Jeyamohan's Blog, page 731
August 18, 2022
இருளும் அழுக்கும் இலக்கியமும்
அன்புள்ள ஆசிரியருக்கு,
கே. ராமானுஜம் பற்றிய நாவல் எழுதுவதை யோசித்துக் கொண்டிருக்கும் போது பல கேள்விகள் தோன்றின. மற்ற கேள்விகளுக்கு எல்லாம் கிட்டத்தட்ட விடை கிடைத்துவிட்டது. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலை நாம் ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வியும் இருந்தது. பல கதைகள் மீள மீள பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. ஒரு வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் அணுகிப்பார்க்கும் வெவ்வேறு புனைவுகள் எழுதப்படுவது இயல்பு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விடை கிடைக்காமல் அலைகழிக்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. அதை உங்களிடம் கேட்டு தெளிவுபடுத்தவே இக்கடிதம்.
கே.ராமானுஜம் பற்றிய தமிழ்விக்கி பதிவை எழுதும் போது அவர் 33 வயதில் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரத்தை பதிவு செய்தேன். அக்குறிப்பை எழுதியவுடன் 33 வயது ஆக நமக்கு இன்னும் ஓரிரு வருடங்கள் இருக்கிறது என்ற எண்ணம் மின்னி மறைந்தது. ஒரு கணத்தில் என்னை அக்குறிப்புடன் இணைத்துப் பார்த்தேன். நான் தற்கொலை எண்ணமோ கழிவிரக்கங்களோ கொண்டவனல்ல. நான் உங்கள் வாசகன். அறம், தன்மீட்சி போன்ற நூல்களை வாசித்த எவரும் தன்னளவில் சிறிதளவாவது இலட்சியவாதத்தை கை கொள்ளாமல் இருக்க முடியாது. என் வாழ்க்கையை அதன் போக்கில் கொண்டாட்டங்களாக நிறைத்து வாழ்வதே என் இயல்பு.
ஆனால் தற்கொலை எண்ணத்தை நோக்கி மிக எளிதாக செல்லும் அளவிற்கு உணர்ச்சிகரமான நண்பர் ஒருவர் கே. ராமானுஜத்தின் பதிவை வாசித்து விட்டு எனக்கு 31 வயது ஆகிறது. 33 வயது ஆக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அதற்குள் செய்ய வேண்டியதை செய்து முடித்துவிட்டு போய்சேரவேண்டியது தான் என்று சொல்லி சிரித்த போது தான் அதிர்ச்சியாக இருந்தது. அவர் நகைச்சுவையை அதனுடன் இணைத்து சொன்னாலும் அவருடைய பிரச்சினைகள் பதட்டங்கள் எல்லாம் எனக்கு தெரியும். அவர் சொல்வது போல் நடந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றியது.
[image error] சேத்ஒரு இலட்சிய படைப்பு வாசகனை ஏதோ ஒரு விதத்தில் தன்னை மேம்படுத்த வாய்ப்பளிக்கும் என்றாலும் ஒரு படைப்பு எழுதுவதற்கு முன்பு அது கடைசியில் எப்படி உருமாறி வரும் என்று நம்மால் சொல்ல முடியாது. அப்படைப்பை வாசிக்கும் வாசகனின் எதிர்மறை எண்ணங்களை பரிசீலிக்க வைப்பதாகவும் படைப்பு அமையலாம். அப்படி பரிசீலித்தாலும் ஒரு வேளை அவனை எதிர்மறை எண்ணங்களால் அடித்துக் கொண்டு செல்பவனாகவும் மாற்றலாம். அறம் போன்ற ஒரு படைப்பு வாசக சமூகத்தில் ஏற்படுத்திய நல்லதிர்வு ஒரு எழுத்தாளனாக உங்களுக்கு எப்போதும் பெருமை அளிக்கக் கூடியதாகவே இருக்கும். யானை டாக்டர் போன்ற கதையை வாசித்தவன் பிற உயிர்களுக்காக சிறிது கண்ணீர் சிந்துவான். வணங்கான் கதை படித்தவன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தூண்டுதலை பெறுவான். நீங்கள் எழுத வந்ததற்கான நிகர்பயனை இதுபோன்ற சில படைப்புகளே கொடுத்து விடுகிறது.
மாறாக ஒரு நாவல் எழுதப்பட்டு அது வாசித்த வாசகர்களை எதிர்மறை எண்ணங்களில் மூழ்கடித்தால் சிலரை தற்கொலை நோக்கி தூண்டினால் அந்நாவலின் நிகர்பயன் என்னவாக இருக்கும் என்பதே என் கேள்வி. அந்நாவல் அதை வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக பிறர் வாழாத வாழ்க்கை அனுபவத்தை அளிக்கலாம். ஆனால் அதை வாசித்து விட்டு சில வாசகர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தெரியவந்தால் அதன்மூலம் நாவல் எழுதியவனை குற்ற உணர்ச்சி செய்ய வைக்கும் என்றால் அந்நாவலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையும் ஏன் எழுதப்பட வேண்டும் என்று கேள்வியாக எஞ்சி நிற்கிறது.
எழுத வருபவர்களில் சிலருக்கும் இது போன்ற கேள்வி வரும் வாய்ப்பிருப்பதால் நேரடி சந்திப்பில் கேட்பது வரை தள்ளிப்போடாமல் உங்கள் வழிகாட்டுதல்களுக்காக எழுதி அனுப்புகிறேன்.
அன்புடன்,
ஜெயராம்
அன்புள்ள ஜெயராம்,
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலில் ஒரு வரி. ‘திருப்பி போட்டுக்கொண்ட சட்டை போல’. சட்டைப்பை உள்ளே இருக்கும். உங்கள் கேள்விக்கான பதிலாகவும் அதையே சொல்ல விரும்புகிறேன். ஒரு படைப்பிலிருக்கும் எதிர்மறைத்தன்மை என்பது திருப்பிப்போட்டுக்கொண்ட சட்டை. நம்பிக்கை உள்ளே இருக்கும்.
ஒரு படைப்பு மெய்யாகவே எதிர்மறைத்தன்மையை, அவநம்பிக்கையை செயலின்மையை, முன்வைக்கிறது என்றால் அது ஏன் எழுதப்படவேண்டும்? அது எழுதப்படுகிறது, பிரசுரமாகிறது என்பதிலேயே அந்த ஆசிரியனின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது. அவன் தன் வாசகர்களில் ஒருநல்விளைவை உருவாக்கவே எழுதுகிறான். ஆனால் அதற்கு வாசகனை சீண்டவோ நிலையழியச்செய்யவோ முயல்கிறான். வாழ்க்கையின் அறியப்படாத பக்கங்களைக் காட்டி வாசகனை திகைக்கச் செய்யும் படைப்புகள் உள்ளன. வாசகனிடம் ஆழமான குற்ற உணர்வை உருவாக்கும் படைப்புகள் உள்ளன. வாசகனின் நீதி உணர்ச்சியை சுண்டி அவனை அமைதி இழக்கச்செய்பவையும் உண்டு. வாழ்க்கையின் மொத்த சித்திரத்தை அளித்து வாசகன் தன் சிறுமையை உணரச்செய்து அதனூடாக அவனை ஆழ்ந்த துளியுணர்வுக்கு ஆளாக்கும் படைப்புகள் உண்டு. எதிர்மறைத்தன்மை என்று நாம் பொதுவாகச் சொல்பவை இவைதான்.
காம்யூஆனால் எந்த இலக்கியப்படைப்பும் வாசகனில் உருவாக்கும் தொடர் இயக்கம் வழியாகவே மதிப்பிடப்படவேண்டும். வாசிப்பைக் கொண்டே இலக்கியப்படைப்பின் இயல்பையும் பணியையும் மதிப்பிட முடியுமே ஒழிய அதிலுள்ள உள்ளடக்கம் வழியாக அல்ல. நல்ல இலக்கியப்படைப்பு என சொல்லப்படுவது எதுவும் வாசகனின் பயணம் ஒன்றைத் தொடங்கி வைக்கிறது. அவன் ஆளுமையை மேலும் ஆழம் கொண்டதாக்குகிறது. அது சென்றடையும் இடம் அவனுடைய ஓர் அக நிகழ்வின் நிறைவே. அது ஒரு நேர்நிலைக்கூறு மட்டும் தான். ஆகவே அது உடனடியாக உருவாக்குவது நிலையழிவை, சீண்டலை, கசப்பை, ஒவ்வாமையை என இருந்தாலும் அது நேர்நிலைப் படைப்பே.
இலக்கியப்படைப்புகளை ஒரு நீண்ட தொடர் உரையாடலின் ஒரு பகுதி என்றே கொள்ள வேண்டும். இலக்கியப்படைப்பு தனித்து நிற்கவில்லை. இலக்கியம் எனும் தொடர் உரையாடல் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு இலக்கியப்படைப்பும் அதற்கு முன்பிருந்த இலக்கிய மரபின் தொடர்ச்சி, வேறு பல இலக்கியப் படைப்புகளுக்கான எதிர்வினை, புது இலக்கியப்படைப்புகளை உருவாக்கும் தொடக்கம். அவ்வாறுதான் ஒரு படைப்பின் உணர்ச்சிநிலை, வடிவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.
லாரன்ஸ்உதாரணமாக வாழ்க்கைசார்ந்த ஒளிமிக்க சித்திரத்தை மட்டுமே அளிக்கும் படைப்புகள், வாழ்வின் மீது பெருங்கனவை மட்டுமே விரிக்கும் படைப்புகள் நிறைந்த சூழலுக்கு எதிர்வினையாக வாழ்வின் அப்பட்டமான யதார்த்தத்தை முன்வைக்கும் ஒரு படைப்பு எழுதப்படலாம். அப்படைப்பை மட்டும் எடுத்துப்பார்த்தால் ஒருவேளை அது ஒரு சோர்வூட்டும் படைப்பாகத் தோன்றலாம். ஆனால் அது முந்தைய கற்பனாவாதத்தின் ஒருபக்கச் சார்பை சமன் செய்கிறது எனும்போது அது ஆற்றும் பணியும் நேர்நிலையானதே.
பெரும்பாலான யதார்த்தப் படைப்புகளை கவனித்தால் ஒன்று தெரியும். அவை எப்போதும் கற்பனாவாதத்திற்கு எதிரான அழகியலைக் கொண்டுள்ளன. வரலாறு முழுக்கவே உலக இலக்கியத்தில் ஓங்கியிருப்பது கற்பனாவாதம்தான். இயற்கை மற்றும் மனித உறவுகள் சார்ந்து ஒரு பெருங்கனவை அவை முன்வைக்கின்றன. மனிதன் தன் அன்றாடத்தால் அழுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டங்களில், போர்களிலும் பஞ்சங்களிலும் அவை அவனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்திருக்கலாம். ஆனால் கூடவே அவை அவனுடைய நீதியுணர்ச்சியை மங்கச்செய்து, கனவுலகில் வாழச்செய்வனவாக ஆகக்கூடும். அவை அவனுடைய அன்றாட எதார்த்தத்தின் மீதான பார்வையை மழுங்கடிக்கக்கூடும். அப்போது அந்த மிகைத்தன்மையை நிகர்செய்ய யதார்த்தப் படைப்புகள் வருகின்றன.
ஸ்டோஉலக இலக்கியப் போக்கையே கவனியுங்கள். செவ்வியல் கற்பனாவாதம் என ஒன்று உண்டு. உதாரணம், கம்பராமாயணம். அது அறம்சார்ந்ததாக, பெருங்கேள்விகளை எழுப்புவதாக இருக்கும். வெறும் கற்பனாவாதம் அறவிவாதங்கள் அற்றதாகவும், புனைவுலகு ஒன்றை உருவாக்கி அதில் திளைப்பதாகவும் இருக்கும். அது செவ்வியல் கற்பனாவாதத்தின் நிழல்தொடர்ச்சியாகவும் இருக்கும். உதாரணம், குற்றாலக் குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள். அவற்றில் உள்ள வெற்றுக் கற்பனைக்கு எதிராகவே நேரடியாக யதார்த்தத்தை முன்வைக்கும், சீண்டும், உலுக்கும் படைப்புகள் உருவாகி வந்தன.
மீண்டும் கவனியுங்கள், தன்னளவில் எதிர்மறைப்படைப்புகள் என்று சொல்லக்கூடிய பல படைப்புகள் மனிதனின் நீதியுணர்ச்சியின்மேல் ஆழ்ந்த தாக்கத்தை செலுத்தி மானுட குலமே மேலான நீதியொன்றை நோக்கி செல்ல வழிவகுத்துள்ளன. உதாரணம் Uncle Tom`s Cabin. ஜனநாயகம் உருவாக்கிய பல மதிப்பீடுகளை கட்டி எழுப்பியவை மாபெரும் துன்பியல் படைப்புகள். எந்த நிலையில் நாம் வாழ்கிறோம், என்னென்ன இருள்களை நாம் உள்ளத்தில் சுமந்துகொண்டிருக்கிறோம், நமது நீதியுணர்ச்சியின்மீது நாம் எத்தனை மழுப்பல்களை ஒவ்வொரு கணமும் போட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அலகு பிரித்துக்காட்டும் ஒரு படைப்பு மெய்யாகவே எதிர்மறையானதா அல்லது நல்விளைவுகளை உருவாக்கும் எதிர்மறைத்தன்மை கொண்டதா?
ஃப்லாபர்ட்மனிதனின் உயர்நிலையை மட்டுமே முன்வைக்கும் ஒரு படைப்பு நேர்நிலையானதென்று கொள்ளப்படலாம். மனிதனின் அனைத்துக் கீழ்நிலைகளையும் வெளிப்படுத்தும் ஒருபடைப்பு எதிர்நிலையானதென்று நமக்குத்தோன்றும். ஆனால் அது மனிதனை தன்னைத்தானே பார்க்க வைக்கிறது, தன்னைக்கடந்து செல்ல வைக்கிறது. அது ஒரு நோயறிக்கையைப்போல. நோய் அறிக்கைக்குப் பின்னால் சிகிச்சைக்கான அறைகூவல் இருக்கிறது. சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை அது அளிக்கிறது.
19ம் நூற்றாண்டில் உலகெங்கும் எழுதப்பட்ட யதார்த்தவாத, இயல்பு வாத நாவல்கள் மிகக்கடுமையான எதிர்மறைத்தன்மை கொண்டவை என்று மேலோட்டமாகப் பார்த்தால் தோன்றும். ஆனால் அவைதான் மனித குலத்தின் மீது நூற்றாண்டுகளின் தேக்கத்தால் உருவான செயலற்ற விழுமியங்கள் ஏற்றி வைத்திருந்த எடையை நமக்குக் காட்டியவை. மனித விடுதலைக்கான அறைகூவலை உருவாக்கியவை. உதாரணம், தல்ஸ்தோயின் அன்னா கரீனினா அல்லது ஃப்லாபர்ட்டின் மேடம் பவாரி போன்ற பேரிலக்கியங்களே இங்கு பெண்களின் வாழ்வு எப்படி உள்ளது என்று நமக்குக்காட்டின. இன்று நாம் பெண்களின் வாழ்க்கை பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டதாக இருந்து வந்தது என்று உணர்ந்திருக்கும் நிலைமை இப்பேரிலக்கியங்களின் வழியாக உருவானதே.
ஜனநாயகத்தின் விழுமியங்களை வலியுறுத்தும்பொருட்டு எழுதப்படும் படைப்புகள் நம்மை நோக்கி விரல் சுட்டுகின்றன. நாம் சென்ற காலத்தில் இழைத்த சாதிய கொடுமைகளை சித்தரித்து நம்முன் வைக்கும் ஒரு படைப்பு நம்மை அமைதியிழக்கச்செய்கிறது என்பதனால் அது எதிர்மறைப்பண்பு கொண்டதா என்ன? நாம் நீதியுணர்ச்சியை இரண்டு வகைகளில் மழுப்பிக் கொள்கிறோம். ஒன்று,
ஒரு கலைஞனின் அக சலனங்களை அவலங்களை சொல்லும் ஒரு படைப்பு எதிர்மறையானதா, அன்றி அக்கலைஞர்களை அது போன்ற கலைஞர்களை பார்க்க வேண்டிய பார்வை என்ன என்று சமூகத்திடம் வலியுறுத்துவதா? சென்ற நூறாண்டுகளில் உலகம் முழுக்க கலைஞர்களின் மீதான அணுகுமுறை எத்தனை மாறியிருக்கிறதென்று பாருங்கள். அந்நியர்களாகவும் கிறுக்கர்களாகவும் பார்க்கப்பட்ட கலைஞர்கள் உண்மையில் பிறிதொரு உலகில் வாழ்பவர்கள் என்ற எண்ணத்தை கலைஞர்களின் அக இருளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட பலநூறு படைப்புகள் தானே உருவாக்கியிருக்கின்றன?
ஒரு சமூகத்தின் விளிம்புகளுக்கு அப்பால் வாழ்பவர்கள், சமூகம் உருவாக்கும் பொது கட்டமைப்பை ஏற்று ஒழுக முடியாத உடற்குறையோ உளச்சிக்கல்களோ கொண்டவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் இன்றைய தனி அக்கறையும் அவர்களுக்காக நாம் உருவாக்கியிருக்கும் பல்வகையான சட்டங்களும் அவர்களின் அவலங்களை சுட்டிக்காட்டும் படைப்புகளால் உருவாக்கப்பட்டவைதானே? ஆகவே எதிர்மறைப்படைப்பு என்று ஒன்று இல்லை. நல்ல படைப்பு -சரியாக வராது போன படைப்பு என்றே உள்ளது. நன்றாக வந்த எந்த படைப்பும் மனித குலத்தின் முன்நகர்வுக்கு வழிவகுப்பதே.
கலைப்படைப்பில் மெய்யாகவே இருண்மை கொண்ட ஒன்றில்லை. ஆனால் வெளிப்பாட்டில் இருண்மை கொண்டவை உண்டு. உதாரணமாக, மார்க்யூஸ் து சேத் எழுதிய படைப்புகள் வன்முறை மற்றும் கொடுமைகளின் உச்சங்களைக் காட்டுவன. ஒருகாலத்தில் அவை தடை செய்யப்பட்டு அவர் தண்டிக்கப்பட்டான. டி.எச்.லாரன்ஸ் எழுதிய சாட்டர்லி சீமாட்டியின் காதலன் போன்ற மானுட உறவுகளின் அகச்சிக்கல்களை காட்டும் பல படைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் பின்னாளில் அவற்றின் பங்களிப்பென்ன என்று கண்டடையப்பட்டுள்ளது. இன்று நாம் சேடிஸம் (வன்முறைப்பற்று) என்று ஓர் உளநிலையை வரையறை செய்து அதற்கு மருத்துவ முறைகளை, சமூகப்புரிதல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அது சேத் எழுதிய படைப்புகளில் இருந்து உருவான பார்வைதான். எனில் மானுடத்திற்கு மானுடனின் அதீத உளநிலைகளை சுட்டி எழுதப்பட்ட படைப்புகளை பயனற்றவை எதிர்மறையானவை என்று சொல்ல முடியுமா?
நவீனத்துவப் படைப்புகளிலேயே அந்த எதிர்மறை தன்மை வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் நவீனத்துவ படைப்பு பெரும்பாலும் ஒரு தனி அலகு சார்ந்தது. ஒரு தனி மனிதன், ஒரு கதைக்களம், ஒரு வாழ்க்கைத் தருண,ம் ஒரு குறிப்பிட்ட பார்வை ஆகியவற்றைக்கொண்டது ஆகவே கச்சிதமான ஒரு வடிவத்தை அது அடைகிறது. ஆனால் எப்போதுமே ஒற்றைப்படையான ஒன்றைச் சொல்லி நின்றுவிடுகிறது. உதாரணம் காஃப்கா, காம்யூ எழுதிய படைப்புகள் .
அப்படைப்புகள் பெரும்பாலும் எதிர்மறையாக இருப்பதே இயல்பு. ஏனெனில் கலைஞன் தான் உணர்ந்த ஒரு அமைதியின்மையிலிருந்து தான் எழுதத் தொடங்குகிறான். இதைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற துடிப்பே அவனிடமிருந்து அப்படைப்பு எழ காரணமாகிறது. Rupture என்று சொல்லக்கூடிய ஒரு அகக்கிழிசல் அப்படைப்புகளுக்கு பின்னால் உள்ளது. ஆகவே அமைப்பில் ,கூறுமுறையில் அது எதிர்மறைத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆனால் அந்தப்படைப்பின் சாராம்சம் அது அல்ல.
உதாரணமாக, காம்யூவின் அந்நியன் எல்லா வகையிலும் எதிர்மறைத்தன்மை கொண்ட ஒரு படைப்பு. ஆனால் அது அந்நியத்தன்மை என ஒன்று சமூகத்தில் திரண்டிருப்பதை, அதன் தத்துவ- உளவியல் ஆழங்களைச் சுட்டிக்காட்டியது. அத்தகையோரைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சாளரத்தை பொது சமூகம் நோக்கித் திறந்தது. 20-ம் நூற்றாண்டின் அடிப்படை இயல்பான அகவிலக்கம் என்பதை சரியாக வரையறுக்க உதவியது.
தனிப்பட்ட முறையில் எதிர்மறை தன்மை கொண்ட நவீனத்துவ படைப்புகளை நான் கொண்டாடுவதில்லை. தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் பலவும் அந்த வகையைச் சேர்ந்தவை பதினெட்டாவது அட்சக்கோடு மானுடர்கள் உள்ளிலிருந்து எழும் வன்முறைக்கான விருப்பை தீமையை சுட்டிக்காட்டி அமைகிறது. கிருஷ்ணப்பருந்து அனைத்துக்கும் அப்பால் குடிகொள்ளும் காமவிழைவை நோக்கி ஒரு வெளிச்சம் பாய்ச்சி நின்றுவிடுகிறது.. நான் அவற்றைக்கடந்து வந்து ஒரு சமநிலையை இலக்கியப்படைப்பின் இயல்பாகக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். நான் எழுதும் படைப்புகள் நவீனத்துவத்தைக் கடந்த செவ்வியல் படைப்புகள் என்றே எனக்கே வரையறுத்துக்கொண்டேன்
ஆனால் அது என் இயல்பு சார்ந்தது என் ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டது. என் சொந்த வாழ்க்கையின் அவலங்கள், தேடல்களிலிருந்து நான் கண்டடைந்த வெளிச்சம் ஒன்றுண்டு. அந்த வெளிச்சம் என் படைப்பில் வரும்போதுதான் அவை சமநிலை கொள்கின்றன. செவ்வியல் தன்மை அடைகின்றன. செவ்வியல் தன்மையின் பொருட்டு செயற்கையாக ஒரு நம்பிக்கையை அல்லது நேர்நிலைத்தன்மையை ஓர் ஆசிரியன் தன் படைப்புகளில் உருவாக்கிக்கொள்ள முடியாது. அவனுள்ளிருந்து எழுவது எதிர்மறையான விசையென்றால் அதை நேர்மையாக முன்வைப்பதே சரியானது. அந்த எதிர்மறை விசையினூடாக அவர் சென்று கண்டடைந்த ஒரு வெளிச்சம் அப்படைப்பில் வந்து அதை தன்னியல்பாக செவ்வியல் தன்மை கொண்டதாக மாற்றும் என்றால் அதுவே இயல்பானது.
ஜெ
குலாம் காதிறு நாவலர்
உ.வே.சாமிநாதையருக்கு ஆசிரியராக அமைந்தவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. ஓர் ஆசிரியராக அவர் தமிழின் மறுமலர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறார். நவீனத் தமிழிலக்கியத்தின் இஸ்லாமிய இலக்கிய மரபுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்த குலாம் காதிறு நாவலரும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரே
குலாம் காதிறு நாவலர் – தமிழ் விக்கி
வியட்நாம் துரைசாமி – நோயல் நடேசன்
அந்த வளவின் வாசலுக்குப் போனதும் வராந்தாவிலிருந்த வயதான ஒருவர், சிரித்தபடி உற்சாகமாகச் சக்கர நாற்காலியிலிருந்து கொண்டு கையை அசைத்து வரவேற்றார். அவரது இரண்டு கைகளும் பறவையின் இறக்கையாக காற்றில் மேலும் கீழும் உற்சாகமாக அசைந்தது. அருகில் சென்று பார்த்தபோது அவரது இடுப்புக்குக் கீழ் அவரது கால்கள் அசையவில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அவருக்குப் பாரிச வாதம். அவர் எமது நிறத்திலிருந்தார். ஆனால், கொஞ்சம் சப்பை மூக்கு. இடுங்கிய கண்கள். மொத்தத்திலொரு பால் கோப்பியாகத் தெரிந்தார்.
உடன்தங்கல், கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு
உடன் தங்கலில் தங்களுடன் இருந்த ஆறு நாட்களும் மகத்தானவை. காதலில் எல்லாம் பேசி முடிந்துவிட்ட பின்பும் ஒருவருக்கு ஒருவர் தங்கள் இருப்பை உணர்த்த அர்த்தமே இல்லாமல் பேசிக்கொண்டும், தொட்டுக்கொண்டும் இருப்போம். அந்த ஆறு நாட்களும் நான் செய்துக் கொண்டிருந்தது அது போல ஒன்றுதான். அபத்தமான கேள்விகள், வேளைக்கு ஆகாத humour மூலம் என்னை உங்கள் முன் நிறுத்த முயன்று கொண்டிருந்தேன். அதன் வழியே உங்களோடு பேசுவதற்கு இருந்த தயக்கம் சற்றே குறைந்துள்ளது.
மேகநதிக்கு மேல் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வான்வெளியின் கீழ் முழு நிலவுக்காக காத்திருந்து, வேதத்தையும் பைபிளில் சாலமோன் மன்னன் கவிதைகளையும் படித்த அந்த இரண்டு நாட்களும் மனதில் சித்திரம் போல் பதிந்து விட்டன.
இலக்கியம், வரலாறு, வேதம், பைபிளில், சினிமா, காவல் மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகள், காட்டை பற்றி அறிதல் என ஒவ்வொன்றுக்கும் எத்தனை எத்தனை கதைகள், நகைச்சுவை துணுக்குகள் உங்களிடமிருந்து எழுந்த வண்ணமே உள்ளன… என் வாழ்விலே கற்றலும் மகிழ்தலும் ஒரு சேர நிகழ்ந்தது என்றால் அது இந்த ஆறு நாட்கள்தான்.
மலை உச்சியில் ரம்யமான சூழலில் இருந்துவிட்டு, வீட்டில் நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க பிடிக்கவில்லை ஜெ.
கிருஷ்ணமூர்த்தி
***
அன்புள்ள ஜெ,
நலம்தானே? உங்களுடன் உடன்தங்கலுக்கு வந்த இளைஞர்களை எண்ணி பொறாமைப்படுகிறேன். அந்த வாய்ப்பு இங்கே தொலைவிலிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு அதன் அருமையும் தெரியவில்லை. என் நண்பன் ஒருவனுக்கு போன் செய்து பதிவு செய்யச் சொன்னேன். சினிமாவுக்கு நண்பர்களுடன் முன்பதிவு செய்துவிட்டேன் என்கிறான். இத்தனைக்கும் நிறைய வாசிக்கக்கூடியவன். நம்முடைய இந்த சிதறலையும் தயக்கத்தையும் ஜெயிக்காமல் எங்கும் எதையும் அடையமுடியாது என்ற எண்ணம் வந்தது.
கொண்டாட்டம் கேளிக்கை எல்லாமே நினைவில் நிற்பவைதான். வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் அவைதான் வாழ்ந்த கணங்கள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையான கல்வியும் உண்மையான உரையாடலும் நடந்த நாட்கள்தான் மாபெரும் கொண்டாட்டங்கள். எனக்கு இந்தியாவிலிருந்த நாட்கள் அப்படிப்பட்டவை.
அனந்தராம்
மோகினியின் ஆசி – விஜயபாரதி
திருநங்கை பற்றிய என் முதல் நினைவு ஒருமுறை நறுக்கென தலையில் கொட்டு வாங்கியதுதான். கல்லூரி நாட்கள். ரயிலில் நண்பர்களுடன் சென்னையிலிருந்து வாலாஜா வரை பயணம். ஒரு திருநங்கை அனைவரிடமும் பணம் வசூலிக்கும்போது நான் காசு இல்லை என மறுத்தேன். அப்போதுதான் அந்த கொட்டு விழுந்தது.
ஆனால் இன்று அந்த கொட்டு பணத்துக்காக இல்லை எனவே நினைக்கிறேன். என் முகம் ஒவ்வாமையை வெளிப்படுத்தியிருக்கலாம். அங்கு பணமில்லை என மறுத்த அனைவரும் கொட்டுவாங்கிவிடவில்லை. மேலும் அன்று நான் நோஞ்சான் சிறுவன். எனவே அந்த செல்ல தண்டனை. கொஞ்சம் பெரியவர்களாக இருந்தால், அவமரியாதை செய்தால் துணியைத் தூக்கிக்காட்டுதல், வசை என வேறு அருவருக்கத்தக்க எதிர்வினைகள் கிடைத்திருக்கும். இந்த எதிர்வினை ஒரு சமூகமாக அரவாணிகள் வளர்த்துக்கொண்ட எதிர்ப்பு சக்தி என்கிறார் கரசூர் பத்மபாரதி. அவரது “திருநங்கையர் – சமூக வரைவியல்” புத்தகத்தில் இது அரவாணிகளின் நேர்க்கூற்றாகவே பதிவாகியுள்ளது.
அரவாணிகள் பெரும்பாலும் அறுவை சிகிழ்ச்சை மூலமாகவும், ஹார்மோன் மாற்றுக்கான மருந்துகளாலும் வலுவிழந்தவர்களாக உணர்கின்றனர். அவர்கள் விரும்பும் ஒதுக்கும் வேலைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. கடின வேலைகளை ஒதுக்கியே வைத்துள்ளனர். பலவான்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க பலவீனமாக உணரும் ஒரு அரவாணிக்கு இருக்கும் ஒரே வழி அருவருப்பைத் தூண்டி, அவர்களை தாமாகவே விலகிச் செல்ல வைப்பது மட்டுமே.
ஒரு நண்பரிடம் இந்த புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அரவாணிகளால் எந்தத் தொழிலையும் தொடங்க முடியாது அவர்களால் எங்கும் நிரந்தரமாக வேலை பார்க்கவும் முடியாது நிலையான வருமானம் இல்லாதது அரவாணிகளின் பொருளாதார நிலை மட்டமாக இருக்க காரணம். இந்த நிலைக்கு அரவாணிகள் நடந்து கொள்ளும் விதம்தானே காரணம் என்றார். அதுதான் இன்றைய பொதுப் புரிதல். நிலையான வருமானம் இல்லாமையால் அவர்களது தொழிலும் நடத்தையும் அருவருப்பாக உள்ளதா அல்லது அந்நடத்தையால் நிலையான வருமானம் இல்லாமல் போனதா? பத்மபாரதியின் புத்தகம் இன்றைய பொதுப்புரிதலை கேள்விக்குள்ளாக்குகிறது. M.A படித்த பட்டதாரி அரவாணி , வேலை கிடைக்காமல், 10 நாள் பட்டினிக்குப் பிறகு, தன் சுயமரியாதையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு முதன்முதலாக பிச்சை கேட்டு கையேந்தும் தருணம் வாசிப்பவர்களை நஞ்சதிரச்செய்வது.
ஒரு எளிய சிற்றுண்டி விடுதி தொடங்கினால் கூட அங்கு பெண்கள் யாரும் சாப்பிட போவதில்லை. ஆண்கள் மட்டுமே செல்கின்றனர். அதிலும் சிலர் உணவுக்கு பணம் கொடுப்பதில்லை, மாறாக வம்புக்கு இழுத்து கடையை அடித்து நொறுக்குகின்றனர். எந்த வேலையில் சேர்ந்தாலும் பணியிடத்தில் கிண்டலும், பாலியல் தொந்தரவும் நிச்சயம்.
எனில், பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலையும் மட்டும்தான் இந்த சமூகம் அரவாணிகளின் தொழிலாக ஏற்றுக்கொள்கிறது. பிச்சை எடுப்பதையும்கூட அவர்கள் நிம்மதியாக செய்துவிட முடியாது. பிச்சை இரந்து செல்லும் இடத்தில் “மேலே கைவைக்கும்” கடை முதலாளிகளும் உண்டு. அதனால்தான் “தரங்கெட்ட தென்னாடு, தேய்ந்துபோன தென்னாடு” என்ற வழக்கு அரவாணிகளிடையே புழங்குகிறது என்பதை அரவாணிகளின் வாய்மொழியாகவே பதிவு செய்கிறார்.
ஆனால் வட இந்தியா அரவாணிகளுக்கு இந்த அளவு மோசமில்லை . அரவாணிகளின் வாழ்த்தை மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணனின் வாழ்த்தாகவே கொள்கின்றனர். வீட்டிலும், கடையிலும் நடக்கும் விழாக்களுக்கு அரவாணிகளை பல மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து அழைத்து வந்து வாழ்த்த வைப்பதும் நடக்கிறது. அங்கெல்லாம் பிச்சை எடுப்பதோ, பாலியல் தொழிலோ இல்லை என்றல்ல. இப்படி ஒரு மதிப்புமிக்க ஒரு வழியும் உள்ளது என்பதே “வாழவைத்த வட நாடு” என்று போற்ற காரணம்.
வருமானம் சற்று செழிப்பான எல்லா இடங்களிலும் போலிகள் உண்டு. சாதாரண ஆண்கள் போலி அரவாணிகளாக வேடமிட்டு வசூல் செய்வதும் உண்டு. இதை மற்ற அரவாணிகள் கண்டுபிடித்து துரத்திவிடுகின்றனர். போலி அரவாணிகள் “கைதட்டலில் சொதப்புவது” காட்டிக்கொடுத்துவிடும் என்று வாசித்தபோது புன்னகைத்துக்கொண்டேன். வெண்முரசில் அர்ஜுனன் போல, எழுகதிர் சிறுகதையில் ஸ்ரீகண்டன் நாயர் போல உள்ளூர அவர்களால் பெண்ணாக உணர முடியவில்லை. அதனால்தான் கைதட்டல் சொதப்புகிறது.
புத்தகத்தின் இந்த இயல் வெறும் வடக்கு தெற்கு பற்றிய அவதானிப்போடு நிற்கவில்லை. அங்கிருந்து திரும்ப தென்னாட்டுக்கே வருபவர்களையும் அடையாளம் காண்கிறது. சிறு எண்ணிக்கையிலிருக்கும் அரவாணிகளிலும் சிறுபான்மையினரின் இந்த “வீடு திரும்புதல்” நிகழ்வையும் அவதானித்து பதிவு செய்தது வியப்புதான். ஆனால் இத்தகைய கோணங்கள்தான் புத்தகத்துக்கு ஆழம் சேற்கின்றன. ஆம், வடக்கு வாழ வைக்கிறது, ஆனாலும் அங்குள்ள வாழ்க்கை கிட்டத்தட்ட அடிமையாக வாழ்வதுதான். பணம் இருக்கும், பாதுகாப்பு இருக்கும். ஆனால் ஒரு குடும்பமாக குருவுக்கு கட்டுப்பட்டு வாழும் இடத்தில் சுதந்திரம் இருப்பதில்லை. அந்த இறுக்கம் தாளாமல் சிலர் திரும்பி தென்னாட்டுக்கே வந்து வேறு வழியின்றி இழிதொழிலை ஏற்றுக்கொள்கின்றனர். சுதந்திரத்திற்காக வருமானத்தையும், பாதுகாப்பான, மதிப்பான வாழ்க்கையையும் விட்டுவிட தயாராக இருப்பது தான் இங்கு ஆழமான முரண். ஒரு இலக்கியவாசகன் இதன் வழியே வெகுதூரம் செல்ல முடியும்.
கூத்தாண்டவர் திருவிழா பற்றிய இயல் முக்கியமான ஒன்று. அரவான் தான் கூத்தாண்டவர். அரவான் பற்றிய கதைகளே மூன்று உள்ளன. அனைத்துமே கிருஷ்ணனை பெரும் சூழ்ச்சிக்காரன் ஆக காட்டுகின்றன. அதில் ஒரு கதையில் அரவானே திரௌபதியிடம் “அறுத்திடம்மா” என்று சொல்ல திரௌபதி அரவாணை பலி கொடுக்கிறாள். எல்லா கதைகளிலுமே அரவான் மகாபாரதப் போரை ஒரே நாளில் முடிக்கும் வல்லமை உடையவனாகவே வருகிறான். அரவாணிகள் அரவானை கணவனாக வரித்துக் கொண்டவர்கள். அரவான் இறக்கும் முன் கேட்ட வரத்துக்காக கிருஷ்ணன் மோகினியா வடிவம் எடுப்பதை மீள நடிக்கும் நிகழ்வு. மிகவும் விந்தையான ஒரு விஷயம் கூத்தாண்டவர் திருவிழாவில் சாதாரண ஆண்கள் கிட்டத்தட்ட 3000 பேர் அரவாணிகளுடன் நின்று அரவானுக்கு மனைவியாக தாலி கட்டிக் கொள்கின்றனர். அன்று ஒருநாள் அத்தனைபேரும் மோகினிகள்தானே.
அரவானை கணவனாக நினைத்து வழிபட்டாலும் முர்கே வாலி மாதா தான் அரவாணிகளின் தெய்வம் . மாதாவுக்காக நடத்தப்படும் சடங்குகள், முக்கியமாக விரைத்தறிப்பு சடங்குகளை வாசிக்கும்போது பற்கள்கூச கண்கள் மங்கிவிடுகின்றன. ஆனால் பத்மபாரதி அதை மூடநம்பிக்கை என்று புறந்தள்ளுவதை விட ஒரு சமுதாயம் அவர்களுக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாடு என்றும் அதை அவர்களே எண்ணி வெளியே வரவேண்டும் என்றும் தான் எழுதுகிறார்.
சமுதாயம் பற்றிய இயல் அரவாணிகள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்வதையும், தாய் மகள் என்ற உறவுகளை தத்தெடுத்துக்கொள்வதையும் விரிவாக பதிவுசெய்கிறது. மருத்துவம் பற்றிய பகுதியை வாசிக்கும்போது கள ஆய்வு எத்தனை உழைப்பை கோருவது என்பதை உணர முடிந்தது. உள்ளம் பெண்ணாக உணர ஆரம்பித்த பிறகு உயிரை பணயம் வைத்தாவது தன் உடலையும் பெண்ணாக்கிவிடுவது என்பது அரவாணிகளின் துணிவு. விரைத்தறிப்பின்போது இறப்பு நிகழலாம் என்பதால் முந்தைய நாள் பிடித்தவற்றை சாப்பிடச்சொல்கிறார்கள். எத்தனை பேர் அப்படி இறந்திருந்தால் இந்த சடங்கு வழக்கமாகி வந்திருக்கும். எண்ணவே மலைப்பாக இருக்கிறது.
விருது அறிவிக்கப்பட்ட பின்தான் பத்மபாரதி பற்றி அறிந்து புத்தகத்தை வாசித்தேன். ஆய்வு புத்தகம் என்றாலும் மொழி அவ்வப்போது பத்மபாரதி நம்மிடம் கதை சொல்வது போலவே உள்ளது. தேவையான இடங்களில் கறாரான வரையறை, வாய்மொழியாக கேட்ட தகவல்களைச் சொல்லும்போது ஊகங்களுக்கு இடம் கொடுக்கும் மொழி. இந்த வாசிப்பு அரவாணிகள்மீதான பல பிம்பங்களை உடைத்துவிட்டது. அன்று சிறுவனாக நான் தலையில் வாங்கிய அடியை இன்று அரவாணியின் ஆசியாகவே எடுத்துக்கொள்கிறேன்.
ஆய்வாளர் பத்மபாரதியின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் பணிகிறேன். இந்த புத்தகத்துக்காகவே அவருக்கு நன்றிகள். தமிழ் விக்கி தூரன் விருது பெறும் பத்மபாரதிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
பா.விஜயபாரதி
சென்னை
அஞ்சலி, நெல்லை கண்ணன்
இலக்கியப் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் என் நண்பர் எழுத்தாளர் சுகாவின் தந்தை. எனக்கு தனிப்பட்ட முறையிலும் அணுக்கமானவர். நெல்லையின் மரபிலக்கிய ஆளுமைகளில் ஒருவர்.
அஞ்சலி
August 17, 2022
முதற்சுவை
அம்மாவுக்கு நல்ல குரல், ஆனால் பாட்டு பாடுவதில்லை. கவிதைகள்தான் மெல்லிய ராகத்துடன் சொல்லுவாள். சம்ஸ்கிருத யாப்பை ஒட்டி மலையாளத்தில் கவிதை இலக்கணம் அமைந்தபோது சம்ஸ்கிருதத்தில் உள்ள சந்தங்களும் கவிதையில் குடியேறின. அனுஷ்டுப்பு சந்தத்தில்தான் பழைய கவிதைகள் பெரும்பாலும் இருக்கும். துஞ்சத்து எழுத்தச்சன் கிளிப்பாட்டு என்ற நாட்டார் சந்தத்தில் தன் ‘அத்யாத்ம ராமாயணம்’ காப்பியத்தை எழுதி அதைப்பிரபலப்படுத்தினார். பின்னர் கிளிப்பாட்டு முக்கியமான ஒரு சந்தமுறையாக மாறியது. கிட்டத்தட்ட சொல்வதுபோலவே ஒலிக்கும் கேட்க ஒருவகை ஆசிரியப்பா. பெரும்பாலான மலையாளிகள் கவிதைகளை செவியின்பமாகவே அறிந்திருப்பார்கள். அம்மாவும் அப்படித்தான்.
அம்மா இளம்பெண்ணாக இருக்கும்போதுதான் சங்கம்புழகிருஷ்ணபிள்ளையின் ரமணன் என்ற கதைக்கவிதை வெளியாகி பெரும்புகழ்பெற்றது. அன்றெல்லாம் சந்தைகளில் அரையணாவுக்கு ரமணனின் மலிவுப்பதிப்பு கிடைக்கும். எழுதப்படிக்கத்தெரிந்த பெண்கள் எல்லாரும் அதை வாங்கி உணர்ச்சிகரமாகப் பாடுவார்கள்.கற்பனாவாதத்தின் கனிந்த நுனி அந்தக் கவிதை. இசைத்தன்மையும், இனிய சொல்லாட்சிகளும், மிகையுணர்ச்சிகளும் கலந்தது. மலையாளமொழி சங்கம்புழ கவிதைகள் வழியாகவே பதின்பருவத்தை அடைந்தது என்று பின்னர் விமர்சகர்கள் எழுதினார்கள்.
சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் அவரது நண்பர் இடப்பள்ளி ராகவன்பிள்ளையும் இரட்டையர் என்ற அளவில் புகழ்பெற்றவர்கள். இடப்பள்ளி ராகவன்பிள்ளை ஒரு பெண்ணைக் காதலித்தார். அவளுடைய பெற்றோர் இடப்பள்ளி ராகவன்பிள்ளையை ஏற்கவில்லை. பெற்றோரை மறுதலிக்க அவள் முன்வரவுமில்லை. ஆகவே இடப்பள்ளி ராகவன்பிள்ளை மனம் உடைந்து தூக்கு போட்டுக்கொண்டார். அந்தக் கொந்தளிப்பில் குடிகாரராக அலைந்த சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை ஆறுமாதம் கழித்து எழுதிய காவியம் ‘ரமணன்’. அதில் ஆட்டிடையனாகிய ரமணன் பிரபுகுடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகையைக் காதலிக்கிறான். அவளும் காதலிக்கிறாள்.
‘கானனச் சாயையில் ஆடு மேய்க்கான்
ஞானும் வரட்டயோ நின்றே கூடே?’
என்று அவள் கேட்க
‘எங்கிலும் சந்திரிகே லோகம் அல்லே?
பங்கில மானஸர் காணுகில்லே?’
என்று அவன் நிராகரித்துவிடுகிறான். அவளுடைய நினைவை அவன் பூத்த மலர்மரங்கள் நிறைந்த மலைச்சரிவில் அமர்ந்து புல்லாங்குழலில் இசைக்கிறான். அவளுடைய பெற்றோர் காதலை நிராகரிக்கிறார்கள். அவள் அவனுடன் வரத்தயார்தான். அவன்தான்
‘பாடில்லா பாடில்லா நம்மை நம்மள்
பாடே மறந்நு ஒந்நும் செய்து கூடா!’
என்று நிராகரிக்கிறான். அவளுடைய திருமணம் நடக்கிறது. மனம் உடைந்த ரமணன் காடுகளில் புல்லாங்குழல் ஊதி ஊதி அலைகிறான். தன் நெஞ்சில் உள்ள இசை முழுக்கத் தீர்ந்து போனபின்னர் ஒரு பூத்தமரத்தில் காட்டுக்கொடியில் தூக்கிட்டு இறக்கிறான்
பிரிட்டிஷ் கற்பனாவாதத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்த கவிதை இது. வேர்ட்ஸ்வர்த்துக்குப் பிரியமான மேய்ச்சல் வாழ்க்கையைத்தான் அப்படியே சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையும் இலட்சியக்கனவாக ஆக்கிப் பாடியிருந்தார். கேரளத்தில் அடர்காடுகளும், நீர்நிலைகளும், வயல்களும்தான். ஆகவே அங்கே எந்தக்காலத்திலும் மேய்ச்சல் வாழ்க்கை இருந்ததில்லை. கன்றுகாலிகள் வீட்டில்தான் வளர்க்கப்பட்டன. முற்றிலும் தெரியாத ஒரு வாழ்க்கைமீது எழுந்த பிரியம் ஒரு கனவுபோல அனைவரையும் இழுத்துக்கொண்டது.
இன்னொன்றும் தோன்றுகிறது, ரமணனின் கதாபாத்திர உருவகத்தில் கிருஷ்ணன் இருக்கிறான். கேரளம் ஐந்து நூற்றாண்டாக கிருஷ்ணபக்தி வேரூன்றிய மண். எங்கும் கோபிகாவல்லபனாகிய வேணுகோபாலன் காதலிசை எழுப்பி நிற்கும் ஆலயங்கள். அங்கெல்லாம் தினமும் ராதாகிருஷ்ண காதலைப்பாடும் ஜெயதேவரின் அஷ்டபதிப் பாடல்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையே அஷ்டபதியை மலையாளத்தில் மொழியாக்கம்செய்திருக்கிறார்
வேர்ட்ஸ்வர்த்தும் ஜெயதேவரும் கலந்த ஒரு வெற்றிகரமான கலவை ‘ரமணன்’. கோபிகைகளை வென்ற கண்ணன் சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் காவியத்தில் காதலில் தோற்று உயிரைவிடுகிறான். நாணயத்தின் மறுபக்கம். ஒருவகையில் இரண்டுமே காதலின் சர்வ வல்லமையைக் கொண்டாடக்கூடிய கதைகள்தானே? இதை சற்று நக்கலாக கெ.ஜி.சங்கரப்பிள்ளை இப்படி ஒரு கவிதையில் எழுதினார்.
பதினாறாயிரத்து எட்டுக்கு
இடையன்
என்றாலும்
ஒன்று கைவிட்டுப் போனபோது
தூக்கில் தொங்கினான்
பரம கஞ்சன்!
அம்மா ரமணனை முழுக்கவே மனப்பாடமாக்கியிருந்தாள். ரமணன் வழியாகத்தான் அவளுக்குக் கவிதையில் ஈடுபாடு வந்தது. கோயில்குளத்துக்குக் குளிக்கப்போகும்போது கூடவே சேர்ந்து குளித்த நெய்யாற்றின்கரை தங்கம்மை அக்கா ரமணனின் சில வரிகளைப் பாடுவதைக் கேட்டாள். மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டாள். அந்தவரிகள் அப்படியே மனதுக்குள் நுழைந்துகொண்டன. வீட்டுக்கு வந்து ரமணன் ஒரு பிரதி வாங்கித்தரவேண்டுமென அண்ணாவிடம் கேட்டாள்.
அன்றெல்லாம் குலஸ்திரீகள் கதைகவிதை வாசிப்பது கற்புக்கு இழுக்கு என்று எண்ணப்பட்டு வந்தது. மூத்த அண்ணா கை ஓங்கியபடி அடிக்கவே வந்துவிட்டார். ‘நாயுட மோளே வெட்டிக் கொந்நு குழிச்சுப் போடுவேன்..போடி உள்ள’ ஆனால் இளைய அண்ணன் அன்று புகழ்பெற்றிருந்த கம்யூனிஸ்டு. அவர் ரகசியமாக ஒரு பிரதி வாங்கி வீட்டில் வேலைக்கு வரும் காளிப்பெண்ணிடம் கொடுத்தனுப்பினார்.
காளிப்பெண்ணுக்கும் அம்மாவுக்கும் ஒரே வயது, ஒரே கனவு. இருவரும் ரகசியமாகத் தென்னந்தோப்புக்குள் ஓலையும் மட்டையும் சேகரித்து வைத்திருக்கும் கொட்டகைக்குள் அமர்ந்து ரமணனை மனப்பாடம் செய்தார்கள். காளிப்பெண்ணுக்கு எழுத்து தெரியாது. அவள் காதால் கேட்டே கற்றுக்கொண்டாள். இருவரும் மீண்டும் மீண்டும் அந்தவரிகளைப் பாடியபடி கனவுலகில் அலைந்தார்கள். பூவன்றி வேறில்லாத காடு. புல்லாங்குழலின் இனிய இசை. அதை உணர்ச்சிகரமாக வாசிக்கும் பேரழகன். காதலுக்காக, ஒரு பெண்ணுக்காக, உயிரையே இழக்கக்கூடியவன்!
அன்றெல்லாம் அம்மாவோ காளிப்பெண்ணோ ஒருவர் ரமணனில் ஏதேனும் ஒருவரியை முனகினால்கூட இன்னொருவர் அதைப் பாட ஆரம்பித்துவிடுவார். இருவரும் சேர்ந்து பாடுவார்கள். சிலசமயம் வேறு சமவயதுப்பெண்களும் சேர்ந்து பாடுவார்கள். ‘ரமணன் கொஞ்சநேரம் பாடினால் அப்படியே கண்கலங்கி அழுகை வந்துவிடும்’ என்று அம்மா சொல்வாள். எல்லாப் பெண்களும் சேர்ந்து கண்கலங்கி இனிய துயரத்தைப் பெருமூச்சாக வெளியே விடுவார்கள்.
ரமணனின் பாதிப்பு மலையாள மனதில் நிரந்தரமானது. அன்றுமுதல் இன்று வரை துயரத்தில் முடியும் காதல்கதைகள்தான் மலையாளத்தில் பெருவெற்றி பெற்றிருக்கின்றன. தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘செம்மீன்’ ஓர் உதாரணம். ‘மானஸ மைனே வரூ’ என்று கடற்கரையில் நிலவில் அமர்ந்து பாடும் பரீக்குட்டி ஒரு ரமணன் அல்லவா? அப்படி எத்தனை திரைப்படங்கள்!
அம்மா ரமணனில் இருந்து குமாரன் ஆசானுக்கு வந்து சேர்ந்தார். ‘நளினி’, ‘லீலா’ எல்லாமே காதல் தோல்வியின் கதைப்பாடல்கள்தான் என்று இப்போது தோன்றுகிறது. அவை எளிய மானுடக்காதல்கள் அல்ல, எய்தவே முடியாத இலட்சியக்காதல்கள், அவ்வளவுதான். அம்மா விடிகாலையில் எழுந்து சமையலை ஆரம்பிக்கும்போது மெல்லிய குரலில் குமாரன் ஆசானின் வீணபூவு [விழுந்தமலர்] நீள்கவிதையைப் பாடுவதை நான் பலமுறைகேட்டிருக்கிறேன். உதிர்ந்த மலரை நோக்கிக் கவிஞன் பாடுகிறான்
குமாரனாசான்ஹா புஷ்பமே, அதி துங்க பதத்தில்
எத்ர சோ·பிச்சிருந்நு ஒரு ராக்ஞி கணக்கே நீ?
[‘ஓ மலரே உன்னதமான இடத்தில்
எத்தனை சோபித்திருந்தாய் நீ, ஒரு மகாராணியைப்போல!’]
‘அவனி வாழ்வு ஒரு கினாவு! கஷ்டம்!’ என்ற கடைசிவரியைப் பலமுறை மெல்ல ஆலாபனைசெய்து அம்மா நிறுத்துவாள். குளிருக்குப் போர்வையைப் போர்த்தியபடி கண்மூடிக்கிடந்து நான் உதிர்ந்த மலரின் விதியை எண்ணிக் கண்ணீர் விடுவேன். வழ்வெனும் துயரக் கனவு. மகத்தான பிரபஞ்சவிதிகளால் கொஞ்சம் கூடக் கருணை இல்லாமல் தட்டித்தள்ளப்பட்ட மலர். உதிர்வதைத்தான் எல்லா மலர்களும் நூறு நுறு வண்ணங்களால் கொண்டாடுகின்றனவா என்ன?
அம்மாவுக்கு பின்னர் இடச்சேரி, ஜி.சங்கரக்குறுப்பு, வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் கவிதைகளில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆனாலும் அம்மாவுக்கு மிகவும் பிடித்த கவிஞர்களாக மூவரே இருந்தார்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளைக்கு எப்போதும் ஒரு தனி இடம். அதன்பின்னர் குமாரன் ஆசான். முதலிடம் துஞ்சத்து எழுத்தச்சன்தான். அம்மாவின் அத்யாத்ம ராமாயணம் பிரதி இப்போதும் என்னிடம் உள்ளது. வீட்டில் இருந்த புத்தகங்களை எல்லாம் செலவுக்கு விற்ற அண்ணா அந்நூலை விற்கவில்லை, வீடுதோறும் அந்நூல் இருந்தமையால் யாரும் வாங்கவில்லை.
முழுக்கோட்டில் நாங்கள் இருந்த காலகட்டத்தில் வருடம்தோறும் ஆடிமாதம் அம்மா துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு நூலை வாசிப்பாள். அது ஒரு கேரளத்துச் சடங்கு. ஆடிமாதம் முழுக்க மழைச்சாரல் இருக்கும். நோய்கள் வரும் மாதம். விவசாய வேலைகள் குறைவானதனால் பட்டினி பரவும் மாதமும்கூட. ராமாயணம் அவை அனைத்தில் இருந்தும் ஒரு காப்பு என்று அக்காலத்தில் நம்பினார்கள்.
காலையில் குளித்துக் கூந்தலைப் பின்பக்கம் முடைந்திட்டு அதில் துளஸி இலைசூடி அம்மா வரும்போது வந்திருக்கும் பாட்டிகளும் பெண்களும் குழந்தைகளும் எழுந்து நின்று வணங்குவார்கள். ‘விதுஷி’ என்று அம்மாவை ஊரிலே சொல்லுவார்கள். குழந்தைகளை எழுத்துக்கு இருத்துவதற்கு முன்பு அம்மாவிடம் ஆசி வாங்க அழைத்து வருவதுண்டு. வித்யாதேவியின் ஆசி பெற்ற பெண்மணி. அம்மா அமர்ந்தபின் எல்லாரும் அமர்வார்கள்.
கூடத்தில் முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, வாழையிலையில் பூவும் பழமும் படைத்து, பூஜை செய்வோம். பெரும்பாலும் பூஜையை நான்தான் செய்வேன். அம்மா வாசிக்க ஆரம்பிப்பாள். முதலில் நூலைத்திறந்து கும்பிட்டபின் கணபதி ஸ்துதி, சரஸ்வதி ஸ்துதி, ஹனுமான் ஸ்துதி, விஷ்ணு ஸ்துதி என்று வாசித்தபின் அம்மா எங்கிருந்தோ தாளில் பிரதிசெய்து வைத்திருந்த எழுத்தச்சன் ஸ்துதியையும் வாசிப்பாள். அதன் பின்பு விட்ட இடத்தில் இருந்து கதை தொடங்கும்
அம்மாவின் குரல் இனிமையான உலோகச்சத்தம் கலந்தது. எழுத்தச்சனைப் புரிந்துகொள்வது மிக மிக எளிது. நாட்டுப்புறப்பாடல் போலவே இருக்கும். புராண நுட்பமோ, தத்துவ ஆழமோ இருக்கும் இடங்களை இருமுறை வாசித்தபின் அவற்றுக்குப் பொருள் விளக்கம் சொல்வாள். உணர்ச்சிகரமான காட்சிகளை நாடகப்பாங்குடன் வாசித்துச் சொல்வாள். சீதையின் கதை கேட்கும்போதெல்லாம் பெண்கள் அதில் மூழ்கிவிடுவார்கள்.
நன்றாக நினைவிருக்கிறது, ஒருமுறை நான் ஓரமாக அமர்ந்து கேட்கிறேன். சீதை அசோகவனத்தில் திரிசடையிடம் பேசும் காட்சி. அம்மா வாசித்துச்செல்கிறாள். அவள் தன்னையே மறந்துபோய்விட்டிருந்தாள். அந்தக் கூடத்தில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், பலவயதை, பல சாதிகளை, பல குடும்ப நிலைகளைச் சார்ந்தவர்கள் அனைவருமே கன்னங்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்கள்.
ஒருமுறை அம்மா சீதை வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருக்கும் இடத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். சட்டென்று சந்தம் மாறுபட்டது. நான் உடனே கண்டுபிடித்துவிட்டேன். அது குமாரன் ஆசானின் ‘சிந்தாவிஷ்டயாய சீதா’ [சிந்திக்கும் சீதை] என்ற கவிதை. வசிஷ்டரின் ஆசிரமத்தில் சீதை ராமனைப்பற்றி ஆங்காரத்துடன் ஆவேசத்துடன் சிந்திக்கும் இடம் அது. ராஜதர்மத்துக்காகத் தன்னுடைய எல்லையில்லாத பிரியத்தை நிராகரித்த அவன் எப்படி ஒரு புருஷோத்தமன் ஆக முடியும் என்று அவள் கேட்கும் வரிகள் அக்காலத்தில் கேரளத்தை உலுக்கியவை.
அந்த சந்தம் முடிந்ததும் ஒரு பிராமணப்பாட்டி ”இத இதுக்கு முன்னாடி கேட்டதில்லியே?” என்றாள். அம்மா மெல்ல ”இதும் ராமாயணம்தான்..” என்றாள். பாட்டி ”ஆரு எழுதினது?” என்றாள். ”குமாரன் ஆசான்” என்றாள் அம்மா மெல்ல. ஆசாரமான பாட்டி உடனே எழுந்து கத்தப்போகிறாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆசான் ஈழவர் வேறு. பாட்டி அம்மாவையே கூர்ந்து பார்த்தபின் பெருமூச்சு விட்டு ”இன்னொரு வாட்டி படிடீ” என்றாள்.
அம்மா என்னை கர்ப்பமாக இருக்கும்போதுதான் காளிப்பெண் தற்கொலைசெய்துகொண்டாள். அவள் கணவன் இன்னொருத்தியைக் கூட்டி வந்தான். புலையர்சாதியில் அன்று அது சாதாரணம். கடன் வாங்கிய பணம் கொடுக்க முடியாவிட்டால் மனைவியைக் கொடுத்துவிடுவார்கள். காளிப்பெண் அப்படியே ஓடிப்போய்ப் பின்பக்கம் இருந்த ஆழமான கிணற்றில் குதித்து, கீழே சென்று சேர்வதற்குள்ளாகவே மண்டை உடைந்து இறந்தாள். அம்மாவுக்கு நாலைந்து நாள் காய்ச்சலும் வலிப்பும் இருந்தது.
அதன்பின்னர் அம்மாவுக்கு ரமணன் கவிதை பிடிக்காமல் ஆகியது. அதைப் பாடுவதே இல்லை. நான் பாடினால்கூட ‘வேண்டாம்டா, அது ஒரு அச்சானியம் பிடிச்ச பாட்டு’ என்று சொல்லிவிடுவாள். மலையாள நவீன இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்து அப்படியே தீவிர இலக்கிய வாசகி ஆனாள். ஆங்கில இலக்கியங்களில் ஈடுபாடு வளர்ந்தது. டபிள்யூ. டபிள்யூ. ஜேகப்ஸ், தாக்கரே, ஜார்ஜ் எலியட் என்று தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தாள். அக்கால மனநிலைப்படி பிரிட்டிஷ் மக்களே ஆகச்சிறந்த இலக்கியத்தைப் படைக்க முடியும் என்று அவளும் நம்பினாள்
அம்மாவைக் கவர்ந்த எர்னெஸ்ட் ஹெமிங்வே அந்த எண்ணத்தை மாற்றினார். ஹெமிங்வேயின் ‘யாருக்காக மணி முழங்குகிறது?’ நாவலை அம்மா நாலைந்து தடவைக்குமேல் வாசித்திருக்கிறாள். ‘அது ஒரு கிளாஸிக். மொழியை அதுபோல யாருமே கையாண்டதில்லை’ என்பாள்.
பிரெஞ்சு இலக்கியம் கொஞ்சம் பிந்தி அறிமுகமாயிற்று. அதற்குக் காரணம் தற்செயலாகக் கிடைத்த லே மிஸரபிள்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இரவெல்லாம் தூங்காமல் அம்மா அதையே படித்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் வாசிப்பு எல்லாமே தற்செயல்தான். அவளுக்கு வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள என்னைவிட்டால் யாருமே கிடையாது.
அம்மா தஸ்தயேவ்ஸ்கி, தல்ஸ்தோய் யாரையுமே கேள்விப்பட்டதில்லை. ருஷ்ய இலக்கியமே அறிமுகம் கிடையாது. தமிழிலக்கியத்தில் ஜெயகாந்தன் தி.ஜானகிராமன் இருவரையும் பொருட்படுத்திப் படித்தாள். அவர்கள் ஆனந்த விகடன் வழியாக அறியப்பட்டிருந்தார்கள். புதுமைப்பித்தன் ,மௌனி எல்லாம் அக்காலத்தில் சிலநூறுபேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். அம்மாவுக்குத் தமிழிலக்கியம் மீது பெரிய மதிப்பு ஏதும் உருவாகவில்லை. நான் முதலில் கல்கி, சாண்டில்யன் பின்பு ஜெயகாந்தன், தி.ஜானகிராமன் என்று முன்னேறினேன். அம்மாவிடம் ஆவேசமாகப் பேசிப் புல்லரிப்பேன்.
அம்மா இருவரையுமே நிராகரித்தாள். இருவரும் இரண்டுவகைக் கற்பனாவாதிகள் என்றாள். ஜெயகாந்தனின் கற்பனாவாதம் கருத்துக்கள் சாந்தது. அவர் இலட்சியவாதி. தி.ஜானகிராமனின் கற்பனாவாதம் மனித உறவுகளைச் சார்ந்தது. கற்பனாவாதம் எல்லாம் முதிராத வாசிப்புக்கு உரியவை. பக்குவமடைந்த மனிதர்களுக்கு அவை உதவாது. இலக்கியத்தின் உச்சகட்ட ஞானம் என்பது முற்றிலும் சமநிலை கொண்டதாக இருக்கும் என்றாள்
ஆனால் அம்மா விக்டர் யூகோவின் லே மிஸரபிள்ஸ் நாவலை ஒரு கற்பனாவாதப் படைப்பாகக் காணவில்லை. அதை ஒரு கிளாசிக் என்றே சொல்லிவந்தாள். பிரெஞ்சு எழுத்தாளர்களில் எமிலி ஜோலா, மாப்பஸான், ரோமெய்ன் ரோலந்த் போன்றவர்கள் அம்மாவுக்குப் பிடித்திருந்தார்கள். எமிலி ஜோலாவின் பரபாஸ் நாவலை நாலைந்துமுறை அம்மா படித்திருக்கிறாள். ஆனாலும் அம்மாவுக்கு லே மிஸரபிள்ஸ் தான் ‘மேஜர் கிளாஸிக்’
அம்மாவுக்குத் தூக்கமின்மை வியாதி இருந்திருக்கலாம். ஒரு நாளைக்கு மூன்றுமணிநேரம் தூங்கினால் அதிகம். அதனால் உடல் மெலிந்துகொண்டே வந்தது. சிறுவயதில் மிக அழகானவள் என்று சொல்வார்கள். நாற்பதைந்து வயதுக்குள் நன்றாக மெலிந்து கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழிந்து வயோதிகத்தோற்றம் வந்துவிட்டது. ஆனாலும் சட்டென்று மனதைக் கவரும் அழகிய தோற்றம் அம்மாவுக்கு இருந்தது. என் நண்பர்கள் எல்லாருமே அதைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அம்மாவின் கண்கள்தான் என்று நினைக்கிறேன். அவை மிக அழகானவை.
எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. அம்மா மண்ணெண்ணை விளக்கை அருகே வைத்துக்கொண்டு படுத்தபடி படிப்பாள். நான் தூக்கம் விழித்துப்பார்க்கும்போது மொத்த வீடே இருட்டில் இருக்கும். இருளின் திரையில் ஒரு ஓவியம் போல செஞ்சுடர் ஒளியில் நெளியும் அம்மாவின் முகம். நெற்றியின் இருபக்கமும் லேசாக நரை ஓடிய கூந்தலிழைகள். அம்மா படிக்கும்போது அழுவதோ உணர்ச்சிமாற்றம் கொள்வதோ இல்லை. முகம் கனவில் நிலைத்துப்போய் இருக்கும்.
ஏன் அம்மாவுக்கு லே மிஸரபிள்ஸ் அந்த அளவுக்குப் பிடித்திருந்தது? நான் அதை இருமுறை படித்திருக்கிறேன். அது ஒரு கிளாஸிக் என்றுதான் இப்போது நானும் நினைக்கிறேன். மனிதகுலம் தன்னைப்பற்றித் தான் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆவணம் அது. அம்மா எப்போதுமே கனவுச்சாயல் கொண்ட நாவல்களை நிராகரித்து வந்தார். எம்.டி.வாசுதேவன் நாயரை அவளுக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. பிமல் மித்ராவைப் பிடிக்கவில்லை. சரத்சந்திரர் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் லே மிஸரபில்ஸை நாடிக்கொண்டிருந்தாள். ‘நன்மை மீது நாட்டம் இல்லாவிட்டால் தீமைகளை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?’என்று ஒருமுறை அந்நாவலைப் பற்றிப் பேசும்போது சொன்னாள். அந்நாவலில் உள்ள உக்கிரமான துன்பநிலைகள் அம்மாவைக் கவர்ந்தனவா என்ன?
அம்மா 1985 இல் தன் 54 ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டாள். பொதுவாக முதியவர்கள் தற்கொலைசெய்துகொள்வது மிக மிக அபூர்வம் என்பார்கள். ஏனென்றால் இனி நாட்கள் மிச்சமில்லை என்று ஆகும்போதுதான் வாழ்க்கையின் அருமை தெரிகிறது. வாழ்க்கையைப் பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமலாகிவிடுவதனால் ஏமாற்றங்களும் இல்லாமலாகின்றன. இளம் வயதுத் தற்கொலைக்குப்பின்னால் ஒரு நம்பிக்கையின் முறிவு இருக்கிறது. முதிய வயதுத் தற்கொலைக்குப் பின்னால் ஒரு தத்துவப்பிரச்சினை இருக்கிறது.
அம்மா தற்கொலை செய்துகொண்டதற்குக் காரணங்களை எவ்வளவோ சொல்லலாம். அந்தத் தருணத்து வேகம். நெடுநாளைய வன்மம். தனிமை. அர்த்தமின்மையை உணர்ந்தது. ஆனால் ‘ரமண’னும் ஒரு காரணம் என்று எனக்குத்தோன்றுவதுண்டு.
மறுபிரசுரம், முதற்பிரசுரம்Feb 18, 2013
தமிழ்விக்கி – தூரன் விருது விழா -கடிதங்கள்
நேற்றைய ஈரோடு நிகழ்வுக்கு நண்பர்கள் நாங்கள் வந்திருந்தோம்.நேர்த்தியான நிகழ்ச்சி ஏற்பாடுகள் மனதுக்கு நிறைவாக இருந்தது.
நிகழ்ச்சியை நெறிப்படுத்திய தம்பி மயங்கி விழுந்ததும் கிருஷ்ணன் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்ட லாவகமும் நிகழ்ச்சிக்கு தெளிவை தந்தது.
அ.க.பெருமாள் அவர்களின் விளிம்பு நிலை மக்களின் நிலை குறித்து பேசியதும் பத்மாவதிக்கு சில நுண்ணிய யோசனைகள் சொன்னதும் அருமை.
உங்கள் உரையில் தமிழ் விக்கி தொடங்க வேண்டிய அவசியமும் அதைத் தொடர்ந்த இடர்பாடுகளும் அதை வெற்றி கண்ட விதமும் தமிழ் செய்த நல்லூழ்..
பத்மாவதி ஏற்புரையில் அவரின் வெகுளியான பேச்சில் நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கான ஆய்வுக்கு அவர் பட்ட சிரமங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.பத்மாவதி உங்களைப் பற்றி பேசும்போது உங்கள் புன்னகை ஏற்பும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
ஏராளமான தகவல்களோடும் மகிழ்வோடும் நற்சிந்தனைகளோடும் வீடடையும்போது அதிகாலை மணி 2.30.
நன்றி.
அன்புடன்
மூர்த்தி /விஸ்வநாதன்
வாழப்பாடி.
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதின் இன்னொரு வடிவம் போலவே தமிழ்விக்கி- தூரன் விருதும் அமைந்திருந்தது. அதேபோல பிரம்மாண்டமான கல்யாணமண்டபம். கீழே உணவுக்கூடம். மேலே விழா அரங்கு. நூறுபேருக்குமேல் தங்குவதற்கான ஏற்பாடுகள். ஐந்துவேளை உணவு. விரிவான எழுத்தாளர் – சந்திப்பு அரங்குகள்.
தமிழில் ஆய்வாளர்களுக்கு கல்வித்துறைக்கு வெளியே இடமே இல்லை என்பதுதான் நடைமுறை. நல்ல ஆய்வுகள்கூட வெளியே தெரியாது. அதேசமயம் ஜனரஞ்சகமாக யூடியூபில் சாதி, மத, இனக்காழ்ப்புகளைக் கொட்டி வரலாற்றாய்வு பண்பாட்டாய்வு என்றெல்லாம் பாவலா காட்டினால் புகழ்பெறலாம். ஆய்வாளர்களுக்கென்று இப்படி ஓர் அரங்கு அமைவது மிகமிக இன்றியமையாது. இந்த அரங்கு ஆய்வாளர்களுக்கு மட்டும் உரியதாக நீடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மேடையிலும் அரங்கிலும் அ.கா.பெருமாள், கு.மகுடீஸ்வரன், லோகமாதேவி மூவருமே நன்றாகப்பேசினார்கள். கு.மகுடீஸ்வரன் கொங்குவட்டார ஆய்வாளர். முப்பதாண்டுகளாக எழுதி வருபவர். ஆனால் அவரைப் பற்றி நான் கேள்விப்படுவதே இப்போதுதான். நானும் இதே வட்டம்தான். எந்த இடத்திலும் எவரும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. எண்ணிப்பார்த்தால் இப்படி எத்தனைபேர் இருப்பார்கள் என்ற ஆச்சரியமே உருவாகிறது. நீங்கள் செய்துகொண்டிருப்பது பெரும் பணி. வாழ்க
செந்தில்ராஜ்
அன்புள்ள ஜெ.
நலம்தானே?
நான் தமிழ் சமூக ஊடகங்களை அவ்வப்போது பார்ப்பவன். கொஞ்சநாள் முன்னால் நிறையவே கவனித்துவந்தேன். முழுக்கமுழுக்க எதிர்மறைத்தன்மை. கசப்பு. எந்த இடத்திலும் வசைபாடுவதற்கும் ஏளனம் செய்வதற்கும்தான் முட்டிமோதி வருகிறார்கள். அதற்கு தமிழ்ப்பெருமை இனப்பெருமை என்று எதையாவது சொல்கிறார்கள். ஒரு விஷயத்தை வாசித்துப் புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றுபவர்களே குறைவு. வெறும் வெறுப்பு கக்குதல் மட்டும்தான்.
அப்படி வெறுப்பையே வாங்கிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் நீங்கள். அந்த வெறுப்பு வழியாகவே நானும் உங்களை அறிந்துகொண்டேன். அந்த வெறுப்பின் நடுவே நின்று இந்தளவுக்கு பாசிட்டிவான அதிர்வுகளைப் பரப்புகிறீர்கள். நண்பர்களைச் செயலாற்ற வைக்கிறீர்கள். நம்பிக்கையை நிலைநாட்டுகிறீர்கள். மகத்தான செயல்பாடு இது. என் வணக்கங்கள்.
ராஜேந்திரன் மகாலிங்கம்
கி.ஆ.பெ.விசுவநாதம்: திராவிடமும் சைவமும்
கி.ஆ.பெ.விசுவநாதம் முப்பதாண்டுகளுக்கு முன்பு செய்தித்தாள்களில் ஏதேனும் ஒருவகையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தார். குறிப்பாக திமுக அதிமுக கட்சிகளை மீண்டும் இணைக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக கேலிக்குரியவராகவும் சித்தரிக்கப்பட்டார். ஆனால் மரபான தமிழறிஞர். சைவமறுமலர்ச்சியை நிகழ்த்தியவர்களில் ஒருவர்
கி. ஆ. பெ. விசுவநாதம் – தமிழ் விக்கி
கவிதை இணைய இதழ், ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. பிரமிள், மோகனரங்கன், வெ.நி.சூர்யா, ச.துரை, மதார் கவிதைகள் பற்றி பாலாஜி ராஜு, கடலூர் சீனு, சங்கர் கணேஷ், மதார் எழுதிய கவிதை வாசிப்புகள் இடம்பெற்றுள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



