கோவையும் கவிதையும் ஒரு கோழியும்

அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்

கிருஷ்ணன் சொல்லிக்கொண்டே இருந்தார், இவ்வாண்டு விஷ்ணுபுரம் கூட்டம் நடக்கமுடியுமோ முடியாதோ என்று. ”நாம் ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும் சார். கவிதையப்பத்தி பேசி நாளாச்சு… ஒரு கூட்டம் போடுவோம்.”

நான் வேறொரு மனநிலையில் இருந்தேன். ஒருமாதமாக நான் என்னென்ன வாசித்தேன் என்று ஒருவரிடம் சொன்னால் தலையில் கைவித்துவிடுவார். டின்டின், டெக்ஸ்வில்லர், டியூராங்கோ காமிக் நூல்கள். துப்பறியும் நூல்கள். ஹெச்.பி லோவ்கிராஃப்ட், நால்டர் டி லா மாரே வகையறாக்கள் எழுதிய பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் பேய்க்கதைகள்… மொத்தத்தில் வாள் கேடயம் ஆகியவற்றுடன் மூளையையும் ஒரு ஓரமாக வைத்திருந்தேன். ஆகவே ”நீங்களே ஏற்பாடு செய்யுங்கள் கிருஷ்ணன், நான் சும்மா வந்து ஓரமாக அமர்ந்திருக்கிறேன்” என்றேன்

தமிழ் இலக்கியவரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு குற்றவியல் வழக்கறிஞரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதையுரையாடல் என்னும் தகுதியை அடைந்த கோவை கவிதை அரங்கு இவ்வாறுதான் நிகழ்ந்தது. கோவையில் அரங்கங்கள் எவையும் இன்னமும் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆகவே நண்பர் பாலுவின் பண்ணைவீட்டிலேயே நடத்தலாமென முடிவெடுக்கப்பட்டது. அக்டோபர் 2,3 தேதிகளில் நிகழ்ச்சிகள் நடந்தன.

கவிதை அரங்குகளை நடத்துபவர்கள், பங்கேற்பாளர்கள் அனைவரையும் கிருஷ்ணனே முடிவுசெய்தார். இதன்பொருட்டு வெவ்வேறு நண்பர்களின் சிபாரிசால் நூறு கவிதைத் தொகுதிகள் வரை வாசித்து தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதையை கண்டடைய சட்டபூர்வமான அமைப்புகள் ஏதாவது தேவை என்னும் தெளிவைச் சென்றடைந்தார். கவிதைத்தெரிவுகள், பேசுபொருள் தெரிவுகள் அனைத்திலும் அவருடைய ஈடுபாடு இருந்தது.

நான் அக்டோபர் ஒன்றாம்தேதியே கோவை சென்றுவிட்டேன். அங்கே சில அலுவல்கள். கிருஷ்ணனும் நண்பர்களும் மாலை ஈரோட்டிலிருந்து கோவை வந்தனர். கோவையில் அன்று நல்ல மழை. பொடிநடையாக டீ குடிக்கச் சென்ற கோஷ்டி விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழும் ராஜஸ்தானி பவன் அரங்கை பார்த்து “இந்த ஆண்டாவது விழா நடக்குமா சார்?” என்னும் கேள்வியுடன் உளம் வெதும்பியது.  டீ குடித்துக் கொண்டிருக்கும்போது மழை பெருமழையாகியது.

கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு ஒன்றாம்தேதி மாலையே பண்ணை வீட்டுக்குச் சென்று தங்கி பின்னிரவு வரை கவிதை விவாதங்களில் ஈடுபட்டதாக அறிந்தேன். நான் கோவை ஃபார்ச்சூன் சூட்ஸில் தங்கிவிட்டு காலையில்தான் பண்ணை வீட்டுக்குச் சென்றேன். அங்கே ஏறத்தாழ அனைவருமே வந்திருந்தனர்.

இந்த வகையான விழாக்களில் ஒவ்வொருவரையும் வரவேற்று கொண்டுசென்று இடம்சேர்ப்பது என்பது மிகப்பெரிய நிர்வாகப்பொறுப்புள்ள செயல். விருந்தினர் எவரேனும் வரவேற்க விட்டுப்போனால் அவருக்கும் அவரைவிட நமக்கு ஏற்படும் உளச்சோர்வு மிகப்பெரியது. கிருஷ்ணன் தானே பெரிதாக ஏதும் செய்பவரல்ல என்றாலும் பிறரை ஏவுவதில் திறமைகொண்டவர். ஆகவே அனைத்தும் சிறப்பாக நிகழ்ந்திருந்தது.

கவிதையரங்கில் அரங்குகளை நடத்துபவர்களில் ஆனந்த் குமார் வரமுடியவில்லை. கொரோனா வந்து சென்றபின்னரும் இருமல் முடியாமலிருந்தது. நரேன் வரமுடியவில்லை, சாதாரண ஃப்ளூ. மற்ற அனைவருமே வந்திருந்தனர். அனைவருக்குமே நீண்ட இடைவேளைக்குப்பின் ஒரு இளைப்பாறலும் சந்திப்பும் தேவைப்பட்டிருக்கலாம்.

வழக்கமாக விஷ்ணுபுரம் அமைப்பின் எல்லா அரங்குகளிலும் அறிவுத்தள முன்னேற்பாடுகள் முறைப்படி நடக்கும். பெரும்பாலும் அவற்றுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வேன். அரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகள், கதைகள் மற்றும் படைப்புகள் முன்னராகவே சேமிக்கப்பட்டு அனுப்பப்படும். ஒருமுறை ஓர் இளந்துருக்கியர் அவர் பேசப்போகும் நூலை முழுமையாகவே பிடிஎஃப் ஆக அனுப்பியிருந்தார். தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள், முழுமையாக!அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்

பின்னர் அதற்கு ஒரு வழியை நான் கண்டடைந்தேன். ஒரு இணையப்பக்கம் தொடங்கி அதில் பதிவிடுவது. அதை அனைவருமே வாசித்துவிட்டு வரலாம். மின்னஞ்சலை பார்க்கவில்லை என்றெல்லாம் சொல்லமுடியாது. இம்முறையும் அவ்வாறு கவிஞர்கள் தேர்வுசெய்து அனுப்பிய கவிதைகள் ஓர் இணையப்பக்கமாக உருவாக்கப்பட்டன.

ஒரு பேச்சாளர் ஏழு கவிதைகளை முன்வைக்க வேண்டும், அறிமுகம் செய்து பேசவேண்டும் என்பது நெறி. அவ்வாறே கவிதைகளும் அனுப்பப்பட்டன. ஆனால் கவிஞர்கள் பேசியபோது மேலும்மேலும் பல கவிதைகளை சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டே சென்றனர்.

முகப்புரையாக லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை எழுத்துவது, வாசிப்பது ஆகியவை நிகழும் தளம் பற்றிப் பேசினார். குறிப்புகளுடன் வந்திருந்தாலும் அவருடைய வழக்கப்படி மேலும் சிந்தித்து தொட்டுத்தொட்டு பேசிக்கொண்டே சென்றார். இன்னொரு அரங்கில் எனில் பெரும்பாலும் அத்தகைய உரைகள் ஓரிரு வரிகளே சென்று சேர்ந்திருக்கும். எத்தனை பேர் கவனித்து உள்வாங்கிக் கொண்டனர் என்று பார்த்தேன். தாமரைக்கண்ணன் மொத்த உரையையுமே நினைவிலிருந்து ஏறத்தாழ முழுமையாகவே பதிவுசெய்திருப்பதைக் கண்டேன்.

ஊட்டி குருகுலத்தில் அத்தகைய திறமையையும் கவனத்தையும் ஒரு காலத்தில் கண்டு நான் திகைத்திருக்கிறேன். அதை நானும் பயின்றிருக்கிறேன். அதற்கான பயிற்சிகள் சிலவற்றை பற்றி பேசியிருக்கிறேன். அது நீடிப்பது நிறைவளித்தது.

மொத்தம் ஒன்பது அரங்குகள். ஓர் அரங்குக்கு தோராயமாக ஒன்றரை மணிநேரம்.  கவிதை வாசிப்பு முறைகள் (யுவன், மோகனரங்கன்), பழந்தமிழ் கவிதைகளில் அறிவும் கல்வியும் (அந்தியூர் மணி), நாட்படுதேறல்- சங்கம் முதல் சமகாலம் வரை (இசை), தற்கால கவிதைகள் (மதார்), ஹிந்தி கவிதைகள் (எம். கோபால கிருஷ்ணன்) கவிதைகளில் உடல்மொழி (சாம்ராஜ்), ஆன்மிக கவிதைகள் (சுனீல் கிருஷ்ணன்), விக்ரமாதித்தன் அமர்வு (லக்ஷ்மி மணிவண்ணன்), சீனக் கவிதைகள் (போகன் சங்கர்)

பெரும்பாலான அரங்குகளில் கவிஞர்கள் எதிர்வினையாற்றினர். வாசகர்கள் விவாதித்தனர். நான் பார்வையாளனாகவே இருந்தேன். ஒவ்வொரு அரங்கும் அந்தந்த கவிஞரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. யுவன், மோகனரங்கன், போகன், சாம்ராஜ் ஆகியோர் பெரும்பாலும் எல்லா விவாதங்களிலும் விரிவாகப் பேசினார்கள்.

இவர்களைக்கொண்டு ஓர் வலைச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும் என நினைத்துக்கொண்டேன். யுவனும், மோகனரங்கனும் தமிழ்ச்சிற்றிதழ் சூழலில் ஐம்பதாண்டுகளாக இருந்துவரும் அழகியல்மைய மரபின் பிரதிநிதிகள். சுந்தர ராமசாமியும், தேவதச்சனும், ஞானக்கூத்தனும் பேசியவற்றின் வளர்ச்சிநிலைகளை முன்வைப்பவர்கள். சாம்ராஜ் இடதுசாரி மரபில் இருந்து உருவாகி அதன் அழகியல்தொனிகளை மட்டும் முன்னெடுப்பவர். அவர்கள் என்றுமிருந்தனர், உதாரணமாக ராஜேந்திரசோழன், ஞானி, புவியரசு என ஒரு பட்டியல் உண்டு.

தமிழ் நவீன இலக்கிய மரபுக்குள் முற்றிலும் புதியகுரல் என்று போகனைத் தான் சொல்லவேண்டும். ஆன்மிகப் பார்வைகள், யோகப்பரிசோதனைகள், மாற்று உளவியல், மந்திர தந்திரங்கள், பேய்கள், எழுதப்படாத மறுபக்க வரலாறுகள் என ஒட்டுமொத்தமாகவே நூறாண்டுக்காலம் தமிழ் நவீனத்துவம்  ‘தர்க்கபூர்வமற்றவை’ என புறக்கணித்துச் சென்ற அனைத்தையும் பேசுபவராக அவர் அங்கே இருந்தார். அவற்றை திறமையாக கவிதையின் அழகியலுடன் இணைத்தார். அதன் வழியாக புதிய பார்வைகளையும் உருவாக்கினார்.

என்ன வியப்பு என்றால் சுந்தர ராமசாமி இருந்த அவையில் அவர் அவற்றைப் பேசியிருந்தால் சுராவின் பெரியமூக்கு கோவைப்பழமாகச் சிவந்து ஜிவுஜிவுவென ஆகியிருக்கும். அவற்றை அந்த அவையில் பேசுவதை அவரால் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால் அந்த அவையில் அந்தக்குரல் கவிதையின், இலக்கியத்தின், அறிவியக்கத்தின் இயல்பான ஒரு பக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. மெய்யாகவே பின்நவீனத்துவம் தமிழகத்தில் மலர்ந்துவிட்டிருக்கிறது!

முப்பதாண்டுக்கால இலக்கிய விவாதங்களில் இருந்து நான் கற்றது என்பது இலக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து நிகழவேண்டுமென்றால் அவை உவகையூட்டக்கூடியவையாக, நட்பார்ந்தவையாக இருந்தாகவேண்டும் என்பதே. இலக்கியத்தில் என்றும் மாறுபட்ட தரப்புகள் நடுவே மோதலும் முரணியக்கமும் உண்டு. ஆனால் பரஸ்பர மதிப்பும் நட்பும் இல்லாதவர் நடுவே ஆக்கபூர்வமான விவாதம் நிகழமுடியாது. அதுவும் நேரடி விவாதமாக நிகழவே முடியாது.

விவாதங்களை அழிப்பவை மூன்று தரப்பினரின் பங்கேற்பு. ஒன்று, விவாதங்களிலோ இலக்கியத்திலோ ஆர்வமே இல்லாமல் குடி மற்றும் அரட்டைக்காக மட்டுமே வருபவர்கள். இரண்டு, சில்லறை அரசியல் நிலைபாடுகளை செல்லுமிடமெல்லாம் கூச்சலிடும் உள்ளீடற்ற ஆளுமைகள். மூன்று, தாழ்வுணர்ச்சியோ மேட்டிமையுணர்ச்சியோ கொண்டு விவாதங்களில் மிகைவெளிப்பாடு செய்பவர்கள். அவர்கள் அரங்குகளை வெற்று அரட்டை அல்லது பூசல்களாக ஆக்கியமையால்தான் சென்றகாலங்களில் கூடுகைகள் நசிவுற்றன.

அதை பதினைந்தாண்டுகளுக்கு முன்பு நான் சொன்னபோது மறுத்தவர்கள் உண்டு, இன்று அது ஐயமில்லாமல் நிறுவப்பட்டுள்ளது. போலி ‘ஜனநாயகம்’ பேசி எல்லாரையும் உள்ளே விட்ட எவராலும் எங்கும் எதையும் தொடர்ந்து நடத்தமுடியவில்லை. இலக்கியத்துடன் ஆழ்ந்த உறவுள்ளவர்களை மட்டுமே கொண்டு நடத்தப்படுவன என்பதனால்தான் எங்கள் நிகழ்வுகள் நீடிக்கின்றன. இன்று மேலும் மேலும் தலைமுறையினர் உள்ளே வந்துகொண்டிருக்கின்றனர்

இந்த அமர்வில் பங்கேற்பாளர்களில் கவிஞர்கள் மட்டுமே மூத்தவர்கள். கவிஞர்களிலும் மதார் மிக இளையவர். மற்ற அனைவருமே முந்தைய தலைமுறையினராக தெரிந்தனர். நானெல்லாம் அதற்கும் முந்தைய தலைமுறை போல தோற்றமளித்தேன். அத்தனை இளையவர்கள்.

உண்மையில் இந்நிகழ்வை இணையத்தில் அறிவிக்கவில்லை. தெரிந்தவர்களை அழைத்தே நடத்தினோம். முப்பதுபேருக்குமேல் கூடமுடியாத நிலை. இடவசதி இல்லை. அறிவித்து நடத்தினால் எங்களால் தெரிவுசெய்ய முடிந்திருக்காது.

மிக உற்சாகமான உரையாடல். அரங்குக்கு உள்ளேயும் வெளியிலும். சிரிப்பும் கொண்டாட்டமுமான இரண்டு நாட்கள். மாலை ஒரு சிறிய நடை சென்று வந்தோம். மழைக்கார் இருந்துகொண்டிருந்தமையால் நீண்டதூரம் செல்ல முடியவில்லை.

முதல்நாள் ஒன்பது மணிவரை அமர்வுகள். அதன்பின் விருந்தினர்களை வெளியே ஏற்பாடு செய்திருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். பண்ணை வீட்டிலேயே நான் பங்கேற்பாளர்களுடன் தங்கினேன். தொடர்ந்து இரண்டு இரவுகளாக நல்ல தூக்கமில்லை. ரயில்பயணம், நண்பர்களுடன் அளவளாவிய இரவு. ஆகவே முன்னரே தூங்கிவிட்டேன். கவிதைப்பேச்சுக்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. அவை சிறப்பாக தூக்கம் வரச்செய்பவை என கண்டுகொண்டேன்.

அரங்குகளை முழுக்க பதிவுசெய்யலாமே என்னும் கோரிக்கை பெரும்பாலும் வெளிநாட்டிலிருப்பவர்களால் முன்வைக்கப்படுவதுண்டு. உண்மையில் அவ்வாறு எங்குமே பதிவுசெய்யப்படுவதில்லை. இயல்பான, ஒழுக்கான விவாதத்திற்கு பதிவுசெய்யப்படுகிறோம் என்னும் உணர்வு மிக எதிரானது. அத்துடன் அந்தப் பதிவுகள் ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் காணொலிகளுடன் சேருமே ஒழிய ஓர் அரங்கில் பங்குகொண்ட அனுபவத்தை அளிக்காது.

இந்த அரங்கு ஏறத்தாழ பதினைந்து மணிநேரம் நிகழ்ந்தது. பதினைந்து மணிநேரக் காணொலியை எவராலும் பார்க்கமுடியாது. அதில் ஒன்றவும் முடியாது. நேருக்குநேர் கவிஞர்களைச் சந்திப்பதனால்தான் பதினைந்து மணிநேரம் கவிதை பற்றிய விவாதத்தை ரசிக்க முடிகிறது. நூலாக அந்த விவாதங்களை அப்படியே எழுதினால் எழுநூறு பக்கம் தேவைப்படும். எழுநூறுபக்க கவிதை விவாத நூல் ஒன்றை ஒன்றரை நாளில் வாசிக்க எவராலும் இயலாது.  விவாத அரங்குகளுக்கு மாற்றே இல்லை.

மறுநாள் மதியத்துடன் அரங்குகள் முடிந்தன. அனைவரையும் கூட்டுப்புகைப்படம் எடுத்துக்கொண்டோம். சட்டென்று ஒரு கோழி வந்து எங்களை நோக்கி தலைதூக்கி நின்றது. சென்றபிறவியில் கவிஞராக இருந்திருக்கலாம். அது சொன்னது கவிதையாக இருந்திருக்கலாம், புரியவில்லை. சென்றபிறவியிலும் எவருக்கும் புரியாமலேயே போயிருந்திருக்கலாம்.

கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்

நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு

நித்யா கவிதை அரங்கு

எது நவீன கவிதை- ஓர் உரை

கவிதைக்குள் நுழைபவர்கள்…

கள்ளமற்ற கவிதை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.