அன்றாட வம்புகளும் அறிவுச்சூழலும்

பர்ட்டன் ஸ்டெயின் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி குடவாயில் பாலசுப்ரமணியம் 

Dear Jeyamohan Sir,

PS1 டீஸர் பார்த்து எழுந்த கேள்விகளை பார்த்திருப்பீர்கள். இந்த திரைப்படம் அந்த காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச்சென்று வரலாற்றை காட்டும் என நீங்களும் கூறினீர்கள்.

அப்படி இருக்க ஏன் சைவத்தை போற்றியவர்கள் நெற்றியில் திருநீர் பட்டை இல்லை? ஏன் போர் உடை கிரேக்க வீர்ர்கள் சாயலில் உள்ளது? ஆதித்த கரிகாலன் கொடியின் நிறம் சிவப்புதானா? சோழ தேசக் கொடி கூட சற்று வேறு மாதரி உள்ளது?

இதுபோல எழுந்த மற்ற கேள்விகளையும் சேர்த்து ஒரு கட்டுரை வெளியிட்டால் தெளிவுபெற உதவியாக இருக்கும்.

உங்கள் பங்களிப்பு உள்ளதனாலேயே இப்படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

நன்றி!

Best Regards,

Karthick S

அன்புள்ள கார்த்திக்,

உங்கள் கடிதத்திலிருந்து நீங்கள் இளைஞர் என்று கண்டு கொண்டதனால் இக்கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் இக்கடிதத்தை இன்றிருக்கும் நிலையிலிருந்து வயதும், சற்று அறிவு மலர்வும் கூடிய பத்தாண்டுகளுக்குப்பின் இருக்கும் நீங்களாக இருந்து மீண்டும் படித்துப்பாருங்கள். இதிலிருக்கும் ஒருவகையான சிறுமை உங்கள் பார்வைக்கு படவில்லையா?

நீங்கள் இந்த விவாதத்தை முகநூலிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இவற்றை முகநூலில் நிகழ்த்துபவர்கள் யார்? அவர்கள் அறிஞர்களோ, ஆய்வாளர்களோ அறிவுப்புலத்தில் ஏதேனும் பங்கு உடையவர்களோ அல்ல. பெரும்பாலானவர்கள் எளிய வாழ்க்கையில் எங்கோ பொருத்திக்கொண்டு அன்றாடத்தில் திரும்பத் திரும்ப உழன்றுகொண்டிருப்பவர்கள். நடுத்தர, கீழ்நடுத்தர வாழ்க்கையின் சலிப்புக்குள் சிக்கிக்கொண்டவர்கள்.

அவர்களுடைய அந்தரங்க பகற்கனவுகளில் அவர்கள் தங்களை முக்கியமானவர்களாக, தலைமைத் தன்மை கொண்டவர்களாக, வரலாற்றில் இடம்பெறுபவர்களாக எல்லாம் புனைந்துகொள்கிறார்கள். தங்களை நாயகர்களாக எண்ணி ஆணவநிறைவு அடைகிறார்கள். அதன்விளைவாக ஒருவகையான இருநிலைத் தன்மை அவர்களுக்கு உருவாகிறது. தங்கள் சிறுமையை தாங்களே பார்க்கும் நிலை அது. அதை மெல்ல மெல்ல ஒரு கசப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஏதேனும் ஒருவகையில் அறியப்பட்ட அனைவர் மேலும் கசப்பையும் காழ்ப்பையும் உமிழ்வதன் வழியாக அவர்களின் அகத்தில் சுட்டெரிக்கும் புண்பட்ட ஆணவம் சற்றே தணிகிறது. அதையே ஒரு வம்புப் பேச்சாக நிகழ்த்தும்போது அவர்களின் அன்றாடத்தின் சலிப்பும் மறைகிறது. பொது வம்பு என்பதன் உளநிலை இதுதான்.

அன்றன்று பேசப்படும் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் தங்களுக்குத் தெரிந்த சிறு துளிகளை வைத்துக்கொண்டு, புகழ்பெற்ற அனைத்து ஆளுமைகளையும் இழிவு செய்து பேசுவதும் வசைபாடுவதும் கொக்கரிப்பதும் ஏளனம் செய்வதும் இவர்களின் இயல்பு. இவர்களில் ஒருவராக நீங்கள் எதிர்காலத்தில் ஆக விரும்புகிறீர்களா? இவர்களிடமிருந்து உங்கள் வரலாற்றறிவையும் இலக்கிய அறிவையும் உலகியல் அறிவையும் பெற விரும்புகிறீர்களா? ஆம் எனில் நாம் மேற்கொண்டு விவாதிக்கவோ பேசவோ எதுவுமில்லை. அல்ல என்று உங்களுக்கு ஒரு கணமேனும் தோன்றினால் இதை மேலும் படிக்கலாம்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவருவதை ஒட்டி இத்தளத்தில் சில குறிப்புகளை நான் எழுதி வருகிறேன். பொதுவாக என்னுடைய திரைப்படங்கள் சார்ந்த எந்த விவாதத்தையும் எனது தளத்தில் முன்னெடுப்பதில்லை. ஏனெனில் திரைப்படம் என்பது ஒரு கேளிக்கை. அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பது என்பது வெறும் வம்புதான். வம்புகளில் எனக்கு ஆர்வம் இல்லை. அதற்கான தளமும் இதுவல்ல. ஆனால் பொன்னியின் செல்வன் பற்றி இங்கு ஏன் பேசப்படுகிறது என்றால், அதை ஒட்டி  இலக்கியம் தமிழ் வரலாறு ஆகியவை சார்ந்து சிலவற்றை பொதுச்சூழலில் கவனப்படுத்த முடியும் என்பதனால்தான். சில வரலாற்றாசிரியர்களின் பெயர்களை முன்வைக்க முடியும் என்பதனால்தான்.

இப்போது தமிழ் விக்கி இணையதளத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களைப்பற்றிய பதிவை சில ஆயிரம் பேர் வந்து படித்திருக்கிறார்கள் என்றால் பொன்னியின் செல்வனும், அதை ஒட்டி அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டதும் காரணம். இத்தகைய தருணங்களை எப்போதுமே தமிழின் அறிவார்ந்த செயல்பாடுகளை நோக்கி ஈர்க்க பயன்படுத்திக்கொள்வது என் வழக்கம். அவ்வகையிலேயே சோழர் கால வரலாறு பற்றிய குறிப்புகள் பொன்னியின் செல்வன் எனும் புள்ளியுடன் தொடர்பு படுத்தி இந்த தளத்தில் வந்துகொண்டிருக்கின்றன. அன்றி பொன்னியின் செல்வன் பற்றி ஆங்காங்கே வம்பர்கள் அமர்ந்து பேசும் அனைத்து வம்புகளுக்கும் பதில் அளிப்பது என்னுடைய வேலையல்ல. சென்ற முப்பதாண்டுகளில் நான் செய்துவரும் அறிவியக்கப்பணியின் அளவை வைத்துப் பார்க்கும்போது எவரும் அதை உணர முடியும்.

பொதுவாக வம்பர்கள் ஓர் ஆவேசநிலை எடுக்க விரும்புவார்கள். மதம் ,ஜாதி, இனம், மொழி எதையேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டுதான் அந்த ஆவேச நிலையை எடுக்க முடியும். அந்த ஆவேச நிலையை எடுத்தால் மட்டுமே அவர்களால் ஆங்காரமாக அடிவயிற்று வேகத்துடன் கூச்சலிட முடியும். அப்போது மட்டும் தான் அவர்களுள் எரியும் அந்த புண்பட்ட ஆணவம் நிறைவு கொள்கிறது. எளிய மனிதர்கள், பல்வேறு காரணங்களால் அறிவியக்கத்துடன் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லாது அமைந்தவர்கள், பல்வேறு தளங்களில் சிதறடிக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களைப்பற்றிய ஆழ்ந்த அனுதாபம் மட்டுமே என்னிடம் உள்ளது. அந்த மிகை உணர்ச்சிகளை எதிர்கொள்வதற்கு பதிலாக தவிர்த்து செல்வதையே நான் விரும்புவேன்.

நீங்கள் எங்கு சிக்கிக்கொள்கிறீர்கள் என்றால் உங்களை அறியாமலேயே மதம், ஜாதி, இனம், மொழி சார்ந்து ஏதேனும் பற்று உங்களுக்குள் இருக்கும் என்றால் அதைச் சார்ந்து பேசுபவர் ஒருவரை உங்களவராக ஏற்றுக்கொள்கிறீர்கள். அவர்களுடைய குரல் அறச்சீற்றம் கொண்டதென்றும் மெய்யான தரப்பு என்றும் எண்ண ஆரம்பிக்கிறீர்கள். அந்த திசை உங்களை வம்பிலிருந்து மேலும் வம்புக்கு இட்டுச் செல்லும். ஒரு கட்டத்தில் அந்த வரிசையில் உங்களைக் கொண்டு அமரவைக்கும். நீங்களே உங்களை வெறுக்கும் நிலையில் ஒரு வம்பராக மட்டும் உங்களை கண்டுகொள்வீர்கள். இதை இத்தருணத்திலாவது புரிந்துகொள்ளுங்கள்.

பொன்னியின் செல்வன் ஒரு பொதுரசனைக்குரிய திரைப்படம். அந்த எல்லைகளுக்குள்  நின்றுகொண்டு அது தமிழ் வரலாறு குறித்து பேசுகிறது. அது இந்தியாவெங்கும் தமிழர்களின் பொற்காலம் ஒன்றை முன்வைக்க இருக்கிறது. அந்த ஒரு காரணத்தினாலேயே பலரால் அது எதிர்க்கப்படுகிறது. எதிர்ப்பவர்களில் பலர் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தோரணை கொண்டவர்களாயினும் உள்ளூர தமிழர் பெருமையால் சீண்டப்படுபவர்கள்தான். அதற்கான காரணங்கள் பல இருக்கும். அவற்றுக்குள் செல்ல நான் விரும்பவில்லை.

மிக எளிமையாக உங்களிடம் நான் கேட்க முடியும். சோழ மன்னர்கள் நெற்றி நிறைய விபூதி அணிந்திருந்தார்கள், போர்க்களத்தில் வியர்வை கொட்டும்போதும் அந்த விபூதி அழியாமல் இருக்கும்படி அதை ஃபெவிக்கால் கலந்து பூசியிருந்தார்கள் என்பதற்கு உங்களுக்கு கல்வெட்டு சான்று இருக்கிறதா என்ன?சோழர் காலத்து உடைகள் எப்படியிருந்தன, அரசவை எப்படி இருந்தது என்பதற்கு உங்களிடம் என்ன சான்று இருக்கிறது?

சோழர் காலத்தில் மெய்யாகவே அணிந்திருந்த உடைகள், அவர்களின் அரண்மனைகள் அணிகள் ஆகியவற்றை இன்று காட்டினால் அது ஒரு வெற்றிகரமான வணிகப்படமாக இருக்குமா? உதாரணமாக, கோபுலு முன்பு சரித்திரக்கதைகளுக்கு வரைந்த ஓவியங்களில் தமிழ் மன்னர்கள் தரையில் வட்டமாக அமர்ந்து தங்கள் அமைச்சர்களுடனும் குலத்தலைவர்களுடனும் உரையாடுகிறார்கள்.  ஒவ்வொருவர் முன்னாலும் தாம்பாளத்தில் வெற்றிலை தாம்பூலம் வைக்கப்பட்டிருக்கிறது. பெரிய தலைப்பாகைகளும் மீசைகளும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தடித்த மரத்தாலும் கற்களாலுமான தாழ்வான கூரை கொண்ட சிறிய அறைகள். மன்னர்களும் குலத்தலைவர்கள் எவருமே மேலாடை எதுவும் அணிந்திருக்கவில்லை.

உண்மையில் மிக எளிமையாக இப்படித்தான் இருந்திருக்க முடியும். பொன்னியின் செல்வனுக்கு மணியம் வரைந்த ஓவியத்தில் அவர்கள் அணிந்திருப்பதுபோல எப்போதும் அரைக்கிலோ நகைகளும் ஒருகிலோ கிரீடமும் அணிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில்  பதினாறாம் நூற்றாண்டு முதல் வருகை தந்த வெள்ளை பயணிகள் இங்குள்ள அரசர்கள்  பிரபுக்களைப்பற்றி அளிக்கும் சித்திரங்கள் கோபுலு வரைந்த சித்திரங்களுடன் ஒத்துப்போகின்றன. எப்போதாவது கொலுவீற்றிருக்கும்போது பளபளக்கும் அணிகளையும் ஆடைகளையும் அணிந்திருக்கலாம். ஆனால் சாதாரணமாக அது வழக்கம் கிடையாது.

அப்படி ஒரு தமிழ்ப் படத்தை எடுத்துவிட முடியுமா? ஏனெனில் எடுக்கவிருப்பது ஒரு வணிகப்படம். அது பெரும் காட்சித்தன்மை கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் Spectacular என்பார்கள்.  மெய்யாகவே அன்றைய படைவீரர்கள் அணிந்திருந்த ஆடைகள் மிக எளிமையாக இருந்திருக்கலாம். எல்லாமே சிறிதாக, சாதாரணமாக இருந்திருக்கலாம். கோவில்களில் காணப்படும் செதுக்கோவியங்கள் அதையே காட்டுகின்றன. இன்று ஒரு திரைப்படத்தில் அதைக் காட்ட மாட்டோம். இன்னும் மிகைப்படுத்தியே அதை காட்ட முடியும். இல்லையென்றால் அது கேளிக்கைப்படம் அல்ல.

நாம் எடுப்பது ஆவணப்படம் அல்ல. வணிகப்படம். இந்தியா முழுக்க ரசிகர்களால் ஏற்கப்படக்கூடிய தன்மை அதற்குத் தேவை. ஒரு ஆடையோ தோற்றமோ மிக விந்தையாக இருக்குமெனில் அதை பண்பாட்டு அடையாளம் என்று இந்தியா முழுக்க கொண்டு செல்ல இயலாது. இதுவரை உலக அளவில் எடுக்கப்பட்ட எல்லாப்படங்களும் அந்த இலக்கணப்படி தான் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சோழர்களின் மீது ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தையோ வழிபாட்டு அடையாளத்தையோ இன்று சுமத்த நமக்கு உரிமை கிடையாது. அவர்கள் சைவர்கள் என்பது வெளிப்படை. ஆனால் வைணவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் நிதிக்கொடை அளித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எங்கும் எப்போதும் தங்களை சைவ வெறியர்களாகவே அவர்கள் காட்டிக்கொண்டார்கள் என்று இன்று  அமர்ந்துகொண்டு முடிவு செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது? அனைத்து குடிமக்களுக்கும் பொதுவானவர்களாக ஏன் அவர்களை நாம் எண்ணிக்கொள்ளக் கூடாது?

இந்த வகையான அசட்டு தீவிரப் பிடிவாதங்களை வரலாற்றின் மீது ஏற்றுவதெல்லாம் வரலாற்றறிவோ பொதுவான நிதானமோ இல்லாத வம்புகளின் வெளிப்பாடு மட்டுமே. மதவெறியர்களுக்கோ இன வெறியர்களுக்கோ மொழி வெறியர்களுக்கோ இந்த மாதிரி தீவிரமான நிலைபாடுகள் தேவையாக இருக்கலாம். இதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

சோழர்காலத்து உடை பற்றி கேட்டீர்கள். கவச உடைகள் பற்றி படத்தின் கலைத்துறை தாராசுரம் ஆலயத்தில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் அந்த உடைகள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆலோசகர்களாக ஜெயக்குமார் பரத்வாஜ் போன்ற முறையான ஆய்வாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அன்றைய கவசங்கள் தோலால் செய்யப்பட்டவை -குறிப்பாக எருமைத்தோலால். இரும்புக்கவசங்கள் குதிரை மேல் செல்லும் போர்வீரர்கள் மட்டுமே அணியத்தக்கவை.

உலகில் எங்காயினும் கவச உடைக்கு ஒரே வடிவம் இதுதான் இருக்க முடியும். ஏனெனில்    கவசங்கள் உடல் அசைவுகளுக்கு ஏற்ப தான் அமைய முடியும். நீங்கள் கிரேக்க வரலாறு சார்ந்த படங்களில் ஒரு கவச உடையைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் ஏறத்தாழ அந்த உடைதான் எங்கும் உள்ளது. ஜப்பானிய கவச உடைக்கும் கிரேக்க கவச உடைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் கிரேக்க தொடர்பு உருவாகி ஆயிரம் ஆண்டுகளுக்கு  பிறகு சோழர்களுடைய வரலாறு வருகிறது. ஏன் அவர்களுக்கு கிரேக்க செல்வாக்கு இருக்ககூடாது? சோழர் காலத்தில் தமிழகத்தில் மிக வலுவான சீன செல்வாக்கு இருந்தது. சோழர்காலத்துடைய சிற்பங்களில் சீன முகங்கள் உள்ளன. ஏன் சீனாவிலிருந்து அவர்களின் கவச உடையே நமக்கு வந்திருக்க கூடாது?

சோழர்களின் கொடியின் வண்ணம், வடிவம் பற்றி எவர் என்ன சொன்னாலும் எல்லாமே ஊகங்கள், கற்பனைகள்தான். நமக்கு சோழர்கள் பற்றிக் கிடைப்பவை மிகச் சுருக்கமான சில கல்வெட்டுச் செய்திகள் மட்டுமே. (மற்ற தமிழ் அரசுகள் பற்றி அவ்வளவுகூட கிடையாது) இந்திய வரலாறு குறித்தே மிகக்குறைவான செய்திகள்தான் உள்ளன. அச்செய்திகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட ஊகங்கள்தான் நம் வரலாறு. (ஆர்வமிருந்தால் டி.டி.கோசாம்பி இந்திய வரலாறு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையை வாசிக்கவும்)

இவற்றையெல்லாம் பேசலாம். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு மெய்யான வரலாற்றில் ஆர்வம் இருக்கிறதா, சமநிலையுடன் அதை கற்க தயாராக இருக்கிறீர்களா, குறிப்பிடப்படும் நூல்களை கவனிக்கிறீர்களா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள். ஒரு திரைப்படத்தை வைத்துக்கொண்டு சில பல வெறிகளின் அடிப்படையில் வம்புச் சழக்குகளை செய்பவர்களுடன் இவற்றையெல்லாம் பேசுவதென்பது ஒரு வெட்டிவேலை.

பத்துநாட்களுக்கொருமுறை முகநூலிலும் வாட்ஸப்பிலும் வரும் வம்புகளில் ஈடுபட்டு விவாதித்துக்கொண்டிருப்பது அறிவுச்செயல்பாடு அல்ல. உங்களுக்கு ஆர்வமுள்ள துறை என்ன என பாருங்கள். அதில் ஓர் அடிப்படை வாசிப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கே உங்களைப்பற்றி ஒரு தன்னம்பிக்கை வரும். அதன்பின் இதெல்லாம் அற்பத்தனம் என தெரியும்.

அந்த அற்பத்தனம் என்றும் நம் சூழலில் இருக்கும் .ஆனால் அதில் ஒரு இளைஞராக நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள் என்றால் சிந்திக்கும் திறனை இழப்பீர்கள். வெறும் ஒரு வம்பராகச் சென்று அமைவீர்கள். தயவு செய்து இதைப்பற்றி யோசியுங்கள். இதைப்பற்றி யோசித்தபின் ,எப்போதாவது தெளிவடைந்தபின் எனக்கு எழுதுங்கள். அதுவரையில் நமக்கிடையே எந்த உரையாடலும் நடக்கமுடியாது. உங்கள் உலகத்தில் எனக்கு எந்த இடமும் இல்லை, என் உலகத்தில் உங்களுக்கும்.

நன்றி.

ஜெ

பொன்னியின் செல்வன் நாவல்  யவனராணி- சாண்டில்யன் உடையார் -பாலகுமாரன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.