Jeyamohan's Blog, page 907

October 1, 2021

தலைக்குமேலே

 

1980ல் The Gods Must Be Crazy என்ற திரைப்படம் வெளிவந்தது. அன்று அது ஒரு பெரிய வெற்றிப்படம், பல மாதங்கள் அதைப்பற்றிய பேச்சு இருந்தது. தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதியும் வெளிவந்தது. விமானத்தில் செல்பவன் ஒரு கொக்கோகோலா பாட்டிலை கீழே போட்டுவிடுகிறான். கீழே கலகாரி பாலைவனம். புஷ்மேன் என்னும் பழங்குடிகள். அவர்களைப் பொறுத்தவரை வானிலிருந்து விழுந்த தெய்வத்தின் கொடை அல்லது சாபம் அல்லது அறிவிப்பு அது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் வாழ்க்கையை அது சில நாட்கள் கொந்தளிக்க வைக்கிறது.

சென்ற டீமானிடேஷனின் போது அதை நினைத்துக்கொண்டேன். வானிலிருந்து தலைமேல் விழ ஏதேதோ காத்திருக்கிறது. அந்தியூருக்கு மேலே மலைச்சரிவுகளில் நித்யநித்திரையில் இருக்கும் அழகிய சிற்றூர்களுக்கு மேலே டெல்லி திரண்டு நின்றிருக்கிறது

தலைக்குமேலே- அருண்மொழி நங்கை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2021 11:34

விசும்பு ஆடு ஆய்மயில்- கிருஷ்ணப்பிரபா.

ஜெயமோகனின் ‘பூவிடைப்படுதல்‘ உரையின் காட்சிப்படிமமாக உள்ளத்தில் இருப்பது குறிஞ்சி பூத்த மலைவெளி. அந்த உரையில் ‘சீக்கிரமே உங்கள் இருவருக்கும் நடுவில் ஒரு சிறு பூ மலர்வதாக!’ என்று ஒரு வரி வரும். யதிகை பிறந்தபின், இந்த மூன்று ஆண்டுகளில், பலமுறை மெல்லிய புன்னகையுடன் இவ்வரியை நினைவு கூர்ந்திருக்கிறேன். பூவிடைப்படுதலின் இன்பத்தையும் அறிந்த நாட்கள் இவை.

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி, இவ்வருடம் குடகு மலையில் பூத்திருக்கிறது.  மடிக்கேரி அருகே  மாந்தல்பட்டி மலைச்சரிவில். கொரோனா கால அலைக்கழிப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் நடுவில் ஒரு சிறு பயணம். யதிகாவிற்கு முதல் பயணம். ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரிலிருந்து கிளம்பி மடிக்கேரி வந்தடைந்தோம். 4 மணிக்கெல்லாம் மேகங்கள் தரையிறங்கி, மலைகளையும்  மறைத்திருந்தது. அரைச்சாரளம் வழியே மிதக்கும் மேகங்களை பார்த்து அமர்ந்திருந்தோம். மறுநாள் காலை மடிக்கேரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாந்தல்பட்டி நோக்கி பயணமானோம்.

செல்லும்வழியில், ஒரு வளைவில், அடர்ந்த மரங்களுக்கு நடுவில்  நீல மலர்களுடன் சிறு செடிக்கூட்டம் தென்பட்டது. அதுதானா என்று எண்ணுவதற்குள்ளாகவே கடந்துவிட்டிருந்தோம். மீண்டும் ஒரு வளைவு, மீண்டும் நீலத்தின் இமைநேரத் தொடுகை. அங்கிருக்கிறதா கற்பனையா என்ற உள மயக்கம். கூர் கொண்டிருந்தன விழிகள். மரக்கூட்டங்களுக்குள்ளிருந்து திறந்தவெளி நோக்கிச் சென்ற இன்னொரு வளைவில் கண்டுகொண்டேன். ‘ஏய் குறிஞ்சீ’ என்ற அலறலுடன் வண்டியை நிறுத்தச் செய்தேன்.

நீல மென்துகில் அணிந்த மலைக்குன்று. காடே மலர்ந்திருந்தது. கோடி மலர்கள், கோடி விழிகள், கோடிப் புன்னகை. ஊதா நிறத்திலான சிறிய பூக்கள். வாசனை ஏதும் இல்லை. நாங்கள் வருவதற்கு முன் மென்மழை பெய்திருந்தது. பூக்களில் நீர்த்துளிகள் இருந்தன. மெல்லிய காற்றில் செடிகள் அசைந்து கொண்டிருந்தன. மழைமேகங்கள் சூழ்ந்த வானமாதலால், மிகக்குறைந்த ஒளியே இருந்தது. பனி மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது. தேனீக்களும் வண்டுகளும் பூக்களை சுற்றிய வண்ணம் இருந்தன. சிறிது நேரம் மலர்களை நோக்கி அமர்ந்திருந்தோம். மலர்வெளியில் கொஞ்சம் நடந்துவிட்டு, சில புகைப்படங்களும் எடுத்துக்கொண்டபின், மாந்தல்பட்டி முனை நோக்கிப் பயணித்தோம்.

கரடுமுரடான மண்பாதையாகையால், காரை நிறுத்திவிட்டு, ஜீப்பில் செல்ல வேண்டி இருந்தது. சிறிது நேரத்தில் மழை துவங்கிவிட்டது. சுமார் 10 கிலோமீட்டர், மழையில் மலர்வெளியை நோக்கியபடி பயணம். வழியெங்கும் குறிஞ்சி பூத்திருந்தது. மேலே செல்லச் செல்ல, செடிகளின் செறிவு குறைந்து வந்தது. பனி படர்ந்து, நோக்கும் தூரமும் குறைந்து வந்தது. உச்சியை அடைந்ததும், ஜீப்பிலிருந்து இறங்கி, 300 மீட்டர் நடந்து முகட்டை அடைய வேண்டும். அதுவரை மென்மையாகப் பெய்த மழை, சட சடவென கொட்ட ஆரம்பித்தது. மழைக்கான ஆடைகளை அணிந்து கொண்டு மலை ஏற ஆரம்பித்தோம்.

இருவரின் கையையும் பிடித்துக்கொண்டு யதிகா தாவித் தாவி ஏறினாள். மேலே சென்றதும் பலமான காற்றும் சேர்ந்து கொண்டது. முகில்கள் முழுவதுமாக எங்களை சூழ்ந்துகொண்டன. விரைவான காற்றும் மழைத்துளிகளும் மழையாடைகளில் அறைந்து ஒலி எழுப்பின. காற்றின் வேகத்தால் உந்தப்பட்ட நாங்கள், அருகிருந்த சிறு பாறையில் சாய்ந்துகொண்டோம். யதிகா கொஞ்சம் பயந்துவிட்டாள். பூனைக்குட்டி போல உடலுடன் ஒட்டிக் கொண்டாள். உச்சியிலிருந்து கீழே எதுவும் தெரியாத படிக்கு பனிசூழ்ந்திருந்தது. பட்டுப்போன மரம் ஓன்று மட்டும் அங்கிருந்தது. சிறிது நேரம் அங்கிருந்து விட்டு, இறங்கி வந்தோம்.

ஜீப்பில் ஏறி, சற்று தாழ்வான மலைச்சரிவை அடைந்து, குறிஞ்சி பூத்த இடத்தில் வண்டியை நிறுத்தினோம். நிதானமாக மழையையும் மழையில் பூக்களையும் காணும் வண்ணம் அமைந்திருந்தது அவ்விடம். மழையில் நனைந்தபடியே, மலர்வெளியை நோக்கி நின்றிருந்தேன். காற்றில் ஆடும் குறிஞ்சிச்செடிகளும், மழைக்கால்களும், காற்றின் இசையும் இணைந்த ஒரு நடனம் அரங்கேறிக் கொண்டிருந்தது. இம்மழையும், காற்றும்,  பூவும், காடும் நானே என்றிருந்தேன்.

ஜீப்பிலிருந்து யதிகை அழைத்தாள். மெல்ல விடுபட்டு, அந்நடனத்தை சிறு காட்சித்துளியாக கைபேசியில் அடைத்துக் கொண்டு வண்டியில் வந்தமர்ந்தேன். உடல் எடையற்றிருந்தது, மனம் சலனமற்று, சிறு துள்ளலுடன் இருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தோம். விழி வெறுமே வேடிக்கைபார்த்துக் கொண்டு வந்தது. உள்ளாழத்திலிருந்தென அவ்வரி எழுந்து வந்தது – ‘விசும்புஆடு ஆய்மயில்.’

கபிலரின் வரி. சங்கச்சித்திரங்களில் இப்பாடல் குறித்து ஜெயமோகன் எழுதியிருப்பார்.

கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை
வடுக்கொலப் பிணித்த விடுமுரி முரற்சிக்
கைபுனை சிறுநெறி வாங்கி பையென
விசும்ஆடு ஆய்மயில் கடுப்ப யானின்று
பசுங்காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ தோழி பலவுடன்
வாழை ஓங்கிய வழையமை சிலம்பில்
துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபட காணாது
பெருங்களிறு பிளிரும் சோலை அவர்
சேண்நெடுங் குன்றம் காணிய நீயே.
(நற்றிணை 222, கபிலர், திணை – குறிஞ்சி)

வாழைக் கூட்டம் அடர்ந்த
மலைச் சரிவில் உறங்கும்
பிடி யானையின் மீது
மேகம் படரும்போது
துணைவியைக் காணாத
ஆண் யானை பிளிரும்
சோலைகள் நிரம்பிய
அவனது குன்றைக் காண வசதியாக
கரிய அடிமரமுள்ள
வேங்கை மரத்தின்
சிவந்த பூக்கள் நிரம்பிய கிளையில்
தடம் பதியும்படி கட்டப்பட்ட
அலங்கார ஊஞ்சலில்
உன்னை அமரச் செய்து
இடைக் கச்சையில் பற்றி
மெள்ள ஆட்டிவிடட்டுமா?
விண்ணிலாடும் மயில்போல
வானில் நின்று பார்த்துக் கொள்!

(சங்கச்சித்திரங்கள்)

விண்ணிலாடும் மயில் என வானில் நின்று நோக்கிய கணநேரம்.

ஜீப்பிலிருந்து இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டிருந்தது. அருகே இருந்த சிற்றுண்டிச்சாலையில், நனைந்த உடைகளிலிருந்து கதகதப்பான ஆடைகளுக்கு மாறினோம். காரில் பெங்களூரு நோக்கி பயணமானோம். உடல் மெல்ல களைப்படைந்து கொண்டிருந்தது, மனமும் எண்ணங்களேதுமற்று, புதிதாக எதையும் உள்வாங்கிக் கொள்ளவியலா நிலையை அடைந்திருந்தது.

அவ்வப்போது மேகங்கள்
மனிதர்களுக்கு ஓய்வு
நிலவை நோக்குவதிலிருந்து.

(பாஷோ)

பூவிடைபடுதலும் மேகத்திரைகளும் இரு எல்லைகளுக்கிடையேயான ஊசலாட்டமும் அளிப்பது இந்த ஓய்வைத்தானா?

*

“மௌண்டைன் ஃபுல்லா பூப்ப்பா! நல்லா இருந்துச்சுல்ல…. எவ்வளவு பூப்பா…” என்று அரற்றிக்கொண்டே வந்தாள் யதிகை.

“தேங்க்ஸ் மா” என்றாள்.

“எதுக்குடி?” என்றேன்.

“நீ தானே பாப்புவெ பூபாக்க கூட்டிட்டு வந்தே. பாப்புவுக்கு அம்மாவெ ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி, இரு கரங்களையும் கழுத்தைச் சுற்றி வளைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

மணி எங்கள் இருவரையும் நோக்கிப் புன்னகைத்தபடி அமர்ந்திருந்தான். அவன் பன்னிரு வருடங்களுக்கு முன் எனக்கு எழுதிய வரி மனதில் மின்னி மறைந்தது –

“திசையெங்கும் பரவும் நீலம் உன் பிரியம்!”

கிருஷ்ணப்பிரபா

அன்புள்ள கிருஷ்ணா,

இந்த நாட்களின் அருமையை உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நாம் நம் நினைவுகளில் நீடிக்கும் வாழ்க்கையை வாழ்ந்த காலம் முடிந்து இன்னொருவரின் நினைவுகளில் நீடிக்கும் இன்னும் பெரிய ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறோம். குழந்தையில் குடியேறி நம் உடல் வாழும் இந்தக் காலகட்டத்தைக் கடக்கிறோம்.

வாழ்த்துக்கள்

ஜெ

படம் ராதா எந்ந பெண்குட்டி

பாடல் பிச்சு திருமல

இசை கே.ஜே.ஜாய்

பாடகர் ஜெயச்சந்திரன்

காட்டுக்குறிஞ்ஞி பூவும்சூடி
ஸ்வப்னம் கண்டு மயங்ஙும் பெண்ணு

சிரிக்காறில்ல,
சிரிச்சால் ஒரு பூங்குழலி
தளிரும் கோரி குளிரும் கோரி
நூறும் பாலும் குறியும் தொட்டு
நடக்கும் பெண்ணு!
கரயாறில்ல!
கரஞ்ஞால் ஒரு கரிங்குழலி

கோபிக்காறில்ல
பெண்ணு கோபிச்சால் ஈற்றப்புலி போலே
நாணிக்காறில்ல
பெண்ணு நாணிச்சால் நாடன்பிட போலே

தாலிப்பெண்ணே நீலிப்பெண்ணே தாளம் துள்ளி மேளம் துள்ளிவா
தாலிப்பெண்ணே நீலிப்பெண்ணே தாளம் துள்ளி மேளம் துள்ளிவா

பாடாறில்ல இவள்
பாடிப்போயால் தேன்மழ பெய்யும்
ஆடாறில்ல இவள்
இவள் ஆடிப்போயால் தாழம்பூ விடரும்

தாலிப்பெண்ணே நீலிப்பெண்ணே தாளம்துள்ளி மேளம்துள்ளிவா
தாலிப்பெண்ணே நீலிப்பெண்ணே தாளம் துள்ளி மேளம் துள்ளிவா

பிச்சு திருமலா

காட்டுக்குறிஞ்சி பூ சூடி
கனவு கண்டு உறங்கும் பெண்

சிரிப்பதில்லை அவள்.
சிரித்தால் ஒரு பூங்குழலி
தளிர் அள்ளி குளிர் அள்ளி
நறுஞ்சுண்ணமும் மட்டிப்பாலும் சந்தனமும் சூடி
நடக்கும் பெண் அவள்.
அழுவதில்லை அவள்
அழுதால் ஒரு கருங்குழலி

சினப்பதில்லை
பெண் சினந்தால் வேங்கைப்புலி போல.
நாணம் கொள்வதில்லை
பெண் நாணம்கொண்டால் பெண்மான் போல.
மங்கலம்சூடிய பெண்ணே நீலிப்பெண்ணே
தாளம் துள்ளி மேளம்துள்ளி வா

இவள் பாடுவதில்லை
பாடிவிட்டால் தேன்மழை பொழியும்
ஆடுவதில்லை
ஆடநேர்ந்தால் தாழம்பூ விரியும்
மங்கலம்சூடிய பெண்ணே நீலிப்பெண்ணே
தாளம் துள்ளி மேளம்துள்ளி வா

[பாடல் உண்மையில் வயநாட்டில் தோன்றும் குந்திப்புழா என்னும் சிறிய ஆற்றைப்பற்றி வர்ணனை]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2021 11:34

ஆலயம், கடிதம்

ஆலயம், இறுதியாக… ஆலயம் ஆகமம் சிற்பம் ஆலயம் எவருடையது?

அன்புள்ள ஜெயமோகன்,

என் முதல் கடிதம்.

ஆலய விவாதத்தின் போது எழுந்த ஒன்று. தற்போதைய லெளகீக வாழ்க்கைக்கு ஆலயம் உணர்த்திராத ஒன்றை சாமியார்கள் உணர்த்தி விடுகிறார்களா?

ஆலயம் ஒரு செவ்வியல், தன்னைத் தானே முழுமைப் படுத்திக் கொள்ளக்கூடியது, என்ற ஒன்றாக இருந்தாலும், எந்தச்  செவ்வியலும் தன்னை அறியாமலே சமூகத்தின் நுண்ணுணர்வில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்கள் ஊர்க் கோவிலுக்கு வரும் தாத்தாக்கள் இயல்பாக “அடியே…ஏண்டி இப்படி…வாடி சீக்கிரம்…” என்றுப் பேத்தியை அழைப்பது போல் அம்மனை அழைப்பார்கள். அதே போல் ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான ஒன்றை அவர்களே கண்டு எடுத்துச் செல்வதை பார்த்திருக்கிறேன். அவை கீழிருந்து மேல் வரும் மழைத்துளி போல்  சமுதாயத்தை  உரசிச்  செல்வதாகப் பட்டது.

(ஒரு பக்கம்) இந்த  நுண்ணுணர்வு குறைந்து வருமானால் சமுதாயத்தில்  மாற்றம் /பாதிப்பு ஏற்படுமா?

(இன்னொரு பக்கம்) குலதெய்வங்கள் பெற்றிருக்கும் இடம் கூடப் பெறாமல் ஆலயங்கள் சென்று விடுமா? இந்தச் சூழலைப் பார்க்கும் போது புதுமைப்பித்தனின் சாத்தன் (சிற்பியின் நரகம்)  தான் நினைவுக்கு வந்தார். சிறிது நேரத்தில், அதில் வரும் சந்நியாசியை எண்ணிக்கொள்ளவா இல்லை பைலார்க்கஸை எண்ணிக்கொள்ளவா என்றுக் குழம்பியது.

ரமணன்

கோவில்பட்டி .

***

அன்புள்ள ரமணன்,

நாம் இளமையில் ஒன்றை எண்ணிக் கொள்கிறோம், நம் வாழ்க்கை நம்மில் தொடங்கி நம்மில் முடிவது என. அகவை முதிர, அனுபவங்கள் சேரச்சேர ஒன்றை அறிகிறோம், நம் வாழ்க்கை ஒரு தொடர். நாம் நேற்றிருந்தவர்களின் இயல்பான நீட்சி அன்றி வேறல்ல.

நேற்றிருந்தவர்களின் அனுபவங்களில் திரண்டு வந்த அறிதல்கள், அவர்களில் நிகழ்ந்த மெய்மைகள் இலக்கியங்களாக, கலைகளாக நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன. அவர்களின் உள்ளுணர்வுகள், அவர்களின் கனவுகள் படிமங்களாக, ஆழ்படிமங்களாக நம்மை வந்து சேர்ந்துள்ளன. அந்த படிமங்களின், ஆழ்படிமங்களின் தொகையைத்தான் நாம் ஆன்மிகம் என்கிறோம். ஆன்மிகம் அமைப்புகளாகவும் ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மாறும்போது மதம் என்கிறோம்.

தூயநிலையில் ஆன்மிகத்திற்கு மதத்தின் அமைப்பும் ஆசாரமும் நம்பிக்கையும் தேவையில்லை. ஆனால் ஆன்மிகம் மதத்தின் குறியீடுகள், படிமங்கள், ஆழ்படிமங்கள் வழியாகவே தன்னை நிகழ்த்திக்கொள்ள முடியும். தொடர்புறுத்திக் கொள்ள முடியும். ஆகவே ஆன்மிகம் எப்போதுமே மதத்தின் ஒரு பகுதியாகவும் மதத்தைக் கடந்ததாகவும் நிலைகொள்கிறது.

ஆலயங்கள் மதம், ஆன்மிகம் இரண்டுக்குமே உறைவிடங்கள். அவை நம் முன்னோர் உருவாக்கிச் சென்ற ஆழ்படிமத்தொகை. அவை அவர்களின் கனவுகளின் கல்வடிவம். இன்றிருக்கும் கல்வடிவுகளில் இருந்து அவை நம் கனவுகளுக்குச் செல்கின்றன.

ஆலயம் என்றும் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அதைவிட்டு விலகும்போது நாம் உணரும் இழப்பு மீண்டும் நம்மை அதைநோக்கிக் கொண்டு செல்லும். அதை முன்பிருந்தோர் அணுகிய அதே வழியில் நாம் அணுகாமலிருக்கலாம், நாம் அங்கே ஏதோ ஒருவகையில் சென்றுகொண்டேதான் இருப்போம்.

ஜெ

ஆலயம் அமைத்தல் ஆலயம்,காந்தி -இருகேள்விகள் ஆலயம் தொழுதல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2021 11:32

காந்தி டுடே, புதிய முகவரியில்

நண்பர் சுனில்கிருஷ்ணன் தொடங்கிய இணைய இதழ் காந்தி டுடே. அது பலருடைய கூட்டு உழைப்பால் தமிழில் காந்தியைப் பற்றி அறிவதற்குரிய முதன்மையான இணையப்பக்கமாக இன்று ஆகியிருக்கிறது. நடுவே சில தொழில்நுட்பச் சிக்கல்களால் அது நின்றுவிட்டிருந்தது. இப்போது புதிய முகவரியிலிருந்து வெளிவரத் தொடங்கியிருக்கிறது. காந்தியைப் பற்றி பல கோணங்களிலான ஆழமான பார்வைகளுக்காக இதை வாசிக்கலாம்

காந்தி டுடே 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2021 11:30

September 30, 2021

மௌனகுரு உரையாடல்

பேராசிரியர், நாடகச்செயல்பாட்டாளர் மௌன குரு அவர்களுடன் ஓர் உரையாடல். அவருடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். “ஒரு நாடகனின் வாழ்க்கை அனுபவங்கள்”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2021 21:37

தொடங்குதல்…

வணக்கம் ஜெ.

நான் மொட்டவிழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு இளம் எழுத்தாளர். என்னை நான் பெருமையாக நினைத்த தருணம் பல உண்டு. பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக, வேளாண்மை பட்டதாரியாக, ஒரு இசை ஆர்வலராக, பாடகியாக, வாசிப்பாளராக இவை எல்லாவற்றையும் நானே என்னில் இரசித்ததுண்டு. ஆனால் நான் என்னையே எண்ணி எண்ணி பெருமை கொண்ட தருணம் என்று ஒன்று உண்டு. அது நான் எனது முதல் கதையை எழுதி என் தோழர் தோழிகளுடன் பகிர்ந்த போது, நான் இதுவரை இரண்டு கதைகள் வரை தான் நகர்ந்துள்ளேன். எழுத தொடங்கியதும் இந்த மாதம் தான். எனது புத்தக வாசிப்பு தண்ணீர் தேசம் என்ற வைரமுத்துவின் படைப்பில் இருந்து துவங்கியது அது வளர்ந்து அவரின் சில படைப்புகள், கல்கியின் இரண்டு மூன்று நாவல்கள் என நின்று போனது.

முதன் முதலில் எனது கல்லூரி இறுதி ஆண்டில் ஆல் இந்தியா டூர் செல்லும் பொழுது எங்கள் வேளாண்மை விரிவாக்க துறை பேராசிரியர் சொல்ல உங்களின் அறம் என்ற புத்தகம் என் மனதிற்குள் சென்றது. ரயிலில் அவரது இருக்கைக்கு சென்று ‘அந்த புக் இருக்கா சார்’ என்று கேட்டேன்.’அவர் நா இன்னும் முடிக்கல நீ இதில் யானை டாக்டர் மட்டும் இப்போ படிச்சுட்டு குடு’ என்றார். நானும் அந்த பகுதியை மட்டும் அன்று இரவு இரயிலில் வெளிச்சம் உள்ள இடத்தை தேடி, உறங்குபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் படித்த அந்த நினைவும் அந்த யானை டாக்டர் என்னுள் தந்த உணர்வும் இன்றும் புத்தம் புதியதாய் அப்படியே இருக்கிறது.

அதன் பின் நான் என் கல்லூரி நண்பர்களுடன் Egalitarians என்ற அமைப்பின் மூலம் உங்களை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அமைப்பில் இணைந்த பின், என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி வைத்தப்பின் தான் நான் அறம் புத்தகம் முழுமையாகப் படித்தேன். அதாவது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு. இத்தனை நாள் எங்க கோமால இருந்தீங்களா என்று கேட்க வேண்டாம். கிட்டத்தட்ட அப்படித்தான். காரணம், எனக்கு எந்த ஒரு புத்தகத்தையும் அச்சிடப்பட்ட தாளில் படித்தால் தான் ஒரு திருப்தி என என்னுள் நான் போட்டுக்கொண்ட வேலி என்னை ஒரு நல்ல வாசகராக வளர்க்கவில்லை. அறம் புத்தகத்தை தொடர்ந்து உங்களின் வலைதளத்தில் சிறு கதைகளில் ஆரம்பித்து இன்று வெண்முரசின் முதற்கனலில் நிற்கிறேன்.

என் மன வேலியை உங்களுக்காகவே நான் உடைத்துக் கொண்டேன் ஜெ. உங்கள் படைப்புக் கடலில் நான் கால் மட்டுமே நனைத்து இருக்கிறேன். இன்னும் உங்கள் படைப்பில் பயணிக்கவே ஒவ்வொரு இரவும் சீக்கிரம் மறைந்து புது விடியலாய் தோன்றுகிறதோ என எண்ணி கொள்வேன். இதில் அதிசயம் என்னவென்றால் நான் இன்னும் ஒரு நல்ல வாசிப்பாளராக ஆகும் முன்னே உங்கள் கடல் நீர் என்னை எழுத்தாளராக மாற்ற துவங்கி விட்டது. இதுவே உங்கள் எழுத்து என்னுள் நிகழ்த்திய அற்புதம்.

நன்றி ஜெ.

உங்கள் பதிலுக்காக பேனாவோடு காத்திருக்கும்,

பட்லூ ( நீனா)

அன்புள்ள நீனா,

உங்கள் கடிதம் கண்டேன். நீங்கள் எந்த தொழில்தளத்தில் செயல்பட்டாலும் எழுத்து உங்களுக்கு அகவயமான விடுதலையை, இளைப்பாறலை, குன்றாத இன்பத்தை அளிக்கும் ஒன்றாக நீடிக்க முடியும். ஆகவே அதை கைவிடாது கொள்க.

இலக்கியம் எழுதுவதென்பது தொடர்வாசிப்பின் வழியாகவே நிகழமுடியும். ஏன் நிறைய வாசிக்கவேண்டும் என்றால் இலக்கியத்திற்குரிய நடை உருவாகி வரவேண்டும் என்பதனால்தான். நாம் குறைவாக வாசித்தால் சூழலில் இருக்கும் நடையே நம்முடையதாகிறது. அது ஒன்று, நம் வணிகஎழுத்துச் சூழலில் புழங்கும் அலங்கார நடை. அல்லது முகநூல்சூழலில் புழங்கும் நாட்குறிப்புநடை. இரண்டுமே இலக்கியத்திற்குப் போதுமானவை அல்ல.

இலக்கியத்திற்கு நீங்கள் உங்கள் நடையை கண்டடையவேண்டும். உங்கள் உள்ளத்திற்குள் ஓடிக்கொண்டிருக்கும் சொற்களுக்கு சமானமான நடை அது. அதை தமிழின் சிறந்த படைப்புக்களை வாசித்து, அவற்றின் மொழிநடை வழியாக மேலே சென்று, உங்கள் நடையை கண்டடைவதன் வழியாகவே நிகழும்.

அத்துடன் நாம் ஒன்றை எழுதும்போது அது முன்னரே எழுதப்பட்டிருக்கிறதா என அறியவேண்டும். எழுதப்பட்டதைத் திரும்ப எழுதக்கூடாது. எழுதப்பட்டதற்கு அப்பால் சென்று எழுதினால்தான் இலக்கிய மதிப்பு. அதற்கும் நாம் வாசித்தாகவேண்டும்.

இலக்கியநூல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன. என் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்னும் நூலை வாசித்தால் இலக்கியவாசிப்பு பற்றிய அறிமுகமும், நூல்பட்டியலும் கிடைக்கும். எழுதும் கலை என்னும் நூலில் எழுத்துமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அழியாச்சுடர்கள் போன்ற இணையதளங்களில் இலவசமாகவே இலக்கியப் படைப்புக்களை வாசிக்கலாம். நிறைய வாசியுங்கள். என்னுடைய தளத்தில் மிக விரிவான இலக்கிய அறிமுகங்கள் உள்ளன.

உங்கள் இரு கதைகளிலும் கற்பனைத்திறனும் வாழ்க்கைமேல் ஆழ்ந்த கவனிப்பும் உள்ளது. வாசிப்பிலும் எழுத்திலும் பயிற்சி எடுத்துக்கொண்டால் நீங்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக உருவாவீர்கள். வாழ்த்துக்கள்.

ஜெ

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் வாங்க எழுதும்கலை வாங்க சிறுகதை எழுதுவது- கடிதம் சிறுகதையின் திருப்பம் சிறுகதையின் வழிகள் சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2021 11:34

சாத்தானைச் சந்தித்தல்-கடிதம்

சாத்தானைச் சந்திக்க வந்தவர்

அன்புள்ள ஜெ

சாத்தானை தேடி வந்தவர் கட்டுரை வாசித்தேன். அருமையான கட்டுரை. பகடியுடன் இருப்பதனால் எளிதாக வாசிக்க முடிந்தது. உங்களை தேடிவந்த அந்தப் பையனை என்னால் அணுக்கமாகப் பார்க்கமுடிகிறது. ஏனென்றால் அவரைப் போன்றவர்களை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். வாயில் நுரைதள்ள பேசுவார்கள். பெரும்பாலும் அங்கே இங்கே கேட்டறிந்த வம்புச்செய்திகள். எதையுமே உண்மையா என்று ஆராய்ந்து பார்த்திருக்க மாட்டார்கள். ஒருமுறை கூகிள் செய்து பார்த்தால் தெரியும் செய்தியையேகூட பரிசோதனை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் எந்த இடத்திலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசுவார்கள்.

அந்தத் தன்னம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்றால் அவர்கள் தங்களைப்பற்றி வைத்திருக்கும் சில வகையான பாவனைகளால்தான். தங்களை அதிதீவிர முற்போக்கு என்றோ ’சாவுக்கடின’ இந்துத்துவா என்றோ  கற்பனை செய்திருப்பார்கள். அவர்கள் புழங்குவது அந்த வகையான சின்ன வட்டத்தில் என்பதனால் அந்தக் கற்பனை அப்படியே உடையாமல் பல ஆண்டுகள் நீடிக்கும். அதோடு அவர்கள் பேசிக்கொண்டிருப்பது யாரிடமென்பதும் முக்கியம். அவர்களின் சூழல் என்பது பெரும்பாலும் சும்மா சோறு சினிமா என்று வாழும் பாமரர்கள். எதைச்சொன்னாலும் ‘இருக்கும்போல, நாம என்ன கண்டோம்’ என்று தலையை ஆட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

இந்த அப்பாவிகள் நஞ்சைப்பரப்புபவர்களும்கூட. ஆனால் நீங்கள் சொல்வதுபோல இந்த அசடர்களை அசடர்கள் என்று புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வை ஒருவன் இயல்பாகவே பெற்றிருக்காவிட்டால் அவன் இலக்கியத்திற்குள் அறிமுகமாகியும் பெரிய பிரயோசனம் இல்லை. அவன் கொடிபிடிக்கவேண்டிய ஆள். அப்படியே இருப்பதுதான் நல்லது

அருண்குமார்

அன்புள்ள அருண்குமார்,

உண்மைதான். எனக்கு வரும் வாசகர்கள் இயல்பில் ஒர் அறியாமையை அல்லது நுண்ணுணர்வின்மையை அடையாளம் காணும் திறனை இயல்பிலேயே கொண்டிருப்பவர்கள்தான். நான் எழுதுவது இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் அபத்தத்தை சுட்டிக்காட்டவே.

ஜெ

***

அன்புள்ள ஜெ

சும்மா ஒரு வேடிக்கைக்காக இதை அனுப்புகிறேன். இது முகநூலில் ஒருவர் எழுதியது. [ஆளின் பெயர் படம் எல்லாம் அனுப்பியிருக்கிறேன்]

ஐயா எனக்கு உலகளவில் பெரும் பெருமை உண்டு… ஜெ.மோ போன்ற அற்ப வலதுசாரியை மும்முறை வன்முறை கொண்டு அறைந்தவன்… “முருகபூபதி” திருமண நிகழ்வில்…

அவன் காந்தியாரை தன் முகமூடியாகப் பயன் படுத்தும் அற்பன்…. விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஐந்து லட்சம் பரிசு உங்கள் மென்பொருளுக்கு ஏற்கிறீர்களா? எனக் கேட்டதும்….

ஆணியே புடுங்காதீங்க… “விலையற்றவன் தளையற்றவன் துரை” என நகைத்துக் கடந்தவன்…. அவன் அற்பன்… அவ்வளவே.

இதை எழுதியவரை நீங்கள் கேள்விகூட பட்டிருக்கமாட்டீர்கள் என்று சந்தேகமில்லாமல் தெரியும். ஆனால் என்னென்ன வகையான பாவனைகள் இங்கே உள்ளன என்று சொல்லத்தான் இதை எழுதுகிறேன்.  இந்த வகையானவர்களே முகநூலில் மிகுதி. இவர்கள் உருவாக்கும் பொய்தான் இங்கே நுரைபோல நிறைந்திருக்கிறது.

இவர்களின் மனநிலை என்பது தங்களைப் பற்றிய வீங்கிய அகந்தை. ஆகவே பிரபலங்களைப் பற்றிய பொறாமை. சாதித்தவர்கள் பற்றிய காழ்ப்பு. அவர்களைப்பற்றி அபத்தமான அவதூறுகளைப் பரப்புவது. ஆனால் அதை நம்பும் கும்பலும் அதேபோல பாமரர்கள்தான்.

சுந்தர்ராஜன்

***

அன்புள்ள சுந்தர்,

‘உலகளவில் பெரும்பெருமை கொண்ட’ இந்த ஆத்மாவை நான் எங்குமே பார்த்த நினைவில்லை. ஆனால் நான் இதைச் சொன்னால் அவரே நம்பமாட்டார். அவரே அவ்வாறெல்லாம் சொல்லிச் சொல்லி நிகர்உண்மையாக தனக்கே நிலைநாட்டி வைத்திருப்பார். இது உளச்சிக்கல் அல்ல, உளநோய்.

இது நடந்துகொண்டே இருக்கிறது. நானே பலமுறை எழுதியிருக்கிறேன். முன்பு ஒருவர் நான் அவரிடம் “என்னை எல்லாரும் திட்டுகிறார்கள்” என்று சொல்லி  அவருடைய தோளில் விழுந்து குமுறிக்கதறி அழுதேன் என ஒரு கட்டுரை எழுதித் திண்ணையில் அது பிரசுரமாகியிருக்கிறது. நான் அவரை நேரில் கண்டதே இல்லை. நாலைந்து கார்டுகள் எனக்கு எழுதியிருக்கிறார், அவ்வளவுதான். திண்ணை ஆசிரியருக்கு அந்த விஷயத்தை எழுதி அக்கட்டுரையை நீக்கினேன். அவர் உடனே அதை பதிவுகள் தளத்திற்கு அனுப்ப ,அதன் ஆசிரியரான மொண்ணை அக்கட்டுரையை உடனே பிரசுரம் செய்தது. அந்த தளத்துடன் என் உறவை முறித்துக் கொண்டேன்.

இன்னொருவர் நான் வல்லிக்கண்ணனுக்கு நிகழ்ந்த பாராட்டு விழாவில் ஆபாசமாகவும் திமிராகவும் பேசியதாக ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். நான் அவரை மட்டுமல்ல, வல்லிக்கண்ணனையே நேரில் பார்த்ததில்லை என மறுப்பு எழுதினேன். ”என் கண்ணால் நான் பார்த்தேன்” என அவர் ஆணையிட்டார். அப்போதுதான் நான் இந்த உளநோயை முழுமையாக அறிந்துகொண்டேன். இதிலேயே முருகபூபதி என எவரையோ சொல்கிறார். அப்படி எவரையும் எனக்கு அறிமுகமில்லை. கோணங்கியின் தம்பி முருகபூபதியை தெரியும், பழக்கமில்லை. ஆனால் இந்த ’சான்று’ எல்லாம் இவர் திட்டமிட்டுச் சொல்வது அல்ல. உளநோய் இப்படி மெய்நிகர் அனுபவங்களை மிக நுட்பமாக புனைந்துகொள்ளும் திறன் கொண்டது.

நான் கண்ட ஒன்று உண்டு, உளநோய்க்கு மற்றவர்களை பாதிக்கும் ஆற்றல் அதிகம். பொய்யைவிட தீவிரமாக அது மற்றவர்களால் ஏற்கப்படும்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

சாத்தானைச் சந்திக்க வந்தவர் பற்றி சொல்லியிருந்தீர்கள். நீங்கள் உங்களைத் தேடி வருபவர்களைப் பற்றிச் சொல்கிறீர்கள். நாங்களெல்லாம் இங்கே இலக்கியக் கூட்டங்களில் இப்படிப்பட்டவர்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களின் உலகமே தனி.

மூன்று ஆண்டுக்குமுன் சென்னையில் ஒரு கூட்டம். ஒரு பேச்சாளர் “ஜெயமோகனுக்கு தினமும் வாசகர் கடிதம் வருகிறது. பரவாயில்லை நல்லாவே எழுதறார்” என்றபின் நாடகீயமாக இடைவெளிவிட்டு “எனக்கெல்லாம் ஒரு லெட்டர்கூட வர்ரதில்லை” என்றார். அரங்கில் கைதட்டல்.

எனக்கு ஆச்சரியம். யார் அந்த பேச்சாளர் என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். இரண்டு கவிதைத்தொகுப்பு போட்டவராம். அபத்தமான ஆரம்பகட்ட கவிதைகள்.

நான் கூட்டம் முடிந்தபின் அவரிடம் “சரிங்க ஜெயமோகனுக்கு லெட்டர் வரலாம். உங்களுக்கு எதுக்குங்க லெட்டர் வரணும்?” என்றேன். அவர் ஒருமாதிரி பதறிவிட்டார். கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டன.

நான் நகர்ந்ததும் ஒரு நடுவயதுப் பெண் என்னை பிடித்துக்கொண்டார். “அவரு எவ்ளோ பெரிய கவிஞர் தெரியுமா? இலக்கிய ஊழலாலே அவரை யாருக்கும் தெரியல்லை” என்றார். அந்தப்பெண்ணும் கவிஞராம்.

இந்தச் சூழல்தான் நிலவுகிறது. முகநூல் பக்கம் வாருங்கள். எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்களெல்லாம் உங்கள்மேல் கடும் பொறாமையில் குமுறிக் கொண்டிருப்பதைக் காணலாம். “ஏய்யா பொறாமைப்படுறதுக்குக் கூட ஒரு அடிப்படை வேணாமா?” என்று எவரும் கேட்பதில்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர் சொந்தம் சாதிசனம் சார்ந்த ஒரு சின்ன வட்டம்தான் இருக்கிறது.

ஜெயப்பிரகாஷ், ஆவடி

***

ன்புள்ள ஜெயப்பிரகாஷ்,

ஆவடி என்று பெயருடன் கொடுத்துவிட்டேன். இல்லாவிட்டால் நீங்கள் இல்லை என்பார்கள். இப்போது பெயர் கொடுத்துவிட்டதால் முகநூலில் கண்டுபிடித்து வசைபாடுவார்கள். வசைபாடினால் பரவாயில்லை, பணம் கேட்டால் தப்பிவிடுங்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2021 11:34

சிரவணபெலகொலா, கிக்கேரி- சுபா

அன்புநிறை ஜெ,

சனிக்கிழமை அன்று சிரவணபெலகொலா சென்று வரலாம் என்று தோன்றியது. பெங்களூரில் இருந்து மங்களூர் செல்லும் கோமதீஸ்வரா எக்ஸ்பிரஸ்-ல் இரண்டுமணி நேரப் பயணம். இந்த ரயிலில்தான் சமீபத்தில் எழிலான நிலக்காட்சிகளையும் மேற்குத்தொடர்ச்சி மலைகளையும் காணும் வண்ணம் ஒரு பெட்டி இணைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் காண்பது போல அகன்ற ஜன்னல்களும், மேற்கூரையிலும் சாளரங்களும் கொண்ட பெட்டி (vistadome). அதில் ஒருமுறை மங்களூர் வரை செல்ல வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.

உடன் தோழியும் அவரது மகனும் இணைந்துகொண்டனர். உள்ளே நிலவும் மனநிலையை எவ்விதத்திலும் குலைக்காதவர்களின் அருகாமை பயணத்தை எளிதாக்குகிறது. ரயில் காலை ஏழுமணிக்குக் கிளம்பி ஒன்பது மணிக்கு சிரவணபெலகொலா சென்றடைந்தது. இதுவே நான் இங்கு வரும் முதல் முறை, மனம் எதிர்பார்ப்பின் முனையில் நின்று கொண்டிருந்தது. ஏரிகளுக்கும் தென்னந்தோப்புகளுக்கும் மேலே நீல வானில் கோமதீஸ்வரரின் முகம் தொலைவிலேயே தெரியத் துவங்கியது.

அந்தத் தலங்களுக்கு வரும் கூட்டம் மட்டுமே அந்த நிலையத்தில் இறங்கியதால் அவ்விடம் உடனே ஆளொழிந்து அமைதியானது. அழகான ரயில் நிலையம். அங்கிருந்த பதினைந்து பேரை ஏற்றிக்கொண்ட ஆட்டோவில் வாழைத் தோப்புகளும், தென்னந்தோப்புகளும், இடைஇடையே பச்சைபோர்த்திய ஏரிகளும் குளங்களுமாக அழகிய சிறு பயணம். பாகுபலி பெயர் கொண்ட கலை, அறிவியல் கல்லூரிகள், பின்னர் தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரி வளாகங்கள்.  கல்வி வளர்க்க அருகர்களின் பெயரை விட சிறந்தது எது!.

விந்தியகிரி அடிவாரத்தில் இறங்கிக்கொண்டு, படியேறத் தொடங்கினோம். காலை வெயில் தொடங்கிவிட்டிருந்தாலும் செப்டம்பரின் காற்றில் வெம்மை ஏறவில்லை. படிக்கட்டுகளின் ஒரு பகுதி செங்குத்தாக இருந்தாலும் முற்றிலும் கைப்பிடி கம்பிகள் போடப்பட்டிருப்பதால் சிரமம் ஏதுமில்லை. தொலைவில் இருந்தே தெரிந்து கொண்டிருந்த பாகுபலியின் முகம் அருகே சென்றதும் வேறொன்றாயிற்று. இடையில் இருந்த திரைகள், மறைப்புகள் அனைத்தும் அகன்று விட தோன்றும் நிர்மால்யம். வானின் பின்னணியில் தெரிந்த கள்ளமற்ற அவ்வுருவம் எண்ணங்களை அமைதி கொள்ளச்செய்தது. பேருருவனை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

காலடியில் உள்ள அனைத்தையும் சிறிதாக்கி விண் தொட எழுந்த உருவம். மண்ணில் பிறந்து விண்ணோக்கி எழுந்துவிட்ட அவரைப் போல, இப்புவி தன்னையும் எழுப்பிக் கொள்ள கொடிக்கரங்களை நீட்டுவது போலிருந்தது. நோக்கியிருக்கவே நோக்கற்ற அவ்விழிகளின் வெறுமையில் ஒரு புன்னகை தோன்றியது. மீண்டு வந்தேன். ஓரிருவர் நடந்து வந்துகொண்டிருக்க பெரும்பாலும் அமைதி. மஞ்சள் காவியுடை அணிந்த இரண்டு அர்ச்சகர்கள் கோமதேஸ்வரரின் பாதங்களில் நீர் விட்டு பூஜை செய்தனர். பாதங்களன்றி பிற அனைத்தும் வேறெங்கோ இருக்கின்றன. அனுதினம் வணங்கவும் அருகிலே அமையவும் மண்ணில் பதிந்திருக்கும் பாதங்களே எளிய உயிர்கள் மீது கருணை மிக்கதாய் தோன்றுகிறது.

வெளியே வந்து நிற்க, சுற்றிலும் விரிந்த நிலப்பரப்பைக் காண முடிந்தது. எல்லா திசைகளிலும் கண்ணுக்கெட்டியவரை பச்சை சமவெளி, ஆங்காகே விழிகள் என மின்னும் நீர்நிலைகள். வட்டங்களால் ஆன வானத்தை வரைந்து சென்றன பருந்துகள். விரிவெளி என்பதை கட்புலனால் உணர்ந்து கொள்ள இது மிகச்சிறந்த இடம். இதுபோன்ற இடங்களைப் பார்ப்பதற்கு அதிகாலையும் அந்தியும் சிறந்த தருணங்கள் எனத் தாங்கள் எழுதியதை எண்ணிக் கொண்டேன். இங்கு மீண்டும் மீண்டும் வருவேன் எனத் தோன்றுகிறது. அது இருஒளி இணையும் பொழுதுகளாய் அமையட்டும் என எண்ணிக் கொண்டேன்.

கிக்கேரி ஏரி

அடுத்ததாக சந்திரகிரி. ஏறுவதற்கு எளிதான மலை. காண்பதற்கு பல பஸதிகள். குளிர் நின்ற இளவெயிலை மேகம் மேலும் வடிகட்டி அனுப்பியது. பார்ஸ்வநாதரையும் ஆதிநாதரையும் நேமிநாதரையும் தவிர சுபர்ஸ்வநாதர், சந்திரப்ரபர் என மேலும் பல தீர்த்தங்கரர்களின் கருவறைகள். நண்பகலிலும் இருள் குளுமையென்றாகி நின்ற கருவறைகளில் தியான நிலைகளில் அமர்ந்த, நின்ற அருகர்கள். வாசலில் கூஷ்மாண்டினி, அம்பிகை என யக்ஷிகளும் சர்வாகன யக்ஷனும்.  சவுண்டராய பஸதி சோழர்களின் ஆலய அமைப்பது ஒத்திருக்கிறது. இதன் கருங்கல் கட்டுமானம் கங்கர்கள் காலத்தை சேர்ந்தது என்றும், உள்ளே கருவறையில் இருக்கும் நேமிநாதர் ஹொய்ச்சாளர் காலத்தில் அமைக்கப்பட்டு சுற்றிலும் ஆலயம் பின்னர் 12ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அங்கே படிகள் என்றே சொல்ல முடியாத அளவு மிகக் குறுகலான செதுக்குகள் வழியாக மேலேறிச் சென்றால் மேலே ஒரு பஸதி. நாகம் குடைபிடித்த பார்ஸ்வநாதரைச் சுற்றிலும் பல குளவிகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. தம்புராவின் சுருதி போல சுழன்று கொண்டே இருக்கும் அவற்றின் ஓசைக்கிணங்க நீலவெளியில் வட்டமிடும் பருந்துகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒன்றாகி அந்த வெளியைப் பார்ப்பது போல ஒருகணம் தோன்றியது. தொலைவில் எங்கோ மயில் அகவியது. வெளியேறினேன்.


ஒவ்வொன்றிலும் சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு சந்திரகுப்த பஸதி வந்து அமர்ந்தேன். பேரரசர் சந்திரகுப்த மௌரியர் அருகர் நெறி தழுவி அரசை துறந்து அவரது குரு பத்ரபாகுவுடன் இங்கு வந்து சல்லேகனை இருந்து உயிர்துறந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸதியில் கூஷ்மாண்டினி யக்ஷியின் வாயிலில் இரு கல்திரைகள் அதிநுட்பமான செதுக்குகளோடு கண்ணப்படுகிறது. சின்னஞ்சிறு செவ்வகங்களில் சந்திரகுப்த மௌரியர், பத்ரபாகு இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் சிற்பங்கள். தாங்கள் எழுதிய கல்லை மரம் போல செதுக்கும் ஹொய்ச்சால கலைவெளி என்றெண்ணிக்கொண்டேன்.

அங்கிருந்த பத்துப் பன்னிரண்டு கோவில்களில் அந்த உச்சி வேளையில் யாரும் இல்லை. காற்று சுழன்றாடி ஒவ்வொரு கோவிலிலும் உட்புகுந்து வந்தது. தடைகளின்றி விரிந்து பரவிய நாற்திசையில் வான் நோக்கி குவிந்தெழுந்த இரண்டு கல்குன்றுகள். அதில் பதிந்த எண்ணற்ற கால்தடங்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மெய்மை உசாவியர்கள் நின்ற இடம். திசைநோக்கி நின்ற அத்தனை விழிகள் முன்னே நிற்கும் உணர்வு.  பல நூறு கல்வெட்டுகள் இந்த மலையில் கிடைத்திருக்கின்றன. பலவற்றை அங்கேயே பாதுகாத்து, ஆங்கிலத்திலும் அது குறித்து பொறித்து வைத்திருக்கிறார்கள். குந்தகுந்தரின் திருவடியையும் பத்ரபாகு தவம் செய்த குகையையும் பார்த்துவிட்டு படி இறங்கி ஊருக்குள் சென்று உணவருந்தினோம்.

குந்துகுந்தர் காலடி

மாலை ஐந்து மணிக்கு ஹாசனில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தேன். நோய்த்தொற்று காலம் ஆதலால் முன்பதிவற்ற பயணங்கள் இல்லை. இன்னும் நேரம் இருந்தது. அருகே உள்ள பல கோவில்கள் குறித்து வாசித்திருந்தேன். எனவே மிக அருகே எந்த ஆலயம் வருகிறது எனத் தேடி கிக்கேரி பிரம்மேஸ்வரர் ஆலயத்தை அறிந்தேன்.

முதலில் தளத்தில் இக்கோவில் குறித்து இருக்கிறதா எனத் தேடியபோது கிட்டவில்லை. வீடு திரும்பிய பின்னர் ஹொய்ச்சால கலைவெளியில்-6 ஆம் பகுதியில் கண்டுபிடித்தேன். ஆட்டோ ஓட்டுனரிடம் அவ்வாலயத்தை குறித்து கேட்டபோது அதே ஊரில் வேறொரு அம்மன் ஆலயம் இருப்பதாக சொன்னார், இக்கோவில் அவர் அறிந்திருக்கவில்லை. கிக்கேரி ஏரிக்கு அருகே இருப்பதாக அடையாளம் கூறி சென்றோம்.

லட்சுமிநாராயணர் கிக்கேரி

வழியெங்கும் வயல்கள், மீண்டும் அனைத்திலிருந்தும் அகன்று மேலே தெரியும் பாகுபலி. நான் காலையில் வெகுநேரம் அவரை அரிஷ்டநேமியோடு சேர்த்தே எண்ணிக்கொண்டிருந்தேன். அரச உரிமையின் பொருட்டு சகோதரனோடு நிகழும் தனிப்போர், அதில் வெற்றி பெற்ற பின்னரும் அனைத்தையும் துறந்து வெளியேறுவது என மனது இரண்டையும் இணைத்து வைத்திருக்கிறது.

அந்த சிற்றூர் செல்லும் வழியெங்கும் தென்னந்தோப்புகள். எண்ணெய்க்கு வெயிலில் காயும் கொப்பரைகள். குவிக்கப்பட்ட தேங்காய் மட்டைகள். சில கிலோமீட்டர் முன்னதாகவே பரந்து விரிந்த கிக்கேரி ஏரி தொடங்கி விட்டது. வெயில் தெரியாத பசுமை. பசுமைக்கு நடுவே ஒரு செம்மண் கீற்று போல செம்போத்து பறந்து சென்றது.

மதனிகை, கிக்கேரி

ஊருக்குள் நுழைந்து ஓரிருவரைக் கேட்டு கோவிலை சென்றடைந்தோம். கோவில் பூட்டி இருந்தது. ஓட்டுநர் அர்ச்சகரை அழைத்து வரச் சென்றார். ஏரி நிச்சலனமாக வானை ஏந்தியிருந்தது. மறுகரையில் தென்னை வரிசை நீரில் மேகங்களுக்கு அருகே நின்றது. ஒரு வயதான பெண் அமர்ந்து துணி துவைத்தது கூட நீரில் பெரும் சலனங்களை ஏற்படுத்தவில்லை.

கோவில் திறந்ததும்தான் அது ஒரு கலைப் பொக்கிஷம் எனத்தெரிந்தது. ஹொய்ச்சாலர்களின் நுண்செதுக்குகளால் ஆன நகை போல வெயிலில் ஒளிர்ந்தது ஆலயம். திரிகுடாச்சல அமைப்பு, கிழக்கு நோக்கிய ஆலயம். பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. முதலில் கண்ணில் பட்டது பிற ஆலயங்கள் போல ஜகதி என்னும் சுற்றி நடந்து வரும்படியான உயர்ந்த அடித்தளம் இன்றி நேரடியாக தரைத்தளத்தில் ஆலயம் அமைந்திருந்தது.

பிரம்மா சரஸ்வதி, கிக்கேரி

வாயிலில் நேர் எதிரே நர்த்தன கணபதி. அருகிலேயே மீன்பொறியை நோக்கி வில்லுயர்த்திய அர்ஜுனன். சரஸ்வதியை மடியில் அமர்த்திய பிரம்மதேவர். பிரம்மனை வைத்தே சிலையை அடையாளம் கண்டேன், சரஸ்வதி மின்படை ஏந்தியிருப்பாள் என்று தாங்கள் எழுதியிருந்ததை பிறகுதான் மீண்டும் வாசித்ததும் நினைவு கூர்ந்தேன்.

இக்கோவிலில் திருமகளை மடியில் அமர்த்திய பெருமாள்,  உமையை மடியில் அமர்த்திய சிவன் என முப்பெரும் தெய்வங்களும் இணையோடு அமர்ந்த அழகிய சிற்பங்கள்.  விஸ்மயம் காட்டி, அக்ஷமாலை ஏந்தி, யானை மீது நிருத்ய நிலையில் நின்ற சிவனின் காலருகே சிவ குமாரர்கள் இருவரும் நிற்பது அழகு. சூரியநாராயணர், மஹிஷாஸுரமர்தனி, கோவர்தனகிரிதாரி, உக்ரநரசிம்மர் என அழகிய சிற்பங்களின் அணிவரிசை.

கோவிலின் முன் புறம் அமைந்திருக்கும் சுகநாசியில் கருவறைக்கு எதிரே மிக அழகிய நந்தி. நந்திக்கு பின்புறம் சூரியநாராயணர் சிற்பம். சப்தமாத்ரிகைகளுடன் வீணை ஏந்திய சிவனும், கணபதியும். கருவறையில் சிவலிங்கம், மேலே வாயிலில் மேலே பிரம்மன் செதுக்கப்பட்டிருப்பதால் பிரம்மேஸ்வரர் என்ற பெயர் என்றார் அர்ச்சகர். மையக் கருவறையில் பிரம்மேஸ்வரர் லிங்கரூபம். வலப்புறம் சென்னகேசவர், இடப்புறம் மற்றொரு லிங்கம். மாமயூரம் மீதிலேறிய முருகன், மேலே சிறு செதுக்காய் குழல்வாய்அழகன்.

நேரமாகிவிட்டது என ஆட்டோ ஓட்டுநர் வந்து நினைவுறுத்திச் சென்றார். கருவறைக்கு முன்னே உள்ள மண்டபத்தின் கூரையில் எண்திசை நாயகர்கள் நடுவே சிவம். மண்டபத்தின் நான்கு தூண்களிலும் நடன அசைவுகளில் பேரழகு கொண்ட மதனிகைகளின் சிற்பங்கள். கரிய பேரழகிகள்.

வாயிலின் வலப்புறம் தனியே ஒரு நான்கடி உயர காலபைரவர், அரியதொரு சிற்பம். கையில் ஏந்திய வெட்டுண்ட சிரத்தில் வழியும் குருதியை எம்பி உண்ணும் நாயின் பற்களில் குருதியின் சுவை தெரிகிறது. உடலில் துவளும் மண்டையோட்டு மாலை, உடுக்கை, சூலம் என உக்கிரத்தின் பேரழகு. ஆனால் சமீபத்தில் ஏதோ தூய்மைப்பணியில் எண்ணெய் பூசி, அதை நீக்குவதற்காக ஏதோ சோப்பில் ஊறவைத்ததில் வெண்மை ஆங்காங்கே திட்டுத்திட்டாய் படிந்து  கல் பாழாகிவிட்டது, எனில் சிற்பம் அதன் உயிர்ப்போடு எஞ்சுகிறது.

உமாமகேஸ்வரர்

இக்கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள அனேகமான சிற்பங்கள் எதற்கும் முகம் தெளிவாக இல்லை. ஆனால் அதுவரை விழிகள், நாசி, உதடு என எதுவுமே இல்லாத முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த உணர்வே இல்லை. ஒவ்வொரு சிற்பமும் பேசிக்கொண்டிருப்பதாகவே நினைவு. திருவை அணைத்த விஷ்ணுவின் கை அமைப்பில், அவன் மடியில் அமர்ந்து அவனைக் காதலோடு நோக்கும் திருமகளின் உடல் அமைப்பில், கோவர்தன மலையை இலையென எளிதாகத் தூக்கும் கண்ணனின் இடை ஓசிவில், கொற்றவையின் காலின் அழுத்தத்தில் என சிற்பங்கள் உயிர்ப்போடு பேசுகின்றன.

முகம் என்பதே ஒருவிதத்தில் திரைதானோ, முகம் மறைக்கும் அகத்தை உடல் வெளிப்படுத்திவிடக்கூடும் என்று தோன்றியது. சுற்றி நடக்க நடக்க அனைத்து சிற்பங்களும் ஒன்றாகி மீண்டும் ஒரு மாபெரும் நகையாகி அமைந்தது ஆலயம். அத்தனை உணர்வுகளும் பின்னகர்ந்து அமைதியான நிலை கூடியது.

கிக்கேரி

ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு உணர்ச்சி நிலையில் உறைந்த சிலைகளும் ஒட்டுமொத்த நோக்கில் மனதை அமைதிகொள்ளச் செய்கின்றன. உடலை முற்றாகத் திறந்து அனைத்தையும் துறந்து நின்ற அருகர்களின் முன்னரும் சிந்தை ஒழிகிறது. உடல் என்பதும் உணர்ச்சி வெளிப்பாடு என்பதும் கல்லில் என நிலைத்துவிடும் போது அகம் உணரும் அமைதியா அது? நரசிம்மரின் சினத்தையும் தேவியின் கனிவையும் மலரின் மென்மையயும் யானையின் வலிமையையும் கல்லில் வடித்த மானுடன் அசைவை, உயிர்ப்பை  காலமின்மையில் நிறுத்துவதன் வாயிலாக யோகநிலையை அடைகிறானா?

சரவணபெலகொலாவில் இருந்து திரும்பி வரும்போது அந்திச் சூரியன் கிணறுகளில், குளங்களில், ஏரிகளில் மிதந்து உடன் வந்தது. விழிமூட காலை முதல் கண்டதனைத்தும் தெளிந்து மேலெழுந்து வந்தது. திசையை ஆடையென அணிந்து வான்கீழ் நிற்கும் அருகர்களின் விரித்த விழிகளின் பார்வை கடந்த விழியின்மையும், கிக்கேரியின் முகமும் விழியுமற்ற தெய்வங்களின் கூர்த்த விரிநோக்கும் என அகம் நிறைந்திருந்தது. கணம் விலகா கல்விழிப்பார்வைகள். பார்வை விழிகள் சார்ந்தது என யார் சொன்னது!

மிக்க அன்புடன்,
சுபா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2021 11:34

கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,

வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால்  நம்பியும் எழுதியிருக்கிறார். பிற கவிஞர்களையும் கண்டு எழுதும் பண்பு அவருக்கும் உண்டு. தமிழில் இது அரிதான ஒரு பண்பே. ஷங்கர், சபரி நாதன், ஸ்ரீ நேசன், ஆகியோர் ஓரிரு கட்டுரைகள் என்னுடைய கவிதைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். முந்தைய தலைமுறை தமிழ்க் கவிகளிடத்தே இந்த பழக்கம் சுத்தமாக இல்லை. பிற கவிகள் பற்றி தேவதேவன் என்ன எழுதியிருக்கிறார்? தேவதச்சன் என்ன எழுதியிருக்கிறார்? என்று பார்த்தால் ஒன்றுமில்லை. ஆனால் டி.எஸ் .எலியட் பற்றி இவர்களிடம் நிறைய பேச முடியும்.

சிலர் தனிபட்ட முறையில் பாராட்டுவார்கள். அவை எடுத்துக் கொள்ள தகுந்தனவாக பெரும்பாலும் இருப்பதில்லை. எழுத்தில் என்று வரும்போது அவனும் வாழ்ந்தான் என்கிற உடனிருப்பே இருக்காது. இதனை குறையாகச் சொல்லவில்லை. சொல்கிறேன் அவ்வளவுதான். கல்யாணியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கும் வழக்கம் இருக்கிறது. கலாப்ரியா நாலாந்தரமானவர்களுக்கு முன்னுரைகளை வாரி வழங்கக் கூடியவர். முன்னுரைகளை வாரி வழங்குதல் சுயநலன் தொடர்புடையது என்பதே அனுபவம். ஞானக்கூத்தன் பாரதிபேரில் கொண்டிருந்த கசங்கல் என்பது திருவல்லிக்கேணியில் அவருக்கு இணையாக அவரும் இருந்தார் என்பதாலும் என விளங்கிக் கொள்ள வேண்டியது துரதிர்ஷ்டமானதும் அல்லவா ?

கவிதை என்றில்லை புனைவு பற்றியும் அதிகம் எழுத்தில்லை. மூச்சில்லை. பிறர் பற்றி  எழுதுவதில் தயக்கம் கொண்ட வேறு சமூகங்கள் உலகில் தமிழ் போலும் உண்டா? இருப்பே உணரப்படாதது போல கடக்கும் சமூகங்கள்? நானும் என் அளவிற்கு பிறர் பற்றி குறைவாக என்றாலும் கூட எழுதுகிறேன். அதனை பண்பாக கடைபிடிக்க முயல்கிறேண். ஒருவேளை சுரா பள்ளியில் இருந்து வந்ததால் அடைந்த பண்பா இது ? ஒரு வாரத்திற்குள்ளாகவே முகுந்த் நாகராஜன், ஆனந்த்குமார், போகன் சங்கர் மேலும் என்னை என எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட கவிதைகள் அனைத்துமே முக்கியமானவை. ஆனந்த்குமாரின் கவிதைகளின் அறிந்து கடக்கும் கால்களை அதிசயித்துப் பார்க்கிறேன். அடுத்து வரும் தலைமுறையின் நகர்வு, முக்கிய வரவு.

உங்களிடம் ஐந்திற்கும் அதிகமான முகங்களைக் கண்டு வருகிறேன். அதில் ஒன்று உங்களுக்குள் இருக்கும் கவிஞனின் முகம். கவியின் அகநெருக்கடிகளை ஒத்ததாக உங்கள் உரைநடை எழுதப்படுகிறது. சமீபத்தில் வெண்முரசில் யுத்தம் பற்றிய பகுதிகளை எழுதுகையில் அதிகம் போர்னோ பார்த்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். முதலில் திகைப்பாகவும், பிறகு அதில் அமைந்த உண்மை கவிஞனின் அகத்திற்கு நெருக்கமானது என்றும் தோன்றியது. நான் வீடுகட்டும் போது அதிகம் போர்னோ பார்த்தேன். ஏகதேசம் என்னைப் போன்ற ஒருவர் வீடு கட்டுவது ஒரு யுத்தமிடுதலுக்கு நிகரான ஒன்றே. சுரா எழுதுகிறவன் நேரடியாக வீடு கட்டும் வேலையில் ஈடுபடக் கூடாது என்றது ஏன் என்பது விளங்கியது. ஆள் வைத்தே செய்தேன். எனினும் மனம் கொந்தளித்து நுரைத்துத் தள்ளிற்று. போரிடத் தெரிந்தவனுக்கு விரோதிகள் இல்லை என்பதையும் அந்தகாலகட்டத்தில் பட்டறிந்தேன்.

நீங்களும் பல சமயங்களில் கவிஞனைப் போலவே உள்ளிலும், புறத்திலும், புனைவிலும் இருக்கிறீர்கள். ஆனால் கவிஞனிலிருந்து ஒட்டு மொத்தப்பார்வையால் விலகவும் செய்கிறீர்கள். எனக்கு உங்கள் படைப்புகளில் பரவச உணர்வை தருபவையாக கவிதையும், தத்துவக் கண்ணோட்டமும் என்பதைக் கண்டிருக்கிறேன். இது போல இன்னும் சில வேறுபட்ட முகங்கள் உங்களிடம் உண்டு. அடிப்படையில் நீங்கள் ஆழமான ஒரு கவி, ஆழுள்ளம் நிரம்பித் ததும்பும் கவி என்றே தோன்றுகிறது

என்னைப் பற்றி என்றில்லை தமிழ் நவீன கவிதையின் மொத்த உருவத்தையும் உங்கள் தளத்தை பின் தொடரும் ஒருவர் அறிந்து விட முடியும். நவீன கவிதையின் ஆகச்சிறந்த தொகுப்பாக வருமளவிற்கு சிறந்த கவிதைகளின் தொகுப்பு உங்கள்தளத்தில் உள்ளது. போகன் கவிதைகள் சமீபத்தில் நீங்கள் குறிப்பிட்ட கவிதைகளில்  அடைந்துள்ள மாற்றத்தையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். கவிதைகளை நெருங்கிப் பின் தொடராமல் இதனை அவதானிப்பது சாத்தியமே இல்லை.

என்னுடைய கவிதைகளை பற்றி நீங்கள் எழுதுகையில் அவை வாசகர்களிடம் விரைந்து சென்றுவிடுகின்றன. நேற்று இரவிலேயே தளத்தில் பார்த்துவிட்டு ஒரு வாசகர் எழுப்பி விட்டார். அப்படி நிகழ்வது எனக்கென்றில்லை எந்த கவிஞனுக்கும் முக்கியமானதே. அது எழுப்பும் ஊக்கம் அவன் தொடர துணைநிற்கக் கூடியது. பொக்கிஷம் போன்றது.

உங்களுக்கு எப்போதும் என் அன்பு,
-லக்ஷ்மி மணிவண்ணன்

துளிக்கும்போதே அது துயர்

கவிதையை அறிதல்

தீபம்- போகன் சங்கர்

மழை இருகவிதைகள்:போகன் சங்கர்

மொழியாதது

தீர்வுகள் – போகன்

ஏன் அது பறவை?

ஒரு கவிதை

அலைகளில் அமைவது

சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

பிறிதொன்று கூறல்

முன்னிலை மயக்கம்

துள்ளுதல் என்பது…

மதார்- பேட்டி

பறக்கும் வெயில்- சக்திவேல்

அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்

அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி

தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள்

மொக்கவிழ்தலின் தொடுகை

ஊடும்பாவுமென ஒரு நெசவு

இறகிதழ் தொடுகை

முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்

பழைய யானைக் கடை

கரவுப்பாதைகள்

சின்னஞ்சிறிய ஒன்று – கடலூர் சீனு

இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்

இசையின் வரிகள்

கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா

ரகசியச் சலங்கை

ஒரு செல்லசிணுங்கல்போல….

அலைச் சிரிப்பு

லக்‌ஷ்மி மணிவண்ணன்

லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்

விஜி வரையும் கோலங்கள்

இறகிதழ் தொடுகை

அய்யா வைகுண்டர் இதிகாசம்

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

கவிதைக்குள் நுழைபவர்கள்…

வெயில்

வெயில் கவிதைகள்

கள்ளமற்ற கவிதை

வெயில், நகைப்பு – கடிதம்

வெயில் கவிதைகள்

ஓர் ஆவேசக்குரல்

பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்

கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

பான்ஸாய்க் கடல்

ச.துரை -மேலும் நான்கு கவிதைகள்

கவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்

அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை

கண்டராதித்தன் கவிதைகள்

எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்

சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு

சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்

பவிழமிளம் கவிளிணையில்…

கவிதை வாசிப்பு- டி.கார்த்திகேயன்

ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி

விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி

விரலிடுக்கில் நழுவுவது

பெரு விஷ்ணுகுமார்

மறுபக்கத்தின் குரல்கள்

ஊட்டி- வி என் சூர்யா

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்

மார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)

சமகாலத் தமிழ்க்கவிதை-சாம்ராஜ்

ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

கரவுப்பாதைகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2021 11:32

நீலம், ஒலிவடிவில்

அன்புநிறை ஜெ,

கண்ணன் பிறந்த கருநிலவு நாள் தொடங்கி அனுதினமும் நீலம் வாசிப்புக்கெனவே காலை விடிந்தது, இரவு விரிந்தது. அதிகாலைகளும் பின்னிரவுகளுமே நீலம் வாசிப்பதற்கு உகந்த பொழுதுகள்  என உணர்ந்தேன். ஓசைகள் அடங்கிய பிறகே ஒலிப்பதிவு இயல்வது புறக்காரணம். இனிமை, தனிமை, மேலும் இனிமை, மேலும் தனிமை. இனித்திருப்பதற்கு தேவையான தனிமை. இனி என்ற சொல்லே இல்லாத நிலைகூடி இக்கணம் மட்டுமே என நிறைந்திருந்த பொழுதுகள், இனி வேறென்ன வேண்டுமெனும் இனிமை.

ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமேனும் வாசிக்க வேண்டுமென எண்ணியிருந்தேன். இன்றோடு சரியாக ஒரு மாதம், நீலம் வாசித்து நிறைவு செய்திருக்கிறேன். இன்னும் சில நாட்கள் நாளுக்கு ஒன்றென வலையேறும். இதில் வரிசையாகக் கேட்கலாம்.

நீலம் – முழுமையாக கேட்க 

வெண்முரசை ஒட்டுமொத்தமாக வாசித்த பிறகு ஒரு மனநிலை இருந்தது. இனிமேல் பிறிதொன்று வாசிக்கவோ, வாழ்ந்து பார்க்கவோ, அறிந்து கொள்ளவோ தேவை இல்லை என்பது போன்ற விலக்கம். அப்போது ஒருமுறை மீண்டும் நீலம் முழுமையாக வாசித்தேன். அதன் தொடர்ச்சியாக முதலாவிண்ணின் கண்ணன் பிள்ளைத்தமிழை வாசித்து முடியும் போது, ராதையாகி கல்விழியோடு அவன் குழலிசைக்கு காத்திருக்கும் தவம் இயல்வதுதான் எனத்தோன்றியது.

அதன் பிறகும் நாலைந்து முறை நீலத்தில் முழுவதும் அமிழ்ந்திருக்கிறேன். இம்முறை வாய்விட்டு நீலம் வாசித்தது வேறொரு அனுபவம். சொல்லும் இசையுமாகி, காமமும் யோகமுமாகி, ராதையும் கண்ணனும் கம்சனும் யசோதையும் நந்தனும் தேவகியும் வசுதேவரும் பூதனையும் திருணவிரதனும் வேதியர் குலப்பெண்ணும் மூதாயரும் வரியாசியும் அக்ரூரரும் நீலச்சிறுகுருவியும் அனைத்துமாகி அவனை அறிந்த அனுபவம். தாங்கள் நீலம் எழுதிய பேரனுபவ வெள்ளத்தில் சிறுதுளிகள் மேலே தெறிப்பதுவே தாளவியலாது இருக்கிறது. நீலம் வாசிப்பை எப்போதும் சொல்லாக்குவதில்லை நான். எப்போதும் எங்கோ ஒன்று குறைந்து விடுவது, அல்லது உணர்ச்சிகளை மிகையாக்கி சொல்லிவிடுவதுபோல உணரச் செய்யும். அல்லது மிக மிக அந்தரங்கமான ஒன்றை அம்பலத்தில் ஏற்றுவதன் தயக்கம் இருக்கும்.

இம்முறை இது ஒரு பயணம் என உணர்ந்தேன். இது உருவாக்கும் பித்தும் அதில் திகைத்து அலையும் திசையறியாத் துயரும், முட்டிமோதி அடையும் மின்னல்கண வெளிச்சங்களுமே இதன் கொடை என்றுணர்ந்தேன்.

வாசிப்பில் சில நாட்கள் ஒற்றை வரியில் ஆட்பட்டு நின்றன. ஒற்றைச் சொல், ஒற்றை வரி விதை கிழித்து வேர் பரப்பி கிளை விரித்து விழுதிறக்கி என் நிலம் மறைத்த நாட்கள் . சில பகுதிகள் முற்றிலும் தியான அனுபவமாகவே இருந்தன.

‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ – முதல் அடியில், முதற் சொல்லில், முதல் எழுத்திலேயே கூட முழுப்பொருள் முற்றமைந்து விடுகிறது காவியங்களில். அந்த ஒரு பொருளை நோக்கிய அகப்பயணம் நீலம். உலகறிந்து – என்ற ஒற்றைச் சொல்லாகவும் இதைத் திரட்டிக்கொள்ளலாம். உ என்ற உள்நோக்கிய ஒன்றைச் சுட்டும் முதல் ஒலி.

‘ஏனுளேன்?’ ராதை விழித்ததும் எழும் முதல் வினா. அந்த ஒற்றை வினாவாக மனம் இருந்த நாட்கள். ஏன் இங்குள்ளேன்? இம்மண்ணில் இவ்விதம் இப்பிறப்பு எதற்காக? ககன வெளியில் சின்னஞ்சிறு துகள். இதற்கெதற்கு இத்தனை அலைக்கழிப்புகள்? யார் காணும் மேடைக்கான நாடகம் இது? ஆயிரம் சிதல் சேர்ந்தெழுப்பும் ஒற்றை கோபுரத்தில் ஒரு மணற்பரல் தூக்கி அளித்து விட்டுச் செல்வதுதான் இவ்வாழ்வு எனில் எதற்கு தனி எண்ணம்? தனித்த ஆணவம்? நான் வேறு என்பதாக எதற்கு இந்த மயக்கங்கள்?  ஒவ்வொரு சொல்லும் எடை கொண்டு நாள் மீது பரவிய பொழுதுகள்.

“உன் புளிப்பும் துவர்ப்பும் மறைந்துவிட்டன தோழி. மதுரமாகி நிறைந்துகொண்டிருக்கிறாய்” என்பது போல நீலம் வாசித்த நாட்களில் முழுமுற்றாய் மதுரமாகி வழிந்தன சில நாட்கள். ஆம் மதுரம் மதுரம், வேறேதும் இல்லை. மனதும் உடலும் மொத்தமும் இனிதாக இருக்க, அதில் தோய்ந்திருந்ததென் அகம்.  மதுரமாகி நிறைகிறேன். என் சிறுகிண்ணத்து எல்லைகள் ததும்பி வழிகிறது. ஓசைகளற்ற தேன்பொழிவு. கலம் மேலும் விரிகிறது. ஒவ்வொரு துளியிலும் நிறைகிறது கலம், மேலும் ஒரு துளிக்கு இடம்காட்டி விரிகிறது அகம். நில்லாமல் ததும்பாமல் நிறைகிறது அமுதம்.

அவ்விதம் சில பொழுதுகள்.

அணிபுனைதல், காத்திருத்தல், கருத்தழிதல், கடத்தல், குவிதல், குலைதல், குமிழ்தல், அழிதல் என பிரேமையின் விரிநிலத்தில் செல்லும்தோறும் அனைத்தும் கரைந்தழிந்தது. வீணையாய் அதிர்கிறது அகம். ஏதோ ஒரு விரல் மீட்டிக் கொண்டே இருக்கிறது ஒற்றைத் தந்தியை. அதற்கு மேல் ஏதும் ராகமோ தானமோ பாடலோ இல்லை. விண்நோக்கி விரல் திறந்த ஷட்ஜம். முதல் ஸ்ருதியிலேயே நின்றதிரும் ஒற்றைத் தந்தி மீட்டல். இசை மதுரமாகிறது. அதுவே  உடலாகிறது. அடுத்த ஸ்வரத்தை மீட்டச் சொல்லி இறைஞ்ச முடியாத வீணை விரலின் கருணைக்கு காத்திருக்கிறது. ஒவ்வொரு சொல்லாலும் உருகியபின்னும் மிச்சமிருக்கிறது ஒன்று.

ஒற்றைச் சொல் ஆளும் கணங்கள் –  கள்ளப்பெருந்தெய்வம் எனும் ஒரு சொல்லே அகமாகி அமைந்திருந்த ஓரிரவு! தெய்வம் அறியாத ஆழங்கள் இல்லை, அதற்கும் விழிமறைத்து ஒளித்து வைக்கும் களவொழுக்கத்தில் நிற்கும் காதல் நிறைந்த அகம். அங்கும் நுழைந்துவரும் கள்ளன், அவனோ பெருந்தெய்வம். களவைக் கலையெனக் கற்பித்த கள்ளப்பெருந்தெய்வம்.

ஆயர்கள் கோகுலம் விட்டு விருந்தாவனம் குடியேறியதும் வெண்ணை வைக்கும் உறி கட்ட வேண்டிய இடத்தை நீலச்சிறுவிரல் சுட்டும். எங்கு ஒளித்து வைத்தாலும் உன் உள்ளுருகும் வெண்ணையெல்லாம் எனக்கே எனும்போது இங்கேயே வை நான் எடுத்துக்கொள்வதற்கு வசதியாக என சிறுவிரல் நீட்டும் நீலன்.  எங்கிருக்கிறாய் என்னவனே! எடுத்துக்கொள் என்றே ஏந்தப்பட்ட கலமாக ராதை. எங்கிருக்கிறாய் சிறியவனே! எடுத்துவிடுவாயா நீ எனும் அறைகூவலாகவே கம்சன்.  இரண்டையும் ஒரே புன்னகையோடு அள்ளிச் சூடிக் கொள்ளும் மாயன். இரு நுனியும் பற்றி எரியும் திரியில் ஒற்றைப் பெரும் ஒளிர்நீலச்சுடர்.  நீலம் என்பதே ஒன்றென இருப்பது தன்னை இரண்டெனக் காட்டி, ஒன்றை ஒன்றை முற்றறிந்து, முற்றளித்து, முற்றிழந்து மீண்டும் முழுமை என்றாவது.

“இங்குளேன்! ஏனுளேன்?” என்பதே ராதை விழித்ததும் அகத்தில் எழும் முதற்சொல். அங்கிருந்து தொடங்கி “உடல்கொண்டதனாலேயே ஓரிடத்திலமையும் விதிகொண்டிருக்கிறேன். விரிந்து எழுந்து இந்த விருந்தாவனத்தை நிறைக்கலாகுமா? உடைந்து சிதறி இந்த உலகெங்கும் ஒளிரமுடியுமா?” என்ற எண்ணத்தோடு நிலவிரவில் நிறைகிறாள் ராதை. அதுவே நீலத்தின் பயணம். “அவள் தேடியது எதை? கண்டடைந்து நிறைந்தது எதை?”  என அவள் குடியினரும் சுற்றத்தினரும் இன்னும் அறியவில்லை. இதைக் கண்டடைவது அவரவர் பயணம்.

அவளது முதல் கேள்வியில் இருந்து இறுதிக் கேள்வி வரை ஊற்றென ஊறிப் பெருகி நுரைத்துக் கொந்தளித்து விரிந்து படர்ந்து கடல் சேர்ந்து விண் ஏறுகிறது நீலம் எனும் காளிந்தி.

“பிரம்மன் படைத்தவற்றில் யுகங்களுக்கு ஒரு கனி மட்டுமே விண்ணை நோக்கி உதிர்கிறது.” அவ்விதம் உதிர்வது எப்படி?, அதற்காக “பிச்சியாவதென்ன, பேய்ச்சியாவதென்ன, இங்குள ஏதுமாவதென்ன” என்று அவளைப் போலவே உன்மத்தம் மனமெங்கும் நிறைகிறது.

மிக்க அன்புடன்,

சுபா

நீலம் – முழுமையாக கேட்க 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2021 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.