Jeyamohan's Blog, page 719
September 9, 2022
மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், அறிவிப்பு
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளாக என்னிடம் இளம் இலக்கிய வாசகர்களும் நன்பர்களும் மேற்கத்திய செவ்வியல் இசையை எப்படி அணுகுவது, எப்படி அதை புரிந்து கொள்வது, அதற்கு ஏதாவது புத்தகங்கள் படிக்கலாமா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவ்வினாக்களுக்கு என்னுடை பதில் எப்போதும், நல்ல இசையை நேரிடியாக கேட்க துவங்குவதுதான் அதற்கான வழிமுறை என்பதுதான். ஒரு நல்ல தரமான பட்டியலை எடுத்துக்கொண்டு அதில் ஒவ்வொன்றாக அமைதியாக உங்கள் காதுகளை ஒப்புக்கொடுத்து கேட்பதுவே சிறந்த அறிமுகமாக இருக்கும். அடிப்படையில் எழுத்துக்களும் சொற்களும் இசைக்கு அந்நியமானவை, அதனால்தான் பல சமயங்களில் நாம் இசை கேட்கிறோம். ஆனால் அப்படி சொற்களும் எண்ணங்களும் இன்றி அமர்வதற்கு ஒரு சிறு பயிற்சி வேண்டும்.
நானும் மேற்கத்திய செவ்வியல் இசைக்குள் பலமுறை நுழைய முயன்றிருக்கிறேன். அதில் பிரச்சனை என்னவென்று நான் பின்னர் உணர்ந்தது, நான் எப்போதும் அதை ஒரு விதமான பின்னணி இசையாக பாவித்திருந்தேன் என்பதுதான். நாம் கேட்ட எண்ணற்ற திரையிசை கோர்வைகள் நம்மை அவ்வாறு பழக்கப்படுத்தி விட்டன. திரையிசையின் அம்சம் காட்சிக்கு பின் கவனம் கோராமல் ஒலித்து ஒரு உணர்ச்சியை தீவிரப்படுத்துவதாகவே பெரும்பாலும் இருக்கிறது. அதை எதிர்பார்த்து செவ்வியல் இசைக்குள் செல்லும்போது அங்கு இசை முன்னால் வந்து பல பாவங்களை அளிக்கையில் ஒருவித திகைப்பில் நாம் அதன் நுண்ணிய சலனங்களை தவறவிடுகிறோம்.
இது ஒரு சிறிய ஆரம்பக்கட்ட பிழை, ஆனால் எனக்கு இது தெளிய வெகு காலமானது. பின் ஒரு நாள் ஒரே மூச்சில் உள்ளே நுழைந்தேன். முதலில் கேட்டது பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனி. பின் அடுத்த ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஐம்பது வெவ்வேறு இசைக்கோர்வைகளை கேட்டிருந்தேன். பரவசம் மிகுந்த நாட்கள் அவை. ஆறு மாதங்களுக்குள் நான் எனக்கான, என் வாழ்நாள் முழுவதும் துணைவரப்போகும் நான்கு இசைமேதைகளை கண்டடைந்திருந்தேன். (பீத்தோவன்/Beethoven, வாக்னர்/Wagner, ப்ரூக்னர்/Bruckner, மாஹ்லர்/Mahler)
மேற்கத்திய செவ்வியல் இசை என்பது குறைந்தது பத்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் மரபு. நம் செவ்வியல் இசைபோல அல்லாமல் அம்மரபு முழுக்க பதிவுசெய்யப்பட்ட இசை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கிரிகோரியன் சாண்ட்–களை (Gregorian chant) அவற்றின் எழுத்துவடிவில் இருந்து வாசித்து இன்றும் அதே போல நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் பின்னால் உருவான மேற்கத்திய இசையின் பல பிரத்யேக அம்சங்களான கொர்ட்(chord), ஹார்மனி (harmony), கௌண்டர் பாயிண்ட் (counter point) போன்றவை எழுதப்படுவதால் உருவானவை. இசை எழுதப்படும்போது முன்கூட்டியே தீர்மானித்து பலர் சேர்ந்து ஒரு செறிவான பல்குரல் (polyphonic) இசையை எழுப்ப முடியும்.
இந்த பரந்த இசை மரபை அறிவது ஒருவரது தனிப்பட்ட இசை தேடலை சார்ந்தது. பாக்–கையோ (Bach), விவால்டி– யையோ(Vivaldi), மோட்ஸார்ட்–ஐயோ(Mozart) நீங்கள் அவ்வாறு கேட்டு கண்டுகொள்ளலாம். ஆனால் ஒரு அறிவுத்தளத்தில் இயங்குபவர் கண்டிப்பாக பரிச்சயம் கொண்டிருக்க வேண்டிய மேற்கத்திய இசை உண்டு. அது பீத்தோவனில் துவங்குவது. நவீன சிந்தனையாளனுக்கு எப்படி ரெம்ப்ராண்டோ, டா வின்சியோ, மைக்கலாஞ்சலோவோ அறிமுகமாகியிருக்க வேண்டுமோ அப்படி. ஏனெனில் இவர்கள் அனைவருமே தங்கள் கலைக்குள் மட்டுமல்ல, சிந்தனையின் தளத்தில் உரையாடியவர்கள், சிந்தனைக்குப் பெரும் பங்காற்றியவர்கள். ஐரோப்பிய இலக்கியத்துக்கும், தத்துவத்துக்கும், சிந்தனைக்கும் பீத்தோவனின் கொடை மிகப்பெரியது.
ஆகவே பீத்தோவனை கேட்காமல் ஒருவர் ஐரோப்பிய கற்பனாவாதம், மானுடநேய சிந்தனை, இயற்கை வழிபாடு, செவ்வியல் மீட்டுருவாக்கம் கடைசியாக ஆழ்மன வெளிப்பாட்டு யுக்தி போன்ற எதையும் முழுதாக புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முக்கியமான காரணம் பீத்தோவனின் படைப்புகளில்தான் தான் இசை முதல்முதலாக இசையல்லாத பிரிதொன்றை உணர்த்த, பேசத்துவங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் எரோய்கா (Eroica) என்றழைக்கப்படும் பீத்தோவனின் மூன்றாவது சிம்பனிதான் அதன் துவக்கம். ஒரு நாயகனின் போராட்டமிகு வாழ்க்கை, அவனது மரணம், அவனது உணர்வு மக்களில் மீண்டெழல், பின் அச்சமூகத்தின் எழுச்சியும் கொண்டாட்டமும் என்று செல்லும் அந்த சிம்பொனி வார்த்தைகளே இல்லாமல் இவற்றை நிகழ்த்திக்காட்டியது.
என் வரையில் ஒரு திரைத்துறையினனாக இதைச் சொல்வேன், நவீன ஊடகமான சினிமாவை கண்டுபிடித்தது பீத்தோவனே. சினிமாவின் உத்திகள் பீத்தோவன் உருவாக்கியவை. (dissolves, cuts, flash cuts, slow motion, focus shifts). அதே போல ஒரு இலக்கியவாதியோ சிந்தனையாளனோ வார்த்தை கடந்து அனுபவமாக பதினேட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டிம் மாபெரும் மானுட சிந்தனை எழுச்சிகளை அடைய பீத்தோவனின் இசை ஒரு பெரும் வாசல்.
பீத்தோவனின் இசையில் இரு எல்லைகள் உண்டு. பலரும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கும் மூன்லைட் சொனாட்டா (Moonlight Sonata) ஓர் எல்லை எனில் அதிகம் பொதுவில் அறிந்திருக்காத க்ரோஸ்ஸெ ஃபுகெ (Grosse Fuge) மற்றொரு எல்லை. அதன் ஆரம்பத்து ஐந்து நிமிடங்கள் என்னை உச்சக்கட்ட வெறுப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது, ஏன் ஒருவன் இத்தனை வலியை அடைய வேண்டும், அதை ஏன் பிறனுக்கு கடத்தவேண்டும் என்று. ஆனால் இப்போது கேட்கும் போது அது உச்சக்கட்ட இன்பம் எனவும் தோன்றுகிறது, ஷிஸொபெர்னியாவை நெருங்கும் நிலை, ஹிஸ்டீரியா (இவ்வார்த்தைக்கு மேற்கில் பெரிய மரபு உண்டு) என்னும் நிலை.
ஆனால் பீத்தோவனின் சாதனைகள் அவரது சிம்பனிகள் தான். அவர் இசைக்கும் அதுவே சிறந்த துவக்கப்புள்ளி.
எனவே இம்மாதத்தின் கடைசி வார இறுதியான 23, 24, 25 (வெள்ளி,சனி,ஞாயிறு) மூன்று தினங்கள், பீத்தோவனின் முக்கியமான் சிம்பனிகளான 3,5,6,7,9 மற்றும் அவரது வயலின் கான்செர்டோ ஆகியவற்றை கூட்டாக கேட்கும் ஒரு அமர்வை நடத்தலாம் என எண்ணம் கொண்டுள்ளேன். இசை பற்றிய சிறு விளக்கங்களும், அதை கவனிப்பதற்கான வழிகாட்டுதல்களும் அடங்கிய பயிற்சி வகுப்பு இது.
மேற்கத்திய இசையை கேட்க துவங்கிய போது நான் செய்த தவிக்கக் கடினமான ஆனால் தவிர்க்க வேண்டிய சிறு பிழைகள், சில அடிப்படை புரிதல்கள் (காலப் பிரிவினைகள், முக்கிய கலைஞர்கள், இசை வகைமைகள், இசை வாத்தியங்கள், இசை நடத்துனரின் பங்கு) ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்வேன். ஆர்வமிருப்பவர்கள் கூடிய விரைவில் தங்கள் பெயர், வயது, ஊர், தொலைபேசி ஆகிய செய்திகளைக் குறிப்பிட்டு இந்த இணைய முகவரிக்கு (ajithan.writer@gmail.com) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(தங்குமிடம், உணவு உட்பட மூன்றுநாட்களுக்கு ரூ 3000 ஆகும். செலவு செய்யமுடியாத நிலையில் உள்ள மாணவர்கள் போன்றவர்கள் அதை தெரிவித்தால் அவர்களுக்குரிய நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்ய முடியும்
பெண்களும் கலந்துகொள்ளலாம். அவர்களுக்கு தனியான வசதியான தங்குமிடம் உண்டு)
பிகு: கொஞ்சம் இசை ஆர்வமும், புதியவை மீதான ஏற்பு மனநிலையும் இருக்குமென்றால் இது உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும். இளைஞர்கள், கலைகளில் ஆர்வம் உள்ளவர்களை எதிர்பார்க்கிறேன். இம்முயற்சி வெற்றிபெறும் எனில் மேலும் மாஹ்லர் துவங்கி வாக்னர் வரை இவ்வாறு அறிமுகம் செய்ய எண்ணமிருக்கிறது
நன்றி
அஜிதன்
September 8, 2022
சவார்க்கர், சுபாஷ்,காந்தி
அன்புள்ள ஜெ,
இன்று சவார்க்கரை ஓர் மாபெரும் தேசியத்தலைவராக முன்வைக்கிறார்கள். காந்தியை நீக்க சவார்க்கரை பயன்படுத்துகிறார்கள். சவார்க்கர் மெய்யான தியாகி என்கிறார்கள். சவார்க்கர் ஊர்வலங்கள் நிகழ்கின்றன. இந்தப் போக்கு மிக ஆபத்தானது என நினைக்கிறேன். உங்கள் எதிர்வினை என்ன?
சரண்ராஜ்
அன்புள்ள சரண்
எனக்கு இப்போது அரசியல்பேச ஆர்வமில்லை. சலிப்பாக உள்ளது. பேசவேண்டியவற்றை பெரும்பாலும் பேசிவிட்டேன் என நினைக்கிறேன். நீங்கள் கேட்டதனால் சுருக்கமாக.
சவார்க்கரை இந்துத்துவர் முன்வைப்பதும் சரி, அதை இடதுசாரிகள் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பதும் சரி இன்றைய அரசியலின் வியூகம் சார்ந்தவையே ஒழிய எந்த நீடித்த கொள்கையைச் சார்ந்தவையும் அல்ல. தாங்கள் ஒன்றைச் செய்யும்போது அது முழுநியாயம், எதிரி செய்வது முழுஅநியாயம்- அவ்வளவுதான் இதிலுள்ள தரப்புகள்.
சவார்க்கர் சார்ந்து இன்று வலதுசாரிகள் செய்வதை நேற்று சுபாஷ் சந்திரபோஸ் சார்ந்து இடதுசாரிகள் செய்தனர். சுபாஷை முன்வைத்து காந்தியை இழிவுசெய்வது பல ஆண்டுகள் நடந்தது. இது அதன் மறுபக்கம். எப்போதுமே இப்படி எவரேனும் எடுத்து முன்வைக்கப்படுகிறார்கள்.
அவ்வாறு முன்வைக்கப்படுபவர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு ‘அதிதீவிர’ முகம் கொண்டவர்கள் என்பதைக் காணலாம். அந்த அதிதீவிரங்களை காந்தியின் சமரசப்போக்குக்கு, அகிம்சைக்கு, நீடித்த செயல்பாட்டுக்கு எதிரானதாகக் காட்டுவார்கள்.
ஆனால் அந்த அதிதீவிரங்கள் எல்லாமே நடைமுறையில் தோல்வி அடைந்தவை. அத்தோல்வியின் பொறுப்பை அந்த தலைவர்மேல் சுமத்தாமல் அவர் ‘பழிவாங்கப்பட்டவர்’ ‘வஞ்சிக்கப்பட்டவர்’ என்னும் பிம்பங்களை உருவாக்குவார்கள். இதெல்லாமே பரப்பியல் அரசியலின் செயல்முறைகள்.
மக்களுக்கு அதிதீவிர பிம்பங்கள் தேவைப்படுகின்றன. கதைநாயக பிம்பங்கள். பிரச்சினைகளை அதிரடியாக தீர்ப்பவர்கள். பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை தாங்களே எடுத்துக்கொள்பவர்கள். மக்களின் காவலர்கள், அதாவது ஒருவகை நாட்டுப்புற காவல்தெய்வங்கள்.
காந்தி மக்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர். அவர்களே அதை தீர்த்துக்கொள்ளவும், போராடவும் வழிகாட்டுபவர். எச்சிக்கலும் ஒரேயடியாக தீர்க்கப்படமுடியாது என்றும், மெல்லமெல்லவே தீர்வுகள் வந்துசேரும் என்றும், அதுவரை தொடர்முயற்சி தேவை என்றும் சொல்பவர்.காந்திய வழிமுறை என்பது எதிர்ப்பு அல்ல, தன்னை மேம்படுத்திக் கொள்ளுதல். காந்தி முன்வைக்கும் உணர்ச்சி கொந்தளிப்பு அல்ல, பொறுமை. காந்தி சொல்லும் வழி என்பது அழிப்பதும் உடைப்பதும் அல்ல, ஆக்குவது.
காந்தியைப் போன்றவர்களை புரிந்துகொள்ள மெய்யாகவே அக்கறையுடன் சமூகத்தை புரிந்துகொண்டு செயல்படுபவர்களால்தான் முடியும். போலியாக மிகைக்கூச்சலிடுபவர்கள், அரசியல் வெறியர்கள், முதிரா இளமையின் மிகை கொண்டவர்கள், தங்கள் பொறுப்பை ஏற்க மறுப்பவர்களுக்கு உரியவரல்ல காந்தி.
சவார்க்கர், சுபாஷ் இருவருமே தியாகிகள். ஐயமில்லை. அவர்களின் தேசப்பற்றுமீது எனக்கு ஐயமில்லை. ஆனால் இருவருமே இருவகையில் ஃபாசிசம் நோக்கி நம்மை கொண்டு சென்றுவிட வாய்ப்பிருந்தவர்கள். சுபாஷ் நம்மை ஜப்பானியரிடம் மாட்டிவிட்டிருக்கக் கூடும். சவார்க்கர் பிரிட்டிஷாரின் மதவாரியாக தேசத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையானார்.
சவார்க்கர், சுபாஷ் இருவருமே சமரசங்கள் செய்துகொண்டனர். சுபாஷ் சயாம் மரணரயிலில் பல ஆயிரம் இந்தியர், தமிழர், ஜப்பானியரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதை கண்டும் காணாமல் இருந்தார். சவார்க்கர் மதவெறியால் நிகழ்ந்த பலிகளை உதாசீனம் செய்தார்.
தீவிரநிலைபாடு என்பது சருகு எரிவதுபோல. எரிந்து எழுந்து சாம்பல்தான் எஞ்சும். அது உடனடிக் கவற்சி கொண்டது, நீண்டகால அளவில் அழிவையே எஞ்சவைப்பது.
காந்தி ஒரு சமையல் அடுப்பு. எரிந்தெழாது,அணையவும் செய்யாது. சமைக்கும், பசியாற்றும்.
ஜெ சயாம் மரணரயில்பாதைகைதிகள் – கடிதம்
வணக்கம் சார்,
எனது பெயரை முதன் முதலாக நமது தளத்தில் பார்த்தது மாடத்தி திரைப்படத்தை பற்றி கடலூர் சீனு எழுதியபோது.
மாடத்தியின் திரைக்கதை அமைப்பை பற்றி தமிழில் எவருமே எழுதியிராத சூழலில் அவர் எனது பெயரை குறிப்பிட்டு திரைக்கதை அமைப்பையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அது மிகுந்த உற்சாகத்தை தந்தது. (நமது தளத்தில் வெளியான விமர்ச்சனங்கள் கற்றுக் கொண்டு மேலேறி செல்லும் படியான அவதானிப்புகளை முன்வைத்தன.)
இன்று உங்களது எழுத்தின் வழியே எனது பெயரை வாசிக்க வாய்த்தது நிஜமாகவே Fanboy Exciting moment தான். நன்றி சார்.இன்னும் சில நாட்களில் first look வெளியிடும் திட்டமிருக்கிறது.
அரைநாள் மட்டும் படப்பிடிப்பு மீதமிருக்கிறது இந்த வாரத்தில் அதுவும் முடிந்துவிடும். dubbing முடித்துவிட்டோம். music composing, sound composing, VFX, CG வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படம் தயாராகிவிடும். பட வெளியீட்டு நாள் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
படப்பிடிப்புக்கு முன் கமல்சார் வெண்கடல் தொகுப்பில் வாழ்த்து செய்தியை எழுதி தந்து சமரசமின்றி படமாக்கும்படி அறிவுறுத்தியிருந்தார். எடுத்திருக்கும் வேலையின் பெருமதியை உணர்ந்து அர்பணிப்புடன் வேலை செய்திருக்கிறோம். உங்களது ஆசி என்றும் துணை நிற்கட்டுமாக.
அன்புடன்
ரஃபீக் இஸ்மாயில்
அன்புள்ள ரஃபீக்,
கமல் உட்பட அனைவருக்கும் உங்கள் மேல் எதிர்பார்ப்பு உள்ளது. படம் வெளிவந்தபின் அரங்கில் ஒலிக்கும் விசில்களில் ஒன்றாக என்னுடையதும் இருக்கட்டும்.
ஜெ
க.து.மு.இக்பால்
சிங்கப்பூரின் மரபுக்கவிஞர் க.து.மு.இக்பால். பலசமயம் மரபுக்கவிஞர்களின் ஆக்கங்களைப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. புதுக்கவிஞர்களில் ஒரு சமூகத்தின் தத்தளிப்புகள் வெளிப்படுகின்றன, மரபுக்கவிஞர்களிலேயே ஒரு சமூகத்தின் நிலைப்பேறுகள் காணக்கிடைக்கின்றன
க.து.மு.இக்பால்
க.து.மு.இக்பால் – தமிழ் விக்கி
கோவை விழா, அழைப்பிதழ்
வாசக நண்பர்களுக்கு வணக்கம்
நன்னெறிக் கழகம் கோவை மற்றும் கோவை இலக்கியவாசகர்கள்
இணைந்து நடத்தும் ஜெயமோகன் 60 விழா கோவையில் வரும் செப்டம்பர் 18 ஆம் நாள் மாலை சிறப்பாக நடைபெற உள்ளது அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம்.
இயகாகோ சுப்ரமணியம், எம்.கிருஷ்ணன் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்), தேவதேவன், பாரதி பாஸ்கர், மரபின் மைந்தன் முத்தையா, பவா செல்லத்துரை, யுவன் சந்திரசேகர், கல்பற்றா நாராயணன் பங்கேற்கிறார்கள்.
வாசக நண்பர்கள் விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்
நன்றி !
நன்னெறிக்கழகம் மற்றும் கோவை இலக்கியவாசகர்கள்
திருப்பூர் கட்டண உரை, கடிதங்கள்
அன்புள்ள ஜெ
திருப்பூர் கட்டண உரையை இணையத்தில் போட்டிருப்பது ஒரு சிறந்த விஷயம். கட்டணம் கட்டி அதைப் பார்க்கும்படி அமைத்திருப்பது இன்னும் சிறப்பு. ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள அதற்காக பணம் செலவழிக்கவும் நேரம் செலவழிக்கவும் தயாரானவர்களால்தான் முடியும். இல்லாவிட்டால் உதாசீனமானவர்கள் உள்ளே வருவார்கள். அவர்களுடன் நாம் விவாதிக்கவேண்டியிருக்கும். அது மாபெரும் வெட்டிவேலை. இந்த உரைகள் இப்படி தேவையானவர்களுக்காக மட்டுமே இருப்பது சிறப்பானது என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்
செந்தில்
***
அன்புள்ள ஜெ
திருப்பூர் கட்டண உரையைப்போல நாமக்கல் கட்டண உரையையும் விரைவில் இணையத்தில் கட்டணம் கட்டி பார்க்கும்படியாக அமைக்கலாம் என நினைக்கிறேன். வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கும் அது உதவியாக ஆகும். இந்த உரைகள் மிகச்செறிவானவை. ஒருமுறை கேட்டவர்கள் இன்னொரு முறையும் கேட்கவேண்டியிருக்கும்.
எஸ்.ராஜ்
Jeyamohan speech
Part 01 – https://www.youtube.com/watch?v=ypozEx9CFRs
Part 02 – https://www.youtube.com/watch?v=X3QbH42kAXU
Join Membership –
https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw/join
சாரு, கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருது,2022
அன்புள்ள ஆசிரியருக்கு,
முதலில் சாருவை வாசிக்கத் தொடங்கி பிறகு நீண்ட காலம் கழித்து, அவ்வெழுத்துக்களில் இருந்து விலகாமலே ஜெயமோகனின் எழுத்துக்களைப் படித்துக்கொண்டிருக்கும் வாசகனின் கடிதம் இது. என் ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியருக்கு விருதளிப்பது உற்சாகத்தையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது.
கல்லூரியில் படிக்கும்போது தான் சாருவின் அபுனைவு எழுத்துக்கள் அறிமுகம் ஆனது. முதலில் கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. முகத்தை சுளித்துக்கொண்டேனும் ‘கடவுளும் சைத்தானும்’, ‘வாழ்வது எப்படி?’, ‘கலையும் காமமும்’ போன்ற புத்தகங்களை முழுதாகப் படிக்காமல் விட்டதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. ‘திரும்பத் திரும்பத் தன்னையே முன்வைக்கும், தன்னைப் பற்றியே எழுதிக்கொண்டிருக்கும் இவர் யார்?’ என்று எரிச்சலும் ஆர்வமுமாகப் படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆசிரியர்களை ஒரு கட்டுரையில், ஒரே ஒரு தொடுகையில் கூட கண்டுகொண்டிருக்கிறேன். சாருவைப் போல் யாரும் இப்படி அலைக்கழித்ததில்லை.
ஒரு தேர்ந்த ரசிகனாகத் தான் சாரு என்னை முதலில் ஈர்த்தார். இசை, சினிமா, உணவு, குடி என ஒவ்வொன்றையும் ரசித்து வாழும் அந்த இளைஞனை என் நண்பனாக உணர்ந்தேன். உலக சினிமா, உலக இலக்கியம் எல்லாம் அறிமுகமான வயது அது. சாரு, எஸ்.ரா, இ.பா. போன்றோரது கட்டுரைகளை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தேன்.
அபுனைவு மூலம் ஒரு எழுத்தாளனை முழுதாக உள்வாங்கிவிட முடியாது என்ற தெளிவு இருந்தது. அதனால் சாருவின் அப்போதைய புதிய நாவலான (பழைய) ‘எக்சைல்’ வாங்கிப் படித்தேன். அத்தோடு சாரு என்னை ஆட்கொண்டுவிட்டார். ஒரு வாரம் முழுதும் உணவு, உறக்கம் குறித்த கவனம் இன்றி அவரது இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தையும் படித்தேன். ஒரு வருடம் முழுதும் அவரது நாவல்களை எல்லாம் திரும்பத் திரும்பப் படித்தேன். சாரு எழுதி நான் வாசிக்காமல் விட்ட சொல் ஒன்று கூட இல்லை என்றானது.
அதன் பிறகு அவர் பரிந்துரைத்த எழுத்தாளர்களைப் படிக்கத்தொடங்கினேன். அங்கே தான் என் கற்றலில் தேக்கம் விழுந்ததாகத் தோன்றுகிறது. அவர் காட்டிய திசையில் என் தேடல் அமையவில்லை. என்னுடைய கேள்விகள் வேறாக இருந்தது புரியத் தொடங்கியது. ‘அதிகாரம்’ குறித்த சாருவின் தரிசனம் எனக்குப் போதுமானதாக இல்லை; அல்லது நான் அதனை உள்வாங்கவில்லை. ஆனாலும் சாருவைப் படிப்பதை விடவில்லை.
வர்க்கம் ஒரு மனிதனின் ரசனையை, சிந்தனையைத் தீர்மானிக்கக் கூடாது. மத்திய வர்க்கத்தின் பொருளியலில் கட்டுண்டு இருப்பதாலேயே ஒருவன் அதன் மதிப்பீடுகளை ஏற்கவேண்டியதில்லை என்பதைத் தான் சாரு திரும்பத் திரும்ப எழுதி இருக்கிறார். எந்நிலையிலும் அக விடுதலை சாத்தியம் என்ற நம்பிக்கையே சாருவின் எழுத்தில் இருந்து நான் பெற்ற முதல் பாடம்.
சாருவின் எழுத்தில் திரும்பத் திரும்ப உலகியல் விவேகம் பேசப்படும். இது ‘உலகாயதம்’ என்னும் தத்துவத் தரப்பே தான். ‘காமரூப கதைகள்’ நாவலில் மிகத் தெளிவாகவே தியானம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கு எதிராக உலகாயதம் பேசப்பட்டிருக்கும். ராமகிருஷ்ணரையும் விவேகானந்தரையும் படித்து வளர்ந்த எனக்குப் பதற்றத்தை ஏற்படுத்திய நாவல் அது. ஒருவிதமான உறைநிலையை சாருவின் எழுத்து உடைத்துப் போடுகிறது. அந்த உலகியல் விவேகத்தின் இன்னொரு கூறு உறவுகளில் இறுக்கப்படாமல், யாரையும் இறுக்காமல் இருந்துகொள்வது.
தமிழ் விக்கி பதிவில் குறிப்பிட்டிருப்பதைப் போல் இலக்கியம், இசை, சினிமா என்று சகலத்தையும் உள்ளடக்கிய ரசனை ஒன்றை முன்வைக்கிறார். ஒரு விதமான சுரணையுணர்வு அல்லது கூருணர்வு எனலாம். தர்க்கப்பூர்வமான, ரசனை மதிப்பீடுகளை விடவும் இந்த ‘ரசிக்க சொல்லித் தருதல்’ எனும் செயல் வாசிப்பின் தொடக்கத்தில் இருப்பவருக்கு முக்கியமானது; உதவிகரமானது. எப்போதும் உடனிருந்து வழிகாட்டுவது. அதே பதிவில் சாருவின் எழுத்துக்கள் மூன்று காலகட்டங்களிலாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அதையும் கடந்து அவர் நான்காவது கட்டத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அடுத்தடுத்து வரலாற்றுப் புனைவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.
‘ராஸலீலா’ ஒரே அமர்வில் இரண்டு முறை படிக்கவைத்த நாவல். உள் மடிப்புகளுக்குள் கதை சொல்லும் அந்நாவலின் முறையானது பின்னர் ‘பாகீரதியின் மதியம்’ போன்ற கடினமான நாவல்களைப் படிக்க உதவியது. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போதும் மூன்று அடுக்குகளிலாகக் கதை சொல்லிப் பார்த்திருக்கிறேன். மூன்றாவது அடுக்கில் கதைக்குள் மூழ்கிவிடுவார்கள்.
அபுனைவையே புனைவைப் போல் எழுதுபவர் சாரு. அதனாலேயே அவரது புனைவுகளில் அபுனைவுத் தன்மை கைவிடப்படும் இடங்களை கவனித்து ரசிக்கப் பிடிக்கும். அப்படி புனைவெழுத்தில் சாருவின் உச்சம் என (புதிய) எக்சைல் நாவலைத் தான் சொல்லத் தோன்றுகிறது. உலகியலில் இருந்து மெய்யியல் நோக்கி எழ முயலும் மனிதனைப் பற்றிய கதையாக அதை வாசித்தேன். உலகியலைக் கடந்து எழுந்தவர்கள் மட்டுமே அந்நாவலைப் புறம் தள்ளமுடியும். பிறருக்கு நவீன வாழ்வு குறித்த குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிக்கும், நம்மை நாமே கறாராகப் பரிசீலிக்கவைக்கும் அற்புதமான வாசிப்பனுபவத்தை அளிப்பது. அந்நாவலைப் பற்றித் தனியாகத் தான் எழுதவேண்டும்.
விருது அறிவிப்பினால் நண்பர்கள் பலரும் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு சாருவைப் பற்றிய, அவரது எழுத்துக்கள் பற்றிய நேர்நிலையிலான விவாதங்கள் மூலம் அவர் மீதான வெறுப்பை, ஒவ்வாமையை, மரியாதையின்மையைக் கடக்க முயல்வது வாசகர்களாக நம்மைச் செழுமைப்படுத்தலாம்.
விஷ்ணுபுரம் விருது பெறும் சாருவுக்கு இந்த வாசகனின் வாழ்த்துக்கள்.
– பன்னீர் செல்வம்
அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது சிலருக்கு அதிர்ச்சியை உருவாக்கியிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் அது என்னைப்போன்ற ஒருவருக்கு ஏற்புடையதே. விஷ்ணுபுரம் போன்ற அமைப்பு சாருவின் ஒட்டுமொத்த பங்களிப்பை உதாசீனம் செய்ய முடியாது என்பதே என் எண்ணமாக உள்ளது. சாருவின் பங்களிப்பை ஒரு auteur என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் உருவாக்கும் ஒட்டுமொத்தமான ஒரு புனைவு உள்ளது. அதில் அவர் தன்னுடைய பெர்சனாலிட்டி, தான் வாசித்த நூல்கள், கேட்ட சங்கீதம், தன்னுடைய பயணங்கள் எல்லாவற்றையும் கலந்துகட்டி புனைந்துகொண்டிருக்கிறார். அவர் அதன் வழியாக உருவாக்குவது ஐரோப்பிய மற்றும் தென்னமேரிக்கப் பண்பாட்டின் ஒரு அடித்தளத்தை ஆதர்சமாகக் கொண்ட ஒரு வகையான விடுதலையை. என்னைப்போன்ற ஒருவன் ஒரு சின்ன நகரத்தில் பிறந்து, சாதிக்குள் வளர்ந்து, படிப்பு படிப்பு என்று வாழ்ந்து, அசட்டுத்தனமாக குடும்பத்துக்குள் சிக்கிக்கொண்டு வாழும்போது இதில் இருந்து ஒரு விடுதலையை அவருடைய அந்த personnalité de auteur அளிக்கிறது என்பதுதான் முதலில் அவர் அளிக்கும் பங்களிப்பு. என் வாழ்த்துக்கள்
தங்க.பாஸ்கரன்
சாரு நிவேதிதா – தமிழ் விக்கிராமோஜியம்
வெறும் அனுபவங்களை மட்டுமே ஒரு நாவலாக, அதுவும் கிட்டத்தட்ட ஐநூறு பக்க நாவலாக எப்படிச் சொல்ல முடியும்? பின்னணிகளும், விவரணைகளும் கதையைவிட முக்கியமானதாகவும் விரிவானதாகவும் இருக்குமானால் இது சாத்தியம்
ராமோஜியம் – ஹரன் பிரசன்னாSeptember 7, 2022
மிருகங்களின் மனஉயர்வு உண்மையானதா?
யானைடாக்டர் கதையைப் படித்தபோது சில குழப்பமான உணர்ச்சிகள் – அழுத்தி வைப்பதை விட இங்கு வெளியிட்டால் விடை கிடைக்குமோ என்று ஒரு நப்பாசை. முதலிலேயே சொல்லி விடுகிறேன் – என் கேள்வி டாக்டர். கே. என்ற வரலாற்று மனிதரைப் பற்றியோ அவரது அன்பு மிகுந்த வாழ்க்கையைப் பற்றியோ அல்ல – அவரது தரிசனத்தைப் பற்றியே. (விடைக்குப் பதில் வசவு கிடைத்தாலும் சரிதான், மோதிரக் கைக் குட்டு என ஏற்றுக் கொள்கிறேன்.).
குட்டியாய் இருந்த முதல் எங்கள் வீட்டில் வளர்ந்த பெண் பூனை ஒன்று அழகான இரு குட்டிகள் போட்டது. இரண்டு குஞ்சுகளும் அழகாக விளையாடுவதையும் பால் குடிப்பதையும் தாயிடம் கொஞ்சுவதையும் பார்த்துக்கொண்டே பல மணி நேரம் செலவழித்திருக்கிறேன். திடீரென்று ஒரு இரவு ஒரு ஆண் பூனை வந்து இரண்டையும் குதறிப் போட்டுவிட்டு சென்றது. அது அந்த தாய்ப் பூனையைப் புணர இரண்டு குட்டிகளும் இடைஞ்சலாக இருக்குமாம். மிருக நியாயம் என்று சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டோம். (பின் ஒரே வாரத்தில் அதே கடுவனுடன் இந்தப் பெண் பூனையைப் பார்த்தேன்).
அதன் பின் எப்போது டிஸ்கவரி, நேஷனல் ஜியோக்ராபிக், அனிமல் ப்ளாநெட் பார்த்தாலும் இதே கதை தான். யானைகள் சற்று தேவலாம் என்று நினைத்திருந்தேன் – வறட்சி காலத்தில் ஒரு பிடி யானை தலைவி வழி தவறிய வேறு எதோ ஒரு யானைக் குட்டியை கொம்புகளால் கொல்வது போல் செய்து விரட்டுவதைப் பார்க்கும் வரை. (கழுதைப் புலிகளிடம் அகப்பட்டு அந்தக் குட்டி அன்றே உயிரை விட்டதையும் காட்டினார்கள் – அது நல்லதுக்குதான் என்று விளக்கம் வேறு). தங்கள் கூட்டங்களுக்குள் தலைவன் அந்தஸ்துக்கும், பெரிய ‘அந்தப்புரம்’ வைப்பதற்கும் இவைகள் அடித்துக் கொள்ளும் காட்சிகள் வெகு பயங்கரம்.
மனிதனின் அற்பத் தனத்தைத் தூற்றுவது சரிதான் – ஆனால் விலங்குகளை அப்படிப் புகழ வேண்டுமா என்ன? ‘கடல் அளவு கருணை’ என்றால் என்ன – ஒரு நாயும்நரியும் யானையின் பாதையில் நின்று சரி சமனாக உரிமை கோர முடியுமா ? வறட்சி, வசிப்பிட சீரழிப்பு போன்ற பிறழ்வு நிலைகளின் போது எங்கே போகிறது இந்தக் கருணை எல்லாம்? மனிதனின் தர்மங்களை வைத்து விலங்குகளை எடை போடக் கூடாதென்றால் பின் எதை வைத்து அவற்றை ‘கருணை’, ‘நேர்மை’ என்றெல்லாம் சொல்கிறார்கள்?
விவாதத்தின் தரத்தை குறைத்திருந்தாலோ திசையை மாற்றியிருந்தாலோ
மன்னிக்கவும்.
அன்புடன்
மது
***
மது,
மிருகங்கள் மனிதனுடைய பண்பாட்டுக்குள் வாழ்பவை அல்ல. அவை அவற்றுக்குரிய காட்டுப்பண்பாட்டில் வாழ்பவை. அவற்றின் செயல்களை பெரும்பாலும் அவற்றின் மரபணுக்களில் படிந்துள்ள கூட்டுமனநிலையே தீர்மானிக்கிறது. தன் குட்டிகளில் மூத்ததை உண்ணும் மிருகங்கள் உண்டு. ஊனமுற்ற குட்டியை கைவிட்டுச்செல்பவை உண்டு. அங்கே போட்டிகள் உடல்பலத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒத்திசைவும் போட்டியும் தொடர்ந்து நிகழ்ந்து காட்டை செயலூக்கத்துடன் வைத்திருக்கின்றன.
மனிதன் நெடுங்காலமாக உருவாக்கிக் கொண்டுள்ள சமூகவாழ்க்கைக்கான நெறிகளே அவன் பண்பாட்டுக்கூறுகளாக மாறியுள்ளன. அன்பு, கருணை, பாசம் , ஈகை, சம உரிமை என நாம் சொல்லும் எத்தனையோ விஷயங்கள் நம்மால் மெல்லமெல்ல உருவாக்கிக்கொள்ளப்பட்டவை. இவற்றை மிருகங்களில் நாம் தேட முடியாது. அவற்றைக்கொண்டு மிருகங்களை நாம் மதிப்பிடவும் முடியாது. சிங்கம் அசைவம் சாப்பிடுகிறது என்று மனக்குறைப்பட்டால் அதில் பொருள் உண்டா என்ன?
மிருகம் இயற்கையின் ஒருபகுதியாக உள்ளது. அதன் வன்முறையோ காமமோ அதில் உள்ளவை அல்ல. அவை இயற்கையில் உள்ளவை. அதன் நல்லியல்புகளும் இயற்கையில் உள்ளவையே. ஆகவே மிருகங்களை நாம் உணர்ச்சிகரமாக அடையாளம் காணும்போது இயற்கையையே காண்கிறோம்.
மிருகங்களின் உ லகில் நாம் கைவிட்டு வந்த இயற்கையான் மேன்மைகள் உள்ளன. ஒரு காட்டியலாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு ஓநாய் எப்படியோ நெருக்கமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அந்த நட்பு அவருக்கு பெரிய தொநதரவாகக்கூட ஆகிவிட்டது. தினமும் அந்த ஓநாய் அவரை தேடி வரும். ஒருநாள் கூட பிரிந்திருக்க முடியாது. மற்றநாய்கள் பயந்து கதறும். ‘அதை ஒன்றும் செய்யமுடியாது. அன்பின் வளையத்திற்குள் வந்த மிருகங்கள் அதை மீறிச்செல்லவே முடியாது. அந்த வளையத்தை மீறும் ஒரே மிருகம் மனிதன்’ என்றார் — இதுதான் வேறுபாடு.
மிருகங்கள் அவற்றின் இயற்கையான உள்ளுணர்வு மற்றும் இயல்பான மன அமைப்பால் எளியவையாக உள்ளன. அவற்றின் அன்பு மறுபக்கங்கள் இல்லாதது. நிபந்தனை இல்லாதது. தன்னிச்சையானது. அந்த அன்பை அது எதற்கும் பயன்படுத்துவதில்லை. அதை அது திருப்பி அன்பைப்பெறுவதற்கான நிபந்தனையாகக்கூட ஆக்குவதில்லை. அதன் அன்பு மலரின் மணம்போல அதன் மனதுடன் இணைந்தது.
இந்த அன்பு மனிதர்களில் புனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. ஏனென்றால் மனிதர்கள் இரு அடிப்படை விஷயங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அகங்காரம், பேராசை. தன்னை ஓயாது முன்வைத்து நிரூபித்துக்கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது. உலகையே வென்றாக வேண்டியிருக்கிறது. இவ்விரண்டும் சேர்ந்து அவனுடைய அன்பை திரிபடையச் செய்கின்றன. நுட்பமான பல அடுக்குகள் கொண்ட, சிக்கலான ஒன்றாக அவனுடைய அனைத்து பாதையை மாற்றிவிடுகின்றன. ஆனால் மிருகங்களுடனான உறவுகள் அப்படி அல்ல. அவற்றின் உறவு நேரான ராஜபாட்டை.
நுண்ணுணர்வுகொண்ட மனங்கள் சக மனிதர்களுடனான உறவை கூர்ந்து கவனிக்கின்றன. ஆகவே அவற்றின் இருண்ட ஆழங்கள் எப்போதும் கண்ணுக்குப்படுகின்றன. மேலும் பொதுவாக நுண்ணுணர்வு கொண்டவர்கள் சகமனிதர்களின் மனங்களை தனக்காக பயன்படுத்திக்கொள்ள வும் தயங்குவார்கள். ஆகவே அவர்களுக்கு சக மனிதர்களுடனான உறவு எப்போதும் சிக்கலானதாக இருக்கிறது. சலிப்பும் கசப்பும் துயரமும் கொடுப்பதாக உள்ளது. அவர்கள் மேலும் மேலும் தங்களை தூய்மைபப்டுத்திக்கொண்டு சகமனிதர்களின் சிறுமைகள் தங்களை முற்றிலும் பாதிக்காத இடத்திற்குச் சென்று விடும்வரை இந்த துன்பம் நீடிக்கிறது.
அந்த நிலையில் அவர்களுக்கு மிருகங்களுடனான உறவு மிக இதமானதாக இருக்கிறது. அது நிபந்தனைகள் ஏதுமில்லாத தூய நேசம் மட்டுமாக இருப்பதை ஒவ்வொரு கணமும் உணரமுடிகிறது. என் நாயின் கண்களைப் பார்க்கும்போது ‘ஆம், மனிதன் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட ஒரு பழக்கம் அல்ல அன்பு .இப்பிரபஞ்சத்தில் அது தன்னியல்பாகவே ஊறிக்கொண்டிருக்கிறது’ என்ற உணர்ச்சியை அடைகிறேன்
ஆகவேதான் தியான மரபுகள் சாதகனுக்கு தனிமையை நிபந்தனையாக்குகின்றன. தியானம் செய்பவன் தன்னுள் உள்ள மனம் என்ற மாபெரும் கட்டின்மையை ஒழுங்குபடுத்த முயல்கிறான். அதற்கு அவன் தன்னுடைய மனதின் உள்வருகை வழிகளை மூடிக்கொள்ளவேண்டும். அதன்பின்னரே அவன் அதை கவனிக்க முடியும். அதற்குத்தான் தனிமை. சகமனிதர்களுடனான உறவுகளை, சமூக அமைப்புகளுடனான உறவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுதல் அதற்கான வழிமுறை. முடிந்தவரை இயற்கையின் மடியில் இருக்கவேண்டும்.
ஆனால் மலர்களும் செடிகளும் போலவே மிருகங்களும் இயற்கையாகவே கருதப்படுகின்றன. ஒரு ஆசிரமத்தில் சிங்கமும் புலியும் இருந்தாலும் சாதகன் மனம் கறைபடுவதில்லை. காரணம் அவை காமத்தாலும் வன்முறையாலும் ஆன வாழ்க்கையில் இருந்தாலும் காமத்தையும் வன்முறையையும் நிறைத்துக்கொண்ட உள்ளம் கொண்டவை அல்ல.
மிருகங்களைப்பற்றிய இந்த விவேகஞானத்தையே கதையில் உணர்ச்சிகொண்ட முறையில் யானைடாக்டரும், கதைசொல்லியும், பைரனும் சொல்கிறார்கள். ஷேக்ஸ்பியரில் பைரனில் தாகூரில், தல்ஸ்தோயில், பாரதியில் இந்த விவேகம் வெவ்வேறு முறையில் வெளிப்படுகிறது. உணர்ச்சிபூர்வமாக, கவித்துவமாக.
மிகச்சாதாரணமாக இதை நம்மைச்சுற்றிக் காணலாம். எந்த சமூக உறவும் இன்றி வெற்றுக்குப்பையாக தெருவில் வீசப்பட்ட மனிதர்களுக்கு எப்போதும் மிருகங்களே நல்லுறவாக இருக்கின்றன. தொழுநோயாளிகள், அனாதைப்பிச்சைக்காரர்கள் நாய் வைத்திருப்பதைக் காணலாம். மிருகங்களுடன் கொள்ளும் நட்பு மிகத்தீவிரமான அக அனுபவமாக வாழ்நாள் முழுக்க நீடிக்கிறது. நாய்கள், காளைகள், ஒட்டகங்கள், எருமைகள், குதிரைகள் இன்றுவரையிலான மானுட ஆன்மீகத்தை உருவாக்குவதில் ஆற்றிய பங்கு சாதாரணமானது அல்ல. ஆம், மிருகம் அன்பெனும் பிடிக்குள் முழுமையாக அகப்படும்– மனிதர்கள் அப்படி அல்ல.
நீங்கள் கேட்ட இக்கேள்வியை மேலைநாடுகளில் சிலர் பழங்குடிகளைப்பற்றி கேட்பதுண்டு. பழங்குடிகளின் இயல்பான அன்பையும் வாழ்நாள்முழுக்க பிசிறின்றி நீளும் நட்பையும் உணர நேர்ந்த ஐரோப்பியர் பலர் அந்த அப்பழங்குடிச் சமூகங்களைப்பற்றி பெருமதிப்புடன் எழுதியிருக்கிறார்கள். பலர் அவர்களுடன் சேர்ந்து வாழவும் முற்பட்டிருக்கிறார்கள். இயற்கைவாதிகள் பழங்குடிகளை இலட்சியவாத நோக்குடன் முன்வைப்பதை ஆட்சேபித்த ஐரோப்பியநோக்குள்ளவர்கள் பழங்குடிகளின் பண்படாததன்மைக்கு ஆதாரமாக அவர்களின் போர்களில் உள்ள வன்முறை, அவர்களின் சமூக கட்டமைப்பில் உள்ள கடுமை , ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களை ‘காட்டுமிராண்டிகள்’ [சேவேஜ்] என்று சொன்னார்கள்.
அதற்குப் பதில் சொன்ன இயற்கைவாதிகள் வெறுமே தங்கிவாழ்வதற்காக, இயல்பான மிருக உந்துதல்களின் அடிப்படையில் போரிடும் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால் வெறும் லாபநோக்குக்காக அவர்களை கோடிக்கணக்கில் கொன்று பூமியின் முகத்தில் இருந்தே அழித்த நாம் மட்டும் நாகரீகமானவர்களா என்றார்கள். எந்த பழங்குடிப்போரும் முற்றான அழிவில் முடிவதில்லை. ஆனால் நாம் நூற்றாண்டுகளாக முற்றழிவுகளை செய்துவருகிறோம். சகமனிதர்களை கோடிக்கணக்கில் கொன்று தள்ளியிருக்கிறோம். ஈவிரக்கமில்லாமல் அடிமைப்படுத்தி சுரண்டியிருக்கிறோம். பொருளியல் அடிமைகளாக்கி வைத்திருக்கிறோம். வணிகம் என்றபேரில் ஏமாற்றி பட்டினி போட்டு இன்றும் கொன்றுகொண்டிருக்கிறோம். நாம் அவர்களை விட எவ்வகையில் முன்னால் சென்றவர்கள் என்றார்கள்.
இந்த வேறுபாடுதான் நமக்கும் மிருகங்களுக்கும் இடையேயும் உள்ளது. இன்றுவரை உலகில் உள்ள அத்தனை யனைகளும் கொன்ற சகயானைகளை விட பல்லாயிரம் , ஏன் பல லட்சம் மடங்கு சக மனிதர்களை நாம் கொன்றிருப்ப்போம் அல்லவா? அதற்கு நாம் உருவாக்கிய கருவிகளையும் அமைப்புகளையும்தான் நாம் நம் நாகரீகத்தின் உச்சம் என்று சொல்கிறோம்.
இப்படிச் சொல்லலாம், நாம் குறுகிய சமூக எல்லைக்குள் மிருகங்களை விட, பழங்குடிகளை விட அதிக நெறிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களிடம் இல்லாத அகங்காரமும் பேராசையும் நம்மை ஒட்டுமொத்தமாக அவர்களைவிட கீழானவர்களாக, நசிவுசக்திகளாக ஆக்கிவிட்டிருக்கிறது.
மனிதனின் இந்த ஒட்டுமொத்த இருண்ட பக்கத்தைப் பார்க்கும் இலட்சியவாத மனங்கள்தான் அவனுடைய இயற்கையான ஆதிமனநிலையை பழங்குடிகளிலும் மிருகங்களிலும் கண்டுகொள்கின்றன. அதை ஒரு இலட்சியக்கனவாக முன்வைக்கின்றன. அதன் பொருட்டு பழங்குடிகளையும் மிருகங்களையும் உணர்ச்சிகரமாக எடுத்துச்சொல்கின்றன
ஜெ
முதற்பிரசுரம் Feb 20, 2011
ம.வே.பசுபதி
ம.வே.பசுபதி தமிழ்ப் பதிப்பியக்கத்தின் பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் முன்னர் பார்வைக்கு வராத பல்லாயிரம் ஏட்டுச்சுவடிகளை தொகுத்து, உரியவற்றை தேர்வுசெய்து, ஏற்கனவே வெளிவந்த பதிப்புகளின் பாடபேதங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவர் ‘செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்’ 21 ஆம் நூற்றாண்டு தமிழ் பதிப்பியக்கத்தின் முதன்மைச் சாதனை.
ம.வே.பசுபதி – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

