Jeyamohan's Blog, page 722
September 3, 2022
நீலகேசி – எத்தனை அடுக்குகள்!
நீலகேசி தமிழின் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. நீலகேசியின் கதை வேறு வடிவில் சைவமரபிலும் உள்ளது. ஆனால் கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் நீலகேசி ஒரு நாட்டார் தெய்வம். அது மெல்ல பத்ரகாளியும் ஆகியிருக்கிறது. சமணத்திற்கும் இந்த நாட்டார் மரபுக்குமான ஊடாட்டம் இப்பதிவுடனும், இதனுடன் இணைந்த பதிவுகளுடனும் ஒரு வலைபோல் விரிகிறது. கொஞ்சம் கற்பனை கொண்டவர் ஒரு நாவலாகவே விரித்துக்கொள்ள முடியும். நம் பண்பாட்டின் பரிணாமத்தையே உணர முடியும்
நேருவும் பௌத்தமும்
நலமா? ஆகஸ்டு மாதம் “நீலம்” பத்திரிக்கை இதழில் “நேருவும் பௌத்தமும்” என்ற என் கட்டுரை வெளியானது. தற்போது அதனை மீண்டும் பொது வாசகர்களுக்கென என் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். இப்படி பொது தளத்தில் வெளியிட உங்கள் தமிழ் விக்கி தளம் ஒரு ஊக்கம். அது ஏன் அப்படி என்பது பற்றி தனியாக இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன்.
நேருவுக்குப் பள்ளிக் காலமுதல் பிரதமராக இருந்த காலம் வரை புத்தரின் மீதும், பௌத்தத்தின் மீதும் அவற்றின் நீட்சியாக அசோகரின் மீதும் பெரும் ஈர்ப்பு உண்டு. தான் நிர்மானிக்க நினைத்த அறிவியல் பூர்வமான மத பூசல்களற்ற இந்தியாவுக்கு பௌத்தம் ஓர் தத்துவ அடித்தளம் என்று கருதினார் நேரு. அந்த தத்துவார்த்த அடித்தளத்தை செயல்படுத்துவதற்கு அசோகரை முன் மாதிரியாக கொண்டார். நேரு பிரதமராக இருந்த போது மிக முக்கிய பௌத்த மீட்டெடுப்புகள் நிகழ்ந்தன. அவற்றின் முக்கியத்துவத்தையும் அதில் நேருவின் பங்கையும் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இக்கட்டுரை முதலில் நீலம் இதழில் வெளிவந்தது. இப்போது என் தளத்தில் சில மாற்றங்களுடன் வெளிவருகிறது.
பௌத்தத்தை நேரு எப்படி இந்தியாவின் சக தேசங்களோடு இணைக்கு மென் – வெளியுறவுக் கொள்கையாக, அப்படி ஒரு வார்த்தை மேற்கில் தோன்றும் முன்பே, கையாண்டார், பௌத்தத்தின் மீதான அவர் பற்றுதல் ஆகியவற்றை இக்கட்டுரை பேசும். நேரு என்றாலே ஏதேனும் சர்ச்சை உண்டே. நேரு ராகுல சாங்கிருத்யாயனுக்கும் அம்பேத்கருக்கும் உதவவில்லை என்ற சர்ச்சைகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறேன்.
நேரு இறை மறுப்பாளர், இந்திய பண்பாட்டு கொடைகளை மறுதலிப்பவர் போன்ற தவறான சித்தரிப்புகளுக்கு இக்கட்டுரை பதில் சொல்லும். நேரு பற்றி தமிழில் இம்மாதிரி கட்டுரை அரிதென்றே சொல்வேன்.
கட்டுரைக்கான சுட்டி https://contrarianworld.blogspot.com/2022/08/blog-post.html
அரவிந்தன் கண்ணையன்
***
ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்: விஷால் ராஜா
முதிரா இளமையில் வீட்டை விட்டு வெளியேற துடிக்கிறோம். உலகம் வீட்டுக்கு வெளியே இருப்பதாகத் தோன்றுகிறது. அப்புறம் சீக்கிரமே நமக்கென்று ஒரு வீடு கட்டி அமைந்துவிட விருப்பம் வருகிறது. அதன் பாதுகாப்பை நாடத் தொடங்குகிறோம்.வீடு கட்டுவது இந்த உலகின் ஆசைகளோடு மனிதன் செய்து கொள்ளும் நிபந்தனையில்லாத உடன்படிக்கை. மனிதனுடைய உலகியல் நாட்டம், வாழும் இச்சை, உரிமைக் கோரல் இவை அனைத்தின் பரு வடிவமாகவும் இருக்கிறது வீடு. அதனால்தான் எந்த கனவையும் அது எளிதில் உட்கொண்டு செரித்துவிடுகிறது.
ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்: விஷால் ராஜாசாரு, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது சிறப்பான செய்தி. தமிழில் எழுதிவரும் ஓரு முக்கியமான எழுத்தாளர். அவருடைய எழுத்தை ஒரு தனிக்கதை, ஒரு தனி நாவல் என எடுத்துக்கொள்ள முடியாது. ஒட்டுமொத்தமாக அவர் உருவாக்கும் ஒரு உலகம் உண்டு. அதுதான் அவர் எழுதுவது. அங்கே கற்பனையும் நிஜமும் கலந்து கிடக்கின்றன. விட்டேத்தியான நிலையும் மிகையான உணர்ச்சிநிலையும் ஒரே சமயம் உள்ளன. அவரைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. அவரை இதுவரை எழுதப்பட்ட விசயங்களைக்கொண்டு புரிந்துகொள்ள முடியாது. அவரை புரிந்துகொள்ள நாம் இலக்கியம், அழகியல், தர்மம் என்றெல்லாம் என்னென்ன நினைக்கிறோமோ எல்லாவற்றையும் கொஞ்சம் கலைத்துக்கொள்ளவேண்டும். அதன்பின் அவரிடம் பேசமுடியும். சாருவிற்கு அளிக்கப்படும் இவ்விருதுக்கு என் பாராட்டுக்கள்.
கரசூர் பத்மபாரதிக்கு அளிக்கப்பட்ட விருது மாதிரியே இதுவுமொரு முக்கியமான விருது. வேறொரு களத்துக்குள் செல்வது மாதிரியான விருது.
என்.செல்வக்குமார்
***
அன்புள்ள ஜெ
நான் சாரு நிவேதிதாவின் படைப்புக்களைச் சரியாக படிக்கமுடியாமல் அவரைப்பற்றிச் சொல்லப்படும் அக்கப்போர்களை மட்டுமே படித்து அதைப்பேசிக்கொண்டிருந்தவன். பிறழ்வெழுத்து என்று நீங்கள் எழுதிய கட்டுரைதான் அவர் எழுதுவது என்ன ஜானர், அவருடைய சாராம்சமான விஷயங்களெல்லாம் என்னென்ன என்று எனக்குக் காட்டியவை. அந்தக் கட்டுரையின் வெளிச்சத்தில் அவருடைய எக்ஸைல் நாவலை வாசித்தேன். சிரிப்பு நையாண்டி என செல்லும் அந்த நாவல் நம்முடைய sanity யுடன் விளையாடுவது என்று புரிந்துகொண்டேன். முக்கியமான ஒரு தொடக்கம் அது. விருதுக்கு வாழ்த்துக்கள்.
ஆர்.என்.கிருஷ்ணா
***
September 2, 2022
புத்தகக் கண்காட்சியில் மேடைப்பேச்சாளர்கள்
ஒரு நண்பர் இந்த முகநூல் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு நான் கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்று கோரியிருந்தார். பதிப்பாளரும் கூட. ஆனால் அவர் பெயர் சொல்லப்படக்கூடாதாம்
*
ஈரோடு புத்தகக் காட்சி ஆரம்பிக்கிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய புத்தகக் காட்சி என்று சொல்லப்படுவதுண்டு.பேச்சாளர்கள் பட்டியலைப் பார்த்தேன். ஒரு எழுத்தாளர் பெயர் இல்லை. வழக்கம் போல் சிவகுமார் நூற்றியெட்டு பூக்களின் பெயர்களை மூச்சுவிடாமல் ஒப்பிக்கிறார்.
போகன் சங்கர்
கரூர் புத்தக கண்காட்சியில் சிறப்புரை வழங்கப்போகும் பின் நவீனத்துவ மாய யதார்த்தவாத எழுத்தாளர்கள்.
சாலமன் பாப்பையா,
செந்தில் கணேஷ் & இராஜலட்சுமி, மருத்துவர்
சிவராமன், மல்லூரி,
மோகனசுந்தரம்,
கோபிநாத், லியோனி & சுகி சிவம்
ராஜீவ் பாஸ்கரன்
மன்னார்குடி புத்தகத் திருவிழா குறித்து ஒரு செய்திக் குறிப்பு வாசிக்க நேர்ந்தது. தன்னுடைய சகாக்களான தஞ்சை நாகைக்கு சற்றும் சளைத்தது அல்ல திருவாரூர் என்பதை நிரூபிக்கும்படியான சிறப்பு அழைப்பாளர்கள். எனக்கென்னவோ செல்வராகவன் ஆயிரம் வருடங்களாக உலகத் தொடர்பே இல்லாத இருண்ட சோழர் வாழ்க்கையை காட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரொம்ப மெனக்கெட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. அவர் நேரடியாக தஞ்சைக்கும் திருவாரூருக்கும் வந்திருக்கலாம். டெல்டா வாசிகள் இன்றுவரை எந்த அப்டேட்டும் இல்லாமல்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மன்னார்குடி மதன்கௌரின்னு ரைமிங்கா வந்ததால கூப்பிட்டிருப்பாங்களோ… அடுத்தடுத்து பப்ஜி மதன், பாரிசாலன், டிடிஎஃப் வாசன் என யூடியூபர்களாக கூப்பிடுவார்கள் போலிருக்கிறது. அதற்கடுத்து டிக்டாக் பண்ணுகிறவர்கள் இன்ஸ்டா ரீல்ஸ் போடுகிறவர்களை எல்லாம் கூட புத்தக கண்காட்சிகளுக்கு பேச அழைக்கலாம்.
அப்ப எழுத்தாளர்கள்?
எழுத்தாளர்களா? அவர்களுக்கும் புத்தகங்களுக்கும் என்ன சம்மந்தம்?
சுரேஷ் பிரதீப்
*
இக்குறிப்புகளிலுள்ள ஆதங்கம், கண்டனம் நியாயமானது. நானும் அவ்வுணர்வை பகிர்ந்துகொள்கிறேன்.
ஆனால் நம் தமிழக உண்மையை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு தேசமாக இந்தியா வாசிப்புக்கு எதிராக விரைவாகச் சென்றுகொண்டிருக்கிறது. செல்பேசி அடிமைகளாலான தேசம். வாசிப்பு ஒரு மாபெரும் சமூகச் செயல்பாடாக இருந்த கேரளத்திலேயே இதுதான் நிலைமை. இன்று கேரள இடதுசாரி வட்டத்திலேயே நூல்களைப் பற்றிய விவாதம் ஏதுமில்லை. டிரோல் காணொளிகள், மீம்களே அவர்களுக்கும் ஆயுதமாக உள்ளது.
கேரளத்தில் வாசிப்பியக்கத்தை நிலைநாட்டியவர் இ.எம்.எஸ். இன்று பார்க்கையில் அவர் சமகாலத்து இலக்கியப் படைப்புகளில் முக்கியமான அனைத்துக்குமே நீண்ட மதிப்புரைகள் எழுதியிருக்கிறார் என்பது, மிகமிகக் கொந்தளிப்பான அரசியல்சூழலில் தேசத்தின் இடதுசாரி இயக்கத்தையே வழிநடத்திச் செல்லும்போதுகூட அதை தவறவிடவில்லை என்பது, ஆச்சரியமாக உள்ளது. இன்று அங்கே அப்படிப்பட்ட இடதுசாரிகள் எவருமில்லை. இலக்கியம்பேசும் இடதுசாரி மேடைப்பேச்சாளர் சுனில் இளையிடம் தவிர வேறெவருமில்லை.
தமிழகச்சூழல் எப்போதுமே பரிதாபகரமானது. இங்கே தமிழ்நூல்களை, ஆசிரியர்களை மேடையிலோ கட்டுரைகளிலோ சுட்டிக்காட்டும் ஓர் அரசியல்தலைவர் ராஜாஜிக்குப்பின் இருந்ததில்லை. ராஜாஜி மட்டுமே இலக்கியவிழாக்களில் எழுத்தாளர்களை முன்னிறுத்தியிருக்கிறார். கல்கியும் டி.கெ.சிதம்பரநாத முதலியாரும் கி.வா.ஜகந்நாதனும் எல்லாம் அவரால்தான் கவனம் பெற்றனர். அதன்பின் நமக்கு இலக்கிய அறிமுகம் செய்யும் முதன்மை ஆளுமைகளே இல்லை.
நம் இடதுசாரித் தலைவர்கள் புகழ்மிக்க பொதுஆளுமைகள் அல்ல. இருந்தாலும் அவர்கள் பேசியிருக்கலாம், பேசுவதில்லை. ப.ஜீவானந்தமும், பாலதண்டாயுதமும் கல்யாணசுந்தரமும் நவீன இலக்கியத்தை கவனித்ததில்லை. சங்கரய்யாவோ நல்லகண்ணுவோ, வரதராஜனோ இலக்கிய அறிமுகம் கொண்டவர்கள், எதையேனும் வாசிப்பவர்கள் என்பதற்குச் சான்றே இல்லை. அவர்களின் கட்சிசார்ந்த எழுத்தாளர்களையே அவர்கள் பேசுவதில்லை.
இச்சூழலில் இங்கே வாசிப்பு ஓர் சமூகஇயக்கமாக எழவே இல்லை. நான்கு பெருநகரங்களுக்கு வெளியே மக்களுக்கு புத்தகம், வாசிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. கேட்டுப்பாருங்கள் குமுதம் அல்லது ராணி எவ்வளவு விற்கிறது என்று. நாகர்கோயிலிலேயே அதுதான் நிலைமை. நம் சூழலிலேயே எதையேனும், கவனியுங்கள் எதையேனும், வாசிக்கக்கூடிய எவரை எப்போது சந்தித்தோம் என நினைவுகூர்ந்து பாருங்கள்.
இன்று வாசிப்புக்கு எதிரான சூழல் மேலும் வலுப்பெற்றுள்ளது. நம் ஒட்டுமொத்தக் கல்விமுறையே வாசிப்புக்கு எதிரானது. நம் ஆசிரியர்கள் எழுத்தை, வாசிப்பை மனமார வெறுப்பவர்கள். நம் அரசியலுக்கு அடிப்படை வாசிப்பு கூட தேவையில்லை. நம் அறிவுச்சூழலிலேயே இன்று காணொளி அறிஞர்கள்தான் மிகுதி.
இச்சூழலில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. அங்கே எப்படியாவது கொஞ்சபேரை கொண்டுவந்தாகவேண்டும். சாலமன் பாப்பையாவோ, சுகி சிவமோ, திண்டுக்கல் லியோனியோ கொஞ்சம் கூட்டத்தை கொண்டுவந்தால் நல்லது. வருபவர்களில் 2 சதவீதம்பேர் நூல்கள் வாங்கினாலே நஷ்டமில்லாமல் தப்பித்துவிடலாம் என்பதே நிலைமை.
குறைந்தபட்சம் இன்று இந்த மேடைப்பேச்சாளர்கள் அவ்வப்போது நாலைந்து எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். கு.ஞானசம்பந்தம், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர் எல்லாம் இலக்கிய அறிமுகமாக சில சொல்கிறார்கள். தமிழகத்தில் வேறு எவர் பேசுகிறார்கள்?
ஆகவே அவர்கள் வருவதை அத்தனை காழ்ப்புடன் நினைக்கவேண்டியதில்லை. வேண்டுமென்றால் இலக்கியவாதிகள் சிலரையும் விழாக்களுக்கு கூப்பிடும்படி சொல்லலாம். குறைந்தது ஒரு அரங்காவது எழுத்தாளர்களுக்கு ஒதுக்கும்படி கோரலாம். அவ்வளவுதான் நமக்கு இன்றைய தமிழ்ச்சமூகத்தில் மெய்யாகவே இடம். அதற்கு அப்பால் நாம் எப்படிக் கோரமுடியும்?
அண்மையில் ஒரு செய்தி. ஒரு புத்தகவிழாவுக்கு நவீன எழுத்தாளர்களை அழைக்கலாமென அதை ஒருங்கிணைக்கும் அதிகாரி மாவட்டநிர்வாகப் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரியிடம் சொன்னபோது ‘யார் அவர்கள்?’ என்று அவர் கேட்டாராம். தமிழ் விக்கியின் தமிழ், ஆங்கிலப் பதிவுகளைக் காட்டியதும் அவர்கள் முக்கியமானவர்கள் என்று ஒப்புக்கொண்டாராம். அதையும் நாமே எழுதிக்கொள்ளும் நிலைமையில்தானே இருக்கிறோம்?
என் நண்பர் சிவனி சதீஷ் தக்கலையில் தன் தனிமுயற்சியால் ஒரு புத்தகவிழாவை நடத்தி முடித்திருக்கிறார். தக்கலையில் ஒரு புத்தகவிழாவா என்னும் திகைப்பு எனக்கு இன்னும் நீங்கவில்லை. அங்கே நூல்களை வெளியிட்ட, பரிசுகள் பெற்ற எந்த எழுத்தாளரையும் எனக்கு தெரியவில்லை. அனைவருமே புதியவர்கள். ஆனால் அவர்கள் வரட்டும், எழுதட்டும். வாசிப்பு ஓர் இயக்கமாக நிகழட்டும்
புத்தக விழாக்கள் நடக்கட்டும். அது இங்கே அறிவியக்கத்தின் கடைசி மூச்சு. மேடைப்பேச்சாளர்கள் அதன் ஆக்ஸிஜன் என்றால் அவ்வாறே ஆகட்டும்.
ஜெ
***
துணைவன்
விடுதலை என் சிறுகதை ஒன்றிலிருந்து விரித்தெடுக்கப்பட்ட கதை. பொதுவாகச் சிறுகதைகளே சினிமாவுக்கு உகந்தவை. எம்.டி.வாசுதேவன் நாயரின் புகழ்பெற்ற திரைக்கதைகளெல்லாம் சிறுகதைகளை அடியொற்றியவையே. நாவலை சினிமாவாக ஆக்குவது கடினம். அதை பல மடங்கு சுருக்கவேண்டும். அதன் உச்சங்களை, முக்கியமான கதைமாந்தரை, கதைக்களத்தின் ஒரு பதியை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். சிறுகதையில் ஒரே உச்சம்தான் இருக்கும். களமும் கதைமாந்தரும் எல்லாம் குறைவானவை. உண்மையில் சினிமா என்பது ஒரு சிறுகதை, அல்லது குறுநாவல். ஆனால் வெந்து தணிந்தது காடு ஒரு நாவலின் கட்டமைப்பு கொண்டது.
விடுதலை நம் சூழலில் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு கதை. மிக எளிமையான ஒரு வினாதான் அதிலுள்ளது. இங்கே மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் காவலர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்களும் அந்த மக்களிடமிருந்தே எழுபவர்கள். அவர்களும் வறுமையை, ஒடுக்குமுறையை, சுரண்டலை அறிந்தவர்கள். அவர்களுக்கு என்ன ஆகிறது?
நான் திருப்பத்தூரில் இருக்கையில் அறிந்த இடதுசாரிக்குழுத் தலைவர் ஒருவரின் நையாண்டியும் , அப்பாவித்தனமும் கலந்த பேச்சு என் நினைவில் இன்றுமுள்ளது. மிக அடிப்படைக்களத்தில் இருந்து வந்தவர். கற்றவரல்ல, ஆகவே கற்றவரிடம் இல்லாத நம்பிக்கையும் தீவிரமும் அவரிடமிருந்தது. அவரையும் நான் தர்மபுரியில் பணியாற்றியபோது நேரில் சென்று அறிந்த வாச்சாத்தி தாக்குதலின் சித்திரங்களும் கலந்து உருவானது விடுதலை கதை
என் இணையப்பக்கத்தில் நான் எழுதிய எல்லாமே இருக்கும். என் பயணங்கள் அவற்றில் தெரியும். ஒரு நண்பருக்கு அளித்த வாக்குறுதிக்காக இரண்டு பகடிக்கட்டுரைகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. துணைவன் இணையப்பக்கத்தில் முன்பு வெளியாகியது. சினிமாவுக்காக மறைக்கப்பட்டது. முன்பு விகடனில் வெளியானது அது. தொகுப்புகளிலும் அது இல்லை. சினிமாவுக்குப்பின் வெளியிடுவேன்.
லக்ஷ்மி – அடக்கம்!
லக்ஷ்மி நாவல்களை வாசிக்காத பெண்களை அக்காலத்தில் காண்பதே அரிதாக இருந்தது. தொடர்கதைத் தொகுதிகளாக அவர் நாவல்கள் திண்ணைகள் தோறும் கிடந்தன. ஆனால் அந்தவகையான எழுத்தாளர்களில் அவரே நல்லூழ் கொண்டவர். அவர் சாகித்ய அக்காதமி விருதுவரை சென்றார். வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், விமலா ரமணி, ரமணி சந்திரன் என எவருக்கும் கிடைக்காதது.
அதற்குக் காரணம் லக்ஷ்மி மரபு மீறவில்லை. ‘அடக்கமான எழுத்து’ என அவர் அன்று கொண்டாடப்பட்டார். மற்ற பெண் எழுத்தாளர்கள் எழுதச்சாத்தியமான ’அடக்கத்தின்’ எல்லை வரைச் சென்று கொஞ்சம் மீறி திரும்பி வந்தவர்கள். அந்த மீறலே கலையாகவும், விடுதலையாகவும் ஆகிறது என்றாலும் லக்ஷ்மியின் மீறலின்மையே அவரை வெற்றிகரமானவராக ஆக்கியது.
லக்ஷ்மி
லக்ஷ்மி – தமிழ் விக்கி
நேரு மதிப்பீடுகள்
தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன்
அன்புள்ள ஜெ
ஸ்ரீதர் சுப்ரமணியம் பற்றிய உங்கள் குறிப்பில் அவர் நேரு யுகத்து மதிப்பீடுகளை முன்வைப்பவர் என்று எழுதியிருந்தீர்கள். அதை ஒரு விமர்சனமாக முன்வைத்தீர்கள், அது ஒரு கேலி என்று என் நண்பர்கள் (இடதுசாரிகள்) சொன்னார்கள். உங்களிடமே விளக்கம் கேட்கலாமென நினைத்து எழுதுகிறேன்.
ஜெயராஜ்
***
அன்புள்ள ஜெயராஜ்
இடதுசாரிகளெல்லாம் இப்போதும் இருக்கிறார்களா என்ன? திமுகவில் சேர்ந்துவிட்டார்கள் என்றார்கள்.
பல கட்டுரைகளில் நான் சொல்வதுதான் அந்த வரி. நேரு யுகத்துவிழுமியங்கள் என மூன்று வரிகளில் சுருக்கமாகச் சொல்லலாம்.
அ.அனைத்துத் தரப்பினருக்கும் நிகரான இடமளிக்கும் அதிகாரம் பற்றிய தாராளவாதப் பார்வை
ஆ. மதம், மரபு சார்ந்த நெகிழ்வான அறிவியல் பார்வை
இ. ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அடிப்படைக் கட்டுமானங்கள் மேல் மதிப்பு
இன்று இம்மூன்றையும் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும்.
ஜெ
சாரு, கடிதங்கள்-2
அன்புள்ள ஜெ.
சாரு நிவேதிதா விஷ்ணுபுரம் விருது பெறுவது மனநிறைவை அளிக்கும் செய்தி. நான் அவரைப் பற்றி நண்பர்களிடம் பேசுவதுண்டு. அவரைப் பற்றிக் கருத்துசொல்லும் பலபேர் அவரை படித்ததில்லை. அவர் எழுதும் குறிப்புகள், அவரைப்பற்றிய வசைகள் வழியாகவே அறிந்திருக்கிறார்கள். அவர் எழுதியதை விட அவர் ஒரு கதாபாத்திரமாக முன்வைத்ததே மிகுதி என்று என் நண்பர்கள் சொல்வார்கள். கொஞ்சம் பேர் அவர் நடிக்கிறார், பொய் சொல்கிறார், முன்னுக்குப்பின் பேசுகிறார் என்பார்கள்.
பலபேருக்கு தெரிந்த இலக்கியம் சென்ற காலத்திலே எழுதப்பட்டது. அன்றைக்கு எழுதுபவன் தன் எழுத்தை முன்வைத்துவிட்டு பேசாமல் ஒதுங்கி மறைந்து இருக்கவேண்டும் என்ற கருத்து இருந்தது. ஸக்கி, பியரி லாக்ளோஸ் எல்லாம் தலைமறைவாக, பொய்ப்பெயரில் எழுதினார்கள். அது ஒரு காலம். இன்றைக்கு எழுத்தாளர்கள் எழுத்துக்குச் சமானமாகவே புனையப்படுகிறார்கள். மௌனியே ஒரு மாபெரும் புனைவுதானே?அந்தப்புனைவையும் தன் எழுத்துபோலவே ஒரு விளையாட்டகாச் செய்பவர் சாரு. சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரும் சாரு நிவேதிதாவின் புனைவுதான். புனைவு விளையாட்டுத்தான்.
சாரு எல்லாவகையிலும் தமிழில் கவனித்தே ஆகவேண்டிய எழுத்தாளர். பேசப்பட்டே ஆகவேண்டிய படைப்பாளி. இன்றைக்கு அவரை வசைபாடலாம், நாளை அவர் இடம் அவருக்கு உண்டு. அவரை இன்றே கௌரவிக்கும் விஷ்ணுபுரம் அமைப்புக்கு நன்றி.
எஸ்.மாதவ்.
***
அன்புள்ள ஜெ,
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது ஒரு கலக்கலான செய்தி. சாருவின் எழுத்தும் சரி எழுத்துச் செயல்பாடும் சரி தமிழ்ச்சமூகத்தை உசுப்புவதும், கலங்கடிப்பதும்தான். விளையாட்டா வினையா என்று தெரியாமல் அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். தன்வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடைவெளி இல்லாமலாக்குகிறார். அவர் உருவாக்கிய அந்த கலங்கடிக்கும் விசயத்தையே இந்த விருதும் செய்கிறது. சரியான எதிர்வினை என்று நினைத்துக்கொண்டேன்.
காந்திராஜன்
September 1, 2022
கே.ஆர்.எஸ் – கல்வித்தகுதிகள்
அன்புள்ள ஜெமோ,
நான் உங்கள் நெடுநாள் வாசகன். நீங்கள் கண்ணபிரான் ரவிசங்கர் குறித்து உங்கள் தளத்தில் எழுதியுள்ளீர்கள். (தூய்மைவாதிகள் வருக). அவர் தான் தமிழில் அல்லது ஒப்பியலில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாகச் சொல்லியிருந்தார்.மேலும் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தமிழில் பேராசிரியராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார். சமீபத்தில் அவருக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்கூட கௌரவ முனைவர் பட்டம் கொடுத்தனர்.
ஆனால் பெர்க்லி பட்டம் முழுமையான பொய் என்று தெரியவந்துள்ளது. பாரிஸ் பல்கலைக்கழக வேலையும் பொய் என்று தெரியவந்துள்ளது. இவரைத்தான் திராவிட இயக்கத்தவர்கள் தமிழின் முதன்மை அறிஞர் என்று அறிமுகம் செய்து வந்தனர். அதுபோக தமிழ் இணையக் கல்விக்கழக ஆலோசனைக் குழுவிலும் பேராசிரியர் என்ற போர்வையில் இருக்கிறார். முதல்வரையும் சந்தித்தார். மேலும் இவர் தன்ட்விட்டர் தளத்தில் பார்ப்பனர்களை மிக மோசமான வசவு செய்துவந்தார். வசவு
என்றால் ஆபாச வார்த்தைகளில்.
தங்களின் கவனத்திற்கு..
https://twitter.com/dinosaurnet/status/1564246361796640768?s=21&t=rGsuF83TnxDw7QMkapWiWw
https://twitter.com/Bagabondo512/status/1563579333175697409?t=wNwPKAGYRvoYuK9KvdnNIA&s=35
அவர் படிப்பு மற்றும் ஆராய்ச்சியை மட்டுமல்ல.. தன்னுடைய ஆசிரியர்கள்
(குருக்கள்) என ட்விட்டரில் குறிப்பிட்டவர்களும் கற்பனையே. பெயர்கள்
உட்பட.
கண்ணபிரான் ரவிசங்கர் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவை பொய்களாகவே இருக்கின்றன.அவர் தான் ஆராய்ச்சி செய்த, வேலை பார்த்த பல்கலைக்கழகங்கள் யாவும் இப்படிஒரு நபர் தங்கள் மாணவ, ஆசிரியர் ஏடுகளிலேயே இல்லை என கைவிரித்து விட்டன.
இவ்வளவு பொய்களைக் கொண்டு இத்தனை வருடங்களாக ஒருவர் தமிழ் சமூகத்தில்முக்கியமான அறிஞராக ஒரு குழு தொடர்ந்து முன்னிலைப்படுத்திய காரணம் என்னவாக இருக்கும்.ஏன் திராவிடர் கழகங்கள் பெரியாரின் யுனெஸ்கோ விருது உட்பட இதுபோன்றபடிப்பு மற்றும் விருதுக் குழப்பங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்? அல்லது அறிவுசார் உலகம் இப்படியும் இயங்குகிறதா? (அரசியல் சார்புகளைத் தாண்டி!)
அன்புடன்,
தீனதயாளன்.
***
அன்புள்ள தீனதயாளன்,
நான் அமெரிக்க பல்கலைக்கழக பட்டம் என்பதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அங்கே சர்ச் யூனிவர்ஸிட்டிக்கள் உண்டு. ஒரு சின்ன கட்டிடத்திலேயே சட்டபூர்வமான பல்கலைக்கழகங்கள் இயங்கும். பட்டங்களும் அளிக்கப்படும். பலவகையான நோக்கங்களுடன் சமூகவியல் மானுடவியல் சார்ந்தும், கிறிஸ்தவ இறையியல் சார்ந்தும் முனைவர் பட்டங்களே அள்ளி வழங்கப்படுவதுண்டு. பெரிய பல்கலைகளிலேயே பணம் கட்டி படித்து வாங்கும் எளிமையான பட்டையப் படிப்புகளுண்டு.
நான் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை கவனித்தது, அவரிடமிருக்கும் மொழியடிப்படைவாத நோக்குக்காக. அது பாவாணர் மரபு வந்தது. அதை நான் ஏற்கவில்லை. ஆனால் அந்தத் தரப்பு முக்கியம், அது நம் பண்பாட்டுச்சூழலில் இருந்தாகவேண்டும், இல்லையேல் மொழியின் வேர்கள் பிடுங்கப்பட்டு அது பறந்துவிடும் என நினைக்கிறேன். அந்த மொழியடிப்படைவாதத்திற்கு ஒரு ஆழ்ந்த தமிழ்ப்பயிற்சி வேண்டும். அது அவருக்கு உண்டு. ஆகவே அவருடைய தமிழறிவை மதிக்கிறேன்.
அவருடைய பிராமண எதிர்ப்பு பற்றி. அதுவும் சூளை சோமசுந்தர நாயக்கர், மறைமலையடிகள், ஞானியாரடிகள், தேவநேயப் பாவாணர் ,இலக்குவனார் என தொடர்ச்சியாக மூன்று தலைமுறைகளாக இருந்து வருவதே. அதற்கும் ஆழமான பண்பாட்டுவேர்கள் உண்டு. தொடர்ச்சியாக தமிழின் தனித்தன்மையையும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தியங்கும் தன்மையையும் மறுக்கும் பிராமணத் தரப்பு ஒன்று இங்கே இருந்தது.
நீங்கள் கே.என்.சிவராஜ பிள்ளை வாழ்க்கையை வாசித்தாலே தெரியும். அவர் அப்படிப்பட்ட ஒரு விவாத அரங்கில் சுப்ரமணிய ஐயர் எம்.ஏ என்பவரால் தமிழ் எள்ளிநகையாடப்பட்டு , கீழ்மைசெய்யப்பட்டதைக் கண்டு சீற்றம் கொண்டார். அதன்பின்னரே காவல்துறை அதிகாரியான அவர் தமிழாய்வில் ஈடுபட்டார். தமிழின் காலக்கணிப்பு முறையில் பெரும் பங்களிப்பை ஆற்றினார். ஆகவே அந்த எதிர்நிலையையும் புரிந்துகொள்கிறேன்.
நான் அதை ஏற்கவில்ல, எந்த எதிர்நிலையும் எனக்கு ஏற்புக்குரியதல்ல. ஆனால் அது ஒரு தனிநபர் காழ்ப்பு அல்ல. அந்த மேட்டிமைத்தரப்பு நேற்று இருந்தது, இன்று இல்லை என நானே பத்தாண்டுகளுக்கு முன்புகூட நினைத்திருந்தேன். அது அப்படியே, அதே காழ்ப்புடனும் நையாண்டியுடனும் நீடிக்கிறது என்பதை நண்பர்கள் என எண்ணிய சிலர் வழியாக அனுபவபூர்வமாக உணர்ந்தேன். அதில் இருக்கும் எதிர்மறை மனநிலையும், மானுடவெறுப்பும், மேட்டிமைத்தனத்தின் விளைவான உக்கிரமான காழ்ப்பும் எவரும் இணையவெளியிலேயே வாசிக்கத்தக்கவையாக கிடைக்கின்றன. அது இருக்கும் வரை இதுவும் இருக்கும்.
மற்றபடி, கண்ணபிரான் ரவிசங்கரின் படிப்புத்தகுதி, ஆய்வுத்தகுதி பற்றிய சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன. அவர் சொன்ன கல்விநிலையங்களில் அவர் சில வகுப்புகளில் கலந்துகொண்டாரே ஒழிய அந்தப் பட்டங்களை பெறவில்லை என்று சில ஆதாரங்களையும் சிலர் காட்டினர். தமிழ் விக்கி விழாவுக்காக சென்ற ஏப்ரலில் அழைக்கப்பட்ட சில பேராசிரியர்களே சொன்னார்கள் (அவர்கள் அவருடைய கருத்தியல் தரப்பைச் சேர்ந்தவர்கள்தான்). அவர்கள் அதை பொதுவில் வைக்கட்டும், கேஆர்எஸ் பதில் சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன்.
இப்போது, இந்த விவாதம் அடிப்படை ஆதாரங்கள் சிலவற்றுடன் எழுப்பப்பட்ட நிலையில் கே.ஆர்.எஸ் தன் பட்டங்கள், ஆய்வுகள் பற்றிய நேரடியான ஆவண ஆதாரங்களை வெளியிடவேண்டும். செய்வார் என நினைக்கிறேன். அவ்வாறில்லை, அவர் மிகையோ பொய்யோ சொல்கிறார் என்று ஆனால் கூட, அவருடைய தரப்பை ஒட்டுமொத்தமாக மறுக்க அதை ஆதாரமாக நான் கொள்ள மாட்டேன்.
ஜெ
தமிழ் விக்கி பதிவுகள்
சூளை சோமசுந்தர நாயக்கர் மறைமலையடிகள் ஞானியாரடிகள்தேவநேயப் பாவாணர் இலக்குவனார் கே.என்.சிவராஜ பிள்ளைJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


