Jeyamohan's Blog, page 732
August 17, 2022
களிற்றியானை நிரை- வருகை
அன்புள்ள ஜெ,
களிற்றியானை நிரை செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். நன்றி!
இந்நாவல் வெண்முரசு வாசகர் கூட்டங்களை நடத்தும், வெண்முரசைப் பரவலாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயரை நாவலில் உங்கள் முன்னுரையில் காண மகிழ்ச்சியாக இருந்தது.
அட்டையில், எழும் யுகத்திற்கான அறிவிப்பைப்போல கவசஉடை அணிந்த சம்வகையின் வண்ணப்படம். சம்வகை ஒருவகையில் தற்போதைய இந்தியப் பெண்களையும் பிரதிபலிக்கிறாள்.வலிமை கொண்டு எழுந்து வரும் பெண்கள் ராணுவத்திலும் அரசிலும் தங்களுக்கான இடத்தை எடுத்துக்கொள்ளும் வலுவான குறியீடு.
அழிவிற்குப்பின் அஸ்தினாபுரியும் பாரதவர்ஷமும் மீண்டெழும் சித்திரத்தை அளிக்கும் நாவல், அரசுகளும், குலங்களும், வணிகமும், நகரங்களும், ஊர்களும், தொல்கதைகளும் என எல்லாம் எப்படித் தங்களுக்கான தொடர்ச்சியைப் பேணிக்கொள்கின்றன என விவரிக்கிறது. இறுதியில் அந்தணர்களால் நெய்யூற்றிக் கொளுத்தப்பட்ட சார்வாகரின் கோலும் தீக்ஷணனை அடைந்து தொடர்கிறது.
பாண்டவ சகோதரர்கள் பாரதத்தின் நான்கு திசைகளிலும் இருந்து கொண்டுவரும் பரிசுகளும் அவற்றைப்பற்றிய கதைகளும் ஒவ்வொரு வகையில் யுதிஷ்டிரரை அலைக்கழிக்கின்றன. அர்ஜுனன் கொண்டுவரும் புற்குழல் பீஷ்மருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தக்குழலைக் கொடுத்த பூசகனின் சொற்கள்:
“எங்கள் நிலத்தை ஆள்பவர் தன் சாவைப்பற்றி அறிந்திருக்கவேண்டும். தன் வாழ்வின் மெய்மையை அறிந்தவரே தன் சாவை அறிந்தவர். அவருக்கு அச்சொல் தெரிந்திருக்கும். எவர் ஒரு சொல்லை உரைத்து அச்சொல்லை அந்த வானம்பாடி மீளச் சொல்லவில்லையோ அவரே மேருநிலத்தை ஆளும் தகைமைகொண்டவர். தெய்வங்களுக்கு உகந்தவர். அவரை வணங்குக! அவருக்கு அடிபணிந்து கோல் அளித்து அழைத்துவருக! என்று தெய்வம் கூறியது. ஆகவேதான் வந்தேன்.”
பீஷ்மர் தன் இறுதிச் சொல்லை உரைத்து உயிர்நீப்பதன்மூலம் மேருநிலத்தை ஆளும் தன் தகைமையை நிறுவிச்செல்கிறார்.
துரியோதனனின் பெரும் ஆளுமை வெண்முரசில் பல இடங்களில் அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. இதிலும், சத்யபாமைக்கும் சாரிக்கருக்கும் இடையிலான பின்வரும் உரையாடலில் ஒரேவரியில் அது மிகவும் உணர்ச்சிகரமாக வெளிப்படுகிறது:
சாரிகர் “அரசி…” என்று தயங்கியபடி அழைத்தார். “அங்கே மறைந்த பேரரசர் துரியோதனனின் மகள் லக்ஷ்மணை ஆட்சி செய்கிறார் என்றீர்கள். அவர் தன் தந்தையரைக் கொன்று அஸ்தினபுரியை வென்று ஆளும் யுதிஷ்டிரன் மீதும் இளைய யாதவர் மீதும் கடுஞ்சினம் கொண்டிருப்பதாகவும் சொன்னீர்கள்” என்றார். “இக்குழவி பாண்டவர்களின் எஞ்சும் துளி. இது அழிந்தால் பாண்டவர்களின் கொடிவழி அறுந்து போய்விடும்.” சத்யபாமை “நீர் எண்ணுவதென்ன என்று தெரிகிறது. இக்குழவிக்கு கிருஷ்ணையால் தீங்குவரக்கூடும் என்றா?” என்றாள். “அவர் நேரடியாக தீங்கிழைக்க வேண்டியதில்லை. இப்போது உரியவை அனைத்தையும் செய்யாமலிருந்தால், செய்வனவற்றை சற்றே பிந்தினால், நேரடியாக ஈடுபடாமல் தவிர்த்துவிட்டால்கூட இம்மைந்தன் வாழமாட்டான்” என்றார் சாரிகர்.
பெருமூச்சுடன் “உங்கள் ஐயமும் அச்சமும் புரிந்துகொள்ளற்குரியதே” என்று சத்யபாமை சொன்னாள். “அவளுடைய வஞ்சம் இயல்பானது, ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்.” அவள் முகம் ஒளிகொண்டது. புன்னகை இன்றி ஒரு முகத்தில் ஒளியெழுவதை அப்போதுதான் சாரிகர் கண்டார். “ஆனால் இப்புவியில் எந்தக் குழந்தையையும் ஈன்ற அன்னையிடம் என நம்பி ஒப்படைப்பதென்றால் அது கிருஷ்ணையிடமே. முற்றெதிரியின் குழந்தையே ஆயினும். ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்” என்றாள் சத்யபாமை. அவர் மெய்ப்புகொண்டு அறியாமல் கைகூப்பினார்.
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
சுவாமி பிரம்மானந்தருடன் தங்க அழைப்பு…
மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் ஈரோடு அருகே எங்கள் தங்குமிடத்தில் மூன்றுநாட்கள் இருப்பார். 26 ஆகஸ்ட் 2022 முதல் 28 ஆகஸ்ட் வரை. ஆர்வம்கொண்டவர்கள் அவருடன் தங்கலாம். உரையாடல் அமர்வுகள் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
பெயர், வயது, ஊர், முன்னர் எங்கள் நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளீர்களா ஆகிய செய்திகளை தெரிவித்து மின்னஞ்சல் செய்யலாம்.
மூன்றுநாட்களுக்கு தங்குமிடம், உணவு உட்பட ரூ 3000 ஆகும். மாணவர்கள், செலவு செய்ய முடியாத நிலையில் உள்ள இளைஞர்கள் தெரிவித்தால் அவர்களின் கட்டணத்தை பிறர் அளிக்க ஏற்பாடு செய்ய முடியும்.
ஜெ
jeyamohan.writerpoet@gmail.com
August 16, 2022
அன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும்
Dear Jeyamohan Sir,
PS1 டீஸர் பார்த்து எழுந்த கேள்விகளை பார்த்திருப்பீர்கள். இந்த திரைப்படம் அந்த காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச்சென்று வரலாற்றை காட்டும் என நீங்களும் கூறினீர்கள்.
அப்படி இருக்க ஏன் சைவத்தை போற்றியவர்கள் நெற்றியில் திருநீர் பட்டை இல்லை? ஏன் போர் உடை கிரேக்க வீர்ர்கள் சாயலில் உள்ளது? ஆதித்த கரிகாலன் கொடியின் நிறம் சிவப்புதானா? சோழ தேசக் கொடி கூட சற்று வேறு மாதரி உள்ளது?
இதுபோல எழுந்த மற்ற கேள்விகளையும் சேர்த்து ஒரு கட்டுரை வெளியிட்டால் தெளிவுபெற உதவியாக இருக்கும்.
உங்கள் பங்களிப்பு உள்ளதனாலேயே இப்படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
நன்றி!
Best Regards,
Karthick S
அன்புள்ள கார்த்திக்,
உங்கள் கடிதத்திலிருந்து நீங்கள் இளைஞர் என்று கண்டு கொண்டதனால் இக்கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் இக்கடிதத்தை இன்றிருக்கும் நிலையிலிருந்து வயதும், சற்று அறிவு மலர்வும் கூடிய பத்தாண்டுகளுக்குப்பின் இருக்கும் நீங்களாக இருந்து மீண்டும் படித்துப்பாருங்கள். இதிலிருக்கும் ஒருவகையான சிறுமை உங்கள் பார்வைக்கு படவில்லையா?
நீங்கள் இந்த விவாதத்தை முகநூலிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இவற்றை முகநூலில் நிகழ்த்துபவர்கள் யார்? அவர்கள் அறிஞர்களோ, ஆய்வாளர்களோ அறிவுப்புலத்தில் ஏதேனும் பங்கு உடையவர்களோ அல்ல. பெரும்பாலானவர்கள் எளிய வாழ்க்கையில் எங்கோ பொருத்திக்கொண்டு அன்றாடத்தில் திரும்பத் திரும்ப உழன்றுகொண்டிருப்பவர்கள். நடுத்தர, கீழ்நடுத்தர வாழ்க்கையின் சலிப்புக்குள் சிக்கிக்கொண்டவர்கள்.
அவர்களுடைய அந்தரங்க பகற்கனவுகளில் அவர்கள் தங்களை முக்கியமானவர்களாக, தலைமைத் தன்மை கொண்டவர்களாக, வரலாற்றில் இடம்பெறுபவர்களாக எல்லாம் புனைந்துகொள்கிறார்கள். தங்களை நாயகர்களாக எண்ணி ஆணவநிறைவு அடைகிறார்கள். அதன்விளைவாக ஒருவகையான இருநிலைத் தன்மை அவர்களுக்கு உருவாகிறது. தங்கள் சிறுமையை தாங்களே பார்க்கும் நிலை அது. அதை மெல்ல மெல்ல ஒரு கசப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஏதேனும் ஒருவகையில் அறியப்பட்ட அனைவர் மேலும் கசப்பையும் காழ்ப்பையும் உமிழ்வதன் வழியாக அவர்களின் அகத்தில் சுட்டெரிக்கும் புண்பட்ட ஆணவம் சற்றே தணிகிறது. அதையே ஒரு வம்புப் பேச்சாக நிகழ்த்தும்போது அவர்களின் அன்றாடத்தின் சலிப்பும் மறைகிறது. பொது வம்பு என்பதன் உளநிலை இதுதான்.
அன்றன்று பேசப்படும் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் தங்களுக்குத் தெரிந்த சிறு துளிகளை வைத்துக்கொண்டு, புகழ்பெற்ற அனைத்து ஆளுமைகளையும் இழிவு செய்து பேசுவதும் வசைபாடுவதும் கொக்கரிப்பதும் ஏளனம் செய்வதும் இவர்களின் இயல்பு. இவர்களில் ஒருவராக நீங்கள் எதிர்காலத்தில் ஆக விரும்புகிறீர்களா? இவர்களிடமிருந்து உங்கள் வரலாற்றறிவையும் இலக்கிய அறிவையும் உலகியல் அறிவையும் பெற விரும்புகிறீர்களா? ஆம் எனில் நாம் மேற்கொண்டு விவாதிக்கவோ பேசவோ எதுவுமில்லை. அல்ல என்று உங்களுக்கு ஒரு கணமேனும் தோன்றினால் இதை மேலும் படிக்கலாம்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவருவதை ஒட்டி இத்தளத்தில் சில குறிப்புகளை நான் எழுதி வருகிறேன். பொதுவாக என்னுடைய திரைப்படங்கள் சார்ந்த எந்த விவாதத்தையும் எனது தளத்தில் முன்னெடுப்பதில்லை. ஏனெனில் திரைப்படம் என்பது ஒரு கேளிக்கை. அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பது என்பது வெறும் வம்புதான். வம்புகளில் எனக்கு ஆர்வம் இல்லை. அதற்கான தளமும் இதுவல்ல. ஆனால் பொன்னியின் செல்வன் பற்றி இங்கு ஏன் பேசப்படுகிறது என்றால், அதை ஒட்டி இலக்கியம் தமிழ் வரலாறு ஆகியவை சார்ந்து சிலவற்றை பொதுச்சூழலில் கவனப்படுத்த முடியும் என்பதனால்தான். சில வரலாற்றாசிரியர்களின் பெயர்களை முன்வைக்க முடியும் என்பதனால்தான்.
இப்போது தமிழ் விக்கி இணையதளத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களைப்பற்றிய பதிவை சில ஆயிரம் பேர் வந்து படித்திருக்கிறார்கள் என்றால் பொன்னியின் செல்வனும், அதை ஒட்டி அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டதும் காரணம். இத்தகைய தருணங்களை எப்போதுமே தமிழின் அறிவார்ந்த செயல்பாடுகளை நோக்கி ஈர்க்க பயன்படுத்திக்கொள்வது என் வழக்கம். அவ்வகையிலேயே சோழர் கால வரலாறு பற்றிய குறிப்புகள் பொன்னியின் செல்வன் எனும் புள்ளியுடன் தொடர்பு படுத்தி இந்த தளத்தில் வந்துகொண்டிருக்கின்றன. அன்றி பொன்னியின் செல்வன் பற்றி ஆங்காங்கே வம்பர்கள் அமர்ந்து பேசும் அனைத்து வம்புகளுக்கும் பதில் அளிப்பது என்னுடைய வேலையல்ல. சென்ற முப்பதாண்டுகளில் நான் செய்துவரும் அறிவியக்கப்பணியின் அளவை வைத்துப் பார்க்கும்போது எவரும் அதை உணர முடியும்.
பொதுவாக வம்பர்கள் ஓர் ஆவேசநிலை எடுக்க விரும்புவார்கள். மதம் ,ஜாதி, இனம், மொழி எதையேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டுதான் அந்த ஆவேச நிலையை எடுக்க முடியும். அந்த ஆவேச நிலையை எடுத்தால் மட்டுமே அவர்களால் ஆங்காரமாக அடிவயிற்று வேகத்துடன் கூச்சலிட முடியும். அப்போது மட்டும் தான் அவர்களுள் எரியும் அந்த புண்பட்ட ஆணவம் நிறைவு கொள்கிறது. எளிய மனிதர்கள், பல்வேறு காரணங்களால் அறிவியக்கத்துடன் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லாது அமைந்தவர்கள், பல்வேறு தளங்களில் சிதறடிக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களைப்பற்றிய ஆழ்ந்த அனுதாபம் மட்டுமே என்னிடம் உள்ளது. அந்த மிகை உணர்ச்சிகளை எதிர்கொள்வதற்கு பதிலாக தவிர்த்து செல்வதையே நான் விரும்புவேன்.
நீங்கள் எங்கு சிக்கிக்கொள்கிறீர்கள் என்றால் உங்களை அறியாமலேயே மதம், ஜாதி, இனம், மொழி சார்ந்து ஏதேனும் பற்று உங்களுக்குள் இருக்கும் என்றால் அதைச் சார்ந்து பேசுபவர் ஒருவரை உங்களவராக ஏற்றுக்கொள்கிறீர்கள். அவர்களுடைய குரல் அறச்சீற்றம் கொண்டதென்றும் மெய்யான தரப்பு என்றும் எண்ண ஆரம்பிக்கிறீர்கள். அந்த திசை உங்களை வம்பிலிருந்து மேலும் வம்புக்கு இட்டுச் செல்லும். ஒரு கட்டத்தில் அந்த வரிசையில் உங்களைக் கொண்டு அமரவைக்கும். நீங்களே உங்களை வெறுக்கும் நிலையில் ஒரு வம்பராக மட்டும் உங்களை கண்டுகொள்வீர்கள். இதை இத்தருணத்திலாவது புரிந்துகொள்ளுங்கள்.
பொன்னியின் செல்வன் ஒரு பொதுரசனைக்குரிய திரைப்படம். அந்த எல்லைகளுக்குள் நின்றுகொண்டு அது தமிழ் வரலாறு குறித்து பேசுகிறது. அது இந்தியாவெங்கும் தமிழர்களின் பொற்காலம் ஒன்றை முன்வைக்க இருக்கிறது. அந்த ஒரு காரணத்தினாலேயே பலரால் அது எதிர்க்கப்படுகிறது. எதிர்ப்பவர்களில் பலர் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தோரணை கொண்டவர்களாயினும் உள்ளூர தமிழர் பெருமையால் சீண்டப்படுபவர்கள்தான். அதற்கான காரணங்கள் பல இருக்கும். அவற்றுக்குள் செல்ல நான் விரும்பவில்லை.
மிக எளிமையாக உங்களிடம் நான் கேட்க முடியும். சோழ மன்னர்கள் நெற்றி நிறைய விபூதி அணிந்திருந்தார்கள், போர்க்களத்தில் வியர்வை கொட்டும்போதும் அந்த விபூதி அழியாமல் இருக்கும்படி அதை ஃபெவிக்கால் கலந்து பூசியிருந்தார்கள் என்பதற்கு உங்களுக்கு கல்வெட்டு சான்று இருக்கிறதா என்ன?சோழர் காலத்து உடைகள் எப்படியிருந்தன, அரசவை எப்படி இருந்தது என்பதற்கு உங்களிடம் என்ன சான்று இருக்கிறது?
சோழர் காலத்தில் மெய்யாகவே அணிந்திருந்த உடைகள், அவர்களின் அரண்மனைகள் அணிகள் ஆகியவற்றை இன்று காட்டினால் அது ஒரு வெற்றிகரமான வணிகப்படமாக இருக்குமா? உதாரணமாக, கோபுலு முன்பு சரித்திரக்கதைகளுக்கு வரைந்த ஓவியங்களில் தமிழ் மன்னர்கள் தரையில் வட்டமாக அமர்ந்து தங்கள் அமைச்சர்களுடனும் குலத்தலைவர்களுடனும் உரையாடுகிறார்கள். ஒவ்வொருவர் முன்னாலும் தாம்பாளத்தில் வெற்றிலை தாம்பூலம் வைக்கப்பட்டிருக்கிறது. பெரிய தலைப்பாகைகளும் மீசைகளும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தடித்த மரத்தாலும் கற்களாலுமான தாழ்வான கூரை கொண்ட சிறிய அறைகள். மன்னர்களும் குலத்தலைவர்கள் எவருமே மேலாடை எதுவும் அணிந்திருக்கவில்லை.
உண்மையில் மிக எளிமையாக இப்படித்தான் இருந்திருக்க முடியும். பொன்னியின் செல்வனுக்கு மணியம் வரைந்த ஓவியத்தில் அவர்கள் அணிந்திருப்பதுபோல எப்போதும் அரைக்கிலோ நகைகளும் ஒருகிலோ கிரீடமும் அணிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு முதல் வருகை தந்த வெள்ளை பயணிகள் இங்குள்ள அரசர்கள் பிரபுக்களைப்பற்றி அளிக்கும் சித்திரங்கள் கோபுலு வரைந்த சித்திரங்களுடன் ஒத்துப்போகின்றன. எப்போதாவது கொலுவீற்றிருக்கும்போது பளபளக்கும் அணிகளையும் ஆடைகளையும் அணிந்திருக்கலாம். ஆனால் சாதாரணமாக அது வழக்கம் கிடையாது.
அப்படி ஒரு தமிழ்ப் படத்தை எடுத்துவிட முடியுமா? ஏனெனில் எடுக்கவிருப்பது ஒரு வணிகப்படம். அது பெரும் காட்சித்தன்மை கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் Spectacular என்பார்கள். மெய்யாகவே அன்றைய படைவீரர்கள் அணிந்திருந்த ஆடைகள் மிக எளிமையாக இருந்திருக்கலாம். எல்லாமே சிறிதாக, சாதாரணமாக இருந்திருக்கலாம். கோவில்களில் காணப்படும் செதுக்கோவியங்கள் அதையே காட்டுகின்றன. இன்று ஒரு திரைப்படத்தில் அதைக் காட்ட மாட்டோம். இன்னும் மிகைப்படுத்தியே அதை காட்ட முடியும். இல்லையென்றால் அது கேளிக்கைப்படம் அல்ல.
நாம் எடுப்பது ஆவணப்படம் அல்ல. வணிகப்படம். இந்தியா முழுக்க ரசிகர்களால் ஏற்கப்படக்கூடிய தன்மை அதற்குத் தேவை. ஒரு ஆடையோ தோற்றமோ மிக விந்தையாக இருக்குமெனில் அதை பண்பாட்டு அடையாளம் என்று இந்தியா முழுக்க கொண்டு செல்ல இயலாது. இதுவரை உலக அளவில் எடுக்கப்பட்ட எல்லாப்படங்களும் அந்த இலக்கணப்படி தான் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சோழர்களின் மீது ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தையோ வழிபாட்டு அடையாளத்தையோ இன்று சுமத்த நமக்கு உரிமை கிடையாது. அவர்கள் சைவர்கள் என்பது வெளிப்படை. ஆனால் வைணவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் நிதிக்கொடை அளித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எங்கும் எப்போதும் தங்களை சைவ வெறியர்களாகவே அவர்கள் காட்டிக்கொண்டார்கள் என்று இன்று அமர்ந்துகொண்டு முடிவு செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது? அனைத்து குடிமக்களுக்கும் பொதுவானவர்களாக ஏன் அவர்களை நாம் எண்ணிக்கொள்ளக் கூடாது?
இந்த வகையான அசட்டு தீவிரப் பிடிவாதங்களை வரலாற்றின் மீது ஏற்றுவதெல்லாம் வரலாற்றறிவோ பொதுவான நிதானமோ இல்லாத வம்புகளின் வெளிப்பாடு மட்டுமே. மதவெறியர்களுக்கோ இன வெறியர்களுக்கோ மொழி வெறியர்களுக்கோ இந்த மாதிரி தீவிரமான நிலைபாடுகள் தேவையாக இருக்கலாம். இதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
சோழர்காலத்து உடை பற்றி கேட்டீர்கள். கவச உடைகள் பற்றி படத்தின் கலைத்துறை தாராசுரம் ஆலயத்தில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் அந்த உடைகள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆலோசகர்களாக ஜெயக்குமார் பரத்வாஜ் போன்ற முறையான ஆய்வாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அன்றைய கவசங்கள் தோலால் செய்யப்பட்டவை -குறிப்பாக எருமைத்தோலால். இரும்புக்கவசங்கள் குதிரை மேல் செல்லும் போர்வீரர்கள் மட்டுமே அணியத்தக்கவை.
உலகில் எங்காயினும் கவச உடைக்கு ஒரே வடிவம் இதுதான் இருக்க முடியும். ஏனெனில் கவசங்கள் உடல் அசைவுகளுக்கு ஏற்ப தான் அமைய முடியும். நீங்கள் கிரேக்க வரலாறு சார்ந்த படங்களில் ஒரு கவச உடையைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் ஏறத்தாழ அந்த உடைதான் எங்கும் உள்ளது. ஜப்பானிய கவச உடைக்கும் கிரேக்க கவச உடைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் கிரேக்க தொடர்பு உருவாகி ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சோழர்களுடைய வரலாறு வருகிறது. ஏன் அவர்களுக்கு கிரேக்க செல்வாக்கு இருக்ககூடாது? சோழர் காலத்தில் தமிழகத்தில் மிக வலுவான சீன செல்வாக்கு இருந்தது. சோழர்காலத்துடைய சிற்பங்களில் சீன முகங்கள் உள்ளன. ஏன் சீனாவிலிருந்து அவர்களின் கவச உடையே நமக்கு வந்திருக்க கூடாது?
சோழர்களின் கொடியின் வண்ணம், வடிவம் பற்றி எவர் என்ன சொன்னாலும் எல்லாமே ஊகங்கள், கற்பனைகள்தான். நமக்கு சோழர்கள் பற்றிக் கிடைப்பவை மிகச் சுருக்கமான சில கல்வெட்டுச் செய்திகள் மட்டுமே. (மற்ற தமிழ் அரசுகள் பற்றி அவ்வளவுகூட கிடையாது) இந்திய வரலாறு குறித்தே மிகக்குறைவான செய்திகள்தான் உள்ளன. அச்செய்திகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஊகங்கள்தான் நம் வரலாறு. (ஆர்வமிருந்தால் டி.டி.கோசாம்பி இந்திய வரலாறு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையை வாசிக்கவும்)
இவற்றையெல்லாம் பேசலாம். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு மெய்யான வரலாற்றில் ஆர்வம் இருக்கிறதா, சமநிலையுடன் அதை கற்க தயாராக இருக்கிறீர்களா, குறிப்பிடப்படும் நூல்களை கவனிக்கிறீர்களா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள். ஒரு திரைப்படத்தை வைத்துக்கொண்டு சில பல வெறிகளின் அடிப்படையில் வம்புச் சழக்குகளை செய்பவர்களுடன் இவற்றையெல்லாம் பேசுவதென்பது ஒரு வெட்டிவேலை.
பத்துநாட்களுக்கொருமுறை முகநூலிலும் வாட்ஸப்பிலும் வரும் வம்புகளில் ஈடுபட்டு விவாதித்துக்கொண்டிருப்பது அறிவுச்செயல்பாடு அல்ல. உங்களுக்கு ஆர்வமுள்ள துறை என்ன என பாருங்கள். அதில் ஓர் அடிப்படை வாசிப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கே உங்களைப்பற்றி ஒரு தன்னம்பிக்கை வரும். அதன்பின் இதெல்லாம் அற்பத்தனம் என தெரியும்.
அந்த அற்பத்தனம் என்றும் நம் சூழலில் இருக்கும் .ஆனால் அதில் ஒரு இளைஞராக நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள் என்றால் சிந்திக்கும் திறனை இழப்பீர்கள். வெறும் ஒரு வம்பராகச் சென்று அமைவீர்கள். தயவு செய்து இதைப்பற்றி யோசியுங்கள். இதைப்பற்றி யோசித்தபின் ,எப்போதாவது தெளிவடைந்தபின் எனக்கு எழுதுங்கள். அதுவரையில் நமக்கிடையே எந்த உரையாடலும் நடக்கமுடியாது. உங்கள் உலகத்தில் எனக்கு எந்த இடமும் இல்லை, என் உலகத்தில் உங்களுக்கும்.
நன்றி.
ஜெ
பொன்னியின் செல்வன் நாவல் யவனராணி- சாண்டில்யன் உடையார் -பாலகுமாரன்தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா – கடிதம்
தூரன் விருது விழா, 2022 – தொகுப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இன்னொரு மனநிறைவான விழாவாக அமைந்தது தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது விழா. விஷ்ணுபுரம் விருது விழாவைப் போன்றே வாசகர் எண்ணிக்கையும் அமர்வுகளும் அமைந்து விட்டது. அடுத்த ஆண்டு முழுமையாக இரண்டு நாட்கள் தேவைப்படும் போல் தெரிந்தது.
முதல் நாள் பிரம்மானந்த சுவாமி அவர்களின் முதல் அமர்வு விழாவிற்கு துறவி ஒருவரின் ஆசிகளைப் போல் அமைந்தது. ஞானம் குறித்த கேள்விக்கு knowledge அனைத்தும் புறவயமானது என்றார். அஹம் பிரம்மாஸ்மி என்பது குறித்த பெளத்த தரப்பின் விமர்சனத்தையும் அது உண்மையில் எவ்வாறு ‘நான்’ அற்று இயல்பை மட்டுமே சுட்டுகிறது எனக் கூறியது இதுவரை நான் அறியாத கோணம். மலேசியராகத் தன்னை உணர்ந்து இந்திய-தமிழ்நாடு சார்ந்த ஆன்மிகத் தன்மைகளின் வேரை விட்டுவிடாதவராகவே தெரிந்தார் சுவாமி பிரம்மானந்தர்.
மறுநாள் காலை நடையின் போது சித்தோடு பறவைகள் சரணாலயம் சென்ற போது அங்கு ticket counterல் இருந்தவர் நாம் எதற்காக வந்திருக்கிறோம் அந்த நிகழ்ச்சி என்ன என்பது குறித்தெல்லாம் ஆர்வமாகக் கேட்டறிந்தார். ரைட்டர்ஸ் மட்டும் தான் வருவாங்களா என்றார் இல்லை யார் வேண்டுமானாலும் வரலாம் மாலை நிகழ்ச்சிக்கு அவசியம் வாங்க என்றேன். வார இறுதி நாட்கள் தொடர் விடுமுறை போன்ற காரணங்களால் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பலர் பயணம் சார்ந்த சிரமங்களையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.
இரண்டாம் நாளின் முதல் அமர்வு அ.கா. பெருமாள் அவர்களுடையது. இவரது நூலான சுசீந்திரம் கோவில் வரலாறு மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். நாட்டாரியல் கோயில் மற்றும் மரபுகளை இந்தியர்கள் ஆராயும் போது முதன்மையாக அதன் மீது கொண்ட பற்றின் காரணமாகவே அதைச் செய்கிறார்கள் என்றார். ஆய்வுகளின் அடிச்சுவட்டைக் கூட அறிந்திராத எனக்கு அவரின் பதில்கள் திகைப்பையும் இந்தத் துறை சார்ந்து கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
அடுத்த அமர்வு பேராசிரியர் லோகமாதேவி அவர்களுடையது. மிகவும் charged ஆக இருந்த அமர்வு இது தான். புறவயமான தாவரவியல் ஆய்வு மற்றும் அதன் பெயர்களை நினைவில் இருத்தி வைப்பது எந்த வகையிலும் ரசனை சார்ந்த அதன் அகவயமான தொடர்பை பாதிப்பதில்லை என்றார். ஒரு மாத காலம் வெளியூர் சென்று திரும்பிய பின் பிறரால் பாதுகாக்கப்பட்டும் தன் கவனம் இன்றி வாடிய செடியைக் குறித்து கூறியது உணர்வுப்பூர்வமாக தாவரங்களுடன் நமக்கு உள்ள உறவை சுட்டியது.
நான் பொதுவாக செடி கொடிகளைப் பார்த்தால் என்னையும் அறியாமல் சிறிது நேரம் அவற்றை தடவிக் கொடுப்பேன். ஆனால் ஒரு நாயின் தலையை தடவுவதில் எனக்கு பெரிய ஆர்வம் ஏற்பட்டதில்லை. பல்வேறு வகையான உயிர்களுடன் நமக்குள்ள தொடர்பு மிகவும் பிரமிப்பானது. தாவரங்கள் நமக்கு உணவாகவும் ஊட்டமாகவும் கூட மாறுவதால் அதனுடனான நமது அன்றாட அணுக்கத்தின் அடிப்படையிலேயே பல கேள்விகள் அமைந்தன.
இந்த அமர்வுகள் அனைத்தும் இலக்கியம் எவ்வாறு அவர்கள் சார்ந்த துறையை செழுமையுறச் செய்கிறது என்பதற்கான அத்தாட்சி. லோகமாதேவியின் தர்ப்பை ஆன்மிகம் தொன்மம் நவீன அறிவியல் உள்ளிட்ட பல தளங்களை ஊடுருவிச் செல்லும் சிறப்பான கட்டுரை. Hallucinogens குறித்த ஒரு ‘ஹை என்ட்(‘high end) குறிப்புடன் 15 நிமிடங்கள் கூடுதலாக நீடித்த அந்த பெரும் அமர்வு முடிவுக்கு வந்தது.
உணவு இடைவேளைக்குப் பின் மகுடீசுரன் அவர்களின் அமர்வு அந்தப் பகுதியின் தனித் தன்மைகளை தொட்டுச் சென்றது. பிறகு சிறப்பு விருந்தினர் கரசூர் பத்மபாரதி அவர்களின் அமர்வு. அமர்ந்து பேசுவதில் தனக்குள்ள தயக்கத்தைக் கூறி நின்றவாறே பேசினார். நாம் அன்றாடம் பார்ப்பவர்கள் ஆனால் அழுக்கானவர்கள் என விலகிப் போகும் ஒரு சமூகம் குறித்து அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்தும் கூறினார். அது ஒரு பெரும் ஆய்வாக மலர்ந்து நரிக் குறவர்கள் பற்றிய தரமான ஒரே நூலாக தமிழில் நமக்கு கிடைத்திருக்கும் நூல் அவரின் கள ஆய்வு.
மாலை நேர நிகழ்ச்சியில் திரு விஜயபாரதி, திருமலை, சந்தோஷ் மற்றும் மதுசூதன் ஆகியோர் தமிழ் விக்கி பணிக்காக கெளரவிக்கப்பட்டது நெகிழ்வூட்டக் கூடியதாக இருந்தது. ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் உரையில் இலக்கியலாளர்கள், நரிக்குறவர் போன்ற ஒரு சமூகத்தினரைக் குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் அந்த வேலையை முதலில் செய்தது ஆய்வாளர் பத்மபாரதி தான் என்றார்.
தமிழ் விக்கியின் இன்றைய தேவை அது உருவான விதம் குறித்து விளக்கிய போது இன்று குறை கூறுவோருக்குக் கூட கலை இலக்கியம் சார்ந்த பயன்பாட்டில் விக்கி தவிர்க்க முடியாத இடம் பிடிக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
கரசூர் பத்மபாரதியின் உரை மிக நேரடியானதாக நீண்ட காலம் பழகிய ஒரு தோழரின் உரை போல் அமைந்திருந்தது. கணமான விருது உலோகத்தை கையில் தூக்கிய போது சற்று கெதக் என்று தோன்றியது. தன் விருது பணத்தை இனிமேலான ஆய்வுக்கே செலவிடப் போவதாகக் கூறியது நெகிழ்வுறச் செய்வதாக இருந்தது. விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை சோடை போனதில்லை. பெரியசாமி தூரன் பெயரில் வழங்கப்படும் இந்த விருதும் மிகச் சரியான நபர் ஒருவரின் கைகளுக்கே சென்று சேர்ந்திருப்பது மிகவும் நிறைவை அளித்தது.
நாளை மற்றொரு நாளே என்பது இருத்தலியல் சார்ந்த சலிப்பு ஒவ்வொரு நாளும் கணமும் புதியது என்பது பின்நவீனத்துவ இருத்தலியல் முடிபு. ஆனால் செயலாக வெளிப்படாத எதுவும் மதிப்பற்றது தான் அத்தகைய செயலூக்கம் கொண்ட நண்பர்கள் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் சென்னை செந்தில் அவர்கள் மற்றும் இன்முகம் மாறா முகத்துடன் வந்தோரை கவனித்துக் கொண்ட அழகிய மணவாளன் ஆகியோருக்கு நன்றிகள்.
அரசுகள் சில கோடி ரூபாய் செலவழித்தாலும் இத்தகைய உளப்பூர்வமான நிகழ்ச்சிகளை நடத்துவது சாத்தியமல்ல. சாத்தியமற்றதை சாத்தியமாக்குவது ஜெவை ஊக்கமாகக் கொண்டு ஒருமுனைப்பட்ட நோக்குடன் மிக எதிர்மறையான நம் சூழலிலும் நிகழ்த்தப்படும் இத்தகைய நிகழ்வுகள்.
மனதில் இருந்து அகலா விழா நினைவுகளுடன்
சிவக்குமார் ஹரி
சென்னை
கமல், கடிதம்
இனிய ஜெயம்
கமல் உரையாடல் பதிவு கண்டேன். அது சார்ந்த பொது வெளி சமூக ஊடக அரட்டைகளை முன்னெடுத்தவர்கள் மூவர். முதல் வகை உலக ஜினிமா dvd புரட்சி வழியே உருவாகி, நாயகன் படம் காட் பாதர் காப்பி மச்சி என்று துவங்கி அவ்வாறே இன்றுவரை திரிந்துகொண்டிருக்கும் வகையறா, இரண்டாம் வகை இலக்கியம் சினிமா இசை கிரிக்கெட் அரசியல் எல்லாம் தனக்கு புரிந்த வகையில் முகநூல் திண்ணையில் பேசிக்கொண்டிருக்கும் ஐம்பது அறுபது தொட்ட பழைய நினைப்புடா பேராண்டி கோஷ்டி, மூன்றாம் வகை கமல் இன் அரசியல் பிரவேசம் மற்றும் ஜெயமோகன் கருத்துக்களால் சீண்டப்பட்டவர்கள்.
இன்றைய சூழலில் இந்த மூன்றுமே பொருட்படுத்தத் தக்க வகை அல்ல என்றாலும், இந்த 2022 இல் 25 வயது போல நிற்கும் கலை இலக்கிய ஆர்வம் கொண்ட இளம் தலைமுறையில் உள்ள ஒரு சிலரை மேற்கொண்ட மூன்று வகை உளரல்களும் சற்றே தடம் மாற்றக் கூடும். அந்த சிலருக்காக சிலவற்றை மீண்டும் மீண்டும் பேசியாக வேண்டும்.
முதலாவதாக கமலின் அரசியல் ஈடுபாடு. அது நேற்று பெய்த dvd யால் இன்று முளைத்த உலக ஜினிமா ரசிகன் போன்றதல்ல. அவர் முன்னர் மையம் என்று ஒரு பத்திரிகை நடத்தி இருக்கிறார். அதில் கமல் எழுதிய சமூக அரசியல் பதிவுகள் எல்லாமே மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. இன்று அவை வாசிக்க கிடைப்பதில்லை. கிடைத்தால் அன்றைய கமலின் தீவிரம் திகைக்க வைக்கும் ஒன்றாக இருப்பதை காண முடியும். அன்றுவஅங்கே துவங்கிய கமல் தான், நேற்று அரசியலின் பொருட்டு கடலூர் ரசாயான கழிவுகளை வந்து நேரடியாக பார்ப்பவராக இருக்கிறாரே அன்றி இன்றைய பம்மாத்து அரசியல்வாதியர்களில் ஒருவராக அல்ல.
அதே போல சினிமாவும். இன்றுவரை தமிழில் கலைப் பட ஓடையின் வறட்சிக்கு அங்கே இங்கே சுற்றி கமலை கை காட்டி விடுபவர்கள் அறியாத ஒன்று, வங்கம் போலவோ, கேரளம் போலவோ ஒரு ‘தீவு கலாச்சார‘ சூழலில் நிற்கும் நிலம் அல்ல தமிழ் நிலம். அங்குள்ள பண்பாட்டு போதம், பொது கல்வி இவற்றின் ஆழம் தமிழ் நிலம் போல மேம்போக்கான ஒன்று அல்ல. வரலாறு நெடுக வந்து சங்கமித்துக்கொண்டே இருக்கும் பல்வேறு மொழி பேசும் வண்ணமயமான குமுகங்களின் தொகையால் நிறைந்த தமிழ் நிலத்தின் கலாச்சார சிக்கல்களின் ஒரு பகுதியே தமிழில் கலை சினிமாவின் வறுமை.
இதில் கமல் மீதான எதிர்பார்ப்பும் விமர்சனமும் பதினாறு வயதினிலே, அவள் அப்படித்தான் போன்ற படங்களில் அவரது பங்களிப்பு வழியே உருவானது. அந்த பங்களிப்புகளை அவர் அளித்ததற்கு, அவ்விதம் அவரை வடிவமைத்ததற்கு மலையாள திரை உலகுக்கு பெரும் பங்கு உண்டு. இந்தப் பாதையில் உலகம் நோக்கிய நல்ல தமிழ் சினிமா என்று வருகையில் அதற்கு செல்ல, கமல் முன்னால் இருந்தது இரண்டு பாதை ஒன்று ஐரோபிய சினிமா உடையது மற்றது ஹாலிவுட் உடையது. இந்த இரண்டு பாதையில் எதில் பயணிப்பது என்ற கமலின் ஊசலாட்டம் அவரது ராஜபார்வை படத்தின் அழகியலில் துலக்கமாகவே தெரியும். அந்த குழப்பத்தை கமல் மூன்றாம் பிறையின் வெற்றிக்குப் பிறகே கடந்தார். நல்ல தமிழ் படம் வழியே ரூபாய்க்கு பதிலாக டாலரில் சம்பாதிக்க முடிவு செய்து அதற்கு தன்னை தகுதி படுத்திக் கொண்டார். அன்றைய விக்ரம் வணிக ரீதியாக அப்படியே உலகு தழுவிய அன்றைய ஜேம்ஸ் பாண்ட் கதைதான். நாயகன் படம் அன்றைய அமெரிக்க நல்ல படம் ஜானரில் வந்த காட் பாதர் போன்றது. நவீன தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச திரைப்படம் பேசும் படம் சார்லி சாப்ளினின் நல்ல படம் வகையிலானது. இதன் தொடர்ச்சியே தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய படங்களில் ஒன்றான ஹே ராம் வரை கமல் வசம் தொடர்வது.
கமல் தேர்வு செய்த இந்த பாதைக்கான அனைத்தையும் முன்னர் எவரும் செய்து வைக்க வில்லை. அனைத்தையும் கமலேதான் செய்து கொள்ள வேண்டும். அந்த முயற்சிகளைதான் புரிந்து கொள்ளாமல் கமலின் டாமினேஷன் என்று அதை வகைப்படுத்துகிறோம். அவரது இந்த பாதைக்கு வாகான எழுத்தாளர் சுஜாதா முதல் பெரும்பாலானோரை கமல் தயங்காமல் சென்று கண்டு அவர்களை சினிமாவுக்கு கொண்டு வந்தது வரலாறு.
இலக்கியம் என்று வருகையில். சுரா முதல் அமி தொட்டு நீல பத்மநாபன் முதல் கிரா வரை அவர்களின் குறிப்பிட்ட ஆக்கங்களை வாசித்து, நடிகராக அன்றி அவர்களின் வாசகன் என்றே அவர்களை சென்று சந்தித்திருக்கிறார் கமல். நானறிந்த கிரா உட்பட பலருக்கு புரவலர் என நின்று பொருளாதார பங்களிப்பும் செய்திருக்கிறார். பழைய இலக்கிய இதழ் ஒன்றில் அன்றைய இலக்கிய கூட்டம் ஒன்றில் பார்வையாளர் வரிசையில் கமல் அமர்ந்திருக்கிறார். சுப மங்களா தொகுப்பில் பல இலக்கிய நிகழ்வுகளுக்கு கமல் முன் நின்றிருப்பது ஆவணம் கண்டிருக்கிறது. கமல் தனக்கான பெரிய விழா ஒன்றை, அதில் நாயகனாக எழுத்தாளர் ஜெயகாந்தனை அமர வைத்தார். அன்று அந்த மேடையில் ஜெயகாந்தன் மட்டுமே இருந்தார். கமல் உட்பட பிற அனைவரும் கீழே நின்றிருந்தனர். (அன்றைய விழாவில் நிகழ்ந்த உருக்கமான உணர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று அறம் வரிசை கதைகளில் வர வேண்டிய அளவு தீவிரம் கொண்டது).
மொழி அழகும் வடிவ அழகும் கொண்ட, ஜெயகாந்தன் 33 சதம், ஞானக்கூத்தன் 33 சதம் கமல் 33 சதம் என்று அமைந்த சில நல்ல கவிதைகளை கமல் எழுதி இருக்கிறார். அதே சமயம் கலைஞனாக தான் யார் என்றும் தனது களம் எது என்றும் தெளிந்த விவேகம் கொண்டவர். தமிழில் என்றேனும் திரைக்கதைகள் தனித்த இலக்கிய வகைமை என வளருமேயானால், அவற்றில் சிறந்த முன்னோடி என்று எழுந்து வரும் முதல் ஐந்து பிரதிகளில் முதல் இரண்டு இடத்தை கமலின் ஹே ராம், மற்றும் தேவர் மகன் திரைக்கதை புத்தகங்கள் பிடிக்கும்.
70 கள் துவங்கி இந்த 2020 வரை கடந்த அரை நூற்றாண்டாக கமல் இவ்விதம்தான் இருக்கிறார். மூன்று நிமிட போத்திஸ் விளம்பரத்தில் நடிக்க கமல் வாங்கிய சம்பளம் ஒரு கோடி என்று கொள்வோம். முடக்கம் முடிந்து புத்தக சந்தை மீண்டும் துவங்கியபோது, அதன் புத்துயிர்ப்புக்கு நிகழ்ந்த பல பங்களிப்புகளில் கமல் உடையதும் ஒன்று. தினம் ஒன்று என மூன்று நிமிட காணொளி வழியே 10 நூல்களை தமிழ் பொது மனதுக்கு அறிமுகம் செய்தார். பிக் பாஸ் வழியே 20 நூல்கள். ஆக முப்பது கோடி பெருமானம் கொண்ட ஒன்றை, தனது புகழ் வட்டத்தின் வழியே, இலக்கியத்தின் பொருட்டு கமல் நல்கி இருக்கிறார். அந்த புரவலருக்கு மேற் சொன்ன மூன்று வகையினர் பதிலுக்கு செய்திருப்பது என்ன? விமர்சனம் எனும் பெயரில் தங்கள் அற்பதனங்களை அவர் மேல் கொண்டு சூட்டியதுதான். கமல் இப்படி செய்திருக்கிறார் என்பது எப்படி அவரது வரலாறோ, அதே அளவு நாம் அவர் மேல் சென்று நாம் சூட்டும் அற்பத்தனங்கள் எதுவோ அதுவே நமது வரலாறு. கலை இலக்கிய தாகம் கொண்ட இளம் மனங்கள் இத்தகு அற்பத்தனங்களில் விழாதிருக்கட்டும். அவர்கள் அறியட்டும். கமல் நமது பெருமிதம்.
கடலூர் சீனு
Stories of the True- ஒரு பேட்டி
Over 300 books, 2 rebirths later, iconic Tamil author Jeyamohan says translations are strange
ஈ.வெ.ராவும் மலாயாவும்
சிங்கப்பூர் இலக்கியம் பற்றி எழுதும்போது ஒன்றை கவனித்துப் பதிவுசெய்திருந்தேன். மலாயா – சிங்கப்பூர்ச் சூழலில் திராவிட இயக்கம் இலக்கிய உருவாக்கத்தில் மிக ஆழமான பங்களிப்பை ஆற்றியிருக்கிறது – குறிப்பாக ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் தொடர்பு. தமிழகத்தில் ஏற்கனவே நவீன இலக்கியமும் முற்போக்கு இலக்கியமும் உருவாகியிருந்த சூழலில் திராவிட இயக்கத்தின் இலக்கியப் பங்களிப்பு பெரியதல்ல. மலாயாவில் அது ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது
எழுத்தாளனின் பிம்பம், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
இன்று உங்கள் தளத்தில் மனம் சென்ற போக்கில் வாசித்துக்கொண்டிருந்தேன். எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும் பதிவின் கடைசி வரி [ஓர் எழுத்தாளனை நேரில் சந்திக்கும்போது உங்கள் மனதில் உள்ள சித்திரம் மாறவில்லை என்றால் அவன் எழுத்தாளன் அல்ல, நடிகன்] இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது. இந்த வரியை என்னால் உணரமுடிகிறது. உங்களை முதலில் பார்த்தது சிங்கப்பூரில் 2016ம் ஆண்டு. அந்தவார ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் சந்திக்கலாமென்று எழுதியிருந்தீர்கள். அன்று உங்களை இன்றளவு அணுக்கமாய் உணர்ந்ததில்லை. நான் வாசகர்களும் சந்திக்க வரலாமாவென்று கேட்டு எழுதினேன். வரலாமென்று சொல்லி முகவரி அனுப்புனீர்கள்.
புது மனிதரை அவர் இல்லத்தில் ஒரு கூட்டத்தின் மத்தியில் சந்திக்கப்போகும் தயக்கம் மிகுந்திருந்தது. அறிமுகம் செய்துகொள்ளவில்லை. உங்கள் பேச்சை மட்டுமே மிகுவிருப்போடு கேட்டுக்கொண்டிருந்தேன். 2019 ஈரோடு விவாதப் பட்டறைக்கு காலையில் வந்தேன். நீங்கள் தரை தளத்தில் வந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் அறிமுகம் செய்துகொள்ளவில்லை. சற்று தொலைவிலிருந்து உங்களையே கவனித்துக் கொண்டிருந்தேன். மனதில் எழுந்த எண்ணம் ஏன் மனம் அமைதி கொண்டிருக்கிறது? ஏன் எழுத்தில் பிரம்மாண்ட ஜெயமோகன் நேரில் வெகு சாதாரணமாக தோன்றுகிறார். வீட்டிற்கு வந்து தங்கள் நூலை அல்லது வலைதளத்தை வாசிக்கும்போது மீண்டும் பழைய ஜெயமோகன் வந்துவிடுவார்.
சென்ற வருட விஷ்ணுபுர விருது விழாவில் உங்களை மீண்டும் காணும் போது அதே சாதாரண ஜெயமோகன் எண்ணம். பின்னாடி அமர்ந்திருந்த நீங்கள் சிலசமயம் முன்னாள் சென்று அமர்ந்தீர்கள். ஒரு மெல்லிய பதட்டம் உங்கள் முகத்தில் தெரிந்தது. மீண்டும் பின்னால் சென்றீர்கள். இவரா நான் எண்ணிய ஜெயமோகன் என்ற எண்ணம் வந்தது. விழாவின் இறுதியில் உங்கள் உரையை கேட்கும் போதும், ஆவணப்படத்தில் உங்கள் பேச்சை கேட்கும்போதும் நானறிந்த ஜெயமோகன் தென்பட்டார். இந்தக் கட்டுரை என் கேள்விக்கு விடையாய் அமைந்தது.
இதுபோன்று ஒரு சம்பவம் எனக்கு நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் நுழைவுத் தேர்வுக்கு ஒரு பயிற்சி கூடத்தில் தங்கிப் படிக்கும்போது சிவா அறிமுகமானான். அவன் என் மீது பிரமிப்புகொண்டிருந்ததை பின்னால் தெளிவாக உணர்ந்தேன். அவனுக்கு கல்விமேல் பெரும்விருப்பம். நான் நன்றாக படிக்கக்கூடிய மாணவன். அது அவனுக்குள் பிரமிப்பை உண்டாக்கி இருக்கலாம். கல்லூரியில் சேரும் நாளில் தற்செயலாக அங்கே அவனைப் பார்த்தேன். அவனும் நான் தேர்ந்தெடுத்த பொறியியல் பிரிவையே தேர்ந்தெடுத்திருந்தான்.
நான்கு வருடம் வகுப்பில் அவனருகிலே கழிந்தது. கடைசி ஆண்டு அவன் வீட்டிற்கு சென்றேன். அன்று தொடுதிரை கைபேசிகள் வெகுவாக புழங்கவில்லை. அவன் தம்பி தன் அண்ணண் சொன்னவற்றையெல்லாம் கொண்டு என்னை நெடிய உடல் கொண்டவனென்று கற்பனை செய்துகொண்டான். நேரில் என்னை கண்டபின் ஏமாற்றமடைந்தான். இரு நாட்கள் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். மீண்டும் பலவருடங்கள் கழித்து அவன் தம்பியை கண்டேன். அதே பிரமிப்போடு பேசினான். பிரமிப்பு உண்மை. அதற்கு அவன் கொடுத்த வடிவம் பொருத்தமானதல்ல.
எழுத்தாள பிரமிப்பு உண்மை. அதற்கு வாசகன் கொடுக்கும் வடிவம் உண்மையில் பொருந்தாமல் போகலாம். ஆனால் பிரமிப்பு உண்மை.
அன்புடன்
மோகன் நடராஜ்
August 15, 2022
தூரன் விருது விழா, 2022
தூரன் விருது விழா 2022 – தொகுப்பு
மலையில் இருந்து நேராக விழாவுக்கு வந்தேன். 8 ஆகஸ்ட் 2022 முதல் 13 ஆகஸ்ட் 2022 வரை அந்தியூரில் மலையில் என்னுடன் 16 பேர் தங்கியிருந்தனர். ஆறுநாட்கள் இடைவிடாத இலக்கிய, தத்துவ, வரலாற்று விவாதம். நான் எண்ணியிருந்தது வெறும் உடன்தங்குதல். என் வேலையை செய்யவேண்டும். காலை மாலை நடையின்போது சிலரை உடன் அழைத்துச்செல்லவேண்டும் என்பது என் திட்டம். ஆனால் நடைமுறையில் காலை ஆறரைக்குக் கண் விழிக்கையிலேயே ஆர்வம் மிக்க கும்பல் குளித்து ஆடையணிந்து காத்திருந்தது. இரவு பத்துமணிக்குத்தான் பேச்சு ஓய்ந்தது. நான் என்னை ஒரு சில்வண்டு போல ஓசையிட்டபடியே இருப்பவனாக உணர்ந்தேன்.
13 மதியம் ஈரோடு வந்துவிட்டேன். முதல்நாள் அரங்குக்கு முன் ஒரு தூக்கம் போட வாய்த்தது. அதன்பின் இரண்டு இரவுகளும் இரவு ஒரு மணிக்கு தூங்கி காலை ஆறுமணிக்கு எழுந்தேன்.
13ம்ம தேதி மாலை முதல் அரங்கு மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் மலேசிய இலக்கிய சூழலையும் போராட்ட சூழலையும் தமிழ் இலக்கிய சூழல் எவ்வண்ணம் செல்வாக்கு செலுத்தி முன்நடத்துகிறது என்று சொன்னார். கரசூர் பத்மபாரதி தன் ஆய்வுகளினூடாக நீதியின் குரலை அடித்தளம் வரை எடுத்து செல்வதை பாராட்டினார்.
14 காலையில் அருகே வெள்ளோடு பறவைச் சரணாலயத்துக்கு ஒரு நடை சென்று வந்தோம். காலை 10 மணிக்கு சரியாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. முதல் அரங்கு அ.கா.பெருமாள் அவர்களுடன். நாட்டாரியல் சார்ந்து கேள்விகள் எழுந்து வந்தபடியே இருந்தன. பொதுவாக நாட்டாரியல் நாம் எண்ணுவதை விட மிகுதியாக நம் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டுள்ளது. குலதெய்வங்கள், அன்றாட ஆசாரங்கள், நம்பிக்கைகள் என எல்லாமே அதன் ஆய்வெல்லைக்குள் வருகின்றன.
அ.கா.பெருமாள் இறுதியாக நாட்டார் விளையாட்டுக்கள், நாட்டார் தெய்வங்கள், நாட்டார் நம்பிக்கைகள் சார்ந்து இன்னும் பதிவுசெய்ய எவ்வளவு எஞ்சியுள்ளது என்று சொல்லி முடித்தார். நாட்டாரியலில் கொள்கையுருவாக்கம் செய்ய நீண்ட ஆய்வுப்பின்னணி தேவை. ஆனால் தரவுகளைப் பதிவுசெய்ய கொஞ்சம் முயற்சியும் நேர்மையும் மட்டும் இருந்தாலே போதுமானது. அது ஒரு வேண்டுகோள். நாட்டாரியல் பதிவுகளை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைச்சூழல் சார்ந்து பதிவுசெய்தாகவேண்டும். அப்போதுதான் அவை முழுமையாகப் பதிவாகும். இந்த காலகட்டம் கடந்தால் நாட்டாரியல் பெரும்பாலும் அழிந்துவிட்டிருக்க வாய்ப்புண்டு.
பேராசிரியர் லோகமாதேவியின் அரங்கு முற்றிலும் புதிய ஓர் உலகுக்குள் செல்வதற்கான திறப்பு. தாவரவியலில் புகழ்பெற்ற ஆய்வாளரான லோகமாதேவி வெறும் கல்வியாளர் அல்ல. தாவர உலகை பண்பாட்டுடனும் அன்றாடத்துடனும் இணைத்துப் புரிந்துகொண்டவர். தன் அறிதலை விரிவாக முன்வைக்கத் தெரிந்தவர். சுவாரசியமாக உரையாட அவர் எதையும் செய்யவில்லை. ஆனால் செய்திகள், கருத்துக்கள் ஆகியவையே ஒரு கணம்கூட உளம்விலக முடியாத ஈர்ப்பை அளித்தன. ஒவ்வொருவருக்கும் கேட்க ஏதோ ஒன்று இருந்தது. ‘தாவரக்குருடு’ என்னும் கருத்து பற்றிச் சொன்னார். நம் சூழலில் உள்ள தாவரங்களைப் பற்றி ஏதும் அறியாமல் இருக்கும் நிலை அது.
மதியத்துக்கு மேல் பேராசிரியர் கு.மகுடீஸ்வரன் கொங்கு வரலாற்றாய்வில் முப்பதாண்டுகளாக அறியப்படும் ஆளுமை. கொங்கு வரலாற்றின் முதன்மையான ஆளுமைகளைப் பற்றிச் சொன்னார். வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் போன்ற தொடக்ககாலப் பதிப்பாசிரியர்கள் எவ்வண்ணம் அறியப்படாமலாயினர், அவரிடமிருந்து சுவடிகள் பெற்றுக்கொண்ட உ.வே.சாமிநாதையர் போன்றவர்கள் எப்படி அவர்களை மறைக்கும் திருவுருக்களாக ஆனார்கள் என்று எந்த உணர்ச்சிக்கலவையும் இல்லாமல் தகவல்களாகவே சொல்லிக்கொண்டு சென்றார். கொங்கு வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுப் பயணமாக அமைந்த உரை.
இறுதி அமர்வு கரசூர் பத்மபாரதி. அவருக்கு எந்த மேடைத்தயக்கமும் இல்லை. ஆசிரியை, மேடைப்பேச்சாளர், கூடவே சிறுமிக்குரிய துடிப்பும் உற்சாகமும் கொண்ட ஆளுமை. தன் ஆய்வுகளுக்கான பின்னணி, அவற்றை உருவாக்க எடுத்துக்கொண்ட உழைப்பு என வேடிக்கையும் செய்திகளுமாகச் சொல்லிக்கொண்டே சென்றார். கரசூர் பத்மபாரதியின் ஆய்வுத்திறனின் அடிப்படை அவர் மிக இயல்பாக மனிதர்களுடன் கலந்துரையாடத் தொடங்குவது என்று தோன்றியது. நரிக்குறவர்கள், திருநங்கையர் அனைவருமே அவருக்கு அக்காக்கள் அல்லது அவரை அக்கா என அழைப்பவர்கள் என்பது அவரது பேச்சினூடாக வெளிவந்துகொண்டிருந்தது.
அரங்குகள் அனைத்திலும் நூற்றைம்பதுபேருக்குமேல் கலந்துகொண்டனர். ஒவ்வொரு அரங்குக்கு முன்னரும் நண்பர் சோமசுந்தரம் பெரியசாமித் தூரனின் கீர்த்தனை ஒன்றை பாடினார். அது தூரனின் இருப்பை அரங்கில் உணரச்செய்தது. தூரனின் பேரன் செல்வமுத்துக்குமார் வந்து விழாவில் கலந்துகொண்டார். ஆரூரன், தாமரைக்கண்ணன், ஆனந்த்குமார், கடலூர் சீனு ஆகியோர் தொகுத்துரைத்தனர்.
மாலையில் விழா. சுவாமி பிரம்மானந்தர், அ.கா.பெருமாள், கு.மகுடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு கரசூர் பத்மபாரதியை வாழ்த்தினர். நிறைவான சுருக்கமான உரைகள். இரண்டு மணிநேரத்தில் விழா முடிவுற்றது. எங்கள் எல்லா விழாக்களையும் போல, பார்வையாளர்களை கருத்தில்கொண்ட விழா. அவர்களுக்கு கற்பிப்பதும் நிறைவூட்டுவதுமே நோக்கமாகக் கொண்ட நிகழ்வு.
இந்த விழாவை ஒருங்கிணைத்தவர்கள் ஈரோட்டு நண்பர்கள். நான் வழக்கம்போல வந்து கலந்துகொண்டதுடன் சரி. ஈரோடு கிருஷ்ணன், பிரபு, மணவாளன், பாரி, சிவா, சந்திரசேகரன் ஆகியோரின் பலநாள் உழைப்பில் உருவான விழா இது. வழக்கறிஞர் செந்தில் இலவசமாக அளித்த கல்யாணமண்டபத்தில் விழா நடைபெற்றது. இருநண்பர்கள் அளித்த நிதிக்கொடையில் நடைபெற்ற இவ்விழா பார்ப்பவர்களுக்கு மிக பெரிய ஒரு நிகழ்வு. இருநூறுபேர் ஆனால் இன்னொரு அமைப்பு நடத்தினால் ஆகும் செலவில் மூன்றிலொரு பங்கு செலவில் நடைபெற்ற விழா. எங்கள் கொள்கையே மிகக்குறைவான செலவில் நிகழ்ச்சிகளை நடத்துவதுதான்.
விழாவுக்கு பின் இரவில் நீண்டநேரம் ஒரு வெடிச்சிரிப்பு அரங்கு வழக்கம்போல. அது எங்கள் வெற்றிக்கொண்டாட்டமும் கூட. கூடவே அடுத்த நிகழ்வு பற்றிய ஆலோசனையும். கிருஷ்ணன் ஒரு கேள்வி கேட்டார். தொடர்ச்சியாக ஏராளமான நிகழ்வுகளை நடத்துகிறோமா? மதுரையில் அபி நிகழ்வு முடித்ததுமே இவ்விழா. இதோ இன்னொரு விழா வரவிருக்கிறது. நம் நண்பர்கள் விழாக்களுக்கு வந்து சலித்துப்போய் வராமலாகிவிடுவார்களா? இருக்கலாம். ஆனால் செய்யவேண்டியதைச் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான் நம் வேலை. நாம் வாசகர்களை நம்புவோம். இதுவரை அந்நம்பிக்கை நம்மை கைவிட்டதில்லை.
ஐசக் ஹென்றி ஹக்கர்
ஐசக் ஹென்றி ஹக்கர், தமிழகத்தின் கல்வி, பொருளியல், சமூக வளர்ச்சிக்கு உழைத்த கிறிஸ்தவ மதப்பணியாளர்களின் பங்களிப்பை பதிவுசெய்யும் முயற்சியின் ஒரு கட்டுரை. ஆனால் நினைத்த அளவுக்கு இப்பணி முன்னகரவில்லை. எழுதுவதாகச் சொல்லி முன்வந்த கிறிஸ்தவர்கள் பலர் அமைதியாயினர். ஆகவே நாங்களே தேடித் தேடி பதிவுசெய்துகொண்டிருக்கிறோம்.
ஐசக் ஹென்றி ஹக்கர்
ஐசக் ஹென்றி ஹக்கர் – தமிழ் விக்கி
காடோடி – வாசிப்பு
கதை சொல்லியின் கண்கள் வழியாக நாம் காட்டைக் காண்கிறோம். இன்றளவில் நாம் காடு/மலை பற்றி நினைப்பதெல்லாம் ஒரு நுகர்வு சார்ந்தே. ஒரு அழகான மலையயையோ நீர் வீழிச்சியையோ கண்டால், நாம் அதை ரசிக்கிறோம். அந்த இயற்கை ரசனைக்கு அப்பாற்பட்டு, அதற்கும் ஒரு உயிர் உண்டென்றும், உணர்வுண்டென்றும் அதனுடன் நாம் உரையாட முடியும் என்றும் , அதனுடன் நாம் கை கோர்த்து சுற்றித் திரிய முடியும் என்றும் உணர்வதே நாம் அதனை உணரும் முதல் படி.
காடோடி ஒரு வாசிப்புJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


