வாசகனின் அலைக்கழிப்புகள்

ஜெ

வணக்கம்

இப்பொழுது தமிழுக்கு தமிழர்களுக்கு யார் எதிரி என ஒரு பெரிய வலைப்போர் தொடங்கிவிட்டது. இருவரும் ஒருவரை யொருவர் மிக மூர்க்கமாக தாக்கிகொள்கிறார்கள். காரணம் இருதரப்பிலும் கொஞ்சமேனும் கற்றவர்கள் அல்லது தமிழகத்தை கடந்து பயணம் செய்தவர்கள் இல்லவே இல்லை. ஆதலால் இதை கருத்து மோதல் என்பதா? இல்லை சண்டை என்பதா என பார்வையாளர்களுக்கு மிக குழப்பமாக இருக்க்கிறது.

எனக்கும் முகநூலில் கணக்கு இல்லை முகநூலில் என்ன பேசிகொள்கிறார்கள் என்பதை உங்கள் தளத்திலிருந்து அவ்வப்போது தெரிந்து கொள்வேன் இவர்களின் இந்த கூச்சளே பெரிய த்த்துவமாகவும் கருத்தாகவும் தமிழனின் முழுமுதல் பிரச்சினை அறிவு ஆழம் என இவர்கள் கட்டமைத்துவிட்டார்கள் பல பேர்கள் (முகங்கள்) எல்லோருக்கும் பின்னாடியும் புத்தக அலமாரிகள் அலமாரிகளில் புத்தகங்கள் பல மாதிரியான பெயர்கள் அரசியல் அறிஞர் தமிழறிஞர் தமிழ்ஆய்வாளர்

இன்னொரு பக்கம் பெரியாரின் வழித்தோன்றல்கள் இவர்களில் ஆண்களும் பெண்களும் கூச்சலிடுவதை கேட்கும் போது இவரகளுக்கு உண்மையிலேயே பொறுப்பான ஆழமான மனிதம் கண்டுஉணரக்கூடிய எந்த மேன்மையான விஷயங்களையும் கற்கும் நேரமோ காலமோ இவர்கள் வாழ்வில் நேரவே வாய்ப்பிருக்காது

சரி உங்களை வாசிப்பதற்குதான் இவர்களுக்கு பல பக்கங்களிலிருந்து பல தடைகள் தமிழின் முன்னோடிகளை கூட வா இவர்களுக்கு வாசிக்க தடை இந்த வலையுலக காலத்தில் அசோகமித்திரன் இவைகளை யெல்லாம் கேட்பவராக இருந்தால் அவரது கதி என்னவாயிருக்கும் தமிழ்வலைகளில் (ஸ்ருதிடீவி) இலக்கியம் என்ன பக்கம் சென்றால் 99% சதவிகம் இந்த திராவிட பெரியாரிய தமிழ்தேசிய ம் தான் 1% சதவிகத்த்திற்கும் குறைவாக இலக்கியம் உள்ளது

நான் ஒனபாதம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு எதிரில் இருந்த மாவட்ட நூலகத்திற்கு மதிய உணவு வேளையில் செல்ல ஆரம்பித்தேன் எனக்கு நேரடியாகவே இலக்கியம் அறிமுகமாயிற்று முதலில் நான் வாசித்ததே பஷிரின் படைப்புகள் தான் (அதை மொழிபெயர்தரதவர் பெயர் சுரா என்றிருக்கும் ஆனால் அது வேற சுரா) பிறகு தமிழ், கேரளா, வங்காளம், இந்தி உலகம் என என் எல்லைகள் விரிந்து விரிந்து சென்றன

நான் அப்போது ஒரு எழுத்தாளரை வாசித்தால் அவரின் அனைத்து புத்தகங்களையும் வாசித்துவிட்டே அடுத்த எழுத்தாளருக்கு தாவுவேன் அப்படி ந பிச்சமூர்த்தியையும் ஜெயகாந்தனையும் எம் வி வி யை வாசித்த கால்கங்கள் என் வாழ்வின் பொருட்படுத்தக்க பகுதிகள் அந்த பாதையில் எனக்கு கிடைத்த/ நான் கண்ட வெளிச்சமாக உங்களை நான் நிறுத்திகொள்கிறேன் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக உங்களில் மூழ்கி திளைப்பது என் அன்றாட செயல்

அ.முத்துலிங்கம் அவர்களின் மகாராஜாவின் ரயில் வண்டியை நான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த உடனே வாசிப்பதற்காக நூலகத்திலிருந்து எடுத்து வைத்திருந்தேன் பதினாறு வயதில் எனக்கு அது போதையாகப்பட்டது. எப்படி என்றால் நான் நிகழ்காலத்தில் இருப்பதில்லை. ஏன் நான் தமிழ்நாட்டிலே இருப்பதில்லை என்னுடன் இருக்கும் எவரும் என் உலகத்தில் இல்லை அது ஒரு பேரின்ப நிலை நான் காண்பது ஒவ்வொன்றும் எனக்கு என் பின்னாலிருந்து அந்த எழுத்தாளர்கள் காண்பதாக தோன்றும்

நான் இன்னும் நிறையய எழுதகூடும். எதற்காகவென்றால் இயல்பாகவே உங்களை வாசிக்க எனக்கு எனக்கு அமைந்த பாதையில் எந்த தடையும் ஏற்பட்டதில்லை. அப்படியிருக்க என்னைக் காண வருபவர்கள் அல்லது நான் கையிலோ பையிலோ வைத்திருக்கும் உங்களின் புத்தகத்தை பார்த்தவுடன் வேறு ஒரு ஆளாக மாறிவிடுகிறார்கள். எனக்கு என்னைப்போல ஒரு வாசகனின் நட்பு அமையாதது ஊழ் போல. ஏனென்றால் தமிழனாகப்பட்டவன் இந்த வலைகூச்சலில் ஒருவனாக இருப்பது விதி போலும் .

இந்த கூச்சல்களில் மாட்டிக்கொண்ட அல்லது இந்த கூச்சல் சிந்தனையாளர்களை கற்க தொடங்கும் ஒரு புதிய வாசகன் அவர்களிலிருந்து மீள வாய்ப்புகளே இருக்காது போல நான் பார்த்து பேசிய ஒரு எழுத்தாளர் ராஜேந்திர சோழன் தான் அதுவும் அவர் அறையில் என் நண்பன் சில நாட்கள் தங்கியிருந்தனால் வாய்த்தது அவர் என்பின்புலங்களையெல்லாம் கேட்டுவிட்டு என்னை நீ எழுத வேண்டும் என ஊக்குவித்தார் நான் அதற்கு என் வறுமையை தடையாக முன்வைத்தபோது அவர் நாஞ்சில் நாடனை முன்வைத்து பேசினார்.

பிறகு பல சந்தர்ப்பங்களில் அவருடன் இலக்கிய உரையாடல் நிகழ்ந்திருக்கிறது நான் அப்போது உங்களின் ஒரே ஒரு சிறுகதையை மட்டும் வாசித்திருந்தேன் அவருக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே பட்டது நான் உங்களை குறைவாக வாசித்திருப்பது பின்தொடரும் நிழலின் குரலை வாசிக்க கட்டாயப்படுத்தினார். நான் வாசித்த ஒரு சிறுகதைபற்றி கூற அந்த புத்தகத்தை கேட்டு வாங்கி கொண்டார்.

உங்களிடம் சதா உரையாடுவது என் தினவழக்கங்களில் ஒன்று தினமும் இரண்டுமணி நேரம் பணிக்கு காரில் பயணக்கிறேன் காரில் ஏறி சீட் பெல்ட் போட்டவுனேயே நான் கார் ஓட்டுகிறேன் என்பதையே மறந்து விடுவேன் பிறகு உங்களுடன் பேசுவது தான் (கார் சீட்டில் உட்காருவது தாயின் கர்ப்பப்பையில் அமருவது போன்றது்தானே ( அனல் காற்று ) ) உங்களை காண மனைவி குழந்தைகளுடன் உங்கள் வாசலில் நின்றிருக்கும் தினமும் வரும் அந்த இனிப்பான நினைப்பு

அன்புடன்

ரகுபதி

கத்தார்

***

அன்புள்ள ரகுபதி,

எனக்கு வரும் வாசகர் கடிதங்களில் பொதுவாகவே பேசப்படும் இரண்டு விஷயங்கள்தான் நீங்கள் குறிப்பிட்டவை.

தமிழில் என்றல்ல எந்த சூழலிலும் பொதுவான அறிவுக்களம் என்பது அரசியதிகாரத்தைப் பிடிக்க நினைக்கும் தரப்புகள் நடுவே நிகழும் ‘பல்நக’ச் சண்டையாகவே இருக்கும். அது மிகையுணர்ச்சிகள், ஒற்றைப்படைக் கருத்துக்கள், சலிக்காத பிரச்சாரக் கூச்சல்கள் ஆகியவற்றால் ஆனதாகவே இருக்கும். அதன் கீழ்நிலை என்பது வசைகள், அவதூறுகள் ஆகியவற்றாலானது.

ஆனால் வளரும் பண்பாடுகளில் அறிவுச்சூழலின் வளர்ச்சிமுனை இதிலிருந்து விலகி மேலெழுந்ததாக இருக்கும். புதியவினாக்களை நாடிச் செல்லும். தத்துவம், இலக்கியம், ஆய்வுகள் ஆகியவற்றில் அங்கே புதியன நிகழும். அவ்வாறு புதியன நிகழவேண்டுமென்றால் அங்கே அறிவுலக நெறிகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். ஆக்கபூர்வமான உரையாடல் நிகழவேண்டும்

அந்த வளர்ச்சிமுனை ஒரு மரத்தின் வளரும்தளிர் போன்றது. அது தொடர்ந்து வளரும் துடிப்புடன் இருக்கும். அந்த தளம் மையப் பெரும்போக்காக ஆகவே முடியாது. ஏனென்றால் அது அனைவருக்கும் உரிய களம் அல்ல. அது தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவர்களுக்கு மட்டுமே உரியது. அவர்களின் இலக்கு அதிகாரத்தை வெல்வது அல்ல. உண்மையை அறிவதன் களிப்பே அவர்களை இயக்குகிறது. அவர்கள் நாடும் வெற்றி அது மட்டுமே.

அறிவுத்தளச் செயல்பாடு கொண்டவர்களில் பலர் இந்த உலகில் எதையுமே அடைவதில்லை என்பதைக் காணலாம். பணம் ,புகழ், அதிகாரம் எதுவும் அவர்களுக்குப் பொருட்டல்ல. பலர் வாழ்நாளில் வெளியே தெரியாமலேயே மறைகிறார்கள். அறிவியல் போன்ற துறைகளில் மாபெரும் உழைப்பு செலுத்தப்பட்டு செய்யப்படும் ஆய்வுகளில் ஆயிரத்தில் ஒன்றே எதையாவது கண்டடைகிறது. மற்ற ஆய்வாளர்களுக்கு ஆய்வுசெய்வதிலுள்ள இன்பமே ஒரே லாபம்.

அதிகாரத்துக்காகக் களமாடுபவர்களால் அறிவியக்கவாதிகளைப் புரிந்துகொள்ள முடியாது. அறிவியக்கவாதிகள் எதற்கென்று தெரியாமல் செயல்படும் மூடர்களாகவே தோன்றுவார்கள். அரசியலாளர்கள் அறிவியக்கத்தை தங்கள் அரசியலதிகார நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்பார்கள். தங்கள் தரப்பில் சேர்க்க முயல்வார்கள். அல்லது எதிர்த்தரப்பில் சேர்த்து அழிக்க முயல்வார்கள். பொதுவாக அறிவியக்கவாதிகளை அரசியலாளர்கள் பயனற்ற குறுங்குழுவாதிகள்  என்பார்கள். தன்னலமிகள் என்றோ கிறுக்கர்கள் என்றோ ஒழுக்கமற்றவர்கள் என்றோ வசைபாடிக்கொண்டே இருப்பார்கள்.

பாமரர்களுக்கும் அறிவியக்கவாதிகளின் பங்களிப்பென்ன என்று புரியாது. அவர்களில் எளிமையானவர்கள் சிலர் அறிவியக்கச் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை மரபிலிருந்து சற்று அறிந்திருப்பார்கள். ஒரு பொதுவான மதிப்பை கொண்டிருப்பார்கள். ஆனால் கொஞ்சம் கல்விகற்று அதன் விளைவாக தன்னை அறிவாளி என நினைக்கும் நடுத்தரவர்க்கத்துப் பாமரன் அறிவியக்கவாதியைக் கண்டு மிரள்வான். அவனுடைய இருப்பே இவனுடைய அற்பவாழ்க்கையை சுட்டிக்காட்டுவதாக உணர்வான். ஆகவே எரிச்சல் கொள்வான். தனக்கு புரியாத எல்லாமே பசப்பு என்று நினைப்பவன் அவன். உலகியலுக்கு உதவாத எல்லாமே வீண் என கருதுபவன். அவனிடமிருந்தும் அறிவியக்கவாதி அவமதிப்பையே எதிர்கொள்ள நேரிடும்.

அறிவியக்கவாதி என்றால் எழுதுபவனோ சிந்திப்பவனோ மட்டுமல்ல. வாசிப்பவனும் கற்பவனும்தான்.நம் சூழலில் அறிவியக்கம் என்பது மிகமிகமிகச் சிறிய ஒருவட்டம். அதிகம் போனால் சில ஆயிரம்பேர். வெளியே கோடிக்கணக்கானவர்கள் எளிய பாமரர்கள். சிலர் பிழைப்புக்கல்வி கற்ற பாமரர்கள். பெரிய எண்ணிக்கையில் பேசிக்கொண்டிருப்பவர்கள் அதிகார அரசியலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகள். அவர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு உரிய கருத்துநிலைகளை ஒட்டிப் பேசுவார்கள். திராவிட அரசியல், இடதுசாரி அரசியல், இந்துத்துவ அரசியல் ஆகியவை இங்கே ஓங்கி ஒலிப்பவை. அறிவியக்கம் இவற்றுக்கு மிக அப்பால், வேறொரு தளத்தில் செயல்படுகிறது.

நடைமுறையில் இங்கே வாசிக்கவும், சிந்திக்கவும் தொடங்கும் எவரும் அரசியலியக்கம் சார்ந்த அதிகாரவேட்டையாளர்களின் உச்சகட்டப் பிரச்சாரக் கூச்சல்களையே முதலில் செவிகொள்கிறார்கள். அங்கே சென்று தாங்களும் இணைந்துகொள்கிறார்கள். தாங்களும் கொஞ்சம் கூச்சல்போடுகிறார்கள். கொஞ்சம் பாவனைகள் செய்கிறார்கள்.

ஆனால் நுண்ணுணர்வும், சிந்தனையும் கொண்ட ஒருவன் விரைவிலேயே அவற்றின் உள்ளீடற்ற தன்மையை உணர்ந்துகொள்வான். அவனுடைய அடிப்படையான வினாக்களுக்கு அங்கே இடமில்லை என்று அறிவான், வாழ்க்கை சார்ந்து அவனுடைய நுண்ணுணர்வு கண்டடையும் மெய்மைகளை அந்த அரசியல்களத்தின் மூர்க்கமான ஒற்றைப்படைச் சொற்களால் அடையவே முடியாது என அறிவான். அவனே இலக்கியத்துக்குள் வருகிறான். அவனை மட்டுமே நாம் கருத்தில்கொள்ளவேண்டும். அறிவுத்தகுதியும் நுண்ணுணர்வும் கொண்ட ஒருவர் அங்கே நீடிக்க முடியாது என்றே நான் இதுவரை உணர்ந்திருக்கிறேன்.

இலக்கியம் ஓர் அறிவுத்துறை, ஒரு கலை. இதில் அனைத்துக்கும் இடமுண்டு. ஆனால் இதன் நோக்கம் தன்னை மேலும் மேலும் கூர்மைப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை, உள்ளத்தை, வரலாற்றை, சமூக இயக்கத்தை, ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தை புரிந்துகொள்ளுவதற்கான முயற்சி மட்டுமே. இது எந்த நடைமுறை அதிகாரத்தையும் கைப்பற்றும் எண்ணம் கொண்டது அல்ல. என்றும் அது அப்படித்தான். ஆகவேதான் அதிகாரக்களங்கள் மாறிமாறி அமைந்து, ஒட்டுமொத்தமாகவே உலகம் மாறிவிட்டபின்னரும் இலக்கியம் செல்வாக்குடன் நீடிக்கிறது.

அந்த களம் என்றுமிருக்கும். அதில் செயல்படுபவர்களுக்கு வெளியே உள்ள கூச்சல்கள் ஆய்வுப்பொருட்கள் என்ற அளவில் மட்டுமே கவனத்திற்குரியவை. அக்கூச்சல்கள் எழும் களத்துக்கும் இலக்கியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.