Jeyamohan's Blog, page 903
October 9, 2021
குறளுரை – கடிதங்கள்
ஜெ
தங்களின் குறளினிது உரையின் முதல் நாள் தவிர்த்து பின்ன இரு தினங்களும் பலவிதமான உணர்வெழுச்சியினை அளித்தது.முதல் நாள் உரையில் நான் குறை கூற எதுவும் இல்லையென்றாலும் அது எனக்கு உரையின் போது நீங்கள் சொன்ன நந்தியாக, என் மனத்தில் ஆசானிடம் இருந்து மாணவனுக்குள்ள இயல்பான ஒரு தடையை உண்டாக்கியது.
ஆனால், அதன் பின் நான் கண்டது சிவதரிசனம். ஆம் . என் தமிழ் ஐயாவை மிகச்சுலபமாக நான் மீண்டும் கண்டடைந்தேன். அவர் பெயர் ஆதிலிங்கம் நாடார்.கிட்டத்தட்ட எங்கள் ஊருக்குள் இரண்டு தலைமுறைக்கு (தந்தை மகன்) தமிழ் உரைத்த ஆசான். இன்று எனக்குள் எஞ்சியிருக்கும் தமிழ் ஆர்வத்திற்கும், சிற்றறிவுக்கும் ஆதி ஊற்று.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் நீங்கள் கையாண்டது அவரின் பணிபாணி. 1.குடும்ப நலன் விசாரிப்பு. 2.குறுங்கதை (பெரும்பாலும் வாழ்வில் இருந்து) 3.செய்யுள்/உரைநடை. வகுப்பறைக்குள் அவர் நுழைந்ததும் ஏதேனும் ஒரு மாணவனின் குடும்ப நலன் விசாரிப்பு. பெரும்பாலும் அவர்களின் தந்தையின் பெயரோடு மவன்/மவ, எனும் பின்னொட்டோடுதான் அழைப்பார்.
நான் அவருக்கு வெங்கட்டு தம்பி. வெங்கட கிருஷ்ணன் அவரின் முன்னாள் மாணவன். தந்தையில்லா மாணவர்களின் மீது எப்போதும் தனி கனிவு. அவர்கள் செய்யும் பிழைகளை பொறுத்துக் கொள்ளவே மாட்டார். உங்க அம்மாக்கு எவெம்ல பதில் சொல்றது? என்பார். அந்த தனிக்கனிவு, கவனக் குறைபாடு கொண்ட என் மீது என் அண்ணனின் பின்னொட்டுடன் விழும். ஆனால், ஒருபோதும் அது ஒப்பீடாக இருந்தததே /உணர்ந்ததே இல்லை. வித்தைக்காரர். விசாரிப்பு, பின்னர் குறுங்கதை கூறிக்கொண்டே செய்யுளுக்குள் நுழைவார். மாபெரும் தாவலை அனாயசமாக செய்வார்.சொல்லின் செல்வர்.
உங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் உரை அச்சு அசலாக அப்படியே இருந்தது.அவரின் நினைவு இதயத்தின் ஆழ் அடுக்குகளில் இருந்து விம்மலுடன் எழுந்தது. சென்ற ஆண்டு முழுமை கண்டவர். அவரின் நினைவுகளில் என்னை ஆழ வைத்ததற்கு நன்றிகள்
எனது கடிதத்தின் நோக்கம் உரைக்க விழைகிறேன். சுருக்கமாக, நீங்கள் கண்டிப்பாக உங்களின் உரை அமைத்த (அனுபவக்கதை , ஆப்த வாக்கியமாக குரல் ஒலித்த இடம்) பாணியில் ஒரு படைப்பை இயற்றி ஆக வேண்டும். இது அன்பான வேண்டுகோள்.அது நீங்கள் செய்யும் பெருங்கொடையாக இருக்கும். நீங்களே அதற்காக தேர்தெடுக்கப்பட்ட சிலருள் ஒருவர். பிழையிருப்பின் பொறுத்தருள்க ஆசானே.
அன்புடன், லெக்ஷ்மிநாராயணன்
திருநெல்வேலி
அன்புள்ள லெக்ஷ்மிநாராயணன்,
நான் பேசும் எல்லா பேச்சுக்களும் வெவ்வேறு வடிவங்களில் இருந்தாலும் இலக்கியத்தை நேரடியாக வாழ்க்கையுடன் இணைக்கும் தன்மை கொண்டவைதான். மேலும் எழுதவேண்டும். பார்ப்போம்
ஜெ
அன்புள்ள ஜெ
குறளுரையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீண்ட ஓர் உரையாடல் போலிருக்கிறது. எனக்கே எனக்காகச் சொல்வது போலவும் ஒலிக்கிறது. குறள் பேசிப்பேசித் தேய்ந்துபோன ஒன்று. அதற்கு இத்தனை அடுக்குகளும், இத்தனை பயிலும்முறைமையும் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. நாம் குறளை படிக்கும் விதம் சரிதானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. நீதிநூலாக அதைப்படிக்கும்போது நமக்கு வாழ்க்கையனுபவமே இல்லை. வெறுமே வரிகளாக படிக்கிறோம். கேலியும் கிண்டலுமாக ஆக்கிக் கொள்கிறோம். மனப்பாடம் செய்து மறந்துவிடுகிறோம். வாழ்க்கையனுபவம் வந்தபிறகுதான் குறளைப் படிக்கவேண்டுமா என்ன?
ஆனந்தி ராஜ்
அன்புள்ள ஆனந்தி,
குறளை மனப்பாடம் செய்யவேண்டும். அதற்கு இளமைப்பருவமே உகந்தது. அதன் வரிகள் பின்னாளில் நமக்கு வாழ்க்கையனுபவங்கள் நிகழும்போது இயல்பாக வந்து நம்முடன் இணைந்து கொள்ளவேண்டும், அப்போதுதான் அவை திறக்கும்.
ஜெ
Mani Ratnam’s musical tribute to Jayamohan’s epic work ‘Venmurasu’
When Rajan Somasundaram read ‘Neelam’ in the ‘Venmurasu’ series, everything changed. Neelam is so poetic and so addictive that I cannot stop thinking about setting it to tune. Again, you could pick any expression from ‘Neelam’ — it could be lust, it could be devotion, it could be the pain of rejection, or it could be an exaltation of love
Mani Ratnam’s musical tribute to Jayamohan’s epic work ‘Venmurasu’
October 8, 2021
இன்று வெண்முரசு – இசை வெளியீட்டு விழா
நண்பர்களுக்கு வணக்கம்,
வெண்முரசு நிறைவை கொண்டாடும் வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தயாரித்து வழங்கும் “வெண்முரசு கொண்டாட்டம்” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தங்களை அன்புடன் அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். (ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை இங்கு காணலாம்). இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெண்முரசின் பிரம்மாண்டத்தின் குறியீடாக உருவாகியுள்ள பிரம்மாண்ட இசைக்கோர்வையில் ஜெர்மன் பிராஸ் இசைக்குழு (German Brass Band), வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசை கலைஞர்கள் (Strings by North Carolina based Symphony musicians), சிதார் ரிஷப் ஷர்மா, புல்லாங்குழல் பரத்வாஜ், ஆஃப்கன் ருபாப் மீர் ஹமீதி ஆகியோர் பங்களித்துள்ளனர்.
வெண்முரசின் நீலம் நாவலில் இருந்து எடுக்கப்பட்ட அபார வரிகளை கமல் ஹாசன், சைந்தவி, ஶ்ரீராம் பார்ததசாரதி, ராஜன் சோமசுந்தரம் ஆகியோர் பாடியுள்ளனர்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இப்படத்தின் இசைத்தொகுப்பை வெளியிடுகிறார். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், ஜெயமோகன், கவிஞர் ரவிசுப்பிரமணியன், பாடகி சைந்தவி, இயக்குநர்கள் வசந்தபாலன், அப்பு பட்டாத்ரி, சித்தார் ரிஷப் ஷர்மா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
யூடியுபில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
அக்டோபர் மாதம் 9-ம் தேதி
இந்திய நேரம் மாலை 5:30 மணி
https://bit.ly/vmtribute
சிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா?
செக்காவ்இசை, ஓவியம் போன்ற ‘அர்த்தமில்லாத’ தூய கலைகளைப்பற்றியே பக்கம்பக்கமாக விமர்சனங்களும் ஆய்வுகளும் எழுதப்பட்டுள்ளன. இலக்கியம் கருத்தியல் உள்ளடக்கமும், உள்தர்க்கமும் உள்ளது. மொழியில் அமைந்துள்ளது, மொழி என்பது குறியீடுகளின் மாபெரும் தொகை. மேலும் இலக்கியம் எல்லா உலக விஷயங்களையும் பற்றிப் பேசுகிறது
எல்லாக் கலைகளையும் ‘தன்னியல்பாக’ அணுகுவது பலசமயம் போதாத ரசனையை உருவாக்கக்கூடும். பல காலத்துக்கு நம் ரசனை குறைப்பட்டதாக இருப்பதை நாம் அறியாமலும் இருக்கக் கூடும். பிரக்ஞைபூர்வமான பயிற்சி என்பது எல்லாக் கலைகளுக்கும் தேவையானது.
இலக்கியத்தை வாசிப்பதை பிரக்ஞைபூர்வமாக பயில்வது நல்ல விஷயம் என்றே நினைக்கிறேன். நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் ஆரம்ப வாசகர்களுக்காக விரிவாக இதைச் செய்ய முயன்றிருக்கிறேன். என்னுடைய சிறுகதைப்பட்டறைகள் எல்லாமே நல்ல சிறுகதைகளை வாசிப்பதற்குமான பட்டறைகள்தான். அவற்றைப்பற்றி நான் எழுதிய எழுதும்கலை வாசிப்பதற்கான பயிற்சிக்கையேடும் கூட
எல்லா நல்ல விமர்சனங்களும் அடிப்படையில் வாசிப்பதற்கான பயிற்சிகள் என்றே நினைக்கிறேன். ஆகவேதான் நான் பொதுவாக எழுத்தாளனை நோக்கி எழுதப்படும் விமர்சனங்களை தவிர்க்கிறேன். அவை வாசகனை நோக்கி மட்டுமே எழுதப்படவேண்டும்.
மாபசான்இந்தச் சொல்லாட்சிகளை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். பிரக்ஞை பூர்வமாக வாசிப்பதல்ல, பிரக்ஞைபூர்வமான வாசிப்புப் பயிற்சி என்பது. கதைகளை வாசிப்பதற்கு சிறந்த முறை அவற்றின் மாயத்துக்கு உங்களை ஒப்புக்கொடுப்பதே. கதைகேட்கும் குழந்தையின் எளிமையான கற்பனையுடன் கதைகள் முன் அமர்ந்திருப்பதே. வடிவம், உள்ளடக்கம், தத்துவம் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் ஒரு துண்டு வாழ்க்கை உங்கள் முன் வைக்கப்படுகிறது என உணர்ந்து அவ்வாழ்க்கையை அகத்தில் கற்பனை மூலம் விரித்தெடுத்துக்கொண்டு அதை நாம் நம்மளவில் வாழ்ந்து பார்ப்பதே. அந்தக்கதையை நம் வாழ்வனுபவங்கள் நம்முடைய சொந்த அகக்கனவுகளை மட்டும் கொண்டு மதிப்பிடுவதே. அதைச்செய்வதற்கு தடையாக ஆகும் பிரக்ஞைபூர்வமான வாசிப்பு ஆபத்தானது. கதைகளை நம்மிடமிருந்து மறைத்து வெறும் மூளைப்பயிற்சியாக ஆக்கிவிடும் என நான் அஞ்சுகிறேன்.
இதையே சங்கீதம் கேட்பதற்கும் ராம் சொல்வார் என நினைக்கிறேன். ஓவியத்திற்கும் இதுவே ரசனைமுறை
ஆனால் பிரக்ஞைபூர்வமாக வாசிப்பு பயிற்சி பெறாத ஒருவருக்கு பலசமயம் பல கதைகளுடன் ஒன்றமுடியாமல் போகும். அதற்கான காரணங்கள் சில உள்ளன.
1. நாம் ஒருகுறிப்பிட்ட முறையில் கதைகளை வாசித்துக்கொண்டிருப்போம். அந்த வாசிப்பையே ‘இயல்பான’ வாசிப்பு என்று நினைத்துக்கொண்டிருப்போம். இன்னொரு வகையான வாசிப்பைக் கோரும் கதைகளை இயல்பாக நாம் எதிர்ப்போம் அல்லது தவிர்ப்போம்.
பிக்விக்பேப்பர்ஸ் [டிக்கன்ஸ்] நாவலில் ஒரு இடம் வரும். பிக்விக் ஓவியம்பார்ப்பதைப்பற்றி சில உறுதியான கொள்கைகள் கொண்டவர். ஓவியத்தை அந்த சட்டகத்தில் இருந்து நான்கடி பின்னால்சென்று கைகளை குவித்து அதன் வழியாக பார்ப்பார். அது நிஜமான காட்சி போல தெரிந்தால் நல்ல ஓவியம். இதில் அவருக்கு அபாரமான நம்பிக்கை. ஆகவே அப்போது வர ஆரம்பித்த நவீன ஓவியங்களைக் கண்டு பீதி கொள்கிறார்
சில வருடங்களுக்கு முன்னர் நான் ’கிளி சொன்ன கதை’ எழுதிய போது பல வாசகர்கள் அவை ஏன் அத்தனை விரிவான தகவல்களுடன் இருக்கின்றன, சலிப்பூட்டுகின்றன என்றார்கள். நான் அவர்கள் யதார்த்தவாதக் கதைகளை வாசித்து பழகிய மனநிலையை அக்கதைகளுக்குப் போடுகிறார்கள் என்று சொன்னேன். யதார்த்தவாதம் என்பது ஒரு அக உண்மையை சொல்வதற்காக புற யதார்த்தத்தை கட்டமைக்கிறது. அந்த அக யதார்த்தத்துடன் தொடர்பற்ற புற யதார்த்தத்தை அது முன்வைப்பதில்லை.
ஆனால் இயல்புவாதம் [நாச்சுரலிசம்] முற்றிலும் வேறானது. அதுவும் அக யதார்த்த்தையே சொல்கிறது- எல்லா இலக்கியமும் அப்படித்தான். ஆனால் தனக்கு அக யதார்த்தமே இல்லை என அது பாவனை செய்கிறது. உண்மையில் என்ன இருக்கிறதோ அதை அப்பட்டமாக புறவயமாக ’அப்படியே’ சொல்வதாக அது நடிக்கிறது. அந்த கலை வடிவுக்கு அது தேவை. கிளிசொன்ன கதை அவ்வகைப்பட்ட கதை
அதை நான் விளக்கியபோது வாசகர்கள் அந்தக்கதைக்குள் வரமுடிந்தது. அதாவது ஒரு கலைப்படைப்பைப்பற்றிய சில எளிமையான பின்புலப்புரிதல்கள், சில வடிவப்புரிதல்கள் நம்முடைய வாசிப்பை பலமடங்கு அதிகரிக்கும். நம்முடைய தடைகளை களையும். ஆகவே அத்தகைய வாசிப்புப் பயிற்சி தேவையானதே
2. நம்முடைய வாசிப்பு பலசமயம் கவனக்குறைவானதாக இருக்கும். ‘நானெல்லாம் முழுசா படிக்கறதில்லை சார், சும்மா அப்டியே ஸ்கிப் பண்ணிட்டே போவேன். ஆனா கரெக்டா செண்டரை புடிச்சிருவேன்’ என்று சொல்லும் பல வாசகர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
ஏன், இந்த இணையதளக்கதைவரிசையிலேயே மூன்று பகுதிகளாக வெளியிடப்படும் கதைகளில் இரண்டாம்பகுதிக்கு வருகையாளர்கள் கொஞ்சம் குறைவாக இருப்பதைக் காண்கிறேன். கணிசமான வாசகர்கள் முதலில் கதையின் தொடக்கத்தை வாசிக்கிறார்கள். அப்படியே முடிவை வாசித்துவிட்டு கதைபடித்த திருப்தியுடன் சென்றுவிடுகிறார்கள் என ஊகிக்கிறேன்.
அந்த முட்டாள்கள் ஏன் கதை படிக்கவேண்டும் என்றுதான் ஐயமாக இருக்கிறது. இவற்றை வாசிக்கச்சொல்லி எவரேனும் கட்டாயப்படுத்தினார்களா என்ன? இது ஒரு உயர்தர பொழுதுபோக்காக, ஒரு அறிவுத்தேடலாக, ஒரு நிகர்வாழ்க்கையாக, ஓர் ஆன்மீக சாதகமாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கதையானது அதை முழுக்கக் கூர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்காகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. தள்ளித்தள்ளி வாசிப்பவர்கள் கதையை விட்டுவிட்டு அதன் பேசு பொருளை மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள்.
அப்படி கதைகளை மிகவும் பிழையாக வாசிப்பவர்கள் பலர் உள்ளனர். அப்பிழைகளை அவர்கள் அறிவதே இல்லை. அதற்கு பிரக்ஞைபூர்வமான ஒரு வாசிப்பு உதவலாம். ஒரு சிறுகதையின் வடிவம் எப்படிப்பட்டது, அது தன்னை தொடர்புபடுத்திக்கொள்ளும் முறை என்ன , ஒருகதையில் என்னென்ன விஷயங்களை கவனப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற கேள்விகள் முக்கியமானவை. எனக்கு ஒரு கட்டத்தில் சுந்தர ராமசாமியுடனான உரையாடல்கள் அதற்கு உதவின. ராம் செய்ய முயல்வது இதையே.
எளிமையாகச் சொல்லப்போனால் சிறுகதை முடிவில் உச்சம்கொள்ளும் ஒரு வடிவம். முடிவு திருப்பமாக இருக்கலாம், மௌனமாக அடிக்கோடு போட்டிருக்கலாம், கவித்துவமான ஓர் எழுச்சியாக இருக்கலாம். ஆக முடிவை வாசகன் மிக கவனிக்கவேண்டும். எந்த இலக்கியவடிவமும் வாசக இடைவெளிகள் வழியாகவே தன்னை வாசகனுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறது. வாசகன் நிரப்பியாகவேண்டிய இடைவெளிகள் அவை [பார்க்க நாவல் என்ற நூல். கிழக்கு பதிப்பகம்] கவிதை அதன் சொற்களுக்கு இடையேயான இடைவெளிகளால் தன்னை தொடர்புறுத்திக்கொள்கிறது. நாவல் அதை நிகழ்வுகளுக்கு இடையேயான இடைவெளிகளால், சிறுகதை முதன்மையாக அதன்முடிவுக்குப்பின் உள்ள மௌனமான இடைவெளியால்தான் தன்னைத் தொடர்புறுத்தும்.
சோற்றுக்கணக்கு கதை விடும் இடைவெளி கெத்தேல்சாகிப் அத்தனை பணம்கொண்டு போட்டும் தன்னை பார்க்கவேயில்லை, என் அன்னை இந்த கை மட்டுமே என கதைசொல்லி உணரும் இடத்துக்கும் ‘அடுத்தவாரமே ராமலட்சுமியை மணந்துகொண்டேன்’ என்று சொல்லப்படும் வரிக்கும் நடுவே உள்ளது. அங்கே பல விஷயங்கள் சொல்லப்படவில்லை. அவன் ஏன் அந்த முடிவை எடுத்தான் என. அதை ஊகிப்பதே வாசகனுக்கான சவால். அதைச் செய்யும்போதே வாசகன் கதையை அடைகிறான்.
அங்கே இப்படி சொல்லியிருக்கலாம். ‘நானும் ஒரு சோற்றுக்கணக்கில் அல்லவா இருக்கிறேன். நான் போடப்படாத சோற்றை கணக்கு வைத்துத்தானே மாமியை வெறுக்கிறேன். பிரியத்தை சோற்றுக்கணக்குக்கு அப்பால் சென்று பார்க்க எனக்கு ஏன் முடியவில்லை? நான் கெத்தேல் சாகிப்பை பார்த்தபோது என்னைப்பற்றி எண்ணி வெட்கினேன். ‘ இந்த வரிகளை எழுதியிருந்தால் வாசகன் தாவ வேண்டிய இடம் இருக்காது. கதைசொல்லி மனதில் நிகழும் அந்த கொந்தளிப்பையும் கண்டடைதலையும் அங்கே நின்று தானும் உணர்பவனே இக்கதையின் சரியான வாசகன்.
அக்கதை பற்றி வந்த பல நிபுணர் கருத்துக்களில் ராமலட்சுமி விவகாரம் தேவையற்ற திணிப்பு என்று சொல்லப்பட்டதை நாம் கவனித்திருக்கலாம். நிறைய சாதாரண வாசகர்கள் அந்த இணைப்பு புரியவில்லை என்று எழுதியிருந்தார்கள். அவர்களிடம் அங்கே ஒரு மௌனம் உள்ளது என்று மட்டும்தான் சொன்னேன். அவர்களுக்கு அதை உடனே தொட முடிந்தது.
இத்தகைய வடிவப்பிரக்ஞை இல்லாத காரணத்தால் அறிவுஜீவி பாவனையுடன் எழுதுபவர்கள் பலர் சிறுகதைகளைப்பற்றி அபத்தமான வாசிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருப்பதை நான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களின் மிகையான [பொய்யான] தன்னம்பிக்கை காரணமாக அவர்களுக்கு எவரும் எதையும் சுட்டிக்காட்டிவிடவும் முடியாது.
ஒரு சிறுகதையில் அதன் தலைப்பு, அதன் தொடுப்பு வாசகம், அதன் முடிப்பு வாசகம், அதன் மையச்சுட்டியாக அமையும் சொற்றொடர்கள், அது முன்வைக்கும் மையப்படிமம் ஆகியவை மிக முக்கியானவை. கெத்தேல் சாகிப்பின் கை ஆரம்பம் முதலே சொல்லப்படுகிறது. கதைமுழுக்க அன்னம் ,சோறு என்ற வர்ணனை வந்துகொண்டே இருக்கிறது
ஆகவே சிறுகதையை எப்படி வாசிப்பது என்பதைப்பற்றிய ஓர் அறிமுகப்பயிற்சி மிக மிக முக்கியமானதுதான். அதையே நான் பல சந்தர்ப்பங்களில் கட்டுரைகளில் செய்கிறேன். சிறுகதைப்பட்டறைகள் நிகழ்த்துகிறேன். ஆனால் இங்கே பெரிய தடை ஏற்கனவே உலக இலக்கியத்தில் கரைகண்ட பாவனையுடன் பல இளம் எழுத்தாளர்கள் உள்ளே வருவதுதான்.
அதேபோல ஒரு சிறுகதையை வாசிக்கும்போது என்னென்ன செய்யக்கூடாது என்பதும் முக்கியமானது. ஒரு சிறுகதை என்பது வாழ்க்கையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு துண்டு. அந்த மிச்ச வாழ்க்கையை ஊகித்து அந்தக்கதைக்குள் கொண்டு வந்து சேர்த்து வாசிப்பது மிகமிகப் பிழையானது. பலர் நுண்வாசிப்பு என்ற பேரில் இதைச் செய்வதுண்டு. கெத்தேல்சாகிப்புக்கு மனைவி மக்கள் இருந்தார்களா, அவர்கள் அவரது வியாபார முறையைப்பற்றி என்ன சொன்னார்கள், கெத்தேல் சாகிப் அரசாங்கத்துக்கு வணிகம் செய்வதற்கான வரி கட்டினாரா இல்லை சேவைக்கா என்றெல்லாம் கேட்டுக்கொள்ளலாம். ஆனால் அது சிறுகதை வாசிப்பல்ல. சிறுகதை காட்ட விரும்பும் உணர்ச்சிகளையும் தரிசனங்களையும் தவிர்க்கும் முறை அது.
சிறுகதைக்கு இரு சுட்டுச்சட்டகம் உண்டு. [ஃப்ரேம் ஆஃப் ரெஃபரன்ஸ்] ஒன்று கதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது. அதாவது கெத்தேல்சாகிப்பின் வாழ்க்கையைப்பற்றி கதையே அளிக்கும் தகவல்கள். இதை முதல்கட்ட சுட்டுச்சட்டகம் எனலாம். இரண்டாவது தளம் இந்த முதல்கட்ட தகவல்களில் இருந்து கதை அளிக்கும் உணர்ச்சிகளையும் கதை காட்டும் வாழ்க்கைத்தரிசனத்தையும் ஒட்டி வாசகர்கள் ஊகித்துக்கொள்ளச் சாத்தியமான ஒரு சுட்டுச்சட்டகம். கெத்தேல் சாகிப் வழக்கமான மதச்சடங்குகளுக்கு அப்பாற்பட்டவராக இருப்பார் என வாசகன் ஊகிக்கலாம். சமையலே அவரது தொழுகை என கதையே சொல்கிறது. ஆகவே அவர் ஒரு சூஃபி. பெரும்பாலான சூஃபிகள் வழக்கமான மதச்சட்டங்களுக்கு வெளியே நிற்பவர்கள். இந்த ஊகம் கெத்தேல் சாகிபை இன்னும் நுட்பமாக ஆராயவும் அவரை புரிந்துகொள்ளவும் உதவக்கூடியது.
இந்தவகையான பயிற்சிகள் தேவை என்ற உணர்வு இருந்தாலே நாம் மேலும் மேலும் நுண்ணிய வாசிப்பை நோக்கிச் செல்லமுடியும். அதேசமயம் வெறும் பயிற்சியினால் நாம் சிறுகதை வாசிப்பை உருவாக்கிக்கொள்ள முடியாதென்பதையும் அறிந்திருக்க வேண்டும். கற்பனை இல்லாதவருக்கு பயிற்சிகளால் பயனில்லை. ஆகவே வாசிப்புக்கான சூத்திரங்களை உருவாக்க முடியாது. வாசிப்பை வரையறைசெய்துவிடவும் முடியாது. வாசிப்பை பிரக்ஞைபூர்வமான செயலாகச் செய்யவும் முடியாது.
ஜெ
குழும விவாதத்தில் எழுதியது
மறுபிரசுரம் Mar 19, 2011
ஒளியும் நிழலும்
ஆலயத்திலோ மாதாகோயிலிலோ வழிபடுபவர்களை பார்க்கையில் இந்த வேறுபாட்டை சிலர் கவனித்திருக்கக்கூடும். சிலர் இயல்பாக ஒளியுள்ள இடத்தில் இருந்து வணங்குவதை விரும்புகிறார்கள். சிலர் இருளை, நிழலை, மறைவை. அவரவர் வாழ்க்கை வழியாக அங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள் என தோன்றுகிறது. அந்த ஒரு காட்சியில் இருந்து தொடங்கி பின்னோக்கிச்சென்று தன் தொடக்கத்தை கண்டடையும் கட்டுரை இது.
வடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
நோய் முடக்க சூழலுக்குப் பிறகு புதுச்சேரி வெண்முரசு கூடுகை இனிதே மீண்டும் துவங்கியது. சிறப்பு வருகை, வாசகர் சென்னை புத்தகக்கடை செந்தில் அவர்கள். அவரைக் கண்ட கணமே ஓடிச்சென்று இறுக அணைத்துக் கொண்டேன். அறிமுகமான முதல் வார்தையிலேயே வெண்முரசு உரையாடல் துவங்கி விட்டது.
நீண்ட நாட்கள் கழித்த நட்பு கூடல், வெண்முரசுக்கான புதிய வாசகர் வருகை எல்லாம் கூட ஹரிக்ரிஷ்ணன் மிகுந்த உற்சாகம் அடைந்தார். வழமை போல இரவு 8.30 வரை தடத்தைவிட்டு எங்கும் விலகாமல் விவாதம் நிகழ்ந்தது. செந்தில் பேசுகையில் இரண்டு அத்தியாயங்களிலும் நிகழும் பல்வேறு உணர்ச்சிமிக்க தருணங்களை அணுகி பேசினார். அதன் தொடர்சி வெண்முரசு நெடுக எந்தெந்த சந்தர்ப்பங்களில் எவ்வாறு வருகிறது, எவ்வாறு மாற்றம் அடைகிறது என்றெல்லாம் உற்சாகமாக பேசினார்.
தோத்தாத்ரிதிருதுராஷ்டிரரின் பெருந்தன்மை வெளிப்படும் தருணம் பேசப்படும் போது, எல்லோருமே உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்தோம். நிகழ்ச்சி நிறைகையில் ஹரிக்ரிஷ்னன் அவர்கள் செந்திலுக்கு சிறிய பரிசு ஒன்று வழங்கினார். எல்லாம் இனிதே முடிந்து கலைகையில், செந்தில் ஹரிக்ரிஷ்ணன் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்.
செந்தில் தனது டூ வீலரிலேயே சென்னையிலிருந்து வந்திருந்தார். ஆகவே இரவுப் பயணம் தேவையில்லை, அருகே திருவாண்டார்கோயில் தான் தாமரைக்கண்ணன் வீடு தங்கி காலை கிளம்புங்கள் என்று நண்பர்கள் மட்டுருத்த, செந்தில், சிதம்பரம் அதியன், நான், மூவரும் (அவர் வீட்டுக்காரம்மா அம்மா வீடு போயிருக்கிறார்) தாமரை வீட்டில் இரவு தங்கினோம்.
தோத்தாத்ரிஇரவு 2.30 வரை அரட்டை. கொஞ்ச நேரம் சாண்டில்யன், மிச்ச நேரம் வெண்முரசு. இடையே நான் எதற்கோ ‘ஜெ என்ன சொல்வாருன்னா’ என்று துவங்க, சார்…ஜெ சார் அப்படி சொல்லுங்க என்று திருத்தினார் செந்தில். சரிதான் என மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன்.
தாமரை வித விதமான கேள்விகள் வழியே செந்திலை தொடர்ந்து பேச வைத்துக்கொண்டே இருந்தார். செந்திலை மதம் மாற்ற இருவேறு மத அமைப்புகளை சேர்ந்த போதகர்கள் அவ்வப்போது வந்து எவ்வாறெல்லாம் தொடர்ந்து பேசி அவரை கேன்வாஸ் செய்வார்கள் என்பதை கிட்டத்தட்ட மோனோ ஆக்ட்போல சென்னைத் தமிழில் செய்து காட்டினார்.
தோத்தாத்ரிஅவருக்கு பிடித்த நடிகர்கள் இருவரில் அடுத்தவர் கமல், முதல்வர் சிவாஜி. அதில் பிடித்த படம் படித்தால் மட்டும் போதுமா. “நெசோ தெரியசோலோ அவ்ளோதான்… சிவாஜிக்கு பேஜாரா பூடும்” என்ற ரீதியில் சென்னை ஸ்லாங் இல் அவர் பேசிக்கொண்டே போனதை கேட்டது தனி இன்பம்.
இரவு இரண்டரைக்கு தூங்கி, அதிகாலை ஐந்து முப்பதுக்கு விழித்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் உரையாடலை தொடர்ந்தோம். குறிப்பாக அஜிதனை ஜெ யின் மகன் என்று தெரியாமல் உங்க பேர் ஜெயமோகன் எழுதின விஷ்ணுபுரம் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பேருங்க என்று அஜிக்கே அவர் அறிமுகம் செய்து வைத்த தருணத்தை சொல்கையில் சிரித்துத் தளர்ந்தோம்.
தோத்தாத்ரிஅப்படியே காலை தேநீர் அருந்திவிட்டு சிரிக்க சிரிக்கப் பேசியபடியே ஒரு காலை நடை. புதுவை அருகே உள்ள திருபுவனை ஊரில் சும்மா பேச்சுக்கு முக்கோணம் என வரைந்தால். ஒரு முனை திருவாண்டார் கோயில். மறு முனை வீர நாராயண விண்ணகரம் எனும் தோதாத்ரிநாதர் கோயில். கீழ் முனை குந்தங்குடி மகாதேவர் கோயில். நடுவே மிகப்பெரிய ஏரி (கோக்கிழாரடி பேரேரி).
இந்த திருபுவனை நகரின் முந்திய பெயர் திருபுவனமகாதேவி சதுர்வேதி மங்கலம். முதலாம் பராந்தக சோழன் அவர் முதல் மனைவி பெயரில் அமைத்த ஊர். அவரது இரண்டாம் மனைவி (கோக்கிழாரடி) வெட்டிய ஏரி. மூன்று அழகிய சோழக் கலை மேன்மைகள் மத்தியில் இன்றும் வாழும் சோழக் கொடையாக அந்த ஏரி.
தோத்தாத்ரிதாமரை வீட்டிலிருந்து நடை தொலைவில் திருவாண்டார் கோயில். காலை நடை கோயில் வாசலில் முடிந்தது. ஊருக்கு கோயிலுக்கு வடுகூர் என்ற பெயரும் உண்டு. மூலவர் வடுகூர் நாதர், அல்லது பஞ்சனதீஸ்வரர். இறைவி திரிபுர சுந்தரி. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்.
ராஜகோபுரம் அற்ற வாயில் கடந்தால் வலதுபுறம் சிறிய வடிவில் வடுக பைரவர் சந்நிதி. கோவிலை சுற்றி வர, வெளிப் பிரகாரத்தின் இடதுபுறம் வலம்புரி விநாயகர் சந்நிதி. அது நிற்கும் தளத்தில் கல்வெட்டில் திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் எனும் பெயரை தாமரை வாசித்துக் காட்டினார்.விமானத்தில் வியாசர் சொல்ல சொல்ல பாரதம் எழுதும் விநாயகர் படிமை.
தோத்தாத்ரிகோயில் மையமாக தஞ்சை பெருவுடையார் கோயில் போன்றதே ஆன சிறிய சுதை விமானம், அரிய வடிவிலான துர்க்கை படிமைகளை கண்டேன். பிரகாரம் சுற்றி வர வலது புறம் முருகன் சந்நிதி. வடுகூர் கந்தன் மீது அருணகிரிநாதர் பாடிய கவியை தாமரை மிக அழகாக பாடினார். கோயிலில் முதல் பூஜைக்கான ஏற்பாடுகளில் இளம் அர்ச்சகர் சமஸ்க்ருத ஸ்லோகங்களை உரத்து முழங்கியபடி ஈடுபட்டிருந்தார்.
அவர் சற்றே ஓய்ந்த தருணம், சுவரில் கண்ட, இந்த தல இறைவன் மீது திருஞானசம்பந்தர் பாடிய தேவார பதிகத்தை செந்தில் உரக்க வாசித்தார். முதல் சுடராட்டின் வழியே இறைவன் இறைவி அருள் பெற்று வெளியேறி மீண்டும் கோயிலை சுற்றி வந்தோம்.
வடுவூர்குறைவான ஆனால் மிக அழகிய சிற்பங்கள். அழகிய பிட்சாடனர். நண்பர் பிட்சாடனர் தோளில் ஏதோ மூட்டை தொங்குதே அது என்ன என்றார். பிட்சாடனரும் கங்காளரும் பார்க்க ஒரே போல இருந்தாலும் கங்காளர் கையில் கங்காளம் இருக்கும். பிட்சாடனர் இடது மேல் கையில் எலும்பில் செய்த கட்வாங்கம் இருக்கும். அதை தோளில் போட்டிருப்பார். அதன் முனையில் தொங்கும் மூட்டை உரிக்கப்பட்ட விஷ்வக்சேனர்.
அழகிய தட்சிணா மூர்த்தியை கடந்து லிங்கோத்பவர் படிமத்தை காட்டி செந்திலுக்கு அப்படிமத்தின் கதை சொன்னேன். ”வெண்முரசுல வருதுங்க இதுவும்” என்றார் மகிழ்ச்சி பொங்க.
துர்கை கோஷ்டத்தின் இரு புறமும் இடது புறம் சிவன் உமையுடன் நிற்கும் ரிஷபநாதர். வலது புறம் சிவன் உமையுடன் கலந்து நிற்கும் அர்த்தனாரி ரிஷபநாதர். இவை போக, பிட்சாடனர், காலாந்தகர், யோகீஸ்வரர், ராவணனை தன் வால் கொண்டு கட்டிப்போட்டுவிட்டு சிவ பூஜை செய்யும் வாலி என ஆங்காங்கே கோயில் தள ஆதிட்டான பட்டி நெடுக கையளவேயான அழகிய புடைப்பு சிற்பங்களின் வரிசை. சுற்றிச் சுற்றி வந்தோம்.
வெளியேறி தேநீர் கடை வாசலில் அரட்டை தொடர, நெடு நேரம் ஆகிவிட்டதால் செந்தில் விடைபெற்றுக் கிளம்பினார். ஒவ்வொருவராக கட்டி அணைத்து விடை (தாமரைக்கு கூடுதலாக ஒரு முத்தம்) பெற்றார். அவர் தூரம் சென்று மறைகயில் அவரது கள்ளமின்மையின் நறுமணம் எங்களுடன் தங்கிவிட்டது போலும் ஒரு மகிழ்ச்சி.
வடுவூர்அதியனும் சிதம்பரம் நோக்கி பேருந்து ஏற, இடைவெளியில் காளான் சிறுகதை புகழ் விஷ்ணுவும் திருமாவளவனும் வந்து இணைந்து கொள்ள, நேரம் உச்சி வெயில் நோக்கி நெருங்கி கொண்டிருக்க, எங்கள் அடுத்த இலக்கான தோதாத்ரிநாதர் கோயில் நோக்கி விரைந்தோம். கதவை பூட்டுவதற்காக இழுத்த நிர்வாகியை குறுக்கே விழுந்து தடுத்தோம்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்தான், எனினும் இப்போது கொரானா அரசு வழிகாட்டு விதிகளின்படியே கோயில் செயல்பாடுகள் நிகழ்கிறது என்பதால் உரிமை கொண்டு எதையும் கேட்க முடியாது. நிர்வாகி “தப்பா எடுத்துக்காதீங்க ஐஞ்சே நிமிஷம்தான்” என்றபடி மூன்றடி அகலம் மட்டும் கதவை திறந்து விட்டார்.
வடுவூர்தாமரை என் பின்னாலேயே வாங்க என்றபடி, கோயில் சுற்றிலும் இருந்த கையளவேயான ராமாயண கதை பட வரிசையை, பாகவத கதை வரிசையை ஒவ்வொன்றாக காட்டினார். புருஷாமிருகம் புடைப்பு சிற்பம் அருகே உள்ளங்கை அகல விமான புடைப்பு சிற்பம் ஒன்றை காட்டி இதை நியாபகம் வெச்சிக்கங்க என்றுவிட்டு, வர மங்கை நாயகி சமேத தோதாத்ரிநாதர் சன்னதி நோக்கி உயரும் படிக்கட்டை காட்டினார்.
யானைக் கொட்டட்டியில் யானைகள் செய்யும் களேபரம். ஒரு யானையின் அரைக்குள் ஒருவன் தலை சிக்கிக்கொள்ள, சுற்றிலும் நடன மங்கைகள் ஆட்டம் உறைய அதை சிரித்தபடி நோக்கி நிற்கிறார்கள். முதலாம் பராந்தகன் எடுப்பித்த மிக அழகிய சோழர் கோயிலை நேரமே இன்றி மின்னல் வேகத்தில் சுற்றி வந்தோம். அதை விட வேகத்தில் பெருமாளை சேவித்து விட்டு, கோயிலை பிரிய மனமின்றி வெளியேறினோம்.
வடுவூர்குந்தங்குடி மகாதேவர் கோயில் மூடி இருந்தாலும் வெளியே இருந்து பார்ப்போம் என்ற முடிவுடன் சென்றோம். வழியில் வாழ்வில் முதன் முறையாக நடுத்தெரு நாராயணனை கண்டேன். வெறுமனே தெரு முனையில் ஒரு கூரையின் கீழ், கம்பி கூண்டுக்குள், ஒரு 10 அடி நீள அரங்கர் படுத்திருந்தார். கால் மாட்டில் 7 அடி உயர கருடாழ்வார் நின்றிருந்தார். பாம்பணை அற்று வெறுந்தரையில் ஒருக்களித்துப் படுத்திருந்தால் அப்படி பெருமாளை பார்ப்பதற்கு ரொம்ப பரிதாபமாக இருக்கும் என்று இன்றுதான் அறிந்தேன். சரி விடு உனக்கு ஒரு காலம் வராமலா போகும் என்று ஆறுதல் சொன்னேன். கரியவன் சூடிய மயிற்பீலி “வந்துட்டாலும்” என்று முனகியது.
வடுவூர்கிளம்பி குந்தங்குடி சென்றோம். தொல்லியல் களம்தான் எனினும் எண்ணியவாறே பூட்டி இருந்தது. தாமரை பார்த்து வைத்துக் கொள்ள சொன்ன கையளவு விமான புடைப்புசிற்பம் இங்கே கோயிலாக எழுந்திருந்தது. அழகிய கருங்கல் கோயில். விஷ்ணு “வேலி தாண்டி குதிச்சிடுவோமா” என்றார். “அவ்ளோ கலை தாகம் வேண்டாம் இன்னொருநாள் வருவோம்” என்று தாமரை முடித்து வைக்க, புறப்பட்டோம்.
வழியில் தாமரைத் தடாகம் ஒன்று கண்டோம். அங்கிருந்து (அருகே சோழர் கால நவ கண்ட சிற்பம் அடங்கிய சப்த மாதா கோயிலொன்று பூட்டிக் கிடந்தது) சற்று நேரம் உரையாடினோம். வெளியேறி ஐஸ்க்ரீம் உண்டு அங்கேயே நின்று நீண்ட நேரம் உரையாடி விட்டு, பிரிய மனமே இன்றி அவரவரும் அவரவர் இல்லம் மீண்டோம். கடந்தன தேனில் தோய்ந்த இரு தினங்கள். அடுத்த சனி ஞாயிறு கோவை. நண்பர்கள். வெண்முரசு.பயணம். வரும் இனிமைகள் காத்திருக்கின்றன.
கடலூர் சீனு
எழும் இந்தியா-ஆவணப்படம்
அன்புள்ள ஜெ
நலம் தானே?
டிஸ்கவரி பிளஸ் காணொளி இணையத்தில் ‘India Emerges a Visual History’ என்ற தலைப்பில் மூன்று பகுதியாக வெளியீட்டு இருக்கிறது.
இதுவரை வெளிவராத பல காணொளிகளை இணைத்துள்ளாதாக கூறுகிறார்கள். என்னை பொருத்தவரை எல்லா இந்தியா குடிமகங்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பொக்கிஷம். அருமையான தொகுப்பு, நடுநிலையுடன் எல்லா பக்கங்களையும் அலசி ஆராய்கிறது.
நான் என்னுடய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு நல்லது (தபால், தந்தி, புகைவண்டி, இப்படி பல) தான் செய்துள்ளதாக நம்பியிருந்தேன், தங்களுடய பதிவுகளை படித்தவுடன் தான் அவர்களுடய இரண்டு பக்கங்களையும் பார்க்க தெரிந்தது. ‘உப்பு வேலி’ ஒரு திறப்பு.
இந்த காணொளி பார்ப்பதற்கு கட்டணம் கட்ட வேண்டும். ஒரு மாத சந்தா செலுத்தி பார்க்க கண்டிப்பாக பரிந்துரைக்கிறேன். மற்ற சினிமா சம்பாதமான காணொளி சந்தாக்களை பார்க்கும் பொழுது இது குறைவு தான்.
https://www.discoveryplus.in/show/india-emerges-a-visual-history
திரு[மலை]
திருவண்ணாமலை
தன்மீட்சி, சாவு- ஒரு கடிதம்
விசும்பு சிறுகதை தொகுப்பை தொடர்ந்து தன்மீட்சி வாசித்தேன். ஒரு முழு மானுடவாழ்க்கையை அர்த்த பூர்வமாக ஆக்கிக் கொள்ள, செயலுக்கத்துடன் வாழ போதுமான, இல்லை அதற்கு மேலான ‘சம்பவங்கள்’ தன்மீட்சியில் உள்ளன. முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இப்படி ஒரு பொக்கிஷத்தை தமிழ் இலக்கியத்திற்கு அளித்ததற்கு.
ஒரு கேள்வி. பதில் யாராலும் சொல்ல முடியாது என்று தெரியும். இருந்தாலும் உங்களது அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ள ஆவல். மரணம். ஆம், மரணத்தை நீங்கள் எப்படி வரையறுத்துள்ளீர்கள். நாத்திகன் என்பதால் நிச்சயமாக மரணத்திற்கு அப்பால் ஒரு ஜீவிதம் இல்லை என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். இருந்தும் உங்கள் எழுத்துக்களில் அறிய ஆவல். என்னால் சரியாக இந்த கேள்வியை கேட்க முடியவில்லை, மரணத்தை போல தான் சரியாக விளக்கிக் கொள்ள முடியவில்லை.
தன்மீட்சியில் மரணத்தை மனிதன் எப்படி எதிர்கொள்ள வேண்டும், மரணத்தை இலக்கியம் எப்படி வரையறுத்தது போன்ற கடிதங்களும் அதற்கு உங்கள் பதிலும் எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. ஜெ மனதில் மரணம் என்றால் என்ன? உங்கள் பதிலை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
தருண் வாசுதேவ்
***
அன்புள்ள தருண்
சாவு என்பது வாழ்வின் பகுதி அல்ல. தன்மீட்சி வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் கொண்டது. ஆகவே அதில் சாவு பற்றிய கேள்வி ஏதும் இல்லை. இங்கே நம்மை நிகழ்த்திக்கொள்வது எப்படி என்பது மட்டுமே அதில் பேசப்பட்டுள்ளது.
இங்கே வாழ்க்கையை சிறப்புற நிகழ்த்திக்கொண்டோம் என்றால் சாவு நமக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அது இயல்பான முடிவு. இங்கே வாழ்க்கையை நிகழ்த்தி நிறைவுறாதபோதுதான் சாவுக்குப்பின் அதன் நீட்சி என்ன என்னும் ஐயங்கள் எழுகின்றன. எதுவானாலும் அதை வாழ்க்கை பற்றிய விவாதங்களுக்குள் எவ்வகையிலும் வைக்க முடியாது. அது முற்றிலும் வேறொன்று.
ஜெ
வெண்முரசு, சிகாகோ- கடிதம்
மதிப்பிற்குரிய ஜெ
செப் 26 ஞாயிறு அன்று சிகாகோவில் வெண்முரசு ஆவணப்படம் வெளியாகப் போகிறது என்றவுடன் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. சித்திரைத் திருவிழாவுக்கு வண்டி கட்டிச் செல்வது போல் நண்பர்களாய்ச் சேர்ந்து சிகாகோ சென்று சேர்ந்தோம்.
விஸ்கான்சின் பாலா, செயிண்ட் லூயிஸ் வெங்கட் ஆகியோரிடம் பலமுறை தொலைபேசியிருந்தாலும் இப்போதுதான் நேரில் பார்க்கிறோம். எங்கள் மூவருக்கு உள்ளும் இருக்கும் ஜெயமோகன் ஒருவரை ஒருவர் அணுக்கமாக உணர வைத்தார். அவர்கள் இருவரும் அவ்வளவு சுறுசுறுப்பு. திரையரங்கில் அனைவரும் குழுமிய பின் பாலா வரவேற்க, நான் உங்களைப் பற்றி சிறு அறிமுகம் தர, வெங்கட் நன்றியுரை கூறி முடிக்கவும் திரைப்படம் தொடங்கியது.
பனி படர்ந்த காலைப் பொழுதில் கதிரவன் ஒளியில் காட்சிகள் துலங்குவது போல் மென்மையாக ஆரம்பித்த இசை பிரம்மாண்டமாக பேருருவம் கொண்டு திரையரங்கை மூழ்கடித்தது. வெண்முரசு இசைக்கொண்டாட்டம் என்பது சரியான தலைப்பு. ராஜன் சோமசுந்தரம் அவர்கள் அமைத்த இசையைப் பற்றி
பேசிக்கொண்டே இருக்கலாம். பொதுவாக இசையமைப்பாளர்கள் முதலில் சினிமாவில் காலூன்றி விட்டு பின்னர் மனநிறைவின் பொருட்டு கலைப்படங்களுக்கோ அல்லது சினிமா அல்லாத இசைச் சாதனைகளுக்கோ சென்று சேர்வார்கள். இவர் அப்படியே நேர் எதிர். எடுத்தவுடன் காலத்தால் அழியாத இலக்கியத்திற்கு அதிலுள்ள கவித்துவத்திற்கு தன் இசையைப் படைக்கிறார். அவர் மனதின் ஆழத்தில் தோன்றிய இசை நம் மன ஆழங்களுக்குள் சுழித்துப் பாய்ந்து பரவசம் தருகிறது.
அதிலும்”ஞானப் பெருவிசையே” என்று தொடங்கி “மோனப் பெருவெளியே இங்கு எழுந்தருளாயே” என கமல் பாடும்போது பின்னணி இசைக் கருவிகள் ஒன்றிணைந்து “திடும் திடும்” என விண்ணதிர மண்ணதிர உளமதிர நம்மை ஆட்கொள்ளுகிறது. கேட்டு நான்கு நாட்களாகியும் இன்னும் என்னிலிருந்து அகலவில்லை. ஸ்ரீராம் பார்த்தசாரதி “அமைக என் தலைமேல் அமைக என் புவிமேல்” என்று பாடும்போது கிருஷ்ணனின் மென்மையான பாதங்களை என் தலைமேல் உணர்ந்தேன்.அந்தக் கண்ணனும், கடல் அலையும்.
ராஜன் இசைக்கு நடனமாடுகிறார்களா அல்லது அவர்கள் நடனத்தைப் பார்த்து இவர் இசையமைத்தாரா என்று விழிமயக்கு ஏற்பட்டது. சில இடங்களில் அந்த சூழலுக்கு ஏற்ப சில இடங்களில் சிறு இசைத்துணுக்கை வாசித்திருப்பார். அரங்கா(அரங்கநாதர்) எழுந்தருளும்போது போது நாதஸ்வரம் வாசிப்பது முறைதானே! அது போல பழங்குடியினர் பற்றி பேசும்போதும் அவர்களுக்கே உரிய இசைத் துணுக்கு அவர்களைக் கண் முன் கொண்டு வந்தது.மரங்கள் சூழ நீங்கள் மட்டும் கடற்கரையில். அன்று இதே போன்ற கடலின் அருகில் மனக்கொந்தளிப்புடன் நீங்கள் நின்றிருந்த காட்சி மின்னல் போல வெட்டி மறைந்தது. இதோ இன்று அலைகளுக்கு நடுவில் ஞானாசிரியனாய் விஸ்வரூபம் எடுத்து புன்னகையுடன் நிற்கிறீர்கள். நினைவில் அழியாது நின்ற காட்சி.
பெண்கள் அதிகமும் பங்கேற்றதே இந்த ஆவணப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன். அடுத்தது வெண்முரசு பற்றிப் பேசியவர்களின் பார்வைகளும் பாவங்களும் அருமை. எடுத்துக்காட்டாக அமைதியாகக் கருத்தை முன்வைத்த தோழி ராதா, முப்பாட்டன் கதை என் முழங்கிய கமல், நோபல் பரிசுக்குரியவர் ஜெயமோகன் என்று அழுத்தம் திருத்தமாக இலங்கைத் தமிழில் இனிமையாகப் பகன்ற அய்யா அ. முத்துலிங்கம், வெண்முரசை குழந்தைகளிடம் ஊட்டி வளர்க்கும் லோகமாதேவி, வெண்முரசோடு ஒவ்வொரு நாளும் வாழும் சுபா, புயலின் விரைவுடன் பேசிய அருண்மொழி நங்கை, சிங்கம் போன்று சிரித்து முழங்கிய ஜெயகாந்தன், சிறு வயது துக்கத்தை ஆழ்ந்த குரலில் சொன்ன சிஜோ, வெண்முரசு கூறும் கலங்கள், நாவாய்கள் படி வியந்த சாகுல், வெண்முரசில் பெற்ற நன்மையை உணர்ச்சிபூர்வமாகக் கூறிய மீனா,பரிசுத்தமான வார்த்தைகள் பேசிய அசோகமித்திரன்,வெண் முரசின் சொற்களின் எண்ணிக்கையை கூறிய (வில்லுக்குப் பார்த்தன் போல் சொல்லுக்கு பேர்பெற்ற) நாஞ்சில் நாடன், வெண்முரசுவை ரயில் பயணத்தில் அனுபவித்த பழனிஜோதி, “humanist”என்று ஜெயமோகனைப் புகழ்ந்த அமெரிக்கப் பேராசிரியர்கள் என்று விதவிதமான பாவனைகளையும், பார்வைகளையும் அடுத்தடுத்து அமைத்து நேர்த்தியாகத் தரமாக எடிட்டிங் செய்த எடிட்டர் பாராட்டுக்குரியவர். நான் சொல்லாமல் விட்டது நிறைய.இறுதியாக ஒலித்த “வெண்முரசு தீம் மியூசிக்” தான் இந்த ஆவணப் படத்தின் உச்சம்.
ராஜனின் இசை சண்முகவேலின் ஓவியங்களுக்குள் புகுந்து பெண்மையின் கனிவும், கொடூரமும், போரின் உக்கிரமும், வாழ்வின் நிலையின்மையும் கண்முன்னே கொண்டு வந்தது தனிச்சிறப்பு. இசைக்கருவிகள் தனித்தும் , ஒன்றோடு ஒன்று இயைந்தும் நடத்திய வர்ணஜாலங்கள் முத்தாய்ப்பாக அமைந்தது நிறைவாக இருந்தது..இந்த ஆவணப்படத்தில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து திரைக்கதை, இசை, எடிட்டிங் என ஒவ்வொன்றிலும் கூடவே இருந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இந்தப் படத்தை எடுத்த ஆஸ்டின் சவுந்தர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள்! படம் நிறைவு பெற்றதும் சொல்லி வைத்தது போல் அனைவரும் எழுந்து கையைத் தட்டினர்.
இறுதியில் குழுவாகப் புகைப்படங்கள் எடுத்தோம். நிச்சயமாக வாசிக்கத் தொடங்கப் போகிறோம் என்று பலரும் தெரிவித்து விடை பெற்றார்கள். திடீரென தோழி திவ்யா என் ஒரு காதிலிருந்த தங்க நகையெங்கே என்று கேட்க அப்போதுதான் நகை காதிலிருந்து நழுவியது அறியாமல் இருந்ததை உணர்ந்தேன். அங்கிருந்த நண்பர்களனைவரும் ஆளுக்கொரு பக்கம் தேடினர். ஆனால் கிடைக்கவே இல்லை. மனதிற்கு நிறைவாக நடந்த நிகழ்ச்சியில் திருஷ்டி மாதிரி ஆகி விட்டதே என்று வருந்தினர். “ஊழ் அப்படித்தானென்றால் அப்படியே ஆகட்டும்” என்ற பாலாவின் பொன்மொழியை இரவல் வாங்கிக் கூறி அனைவரையும் அனுப்பி வைத்தேன்.
காரில் ஏறும்போது எங்களுடன் வந்த தோழி திவ்யா “இன்னும் கொஞ்ச நேரம் தேடியிருக்கலாம்” என்று வருந்தினார். அப்போது என் கணவர் “நமக்குச் சொந்தம் என்று நினைப்போம், விருப்பத்துடன் பற்று வைப்போம். ஆனால் ஒரு நிமிடத்தில் இந்த உடம்பை விட்டு உயிர் போய் விடும். உடம்பே சொந்தமில்லை எனும்போது இந்த நகை எம்மாத்திரம்! ” என்று புன்னகைத்தார். நான் முகமலர்ந்து அவரைப் பார்த்தேன். எனக்கு மீண்டும் வெண்முரசு படித்த திருப்தி!
இப்படிக்கு,
உங்கள் தீவிர வாசகி,
ஜமீலா. G (இஷ்ரஜ்)
October 7, 2021
தன்னைச் செலுத்திக்கொள்ளுதல்
அன்புள்ள ஜெயமோகன்
இரண்டு விதமான செயல்கள் உள்ளது.
ஒன்று: மீட்பளிக்கும் செயல் (கலை இலக்கியம் போன்றவற்றை படைத்தல், உள்வாங்குதல்).
இரண்டு: உலகியல் வாழ்வில் ஈடுபடுதல்(பொருளீட்டுதல், போட்டித் தேர்விற்கு படித்தல், அலுவலகப் பணி).
இவ்விரண்டும் சில புள்ளிகளால் இணையத்தான் செய்கிறது. ஒன்று மற்றொன்றை நிரப்புகிறது. பொருளீட்டுதல் மூலம் உலகியல் சிக்கலின்றி இலக்கியத்தில் ஈடுபடலாம்; போட்டித் தேர்விற்கு உழைப்பை முதலீடு செய்வதன் மூலம் அதில் வென்று சுமையின்றி கலைக்கான, இலக்கியத்திற்கான பொழுதை பெருக்கிக் கொள்ளலாம்.
ஆனால் முதலாவது வகை செயலுக்கு மனதளவில் கிடைக்கும் ஊக்கத்தைப் போன்று ஏன் இரண்டாவது வகைக்கு கிடைப்பதில்லை. போட்டித் தேர்வில் வென்றால் இலக்கியமும் செழிக்குமே, இருப்பினும் ஏன் என்னால் தீவிரமாய் ஈடுபட முடியவில்லை? இலக்கியம் என்றும் வேண்டுமெனில் உலகியலையும் வெல்ல வேண்டும். நிர்ப்பந்தம் புரிந்தும் ஏன் செயலூக்கமில்லை? உலகியல் ரீதியான செயலுக்கு ரஜோ குணம் வேண்டுமென குறிப்பிட்டிருந்தீர்கள். ரஜோ குணத்தை எப்படி வளர்த்து கொள்வது? போட்டி தேர்விற்கும், அலுவலக வேலைக்கும் தேவையான வென்றெடுக்கும் வேகத்தை எவ்வாறு உருவாக்குவது?
அன்புடன்
பாலமுருகன்
திருநெல்வேலி
***
அன்புள்ள பாலமுருகன்,
ஏறத்தாழ இதேபோன்ற கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. திரும்பத் திரும்ப அவற்றுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். உலகியல் செயல்பாடுகள் கண்கூடானவை. அவற்றால் நமக்கு கிடைக்கும் வாழ்க்கை வசதிகளும் சமூகக் கௌரவமும் திட்டவட்டமானவை. ஆகவே அவை அனைவராலும் விரும்பப்படுகின்றன, ஊக்குவிக்கப்படுகின்றன. நம் அகவுலகச் செயல்பாடுகளான கலையிலக்கிய ஈடுபாடுகள் நம்மால் மட்டுமே அறியப்படுபவை. அவற்றுக்கு வெளியே இருந்து ஊக்கமென ஏதும் கிடைக்காது.
ஆனால் அகவயச்செயல்பாடுகளை நாம் ஊக்கவேண்டியதில்லை, நம் இயல்பே அவற்றை நாடுவதென்பதனால் அவை இயல்பாகவே நிகழும். புறவயச்செயல்பாடு என்பது நம்மை ஊக்குவித்து நாமே ஈடுபடுத்திக் கொள்ளவேண்டியது. அவ்வாறு ஊக்கப்படுத்தவில்லை என்றால் ஆர்வம் இயல்பாக அணையவும்கூடும்.
சில தருணங்களில் புறவயமான கல்வி, தொழில் போன்றவற்றை நாம் முழுமூச்சாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கவனம் சிதறாமல் சிலகாலம் ஈடுபடவேண்டியிருக்கும். குறிப்பாக போட்டித் தேர்வுகளின்போது. குறுகியகாலம் நம் அத்தனை விசைகளையும் ஒன்றில் குவித்துச் செயல்படுவது அது. அப்போது தற்காலிகமாக நம் அகவய ஈடுபாடுகளை ஒத்திவைத்தே ஆகவேண்டும்.
நம் ஆற்றலும் கவனமும் இயல்பாகக் குவியாத இடங்களில், அதாவது தொழில், உலகியல்கல்வி போன்றவற்றில், தீவிரமாக ஈடுபடுவதற்கு நாம் நம்மை தயாரித்துக் கொள்ளவேண்டும். கவனத்தை குவிப்பதற்கான பயிற்சிகளை நாமே கண்டடைய வேண்டும். அது ஒவ்வொருவருக்கும் ஒருவகை. உதாரணமாக, எனக்கு எதையும் எழுதினால்தான் நினைவில் நிற்கும். சிலருக்கு செவிகளில் கேட்டாகவேண்டும். சிலருக்கு விவாதிக்கவேண்டும்.
ரஜோகுணம் என்பது வெல்வதற்கான ஆற்றலை அளிக்கும் உளநிலை. அதற்கு மூன்றுபடிகள். ஒன்று, தன் ஆற்றலை நம்புவது. தன்னை நிலைநிறுத்த வேண்டுமென விரும்புவது. இரண்டு, தன்னுடைய குறைநிறைகளை கண்டடைந்து தனக்கான வழிகளை கண்டடைவது. மூன்று, ஊக்கம் தளரும்போதெல்லாம் தன்னை புத்துயிர்ப்புடன் எழுப்பிக்கொள்வது. எவருமே தளராத ஊக்கம் கொண்டவர்கள் அல்ல. தன்னைத்தானே தூண்டி ஆற்றல்கொண்டு மேலெழுபவர்களே வெல்கிறார்கள்.
ஜெ
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


