நூல் வாசகன் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவன் சுவரில் ஓர் ஓவியத்தை மாட்டிவிட்டுச் செல்கிறது.
கட்டுரைநூல்களில் அந்நூலாசிரியர் உருவாக்க எண்ணும் கருத்துக்கு தேவையானவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். புனைவு அப்படிச் செயல்பட முடியாது.அதில் முக்கியமானவை என ஏதும் இல்லை. ஒரு சூழலைச் சொல்ல, ஒர் உணர்வைச் சொல்ல அது ‘எல்லாவற்றையும்’ சொல்லித்தான் ஆகவேண்டும். ஆசிரியர் அந்தக் கற்பனைக்குள் செல்லும்போது தன்னிச்சையாக எல்லாமே உள்ளே வந்து பதிவாகும். உணர்வுகள் இயல்பாகவே வந்து நிறையும். ஆகவே சின்னவிஷயங்கள், விளிம்புவிஷயங்கள், எதிர்மறை அம்சங்கள் எல்லாம் புனைவில் நிறைந்திருக்கும். ஆசிரியன் பொருட்படுத்துவன மட்டுமல்ல அவனால் பொருட்படுத்தாதவை கூட புனைவில் இருக்கும்.
சின்னவிஷயங்களால் ஆனது வாழ்க்கை. அவை பதிவாகும் ஒரு களம் புனைவு மட்டுமே. சங்ககாலத்தில் பெண்கள் எப்படி அணிசெய்தார்கள் என நீங்கள் கலித்தொகையைக் கொண்டே அறியமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு சமையல் என்ன என்பதை நாவல்களே காட்டமுடியும். இன்றைய அன்றாடம் புனைவில் மட்டுமே எஞ்சியிருக்கும். சின்னச்சின்னச் செய்திகள் வாசகனுக்கு முக்கியமானவையாக இருக்கலாம்.மிகச்சாதாரணமான ஒரு செய்தி அல்லது காட்சியில் இருந்து வாசகன் முக்கியமான எண்ணங்களை, புரிதல்களை அடையலாம். புனைவுவாசிப்பு அளிக்கும் இந்த வாய்ப்புகளையே நாம் அதன் முதன்மை தகுதிகளாகக் கொள்கிறோம்.
இன்று வாசிப்புசார்ந்த இலக்கியக் கொள்கைகளே மிகுதியாக வந்துகொண்டிருக்கின்றன. புனைவை ஒரு மொழிக்கட்டமைப்பாக பார்க்கும் ரோலான் பார்த், புனைவை ஆசிரியன் அறிந்தவையும் அறியாதவையுமான வெவ்வேறு குரல்களின் பெருந்திரளாகக் காணும் மிகயீல் பக்தின், புனைவை வாசகன் அர்த்தமேற்றிக்கொண்டே செல்வதை ஓர் ஆடலாகப் பார்க்கும் ழாக் தெரிதா என அதன் படிநிலைகள் பல. வாசக எதிர்வினை கொள்கைகள் என ஒரு பெரிய சிந்தனை மரபே உள்ளது. ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் தொடங்கி பலர். இவை எல்லாமே புனைவு அளிக்கும் வாசிப்பு வாய்ப்புகளைப் பற்றிய ஆய்வுகள். புனைவை எப்படி வாசிக்கவேண்டும் என்று இவை சொல்லவில்லை, உண்மையில் நாம் எப்படி புனைவை வாசிக்கிறோம் என்று இவை விளக்கமுயல்கின்றன. நாம் புனைவை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியே ஏற்றுக்கொள்ள முயன்றாலும்கூட அது நிகழ்வதில்லை. அது ஓர் உரையாடல், ஒரு கூட்டுச்செயல்பாடு. இந்தச் சிந்தனைமரபின் ஒரு துளியை அறிந்த ஒருவர் கூட புனைவுகளை வாசிப்பவன் ஆசிரியனை அப்படியே ஏற்றுக்கொள்கிறான் என்று சொல்ல மாட்டார்கள்.
கடைசியாக ஒன்று, புனைவல்லா நூல்களில் மட்டுமே ஈடுபடுபவர்கள் முற்றிலும் அன்றாடவாதிகளாக, உலகியல் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். தங்களைச் சார்ந்து, தங்கள் சூழல் சார்ந்து மட்டுமே யோசிப்பார்கள். முழுமைநோக்கு என்பதே ஆழ்நோக்கும்கூட. அதுவே ஆன்மிகம் என்று சொல்லப்படுகிறது. வாசிப்பில் அது புனைவினூடாகவே எய்தப்பெறுவது. ஏனென்றால் புனைவிலேயே கற்பனைக்கு இடமிருக்கிறது, வாசகன் தன் அனுபவமாக உணர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
சரியான வாசிப்பு என்பது புனைவும் புனைவல்லாதவையும் இணைந்து உருவாகும் ஒரு வெளி. புனைவல்லா நூல்கள் நமக்குச் செய்திகளையும் பார்வைகளையும் அளிக்கின்றன. புனைவு நமக்கு அனுபவங்களை அளித்து அவற்றினூடாக நம் அறிதல்திறனை வளர்க்கிறது. இவை ஒன்றையொன்று நிரப்பிக்கொள்ளவேண்டியவை
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


