Jeyamohan's Blog, page 727
August 26, 2022
மழைப்பாடல் – ராதாகிருஷ்ணன்
மழைப்பாடல் போரை யதார்த்த தளத்தில் நின்று அணுகுகிறது, போர் நல்லது என்கிறது, போரினால் பேரரசு உருவாகும், அது மக்களுக்கு நன்மை அளிக்கும் என்கிறது, எனவே போர் அவசியம் என்று நினைக்கிறது , போரினை உதிரமழை என கொண்டாடுகிறது. இந்த உதிரமழையை வரவேற்கும் பாடலாகத்தான் இந்த மழைப் பாடல் நாவல் அமைந்திருக்கிறது. இந்த உதிரமழையை, போரினை நிகழ்த்த போகிற பாண்டவர்களும், கௌரவர்களும் பிறக்கும் நிகழ்வை கொண்டதே இந்நாவல்
August 25, 2022
நீர்ப்பூச்சியும் சிப்பியும்
அன்புள்ள ஜெ
புத்தகங்களை வாசிப்பதில் எழும் சவால்கள் என்ன? குறிப்பாக கருத்தை உள்வாங்கிக்கொள்வதிலும், புத்தகங்களை வாசிக்கையில் எழும் சிந்தனைகளைத் தொகுத்து எழுதும் திறனிலும் எழும் சிக்கல்கள் என்ன?.
அண்மையில் மதுரையில் உங்களைச் சந்திக்கையில் ஒரு வாசகனாக குருதி கொதிக்க கனல் தேடும் ஒரு கரிக்கட்டையாக தங்கள் அருகில் தனல்விட்டு தகித்துக்கொண்டிருந்தேன் என்பதே உண்மை. ஒரு வேளை அதனாலோ இக்கேள்விகள் எழுந்தும் கேட்காமல் நின்றுவிட்டேன். .
நன்றி.
பிரியத்துடன்
அ.பிரசாத்
மதுரை.
அன்புள்ள பிரசாத்,
புத்தகவாசிப்பைப் பற்றி எப்போதும் நான் வலியுறுத்தியே பேசிவந்திருக்கிறேன். அது இங்கே மிக அரிதாக உள்ளது என்பதனால். நம் கல்விமுறை இன்று புத்தக வாசிப்புக்கு மிக எதிரானதாக, புத்தகவாசிப்பை தடுப்பதாக அமைந்துள்ளது. புத்தகவாசிப்பு கொண்டவர்கள் நம் கல்வியமைப்பில் தோல்வியடையவே வாய்ப்பு என்பதனால். நம் சமூகச்சூழல் வாசிப்பை அவமதிக்கிறது என்பதனால். நம் அறிவுச்சூழலேகூட இன்று திரைப்படங்களையும் காணொளிகளையும் சார்ந்ததாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதனால்.
இன்று புத்தகவாசிப்பின் சிக்கல்கள் என்ன, எல்லைகள் என்ன என்ற கேள்வி எதிர்மறையானதாக ஆகிவிடக்கூடும். ஆனாலும் அதை விவாதிக்கலாம்.
புத்தகங்களை வாசித்து குவிப்பவர்கள், அவற்றிருந்து முழுமையான அறிதலைப் பெற்றுவிடுவார்கள் என்று கூறமுடியாது. அதற்கான உதாரணங்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். புத்தகங்களை வாசிக்கும்போது அவர்களில் சிலர் முழுமையாக ஈடுபட்டு படிக்கிறார்கள். சிலர் புத்தகங்களின் மீது தொட்டு தொட்டுத்தாவிச் செல்கிறார்கள். தொட்டுத்தாவிச் செல்லும் இரண்டாம் வகையினரே மிக அதிகமாக படிப்பவர்கள். தாங்கள் ஏராளமான நூல்களை மிக விரைவில் படிக்கிறோம் என்ற பெருமிதமும் அவர்களுக்கு இருக்கும். அவர்களே தங்களை பெரிய வாசகர்கள் என எங்கும் முன்வைப்பவர்கள். ஆனால் அவர்களுடைய வாசிப்பு எந்த வகையிலும் உகந்தது அல்ல.
ஆற்றூர் ரவிவர்மா ஆழ்ந்து வாசிப்பதை சிப்பிவாசிப்பு என்றும் தாவிச்செல்லும் வாசிப்பை நீர்ப்பூச்சி வாசிப்பு என்றும் சொல்வார். சிப்பி ஒரு பாறையில் ஒட்டிக்கொண்டு எந்த அலைக்கும் அசையாமல் அங்கேயே அமர்ந்திருக்கும். நீர்ப்பூச்சி நீரை தொடாமல் நீரிலேயே வாழும். அத்தனை அலைகளுக்கும் மேலே எதையும் அறியாமல் இயல்பாக நின்றிருக்கும்.
நீர்ப்பூச்சி வாசிப்பு பெரும்பாலும் வாசிப்பவருக்கு ஏற்கனவே என்ன நிலைபாடு உள்ளதோ, என்ன ஆர்வம் இருக்கிறதோ அதைச் சார்ந்த உதிரிச் செய்திகளையும் தனிக்கருத்துகளையும் மட்டுமே அவருக்கு அளிப்பதாக அமையும். நூல்களையே கூட அவருடைய வாசிப்பு தனிச்செய்திகளாகவே அடையும். அதாவது எந்தச் சிற்பத்தையும் நொறுக்கி ஜல்லிகளையே அவர் அடையமுடியும். நூலில் இருந்து அவர் ஒரு முழுமைச் சித்திரத்தை உருவாக்கிக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் ஏற்கனவே அவரிடமிருக்கும் கருத்துநிலை வெவ்வேறு இடைவெளிகள் தகவல்களால் நிரப்பப்பட்டு ஒருவகையான முழுமைத் தோற்றத்தை அவருக்கு அளித்துக்கொண்டே இருக்கும். ஆகவே அவர்கள் தங்களை தெளிவானவர்களாக எண்ணிக்கொள்வார்கள். இத்தகையவர்களே பெரும் வாசிப்பாளர்கள் என்று அதிகமும் அறியப்படுகிறார்கள். பலசமயம் வாசிக்கும்தோறும் அறியாமை மிகுவது இதனால் தான்.
இத்தகைய வாசிப்புக்குறை கொண்ட ஒருவர் அவர் ஏற்கனவே கொண்டுள்ள நிலைபாட்டையே தான் வாசித்த அத்தனை நூல்களும் ஆதரிக்கின்றன எனுமிடத்திற்கு சென்று சேர்வார். அவரிடம் நாம் எதையுமே சொல்லிவிடமுடியாது. அவர் வாசித்த அத்தனை நூல்களின் பட்டியலும் சேர்ந்து வந்து அதை எதிர்க்கும். அவரிடம் புதிய ஒரு கருத்து சென்று சேரமுடியாது. அதுவரைக்கும் அவர் அறிந்த புத்தகங்களே சுவரென ஆகி நின்றிருக்கும். அவரிடம் மானுட ஞானமே தோற்று விலகிச்செல்லும்.
கற்கும் தோறும் அறியாமை பெருகும் இந்த வாசிப்பு ஒரு பரிதாபகரமான நிகழ்வு ஓர் எந்திரம் இரவு பகலாக ஓடுகிறது. ஆனால் அதிலிருந்து ஓசையும் தேய்மானமும் தவிர எதுவும் உருவாவதில்லை என்பது போல. வாசிப்பு ஒரு நோய்க்கூறாக ஆவது இப்போதுதான். இந்த வகையான வாசிப்பு கொண்டவர்கள் தங்கள் வாசிப்பு குறித்த பெருமிதம் மற்றும் ஆணவத்தால் அனைத்து இடங்களிலும் வந்து தங்களை முன் நிறுத்துவார்கள். பெரும்பாலும் தாங்களாகவே எக்கருத்தையும் உருவாக்கவோ முன்வைக்கவோ முடியாதவர்களாக இருப்பார்கள். ஓர் எளிய நிலைபாட்டை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்வார்கள். ஆனால் பிறர் கூறும் கருத்துகளில் எளிமையான தகவல் பிழைகள் அல்லது தங்களுக்குத் தோன்றும் அபத்தமான முரண்பாடுகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார்கள். அதன்வழியாக கருத்துரைக்கும் அனைத்துக்கும் மேலாக தங்களை நிறுத்திக்கொள்வார்கள்.
அந்த இடம் இயல்பாகவே அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அவ்வண்ணம் அளிக்கப்படாதபோது அவர்கள் சீற்றம் அடைவார்கள். இத்தகையோரில் பலர் மிக எளிய இலக்கணப்பிழைகளை, சொற்பிழைகளைச் சுட்டிக்காட்டி மகிழ்வதைக் கண்டிருக்கிறேன். இசைநிகழ்வுகளில் தாளப்பிழை நிகழ்வதற்காக காத்து செவிகூர்ந்து அமர்ந்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது வாசிப்பு அளிக்கும் பேதமை. இது இவர்களை காலப்போக்கில் கசப்பு கொண்டவர்கள் ஆக்குகிறது. எதையும் நேர்நிலையில் சுட்ட முடியாதவர்களாக, ஏளனமும் வசையும் மட்டுமே நிறைந்தவர்களாக, ஒவ்வாமையை அளிப்பவர்களாக மாற்றுகிறது.
முதல் வகையான சிப்பி வாசிப்பில் உள்ள குறைபாடு வேறுவகையானது. இதை நாம் யோசித்திருக்க மாட்டோம். மிக ஆழ்ந்து வாசிக்கையிலுமே ஒரு பிழை உருவாகக்கூடும். ஆழமென்பது உச்சம். உச்சமென்பது ஒரு முனை. மிகக்குறுகிய இடம் அது. மிக ஆழ்ந்து வாசிப்பவர்கள் பலர் அகன்ற வாசிப்பற்றவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். ஒருபுள்ளியில் அவர்கள் வாசிப்பு குவிந்திருப்பதனால் அத்தளம் சார்ந்து மிக அரிய மிக தீவிரமான கருத்துக்களை முன்வைக்க முடியும். அவற்றுக்கு கருத்துத் தளத்தில் பெருமதிப்பு உண்டு. ஆனால் அக்கருத்துகள் அனைத்துமே மிகையானதாக, மிகையின் கோணல் கொண்டதாகவும் இருக்கும். அவற்றுக்கு முழுமையின் மதிப்பிருக்காது.
இத்தகைய வாசகர்கள் துறைநிபுணர்கள் என்றால், தங்களுடைய எல்லையைத் தாங்களே உணர்ந்து தங்கள் தளத்திற்குள் நின்று பேசும்போது பிழையற்றவர்களாக இருப்பார்கள். அன்றி ஒருதுறையில் அடைந்த தேர்ச்சியினால் அனைத்து துறைகளிலும் கருத்து சொல்ல முற்படும்போது பொதுவான கருத்துச் சூழலுக்குத் தடையாக ஆகிறார்கள்.மிக அரிதாக இவர்களில் பலர் சூழலால் சீண்டப்பட்டு, தங்கள் துறையிலேயே அதீத நிலைபாடு எடுத்துவிடுவதுண்டு. அந்நிலையில் மிக அபத்தமான கருத்துக்களை இவர்கள் முன்வைப்பதும் உண்டு. சமூகவியல், வரலாறு போன்ற துறைகளில் அசட்டுத்தனமான உச்சநிலைபாடுகளை முன்வைக்கும் பேரறிஞர்களை நாம் காணலாம்.
வாசிப்பின் எல்லை என்பது இதுவே. இந்த இரு எல்லைகளுக்கும் நடுவே நல்ல வாசிப்பு நிகழவேண்டும். அதன் பொதுவான இலக்கண வரைபடம் ஒன்றை இவ்வண்ணம் சொல்லலாம். ஒரு மையவட்டத்தில் இருந்து விரிந்து விரிந்து பரவும் வெளிவட்டங்கள் போல் வாசிப்பு இருக்கவேண்டும். மையவட்டமே அவ்வாசகரின் தனித்தேடலும், ரசனையும், தேர்ச்சியும் கொண்ட களம். அங்கே அவர் மிக ஆழ்ந்து வாசிக்கவேண்டும். தொடர்புடைய அடுத்தகட்ட வட்டத்தில் எல்லைக்குட்பட்ட வாசிப்பு தேவை. அதற்கு அடுத்த வட்டத்தில் மேலும் எல்லைக்குட்பட்ட வாசிப்பு தேவை.
உதாரணமாக, ஓர் இலக்கியவாசகனின் மையம் இலக்கியம். அவன் பேரிலக்கியங்களையும் சமகால இலக்கியங்களையும் அவை சார்ந்த இலக்கிய விமர்சனங்களையும் அங்கே ஆழ்ந்து வாசிக்கவேண்டும். அதற்கு அடுத்த வட்டம் பண்பாடு மற்றும் சமூகவியல் செய்திகள். அவை இலக்கியத்துடன் நேரடித் தொடர்பு கொண்டவை. ஆகவே அவன் சற்று ஆழ்ந்து வாசிக்கவேண்டும். அதற்கு அடுத்த வட்டம் அரசியல், அழகியல் மற்றும் மொழியியல் கோட்பாடுகள். அவற்றை அவனே ஓர் எல்லையை அமைத்துக்கொண்டு அடிப்படைகளை மட்டும் தெரிந்துகொள்ளவேண்டும். அவற்றில் அதிதீவிரமாகச் செல்பவர் இலக்கியவாசிப்பை இழப்பார்.
இப்படியே வட்டங்கள் விரியலாம் வரலாறு அடுத்த வட்டம். தத்துவம் அதற்கு அடுத்த வட்டம். அவற்றில் அவன் இலக்கியவாசகனுக்கு தேவையான அளவு மட்டுமே வாசிக்கவேண்டும். மிக ஆழ்ந்து சென்று அங்கே நிகழும் விவாதங்களில் தரப்பு எடுத்தான் என்றால் தன் அறிவுச்செயல்பாட்டைச் சிதறடிக்கிறான். ஆனால் ஓர் இலக்கியவாசகன் இயற்பியல், வேதியியலுட்பட அறிவியலில்கூட பொதுவாசகனுக்குரிய அறிமுகம் பெற்றவனாகவும் இருக்கவேண்டும். அதுவே இலட்சியவாசிப்பு.
ஜெ
மதுமிதா
மதுமிதா நீண்டகாலமாக என் நண்பர்.ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். எழுத்தும் எண்ணமும் என்னும் அக்கால விவாதக்குழு ஒன்றில் இருந்தோம். (அதில் எழுதிய தொப்பி திலகம் கட்டுரைகள்தான் விவாதமாயின) தொடர்ச்சியாக இலக்கியத் தொகுப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக மதுமிதா செயல்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். இன்று திரும்பிப் பார்க்கையில் அவருடைய பங்களிப்பின் அளவு திகைப்படையச் செய்கிறது.
மதுமிதாவெந்து தணிந்தது காடு
அன்புள்ள ஜெ,
வெந்து தணிந்தது காடு உங்கள் கதை என்று கேள்விப்பட்டேன். கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்தக் கதை எந்த தொகுதியிலிருக்கிறது? நாவலாக எழுதப்பட்டதா?
பிரபாகர் எம்.
***
அன்புள்ள பிரபாகர்,
கொஞ்சம் தேடித்தான் பாருங்கள்.
அந்தக் கதையின் பெரும்பகுதி சினிமாவுக்காக எழுதப்பட்டது. சினிமாவின் தேவைக்காக மாற்றப்பட்டு, எடிட்டிங்கில் மறுதொகுப்பாகி, இறுதிவடிவம் அமைந்தது.
அக்கதை உண்மையான ஒருவரின் வாழ்க்கையை அடியொற்றியது. (ஆனால் புனைவுக்காக நிறையவே மாற்றப்பட்டுள்ளது. நேரடியாக எவரையும் குறிக்கவில்லை) கொஞ்சம் சினிமாவுக்காக ‘கிளாமரைஸ்’ செய்யப்பட்டாலும் அடிப்படையில் யதார்த்தமானது.
உண்மையான வாழ்க்கைக்கு சில இயல்புகளுண்டு. சினிமாக்கதைக்காக உருவாக்கப்படும் செயற்கையான ‘திரில்’ அதில் இருக்காது. சவால்விடுவது, சொல்லி அடிப்பது, திகைக்கவைக்கும் திருப்பங்கள், நம்பமுடியாத சாகசங்கள், மிகையான ஹீரோத்தனம், பயங்கரச் சண்டைகள் எல்லாம் இருக்கமுடியாது.
அதேபோல மெய்யான வாழ்க்கை என்றால் ஒரு பகுதி சாதாரணமாக நாம் அறிந்ததாகவே இருக்கும். முற்றிலும் புதியதாக இருக்காது. அந்த வாழ்க்கையில் ஒரு பகுதி நம் வாழ்க்கையில் எப்படியும் நடந்திருக்கும். முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருக்காது.
மெய்யான வாழ்க்கையில் செயற்கையாக ‘டெம்போ’ ஏற்ற முடியாது. கூடாது. கதை ஒருவகையான ஆற்றொழுக்குத்தன்மை கொண்டிருக்கும். கௌதம் வாசுதேவ் மேனன் அந்தவகையான கதையை விரும்பினார். அவருடைய உலகம் அது, யதார்த்தம்.
அப்படியென்றால் அதில் என்ன இருக்கும்? உண்மையான வாழ்க்கையில் உள்ள தத்தளிப்பும், போகும்பாதை சரிதானா என்னும் அலைக்கழிப்பும், சிக்கிக்கொண்டு விடுபடத் தவிப்பதும் இருக்கும். மனித குணங்களின் விசித்திரங்கள் இருக்கும். எல்லாவற்றையும் விட விதி மனிதர்களை தூக்கிக் கொண்டுசெல்வது இருக்கும். நம் வாழ்க்கை எப்படியோ அதிலும் கொஞ்சம் இருக்கும்.
அப்படிப்பட்ட படம் வெந்து தணிந்தது காடு. வன்முறை இருந்தாலும் அடிப்படையில் மென்மையான உணர்ச்சிகளின் கதை. வெளியேற முயலுந்தோறும் சிக்கிக்கொள்வதன் யதார்த்தம். நாம் அனைவரும் வாழும் வாழ்க்கையின் இன்னொரு வடிவம்.
ஜெ
தமிழ் விக்கி, தூரன் விருது, கடிதங்கள்
கரசூர்.பத்மபாரதியின் இந்த புகைப்படத்தைப் ஜி.எஸ்.எஸ்.வி நவீனின் வாட்ஸப் ஸ்டோரியில் பார்த்தேன்.பார்த்தவுடன் அனைவரையும் மகிழவைக்கும் புகைப்படம். இந்தப் புகைப்படம் ஏன் எனக்கு இத்தனை பிடித்ததென சிந்தித்துக்கொண்டிருந்தேன். இதில் அவரிடம் வெளிப்படுவது genuine and confidence smile. தமிழில் உறுதியான மெய்சிரிப்பு என்று சொல்லலாம். இங்கு உறுதியான என்கிற சொல் இன்றியமையாதது. நிறைந்த தருணத்தில் மனதுக்குள் மகிழ்வு ஓடிக்கொண்டிருக்கும் பொது கூடவே ஐய உணர்வும் ஓடிவரும். ஐய மனம் அந்த தருணத்தை பகுத்து கேள்விகளாக முன்வைக்கும். அந்த கேள்விகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பதிலுரைத்து அதை ஐய மனம் ஏற்றுக்கொண்ட பின் மகிழ்வோடு உறுதி இணையும்.அந்த உறுதியை அளிப்பது அடைபவரின் தகுதியும், அளிக்கும் வாய்ப்பைப்பெற்றவரின் தகுதியும். இந்த புன்னகை எனக்கு சொல்வது அதுதான்.
விருது பெற்ற கரசூர்.பத்மபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மோகன் நடராஜ்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி தூரன் விருதுபெற்ற கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இத்தனை பெரிய விழாவும் விருதும் ஓர் ஆய்வாளருக்கு எப்போதுமே நிறைவூட்டக்கூடியதுதான். அதிலும் உங்கள் தளத்தில் விருது பெறுபவர் ஒருமாதமாக கொண்டாடப்படுகிறார். பல்வேறு கடிதங்களும் கட்டுரைகளும் வெளிவருகின்றன. அவர் தமிழகம் முழுக்க வாசகர்களுக்கு அறிமுகமானவராக ஆகிவிடுகிறார். தொடர்ச்சியாக படைப்பாளிகளை இவ்வாறு அறிமுகம் செய்தீர்கள். இன்று இலக்கியத்துக்கு வெளியே ஆய்வாளர்களை அறிமுகம் செய்கிறீர்கள். மிகச்சிறந்த செயல்பாடு இது. இது தொடரவேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சபரிகிரீசன் சுப்ரமணியம்
ஒளி நின்ற கோணங்கள்- தாமரைக்கண்ணன்
தமிழ் விக்கி, ஈரோடு விழா -கடிதம்
தமிழ் விக்கி, தூரன் விருது விழா – கடிதங்கள்
தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா – கடிதம்
தமிழ் விக்கி – தூரன் விருதுவிழா, ஈரோடு, முதல்நாள்
தமிழ் விக்கி தூரன் விருது : கமல்ஹாசன் வாழ்த்து
தமிழ் விக்கி தூரன் விருது பதிவு – வல்லினம்
தமிழ் விக்கி தூரன் விருது – வலைதளம்
தமிழ் விக்கி தூரன் விருது விழா அறிவிப்பு
தமிழ் விக்கி தூரன் விருது: கரசூர் பத்மபாரதி சந்திப்பு
தமிழ் விக்கி -தூரன் விருது- கி.ச.திலீபன்
தமிழ் விக்கி -தூரன் விருது- கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது- கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது , கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்
தமிழ் விக்கி- தூரன் விருது- கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்
உடன்தங்கல் – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
உடன்தங்கல் விண்ணப்பத்திற்கு ‘வருக’ என்று பதில் வந்த கணத்தில் இருந்து மன ஊற்றில் ஆனந்தம் பெருக ஆரம்பித்தது. உங்களோடு தங்கப்போகும் 6 நாட்களை வெவ்வேறு விதமாக கற்பனை செய்து கொண்டேன். பரவசமும் பதற்றமும் கலந்த பட்டமாய் காற்றில் சுழன்று கொண்டிருந்த என்னை, மனைவி என்னும் மாஞ்சா நிதானப்படுத்திக் கொண்டிருந்தது.
அந்தியூர் மணி அண்ணாவிடம் கேட்டு பேருந்து நேரத்தை தெரிந்து கொண்டு ஆகஸ்ட் 8 காலை 10 மணிக்கு இடத்தை அடைந்தேன். அங்கே பரபரப்பாக இயங்கிக்கிக்கொண்டு இருந்தது காற்று மட்டும் தான். நகரத்தில் வாழும் மனிதர்களுக்கு முற்றிலும் பழக்கப்படாத வேறு ஒரு உலகில் வாழ்ந்துகொண்டிருந்தனர் அங்குள்ள சோழகர்கள்.முக்தி அடைந்த யோகிகளோ என்று கூட சந்தேகம் வரவைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்தவர்கள்.
நான் வந்துசேரும் முன்னரே வடிவரசு மற்றும் உதய் அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். உங்கள் வருகைக்காக காத்திருந்தோம். ஒரு சிவப்பு பொலேரோ ஜீப்பில் நீங்களும் மற்ற நண்பர்களும் வந்து இறங்கினீர்கள். அந்த கணம் முதல் அந்தியூரில் உங்களை கட்டி அணைத்து விடைபெறும் வரை நிகழ்ந்தவை அனைத்தும் கடவுளும் (என் மனைவியும் :) கொடுத்த வரம் என்றே உணர்கிறேன்.
குருவிடம் அருகில் அமர்ந்து கற்றுக்கொள்ளும் பேரானந்த அனுபவம். ஒவ்வொரு கணமும் முழு விழிப்புடன் பெரும் உற்சாகத்துடன் கற்றல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. வாழ்வின் ஒவ்வொரு கணமும் இதுபோல் வாழ்ந்தால் வாழ்வே பெரும் களியாட்டமாக அமையும் என்று உணர்ந்தேன்.
திட்டமிட்ட வகுப்புகளோ நிகழ்ச்சிகளோ இல்லாத போதிலும் ஓரிரு நாட்களில் ஒரு ஒழுங்கு வந்தமைந்தது. தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. மற்ற நேரங்களிலும் இடைவிடாது உங்களை சுற்றிக்கொண்டே இருந்தோம். உங்களோடு தங்கும் ஒரு கணம் கூட வீணாகிவிடக் கூடாதென்ற சிரத்தை அனைவரிடமும் இருந்தது. ஒரு கணம் கூட சோர்ந்துவிடாத உங்களைக் கண்டு வியந்து கொண்டே இருந்தேன். தீவிரம் இருந்த அதே நேரத்தில் சிரிப்பும் உற்சாகமும் கலந்து ஆறு நாட்களும் பெரும் கொண்டாட்டமாக இருந்தது.
இலக்கியம் வரலாறு தத்துவம் ஆன்மிகம் சார்ந்த உரையாடல்கள் மிகுந்து இருந்த போதிலும் பல்வேறு துறைகளைப்பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டவை அனைத்தும் தமிழ் விக்கி ஐ புரட்டிக்கொண்டு இருந்தது போன்ற அனுபவம் தந்தது. கடைசி வகுப்பில் ஐந்து நாட்கள் கற்றது அனைத்தும் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு 2000 பக்க புத்தகத்தை படித்து கற்கவேண்டிய அனைத்தும் இந்த ஐந்து நாட்களில் கற்றிருக்கிறோம் என்று உணர்ந்தபோது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ‘கற்றலில் கேட்டல் நன்று’ என்ற கூற்றுக்கு சான்றாக அமைந்தது.
மலைகள் சூழ அமைந்திருந்த அங்கே அவ்வப்போது குட்டிக் குட்டி மழைச் சாரல்கள் வந்த வண்ணம் இருந்தன. இயற்கையை அறிய அவதானிக்க அனுபவிக்க அதைப்போன்ற ஒரு இடம் மிகவும் முக்கியம் என கருதுகிறேன். புறத்திலுள்ள அமைதி நம் அகத்தையும் அடைந்து மனதில் இனிமை பரவ செய்கிறது.
நம் மனம் செயல்படும் விதம் சில சமயம் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். இவ்வளவு கொண்டாட்டங்களுக்கும் கற்றலுக்கும் நடுவில் வீட்டிற்கு திரும்பி செல்லப்போகும் நாளை மனம் ஓரிரு முறை கணக்கிட்டது. முற்றிலும் புதிய அனுபவத்திற்கும் தீரா விழிப்புநிலைக்கும் எதிரக மனம் போடும் மாய நாடகம் போல தோன்றியது.
அந்தோணி அண்ணாவின் கருணையில் ஆறு நாட்களும் சுவையான உணவும் அமைந்தது. சமையலுக்கு உதவி செய்பவர்கள், மேற்பார்வையிடுபவர்கள், உதவி செய்பவர்களுக்கு உதவியாளர்கள் என கூட்டம் நிரம்பிய சமையலறை எப்பொழுதும் கலகலப்பு நிறைந்த இடமாகவே இருந்ததது.
இவையனைத்துமே மேல்மனத்தின் அறிதல்களும் அவதானிப்பிகளும் மட்டுமே. இந்த ஆறு நாட்களின் அனுபவம் என்னுடைய ஆழ்மனதில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என் அறிவுக்கு எட்டாதது. இயற்கையின் கர்ம கணக்குகளில் மகத்தான ஆறு நாட்களை சேர்த்துவிட்டேன் என்பது மட்டும் உறுதி.
பி . கு
அந்தியூரில் இருந்து கிளம்பி எங்கள் வீட்டை அடைந்தேன். பொதுவாக அம்மக்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயங்களான சாப்பிட்ட உணவுகளும் அதை சமைத்த அந்தோணி அண்ணாவின் கைப் பக்குவத்தையும் உற்சாகமாக பகிர்ந்து கொண்டேன்.
நினைவுகளை அசைபோட்டபடியே மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அம்மா வந்து அருகில் உட்கார்ந்தார் .”குட்டி (என் தங்கை ) மகளுக்கு பிறந்தநாள் வரப்போகிறது. ஒரு கமல் செய்து போடலாமா ?”நான் புரியாதபடி அம்மாவைப் பார்த்தேன். திரும்பவும் சொன்னார்.
ஆம். நான் தாய்மாமன்.
என் மனைவி தொலைபேசியில் அழைத்தாள்,” சென்னைக்கு நாளை கிளம்பவேண்டும். Fully furnished வீடு இருக்கிறதா என்று விசாரித்து பார்க்கலாமா ?”
ஆம். நான் குடும்பத்தலைவன்.
அம்மாவை அழைத்துக்கொண்டு காரில் மாமனார் வீட்டுக்கு கிளம்பினேன். கொச்சி சேலம் நெடுஞ்சாலையை அடைந்தோம். நீண்ட நெடும் சாலை. ஆம். இது மலைப்பாதை இல்லை. மலையில் இருந்து காலையிலேயே கீழிறங்கிவிட்டேன்.
மாமனார் வீட்டை அடைந்தவுடன் என நாலு வயதுக் குழந்தை என்னை நோக்கி “அப்பா!” என்று ஆனந்தமாய் ஓடி வந்தது. ஓடிச்சென்று அவனைக் கட்டி அணைத்து முத்த மழை பெய்தேன்.
ஆம். நான் இந்த மாபெரும் இயற்கையின் ஒரு அங்கம்.
பேரன்புடன்,
ரா. ஆனந் குமார்
August 24, 2022
வீண்விருதுகள்
அன்புள்ள ஜெ,
ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின் கண்டனம் மிகக்கடுமையான வலியை உருவாக்கும் என நினைக்கிறேன். யுவபுரஸ்கார் பற்றி நீங்கள் எழுதியது சரிதான். ஆனால் கண்டனம் தேவையா?
ஸ்ரீராம் கணேஷ்
அன்புள்ள ஸ்ரீராம்,
நான் நேர்மாறாக எண்ணுகிறேன். எந்த இளம் படைப்பாளிக்கும் முதன்முதலில் தேவையாக இருப்பது இலக்கியம் ஒன்றும் அத்தனை எளிதல்ல என்னும் தன்னுணர்வே. எதையும் வாசிக்காமல், எதையாவது எழுதி, ,எப்படியோ எவரையோ பிடித்து விருதுகள் பெற்றுவிட்டால் இலக்கிய இடம் அமைந்துவிடாது என்னும் யதார்த்தம்தான். உண்மையில் யதார்த்தங்கள் கொஞ்சம் வலியுடன் வந்து சேர்ந்தாலொழிய உறைப்பதில்லை.
அந்தத் தொகுதியை நீங்கள் மின்நூலாகவே படிக்கலாம். அதை எழுதும் ஒருவர் பொதுவெளியில் அதை வைக்கவே கொஞ்சம்கூசுவார், அத்தனை முதிர்ச்சியற்ற எழுத்து. அது அப்படியே நடுவர்களின் நெஞ்சை உலுக்கி விருதை அடைந்தது என்று நம்ப அதீதகற்பனை வேண்டும். அதைப்போன்ற ஒரு நூல் விருதுபெற ஒரே வழிதான் இங்கே.
அப்படி ஒரு விருதினால் ஆவதென்ன? அதைப்போல முன்பு இங்கே விருதுபெற்ற பலர் உண்டு, அவர்களெல்லாம் எங்கே? அவர்களுக்கு என்ன இடம் உருவாகியிருக்கிறது? அவர்கள் அடைந்தவை எல்லாம் சில விருதுதொகைகள். சில மேடைகளில் இடங்கள். கல்வித்துறையாளர் என்றால் சிற்சில லாபங்கள். அதைத்தான் இலக்காக்குகிறார் இந்த இளம் கவிஞர் என்றால் அவர்மேல் நமக்கு என்ன கருணை?
எந்த விருதும் அவ்விருது பெறுபவரின் தகுதி ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கையிலேயே பெருமைக்குரியதாகிறது. விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுகள் இதுவரை பல இளையோருக்கு வழங்கப்பட்டுள்ளன. எவருடைய இலக்கியத் தகுதியும் ஐயத்திற்குள்ளானதில்லை.
ஓர் எழுத்தாளர் தன் தகுதியை நிரூபித்தபின் பெறும் விருதே அவருக்கு மெய்யான புகழை அளிக்கும். அவ்வண்ணம் தகுதி கொண்டபின் அவர் விருது பெறுகையில் அது சிலரால் காழ்ப்புடனோ, அறியாமையாலோ விமர்சிக்கப்பட்டால்கூட அதை அந்த எழுத்தாளர் பொருட்படுத்த மாட்டார். அவருக்கு தானிருக்கும் இடம் தெரியும்.
அவ்வண்ணம் இல்லாமல் பெறப்படும் விருது இழிவைவே அளிக்கும். விருது பெறுபவர் சட்டென்று பலர் பார்வைக்கு வருகிறார். அவர்மேல் விழும் அக்கவனம் அவர் தகுதியற்றவர் என்றால் உடனடியாக கேலியாக மாறும். முழுநிராகரிப்பாக ஆகும். மெல்லிய அளவில் மதிப்புடன் இருந்தவர்கள்கூட தகுதியற்ற விருதை பெற்றபின் அவமதிப்படைந்து எவராலும் வாசிக்கப்படாதவர்கள் ஆவதை காணலாம்.
இந்த இளைஞர் இவ்விருதால் ஓர் அவமதிப்பையே அடைந்துள்ளார். இதை அவருக்கு அளித்தவர்கள் அவரை சிறுமைசெய்கிறார்கள். அவர் தன் எழுத்து பற்றிய போலியான நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள். அவர் இலக்கியம் கற்று, தன்னை உணர்ந்து, எழுதுவதை நிரந்தரமாக தடை செய்கிறார்கள். தங்களுடைய ஏதோ சுயநலத்தின்பொருட்டு அவரை பலியிடுகிறார்கள்.
அந்த இளைஞர் இன்னும் ஐந்தாண்டுகளில் ஒருவேளை இலக்கிய அறிமுகம் அடையக்கூடும். நல்ல கவிதைகளும் எழுதக்கூடும். ஆனால் இனி அவர் மேல் அவநம்பிக்கையே சூழலில் நிலவும். அவரை வாசிக்க மாட்டார்கள். கூர்ந்து வாசிக்கப்படவில்லை என்றால் கவிதை தொடர்புறுத்துதலை இழக்கும் என்பதனால் அவருக்கு முழுமையான புறக்கணிப்பே எஞ்சும்.
அவருக்கு உண்மை உறைக்கும்படிச் சொல்லப்படவேண்டும். பொய்யான பாராட்டுக்கள் அவரை அழித்துவிடும். கவிதை என்பது அவர் எழுதுவது அல்ல. அத்தகைய வரிகளை எவரும் எங்கும் எழுதலாம். பல்லாயிரம்பேர் இங்கே அதைப்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை எழுதினால் அவர் அந்த பல்லாயிரவரில் ஒருவராகவே எஞ்சுவார்
கவிதை என்பது வேறு. அதன் முதல் தகுதி தனித்தன்மை. பிறிதொன்றிலாத தன்மை. இதுவரையிலான தமிழ்க்கவிதையை கொங்குதேர் வாழ்க்கை (தமிழினி) போன்ற தொகுதிகள் வழியாக அவர் வாசிக்கலாம். அவர் நிற்குமிடமென்ன என்று அவருக்கே தெரியும்.
அதன்பின் அவருக்கு மட்டும் உரிய வரிகளை அவர் எழுதலாம். அவை அவருக்கு இலக்கிய இடத்தை அளிக்கக்கூடும். இந்த அசட்டுத்தனமான விருதால் அவர் அடையும் சிறுமை அதன்வழியாக அழியக்கூடும்.
அவரிடம் சொல்லவிரும்புவது இதையே.கவிதை, இலக்கியம் என்பதெல்லாம் எளிமையான விளையாட்டுக்கள் அல்ல. மேதைகள் எழுதிய மொழி இது. அவர்களின் தொடர்ச்சியாக அமைய, அவர்கள் எழுதியவற்றுக்கு அப்பால் ஒரு வரியேனும் எழுத, ஆழ்ந்த அர்ப்பணிப்பு தேவை. நீடித்த கவனம் தேவை. எவர் என்ன சொன்னாலும் இலக்கியம் ஒரு தவமேதான்.
அந்த இளைஞர் இலக்கியவாதிக்குரிய அடிப்படையான நுண்ணுணர்வும் தன்மானமும் கொண்டவராக இருந்தால் இச்சொற்கள் அவரைச் சீண்டும். இதை ஓர் அறைகூவலாகவே எடுத்துக்கொள்வார். வாசிக்கவும் முன்னகரவும் முயல்வார். என்றேனும் ஒரு நல்ல கவிதையுடன் அவர் என் முன் வந்து நின்றாரென்றால் அவரை நான் தழுவிக்கொள்வேன்.
மாறாக, இதை ஒரு வசைபாடலாக எடுத்துக்கொண்டு தன்னுடைய முதிரா எழுத்தை பாதுகாக்க முயன்றார் என்றால், எந்நிலையிலும் முன்னகர மறுத்தார் என்றால் அவர் முழுமையான புறக்கணிப்புக்கே உரியவர். இதேபோல ஏதேனும் விருதுகளை வென்றாரென்றால் அவ்விருதுக்குரிய நடுவர்கள் மட்டுமே கண்டனத்துக்குரியவர்கள்.
இன்று அவர் இலக்கியம் என ஏதுமறியாமல் வந்து வாழ்த்தும் கும்பலை, இக்கண்டனத்தைச் சொல்லி துக்கம் விசாரிக்கும் கும்பலை தவிர்க்கும் நுண்ணுணர்வையாவது காட்டுவாரா என்று பார்ப்போம்.
இது அவருக்கான குறிப்பு அல்ல. இந்நிலைமை எந்த இளம் படைப்பாளிக்கும் வரலாம். அனைவருக்குமாகவே இதை எழுதுகிறேன். எழுத்தாளன் ஈட்டிக்கொள்ளவேண்டியது தன்னிமிர்வு. இப்படி ஒரு விருதுக்காக அதை இழப்பதைப்போல இழப்புவணிகம் வேறில்லை.
விருது என்பது ஒருவருக்கு ’லக்கிபிரைஸ்’ அடிப்பது அல்ல. அது அரசு அல்லது ஓர் அமைப்பு அளிக்கும் ஓர் இலக்கிய ஏற்பு. அதன்பின் ஓர் அளவுகோல் உள்ளது. அந்த அளவுகோலை ஏற்காதவர்கள் அதை விமர்சிக்கவேண்டும். அதுவே இலக்கிய நெறி. சுந்தர ராமசாமி ஆணித்தரமாக இதை எழுதி நாற்பதாண்டுகளாகின்றது.
வீட்டு விசேஷத்துக்கு மொய்வைப்பதுபோல வாழ்த்துரைப்பவர்கள் செய்யலாம். அது இலக்கியவாதி செய்யும் செயல் அல்ல. பாமரராக இருப்பது உங்கள் சௌகரியம். பிறரையும் உங்கள் தளத்துக்கு இழுக்க முனையவேண்டாம்
ஜெ
கே.வி.கிருஷ்ணன் சிவன், காசியின் தமிழ்முகம்
காசி செல்பவர்கள் பலரும் கே.வி.கிருஷ்ணன் சிவன் அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வரும் வழக்கம் இருந்தது. அது சென்றகால வரலாற்றினுள், தமிழின் பெருங்கவிஞர் ஒருவரின் வாழ்க்கையின் ஒரு பகுதிக்குள் சென்று மீளும் கனவுநிகர் அனுபவம்
கே.வி. கிருஷ்ணன் சிவன் – தமிழ் விக்கி
தமிழ் விக்கி, தூரன் விருது -கடிதம்
ஈரோட்டுக்கு வர வேண்டும் என முடிவு செய்தது முதல் அங்கிருந்து மனமில்லாமல் புறப்பட்டது வரையிலான மூன்று நாட்கள் மிக மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பின என்றே சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை சென்னையில் புறப்படும் போது மிகுந்த களைப்போடு கிளம்பினேன். மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்றால் சென்னையே பாதி காலியாகிவிடும் போல. கோயம்பேட்டில் அத்தனை கூட்டம். ஆறு மணிநேரம் ஈரோட்டுக்கு பயணம் என்றால் சென்னையைத் தாண்டுவதற்கே ஆறு மணிநேரம் ஆனது.
சனிக்கிழமை காலையே ஈரோட்டுக்கு வந்து சேர்ந்த போதும் இரவு தான் நிகழ்வு தொடக்கம் என்பதால் ஈரோட்டில் பாயும் பொன்னி நதியையும் புத்தகக் காட்சியையும் பார்த்துவிட்டு இரவு கவுண்டச்சிபாளையம் வந்து சேர்ந்தேன். நான் வரும்போதே சுவாமி பிரமானந்தா நிகழ்வு பாதி கடந்திருந்தது. அதன் பிறகான அறிவிப்பற்ற உங்களின் அமர்வு தமிழ்விக்கியின் ஆழத்தை புரிந்துக்கொள்ள உதவியது. தமிழ்விக்கிக்காக நீங்களும் நண்பர்களும் அயராது உழைத்து வருவதையும் அதன் பலன் கண்கூடாகத் தெரிவதையும் உணர முடிந்தது. தமிழுக்கான கொடை இது. நீங்கள் சொல்வது போல நம்மால் மட்டுமே இதை செய்ய முடியும் என்கிற துணிபு தான் இன்னும் என்னைப் போல ஆயிரம் இளைஞர்களை உங்கள் வழியில் கூட்டி வருவதாக நம்புகிறேன்.
ஆய்வாளர் அ.கா.பெருமாள், பேராசிரியர் லோகமகாதேவி, மகுடீஸ்வரன் அமர்வுகள் ஆழமும் நுட்பமும் வாய்ந்தனவாக அமைந்தன. ஞாயிற்றுக்கிழமையின் பொழுது கண நேரத்தில் முடிந்தது போல இருந்தது. விருது மேடையில் உங்களின் உரை கச்சிதமாக நெய்யப்பட்டிருந்தது. ஏன் இந்த விருது கரசூர் பத்மபாரதிக்கு என அவரது ஆய்வுகளை முன்வைத்து பேசிய அ.கா.பெருமாள் அவர்களின் உரை குறிப்பிடத்தக்க ஒன்று. இன்றைக்கு பல்கலைக்கழகங்களில் அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் ஆய்வுகளின் தரம் நம்மால் யோசித்து பார்க்கக் கூடியது தான். ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்விக்கி, விக்கிப்பீடியாவுக்கு எதிர்ச்செயல் மட்டுமில்லை, நேர் முன்மாதிரியான செயல் என நீங்கள் குறிப்பிட்டது போல இந்த விருதும் ஆய்வுகளுக்கான முன்மாதிரி எனச் சொல்ல முடியும்.
நிகழ்வு முடிந்தபோது மனமும் நிறைந்திருந்தது. அன்றைக்கு எனக்கான தொடர்வண்டி பயணம் உறுதியாகவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லது என்று நினைக்கிறேன். அடுத்த நாள் மாலை வரை உங்களுடன் இருக்க முடிந்தது. ஏராளமான விஷயங்கள் குறித்து உரையாடினீர்கள். தத்துவத்தைக் கற்று கொள்வது குறித்து நீங்கள் சொன்னது இப்போதும் வார்த்தைகள் மாறாமல் நினைவுக்கு வருகிறது. நன்றி ஜெ. இந்த அமர்வுகளுக்கு. இந்த நிகழ்வுக்கு. இந்தப் பணிக்கு.
குறள் பிரபாகரன்
அமலை, கடிதம்
அமலை
அன்புள்ள ஜெ,
பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாடல் வந்துவிட்டது. என்னளவில் இதுவே முதல் பாடல். பொன்னிநதி பாடல் நன்றாக இருந்தது. ஆனால் இத்தகைய ஒரு வரலாற்றுப் படத்திற்கு ரஹ்மானால் மட்டுமே தர இயன்ற இசை என அதை சொல்ல இயலவில்லை. ஆனால் இப்பாடல் அசர வைத்துவிட்டது.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே ஏஆரிடம் இருந்து அசத்தலான ஆல்பங்கள் எனத் தமிழில் வரவில்லை. பிகில், சர்கார், 2.0, செக்கச் சிவந்த வானம் என அவரது ஆல்பங்கள் அனைத்தும் அவரின் பெரும் ரசிகனான எனக்கு சற்று ஏமாற்றம் அளித்தவையே. அதற்கு பொருள் அவை மோசமான இசை என்பதல்ல. அவரின் சிறந்த இசைத் தொகுப்புகளில் அவற்றிற்கு இடமில்லை, அவ்வளவுதான். ஆனால் அத்தொகுப்புகளைக் கேட்கையில் எல்லாம் ஒன்று தோன்றிக் கொண்டே இருக்கும், ஏஆர் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார் என்பது தான் அது. குறிப்பாக தாளத்தில் என்பது எனது எண்ணம். இந்த தொகுப்புகளில் எல்லாம் அவர் மெல்லிசையை அளிக்காமல் ஒரு பாடலை தாளத்தால் மட்டுமே அமைக்க முடியுமா என ஒரு சோதனையைச் செய்து பார்த்துக் கொண்டிருந்தார் என்றே தோன்றும். அந்த சோதனைகளின் விளைகனி என்றே இப்பாடலை சொல்வேன்.
இப்பாடலின் அசாரணத் தன்மை என்பது இதன் தாளக் கட்டு தான். எத்தனை வகையான தாளக் கருவிகளைக் கொண்டு பாடலின் ஃபாவத்தை அவர் அமைத்திருக்கிறார் என்பதில் இருக்கிறது அவரது மேதமை. அதிலும் அவர் பயன்படுத்தியிருக்கும் தாளக் கருவிகள். இத்தகைய வரலாற்று கால படத்திற்கு இசையமைக்கையில் இருக்கும் மிகப் பெரிய இடர் இசைக்கருவிகளின் தேர்வு. நமக்கு அன்றைய இசைக்கருவிகளைக் குறித்து கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவே. விதவிதமான முழவுகளைப் பற்றியும் முரசுகளைப் பற்றியும் வெண்முரசு விரிவாகவே சொல்கிறது. அவற்றின் ஒலிகளைப் பற்றிய கற்பனையை இன்றிருக்கும் தாள இசைக்கருவிகளின் ஒலியமைவோடு பொருத்தி ஒரு நிகர் ஒலியை உருவாக்க வேண்டும். இந்த சவாலில் அனாயசமாக ஏஆர் வென்று காட்டியிருக்கிறார். இப்பாடலில் அவர் பயன்படுத்தியிருக்கும் தந்திக் கருவிகளையும் தாளிசை ஒலியாகவே துள்ளும் படி விட்டிருப்பது பாடல் இடம்பெறும் சூழலையும், ஆதித்த கரிகாலனின் மன ஓட்டத்தையும் தெள்ளத் தெளிவாக பறைசாற்றி விடுகிறது. அனைத்துக்கும் மேலாக தவிலை முக்கியமான இசை மாற்ற சந்திகளில் அவர் பயன்படுத்தியிருக்கும் விதம், அபாரம்.
அந்த தாளத்தில் கன கச்சிதமாகச் சென்று அமர்ந்திருக்கின்றன இளங்கோ கிருஷ்ணனின் அபாரமான வரிகள். இத்தகைய தாளிசைப் பாடலுக்கென தேர்ந்தெடுத்த சொற்கள். அவை பாடகர்களின் குரலில் தாளமாகவே ஒலிக்கின்றன என்பதில் இளங்கோ கிருஷ்ணனின் மொழித்திறன் அரசப்பாதையில் கம்பீரமாக நடையிடும் பட்டத்து யானை என பொலிகின்றது.
அக முக நக
கள்ளாடிட தள்ளாடிட
வாடா தோழா
இக பர சுகம்
எல்லாமிதா
இன்னாதிதா
ஆசை தீதா
உடல் உடல் உடல்
முழுக்க
செறுகளத்து
வடு வடு வடு
இருக்க
ஒருத்தி தந்த
வடு மட்டும்
உயிர் துடிக்க
போன்ற வரிகளைக் கேட்டு அயர்ந்து விட்டேன்.
மன்னித்தோம்
அடி வீழ்ந்த பகைவரை
தண்டித்தோம்
எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம்
அடங்காரை சிறையெடுத்தோம்
என ஒவ்வொரு வரியும் அளந்தெடுத்து நெய்யப்பட்ட சட்டையென தாளத்தோடு அப்படி இணைந்திருக்கின்றது.
இன்னும் ஒவ்வொரு வரியையும் சுட்டி சொல்லலாம். அப்படியெனில் மொத்த பாட்டையும் எழுத வேண்டியிருக்கும். பாடலைக் கேட்க கேட்க வரிகளுக்கு அமைக்கப்பட்ட இசை என்றே தோன்றிக் கொண்டிருக்கிறது. பாடலின் முதல் வடிவை இளங்கோவும், அதன் இசையமைவை ஏஆரும் முடிவு செய்த பின்னர் வஞ்சிப்பாவின் வார்த்தைக் துண்டுகள் தயாராகி இருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஏஆரின் சிக்கலான இசையமைவு கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று என தயங்காமல் சொல்லலாம். மொத்தத்தில் சோழனுக்கான இசை அரசாங்கம் அட்டகாசமாக அமையக் துவங்கிவிட்டது. (இன்று முழுவதும் லூப்பில் இது மட்டும் தான்!!!)
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



