Jeyamohan's Blog, page 723
September 1, 2022
தொ.மு.சி.ரகுநாதன் கொடியேற்றி, இறக்கியவர்
[image error]தொ.மு.சி.ரகுநாதன் தான் சோஷலிச யதார்த்தவாதத்தை தமிழில் எழுதிக்காட்டிய முன்னோடி.அவருடைய பஞ்சும் பசியும் அவ்வழகியல் கொண்ட முதல் படைப்பு. 1992ல் அவரே அந்த அழகியலை முழுமையாக நிராகரித்து, அவற்றின் முன்னுதாரணமான ஆக்கங்களான உழுதுபுரட்டிய கன்னிநிலம் (ஷோலக்கோவ்) போன்றவை செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று சொல்லவும் நேர்ந்தது.
தொ.மு.சி. ரகுநாதன்
தொ.மு.சி. ரகுநாதன் – தமிழ் விக்கி
அக்காலக் கவிஞர்களும் இக்காலக் கவிஞர்களும்
அன்புள்ள ஜெ
குலாம் காதிறு நாவலர் பற்றிய தமிழ் விக்கி பதிவை வாசித்துக்கொண்டிருந்தேன். அறியப்படாத ஓர் ஆளுமையை முந்நூற்றறுபது பாகையிலும் அறிமுகம் செய்யும் நல்ல குறிப்பு அது . அதன் கீழே இருக்கும் லிங்குகள் சுவாரசியமான இணைப்புகள். அதிலொன்று அப்துற் றகீம் எழுதியது. அதை வாசித்தபோது தோன்றிய எண்ணம் 19 ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களுடன் ஒப்பிட்டால் நம் சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் மாமனிதர்கள், பண்பட்டவர்கள், குட்டிக்குட்டித் தேவதைகள் என்று. என்ன மாதிரி பூசலிட்டிருக்கிறார்கள். அதிலும் இலங்கையில் ஒருவர் மாதுளை பற்றி கேட்ட கேள்வி கிளாஸிக்
ஜே.ராகவன் குலாம் காதிறு நாவலர் – ஆபிதீன் பக்கம்பிரம்மானந்தர், வேதாந்தம் -கடிதம்
அன்பு ஜெ,
நன்றிகளுடன் ஆரம்பிக்கிறேன்.
மலையின் அப்பால் வீடுகள் சிறு பொம்மைகள் என தெரிந்து கொண்டிருந்தன தூரத்தில். மாடுகளின் வால் சுழட்டல்கள், சிறு குருவிகள், துரத்தியும் தனியேயும் ’விருக்’கென தடம் மாற்றியபடி சிறு நடனம் என தனக்கென ஒரு மாறிக்கொண்டேயிருக்கும் பாதையில் பல வகை பட்டாம்பூச்சிகள், மயில்கள், வெகு விரைவாய் எதற்கோ சென்று கொண்டு இருக்கும் கருப்பு, செம்பு வண்ணத்தில் எறும்புகள், கால் படும் கண் தொடும் இடம் எங்கும் தொட்டாற் சினுங்கி பூக்கள், கண் தொடா இடங்களில் பல்லாயிரம் பூச்சிகள் என பெரிய ப்ரபஞ்சம் இயங்கியபடி கிடந்தது. அடர் மழையும், இறங்கிய மின்னல்களும் அந்த இரவை தனக்கென எடுத்து கொண்டன. இயற்கை தன்னோடு இயைந்து அழகு என காணித்து முழுமையுடன் இருந்து கொண்டிருந்தது.
ஆசிரியர் மெதுவாக மாணவர்களை வரையறை செய்து கொண்டார். எதுவரை செல்வது என்பதை பற்றியும், என்ன தொடுத்தாலும் தான் செல்லும் வட்ட எல்லை எது என வகுத்து விட்டார் என தோன்றியது.
நேதி எனும் வகையில் சுருங்கி செல்லுதல். மற்றது வேதாந்தம் எனும் விரிதல் –அனைத்திலும் இருப்பதும் என்னுள்ளே என்பதான விரிவு.
நான் ஒரு பெரும் இயக்கத்தின் – இருப்பின் ஒரு துளி, என்னுள் வந்து – இருந்து – செல்லும் ஒரு லீலை என்பதான முதல் காலடி. அதன் “நான்” என்பதின் புள்ளியிலிருந்து. இருப்பு, விரிய வேண்டியதின் தேவையான பிரக்ஞை என்பதான தன்னகங்காரம், அது இருக்கும் காலமில்லா முடிவில்லா வகை.
சத், சித், அன்ந்தம். இந்த புள்ளியுடன் முடிந்தது. மொத்தமாக இரண்டு நாளை இப்படி சுருக்கி தொகுத்து கொள்ளலாம்.
முதல் தொடக்கம் அவரைப் பற்றி. பின்னர் ஆன்மீகம் ஏன், எங்கு வருகிறது என. வேதாந்தம் என்பது பற்றிய வரைவு பின்னர். செயல் செய்தல் என்பதை முழுதும் சொல்லும் கீதை பற்றிய நீண்ட விவரணை. செய்ய வேண்டிய ஐந்து யக்ஞம் என்பதின் விரிவு. செயலின் ஆற்றல் மட்டும் என் கை விளக்கின் வெளிச்சத்தில் இருக்க, விளைவு நான்கு வகையில் நடக்கும் என்பதால், அதை பற்றிக்கொள்ள வேண்டாம் என்பதான விளைவை பற்றி சொல்லாடல், வேதாந்த வாழ்வு என்றும் ஒரு நிறைவு, பண்படுதல் என்று இருந்தாலும் தேடல்களின் முட்டல்களும் கொந்தளிப்பும் கொண்டதான இயல்பு பற்றி என பல கேள்விகளை தொட்டு தொட்டு விரிந்து சென்றார்.
கேள்விகள் என்றும் இருப்பது போல ஒவ்வொருவரின் “தெரிந்த” இருந்தவைகள், அடைந்த சிறு வெளிச்ச சிதறல்களின், தன்முனைப்பின் வகைகள், தின வாழ்வின் எல்லையின்மை தாண்டி கிடைக்கும் புது அனுபவ வகைகள் என இருந்தாலும், சற்று ஊறியவர்கள் சரியான தருனத்தில் சொல்பவனின் விஷய ஞானத்தை எடுத்து தரும்படியாகவும் இருந்த வகைகள் கூட. உண்டு
ஆனால் எந்த கேள்விகளில் வந்தாலும், அவைகளில் இருந்து, எவை எல்லாம் வேதாந்த வாழ்வில் அமைந்தவர்க்கு அவசியமில்லை, தேவையில்லை என்று கோர்த்து கொடுத்தார். த்யானத்தின் விளைவில் வரும் வெளிச்ச பரவசங்கள், எனும் வகை அனுபவங்கள், பிறவாமை அழுகைகள், உபாசனை தந்த பலங்களை ஒரு கட்டத்தில் உதறி செல்ல வேண்டிய தேவைகள், ஆரம்ப பக்தி நிலை பின்னர் இருந்தாலும் இல்லை என்றாலும் ஒன்றே எனும் நிலைகள், ஞான விளைவுகள், ஞானம் அடைந்தாலும் அவரின் கர்மா பாதிப்புகள் பற்றி கவலை கொள்ளாதிருத்தல் என வேதாந்தம் தன் வாழ்வில் அமைய பெற்றவர்க்கு வேதாந்த வாழ்வின் குணங்கள் அல்லது இயல்புகள் போல ஒரு வரைபடம் கொடுத்தார்.
அவர் பேச்சை உள்வாங்குதலின் இடர் என்பது மிக கழித்து தான் புரிந்தது. என் கேள்விகென்ன பதில் என்பதாக அம்பு போல அல்ல அவரின் பேசும் போக்கு. கோடுகள் தன் போக்கில் என சென்று ஆனால் பேசப்படும் மையத்திலிருந்து விலகாமல் முடியும் வகையாக எப்போதும் அவரின் பேச்சு புதிய அறியாத கோலம் என முடியும். இது புதிதாக இருந்ததால், எதுவுமே ”பயனாக” “தெளிவாக” உரையாடல்கள் நிகழவில்லை எனும்படியாக மனம் மயக்கி கொண்டு இருந்தது. அந்தியூர் மணி சட்டென சாட்டை எடுத்து தொகுத்து கொள்ளுங்கள் ஜனங்களே என்ற போது ஓவ்வொரு மலரும் மனதில் வந்து அமர ஆரம்பித்தது.
இந்த தங்கலில் ஒரு பெரும் இனிய நினைவு என்பது சீனுவின் பேச்சு[தனிப்பட்ட முறையில்]. அத்வைதம் எனும் அறிதல் எப்படி ஒரு அனுபவமாக நடந்து, பின் அதன் வாழ்வு வழி சோதித்தபடி செல்லுதல் என்பதான உரையாடல். அதுவரை நீங்கள் அல்லது இந்த மார்க்கம் சார்ந்த அனைவரும், அத்வைதம் என்பதை ஒரு கருத்து தரப்பாக, தன் அறிவின் தரப்பாக மட்டுமே தன் படித்தலுக்கேற்ப வைத்து கொண்டுள்ளனர் என தொகுத்து கொண்டு இருந்தேன். ஆனால் இந்த அறிதல் நிகழ்ந்த பின் தான் ஒருவன் தான் அத்வைத வேதாந்தி என ஆரம்பிக்கிறான். ஆன்மீக தவிப்பும் அதன் ஞானமும் அமைதல் பற்றி, என்னுள் இருந்த பார்வைகளை அவர் தொகுத்தபடி சென்றார். உங்களின் நிழல் மகன் அவர்.
என் பயணத்தின் முதல் தூண்டுதல் கேள்வி – இங்கு மலர்ந்து. முழுமையில் அமைந்த வாழ்வு எனும் ஒரு ஆசிர்வாதம் நிகழ்ந்தாலும் இல்லாவிடினும், அந்த வேதாந்த அறிவை – சாரத்தை தின வாழ்வின் நிகழ்வில் செல்லுபடியாகுமா என தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்… அது. ராக துவேஷ என்பதோ புலன் வழி செல்லாதிருத்தல் என்பதோ மற்றும் அறிய போகும் பெரும்பான்மையான வேதாந்த விஷயங்கள் எப்படி என் வாழ்வின் தின உண்ர்வுகளில், நிகழ்வுகளில் என் செய்கை அல்லது எதிர்வினை ஆற்றுதலில் ஒளி ஏற்றுகிறது என்பது தான் அது. சுவாமிஜி தான் அப்படி தான் இருக்கிறார் என்று சொன்ன போது, எந்த அறிவும் வெறும் அறிவு – கருத்து தரப்பு அல்ல என்பதும் அது வாழும் முறை என்பதின் புரிதலின் தொடக்கம் உருவாகியது. முழுதும் இயைந்த, ஒன்றிய வாழ்வு.
அந்த கர்நாடக சைவ மடம் ஒரு பயம் என மனதில் தொட்டது. உள்ளே இருந்த பழைய வாத்திய கருவிகள், சிவப்பு வர்ண தூண்கள், தரை மட்டமாக இருந்த ஒரு ஆட்டும் குழி, சந்திலிருந்து வந்த குதிரை, அது சென்று அருந்திய கல் நீர் தொட்டி என ஒரு கால உறைதல். சமாதிகள் நிறைய அங்கு. ஆனால் புது கோவில்கள், கட்டிடங்கள் வந்து கொண்டு இருந்தன. அந்த விரிந்த அரச மரம், வழுவழுப்பான பல அரசர்கள் அமர்ந்து சென்றுவிட்ட அப்பாறை என ஒரு காலை அமைந்தது. பச்சையின் முழு வகைகளும் மலைகளில் தெறித்து கிடந்தன. மாடுகள் அன்றைக்கும் மேய்ந்தபடியும், மூன்று நாய்கள் தன் எஜமானன் பின்னால் தோட்டத்தில் உலவியபடி இருந்தன.
மலை இறங்கி வர, வேதாந்தம் பின்னால் செல்லும் மலை என பிரிய ஆரம்பித்தது.
அன்புடன்,
லிங்கராஜ் – தாராபுரம்
சாரு, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது ஓர் இனிய ஆச்சரியம். ஆனால் அதில் அவ்வளவு ஆச்சரியப்படவும் ஏதுமில்லை. இவ்விருதை தொடங்கும்போதே நீங்கள் சொன்னதுதான், இவ்விருது ஓர் இலக்கியமரபை உருவாக்கும் நோக்கம் உடையது அல்ல. இது ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கிய அழகியலுக்கு அளிக்கப்படும் விருதும் அல்ல. இது நவீனத் தமிழிலக்கியத்திற்கு அளிக்கப்படும் விருது. அவ்வகையில் பார்த்தால் சாரு நிவேதிதாவுக்கு இது அளிக்கப்பட்டே ஆகவேண்டும். இந்த முடிவு மிகமிக முக்கியமான ஒரு சமிக்ஞை. நீங்கள் ஏற்காத ஓர் எழுத்துமுறைக்கும் கூட விஷ்ணுபுரம் விருதில் இடமுண்டு என்பது ஒரு பெரிய செய்தி.
சாரு நிவேதிதா ஓர் இலக்கிய ஆளுமையாக நாற்பது ஆண்டுகளாக இங்கே இருக்கிறார். நான் அவரை வாசித்தது நான் டெல்லியில் வேலைபார்த்த காலத்தில் அவர் ஷார்த்ர் பற்றி எழுதிய ஒரு சின்ன நூல் வழியாகத்தான். இன்றைக்கு பல எல்லைகளைக் கடந்திருக்கிறார். பலகோணங்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடைய சீரோ டிகிரி, எக்ஸைல் இருநாவல்களும், நிலவுதேயாத தேசம் என்னும் பயணக்கட்டுரைநூலும், பழுப்புநிறப் பக்கங்கள் என்னும் இலக்கிய அறிமுக நூலும் முக்கியமான படைப்புகள் என்பது என் வாசிப்பில் நான் உணர்வது.
ஜி.ஞானசம்பந்தன்
***
அன்புள்ள ஜெயமோகன்,
சாரு நிவேதிதாவுக்கு இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது என்பது ஆச்சரியம். ஆனால் இந்த விருதுவரிசையைக் கவனித்தால் நீங்கள் பொதுவாக எழுதிவரும் விமர்சனங்களின் அடிப்படையிலேயே அளிக்கப்படுகிறது என்று தெரிகிறது. வயதுதான் வரிசையை தீர்மானிக்கிறது. சீரோ டிகிரி வெளிவந்த காலகட்டத்தில் அதைப்பற்றி முழுமையான கோணத்தில் பாராட்டி எழுதிய தமிழ் விமர்சகர் நீங்கள். சொல்புதிது இதழில் என நினைக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் பலருக்கும் சாரு நிவேதிதா மீது ஒரு கசப்பு உண்டு. அவர் வேண்டுமென்றே அந்த கசப்பை உருவாக்கிக்கொள்கிறார் என்றும் தோன்றும். ஆனால் இந்த விருது எல்லாவகையிலும் தகுதியான ஒன்று. தமிழிலக்கியத்தின் விரிந்த பரப்பில் ஒரு முக்கியமான படைப்பாளியாக அவருக்கு இடமுண்டு.
பாராட்டுக்கள்
ஜே.எஸ்.
August 31, 2022
புத்தகங்கள் தேடிவருமா?
“புத்தகம் நம்மைத் தேடி வருமா? அதைத் தேடுவதே பெரிய சுவாரஸ்யமான விஷயம்’ என்பார் க. நா. சு. அவர் சொல்வதைப் பார்த்தால் எந்தப் புத்தகமும் சீக்கிரமாகக் கிடைத்துவிடக்கூடாது; தேடித் தேடி அலைந்து திரிந்த பிறகுதான் கிடைக்கவேண்டும் என்று ஒரு விதி இருப்பதுபோல் தோன்றும். – சுந்தர ராமசாமி (க. நா. சு பற்றி எழுதிய அஞ்சலி குறிப்பில்.)
இந்த நவீன அமேசான், பிளிப்கார்ட் காலத்தில் அச்சில் இருக்கும் ஒரு புத்தகத்தை வாங்குவது மிகவும் எளிது! இதுவே 5 வருடம் முன்பு வரைக்கும் நிலமை வேறு!
நிறைய தீவிர வாசகர்கள் புத்தகங்களை தேடி அலைந்த கதையை பகிர்ந்து இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் ஒரு புத்தகம் வாங்குவதற்காக சென்னையில் இருந்து ஹைதெராபாத் வரைக்கும் சென்றதாக சொன்னார் . ஆச்சர்யமாக இருந்தது ! நீங்கள்இதைபோல் எதும் ஒரு புத்தகத்தை தேடி அலைந்து இருக்கிறீர்களா?
அன்புடன்,
பா.தினேஷ்
அன்புள்ள தினேஷ்,
அது ஒரு சுவாரசியமான கற்பனை, அவ்வளவுதான். சென்ற ஐம்பதாண்டுகளின் அறிவுலகச் செயல்பாட்டுடன் தொடர்பானது. அன்று நூல்கள் கிடைப்பது அரிது. ஒரு நூலை பெறுவதற்காக நான் காசர்கோட்டில் இருந்து நாகர்கோயில் வந்து, சுந்தர ராமசாமியிடம் கேட்டு, கிடைக்காமல் அங்கிருந்து மதுரை சென்றதெல்லாம் நினைவுள்ளது. அப்போது சொல்லப்பட்டது அந்த வரி. (நான் தேடிய நூல் Erich Fromm எழுதிய The Art of Loving)
அப்போது சுந்தர ராமசாமி சொல்லும் ஆப்தவாக்கியம் அது. கவனியுங்கள், புத்தகங்கள் எப்படியானாலும் உங்களை தேடி வரும் என அவர் சொல்லவில்லை. புத்தகங்களை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால் அவையும் உங்களை தேடிவந்துவிடும் என்றுதான் சொன்னார். இது ஒரு பழைய சொற்றொடரின் புதுவடிவம். குருவை நீங்கள் தேடினால் குரு உங்களைத் தேடிவருவார் என்னும் வரியை ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொல்லியிருக்கிறார். ஆனால் தேடவேண்டும். தேடலின் தீவிரம் விளைவை உருவாக்கும் என்னும் உட்குறிப்பு இந்த சொற்றொடரில் உள்ளது.
சென்றகாலத்தில் குரு, புத்தகம் இரண்டுமே தேடித்தேடி அடையவேண்டியவை. பொதுவாகக் கிடைப்பவை எல்லாமே பொதுச்சராசரிக்கு உரியவையாக இருந்தன. நமக்கானது நம்மால் தேடப்படவேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. முதலில் நமக்கானது என்ன என நாம் கண்டடையவேண்டும். அதற்கு நமக்கு அளிக்கப்படுவன அனைத்தையும் பரிசீலிக்கவேண்டும். இது அல்ல, இது அல்ல என்று சென்று நாம் நம்முடைய தேவையை உணர்கிறோம். அதன்பின் தேடல். அத்தேடல் வழியாகவே நாம் நம் தேவையை கூர்மைப்படுத்திக் கொள்கிறோம்.
நான் அன்று பொதுவாக வாசிக்கப்பட்ட ஆன்மிகநூல்களான Zen and the Art of Motorcycle Maintenance போன்றவற்றில் இருந்து தொடங்கினேன். Jonathan Livingston Seagull வழியாகச் சென்றேன். The Dancing Wu Li Masters ஆறுதல் அளித்தது. மாறாக The Divided Self நிலைகுலையச் செய்து என்னையும் மங்களூரில் சிகிழ்ச்சைக்கு செல்லத்தூண்டியது. ஆனால் என் தேடல் கூர்கொண்டபடியே இருந்தது. 1993ல் நடராஜ குருவின் An Integrated Science of The Absolute என்னும் நூலில் வந்து நின்றது. அதை நான் இன்னும் கடந்து செல்லவில்லை.
நடராஜ குருவின் நூல் என்னைத் தேடி வந்தது, ஏனென்றால் நான் அதைத் தேடிச்சென்றுகொண்டிருந்தேன். என்னை தகுதிப்படுத்திக் கொண்டே இருந்தேன். இன்று ஒருவர் இக்கட்டுரையை வாசித்துவிட்டு மற்ற நூல்கள் தேவையில்லை, நடராஜ குருவே போதும் என முடிவெடுக்க முடியுமா? அது பிழை. ஏனென்றால் மற்றநூல்கள் எனக்குப் பாதை ஆயின. என்னை முன்கொண்டுசென்று நடராஜ குருவிடம் சேர்த்தன. நூல்கள் தேடிவரும் என்பது இந்தப் பொருளிலேயே.
இன்று யோசித்துப் பார்த்தால் அன்று நூல்களை தேடிக்கொண்டிருந்தது ஒரு நல்ல அறிவுப்பயிற்சி என்று தோன்றுகிறது. அதில் புறவயமாகப்பார்த்தால் ஒரு வீணடிப்பு உள்ளது. தேவையற்ற பலநூல்களை வாசித்தோம். ஆனால் உள்ளம் அத்தேடலால் கூர்கொண்டபடியே இருந்தது. மேலும் மேலும் தகுதிப்படுத்திக் கொண்டோம். ஒரு நூலை தவிர்ப்பதற்கே அதைப்பற்றி யோசிக்கவேண்டியிருந்தது.
ஆனால் இன்றையசூழல் வேறு. இன்று நூல்கள் உங்கள் மேல் கடல் அலை கரைப்பாறையை அணைவதுபோல வந்து அறைகின்றன. நூல்கள் பற்றிய செய்திகளுடன் காணொலிகளும் வாட்ஸப் செய்திகளும் இணைய அரட்டைகளும் வந்து மோதுகின்றன. அனைத்தையும் கவனிக்க முடியாது. விளைவாக நீங்கள் கவனமற்றவர் ஆகிவிடுகிறீர்கள். எதுவும் நிலையாக உள்ளே ஓடுவதில்லை. பல மாதக்காலம் நீண்டு நிற்கும் தேடலும் அதன் விளைவான கல்வியும் இல்லை. ஏராளமான செய்திகள், ஆனால் அவை தொகுக்கப்படாமல் உதிரித்தகவல்களாக அகத்தே எஞ்சுகின்றன.
இன்று நூல்கள் தேடிவரும் என்னும் அந்தப் பழைய பேச்சுக்கு இடமில்லை. தேடிவருவனவற்றில் எது உங்கள் நூல் என கண்டடைவதே இன்றைய சவால். எவற்றை தவிர்ப்பது என முடிவுசெய்வதற்கே அறிவு கூர்ந்திருக்கவேண்டும். உங்கள் நூலை முழுமையாக, சிதறலின்றி ஆழ்ந்து பயிலவே பயிற்சி எடுக்கவேண்டும்
ஜெ
வட்டுக்கோட்டை குருமடம், ஒரு பெருந்தொடக்கம்
வட்டுக்கோட்டை குருமடம், அல்லது வட்டுக்கோட்டை செமினாரி (அவர்கள் உச்சரிப்பில் வட்டுக்கோட்டை செமினறி) தமிழ்ப் பண்பாட்டில் மிக ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய ஓர் அமைப்பு. தமிழை நவீனக் கல்விமுறை சார்ந்து கற்பிப்பதற்கான முதல் முயற்சி அங்கே நிகழ்ந்தது. கூடவே எழுந்த எதிர்ப்பு சைவ மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த ஒரு பதிவில் இருந்து விரியும் இணைப்புகளைச் சொடுக்கி வாசித்துச்செல்பவர் அமெரிக்கா, மும்பை, சென்னை, மதுரை என விரியும் ஒரு நாவலையே வாசிக்கமுடியும். என்றாவது எவராவது நாவலாகவும் எழுதக்கூடும்
வட்டுக்கோட்டை குருமடம்
வட்டுக்கோட்டை குருமடம் – தமிழ் விக்கி
அறிவருடன் அமர்தல்
இனிய பொழுதாக அமைந்தது சுவாமி பிரம்மானந்தர் அவர்களுடன் தங்கியிருந்த மூன்று நாட்கள்.
புதன் கிழமை மாலை கிளம்பி, அடுத்தடுத்த பேருந்துகள் பிடித்து, வியாழன் காலை ஏழு மணிக்கு நிகழ்விடம் வந்து இறங்கினேன். உண்மையில் அந்தந்த பேருந்துகளில் அலறிய பாடல்கள் (நள்ளிரவு 2:30 கு புவர்லோகம் வரை எட்டும் ஒலியில், சோல பசுங்கிளியே… சொந்தமுள்ள பூங்கொடியே )என்னை அந்தரத்தில் தூக்கியடித்து தூக்கியடித்து இங்கே கொண்டு வந்து வீழ்த்தின என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று காலை நான் கடந்து வந்த மலைப்பாதையில் என் வாழ்வின் அழகிய உதயங்களில் ஒன்றில் வாழ்ந்தேன். உயரும் கொண்டை வளைவு ஒன்றில் பேருந்து தயங்க, கண்டேன். கையருகே தொட்டுவிடும் தொலைவில் பெருமாண்பு ஒன்றின் தூய்மையை. கரும்பச்சைக் குன்றுகளின் பின்னணியில், மெல்ல மெல்லக் கருநீலத்தில் செம்மை விழித்த வானொளியில், விரிவான் விதானத்து அலங்கார சரவிளக்கு போலும், இன்னும் எழாக் கதிரின் முதல் கிரணம் ஏந்தி, பொன்னொளிர் கொண்டு நின்றது ஓர் மேகம்.
அந்த தித்திப்புடன் இடம் வந்து, சும்மா ஒரு சுற்று சுற்றி வந்தேன். அறைகளை சுத்தம் செய்தேன். நூலகத்தில் ஒழுங்கு தவறி நின்ற நூல்களை அடுக்கி வைத்தேன். குளித்தேன். அந்தியூர் மணி நாளைய தேவைக்கான பொருட்களை சேகரிக்க கீழே போக, அவர் எனக்கென சுட்டு வைத்திருந்த தோசைகளை விழுங்கிவிட்டு, அறைக்குள் சென்று விழுந்து உறங்கினேன். விழித்தபோது மாலை 4.30. காட்சிகள் தெரியும் முன்பான, அந்தக்கால tv போல அதே இறைச்சலுடன் மழை பெய்துகொண்டு இருந்தது. தோகையற்ற மயில் ஒன்று பாறை முகட்டில் நின்று நனைந்து கொண்டிருந்தது.
இரவில் 1960 இல் நடராஜன் என்பவர் மொழியாக்கத்தில் வெளியான ரஸ்ஸலின் தத்துவ நூலான விஞ்ஞானமும் சமுதாயமும் என்ற சிறிய நூல் ஒன்று வாசித்தேன். காலையில் ஒவ்வொருவராக வரத்துவங்கினர். சுவாமிஜி யை பாதம் பணிந்து வரவேற்றோம்.
ஸ்வாமிஜி தலைமையில் 11.30 கு முதல் அமர்வு துவங்கியது. அந்தியூர் மணி அனைவரையும் வரவேற்றார். நான் அனைவரும் இங்கே கடைபிடிக்க வேண்டிய நெறிகளை முதலில் குறிப்பிட்டுவிட்டு, சுவாமிஜி கேட்டுக்கொண்டபடி அவர் உடனான அமர்வு நேரம் உள்ளடக்கம் உட்பட அவை எவ்விதம் அமையலாம் என ஒரு அடிப்படை வரைவை அளித்தேன். பங்கேற்பாளர்கள் வசம் விவாதம், உரையாடல், கருத்தமர்வு இவற்றுக்கு இடையேயான பேதத்தை சொல்லி, இந்த அமர்வுகள் கருத்தமர்வு என்று நிகழும் வண்ணம் மட்டுருத்தல் செய்தேன்.
1.30 கு முதல் அமர்வு நிறைகையில் புரிந்து கொண்டேன், சுவாமிஜி பதறியது எல்லாம் சும்மா ஒரு விளையாட்டு. அவருக்கென சில முறைமைகள் கொண்டிருந்தார். அதன் படியே அமர்வுகள் நிகழ்ந்தன. உதாரணமாக வந்தவர்களில் ஒரு இளைஞர் ஈஷா அமைப்பில் தன்னை பொறுத்திக் கொன்டவர், மற்றவர் உபாசனை மரபு மீது ஈடுபாடு கொண்டவர், பொதுவாக அனைவருமே ஜெயமோகன் வழியிலான இலக்கியக் கல்வியில் இருப்போர். அது ஒரு பாதை. அதில் உள்ள எவரையும் தனது சொற்கள் கொண்டு கலைத்துவிடக் கூடாது என்னும் கவனத்துடன் அதே சமயம் இயல்பாக உரையாடலை நிகழ்த்தினார். (எனது வகுப்புகள் வேறு, அதன் நெறிமுறைகள் வேறு, அங்கே நான் கண்டிப்பு கொண்டவன் என்று சுவாமிஜி இறுதி அமர்வில் சொன்னார்).
ஒன்றரை மணி நேர அளவில், ஐந்து அமர்வுகளில், வெவ்வேறு அனுபவங்கள் நகைச்சுவைத் தருணங்கள் வழியே சுவாமிஜி பேசியவற்றை குறிப்பாகத்தொகுத்தால்…
அவரது பூர்வ கதை.
அவர் இந்த வேதாந்த நெறிக்கு வந்த வகைமை.
எவர் என்ன நிலையில் ஆத்மீக தேடலுக்குள் வருகிறார்.
எத்தகையது வேதாந்தக் கல்வி ( வேட்டியை விட்டவருக்கே வேதாந்தம்)
மிருகத்துக்கு இல்லாத மனிதனுக்கு மட்டும் உள்ள அவன் எதையும் செய்யலாம் எனும் செயல்பாட்டு சுதந்திரம்.
வேதம் மனிதனுக்கு இட்ட ஐந்து செயல்பாட்டு கடமைகள்.
இங்கே பிறந்து எதையோ செய்துகொண்டிருக்கும் மனிதனுக்கும் கர்மாவுக்கும் என்ன தொடர்பு.
வேதாந்த நோக்கில் கர்மா.
விதியையோ கர்மாவையோ விடுத்த தனது தேர்வு அடிப்படையிலான செயல்.
தவறாக செய்து விட்டோமே என்றோ, சரியானதை செய்யாமல் விட்டு விட்டோமே என்ற கவலையை அளிக்காத செயல். அந்த செயலே யோகம் என்றாகும் நிலை.
செயலை யோகம் என்று கொள்வதற்கும், தன்னரத்தை கண்டு கொள்வதற்கும் உள்ள பேதம்.
இப்போது இங்கே உள்ள சஞ்சலம் கொண்ட செயல்களின் பின்னே உள்ள மனம், அறிவு, உணர்வு இவற்றின் கலவையான அகங்காரம்.
நான் எனும் நிலை.
தன்னுணர்வு எனும் நிலை.
மனம், உணர்வு, அறிவு எனும் மாறிக்கொண்டே நிகழ்ந்து கொண்டே இருக்கும் நிகழ்வு.
மாறாத பிரக்ஞ்சை.
பிரக்ஞையே பிரம்மம் எனும் நிலையில் இருந்து துவங்கி சத், சித், அனந்தம் (ஆனந்தம் அல்ல) எனும் நிலை வரை.
அவரது குரு நிறை வரிசை
அவரது பணிகள்.
இவை மீதான உரையாடல் என்று முடியும். மொத்த அமர்வுகளையும் ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், பகவத் கீதை என்ற இந்த முக்கோணத்திருக்குள் வைத்தே சுவாமிஜி நிகழ்த்தினார்.
தியானத்தில் எழும் இடர்களை எவ்விதம் களைவது.
அமானுஷ்ய நிகழ்ச்சிகளை வேதாந்தம் எவ்விதம் பார்க்கிறது.
சக்ர உபாசனா மரபை வேதாந்தம் எவ்விதம் அணுகுகிறது.
சாவுத் துயர், உறவுகள் வழியே எழும் சிக்கல் இவற்றை வேதாந்தம் எவ்விதம் எதிர்கொள்கிறது.
வேதாந்திகளில் பலர் ஏன் எதிர்ப்பு தோற்றத்துடன் கருணை இல்லாத கறார் தன்மையுடன் இருக்கிறார்கள். வேதாந்தம் இவ்விதம்தான் ஆக்குமா.
வேதாந்தம் எவற்றை எல்லாம் விலக்குகிறது.
வேதாந்த மரபுக்கு அழகியலுக்குமான தொடர்பு. ( மீராவை முன்வைத்து சைதன்யா கேட்ட இந்த கேள்விக்கு, முக்கியமான கேள்வி பின்னர் பதில் சொல்கிறேன் என்று அமர்வுகள் முடிந்ததும் இரவு தனியே சைதன்யாவுக்கு சுவாமிஜி பதில் அளித்தார்)
சூழலியல் சீர்கேடுக்கு வேதாந்த நோக்கில் பதில் உண்டா. தீர்வு உண்டா.
பொதுவாக இது போன்ற அமர்வுகளில் எது சரி. சொன்னவற்றில் இருந்து சந்தேகம் வழியே கேள்வி கேட்பதா, அல்லது கேட்காமல் இருந்து கவனிப்பதா.
இவையெல்லாம் அமர்வுகளில் சுவாமிஜி விடையளித்த வினாக்களில் சில.
தனது தியான அனுபவங்கள். வித விதமான குணம் கொண்ட வேதாந்திகள் என்று வித விதமான கதைகள் வழியே சுவாரஸ்யமாக சுவாமிஜி நடத்தி நிறைவு செய்தார்.
அமர்வுகள் இல்லா இடைவெளிகளில் நண்பர்கள் என்னிடம் கேட்ட இலக்கிய சந்தேகங்கள், வாசிப்பில் நிகழும் இடர்கள், எனது தனி வாழ்வனுபவ கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.
நண்பரொருவர் மொத்தமாக பார்க்கையில் அமர்வுகளில் சுவாமிஜி பேசியது தொகுத்துக்கொள்ள இயலாத வகையில் எங்கெங்கோ செல்லும் பல கதைகள் வழியே சிதறலாகவே என்னுள் இருக்கிறது.அதை நீங்கள் தொகுத்து சொல்லும்போது ஆம் இதுதான் ஸ்வாமிஜி சொல்லித் தந்தது என்று புரிகிறது எவ்விதம் நீங்கள் இப்படி தொகுத்துக் கொள்கிறீர்கள்? என்று வினவினார்.
இதில் நான் விற்பன்னன் அல்ல. கற்றுக்கொண்டு இருப்பவன். முதலில் ஈடுபடும் விஷயத்தில் காதல் வேண்டும். காதல் இருப்பின் மற்றவை தன்னால் பின்தொடரும். காதல் இல்லாவிட்டால் காதலை வளர்த்துக்கொள்ள முடியும் அதற்கு பெயர் ஷ்ரத்தை. ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் உங்களது தன்முனைப்புடன் கூடிய பகல்கனவு உங்களை வேறு எங்கோ திருப்பி விடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உள்ளே ஓடும் உரையாடலை அணைத்து வைக்க வேண்டும்.ஒரு உரையாடல் வழியே எது எவ்விதம் உங்களுக்கு கையளிக்கப்படுகிறது என்பதில் கவனம் வேண்டும்.
(கவிதை இயல் சார்ந்த உரையாடலை தேவதச்சன் கையளிப்பதுபோல தேவ தேவன் கையளிக்க மாட்டார். உரையாடலில் முதல்வர் கணிதத்தின் முறைமை கொண்டவர் இரண்டாமவர் கவிதையின் முறைமை கொண்டவர். )
மனதிலோ குறிப்பேட்டிலோ சினாப்ஸிஸ் எழுதிக் கொள்வது.அந்த சினாப்ஸிஸ் ஐ அப்படியே விரித்து மீண்டும் அதே முழு உரையாக சொல்லிப்பார்த்துக் கொள்வது.இவைதான் ஜெயமோகன் பள்ளி கற்றுத்தந்த அடிப்படைகள் என்று சொன்னேன்.
இரவுகளில் கடும் மழையும் மின்வெட்டும் இருந்ததால், வழக்கமான இரவு உரையாடல்கள் நிகழ வில்லை. ஒரு மாலை அனைவரும் வன காவலர் ஒருவர் துணையுடன் சிறிய கானுலா சென்று வந்தனர். அன்புராணி அதில் வேழாம்பல் பறவையை கண்டு படம் பிடித்து வந்தார்.
ஒரு அதி காலை நடை யில் அன்பு தனது ஆற்றல் மிக்க காமிரா வழியே ஸூம் போட்டு பல்வேறு பறவைகளை அதன் நடத்தைகளை ( ஒரு பறவை சும்மா போய் பிற பறவைகளை வம்பு செய்து கொண்டு இருந்தது) அதன் தமிழ்ப் பெயருடன் அறிமுகம் செய்தார். பல பறவைகளை, குறிப்பாக சிகப்பு தலை கிளி வகையில் பெண் வகையை முதன் முதலாக பார்த்தேன். குறைந்தது 10 வகை பறவை இனங்களை அறிமுகம் செய்து வைத்தார். வனத் தொகுதிக்குள் பறவைகளை குறிப்பாக எவ்விதம் அடையாளம் காண்பது என்று அன்பு சொல்லித்தருகையில் ஒன்றை அறிந்தேன். அஜிதன் அவரது மைத்ரி நாவலில் இத்தனை துல்லியமாக புத்தம் புதிய மொழியில் புற உலகை விரித்துக்காட்ட முடிந்த அவரது திறன், அவரது பறவை நோக்கு ஈடுபாட்டில் இருந்தே எழுந்த ஒன்று.
மதியங்களில் சட்டத்துக்கு ஒரு சவக்குழி, சிகப்பாய் ஒரு சிலுவை, ஆவியின் ஆடுகளம் என டெக்ஸ் வில்லர் சாகசங்களில் திளைத்தேன்.
இறுதிநாள் நாள் காலை சுவாமிஜி உள்ளிட்ட அனைவரும் மொத்தமாக கிளம்பி , அருகில் உள்ள வீர சைவ மடம் சென்று அதன் தலைவர் சுவாமிஜியை சந்தித்தோம். சுவாமி காபி அளித்து உபசரித்து மடத்தை சுற்றிக் காட்டினார். தோட்டத்தில் மடத்தின் ஐந்து தலைமுறை குருமார்கள் அடக்கம் கண்டிருந்தனர். தேநீர் வண்ண பால் புதுமை குதிரை ஒன்று ( அதன் வலது கண்ணில் பார்வை இல்லை) புல் மேய்ந்கொண்டு இருந்தது. தோட்டத்தில் கிடந்த இளவட்டக்கல்லை நண்பர்கள் ஒவ்வொருவராக உருட்டிப் பார்த்தனர். ஒருவர் தரையை விட்டு இரண்டு அடிவரை தூக்கினார். தூக்கிய அளவு வரைக்குமான பெண் ஏதும் கிடைக்கும் என்று கிடைக்குமா என்று சுற்று முற்றும் பார்த்தார். குருதே மட்டும் மேய்ந்து கொண்டு இருந்தது.
அமர்வு நிறைகயில் இந்த வீர சைவ மடத்தின் சுவாமி வந்து அமர்வில் கலந்து கொண்டார். பிரம்மானந்தா சுவாமி அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். சுவாமி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ஊர் ஆனைகுந்தி. வேடர் குலம். கண்ணப்ப நாயனார் வழி வந்தவர்கள். சில நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்ட காட்டு வேடர்களுக்கான மடம் அது. அவர்கள் மதம் மாறாமல், சைவ நெறிக்கு திருப்பி விட, வன அழிவுக்கு எதிரான காவலாக, நாடி வந்தோர் அனைவருக்கும் உணவளிக்கும் அணையா அடுப்பை கொண்ட நிலமாக நின்று பணி சேர்த்து கொண்டிருக்கும் மடத்தின் இன்றைய தலைவர் அவர்.
அவர் வந்திருந்தது மிக மிக நிறைவளிக்கும் இறுதி நிகழ்வாக அமைந்தது. ஈரோடு க்ரிஷ்ணன் அனைவருக்கும் நன்றி சொல்லி இந்த மூன்று நாள் உடன் தங்கல் நிகழ்வை நிறைவு செய்தார். மதிய உணவு முடித்து ஒருவருக்கொருவர் கட்டியணைத்து விடை பெற்றோம். சுவாமி பிரம்மானந்தா பாதம் பணிந்து விடை பெற்றேன்.
விடை பெறுகையில் சுவாமி மலேசியாவின் நிகழ்வுக்கு உங்களுடன் சேர்த்து என்னையும் வர சொல்லி வரவேற்றார். எனக்கான ஆசி அது. ஆனால் நான் மறுத்து விட்டேன். இப்பிறப்பில் எனக்கு இந்த பாரதம் போதும். இந்த நிலத்தை கடக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் கண்டம் கடக்கும் புள்ளல்ல, இந்த நிலத்தின் எளிய புல். சுவாமி புரியிது என்று சொல்லி என் தோளை தட்டினார். லிங்கராஜ் மற்றும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே பவானி பைபாஸ் வந்து சேர்ந்தேன்.
கடலூர் சீனு
தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன் -கடிதம்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
இங்கே ஆங்கில பத்தி எழுத்தாளர் ஒருவர் நீங்கள் எழுதியதை வாசித்ததில்லை என்று சொன்னதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் எழுதியவை புனைவுகள் மட்டுமல்ல. நீங்கள் எழுதிய ஒவ்வொன்றும் இணையத்தில் கிடைக்கிறது. ஆனாலும் அவர் வாசித்ததில்லை என்பது ஆச்சரியமில்லை. ஆங்கில இதழாளர்கள் பெரும்பாலும் அப்படித்தான். நானே பலரை பார்த்திருக்கிறேன். எந்த எழுத்தாளர் பெயரைச் சொன்னாலும் ‘ஹூ இஸ் தட் கை?’தான்
ஆனால் நானும் ஊடகத்துறையில் இருக்கிறேன் என்றவகையில் நீங்கள் பணியாற்றும் சினிமாக்களுடன் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கூட உங்கள் பெயரை அறிந்ததில்லை என்பது திகைப்பளிக்கிறது. ஒரு தொழில் என்றவகையிலாவது தெரிந்துவைத்திருக்கவேண்டும் அல்லவா?
தேவ்
***
அன்புள்ள தேவ்,
தேவையில்லை. நான் கடவுள் காலம் முதல் எனக்கு ஆரியா மிக நெருக்கம். அவருக்கு நான் எழுத்தாளர் என்று தெரியாது, தெரிய வாய்ப்பும் இல்லை. அவர் ஆங்கில ஊடகம் வழியாக படித்தவர். அவர் வாழும் சூழல் அப்படி. பெரும்பாலான நடிகர்கள், தொழிநுட்பவியலாளர்கள் ஆங்கிலச்சூழலில் இருந்து வந்தவர்கள்.
நாடகம், மாற்று ஊடகம் போன்றவற்றில் இருந்து வந்தவர்கள் முந்தைய தலைமுறை நடிகர்கள். இன்று அப்படி எவரும் வருவதில்லை.
திரும்பவும் சொல்லவேண்டியது இதுதான். இங்கே இலக்கியவாதி என்பவன் தலைமறைவாக வாழ்பவனே. எத்தனை எழுதி, எத்தனைபேசி, எத்தனை செயல்பட்டாலும். என் நிலைமை இப்படி என்றால் மற்றவர்களின் நிலை என்ன என்று சொல்லவேண்டியதில்லை.
இலக்கியவாதிக்கு இலக்கிய அரங்கும் இல்லாமலாகவேண்டும் என்றுதான் இங்கே பலர் அல்லும் பகலும் உழைக்கிறார்கள்.
ஜெ
வெள்ளையானை பற்றி…
கடந்த இரண்டு நாட்களாக ஜெயமோகனின் நாவலான “வெள்ளை யானை” வாசித்தேன். மீள் வாசிப்பு. அன்பு பொன்னோவியம் சொன்ன ஒரு தகவலிலிருந்து “வெள்ளை யானை” நாவலை எழுதி இருக்கிறார் என்று அறிந்தேன்.
ஐஸ் ஹவுஸ் போராட்டம். இந்தியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டம். நூறு நூறு ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட உறைந்துபோய் கிடந்த சமூகத்தின் முதல் கையசைவு. இனி எப்போதும் இந்தியா நினைவில் வைத்திருக்கும் வைத்திருக்க வேண்டிய தொழிலாளர் போராட்டம். ஆட்சிக்காக அல்ல. அதிகாரத்துக்காக அல்ல. உரிமைக்காக. அடிப்படை மனித உரிமைக்காக. கூலிகளின் உரிமைக்காக. ஜனநாயகம் என்ற சொல்லுக்காக. ஒருவகையில் இந்திய தலித்துகள் வரலாற்றில் முக்கியமான முதல் போராட்டம். ஆனால் இது மையவரலாறு அல்ல. மைய வரலாறாக பாவிக்கப்படவும் அல்ல.
நமக்கு வரலாற்று புனைவென்றாலே அது மன்னர்கால வரலாறு தான். அல்லது அத்தகைய வரலாற்றில் புகுந்து கொண்டு அதைப்பற்றிய நமது எண்ணங்களை வியாக்கியானம் செய்வது தான். ஆனால் மிகவும் அண்மையில் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தை எடுத்துக் கொண்டு அதை புனைவாக்குவது மட்டுமல்லாது தக்காண பஞ்சம் பற்றி மெட்ராஸ் பஞ்சம் பற்றி பிரிட்டிஷ் ஆட்சி முறை, இந்தியா சாதிமுறை, அதன் கட்டுமானங்கள் பற்றி அதுவரையில் இல்லாத புதிய மதிப்பீடுகளை எண்ணங்களை உண்மைகளை முன்வைத்தது இந்நாவலின் பலம்.
நாவலின் ஒரு முக்கியமான கூறு மையம் இல்லாத ஒன்றை பேசுபொருளாக எடுத்துக் கொள்வது. அப்படியான ஒன்றை வைத்து மற்றவற்றை அளவிடுவது. அதிலிருந்து புதிய ஒன்றை நோக்கிச் செல்வது.
பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சி பற்றி தமிழகத்தில் ஒரு உயர்வான எண்ணமே இருந்து வந்தது.
ஏன் இன்றும் கூட “வெள்ளையர்கள் நல்லவர்கள் இன்னும் இருநூறு ஆண்டுகள் அவர்கள் ஆட்சி செய்திருக்கலாம்” என்று ஏதாவது ஒரு டீக்கடையில் அமர்ந்து சிலர் பேசுவதை நாம் கேட்டிருப்போம். நான் கேட்டிருக்கிறேன். அந்த டீக்கடை பேச்சிற்க்கும் சற்றும் குறைவில்லாத அளவிலேயே இங்குள்ள அறிவுத்தள விவாதங்கள் நடந்திருக்கின்றன.
அதை முற்றிலும் மறுத்து விவாதித்திருக்கிறது இந்நாவல். அது இந்நாவலுடைய பேசுபொருளின் பலம். இந்நாவலை கட்டமைப்பதற்கு ஆசிரியன் எடுத்துக்கொண்ட கதாபாத்திரங்கள் என்னை மிக மிக ஈர்த்தவை. A novelist intelligence.
ஏய்டன் பைர்ன் இந்நாவலின் மையப்பாத்திரம். அவன் யார், எங்கிருந்து வருகிறான் என்பதே ஒரு நாவலில் வந்துவிடக்கூடாத ஒருமைத்தன்மையை கலைத்துவிடுகிறது. நாவலுக்கு மிக அவசியமான முரணை வலுவாக்கி விடுகிறது. “நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் உறுப்பினனாகிய நான் இதோ ஒடுக்குமுறையாளன் வேடமிட்டு வந்து அமர்ந்திருக்கிறேன்.” என்கிற ஏய்டனைப்பற்றிய குறிப்பு நாவலை விரிந்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அவன் ஷெல்லியின் வாசகன்.
நீதியுணர்ச்சி கொண்டவன். அதற்காகத் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளத் துணிபவன்.
நானொரு ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவன் என்ற நினைப்பு அகத்தே அவனுக்கு உண்டு. காத்தவராயனுடன் சேரிக்குள் நுழையும் போது அவனுள்ளே இருக்கும் “சேரிக்காரன்” விசிலடித்து கொண்டாடுகிறான். கலைந்து கிடக்கும் அந்த இடம் அவனுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. தந்தை மகிழ்வார் என்று நினைக்கிறான். அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பணிபுரியும் காப்டன் என்ற சிந்தனை அவனுக்கு புறத்தே உண்டு. எல்லாமும் அவனுக்கு சட்டபூர்வமாக நடைபெற வேண்டும் என்கிற கவனம் உண்டு. இந்திய சாதிய கட்டமைப்பும் பிரிட்டிஷ் ஆட்சிமுறையும் ஷெல்லியும் மரிசாவும் செயற்கைப் பஞ்சமும் காத்தவராயனும் தன் சொந்த நீதியுணர்ச்சியும் ஏற்படுத்தும் அகநெருக்கடிகளும் புற நெருக்கடிகளும் தான் நாவல் என்று ஒரு வசதிக்காக வகைப்படுத்திக்கொள்ளலாம் என்றாலும் அந்த வகைப்படுத்தலை இந்நாவல் மீறவே செய்கிறது.
இந்நாவலின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் காத்தவராயன். அயோத்திதாசர். மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் என்று தோன்றுகிறது. அயோத்திதாசரின் மொத்த எழுத்துக்களும் என்னவோ அதைச்சுட்டும் விதமாக. ஏய்டனை அவன் நீதியுணர்சியை சதா சீண்டும் விதமாக. ஒவ்வொரு வசனங்களும் மிகமிக நேர்த்தியாக. அயோத்திதாசரே எழுந்து வந்து பேசியதைப் போல.
“கருணை கேட்க நாங்கள் நரகத்தில் உழலும் பாவிகளும் அல்ல, இங்குள்ள மற்ற மனிதர்கள் கடவுளும் அல்ல. நாங்கள் மனிதர்கள். எங்களுக்குத் தேவை நீதி. சமத்துவம். இன்று நீங்கள் என்னுடன் கைகுலுக்கி சமானமாக அமரச் செய்தீர்களல்லவா.. அந்த மனநிலை. உங்கள் இனத்தவர் நேற்று எப்படி இருந்தாலும் இன்று அதை அடைந்துவிட்டீர்கள். தனிமனிதர்கள் எப்படி இருந்தாலும் உங்கள் மொழியும் சட்டமும் நீதியையும் சமத்துவத்தையும் சொல்கிறது. ஆனால், எங்கள் மொழிமீது மலநாற்றம் அடிக்கிறது. எங்கள் நீதி மீது நிரபராதிகளின் ரத்தம் வழிகிறது”
“அதனால் ஐஸ்ஹவுஸில் நடந்த போராட்டத்தைப் பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம். அதன் அழிவுகளைப் பற்றி அல்ல. அழிவே நிகழவில்லை. நிகழ்ந்தால் அது எப்போதும் நிகழும் அழிவுகளில் ஒரு சிறுதுளி தான். நாங்கள் போராடியிருக்கிறோம். எங்களால் போராட முடிகிறது. இப்போதைக்கு அது தான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இந்த மண்ணில் இன்னும் நூறு ஆண்டுகாலம் நடக்கப் போகும் போராட்டங்களின் முதல் அசைவு நிகழ்ந்திருக்கிறது. அது எங்களுக்குப் போதும்”
காத்தவராயனின் ஒவ்வொரு நகர்வும் அவன் பேசும் வசனங்களும் மிக மிக அறிவார்ந்த தன்மையுடையவை. நாவலிலிருந்து வெளியே வந்து மீண்டும் நாவலை பற்றிச் சிந்தித்தால் எல்லா கதாபாத்திரங்களும் அறிவார்ந்தவை. காத்தவராயன், மாக், முரஹரி அய்யங்கார், பார்மர், மாரிசா, துரைசாமி. அவர்கள் பேசும் எல்லா வசனங்களும் மிகுந்த தர்க்கம் கொண்டவை. நடைமுறை எதார்த்தம் கொண்டவை. உண்மையில் அவர்களுக்கு இடையில் வந்து சிக்கிக்க்கொண்டவன் ஏய்டனே.
“வெள்ளை யானை” என்ற படிமம் நாவலில் ஒவ்வொன்றாக வளர்ந்து வெவ்வேறாக திரிந்து உருக்கொள்கிறது. மிகப்பெரிய பனிக்கட்டியாக, இந்தியாவாக, நீதியுணர்ச்சிமிக்க ஏய்டனாக, ஐராவதமாக இன்னும் பலவாக. அது ஒவ்வொரு முறையும் சில்லிட வைக்கிறது.
ஒருகட்டத்திற்கு மேல் ஏய்டனுக்கு அகமாகவும் புறமாகவும் விழும் நூறு நூறு சம்மட்டி அடிகள்.
செங்கல்பட்டு பஞ்சத்தை நேரில் கண்டமை. அதற்கு நம்மால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று தனது எல்லையை அறிந்து கொண்டமை. போராட்டத்தை செயலிழக்க செய்யும் நூதனமான உத்தியான தனது பணி மாற்றம்.
முரஹரி அய்யங்காரின் வருகை, போராட்டம் வன்முறையில் முடிந்தமை. அதற்கு தானே காரணம் என அறிந்தமை. மாரிசாவின் காதல் மறுப்பு. பஞ்சத்தை அதன் கோரமான ஊர்வலத்தை இடப்பெயர்வை நேரில் கண்டமை. ஒட்டுமொத்தமாக இப்பிரச்னை குறித்து அறிக்கை கூட தயாரிக்கவியலாமை. தற்கொலை முயற்சி. காத்தவராயனின் இறுதி உரையாடல். தென்காசி குடிவிருந்து உரையாடல்.
இது ஜெயமோகனின் மிக முக்கியமான நாவல். இதைப்பற்றி திறந்த உரையாடல் அவசியம் என நினைக்கிறேன். நாவலைப் பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுத வேண்டும்
மனோஜ் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருது,2022
2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்படுகிறது. நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி. இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என அவரையே சொல்லமுடியும்.
இலக்கியக் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் வழியாக பிறழ்வெழுத்தின் வகைமைகளையும் அதன் ஆசிரியர்களையும் தமிழில் அறிமுகம் செய்தவர். இசையிலும் பிறழ்வெழுத்துக்கு இணையான சமன்குலைக்கும் வகைமாதிரிகளை அறிமுகம் செய்தவர். தன்வரலாறும் புனைவும் கலந்த எழுத்து அவருடையது. தன் வரலாற்றையும் தன்னையும் புனைந்து புனைந்து அழித்துக்கொள்ளும் இவ்வகை எழுத்து தமிழுக்கு அனைத்துவகையிலும் புதியது.
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது 2022 டிசம்பர் மாதம் இறுதியில் வழங்கப்படும். வழக்கம்போல விஷ்ணுபுரம் விழா நடைபெறும்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



