Jeyamohan's Blog, page 726
August 27, 2022
பிரேமா உஷார்!
பிரமோ உஷார்! பிரமோ, ஒரு பதில்
ஜெ,
எங்கள் சென்னையில் உஷார் பண்ணுவது என்பதற்கு அர்த்தம் வேறு.தவிரவும் நான் வேறு அந்தக் கட்டுரையின் தலைப்பில் உள்ள பிரமோவை , பிரேமா என்று அவசரத்தில் படித்திருந்தேன்.”பிரேமா வை உஷார் பண்ணிய ஜெயமோகன்” என அ(ன)ர்த்தம் பண்ணிக்கொண்டு , சிக்கினாண்டா சித்தப்பு என மேற்கொண்டு படித்தால் சப்பென்று ஆகி விட்டது.
இசை , சினிமா பாட்டு சம்பந்தமாக உங்கள் அறிவின் தரம் என்னவென்று எல்லோருக்குமே தெரியும் என்று கடிதம் எழுதியவர் அவ்வளவு உறுதியாக கூறியிருக்கிறாரே, இந்தப் பாவிக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் பொ.செ பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.
ஒரு கட்டுரையில் “அந்த நாட்டுப்பாடல் ஏதோ சில மாயங்களால் மேலைநாட்டிசையாகவும் மாற்றப்பட்டுள்ளது.” என்று ஒரு வரிவருகிறது.(அறியாமையை என்ன ஆணவமாக எழுதியுள்ளீர்கள் ).மற்றொன்றில், ‘வேகமான தாளம் கொண்ட துடி என்னும் வாத்தியத்துடன் இணையும் வஞ்சிப்பா என்னும் வடிவில் அமைவது’ என்று தமிழறிந்த யாருக்கும் புரியும் ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறீர்களே…(என்ன ஒரு தலைக்கனம்).
சரி..சங்கீதம் பற்றிய பழைய கட்டுரைகளிலாவது ஏதாவது தேறுமா என்று அவைகளையும் படித்தேன்.பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் கட்டுரையில் …
“நான் நல்ல இசை ரசிகன் அல்ல. என் நண்பர்கள் யுவன் சந்திரசேகர், ஷாஜி போன்ற பலர் மிகச்சிறந்த இசை ரசிகர்கள். நா.மம்முது , சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் இசை நுட்பங்களை ஆராய்ந்தறிந்தவர்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கும் இடத்திலேயே நான் எப்போதும் இருக்கிறேன். என்னால் ராகநுட்பங்களுக்குள் செல்லவே முடிந்ததில்லை. என்னால் அடையாளம் காணப்படும் ராகங்களே மிக மிகக் குறைவுதான். கர்நாடக சங்கீதம் தவிர வேறு எந்த இசைமரபையும் என்னால் உணர முடிவதில்லை.”
என்றெல்லாம் (உங்களை தாழ்த்தி)தற்பெருமை அடித்துக்கொண்டீர்களே. என்னவொரு தரம் தாழ்தல்.. ஒருவேளை அந்த ஒவ்வாமையினால்தான் இப்படி ஆகிறதா என்று மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தேன்.. என்ன செய்ய..குமட்டல் வருவேனா என்று அடம் பிடிக்கிறது.
சாதாரண (ஜெ.மோ)ஒவ்வாமை குமட்டல் என்றால் ஒருவாரம் ஜெ.மோ எழுத்துக்கள் எதுவும் படிக்காமல் இருந்து டோம்ஸ்டால் மாத்திரையும் கூடவே எடுத்ததுக்கொண்டால் சரியாகிவிடும்.இல்லை மசக்கை குமட்டல் என்றால் நல்ல கைனகாலஜிஸ்டை பார்ப்பது உத்தமம்.
ஒருவேளை இரண்டும் இல்லையென்றால் குமட்டல் சீரியஸான புற்றுநோயின் அறிகுறி யாக கூட இருக்கலாம் எனவே உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.அவ்வளவு கஷ்டப்பட்டு குமட்டலை தாங்கிக்கொண்டு தொடர்ந்து படிக்க வேண்டாம்.செரிமான கோளாறுகள் இல்லாத என்போன்றோர் குமட்டாமல் படித்துக் கொள்கிறோம்.
மூர்க்கரோடு முயல்வதென்பது அச்சோபதிகம் பாடப்பட்ட அந்தநாளிலேயே உள்ளபோது சழக்குகளிலேயே சாமியாடுபவர்கள் நிறைந்த இந்தக்காலத்தில் இல்லாமலா. (ஆனாலும் அந்த பிரேமாவை உஷார் பண்ணுகிற விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்தான்)
அன்புடன்
நாகராஜன்
முடிச்சூர்.
அன்புள்ள நாகராஜன்
பரவசங்களுக்கு அளவே இல்லை. நீங்கள் மட்டும் இப்படி படிக்கவில்லை. இன்று ஒரு கடிதம். நான் இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வனில் பாட்டு எழுதுதும் வாய்ப்பை கெடுக்க முயன்றேன், அதை அவர் முறியடித்தார் என்று சொல்லி என்னை மலையாளத்தான், சங்கி என்றெல்லாம் வசைபாடி எழுதியிருந்தார். அவரே சுட்டியும் அளித்திருந்தார். வாய்ப்பை கொடுத்தார் என்பதை கெடுத்தார் என வாசித்திருக்கிறார். ஐயா நீங்கள் புரிந்துகொண்டது தப்பு என ஒரு மடல் போட்டேன். ‘இந்த உருட்டு எல்லாம் தெரியும்.தமிழனை எவனும் ஏமாற்ற முடியாது’ என்று பதில். (உருட்டு?)
ஜெ
கம்பதாசன்,சிலோன் விஜயேந்திரன் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கம்பதாசன் பற்றிய விக்கி பதிவு அருமையானது. ஒரு கலைக்களஞ்சியத்தை இப்படி ஆர்வமூட்டும்படி படிக்கலாம் என்பதே திகைப்பூட்டுகிறது. அதிலும் அவர் வாழ்க்கை ஒரு காவியநாயகனின் வாழ்க்கை. (எத்தனை பெண்கள்) கம்பதாசன் என்ற பெயரே தகும். கம்பனைப்போலவே வாழ்ந்திருக்கிறார்.
கம்பதாசனுக்கு சென்னையின் நடனக்கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்பு உண்டு என்பது ஒரு அற்புதமான செய்தி. நீங்கள் சொன்னதுபோல ஒரு அருமையான நாவலுக்கான எல்லாமே உள்ளது.
செல்வக்குமார்
அன்புள்ள ஜெ
கம்பதாசன் பற்றிய குறிப்பில் வரும் சிலோன் விஜயேந்திரனை நான் இளம்வயதில் சினிமாக்களில் கொடூரவில்லனாக பார்த்திருக்கிறேன். அவருக்குள் இருந்த இலக்கிய அர்ப்பணிப்பும், அவருடைய பயங்கரமான மரணமும் படபடப்பை ஏற்படுத்தின.
ராஜ் அருண்
வங்கப்பஞ்சம்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
கெளதம் கோஷ் இயக்கிய 1974 வங்கப் பஞ்சம் மீதான ஆவணப்படம் ஒன்று கண்டேன். நேரு சாஸ்திரி என்று தலைவர்கள் தொடர்ந்து பஞ்ச நிலைக்கு எதிராக போராடி வந்த சூழலில், சுதந்திர இந்தியா கண்ட பெரும் அழிவுகளில் மேலும் ஒன்று. ஒரு வருடம் மட்டுமே நீடித்தாலும் அந்த பஞ்சம் பல் நூறு பேர் உயிரை பறித்திருக்கிறது. முதன்மை காரணங்கள் இரண்டு. ஒன்று வங்கப் பிரிவினை. (அதன் பின்னர் அந்த நிலம் எழ பல ஆண்டுகள் பிடித்தது). அகதிகள் பெருக்கம். இந்த அரசியல் நில பிரிவினை எல்லாம் இயற்கைக்கு புரியாது. ப்ரமபுத்ரா வெள்ள சேதம், தொடர்ந்து உயர்ந்த உணவு பதுக்கல். வங்க நிலம் முழுதும் பரவிய பஞ்சம் கல்கட்டா வரை வந்து தீண்டி இருக்கிறது.
அகதிகள் பெருக்கம், பஞ்சம் பிழைக்க வந்தோர் பெருக்கம், உணவு பதுக்கல். துல்லியமான வர்க்க பேதத்தில் அடித்தள மக்களை சூறையாடி சென்றிருக்கிறது பஞ்சம். இங்குள்ள அன்றைய காங்கிரஸ் முதல்வர் சித்தார்த்த ரே நிலைமையை சமாளிக்க முடியாமல், பிரதமர் இந்திரா காந்தியை ஏமர்ஜன்சி கொண்டு வரும் அளவுவரை தள்ளி இருக்கிறார்.
இந்த குழப்பமான, அரசாங்கம் லீவில் போய்விட்ட 1974 பஞ்சத்தை காட்சிப்படுத்துகிறது இவ்வாவணம். கஞ்சிக்கு அலைமோதும் பராரிகள் முதல் தெருவோரம் செத்து கிடக்கும் குழந்தை வரை வித விதமான தொந்திரவு தரும் காட்சி வெட்டுகள் வழியே நகரும் இப்படம் இறுதியில், அறுவடையில் கதிர் அருவாள் ஏந்திய கையில் உறையும் போது ஒரு கணம் கண்கள் கலங்கி தொண்டை கரகரத்து விட்டது. எத்தனை அடி வயிற்று ஆவேசங்கள் கூடி நிகழ்ந்த அரசியல் மாற்றம். காங்கிரஸ் போனது. எமர்ஜன்சி போனது. இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்தது. மேலே இந்த ஆவணம் பேசிய எதுவுமே பின்னரும் மாற வில்லை என்பதே வரலாறு.
கடலூர் சீனு
தத்துவ வகுப்புகள்…
தத்துவ வகுப்புகளை தொடங்குவது பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். செப்டெம்பர் முழுக்க நான் பரபரப்பாகவே இருந்தாகவேண்டிய நிலை. இரண்டு படங்கள் வெளியாகின்றன. ஆனால் மறுசிந்தனையில் அவை வேறொரு களம், இதுவே என் களம் என்றும் தோன்றியது. ஆகவே துணிந்து நாள் முடிவுசெய்துவிட்டேன்.
நாட்கள்
செப்டெம்பர் 2,3,4 தேதிகளில் (வெள்ளி,சனி.ஞாயிறு) எங்கள் மலைத் தங்குமிடத்தில் கூடலாம்..
பொருள்
இது ஓர் அறிமுகத் தத்துவக் கல்விக்கூட்டம். தத்துவ அறிமுகம் நாடுபவர்களுக்குரியது.
இந்த அரங்கில் கல்லூரி முறையில் தத்துவப்பாடம் கற்பிக்கப்படுவதில்லை. இது உரையாடலை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி. தத்துவக் கல்வியின் அடிப்படைகள், தத்துவ அறிமுகம் ஆகியவையே நிகழும்.
இப்போதைக்கு இந்து தத்துவ மரபு மட்டுமே கற்பிக்கப்படும். ஆனால் மதவழிபாட்டுத் தன்மையுடன் அல்ல. மெய்யியல் நோக்கில்.
நிபந்தனைகள்
மூன்று நாட்களும் கலந்துகொண்டாகவேண்டும்கூட்டுவிவாதத்திற்கான எல்லா நெறிகளும் உண்டு.இது அறிமுகம் நாடுபவர்களுக்குரிய அமர்வு. ஏற்கனவே வெவ்வேறு முறைகளில் எதையேனும் கற்று அவற்றை விவாதிக்க விரும்புபவர்கள் பங்கெடுக்கவேண்டியதில்லை.கட்டணம்
மூன்றுநாட்களுக்கு உணவுடன் ரூ 3000 கட்டணம் ஆகும். (கட்டணம் கட்டமுடியாத நிலையிலுள்ளவர்கள் தெரிவித்தால் அதை நன்கொடை வழியாக ஈடுகட்டுவோம்)
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெயர், தொலைபேசி, முன்னரே அரங்குகளில் கலந்துகொண்டதுண்டா, படிப்பு மற்றும் பணி, ஊர் ஆகிய தகவல்களுடன் எழுதவும்
ஜெயமோகன்
jeyamohan.writerpoet@gmail.com
சிறுகதைப் பயிலரங்கு, சத் தர்சன்
யுவன் சந்திரசேகர், சுகுமாரன் நடத்தும் சிறுகதைப் பயிலரங்கு. செப்டெம்பர் இ முதல் செப்டெம்பர் 4 வரை. அட்டப்பாடி அருகே உள்ள சத்தர்சன் என்னும் மலைத்தங்குமிடத்தில்.
தொடர்புக்கு
ஆனந்த்குமார்
trekandtransform@gmail.com9489663755
August 26, 2022
கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை 20
நண்பர்களுக்கு வணக்கம்.கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 20 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான “இந்திரநீலம்” நாவலின் பின்வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.பகுதிகள்:4. எழுமுகம்5. கதிர்விளையாடல்6. மணிமருள் மலர்இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில், மாதாந்திர நாவல் வாசிப்பு வரிசையில் லியோ டால்ஸ்டாய் அவர்களின் ‘அன்னா கரீனினா’ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.நாள் : 28-08-22, ஞாயிற்றுக்கிழமை.நேரம் : காலை 10:00இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9தொடர்பிற்கு :பூபதி துரைசாமி – 98652 57233நரேன் – 73390 55954
தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன்
சில நண்பர்கள் இதழாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன் என்னை படித்ததே இல்லை என்று சொன்னதைப் பற்றி குமுறி எனக்கு எழுதியிருந்தார்கள். ஏற்கனவே என் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்று இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சொன்னதை இதேபோல சுட்டிக்காட்டி கோபமாக எழுதியிருந்தனர் சிலர்.
ஸ்ரீதர் சுப்ரமணியன் ஒரு குறிப்பிடத்தக்க ஆங்கிலப் பத்தி எழுத்தாளர் என்றும் அவருடைய பொருளியல், அரசியல் கட்டுரைகள் முக்கியமானவை என்றும் என் நண்பர்கள் பலர் கருதுகிறார்கள். நான் ஓரிரு கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். எனக்கும் அவ்வெண்ணம்தான். நேரு யுகத்து மதிப்பீடுகளைச் சலிக்காமல் முன்வைக்க அவரைப் போன்றவர்கள் நிறையவே எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.
அவர் என்னைப் படித்ததே இல்லை என்று சொன்னதில் வியப்படையவோ, சீற்றம் அடையவோ ஏதுமில்லை. சென்னை சார்ந்த, ஆங்கிலத்தை முதன்மைமொழியாகக் கொண்ட, ஒரு வட்டத்தில் தமிழில் எதுவும் படிப்பதில்லை என்றும் தமிழே தெரியாது என்றும் சொல்வதே உயர்வானது என கருதப்படுகிறது. அதை முடிந்த இடம் எல்லாம் சொல்லவும் செய்வார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு எந்த தமிழ் அறிமுகமும் இருக்காது.
நான் புழங்கும் சினிமாத்துறையிலேயே நானறிந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் மட்டுமே நான் நாவல்களும் எழுதும் இலக்கிய எழுத்தாளன் என்று அறிந்த நடிகர்கள். (இயக்குநர்கள் பெரும்பாலும் அனைவருக்குமே ஓரளவேனும் இலக்கியம் தெரியும்). கமல் என் நல்ல வாசகர். ஆனால் சென்னை தொழில் -வணிக உயர்வட்டத்தில் நான் ஒருநாளில் சந்திக்கும் பத்துபேரில் எட்டுபேருக்கு தமிழ் உச்சரிப்பே வராது. தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, தமிழ்ப்பண்பாடு சார்ந்தேகூட எதுவுமே தெரியாது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், சென்ற ஆண்டு நான் சந்தித்த ஒரு தமிழ் வி.வி.ஐ.பிக்கு ஜெயகாந்தன் பெயரே தெரியாது. பலர் மேடைகளில் என்னை ஜெயகாந்தன் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். மேடைக்கு வரும்போது விக்கிபீடியாவில் தோராயமாக தட்டிப்பார்த்திருப்பார்கள். நான் அதை மறுப்பதில்லை என்பதையும் பார்த்திருப்பீர்கள்.நான் ஜெயகாந்தனும்தானே?
இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்மட்ட ஊடகவியலாளர்கள், ஊடகநிறுவனத் தலைவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், உயரதிகாரிகள். அவ்வாறு தமிழ் தெரியாமலிருப்பது அவர்களின் தனித்தன்மை, சிறப்புச் சமூக அடையாளம் என்றும் நம்புகிறார்கள். ஆகவே என்னைச் சந்தித்ததும் உடனே சொல்லிவிடுவார்கள். நான் எவரிடமும் மேற்கொண்டு என்னை எழுத்தாளன் என அறிமுகம் ஏதும் செய்துகொள்வதுமில்லை. அது பண்பாடு அல்ல. அவர்கள் என்னை அறிந்திருக்கவேண்டுமென நான் சொல்லமுடியாது.
உயர்வட்டத்தில் ஒருவர் தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் எவரையும் தெரியாது, தமிழே வாசிப்பதில்லை என்று சொல்வதில் ஓர் உட்குறிப்பு உள்ளது. அதைச் சொல்லும்போது அதைச் சொல்பவர் தமிழ் இரண்டாம் மொழியாக இல்லாத செலவேறிய உயர்தர ’போர்டிங்’ பள்ளியில் பயின்றவர் என்று பொருள் வருகிறது. பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதம் இரண்டாம் மொழியாகக் கற்றிருப்பார். தமிழ் தெரியும் என்றும் , தமிழில் வாசிப்பவர் என்றும் சொன்னால் உயர்தரப் பள்ளியில் படிக்கவில்லை என்று பொருள் அமைகிறது.
இது ஆங்கிலம் புழங்கும் உயர்வட்டச் சூழலில் மிகமிகமிக முக்கியமான ஓர் அடையாளச் சிக்கல். தமிழ் நன்றாகத் தெரியும், வாசிப்பதுமுண்டு என்று சொல்லிவிட்டால் ஒரே கணத்தில் ஒருவரின் சமூக அந்தஸ்து கீழே போய்விடும். பரம்பரைச் சீமான்கள் நடுவே அவர் புதுப்பணக்காரர் ஆகிவிடுவார். நாகரீகங்களை இன்னமும் முழுமையாகக் கற்காதவர் ஆகிவிடுவார். அவருக்கு ‘கருணையுடன்’ ‘பெருந்தன்மையுடன்’ நாகரீகங்களைக் கற்பிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மிக நாசூக்காக, மிகமிகப் பூடகமாக அது நிகழும்.
அதே சமயம் சாதாரண தமிழ் சினிமாக்களைப் பார்ப்பதும், அப்பாடல்களுக்கு நடனமாடுவதும் அந்த வட்டத்தில் உயர்குடித்தன்மைதான். அதற்கு என்ன பொருள் என்றால், அவர் மிகமிக நாகரீகமானவர் என்றாலும் பெரும்பொறுப்புகள் மற்றும் கடுமையான பணிச்சூழல் நடுவே ‘இளைப்பாறலுக்காக’ வெகுஜனக் கலாச்சாரம் நோக்கி இறங்கி வருபவர் என்று. கீழ்ரசனை ஆயினும் அதையெல்லாம் பெரிதுபடுத்தாத பெருந்தன்மையானவர், அவ்வப்போது ரொம்பச் சாதாரணமாகவும் இருக்கக்கூடிய அசாதாரண மனிதர் என்று.
‘எனக்கு விஜய் படங்கள் பிடிக்கும். இன் ஃபேக்ட், நான் ஆலுமா டோலுமா பாட்டுக்கு பாத்ரூமிலே டான்ஸ் ஆடுவேன்’ என்று சொன்னால் சொல்பவர் ஒரு பல தலைமுறைச் சீமான் என்று பொருள். அண்மையில் ஒருவர் ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட நக்சலைட் போல கொதித்தார். (ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு தொழில் செய்பவர்) உடன் சக நக்சலைட்டுகள் கூடி கொதித்தனர். அதெல்லாம் உயர்குடித்தன்மைதான்.
கமல்ஹாசன் இந்த அடையாளச் சிக்கலை, இதை பலவகை நுண்நடிப்புகள் வழியாக பார்ட்டிகளில் முன்வைப்பவர்களை அற்புதமாக நடித்தே காட்டுவார். “ஓ, நீங்கள் தமிழ் படிப்பீர்களா? வாவ்! கிரேட்! நானெல்லாம் தமிழிலே எழுத்துக்கூட்டுதான்…ஸோ நைஸ்!” கமல்ஹாசன் அச்சூழலில் வேண்டுமென்றே தமிழ் ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே பேசுவார். கோணங்கி பற்றியோ சோ.தர்மன் பற்றியோ என்னைப்பற்றியோ. ஆழ்வார் பாசுரங்களையோ ஞானக்கூத்தன் கவிதைகளையோ பாடுவார்.
இந்தச் சிக்கலுக்கு தனிமனிதர்களை குறைசொல்வதில் பொருளில்லை. இது சென்னை நெடுங்காலம் ஆங்கிலேய அரசின் தலைமையகமாக இருந்தமையால் உருவாகிவந்த நிலைமை. தமிழே இல்லாத உயர்தர கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் ஆங்கிலேயர் காலம் முதல் உருவாகி இன்றும் முதன்மையாக நீடிக்கின்றன. நம்மை ஆள்பவர்கள், நம் சமூகத்தில் முதன்மையானவர்களின் பிள்ளைகளெல்லாம் அங்கேதான் பயில்கின்றனர்.
கலாக்ஷேத்ரா, தியோசஃபிகல் சொசைட்டி போன்ற மாபெரும் கலாச்சார நிறுவனங்கள் சென்னையிலுள்ளன. அவற்றுக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லை. நவீன இலக்கியவாதிகள் எவராவது ஒருமுறையாவது அவற்றுக்குள் சென்றிருக்கிறோமா? அவற்றைச் சார்ந்து ஓர் உயர்மட்டப் பண்பாட்டுவட்டம் உருவாகி நீடிக்கிறது. அவர்கள் இந்து ஆங்கில இதழில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எவருக்காவது நவீன இலக்கியம் தெரியுமா? இது நம் கண்ணெதிரேதானே நிகழ்கிறது?
அந்த வட்டம் எளிமையானது அல்ல. அவர்களில் பலர் கலையறிவு, இசையறிவு ஆகியவற்றில் மிக முக்கியமானவர்கள். பொருளியல் அறிஞர்களும், ராஜதந்திரிகளும், சட்ட அறிஞர்களும் பலர் அவர்களிலுண்டு. அவர்களுக்கு தமிழ் தெரியாதென்பதனால் அவர்கள் தமிழகத்துக்கு அளிக்கும் பங்களிப்பு குறைந்துவிடுவதில்லை. அதை எண்ணி சீற்றம் கொள்ளவும் நாம் உரிமை கொண்டவர்கள் அல்ல. நம் பிள்ளைகளை அவர்களைப்போல ஆக்கத்தானே முயற்சி செய்கிறோம். நம் பிள்ளைகளில் தமிழ் தெரிந்தவர்கள் எத்தனைபேர்? தமிழில் வாசிப்பவர்கள் எத்தனை பேர்?
அந்த வட்டத்தில் இருப்பவர்கள்தான் அதிகமும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பதனால்தான் தமிழிலக்கியம் ஆங்கிலத்தில் முறையாக அறிமுகமாவதில்லை. நவீன இலக்கியம் பற்றி இந்தியச் சூழலில் பேச நமக்கு இலக்கியப்புரவலர்களே இல்லை. லா.ச.ராமாமிருதம் இறந்த செய்தியுடன் லா.சு.ரங்கராஜன் என்பவரின் படத்தை ஹிந்து ஆங்கில நாளிதழ் போட்டது என்றால் அதற்குக் காரணம் இதுவே. அடிப்படைத் தமிழிலக்கிய அறிமுகமே இல்லை. நாளை நான் இறந்த செய்தியுடன் ஜெயகாந்தன் அல்லது ஜெயமாலினி படத்தை போட்டுவிடுவார்கள். அவர்கள் ஓர் அமெரிக்க, பிரிட்டிஷ் எழுத்தாளர் சார்ந்து இப்பிழையைச் செய்ய மாட்டார்கள்.
இவர்கள் அரிதாக தமிழ்ச்சூழல் பற்றி எழுதினாலும் பிழையாகவே எழுதுகிறார்கள். பெரும்பாலும் மிகப்பொதுவான புரிதல்கள். நான் பேசும்போது இவ்வட்டத்தினர் தமிழகம் பற்றிக் கொண்டிருக்கும் சித்திரத்தை எண்ணி திகைத்தது உண்டு. ஆனால் திருத்த முயலமாட்டேன். எனக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாது என்ற பாவனையையே எடுப்பேன். ஏனென்றால் நான் இச்சூழலில் பழகுவது என் தொழிலுக்காக. அங்கிருந்து நான் கொண்டுவரவேண்டியது பணத்தை. நான் அவர்களுக்கு கொடுக்க ஒன்றுமே இல்லை.
இவர்கள் தமிழிலக்கியம் பற்றி, தமிழ்நூல்கள் பற்றி ஆங்கிலம் வழியாக தெரிந்துகொண்டு எழுதும் குறிப்புகள் பெரும்பாலும் இரண்டு மனநிலைகள் கொண்டவை. ஒன்று, ‘இறங்கி வந்து’ அனுதாபத்துடன் எழுதப்படும் ‘தட்டிக்கொடுக்கும்’ குறிப்புகள். அல்லது கேலி கலந்த மட்டம்தட்டல்கள்.
மிக எளிமையான அன்றாட அரசியல்நிலைபாடுகள் சார்ந்து, அரசியல்சரிநிலைகள் சார்ந்து மட்டுமே இவர்களால் இலக்கியத்தை வாசிக்க முடியும். ’தமிழிலிருந்து அப்படி என்ன எழுதியிருக்கப் போகிறார்கள், அவர்களின் பரிதாப வாழ்க்கையைப் பற்றிய ஓர் அறிக்கையை அவர்கள் எழுதினால் போதும், நான் கருணையுடன் இறங்கிவந்து அதைப் பாராட்டுவேன், என் நீதியுணர்ச்சியை முன்வைக்கும் விதமாக சீற்றம் கொள்வேன், மற்றபடி அவர்கள் என்ன அப்படி ஆங்கிலத்தில் இல்லாத அழகியலோ தத்துவமோ ஆன்மிகமோ எழுதிவிடமுடியும்?’ – இதுவே இவர்களின் பொதுமனநிலை.
இந்தச் சூழல் வங்கம், கன்னடம், மலையாளத்தில் இல்லை. ஏனென்றால் அங்கே இதைப்போன்ற ஒரு தனிப் பண்பாட்டு வட்டம் இல்லை. அவர்களின் மொழியிலுள்ள எழுத்தை மிக ஆழமாக அறிந்திருக்கிறோம் என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் காட்டிக்கொள்ளவே அவர்கள் முயல்வார்கள். சொல்லப்போனால் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிக்கொள்வார்கள். அதிநுட்பங்களைப் பேசுவார்கள். பெருந்தொழிலதிபர்களும் சூப்பர் ஸ்டார் நடிகர்களும்கூட அதைத்தான் செய்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்.
திருவனந்தபுரம் மிகஉயர்வட்டத்தில்கூட முழுக்க முழுக்க மலையாளத்திலேயே பேசலாம். ஆச்சரியமென்னவென்றால் வட இந்தியாவில் இருந்து வந்த உயர்மட்ட அதிகாரிகளும் மலையாளத்திலேயே பேசுவார்கள். சிலநாட்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் அரசகுடியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். மலையாளத்தில், அண்மையில் வெளிவந்த ஒரு நாவலின் பெயரைச் சொன்னார்.
சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை ஒரு சினிமாவுக்காகச் சந்தித்தேன். விக்கிப்பீடியாவில் நான் வெண்முரசு எழுதுபவன் என்று வாசித்திருந்தார். நான் அமர்ந்ததுமே அவர் பேசிய முதல் பேச்சு ‘எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா வாசித்திருக்கிறீர்களா?’ என்பதுதான். ‘இந்தியாவில் மிகச்சிறந்த மகாபாரத ஆக்கம் அதுதான். ஏனென்றால் தென்கனரா பகுதியில் யக்ஷகானம் வழியாக அவர்கள் மகாபாரதத்திலேயே வாழ்கிறார்கள்.இந்தியாவில் அப்படி ஒரு மகாபாரதக் கலாச்சாரம் வேறெங்கும் இல்லை….” என்றார்.
அதில் ‘நீ என்ன எழுதினாலும் எங்காள்தான் பெஸ்ட்’ என்னும் தொனி இருந்தது. ஆனால் ஓர் உச்சநிலை நடிகர் அதை ஓர் அன்னியரைச் சந்தித்ததும் முதலில் சொல்கிறாரே என நான் மகிழ்ந்தேன். அந்தப்பெருமிதம் அல்லவா அம்மொழியை இந்தியச் சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது!
சென்னைக்கு வெளியே இருந்து, முற்றிலும் வேறு சூழல்களில் இருந்து, இளைய தலைமுறை போதிய ஆங்கில ஞானத்துடன் எழுந்துவந்து , இந்திய ஊடகங்களை கைப்பற்றி எழுதும்வரை இதுவே நீடிக்கும். அமெரிக்காவிலேயே அப்படி ஓர் இளைய தலைமுறை உருவாகவேண்டும். கனவுதான். சரிதான், கனவாவது கண்டு வைப்போமே.
நான் மீண்டும் சொல்வதுதான். நமக்கு இன்று கமல்ஹாசன் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். தமிழ் தெரியும் என்று எங்கும் நிமிர்ந்து சொல்ல, தமிழிலக்கியத்தை பெருமிதத்துடன் இந்தியச் சூழலில் எடுத்துச் செல்ல. இக்கணம் அவர்மேல் உருவாகும் பெரும் பிரியத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.
சியமந்தகம், கட்டுரைகள்
பொன்னியின் செல்வன், தமிழ் விக்கி
வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே,
எனது நண்பர் ஒருவர் பொன்னியின் செல்வன் ஆங்கில மொழிபெயர்ப்புகள் குறித்து பரிந்துரைகளைக் கேட்கிறார். தமிழில் பலமுறை படித்திருக்கிறேன் ஆனால் ஆங்கிலத்தில் இல்லை. ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ள முடியுமா?
நன்றி
ஜெயகணேஷ்
அன்புள்ள ஜெய்கணேஷ்,
நீங்கள் நெடுநாள் வாசகர். இருந்தும் தமிழ்விக்கியை கவனிப்பதில்லை என நினைக்கிறேன். தமிழ்விக்கியின் பொன்னியின் செல்வன் கட்டுரையை இந்த தளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறேன். அதில் பொன்னியின் செல்வன் பற்றிய எல்லா செய்திகளும் உள்ளன. மொழிபெயர்ப்புகள் பற்றி செய்திகள் உள்ளன. மட்டுமல்ல, மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தனிப் பதிவுகள் அதிலேயே ஹைப்பர் லிங்க் இணைப்புகளாக உள்ளன.
இத்தகைய கேள்விகளை பொதுவெளியில் கேட்பதே ஒரு பிழை. இதை வேறு எங்கும் அறிவுத்தளத்தில் எவரும் செய்வதில்லை. இதன்பொருட்டே கலைக்களஞ்சியங்கள் தயாரிக்கப்படுகின்றன. கலைக்களஞ்சியம் முழுமையாகவே முன்னால் திறந்திருக்கையிலும் இத்தகைய எளிய செய்திகளைக் கேட்பது சரியல்ல.
இலக்கியம், பண்பாடு பற்றிய எந்த செய்தி என்றாலும் அப்பெயருடன் அரைப்புள்ளி போட்டு Tamil wiki என சேர்த்து கூகிளில் தேடிப்பாருங்கள். பெரும்பாலும் முழுமையான செய்திகள் இருக்கும். இல்லை என்றால் உசாவுங்கள்
ஜெ
சி.வி. கார்த்திக் நாராயணன் பவித்ரா ஸ்ரீநிவாசன் வரலொட்டி ரெங்கசாமிஅ.குமாரசுவாமிப் புலவர்
தமிழறிஞர்களை நாம் பாடநூல்கள் வழியாகவே அறிந்திருக்கிறோம். ஆகவே ஈழத்து தமிழறிஞர்கள் பலர் நமக்கு அறிமுகமே இல்லை. அவர்களில் முதன்மையான ஆளுமை அ.குமாரசுவாமிப் புலவர். தமிழ் தன்னை மீட்டெடுத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் அவரும் இருந்தார். ஈழத்தின் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்றே அவரைச் சொல்லிவிடமுடியும். அவருடைய மாணவர் நிரை திகைப்பூட்டுவது. ஆனால் தமிழகத்த்தில் எங்கும் எவரும் அவரைப்பற்றிப் பேசி நான் கேட்டதில்லை.
அ.குமாரசுவாமிப் புலவர்
அ. குமாரசுவாமிப் புலவர் – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


