Jeyamohan's Blog, page 721
September 5, 2022
இரா.மீனாட்சி, அடைதலும் இழத்தலும்
இரா.மீனாட்சி என்ற பெயரை நான் முதலில் எழுத்து கவிதைகளில் கண்டேன். தமிழின் தொடக்ககாலக் கவிஞர்களில் ஒரு பெண்குரல் என்பது வியப்பாக இருந்தது. ஆனால் சுந்தர ராமசாமி அவர் தொடர்ந்து எழுதாமல் விலகிச் சென்றுவிட்டதாகச் சொன்னார். நீண்ட இடைவேளைக்குப் பின் சுஜாதா அவரைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியபோதுதான் இரா.மீனாட்சி தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பதை அறிந்தேன். ஆரோவில்லில் ஆசிரியராக, ஆரோவில் அமைப்பாளராக உலகைச் சுற்றுபவராக அவர் மீண்டும் அறிமுகமானார். ஆனால் கவிதைகள் கல்லூரி ஆசிரியைகள் வழக்கமாக எழுதுவனவாக ஆகிவிட்டிருந்தன. இன்று தமிழ்க்கவிதையில் இரா.மீனாட்சிக்கு இடமேதும் இருப்பதாக விமர்சகனாக நான் எண்ணவில்லை.
இரா.மீனாட்சிசாரு,கடிதங்கள்
ஒரு திருமணத்தில் மணமகன் / மணமகள் – ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து நாம் பங்கெடுத்திருப்போம். மாப்பிள்ளை/ பொண்ணு இரண்டுமே சொந்தமாக இருந்துவிடுவது விதிவிலக்கு. ஒரு இலக்கிய வாசகனாக விஷ்ணுபுரம் என்பது என் சொந்த இடத்தை போல உணர வைக்குமிடம், அதில் பெரிதாக எந்த கடமைகளிலும் இதுவரை என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை, 2019-ஆம் ஆண்டு (விருது கொடுத்த போதும்) அபியின் வாசகனாக நான் அங்கு வரவில்லை,
ஒரு தாதா இன்னொரு தாதாவுக்கு கொடுத்த கேக் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் 2022 ஆண்டுக்கான விருது சாரு நிவேதிதாவுக்கு என்கிற அறிவிப்பு என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
சாருவையும்கூட முப்பதாண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறேன், அப்பொழுதெல்லாம் – அதாவது 90-களில் தாங்கள் திருப்பத்தூரிலும், சாரு வேலூரிலும் அரசு ஊழியர்களாக இருந்தனர் என்பது என்னைப் போன்ற (பழைய வட ஆற்காடு) ஆட்களுக்கு முக்கியமான செய்தி. சிற்றிதழ்களின் வழியாக அப்பொழுதே தங்கள் இருவருடைய இலக்கிய எழுத்தின் வகை எனக்குப் பிடிபடத் தொடங்கிவிட்டிருந்தது. இந்த முறை சாருவின் வாசகனாக கோவை விழாவுக்குச் செல்லலாம் என்றிருக்கிறேன்.
விஷ்ணுபுரத்தை, வெண்முரசை எழுதிய தாங்கள் – அந்த கதையாடல் அனைத்தையும் கவிழ்த்துப் போட்டு எதிர்முனையில் எழுதி வந்த ஒருவருக்கு வழங்க முன்வருவது விஷ்ணுபுர அமைப்பின் பரந்த மனப்பான்மைக்கும், பன்முகத்தன்மைக்கும் எடுத்துக்காட்டான தேர்வும்கூட. இரண்டு மாதம் முன்பே தாங்கள் சொல்லிவிட்டதாக சாரு கூறுகிறார். இரகசிய காப்பு பிரமாணமெல்லா அவருக்கு அது பெரிய சிரமம் – நல்லவேளை தலைவெடிக்கவில்லை, பாவம் சாரு!
ஆனால் தாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லாத, அடுத்து பத்து ஆண்டுகளுக்கான பெயர் பட்டியல் என்னைப் போல பலரிடமும் கைவசமுள்ளது, என்ன –வரிசை கிரமம்தான் சற்று முன் / பின் என மாறும், அதனால் சாருவின் பெயரைப் போல இன்னும் சிலரின் பெயரை நாம் ஒருவாறு யூகித்துவிடக் கூடிய ஒன்றுதானே. அதுகூட இத்தனை ஆண்டு இலக்கிய வாசிப்பில் அறிய முடியா விட்டால் எப்படி?
சாருவுக்கு விருது கொடுக்கச் சொன்ன காரணம் மிக முக்கியமானது, transgressive writing . சாருவுடைய பிறழ்வெழுத்துக்களின் உச்சம் “ஔரங்கசேப்” – டெல்லியின் பழைய பெயர் அஸ்தினாபுரம் என்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாகவே அது பல பேரரசுகளை கண்ட தலைநகரம். அங்குள்ள வீதி ஒன்றுக்கு வைக்கப்பட்டிருந்த பெயரை இன்றுள்ள அரசர்கள் வேறு பெயருக்கு மாற்றிவிட்டதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்,.
இந்திய ஆன்மிக பெருமரபில் 108 என்பது மங்கல எண். அது வந்துவிடக் கூடாதென்றோ, என்னமோ – சுந்தர ராமசாமி எழுதிய – ஒருவேளை அந்த எண்ணிக்கையே போதெமென்று சொல்லி வைத்து நிறுத்தியதைப் போலவே பசுவய்யாவுக்கு 107 கவிதைகள். 1931-ல் பிறந்த சுந்தர ராமசாமியும் 1953-ல் பிறந்த சாரு வரை எழுத்து என்பதே கலகச் செயல்பாடுதான், ஆகவே ஒன்றைக்கூட்டி 109 அத்தியாயங்களாக எழுதிய புது நாவல் ஔரங்கசேப். அரக்கனாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு நாயகன் பாத்திரமளித்து எழுதுவதற்கு சாருவை விட்டால் வேறு யார் இங்கு (தமிழில்) உள்ளனர்?
இந்திய மொழிகளிலேயேகூட உண்மையிலேயே சாருவிடம்தான் அந்த கெத்து உள்ளது. அந்த நாவல் bynge-யில் வந்துக் கொண்டிருந்தபோது உடனுக்குடன் படித்து கருத்துச் சொல்வதிலிருந்து – சாருவுடன் தொடர் உரையாடலில் இருந்திருக்கிறேன். 2021 மத்தியில் கொரானொ பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நேரம், என் தாயாரும் இயற்கை எய்தியிருந்த வெறுமை படர்ந்த சூழலில் சாருவின் ஔரங்கசேப் வெளியாகத் தொடங்கியது. கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் சாரு இந்த நாவலுக்கு படித்த நூல்களில் சற்றேறக்குறைய 50 / 60 நானும் புரட்டிப் பார்த்திருப்பேன். அந்த வகையில் அதுவொரு இணையோட்டம்.
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விழாவில் – ஏற்பாட்டாளர்கள் சார்பாகவும், விருதாளர் சார்பாகவும் கலந்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது, மாப்பிள்ளை / பொண்ணு இரண்டு தரப்பு சொந்தம் என்பதுபோல…
மிக்க நன்றி ஜெ!
கொள்ளு நதீம், ஆம்பூர்.
***
அன்புள்ள ஜெ
சாருவிற்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவது நிறைவளிக்கிறது. நான் எப்போதுமே சூழலில் எதிர்பார்ப்பது இதைத்தான். இலக்கியம் எல்லா வம்புகளுக்கும் அப்பால் அதற்கான தனிமதிப்பீடுகளுடன் நிலைகொள்ளவேண்டும். சாரு நிவேதிதாவையும் உங்களையும் வம்புகள் வழியாகவே அறிந்தவர்களின் பேச்சுக்களைக் கடந்து இந்த விருது அடுத்த நூறாண்டுக்குப் பேசப்படும்
எஸ்.கௌதம்
***
கே.ஆர்.எஸ்- கடிதம்,விளக்கம்
அன்புள்ள ஜெ
கேஆர்.எஸ். என்னும் பெயரில் எழுதி வந்த கண்ணபிரான் ரவிசங்கர் பற்றி ஒரு கேள்விக்கு அவருடைய தமிழறிவு மீதான மதிப்புடன், அவர் தேவநேயப் பாவாணரின் மரபினர் என்று எழுதியிருந்தீர்கள். அவருடைய டிவீட்களை சுட்டி அனுப்பியிருக்கிறேன். தயவுசெய்து இவற்றையும் பார்க்கவும். இதுதான் பாவாணர் மரபா? நானும் பாவாணரின் தனித்தமிழ் மரபைச் சேர்ந்தவன்தான்.
அழகு மாணிக்கவாசகம்
அன்புள்ள அழகு,
இந்த டிவீட்களை பார்க்க எனக்கு வாய்க்கவில்லை. பொதுவாக சுட்டிகளை கிளிக் செய்து முழுக்கப்படிப்பது நான் இன்று இருக்கும் பரபரப்பில் இயல்வது அல்ல. இவற்றை நீங்கள் அனுப்பியமைவால் வாசித்தேன். வருத்தமாக இருந்தது.
கே.ஆர்.எஸ் தமிழ் பற்றி எனக்கு எழுதிய கடிதம் வழியாக எனக்கு அறிமுகம். சில மொழிசார்ந்த விவாதங்களில் அவருடைய அடிப்படைவாத அணுகுமுறையை கவனித்திருக்கிறேன். அவருடைய இந்த டிவீட்டுகள் அவருக்கும் அவர் முன்னோடி என நினைப்பவர்களுக்கும் இழிவைச் சேர்ப்பவை.
நான் எதிர்நிலையைச் சொல்லவில்லை. அதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த எதிர்நிலையை முன்வைத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ்விக்கி அளித்துள்ள முக்கியமான இடமே எங்கள் நிலைபாட்டை காட்டுவது. இவை மிகமிக மலினமான ரசனையும் நாகரீகமறியாத மூர்க்கமும் கொண்டவை. வருந்துகிறேன், அவருக்காக. ஒவ்வொருவருக்கும் இருக்கும் முதற்கடமை தன் தந்தை, தன் குரு என்னும் இருசாராரின் பெருமையை காப்பாற்றுவதே.
வேறொன்றும் இனி இதில் சொல்வதற்கில்லை.
ஜெ
விடுதலை, ஒரு கடிதம்
நீங்கள் எழுதிய துணைவன் பற்றிய சிறுகுறிப்பு கண்டேன். அதைப்பற்றி ஒன்று மட்டும் சொல்லவேண்டும் என்று தோன்றியது. நான் இடதுசாரி எம்.எல் இயக்கங்களில் இருந்திருக்கிறேன். நாம் தர்மபுரி காலகட்டம் முதல் அறிமுகமானவர்கள். இந்த துணைவன் கதையை விகடனில் வந்தபோதே வாசித்திருக்கிறேன். அதைப்பற்றி நாம் பேசியிருக்கிறோம்.
அந்தக்கதையில் எனக்கு மாறுபட்ட பல கருத்துநிலைபாடுகள் உண்டு. இப்போதும் அந்தக்கதையின் மையமான உணர்வு புரட்சிகர மனநிலைக்கு எதிரான மனநிலையில் இருந்து எழுதப்பட்டது என்றுதான் நினைக்கிறேன். இன்றைக்கு நான் நிறையவே விலகி வந்துவிட்டேன். ஆனாலும் அதுதான் என் நினைப்பு.
ஆனால் நான் சொல்லவந்தது வேறொரு விஷயம் சம்பந்தமாக. அதாவது அதில் அந்த எம்.எல் தோழரின் பெயர் கோனார் என்று இருப்பது தவறு என்று சமீபத்திலே தமிழ் ஹிந்துவில் எழுதியிருந்தார்கள். எம்.எல் தோழர்கள் அப்படி சாதிசார்ந்து பெயர் வைத்துக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் புரட்சிகரமாக பெயர் வைத்துக்கொள்வார்கள் என்று எழுதியிருந்தனர்.
பிறகு தேடியபோது ஒரு பத்திரிக்கையாளர் அப்படி விரிவாக எழுதியிருந்ததை கண்டேன். அதை ஒட்டித்தான் இவர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த பத்திரிக்கையாளர் எழுதியதை வைத்துப்பார்த்தால் அவருக்கு ஒன்றுமே தெரியாது. சினிமா பார்த்த அனுபவம்தான் இருக்கிறது என நினைக்கிறேன். பொதுவாக எம்எல் இயக்கங்களில் ஒரு பெயர் இருக்கும். அது ரகசியப்பெயர். அது வெளியே தெரியாது. அது குறியீட்டுப்பெயராக இருக்கும். மற்றபடி வெளியே தெரியும் பெயர் ரெண்டு. ஒன்று போலீஸ் போடும் பெயர். அதுதான் பொதுவாக பிரபலமாக இருக்கும். அது சாதி, மத அடையாளம் சார்ந்த பெயராகத்தான் இருக்கும். அல்லது ஊர் பெயராகவும் இருக்கும்.
அதேசமயம் அந்த எம்.எல் தோழர் எங்கே தலைமறைவாக இருக்கிறாரோ அதுக்கேற்ப அவர் ஒரு பெயர் வைத்துக்கொள்வார். அது மக்களோடு மக்களாக கலந்து அடையாளம் காணமுடியாத பெயராக இருக்கும். பெரும்பாலும் அப்படி ஒரு இடத்தில் ஒரு தோழர் தனக்காகச் சூட்டிக்கொண்ட தலைமறைவுப்பெயரே அவருடைய பெயராக நிலைத்துவிடும். போலீஸ் ரெக்கார்டிலும் அந்தப்பெயர் சிலசமயம் இருக்கும். எந்த தோழரும் புரட்சிப்பெயர் சூட்டிக்கொண்டு தலைமறைவாக இருக்கமாட்டார். எந்த தோழருடைய பெயரும் புரட்சி அடையாளத்துடன் இருக்காது. இருக்கவும்கூடாது.
மக்கள் நடுவே மாட்டுத்தரகராக வாழ்ந்தவர் துணைவன் கதையில் உள்ள தோழர். அவர் ‘செந்தோழன்’ ‘தீக்கனல்’ என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்ள மாட்டார். அவர் படித்தவரும் கிடையாது. மார்க்ஸிசமோ கோட்பாடோ தெரிந்தவர் கிடையாது. ஆனால் ஆத்மார்த்தமானவர். அவருடைய குறைவான அறிவும் அதேசமயம் அவருக்கு இருந்த நக்கல் நையாண்டியும் கதையில் உள்ளது. கோனார் என்று பெயர் இருப்பதைக் கண்டதுமே அது போலீஸ் போடும் பெயர் என்றுகூட தெரியாமல் நம்மவர் இருக்கிறார்கள். கதை பற்றிக் கருத்தெல்லாம் சொல்கிறார்கள்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் இன்றைக்கும் பல பழைய எம்.எல். தோழர்கள் வாழ்கிறார்கள். அதற்குள் அந்த இயக்கம், அந்த மனிதர்கள் பற்றி ஒன்றுமே தெரியாமல் ஆகிவிட்டது. சினிமா பார்த்து எம்.எல் தோழர்களெல்லாம் இடுப்பில் புல்லட்பெல்ட் தோளில் ரைஃபிள் செம்புரட்சிப்பெயர், அச்சுபோட்ட பாஷையில் டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு வாழ்வார்கள் என்று பத்திரிக்கையாளர்களே நினைக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் நிஜ எம்.எல் தோழர்கள் அப்படியே மறைந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
மற்றபடி நலம்தானே? கைதிகள் கதையும் ஒரு நல்ல படைப்பு. அதைவிட நல்ல கதைகள் உள்ளன.
ஆர்
அன்புள்ள ஆர்,
பிரேம் நசீர் ஒரு படத்தில் சி.ஐடி. ஆக வருவார். படம்பெயர் சிஐடி நசீர். முதல்காட்சியில் அவர் ‘ஞானொரு சி.ஐ.டீ!” என்று ரயிலில் மக்கள் நடுவே பாய்ந்து பாய்ந்து பாடுவார்.
நம் இதழாளர்களின் தரம் இந்நிலையில் இருக்கிறது. அதிலும் இக்கட்டுரையை எழுதியவரை எனக்கு தெரியும். தனிவாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்ததிலேயே மிகப்பெரிய அசடு அவர். அசடுகளுக்கே உரிய அளவற்ற தன்னம்பிக்கை கொண்டவர். எனக்கு அவர்மேல் பரிதாபம்தான். அத்தகையோருடன் எந்த உரையாடலுக்கும் நான் தயாராவதில்லை.
ஜெ
September 4, 2022
விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]
சுஜாதா அறிமுகம்
ஒரு நண்பர் சந்திப்பில் கேட்கப்பட்டது, இலக்கியவிமரிசன அளவுகோலின்படிக் கறாராகச் சொன்னால் தமிழில் சுஜாதாவின் இடம் என்ன? பலசமயம் இத்தகைய கேள்விகளுக்கு ஒரே வரிப்பதில்களைச் சொல்ல முடியாது. சொல்லிவிட்டு ‘இருந்தாலும்’, ‘மேலும்’ என்று சொல்லிச்சொல்லி விரிவாகக் வேண்டியிருக்கும். சொன்ன வரியை ‘ஏனென்றால்’ என்று மேலும் மேலும் விளக்க வேண்டியிருக்கும். ஆனாலும் அப்படிச் சொல்வதென்பது ஓர் இலக்கியவிமர்சகனுக்கு இன்றியமையாதது – அதன் மூலம் அவன் தன் சிந்தனைகளை தொகுத்துக் கொள்கிறான்.
சுஜாதா முதலாவதாக ஒரு நடையாளர் – stylist. தமிழில் அவரது முக்கியமான பங்களிப்பு அதுதான். ஒரு வகையில் அது ஆச்சரியமானது. தமிழில் சிற்றிதழ்களில் குறைவாக எழுதிய பலரது நடைகள் மெல்லமெல்ல தேய்வழக்குகளாக மாறி தேங்கின. சுஜாதா முன்னகர்ந்துகொண்டே இருந்தார், கடைசிக்கணம் வரை புதிதாக இருந்தார். வணிக இதழ்களில் எழுதிக்குவித்த ஒரு படைப்பாளி அப்படி இருந்தது ஒரு பேராச்சரியம். அவரது தேய்வழக்குகளை பிறர்தான் பின்பற்றினார்கள். அவர் கடைசியாக எழுதிய குறிப்புகள்கூட அப்போது பிறந்த நடையுடன் இருந்தன
மிகப்பரவலாக, மிகவும் வாசிப்புத்தன்மையுடன், நெடுநாட்கள் வந்துகொண்டிருந்தன சுஜாதாவின் எழுத்துக்கள். புறக்கணிக்கவே முடியாத படைப்பூக்கம் கொண்டவையாக இருந்தன. ஆகவே அவர் உருவாக்கிய பாதிப்பு மிகமிக அடிப்படையானது. நான் ஏற்கனவே சொன்னதுபோல நவீன எழுத்தாளர்களில் சுஜாதாவின் நடையின் பாதிப்பு கொஞ்சமும் இல்லாதவர் கோணங்கி மட்டுமே. சொற்றொடர் அமைப்புகள், சொற்றொடர்களை நடுவே வெட்டுதல் தாவிச்செல்லுதல் என அவரது ஏதேனும் ஓர் அம்சம் படைப்பூக்கத்துடன் எழுத்தாளர்களை பாதித்திருக்கும்.
சுஜாதாவின் படைப்புகள் எவை முக்கியமானவை? கண்டிப்பாக சிறுகதைகள்தான். தமிழ்ச்சிறுகதையின் எந்த ஒரு இறுக்கமான பட்டியலிலும் ஒரு சுஜாதா கதை இடம்பெறவேண்டும். சிறுகதைக்குரிய செவ்வியல் வடிவில் எழுதியவர் அவர். கனகச்சிதமான வருணனைகள், சுருக்கமான சரளமான உரையாடல்கள், மறக்கமுடியாத யதார்த்தம் மூலம் நம் கற்பனையில் வாழ்க்கையின் ஒரு துளியை நிறுவி விட முடிந்த அவரது சிறுகதைகள் எப்படியும் ஐம்பது கதைகள் உள்ளன.
அதற்குப்பின்? சுஜாதாவின் குறுங்கட்டுரைகள் முக்கியமானவை. தன் அப்பா அம்மாவைப்பற்றிய அவரது சித்தரிப்புகள், ஸ்ரீரங்கம் காட்சிகள், சரளமான சுயசரிதைக் குறிப்புகள் ஆகியவை தமிழிலக்கியத்தின் மிகவும் படைப்பூக்கம் கொண்ட பகுதிகள். பொதுவாக குறுங்கட்டுரைகள் நம் மொழியில் வலுவான இலக்கிய வகைமை அல்ல. ஆகவே அந்தத் தளத்தில் சுஜாதாவுக்கு ஒரு முன்னோடியின் இடம் உண்டு.
குறுங்கட்டுரைகள் நடையாலேயே தங்களை நிறுவிக்கொள்பவை. இறுக்கமான கச்சிதமான வடிவம் தேவைப்படுபவை. தகவல்கள் புதுமையாக அமையவேண்டிய கட்டாயம் உள்ளவை. கொஞ்சம் புனைவுக்குள் கால் நீட்டி நிற்க வேண்டியவை. சுஜாதாவின் குறுங்கட்டுரைகள் இக்குணங்கள் அனைத்தும் கொண்டவை. அவரது இயல்புக்கு மிகப்பொருத்தமான வடிவமாக அது இருந்தது.
அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உலகம் சுஜாதாவின் நாடகங்கள். சுஜாதா நாடகங்கள் எழுதவந்தபோது அமெரிக்க ஃபோர்டு ஃபவுண்டேஷன் தனியார் நாடக அமைப்புகளுக்கு நிதியை அள்ளி விட்டு நாட்டார் அரங்கையும் புராண அரங்கையும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இருந்தது. நாடகம் என்றாலே அது யதார்த்தமல்லாத கதைச் சித்தரிப்பும் செயற்கையான அசைவுகளும் குறியீடுகளும் கொண்டதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்நிலையில் முற்றிலும் யதார்த்தமான சுஜாதாவின் நாடகங்கள் சபாநாடகங்களின் உலகுக்குள் சென்று அமைந்தன. அங்கே ஏற்கனவே மெரினா போன்றவர்கள் எழுதும் சென்னைபிராமண நாடகங்களின் ஒருபகுதியாக இவையும் பார்க்கப்பட்டன.
ஆனால் சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கிறேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை.
ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அபப்டியே ‘ரத்தமும் சதையுமாக’ கண்முன் காண்பதில்லை.
இரண்டு, நாடகம் என்பது அடிப்படையில் நடிகனின் கலை. நம் முன் ஒரு மனிதன் நிற்கிறான், அவன் வழியாக ஒரு கதாபாத்திரம் நிகழ்கிறது. இதுவே நாடகத்தின் அடிப்படை அற்புதம். நவீன நாடகங்கள் தவறவிடும் அம்சம் இதுவே.
மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது.
இந்த மூன்று அம்சங்களிலும் சுஜாதாவின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை. அவரது நாடகங்களை டென்னஸி வில்லியம்ஸ், பீட்டர் ஷா·பர் ஆகியோரின் நாடகங்களுடன் இரு கோணங்களில் ஒப்பிடலாம். அவற்றைப்போலவே சுஜாதாவின் ஆக்கங்களும் மேடையில் இயல்பான வாழ்க்கையை சரளமாக நிகழ்த்திக் காட்டுகின்றன. உரையாடல் மூலமே கதையை இட்டுச்செல்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையை நம் முன் விரித்து வைக்கின்றன.
சுஜாதாவின் எழுத்தின் பலம் அவரது உரையாடல்கள். ஆகவே இவ்வகையான நாடகம் அவருக்கு மிக உவப்பானதாக அமைகிறது. உரையாடல் மூலமே கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்தை மிக நுட்பமாக அமைக்கிறார். மென்மையான நகைச்சுவை அவற்றை எப்போதும் ஆர்வத்துக்குரியவையாக ஆக்குகிறது. மேடையிலும் அந்நகைச்சுவை அலாதியான அனுபவத்தை அளிக்கிறது
பெரியவர்: நீங்களே இப்ப இந்த ஊதியத்தை சம்பாதிக்கிறதுக்கு எப்படி கடுமையா உழைச்சிருப்பீங்க…
கணபதி: அது வந்து… கடுமையா…
கல்யாணி: என்ன உழைச்சாரோ தினுசு தினுசா தினம் டிபன் கட்டிண்டு போவார்…பெசரட்டைக் கொண்டா அடையைக் கொண்டான்னு..
[பிரயாணம்]
மூன்று வசனங்களில் மூன்று கதாபாத்திரங்களின் இயல்புகள் வெளியாகிவிடுகின்றன. சுஜாதா எப்போதுமே நக்கலில் அபாரமாக வெளிப்படுவார். அது நாடகங்களை தொய்வில்லாமல் கொண்டுசெல்ல உதவுகிறது அவருக்கு. நாடகத்தில் மையச்சிக்கல் அவிழும் வரைக்கும் ரசிகர் கவனத்தை ஈர்த்து வைப்பது பெரிய சவால். தன் நகைச்சுவையின் சரளம் மூலம் அதை சாதிப்பது அவரது நாடகங்களின் வலிமை
பாலா: சிரிச்சா சும்மா கம்பி மத்தாப்பு போல இருக்கும்
பெர்னார்டு:பத்த வைச்சா? அப்றம், சொல்லுங்க…
பாலா:கருப்பாத்தாண்டா இருப்பா ஆனா நெருப்பா இருப்பாடா
பாலா :தமிழ்ல வெளயாடறிங்களே..
[பிரயாணம்]
சிறுகதைகளில் சுஜாதா பலவகைகளில் வெளிப்படுகிறார். நடுத்தரவர்க்கத்தின் இயலாமையும் சமாளிப்பும்தான் அவரது கணிசமான கதைகளின் கருக்கள். அறிவியல்கதைகள் விசித்திரமான குற்றக் கதைகள் என அவரது அக்கறைகள் பரந்தவை. ஆனால் நாடகங்களில் சுஜாதாவின் உலகம் மிகவும் குறுகி விடுகிறது. அவருக்கு பிற வடிவங்களை விட நாடகம் மிக அந்தரங்கமானதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனெறால் அவரது நாடகங்களில்தான் சுஜாதா தன் சாதியச் சூழலை குடும்பப்பின்னணியை நுட்பமாகக் கொண்டு வந்திருக்கிறார். கணிசமான அவரது நாடகங்கள் நடுத்தர வர்க்கத்து தென்கலை அய்யங்கார் பின்னணி கொண்டவை
நாடகங்களில் இன்னும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. சுஜாதா தன் அனேகமான நாடகங்களில் தோற்று காலாவதியாகும் ஒரு தலைமுறையை தன் கதைக்கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். பாரதி இருந்த வீடு, சிங்கமய்யங்கார் பேரன், டாக்டர் நரேந்திரனின் வினோதவழக்கு, அன்புள்ள அப்பா, ஊஞ்சல் போன்ற பெரும்பாலான நாடகங்களில் மையக்கதாபாத்திரம் புதிய காலகட்டத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. வீம்புடன் தன் காலாவதியான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. அல்லது மெல்லமெல்ல சமாதானம் செய்துகொள்கிறது. அந்த வீம்பின் பரிதாபம், அதைவிட அந்த சமரசத்தின் பரிதாபம். அதன் வழியாக அந்நாடகங்கள் மேலும் முக்கியமான வினாக்களை எழுப்புகின்றன.
சுஜாதாவின் நாடகங்கள் வாசிப்புக்கும் சரி, மேடைக்கும் சரி, எல்லாரையும் ஈர்த்து ரசிக்கவைக்கும் தன்மை கொண்டவை. தாது நாடகம் என்ற நிகழ்கலையின் தர்மம் என்றே நான் நினைக்கிறேன். மேலே சிந்திப்பவர்களுக்கு தமிழின் முக்கியமான விழுமிய நிராகரிப்பு நாடகங்கள் அவை என்பது புரியும். உண்மையில் எந்த அற -ஒழுக்க மதிப்பீடுகளிலும் ஆழமான நம்பிக்கை இல்லாத நிரூபணவாத அறிவியலாளனின் கறாரான பார்வை கொண்டவர் சுஜாதா. இந்நாடகங்களிலும் பழையன கழிதல் என்ற இயற்கைவிதியை குரூரமாக முன்வைத்து அன்பு பாசம் கடமை நன்றியுணர்ச்சி என்னும் மானுட உணர்ச்சிகளுக்கு வாழ்க்கையின் இயந்திர விதிகளில் ஒரு பங்களிப்பும் இல்லை என்ற தன் முற்றிலும் எதிர்மறையான கோணத்தை நிறுவி முடிக்கிறார்.
மிக வெளிப்படையாகவே இந்த அறநிராகரிப்பை நிகழ்த்தும் நாடகம் ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’ மிக யதார்த்தமாகச் செல்லும் நாடகம் ஒரு கட்டத்தில் நாடகமே கலைந்து நடிகர்கள் நாடகத்தையும் ரசிகர்களையும் நோக்கிச் சிரிக்கும் அபத்த நிலையை நோக்கி நகர்கிறது. பல கதைகளில் பாசம் போன்ற உணர்வுகளைக்கூட அவற்றின் நடைமுறைத்தன்மையுடன் வெளிப்படுத்தி காலியாக ஆக்கிவிடுகிறார் சுஜாதா.
வந்தவன் என்ற ஓரங்கநாடகத்தில் புதிய காலகட்டத்தின் பிரதிநிதியான இளைஞன் அதன் மையக்கதாபாத்திரமான ஓட்டல்காரரிடம் இதை திட்டவட்டமாகவே சொல்கிறான். சிறியதை பெரியது, எளியதை வலியது தின்னும். இந்த இயற்கை விதிக்கு முன் உன்னுடைய தர்மம் அறம் மனிதாபிமானம் எல்லாம் அர்த்தமில்லாதவை, காலத்தில் மூழ்கி மறைந்து போ என்கிறது அது. ‘நீ ரொம்ப நல்லவன். ஆனால் நான் உன்னிடம்தான் கொள்ளையடிக்க வேண்டியிருக்கிறது, ஏனென்றால் அதுதான் என்னால் முடியும்’ என்று சொல்லும் அக்கதாபாத்திரம் பலவகையிலும் சுஜாதாவின் எல்லா நாடகங்களிலும் ஓடும் மையத்தைச் சுட்டுகிறது
நாடகம் என்ற கலைவடிவில் சுஜாதாவின் நாடகங்களில் குறையும் அம்சம் என்றால் கவித்துவம் என்று சொல்லலாம். நாடகம் அதன் உச்சத்தில் தரிசனதளம் நோக்கி நகர்கிறது. ஒரு பிரபஞ்ச தரிசனம் ஒரு மேடையில் ஒருசில கதாபாத்திரங்கள் மற்றும் தருணங்கள் வழியாக வெளியாகவேண்டுமென்றால் அது உயர்கவித்துவமாகவே அமைய முடியும். அந்த தளம் நோக்கி நகரக்கூடிய சுஜாதா நாடகங்கள் எவையும் இல்லை. நாடகமேடையை வாழ்க்கை நிகழும் ஒரு துண்டுநிலமாக அவர் மாற்றுகிறார். பிரபஞ்சம் நிகழும் ஒரு குறியீட்டு வெளியாக ஆக்குவதில்லை.
ஆனால் அதையும் மீறி விபரீத கவித்துவம் ஒன்று அவ்வபோது மின்னிச் செல்கிறது. அதுவே பல நாடகங்களை தமிழின் முக்கியமான இலக்கியப்பிரதிகளாக ஆக்குகின்றது. நவீன கவிதை அடைந்த எதிர்கவித்துவம் என அதைச் சொல்லலாம்
லட்சுமி:…ஏன்னா ஏதாவது சாப்பிடறேளா?
சீனிவாசன் :சாப்பிடறேன்
லட்சுமி: என்ன சாப்பிடறேள்?
சீனிவாசன் :ரத்தம்
லட்சுமி: அம்மாடி!
[கடவுள் வந்திருந்தார்]
[சுஜாதாவின் நாடகங்கள். முழுத்தொகுப்பு. உயிர்மை பதிப்பகம். 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18 பக்கம் 822 விலை 500 ]
மறுபாதி [யாழ்ப்பாணம்] கவிதைக்கான இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை Aug 30, 2009
மறுபிரசுரம்
புதுமைப்பித்தன் ஆபாச எழுத்தாளரா?
1951-1952ல் மலேசியாவில் புதுமைப்பித்தன் பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது. புதுமைப்பித்தன் மறைந்து, அவருக்காக நிதி திரட்டும்போது ஒருவர் அவர் ஓர் ஆபாச எழுத்தாளர் என்று கட்டுரை எழுதினார். அதற்கு பலர் பதில் எழுதினர். அவ்விவாதம் மலேசியச்சூழலில் நவீன இலக்கிய அறிமுகம் நிகழக் காரணமாகியது
சியமந்தகம், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
சியமந்தகம் கட்டுரைத் தொகுதியை வாசித்தபோது உருவான பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. 105 கட்டுரைகள். தமிழின் வெவ்வேறு களங்களைச் சேர்ந்த மூத்தவர்களும் இளையவர்களுமான படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு கோணத்தில் உங்களையும் உங்கள் படைப்புகளையும் ஆராய்ந்திருக்கிறார்கள். எந்தக்கட்டுரையை குறிப்பிடுவது எதை விலக்குவது என்று தெரியவில்லை. சுரேஷ்பிரதீப், விஷால்ராஜா, சுனீல்கிருஷ்ணன்,சுசித்ரா எழுதியவை ஆழமான ஆய்வுக்கட்டுரைகள். நிர்மால்யா, போகன் சங்கர் , லக்ஷ்மி மணிவண்ணன் எல்லாம் உங்கள் தனிப்பட்ட ஆளுமையை எழுதியிருக்கிறார்கள். எல்லா கட்டுரைகளுமே காட்டுவது திகைக்கவைக்கும் விரிவுகொண்ட உங்கள் பர்சனாலிட்டியைத்தான். அற்புதமான தொகுப்பு
பி. ராஜீவ்
***
அன்புள்ள ஜெ,
சியமந்தகம் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். புத்தகமாக ஆக்கினால் இரண்டாயிரம் பக்கம்கூட வருமென நினைக்கிறேன். தமிழில் ஓர் எழுத்தாளரைப் பற்றி இத்தனைபெரிய ஆய்வடங்கல் வந்ததில்லை. வழக்கமாக பல்கலைக்கழகங்களில் செமினார்கள் வைத்து ஆய்வுக்கட்டுரைகளை திரட்டி இப்படி தொகுப்பார்கள். பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் நிறைய மேற்கோள்களுடன் இருக்கும். இவை எல்லாமே அற்புதமான வாசிப்பனுபவம் அளிக்கும் கட்டுரைகள். நிர்மால்யா அவர்களின் கட்டுரையில் குரு நித்யா ஒரு பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பதைச் சொல்லுமிடம் எனக்கு மெய்சிலிர்ப்பை அளித்தது. நம் கண்ணெதிரே ஒரு வரலாறு நிகழ்கிறது என்று நினைத்துக்கொண்டேன்
அரசு கிருஷ்ணசாமி
சியமந்தகம் என்னும் இணையப்பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள்.
அன்பெனும் விருது – கலாப்ரியாவிஷ்ணுபுரம் நாவலும் எனது வாசிப்பு அனுபவங்களும் – ந. முருகேச பாண்டியன்மயில் கழுத்தின் நீலம் – சுரேஷ்குமார இந்திரஜித்இணை பயணம் – சாரு நிவேதிதா‘இரவு’ எனக்கானது, நமக்கானது- பெருந்தேவிவரப்புயர்த்தி உயரும் கோன் – எம்.கோபாலகிருஷ்ணன்ஜெயமோகனின் சிறுகதைகள் : அகச்சித்திரமும் புறச்சித்திரமும்- பாவண்ணன்நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்ப…அருண்மொழி நங்கைநிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்ப… அருண்மொழி நங்கைநிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்ப… அருண்மொழி நங்கைஇந்திரா பார்த்தசாரதி வாழ்த்துஈர்ப்பின் விசை – யுவன் சந்திரசேகர்உடன் பிறந்தவர் – லக்ஷ்மி மணிவண்ணன்ஆசிரியரை அடைதல் – குக்கூ சிவராஜ்குரல்களின் நுண் அரசியலும் ஜெயமோகனும் – அமிர்தம் சூர்யா..நதிமுகம் – கார்த்திக் பாலசுப்ரமணியன்மழை மரம்! – சரவணன் சந்திரன்நீலியும் யானையும் – அ. கா. பெருமாள்மீறல்களின் ரீங்காரம்! – மணி எம்.கே. மணிபற்றுக பற்று விடற்கு – அஜிதன்ஜெயமோகனின் ஆளுமை – தேவதேவன்புலவர் பாடாது ஒழிக என் நிலவரை – நாஞ்சில் நாடன்அழகியல் உற்சவம் : ஜெயமோகன்- நாகரத்தினம் கிருஷ்ணாஜெயமோகன் எனும் ஞானபீடம் – சி.சரவணகார்த்திகேயன்கண்டுகொண்டவனின் வாசகங்கள் – ரவிசுப்பிரமணியன்.தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வகிபாகம்…ஜெயமோகனின் மீதான வியப்பு – சுப்ரபாரதிமணியன்மானிட சமுத்திரத்தை அவாவத் துடிக்கிற பெருங்கலைஞன் ஜ…திசைகாட்டிய வழிப்போக்கன் – நிர்மால்யாஇரவிற்குள் நுழைதல் – கவிதா சொர்ணவல்லிஜெயமோகன் – சில நினைவுகள் – கொடிக்கால் ஷேக் அப்துல்லாஜெயமோகனுக்கு 60 – காலம் செல்வம்மத்தகம் – ஒரு வாசிப்பு – தமிழ்ப்பிரபாஜெயமோகன் என்ற பெருவெடிப்பு – ஆர். என். ஜோ டி குருஸ்எழுத்தின் சவால்: ஜெயமோகனின் ஆரம்பகால படைப்புகள் – …“ஊட்டிக்கு போகாதீங்க உங்கள கொலப் பண்ணிடுவாங்க” – ச…என்றைக்கும் காந்தி – கலைச்செல்விசகாக்கள் கோபித்துக் கொள்ளாதபடி ஜெயமோகனைப் புகழ்வத…வெறியாட்ட வேலனும் ஜெயமோகனும் – கீரனூர் ஜாகிர்ராஜாஇந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல – இரா….ஜெயமோகனின் குமரித்துறைவியை முன்வைத்து- அ.வெண்ணிலாஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர் – பா. ராகவன்குறியீடுகளாகும் குறுநாவல்கள் – எம் ஏ சுசீலாஜெயமோகனின் எழுத்துக்களம் – முனைவர் ப. சரவணன்க’விதை’களை முளைப்பித்தவர் – அந்தியூர் மணிஅழியாத்தடம் – விஷால் ராஜாநித்தியத்தின் கலைஞன் – சிறில் அலெக்ஸ்நாடி நான் கண்டுகொண்டேன் – பிரபு மயிலாடுதுறைவிசும்பில் எழும் மீன் – நரேன்ஓயாப் பயணி – ஈரோடு கிருஷ்ணன்இருளுலகின் மனிதர்கள் – அரவின் குமார்மாமனிதன்! – செல்வேந்திரன்அப்பால் உள்ளவை – சுரேஷ் பிரதீப்எழுத்துவெளியில் எல்லைகளற்று பறக்கும் பறவை – ரா. செந்தில்குமார்…துதிக் ‘கை’ – கமலதேவிஆசிரியர் ஜெயமோகன் – ம. சதீஸ்வரன்ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன? – பாரதி பாஸ்கர்ஜெயமோகன் என் தோழன் – சித்ரா ரமேஷ்இருமொழிக் கலைஞன்- பி. ராமன்ஒரு நண்பனின் நினைவுக்குறிப்பு – தத்தன் புனலூர்ஜெயமோகனுக்கு வாழ்த்து – ஹெச். எஸ். சிவப்பிரகாஷ்எழுத்தறிவித்தோன்- கணேஷ்பாபு – சிங்கப்பூர்“ஏனென்றால் அது இருக்கிறது!” – பி. ஏ. கிருஷ்ணன்ஜெயமோகன் எனும் மாய எழுத்தாளர் – உமா மகேஸ்வரிஜெயமோகனின் சிறார் உலகம் – கே. ஜே. அசோக்குமார்ஜெயமோகன்: நம் உள்ளுணர்வின் குரல் – சிவானந்தம் நீலக…பூரணன் – போகன் சங்கர்ஜெயமோகனம்- கல்பற்றா நாராயணன்கோமரத்தாடி – அனீஷ் கிருஷ்ணன் நாயர்ஜெயமோகன் – ஓர் இயக்கம் – தூயன்இடுக்கண் களைவதாம் நட்பு – கருணாகரன்ஜெகந்நாதரின் தேர் – அ. முத்துலிங்கம்காடுறை அகமும் புறமும் – லாவண்யா சுந்தரராஜன்இறைவனும் ஆராதகனும் – சுசித்ராமாசில் வீணை – அகரமுதல்வன்திசை நிறைத்து எழுந்துயர்ந்த பேருருவம் – வேணு தயாநிதிபுறப்பாடு எனும் ஆத்ம கதை – சுனில் கிருஷ்ணன்வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை – ம…ஒளி பாய்ச்சிகள் – வெண்முரசின் துணைப் பாத்திரங்கள் …உரையாடும் ஜெ – சந்தோஷ் லாவோஸிஇலக்கியத்தின் ஈற்று வலி – ஜெயமோகனும் வெண்முரசும் -…எடுத்த பாதம் – சுபஸ்ரீ சுந்தரம்சித்திர முரசு – ஸ்ரீநிவாஸ் அறிவரசன்நிரந்தரமானவன் – இயகோகா சுப்பிரமணியம்உரைகளின் வழி நான் கண்ட ஜெ – ரம்யாநம் நீதியுணர்வின் எல்லைகள் – பாலாஜி பிருத்விராஜ்விவாதங்களும் துருவப்படுதலும் காவிய வாசிப்பும் – கா…சின்னமாகும் கழுகின் இரண்டு தலைகள் – ஜி.எஸ்.எஸ்.வி….வியாபாரியிலிருந்து வாசகனான கதை – வெண்முரசு செந்தில்தனிப்பெரும் மின்னல் – கடலூர் சீனுசொல்லாலின் புடையமர்ந்து – பழனி ஜோதிஞானசபை – சா. ராம்குமார்கருநீலத்தழல்மணி – வெண்முரசு பாடல் உருவான கதை – ராஜ…சாமானியனை சாதகனாக்கும் எழுத்து – செளந்தர்ஆரண்யகம் – ஏ. வி. மணிகண்டன்ஸ்வயமேவ ம்ருகேந்திரதா – சரவணன் விவேகானந்தன்கிறிஸ்துவுக்கு அணுக்கமான அண்ணன் – காட்சன் சாமுவேல்உலோகம் – இலட்சியவாதம் அடையமுடியாத சுவை – அனோஜன் பா…கரம் குலுக்கி தாள் பணிந்த பயணம் – அழகுநிலாகொற்றவை – நீலி எனும் தொல்சரடு – ரா. கிரிதரன்இணைப்பயணம்- சுதா & ஶ்ரீனிவாசன்தன்மீட்சி வாசிப்பனுபவம் – பிரசன்ன கிருஷ்ணன்பெருங்களிறின் வருகை – ம.நவீன்பீஷ்மன் – ஜீவ கரிகாலன்வைகல் எண் தேர் செய்யும் தச்சன் – க. மோகனரங்கன்வாக்குமூலம் – வாசு முருகவேல்ஞானப் பேரலையின் வருகைக்குப் பிறகு – லதாசந்திப்புகளில் பரிசு
நண்பர் ராம்குமார் வடகிழக்கு மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிகிறார். அங்கே முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் என் அறம் கதைகளின் மொழியாக்கமான Stories of the True வை சந்திப்புப் பரிசாக அளித்ததை படமாக அனுப்பியிருந்தார்.
ஒரு சிறந்த தொடக்கச் செயல் அது. இத்தகைய சந்திப்புகளில் தமிழ்ப்பண்பாட்டை அறிமுகம் செய்யும்பொருட்டு திரும்பத் திரும்ப பழைய செவ்வியல்நூல்கள் அல்லது அரசியல்வாதிகளின் எழுத்துக்களை அளிப்பதே வழக்கம். அவை பெரும்பாலும் எவராலும் வாசிக்கப்படுவதில்லை. ஆனால் நவீனமொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு சமகாலப் படைப்பு பெரும்பாலும் வாசிக்கப்படும். மிக எளிதாகச் சென்றடையும்.
சமகாலத் தமிழிலக்கியத்திற்கு எதையேனும் செய்யவேண்டுமென எண்ணம் கொண்டவர் செய்யக்கூடிய ஒரு நற்செயல். அப்படி ஒரு புதியநூலை அளிப்பவரின் மதிப்பும் உயரும். அறம் வரிசைக் கதைகள் நல்லெண்ணத்தை, உயர்விழுமியங்களை முன்வைப்பவை. நம் அலுவல்சந்திப்புகளில், நட்புச்சந்திப்புகளில் பரிசாக அறம் வரிசைக் கதைகள் அளிக்கப்படுமென்றால் அது தமிழிலக்கியம் அறிமுகமாவதற்கான சிறந்த வழியாக அமையும்
(உண்மையில் தமிழரல்லாதவர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே அந்நூல் வழங்கப்படலாம். பலர் ஆங்கிலத்திலேயே நன்றாக வாசிக்கும் திறன் பெற்றவர்கள்)
Stories of the True : Translated from the Tamil by Priyamvadaசாரு, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. இது எந்தவகையான விவாதங்களை உருவாக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் தமிழிலக்கியத்தின் சரித்திரத்தைப் பார்த்தால் எப்போதுமே ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். மாறுபட்ட துருவங்களுக்கு ஒருவர்மேல் ஒருவர் ஆர்வம் இருந்துகொண்டிருக்கிறது. சுந்தர ராமசாமிக்கு எப்படி ஜி.நாகராசன் மேல் ஆர்வமிருந்ததோ அப்படி.
நவீன இலக்கியமென்பது ஒரு குறிப்பிட்ட அழகியலோ மதிப்பீடோ கொண்டது கிடையாது. அதில் எல்லாவகையான அழகியலுக்கும் மதிப்புண்டு. அது வைத்திருக்கும் அளவுகோல் அதற்குரிய வடிவை அது அடைகிறதா, அது என்ன விளைவை உருவாக்குகிறது என்பதுதான். சாரு ஒரு rupture ஐ உருவாக்கும் எழுத்தாளர். அவருடைய எழுத்து ஒரு மாதிரியான menace என்றுதான் சொல்லவேண்டும். நம் உறைந்துபோன கலாச்சாரத்துக்கு அவர் ஒரு தொந்தரவு. அதுவும் கலையின் ஒரு பணிதான்.
ஜி.சுந்தரராஜன்
***
அன்புள்ள ஜெ,
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது எதிர்பார்த்ததுதான். 2016ல் சிங்கப்பூரில் சந்தித்தபோதே அவருக்கு விருது வரிசையிலிருப்பதாகச் சொன்னீர்கள். சாருவின் எழுத்து தொடங்குவது புதுமைப்பித்தனின் விபரீத ஆசை என்ற கதையில் (அதைவைத்துத்தான் மலேசியாவில் ஒரு பெரிய சர்ச்சையே நடைபெற்றது) அதன்பிறகு கரிச்சான்குஞ்சு. ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ் என்று ஒரு மரபு உண்டு. அந்த மரபுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.
கே. முருகபூபதி
***
September 3, 2022
திராவிட இயக்கமும் மறக்கப்பட்ட பிள்ளைகளும்
அன்புள்ள ஜெ
கே.என்.சிவராஜ பிள்ளை பற்றிய விக்கி பதிவில் அவர் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்று இருக்கிறது. ஆனால் அப்பதிவில் எங்குமே அவர் திராவிட இயக்கத்துடன், அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டியுடன் தொடர்பில் இருந்ததாக இல்லை. அது ஒரு தவறான வரி என நினைக்கிறேன். அத்துடன் கே.என்.சிவராஜ பிள்ளை எஸ்.வையாபுரிப் பிள்ளைக்கு அணுக்கமானவர். இருவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள். சொந்தக்காரர்கள் என்றும் நினைக்கிறேன். வையாபுரிப்பிள்ளை திராவிட இயக்கத்துக்கு எதிரானவர். கே.என்.சிவராஜ பிள்ளையும் காங்கிரஸ் காரராக இருக்கவே வாய்ப்பதிகம். அவர் பெயரை திராவிட இயக்கத்தவரும் சொல்வதில்லை.
ஆர்.எஸ்.ராமானுஜம்
அன்புள்ள ராமானுஜம்,
இந்தவகையான எளிமையான பாகுபாடுகள் அறிஞர்களை புரிந்துகொள்ள பெரும் தடையானவை. டி.கே.சிதம்பரநாத முதலியார் ஜஸ்டிஸ் கட்சி ஆதரவாளர். ஆனால் உறுதியான சிவபக்தர், கம்பராமாயண ரசிகர், ராஜாஜிக்கு அணுக்கமானவர். எஸ்.வையாபுரிப் பிள்ளை டி.கே.சிதம்பரநாத முதலியாரின் அவையில் இருந்தவர். ஆனால் ராஜாஜிக்கு அணுக்கமானவர் அல்ல.
வையாபுரிப் பிள்ளை திராவிட இயக்கத்துக்கு எதிரானவர் அல்ல. வையாபுரிப் பிள்ளைக்கு ஓர் ஆய்வுமுறைமை இருந்தது. அது முழுக்கமுழுக்க செவ்வியல் வரலாற்றாய்வு – இலக்கிய ஆய்வு முறைமை. அதன் மூன்று அடிப்படைகள்,
அ. நேரடியான தொல்சான்றுகளை கொண்டு மட்டுமே எதையும் முடிவுசெய்வது.
ஆ. ஓர் ஆய்வுமுடிவு உலகளாவிய ஆய்வுகளுடன் ஒத்துப்போகவேண்டும் என்று உறுதியாக இருப்பது.
இ. தனிப்பட்ட பெருமிதங்கள் எதையும் ஆய்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ளாமலிருப்பது.
வையாபுரிப் பிள்ளை அன்று திராவிட இயக்க அறிஞர்கள் வட இந்திய அறிஞர்களுக்கு ஏட்டிக்குப்போட்டியாக தமிழக நூல்களின் காலகட்டத்தை பற்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டுசென்றதை ஏற்கவில்லை. தன்னுடைய ஆய்வுக்கணிப்பை முன்வைத்தார். அவருடைய கணிப்புகளில் சில பிற்காலத்தில் திருத்தப்பட்டன என்றாலும் இன்று அவருடைய காலக்கணிப்புகளும், அதையொட்டிய காலக்கணிப்புகளுமே பொதுவாக ஏற்கப்படுகின்றன.
தேவநேயப் பாவாணர் அல்லது கா. அப்பாத்துரை சொன்னதுபோல தொல்காப்பியம் பத்தாயிரம் ஆண்டு தொன்மையானது, சங்க இலக்கியம் எட்டாயிரமாண்டு தொன்மையானது என்றெல்லாம் எவரும் இன்று சொல்வதில்லை. வட இந்திய ஆய்வாளர் பலர் புராணம் வரலாறு இரண்டையும் குழப்பிக்கொண்டு மகாபாரத காலகட்டத்தை வெண்கலக் காலத்துக்கு பின்னால்கொண்டுசென்றதையோ, பத்தாயிரம் இருபதாயிரம் என காலக்கணிப்பு செய்த அபத்ததையோ எஸ்.வையாபுரிப்பிள்ளை ஏற்றதில்லை.
கே.என்.சிவராஜபிள்ளை இலக்கியங்களை காலக்கணிப்பு செய்வதில் வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுமுறைமையையே சார்ந்திருந்தார். மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையும் அதே முறைமையைச் சார்ந்தவரே. கே.என்.சிவராஜ பிள்ளையின் ஆய்வுமுறைமையையும் அவர் நூல்களின் உள்ளடக்கத்தையும் சுருக்கமாக அப்பதிவிலேயே காணலாம்.
கே.என்.சிவராஜ பிள்ளை திராவிட இயக்கத்தவர் என்று அப்பதிவில் இல்லை. ஆனால் அவர் திராவிட இயக்கத்தின் அறிவார்ந்த அடிப்படைகளை உருவாக்கியவர்களில் ஒருவர். அப்பதிவிலேயே திருவனந்தபுரத்தில் நிகழ்ந்த ஒரு விவாதத்தில் ராஜாஜி தலைமையில் நிகழ்ந்த ஒரு அரங்கில் ஒருவர் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்துப் பேசியபோது கே.என்.சிவராஜ பிள்ளை அதற்கு அளித்த விரிவான மறுப்புரையும், தொடர்ந்து அது நூலாகியதும், அந்நூலை ஒட்டி நூல்கள் பல வந்ததும் குறிப்பிடப்படுகிறது. தமிழின் தனித்தியங்கும் தன்மை, பண்பாட்டுத் தொன்மை ஆகியவற்றை முன்வைத்து தொடக்ககால ஆய்வுகளைச் செய்தவர் கே.என்.சிவராஜ பிள்ளை.
தேவநேயப் பாவாணர்அக்காலகட்டத்தில் திராவிட இயக்கம் உருவாகவில்லை. தமிழின் தனித்தன்மையை முற்றாக மறுக்கும் குரல்கள் இங்கே ஓங்கி ஒலித்தன. அக்குரல்களுக்கு எதிராக ஆய்வுசெய்து தரவுகளையும் வரலாற்றுச் சித்திரத்தையும் முன்வைத்த வி.கனகசபைப் பிள்ளை, கே.என்.சிவராஜ பிள்ளை, மனோன்மணியம் பெ சுந்தரம் பிள்ளை போன்றவர்களே திராவிட இயக்கத்தின் அறிவடிப்படைகளை உருவாக்கியவர்கள்.
ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் திராவிட இயக்கம் பின்னர் அரசியல்சார்ந்து வேறுதிசைக்குச் சென்றது. தமிழை காட்டுமிராண்டி மொழி என பழிக்கும் நிலையை அடைந்தது. சி.என் அண்ணாத்துரை வழியாக மீண்டும் அதில் தமிழ்ப்பற்றுக்கு இடம் அமைந்தது. அது வேறு வரலாறு.
ஜெ
டி.கே.சிதம்பரநாத முதலியார் தேவநேயப் பாவாணர் கா. அப்பாத்துரை மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை கே.என்.சிவராஜ பிள்ளை எஸ்.வையாபுரிப் பிள்ளைJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



