Jeyamohan's Blog, page 728

August 24, 2022

நாமக்கல் உரை,கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெ சார் அவர்களுக்கு,

நாமக்கல்லில் உங்களை நேரில் சந்தித்து, உரையை மெய்நிகராக அல்லாமல் அது நிகழ்த்தப்பட்ட அந்த கணத்தில் பங்கெடுத்து கவனிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உரையின் மூலம் நான் பெற்றுக்கொண்ட புரிதல்களை, கீழ்கண்டவாறு தொகுத்துக்கொள்கிறேன்.

உரை  

தொடக்கம்:

உங்களின் அனைத்து முயற்சிகளிலும், முன்னோடிகளை உங்கள் வாசர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு பின்னர் உரையையோ அல்லது கட்டுரையையோ தொடங்கும் பாணி மிகவும் அற்புதமான ஒன்று. இதன் மூலம் என்னைப்போன்றோர் அந்த ஊரைப்பற்றியோ, அல்லது உங்களின் மூலம் அறிந்துகொள்ளும் கோட்பாடுகள் முன்பெப்படி இருந்தது என்பது பற்றியோ அறிந்துகொள்ள மிகவும் உதவிகரமாக உள்ளது.இவ்வுரையில் நீங்கள் நாமக்கல்லில் நிகழ்த்துவதால் நாமக்கல் கவிஞர் பற்றி ஒரு குறிப்புடன் ஆரம்பித்தது, மற்றும் அன்று தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய கட்டுரையை தளத்தில் பதிவேற்றியது அனைத்தும் ஒரு தொடர்ச்சியை காட்டியது.

வரையறை:

நம் சூழலில், சிந்திப்பதற்கு இருக்கும் முதன்மையான இடர் என நான் கருத்தில் கொள்வது – சிந்தனையின் அடைப்படைக்கூறுகளை வரையறையின்றி, கால, சூழல் பொருத்தமின்றி உபயோகப்படுத்துவது. அவ்வகையில் அமெரிக்க தத்துவ அறிஞரும், Britanicca Encylopedia வின் chairman ஆக சிலகாலம் பணியாற்றிய Mortimer Adler போன்றோர் ஒரு உரையாடலுக்கு (intellectual discourse) அடிப்படை அலகாக கூறுவது – Coming to terms with the author, coming to terms is the first stage of interpretation. Unless the reader comes to terms with the author, the communication of knowledge from one to the other does not takes place. A term is the basic element of communicable knowledge.விடுதலை என்றால் என்ன? என்ற தலைப்பை முதலில் எதிர் கொண்டவுடன் உருவான முதல்–பொதுச்சித்திரம் : தற்சமயம் புழங்கிக் கொண்டிருக்கும் ஏதோ சூழலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது!. இது அவரவர் பொருள் கொள்ளும் விதத்தில் மாறுபடும், உதாரணமாக விடுதலையை freedom, liberation, to set free, get away with போன்ற பல அர்த்தங்களில் விளங்கிக்கொள்ளலாம்.உரையின் ஆரம்பத்திலேயே விடுதலை என்கிற சொல் – முக்தி, மோக்ஷம், வீடுபேறு, விடுதல், வீடு, விடுதலை போராட்டம், இரட்சிப்பு, சொர்கம், விடப்பட வேண்டியது, விட்டுச்செல்லவேண்டியது, துறத்தல், துறத்தலின் மூலம் அடைவேண்டியது என எவ்வாறு பொது சூழலில் உபயோகப்படுத்தப்படுகிறது என்கிற விளக்கம் நல்ல ஒரு அடித்தளமாக அமைந்தது.

பொது சூழலில் உள்ள எதிர்பார்ப்பு/மதிப்பு:

விடுதலை அடைந்தவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒரு சமூகம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் உதறி விட்டு, அதன் பின் கிடைப்பது விடுதலை. அன்றாடம் அல்லாத ஒன்று தான் விடுதலை. சென்ற காலங்களில் பண்டாரம் போன்றவர்களுக்கு ஞானம் ஒரு விடுதலையாக அமைந்தது. உரையின் இப்பகுதியில் நீங்கள் அளித்த விளக்கங்கள் யாவும், எவ்வாறு அது புழங்கி மேலெழுந்து வந்த சூழலின் அர்த்தத்தை அடைந்தது என்பது ஒரு புதிய திறப்பாக அமைந்தது.

இந்திய மரபில் விடுதலை:

சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், வேதாந்தம் என்ற ஆறு பிரிவுகளையும், அவை முன்வைத்த தரிசனங்களையும் (இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், மற்றும் உங்களின் கட்டுரைகளின் வழியாக மட்டுமே) ஏற்கனவே அறிமுகம் இருந்தாலும் , விடுதலை பற்றியும், ஒவ்வொரு தரிசனத்திலும் அது எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய உங்களது விளக்கம் முற்றிலும் புதிய ஒரு சிந்தனை, முன்பில்லாத ஒரு அறிதலாக இருந்தது.எப்படி ஒவ்வொரு தரிசனமும் அது எழுந்து வந்த சூழலில், அதன் வரையறைக்குட்பட்ட விடுதலையை முன்வைத்தன என்ற விளக்கமும், அத்தரிசனங்களை கடைபிடிப்பதன் வழியாக எவ்வாறு அதன் வழி வகுக்கப்பட்டு, அதன்பால் மட்டுமே அடைய முடிந்த விடுதலையை அடைய முடியும் என்பதை பற்றிய தர்க்கங்களும் இதுவரை நான் யோசிக்காத கோணத்தில் இருந்தது.மேலும் எவ்வாறு ஒருவர் தனக்கு இயற்கையாக அளிக்கப்பட்டுள்ள குணங்கள் மற்றும் தன்னியல்புகளை அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் , அதற்கேற்ற தரிசனங்களை கடைபிடித்து அதன் வழி தொடர்ந்தால் அடையும் முழுமை/நிறைவு பற்றிய விளக்கம், உரையின் தனித்துவமான உச்சம்.

சுருக்கம் (Summary):

விடுதலை அளிக்கக்கூடிய எதுவும் அதை இறுதியில் அளிக்காது.இங்குள்ள நிறைவையோ, முழுமையையோ அடையமுடியாமால் தடுப்பது எதுவோ, அதை கண்டடைந்து களைவதே விடுதலை.விடுதலை என்பது அடையப்படுவது அல்ல, எய்தப்படுவது அல்ல…..திகழ்வது.

உரையின் மூலம்   நான் பெற்றுக்கொண்டது

உங்களின் மற்ற உரைகளை காணொளியில் மட்டுமே கண்டுள்ளேன். அவற்றில் நீங்கள் ஒரு கருத்தை பற்றிய உங்களின் கண்ணோட்டத்தை, வரையறைசெய்து, தொகுத்து முன்வைத்தமாதிரி உணர்தேன். ஆனால் இவ்வுரையில் உங்களின் வாழ்வினூடாக, அனுபவத்தின் வாயிலாக நீங்கள் கண்டடைந்த ஒரு உண்மையை பகிர்ந்துகொண்டது போல இருந்தது.மேலும் நம்பொதுச்சூழலில் பரவலாக இருக்கும் “இங்கு எதையும் மாற்ற முடியாது, மாற்ற வேண்டியது இல்லை, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு மட்டும் இருந்துவிட்டு, சொர்க்கத்தை அடையும் மார்க்கத்தை பற்றி யோசியுங்கள்” போன்ற போதனைகளுக்கு நேர் மாறாக நீங்கள், செயலாற்ற(call of duty, call for action) அறைகூவல் விடுகிறீர்கள். அதனினும் மரபினூடாக அவரவர் தனித்தன்மை அறிந்து அதன்பொருட்டு செயலாற்றுங்கள் என.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடுகள்

கடந்த நான்கு வருடங்களாக உங்களை வாசித்து வருகிறேன், ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற zoom உரையாடல்களில் பங்கு கொண்டுள்ளேன், ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய கூட்டத்தில் நேரடியாக பங்கு கொள்வது இதுவே முதல்முறை.உரை பற்றிய அறிவிப்பு தளத்தில் வந்த உடனையே அமைப்பாளர்களை தொடர்பு கொண்டேன், வரதராஜன் சார், கார்த்திகேயன் சார் அனைவரும் பரிந்துரைகளை எடுத்துரைத்தனர். Meticulously planned and well organized event. அரங்க அமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு என அனைத்தும், உரையை கச்சிதமாகவும் கவனமாகவும் புரிந்து கொள்ள உதவியது.Based on my personal experience the thing that is missing in the public events (open or registration based) organised these days even with the help of event management or hospitality partners is  – 1) Empathy and/or 2) Lack of respect for fellow humans & their time. வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வேறு சில ஏற்பாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கில்லாத ஒரு commitment இங்கு இருப்பதை வெகு இயல்பாகவே உணரமுடிந்தது. நான் அடைந்த தனிப்பட்ட சவுகரியத்தை (comfort) வைத்து இதைக்கூறவில்லை.சக வாசகரின் உணர்வுகளை புரிந்துகொள்ளக்கூடிய நுண்ணுர்வு கொண்ட ஒரு வாசக/நண்பர் வட்டத்தால் மட்டுமே இத்தகைய ஒரு இயக்கத்தின் துணைகொண்டு, ஞாயிற்றுக்கிழமையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முடியும்.இறுதியாக, அன்று மதியம் 3.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து நாமக்கல் பேரூந்துநிலையத்தை அடைந்த நான், உரை தொடங்குவதற்கு முன்னரே அரங்கை அடைந்தால் பிற வாசகரை சந்திக்கலாம் என எண்ணிக்கொண்டு, நேரம் கருதி ஒரு ஷேர் ஆட்டோ பிடித்தேன், ஓட்டுநர் 150 ரூபா (3km) ஆகும் என்ற போதும் பரவாயில்லை என ஏறி அமர்கையில் “சார் யாராவது கேட்டா, டிரைவரோட சொந்தக்கார்னு சொல்லுங்க, பஸ் ஸ்டாண்டுக்கு இந்த பக்கம் ஷேர் ஆட்டோ ஓட்டக்கூடாது என்றார். நாமக்கல்லில் வாசகர் அல்லாத ஒரு புது உறவு என எண்ணிக் கொண்டு அரங்கை அடைந்தேன். நிகழ்ச்சிக்குப்பின் உங்களுடன் உரையாடல், சகவாசகருடன் உரையாடல் என நேரம் போனதால் ஊர் திரும்ப, முன்பதிவு செய்திருந்த பேருந்தை தவற விட்டுவிட்டேன்…. எல்லாம் முடிந்து அரங்கிலிருந்து மகேஷ் சாருடன் காரில் புறப்படும் போது அவ்வழியே ஒரு வெளியூர் அரசு பேருந்து சென்றது, என்நிலை அறிந்தும், என்மேல் இருந்த அக்கறையாலும் மகேஷ் சார் காரில் வேகமாக துரத்திச் சென்று ஏற்றிவிட பார்த்தார். அது வேறு ஒரு ஊர்க்கு செல்லும் பேருந்து, கடந்து நின்று விட்டோம். என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் மற்றுமொரு ஒரு வாசகரும் என்னைப் போலவே ஊர் திரும்ப தனிமையில் காத்திருப்பதாய் அழைப்பு வந்து,மறுபடியும் வந்து அவரையும் உடனழைத்துக்கொண்டு எங்கள் இருவரையும் நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஒருசேர இறக்கிவிட்டுவிட்டு மகேஷ் சார் – ஒன்னும் பிரச்னை இல்லைல, safe போயிடுவீங்கலஎன்றார், அப்பொழுது மணி நள்ளிரவு 12.05 AM”. அன்று மாலை முழுவதும் நான் இலக்கியவட்ட வாசர்களுடன் இருந்தாலும், மகேஷ் சார்‘ஐ நான் பார்த்தது, உரையாடியது 10 நிமிடத்திற்கும் குறைவு தான்விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு என் அன்புகள்.

அன்புடன்,

விவேக்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2022 11:30

புதுவை வெண்முரசுக் கூடுகை 51

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 51 வது கூடுகை 27.08.2022 சனிக்கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .

பேசுபகுதிகள் குறித்து நண்பர் விஷ்ணுகுமார் உரையாடுவார் . நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.

தொடர்பிற்கு:-

9943951908 ; 9843010306

ஜெ 60 தளம்:-

https://jeyamohan60.blogspot.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2022 11:30

யுவபுரஸ்கார் விருது

சாகித்ய அக்காதமி யுவபுரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம்படைப்பாளி ஒருவரைப் பற்றி எதிர்மறையாக எழுதக்கூடாது என்றே நினைத்தேன். அரிதாக நல்ல படைப்பாளிகளுக்கு வழங்கப்படும்போது அதை பாராட்டுவதனாலேயே இந்த தெரிவிலுள்ள அறிவின்மையைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இப்படிச் சுட்டிக் காட்டப்படும் என்பது ஜூரிகளுக்கு தெரியவேண்டும் என்பதனால்.

இவ்வாண்டு பட்டியலில் அரிசங்கர், றாம் சந்தோஷ் , சுரேஷ் பிரதீப், வேல்முருகன் இளங்கோ, கார்த்திக் புகழேந்தி ஆகியோரே இலக்கியத் தகுதி கொண்டவர்கள். விருதுபெற்றிருக்கும் பி.காளிமுத்து கவிதைகளை இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன் அவர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளை வாசிக்கவேண்டும். கவிதை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் அவ்வண்ணம் நிகழுமென்றால் நன்று.

நடுவர்களாக இருந்த முனைவர் ஆர்.ராஜேந்திரன், டி.பெரிய சாமி, எம்.வான்மதி ஆகியோருக்கு தமிழ் கல்வித்துறையின் மரபின்படி தினத்தந்தி அளவுக்குக் கூட வாசிப்புப்பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. பயணப்படி, கௌரவஊதியம் தவிர சாகித்ய அக்காதமியில் அவர்களுக்கு அக்கறையேதும் இருக்கவும் நியாயமில்லை. அவர்களை நடுவர் குழுவுக்கு பரிந்துரைத்தவர்கள் ஆணையிட்டதைச் செய்திருப்பார்கள்.

பொள்ளாச்சியில் இருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த உபாதை இருக்கும் என நினைக்கிறேன்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2022 04:14

August 23, 2022

கீதைத்தருணம்

கீதை – தொகுப்பு

அன்புள்ள ஜெயமோகன், கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் முக்கியத்துவம் மனதில் பட்டதில்லை. நீங்கள் எந்தக் கோணத்தில் கீதையை படிக்கிறீர்கள் என்ற ஆர்வம் எனக்கு உள்ளது.

ஆர்.சங்கர நாராயணன், மும்பை

அன்புள்ள சங்கர நாராயணன்,

கீதையை வாசிப்பதற்கு உரிய தருணத்தை கீதையே உருவாக்கும் என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. அதையே ‘கீதா முகூர்த்தம்’ என்கிறார்கள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கையில் கிடைத்தவற்றையெல்லாம் உடனுடன் படித்துத் தள்ளும் ஆர்வம் மிக்க சிறுவனாக நான் இருந்த நாட்களில் பகவத்கீதை என் கண்ணில் பட்டது. என் பெரியப்பா சோதிடம், மருத்துவம் முதலியவற்றைத் தொழிலாகச் செய்துவந்தார். பழைய திருவிதாங்கூர் மன்னர் அரசு (ஸ்ரீ சித்ரா இந்து மதப் பிரச்சார சபா) பதிப்பித்த மலையாள கீதை அது. சி.செ.ஸ்ரீரங்கநாத சாஸ்திரி அவர்கள் உரை எழுதியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்து ”படித்துவிட்டுத் தருகிறேன்” என்று பெரியப்பாவிடம் கூறினேன். அவர் ஏதோ சுவடியை ஆராய்ந்து கொண்டிருந்தவர், கயிறு கட்டப்பட்ட வட்டச்சில்லு மூக்குக்கண்ணாடியுடன் நிமிர்ந்து, ”எப்போது திரும்பத் தருவாய்?” என்று கேட்டார். நான் அதன் பக்க அளவை பார்த்துவிட்டு ”நான்கு நாட்களில்” என்றேன். அவர் புன்னகைத்து ”அங்கே வை” என்றார். ”ஏன்?” என்றேன். ”அது ஒரு மருந்து. நோய் இல்லாதவன் மருந்து சாப்பிட்டால் புது நோய்கள்தான் வந்து சேரும்” என்றார்.

இப்போது யோசிக்கும்போது அவர் கூறிய அச்சொற்களில் உள்ள உண்மை என் மனதை பிரமிக்கச் செய்கிறது. எந்த நூலுக்கும் அக்கூற்று பொருந்தும் என்று படுகிறது. தேடல் இல்லாதவன் முன்பு வைக்கப்படும் பதில் அர்த்தமில்லாதது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

மீண்டும் பன்னிரண்டு வருடம் தாண்டிய பின்னர்தான் நான் கீதையைப் படித்தேன். உயிர் கரைக்கும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி போல கண்ணீருடன் பதைபதைப்புடன் கீதையை நோக்கி வந்தேன். மூழ்கப் போகிறவன் பற்றிய கரை மரத்து வேர் போல அதைப் பற்றிக் கொண்டேன். அந்நிலையில் என்னைப் பொருத்தவரை அந்நூலுக்கு ஒரே மதிப்புதான், அது எனக்கு உதவுகிறதா, இல்லையா என்பது. அது எத்தனை பழைமையானது என்பதோ, எந்தெந்த ஞானியர் அதை வழிபட்டனர் என்பதோ எனக்கு ஒரு பொருட்டாகவோ இருக்கவில்லை. நான் எரிந்து கொண்டிருந்தேன். எனக்குத் தேவை அந்தத் தீயை அணைக்கும் நீர் மட்டுமே. கீதையை அப்படிப்பட்ட தருணம் ஒன்றினால் தட்டி எழுப்பப்பட்ட ஒருவன் மட்டுமே உண்மையான ஆழத்துடன் புரிந்து கொள்ள முடியும். கீதையில் இருப்பதும் அப்படிப்பட்ட ஒரு தருணம்தான். அதையே ‘கீதா முகூர்த்தம்’ என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

*

1982 செப்டம்பர் 23ம் தேதியுடன் என் இளமைப்பருவம் முடிவுக்கு வந்தது. அன்றுவரை நான் உற்சாகமான சிறுவன். வணிகவியல் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். படிப்பதைத்தவிர பிறவற்றில் உச்சகட்ட ஆர்வம் கொதித்துக் குமிழியிட்டபடியே இருந்த நாட்கள். முதலில் இலக்கியம். இரவுபகலாக படிப்பேன். பெரிய எழுத்தாளனாகி நோபல் பரிசு பெற்று உலக நாடுகள் முழுக்க பயணம் செய்வது குறித்த தீராத பகல்கனவுகள். கூடவே அரசியல். பெரும் புரட்சியாளனாகி தூக்குமேடையில் உயிர்விட்டால் என்ன என்று இன்னொரு கனவு. அப்போது படிக்கும் புத்தகங்களுக்கு ஏற்ப கனவுகள் மாறும். கொத்தமங்கலம் சுப்புவின் மாபெரும் தொடர்கதை ‘தில்லானா மோகனம்பாளை’ப் படித்துவிட்டு நாதஸ்வர வித்வானாக ஆகிவிட வேண்டும் என்று ஒரு சில நாள் வேகம். அ.லெ.நடராஜன் எழுதிய விவேகானந்தர் வரலாறு படித்துவிட்டு துறவியாகி இந்தியாவெங்கும் சுற்ற வேண்டும் என்ற மோகம்.

இது உள்ளுர. வெளியே நான் நண்பர்களுடன் ஊரைக் கலக்கி அலையும் பொறுப்பில்லாத பையன். கல்லூரிக்கு மிக அபூர்வமாக மட்டுமே போவேன் – ஒரு மொத்த வருடத்தில் முப்பத்திரண்டு நாள்தான் வருகைப்பதிவு இருந்தது. குமுதம், விகடன் கதைகளைப் படித்துவிட்டு அக்கதைகளையே மறுசமையல் செய்து அவற்றுக்கே அனுப்பி அவை பிரசுரமாகும். அவை அனுப்பும் ஐம்பது ரூபாயில் நண்பர்கள் திருவனந்தபுரம் சென்று பிரேம் நஸீரும் ஜெயனும் நடித்த அடிதடிப் படங்களை வரிசையாகப் பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் இரவு படுத்துத் தூங்கிவிட்டு, காலையில் ஊர் வந்து சேர்வோம். சாலையோர தட்டுகடையில் பரோட்டா இறைச்சி சாப்பிடுவோம். சுற்றுவட்டத்தில் நடக்கும் எல்லா திருவிழாக்களுக்கும் போய் வெயிலில் வறுபடுவோம். இரவு முழுக்க கண்விழித்து சாம்பசிவன் நடத்தும் கதாப்பிரசங்கங்களும் கொல்லம் ஏ.கே.ராஜுவின் நாடகங்களும் பார்ப்போம். நான் கல்லூரிக்கு மட்டம் போட்டு மாடு மேய்க்கும் பையன்களுடன் அலைவேன். புல்லறுப்பவர்களுடன் மலை ஏறிப்போய் காட்டுக்குள் சுற்றுவேன்.

அனைத்திற்கும் நீங்காத்துணையாக பாலிய நண்பன் ராதாகிருஷ்ணன் இருந்தான். யோசிக்காமல் எந்த சாகஸத்தையும் செய்பவன், தயக்கமில்லாமல் எவருடனும் பேசுபவன், எப்போதும் சிரிப்பு கொப்பளிப்பவன். திடீரென்று   செப்டம்பர் 23ம் தேதி அவன் ரப்பர் பாலை உறையை வைக்கப் பயன்படுத்தப்படும் நைட்ரிக் ஆஸிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டான். குடும்பப் பிரச்சினைதான் காரணம் என்று பிறகு கூறினார்கள். அவன் ஆசிட் குடித்த செய்தியை கேட்டு ஓடிக்கூடியபோது வைக்கோல் போர் அருகே எரியும் பிளாஸ்டிக் வயர் போல நெளிந்து முறுகிக் கொண்டிருந்தான். கழுத்து இறுகும் மிருகம் போல் ஓர் ஊளையுடன் திறந்த வாய் வழியாக, அவனுடைய மூச்சு, வெந்து சிதைந்த உள்ளுறுப்புகளை அள்ளியபடி வெளியே பீரிட்டது. இருளில் ஓடி தபால் நிலையத்தைத் திறக்க வைத்து தொலைபேசியில் சொல்லி கார் வரவழைத்து அவனைத் தூக்கி கிடத்தினோம். அவனுடைய உடல் அதற்குள் குளிர ஆரம்பித்துவிட்டது. இறுகப் பற்றிய முஷ்டியுடன் வலது கையும், தூக்கில் தொங்குபவனின் கால்போல நீட்டி இறுகிய வலது காலும் மட்டுமே மின்னதிர்ச்சி பட்டது போலத் துடித்துக்கொண்டிருந்தன.

பாதி வழியிலேயே அவன் இறந்துவிட்டான். ஆனால் அதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. வண்டியில் இருந்து அவனை இறக்கிப் படுக்க வைத்தோம். டாக்டர் ஆல்பன் வந்து பார்த்த சில நொடிகளிலேயே திரும்பி, அவன் செத்துவிட்டான் என்றார். அக்கணம் என் மனம் ஒரு மாயம் புரிந்தது. அதெல்லாம் வெறும் கனவு என்று சொன்னது. ஊர் திரும்பினால் அங்கு ராதாகிருஷ்ணன் இருப்பான் என்றுபட்டது. உடனே திரும்பி ஒரு கிலோமீட்டர் தூரம் வெறியுடன் ஓடினேன்.

நான் திரும்பி வருவதற்குள் அவனைக் கொண்டு வந்திருந்தார்கள். அவன் வீட்டில் அழுகைகள், விளக்கொளியும் நிழல்களும் கலைந்த ஆட்டங்கள். நான் என் வீட்டுக்குப்போய் கட்டிலில் படுத்துக்கொண்டேன். பகலெல்லாம் வெயிலில் திருவிழா பார்த்து இரவு முழுக்க நாடகம் பார்த்து மறுநாள் தூங்கும்போது ஒளியும் ஒலியும் தீராது ஒலிக்க உருவாகும் போதை போல ஒன்று எனக்குள் இருந்தது. எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம் என்ற நினைப்பே இல்லை. தூக்கமோ விழிப்போ இல்லை. மாலையில் என் அண்ணா சிறிய புட்டியில் சாராயம் வாங்கிவந்து நீர்கலந்து எனக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டினார்.

தூங்கி விழித்தபோது நள்ளிரவு. ஒலிகள் அடங்கிய நிலை. என் மனம் வியப்பூட்டுமளவு நிதானத்துடன் இருந்தது. உச்சகட்ட நெருக்கடிக்குப்பிறகு மனம் அப்படி எளிதாக ஆகிவிடுவதை அனுபவித்தவர்கள் சிலர் இதை வாசிக்கலாம், அவர்களுக்குப் புரியும். கண்ணாடி ஜன்னலின் பிசுக்குகளைத் துடைத்தது போல ஒரு துல்லியம். நான் புழக்கடை வாசலைத் திறந்து வெளியே சென்றேன். தூரத்தில், ஆற்றுக்குள்  இறங்கும் சரிவில், ராதாகிருஷ்ணனின் சிதையைப் பார்த்தேன். அதை நோக்கி நடந்து ஒரு மேட்டில் அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்களூரில் விறகால் எரிக்கமாட்டார்கள். நெருக்கமாக அடுக்கிய உலர்ந்த தேங்காய் மட்டைகளால் நிரப்பப்பட்ட ஆறடி ஆழமுள்ள செவ்வக வடிவக் குழியில் சடலத்தை வைத்து தீயிட்டு விட்டுச் சென்றுவிடுவார்கள். நெருப்பு கனன்று எரிந்து கடினமான எலும்புகளைத்தவிர அனைத்தையும் சாம்பலாக்கிவிடும். ஆனால் தழலே இருக்காது. குமிழியிடும் ரத்தம் தேங்கிய குளம்போல சுடர்விட்டது சிதை. ஒரு வாய்போல, பெரும்பசி எரியும் வாய் போல.

அந்த நாளுக்குப்பிறகுதான் நான் அழுத்தமான தேடல்கள் கொண்டவன் ஆனேன். வாழ்க்கையின் சாரம் பற்றிய ஓயாத கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டேன். தத்துவ நூல்களையும் மதநூல்களையும் வாசித்துத் தள்ளினேன். வீட்டைவிட்டு ஓடி அலைந்தேன். குருநாதர்களையும் வழிகாட்டிகளையும் மாறிமாறித் தேடினேன். ஓயாது, சலிக்காது எழுதினேன். எழுதுவது என்னைப் பொருத்தவரை முடிவுகளை வெளிப்படுத்துவது அல்ல, ஆழ்மனத்திற்குள் மொழியின் வழியாக ஊடுருவிச் செல்லும் ஒரு பயணம் அது! இன்றைய நான் அந்த நாளில் பிறந்தவன்.

கீதாமுகூர்த்தம் என்ற சொல்லாட்சியானது எனக்கு அந்த நாளையே நினைவுபடுத்துகிறது. அங்கிருந்துதான் நான் கீதையை நோக்கித் திரும்பினேன். கீதையில் நான் அறிந்தவை அனைத்தும் அங்கிருந்து முளைத்த கேள்விகளின் விடைகளே.

*

கீதாமுகூர்த்தம் என்பது என்ன? என்னுடைய அனுபவத்திலிருந்து அதை இவ்வாறு விளக்கிக் கூறுகிறேன். நம்முடைய அனுபவ அறிவும் தர்க்க புத்தியும் அவற்றின் உச்சநிலைகளில் சிக்கி முன்னகரமுடியாமல் திகைத்து நிற்கும் தருணத்தில் நாம் உணரக்கூடிய ஒரு நிலை அது. அறிந்து விடலாம் என்ற நம் ஆணவம் ஆட்டம் கண்டு போகும் நேரத்தில் நாம் உணரும் ஒரு நிலை.

நான் அதிகமும் உரையாடி அறிந்து கொண்ட வரை, இது எதிர்பாராத மரணங்கள் மூலமே அதிகமும் மனிதர்களுக்கு நிகழ்கிறது. மகாபாரதத்தில் யட்சன் தருமரிடம் உலகின் மாபெரும் வேடிக்கை எது என்று கேட்க, ‘கணந்தோறும் மானுடர் சாகக்கண்டும் வாழ்வு நிலையானது என்று எண்ணும் மனிதப் பேதமைதான்’ என்று அவர் பதில் கூறுகிறார். கல்விக்கடல் நீந்தியவர்கள், வாழ்வின் உச்சியில் கொடி ஏற்றியவர்கள் மரணம் அளித்த அடியைத் தாங்காமல் சுருண்டு விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன்.

மரணத்திற்கு நிகரானது எதிர்பாராத மாபெரும் வீழ்ச்சி. வியாபாரத்தில், அதிகாரத்தில், குடும்பத்தில் நிகழும் சரிவு. ஒரு வெற்றி நம்மை அடையும்போது நாம் அதற்கு படிப்படியாக ஒரு தர்க்க அமைப்பை கற்பனை செய்துகொள்கிறோம். இதனால்தான் இப்படி என்று விளக்குகிறோம். சரிவை அப்படி விளக்க முடிவதில்லை. பெரும் சரிவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் மனம் பேதலித்த பலரை நான் கண்டிருக்கிறேன்.

இவ்விரண்டுக்கும் இணையானது உறவுகளின் சிக்கல்கள், புதிர்கள். நம்பிக்கைத் துரோகங்கள், பிரிவுகள், மனவேறுபாடுகள் என உறவுகள் அளிக்கும் அடிகளுக்கு முடிவேயில்லை. அவமானத்தின் மலைகளை நம் மீது ஏற்றி வைத்துவிட்டுப் போகும் உறவுகள் உண்டு. அவற்றை விடக் குரூரமானவை எந்தக் கோணத்தில் யோசித்தாலும் நம் மூளைக்குப் பிடிபடாத உறவுச்சிக்கல்கள். தேடித்தேடி மூளை சலிக்க, மனம் எரிய, அந்த முடிவிலாத் துயரத்திலிருந்து மீள முடியாமல் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஓடிப்போகிறார்கள், பைத்தியம் அடைகிறார்கள்.

இலக்கிய வாசகர்களுக்குத் தெரியும், உலகில் உள்ள மாபெரும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலானவை மேலே கூறப்பட்ட மூன்று உச்சதளங்களைப் பற்றியவை என்று.

இவற்றை நான் ‘முறிவுக்கணங்கள்’ என்று கூறுகிறேன். நம்முன் நம்மைத் தாங்கி நின்ற சில சட்டங்கள் முறியும் கணங்கள் இவை. நாம் ஏறி நின்ற பீடங்கள் முறியும் கணங்கள் என்றும் கூறலாம். நம்மைச் சூழ்ந்திருந்த அனைத்தும் சடசடவென்று சரிந்து உடைந்து நொறுங்கி விழுகின்றன அப்போது. சார்லி சாப்ளின் ஒரு பெரிய மரக்கட்டடத்திற்குள் நுழைவார். ஏதோ ஒரு உத்தரம் நீட்டிக்கொண்டிருக்கும். ஒரு ஆர்வத்தால் அதைப்பிடித்து இழுப்பார். சரசரவென மொத்த கட்டடமும் இடிந்து சரிந்து சூழ்ந்து விழுந்து கிடக்கும். அதைப் போன்ற ஒரு தருணம். நம்மில் ‘ஏன்? எதற்காக?’ என்ற வினாக்கள் மட்டுமே எஞ்சி இருக்கும். நம் இருப்பே அந்த அடிவயிற்று ஆவேசமாக மட்டும் இருக்கும்.

இந்த உச்சத்தில் இரு பாதைகள் பிரிகின்றன. பெரிய பாதை, வழக்கமான பாதை, கோடானுகோடி பாதங்கள் பதிந்த பாதை, ‘நம்பிக்கையின் பாதை’ அது. பரிபூரண சரணாகதியின் வழி. ‘இல்லை, இந்த வினாக்களை நான் தாளமாட்டேன். இவற்றுக்கான பதில் எனக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இதோ அனைத்தையும் கழற்றி வீசிவிட்டு நிர்வாணமாக சரணடைகிறேன்’ என்று குப்புற விழும் முறை அது. மேலே சொன்ன முறிதல் கணத்திற்குப் பிறகு, நாம் சந்திக்கும் ஏறத்தாழ அனைவருமே இந்தப் பாதையையே தெரிவு செய்திருப்பார்கள். இது எளியது, நன்றாக வழிகாட்டிக் குறிப்புகள் பதிக்கப்பட்டது. அனைத்துக்கும் மேலாக நமக்கு வழித்துணைகளும் பலர் அகப்படுவர்.

இன்னொரு பாதை உண்டு. அது எவ்வளவு தூரம் முயன்றாலும் முதல் பாதையை தேர்வு செய்ய முடியாத சிலர் உண்டல்லவா, அவர்களுக்கானது. இவர்களில் பலர் முதல்பாதையைத் தெரிவு செய்து சற்றுதூரம் போய்விட்டு முடியாமல் திரும்பி ஓடிவந்தவர்கள். இவர்களுக்கு இந்தப்பாதையில் முன்னகர்வது தவிர வேறு வழியே இல்லை. இந்தப்பாதையை ‘தேடலின் பாதை’ என்கிறேன். கீதா முகூர்த்தம் என்பது தேடலின் பாதையில் ஒருவன் அடையும் மிக முக்கியமான ஓர் இடம்.

இருபது வருடங்களுக்கும் மேலாக பலவகை மதநூல்களையும் ஆர்வத்துடன் கற்றவன் என்ற முறையில் இங்கே ஒன்றைக் கூறவிரும்புகிறேன். இந்துமதம், புத்தமதம், தாவோ, கன்பூஷியம் போன்ற சில மதங்களில் மட்டுமே இந்த இரண்டாவது பாதை திறந்திருக்கிறது. காரணம் இவை தத்துவார்த்த மதங்களும் கூட. பிறமதங்களில் இரண்டாவது பாதை இருளுக்கு இட்டுச் செல்லும் தன்னகங்காரத்தின் பாதையாகவே அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை மட்டுமே மீட்பு என்று கூறும் அம்மதங்கள் ஐயத்தை நரகம் என்றே குறிப்பிடுகின்றன.

ஆனால் கீதா முகூர்த்தம் என்பது முடிவில்லாத ஐயங்கள் ஒன்றாகத்திரண்டு கனத்து நம்மை அசைவிழக்கச் செய்யும் ஒரு தருணம் ஆகும். கீதையில் அர்ச்சுனனை அந்நிலையில்தான் நாம் காண்கிறோம்!
*

ஒருமுறை உறையாடும்போது நித்ய சைதன்ய யதி கூறினார், ”இருண்ட வான்வெளியில் உள்ள கருமை என்பது நம் வினாக்கள். நட்சத்திரங்கள் என்பவை எளிய பலவீனமான உதிரி விடைகள்! கீதாசாரியனை கன்னங்கரியுருவாக உருவகித்தார்கள் முதாதையர். அவனுடைய சொற்கள் விண்மீன்கள் போலும்!”

முறிதலின் கணங்களை பின்னர் மனதில் மீட்டிப்பார்க்கும்போது அவற்றுக்கு இடையே பொதுவான ஒரு இயல்பு கண்ணுக்குப் படுகிறது. ஆனால் இதற்கு நீண்ட காலம் தாண்ட வேண்டும். அந்தக் கணங்கள்மீது நமக்கிருந்த உணர்ச்சிபூர்வமான தொடர்பு மழுங்கி விட்டிருக்க வேண்டும். அப்போது தெரியும், தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து முறிவுக்கணங்களின் இயல்புகளில் எத்தனையோ வேறுபாடுகள் இருப்பினும் அவை அடிப்படையில் ஒன்றுதான் என்று.

மரணம் ஏன் நம்மை உடைத்து நொறுக்குகிறது? நம் அன்றாட வாழ்வின் சிந்தனைகளால் விளக்க முடியாத ஒரு பிரம்மாண்டமான புதிர் அது. நம் வாழ்வில் நடக்கும் ஒரு பெரிய சரிவானது இப்பிரபஞ்சம் எத்தனை பெரிய சங்கிலித்தொடர் என்று நமக்கு காட்டுகிறது. அதில் ஒரு சின்னஞ்சிறு கண்ணியை மட்டும் நம் வாழ்வாகக் கொண்டுள்ள நாம் அதை நம் செயல்கள் மூலம் நிகழ்த்துவதாக எண்ணிக் கொள்வதன் சிறுமையை அப்போது கண்டடைகிறோம். அதே போன்றதே உறவும். மனிதமனம் என்பது எத்தனை பெரிய புதிர்வெளி என்று அப்போது நாம் அறிகிறோம்.

மலைத்தொடர் ஒன்றில் வாழும் எறும்பு ஒன்று ஒரு விசித்திரத்தால் மொத்த மலையையும் உள்வாங்கிக் கொள்ள முடிந்தால் அதற்கு ஏற்படும் சிறுமையும் திகைப்பும்தான் இந்த முறிவுக் கணம் என்று கூறலாம். நம் வாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு துளியைச் சூழ்ந்து இயங்கும் மாபெரும் பெருவெளியை நாம் அப்போது உணர்கிறோம். அந்நிலையில் இந்த துளிக்குள் செல்லுபடியாகும் படியாக நாம் உருவாக்கி வைத்துள்ள தர்க்க அமைப்புகள், நியாய வாதங்கள் அனைத்துமே பொருளழிந்து போகின்றன. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் பிரபஞ்சத்தின் இயங்கு விதிகளோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது நம் புத்தி பேதலித்துவிடுகிறது.

என் சிறு வயதில் பார்த்த ஓர் அனுபவம். எழுபதுகளின் தொடக்கத்தில் கேரளத்திலும் குமரி மாவட்டதிலும் ‘கொக்கோ’ பயிர் அறிமுகமாகியது. காட்பரீஸ் நிறுவனம் கொக்கோ விலையை உயர்த்தியது. மேலும் மேலும் கொக்கோவுக்கான தேவை உருவாயிற்று. காரணம் அவர்கள் சர்வதேச அளவில் கொக்கோ கொள்முதல் செய்த இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிகள். என் அண்டைவீட்டு கேசுமாமா அவரது நாலரை ஏக்கரிலும் தென்னகளை அழித்து கோக்கோ நட்டார். இரவு பகல் உழைத்து தண்ணீர் பாய்ச்சினார். நான்கு வருடம் கழித்து கொக்கோ காய்த்தபோது இலத்தீன் அமெரிக்க நிலை சீரடைந்தது. கொக்கோவுக்கு விலையே இல்லாமலாயிற்று. வளர்ந்து நின்ற மரங்களைப் பார்த்து கேசுமாமா ஏங்கினார். இரவு பகலாக காண்பவர்களிடமெல்லாம் விசாரித்தார். ஒருநாள் எல்லா கொக்கோக்களையும் வெட்டி வீசினார். மறுநாள் முதல் தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார். பதினாறு வருடம் பைத்தியமாக இருந்து இறந்தார்.

உழைப்பு, அதற்கேற்ப பலன் தரக்கூடிய ஓர் எளிய உலகம்தான் கேசுமாமா வாழ்ந்து வந்தது. அதில் சர்வதேச அரசியலும் பொருளாதாரமும் புகுந்தபோது அவரால் அதை உள்வாங்கவே முடியவில்லை. அதை புரிந்து கொள்ளும் தாக்கம் அவரிடம் இல்லை. அவருடைய கருவிகள் அதை எதிர்கொண்டபோது முறிந்து போயின.

ஆமாம், நாம் இன்னும் பெரிய வெளி ஒன்றை எதிர்கொள்ள நேர்வதையே முறிவுக்களம் என்கிறோம். சமீபத்தில் என் வாசகர் ஒருவரின் அம்மா தற்கொலை செய்து கொண்டார், அவரது அண்ணா ஓர் ஒரினச்சேர்க்கையாளர் என்று அம்மாவுக்குத் தெரியவந்ததே காரணம். பலவிதமான வாழ்க்கைகளைக் கண்ட அம்மாவால் அதை உள்வாங்க இயலவில்லை.

முறிவுக்கணத்தில் கேள்விகள் தீப்பட்ட மத்தாப்பிலிருந்து பொறிகள் கிளம்புவதுபோல பொங்கியெழுகின்றன. பல வருடங்களாக நான் அழுகைகளை, ஒப்பாரிகளை கேட்டு வருகிறேன். அனைத்தும் வெறும் கேள்விகள்தான். ‘என்னை எப்படி விட்டுப் போனீர்கள்? எப்படி மனம் வந்தது? இனி நான் என்ன செய்வேன்? என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இனி எதை நம்பி வாழ்வது? ஏன் இப்படி நடக்கிரது?’ நம்பிக்கையின் பாதை இந்த அனைத்துக் கேள்விகளையும் ஒரே பதிலால் மூடிப்போர்த்தி விடுகிறது. ‘எல்லாம் இறைவனின் சித்தம். நாம் அதை அறியமுடியாது.’ அவ்வளவுதான். நம்பு, சரணடை மேலே யோசிக்காதே. போதும். அது ஒரு சிறந்த வழிதான். இந்து மதம் ஒவ்வொருவருக்கும் உடனடியாக அளிக்கும் மருந்து அதுவே ‘விதி’, ‘கர்ம வினை’, ‘இறைவன் லீலை’ என்று இந்துமதம் கூறும் பதில்கள் எத்தனை! இந்த மருத்துக்குக் குணமாகாதவர்களுக்குத்தான் அடுத்த பாதை.

தேடலின் பாதையிலும் பல படிநிலைகள் உண்டு. முதல்படிநிலை நம்முடைய தன்முனைப்பு ஓங்கி நிற்கும் காலகட்டமாகும். ‘நான் பிறரில் இருந்து வேறுபட்டவன். ஒருபோதும் எளிய விடைகளால் ஆறுதல் அடையமாட்டேன். என்னுடைய தருக்க மனதிற்கும் உள்ளுணர்வுக்கும் முற்றிலும் திருப்திகரமான பதிலே எனக்குத் தேவை. அப்பதிலை பரிசீலித்து உண்மையை அறிந்து கொள்ளும் திராணி எனக்கு உண்டு’ என்ற எண்ணம் நம்முன் நிறைந்துள்ளது.

இந்நிலையில் நின்றபடி நாம் வாசிக்கும் நூல்கள் பெரும்பாலும் நம்முடைய தம்முனைப்பை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. சொல்லப்போனால், அதிகமாக வாசிக்கும் தோறும் தன்முனைப்பு அதிகரிக்கிறது. ‘அறிவார்ந்த’ விவாதங்களில் நாம் மீண்டும் மீண்டும் காண்பது தன்முனைப்பின் குரலையே. ‘என் கருத்தே நான். என் கருத்து மறுக்கப்படுவது என்னை நிராகரிப்பதாகும்’ என்ற எண்ணம் மூலம் உருவாகும் பதற்றமே ஏராளமான சொற்களாக மாறி விவாத அரங்குகளை நிறைக்கிறது. ‘ஒரு கருத்து என்னுள் உதித்தது என்பதனாலேயே அது என் உண்மை, அது என்னால் நிறுவப்பட வேண்டும்’ என்று எண்ணுவதே அறிவியக்கத்தில் இந்நிலையில் உள்ள மாபெரும் மாயை.

கீதா முகூர்த்தம் என்பது இந்த தன்னகங்காரத்தின் முறிவுநிலையே என்று கூறலாம். அலைஅலையாகக் கிளம்பும் நம் கேள்விகள் அனைத்தும் ‘நான்’ எனும் போதத்தை ஊற்றுக்கண்களாகக் கொண்டவை. அந்த போதம் மீது அடிவிழுந்து அது சுருண்டு கொள்ளும்போது நம் வினாக்களும் அர்த்தமிழந்து திகைத்து நிற்கின்றன. ‘தெரிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை’ என்றோ ‘தெரிந்து கொள்ளுதல் என்பதே வெறும் மனப்பிரமை’ என்றோ தோன்றிவிடும் ஒரு நிலை இது. வாழ்நாளெல்லாம் ஆவேசத்துடன் அறிவியக்கங்களில் ஈடுபடுபவர்கள் திடீரென்று இந்நிலையை அடைந்து மெளனமாகிவிட்டிருப்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். ஆயிரக்கணக்காக நூல்களை வாசித்தவர்கள், வருடக்கணக்காக விவாதித்தவர்கள் அதுவரை செய்த அனைத்தையுமே நிராகரித்துவிட்டு அமர்ந்திருப்பார்கள். வயதினாலும் குடும்பச்சுமையாலும் உருவாகும் சலிப்பை இங்கு குறிப்பிடவில்லை. திடீரென்று ஓர் அர்த்தமின்னையை உணர்ந்து அடையும் மெளனத்தையே குறிப்பிடுகிறேன். இந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள நேரும் ஒருவகை உச்சகட்டமே கீதாமுகூர்த்தம் என்பது.

கீதை இன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் ஒரு நூல் என்ற முறையில் எவரும் எப்போதும் படிக்கலாம். கீதைக்கான உரைகள் பற்பல. ஆனால் கீதாமுகூர்த்ததில் நிற்பவனே கீதையை முற்றாக உணரமுடியும். அந்தத் தருணத்துடன் தன்னை அடையாளம் காணமுடியுமென்றால் மட்டுமே கீதையை சற்றேனும் உள்வாங்கிக் கொள்ள முடியும். பிறர் கீதையினூடாக தங்கள் ஐயங்களைப் பெருக்கிக் கொள்ளலாம். தங்கள் அகங்காரங்களை மேலும் கெட்டிப்படுத்திக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

மறுபிரசுரம், முதல்பிரசுரம் Mar 17, 2008  

 

கீதை – தொகுப்பு

தொடர்புடைய சுட்டிகள்:

கீதை இடைச்செருகலா, மூலநூலா

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

கேள்வி பதில் – 49

தோமையர் எழுதிய சுவிசேஷம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2022 11:35

கே.என்.சிவராஜ பிள்ளை – போலீஸ் தமிழறிஞர்

ஒருமுறை நாகர்கோயில் சிதம்பரநகர் வழியாகச் செல்லும்போது அ.கா.பெருமாள் ஓர் இல்லத்தைச் சுட்டிக்காட்டி அது தமிழறிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை வாழ்ந்த வீடு என்றார். கூடவே அவர் சொன்னது இன்னொரு திகைப்பு. சிவராஜ பிள்ளை திருவனந்தபுரத்தில் காவல் உயரதிகாரியாகப் பணிபுரிந்தவர். வேலை பிடிக்காமல் ராஜினாமா செய்துவிட்டு மரக்கடை வைத்து பொருளிழப்பை அடைந்தார்

கே.என்.சிவராஜ பிள்ளை கே.என். சிவராஜ பிள்ளை கே.என். சிவராஜ பிள்ளை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2022 11:34

தூரன் விருது, நினைவுகள்

அன்பு ஆசிரியருக்கு,

தமிழ்விக்கி தூரன் விருது முழு நாளும் இனிய நினைவாக மனதில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடிய அறிதலான நாளாக அமைந்தது. அ.கா. பெருமாள், கரசூர் பத்மபாரதி, லோகமாதேவி, கு. மகுடீஸ்வரன் ஆகியோரின் அமர்வுகள் காலை பத்து மணி தொடங்கி ஐந்து மணி வரை நிகழ்ந்தது. நிகழ்வுக்கு வரும் முன்னரே அவர்களைப் பற்றிய தமிழ்விக்கி பக்கத்தின் வழி முழுமையாக அறிந்து கொண்டு அதிலிருந்து உருவான கேள்விகளுக்கான தயாரிப்போடு தான் வந்தேன்.

முதலில் நாட்டாரியல் ஆய்வாளரான அ.கா. பெருமாள் ஐயாவின் அமர்வு. அவருடைய தமிழறிஞர்கள் புத்தகம் வழியாக நீங்கள் தான் அவரை அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். தூரனும், ஆண்டியும் பிற அறிஞர்களும் அதன் வழி தான் எனக்கு அறிமுகமானார்கள். என் வாழ்நாள் முழுக்க உத்வேகம் தரக்கூடிய பதிவுகளாக தழிழறிஞர்கள் பற்றிய தமிழ் விக்கி பதிவுகள் இன்று அமைந்துள்ளன. அவற்றின் அடித்தளம் அ.கா. பெருமாளின் தமிழறிஞர்கள் புத்தகம் தான்.

பின்னும் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் பதிவுகள் வழியாக அவரின் நாட்டார் கலைகள், கூத்துக்கள் பற்றிய ஆய்வுகள் அறிமுகமாயின. வட்டார நுண்வரலாற்றாய்வு பற்றி அ.கா.பெருமாள் ஐயா கூறும்போது ’வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படும் பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்’ என்கிறார். இந்த சிந்தனை எனக்கு முக்கியமானதாகப்பட்டது.

உலகம் முழுவதும் “Localisation is new Globalaisation”, “More ethnicity means More International.” என்ற கருத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாட்டாரியலை வரலாற்று மீட்டுறுவாக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று சொன்ன அந்த கருத்து மிக முக்கியமானது. அ.கா. பெருமாள் ஐயாவின் அமர்வை எவ்வளவு நீட்டியிருந்தாலும் தகும் எனுமளவு நிறைய தகவல்களை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். முகமூடி ஆட்டங்கள், தோல்பாவைக்கூத்து, பொன்னர் சங்கர் கூத்து, தளவாய்மாடன் கூத்து, பிற நிகழ்த்துக்கலைகள் பற்றியும் கூத்துகளில் நிகழ்த்தப்படும் சடங்குகள் பற்றியும் பகிர்ந்தார்.

கவிமணியை பற்றிச் சொல்லும் போது “அவர் முதன்மையாக கல்வெட்டாய்வாளர். கவிதையும் எழுதினார்” என்று அவரை நிறுத்தியது புதிய கோணமாக இருந்தது. நாட்டுப்புற இலக்கியம், கலைகள் சார்ந்து ஒன்பது நாட்டுப்புற  மண்டலங்களாக பிரித்திருப்பதாகச் சொன்னார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருவாரியான நாட்டாரியல் ஆய்வுகளை ஐயா செய்துவிட்டார். பிற மண்டலங்களுக்கு இவை ஒரு வழிகாட்டியாக அமையும். எந்தெந்த கூறுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உங்களின் கேள்வி வழி அவர் சொன்ன பதில்கள் அறிதலாக இருந்தது. அந்தக் கேள்வியை நான் வேறுவிதமாக எழுதி வைத்திருந்தேன்.

”வட்டார நுண்வரலாற்றின் வழி நாட்டாரியலை அடிப்படையாகக் கொண்டு மீட்டுறுவாக்கம் செய்யப்படும் வரலாற்றில் முதன்மையாக கொள்ள வேண்டிய கூறுகளை பட்டியலாகத் தர இயலுமா? மேலும் இவை பண்பாட்டின் மீது ஓரளவேனும் ஆர்வமிருக்கும் நபர்களால் மட்டுமே செய்யப்படுகிறது எனில் அவர்களுக்கான வழிகாட்டுதலாக இந்த நாட்டாரியல் கூறுகள் பட்டியல் துணை புரியும்” என்ற கேள்வியாக எழுதியிருந்தேன். அதற்கான பதிலாக “ஊரிலுள்ள சிறு தெய்வங்கள், விளையாட்டுகள், ஆட்டங்கள், கூத்துக்கள், பெருந்தெய்வங்கள், குல தெய்வக் கோயில்கள், ஊர் திருவிழா சடங்குகள், அந்தந்த தெய்வங்களுக்கான கதைகள், சுற்றியுள்ள கல்வெட்டுக்கள், நடுகற்கல்” என பட்டியல்களை விரித்துக் கொடுத்தார். உண்மையில் பண்பாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் வாழ் நாளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வை / ஆவணப்படுத்தலைச் செய்யலாம்.

கு. மகுடீஸ்வரன் அவர்கள் இலக்கியம் வழியாக வட்டார ஆய்வியலைச் செய்திருந்தார். கொங்குச் செல்வங்கள், கொங்கு மலர்கள், கொங்கு மணிகள் என கொங்கு வட்டாரத்தைச் சார்ந்து இலக்கியத்தின் வழி ஆய்ந்திருந்தார். இவையாவும் இணையும் புள்ளி என் கண் முன்னே விரிந்து கொண்டு சென்றது. அது “வரலாறு” எனும் மையம்.

எந்த ஒரு உரையிலும், தகவல் சார்ந்து பேசும்போதும் நீங்கள் வரலாற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். நாட்டாரியல், இலக்கியம், மானுடவியல் என பலவும் இணைந்து உருவாக்கவிருக்கும் வரலாற்று மீட்டுறுவாக்கத்தை கற்பனை செய்து கொண்டிருந்தேன். அது சார்ந்து என் கேள்விகளை விசாலப்படுத்திக் கொண்டேன்.

நான் மாநிலப்பாடத்திட்டத்தில் பள்ளியில் படிக்கும் போது வரலாறு என்பது ஒற்றைப்படை தான். கல்வியலாளர்கள் தொகுத்து அளித்த நிறை. அதில் உணர்ச்சி பொங்கல்கள் அடைந்திருக்கிறோம். சிலர் மேல் இனம்புரியா வெறுப்புகள். ஆனால் போட்டித்தேர்வு காலகட்டத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் வாசிக்கும் போது தான் வரலாற்றின் பல பரிமாணங்கள் புரிந்தது. ஒன்று பிரிடிஷார் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் வழியான சித்திரம், இரண்டு நம்மவர்கள் எழுதிய வரலாறு, மூன்று மக்கள் வழி அறியும் வரலாறு. இதில் மூன்றாவாது வரலாற்றின் போதாமையைச் சொல்லியிருப்பார்கள். ஏனெனில் அது வாய்மொழியானது. அ.கா. பெருமாள் அவர்கள் சொல்லும் நாட்டாரியல் ஆய்வுகள் இங்கு தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் படுகிறது.

நாட்டாரியல்சார் வரலாற்றை ஆராய்வதற்கு ஒதுக்கப்படும் நிதியைப் பற்றிய கேள்விக்கு அ.கா. பெருமாள் ஐயா ”ஃபோர்ட் நிதி” பற்றி சொன்னார். ஒன்று மொழியியல் சார்ந்தும், இரண்டு நாட்டாரியல் சார்ந்தும் நிதி ஒதுக்கப்பட்டது என்றும் பெரும்பாலும் மொழியியல் சார் ஆய்வுகளுக்கே இங்கு அதிக நிதி செலவிடும் போக்கைப் பற்றியும் சொன்னார். நாட்டாரியல் சார்ந்த நிதி தென் மாவட்டங்களுக்கு அதிகம் கிடைத்தது / அங்கு ஆய்வு சார்ந்து ஆர்வமிக்கவர்கள் இருந்தார்கள் எனவே தென் மாவட்டங்களில் அதிக நாட்டாரியல் ஆய்வுகள் நடந்ததாகச் சொன்னார்.

காளிபிரசாத், நாட்டாரியல் சார்ந்த புத்தகங்கள் குமரி மாவட்டத்திற்கு இருப்பது போல பிற மாவட்டங்களுக்கு இருக்கிறதா என்றும் அப்படியான ஆய்வாளர்கள் யாரும் இருந்தால், புத்தகங்கள் இருந்தால் அறிமுகப்படுத்துமாறு கேட்டார். ஒரு எழுத்தாளரின் மனக்குமுறலாக நண்பர்கள் அதை பகடி செய்து கொண்டிருந்தார்கள். குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாடன் ஐயா தொடங்கி சுஷில், வைரவன் வரை எழுத்தாளர் நிரை ஒன்று உள்ளது. அவர்களுக்கெல்லாம் அ.கா. பெருமாளின் நாட்டாரியல் ஆய்வுகள் பொக்கிஷமானவை. அது போல தஞ்சாவூர், வேலூருக்கு இருந்தால் அங்கிருக்கும் எழுத்தாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்ற தொனி என அவரை பகடி செய்தோம்.

உண்மையில் இது போன்ற பண்பாட்டு ஆய்வுகள் நிதி உதவியாலோ, யாருடைய முன்னெடுப்பினாலும் அல்ல, அந்தந்தப் பகுதியில் பண்பாட்டின் மீது சிறிதளாவேனும் அக்கறை இருப்பதனால் தான் நிகழ்கிறது என்றார். பிற இடங்களில் எழுத்தாளர்களின் புனைவுகள் வழி இந்த தகவல்களை எடுக்குமளவு பதிவுகளும் உள்ளன என்றார். கு. மகுடீஸ்வரன் அவர்களும் இலக்கியம் சார்ந்த நுண் ஆய்வுகளைச் செய்வதற்கும் இத்தகைய ஆர்வமுள்ளவர்களே தேவை என்றார். ”தெய்வசிகாமணிக் கவுண்டரின்” புத்தகங்களை அவர்கள் குடும்பத்தார் விலைக்குப் போடுவதாகச் சொன்னபோது ஒரு டெம்போ வைத்து உரிய தொகை கொடுத்து அதை மீட்டெடுத்து வந்தோம். அதிலிருந்து சிலவற்றை மட்டுமே எங்களால் தொகுத்து பதிப்பிக்க முடிந்தது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கி அதை பதிப்பிக்கத்தயாராக இருந்தால் தருவதாகச் சொன்னார். எனக்கு செல்வகேசவராய முதலியாரின் வரிகள் நினைவுக்கு வந்தது.

“பண்டைத் தமிழ்ப் பனுவல்களைப் பதிப்பிப்பதென்றால் கையிலுள்ள பொருளைக் கொண்டுபோய் நட்டாற்றில் வலிய எறிந்துவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு வீடுபோய் சேர்வதே முடிவான பொருள் என்பதுணர்ந்து எச்சரிக்கையாய் இருப்பார்க்கு இன்னலொன்றும் இல்லை…”  என்ற வரிகள். இதை தமிழறிஞர்கள் புத்தகத்தில் படித்த அன்று அழிசி ஸ்ரீநி யிடம் பகிர்ந்து கொண்டேன். தான் சோர்ந்து போகும்போது எப்போதும் எடுத்துப் பார்த்துக் கொள்ளும் வரிகள் அவை என்று சொன்னார். இத்தகைய ஆர்வலாளர்களால் மட்டுமே இந்தப்பணிகள் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை கண்ணோக்கும் வாய்ப்பாக தமிழ்விக்கி பணியைப் பார்க்கிறேன்.

அறிவியல், மொழியியல் என அனைத்து துறை சார்ந்தும் ”ஆர்வமுள்ளவர்கள்” மட்டுமே இக்காலத்தில் தேவையாக இருக்கிறார்கள். இந்த ஆய்வுப் பணிகளோ, தொகுத்தல் பணிகளோ புகழையும், பெயரையும் வாங்கிக் கொடுக்காத துறை. இன்று வாழும் “z” தலைமுறை அவற்றின் மீதே பிரதான மோகம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்த உழைப்பு, அதிக பணம், அதிக புகழ், பெரும்பான்மை கேளிக்கை வாழ்க்கை என ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. அவர்களுக்கான தூண்டுதலை அளிக்க இதுபோன்ற பணிகளைச் செய்த, செய்து கொண்டிருப்பவர்களின் அறிமுகம் அவசியம். அப்படி ஒன்றாக தமிழ்விக்கி தூரன் விருது விழா அமையும்.

மெளனகுரு ஐயா எழுதிய “பழையதும் புதியதும்” என்ற புத்தகத்தை தமிழ் விக்கி பதிவுக்காக எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தீர்கள்.  கூத்து, நாடக்கலை பற்றிய விரிவான அறிமுகத்தோடு எட்டு முக்கியமான அண்ணாவியார்களைப் பற்றியும் தொகுத்திருந்தார். வெறுமே தகவல்கள் மட்டுமில்லாமல் அவரின் அனுபவத்தை, கலைஞர்களின் வாழ்க்கையை, அர்ப்பணிப்பை, அவர்களின் துயரத்தை, அவர்களின் திறமையை அதில் பதிவு செய்திருந்தார். ஒவ்வொரு பதிவுக்கும் அவரின் பயணம் அர்ப்பணிப்பு உணர்வுடையது. ஒவ்வொரு அண்ணாவியாரின் கதையிலும் உளம் பொங்கியிருந்தேன். அண்ணாவியார்களின் அர்ப்பணிப்புக்கு நிகராகவே மெளனகுருவின் பயணத்தை இலங்கையில் கற்பனையில் தொடர்ந்திருந்தேன். அந்தப் பதிவுகளுக்கான தேடலில் செல்லையா மெட்ராஸ்மெயில் அவர்கள் தொகுத்த நாடகக் கலைஞர்கள் புத்தகம் கிடைத்தது. மிக அருமையான தொகுப்பு. ஏறக்குறைய அறுபது அண்ணாவியார்களை தொகுத்திருப்போம். இலங்கையில் தமிழகத்தை விடவும் மிகச் சிறப்பாக புத்தகங்களை, அறிஞர்களை, படைப்புகளை ஒரு தளத்தில் தொகுத்து வைத்திருக்கிறார்கள். நூலகம், ஆரையம்பதி போன்றவை முக்கியமான தளங்கள். இருப்பினும் பல புத்தகங்களிலிருந்தும், இணையத்திலுள்ள பிற தகவல்களையும் இணைத்து ஒரு தமிழ் விக்கி பக்கம் உருவாகும் போது தான் அது நிறைவாகிறது.

இலங்கை அண்ணாவியார்கள் பதிவுகளின் வழி தமிழகத்திலிருந்து கூத்து நடிக்கவந்தவர்கள், புகழ்பெற்றவர்கள் பற்றி அறிய முடிந்தது. ஏறக்குறைய அறுபது அண்ணாவியார்களில் ஒரு பெண் நாடகக் கலைஞரை மட்டும் தான் இலங்கையில் கண்டடைந்தேன். அவரும் கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இங்கு கூத்து நடிக்க வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்களின் வழி தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் இருந்த கூத்துக் கலைஞர்களுக்கான தேடல் எனக்கிருந்தது. நம்முடைய நாடகக் கலை இங்கு சங்கரதாஸ் ஸ்வாமிகள், டி.கே.எஸ். சகோதாரர்கள், பம்மல் சம்பந்தனாரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது.

டி.கே.எஸ் சகோதரர்களின் பதிவை முடித்த அன்று நம் நாடக வரலாற்றுக் கலையை நினைத்து பெருமிதமாக இருந்தது. அவரின் புத்தகள் tamilvu பக்கத்தில் கோர்வையாக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து தான் பல தகவல்கள் புகைப்படங்கள் எடுத்தேன். அது போல அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் அவரின் நண்பர்கள் தொகுக்கும் தென்றல் வலைதளம் முக்கியமானது. ஆனால் மெளனகுரு ஐயாவின் பணி, சு.வித்தியானந்தனின் நாடகக் கலை மீட்டுறுவாக்கம் ஆகியவற்றிற்கும், நம்  நாடக முன்னோடிகளான நால்வரின் நாடக மறுமலர்ச்சிக்குமான வித்தியாசத்தை உணர்ந்தேன். இலங்கையில் வித்தியானந்தனும், மெளனகுருவும் நாடகக் கலையை அண்ணாவியார்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் நிகழ்த்துக் கலைகளில் மாற்றத்தை உட்புகுத்தி படித்தவர்கள் மத்தியில் மேலும் பிரபலமடையச் செய்தனர். அண்ணாவியார்கள் யாழ் போன்ற பலகலைக்கழகங்களில் அரங்காற்றுகை செய்து பரிசு வென்றனர். மாணவர்களுக்கு கூத்து பழக்கினர். படித்தவர்கள் மத்தியில் கூத்து பிரபலமானது. ஆனால் கூத்துக் கலையோடு சேர்த்து அவர்கள் கூத்துக் கலைஞர்களையும் மீட்டுறுவாக்கம் செய்தனர். அவர்களுக்கான உதவித்தொகைகளை, அங்கீகாரத்தை முடிந்த அளவு சொந்த முயற்சியில் மெளனகுரு ஐயா பெற்றுத்தந்துள்ளார். தமிழகத்தில் அப்படியொரு மெளனகுருவும், சு.வித்தியானந்தனும் இல்லை என்ற கவலை தொற்றிக் கொண்டது.

தமிழகத்தில் நாடகம், பேசும் படம் நோக்கியும் சினிமாவை நோக்கியும் நகர்ந்தபின் அந்தக் கலைஞர்கள் என்ன ஆனார்கள் என்பதைதே அறியமுடியவில்லை. இன்றும் கூத்தும், நாட்டார்கலைகளும், நாடகமும் கிராமங்களில் ஆங்காங்கே நடக்கிறது. திரிந்த நிலையில், சினிமாத்தனமையோடு. எங்காவது கலையாக நிகழ்ந்து கொண்டிருக்கலாம். நாடக முன்னோடிகள் தொடங்கி வைத்த நாடகங்கள் சென்னையில் குளிரூட்டப்பட்ட இடங்களில், படித்தவர்கள், உயர் குடிகள் கலைஞர்களாக இருந்து படித்தவர்களை பார்வையாளர்களாகக் கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கோரும் ஒன்றாக அல்லது அங்கிருந்து விலகியவர்கள் தங்கும் கூடாக, மிகச் சில பட்டறைகளில் கலையாக என அது ஒரு தனிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கூத்துக் கலைஞர்கள் பற்றிய ஆவணப்படுத்தலைப் பற்றி அ.கா. பெருமாள் ஐயாவிடம் கேள்வி எழுப்பியபோது அப்படி ஆவணப்படுத்தப்படவில்லை என்றார். உதவித்தொகைகளுக்கே முயற்சி நடந்து அங்கொன்றும் இங்கொன்றும் நடந்ததாகச் சொன்னார். இலங்கையைப் போல தமிழகத்திலும் இத்தகைய ஆவணப்படுத்தல் நிகழ இப்போது இருக்கும் கூத்துக் கலைஞர்கள் வழி அந்த பணியைத் தொடங்கலாம் என்றார். நம் அண்ணாவியார்கள்/கட்டியங்காரன்/ ஆசான்கள் யார் என்பதை அறியவும் கூட அதே அர்வமிக்க தொகுத்தல் பணி செய்யக்கூடியவர்கள் தான் தேவைப்படுகிறார்கள். அ.கா. பெருமாள் ஐயாவின் அமர்வின் முடிவில் ஏதோ எச்சமாகவே தோன்றியது. அவரின் அனைத்து பரிமாணங்களிலும் இன்னும் கேள்விகள் அமைந்திருக்கலாம் என்று தோன்றியது. கூத்துக்கலை பற்றி மட்டுமே நீண்ட நேரம் உரையாடல் சென்றுவிட்டது.

லோகமாதேவி அவர்களின் அமர்வு மிகவும் சுவாரசியமானது.  அறிவியல் துறையைப் பொருத்தவரை ஆய்வுகள் வெளி நாட்டு ஆய்வாளர்கள் செய்வதை போலிமை செய்வதை நோக்கியே செல்லும். ஆனால் லோகமாதேவி அவர்களின் கீழ் செயல்படும் முனைவர்பட்ட மாணவர்களுக்கு அவர் எடுத்து தரும் தலைப்பு அந்தந்த பிராந்தியம் சார்ந்ததவை. வெள்ளிமலையிலுள்ள தாவரங்களை ஆவணப்படுத்தும் முயற்சி, தாவரக் கலைக்களஞ்சியம் கொண்டுவரும் முயற்சி என தன் துறைசார் செயல்பாடுகளில் தீவிரமாக இருப்பவர். இலக்கியமும்-தாவரவியலும் இணையும் ஒரு புள்ளியில் அவர் எழுதும் கட்டுரைகள் முக்கியமானவை. டீச்சர் சமீபமாக மிகவும் சிலாகிப்பது “அதழ்” பற்றி. ஆங்கிலத்திலுள்ள tepal (petal+sepal) அதாவது இதழ் எனப்படும் petal, புல்லிவட்டம் எனப்படும் sepal ஒன்றாக இணைந்து ஒரு பகுதி இருக்கும். அல்லி, தாமரை போன்றவைகளில் உள்ளதை நாம் இதழ் என்று சொல்லமாட்டோம் அது டெபல் என்றே சொல்லுவோம். அந்த டெபல் என்பதற்கான தமிழ்ச்சொல்லை அவர் சங்க இலக்கியத்திலிருந்து கண்டடையும்போது கிடைத்த வியப்பை அரங்கத்தில் பகிர்ந்தபோது,

சென்றவாரம் ஒரு வித்தியாசமான முயற்சியாக மது, சந்தோஷ் தமிழ்விக்கி பதிவுகளுக்கான வரைபடத்தை உருவாக்கி பார்த்ததாகச் சொல்லி ஒரு படத்தை அனுப்பியிருந்தார்கள். அதை பார்த்த போது வலைபின்னல் என்று சொன்ன வார்த்தையின் உண்மைத்தனமையைப் பார்த்த பிரமிப்பு ஏற்பட்டது. டீச்சர் அதழ் பற்றி சொல்லும் போது மிகப்பிரம்மாண்ட வலைபின்னலின் முன் அவர்கள் ஒரு கண்ணியைக் கண்டடையும்போது கிடைக்கும் ஆனந்தமாக கற்பனை செய்து பார்த்தேன்.

மேலும் அவர் சங்க கால சோமபானம் என்பது எந்த தாவரம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் Hallucinating plants பற்றியும், பழங்குடியினரின் சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் தாவரங்கள் பற்றியும் ஆவணப்படுத்தும் முயற்சியில் இருப்பதாகவும் சொன்னார். தன் நாவல்களில் சூழலியல் சார்ந்து, தாவரம் சார்ந்து ஆவணப்படுத்தும் சோ. தர்மன் ஐயா பல சந்தேகங்களை கேள்விகளாக டீச்சரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒரு நாவல் மரம் பூ பூப்பதோடு நின்று விடுகிறது அதை எப்ப்அடி புரிந்து கொள்வது என்ற கேள்விக்கு. சில மரங்களில் இந்த mutation issues, environmental induced mutation பிரச்சனைகளாக இருக்கும் என்றார். தன் வீட்டில் ஒரு எலுமிச்சை மரம் ஒரு நாள் பெய்த மழையில் இடி விழுந்து அதன் பின் அறுவடை செய்த எழுமிச்சை பழங்கள் யாவும் விதையில்லாமல் பெரிய பழங்களாக வந்தது என்றார். ஏதோ புனைவுக்கதையை வாசிப்பது போன்ற உணர்வை அது தந்தது அந்த உரையாடலகள். மணிவிழுங்கி மரம் முதற்கொண்டு அமேசான் காடுகளில் பழங்குடியினர் மட்டுமே அறிந்த ஆன்மாவை பிரித்துக் காணும் தாவரம் வரை mystery plants பற்றி சொல்லி முன்னோர்களின் இயறகியோடு இயந்த வாழ்வில் கிடைத்த அறிவையும் தொக்குக்க வேண்டுவதன் முக்கியத்துவத்தைச் சொன்னார். தமிழகத்தில் அவ்வாறான இனக்குழுக்கள், ஹாட்ஸ்பாட்ஸ் ஆகியவற்றில் ஆய்வுகள் நடத்தி ஆவணப்படுத்த வேண்டுமென்றும் கூறினார். ஒவ்வொரு நிலப்பரப்பு சார்ந்தும் தாவர ஆர்வலர்கள் அந்தப் பகுதியைச் சார்ந்த கணக்கெடுத்தல் மற்றும் நான்கு வருடங்கள் கழித்து அதை மீண்டும் கணக்கெடுப்பு செய்து அதன் மாற்றங்களை ஆவணப்படுத்துவதன் அவசியத்தைப் பகிர்ந்தார்.

புதிய மற்றும் உள்ளூர் தாவரங்களை கண்டறியும் போது அவற்றிற்கு பெயரிடுதல் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். சில தாவரங்களுக்கான அதைக் எளிதில் கண்டெறியும் வகையில் அதன் பயன்பாட்டுடன்/பண்புடன் இணைந்த பெயர்களை அவர் பரிந்துரைகளும் செய்திருக்கிறார். ”அதழ்” போல தாவரவியல் சார்ந்த பெயர்களுக்கான கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியைப் பற்றியும் பகிர்ந்தார். வெண்ணிலா தாவரம், ஆர்டிசோகா தாவரம் பற்றிய புனைவுக்கதைகள், அசையாமல் இருப்பவற்றை காலப்போக்கில் மறக்கும் தன்மையை “தாவரக்குருடு” என்று அழைத்தது, கருவேலம் யூக்கலிப்டஸ் என களைச்செடிகளைப் பற்றிச் சொல்லும்போது “They are also plants but in wrong place” என கரிசனத்துடன் சொன்னது என மிகவும் உயிர்ப்பான அமர்வாக அமைந்தது. கேள்வி கேட்டு முடித்த ஒவ்வொருவரையும் “please sit down” என்று சொல்லி அமரவைத்துவிட்டு, உட்கார்ந்திருப்பவர்கள் அனைவரையும் மாணவர்கள் போல பாவித்து பதில் சொல்லிக் கொண்டிருந்தது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் உணர்வைத்தந்தது. மிக உற்சாகமாக அமைந்த அந்த அமர்வை கவிஞர் ஆனந்த்குமார் அவரின் அனைத்துப் பரிமாணங்களையும் வெளிப்படுத்துமளவு நகர்த்திச் சென்றார்.

கரசூர் பத்மபாரதி அரங்கு கேள்விகளால் அல்லாமல் முதலில் அவரின் ஆய்வுப்பணி அனுபவத்தோடு ஆரம்பித்தது. அதுவரை எங்களுக்கு பத்மபாரதி பற்றிய பிம்பம் அவர் சற்றே பயந்த சுபாவம், தயக்கமுடையவர் என்பது. நீலி மின்னிதழுக்காக அவரை நேர்காணல் செய்ய நானும், ஜி,எஸ்,எஸ்,வி நவீனும் பலவகை முயற்சிகளில் ஈடுபட்டோம். அதில் தோல்வியடைந்த பின் அவரை நேரில் சந்திக்க முடிந்த கடலூர் சீனுவின் உதவியை நாடினோம். இதற்கிடையில் ஆங்கில நாளிதழில் நேர்காணல் செய்வதற்காக சுசித்ராவும் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின் யாவற்றையும் விழாவிற்குப் பின் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்து அவரின் ஆக்கங்களைப் பற்றிய கட்டுரைகளை மட்டும் கொணரும் பணியில் இறங்கினோம். ஆனால் நாங்கள் அரங்கிலும் விழா மேடையிலும் பார்த்த பத்மபாரதி வேறொருவர்.

அரங்கில் பத்மபாரதி தன் மாணவப் பருவத்துக்கே சென்று விட்டார் என்று தோன்றுமளவு ஒவ்வொரு காட்சியாக எங்களுக்கு விளக்கினார். திருநங்கையர், நரிக்குறவர் பற்றிய ஆய்வுத் தலைப்பை தேர்ந்தெடுக்கும்போதே ஒரு பெண்ணாக ஏன் இவ்வளவு உழைப்பு கேட்கும் பணியை எடுக்க வேண்டும் என்ற தடைச் சொற்களுக்கு மத்தியில் தான் நித்தமும் செல்லும் வழியில் இருக்கும் நரிக்குரவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்தத் தலைப்பை எடுத்ததாகச் சொன்னார். ஒவ்வொரு நாளும் அவர்களை சந்திக்கச் செல்லும் போதும், ஒவ்வொருவரிடமிருந்தும் தகவலகளைப் பெற அவர்களை அணுக்கமாக்கிக் கொள்ளும் பொருட்டு அவர்களில் ஒருவராக அவர் மாறிப் போனபின் தான் ஆய்வுக்களம் தனக்கானதாக மாறியது என்று சொன்னபோது அவரின் உழைப்பு புரிந்தது. உழைப்பும் ஆர்வமும் இருக்கும் ஒருவருக்கு பொருளாதார ரீதியான செலவு என்பது அங்குள்ள மக்களுக்கு செய்யும் மிகச்சிறிய உதவிகள் மட்டுமே என்பதைச் சொன்னார். மொத்தமாகவே ஈடு வைக்க முடியாத உழைப்பும், இருபது முதல் இருபத்தியைந்தாயிரம் செலவுமே ஆனதாகச் சொன்னார். இத்தகைய ஆய்வு புத்தகத்தை எந்த பணமும் பெற்றுக் கொள்ளாமல் பதிப்பித்த தமிழினி வசந்தகுமார் ஐயாவின் மீது மிகுந்த மரியாதை வந்தது.

இங்கிருந்து நீங்கள் சுந்தரராமசாமி பற்றிய முனைவர் பட்ட ஆய்விற்கு வந்தவர் அவர் முன் உட்கார்ந்து கொண்டு “நீங்கள் ஆணா அல்லது பெண்ணா” என்ற டெம்பிளேட் கேள்வியைக் கேட்டதை நகைச்சுவையாக பகிர்ந்ததை ஒப்பு நோக்கிக் கொண்டேன்.

ப்ளாக்யாரிசம் என்று சொல்லப்படக்கூடிய ஏற்கனவே உள்ளவைகளை போலிமை செய்வது தான் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கல்வித்துறை ஆய்வுகளுக்கு மத்தியில் அத்தனை துடிப்போடும், ஆர்வத்தோடும் நரிக்குறவர்களைப் பற்றியும், அத்துடன் ஆர்வத்தின் பெயரில் திருநங்கைகளைப் பற்றிய ஆய்வையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தவரின் பித்தை தன் மாணவர் பருவத்திற்கே சென்று பகிர்ந்ததை பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தோம். மேலும் நரிக்குறவர்கள், திரு நங்கைகள் பற்றிய ஆய்வை அவரிலிருந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல் அதையே போலிமை செய்து கொண்டிருப்பதைப் பற்றியும் வேதனையுடன் சொன்னார்.

அவருடைய அரங்கு கள ஆய்வைச் செய்யும்போது இருந்த கள்ளமில்லாத, துடிப்பான பத்மபாரதியை கண்முன் நிறுத்தியது. அந்த அரங்கிலிருந்து அவரின் ஏற்புரையில் பாலைவனத்தில் திடீரென பெய்யும் மழையாக தூரன் விருதைச் சொன்னபோது உண்மையில் கண்களில் நீர் நிறைந்திருந்தது. இரண்டு லட்சம் தன் ஆய்வுப்பணிகளுக்கு உதவும் என்பது எந்த அளவுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்வதற்கான பொருளாதாரச் சுதந்திரம் அவசியம் என்பதையே சுட்டியது. அவர் மேலும் மேலும் தன் பணியை செய்வதற்கான சிறு ஊக்கியாக இந்த விழா அவருக்கும் அமையும் என்றே தோன்றியது.

இறுதியில் உங்கள் உரை முழுவதும் ஏனோ உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருந்தேன். நீங்கள் இடையறாது செய்யும் தமிழ் விக்கி பணி வாயிலாகவும், நீங்கள் அதன் வழி எங்களுக்கு அறிமுகப்படுத்தும் நூல்களும், ஆவணப்படுத்த வேண்டியவர்களும், வேண்டியவைகளும் மிகப்பெரிய ஊக்கத்தை எங்களுக்கு அளிக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் பயனுள்ள ஏதோ ஒன்று செய்யவில்லையானால் குற்றவுணர்வு வந்துவிடுகிறது. ”பயனுற வாழ்தல்” தரும் நிறைவை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறேன். ஒரு கருவியாக பயனுற வேண்டும் என்ற எண்ணம் இளமை முதலே இருந்துள்ளது எனக்கு. அதன் வடிகாலாக இலக்கியத்தையும், இலக்கியப் பணியையும் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்காக நன்றி ஜெ. “நாம் தொடங்குவது முடிப்பதற்காகத்தான். மரணம் தவிர வேறு எதுவும் அதை நிறுத்தமுடியாது. நாம் இருந்தாலும், மறைந்தாலும் இப்பணி மேலும் தொடர வேண்டும்” என்று நீங்கள் சொன்னபோது கண்களில் நீர் ததும்பியிருந்தது. பெருமிதம் கலந்த அழுகை ஒன்று உங்கள் உரை முழுவதுமாக இருந்தது எனக்கு.

இறுதியாக கரசூர் பத்மபாரதி ஆற்றிய உரை வரலாற்றை கண்ணுறுதல் தான். வெடிச்சிரிப்புகளும், கைத்தட்டல்களும், உணர்வுகளும், மகிழ்வும் நிரம்பிய அரங்கை பத்மபாரதி முதல் தூரன் விருது விழாவுக்கு பரிசளித்திருக்கிறார்கள். இனி தூரன் விருது வாங்கப்போகும் ஆய்வாளர்களுக்கு இந்த நிகழ்வு இன்னொரு மகுடமாகவே அமையும். “நான் இறந்தால் ரேடியோவில் கூட செய்தி அறிவிக்கமாட்டார்களே ராமசாமி” என்று வருத்தப்பட்டு ஒவ்வொரு நாளும் பயனுற வாழ்ந்து மடிந்த ஐயா பெரியசாமித்தூரனின் ஆசி பத்மபாரதிக்கு இனி வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று எண்ணிக் கொண்டேன். பொருட்படுத்தும்படியான ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கரசூர் அவர்களின் குறுகிய கால தேக்க நிலைக்கு இந்த விருது ஒரு ஊக்கியாக அமையும். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்குள் எப்போதும் துளிர்விடும் ஒரு ஆசிரியருக்கான மரியாதையை அரசு கவனத்தில் கொண்டு அதற்கான வழிவகை செய்ய வேண்டும். அது அவர்களுக்கு மட்டுமல்ல வருங்கால மாணவர்களுக்கு செய்யும் நன்மையும் கூட.

எப்போதும்போல விழா நேர்த்தியாக நடைபெற்றது என்று சொல்லி முடித்துவிட முடியாது. ஏனெனில் இது முதல்முறையாக ஈரோட்டு நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட விழா. அரங்கு ஒவ்வொன்றும் குறித்த நேரத்தில் முடிந்தது. உணவு மிகச்சிறப்பாக இருந்தது. விழா அமைவிடம், தங்கும் வசதி என யாவற்றையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தார்கள். சமையல் கேட்டரிங் முதல் ப்ளக்ஸ், விளம்பரம், விழாவுக்கான சிலை வடிவமைப்பு வரை ஈரோடு பிரபுவின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து ஈரோடு சிவா, சந்திரசேகர், பாரி, மணவாளன், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன், தாமரைக்கண்ணன், கடலூர் சீனு, ஈரோடு கிருஷ்ணன், செந்தில் என பலரும் அயராது உழைப்பைச் செலுத்தி இந்நிகழ்வை நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக தமிழ்விக்கி பணியும், அதன் வழியில் பிறந்த தமிழ்விக்கி தூரன் விருது விழாவும் புறநானூற்று பாடலொன்றை நினைவில் மீட்டச் செய்தது.

“கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,

அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,

பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,

இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்

புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து

உரனுடை யாளர் கேண்மையொடு

இயைந்த வைகல் உளவா கியரோ!”

அப்படியாக இடப்பக்கம் தான் கவ்விய காட்டுப்பன்றி விழுந்ததென்ற காரணத்தினால் உண்ணாதாகி மேலும் பசித்து தன் வலப்பக்கத்தில் பெருங்களிறை வீழ்த்தி உண்ட புலியைப் போன்றோரின் கேண்மையையே நம் சான்றோர்கள் விரும்பியுள்ளார்கள். அத்தகைய வினையையும், மனிதர்களையும் என் வாழ் நாளில் நான் காண்பதற்கும் அதை நோக்கிய பயணத்தில் என்னைச் செலுத்தும் உங்கள் செயல்களுக்கும் மிக்க நன்றி ஜெ.

ரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2022 11:33

அறுபடா பொன்னிழை -சுபஸ்ரீ

அன்புநிறை ஜெ,

இடையறாத செயல் வேள்வி ஒன்றின்  உச்சமான ஒரு கொண்டாட்டமாக விக்கி தூரன் விருது விழா நடந்து முடிந்திருப்பதை வாசித்து மனம் மகிழ்வாக இருக்கிறது. இதில் தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்படும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கர்ம வேள்வியாக நடந்து கொண்டிருக்கும் மற்றொரு செயல் குறித்து இக்கடிதம்.

குருஜி சௌந்தர் யோக ஆசிரியப் பயிற்சி வகுப்பு ஒன்றைத் துவக்கியிருக்கிறார். அவரது வழக்கமான யோகப்பயிற்சி வகுப்புகளைத் தவிர இப்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பெரும் உழைப்பையும் நேரத்தையும் கோரும் பணி. ஓராண்டு அல்லது அதற்கும் மேலாக நீளக் கூடிய மிகச் செறிவான பாடத்திட்டம். கற்பவர்களிடமும் ஒவ்வொரு நாளும் தீவிரமான பயிற்சியையும் அதற்கான நேரத்தையும் கோரும் பயிற்சித்திட்டம்.  தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இணையம் வழியாக நடக்கிறது. வாரந்தோறும் இரண்டு முதல் மூன்று வகுப்புகள் என தொடங்கி இதுவரை அறிமுக வகுப்பும் மேலும் இரண்டு வகுப்புகளும் நடந்திருக்கின்றன. வேற்று மொழி பேசுபவர்களும் வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்பவர்களும் இருப்பதால் இரு மொழிகள். கலந்துகொள்பவர்களின் இடம்/காலம் சார்ந்த தேவைகளுக்கேற்ப எல்லா வகுப்புகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் ஏதேனும் புதிதாக மிக முக்கியமான அறிதல் ஒன்றைப் போகிற போக்கில் சொல்லி விடுவதால், மறுமுறை எடுக்கப்படும் வகுப்புகளில் கூட பலரும் மீண்டும் இணைந்து கொள்வதைப் பார்க்கிறேன்.

இப்பயிற்சி திட்டத்தை இருகட்டமாக குருஜி சௌந்தர் வகுத்திருக்கிறார். யோகப் பயிற்சி பெறுபவர்களை தீவிர யோக சாதகனாக மாற்றுவது முதற் கட்டம். இது ஆறு மாதங்கள் வரை நீளக்கூடும். பின்னர் அவர்களை பிறரைப் பயிற்றுவிக்கும் திறன் கொண்டவர்களாக ஆக்கும் ஆசிரியப் பயிற்சி – என இரு நிலைகள்.

வெறும் யோகப் பயிற்சி தரக்கூடிய ஆசிரியர்களை உருவாக்குவதல்ல, தீவிரமான யோக சாதகனை உருவாக்குவதும், சக ஆத்மனுக்கான தேவையை உணர்ந்து அதை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்ட யோக ஆசிரியர்களை உருவாக்குவதுமே நோக்கம் என்பதை முதலில் வகுத்துவிட்டார்.

வழக்கமான யோகப் பயிற்சி வகுப்புகளில் இருந்து மிக முக்கியமான சில கூறுகளால் இப்பயிற்சி தனித்து இருக்கிறது.

முதலாவதாக யோகத்தை மரபான குருநிலையிலிருந்து கற்ற ஆசிரியர் என்பதால் குரு மரபின் அறுபடாத ஞானச் சரடின் ஒரு கண்ணியாக நம்மை இணைத்துக் கொள்ளும், உணரும் ஒரு வாய்ப்பு. அது சார்ந்த முக்கியமான மரபார்ந்த குருநிலைகள், குரு நிரை, அவர்களது நூல்கள் அனைத்துக்குமான அறிமுகம்.

இரண்டாவதாக, இருபத்திரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனா செய்து கொண்டிருக்கும் சாதகர் என்ற வகையில் அவரது அனுபவங்களும் அறிதலும் சாரமாகக் கனிந்து வகுப்பின் மையப் புள்ளிகளாக அமைகின்றன.  ஒவ்வொரு வகுப்பிலும் விளக்கும் போது தான் கற்றவற்றை, வாசித்தவற்றை மட்டுமன்றி தன் அனுபவமாக ஆன ஒன்றை முன்வைக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு யோகப் பயிற்சிக்கான செயல்முறை விளக்கமும், அந்த குறிப்பிட்ட யோகப் பயிற்சியின் உடல்நலம் சார்ந்த பலன்களும், அதைப் பயிற்றுவிக்கும் முறையும் கூட  இணைய வெளியில்  நமக்குக் கிடைத்து விடுகிறது. இதுபோன்ற சாதனா மூலமாக மட்டுமே பெறப்படும் அனுபவங்களை அறிந்து கொள்ளும் பேறு அரிதானது. கேட்பவருக்கு அது அனுபவமாக வேண்டும் என்ற கனிவோடு அது சொல்லப்படுகிறது.

மூன்றாவதாக யோகப் பயிற்சியின் செயல்முறை மட்டுமின்றி, அதன் தத்துவம் மற்றும் இதுவரை மரபில் அப்பயிற்சிகள் குறித்து பல உபநிடதங்களிலும், சம்ஹிதைகளிலும், முக்கியமான  நூல்களிலும் கூறப்பட்டற்றைத் தொகுத்து தன் அறிதலால், விரிவான இலக்கிய வாசிப்பால் அவற்றை மேலும் கூர்தீட்டிச் சொல்லும் விதம் வகுப்புகளை மிக செறிவாக்குகிறது. வகுப்புகள் முடிந்ததும் அன்றைய வகுப்போடு தொடர்புடைய வெண்முரசின் சில வரிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். வெண்முரசில் இல்லாததென ஏதுமில்லை.

அடுத்ததாக, ஒவ்வொரு வகுப்பிலும் அன்றைய பயிற்சியோடு இயைந்த மையப் புள்ளி ஒன்று நங்கூரமாக அமைகிறது. குருபௌர்ணமியன்று தாங்கள் சாங்கியமும் யோகமும் குறித்து பேசும்போது மரபார்ந்த தத்துவம் ஒவ்வொன்றும் ஒரு பயிற்சியால் செயல்முறையாக்கப் பட்டுள்ளதை சொன்னதை இவ்வகுப்புகளில் கண்கூடாக காண முடிகிறது.

உதாரணமாக அறிமுக வகுப்பில் ஞானத்துக்கான கலமாகத் தன்னை சாதகன் ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை ‘சுபாத்திரம்’ என்ற சொல்லை விளக்கி அதனோடு யோகம் எவ்விதம் உடல்நலம், மனநலம் என்பதைத் தாண்டி ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு அதற்கான ஆயத்தமாக அமைகிறது என்பது வரை நீண்டு சென்றது அந்த உரை.

பின்னர், காயசித்தி என்பதை அறிமுகப்படுத்தி ’நிலைகொள்ளுதல்’ என்பதையும் அதற்கான பறிற்சிகளும் என ஒரு வகுப்பும், ‘யோக சமத்வ உச்யதே’ எனத்தொடங்கி சமநிலை கொள்வதை விளக்கி அதற்கான பயிற்சிகளுடன் ஒரு வகுப்பும் என நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம் யோகம் குறித்த எந்த விதமான மனமயக்கங்களோ உயர்வு நவிற்சிகளோ எங்கும் முன்வைக்கப்படுவதில்லை. மாறாக அது போன்ற மயக்கங்கள் முதலிலேயே தகர்க்கப்பட்டுவிடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை நேரடியாக கலந்து கொள்ள சாத்தியமுள்ளவர்கள் அனைவரும் நேரில் சந்தித்து ஒரு சில வகுப்புகள், அவற்றை முடிந்தால் ஆன்மீகமான இடங்களில் நடத்தலாம், வாய்ப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் மரபான ஆசிரமங்களுக்கு சென்று  தங்கி அந்த அனுபவத்தைப் பெற்று வர உதவி செய்வது என்பது போன்ற  செயல்திட்டங்களோடு தொடங்கப்பட்டிருக்கிறது. இறையருளும் குருவருளும் துணை நிற்கட்டும்.

கடந்த ஆறுமாதங்களாக வாரம்தோறும் இடையறாத பயணங்களில் இருக்கிறேன். ரிஷிகேஷ், கங்கையின் பிரயாகைகள்,  துங்கநாத், எனத் தொடங்கி கேரளம், அமர்நாத் வரை தொடர்ந்து பல்வேறு ஊர்கள், குருநிலைகள், ஆலயங்கள். இது தவிர சென்னையைச் சுற்றியுள்ள பல தொன்மையான ஆலயங்கள்.

ஒரு நாள் சின்னக்காவனம் நூற்றெட்டீஸ்வரர் ஆலயம் சென்றிருந்தபோது, அங்கு வெளிப்பிரகாரத்தின் மேற்கு மூலையில் ஒரு சிறு குழு அமர்ந்து தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் ஏழெட்டு பேர் இருக்கும் குழு. அதில் மையமாக அமர்ந்திருந்த ஒருவரது சொற்கள் காதில் விழுந்தன. பிரம்மம் குறித்தும் ஆத்மன் குறித்தும் அங்கிருப்பவர்களுக்கு அவர் சென்னைத் தமிழில் விளக்கிக் கொண்டிருந்தார். அதைக் கடந்து வந்த போது பிரகாரத்தின் வலக்கோடியில் கால பைரவர் சன்னதியில் அஷ்டமி பூஜை வேத மந்திரங்களோடு நடந்து கொண்டிருந்தது. மிக இளம் வயது கொண்ட ஒரு அர்ச்சகர் தானும் தனது தெய்வமும் மட்டுமே தனித்து நின்றிருப்பது போன்ற ஒரு அகவெளியில் அமைந்து, பைரவருக்கு நீரூற்றி, மலர் சூட்டி, மந்திரம் ஓதி ஆராதனை செய்து கொண்டிருந்தார். சன்னதியில் பூஜைக்காக மக்கள் அமர்ந்திருந்தனர். இது குறித்து குருஜி சௌந்தரிடம் பேசியபோது, ‘இந்த நிலம் பல்வேறு அடுக்குகளாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது, வேத கால இந்தியா ஒன்று இன்றும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மரபான ஞானமும் அதற்கான குருநிலைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றன.  அதற்கான தேடலுடன் செல்பவர்களால் காண முடியும், அதன் இரு அறுபடாத இழைகள் இவை’ என்றார்.

இதே போல அறுபடாத பொன்னிழைகள் தாங்கள் நிகழ்த்தத் திட்டமிடும் தத்துவ மெய்யியல் சார்ந்த வகுப்புகளும், இந்த மரபார்ந்த யோக வகுப்புகளும்.

ஆம், என்றும் தொடரும்  இழைகளின் கண்ணிகள் நாம் என்பதாலேயே எண்ணற்ற ஞானிகள், ரிஷிகள், குருநிரைகள் அனைத்தின் ஞானத் தொடுகையையும் அதன்வழி மிகச்சிறு துளி அமுதமேனும் இங்கு தாகம் உள்ள எவரும் பெற்று விடமுடிகிறது.

வணக்கங்களுடன்,
சுபாsoundar_rajang@yahoo.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2022 11:31

ஆகஸ்ட் 15, அலைகள் நடுவே- கடிதங்கள்

அன்பு ஜெ சார்.. நலமா

கடந்த மூன்று நாட்கள், விடுதலை நாள் கொண்டாட்டங்களைக் கவனிப்பதும், அவற்றில் மிகக் கவனமாக பழைய தேசத்தந்தையையும் அவரின் பல்லாயிரம் சீடர்களையும் திரை போட்டு மறைத்து விட்டு புதிய தேசத்தந்தைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதும், பிரிவினைப் புண்ணை மேலும் குத்திக்கிளறி 7அதற்கெல்லாம் காரணம் திரு நேரு அவர்கள்தான் என்றெல்லாம் எழும் கர்ஜனைகளை வேதனையோடு கவனிப்பதுமாகக் கழிந்தன. தேசவிரோதி அல்ல என்று நிரூபிப்பதற்காக தேசீயக்கொடியையும் கட்டி விட்டேன்.

கப்பலோட்டிய தமிழன், பாரதி படப்பாடல்களை மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டேன்.

சல்லித்தனமான நாத்திகம், பாமரத்தனமான ஆத்திகம் என்று சொல்வீர்கள். தேசபக்தி என்ற அந்தரங்கமான புனிதமும் அதே பாதையில் இழுத்துச் செல்லப் படுவதாக உணர்கிறேன்.

நான் சந்தித்த, படித்த பெரியவர்கள் அனைவருமே நன்றி மறப்பது நன்றன்று என்றுதான் சொன்னார்கள். ஏறி வந்த ஏணிகளை மறக்காதே என்றார்கள். ஆட்சியின் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களின் நீண்ட உரைகளில் ஒரு பத்து மணித்துளிகளாவாது நம் அப்பன் பாட்டன்கள் விடுதலைப் போரில் ஆற்றிய பணிகளைப் பற்றிக் குறிப்பிடவில்லையே.

ஒரு எளிய பள்ளியில் மாணவர்களிடையே கொடியேற்றி விட்டு பேசினேன். நூல்களிலும் இணையத்திலும் படித்த சில தகவல்களைச் சொன்னேன். ஆர்வமாகக் கேட்டார்கள். முதல்வர் சொன்னார் அடிக்கடி வந்து பேசுங்களென்று.

உங்கள் வெள்ளை யானையிலிருந்த பஞ்சம் பற்றிச் சொன்னேன். ராய் மாக்ஸிமின் உப்பு வேலி மற்றும் அவரது இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு நூல்களின் மையக் கருத்தைச் சொன்னேன். பிள்ளைகள் ( பெற்றோரும் ஆசிரியரும் கூட) கண்கள் விரித்துக் கேட்டார்கள். இன்று அவர்களுக்குச் சொல்லப்படுவதெல்லாம் சுல்தான்களும் மொகலாயர்களும் மட்டுமே நம்மைக் கொள்ளையடித்தவர்கள் என்பதுதானே. அவுரங்கசீப்புதானே அடிக்கடி தோண்டி எடுக்கப்பட்டு, இரண்டு அடிபோட்டு மீண்டும் புதைக்கப்படுகிறார்.

1900த்திலிருந்து 1947 வரையிலான விடுதலைப் போர் தலைவர்கள் பற்றிக் குறிப்பிட்டால் தாங்கள் இன்று எழுத நினைக்கும் புதிய இந்திய வரலாறுக்குப் பொருந்தி வராதென்ற எண்ணமோ? ஒரு நாலாந்தர அரசியல் வியூகமோ?

எத்தனை முயன்றாலும், இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்குமாக உண்மையான விடுதலைப் போர் வரலாறு பற்றிய தகவல்கள் நூல்களிலும் வலைதளங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன. தேடிப் படித்தார்களானால் தேசத்திற்கு நல்லது.

விடுதலை பெற்ற ஏழாண்டுகளுக்குள் பிறந்ததால் நம் தியாகத்தலைவர்கள் பற்றி நிறையச் சொல்லப்பட்டிருக்கிறேன். எட்டு வயதிலேயே காந்தியின் சத்தியசோதனை புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள் அம்மா. (அப்பா கதர் நெசவாளி). புதிய தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இல்லையே என்ற ஒரு ஆதங்கத்தைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே இந்தப் பதிவு. நாம் உயர்தளத்தில் வைத்துப் போற்றும் சிலரிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆறுதல்.

நெருங்கிய நண்பர்களிடம் பேசினேன். எல்லோருமே இன்றைய சூழலைப் பொதுவெளியில் விவாதிக்க தயக்கமும் சிறிய அச்சமும் கூடக் காட்டினார்கள்.எல்லாம் வல்ல இறைசக்தி இந்த தேசத்தைக் காக்குமென்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.விடுதலைதின நல்வாழ்த்துக்களும் விடுதலைப்போர் வீரர்களுக்கு நெஞ்சு நிறைந்த நன்றியும்

அன்புடன்

ரகுநாதன்.

அன்புள்ள ரகு.

ஆம், இப்போது நிகழ்வதும் அதுவே.

அரசியல் நோக்கு கொண்ட தேசியவெறி. அரசியல் நோக்கு கொண்ட தேசமறுப்பு. நடுவே ஒரு சிறு தீவென நின்றிருக்கிறோம். தேசம் என்பது அதை உருவாக்கிய மறுமலர்ச்சிக்காலச் சிந்தனைகளும், சிந்தனையாளர்களுமே என மீண்டும் நமக்குநாமே சொல்லிக்கொள்வோம்.

ஜெ

***

அன்புள்ள ஜெமோ,

மூன்று நாட்களாக திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் எங்கள் நிறுவனம் campus hiring நடத்துவதால் இங்கே உள்ளேன். இன்று மாலை கிளம்பி ஈரோடு வருகிறேன்.

இன்று காலை கல்லூரியின் கணிப்பொறி துறை கட்டிடத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி கொடியேற்ற அழைத்து ஓரிரு நிமிடம் மாணவர்களிடையே பேச சொன்னார்கள். உங்களின் இன்றைய காந்தியையும, அறம் தொகுதியையும் மாணவர்கள் படிக்கும் படி கேட்டுக் கொண்டேன். கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் பற்றி அறிமுகம் செய்தேன்.

பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவர் “ஜெயமோகன் என்னும் எழுத்தாளர்” பற்றித் தெரிந்து கொண்டோம். அவசியம் கல்லூரிக்கு அழைக்கிறோம் என்றார்கள். இந்த கல்லூரியின் நிறுவனர் Cletus Babu நாகர்கோயிலை சேர்ந்தவர். முந்நூற்றி ஐம்பது ரூபாய் பணத்துடன் திருநெல்வேலி வந்தவர் இன்று பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

மாணவர்களிடையே உங்களை பற்றி பேசியது மிக சந்தோஷமாக இருந்தது. நாளை சந்திக்கிறேன்.

நன்றி,
வாசு

***

அன்புள்ள வாசு,

இந்தத் தருணத்தில் நாம் சொல்லிக்கொள்ளவேண்டியது ஒன்றே. எல்லா சிறு செயல்பாடுகளுக்கும் ஒரு பங்களிப்பு உள்ளது. நேர்நிலையாக அமையும் என்றால் அவையே நீடிக்கக்கூடிய விளைவை அளிப்பவை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2022 11:31

August 22, 2022

தமிழ்ப் பண்பாட்டு அழிப்பு

தமிழ் பற்றி, தமிழ் வரலாறு பற்றி எது சொன்னாலும் உடனே ஒரு கூட்டம் ‘தமிழரை இழிவு செய்கிறார்கள்’ ‘தமிழ் வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிறார்கள்’  ‘தமிழ்ப்பெருமைக்கு இழுக்கு’ என்று கூச்சலிடுகிறது. தமிழ்ப்பண்பாட்டைப் பற்றி உயர்வாகச் சொன்னாலே அவர்கள் அப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள்.

தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை, தமிழ் வரலாறு எதைப்பற்றியும் இவர்களுக்கு ஆர்வமில்லை. அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு புனைவான வரலாறு, அதைச்சார்ந்த மிகையான பெருமிதக்கொந்தளிப்பு மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அதை அப்படியே ஏற்காத எவரும் தமிழ் விரோதிகள். ஆகவே எல்லா தமிழ் ஆய்வாளர்களும், வரலாற்றாய்வாளர்களும் அவர்கள் பார்வையில் தமிழ்த்துரோகிகள்தான்.

அவர்கள் ஓர் எல்லை என்றால் இன்னொரு எல்லை இந்துமதக் காப்பாளர்கள். அவர்கள் இரண்டே வகை. ஒருவகையினர் எல்லாவற்றையுமே இந்துத்துவ அரசியலாக மட்டுமே பார்ப்பவர்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்து அல்லாதவர்கள் இடித்தாலோ அழித்தாலோ மட்டுமே இந்து ஆலயங்கள், சிற்பங்கள் மேல் ஆர்வம். இல்லையென்றால் மண்ணோடு மண்ணாகப்போனாலும் கவலை இல்லை. அவர்களே அதை மண்ணோடு மண்ணாக்கவும் தயக்கமில்லை.

இன்னொருபக்கம் மத அடிப்படைவாதிகள். அவர்களுக்கு தங்கள் உட்பிரிவு, உட்பிரிவுக்குள் உட்பிரிவு (அது எப்போதுமே ஒரு சாதிதான்) மட்டுமே மெய்யானது, உயர்வானது, மற்ற எல்லாமே தவறானது கீழானது. அதற்கு எதிரான ஓயாத சண்டையே அவர்களின் அறிவுச்செயல்பாடு. எது எங்கே அழிந்தாலும் கவலை இல்லை.

இதன்நடுவே தமிழகக் கலைச்செல்வங்கள் அறிவின்மையால் மூர்க்கமாக அழிக்கப்படுவதைப் பற்றி ஓயாமல் இந்தத் தளத்தில் நான் எழுதிவருவதை மிகமிகச்சிலர் தவிர எவருமே கவனிப்பதில்லை. ’அதற்கென்ன’ என்னும் பாவனை ஒருபக்கம். இன்னொருபக்கம் ‘கோயில் இருப்பது பயன்படுத்துவதற்காகத்தான். இடிந்தால் வேறு கட்டிக்கொள்வோம்’ என்று ஒரு நிலைபாடு. முன்பு ஓர் இந்துத்துவ அறிவுஜீவி அதைச் சொல்லி என் தளத்தில் பதிவாகியிருக்கிறது.

தமிழகம் முழுக்க இருக்கும் ஓர் அபத்தம், ஒரு மோசடி ‘இசைக்கல்’ என்னும் கருத்து. இது எப்போது எவரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. தமிழகத்தின் மாபெரும் கலைவெற்றிகள் இருநூறாண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்டு கிடந்த காலத்தில் உருவாகியிருக்கலாம். சிற்பக்கலை, புராணம், தொன்மங்கள், சடங்குகள் பற்றிய முழுமையான அறியாமையில் இருந்து உருவானது இது.

எங்கோ எவரோ சில்லறை தேற்றுவதற்காக இதை உருவாக்கி பரப்பியிருக்கலாம். இன்று தமிழகத்தின் எல்லா கோயில்களிலும் இசைத்தூண்கள், இசைச்சிற்பங்கள் என்று ஒரு வழிகாட்டி முட்டாள் கையில் கல்லுடன் நின்று பக்தப்பயணிகளை அழைக்கிறான். நினைத்தற்கரிய கலைமதிப்பு கொண்ட சிற்பங்களை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் முறை கல்லால் அடிக்கிறான். மிக அரிய பல சிற்பங்கள் இதற்குள் மூளியாகிவிட்டன.

எந்தக் கல்லும் மணி போன்ற ஓசை கொண்டதே. குறிப்பாக கிரானைட் எனப்படும் கருங்கற்களில் தெளிவான மணியோசை கேட்கும். வெவ்வேறு பருமனும் செறிவும் கொண்ட கற்கள் வெவ்வேறு ஓசை எழுப்பும். மிகச்சன்னமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்களும் கற்தூண்களும் நல்ல ஓசையை எழுப்புபவை. அவை இசைத்தூண்களோ, இசைச்சிற்பங்களோ அல்ல.

முன்பு வெவ்வேறு பருமன்களில் படைக்கப்பட்டிருக்கும் தூண்களை சப்தசுவர தூண்கள் என்று சொல்லி தட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். பலசமயம் ஒன்பது தூண் இருக்கும். நவரச தூண் என்று மாற்றிவிடுவார்கள். ஒரே கல்லில் உள்ளுக்குள் பல அடுக்குகளாக தூண்கள் செதுக்கப்பட்டிருப்பதே அவற்றின் முதன்மையான சிற்ப அற்புதம். நீளமான உளியால் அவற்றைச் செதுக்கியிருப்பது கைத்திறன். அவற்றின் அழகியலென்பது மலர்களின் புல்லிவட்டத்தை ஒட்டி அவற்றின் வடிவம்  அமைந்திருப்பது.

நெல்லையில் ஒருவர் தூண்களை தட்டித்தட்டி உடைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் பலமுறை நானே சினம்கொண்டு சொல்லியிருக்கிறேன். அது அவருடைய பிழைப்பு. அதற்காக அவர் சிவன்கோயிலை இடிக்கவும் தயாராவார்.அண்மையில் சிற்பங்களையும் ‘இசைச்சிற்பங்கள்’ என்று சொல்லி தட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர். சில ஊர்களில் மூலச்சிலைகளையே கல்லால் தட்டிக்காட்டி காசு கேட்கிறார்கள்.

அடிப்படையான ஒரு அறிவாவது கோயிலுக்குச் செல்பவர்களுக்கு இருக்கவேண்டும். அந்த தூண்களும் சிலைகளும் அப்படி ஓசைக்காக படைக்கப்பட்டிருந்தால் எதற்கு சிலையாகவும் தூணாகவும் செதுக்கவேண்டும்? அந்த சிலைகளில் உங்களுக்கு பார்க்கவும் ரசிக்கவும் ஒன்றுமே இல்லையா?

உண்மையில் கலை, பண்பாடு, மதம் பற்றி எதுவுமே தெரியாத மழுமட்டைத்தனமே இப்படி நம்மவரில் வெளிப்படுகிறது. அந்த மழுங்கல் இருப்பது பார்வையாளர்களிடம். அதைத்தான் அயோக்கியர்கள் காசாக்கிக் கொள்கிறார்கள். இப்படி ஒரு தலைமுறைக்காலம் தட்டினால் நம் வருந்தலைமுறையினருக்கு மழுங்கிய கற்களையே சிற்பங்களென காட்டவேண்டியிருக்கும்.

நான் பல ஊர்களில் கண்டிருக்கிறேன். ஓர் உள்ளூர்க்கும்பல் இப்படி சிலைகளை தட்டி உடைப்பதை வேடிக்கைபார்த்து ‘என்னமா சவுண்டு பாரேன்!’ என்பார்கள். வெள்ளையர்கள்தான் பதறிப்போவார்கள். ஒரு வெள்ளையர் கண்ணீர்மல்க என்னிடம் ‘ப்ளீஸ் டூ சம்திங்’ என கோரியிருக்கிறார். நான் வெட்கி அப்பால் நகர்ந்துவிட்டேன்.

இந்தப் பதிவை இணையத்திலேற்றிய குழுவைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுகு கோயில், சிற்பக்கலை பற்றிய ஏதோ ஓர் ஆர்வமிருக்கிறது. ஆனால் எந்த அடிப்படை அறிவும் இல்லை. அவர்கள் எதையும் அறிந்துகொள்ள முயலவுமில்லை. ஏனென்றால் அவர்களின் அறிவு யுடியூப் காணொளிகள் சார்ந்தது. அவற்றைப் பார்ப்பவர்களின் அறிவும் காணொளிஞானம் மட்டுமே. அதாவது சுத்தமான அறிவின்மை.

ஏதேனும் ஒரு வரலாற்று நூலை, ஒரு சிற்ப அறிமுக கையேட்டையாவது படித்தவர்கள் இந்தக் காணொளிகளை எடுத்தவர்களிலோ பார்ப்பவர்களிலோ இருக்க மாட்டார்கள். இந்தக்கூட்டம்தான் கோயிலை, சிற்பங்களை தட்டித்தட்டி இடிப்பதை ரசிக்கிறது. அதை ஆவணப்படுத்தி மேலும் கூட்டம் அங்கே செல்லவைக்கிறது.

ஆனால் பண்பாடு பேசுபவர்கள், மதப்பற்றாளர்கள் எவருக்கும் அக்கறை இல்லை. ஒரு சமூகமே ஒட்டுமொத்தமாகத் திரண்டு தன் பண்பாட்டை மூர்க்கமாக உடைத்து அழிப்பது உலகில் வேறெங்கேனும் உண்டா? நான் சென்ற உலகநாடுகளில் கலைச்செல்வங்களை தொடுவதே தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இங்கேதான் பண்பாடு என்றாலே முகநூலிலும் யூடியூபிலும் தீப்பிடித்து எரியும் ஆவேசங்களையும் காணக்கிடைக்கின்றது. உண்மையில் நம்முடைய உளச்சிக்கல்தான் என்ன?

ஜெ

பிகு

கீழக்கடம்பூர் உத்தராபதி ஆலயம் இது. இந்த ஆள்மேல் தொல்லியல்துறைக்கும் காவல்துறைக்கும் புகார் கொடுக்க காட்டுமன்னார்குடியில் கலையிலோ, பண்பாட்டிலோ, மதத்திலோ குறைந்தபட்ச ஆர்வம் கொண்டவர்கள் முன்வரவேண்டும். இவர் செய்வது சட்டபூர்வமான குற்றம்.

சிற்ப அழிப்பு முகநூல் குழு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2022 11:35

எதேஷ்டம் -செல்வேந்திரன்

சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரியசாமித் தூரனின் வாரிசுகள் கோயம்புத்தூர் பாரதீய வித்யா பவனில் அவரது நினைவாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனராம். குறைந்த பட்சம் 500 பேர் கலந்துகொள்வார்கள் என யூகித்து 500 பேருக்கு இரவு உணவு சமைக்கப்பட்டது. விரிவாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தும் அன்றைய நிகழ்வுக்கு வந்தது 32 பேர். அத்தனை உணவை என்ன செய்வதென தூரனின் வீட்டார் திகைத்தார்கள்

எதேஷ்டம் -செல்வேந்திரன் செல்வேந்திரன் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2022 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.