ரவிசுப்பிரமணியன் ஆவணப்படங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.

இந்த வருட செப்டம்பர் பதினொன்று அன்று பாரதியின் பாடல் ஒன்றை கேட்டு நாளை ஆரம்பிப்போம் என்று , சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் பாடி வெளியிட்டிருந்த,  ‘பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுக்கு’  கேட்டேன். அன்று பற்றிய தீ, வார இறுதி விடுமுறையில் பாஞ்சாலி சபதத்தை, தனியறையில் அமர்ந்து சத்தம் போட்டு வாசிக்க வைத்தது. அன்றே எதேச்சையாக நான் பார்த்த, கவிஞர் ரவிசுப்பிரமணியன் எடுத்திருந்த ஒரு ஆவணப்படம்,  ‘நீ ஒரு நாள் வாசித்ததற்கே, இப்படி அலட்டிக்கிறயே’ என்று நாணமுற செய்தது. அது பாரதியை ஞானகுருவாக ஏற்றுக்கொண்ட கவிஞர் திருலோக சீதாராம் பற்றிய ஆவணப்படம்.

அவர் பாரதியின் அனைத்துக் கவிதைகளையும் மனப்பாடம் செய்து மேடையேறி பாடி பாரதியை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர். பாஞ்சாலி சபதத்தை, அந்தந்த பாத்திரமாக மாறி பாடி, மக்களை மெய்மறந்து கேட்கசெய்தவர்.

இந்தப்படத்தை முன்னூறுக்கும் குறைவான வாடிக்கையாளர்களே பார்த்திருந்தனர்.  இந்தப் படத்தின்  நிரலை கண்டுபிடிக்க, கூகுளிலும் , யூட்யூபிலும் எப்படி தேடுவது என்று தெரிந்த கில்லாடியாக இருக்கவேண்டும். நான் கவிஞர் ரவிசுப்பிரமணியத்துடன் தொடர்பில் இருப்பதாலும், அவர் இசையமைத்து வைத்திருக்கும் கவிதைகளை அடிக்கடி கேட்பவன் என்பதாலும், ஒரு வேளை, தானியங்கி செயலிகள் அவைகளாக எனக்குப் பரிந்துரைத்திருக்கலாம். 2015-ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, 2016-ல் டில்லி தமிழ்ச்சங்கம் நடத்திய நிகழ்வு ஒன்றில் பார்த்ததாக,  தளத்தில் ஒரு வாசகரின் பதிவு உள்ளது என்பதை பின்னர் தேடி அறிந்துகொண்டேன்.

‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ படத்தை எடுக்கும்பொழுது ரவி சுப்பிரமணியம் அவர்களிடம் எட்டே எட்டு புகைப்படங்கள்தான் இருந்ததாம். ‘இலக்கிய வரலாறுகளில் அவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை. அவர் எழுதிய புத்தகங்கள் அச்சில் இல்லை. திருலோகம் அவர்களின் நண்பர் டி.என். ராமச்சந்திரன் கூறிய செவிவழி செய்திகள்தான் படத்திற்கு முக்கிய  ஆதாரம்’ என்று திருலோகம் சீதாராம் நூற்றாண்டு விழா உரையில் குறிப்பிட்டிருப்பார். அந்த எட்டு புகைப்படங்களை மட்டும் வைத்து எப்படி ஒரு முழு நீளப்படம் எடுப்பது? ஆளுமையின் அந்தந்த வயதின்படி நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். தொண்டைமான்துறை ராமசாமி படையாச்சியிடம் முறையாக தமிழும் இலக்கணமும் கற்றுக்கொள்ளும்பொழுது எட்டு வயது சிறுவன். பதினெட்டு வயதிலேயே பத்திரிகையில் உப ஆசிரியராக வேலை பார்க்கும் காட்சிகளில், ஒரு பதின்ம வயது பையன் அச்சு எந்திரங்களின் பின்னனியில் தெரிகிறான்.

திருலோக சீதாராமின் நண்பர், த.ந. ராமச்சந்திரன், அவரது சீடர் என சொல்லிக்கொள்ளும் சக்தி சீனுவாசன், பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன், திருச்சி சத்யசீலன், எழுத்தாளர் அசோகமித்திரன் ஆகியோரின் நேர்முகங்கள் கொடுக்கும் தகவல்கள் படத்தை நிறைக்கிறது. த.ந. ராமச்சந்திரன் சொல்லும் தகவல்கள் ஒவ்வொன்றும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியவேண்டியவை. உதாரணத்திற்கு இரண்டு. பாரதியின் சில பாடல்களைக் கேட்டுவிட்டு, சில வரிகளை இது பாரதி எழுதியதுபோல் இல்லையே என்பாராம். கைப்பிரதியை எடுத்துப் பார்த்தால் இவர் சொன்னதுதான் சரியாக இருக்குமாம். பாரதியாரின் மனைவி இறக்கும் தருவாயில், மூன்று மாதம் திருலோகம் அவருடனேயே தங்கியுள்ளார். இவரது மடியில்தான் அவர் தலை சாய்ந்ததாம்.

“நேரில் பாடிக்காட்டுவதிலும் கேட்பதிலும்தான் கவியின்பம் முழுமை பெறுகிறது என்பதில் நம்பிக்கை உடையவன் நான்” என்று சொல்லும் சீதாராம், பாரதி தாசனின் குடும்ப விளக்கையும் பாடியே மக்களிடம் சேர்த்துள்ளார்.  நிகழ்வு ஒன்றுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் போய்விட்ட பாரதிதாசனை பார்த்து, தனது கோபத்தை தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு ஆவணப்படத்தில் எல்லா விஷயங்களையும் சொல்லமுடியாது என்று சொல்லும் ரவிசுப்பிரமணியன் இந்தப் படத்தில், ஒரு புது இலக்கிய வாசகனுக்கு திருலோகம் பற்றிய நல்ல குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கொடுத்துள்ளார். கொள்கைகள் வேறுபாடு பார்க்காமல் அண்ணாதுரையுடனான உறவு, தொழிலதிபர் ஜி.டி. நாயுடனான உறவு,  சுஜாதாவின் முதல் கதை வந்த சிவாஜி என்ற பத்திரிகையின் ஆசிரியர், 19 வயதில் பத்து வயது ராஜாமணியுடன் திருமணம், மூன்று பெண்களுக்கும், நான்கு பையன்களுக்கும் தகப்பன், முழு நேரத்தை பாரதியாருக்கும், பாரதிதாசனுக்கும் கொடுத்துவிட்டு பொருளாதாரத்தில் திண்டாடும் வாழ்க்கை, என ஒவ்வொன்றையும் படம் தொட்டுச் செல்கிறது.

கவி ஆளுமை பாடியிருந்தால் எப்படியிருக்குமென இனிமையான இரவல் குரல்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘பாரதியின் பாடலை அவர் பாடிக் கேட்கவேண்டும்’ என்று த.ந. ராமச்சந்திரன் சொல்லி முடித்ததும், வானில் பறக்கும் சிட்டுக்குருவிகள் பறக்க, ’விட்டு விடுதலையாகி நிற்பாய், இந்தச் சிட்டுக்குருவியைப் போலே’ என்று கனீரென குரலில் பாரதியின் கவிதை ஒலிக்கிறது. கவிஞர் திருகோலம் சீதாராம் அவர்களின் ‘முன்பொரு பாடல் எழுதினேன். அந்த மூலப்பிரதி கைவசம் இல்லை’ என்ற பாடலை பாடியவரின் குரல் இனிமையும், கவிஞரின் அன்றாட வாழ்க்கையை சித்தரிப்பதைப்போல எடுக்கப்பட்ட காட்சிகளும், தனிப்பாடலாகவும் வெளியிடலாம் எனும் அளவுக்கு தரம்

ஜெயகாந்தனை நிகழ்காலத்தில் அதே கம்பீரத்துடன் உலவவிடும் படம் ரவிசுப்பிரமணியனின் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம். ஜெயகாந்தன், மஹாபாரதம் பற்றி பேசும் ஒரு சின்ன கிளிப்பை, ரவியின் அனுமதியுடன் அவரது படத்திலிருந்து எடுத்து, வெண்முரசு ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

சூரியனுக்கும் லைட் அடித்துக் காட்டக்கூடிய சூழ்நிலையில்  நாம் உள்ளோம். பாரதியைத் தெரிந்த அனைவரும், திருலோகத்தையும் அறிந்தே பேச, ரவிசுப்பிரமணியனின் ‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ வழி வகுக்கும். அவரது அனைத்து ஆவணப்படங்களையும் இங்கே காணலாம்.

அன்புடன்,

சௌந்தர்

ஆஸ்டின்.

ரவிசுப்பிரமணியன் ஆவணப்படங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2021 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.