Jeyamohan's Blog, page 729
August 22, 2022
கம்பதாசனின் மனைவி
கம்பதாசன் பற்றிய இக்குறிப்பு ஒரு மிகச்சிறந்த நாவலாக நல்ல எழுத்தாளன் கையில் விரியும் வாய்ப்புள்ளது. அவருடைய மனைவி, அவருடைய திரைவாழ்க்கை, அவர் அடைந்த அவலமரணம், அவருக்கு அமைந்த அர்ப்பணிப்புள்ள பக்தன், அந்த பக்தனின் முடிவு….எத்தனை திருப்பங்கள், வியப்புகள்!
கம்பதாசன்
கம்பதாசன் – தமிழ் விக்கி
பிரமோ, ஒரு பதில்
ஜெ
தமிழ் விக்கி பிரமோ பற்றி எழுதியிருந்தீர்கள். உங்களைப் போன்ற ஒருவர் ஏன் அதைச் செய்யவேண்டும் என்று திகைப்பாக இருக்கிறது. புனைவுகள் எழுதவேண்டிய உங்கள் நேரம் இதில் வீணாகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
எஸ்.ராஜ்குமார்
***
அன்புள்ள ராஜ்,
தமிழ் விக்கி நான் எடுத்துக்கொண்ட பணி. அதை வெற்றிகரமாக நிகழ்த்தவேண்டும். எடுத்ததை முடிப்பது என் வழக்கம். பெரியதை எடுத்துக்கொள்வதும்தான்.
தமிழ்விக்கி ஓர் அறிவுச்செயல்பாடு. அத்தகைய செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் ஆதரவு மிகக்குறைவு. அது எனக்கு முன்னரே தெரியுமென்றாலும் அதை அருகிருந்து காண்கையில் இன்னும் அறைகிறது அந்த நடைமுறை உண்மை. விஷ்ணுபுரம் உட்பட என் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களிலேயே மிகமிகச் சிலருக்குத்தான் தமிழ் விக்கியில் ஆர்வமுள்ளது.
உதாரணமாக, தமிழ்விக்கிக்கு ஒரு வாசகர் செய்யக்கூடிய மிகக்குறைந்தபட்ச உதவி என்பது அதைப் பற்றி என் தளத்தில் வரும் கட்டுரைகளுக்குள் சென்று தமிழ் விக்கி இணைப்பை ஒரே ஒருமுறையேனும் சொடுக்குவது. அந்த கிளிக்குகள் தமிழ்விக்கி பதிவை கூகிளில் மேலே கொண்டுவரும். ஆனால் என் தளத்திற்கு வந்து வாசிப்பவர்களில் இருபதில் ஒருவரே அந்த இணைப்பைச் சொடுக்குகிறார்கள். பலரிடம் அதை பற்றி கேட்டிருக்கிறேன். அசட்டுப்புன்னகையுடன் ‘இல்லை, பாக்கிறதில்லை’ என்பார்கள்.
தமிழ்விக்கி இணைப்புகளை கட்டுரைகளில், முகநூலில் பகிர்வது அடுத்தபடியாகச் செய்யப்படலாம். அதை அனேகமாக எவருமே செய்வதில்லை.
ஆனால் இத்தகைய அக்கறையின்மையைக் கண்டு சலிப்போ சோர்வோ அடைவது என் இயல்பல்ல. இந்த அக்கறையின்மை, மேலோட்டமான பார்வையுடன்தான் சென்ற முப்பதாண்டுகளாகப் போராடி வருகிறேன். வெறும் வம்புகளை மட்டுமே கவனிப்பவர்களிடம் அவ்வப்போது சிறு எரிச்சல் உருவாவதுண்டு என்றாலும் எதிர்நிலை பெரும்பாலும் என்னிடமில்லை. நான் செய்யக்கூடுவதை எல்லாம் முழுமூச்சாகச் செய்துகொண்டே இருப்பது மட்டுமே என் இயல்பு. பிறர் செயலில் பின் தங்கும்போது என் செயலில் விசை கூட்டுவதே எப்போதும் நான் செய்வது.
ஜெ
யுவன் சந்திரசேகர் சு. வேணுகோபால் எம்.கோபாலகிருஷ்ணன் பா.வெங்கடேசன் சு.தமிழ்ச்செல்வி இரா.முருகன் சாரு நிவேதிதாநீலம், அனுபவம்
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெ,
நீலம் முதல்வாசிப்பில் அணிபுனைதல் வரை வாசித்தேன். இதற்கு முன் கிருஷ்ணன் பற்றிய முழு அறிமுகம் எனக்கு இருந்திருக்கவில்லை. கிருஷ்ணனை அறியும் தோறும் பரவசம் பெருகியது. மொழிநடை பெருங்கடலென உள்ளிழுத்துக்கொண்டது. கண்ணன் முதல் நடை வைத்தது, மயிற்பீலி சூடியது, முதற்குழல் இசைத்தது என பொற்கணங்களை அனுபவித்தேன். சுதா ரகுநாதனனின் ‘அசைந்தாடும் மயிலொன்று கண்டேன்’ கேட்டு கிருஷ்ணன் பாடல்களில் ஈர்க்கப்பட்டேன். சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்தின் ‘கண்ணன் வருகின்ற நேரம்’ கேட்டு லயித்திருந்தேன்.
மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து நின்று விட்டேன். இதற்கிடையில் கிருஷ்ணன் ஒரு ராஜதந்திரி, கடவுள் அல்ல. மூல மகாபாரதத்திலும் அவ்வாறே, வெண்முரசிலும் அப்படியே என்று உங்கள் பேச்சில் கேட்டேன்.
சில மாத இடைவெளியில் மீண்டும் நீலம் தொட்டேன். இரண்டு வாரத்தில் முழுமையாக வாசித்து முடித்தேன். முதல் வாசிப்பிலிருந்த பரவசம் இப்போது இல்லை. கண்ணனை கடவுளாக்கும் வரிகளைத் தேடித்தேடி மூளை அலைந்தது. ஒருவித விலக்கம் உண்டாயிற்று. சொற்களுக்குள் தத்தளித்து நீந்தினேன். எனது மனம் கிருஷ்ணனை கடவுளாக்க கடுமையாகப் போராடியது. இந்திரனுக்கான பலியை நிறுத்தி கோவர்த்தன மலையைத் தூக்கும்போது உங்கள் பேச்சையும், எனது மூளையையும் வென்று கடவுளான கிருஷ்ணனை என்னில் களிப்படைந்தேன்.
திருமண இசைவிற்குப் பிந்தைய ராதையின் நிலையை எண்ணி வருந்தினேன். காத்திருக்கும் துயர் என்னையும் துளைத்தது. ஒரு கட்டத்தில் ராதை ஒரு மலர் என்றுணர்ந்தேன். மலராகவே என்றும் நீடிக்கும் ராதை. கனியாகாத மலர் உதிர்ந்து சருகாக வேண்டும் என்ற நியதி கொஞ்சம் ஆறுதல் தந்தது. கண்ணன் ஒரு நதி. ஆயிரம் கோடி கைகள் அள்ளிப்பருகும் அதை. அனைத்தையும் தானே அள்ள நினைக்கும் ராதையின் ஏக்கம் நிறைவேறும் வழியில்லை என்றுணர்ந்து பரிதாபப்பட்டேன்.
முடிசூடிய கண்ணனுக்கு வேய்ங்குழல் கொண்டு வந்து கொடுத்த ராதையின் மனம் கண்டு புன்னகைத்து மகிழ்ந்தேன்.
கன்னி அன்னை வாழ்க.
அன்புடன்,
சக்தி பிரகாஷ்,
கோபிசெட்டிபாளையம்.
August 21, 2022
தேவதேவனின் கவிதையுலகம்
தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று .முற்றிலும் ஆரவாரமற்ற, எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த, இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சகஜமாக பேசவோ, மற்றவர்களிடம் உரையாடவோ முடியாத ஒரு விசித்திரமானஅந்தரங்கத் தன்மை உடையவர் .குறிப்பாகச் சொல்லப்போனால் அவர் தன் கவிதைகளை சம்பந்தப்படுத்தாமல் எதையுமே பேசுவது இல்லை. இலக்கிய விஷயங்கள் மட்டுமல்ல,சாதாரண அன்றாட விஷயங்கள் கூட கவிதையுடன் தொடர்பு படுத்தப்பட்டே அவர் மனதில் எழும். இலக்கிய வம்புகள், கோபதாபங்கள், அரசியல் தரப்புகள், சித்தாந்த விவாதங்கள் ஆகியவற்றில் இருந்து மூற்றிலும் அப்பாற்பட்டது அவரது உலகம். கரிய சிறிய உடலும், பளிச்சிடும் கண்களும் கொண்ட இந்த சிறு மனிதர் ஒருகோணத்தில் அவரது சகமனிதர்களால் [ சரியாகவே] பித்தர் என்று கணிக்கப் படுகிறார்.
தேவதேவன் இளம் வாசகராக சுந்தர ராமசாமியின் நண்பர்வட்டச் சந்திப்பு நிகழ்ச்சியான ‘ ‘ காகங்கள் ‘ ‘ கூட்டத்துக்குச் சென்று இலக்கிய அறிமுகம் பெற்றவர் . தன் முதல் கவிதைத் தொகுப்பான ‘ ‘ குளித்துக் கரையேறாத கோபியர்கள் ‘ ‘ க்கு அவர் சுந்தர ராமசாமியிடம் முன்னுரை கேட்டார் , சுந்தர ராமசாமிக்கு இவர் ஒரு கவிஞர் என்றே தோன்றவில்லை. அத்தொகுப்பு பிறகு ‘ பிரமிள் ‘ ளால் அறிமுகம் செய்யப்பட்டது. அதீதமான கற்பனாவாதப் [ரொமான்டிக்] பண்பு உள்ள தொகுப்பு அது. கச்சிதமான மின்னணுப்பொறி போல கவிதையை ஆக்க முயன்று வந்த க நா சுப்பிரமணியத்தின் யுகத்தில் , அப்போக்கின் மிகச்சிறந்த உதாரணமான சுந்தர ராமசாமியால் தேவதேவன் நிராகரிக்கப்பட்டதும், க நா சு வால் அங்கீகரிக்கப் படாத பிரமிளால் அவர் ஏற்கப்பட்டதும் முக்கியமான விஷயங்கள் .
தேவதேவனை அறிமுகம் செய்யும் பிரமிள் அவரது கவிதையின் ஊற்றை சரியாகவே அடையாளம் கண்டு முன்வைத்தார்.
பக்தி யுகத்து கவிதைகள் போல ஒரு ஆழமான உணர்ச்சி நிலையை , பரவச நிலையை, அடையாளம் காட்டுபவை அவரது கவிதைகள் என்றார் பிரமிள் . நவீனத்துவ [மாடர்னிஸ்ட் ] கவிதையின் சமநிலையும், இறுக்கமும், தருக்கத் தன்மையும் கொண்ட கவிதைகளில் இருந்து முற்றும் மாறுபட்டவை இவை. அக்கால வாசகர்களாலும், சககவிஞர்களாலும், விமரிசகர்களாலும் இவை ஏற்கப்படவில்லை. தன் இயல்பின் படி தேவதேவன் இவை குறித்து கவலை கொள்ளவுமில்லை. அவர் கவிதையே வாழ்க்கையென்றானவர். அதன் பித்து -பரவச நிலையில் வாழ்பவர் . அவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. அவரை அடையாளம் கண்டு கொண்ட சில வாசகர்களும் இருக்கவே நூல்வடிவம் பெற்றன.
ஒரு தலைமுறைக்கு பிறகு நவீனத்துவத்தின் கொடி தாழ்ந்த பின்பு தேவதேவன் கவனிக்கப்பட்டார். கவிதையும் கலைகளும் அவற்றின் ஆதி உத்வேகத்தினாலேயே ஆக்கப்படுகின்றனவே ஒழிய , சமநிலையினால் அல்ல என்று பின் நவீனத்துவ அழகியல் சொல்ல ஆரம்பித்தபோது தேவதேவனின் இடம் உறுதிப்பட ஆரம்பித்தது.1998 ல் நான் தேவதேவனை பற்றி ஒரு விமரிசன நூலை எழுதி வெளியிட்டேன். [ ‘ ‘நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க் கவிதை -தேவ தேவனை முன்வைத்து ‘ ‘ கவிதா பதிப்பகம் ,சென்னை வெளியீடு]
தேவதேவனின் கவிதைகளின் சிறப்பம்சங்கள் என்ன ? அவரது கவிதைகள் எப்போதும் நான் நான் என்று பேசினாலும் அவரது நான் நவீனத்துவ யுகத்து தத்துவ தரிசனங்களால் தொகுக்கப் பட்டதும் சமூகம், மானுடம் போன்றவற்றில் இருந்து அன்னியப்படுத்திக் கொள்வதனூடாக மட்டுமே தன்னை அறியமுடிவதுமான நான் அல்ல . தமிழ் நவீனக்கவிதையில் நாம் கண்டு பழகி , மெல்ல அலுத்துப்போன அந்த ‘நான் ‘ இன் அந்தரங்க டைரிக்குறிப்புகளுக்கு நேர் மாறாக தேவதேவனின் நான் மிக மர்மமான ,அதே சமயம் கவிதைகளில் மிக எளிமையான அழகுடன் வெளிப்படுகிற ஒரு ‘ நான் ‘ ஆகும் . அது நம் மரபில் இருந்து முளைத்ததும்,சமகால அல்லல்களையும் துயரங்களையும் உள்வாங்கிக்கொண்டதுமான ஒரு சுயப் பிரக்ஞை. அதை நாம் பக்தியுகக் கவிதைகளில் காணலாம்
இந்த ‘ நான் ‘ ஒரு பார்வையில் இன்றில் வேரூன்றியவன் , இன்னொரு கோணத்தில் காலாதீதமானவன். [ ஒரு உரையாடலில் தேவதேவன் அதீதமான சுயநம்பிக்கையுடன் விழிகள் பளிச்சிட ‘ ‘ நான் தான் யேசு ‘ ‘ என்ற போது அவை நெளிந்தது] தன் முழுமையினை குறித்த அவனது பிரக்ஞை, அவனுடைய முடிவற்ற தேடல்,அவன் தோல்விகள் எல்லாமே இந்த இரு தளங்களிலும் அடையாளப்படுத்தப்பட வேண்டியவை.
தேவதேவன் கவிதைகள் குறித்து நவீனத்துவ யுகத்து புகார் ஒன்று உண்டு. அவரது கவிதைகளில் அவ்வப்போது உபதேசம் செய்யும், அறைகூவும், அழுது புலம்பும் அதீத சுயத்தோரணை வந்து விடுகிறது என்பது தான் அது. கவிஞனை மற்ற மனிதர்களின் சகஜ மனநிலையில் மட்டும் வைத்துப் பார்த்து, அவர்களின் கச்சிதமான பிரதிநிதியாக உருவகித்துக் கொள்ளும் பார்வையின் விளைவு இப்புகார்.
ஒரு மனிதனாகக் கவிஞன் சாதாரணமானவனாக இருக்கலாம். ஆனால் கவிதை ஒரு போதும் சாதாரணமல்ல. அதை எழுதும் போது அம்மனநிலையில் அக்கவிஞனும் சாதாரணமானவனல்ல. அந்நிலையில் ‘கேளடா மானுடா! ‘ ‘ என்று அவன் குரல் எழுவது முற்றிலும் இயல்பே. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம், ஒரு பழங்குடி சமூகத்துக்கு சாமியாடி எப்படியோ அப்படியே நமக்கு கவிஞன். அவனில் நம் மூதாதையரை ஆவேசித்திருந்த தெய்வங்கள் நம்மிடம் உரையாடும் பொருட்டு குடியேறுகின்றன. அவன் நம் ஆழ்மனம் வரை தோண்டப்பட்ட ஆழ்துளைக்கிணறு .
தேவதேவனின் கவிதைகளில் அவரது கவிதை சுயத்தின் குறியீடாக ‘வீடு ‘ என்ற படிமம் வந்தபடியே உள்ளது . ‘ ‘ கவனி ,நீ இளைப்பாறு கணமே வீடுகள் தோன்றுமிடம் ‘ ‘ என்று ஒரு கவிதையில் சொன்னாலும் கூட அவரது கவிதையில் வீடு என்ற படிமம் பலவாறாக வளர்ந்து கொண்டே உள்ளது .
நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்காக கட்டிக் கொண்டது
வானம் இறங்க விரித்த
தன் மொட்டை மாடிக்களத்தை.
என்று ஒரு கவிதை கண்டடைகிறது.
இரண்டு வீடுகளை
மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது
ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக் கொள்ள வேண்டும்
மற்றொன்றை சிட்டுக்குருவியிடமிருந்து
என்று பிறிதொரு கவிதை . தேவதேவனின் வீடு தானில்லாத பெருவெளியின் முடிவின்மையில் இருந்து தனக்கென செதுக்கி எடுத்துக் கொண்ட ஒரு சிறு இடம், ஒரு சதுர சுயம். அதை ஒரு கணம் மார்புடன் அணைத்தும் , மறுகணம் வானோக்கி ஏங்கியும் அவரது கவிதை மானுடத்தின் முடிவற்ற நாடகத்தை நடத்திக்கட்டுகிறது .
தேவதேவனின் கவிதைகளில் அவரைச் சுற்றி பரந்து, அவரை அணைத்து தன் அனைத்து இருப்பாலும் அவருடன் உரையாடும் பேரிருப்பான இயற்கையின் குறியீடாக ‘ மரம்’ வருகிறது . ஒவ்வொரு கவிதையிலும் வளர்ந்து மாற்றமடையும் ஒரு உயிர்ப்புள்ள படிமம் இது . அதன் ‘பொருள் ‘ ஒருபோதும் முழுமையடைவது இல்லை. தன் கருணை, அக்கருணையை புறக்கணித்தும் சுரண்டியும் வாழ நேரும் வாழ்வு தரும் கசப்பு, என பல தளங்களில் மரம் விரிவடைகிறது.
சிவந்த பூக்களுடன்
சன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்
கூரையின் மீது குனிந்து
உச்சி முகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம் …
வீட்டுக்கு எப்போதுமே ஒரு மன்னிப்புகோரும் பாவனை உள்ளது .பொருந்தாத இடத்துக்கு வந்து விட்டதுபோலவே அது எந்த மண்ணிலும் தன்னை உணர்கிறது. சில சமயம் அந்தச் சிறுமையை வெல்ல தருக்கி நிமிரும் பாவனையைகூட அது மேற் கொள்ளக்கூடும் ஆனால் ஒரு மரத்தின் அடியில் அது அமைதி கொள்கிறது, தாய் அருகே மகவு போல!
குருவிக்கூடு
நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியை தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி!
தேவதேவன் கவிதைகளில் மூன்றாவது முக்கிய படிமம் ‘ பறவை ‘ விண்ணின் ஒளியுடனும் மகத்துவத்துடனும் மண்ணுக்கு வருவது அது. மரம் மண்ணில் இருந்து விண்ணுக்கு ஏற முயல்வதற்கு விண் அளிக்கும் பதில் போல. பிசிராந்தையார் கண்ட தென் குமரியாடி வடமலை செல்லும் அந்த எல்லைகள் இல்லாத பறவை தான் இது. ஆழ்வார் ‘ ‘ பொன்னுலகாளீரோ புவன முழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்! ‘ ‘ என்று முகுந்தனுக்கு தூது விட்ட பறவை .
ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
விருட்டென்று தாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது
மரணமற்ற பெருவெலளிக்கடலை நோக்கி
சுரீலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன்
நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை
ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.
தேவதேவனின் கவிதையின் இயக்கத்தை குறுக்கி சூத்திரப்படுத்தும் முயற்சியல்ல இது.அவரது கவிதைகள் இத்தகைய முதல் கட்ட புரிதலையும் வகைப்படுத்துதலையும் எப்போதுமே தாண்டிச்செல்வபவையாகவே உள்ளன. பெரும்பாலான முக்கிய கவிஞர்களுக்கு இப்படி அடிப்படை படிமங்கள் சில இருக்கும். இவை அவர்களு டைய தனிமொழியில் உள்ள சொற்கள் .இவற்றை கோர்த்து தான் அவர்கள் பேசுகிறார்கள் .அவர்களை புரிந்துகொள்ள மிக முக்கியமான வாசல்கள் இப்படிமங்கள் .
எந்த முதல்தரக் கவிஞனையும் போலவே தேவதேவனின் கவிதையும் எந்த புறவய தத்துவ நிலைபாட்டையும் கொண்டதல்ல. எதையும் முன்வைப்பதல்ல. அதன் அழகே அதன் செய்தி. அதன் அழகே அதன் நிலைபாடு.
பிரமிள் ஒருமுறை தன் கவிதைகள் வைரங்கள் என்று சொன்னார் என்பதை தேவதேவன் ஒரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். வைரங்கள் ‘ உபயோகமற்றவை ‘ ‘ஒரு பார்வையில் அவை ஆடம்பரங்கள் கூட! ஆனால் இந்த உபயோகமற்ற பொருளுக்கு எந்த உபயோகமுள்ள பொருளையும் விட அதிக மதிப்பு தந்திருக்கிறான் மனிதன். காரணம் அது ஒரு அடையாளம் என்பதே. அந்த அடையாளம் அவனுக்கு எந்த நுகர்வையும் விட முக்கியமானது என்பதே. நுகர்வே ஒரே இன்பமாக ஆன வாழ்வை நோக்கி வெறும் அடையாளம் மட்டுமான வைரம் விடுக்கும் செய்தி என்ன ? -என்கிறார் தேவதேவன் அந்தப் பேட்டியில்.[ ‘கவிதை பற்றி … ‘ தேவதேவனின் உரையாடல் .]
தீவிர அனுபவத்தின் நேரடியான பரவசம் நிரம்பிய மொழியால் அடையாளப்படுத்தப்பட்டவை தேவதேவனின் கவிதைகள்.அப்பரவசத்தை மொழியினூடாக தொட்டுணரும் கூரிய வாசகருக்கு மட்டும் உரியவை. மொழியின் நுட்பமான சாத்தியங்களிலேயே எப்போதும் தன் வெளிப்பட்டை கண்டடைபவை. வசன நடையில் நீண்டு , தருணம் வரும்போது மட்டும் இயல்பான உத்வேகமிக்க இசைத்தன்மையை அடைபவை.
யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களினால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை ?
எவருடைய சிந்தனைகள் இவை ?
போன்ற வரிகளில் உரைநடையின் கற்பனை வீச்சே அழகையும் உத்வேகத்தையும் உருவாக்கிவிடுகிறது.
மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?
அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?
போன்ற வரிகளில் உள்ளடங்கி ஒலிக்கும் இசையழகே அதன் உத்வேகத்தை தொடர்பு படுத்துகிறது. அபூர்வமாக இவ்விரு தளங்களும் அழகாக முயங்கிய கவிதை சாத்தியமாகிறது.
அமைதி என்பது…
தேவதேவனின் கவிதை வந்தமர்ந்த பறவைக்கும் எழுந்துசென்ற பறவைக்கும் நடுவில் முடிவின்றி ஆடும் ஒரு மரக்கிளை .
பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?
சொல்புதிது மும்மாத இதழ் 2000
இந்தியா இதழ்
பாரதியாரின் இந்தியா இதழ் தமிழ்ப்பண்பாட்டில் முக்கியமான இடம் வகிப்பது. அதைப்பற்றிய ஆய்வுகள் பல உள்ளன. அனைத்தையும் ஒரே வீச்சில் தொகுத்து எழுதப்பட்ட கட்டுரை இது
இந்தியா (இதழ்) – தமிழ் விக்கி
தமிழ் விக்கி, ஈரோடு விழா -கடிதம்
இருநாட்கள் நடந்து முடிந்த தமிழ் விக்கியின் பெரியசாமி தூரன் விருது விழா விஷ்ணுபுர விழாவின் மற்றொரு வடிவமே தான். விருதின் பெயரும், விருது பெற்றவரின் ஏற்புரையும் மட்டும்தான் வேறுபட்டிருந்தது.வழக்கமான முன் திட்டமிடல்கள், முன்னேற்பாடுகள், ஒரு சிறு பிழை கூட இல்லாத அனைவருக்குமான வசதிகள், நல்ல உணவு, வசதியான தங்குமிடம், கச்சிதமான நேர ஒழுங்குடன் நிகழ்ந்த மிகச்சிறப்பான அமர்வுகள் என எல்லாமே விஷ்ணுபுர விருது விழாவை போலவே தான் இருந்தது.
சுவாமி பிரம்மானந்தா, எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஆனைமலை ஆசிரமமொன்றில் தங்கி இருந்ததால் நான் ஆகஸ்ட் 13 சனியன்று காலை மரியாதை நிமித்தம் மகனுடன் சென்று அவரை சந்தித்து பேசினேன். அவரை கண்டதும் பிரகாசமானவர் என்று தான் முதல் எண்ணம் எழுந்தது. அப்படி ஒருவரையும் இதற்கு முன்னர் நினைத்ததில்லை. கனிவே வடிவானவரும் கூட.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு மகனும் நானும் ஈரோடில் விழா நடக்கும் இடத்திற்கு வந்தோம். மதியமே பலர் வந்திருந்தனர். வழக்கம்போல தோழமையின் திளைப்பு. கூடிக்கூடி பேசியும் வெகுதூரம் நடந்துபோய் தேநீர் அருந்தியும் களித்திருந்தோம்
மிகச்சரியாக குறிப்பிட்ட நேரத்தில் மாலை அமர்வு சுவாமி பிரம்மானந்தாவின் உரையுடன் தொடங்கியது. இலக்கியமும் ஆன்மிகமும் கலந்த அந்த உரை எனக்கு மிகப் புதியது. சுவாமிகள் சொன்ன ’’எதுவும் தற்செயலல்ல’’ என்பதை பிறகு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் கேட்கப்பட்ட தனித்துவமான கேள்விகளுக்கு மிக தண்மையாக நிதானமாக பதிலளித்தார்.
தன்னறம் அமைப்பினர் காகிதப் பறவைகளை மண்டபம் முழுக்க ஆங்காங்கே அமைத்துகொண்டிருந்தனர்.எடையற்ற அப்பறவைகள் காற்றில் அசைந்து பறப்பது போலவே தோன்றிக் கொண்டிருந்தன.
விசாலமான கூடங்களும் மூன்று தளங்களும் ஏராளம் அறைகளுமாக நல்ல வசதியான அந்த மண்டபம் நிகழ்வுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது.
மறுநாளும் வழக்கம் போல் குறிப்பிட்ட நேரத்துக்கு அமர்வுகள் துவங்கி சிறப்பாக நடந்தது. அ.க பெருமாள் அவர்கள் தனது அமர்வுக்கு மிகுந்த சிரத்தையுடன் தன்னை தயார் படுத்திக்கொண்டது அவர்மீதான மதிப்பை மேலும் கூட்டியது நாட்டார் கலைகளில் மிகப்பெரிய ஆய்வாளர். அத்துறையில் மிகப்பெரியவர் இருப்பினும் அந்த அரங்கிற்காக அத்தனை கவனம் எடுத்துக்கொண்டார்.
அப்படியே திரு. மகுடீஸ்வரன் அவர்களும்.அவர் தூரன் அவர்களை குறித்து பகிர்ந்துகொண்ட பல விஷயங்கள் வியப்பளித்தன.
எனக்கும் ஒரு அமர்வு அளிக்கப்பட்டிருந்தது. தாவரவியல் துறை மெல்ல அழிந்து கொண்டிருப்பதில் எனக்கிருந்த நெடுங்கால மனக்குறை அன்று வெகுவாக குறைந்துவிட்டது..மிக சுவாரஸ்யமான கேள்விகள் எழுந்தன. அரங்கு முடிந்தபின்னரும் பல கேள்விகள், சந்தேகங்கள் கேட்கப்பட்டுக்கொண்டே இருந்தன.பலர் தாவரவியல் படித்திருக்கலாமென்று எண்ணுவதாக சொன்னார்கள்
இரு சிறார் பள்ளிகளில் இருந்து தாவரவியல் குறித்து உரையாற்ற அழைப்பு விடுத்தார்கள். தாவரக்குருடு என்பதை சரி செய்ய ஒரே வழி சிறுவர்களின் உலகில் தாவரங்கள் இடம்பெறச் செய்வது தான் எனவே மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். இன்றுவரையிலும் கேள்விகள் தொடர்கின்றன மின்னஞ்சலிலும் அலைபேசியிலும்
நான் தாவரங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே உருவாக்கிக்கொள்வது,தன்னுடன் உணவுக்கும் காற்றுக்கும் நீருக்கும் போட்டியிடும் களைகளை பொருட்படுத்தாமல், தன்னை உண்ண வரும் சாகபட்சிணிகளையும் கவனிக்காமல் எப்போதும் சூரியனை பார்த்து வளர்வது, தங்கள் இருப்பினாலே மனிதர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது இப்படி பல வகைகளில் அவை எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன அவற்றில் மிக முக்கியமான பாடமாக நான் கற்றுக்கொண்டது you can bloom only when you are in a right place என்பதை
அன்று அந்த இடம் அத்தனை சரியான பொருத்தமான இடமாக எனக்கு தாவரவியல் குறித்து பேச அமைந்திருந்தது.
பல்துறை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அந்த அமர்வில் தாவரவியல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க முடிந்ததில் நான் உளம் மகிழ்ந்திருக்கிறேன்
இரு நாட்களின் பல புகைப்படங்களில் நான் வாய்நிறைய சிரித்துக்கொண்டிருக்கிறேன் அப்படியான சந்தர்ப்பங்கள் எனக்கு அரிதினுமரிதாகவே அமையும். அந்த மலர்ச்சி என் உள்ளத்திலிருந்து வெளிவந்தது
சென்ற மாதம் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இத்துறையில் சேர மாணவர்கள் விருப்பப் படவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டிருந்தேன். நான் செவ்வாய்கிழமை கல்லூரி சென்றபோது அலுவலகத்திலிருந்து என்னை அழைத்து முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அந்த வார இறுதியில் முழுக்க முடிந்துவிட்டதாகவும் இனி மாணவர்களை சேர்க்கவேண்டாம் என்றும் கூறினார்கள்.. சுவாமி பிரம்மானந்தா சொன்னதுபோல’’ எதுவும் தற்செயலில்லைதான்’’
மாலை விருதுவிழாவில் விருந்தினர்களின் உரைகள் சிறப்பாக இருந்தன. கரசூர் பத்மபாரதியின் ஏற்புரை அந்த மேடைக்கான முதிர்ச்சி கொண்டிருக்கவில்லை எனினும் அவர் தன் இதயத்திலிருந்து நேரடியாக தான் உணர்ந்தவற்றை எந்த ஒப்பனையுமின்றி வெளிப்படுத்தினார்.. எனவே அந்த ஏற்புரை அசலான எளிய அழகுடன் இருந்தது.
அனைவரிடமும் விடைபெற்று புறப்படுகையில் குக்கூ ஸ்டாலின் கடற்பாசி கலந்து தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் இரண்டை பரிசளித்து என் உரை மிகவும் சிறப்பானதாக இருந்ததென்று பாராட்டினார்.
மனோ என்னும் தமிழ் முதுகலை படிக்கும் மாணவன் எனக்கொரு காகித மலரை பரிசளித்து என்னை முன்பே சந்தித்திருந்தால் தாவரவியல் தான் படித்திருப்பேன் என்றான். மனம்பொங்கிய படியே இருந்தது. வீடுதிரும்ப நள்ளிரவானது எனினும் களைப்போ உறக்கமோயின்றி மனம் உற்சாகமாக பரவசமாக நிறைவாக இருந்தது.
19 வருடங்கள் முடிந்து 20 வருடங்கள் ஆகின்றன நான் கல்லூரி ஆசிரியப்யபணியில் இணைந்து. நேற்று நான் சென்றதுபோல் அத்தனை மகிழ்வுடன் அத்தனை நிறைவுடன் முன்னெப்போதும் கல்லூரிக்குச் சென்றதில்லை.
உங்களுக்கு சொல்லிக்கொள்ள வழக்கம் போல நன்றிகள் மட்டும்.
அன்புடன்
லோகமாதேவி
அறிவியல் என்றால் என்ன?
அன்பின் ஜெ.
அண்மையில் வெளிவந்த ஒரு நூலைக் குறித்து தங்களின் (தளம்) வழியாக வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
மதம், குடும்பம், சமூகம், அரசு – ஏன் கடவுளையே ஆளாளுக்கு விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றன. சாரு நிவேதிதா அண்மையில் எழுதிய “ஔரங்கசீப்” நாவல் bynge app-யில் கிடைக்கிறது. அதில் ஒரு சாதாரண அரண்மனை ஊழியன் (அன்றிருந்த அரசர்) ஔரங்கசீபை ஓரக்கண்ணில் பார்த்துவிடுவான், அதையே அசௌகரியக் குறைவாக ராஜசபை கருதியது, பேரரசரின் கண்ணை நேருக்கு நேர் பார்த்து வெறும் 250 / 300 ஆண்டுகளுக்கு முன்பு பேச யாருக்கும் தைரியம் இருந்ததில்லை.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஊர்க் கட்டுபாட்டை எல்லோராலும் மீறிவிட முடிந்ததில்லை? 50 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் மூத்தோர், தாத்தா பாட்டியின் பேச்சை கடந்து சென்றுவிட முடிந்ததா? என பார்க்கும்போது இங்கு அனைத்து அதிகார நிறுவனங்கள் நிலைகுலைந்து போயிருப்பதை அறிந்துக் கொள்ள முடியும்.
ஆனால் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்கிற விதியின்படி இன்று அறிவியல் – இவை அனைத்து விஷயங்களின் அதிகாரத்தையும் எவ்வித கேள்வியுமின்றி எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.
அந்த தகிப்பை தணிக்கும்விதமாக ஒரு நூல் தட்டுப்பட்டது. அமெரிக்காவின் Purdue பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்பெற்ற சுந்தர் சருக்கை “What is science” என்கிற நூலை 2012-ஆம் ஆண்டு எழுதினார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழிந்த நிலையில் அது “அறிவியல் என்றால் என்ன?” என்று சீனிவாச ராமநுஜம் மொழிபெயர்ப்பில் சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நாடு விடுதலை அடைந்த போது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டபோது நேரு ஆற்றிய உரையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், நான் அதன் ஒலி நகலை அவ்வப்போது ஒலிக்கவிட்டு கேட்ப்பது வாடிக்கை.
“Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom.”
கம்பீரமாக பேசிய நேருவுக்கும், உடனிருந்த காமராஜர், கக்கன், ஜே.சி.குமரப்பா போன்ற இலட்சியவாதிகள் பலருக்கும் தோராயமாக ஐம்பது வயது இருந்திருக்கும், அதில் பெரும்பாலோர் வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் குறைந்தபட்சம் கால் நூற்றாண்டுகாலம் சிறையிலும், போராட்டத்திலும் கஷ்டப்பட்டவர்கள். எவ்வளவு பெரிய கனவு அது, என்ன பெரிய நம்பிக்கை பிரகடனம் அது.
“பல வருடங்களுக்கு முன்னர் நாம் விதியைக் குறித்த நேரத்தில் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த நேரம் வந்து விட்டது. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில், இந்தியா சுதந்திரத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது. இப்புனிதமான நேரத்தில், இந்திய மக்களாகிய நாம் மனித குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்” என்பதாக நாடு விடுதலை அடைந்தபோது துவங்கியது நேருவின் உரை. அதுமட்டுமல்ல,
… to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform; (i) to safeguard public property and to abjure violence; (j) to strive towards excellence in all spheres of individual and collective activity so that the nation constantly rises to higher levels of endeavour and achievement. அதாவது
“அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல் (ஒவ்வொரு) இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமை” என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) பிரிவு.
‘அறிவியலார்ந்த உளப்பாங்கை வளர்த்துக் கொள்வது’ இந்தியக் குடிமக்களின் கடமைகளில் ஒன்றாகவே முன்வைக்கப்படுகிறது. அறிவியலார்ந்த உளப்பாங்கைக் கொண்டிருப்பது உலகின் வேறு எந்த நாட்டிலும் அரசமைப்புக் கடமையாக முன்வைக்கப்படவில்லை. மிகவும் முன்னேறிய அறிவியல் சமூகங்கள்கூட அதன் குடிமக்களிடமிருந்து இப்படி எதிர்ப்பார்க்கவில்லை!
சுதந்திர இந்தியா பிறப்புக் கொண்ட அந்தத் தருணத்தில் அறிவியல் மீதான இந்த மோகத்தைத் தொழிற்சாலைகளோ தொழில்நுட்பங்களோ கொண்டிருக்கவில்லை என்று நம்புவதும் சாத்தியம். அறிவியல் மீதான இந்த நம்பிக்கை அப்பழுக்கற்றதாகவும் கபடமற்றதாகவும் இருந்தது. பிற நாடுகளில், பொதுமக்களின் விமர்சனப் பார்வைக்கு உட்பட்டவையாக அறிவியல் அமைப்புகள் இருக்கின்றன என்றால், இந்தியாவில் கொஞ்சமும் சமூகத் தணிக்கைகளுக்கு உட்படாமல் தனித்த தீவுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அறிவியல் என்றால் என்னவென்று பல தவறான புரிதல்கள் காணப்படுகின்றன. சமூகத்தில் அறிவியல் பெரும் செல்வாக்கு கொண்டிருக்கிறது, தாக்கம் செலுத்தி வருகிறது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் கொண்டிருக்கும் செல்வாக்கை நாம் கவனத்தில் கொள்வோம் என்றால் – அதுவும், அதில் எல்லாமும் மக்களுக்கும் சமூகத்துக்கும் நன்மை பயப்பதாக இருப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்வோம் என்றால், அறிவியலின் இயல்பை முன்பு எப்போதும்விட இப்போது புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
பொதுவாக, அறிவியல் என்பது பிரத்யேகமான அறிவு முறைமையாகவும், நாம் வாசிக்கும் ஒரு ‘வகை’ துறையாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அறிவியல் இதைவிடக் கூடுதலான ஒன்றாகிறது. அறிவியல் தான் படைக்கும் தொழில்நுட்பங்கள் ஊடாக நம்முடைய அன்றாட வாழ்வில் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் மிக முக்கிய பாடமாக இருக்கிறது. இப்படி, கற்றல் என்றால் என்ன என்பதிலும் செல்வாக்கு செலுத்துகிறது. இயற்கை உலகின் ரகசியங்களைக் கண்டறியும் ஒன்றாக முந்தைய அறிவியல் இருந்தது என்றாலும், இன்று அறிவியலார்ந்த அறிவு என்பது மருந்து தயாரித்தல், வேதியியல் தொழிற்சாலைகள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல், ராணுவ தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்ததாக இருக்கிறது.
ஆனால், இப்படியான தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் யார் தீர்மானிக்கிறார்கள்? நம் சமூகங்களுக்கும் கைப்பேசிகள் மிக அவசியம் என்று முடிவெடுத்தவர்கள் யார்? இப்படியான அறிவைப் படைப்பதில் வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள் மட்டுமே முடிவெடுக்கிறார்களா அல்லது அறிவியலாளர்களும் பொறுப்பேற்க வேண்டியுள்ளதா? தொழில்நுட்பங்களின் தாக்கத்தால், எப்படிப்பட்ட கணிணிகளைக் காட்டிலும் மானுடர்களுக்கு மிக அவசியமான இயற்கை நீர் ஆதாரங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு, பருவநிலை நெருக்கடிகளைக் கண்டு, சூழலியல் பாதிப்புகளைக் கண்டு நாம் உண்மையிலேயே கவலைப்பட வேண்டும். கைப்பேசிகள் உட்பட டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை – அதாவது, அவர்களுடைய படிக்கும் எழுதும் ஆற்றலில், கணிதவியல், கலை போன்றவற்றைச் செய்யும் ஆற்றலில் என்று மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் கொள்ளும் சமூக உறவில் ஏற்படுத்தும் பாதிப்பையும் நாம் கவனத்தில் கொள்வோம் என்றால் நாம் உண்மையிலேயே கவலைப்பட்டாக வேண்டும்.
அறிவியல் அதுவாகவே மானுட அக்கறைகளுக்கு முகம்கொடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமா அல்லது சாதாரண மக்களால் அது ஒழுங்கமைக்கப்ப்ட்ட ஒன்றாக இருக்க வேண்டுமா போன்ற கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அறிவியலாளர்கள் அவர்களுக்கென்று சொந்த சடங்குகளை, விதிகளை, அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தனித்த சாதிக் குழுமம் போலாகிறார்கள்.
இன்று மிகப் பெரும் அதிகாரத்தை அறிவியல் கொண்டிருக்கிறது. அதனால் உண்மை குறித்து அறிவியலிடமே பேச வேண்டியிருக்கிறது. இதைச் செய்வதற்கு நாம் அறிவியலை, அதன் நடைமுறைகளைத் தத்துவம், வரலாறு, சமூகவியல், பிற சமூக அறிவியல் துறைகளில் உள்ள அணுகுமுறைகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இன்று எவர் ஒருவர் அறிவியலை உண்மையாக ஆய்வுசெய்ய முயன்றாலும், இந்தியாவில் உள்ள இடது, வலது என்று இரு பக்கத்திலும் உள்ள சித்தாந்தவாதிகளால் எதிர்க்கப்படுகிறார்.
ஆனால், நாம் அறிவியலை விமர்சனபூர்வமாக ஆய்வு செய்யவில்லை என்றால், மதத் தலைவர்கள் சொல்வது குறித்துக் கேள்விகள் கேட்பதை மிகவும் கடினமாக்கும் ஒரு மதமாக அறிவியலை சுருக்குகிறோம் என்றே அர்த்தமாகிறது. நாம் இன்னும் பொறுப்புள்ள, இன்னும் மனிதத்தன்மையிலான அறிவியலைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகிறது. இது சாத்தியப்பட வேண்டுமானால் நாம் அறிவியலைத் திறந்த மனதோடு அணுக வேண்டியுள்ளது; அறிவியல் கோருவதை விமர்சனபூர்வமாகப் பார்க்க வேண்டியுள்ளது; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அறிவியலை அறிவியலார்ந்த மனப்பாங்கு கொண்டு நாம் விமர்சனபூர்வமாக ஆராய வேண்டியுள்ளது.
அறிவியலின், அதன் நடைமுறையின் சிக்கலான, செழிப்பான இயல்பைப் புரிந்துகொள்வதற்கான சிறிய முயற்சியே இந்தப் புத்தகம். அறிவியல் என்ன செய்கிறது, எப்படியான கருத்தாக்கங்களில் அது நிலைத்துநிற்கிறது, எப்படியான உறவை அது மானுடர்களோடு கொண்டிருக்கிறது போன்றவற்றை இந்தப் புத்தகம் விளக்க முயல்கிறது. சொல்லப்போனால், அறிவியலார்ந்த படைப்பாக்கம், கலைகளில் காணப்படும் படைப்பூக்கத்தோடு பல அம்சங்களைப் பகிர்ந்துகொள்கிறது. மிகக் கவனமாகச் சிந்திப்பதன் ஊடாகவே அறிவியல் அறிவு சாத்தியப்படுகிறது. என்றாலும்கூட, திடீரென ஆழ்ந்த பார்வை ஒன்று கிடைப்பது, தவறுகள் செய்வதன் ஊடாகக் கிடைப்பது, ஏதோ ஒன்றைத் தவறாக அர்த்தப்படுத்துவதன் வழியாகக் கிடைப்பது போன்றவற்றின் ஊடாகவும் அறிவியல் அறிவு சாத்தியப்படுகிறது. அறிவியலின் பலம் அதன் கற்பனாசக்தியில் உள்ளது; இந்த உலகம் எப்படியாக இருக்கிறது, இந்த அண்டம் எப்படியாக இருக்க வேண்டும் என்பன குறித்தெல்லாம் எண்ணிலடங்கா கதையாடல்களை உற்பத்தி செய்ய முயல்வதில் அதன் பலம் உள்ளது. ஆனால், அறிவியலின் இந்தப் பலத்தை நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியுள்ளது – இதை அறிவியலாளர்கள் செய்தால் மட்டுமே போதாது; குடிநபர்களும் செய்தாக வேண்டும். அறிவியல் என்பது ஏதோ மேற்கத்தியச் சிந்தனையின் விளைவானது மட்டும் அல்ல என்றும் இந்தப் புத்தகம் முன்வைக்க முயல்கிறது. இப்படி முன்வைப்பதன் அடிப்படை நோக்கம், அறிவியலை ஜனநாயகப்படுத்துவதே – அதாவது, நம் பிள்ளைகள் அறிவியலை ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒன்றாகப் பார்க்காமல் இருப்பதற்கும், அந்நியர்களால், வெள்ளையர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒன்றாகப் பார்க்காமல் இருப்பதற்கும் இது அவசியமாகிறது.
இந்தப் புத்தகத்தை 2012-ல் நேஷனல் புக் டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிட்டது. அனேகமாக இந்த நூலுக்கு பிற இந்திய மொழிகளில் – தமிழில்தான் முதன்முறையாக ஒரு மொழிபெயர்ப்பு வருகிறது, அதுவும் ஆங்கிலப் பதிப்பைவிடச் சற்றே விரிவாக்கம் என்றும் சொல்லலாம். இந்த மொழியாக்கத்தின் வழியாகத் தமிழ் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் புலத்தில் இது விவாதங்களை, உரையாடல்களைக் கொண்டு வருவதற்கான முதலடி எடுத்துவைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் காணப்படும் மேலான சமத்துவவாதம், பொதுத்தளத்தில் காணப்படும் அதன் துடிப்புமிக்க உரையாடல்களையும் கவனத்தில் கொண்டு சொல்வதென்றால் இதுபோன்ற நூல்கள் பலவும் தமிழில் வருவது மிக முக்கியமாகிறது.இது போன்ற புத்தகங்களை மொழியாக்கம் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. மொழியாக்கம் என்பதும் ஒரு கலையே. இதுபோன்ற புத்தகங்களை மொழிபெயர்ப்பவர்கள் தனித்துவமிக்க கலைஞராகிறார்கள். சீனிவாச ராமாநுஜம் போன்ற ஒரு மொழிபெயர்ப்பாளர், இந்த (நூலின்) தமிழ் வடிவத்தின் ஆசிரியராகவும் ஆகிறார். இந்த நூலிலுள்ள சிக்கலான பல விஷயங்கள் குறித்து அவர் கொண்டிருக்கும் மிக ஆழ்ந்த புரிதலை மொழியாக்கத்திற்குள் கொண்டு வருகிறார்.
இந்தியத் தத்துவார்த்த மரபுகள் உட்பட, மேற்கல்லாத பிற தத்துவ மரபுகள் எல்லாமும் அறிவறிதல் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொண்டன என்று பார்ப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியத் தத்துவ மரபுகளில் புறவயத்தன்மை – அகவயத்தன்மை, புலன்சாரா – புலன்சார் இருமைகள் ஏன் சாத்தியப்படவில்லை என்றும், மேற்கத்திய தத்துவத்தில் ஏன் இவை சாத்தியப்பட்டன என்றும் சுந்தர் இந்த நூலில் விவாதிக்கிறார்.
இந்தியத் தத்துவ மரபுகளைப் பொறுத்தமட்டில் புறவுலகம் இல்லாமல் மொழியும் இல்லை, பிரக்ஞையும் இல்லை. மொழியும் பிரக்ஞையும் இல்லாமல் புறவுலகம் எப்படியான அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. சங்க இலக்கிய அகம்-புறம் கோட்பாடு இப்படியான பார்வைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகிறது. அகப்பாடல்கள் புறத்தை விவரித்து அகத்தை வெளிப்படுத்துகின்றன என்றால், புறப்பாடல்கள் அகத்தை விவரித்துப் புறத்தை வெளிப்படுத்துகின்றன. ஏ.கே.ராமானுஜனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், சங்க இலக்கியத்தில் அகமும் புறமும் கண்ணாடியைக் கண்ணாடி பிரதிபலிப்பதுபோல் ஒன்றையொன்று பிரதிபலிக்கின்றன. இதில் மானுட எழுவாயும், பௌதிக உலகமும் ஒன்றோடொன்று கரைந்து வெளிப்படுகின்றன. அறிவியல் அறிவையும் இப்படி நுட்பமான செயற்பாங்கின் ஊடாகவே நாம் அணுக வேண்டும். இதைத்தான் இந்த நூலில் சுந்தர் சருக்கை செய்கிறார்.
ஒவ்வொரு கருத்தாக்கமும் அதற்கான வரலாற்றைக் கொண்டிருக்கிறது; அதற்கான அர்த்தபுலத்தைக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக Science, democracy, equality, liberty, fraternity, secularism போன்ற சொற்களுக்கு நிகரான சொற்கள் தமிழ், சம்ஸ்கிருதம் உட்பட எந்த இந்திய மொழிகளிலும் இல்லாததால், இந்தியச் சிந்தனைகள் இவை குறித்தெல்லாம் அக்கறை எதுவும் கொண்டிருக்கவில்லை என்ற முடிவுக்கு வர முடியுமா? Untouchability என்ற சொல்லுக்கு நிகரான சொல் இந்திய மொழிகளில் இல்லை என்பதால், சமூகத்தில் தீண்டாமை என்ற நடைமுறை இல்லையென்று ஆகிவிடுமா? ஆங்கிலக் கருத்தாக்க சொற்களுக்கு ஒத்து இந்திய மொழிகளில் சொற்கள் இல்லை என்பதால், இந்தக் கருத்தாக்கக்கள் நம் சிந்தனை மரபுகளில் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஆங்கிலத்தில் உள்ள ஒரு கருத்தாக்கத்தின் அர்த்தப்புலத்தை நம் மொழியில் உள்ள அர்த்தப்புலத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, சொற்களை ஒப்பிட்டுப் பார்த்து அந்தக் கருத்தாக்கம் நம்மிடம் இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டியதில்லை. இது சாத்தியப்பட, நாம் கருத்தாக்கச் சொற்களை நேரடித்தன்மையிலாக மட்டுமே அணுகாமல், அதை உருவகரீதியாகவும் குறிபீட்டுரீதியாகவும் அணுக வேண்டியுள்ளது.
சொல்லப்போனால், சமூக அறிவியல், தத்துவம், அறிவியல், கலை–இலக்கியம் போன்ற துறைகள் கொண்டிருக்கும் கருத்தாக்கங்களுக்கு இப்படியான எளிமையான விளக்கத்தைக் கொடுக்கும் கையேடு நமக்கு மிகவும் அவசியமாகிறது. கருத்தாக்கச் சொற்களுக்கு தமிழில் வார்த்தைகளை உருவாக்குவது மிகவும் அவசியமென்றாலும், அது மட்டுமே போதுமானதாக இல்லை. ஒரு கருத்தாக்கச் சொல்லின் அர்த்தப்புலத்தை கொடுப்பதும் அவசியமாகிறது. ஆக, பலவிதமான கருத்தாக்கங்களை நம் சிந்தனையின் பகுதியாக உள்ளிணைத்துக்கொள்ள இப்படியான கையேடுகள் நமக்கு அவசியமாகின்றன.
ஆக, தொடங்கும் விதமாக நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் : மிகச் சரியாக – அறிவியல் – என்றால் – என்ன? அறிவியல் என்று சொல்லும்போது மிகச் சரியாக நாம் எதைக் குறிக்கிறோம்? நம்மில் பெரும்பாலானோர், படிக்கும் பாடங்களின் பின்னணியிலிருந்துதான் அறிவியல் குறித்து அறிந்துகொள்கிறோம். பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களைத் தனித்தனியாக பயில்வதற்கு முன், அறிவியல் ஒரு பாடமாக நமக்குக் கற்றுத்தரப்படுகிறது.
இந்த புத்தகம் அறிவியலை வரையறுக்க முயல்கிறது. வெகுஜனக் கற்பனையில், அறிவியல் என்பது ஏரணம் (logic) பகுத்தறிவு, உண்மை, அறிவு, புத்திக்கூர்மை போன்ற கருத்தமைவுகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. இந்த புத்தகம் இந்த அனுமானங்களை மறுவாசிப்பு செய்ய முயல்கிறது – அதாவது, இவற்றையெல்லாம் அறிவியல் கொண்டிருக்கவில்லை என்று மறுக்காமல், மெய்யாக அறிவியல் என்பது எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது என்று காட்ட முயல்கிறது.
இந்தச் சிக்கலே, அறிவியல் குறித்து முன்வைக்கப்படும் எளிமையான வரையறை எதுவாக இருந்தாலும் அதை மறுதலிப்பதாக இருக்கிறது. முதல் இயல், ‘அறிவியல்’ என்ற சொல்லைப் பல்வேறு வழிகளில் நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்று விளக்க முயல்கிறது. பொதுச் சமூகத்தை பொறுத்தமட்டில் ‘அறிவியல்’ அறிவியலாளர்கள் ஆகிய இரண்டு சொற்களுமே ஒத்த பொருளைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன. சொல்லப்போனால், அறிவியலாளர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் அறிவியல் என்றே பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆக, அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு நாம் அறிவியலாளர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்று நிச்சயமாக பார்க்க வேண்டியுள்ளது. இரண்டாவது இயல், அறிவியலாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று, அதாவது அன்றாடத்தன்மையிலும் என்ன செய்கிறார்கள் என்று விவரிக்க முயல்கிறது. தர்க்கரீதியானது அறிவியல் என்ற கருத்து மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பார்வையே, அறிவியலாளர்கள் எல்லோரும் தர்க்கத்துக்கு உட்பட்டு – அதாவது, அவர்கள் அறிவியல் செய்யாதபோதும் – செயல்படுகிறார்கள் என்று கொண்டிருக்கும் பொதுவான நம்பிக்கைக்குக் கொண்டுவிடுகிறது. மூன்றாவது இயல், அறிவியலுக்கும் தர்க்கத்துக்கும் இடையேயான உறவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. இதைப் புரிந்துகொள்ள, முதலில் தர்க்கம் (logic) என்றால் என்னவென்று நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்த இயல், இந்திய தர்க்கம் உட்பட, உலகளாவிய தர்க்கம் குறித்த சில அடிப்படைகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அறிவியலின் இயல்பைப் புரிந்துகொள்ள இந்திய தர்க்கமுறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்க முடியும் என்றும் விளக்க முயல்கிறது.
அறிவியல் வேறு எந்தத் துறைகளைக் காட்டிலும் மெய்ம்மை (reality) என்ற உள்ளடக்கத்தோடு துடிப்புமிக்க ஈடுபாட்டைக் கொண்டிருக்கிறது. அறிவியல் அதன் கருவிகள் ஊடாகப் புதிய மெய்ம்மைகளைத் திறந்துகாட்டுகிறது. நான்காவது இயல், அணுக்கள், எலக்ட்ரான்கள், குவார்க்குகள், மரபணுக்கள், டி.என்.ஏ.க்கள், பாலிமர்கள் , புரோட்டீன்கள் போன்ற பலவற்றையும் மெய்யாக இருக்கின்றன என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். அறிவியல் விவரிக்கும் மெய்ம்மை எவ்வளவு சிக்கலான ஒன்றாக இருக்கிறது. அறிவு, உண்மை மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை மெய்ம்மையே நிலைகொள்ளச் செய்கிறது. நாம் தார்மீக அறிவு, மத அறிவு, அன்றாட வாழ்வுக்கான அறிவு என்று பலவிதமான அறிவுகளைக் கொண்டிருக்கிறோம். அறிவியல் அறிவு என்பது பிரத்யேகமான ஒரு அறிவாகிறது. ஐந்தாவது இயல், அறிவியல் அறிவு என்ற கருத்தமைவை எடுத்துக்கொள்கிறது. அறிவியல்களில் கணிதவியல் ஏற்கும் பிரத்யேகப் பாத்திரம் குறித்து இந்த இயல் விவாதிக்கிறது.
ஆறாவது இயல் இந்த உள்ளடக்கத்தை, அறிவியலின் பல்-பண்பாட்டு மூலாதாரம் குறித்த கோரல் உட்பட, துருவியகழ்கிறது. இந்த இயல், அறிவியல் மற்றும் அறம் குறித்து நீண்ட விவாதத்தோடு முடிகிறது. கடைசியாக எட்டாவது இயல், அறிவியல் வெற்றிகளுக்கான காரணங்களையும் அதன் போதாமைகளையும் தொகுத்துக் கொடுக்கிறது.
இந்தப் புத்தகம், அறிவியலைத் தற்போக்குத்தனமாக அர்த்தப்படுத்தும் முறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது – இதன் உள்ளடக்கமும் இந்த வரிசையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது; (1) அறிவியல் குறித்த பொதுவான பார்வையை, குறிப்பாக தர்க்கம், மெய்ம்மை, அறிவு, மானுட எழுவாய் ஆகியவற்றுடன் அது கொண்டிருக்கும் உறவை விமர்சனப்பூர்வமாகப் புரிந்துகொள்வது (2) அறிவியலை மிகத் தெளிவாகவும் எளிமையான வகைமைகளாகவும் சுருக்குவதை அனுமதிக்க மறுக்கும் சிக்கலை அறிவியல் செயல்பாடுகள் எப்படி வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்குவது. இப்படிச் செய்வதன் ஊடாக ‘அறிவியல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ஒரு அறிவியலாளரோ, அறிவியல் வரலாற்றியலாளரோ, அறிவியல் சமூகவியலாளரோ பதில் சொல்லியிருக்கும் வழியில் (சுந்தர் சருக்கை) பதில் சொல்லவில்லை. ஆனாலும், அறிவியலின் இயல்பு குறித்து நாம் பல்வேறு வழிகளில் சிந்திப்பதற்கான வழியை இந்தப் புத்தகம் திறந்துவிடும்.
இது அறிமுகப் புத்தகம் என்பதால், இது கல்விப்புல பாணியில் எழுதுவதைக் கூடுமானவரை தவிர்க்கப்பட்டுள்ளது. முதல் வாசிப்பில் புரிந்துகொள்வதற்கு சிரமமான பகுதிகள் இங்குமங்கும் சில இருக்கலாம். வாசகர்கள் இந்தப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பின்னர் இந்தப் பகுதிகளுக்குத் திரும்பிவரலாம். இந்தப் புத்தகம், அறிவியலின் இயல்பு குறித்த அக்கறையுடைய மாணவர்களும் மற்றவர்களும் மற்றவர்களும் அதுகுறித்து தாங்கள் கொண்டிருக்கும் வெகுளித்தனமான அனுமானங்களைக் கவனமாகவும் ஆழமாகவும் விசாரணை செய்வதற்கு உந்துதல் கொடுக்கும். இந்தப் புத்தகம், அறிவியலாளர்கள் கவனத்தை ஈர்ப்பதோடு, அறிவியல் செயல்பாடுகளின் அடிப்படை இயல்புகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்குப் போதுமான கருவிகளைக் கொடுக்கும். இந்தப் புத்தகம் சமூக அறிவியல் மற்றும் மானுடத் துறைகளிலும், கலைத் துறைகளிலும் உள்ள மாணவர்களுக்கும், தொழில்முறையாக இருப்பவர்களுக்குமானது. இந்தப் புத்தகம், இயற்கை அறிவியல் நிறுவனத்தோடு இன்னும் பிரக்ஞைபூர்வமாகவும் தன்னம்பிக்கையோடும் இவர்கள் ஊடாடுவதற்கு வழிவகுக்கும்.
அறிவியலின் பலம் அதன் கற்பனாசக்தியில் உள்ளது; இந்த உலகம் எப்படியாக இருக்கிறது, இந்த அண்டம் எப்படியாக இருக்க வேண்டும் என்பன குறித்தெல்லாம் எண்ணிலடங்கா கதையாடல்களை உற்பத்தி செய்ய முயல்வதில் அதன் பலம் உள்ளது. ஆனால், அறிவியலின் இந்தப் பலத்தை நாம் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியுள்ளது. – இதை அறிவியலாளர்கள் செய்தால் மட்டுமே போதாது; குடிநபர்களும் செய்தாக வேண்டும், அறிவியல் என்பது ஏதோ மேற்கத்தியச் சிந்தனையின் விளைவானது மட்டுமல்ல என்றும் இந்தப் புத்தகம் முன்வைக்க முயல்கிறது.
அறிவு என்பது சமூகத்தால் உற்பத்தி செய்யப்படும் பண்டம். மேலும் இது, அதிகாரம் குறித்த கதையாடலோடு உள்ளார்ந்து இணைந்திருக்கிறது. நிறுவன ரீதியாக நன்கு நிறுவப்பட்டிருக்கும் கட்டமைப்பின் பகுதியாக இருக்கும் தனிமனிதக் சமுகங்களே அறிவை உற்பத்தி செய்கின்றன. அறிவு பண்பாட்டு ரீதியான இடையீட்டைக் கொண்டிருக்கும் ஒன்றாகவும் இருக்கிறது – அதாவது, ஒரு பண்பாட்டுக்கு எது அறிவாக அமைப்பாக்கம் பெறுகிறதோ அது வேறொரு பண்பாட்டுக்கு அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பல பண்பாடுகளில் காணப்படும் உள்ளூர் மருத்துவ முறைமைகள். இந்த மருத்துவ முறைமைகளெல்லாம் உடலோடும் உடல்நலத்தோடும் தொடர்புடைய அறிவு முறைமைகளாக நாம் பார்ப்போம் என்றால், இவை நடைமுறையில் பயன்படுத்தும் கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் பெருமளவு வேறுபட்டதாக இருக்கின்றன என்றே பொருள்.
நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. பொதுவாக, அறிவியல் என்பது உண்மை, பகுத்தறிவு, புறவயத்தன்மை, அறிவு, மேதைமை போன்ற உள்ளடக்கங்களோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், இப்படியான நம்பிக்கைகளெல்லாம் உள்ளபடியே எந்த அளவுக்கு உண்மையானவை? ஆக, இந்தப் புத்தகம் அறிவியல் குறித்துத் தத்துவார்த்தரீதியாகச் சிந்திப்பதற்கான வழியை ஏற்படுத்தித் தருகிறது. அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான சில இந்தியச் சிந்தனைச் சட்டகங்களையும் அறிமுகப்படுத்துகிறது. அறிவியலைப் பின்னணியாகக் கொண்டு, தர்க்கம் முதல் அறம் வரை என விரிவான தளங்களைக் கையாள்கிறது. இவற்றோடு, முக்கியமான சில தத்துவக் கருத்தாக்கங்களுக்கும் அறிவியல் கருத்தாக்கங்களுக்கும் ஆசிரியர் (சுந்தர் சருக்கை) அளித்த எளிமையான விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; இது (What is Science, National Book Trust ஆங்கில பதிப்பில் இல்லாத) இந்த தமிழ்ப் பதிப்பின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
சுருக்கமாகச் சொன்னால், அறிவியலின் இயல்பு மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும், அறிவியலின் இலட்சியம் மீது பெரும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இந்த நூல் உதவியாக இருக்கும். அறிவியலை அதன் சிக்கல்களோடும், அதன் பலம் மற்றும் பலவீனங்களோடும் புரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான புத்தகம் இது.
(…அறிவியல் என்றால் என்ன : ஒரு தத்துவார்த்த வாசிப்பு நூல் உள்ளடக்கத்திலிருந்தும், மேற்கோள்களின் பகுதியையும் மாதிரியாக கொண்டு எழுதப்பட்ட அறிமுகக் கட்டுரை…)
கொள்ளு நதீம், ஆம்பூர்.
பிரமோ உஷார்!
ஜெமோ
பொன்னியின் செல்வனுக்கு நீங்கள் பிரமோ செய்துவருவது உங்கள் தொழில்தர்மம். அதுபற்றி பிரச்சினை இல்லை. ஆனால் அதற்காக இசை தெரிந்தவர் போல எழுதவேண்டாம். இசை, சினிமாப்பாட்டு பற்றி எல்லாம் உங்கள் அறிவின் தரம் என்ன என்று எல்லாருக்குமே தெரியும். உங்கள் பிரமோ கட்டுரைகள் குமட்டலெடுக்கின்றன.
சாம்நாத்
அன்புள்ள சாம்,
பொன்னியின்செல்வனுக்கு பிரமோ என்பது ஒரே ஒருவர்தான். ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுக்க பொன்னியின்செல்வனை பேச, பாட வைத்துவிட்டார். ஒவ்வொருநாளும் திரையிடப்படும் அரங்குகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதைவிட பெரிய பிரமோ எந்தச் சினிமாவுக்கும் வந்ததில்லை.இச்சூழலில் இந்த தளத்தில் நான் பிரமோ செய்து ஆவதொன்றும் இல்லை.
நான் பிரமோ செய்வது தமிழ் விக்கிக்கு… பஸ்ஸை பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதுபோல ஒரு சாகசம்… அதைப்புரிந்துகொள்ள கொஞ்சம் சூட்டிகை வேண்டும்
ஜெ
பர்ட்டன் ஸ்டெயின் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி குடவாயில் பாலசுப்ரமணியம் பொன்னியின் செல்வன் நாவல் யவனராணி- சாண்டில்யன் உடையார் -பாலகுமாரன் கல்கி எழுத்தாளர்வெண்முரசு பேட்டிகள், ஒரு மலையாளநூல்
நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருந்த நாட்களில் கே.என்.சிவராமனின் ஆர்வத்தால் குங்குமம் இதழ் மட்டுமே அதைப்பற்றி செய்தி வெளியிட்டது. மற்ற இதழ்களில் அத்தகைய இலக்கிய ஆர்வமோ கவனமோ கொண்ட எவரும் இருக்கவில்லை. ஆனால் மலையாள இதழான மாத்ருபூமி ஏழாண்டுகளில் நான்கு மிக நீண்ட பேட்டிகளை, அட்டைப்படத்துடன் வெளியிட்டது.
அந்தப் பேட்டிகளை தொகுத்து அருண் கோபி நூலாக்கியிருக்கிறார். தலைப்பு ‘அவர்களுக்கு மகாபாரதம் தெரியாது, வரலாறும்- ஜெயமோகனுடனான பேட்டிகள்’. (இங்கே அவர்கள் என்பது மலையாளத்தின் சம்பிரதாயமான அரசியல் விமர்சகர்களை, ஒரு கேள்விக்கு பதிலாக).
நூல்வெளியீடு 15 ஆகஸ்ட் 2022 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்றது. அன்று விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் ‘தமிழ்விக்கி தூரன் விருது’ விழா நடைபெற்றதனால் நான் செல்ல முடியவில்லை. மலையாள எழுத்தாளரும் மாத்ருபூமி ஆசிரியருமான சுபாஷ் சந்திரன் வெளியிட விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். இயக்குநர் மதுபால் பங்குகொண்ட நிகழ்ச்சி.
நூலின் பின்னட்டையில் ’ஜெயமோகன் என்னும் எழுத்தாளனை நோக்கித் திறக்கும் வாசல் இந்தப் பேட்டிகள்’ என சொல்லும் மதுபால் ‘காற்றில் கள்ளியங்காட்டின் ஒரு மறைந்த சரித்திரமுள்ளது. துயரார்ந்த ஒரு காலத்தின் அடுக்குகளில் இருந்து தொடர்ந்து எழுதியும், பேசியும், அசுரத்தனமான இந்த காலத்தின் எல்லா பிரச்சினைகளிலும் மென்மையாக தலையிட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஞானியும் உள்ளார்.அவரை அறிய, அந்நிழலில் அமர அருண் எடுத்த இப்பேட்டிகளால் இயல்கிறது. இந்த பயணம் ஒருபோதும் முடிவடையாமலாகுக என்னும் வேண்டுதலுடன் ஜெயமோகனின் சொற்களைக் கேட்போம்’ என்கிறார்
August 20, 2022
மொழிவழி அறிதலும் மொழியை அறிதலும்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். மதுரையில் நடைபெற்ற அபி 80 நிகழ்வில் தங்களை சந்தித்து உரையாடியதில் பெரும் மகிழ்ச்சி. உண்மையில் ஒரு வாசகனுக்கு இது மாதிரியான தருணங்கள் மீண்டும் மனவெழுச்சியுடன் செயல்புரிய ஆற்றலளிப்பவை. கவிஞரின் கவிதை வாசிப்பனுபவம் பற்றிக் கூறுகையில் அபியின் கவிதைகள் படிமங்களாக விரியும் வெளி. படிமங்களாலான உலகில் அவற்றிற்கிடையே ஒளியாகப் பயணித்து தொட்டு உரையாடும் அனுபவம். ஒரு வாசகனாக அவருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அன்றைக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி தங்களிடம் பேசுகையில் கவனிக்கும் திறன், நுண்ணறிவு, கற்பனைத் திறன் பற்றி கேள்விகள் மனதில் எழுந்தன. மொழி வழியான சிந்தனையே சரியாக கல்வியினைக் கற்க உதவும் எனக் கூறினீர்கள்.என்னைப் போன்ற ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு தங்களை சந்திக்கும் போது பரவசத்துடன் அசட்டுத்தனமும் சேர்ந்துகொள்கிறது. இன்று காலை நீங்கள் கூறியதைப் பற்றி யோசிக்கையில் சில ஐயங்கள் எழுந்தன. முதலாவதாக மொழியினைப் பற்றிய புரிதல் உண்மையில் ஆசிரியர்களுக்கு உண்டா? மொழியின் கட்டமைப்பு, அதன் தன்மைகள், சமூக அறிவியல் ஆய்வுகளில் அதன் பயன்பாடு என்ன? அடிப்படையில் மொழி எவ்வளவு சிக்கலான ஒன்று, மொழி குறித்த தனிமனிதரின் உளவியல், நவீன அறிவியலின் மொழி என மனதில் பல கேள்விகள் எழுந்தன.
மொழியைக் குறித்தான அடிப்படை புரிதல்கள் உண்மையில் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வேண்டும். ஆனால் அதை நோக்கி எப்படி பயணிப்பது. ஒரு பள்ளிக்கு உளவியல் நிபுணரின் பங்களிப்பைப் போலவே மொழியியல் அறிஞரின் பங்களிப்பும் இன்றியமையாதது என நினைக்கிறேன்.
அ.பிரசாத்
அன்புள்ள நண்பருக்கு,
மொழிவழி அறிதல் என்பதை நான் மொழியை அறிதல் அதன் கட்டமைப்பையும் இலக்கணத்தையும் கற்றுக்கொள்ளுதல் என்ற பொருளில் பயன்படுத்தவில்லை. அதாவது மொழியை அறிதலைப் பற்றி அல்ல, மொழி வழியாக அறிதலைப் பற்றித்தான் பேசினேன்
உலகப் பண்பாடுகளை ஆய்வு செய்பவர்கள் அப்பண்பாடுகளை உலகை அறியவும் அறிந்தவற்றை தொகுத்துக்கொள்ளவும் தொகுத்தவற்றை பரிமாறிக்கொள்ளவும் கடைப்பிடிக்கும் இரண்டு வழிமுறைகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று மொழி, இன்னொன்று அடையாளங்கள்.
அடையாளங்களை குறிப்பான்கள் (Signs) குறியீடுகள் (Symbols) படிமங்கள் (Images) என பலவகையாகப் பிரிக்கலாம். மானுடப் பண்பாடு முழுக்கவே முடிவில்லாத அடையாளங்களால் ஆனது. நமது ஆசாரங்கள், வாழ்க்கைமுறைகள், தெய்வங்கள் எல்லாமே அடையாளங்கள் தான். நாம் அணியும் ஆடைகள், நாம் பயன்படுத்தும் கருவிகள் எல்லாமே அடையாளங்களும்தான். ஒவ்வொரு நாளும் நாம் பேசும் மொழியிலிருக்கும் குறியீடுகள்தான் நம் அகத்தையும் உருவாக்கியிருக்கின்றன
ஒவ்வொரு கணமும் நம்மைச் சூழ்ந்துள்ள எல்லாப் பொருட்களையுமே நாம் வெவ்வேறு அடையாளங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். அடையாளங்களாக மாற்றப்படாத ஒரு பொருளை மனிதனால் அறியவே முடியாது. பயன்சார்ந்து, குறியீடு சார்ந்து எல்லாப்பொருளும் ஏதேனும் அடையாளத்தை தன்மேல் ஏற்றிக்கொண்டிருக்கிறது. ஆகவே அடையாளங்களின்வெளி என்பது ஒரு பண்பாட்டின் பொருள் வடிவம் தான்.
இன்னொன்று மொழி. மொழி என்பது அவ்வடையாளங்களை தொகுத்துக்கொள்ளும் பொருட்டு, கையாளும் பொருட்டு நாம் உருவாக்கிக்கொண்ட ஒன்று. அதை இரண்டாகப் பிரிக்கிறார்கள். அடையாளங்களுக்கு நாம் அளிக்கும் ஒலிக்குறிப்புகள் சமஸ்கிருதத்தில் வைகரி என்றும் ஆங்கிலத்தில் Parole என்றும் குறிப்பிடப்படுகின்றன. அவ்வடையாளங்களுக்கு நாம் நமக்குள் அளித்துக்கொள்ளும் அர்த்தப்பெருக்கு என்பது Langue என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. அது நம்முள் உள்ள மொழி. இந்திய மொழியியலும் யோகவியலும் அந்த அகமொழியை மத்யமா, பரா, பஸ்யந்தி என்னும் மேலும் மூன்று அடுக்குகளாக உருவகிக்கின்றன. அடையாளங்களும் அவற்றை ஒருங்கு சேர்க்கும் அடித்தளமாக அமையும் மொழியும் இணைந்ததே நமது சிந்தனை.
அண்மையில் காட்சி ஊடகத்தின் மிகைப்பெருக்கம் காரணமாக ஒலி, மொழி வடிவம் தளர்வுறுகிறது. வெறும் காட்சிகள் மட்டுமே நம்மால் அடையப்படும்போது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற அடையாளங்களால் ஆனதாக நம் மனம் மாறிவிடுகிறது. அடையாளங்களைத் தொகுக்கவும் கையாளவும்கூடிய நமது திறன் அழிகிறது. ஆகவே தான் மொழியை நான் அறிதலின் அடிப்படையாக முதன்மைப்படுத்துகிறேன்.
மானுடவியலாளர்கள் சமூகங்களைப்பிரிக்கையில் இந்த பிரிவினைக்கோட்டை வெவ்வேறு வகையில் போடுவதைப் பார்க்கலாம். பழங்குடிச் சமூகங்கள் மற்றும் தேங்கிப்போன சமூகங்கள் அடையாளங்களை முதன்மைப்படுத்துவனவாகவும் மொழித்திறன் குறைவானவையாகவும் இருக்கின்றன. வளர்ந்த சமுதாயங்கள், செயலாற்றலும் அதற்கேற்ற அறிவுத்திறம்னும் மிகுந்த சமூகங்கள் மொழித்திறன் கூடியவையாக உள்ளன.
வரலாற்றைப்பார்க்கையில் மொழியை எழுத்துவடிவாக்கி, நூல்வடிவமாக்கி நிலைப்படுத்திக்கொள்ளும் சமூகங்களே உயர்நாகரீகம் கொண்டவை. மொழிமையத்தன்மை (Logocentrism) என்று பண்பாட்டாய்வாளர் லுட்விக் க்ளேஜ் குறிப்பிடும் கருத்து இன்று மிகப்பரவலாக பயன்படுத்தபடுகிறது.
ஏனெனில் அடையாளங்களின் வெளியாகப் பரந்திருக்கும் பிரபஞ்சத்தை ஒரு மனிதன் தனக்குள் தொகுத்துக்கொள்வது மொழி வழியாகத்தான். ஒரு பொருளுக்கு மனிதன் அளிக்கும் அனைத்து அர்த்தங்களும் சொல் எனும் அடையாளம் வழியாகத்தான் மனிதனுக்குள் நிலைகொள்கின்றன. நீங்கள் பார்த்த ஒன்றை, அறிந்த ஒன்றை மொழியாக ஆக்கத்தெரியவில்லை என்றால் உங்களுக்குள் அது எவ்வகையிலும் தொகுக்கப்படவில்லை என்றுதான் பொருள். அது எந்த வகையிலும் உங்களுக்குப் பயனற்றது என்பதே உண்மை
மணிக்கணக்காக திரைப்படங்களை இன்று பார்க்கிறார்கள். பல்வேறு காட்சி ஊடகங்களில் மூழ்கிக்கிடக்கிறார்கள். ஆனால் ஓர் எளிய சிந்தனையைக்கூட உருவாக்க முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அதே அளவு பொழுதை அவர்கள் புத்தகங்களுக்கு செலவழித்திருந்தார்கள் என்றால் அவர்களுடைய சிந்தனைத்திறன், வெளிப்பாட்டுத்திறன் இரண்டும் மிக வலுவடைந்திருப்பதை பார்க்கலாம்.
ஏனெனில் வெறும் காட்சிப்படிமங்கள் எவ்வகையிலும் அறிவாக ஆவதில்லை. இன்று தாங்கள் காட்சி ஊடகங்கள் வழியாகத் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டிருக்கிறோம் என்னும் மாயை இந்தியா போன்ற பின் தங்கிய நாடுகளில் மிக வலுவாக உள்ளது. மேலைநாட்டுக் கல்விமுறை அந்த குறைபாடைக் கண்டடைந்து விலக்கி மீண்டும் மொழிவழி அறிதலுக்காக சென்று கொண்டிருக்கிறது.
அதாவது, பழங்காலத்திலிருந்த பிரிவினை மறுபடியும் வருகிறது. வெறும் அடையாளங்களாலான அறிதல்கொண்டவையாக, மொழித்திறன் குறைவானவையாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் மாறிக்கொண்டிருக்கையில் மொழித்திறன் கொண்டவையாகவும் வளர்ந்த அறிவுத்திறன் கொண்டவையாகவும் மேலைநாடுகள் ஆகிக்கொண்டிருக்கின்றன. நாம் நவீனப்பழங்குடிகள். இந்த வேறுபாட்டையே நான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.
பின்நவீனத்துவகாலகட்டத்தில் மொழியியலாளர் சசூர் போன்றவர்கள் எழுத்துமையவாதத்தை கடந்து வாய்மொழி மரபுகளை நோக்கிச் செல்வதை முன்வைத்தனர். எழுத்துமொழி அதிகாரம் சார்ந்தது என்றும் வாய்மொழி அதற்கு எதிரானது என்றும் கூறினர். ஆனால் அந்தக் கொள்கை நடைமுறையில் வாய்மொழி மரபுகளை எழுத்துமொழிக்குள் கொண்டுவருவதாகவே முடிந்தது. இன்று உருவாகியிருப்பது முற்றிலும் வேறொரு சூழல். இன்றும் எழுத்தே அதிகாரம். வாய்மொழி மரபை செவிவழி அறிதல் என்றால் இன்றிருப்பது கண்வழி அறிதல். கண்வழி அறிதலை பரப்பி நிலைநிறுத்துவதன் வழியாக இன்று பெருவாரியான மக்களை அறிவதிகாரத்தில் இருந்து வெளியே தள்ளுகிறார்கள். அவர்களை நவீனப்பழங்குடிகளாக ஆக்கி அவர்கள்மேல் ஆட்சி செய்கிறார்கள்.
மொழி வழிக்கல்வியை நோக்கி நாம் மீண்டும் வலுவாகத் திரும்பியே ஆகவேண்டும். இலக்கியம் அதில் மிக முக்கியமான பங்களிப்பாற்றுகிறது. மொழிவழி அறிதல் ஒருவனின் அறிவை அவன் உள்ளமாக, சிந்தனையாக, அகப்பேச்சாக, வெளிப்பாடாக மாற்றிச் சேர்க்கிறது. அவனிலிருந்து அது திறன்மிக்க வெளிப்பாடாகவும் வெளிவருகிறது. அதற்கான பயிற்சியை அவனுக்கு அளிக்காதவரை அவனுக்கு அளிக்கப்படும் எதுவுமே அவனுள் தங்குவதில்லை.
புத்தக வாசிப்பு என்பதை திரும்ப திரும்ப நான் முதன்மைப்படுத்துவது இதற்காகத்தான். புத்தகங்கள் வாசிக்காத, காட்சியூடகம் வழியாகவே அறிவை அடைந்த ஓர் அறிஞனை நான் இதுவரை அறிந்ததில்லை, கேள்விப்பட்டதுமில்லை. அது இயல்வதுமல்ல. நான் சுட்டிக்காட்ட விரும்புவது அதைத்தான்.
அந்த மொழியை பிழையின்றி பயன்படுத்துவது, தேவைக்கேற்ப உருமாற்றி கையாள்வது ஆகிய இரண்டிற்குமான பயிற்சியே மொழிப்பயிற்சி. மொழி வழி அறிதலின் இரண்டாம் படிநிலையே மொழிப் பயிற்சி. அதாவது மொழிவழி அறிதலுக்கான ஒரு தகுதிப்பயிற்சி அது. ஒருவன் மொழி வழியாக அறிதலை நிகழ்த்தாமல் வெறுமே மொழியை மட்டும் அறிந்துகொண்டிருந்தால் வரட்டு இலக்கணவாதியாகிவிடுவான். இலக்கணத்தைப் பயில்வது என்பது ஒருவருக்குள் இருக்கும் மொழித்திறனை செம்மைப்படுத்திக் கொள்வதற்கான பயிற்சியே ஒழிய, அது எந்த வகையிலும் அறிவுப்பயிற்சி அல்ல.
இலக்கணம் மட்டுமே தெரிந்த ஒருவர் பலசமயம் வெறுமே மொழியில் நின்றுவிடவும் கூடும். மொழியை வெறும் ஒழுங்கு முறையாக மட்டுமே உணர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருக்கவும் கூடும். இலக்கணவாதிகள் பெரும்பாலும் அறிவுத்தேக்கம் அடைந்தவர்கள் என்பதைக்காணலாம். மொழிவழி அறிதல் என்று நான் சொல்லும்போது நூல்களைக் கற்றல், கற்றவற்றை மொழியில் வெளிப்படுத்துதல் ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிடுகிறேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



