வெண்முரசு வாசிப்பு- பிரவீன்குமார்

வெண்முரசு வாசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகவும் மற்ற வாசிப்புகளை முடக்கிவிடாதபடியும் முடித்துவிட வேண்டும். மகாபாரத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களில் காணப்படும் மாயத்தன்மை இவர்களில் இல்லை. இவர்கள் கால்கள் தரையில் பதிந்த மனிதர்கள். அவர்களது பண்புகளின், வாழ்க்கையின் அதீதம் உடனடியாக சூதர்களால காவியமாக்கப்படுகின்றன.

இவர்களுள் என்னை எந்த கதாப்பாத்திரத்துடன் தொடர்பு படுத்திக் கொள்வது என்ற ஆர்வத்தில் தான்‌ ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அணுகுகிறேன்‌. பலவீனன், நோயாளி விசித்ரவீர்யன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்வுமீது எழும் ஆழ்ந்த கசப்பும், கசப்பு உண்டாக்கும் ஏளனமும்  கனம் மிகுந்தவையாக இருக்கின்றன. வசீகரமான பாத்திரம். விதுரன் அறிமுகமாகும் கணத்திலிருந்து வசீகரிக்கிறார். ஆனால் நான் விதுரர் இல்லை. காலையெழுந்தவுடன் முதல் வேலையாக காவியங்களை வாசிக்கிறார். (எனக்கும் இக்குணமிருக்கிறது). அவர் பதினெட்டு வயதிலேயே ஒரு நாளைக்கு ஓருணவு உண்ணும் சிறந்த பழக்கத்தைக் (பேலியோ??) கொண்டிருக்கிறார்.

சிறந்த மதியூகியாக இருக்கிறார். பணிவும் பண்புமாக இருக்கிறார். நான் விதுரன் இல்லை. நான் பீஷ்மரும் இல்லை. சிகண்டியின் முரட்டுத்தனம் எனக்கில்லை‌. சாப்பாடு சில மணிநேரங்கள் பிந்திப்போன நாளில், தான் நானென்னை திருதராஷ்டரன் என்று கண்டுகொண்டேன். அத்தனை வேகமாக அத்தனை வெறியோடு சாப்பிடுபவன் திருதராஷ்டரன். ஆனால் எனக்கு அவனைப் போல இசை நுண்ணுணர்வு இல்லை. என்னை மிக மிகக் கவர்ந்த கதாப்பாத்திரமென்றில் அது ஓரிரு பக்கங்களுக்குள் வந்து செல்லும் அகத்தியர் தான். சிறுவனைப் போல குள்ளமான குறுகிய உடல்வாகு கொண்ட வயது மூத்த முனிவர், விசித்திரவீர்யனுக்கு மருத்துவம் பார்க்க வருகிறார். குழந்தையிடம் விளையாட்டுப் பொருள் கிடைத்ததைப் போன்ற ஆர்வத்திலும், பரபரப்பிலும் அந்த மருத்துவசாலைப் படிக்கட்டுக்களில் வியப்புடன் ஏறி இறங்கி ஆடுகிறார். படிகட்டில் ஏறி இறங்கும் போது வரும் ஒலி தனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று குழந்தைத்தனமாக சொல்கிறார் மகாமுனி.

ஆரம்பித்த போதிருந்தே நாவலில் தோன்றும் மரங்கள், மலர்கள், மதுவகைகள், நாடுகள் போன்றவற்றில் என் மனம் சாய்ந்துவிட்டது. சுனைபோல பொங்கி ஊறிக் கொண்டேயிருக்கின்றன.

முதற்கனல் தாண்டி, மழைப்பாடலில் இருக்கிறேன். இந்த 800 சொச்சம் பக்கங்களுக்குள், இந்தியா முழுமையும் வந்துவிட்டது. குஜராத், ஆஃப்கானிஸ்தான், ஆந்திரம், டெல்லி, இமயம், ராஜஸ்தான் இப்படி இந்தியா முழுமையாக தொட்டுக்காட்டியாகிவிட்டது‌. திருதராஷ்டரனுக்கு பெண் பார்க்கச்செல்லும் பீஷ்மர் வழியில் ஹரப்பா மொகஞ்சதாரோவைக் காண்கிறார். காந்தாரத்தில் வைத்து திருதராஸ்டரனிடத்து தமிழ்ப் பாடலைப்பற்றி சிலாகிக்கிறார். யாதவர்களின் நெய்யும் பாலும் தயிரும் விற்பனைக்காக செல்வதற்காக “எட்டு வண்டிச் சாலை”கள் இருந்தனவாம். உள்ளங்கையைத் திருப்பி புறங்கையைப் பார்ப்பதைப் போல பாரதவர்ஷத்தைப் பற்றி மிக லகுவாக எழுதிச் செல்கிறார்.

அரசர்கள் பயணப்படும் குதிரை வண்டிகள் குலுங்காமல் இருக்கும் படி எப்படி அவை உருவாக்கப்படுகின்றன என்பதற்கான தகவல் இருக்கிறது‌‌. அம்புகள், வேல்கள் துருவேறாமல் இருக்க என்ன தொழில்நுட்பம் செய்யபடுகிறதென்று அறியத் தருகிறார். விஷ அம்புகள் செய்ய எந்தெந்த பொருட்களிலிருந்து விஷமெடுக்கப்படுகிறதென்று கூறுகிறார். வெவ்வேறு மதுக்கள் உருவாக்கும் முறைகள் வருகின்றன.

பாலைவனத்தில் ஒரு ஓநாய் நடந்து செல்கிறது‌. காலைவெயிலில் அந்த நிலம் பொன்னிறப்பட்டு துணியைப் போல இருப்பதாகவும், அதில் ஓநாயின் கால்தடங்கள் பட்டுத்துணிமேல் ஒரு ஊசித் தையலைப் போல செல்வதாகவும் எழுதுகிறார். உற்சாகம் முட்ட உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு துள்ளு துள்ளி அமர்ந்துகொண்டேன். கூழாங்கல் நிறைந்த தடத்தில் நடந்து செல்லும் குதிரைகளின் குளம்பொலி அம்பைத் தீட்டும் ஒலியை உண்டாக்கியது என்றொரு வர்ணனை. காந்தாரி திருதராஸ்டரின் மார்பில் மோதி அணைக்கிறாள்‌. பெரிய முரசின் மேல் சிறுகோல் பட்டதைப் போலிருந்தது என்று எழுதுகிறார். யாதவர்களின் மாட்டுக்கூட்டத்தை நிரம்பி நிற்கும் ஏரியோடு உவமிக்கிறார். மழை மேகங்கள் உலவிச் செல்வது பட்டியிலிருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டது போலிருந்தது என்றொரு வரி.

தொடர்ச்சியாக ஜெயமோகனை வாசித்த வகையில் இவ்வர்ணனைகளை உவமைகளை இதற்கு முன்பு எழுதியிருக்கிறாரா என்று யோசித்தால் எதுவுமில்லை. வெண்முரசில் காண்பது புதிய ஜெயமோகன். அதற்கு பிறகு எழுதிய நூறு கதைகளில் கண்டது வேறொரு புதிய ஜெயமோகன்‌. ஒவ்வொரு நாளும் வாசிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, இதுவரை அள்ளிக் கொண்டவற்றை நிதானமாக எடுத்து பார்த்து ரசித்துக்கொண்டிருக்கலாமா அல்லது அடுத்தடுத்து வேட்கையுடன் முன்னேறி போகலாமா என்று மனம் அலைபாய்கிறது. தேனுக்குள் விழுந்த ஈக்கு இந்த மாறி இரண்டு வாய்ப்புகள் தான் இருக்க முடியும்.

பிரவீன் குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 12, 2021 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.