Jeyamohan's Blog, page 730
August 20, 2022
சேலை சகதேவ முதலியார்
சேலை சகதேவ முதலியாருக்கும் பெண்களின் ஆடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் சென்னையை அடுத்த சேலை என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரின் இன்றைய பெயர் என்ன என்று தெரியவில்லை. சென்ற நூற்றாண்டில் தமிழ்ப்பாடநூல்கலை வடிவமைத்தவர்களில் ஒருவர்
சேலை சகதேவ முதலியார் – தமிழ் விக்கி
தெரியாமல் தொட்ட வீணை
அறியாதே அறியாதே அனுராக வீணயில்
என்றே விரல் ஒந்நு தொட்டு.
அதில் நிந்நும் ஒழுகும் ஒரு கான பல்லவி
நின்னே குறிச்சுள்ளதாயி –சகி
நின்னே குறிச்சுள்ளதாயி.
நின் நிற யௌவனம் ராகமேகி.
நின் மன ஸ்பந்தனம் தாளமேகி.
ஆலாபனங்களில் நின் ஸ்வரங்கள்
பீயூஷதாரகள் பெய்து நில்பூ.
நின் மிழிப்பூக்களென் ஸ்வப்னமாயி.
நின் ருது ஃபங்கி என் மோகமாயி.
ஒரு மூக வேதியில் நின் பதங்கள்
ஒரு நிருத்த மண்டபம் தீர்த்து நில்பூ.
பாடல் பூவச்சல் காதர்
ஏ.டி.உம்மர்இசை ஏ.டி.உம்மர்
பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்
படம் : இதா ஒரு திக்காரி (1981)
(தமிழில்)
தெரியாமல் தெரியாமல் காதலின் வீணையில்
என் விரல் பட்டுவிட்டது
அதிலிருந்து எழும் ஒரு பாடலின் பல்லவி
உன்னைப்பற்றியதாக இருந்தது. சகி
உன்னைப் பற்றியதாக இருந்தது
உன் நிறைந்த இளமை ராகமாகியது
உன் இதயத்துடிப்பு தாளமாகியது
ஆலாபனைகளில் உன் சுவரங்கள்
தேன்மழையாகப் பெய்து நிற்கிறது
உன் விழிப்பூக்கள் என் கனவாயின
உன் பருவத்தின் அழகு என் மோகமாகியது
அமைதியான மேடையொன்றில் உன் பாடல்வரிகள்
ஒரு நடனமண்டபம் எழுப்பி நிற்கிறது.
க.நா.சு காணொளி அரங்கு, அமெரிக்கா – யுவன் சந்திரசேகர்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். ஆகஸ்ட் 6, 2022, க.நா.சு. உரையாடல் அரங்கு நிகழ்வில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இனிதே நடந்தேறியது. அன்று வெவ்வேறு உரையாடல்கள் / நிகழ்வுகள் இருந்ததால், வழக்கத்துக்கு மாறாக எண்ணிக்கையில் குறைவான நேயர்கள் வந்ததுபோல் ஒரு தோற்றம் இருந்தது. zoom-ல் தெரிந்த எழுத்தாளர்கள் நண்பர்கள் சுனீல் கிருஷ்ணன், சுஷில் குமார், KP வினோத், லோகமாதேவி, ரம்யா என ஒவ்வொருவரும் வணக்கம் சொல்ல, நலம் விசாரிக்க, நிகழ்வு களை கட்டியது. யுவன் அவர்களும் பத்து நிமிடம் முன்னரே வந்துவிட்டார். இணையத்தின் வழியாக காப்பியோ டீயோ கொடுக்கமளவு இன்னும் தொழில் நுட்பம் வளரவில்லையாதலால், புன்னகையையும் வணக்கங்களையும் பரிமாறிக்கொண்டோம்.
ஒருங்கமைப்பாளர், ஜாஜா, ஊரடங்கு காலத்தில் நாம் ஒருங்கிணைத்த இணைய நிகழ்வுகளை நினைவு கூறி, அதன் வழியாக நாம் அந்தக்காலத்தை இனிதே கடந்து வந்ததையும், தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான க.நா.சு-வின் நினைவாக உரையாடலை மீண்டும் துவக்கும் முக்கியவத்தை எடுத்துச் சொல்லி நிகழ்வை துவக்கிவைத்தார். விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார், கபிலரின் ‘வேரல் வேலி’ பாடி இலக்கிய கூட்டத்திற்கான மன நிலையை ஏற்படுத்திக்கொடுத்தார். ராஜன் சோமசுந்தரம் , இசையமைத்து ஜெயஸ்ரீ பாடி சந்தம் இசைத்தொகுப்பில் வெளி வந்த பாடல்தான் என்றாலும், இதை மேலும் சில மாற்றங்களை செய்து பாடியதால், நாங்கள் அதில் ஒரு புதுமை இருந்ததை உணர்ந்தோம். யுவனும் , மகிழ்ந்து விஷ்ணுப்ரியாவை பாராட்டினார்.
நான் , கரட்டுப்பட்டி கிருஷ்ணனாக , கொஞ்சம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள், கொஞ்சம் எப்படி யுவனின் படைப்புகள் எனக்கு அணுக்கமாயின என்று ஒரு உரையாடினேன் (ஊசலாடினேன்?). விஸ்வநாதன் மகாலிங்கம், யுவன் அவர்களின் நீர்ப்பறவைகளின் தியானத்தை முன் வைத்து சிறு உரையாற்றினார். பத்துக்கதைகள் உள்ள அந்தப் புத்தகத்தில், அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் போல 37 கதைகள் என்று வாசகனாக அவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவரது உரை, யுவனின் கதைகளை வாசிக்காத வாசகர்களுக்கு புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் வகையில் அமைந்தது. ப்ளாக் வைத்துக்கொள்ளாத யுவன் அவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்று தனது background screen-ல் நீர்ப்பறவைகளின் தியானம் நூல் வாங்க QR code வைத்திருந்தார்.
யுவனுடன், நிகழ்வுக்கு முன்னர் பேசிய உரையாடல்களில் அமெரிக்காவில் இருக்கும் நீங்கள் எல்லோரும் எப்படி என் புத்தகம் வாங்குவீர்கள் என்று கேட்டார். அமேசான் தான், அதில் யுவன் என்று தேடினால் இரண்டு பக்கங்களுக்கு புத்தகங்கள் வருகிறது. ஸ்டார் பக்ஸ் காப்பியைவிட நூல்கள் மலிச்சம்தான், நண்பர்கள் வாங்கிபடிப்பார்கள் என்றேன். “அமேசானில் பெயரற்ற யாத்ரீகன் கிடைக்கிறதா?” என்றார். எங்கள் ஊர் பெட்டிக்கடைக்காரரைப் போல அதுதான் இல்லை என்றேன். ஆனால், அதையும் படித்து , வேணு தயாநிதி பேசுவதற்கு தயாராக வந்திருந்தார். ‘கவிதை என்றால் என்ன?’ என்று கேட்கும் சூழ் நிலை இன்னும் உள்ளது என்பதாலோ என்னவோ, வேணு ஜென் கவிதைகள் பற்றி சிறு விளக்கத்துடன் ஆரம்பித்து, யுவன் மொழியாக்கம் செய்த சீன / ஜப்பானியக் கவிதைகளை வாசித்து, நிலவின் வெளிச்சத்தை மட்டும் விட்டுச் செல்லும் திருடனை அறிமுகப்படுத்தினார்.
இதற்கு அப்புறம் கேள்வி பதில் நேரம். யுவனிடம் கடிவாளத்தை கொடுத்தபிறகு உரையாடல் நிற்குமா என்ன? ஒவ்வொரு கேள்விக்கும் சிரிக்க சிந்திக்க என்ற பாணியில் அவர் பதில் இருக்க, நேரம் போவதே தெரியாமல் நிகழ்வு நடந்தது. வாசகர்களும் சரி, யுவனும் சரி நிகழ்வை மேலும் இரண்டு மணி நேரங்கள் தொடர்ந்திருந்தாலும் கலகலப்பாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டு சென்றிருப்பார்கள். நம் நிகழ்வுகளில் நேரத்திற்கு கொடுக்கும் கட்டுப்பாட்டை எடுத்துச் சொல்லி அரை மனதுடன் நிறைவு செய்தோம்.
நிகழ்வு முடிந்து , இங்கெ அங்கே என்று மட்டும் திருத்தங்கள் செய்து அன்று இரவே vishnupuramUSA தளத்தில் முழு உரையாடலும் கிடைக்கும்படி செய்துவிட்டோம்.
அ. முத்துலிங்கம் அவர்கள் நிகழ்வுக்கு வரமுடியவில்லை என்பதால், நிகழ்வின் நிரலை அனுப்பி வைத்திருந்தேன். முழு நிகழ்வையும் பார்த்துவிட்டு, யுவன் அவர்களின் மனம் திறந்த பதில்களையும், மொழியாக்கங்கள் குறித்த யுவனின் அனுபுவப்பூர்வமான தெளிவான பார்வையையும் பாராட்டி பதில் எழுதியிருந்தார்.
க.நா.சு உரையாடல் அரங்கில் இணையவழி உரையாடல் தடங்களின்றி நடைபெற பின்னணியில், நண்பர்கள் ஸ்கந்த நாராயணன் , பிரகாசம் உதவி செய்தார்கள். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கும், உங்களின் வழி நடத்தலுக்கும் நன்றி.
அன்புடன்,
சௌந்தர்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா
vishnupuramusa@gmail.com
ஒளி நின்ற கோணங்கள்- தாமரைக்கண்ணன்
குப்பம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆசிரியர் பத்மநாபன் இதில் கலந்துகொள்ள வந்திருந்தார். நெடுநேரம் அவர் கைகளைப்பற்றிக்கொண்டு அலைந்தேன், மென்மையான கைகள், இனிமையான குரல். கிளப்ஹவுஸ் செயலியில் இராமாயண வாசிப்பு அமர்வுகளில் அவர் அறிமுகமானவர். குரலைக்கேட்டவுடனே என்னைக் கண்டுகொண்டார்
ஒளி நின்ற கோணங்கள்கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை 20 – அறிவிப்பு
நண்பர்களுக்கு வணக்கம்.கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 20 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான “இந்திரநீலம்” நாவலின் பின்வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.பகுதிகள்:4. எழுமுகம்5. கதிர்விளையாடல்6. மணிமருள் மலர்இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில், மாதாந்திர நாவல் வாசிப்பு வரிசையில் லியோ டால்ஸ்டாய் அவர்களின் ‘அன்னா கரீனினா’ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.நாள் : 28-08-22, ஞாயிற்றுக்கிழமை.நேரம் : காலை 10:00இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9தொடர்பிற்கு :பூபதி துரைசாமி – 98652 57233நரேன் – 73390 55954
August 19, 2022
மலரிலிருந்து மணத்துக்கு…
நீங்கள் அவ்வப்போது பழைய பாடல்களுக்கு அளிக்கும் விளக்கங்களை வாசிக்கிறேன். ஆனால் நம் பக்தி மரபில் பெரும்பாலும் தோத்திரப்பாடல்கள்தானே உள்ளன. முருகா உனக்கு அதைத்தருகிறேன் இதைத்தருகிறேன், எனக்கு நீ இதையெல்லாம் தரமாட்டாயா என்ற மாதிரியான பேரம்பேசல்கள். நீ அப்படிப்பட்டவன் அல்லவா, இன்னாருக்கு மருமகன் அல்லவா, இன்னாருக்கு பிள்ளை அல்லவா, இத்தனைபெண்களுக்கு கணவன் அல்லவா, என்பதுபோன்ற துதிகள். இவற்றை ஒருவன் மனப்பாடம்செய்து தினமும் சொல்லிக்கொள்ண்டிருப்பதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
எங்கள் அப்பா முருக பக்தர். சின்ன வயதில் எங்களுக்கு அவர் முருகபக்திப்பாடல்களை சொல்லிக்கொடுத்து மனப்பாடம்செய்ய வைத்தார். பிரம்புநுனியில்தான். ஒரு சொல் தவறினாலும்கூட செம அடி விழும். அதனாலேயே எனக்கு இந்த துதிகள் மேல் ஒரே கசப்பு. அப்பாவுக்கு பணம் தவிர வேறு நோக்கமே கிடையாது. ‘உருவாய் அருவாய்…’ என்று அவர் தினம் முருகனைத் துதிப்பதுகூட அந்தப்பாடல் முழுக்க ‘ரூபாய் ரூபாய்’ என்ற சத்தமாக மாறி காதில் விழுவதனால்தான் என்று என் அம்மா சொல்லி சிரிப்பார். எங்களை எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்புவதைப்பற்றி மட்டுமே எங்கள் அப்பா நினைத்தார். அந்தக்கனவை நிறைவேற்றிக்கொண்டார்.
இப்போது அவ்வப்போது சம்பந்தமில்லாமல் இந்த வரிகள் நினைவுக்கு வரும். என் அப்பா இவர் என்பதை எப்படி மாற்ற முடியாதோ அதேமாதிரி இந்த வரிகளையும் இனிமேல் மனதில் இருந்து மாற்றமுடியாது என எண்ணிக்கொள்வேன். மற்றபடி அப்பாகாலத்து பழைய மேஜை போல என்னுடன் இருந்துகொண்டிருக்கிறது இந்த வரி.
கணேசமூர்த்தி.
அன்புள்ள கணேசமூர்த்தி,
அமெரிக்காவில் செல்லுபடியாகக் கூடிய புதிய தோத்திரங்கள், டாலர் டாலர் என்று ஒலிக்கக்கூடியவை, எவற்றையாவது நீங்கள் கற்றுக்கொள்ளலாம். நடைமுறைக்கு உதவியாக இருக்கும். எப்படியும் எவரையாவது துதிபாடிக்கொண்டுதானே இருக்கிறோம். நாம் துதிபாடினால் நம்மை அற்பமாக எண்ணாத ஒருவரை, அவர் கற்பனையே ஆனால்கூட, துதிபாடுவதனால் தவறில்லை. முகத்துதிக்கு முருகத்துதி ஒன்றும் பெரிய தப்பு கிடையாது.
இந்து ஞான மரபில் எதுவுமே விதி இல்லை. உங்களுக்கு துதிகள் பிடிக்கவில்லை என்றால் அதை நீங்கள் தாண்டிச்செல்லலாம். செல்வதற்கான வழி நீளம் அதிகம். ஏறுவதற்கான படிகளும் அதிகம். அவற்றில் உங்கள் மூதாதையர்களின் காலடிகளை கொஞ்சம் கவனித்தால் நீங்கள் காணமுடியும்.
துதிகள் என நீங்கள் சொல்லும் பெரும்பாலான பாடல்கள் பேரளவிலான பாடல்களில் இருந்து நம் மரபால் நெடுங்கால ஈடுபாட்டின் விளைவாக மெல்லமெல்லத் தேர்வுசெய்யபப்ட்டவை. எவர் எப்படி இப்பாடல்களை முன்னே கொண்டுவந்தார்கள் என அறிவது சாத்தியமாக இல்லை. அவை தானாகவே மேலே வந்துள்ளன என நம்புவதே சிறந்ததாக இருக்கிறது.
இப்பாடல்கள் வெறும் துதிகள் அல்ல. துதியே போதும் என்றால் நீங்கள் இதே சொற்களில் இப்படியேதான் துதித்தாகவேண்டும் என்ற கட்டாயம் எங்கே வருகிறது? இவை தியானமந்திரங்களாகவே நம் மரபால் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
தியான மந்திரங்கள் அல்லது ஆப்தவாக்கியங்கள் என்பவை எளிமையான வரிகள் அல்ல. அவை ஒரு ஆழ்ந்தநிலையில் இருந்து வெளிப்பாடு கொண்டவை. ஆகவே அவற்றினூடாக நாம் ஆழ்ந்த நிலை ஒன்றை அடைய முடியும். அவற்றில் நாம் முடிவிலாது ஆழ்ந்து செல்ல பாதை இருக்கும்
தியான மந்திரங்களை முதலில் அவற்றின் சொல்லமைப்பு மாறாமல் மனப்பாடம் செய்யச் சொல்கிறார்கள். பெரும்பாலான குருமரபுகளில் தியான மந்திரங்களை குரு விளக்குவதே இல்லை. சொற்களை மட்டுமே அளிக்கிறார். அச்சொற்கள் வழியாக மீண்டும் மீண்டும் நமது பிரக்ஞை ஓடிக்கொண்டே இருந்தது என்றால் அவற்றின் பொருள் திறந்துகொள்ள ஆரம்பிக்கும். பின்னர் நம் ஆழ்மனம் அவற்றின்மேல் திறந்து கொள்ளும். முடிவிலாத படிம வெளியாக அது விரியத்தொடங்கும்.
சிறுவயதிலேயே செய்யுட்களை குழந்தைகளுக்கு அளிக்கும் வழக்கம் எவ்வாறு உருவானதென்றால் அச்செய்யுளின் வரிகள் எந்நிலையிலும் அவர்கள் மனதில் இருக்கும் என்பதனால்தான். வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் அவை அனுபவத்தின் , சிந்தனையின் நீர் பட்டு முளைத்தெழும். நிழல்மரமாக ஓங்கி வளரும். விதை எப்போதும் கூடவே இருக்கட்டும் என்ற எண்ணமே அவற்றை விதைக்கச் செய்கிறது.
பிரம்பாலடித்துச் சொல்லிக்கொடுத்தலை நான் ஆதரிக்கவில்லை. அது நம் அப்பாக்கள் ஆசிரியர்களின் வழி. அப்படி பிரம்பாலடித்துத்தான் உங்களுக்கு ஆங்கில அகரவரிசையையும் கணிதபாடத்தையும் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அவற்றை நீங்கள் வெறுத்தது போல தெரியவில்லை. கணிப்பொறியியலில் அவை கூடவருகின்றன அல்லவா?
நீங்கள் சொன்ன அந்த ‘ரூபாய்’ பாடல் கந்தருனுபூதியில் வருகிறது. அருணகிரிநாதர் எழுதியது. அருணகிரிநாதரின் ஏராளமான பாடல்கள் பொதுவான பக்திப்பாடல்களாக படிக்கப்படுகின்றன. ஆனால் தமிழில் திருமூலரின் திருமந்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகிய நூல்கள்தான் மிகக்குறைவாக பொருள்கொள்ளப்பட்ட நூல்கள். அவற்றின் பெரும்பகுதிப்பாடல்களின் சரியான பொருளை உணர்ந்த உரைகளே குறைவு.
அதிலும் அருணகிரிநாதர் நுட்பமான சம்ஸ்கிருத தத்துவக் கலைச்சொற்களை தாராளமாகவே பெய்து தன் பாடல்களைப் பாடியிருக்கிறார். இருபெருமொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உடைய ஒருவரால் மட்டுமே அந்நூலின் அகம் காணமுடியும், அனுபூதியும் கனியுமென்றால். கந்தரனுபூதியும் அப்படிப்பட்ட நூலே.
நீங்கள் சொன்ன கவிதை இது. பெரும்பாலான சைவர்களுக்குத் தெரிந்த பாடல் இதுவாகவே இருக்கும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
மிக எளிமையாக ‘முருகனே நீ வந்து எனக்கு அருள்வாய்’ என்று கூவும் வரிகள் இவை என நம்மில் பலர் சொல்லலாம். ஆனால் இவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒரு கூர்ந்த மனம் அடையும் பொருள்நிலைகள் முடிவிலாதவை.
முருகனை பரம்பொருளாகக் கண்டுவணங்குகிறது இக்கவிதை. பொதுவாக நம் மரபில் உருவம் கொண்ட எந்த ஒரு தெய்வத்தையும் தோத்திரங்களில் உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவகித்துப் பாடுவதே வழக்கம்.
அந்தப் பரம்பொருளின் சித்திரத்தை இக்கவிதை அளிக்கும் விதமே கூர்ந்து கவனிக்கவேண்டியது. ‘உருவமாகவும் அருவமாகவும், மொட்டாகவும் மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதன் உயிராகவும், செயலாகவும் அதன் விதியாகவும் இருப்பவனே நீ குருவாக வந்து அருள்வாய்’ என்று இறைஞ்சுகிறது.
இந்தவரிகளில் அருவமான பரம்பொருள் உருவவடிவம் கொண்டு வருவதன் ஒரு நுண் சித்திரத்தை அருணகிரிநாதர் அளிக்கிறார். இப்பிரபஞ்சவெளியின் சாரமாக உள்ள அலகிலா ஆற்றல், அல்லது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ள பெருங்கருத்து, அல்லது இப்பிரபஞ்சமேயாக மாறித்தெரியும் அது எவ்வாறு நாமறியும் நூறாயிரம் பொருட்களாக, அவற்றில் நாம் கண்டு வணங்கும் தெய்வங்களாக, உருமாற்றம் கொண்டது? இன்றைய இயற்பியலாளனின் பெருவினாவும் அதுவே என நாம் அறிவோம்.
‘உருவாய் அருவாய்’ என்ற எதிரீடு முதலில் முன்வைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்துமே உருவமாக உள்ளன. அவ்வுருவங்கள் அனைத்துமாக தன் இறைவனை உருவகிக்கும் இக்கவிதை பொருள்வயப்பிரபஞ்சமாகவே அவனை முன்னிறுத்துகிறது. அந்தப்பொருள்வயப்பிரபஞ்சம் அல்லாத அருவமான வெளியாகவும் அவனை உருவகிக்கிறது.
உருவம் கொண்ட இறைவடிவமாகவும் உருவமில்லாத இறைவடிவமாகவும் இருப்பவன் எனச் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கு இணையாக பிற எதிரீடுகளை வைத்துச் செல்கிறது கவிதை. ‘உள்ளதாகவும் இல்லாததாகவும்’ என்பது அடுத்த எதிரீடு. உள்ளது உருவம். இல்லாதது அருவம். உள்ளவை எல்லாம் அவனே. இல்லை என்ற நிலையிலும் அவனே இருக்கிறான். பெருவெளியில் இன்மையும் கூட ஓர் ஆற்றலாக, பரம்பொருளின் இருப்பாக ஆகலாம். அது இல்லாமல் இருக்கும்நிலைகூட அதுவே!
அடுத்த எதிரீடு எளிய உவமை. ‘மொட்டாகவும் மலராகவும்’ என்ற வரி இந்திய வேதாந்த மரபை உணர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்கும். ‘பரம்பொருள் அருவ நிலையில் இருந்து உருவமாகி வருகிறது’ என்பதே வேதாந்த தரிசனம். அருவநிலையே உண்மையானது, உருவநிலை அந்த அருவநிலை உருவாக்கும் ஒரு மாயத்தோற்றமே என அத்வைதம் வாதிடும்.
ஆனால் இந்த வரி உருவப்பிரபஞ்சத்தை முதல்நிலை உண்மையாக முன்வைத்து அதன் நுண்வடிவமாக அருவநிலையை உருவகித்துக்காட்டுகிறது. உருவத்துக்கு மொட்டும் அருவத்துக்கு மலரும் உவமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. உருவம் கொண்டு நம் முன் நிற்கும் இந்த பெருவெளி என்ற மொட்டு மலர்ந்த நிலையே உருவமிலா பரம்பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!
அடுத்த எதிரீடு இன்னொரு உவமைமூலம் அதையே மேலும் வலியுறுத்துகிறது. ‘மணியாகவும் ஒளியாகவும்’. இந்த பருப்பிரபஞ்சம் மாணிக்கம் என்றால் அதன் ஒளிதான் அலகிலாத ஆற்றலாக விரிந்த பரவெளி. அருவம் என்பது உருவமாகி நிற்பவற்றின் சாரமாக உறையும் ஒளியே என்கிறது இந்த உவமை!
மேலும் வலியுறுத்துகிறது அடுத்த எதிரீடு. ‘கருவாகவும் உயிராகவும்’ கரு என்று இந்த பொருள்வயப்பிரபஞ்சமே சொல்லப்படுகிறது. அந்தக் கருவுக்குள் உள்ள உயிரே ஆற்றல்பிரபஞ்சம் அல்லது அருவ வெளி!
கடைசி எதிரீடு பௌத்த தரிசனத்துடன் தொடர்புடையது. பௌத்தம் இப் பொருள்வயப்பிரபஞ்சம் என்பது ஒரு முடிவிலா நிகழ்வே என்று வகுக்கிறது. இந்நிகழ்வின் இயங்குவிதியாக உள்ளதே பேரறம் அல்லது மகாதர்மம். ‘கதியாகவும் விதியாகவும்’ என்ற வரி அதையே சுட்டுகிறது. கதி என்றால் நிகழ்வு. அந்நிகழ்வாகவும் அதன் விதியாகவும் முருகனை உருவகிக்கிறது இவ்வரி.
எதிரீடுகளின் வரிசையை வைத்துப் பார்த்தால் உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட பொருள்பிரபஞ்சத்தையே கதி என்று சொல்கிறார் அருணகிரிநாதர். இப்பருப்பிரபஞ்சம் ஒரு கதி [இயக்கமுறை] மட்டுமென்றால் அதன் சாரம் அதன் விதி. அந்த விதியே அருவம், இன்மைநிலை, மலர் , ஒளி, உயிர்… இரண்டும் அவனே என்று சொல்கிறது.
கடைசி வரி மிக இனிய ஒரு முடிச்சுடன் முடிகிறது. ‘குருவாய் வருக’ என்று முருகனை அழைக்கிறது அது. குரு என்பது இங்கே உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட முதல்நிலையின் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அருவம், இன்மை, மலர் , ஒளி, உயிர் எனச் சொல்லப்பட்ட இரண்டம்நிலையில் இருப்பது எது?
மொட்டு மலராவதுபோல, மணியில் ஒளி பிறப்பதுபோல, கருவில் உயிர் நிகழ்வது போல குருவின் விளைவாக உள்ளது ஞானமே. அனுபூதியே உயர் ஞானம். குருவாக முருகன் வந்தால் ஞானமுமாக அவனே நிற்பான் என உரைக்கிறது பாடல். குருவாய் வருக என்ற அழைப்பு அவ்வகையில் மேலும் முன்னகர்ந்து ஞானமுமாக வருக என முடிகிறது.
இவ்வரிகள் கந்தரனுபூதியின் கடைசிப் பாடல். இவ்வரிகளில் இருந்து பின்னால்நகர்ந்து முன்னாலுள்ள வரிகளை எட்டினால் பல வரிகளின் ஆழமும் தீவிரமும் நம்மை திகைக்கச் செய்யும்.
‘தன்னந் தனி நிற்பது தானறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ’
என்ற வரி ஓர் உதாரணம். வேதங்கள் முடிவிலா பரவெளியின் ஈடிணையற்ற தனிமையை பாடுகின்றன. அது அல்லாமல் வேறொன்றுமில்லை என்ற நிலையின் தனிமை. பரம்பொருளின் தனிமை. அந்த எல்லையற்ற தன்னந்தனிப்பொருள் தன்னை இன்னொருவருக்கு எப்படி அறிவுறுத்த இயலும்?
அவ்வினாவுக்கு விடையாகவே குருவாக வருக என்ற அழைப்பு. குருவாகி அது வருகையில் ஞானத்தின் அனுபூதி அதன் விளைவாக நிகழ்ந்தாகவேண்டும் அல்லவா?
கந்தரனுபூதி சைவசித்தாந்தத்தில் கிளைத்த நூல். ஆகவேதான் அது வேதாந்த மரபைப்போல உருவத்தை நிராகரிக்கவில்லை. பருப்பிரபஞ்சமும் அதற்கு ஓர் உண்மையே. அது மாயத்தோற்றம் அல்ல. மாயை என்பது அதை முழுதுணராது மயங்கும் நமது குறைநிலையே. பருப்பிரபஞ்சத்தை அல்லது உருவத்தை முதல் நிலையாக்கி அதில் இருந்து அதன் நுண்நிலையாக பரவெளியை அல்லது அருவத்தைக் கண்டு முன்வைக்கிறது இப்பாடல்.
ஆனால் இந்தியமெய்ஞான மரபுகள் அனைத்துமே உச்சநிலையில் ‘ஆற்றல் X ஜடம்’ அல்லது ‘உருவம் X அருவம்’ என்னும் எதிரீடுகளை தாண்டிய ஒருமையையே முன்னைக்கின்றன. அதையே பாம்பொருள்த்தன்மையாக காட்டுகின்றன. மேலும் பின்னால் சென்றால் இன்னொரு வரியில் அதைக் காணலாம்
அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரான் அல்லையோ?
‘அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில் நின்று அறிபவர்களின் அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக நின்ற பிரான் அல்லவா நீ?’ அறிவின் உச்சம் என்பது அறிகிறேன் என்னும் நிலை இல்லாமலாதல். அறிவுடன் அறிபவனும் ஒன்றாதல். அந்நிலையில் நின்று அறிபவர் நெஞ்சில் அவர்களில் இருந்து பிறிதாக அல்லாமல் நிற்கும் அதுவே அவன் என்கிறார் அருணகிரிநாதர். அனுபூதி என்பது அந்நிலையே
அன்புள்ள கணேசமூர்த்தி, டாலருக்கு மட்டுமல்ல ரூபாய்க்கும் ஒரு மதிப்பு இருக்கக் கூடுமென எப்போதாவது நீங்கள் உணரக்கூடும்
மறுபிரசுரம்./முதற்பிரசுரம் செப்டெம்பர் 2009
அமலை
அன்புள்ள ஜெ,
சோழா சோழா பாட்டு கேட்டேன். இரண்டு சந்தேகங்கள். ஒன்று இந்த சீக்வன்ஸ் எங்கே படத்தில் வருகிறது? இரண்டு, என் அம்மா அப்பா இரண்டுபேருமே பாட்டு பீரியடுக்கு பொருத்தமாக இல்லை என்று சொன்னார்கள். எனக்கு பாட்டு பிடித்திருக்கிறது.
சந்தோஷ் கிருஷ்ணன்
அன்புள்ள சந்தோஷ்,
உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா? உங்களுக்காகத்தான் போடப்பட்டிருக்கிறது. இந்தியா முழுக்க உள்ள இளைய தலைமுறையினருக்காக. அவர்களுக்கு பிடிக்கும். ஏற்கனவே எல்லா எதிர்வினைகளும் goosbumps என்றுதான் வருகின்றன. (கன்னட வரிகள் ஜெயந்த் காய்கினி எழுத்தில் மூலமளவுக்கே அற்புதமாக உள்ளன என்றார்கள்)
கர்ணன் படத்தின் ’இரவும் நிலவும்’ பாட்டு பற்றி உங்கள் அப்பா அம்மாவிடம் கேட்டுப்பாருங்கள். ’அந்த பீரியட் ஃபீல் வருது’ என்பார்கள். மகாபாரத காலகட்டத்தில் அந்த மெல்லிசை இருந்ததா? அல்லது, மகாபாரதத் தெருக்கூத்திலோ நாடகங்களிலோ அந்த வகை இசை இருந்ததா? அது வெளிவந்த காலகட்டத்தில் கர்ணனுக்கு டூயட் போட்டுவிட்டார்கள் என்று பலர் சொன்னார்கள்.
இருவகை ரசனைகள் உண்டு, தாங்கள் பழகியவற்றையே மீண்டும் சுவைப்பவர்கள், அதை மட்டுமே எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் முந்தைய தலைமுறை. ஓட்டலில் நுழைந்தாலே இட்லிக்குச் சொல்லிவிடுவார்கள். இது புதுச்சுவை தேடும், பர்கர் தலைமுறைக்கான பாடல். ஆகவேதான் இந்தியா முழுக்க இன்று சோழா சோழா என முழங்கிக்கொண்டிருக்கிறது.
உண்மையில் சோழர்கால இசை என்பது ஆலயங்களில் பாடப்படும் பண்ணிசையாகவே இருந்திருக்கும். அது இன்றைய இசை அல்ல. நாம் இன்று, நம் இன்றைய கலையில், சோழர் காலத்தை புனைந்துகொள்கிறோம். வரலாறு என்பதே நேற்றைய காலகட்டத்தை இன்றைய அறிவைக்கொண்டு புனைந்துகொள்வதுதான். வரலாற்றுக் கதை என்பது இன்றைய கலைகளைக் கொண்டு வரலாற்றை புனைந்துகொள்வது.
அப்பாடல் போருக்குப் பிந்தைய அமலையாடல். அது பொன்னியின் செல்வன் நாவலில் நேரடியாக இல்லை. பேச்சாக, நினைவுகூர்தலாகச் சொல்லப்படுகிறது. ராஷ்ட்ரகூடர்களை வென்றபின் ஆதித்த கரிகாலன் ஓய்வெடுத்தபடி பொன்மாளிகை கட்டுவதாக நாவல் சொல்கிறது. ஆனால் சினிமாவில் எந்தக் கதாபாத்திரமும் அக்கதாபாத்திரத்தின் உச்சநிலையில்தான் முதலில் தோன்றமுடியும். அந்த முதல்காட்சியே உள்ளத்தில் பதியும். அது சினிமாவின் இலக்கணம்.
ஆதித்தகரிகாலன் எதையோ மறக்கும்பொருட்டு போர்களில் வெறிகொண்டு ஈடுபடுபவனாகவே பொன்னியின்செல்வன் சித்தரிக்கிறது. அதன் காட்சிக்குரிய இசைவடிவம் அப்பாடல். அமலையாடுதலுக்குரிய வேகமான துள்ளலான இசை கொண்டது.
அது ஒன்றும் ‘அன்னிய இசை’ அல்ல. அமலையாடுதல் என்பது வேகமான தாளம் கொண்ட துடி என்னும் வாத்தியத்துடன் இணையும் வஞ்சிப்பா என்னும் வடிவில் அமைவது. அப்பாடலின் வடிவம் வஞ்சிப்பாவை சொற்துண்டுகளாக ஆக்கியதுபோல் உள்ளது. தமிழ்ச்செவ்வியல் மரபை மிக நன்றாக அறிந்த, அறிஞர் என்றே சொல்லத்தக்க, கவிஞரால் எழுதப்பட்டது. இருபதாண்டுகளுக்கும் மேலாக செவ்விலக்கியம், தமிழ்மரபு என எழுதி பேசிவரும் இளங்கோ கிருஷ்ணனுக்கு நம்மைவிட கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்திருக்கும் என தயவுசெய்து நம்புங்கள்.
ஜெ
பர்ட்டன் ஸ்டெயின் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி குடவாயில் பாலசுப்ரமணியம் பொன்னியின் செல்வன் நாவல் யவனராணி- சாண்டில்யன் உடையார் -பாலகுமாரன் கல்கி எழுத்தாளர்தமிழ் விக்கி, தூரன் விருது விழா – கடிதங்கள்
நலம்தானே?
தமிழ்விக்கி – தூரன் விருதுவிழா சிறப்பாக நிகழ்ந்ததை அறிந்தேன். ஈரோட்டுக் காரரான தூரனைக் கௌரவிக்க ஈரோட்டில் இருந்து பெரும்பாலும் எவரும் வரவில்லை என்று எழுதியிருந்தீர்கள். அது ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் ஈரோட்டுக்காரன், இன்று வெளியூரில் வசிக்கிறேன்.
ஈரோட்டில் அவ்வாறான ஆர்வங்களேதும் இல்லை. ஈரோட்டின் பண்பாட்டுச்சுழல் வியாபாரம்தான். வியாபாரநகரத்திற்குரிய மனநிலைகளே அங்கே உள்ளன. மற்ற நகரங்கள்போல ஈரோட்டில் கல்விச்சூழல்கூட கிடையாது. கல்வியேகூட முதல்போட்டு லாபம் எடுக்கும் வியாபாரம்தான். ஒரு கூட்டத்திற்கு வருவதிலேயே விஐபிக்களை சந்திப்பது, பழக்கம் வைத்துக்கொள்வது என்று பல கணக்குகள் இருக்கும்.
வியாபாரம் நிகழும் ஊரின் மனநிலை எப்போதும் ஒருவகை பதற்றம், கணக்குபோட்டுப்பார்த்தல் இதெல்லாம்தான். களைப்பகற்றுவதற்காக அவர்கள் சிலசமயம் சில கேளிக்கைகளுக்கு வரலாம். ஆகவேதான் ஈரோட்டிலே நகைச்சுவைப் பட்டிமன்றம் மிகப்பிரபலம். அதற்கு சிலர் செல்வார்கள். மற்றபடி இங்கே எந்த ஒரு கலாச்சாரக் கவனமும் இல்லை. இருந்திருந்தால் நீங்கள் வந்து தூரன் பற்றி சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
விழா மிகச்சிறப்பாக நடைபெற்றதை காணமுடிகிறது. மேடையமைப்பு அழகாக உள்ளது. கரசூர் பத்மபாரதியின் பேச்சு உற்சாகமானதாக இருந்தது. தமிழில் நல்ல ஆய்வுகள் அறிவுத்துறையால் கவனிக்கப்படுவது தொடரவேண்டும்.
அருண் கார்த்திக்
அன்புள்ள ஜெ,
தமிழ் ஆய்வுத்துறைக்கும் இலக்கியத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாமலிருப்பதையும், அதன்விளைவாக சமூக -அரசியல் புரிதல்களேதும் இல்லாமல் நம்மவர்கள் மேலைநாட்டு எழுத்துக்களை காப்பியடிப்பதையும் உங்கள் உரை வழியாக உணரமுடிந்தது. உங்கள் பேச்சில் சொல்லாத விஷயம், சமீபத்தியபுனைவுகள் பல நெட் சீரியல்களை ஒட்டி எழுதப்பட்டவை. இந்த விருதுகள் வழியாக ஆய்வுகள் மேல் ஒரு வகை ஆர்வம் உருவானால் அது நல்லது.
கரசூர் பத்மபாரதியின் ஆய்வுகளை முன்னால் செல்லும் முதல்பறவை என்று உரையிலே குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த பறவையை தொடர்ந்து நம்முடைய ஆய்வுலகமும் எழுத்துலகமும் செல்லுமென்றால் நமக்கு அசலான ஓர் இலக்கிய சூழல் அமையும் என்று நினைக்கிறேன்.
ராஜ்குமார்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
கரசூர் பத்மபாரதியின் விருதுவிழா உற்சாகமாக நிகழ்ந்தது அறிந்து நிறைவு, மகிழ்ச்சி. விஷ்ணுபுரம் அமைப்பின் அறிந்த முகங்களை சபையில் காணமுடிந்தது.
அ.கா.பெருமாள், கு.மகுடீஸ்வரன் உரைகள் நேர்த்தியானவை. ஆய்வாளர்களின் உரைகள் உணர்ச்சிகரமாக இல்லாமல், போகிறபோக்கிலேயே வந்து விழும் ஏராளமான தகவல்களுடன் செறிவாக அமைந்திருக்கும் என்பதைக் காணமுடிந்தது.
இந்த விக்கி விருது அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் முனைவர் பட்ட ஆய்வேடுகளில் இருந்து சிறந்த இரண்டை தெரிவுசெய்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பரிசு (ஐம்பதாயிரம்) வழங்கலாம். அது அந்த ஆய்வேடு கவனிக்கப்படுவதற்கு வழியமைக்கும். அந்த ஆய்வேடு நூல்வடிவமாக அமையவேண்டியதில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் நகலே போதுமானது.
அத்துடன் முறையான கல்விச்சார்பு இல்லாமல் சுதந்திரமாகச் செய்யப்படும் ஆய்வேடுகளையும் பரிசீலிக்கலாம். அவற்றுக்கும் விருது அளிக்கலாம். அவர்களிலும் ஆண்டுக்கு ஒருவருக்கு பரிசளிக்கலாம்.
நல்ல ஆய்வுகள் பெருகவேண்டும். இப்போதுதான் இலக்கியத்துறை ஆய்வுகளை கவனிக்க ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம்.
எம் .மகாலிங்கம்
தூரன் விருது விழா, 2022 – தொகுப்பு
கே.முத்தையா- பரிவின் குரல்
கே.முத்தையா எழுதியவை அன்று சோஷலிச யதார்த்தவாதம் என அழைக்கப்பட்ட கட்சிச்சார்பான சமூகப்பதிவு நாவல்கள். அவற்றின் கலைமதிப்பு என் பார்வையில் கேள்விக்குரியது. ஆனால் இன்று சட்டென்று அவ்வகை எழுத்து இல்லாமலாகிவிட்டபோது ஒரு பெரும் வெற்றிடத்தை உணரமுடிகிறது. கலைரீதியாக அவற்றின் மதிப்பு என்னவானாலும் ஒடுக்கப்படும் மக்கள், அடித்தள மக்கள், விளிம்புநிலை மக்கள் பற்றிய ஒரு கவனத்தை, விவாதத்தை அறிவுச்சூழலில் நிலைநாட்டியவை அத்தகைய எழுத்துக்கள்.
கே.முத்தையா
கே.முத்தையா – தமிழ் விக்கி
சு.வேணுகோபால் சந்திப்பு, கடிதம்
2019ம் ஆண்டு ஊட்டி காவிய முகாம் முடித்து மலை இறங்கிக் கொண்டிருந்தபோதுதான் கோவையில் ‘சொல்முகம்’ வாசகர் குழுமம் துவங்குவதற்கான முதல் எண்ணம் எழுந்தது. உலகெங்கிலும் தனித்து சிறு வாசகர் குழுக்களின் முன்னெடுப்பில் இயங்கிவரும் ‘புக் கிளப்’ வடிவத்தில் அது இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கான அவசியத்தை நம் காவிய முகாம் தெளிவாகச் சுட்டியது. மாதம் ஒருமுறை ஒரு நாவலைத் தேர்ந்தெடுத்து அதன் மீது கூட்டு வாசிப்பைச் செலுத்தி, வாசிப்பு கோணங்களைப் பகிர்ந்து கொள்வதே இக்குழுமம் உருவானதின் அடிப்படை. வாசித்தவற்றைக் கூர்மையாகத் தொகுத்துக் கொள்ளவும், தொகுத்த எண்ணங்களைச் செறிவாக வெளிப்படுத்தவும் பழகும் விதமாக இக்கூடுகைகள் அமைய வேண்டும் என்பது எங்களின் கூடுதல் விழைவு.
தரையிறங்கி கோவையைத் தொட்ட நிமிடத்திலேயே ஒத்த மனமுடைய நண்பர்களைக் கூட்டு சேர்க்கத் துவங்கினோம். இந்த ஜூலை 2022ல் சொல்முகம் வாசகர் குழுமம் மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டிற்குள் நுழைந்தது. ஒரு அமைப்பு தொடர்ந்து தொய்வின்றி செயல்படுவதற்கு புதிய முன்னெடுப்புகள் அவசியமாகிறது. ‘சொல்முகம்’ தொடர்ந்து இயங்கும் என்ற உறுதியை அடைந்தவுடன், அடுத்த கட்டமாக வெண்முரசுக்கென ஒரு அமர்வைக் கூடுதலாக இணைத்துக்கொண்டோம். இதுவரை 19 வெண்முரசு கூடுகைகளை ஒருங்கிணைத்திருக்கிறோம்.
நான்காம் ஆண்டிற்குள் நுழையும் இத்தருணத்தில் வருடத்திற்கு இரண்டு கருத்தரங்குகளை இவ்வாசகர் குழுமம் நடத்த வேண்டும் என்ற முடிவைத் தன்னியல்பாகவே அடைந்தோம். ஒரு படைப்பாளியின் அத்தனை படைப்புகளையும் வாசித்து, அவர் முன்னிலையில் ஒரு சிற்றுரையை வழங்கிவிட முடியும் என்ற நம்பிக்கையை இம்மூன்று ஆண்டுகளில் இடைவிடாது நிகழ்ந்த கூடுகைகள் அளித்திருந்தன. ஆகஸ்ட் 7 அன்று எழுத்தாளர் சு. வேணுகோபால் அவர்களின் படைப்புகளை முன்வைத்து எங்கள் முதல் கருத்தரங்கத்தை நிகழ்த்தினோம்.
‘புக் கிளப்’கள் பெரும்பாலும் குழுமத்தின் ஏதாவது ஒரு நண்பரின் வீட்டில் நிகழும். முதன்மையாக, இலக்கியத்தை முன்வைத்து ஒரு நட்பு கூடலாகவே அது அமையும். அவ்வகையில் சொல்முகம் முதலில் முளைக்க வேண்டிய இடத்தை நம் நண்பர் வட்டத்திலேயே அது கண்டுகொண்டது. டைனமிக் நடராஜன் அவர்கள் தன் தொண்டாமுத்தூர் பண்ணை வீட்டில் எங்கள் கூடுகைகளை அமைக்க ஆர்வமுடன் முன்வந்தார்.
நகரத்தின் சலசலப்புகளிலிருந்து விலகி ஒரு பசுமையான சூழ்நிலையில் மாதமொருமுறை கூடினோம். காழ்ப்புகளும் கசப்புகளும் இருக்கக் கூடாது என்பது முதல் விதி. வேறெந்த அரட்டையுமின்றி தேர்ந்தெடுத்திருந்த நாவலைக் குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும் என்ற ஒழுக்கத்தையும் நேரக் கட்டுப்பாட்டையும் ஊட்டி காவிய முகாமின் வடிவத்திலிருந்து பெற்றுக்கொண்டோம். தமிழிலக்கிய முன்னோடிகள் பரிந்துரைத்த செவ்வியல் ஆக்கங்களை மட்டுமே எங்கள் வாசிப்பிற்குத் தேர்ந்துகொண்டோம். அதனால், இந்த நாவலை ஏன் வாசிக்க வேண்டும் என்ற அடிப்படையான விவாதத்தில் நேரம் செலவழிப்பது தவிர்க்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கான வாசிப்பு பட்டியலை முன்னரே தயாரித்து பகிர்ந்துவிடுவதால் புத்தகங்களை வாங்கவோ, இரவல் பெற்று வாசித்து முடிக்கவோ போதிய நேரம் வாய்க்கிறது. எண்ணிக்கை கூடினாலும் குறைந்தாலும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிறு காலை அமர்வுகள் உறுதியாக நிகழும் என்ற நிலையை சொல்முகம் அடைந்திருக்கிறது.
விஷ்ணுபுரம் பதிப்பகம் அமைந்தவுடன் எங்கள் கூடுகைகள் இப்புதிய இடத்திற்கு இயல்பாகவே இடம்பெயர்ந்தது. புத்தகங்கள் சூழ அமர்ந்து இலக்கியம் பேசுவது அலாதியானது. போக்குவரத்து வசதி கூடிய இடம் இது என்பதால் புதிய வாசகர்கள் வரத் துவங்கினர். எழுத்தாளர் ஜெயமோகன் தன் தளத்தில் அறிவிப்பை வெளியிடும் ஒவ்வொரு முறையும் ஒரு புதியவராவது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுடன் இணைந்து விடுகிறார். புது வாசகர்களுக்கும், இலக்கிய பேச்சுகளுக்குச் சற்றும் சாத்தியமில்லாத சூழலில் வாழும் வாசகர்களுக்கும் உற்ற தோழமையைக் கண்டுகொள்ளும் விதமாக சொல்முகம் கூடுகைகள் இயங்கி வருகின்றன. மேலும், இவ்வாசகர் குழுமத்தின் பல நண்பர்கள் இன்று எழுத்தாளர்களாகவும் எழத் தொடங்கியிருக்கின்றனர்.
இலக்கிய கருத்தரங்கங்களைக் கோவையில் வாழும் படைப்பாளிகளிலிருந்து துவங்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. சமீபத்தில் ‘நுண்வெளி கிரகணங்களை’ வாசித்து விவாதித்திருந்தமையாலும் நமக்கு அணுக்கமான படைப்பாசிரியர் என்பதாலும் சு. வேணுகோபால் அவர்களை அழைத்து அவர் படைப்புகளின் மீது முதல் கருத்தரங்கம் நிகழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது. சொல்முகத்தின் முதல் கூடுகைக்கு தாமாகவே வந்திருந்து எங்களுக்கு ஊக்கமளித்தவர் சு. வே.
கோவை புத்தக விழாவின் ஒரு அரங்கில் இக்கருத்தரங்கத்தை நிகழ்த்த விரும்பி சு. வே. அவர்களை அழைத்தோம். கொண்டாட்டத்தின் மத்தியில், இக்கருத்தரங்கு கடலை பொறி கூட்டத்திற்கு மெல்லுவதற்கு மேலுமொன்றாகவே அமையும். சொல்முகத்தின் தனிப்பட்ட கூடுகையாகவே இதை அமைத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார். சென்ற முறை கோவை புத்தக விழாவில் கலந்துரையாடலை நிகழ்த்தியது ஒரு வகையில் சுவாரசியமான அனுபவமாக இருந்தது. குர் அதுலைன் ஹைதரின் ‘அக்னி நதி’ கலந்துரையாடல் என்று பெரிய விளம்பர பலகை ஒன்று புத்தக விழாவின் வாயிலில் வைக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் ஹைதரை எப்போது காண முடியும் என்று கேட்டு ‘வாசகர்கள்’ வரிசையில் வரத் துவங்கினர். எழுத்தாளர் இல்லாமல் நீங்கள் மட்டும் பேசி என்ன செய்யப் போகிறீர்கள் என்று சிரித்துவிட்டுச் சென்றனர். உச்சமாக, நன்கறிந்த ஒரு எழுத்தாளர், நண்பர் ஒருவரிடம் குர் அதுலைன் ஹதரை எப்போது வந்தால் நேரில் சந்திக்க இயலும் என்று கேட்டிருக்கிறார். சென்ற வாரம்தான் அவருடன் தான் தொலைப்பேசியில் உரையாடியதாகவும் கூறியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் மாய யதார்த்தப் புனைவெழுத்தாளரும் அல்ல.
சொல்முகத்தின் மூன்று வருடச் செயல்பாடுகளையும் சு. வேணுகோபாலைக் குறித்து விரிவான ஒரு அறிமுகத்தையும் கூறி கருத்தரங்கை துவக்கி வைத்தார் நவீன் சங்கு. சு.வே. தன் முதல் நாவலை எழுதியதின் பின்னணியினை அறியாதவர்களுக்குச் சுவாரசியமான துவக்கமாக அமைந்தது அவ்வறிமுகம். ஒரு பேராசிரியரைப் போன்ற தோரணையில், அதற்கேயுரிய நிதானத்துடன் ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ சிறுகதைத் தொகுப்பின் மீதான தன் பார்வையைப் பகிர்ந்தார் பூபதி. இத்தொகுப்பிலிருக்கும் சிறுகதைகளை எவ்வாறு பகுத்துக்கொண்டு வாசித்தால் இக்கதைகளுக்கு இடையே ஊடுறும் பொது இழையைக் கண்டுகொள்ள முடியும் என்பதைச் சுட்டி தன் உரையை அமைத்திருந்தார். இதற்கு நேரெதிராக, ‘களவு போகும் புரவிகள்’ தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் எவ்வாறு தனித்து வேறுபடுகிறது என்பதை விளக்கி விக்ரம் பேசினார். பின்னர், சு.வே தன்னுடைய ஏற்புரையில் இந்த இரண்டு பார்வையும் சரியானதே, அத்தன்னுணர்வுடன்தான் இக்கதைகள் தொகுக்கப்பட்டது என்றும் கூறினார். ‘களவு போகும்…’ தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் வெளிப்படும் நகைச்சுவை அம்சங்கள் சு.வே. கதைகளில் மிக அரிதாகவே தென்படுவது என்ற பார்வையைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
எவ்வளவு இருண்மையான சூழலுக்குள் தள்ளப்பட்டாலும் அப்படி மொத்தமாக வாழ்வு நம்மை கை விட்டுவிடாது என்ற நம்பிக்கையை, கண் தொடும் தூரத்தில் ஒரு வெளிச்சம் நிச்சயம் தென்படும் என்ற உறுதியை ‘வெண்ணிலை’ தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அளிக்கின்றன என்பதை தன் சிற்றுரையில் காளீஸ்வரன் வரிசைப்படுத்திக் கூறினார். உமா கிட்டத்தட்ட ஒரு பெண்ணியப் பார்வையில் ‘தாயுமானவள்’ தொகுப்பை அணுகினார். சு.வே கதைகள் அத்தனையிலும் பெண்களின் மீதும் பெண்மையின் மீதும் அவர் கொண்டிருக்கும் கரிசனம் உரத்து ஒளிப்பதை, அவரின் பெண் கதை மாந்தர்களின் மூலமாகவே நிறுவினார். சு.வே யின் குறுநாவல்கள் குறித்து ஒரு உரையை ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் முன்னரே மலேசிய வாசகர்களுக்காக வழங்கியிருக்கிறார். ஆனால் சொல்முகம் உரையில், இந்த இடைப்பட்ட காலங்களில் முன்னிலும் மேம்பட்ட ஒரு வாசகப் பார்வையை அடைந்திருப்பதைத் தொட்டு பேசினார். இலக்கியத்தில் வெளிப்படும் ஆண்-பெண் உறவுகளின் முக்கியத்துவத்தையும், ‘கூந்தப்பனை’ குறுநாவல் தொகுதியில் அது வெளிப்படும் அழகியலையும் தன் உரையின் மையமாகக் கொண்டு செறிவாக அவ்வமர்வை நிகழ்த்தினார்.
‘நுண்வெளி கிரகணங்கள்’ நாவலை சு.வே. எவ்வாறு தன் படைப்பாற்றலின் உச்சத்தில் உருவாக்கியிருக்கிறார் என்பதைத் தொட்டு தொடங்கினார் பாலாஜி பிருத்விராஜ். இந்நாவலில் செளடம்மா ஒரு தொன்மமாகவும், மண்ணில் கால் பாவிய பாத்திரமாகவும் இணையாக உலவுகிறது. தமிழிலக்கியத்தில் தோன்றிய முக்கியமான பெண் பாத்திரங்களில் செளடம்மாவும் ஒன்று என தன் ஒப்பீட்டை முன்வைத்தார். ‘உறுமி’ சத்தம் ஒரு தெய்வீக இருப்பாகவே இந்நாவல் முழுவதும் அமைந்திருப்பதை பல்வேறு புனைவுத் தருணங்கள் மூலமாக உணர்த்தினார் பாலாஜி. சு.வே அவர்களின் இதர படைப்புகளான ‘நிலம் எனும் நல்லாள்’, ‘பால்கனிகள்’, ‘இழைகள்’ மற்றும் சமீபத்திய நாவலான ‘வலசை’ ஆகியவற்றின் முக்கிய பாத்திரங்கள், அடிப்படை மனிதப் பண்புகளின் பிறழ்வில் சரிவதும் அதிலிருந்து மீண்டு வரும் கணங்களையும் மையமாக என்னுடைய சிற்றுரையை அமைத்திருந்தேன். ‘நிலம் எனும்…’ நாவலின் இறுதியில் பழனிக்குமார் சினை ஆட்டின் வயிற்றினுள் இறந்து கிடக்கும் கன்றுகளை வெளியேற்றி ஆட்டின் உயிரை மீட்டெடுக்கும் காட்சி உலகளவிலேயே உச்ச இலக்கிய தருணங்களுக்கு இணையாக வைக்கக்கூடிய உணர்வுத் தீவிரமும் காட்சி விவரணையும் கொண்டது. மேலதிகமாக, கவியுருவகக் காட்சியாக பல்வேறு அர்த்த சாத்தியங்களையும் அளிக்கக் கூடியது.
‘குவிஸ்’ செந்தில் சு.வே அவர்களின் ஆளுமை குறித்தும், அவர் படைப்புகளில் வெளிப்படும் மொழியழகு, நடை மற்றும் சொல்லாட்சி குறித்தும் ஒரு சிற்றுரையாற்றினார். அதில் ‘தமிழ் இலக்கிய சிறுகதை பெருவெளி’ என்ற தொகுப்பை வெளியிடும் பணிகளில் தனக்கு வாய்த்த அனுபவங்களைக் குறித்தும் பகிர்ந்துகொண்டார். இரண்டு சிற்றுணவு இடைவெளிகளே மதிய உணவை மறக்கச் செய்திருந்தன. இதனால், எப்போதும் போல் காட்டாற்று வெள்ளமென தன் படைப்புகளைப் பற்றி சு.வே தன் ஏற்புரையை வழங்கி முடித்த போதும் வந்திருந்த நண்பர்கள் மேலும் அரை மணி நேரம் அரங்கிலேயே தங்கி அவருடன் உரையாடிவிட்டு பின் கலைந்தனர். ‘நுண்வெளி…’ நாவல் எழுதிய அனுபவம் குறித்தும் அதற்குப் பின் தான் எழுதிய அத்தனை படைப்புகளின் ஆதி உணர்வையும் தன்னிலிருந்து வெளிப்படும் புனைவுலகை தான் கையாளும் விதத்தைக் குறித்தும் மிக உற்சாகமாக உரையாடினார் சு.வே. அவர்களை ஒரு படைப்பாளியாக மட்டுமோ அல்லது நன்கு பழகும் ஒரு மனிதராக மட்டுமோ அறிந்திருந்த இரு சாராருக்கும் அம்மதியத்தில் வெளிப்பட்ட சு.வே. முற்றிலும் புதியவராகவே தோன்றியிருப்பார். மீனாம்பிகை சு.வே விற்கு நினைவுப் பரிசை வழங்க, ரத்தீஷ் நன்றியறிவித்தார். தன்னையறியாமலேயே இறுதியில் ஜெயமோகனுக்கும் நன்றி என்றார்.
உரையாற்றிய நண்பர்களில் ஒருவர், பதினாறு ஆண்டுக்காலம் தன் நிறுவனத்தில் பலப் பல பதவி உயர்வுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தாலும் ஒரு நேர்மையான மூத்த படைப்பாளியின் முன்னிலையில் சிற்றுரை ஆற்றிய உணர்வு அளிக்கும் முழுமையை இதற்கு முன் அனுபவித்ததில்லை என்றார். உள்ளம் உவந்து ஈடுபடும் செயல்கள் அளிக்கும் அளப்பரிய உவகையும் மன நிறைவும் உலகியல் வெற்றிகளால் அளந்துவிட முடியாதவை!
நரேன் கோவை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



