Jeyamohan's Blog, page 724
August 30, 2022
முழுமைவாசிப்பு என்பது என்ன?
நூல்களை வாசிப்பதே முழுமை வாசிப்பு என்று நான் கூறியிருந்த காணொளிக்கு எதிர்வினையாக பல கடிதங்கள் வந்தன. காணொளிகளிலேயே ஞானம் கிடைக்கும் என நம்புபவர்கள், வாட்ஸப் ஒன்றும் மோசமில்லை என்பவர்கள் பலர் எழுதியிருந்தார்கள். அவர்களில் பலர் மீண்டும் அவர்கள் ‘செய்திகளை’ அறிந்துகொள்வதற்கு அந்தக் களங்கள் உதவியாக உள்ளன என்றே எழுதியிருந்தனர்.
நான் பேசிக்கொண்டிருப்பது செய்திகளை, தகவல்களை தெரிந்துகொள்வது பற்றி அல்ல. அச்செய்திகளை, தகவல்களை ஒட்டி சிந்திப்பதற்குக் கற்றுக்கொள்வதைப் பற்றி. அச்செய்திகளையும் தகவல்களையும் ஒரு முழுமையில் பொருத்திக்கொள்வதைப் பற்றி. அந்த முழுமைச்சித்திரத்தை அடைவதற்கு உதிரிச்செய்திகளே எப்படி தடையாக அமைகின்றன என்பது பற்றி.
சென்ற காலங்களில் உதிரிச்செய்திகளுக்கு ஒரு மதிப்பிருந்தது. ஏனெனில் அவை மிக அரிதாக இருந்தன. தினமணி நடுப்பக்கக் கட்டுரைகளுக்காக என் கல்விநாட்களில் காத்திருந்தது உண்டு. ஏனெனில் ஒரு பொருளியல் கட்டுரையோ வரலாற்றுக் கட்டுரையோ மிக அரிதாகவே அன்று படிக்க கிடைத்தது. ஒரு நூல் அறிமுகமோ ஒரு அறிஞருடைய பெயர் அறிமுகமோ அவ்வாறுதான் நிகழ முடிந்தது.
இன்று தொழில்நுட்பம் உதிரிச்செய்திகளை பல்லாயிரம் மடங்கு பெருக்கியிருக்கிறது. நாம் எந்த ஆர்வமும் கொண்டிராவிட்டாலும் ஒவ்வொரு நாளும் உதிரிச் செய்திகள் நம் மீது வந்து கொட்டுகின்றன. ஒரு தகவலை இன்னொரு தகவல் மறக்கச் செய்கிறது. தகவல்களால் ஆன ஓர் அன்றாடம் உருவாகி நமக்கு நேற்றும் நாளையும் இல்லாமல் ஆகிவிடுகிறது.
உதிரிச்செய்திகள் வந்து நம்முள் நிறையும்ந்தோறும் நம் நினைவுக்களஞ்சியம் தேவையற்ற குப்பைகளால் நிறைகிறது. விளைவாக நாம் நம்மையறியாமலேயே நினைவை காலிசெய்கிறோம். கணிப்பொறியின் குப்பைக்கூடையை தானாகவே அது காலிசெய்வதுபோல. நம் அகம் நினைவுகளை விலக்க ஆரம்பிக்கிறது. இத்தனை செய்திகள் வந்து குவியும் இக்காலகட்டத்தில்தான் நாம் மிகமிகக் குறைவான நினைவு கொண்டவர்களாக இருக்கிறோம்
இன்றைய செய்திப்பெருக்கு நம்மைச் சிந்திக்க விடாமல் ஆக்குகின்றது. காணொளிகள் வழியாக வருபவை, விவாதங்கள் வழியாக வருபவை, நாளிதழ் செய்திகள், வாட்ஸப் செய்திகள் நண்பர்களின் அரட்டைகளில் வரும் செய்திகள். இத்தனை செய்திகளை தொகுத்து, ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவரும் ‘மென்பொருள்’ நம் மூளைக்குள் இல்லை. அதற்கான எந்த திட்டமும் நமக்கு அளிக்கப்படுவதில்லை.
இந்த செய்திகளை அறிதல் என்று நாம் எண்ணிக்கொள்ளும்போது நமது மூளையை கூழாங்கற்களால் நிரப்பத்தொடங்குகிறோம். அந்த தகவல்களை நம்மால் கையாள முடியவில்லை என்றால் அந்தத் தகவல் நமக்கு சுமைதான், செரிக்காத உணவு நோயளிப்பது போல. ஆகவேதான் நூல்களை வாசிப்பதை சென்ற பத்தாண்டுகளாக மேலை நாடுகளில் மிக வலியுறுத்துகிறார்கள். உதிரிக்கட்டுரைகள் தனிச்செய்திகளை முழுக்கத் தவிர்க்கச் சொல்கிறார்கள். அவை நாம் கற்றிருக்கும் மொத்தத்தையும் ஒருவகையில் குலைத்துவிடக்கூடும். நம்முடைய நினைவு அடுக்குகளை தேவையில்லாமல் நிறைத்துவிடவும் கூடும்.
ஒரு தளத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனில் அந்தத்தளத்திற்கு முழுமையான ஒர் அறிதலை அளிக்கும் ஒரு நூலை தேர்ந்தெடுத்து படித்து முடிப்பதே ஒரே வழி. நமது படிநிலை எதுவோ அதற்கேற்ற நூல்கள் இன்று உள்ளன. அவை விரல்சொடுக்கும் தொலைவில் உள்ளன.
உதாரணமாக, இலக்கிய வாசகன் ஒருவன் ஹெகல் பற்றி அறிவதற்கு ஆயிரம் பக்க ஹெகல் கட்டுரைத்தொகுதியை படிக்கத்தேவை இல்லை. அப்படிப் படிப்பது அவனுடைய படைப்பூக்கத்தை பெருமளவு குறைக்கும் என்பது தான் என்னுடைய கருத்து. 30ஆண்டுகளுக்கு முன் நித்ய சைதன்ய யதி உலகப்புகழ்பெற்ற தத்துவ ஆசிரியராக நின்று இந்த அறிவுரையை எனக்களித்தார். இலக்கிய ஆசிரியன் ஹெகல் பற்றி அறிந்துகொள்வதற்கு இருநூறு பக்கங்களுக்குள் நிற்கக்கூடிய சுருக்கமான ஒரு நூலைப் பயின்றால் போதுமானது. ஏனெனில் ஹெகலை மட்டுமல்ல குரோச்சேவை ஹைடெக்கரை நீட்சேவையும் அவன் அவ்வாறு பயில வேண்டும்.
உதாரணமாக, தமிழில் மட்டுமே வாசிக்கும் ஓர் இளம் எழுத்தாளன் எங்கே தொடங்கலாம்? தமிழில் மிக ஆரம்பகட்டத்தில் இருக்கக்கூடிய ஒருவர் பிரேமா பிரசுரம் வெளியிட்ட சிந்தனையாளர் வரிசை நூல்களை முழுமையாகப்படிப்பதே பேருதவியாக இருக்கும். அந்த அளவுக்குக் கூட தமிழ் சிந்தனைத்தளத்தில் செயல்படும் கணிசமானவர்களுக்கு வாசிப்பு இல்லை என்பது தான் அவர்களுடைய குறிப்புகளில் இருந்து நான் கண்டுகொள்கிறேன்.
அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட அறிமுக நூல்கள் உள்ளன. பலகளங்களில் மிக எளிமையான சிறுநூல்கள் உள்ளன. அவற்றை வாசகன் படிக்கலாம். சோவியத் ரஷ்ய வெளியீடுகளாக வந்த அறிமுக நூல்கள் இயற்பியலை, வேதியியலை, உயிரியலை, மரபணுவியலை மிகத்தெளிவாகவும் மிக சுவாரசியமாகவும் அறிமுகம் செய்கின்றன. இவை அனைத்தையுமே ஒரு அடிப்படை சிந்தனையை கட்டமைத்துக் கொள்ளும் பொருட்டு படித்திருக்கவேண்டும் என்று சொல்வேன்.
அதற்கு அப்பால் அவன் மேலே செல்லலாம். அதற்கும் தமிழில் நூல்கள் உள்ளன.உதாரணமாக, பௌத்த தத்துவ இயல் மிகச்சுருக்கமான அறிமுகம் அடையாளம் பதிப்பக வெளியீடாக சி.மணி மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. அது ஒரு நல்ல தொடக்கம். அடுத்து டி.டி.கோசாம்பியின் பகவான் புத்தர். அடுத்து ராகுல சாங்கிருத்யாயனின் பௌத்த தத்துவ இயல். அடுத்து அம்பேத்கரின் புத்தரும் அவருடைய தம்மமும். அப்படி எல்லா திசையிலும் விரியலாம்
அவ்வாறு ஒரு இருநூறு முன்னூறு நூல்களை ஒருவன் படிக்கும்போது எல்லாத்துறைகளிலும் விரவி நின்றிருக்கும் ஒரு பொதுவான சிந்தனைப்புலம் அவனுக்கு அமைகிறது. அவற்றின்மேல் அவன் இலக்கியமோ தத்துவமோ அரசியலோ தனக்கான ஒரு களத்தை கண்டடைய முடியும் அங்கு தீவிரமான படைப்புகளை படிக்கலாம், உச்சகட்ட அறிதலை அங்கு நிகழ்த்தலாம். தனது பங்களிப்பை அங்கு நிகழ்த்தலாம்.
கல்பொருசிறுநுரை, முதலாவிண்- முன்பதிவு
கல்பொருசிறுநுரை – செம்பதிப்பு மற்றும் முதலாவிண் – செம்பதிப்பு வெண்முரசு நாவல் வரிசையின் இறுதி நாவல்களான இவ்விரண்டு நாவல்களையும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திலிருந்து வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.
கல்பொருசிறுநுரை 848 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ 1300/-.
முதலாவிண் 160 பக்கங்கள் கொண்ட நாவல், விலை ரூ. 350/-
இவ்விரு நாவல்களுடன் வெண்முரசு நாவல் வரிசை நிறைவுறுவதை முன்னிட்டு இரண்டு நாவல்களும் சேர்த்து முன்பதிவு செய்பவர்கள் ரூ.1500/- செலுத்தினால் போதும்.
இவ்விருநாவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் பதிப்பக தள நிரலிலும் 9080283887 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் ஆர்டர் செய்யலாம். விபிபியில் புத்தகங்கள் அனுப்பி வைக்க இயலாது. முன்பணம் செலுத்துபவர்களுக்கே முன்பதிவு செய்யப்படும்.
இந்நாவலை செப்-20ம் தேதி முதல் அனுப்பத்துவங்குகிறோம். எனவே முன்பதிவு செய்பவர்களுக்கு அவர்கள் பெயர் குறிப்பிட்டு ஆசிரியரின் கையொப்பம் வேண்டுமெனில் பெயர் குறிப்பிட்டு பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.
முன்பதிவுக்கு:
முன்பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு:
முன்பதிவு செய்தவர்களுக்கு பதிவு எண்ணுடன் (info@vishnupurampublications.com லிருந்து) ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். புத்தகங்கள் அனுப்பத்தொடங்கியவுடன் வாட்ஸப்பில், மின்னஞ்சலில் தெரிவிக்கிறோம்.
முன்பதிவு செய்பவர்கள் எந்தப்பெயரில் கையொப்பம் வேண்டும் என்பதைக் குறிப்பிடவும்.
முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.
ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் 9080283887 என்ற எண்ணில் அழைக்கலாம்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்
வெண்முரசு நாவல் வரிசை மின்னூலாக அமேசான் கிண்டிலில் வாங்கசிபில் கார்த்திகேசு, மாபெரும் வாழ்க்கை
சிபில் கார்த்திகேசு என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஒரு பெருநாவலின் மையக்கதாபாத்திரமாக ஆகுமளவுக்கு மகத்தான ஆளுமை. எத்தனை உக்கிரமான நிகழ்வுகள், எவ்வளவு கொந்தளிப்பான வரலாற்றுப் பின்புலம்
நாம் நாவல்கள் எழுத ஏன் மீண்டும் மீண்டும் செயற்கையான கதைகளை எங்காவது நூல்களில் தேடுகிறோம்? நமக்கு மெய்யான வரலாறு அறிமுகமில்லை என்பதனால்தானா?
ஜெயமோகன் மணிவிழா – அழைப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு,
இந்த ஆண்டு திரு.ஜெயமோகன் அவர்களின் மணிவிழா ஆண்டு.
அவரை கௌரவிக்கும் பொருட்டு கோவையில் கோவை நன்னெறிக்கழகமும், வாசக நண்பர்களும் இணைந்து ஒருவிழா எடுப்பதென்று முடிவு செய்திருக்கிறோம். விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் வாசகர்களும் நண்பர்களும் திரளாக எங்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
நாள் : செப்டம்பர் 18, 2022 ஞாயிற்றுக்கிழமை
இடம் : பல்தேவ்தாஸ் கிக்கானி கலையரங்கு, கோவை
நேரம் : மாலை 5.00 மணி முதல் 9.00 வரை
விழாவிற்கு வருகை தரும் நண்பர்களுக்கு 18ம் தேதி காலை 6.00 மணியிலிருந்து 19ம் தேதி காலை 6.00 மணி வரை தங்குமிடமும் உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தரும் நண்பர்கள் கீழ்க்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். முழுமையான நிகழ்ச்சி நிரல் இன்னும் நான்கு நாட்களில் வெளியிடப்படும்.
அனைவரும் வருக என்று அன்புடன் அழைக்கிறோம்!
கோவை நன்னெறிக்கழகம் மற்றும் வாசக நண்பர்கள்
தங்குமிடம் பதிவு படிவம்சாகித்ய அக்காதமி, இலக்கிய விமர்சனம்.
விருதுகளும் எதிர்ப்புகளும் -சந்திரா
அன்புள்ள ஜெ,
யுவபுரஸ்கார் விருது பற்றிய பொதுவெளிச் சர்ச்சைகளில் ஒன்றைக் கவனிக்கிறேன். ‘கருத்துச் சொல்ல இவர் யார்?’, ‘ நல்ல படைப்பு என்று அல்ல என்று சொல்ல இவருக்கு யார் உரிமை கொடுத்தது?’ ‘காலம் தீர்மானிக்கட்டும்’ ‘வாசகர்கள் முடிவுசெய்யட்டும்’ என்றவகையிலே கொதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பேராசிரியர் என அறியப்படும் சிலர் அப்படி எழுதுகிறார்கள். எழுத்தாளர் என சொல்லிக் கொள்பவர்கள்கூட அப்படி கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். அதையெல்லாம் கருத்து என்று சில இதழ்களில் வெளியிடுகிறார்கள்.
நவீன இலக்கியவிமர்சனம் என்னும் அறிவுத்துறை தொடங்கி முந்நூறாண்டுகள் ஆகின்றது. அதில் பல்வேறு சிந்தனைப்போக்குகளும் கொள்கைகளும் உள்ளன. இலக்கிய விமர்சனம் இங்கே கல்லூரிகளில் கற்பிக்கவும் படுகிறது. இவர்களெல்லாம் அதையெல்லாம் கேள்விப்பட்டதுகூட இல்லையா? இந்தப் பாமரப்புத்திக்கு தமிழில் அழிவே இல்லையா? அப்படி ஒரு பெரும் சோர்வு ஏற்பட்டது.
எம்.பாஸ்கர்
***
அன்புள்ள பாஸ்கர்,
உண்மையில் அவர்கள் பாமரர்களேதான். அவர்கள் தங்களைப்போன்ற இன்னொரு பாமரரையே படிப்பார்கள். ஆகவே அந்த அறியாமையின் இரும்புச்சுவரை எந்தச் சிறு செய்தியும் கடந்து அவர்களை எட்டுவதே இல்லை.
இலக்கிய விமர்சனம் என்பதன் கடமையே உரிய காலத்தில் தன் அளவீட்டை முன்வைப்பதுதான். உலகமெங்கும் அப்படித்தான். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அப்படித்தான்.
அவர்கள் கொதிப்பதே தங்களில் ஒருவர் விமர்சிக்கப்படுகிறார் என்பதனால்தான். அவர்கள் அஞ்சுவது விமர்சனத்தை மட்டுமே. அவர்கள் தங்களுக்குள் மாறிமாறி வரைமுறையே இல்லாமல் பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கவனியுங்கள், தமிழில் மிக அதிகமான பாராட்டுக்களும், விருதுகளும் பெறுபவர்கள் இந்த சுயஉதவிக் கும்பல்தான். அதை கொஞ்சம் கொஞ்சமாக சாகித்ய அக்காதமி போன்ற அமைப்புகளுக்குள்ளும் நுழைக்கிறார்கள்.
இது எவரோ எவருக்கோ அளிக்கும் விருது அல்ல. அப்படி அளிக்கப்படும் பலநூறு விருதுகள் இங்குள்ளன. அவற்றை பொருட்படுத்தவேண்டிய தேவை இல்லை. இதற்கு சாகித்ய அக்காதமியின் பெயர் இருப்பதனால்தான் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது.
இதை ஏன் கண்டிக்கவேண்டும்? இந்தப் போக்கு தொடரும் என்றால் தீவிரமாக எழுதுபவர்களிடம் ஆழமான சோர்வு உருவாகும். இங்கே ஏற்கனவே கல்வியமைப்புகள் முழுக்க இதேபோல கூட்டமாகச் செயல்படும் தன்ன்னலக் கும்பலால் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கே உள்ள அரசியலும், ஊழலும், சீரழிவும் நாமறிந்ததே. அவர்கள் அதே ஒருங்கிணைவின் ஆற்றலுடன் இலக்கிய அமைப்புகளையும் கைப்பற்றத் துடிக்கிறார்கள்
இதைக் கண்டிக்காமல் விட்டால் கேந்திர சாகித்ய அக்காதமி விருதுகளிலும் இப்போக்கு எதிரொலிக்கும். ஏற்கனவே நாம் நெடுங்காலமாக நாலாந்தர எழுத்துக்களை சாகித்ய அக்காதமி விருது கொடுத்து இந்திய அளவில் அறிமுகம் செய்து தமிழிலக்கியத்தின் கௌரவத்தைச் சீரழித்துள்ளோம். தமிழகத்துக்கு வெளியே எந்த இடத்திலும் நம் இலக்கியச் சூழலுக்கு எந்த மதிப்பும் இல்லாத நிலையே இருந்தது. தமிழில் நவீன இலக்கியம் இல்லை என்று இந்திய இலக்கிய அறிஞர்கள் இருபதாண்டுகளுக்கு முன்புகூட எழுதிக்கொண்டிருந்தார்கள். பல அரங்குகளில் நான் தலைகுனிவை அடைந்துள்ளேன். மிக ஆவேசமாக வாதிட்டிருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாகவே அந்த நிலைமை மாறிவருகிறது. மீண்டும் அந்த நிலைமை நோக்கி கொண்டுசெல்ல முயல்கிறார்கள். ஒரு பண்பாடு தன்னுடைய மிகச்சிறந்ததை மட்டுமே முன்வைக்கவேண்டும். அதன்வழியாகவே அதன் மாண்பும் அடையாளமும் நிலைநிறுத்தப்படும். சில்லறை அரசியலுக்காக தன்னலக்குழுக்களை ஆதரித்து நாலாந்தர எழுத்தை, பண்படா எழுத்தை முன்வைத்தோமென்றில் நம்மை நாமே இழிவுசெய்கிறோம். நம் முன்னோடிகளை இழிவு செய்கிறோம்
எண்ணிப்பாருங்கள், இந்த காளிமுத்து எழுதிய பத்து கவிதைகளை நாம் இந்திய கவிதையரங்கில் கொண்டுசென்று வைத்தால் நம்மைப்பற்றி என்ன சித்திரம் உருவாகும்? நமக்கு ந.பிச்சமூர்த்தி முதல் இன்று எழுதும் மதார் வரை ஒரு மிகநவீனக் கவிதை மரபு உண்டு. இந்திய மொழிகளிலேயே தமிழ்க்கவிதை அளவுக்கு நவீனமான கவிதை எந்த மொழியிலும் இல்லை. பிரமிளும் தேவதேவனும் தேவதச்சனும் அபியும் எழுதிய மொழி இது, நாம் எதை முன்வைக்கவேண்டும்?
மற்றமொழிகள் தங்கள் படைப்புகளில் மிகச்சிறந்தவற்றையே தேசிய அளவில் முன்வைக்கின்றன. விருதுகள் அளிக்கின்றன. ஆகவே நம்மைவிட பலமடங்கு தரம் குறைவான மொழிகளின் இலக்கியங்களுக்கெல்லாம்கூட நம்மைவிட பலமடங்கு மதிப்பு தேசிய அரங்கில் உள்ளது. நாம் நம்மை இழிவுசெய்துகொள்கிறோம். ஆகவே இதில் ‘அய்யோ பாவம். இளைஞர்’ என்பதுபோன்ற கரிசனங்களுக்கே இடம் இல்லை. இலக்கியத்துடன் சம்பந்தப்படாத அரசியலாளர்களின் கூச்சல்களுக்கு இடமில்லை.
குறைந்தது நம் தரப்பையாவது நாம் முன்வைக்கவேண்டும். நவீனத்தமிழிலக்கியத்தின் தரப்பு அது. இந்தியாவின் தலைசிறந்த நவீன இலக்கிய ஆக்கங்கள் உருவான ஒரு மொழியில் இருந்துகொண்டு இதைக்கூட நாம் செய்யாமலிருக்கக் கூடாது. கொஞ்சமாவது வாசிப்பவர்கள், கொஞ்சமாவது ரசனையும் தமிழ் நவீன இலக்கியத்தின்மேல் பற்றும் கொண்டவர்கள் செய்தாகவேண்டியது இது.
வெறுமே எனக்கெதிரான தனிநபர் காழ்ப்புகளினால் இந்தச் சிறுமையை தமிழ்மேல் ஏற்றிவைக்கலாகாது என்பதே நான் கோருவது.
ஜெ
தமிழில் இலக்கிய விமர்சனம் இலக்கிய விமர்சனம் என்பது… இலக்கியநுண்ணுணர்வு – மூன்றுவிதிகள் இலக்கிய அபிப்பிராயம் சொல்வது … இலக்கியவிவாத நெறிகள்.ஆகஸ்ட் 15, ஒரு நாள்- கடலூர் சீனு
2022 ஆண்டின் சுதந்திர தினம் அதிகாலை 12.30 கு ஈரோடு பேருந்து நிலையம் அருகே ஆவின் பால் பூத்தில் சூடான பாலுடன், தாமரைக் கண்ணன் மணவாளன் இருவருடனான இலக்கிய உரையாடலுடன் துவங்கியது. மணவாளன் இப்போதுதான் டால்ஸ்டாய் நாவல்கள் சிலவற்றை மறுவாசிப்பு செய்திருந்தார். அங்கே துவங்கி டால்ஸ்டாய் டாஸ்தாவ்ஸ்கி ஆக்கங்கள் வழியே இரு ஆளுமைகளும் எழுதி எழுதி கண்டு கொண்ட தங்களுக்கான கிறிஸ்து வரை உரையாடிபடி மண்டபம் வந்து சேர்ந்தோம். மண்டபத்தில் இன்னும் உறங்காமல் புகை போக்கிக்கொண்டிருந்த க்விஸ் செந்தில் அண்ணா வசம் நடந்து முடிந்த விழாவின் ப்ளஸ் மைனஸ் குறித்து ஒரு சிறிய உரையாடல் நிகழ்த்தினோம். முடித்து உறங்க 2.30.
மீண்டும் காலை 6.30 கே எழுந்து மேலை நாடுகளில் அங்குள்ள அதுவரையிலான மத, சமூக, அரசியல், தத்துவ அதிகாரத்தின் பின்புலத்தில் பின்நவீன கோட்பாடுகளின் தேவை உருவான விதம், அந்த நோக்கின் தனித்துவம், பலம், அதன் களங்கள் சுருங்கி சுருங்கி அது இலக்கியத்தில் மட்டுமே எஞ்சும் நிலை, அது தமிழ் நிலத்துக்கு வருகையில், நமதேயான கலாச்சார பண்பாட்டு வரலாற்று சிக்கல் குறித்து ஏதும் அறியாத, வாழ்க்கை நிலை சார்ந்த தவிப்புகள் ஏதும் அற்ற மேம்போக்கு எழுத்தாளர்கள் அதைக் கையாண்டு மேம்போக்குப் பிரதிகளை எழுதிக் குவித்த வகைமை குறித்து பேச்சு துவங்கி ஜெயமோகன் அன் கோவின் காலை நடையுடன் தொடர்ந்தது. 8.30 கு பத்ம பாரதி அவர்களை கரசூர் சேர்க்க கிளம்பினேன். அறைக்கு போகும்போது அங்கே சோ.தர்மன் பத்ம பாரதி இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். சோ.தர்மன் அவர்கள் விடை பெற்றதும், காலை உணவு முடித்து கரசூர் நோக்கி கிளம்பினோம்.
வழி நெடுக பத்மா அக்கா வினவ, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இது வரையிலான செயல்பாடுகளை விரிவாக சொன்னேன். வெண்முரசு துவக்க விழா குறித்த உரையாடல் வருகையில், அய்யய்யோ என் ஏற்புரைல கமல் சார் கு நன்றி சொல்ல விட்டு போச்சே என்று நினைவு வந்து பதறினார். பேசிக்கொண்டே வருகையில், வாழப்பாடி கடக்க, மலை அவரது அண்ணன் மகன் பின் சீட்டில் இருந்து அதோ அதோ என்று கூவி குதித்தான். என்ன என்று பார்த்தேன். சாலையின் இடது புறம், புத்தம் புதிதாக 150 அடி உயரத்தில் முருகன் சிலையாக நின்றிருந்தார்.
பயலுக்கு நினைவு தெரிந்த நாள் முதலே முருகன் என்றால் மிகுந்த இஷ்டம் என்று பத்மா சொன்னார்கள். அப்புறம் என்ன வண்டியை கோயிலுக்கு விடுங்க என்று சாரதி வசம் சொன்னேன். நிலம் முழுக்க, மக்கள் புற்கள் போல செறிந்திருந்தனர். நாங்கள் இறங்கி நடக்க, உலகப்போர் கல்லறை வரிசை போல வரிசை கட்டி நிறைந்திருந்த வாகனப் புதிர் வழிகளில் காரை நிறுத்த இடம் தேடி சாரதி காணாமல் போனார்.
ஸ்ரீதர் எனும் சேலம் நகர் தொழில் அதிபர், அவர் தந்தையின் கனவின் பொருட்டு எழுப்பிய சிலை என்கிறார்கள். அப்படியே மலேஷிய முருகன் கோயில் போலவே வடிவமைப்பு செய்யப்பட்ட வளாகம். முருகன் உட்பட அந்த கோயில் மொத்தத்தையும் மலேசிய கோயிலை செய்த குழுவே செய்ததாக அங்குள்ள பதாகை தெரிவித்தது. சிலை மட்டும் அங்குள்ள சிலையை விட உயரம். தலைச்சோறை வேகவைக்கும் வெய்யிலில் எம்பெருமான் முருகனை நெருங்க பக்தகோடிப் பஞ்சாமிர்தத்தில் கலந்து கூழானோம்.
எனது நோக்கில் இனி இத்தகு தனி நபர் முன்னெடுத்து செய்யும் கோயில்கள், எல்லா தெய்வங்களுக்கும் என தமிழ் நாட்டில் பெருக வேண்டும். வணிகம் தொட்டு அறக்கொடை வரை பல்வேறு கூறுகளுக்கான செல்வத்தை இங்கே திரட்ட முடியும். வரலாற்று கலைக் கோயில்கள், ஆகம விதிக்கு உட்பட்ட வழிபாடுகள் கொண்ட கோயில்களின் ஒழுங்குகள் குலைய, அந்த ஆலயம் கொள்ளாத அளவு அங்கே நிறையும் பெரும் ஜனத்தொகையை சற்றேனும் ‘மடை மாற்ற’ இத்தகு திறந்த வெளி பெருஞ்சிலை ஆலயங்கள் உதவும்.
மங்கல இசையோ, பக்தி பாடல்களோ இன்றி பக்தர்கள் கூச்சலில் நிறைந்து நின்றது கோயில் களம். அதிகம் போனால் இன்னும் இரண்டே வருடம், பெருவிழாக்கள் நிகழும் இடமாக இந்த முத்துமலை முருகன் கோயில் மாறிவிடும் எனும் நிலை கண் கூடாகவே தெரிகிறது.
பயல் உண்மையாகவே ஒரு முருகனடிமை போலவே அந்த முருகனை பார்த்து நின்றான். முருகனின் கிரீடம் முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக அத்தை அங்க பாருங்க என்று, (அவ்வப்போது ஆடும் காதணிக் குழைகள், வேலில் வழியும் அபிஷேக பால் என்று) பரவசமாக சுட்டிக்காட்டி ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தான். மலேஷியா முருகனை ஒப்பிட்டால் இந்த முருகன் தேவலாம் ரகம். தெய்வீக முகம் என்பதற்கு பதில் பார்பி பொம்மை முகம். அதை மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் சற்றே பக்திப் பரவசம் அடைய முடியும் என்ற தோன்றியது.
பத்மா அக்கா எங்கள் இருவருக்கும் திருநீறு பூசி விட்டார்கள். (உபரியாக அந்த முருகனை போலவே எனக்கு இரண்டு மனைவிகள் கிடைக்கட்டும் என்றும் சத்தம் போட்டு வேண்டிக் கொண்டார்கள்).
வெளியே வந்து திருவிழா கடைகள் ஊடே சுற்றினோம். அக்கா எனக்கு பிள்ளையார் படம் ஒன்று வாங்கி பரிசு தந்தார்கள். மலை பயல் செவ்வாய் கிழமை தோறும் பூஜை செய்ய ஒரு முருகன் சிலை பொம்மை வாங்கிக் கொண்டான். கண்ணில் பட்ட எல்லா கடைக்குள்ளும் ஏறி இறங்கினோம். கண்ணில் பட்ட எல்லா தின்பண்டத்தையும் சுவைத்தோம். வாகனத்தை கண்டு பிடித்து வெளியேறி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
வழியில் விட்ட இடத்திலிருந்து இலக்கிய உரையாடலை தொடர்ந்தோம். பத்மபாரதி முன்பே எனக்கு அளித்திருந்த அவரது கவிதை நூல்கள் குறித்து கேட்டார். நேற்று என்னைக் குறித்து ஒரு திடீர் கவிதை ஒன்று சொன்னார்.
நேத்து பாத்தா நீங்க தாத்தா
இன்னிக்கி இருக்கீங்க
பாக்க யூத்தா
என்று துவங்கி தொடர்ந்த அந்த கவிதை நினைவில் எழவே, எதுக்கு வம்பு என்று “பிரமாதமான கவிதைகள் கா. படிச்சா இன்னுமே நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி தற்காலிகமாக அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்து உரையாடலை மடைமாற்றினேன். பேசிக்கொண்டே கரசூர் வந்து சேர்ந்தோம். விஷ்ணுவும் கரசூர் வந்திருந்தார். பத்மா அக்காவை அவர் இல்லம் சேர்த்து, காபி பிஸ்கெட் முடித்து விடை பெற்றோம்.
அக்கா கிளம்புறேன் என்று நான் சொன்ன கணம் சட்டென உணர்வு மீற, உதடு இறுக்கி, கண் கலங்கி நின்றார். பேச்சு எழாமல் தலை அசைத்து விடை தந்தார்.
கடந்த நாட்கள் முழுக்க தொடர் விழாக்களின் நண்பர்களின் முகம் வழியாகவே ஒழுகி சென்றன காலம். கடலூர் மீளும் வழி நெடுக இந்த முகமே மீண்டும் மீண்டும் நினைவில் எழுந்தது. என்னென்னனோ நினைவுகள், உணர்ச்சிகள். ஏதோ சிகர முனை ஒன்றில் தனித்து நின்றிருந்தேன். இல்லம் வந்ததும் முதல் தகவலாக கிடைத்து, என் பெரியம்மாவின் பேத்திக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது எனும் சேதி. அதாவது உறவு முறைகளின் மேதமாடிக்ஸ் படி நான் தாத்தா ஆகி விட்டேன். சோலி மூடிஞ்ச். நான் தரைக்கு வந்து விட்டேன்.
கடலூர் சீனு
எங்கோ ஓரிடத்தில்…
ரிச்சர்ட் டைலர் – ஓர் இனிய சந்திப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை கூட நான் சினிமா பிரமோக்களில் பங்கெடுப்பதில்லை என்னும் நெறி கொண்டிருந்தேன். அதில் ஒருவகையான ‘சம்மல்’ உள்ளது. அது நம்மை நாமே முன்வைப்பது போல. என்னுடைய நூல்களுக்கு புத்தகவெளியீடுகளை தமிழினி பதிப்பகமும் பின்னர் உயிர்மையும் ஒருங்கிணைத்துள்ளன, இருபதாண்டுகளுக்கு முன்பு. அதன்பின் அவற்றையும் தவிர்த்துவிட்டேன்.
ஆனால் இன்று பொன்னியின்செல்வன் மேடையில் ஏறியே ஆகவேண்டிய நிலை. சூப்பர் ஸ்டார்களே பிரமோக்களுக்குச் சென்றாகவேண்டுமென்பது கட்டாயம். (நான் சின்ன ஆணியாக இருந்துகொள்வதனால் இப்போதும் பெரும்பாலும் தவிர்க்கமுடிகிறது).
ஆங்கிலநூல்களைப் பொறுத்தவரை அவை சினிமாக்கள் போலத்தான். இயல்பாக இலக்கிய உரையாடல்கள் நிகழ்வது, அவற்றினூடாக மதிப்பீடுகள் உருவாவது அச்சூழலில் இல்லை. ஏனென்றால் பெரும்பாலும் பெரிய ஊடகங்களை நம்பியே அவ்வணிகம் நிகழ்கிறது. நூல்கள் வந்து குவிகின்றன. இந்தியா முழுக்க இருந்து வரும் நூல்கள். ஆகவே பிரமோக்கள் தவிர்க்கவே முடியாதவை.
அத்துடன் ஒன்று உண்டு. வங்க ஆங்கிலப் படைப்புகள் ஏராளமாக வருகின்றன. ஆகவே இந்திய இலக்கியங்களின் ஆங்கில வாசகர்கள் வங்கப் பண்பாட்டுச்சூழலை கொஞ்சம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். மலையாளம், கன்னடம் சார்ந்துகூட அப்படி ஒரு பரிச்சயம் வாசகர்களுக்கு உள்ளது. தமிழிலிருந்து குறைவாகவே நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. குறைவாகவே கவனிக்கவும்பட்டுள்ளன. நாம் இன்றுகூட தென்னிந்திய இலக்கியம் என்னும் ‘லேபில்’ சூடி மலையாள, கன்னட இலக்கிய நிழலில் நிற்கவேண்டியிருக்கிறது. அசோகமித்திரனை சகரியாவும், அரவிந்த் அடிகாவும் அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது.
நம்மவர் தமிழ் நூல்களையும் குறைவாகவே வாங்குகிறார்கள். ஆங்கிலத்தில் வரும் தமிழ் நூல்களை அதைவிடக்குறைவாகவே வாங்குகிறார்கள். தமிழிலோ ஆங்கிலத்திலோ தமிழ் எழுத்துக்களை படிப்பதே ஒரு படி குறைவானது என்னும் மனநிலையும் நிலவுகிறது. ஒரு தமிழ் நூலின் அமேசான் அல்லது குட்ரீட்ஸ் பக்கத்தின் கீழே சென்று பார்த்தாலே தெரியும். மிகமிகக்குறைவாகவே எதிர்வினைகள் இருக்கும். நம்மவர் எவருமே எழுதுவதில்லை.
ஆகவே ரிச்சர்ட் டைலரின் இந்த புகைப்படம் எனக்கு ஒரு பரவசத்தை அளித்தது. அவர் அதை வாசிக்கிறார், எங்கோ ஓர் அயல்பண்பாட்டில் பிறந்தவர். அமெரிக்காவின் ஏதோ நகரில் இருந்து அக்கதைகளை அவருடைய மொழியில் வாசிக்கிறார்.
Stories of the True : Translated from the Tamil by PriyamvadaAugust 29, 2022
செயலும் சலிப்பும்
அன்புள்ள ஜெ
உங்கள் கடிதம் கண்டேன். சந்திப்புகள், விவாதங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நான் இதுவரை எந்தச் சந்திப்பிலும் கலந்துகொண்டதில்லை. இலக்கிய நண்பர்களும் எனக்கில்லை. அது என்னுடைய சிக்கல்தான். என் வேலைச்சுமை அதிகம். வீட்டிலிருந்து விலகி இருப்பதும் கஷ்டம். அதோடு சந்திப்புகளுக்கு கிளம்பலாமென எண்ணினாலும் உடனே தவிர்த்துவிடவேண்டும் என்னும் எண்ணமும் சலிப்பும்தான் வருகிறது
எஸ்.சம்பத்குமார்
***
அன்புள்ள சம்பத்,
உண்மையில் நம் அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையில் இங்கு மிகபெரிய சலிப்பு உள்ளது. நமது தொழிற்சூழல் அளிக்கும் சலிப்பு நமது நுகர்வுப் பண்பு கொண்ட சமூக சூழல் அளிக்கும் சலிப்பு. ஒத்த உளம் இலாதவருடன் உடன் வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அளிக்கும் சலிப்பு.
அனைத்துக்கும் மேலான சலிப்பு ஒன்று உண்டு. அது சராசரித்தனத்திற்குள் பொருந்திக் கொள்ள முடியாத அல்லது பொருந்த முயல்வதன் வழியாக உருவாகும் சலிப்பு. நீங்கள் திரைப்படங்களை, இணைய இதழ்களை, தொலைக்காட்சி தொடர்களை, சமூக வலைத்தள விவாதங்களை, நாளிதழ் கட்டுரைகளை பொழுதுபோக்குக்காக படிக்கலாம். ஆனால் இவை அனைத்துமே ஒரு மாபெரும் சராசரிக்காக உருவாக்கப்பட்டவை. நீங்கள் சற்றேனும் தனித்தன்மை கொண்டவராக இருந்தால் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு ஏமாற்றமும் ஒவ்வாமையையுமே உணர்வீர்கள்.
இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் பார்த்தால் நான்காவது திரைப்படம், பத்து நிமிடத்திலேயே சலித்துவிடும் .இரண்டு தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தால் மூன்றாவது தொலைக்காட்சித் தொடரை பார்க்க முடியாது. இந்தச் சலிப்பு இருந்தால்தான் நீங்கள் அறிவியக்கவாதி. இல்லை, உற்சாகமாகத் திளைக்க முடிகிறதென்றால் நீங்கள் அறிவியக்கத்திற்குள் நுழையவே இல்லை என்று பொருள். நீங்கள் எந்த தனித்தன்மையும் கொண்டவர் அல்ல.
அல்லது நாம் நமது மூளையைக்கழற்றி வைத்துவிட்டு வேண்டுமென்றே நம்மை மூழ்கடித்துக்கொள்ள வேண்டும். பலர் அது சலிப்பை வெல்லும் வழி என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் உங்கள் மூளையை விலக்கி வேண்டுமென்றே சராசரித்தனத்தில் மூழ்கடித்துக்கொண்டால் உங்களுக்குள்ளிருந்து உங்களைக் கண்காணிக்கும் உங்களுடைய ஆழம் மேலும் அதிருப்தி கொள்கிறது. மேலும் சலிப்பை அடைகிறது.
அந்த சலிப்பு உங்களுக்குத் தெரியாது. ஒரு நாளில் ஆறுமணிநேரம் திரைப்படங்களையோ இணையத்தொடர்களையோ பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் ஆழ்ந்த உளச்சோர்விலும் இருந்துகொண்டிருப்பார். தான் உளச்சோர்வில் இருப்பதே அவருக்குத் தெரியாமலும் இருக்கும். ஏதாவது பேசத்தொடங்கும்போது அந்த உளச்சோர்வு அவரில் தெரியும். ஒன்று, வலிந்து உருவாக்கின மிகை நகைப்புகளுடன் பேசுவார். அல்லது சோர்ந்து தனித்தனியாக ஒலிக்கும் சொற்களுடன் பேசுவார். ஒரு உளமருத்துவன் மிக எளிதில் அவருடைய உளச்சோர்வை கண்டடைய முடியும்.
சராசரிகளில் ஈடுபடுபவர்களின் சலிப்பை ஓர் அறிவியக்கவாதி அச்சராசரிகளிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளாதவரை நீக்க முடியாது. சராசரிகளிடமிருந்து விலகியிருப்பதனால் தனிமை அடைகிறோம் என உணர்ந்து, அத்தனிமையை வெல்ல சராசரிகளில் ஈடுபடுபவர்கள் காலப்போக்கில் உளச்சோர்வடைந்து, அந்த எரிச்சலை சகசராசரிகள் மேல் காட்டி, அவர்களால் வெறுக்கப்படுவார்.
அறிவியக்கவாதி செய்தாகவேண்டியது தன்னைப்போன்றே சராசரிக்கும் மேலெழ விரும்புபவர்களுடனான நட்பு. அவர்களுடனான தீவிரமான உரையாடல். சலிப்பிற்கு மாற்று ஒன்றே- தீவிரம்.
தீவிரம் அளிக்கும் விசை நம்முள்ளிருக்கும் அத்தனை ஆற்றலையும் நம்மை பயன்படுத்திக்கொள்ள வைக்கிறது. நமது மூளைத்திறன் முழுக்க நமது உடல் திறன் முழுக்க செலவழிக்கப்படுகிறது. அப்போது தான் நம் அகம் நிறைவடைகிறது. நாம் ஆற்றல் கொண்டவர்களாக நம்மை உணர்கிறோம். நம்பிக்கையும் நிறைவையும் மகிழ்ச்சியையும் அடைகிறோம். திறன் கொண்டவரின் மகிழ்ச்சி திறன் வெளிப்படும்போது தான் வெளிப்படுகிறதே ஒழிய ஓய்ந்திருத்தலில், சோம்பியிருத்தலில் அல்ல.
அறிவுத்திறன் கொண்டவர்கள் அவ்வறிவுத்திறன் முழுக்க வெளிப்படுத்தும் களனைக் கண்டடைந்தே ஆகவேண்டும். அதற்கான தளங்களைக் கண்டடைந்தாகவேண்டும். அறிவுச் செயல்பாடினூடாக மட்டுமே அவர் தங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள முடியும். ஒற்றை வரியில் சொல்வதென்றால் இதுவே, ‘தனித்திறன் கொண்டிருப்பவர் தன் தனித்தன்மை வெளிப்படும் செயல்களில் ஈடுபடாதவரை உளச்சோர்வை தவிர்க்கமுடியாது’
அதன்பொருட்டே நான் விவாதக்களங்களை அமைக்க ஆர்வம் கொண்டிருக்கிறேன்.அதில் முதன்மையான தடையாக அமைவது என்ன என்று பார்த்தால் விந்தையான ஓர் உளசிக்கல்தான். சோர்விலிருப்பவர்கள் சோர்வை வெல்ல வேண்டும் என்ற விழைவை கொண்டிருப்பார்கள், ஆனால் அதற்குரிய ஒரு செயலைச் செய்வதற்கே அந்த சோர்வே தடையாக இருக்கும். அந்த இருநிலைதான் சிக்கலே.
ஒரே இடத்தில் வாழ்வதனால் ஒருவருக்கு சோர்வு இருக்கிறது. அங்கிருந்து கிளம்பிச் சென்றால் அந்த சோர்வு அகன்றுவிடும். ஆனால் அப்படி கிளம்பிச் செல்வதற்கு அந்த சோர்வுவே தடையாக இருக்கும். ஒரு நல்ல விவாத அரங்குக்கு சென்றால் மிகப்பெரிய அளவில் உள ஊக்கம் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் ஊக்கமற்றிருப்பதனால் அத்தகைய ஒரு சந்திப்புக்குச் செல்லும் விஷயத்தை தவிர்ப்பார். விடுமுறை இல்லை என்பார் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது என்பார். மூன்று நாட்களை நான்கு நாட்களை ஒதுக்க முடியாது என்பார். ஆனால் பல நாட்கள் எந்தப்பயனுமற்ற சோர்வில் நாட்கள் செல்லவும் கூடும்.
பெரும்பாலானவர்களால் அந்த தொடக்கநிலைத் தயக்கத்தை வெல்ல முடியவில்லை என்பதை நான் காண்கிறேன். அவர்கள் தங்களைத் தாங்களே சிறையிட்டிருக்கும் உளச்சோர்வும் செயலின்மையும் அவ்வகை ஆற்றல் கொண்டவை என்பதையும் காண்கிறேன்.
என்னுடைய தலைமுறையில் அந்தப் பிரச்னை இந்த அளவுக்கு இல்லை ஏனெனில் அன்று இதைவிட பெரிய வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்தன. அன்றெல்லாம் குடும்பம் ஒருவர்மேல் பெரும் பொறுப்பைச் சுமத்தி சுமையை அன்றி எதையுமே எண்ண முடியாதபடி ஆக்கியது. அதிலிருந்து கிடைக்கும் சிறு இடைவேளைகளையே கொண்டாட்டமாக உணரச்செய்தது. அன்றாடமே ஒருவரை உழலவைத்து உழலவைத்து மழுங்கடித்து உளச்சோர்வென்றால் என்னவென்றே தெரியாத உளச்சோர்வுக்குள் சிக்க வைத்து வாழ்க்கையை முழுக்க உறிஞ்சித்தீர்த்துவிட்டுக்கொண்டிருந்தது.
இன்று அப்படி அல்ல. இன்றைய இளைஞர்களுக்கு குடும்பப்பொறுப்பு குறைவு. பெற்றோரின் சேமிப்பின் குறைந்தபட்ச பின்புலம் அற்றவர்கள் குறைவு. பெரும்பாலானவர்களுக்கு வேலையும் வருமானமும் உள்ளது. எஞ்சியிருக்கும் இச்சலிப்பு ஒருவரின் ஆளுமையுடன் தொடர்பானது. செயலின்மை அளிக்கும் சலிப்பு அது. செயலே அதற்கு மாற்று. அச்செயலை தொடங்க தடையாக இருப்பதும் அச்சலிப்பே.
இலக்குகள் இல்லை என்பதனால் அச்சலிப்பு வருவதில்லை. இலக்குகளை வகுத்தபின் செயலாற்ற முடியாது. செயலாற்றும்போதே இலக்குகள் திரள்கின்றன. அச்செயற்களமே இலக்குகளை விளைவிக்கிறது.
செயலுக்கு இன்று குடும்பம், வேலை எல்லாம் பெருந்தடை என நினைப்பவர்கள் அச்சலிப்பினால்தான் அவ்வாறு எண்ணிக்கொள்கிறார்கள். சலிப்பு அக்காரணங்களைக் கண்டடைகிறது. அன்றி மெய்யாகவே அத்தடைகள் கொண்டவர்கள் அதை வெல்லவேண்டியதுதான். ஒரு செயல் அதற்கெதிரான தடைகளை வென்றே நிகழமுடியும். அச்செயலை ஆற்றல்கொண்டதாக ஆக்குவன அத்தடைகள்தான்.
அதற்கும் அப்பால் ஒருவருக்கு வேலை, குடும்பம்தான் முக்கியம் என்றால்; எதன்பொருட்டும் அவற்றை அவர் சற்றும் விடமாட்டார் என்றால் அவர் எனக்குரியவர் அல்ல. அறிவியக்கவாதியும் அல்ல. என் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றே அவர்களிடம் சொல்வேன்.அறிவுச்செயல்பாட்டுக்காக சிறைசென்றவர்கள், செல்பவர்கள் இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை சிக்கனையும் மதியத்தூக்கத்தையும் விடமாட்டேன் என்பவர்கள், பெண்டாட்டிக்கு பிடிக்காது என்பவர்கள் இந்தப்பக்கமே நடமாடக்கூடாது. மற்றவர்களுக்கும் அந்த நோய் தொற்றவிடக்கூடாது.
தன்னுடைய தொடக்க சலிப்பை வென்று தனக்குரிய களம் நோக்கி நகரக்கூடிய முதல் ஆற்றலை உருவாக்கிக்கொள்ள்ளாதவர்களுக்கு சொல்ல செய்ய என்னிடம் எதுவுமே இல்லை. அதை மீறி வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என ஒரு களம் இருக்கவேண்டும் என்று மட்டுமே கவனம் கொள்கிறேன்.
ஜெ
கு. அழகிரிசாமி
கு.அழகிரிசாமி பற்றிய இந்த தமிழ் விக்கி பதிவு ஒரு சிறு நூலாகவே விரித்தெடுக்கக்கூடும் அளவுக்கு முழுமையானது. அவருடைய அனைத்து பங்களிப்புகளையும் தொகுத்துரைக்கிறது. தமிழிலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமைக்கான உரிய அஞ்சலி
கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமி – தமிழ் விக்கி
உடனுறைதல், கடிதம்
சுவாமி பிரம்மானந்தருடனான உடன்தங்கல் மிகச் சிறப்பாக நிறைவுற்றது. வெள்ளியன்று காலை முதல் ஞாயிறு மதியம் வரை சுவாமிகளுடன் உரையாடவும் அவரது உரையை கேட்கவும் இயன்றது. உண்மையில் இந்த உடன்தங்கல் நிகழ்வு கிடைத்தற்கரிய வாய்ப்பு. ஒரு மதிப்பிற்குரிய துறவியிடம் இவ்வளவு நெருக்கமாக பழக வாய்ப்பு கிடைப்பது மிக அரிதானது. நான் இயன்ற அளவு இவ்வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன்.
கடலூர் சீனு அவர்களும் சுவாமிகளும் முதலிலேயே இது வெறுமனே வேதாந்தம் குறித்த அறிமுகம் மற்றும் அது குறித்த பொதுவான கலந்துரையாடல் என அறிவித்துவிட்டனர். சுவாமிகள் ஒவ்வொரு தலைப்பிலும் பல தளங்களை தொட்டு மிக விரிவாக ஒரு அறிமுகத்தினை அளித்தார். மேலும் ஆன்மிகம் சார்ந்த எந்த விதமான கேள்விகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆகவே என்னால் அன்றாட நடைமுறைத் தளத்தில் உள்ள விஷயங்களை அத்வைத நோக்கில் எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதனை சந்தேகமாக கேட்டு பதில் பெறவும் முடிந்தது. இம்மூன்று நாட்களும் கற்பிக்கப்பட்ட – விவாதிக்கப்பட்ட விஷயங்களை குறித்து தனி கட்டுரையாக எழுத வேண்டும்.ஒரே ஒரு மனக்குறை தங்களை சந்திக்க இயலாமல் போனது மட்டுமே.
உடன்தங்கல் ஏற்பாடுகளை அந்தியூர் மணி சிறப்பாக கவனித்துக் கொண்டார். மணி சார் காட்டிற்குள் ஒரு சிறிய பயணத்திற்கு ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றார். ஞாயிறன்று சுவாமிகளுடன் வீரசைவ மடத்திற்கு சென்று வந்தோம். உடன் வந்த புதிய நண்பர்களுடனும் மூன்று நாட்கள் உரையாட முடிந்தது – குறிப்பாக கடலூர் சீனு அவர்களுடனும் லிங்கராஜ் அவர்களுடனும். குக்கூ ஸ்டாலின் அவர்களையும் சந்திக்க இயன்றது. இவ்வளவு மென்மையாக சிறிதும் கசப்போ வெறுப்போ போலி தன்முனைப்போ இல்லாமல் இருக்கும் ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை.
இந்த உடன்தங்கல் வாய்ப்பிற்காக மனமார்ந்த நன்றிகள் பல ஜெ.
சங்கரன் இ.ஆர்
அன்புள்ள சங்கரன்,
நான் வராமலிருப்பதே நன்று என்று தோன்றியது. சினிமா வேலைகள் தலைக்குமேல் என்பது முக்கியமான காரணமாக இருந்தாலும்.
வகுப்புகள் இரண்டுவகை. ஒரு துறவி , வேதாந்த சாதகர் எடுக்கும் அதே வேதாந்த வகுப்பை ஒரு நல்ல பேராசிரியர் ஒரு வேளை மேலும் சிறப்பாக எடுத்துவிடக்கூடும். ஆனால் அவரிடமிருந்து நாம் பெறுவது வெறும் கருத்துக்களையும் தர்க்கததையும்தான். அது நம் தர்க்க புத்தியை மட்டுமே வலுவாக்குகிறது. ஒருவேளை அதனால் நம் ஆணவம் கெட்டிப்பட்டு, நம்மால் மெய்யான உணர்தல் இயலாமலும் ஆகலாம். தத்துவக்கல்வி இரண்டு வகை. அறிதல், அறிந்ததை அகத்தே உணர்தல். இரண்டாம் நிலை நிகழவில்லை என்றால் முதல்நிலை ஒரு சுமை.
மெய்யறிதலின் பயணத்தில் இருப்பவர்கள் கற்றதைச் சொல்வதில்லை, கண்டடைந்ததைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வனவற்றின் கண்முன் தோற்றமென அவர்களே நிலைகொள்கிறார்கள்.
ஆகவேதான் மெய்யறிவரின் உடனுறைதலை மரபு வலியுறுத்துகிறது. இவ்வகுப்பில் அவர் என்ன சொன்னார் என்பதல்ல, அவருடைய எதிர்நிலைப்பண்பே இல்லாத ஆளுமையும் சமநிலையுமே முதன்மையாக நாம் அருகிருந்து உணரவேண்டியவை. அது நண்பர்களுக்கு முழுமையாக நிகழவேண்டும் என எண்ணினேன். மெய்யான ஆன்மசாதகர்கள், தத்துவ மாணவர்களுக்கு எந்நூலைவிடவும் ஓர் ஆளுமையின் அருகமைவு அளிக்கும் கல்வி மிக அதிகம்.
அதற்கு கொஞ்சம் அகம் திறந்திருக்கவேண்டும். கொஞ்சம் மூளையை ரத்துசெய்யவேண்டும். கொஞ்சம் ஆணவம் அடங்கியிருக்கவேண்டும்
ஜெ
அன்புள்ள ஜெஉண்மை .ஒரு உதாரணம், சுவாமிகள் தனது உரையின் போது நடுவில் பொதுவாக “நாம் நிறைய கற்கிறோம், கேள்விகள் கேட்கிறோம், we’re somewhat special ” என்று மெல்லிய புன்முறுவலுடன் கூறிய பிறகு பின் ஞானத்தேடலைப் பற்றி சொல்லிச் சென்றார். சிறிது நேரம் கழித்து இருப்பு குறித்து பேசும் போது, பிரம்மாண்டமான இயற்கையின் ஒரு சிறுதுளி மனிதன் – a blip ,” என சுவாமிகள் கூறிய பின்னர் அது குறித்து விரிவாக விளக்கினார்.ஆனால் அன்றிரவு அவர் அருகில் அமர்ந்திருக்கையில் மேற்சொன்ன இரு கருத்துக்களும் மடம் குறுநாவலில் இடையன் சுவாமிகள் கணபாடிகளிடம் அவர் தனது மகன் இறந்த துக்கத்தை பகிரும் போது “உள்ளது தான். வேதாந்தம் படிச்சிருக்கேரு, யமன் கேட்காமல் வந்தது தவறு தான் ” என்று சொல்லும் பகுதியும் சேர்ந்து நினைவிற்கு வந்தது. அக்கணத்தில் ஏன் எனக்கு மட்டும் இந்த துயர் என்னும் நிரந்திர கேள்விக்கான விடை துலங்கியது. ஆணவம் என்பதன் பொருளும் அன்றாட வாழ்வில் நம்மை அறியாது அதன் மீதான அதீத முக்கியத்துவம் புலனடக்கம் மற்றும் சாதனையில் தரும் சிக்கல்களும் விளங்கியது.ஆனால் மிக முக்கியமான ஒன்று அதன்பின் கிடைத்து இப்போது வரை நீளும் உள்ளார்ந்த அமைதி. சுவாமிகளின் அருகமைதல் இல்லாமல் இந்த அமைதி நிகழ்ந்திருக்காது.வாழ்வில் முதல் முறையாக எப்போதும் கனன்று கொண்டிருக்கும் கோபமோ வெறுப்போ சுய இரக்கமோ இல்லாமல் அமைதியை உணர முடிந்தது.சுவாமிகள் நேற்று மதிய உணவின் போது தீடிரென என்னிடம் “உங்களின் மன அமைப்பு நீங்களே சொல்லிக் கொள்வது போல Rational அல்ல மாறாக technical என்றார். பிறகு நான் தியானம் செய்வது உண்டா என கேட்டார்.நான் தியானத்தில் அமர்ந்தால் பலமடங்கு அதிக கொந்தளிப்பிற்கு மனம் ஆளாவதால் தியானம் செய்வதில்லை. ஆனால் கந்தர் அனுபூதி போன்ற பாடல்களை மனனம் செய்கிறேன் என்றேன். சுவாமிகள் ஏதேனும் ஒரு ஆப்த வாக்கியத்தை எடுத்து அதன் மீது சிந்தனையை குவித்து பயிற்சி செய்யுமாறு கூறினார். அது அவர் எனக்களிக்கும் ஆசி என்று நினைக்கிறேன். இனி இந்த சாதனையை முழுமையாக செய்வது மட்டுமே எனது இலக்கு.சங்கரன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



