உடன்தங்கல் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு,

உடன்தங்கல் விண்ணப்பத்திற்கு ‘வருக’ என்று பதில் வந்த கணத்தில் இருந்து மன ஊற்றில் ஆனந்தம் பெருக ஆரம்பித்தது. உங்களோடு தங்கப்போகும் 6 நாட்களை வெவ்வேறு விதமாக கற்பனை செய்து கொண்டேன். பரவசமும் பதற்றமும் கலந்த பட்டமாய் காற்றில் சுழன்று கொண்டிருந்த என்னை, மனைவி என்னும் மாஞ்சா நிதானப்படுத்திக் கொண்டிருந்தது.

அந்தியூர் மணி அண்ணாவிடம் கேட்டு பேருந்து  நேரத்தை தெரிந்து கொண்டு  ஆகஸ்ட் 8 காலை 10 மணிக்கு இடத்தை அடைந்தேன். அங்கே பரபரப்பாக இயங்கிக்கிக்கொண்டு இருந்தது காற்று மட்டும் தான்.  நகரத்தில் வாழும் மனிதர்களுக்கு முற்றிலும் பழக்கப்படாத வேறு ஒரு உலகில் வாழ்ந்துகொண்டிருந்தனர் அங்குள்ள சோழகர்கள்.முக்தி அடைந்த யோகிகளோ என்று கூட சந்தேகம் வரவைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்தவர்கள்.

நான் வந்துசேரும் முன்னரே வடிவரசு மற்றும் உதய் அவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். உங்கள் வருகைக்காக காத்திருந்தோம். ஒரு சிவப்பு பொலேரோ ஜீப்பில் நீங்களும் மற்ற நண்பர்களும் வந்து இறங்கினீர்கள். அந்த கணம் முதல் அந்தியூரில் உங்களை கட்டி அணைத்து விடைபெறும் வரை நிகழ்ந்தவை அனைத்தும் கடவுளும் (என் மனைவியும் :) கொடுத்த வரம் என்றே உணர்கிறேன்.

குருவிடம் அருகில் அமர்ந்து கற்றுக்கொள்ளும் பேரானந்த அனுபவம். ஒவ்வொரு கணமும் முழு விழிப்புடன் பெரும் உற்சாகத்துடன் கற்றல்  நிகழ்ந்துகொண்டே இருந்தது. வாழ்வின் ஒவ்வொரு கணமும் இதுபோல் வாழ்ந்தால் வாழ்வே பெரும் களியாட்டமாக அமையும் என்று உணர்ந்தேன்.

திட்டமிட்ட வகுப்புகளோ நிகழ்ச்சிகளோ இல்லாத போதிலும் ஓரிரு நாட்களில் ஒரு ஒழுங்கு வந்தமைந்தது. தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. மற்ற நேரங்களிலும் இடைவிடாது உங்களை சுற்றிக்கொண்டே இருந்தோம். உங்களோடு தங்கும் ஒரு கணம் கூட வீணாகிவிடக் கூடாதென்ற சிரத்தை அனைவரிடமும் இருந்தது. ஒரு கணம் கூட சோர்ந்துவிடாத உங்களைக்  கண்டு வியந்து கொண்டே இருந்தேன். தீவிரம் இருந்த அதே நேரத்தில் சிரிப்பும் உற்சாகமும் கலந்து ஆறு நாட்களும் பெரும் கொண்டாட்டமாக இருந்தது.

இலக்கியம் வரலாறு தத்துவம் ஆன்மிகம் சார்ந்த உரையாடல்கள் மிகுந்து இருந்த போதிலும் பல்வேறு துறைகளைப்பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டவை அனைத்தும் தமிழ் விக்கி ஐ புரட்டிக்கொண்டு இருந்தது போன்ற அனுபவம் தந்தது. கடைசி வகுப்பில் ஐந்து நாட்கள் கற்றது அனைத்தும் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு 2000 பக்க புத்தகத்தை படித்து கற்கவேண்டிய அனைத்தும் இந்த ஐந்து நாட்களில் கற்றிருக்கிறோம் என்று உணர்ந்தபோது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ‘கற்றலில் கேட்டல் நன்று’ என்ற கூற்றுக்கு சான்றாக அமைந்தது.

மலைகள் சூழ அமைந்திருந்த அங்கே அவ்வப்போது குட்டிக் குட்டி மழைச் சாரல்கள் வந்த வண்ணம் இருந்தன. இயற்கையை அறிய அவதானிக்க அனுபவிக்க அதைப்போன்ற ஒரு இடம் மிகவும் முக்கியம் என கருதுகிறேன். புறத்திலுள்ள அமைதி நம் அகத்தையும் அடைந்து மனதில் இனிமை பரவ செய்கிறது.

நம் மனம் செயல்படும் விதம் சில சமயம் நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். இவ்வளவு கொண்டாட்டங்களுக்கும் கற்றலுக்கும் நடுவில் வீட்டிற்கு திரும்பி செல்லப்போகும் நாளை மனம் ஓரிரு முறை கணக்கிட்டது. முற்றிலும் புதிய அனுபவத்திற்கும் தீரா விழிப்புநிலைக்கும் எதிரக மனம் போடும் மாய நாடகம் போல தோன்றியது.

அந்தோணி அண்ணாவின் கருணையில் ஆறு நாட்களும் சுவையான உணவும் அமைந்தது. சமையலுக்கு உதவி செய்பவர்கள், மேற்பார்வையிடுபவர்கள், உதவி செய்பவர்களுக்கு உதவியாளர்கள் என கூட்டம் நிரம்பிய சமையலறை எப்பொழுதும் கலகலப்பு நிறைந்த இடமாகவே இருந்ததது.

இவையனைத்துமே மேல்மனத்தின் அறிதல்களும் அவதானிப்பிகளும் மட்டுமே. இந்த ஆறு நாட்களின் அனுபவம் என்னுடைய ஆழ்மனதில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என் அறிவுக்கு எட்டாதது. இயற்கையின் கர்ம கணக்குகளில் மகத்தான ஆறு நாட்களை சேர்த்துவிட்டேன் என்பது மட்டும் உறுதி.

பி . கு  

அந்தியூரில் இருந்து கிளம்பி எங்கள் வீட்டை அடைந்தேன். பொதுவாக அம்மக்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயங்களான சாப்பிட்ட உணவுகளும் அதை சமைத்த அந்தோணி அண்ணாவின் கைப் பக்குவத்தையும் உற்சாகமாக பகிர்ந்து கொண்டேன்.

நினைவுகளை அசைபோட்டபடியே மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அம்மா வந்து அருகில் உட்கார்ந்தார் .”குட்டி (என் தங்கை ) மகளுக்கு பிறந்தநாள் வரப்போகிறது. ஒரு கமல் செய்து போடலாமா ?”நான் புரியாதபடி அம்மாவைப் பார்த்தேன். திரும்பவும் சொன்னார்.

ஆம். நான் தாய்மாமன்.

என் மனைவி தொலைபேசியில் அழைத்தாள்,” சென்னைக்கு நாளை கிளம்பவேண்டும். Fully furnished வீடு இருக்கிறதா என்று விசாரித்து பார்க்கலாமா ?”

ஆம். நான் குடும்பத்தலைவன்.

அம்மாவை அழைத்துக்கொண்டு காரில் மாமனார் வீட்டுக்கு கிளம்பினேன். கொச்சி சேலம் நெடுஞ்சாலையை அடைந்தோம். நீண்ட நெடும் சாலை. ஆம். இது மலைப்பாதை இல்லை. மலையில் இருந்து காலையிலேயே கீழிறங்கிவிட்டேன்.

மாமனார் வீட்டை அடைந்தவுடன் என நாலு வயதுக் குழந்தை என்னை நோக்கி “அப்பா!” என்று ஆனந்தமாய் ஓடி வந்தது. ஓடிச்சென்று அவனைக் கட்டி அணைத்து முத்த மழை பெய்தேன்.

ஆம். நான் இந்த மாபெரும் இயற்கையின் ஒரு அங்கம்.

பேரன்புடன்,

ரா. ஆனந் குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.