Jeyamohan's Blog, page 720
September 7, 2022
அறம், முதல்வருக்கு…
அறம் நூலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கும் செய்தியின் புகைப்படத்தை நண்பர் கதிரேசன் அனுப்பியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது. முன்பென்றால் அதிலென்ன இருக்கிறது என நினைப்பேன். இன்று, மொத்த தமிழகமே வாசிப்புக்கு எதிரான ஒரு மனநிலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சூழலில் அது மிக முக்கியமான ஒரு குறியீட்டு நிகழ்வு என நினைக்கிறேன். இந்த அரசு நூல்களை மதிக்கிறது என்பதற்கான சான்று அது. நூல்களை முன்னிறுத்துவதன் அடையாளம் அது.
அதை பல்லாயிரம்பேர் பார்க்கிறார்கள். சிலருக்காவது நூல்களின் முக்கியத்துவம் சென்று சேரலாம். சிலருக்காவது அதை வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகலாம். நூல்களை பரிசு கொடுக்கும் வழக்கம் உருவானால் நூல் விற்பனை பெருகும். அது நலிந்துகொண்டிருக்கும் நூல்வெளியீடு என்னும் இந்த துறை மேலும் நீடிக்க வழிவகுக்கும். நூல்வெளியீட்டுத்துறை நீடிக்கும்போதே எழுத்தும் வாசிப்பும் நீடிக்க முடியும்.
அரசு நிதி உதவி உட்பட பல நடவடிக்கைகளைச் செய்யலாம். ஆனால் அனைத்தையும்விட முக்கியமானது இந்த நடவடிக்கை. எல்லா அரசும் ஒருவகை குறியீடே. அரசுச்செயல்கள் எல்லாமே குறியீட்டுச் செயல்பாடுகள். ஸ்டாலின் இன்று தமிழகத்தின் அதிகாரபூர்வ அடையாளம். அவருக்கு அந்நூல் வழங்கப்பட்டது நிறைவளிப்பது அதனால்தான்.
சாரு, கடிதங்கள்
அன்புள்ள சாரு , அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கும் ,
தங்களிருவரின் வாசகராகிய எனது பணிவான வணக்கங்கள்.
2005-ல் எனக்கு சாருவின் எழுத்து அறிமுகமானது. அப்போது தினமலர் இணையதளத்தில் சாருவின் இணைய முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. 2005-2008-ல் என் வாழ்வில் நடந்த துயரங்களுக்கு சாருவின் எழுத்து அருமருந்தாகவும் வலி நிவாரணியாகவும் இருந்தது.
அந்த சமயத்தில் வெளிப்பார்வைக்கு இலக்கிய வம்பாக சாரு ஜெயமோகனை பற்றி எழுதிய பதிவுகள் மூலமாக ஜெயமோகன் எழுத்து எனக்கு அறிமுகமானது. சாருவின் எழுத்துக்கள் (புனைவு & அ –புனைவுகள்) எனக்கு எப்படி பிடித்ததோ அது போல ஜெயமோகனின் எழுத்துக்களும் (புனைவு & அ –புனைவுகள்) என்னை வசீகரித்து கொண்டது.
வெளிப்பார்வைக்கு தங்களுக்குள் தனிப்பட்ட இலக்கிய வம்பு என பொது சமூகம் நினைத்தாலும், நீங்கள் இருவரும் ஒரு சில தருணங்களில் சொன்னது போல நீங்கள் இருவரும் இரு வேறு “school of thought ” சேர்ந்தவர்கள்.
நீங்கள் அவ்வாறு கூறுவதற்கு முன்பே, என்னை போன்ற ஒரு அடிப்படை வாசகனாக முயற்சிக்கும் எளிய சாமானியன் / பொது ஜனத்திற்கு, நீங்கள் இருவரும் இரு வாத்தியார்கள் (masters ). ஜெயமோகன் – கணக்கு வாத்தியார் (strict , absolute, calculated etc.,). சாரு நிவேதிதா – இயற்பியல் வாத்தியார் (both strict, absolute, calculated etc. and also new imaginations (like stephen hawking), acceptance of all values etc ).
ஜெயமோகன் அவர்களின் கல்வி குறித்த பல்வேறு விவாதங்களும் எண்ணங்களும் எனது இளைய மகனது கல்வி குறித்த எனது / எனது மனைவியின் பல கவலைகளுக்கு அரு மருந்தாக மற்றும் ஒரு மாற்றுப்பார்வை கொடுத்தது.
சாருவின் எழுத்து எனது இளைய மகனிடம் மேலும் அன்பாக இருக்க கற்று கொடுத்தது. சாரு தனது லேப்ரடார் குழந்தை பற்றி எழுதும் பொழுது எனது இளைய மகனே எனக்கு ஞாபகம் வருவான்.
( குறிப்பு : எனது மனைவி மிக எளிய பெண். பட்டதாரி ஆனாலும் புத்தகம் / கட்டுரை /கதைகளை வாசிக்க மாட்டார். நான் புத்தகம் வாங்குவதை விரும்பாதவர். நான் சிறு வயதில் இருந்தே பத்திரிக்கை / வார /மாத இதழ் வாசிப்பவன். மேலும் நான் கணிப்பொறி மென்பொருள் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் வேலை செய்வதால் தங்கள் இருவரது எழுத்துக்களும் எனக்கு ஒரு வகையில் stress-buster மற்றும் எனது creativity-யை கூர் செய்கிறது. சக மக்களை பற்றிய empathy அதிகரிக்க செய்கிறது ).
நான் பெங்களூரில் உள்ள ஒரு கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் (Srishti Manipal Institute of Art, Design and Technology (http://www.srishtimanipalinstitute.in/) Lead Software Architect –ஆக (Non-Teaching) பணியில் உள்ளேன். எனது கல்லூரியில் சில எழுத்தாளர்களும் கவிஞர்களும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். கேசவா மாலகி (https://en.wikipedia.org/wiki/Keshava_Malagi) மற்றும் மம்தா சாகர் (https://en.wikipedia.org/wiki/Mamta_Sagar). அவர்களது படைப்புகளை நான் வாசிக்கா விட்டாலும் , அவர்கள் என்னிடம் IT/computer/assessment software குறித்து தெளிவு பெற வரும் போது தங்கள் இருவரின் ஞாபகம் வரும். என்னை [பொறுத்த வரை உங்கள் இருவரை போல படைப்பூக்கம்/creativity நிறைந்தவர்கள் சரஸ்வதி தேவியின் அருள்/கடாக்ஷம் பெற்றவர்கள். உங்களை போல படைப்பவர்களை நான் வாழும் சரஸ்வதி தேவி என்றே கருதுகிறேன்.
ஆகையால் கேசவா மாலகி, மம்தா சாகர் மற்றும் எனது கல்லூரியில் பணியாற்றும் இதர படைப்பாளிகளை (including artists/designers/musicians), சரஸ்வதி தேவி என் எதிரில் வந்தால் எவ்வாறு நான் மதிப்பு/மரியாதையுடன் நடந்து கொள்வேனோ அவ்வாறு நானும் நடந்து கொள்வேன். இந்த மரியாதையை நான் தங்கள் இருவரிடமும் இருந்து கற்று கொண்டதை ஒரு பெரும் பேராக கருதுகிறேன்.
எனது நீண்ட கால நண்பர் மற்றும் எனது கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் திரு. அஜய் நரேந்திரனிடம் தங்கள் இருவரது எண்ணங்கள் எழுத்துக்கள் குறித்து பேசுவதும் விவாதிப்பதும் உண்டு. அஜய் நரேந்திரன், மலையாளி, பெரும்பாவூர்–காரர். நாயர்(மேனன்) சாதியை சேர்ந்தவர் என்றாலும், அவர் 10th படிக்கும் போது மார்க் சீட்டில் வரும் பெயர் குறித்து பள்ளி ஆசிரியர் வகுப்பில் கேட்கும் போது தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சக மாணவ நண்பன் சங்கடப்படுவதை கண்டு தன்னுடைய மேனன் சாதி பெயரை சேர்க்க வேண்டாம் என்று ஆசிரியரிடம் சொன்னவர். அஜய் – Inclusive & sympathetic to marginalized, disenfranchised people/women in society. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் அஜயுடன் 10th படித்தார்.
அஜய் சிறந்த புத்தகம் வாசிப்பவர். தனது வீட்டில் ஒரு தனிப்பட்ட நூலகம் அமைத்துள்ளனர் (Photo:https://www.facebook.com/photo.php?fbid=10158628776577606&set=pb.671497605.-2207520000..&type=3). எங்கள் கல்லூரி மாணவர்களை வாசிப்பு நோக்கி நகர்த்துவதை தனது ஒரு லட்சியமாக கொண்டவர். மாணவர்களிடம் தனது தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள புத்தகங்களை கொடுத்து வாசிக்க சொல்பவர்.
அஜய்க்கு தமிழ் பேச தெரியும். ஆனால் வாசிக்க தெரியாது.
ஜெயமோகனின் அறம் தொகுப்பு , எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று.
ஜெயமோகனின் Stories of the True புத்தகம் முன்பதிப்பு வெளிவரும் போது அஜய்யின் நூலகத்திற்கு ஒரு பிரதியை முன் பதிவு செய்து பெற்று கொடுத்தேன்.
எனது மனசாட்சி அப்போது சாருவின் ஆங்கில புத்தகங்களும் அஜயின் நூலகத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னது. ஆகையால் சாரு நிவேதிதாவின் Marginal Man, Zero Degree, To Byzantium,Towards A Third Cinema and Unfaithfully Yours புத்தகங்களை zero degree publishing-ல் ஆர்டர் செய்து அஜய்யின் நூலகத்திற்கு கொடுத்தேன்.
அஜய்யின் மூலம் தங்கள் இருவரது எழுத்துக்களும் எங்கள் கல்லூரியின் மற்ற மாநிலம் / மற்ற நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் (artists, designers, poets & writers) சென்று சேர வேண்டும் என்பது எனது சிறிய ஆசை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
விஷ்ணுபுரம் விருது,2022 பெற்றதிற்காக சாரு நிவேதிதாவிற்கு எனது வாழ்த்துக்கள். சாரு நிவேதிதாவை தேர்ந்தெடுத்ததிற்காக ஜெயமோகன் அவர்களுக்கும் விஷ்ணுபுரம் வாசக நண்பர்களுக்கும் எனது நன்றி.
இயற்கையின் ஆணையா அல்லது சரஸ்வதி தேவியின் திருவிளையாடலா என்று தெரியவில்லை. சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது 2022 அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே நான் அஜய்யின் நூலகத்திற்காக தங்கள் இருவரின் புத்தகங்களை ஆர்டர் செய்து ஜெயமோகனின் Stories of the True பெற்றிருந்தேன். சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் சென்ற வெள்ளிக்கிழமை (2/Sep/2022) கிடைத்தது. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
எங்களது கல்லூரி விழாக்களின் போது வாய்ப்பு கிடைத்தால் தங்கள் இருவரையும் அழைக்கவேண்டும் என்பது எனது மற்றொரு ஆசை.
தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
இப்படிக்கு
அன்புடன்
சந்தானம்
***
அன்புள்ள ஜெ
சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. அதிலுள்ள மெசேஜ் என்னவென்றால் இலக்கியம் என்பது அத்தனை வேறுபாடுகளுடனும் ஒரே அமைப்பு என்பதுதான். அது ஒரு இயக்கம்.
நன்றி
ஜெகன் கிருஷ்ணா
கைதிகள், திரைப்படமாக
கைதிகள், நாடக வடிவம், திருவண்ணாமலைகைதிகள் கதை படமாகிறதா என பல கேள்விகள். ஆமாம், படமாகிறது. அதற்குப்பின் ஒரு சுவாரசியமான கதை உண்டு. அதையே ஒரு கதையாக எழுதி படமாக்கலாம்.
ரஃபீக் இஸ்மாயில் என்னும் உதவி இயக்குநர் என்னை அணுகி கைதிகளை ஒரு குறும்படமாக எடுக்க அனுமதி கோரினார். நாற்பது நிமிட படம். சொந்தச்செலவில். அவர் பவா செல்லதுரை வழியாக என்னை அணுகினார். விஷ்ணுபுரம் விருது விழாவில் என்னை வந்து கண்டு அந்தக் கோரிக்கையை முன்வைத்தார். 2018 என நினைக்கிறேன்.
ரஃபீக் நெடுங்காலம் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்தவர். பல திரைப்பட முயற்சிகள். சில முயற்சிகள் பாதியிலேயே நின்றுவிட்டன என்றார். நான் அனுமதி கொடுத்தேன், ஒப்பந்தமெல்லாம் இல்லை. சொல்தான்.
ஆனால் அனுமதி கொடுத்த மூன்றாம் மாதம் மணிரத்னம் அதை படமாக்க அனுமதி கேட்டார் – நவரசா வரிசையில் ஒன்றாக. ரஃபீக்குக்கு அனுமதி அளித்துவிட்டதைச் சொன்னேன். அதன் பின் சில மாதங்கள் கழித்து பாலா அதே கதையைக் கேட்டார். அனுமதி அளித்துவிட்டதைச் சொன்னேன்.
அதன்பின் வெற்றிமாறன் அதன் உரிமையை கேட்டார். அதை ரஃபீக்குக்கு அளித்துவிட்டதைச் சொன்னேன். ஒப்பந்தமெல்லாம் இல்லை என்றாலும், அவருடைய முதல்முயற்சி வெல்லட்டும் என எண்ணினேன்.
வெற்றிமாறன் கைதிகள் வேண்டும் என உறுதியாக இருந்தார். நீங்களே ரஃபீக்கிடம் பேசுங்கள் என்று நான் சொன்னேன். அவரே விட்டுக்கொடுத்தால் நல்லது, நான் சொல்ல மாட்டேன், அது அவர் சொத்து என்றேன்.
வெற்றிமாறன் சிரித்துக்கொண்டு ‘நான் கேட்டாலே இந்தக்கதையோட வேல்யூ கூடிரும்… தரவே மாட்டார். இருந்தாலும் டிரை பண்றேன்’ என்றார்.
வெற்றிக்காக அவர் நண்பர் சுப்ரமணியம் சிவா ரஃபீக்கிடம் பேசினார். ரஃபீக் தன் வாழ்க்கை இது, முடியாது என மறுத்துவிட்டார். அதை சுப்ரமணியம் சிவா என்னிடம் சொன்னார்.
அதன்பிறகுதான் துணைவன் கதையை வெற்றிமாறன் முடிவு செய்தார். அதுதான் இப்போது விடுதலை ஆக மாறியிருக்கிறது. படப்பிடிப்பு நடைபெறுகிறது.
ஆனால் ஒரு நல்லது நடந்தது, வெற்றிமாறன் சொன்னபடியே அவர் கேட்டதனாலேயே கைதிகள் கதையின் மதிப்பு கூடியது. டர்மெரிக் மீடியா அதை தயாரிக்க முடிவுசெய்திருப்பதாகவும், இரண்டரை மணிநேர திரைக்கதையாக விரித்தெடுப்பதாகவும் ரஃபீக் சொன்னார். ஒப்பந்தம் அனுப்பிவைத்தார். படப்பிடிப்பு தொடங்கியது.
ஆக, இப்போது இரண்டு போலீஸ் படங்கள். விடுதலையும், கைதிகளும் (பெயர் மாறக்கூடும்) விடுதலைக்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுதியிருக்கிறார். ரஃபீக் கைதிகளுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.
விடுதலை நவம்பரில் வெளிவரலாம். தொடர்ந்து கைதிகளும் வெளிவரலாம். இரண்டுமே வெற்றிபெறவேண்டுமென விரும்புகிறேன்.
ஜெ
September 6, 2022
சு.வேணுகோபாலுக்கு தன்னறம் விருது
“கருமை படரும் மாலை நேரங்களில், கிராமப்புறங்களில் குன்றுகள் நிறைந்த இடங்கள் வழியாக நீங்கள் நடந்து போயிருக்கக்கூடும். சமவெளிகளில் குடிசைகளும் மரச்செறிவு களும் விளைநிலங்களும் அவற்றிடையே மனிதர்களும் இருக்கி றார்கள். வெளிச்சம் குறைந்துகொண்டே வருகிறது. காட்சிகள் மங்க ஆரம்பிக்கின்றன. குடிசைகளையும் மரங்களையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. இருள் அதிகரிக்கிறது. கடைசியில் ஒரு கறுப்புத்திரையால் மூடப்பட்டதுபோல் தோன்றுகிறது. ஆனால் முழுவதும் கருமை அல்ல. நடுவே ஆங்காங்கு சில ஒளிப்புள்ளிகள். குடிசைகளில் எரியும் சிம்னி விளக்குகள். அங்கு குடிசைகளும் அதற்குள்ளே மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் அந்த விளக்குகள் மட்டுமே
உங்களுக்கு வழி தவறிவிடுகிறது என்றால் வெளிச்சம் தெரியும் இடத்தை நோக்கி நடக்கிறீர்கள். இருளில் துன்பப்படும்போது வெளிச்சத்திற்கு அருகில் வாழ்பவர்களை அணுகிச் சிறு பந்தம் கேட்கிறீர்கள். வெளிச்சத்தின் குறிக்கோளில் நீங்கள் மனிதாபிமானத்தைக் கண்டடைகிறீர்கள். வரலாற்றின் நிலையும் ஏறத்தாழ இதே போலத்தான் என்று சொல்லலாம். அதன் சமவெளிகளில் இருட்டு கவியும்போது ஏற்றி வைக்கப்படும் சிறுவிளக்குகள் மனித சமூகத்தின் செயல்பாட்டை, அதன் இருப்பை மறுப்பதில்லை; ஏளனம் செய்வதில்லை. மாறாக இங்கு மனித ஆத்மா துடிக்கிறது என்று கோஷமிடுகிறது. அந்த விளக்குகளை நாம் படைப்பாளிகள் என்று அழைப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் ஆட்சேபணைக்குரியதாக எதுவும் இல்லை”.
கேரளத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் எம்.கோவிந்தன் அவர்கள் படைப்பாளியைப் பற்றிக் குறிப்பிடும் வார்த்தைகளே மேற்கண்டவை. ‘இங்கு ஒரு மனித ஆத்மா துடிக்கிறது’ என்பதைத்தான் கலை-இலக்கியங்கள வெவ்வேறு விதமாக நமக்கு எடுத்துரைக்கின்றன. காலந்தோறும் கலைவடிவங்கள் மனித அகத்திற்குள் நுண்மையான பல மாற்றங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. அவ்வகையில், ஓர் மொழிச்சூழலில் சிறுகதை எனும் கலைவடிவம் உருவாக்கிய தாக்கத்தை இலக்கிய விளைவு என்பதோடு சுருக்கிக்கொள்ளாமல், மனித அகங்களின் மறுபரிசீலனைக்கு வித்திட்டவை என்றும் விரித்துப் பார்க்கலாம். எனவேதான் எழுத்தாளர் சுந்தர ராமசாமி, “சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை” என அதன் படைப்பு வடிவத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
மனித வாழ்வானது இதுவரை தான் நம்பிவரும் மரபார்ந்த அறத்தினைப் பரிசீலிக்கும் கணங்கள் என்பவை, பெரும்பாலும் உச்சபட்ச துயர்களுக்குப் பின்தான் நிகழ்கின்றன. பெரும் கண்ணீருக்குப் பிறகுதான் கடவுள்கள் படைக்கப்படுகின்றன. நிராகரிப்பினால் நிகழ்கிற நிராதரவு, இயலாமையில் விளைகிற வெறுமை, கையறு நிலைகளின் பகிரங்கம், அவமானங்கள் தூண்டும் அநீதி… என இவ்வாழ்வினைப் பூடகங்களோ, பாவனைகளோ இன்றி அப்பட்டமாக அம்மணப்படுத்துகையில் மானுட அகம் தீமையின் இருளுக்குள் ஆழ்வது இயல்பாகிறது. ஆனால், ‘இத்தனைக்குப் பிறகும் எந்த நம்பிக்கை சாகவிடாமல் வைத்திருக்கிறதோ’ அந்த சிற்றொளி மட்டுமே மனிதரை, அத்தனைச் சீரழிவுக்குப் பிறகும்கூட மீட்கக்கூடிய வன்மைவாய்ந்தது. அந்த ‘நிகரற்ற ஒளி’யை நோக்கித்தான் ஒவ்வொரு படைப்பாளனும் தவமியற்றுகிறார்கள்
தமிழின் யதார்த்தவாதச் சிறுகதையுலகில் தீமையின் கொடும்பரப்பை எழுதி, இலக்கியம் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தி விளக்கமுயலும் படைப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த வித்து புதுமைப்பித்தன் இட்டது. ஆனாலும், யதார்த்தத்தின் இருளை சிறுகதையின் கருப்பயையாகக் கொண்டு, உள்ளசையும் சினையாக வாழ்வு மீதான நம்பிக்கையைத் தருகிற புனைவுப் படைப்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைவரை ஆயுள்நீளும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு, தமிழ் மண்ணின் வேளாண் வாழ்வியலைத் தன்னுடைய பிரதானக் கதைக்களமாகக் கொண்டு சிறுகதைகளும் நாவல்களும் எழுதும் முன்னோடிப் படைப்பாளுமை திரு சு.வேணுகோபால்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய யதார்த்தவாதப் புனைவுப் படைப்புகளால் மிகச்சிறந்த இலக்கியப் பங்களிப்பைத் தமிழுக்கு ஆற்றியிருக்கிறார் சு.வேணுகோபால் அவர்கள். அவ்வகையில் இவரை புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாரயணன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன் என நீளும் நவீனத்துவ சிறுகதைப் படைப்பாளிகள் வரிசையின் சமகாலத்திய முன்னோடி ஆளுமை எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். இவர், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் தூண்டப்பெற்று எழுதத் தொடங்கியவர்; எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களால் தாக்கம்பெற்றுத் தன்னுடைய இலக்கியப் பார்வையை வகுத்துக்கொண்டவர். அவ்வகையில் இவர், ஆசிரியர் சுந்தர ராமசாமியிடம் உடன்தங்கிப் பயின்ற நேரடி மாணவர்களில் ஒருவர்.
“வேணுகோபாலின் நடை எழுத்தாளனுடையதல்ல, ஒரு விவசாயியினுடையது. தமிழின் முக்கியமான கலைஞனாக அவரை நிலைநாட்டுவதே இந்த அம்சம்தான். விவசாய வாழ்க்கையைச் சார்ந்த தகவல்களை இந்த அளவுக்கு அள்ளி அள்ளி வைக்கும் ஒரு படைப்பாளி இன்றுவரை தமிழில் உருவானதில்லை. கலைச்சொற்கள், நுண் தகவல்கள், கச்சிதமான விவரிப்புகள் என நாம் காணத்தவறும் வேளாண்மை வாழ்க்கையில் மிக விரிவான சித்திரம் தமிழின் நூறாண்டுக்கால நவீன இலக்கிய மரபில் முதல் முறையாகப் பதிவாகிறது இவரது படைப்புகளில்” என்றுரைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வார்த்தைகள், நம் மொழியில் சு.வேணுகோபால் அவர்களால் மட்டுமே நிரப்பப்பட்டுவரும் பெரும் மரபுத்தொடர்ச்சியை நமக்குத் துல்லியப்படுத்துகிறது.
சு.வேணுகோபால் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வெண்ணிலை’ தமிழில் இதுவரை வெளியான மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று. வெண்ணிலை, பூமிக்குள் ஓடுகிறது நதி, திசையெல்லாம் நெருஞ்சி, கூந்தப்பனை, களவு போகும் புரவிகள், ஒரு துளி துயரம் உள்ளிட்ட சிறுகதை நூல்களும், நுண்வெளிக் கிரகணங்கள், பால்கனிகள், நிலம் எனும் நல்லாள், தாயுமானவள் ஆகிய நாவல்களும் அச்சுப்பதிப்பில் வெளியாகியுள்ளன. தமிழின் மிகச்சிறந்த முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்றான ‘தமிழினி பதிப்பகம்’ இவருடைய அத்தனை நூல்களையும் வெளியிட்டு, தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராக இவர் நிலைபெறத் துணைநின்றுள்ளது.
தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, எல்லா தரப்புக்கும் உரிய நேர்மறையாளர்களாகத் திகழ்கிற முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், இளைய வாசிப்பு மனங்களுக்கு அவர்களை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ முன்னெடுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதுவரை படைப்பாளர் யூமா வாசுகி, எழுத்தாளர் தேவிபாரதி ஆகியோருக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை பணிந்து வணங்கி தன்னறம் இலக்கிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களுக்கு வழங்குவதில் நெஞ்சார்ந்த மகிழ்வுகொள்கிறோம். இவ்விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் விருதாளருக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், இளைய வாசிப்புமனங்கள் ஆயிரம் பேருக்கு சு.வேணுகோபால் அவர்களுடைய ‘தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ தொகுக்கப்பட்ட புத்தகமும் விலையில்லா பிரதிகளாக அனுப்பப்படவுள்ளது. இதோடு, விருதாளரின் தன்னுபவப்பகிர்வு நேர்காணலும் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்படும். ஒட்டுமொத்தமாக, தமிழின் தலைசிறந்த சிறுகதைப் படைப்பாளியான சு.வேணுகோபால் அவர்களை சமகால இளைய மனங்களுக்கு மீளறிமுகம் செய்யும் நல்முயற்சிக்கான ஆதாரமாக இவ்விருதளிப்பு நிகழ்வினை உயிர்ப்பாக நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி முதல்வாரத்தில் விருதளிப்பு நிகழ்வு நிகழவுள்ளது. இலக்கியப் படைப்புகளால் நம் காலத்தை கருத்தியல் ரீதியாகவும், கலையழகியல் ரீதியாகவும் செழுமையாக்கித் தந்த எழுத்தாளர்களின் ஓயாத இலக்கியப் பங்களிப்பை வணங்கி இவ்விருது வருடாவருடம் அளிக்கப்படுகிறது. ஒரு படைப்பாளியின் ஆழுள்ளத்து வெளிப்பாட்டினைச் இச்சமகால சமூகம் கவனித்துப் போற்றுகிறது என்பதற்கான அகச்சாட்சியமாகவும் இவ்விருது அர்த்தமடைகிறது. இவ்வாண்டின் தன்னறம் விருது பெறும் எழுத்தாளுமை சு.வேணுகோபால் அவர்களைப் பணிந்து வணங்குகிறோம்.
நன்றியுடன்,
தன்னறம் நூல்வெளி
வாழ்தலும் வள்ளுவமும்
சமண வள்ளுவர்தமிழ் சித்தர் மரபு படி திருக்குறள் எழுதிய நமது திருவள்ளுவரின் கூற்றுப்படி பிறவிக் கடலை நீந்திக் கடக்க ஆசையற்றுப்போகும் பட்சத்தில் அமைதியும் ஆனந்தமுமேயான வாழ்க்கை ஒருவரை இன்னும் வாழ ஆசைப்பட வைக்குமேயொழிய ஆசையற்றிருப்பது சாத்தியமல்லவே
மேலும் அமைதியும் ஆனந்தமாக வாழ்பவர்கள் வாழ ஆசைப்படாதது முரணாக உள்ளது. தயைகூர்ந்து விளக்க முடியுமா?
தங்களின் அறம் நூறு நிலங்களின் மலை படித்து கொண்டிருக்கிறேன். என்னமோ இந்த கேள்விகளை உங்களிடம் மட்டுமே கேட்க தோன்றிற்று.
ஏ.முருகேசன்
அன்புள்ள முருகேசன்,
ஏனோ இத்தகைய கேள்விகள் நிறைய வருகின்றன இப்போது. நான் எல்லாக் கேள்வியையும் உகந்த கேள்வியாக ஆக்கிக் கொள்கிறேன்.
பிறவிப்பெருங்கடல் நீந்துவது பற்றி வள்ளுவர் சொல்வதன் பொருள் என்ன? சமண , இந்து மரபுகளின்படி இந்தப் பிறவியில் அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை அடைந்து நிறைவுறுபவர் வீடுபேறு அடைகிறார். வீடுபேறு என்பது மறுபிறவி என்னும் சுழலில் இருந்து விடுபடுவது. அதையே பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடத்தல் என்கிறார்.
அதாவது இங்கே அறம் நிறைந்து, அவ்வறம் செய்வதற்கான பொருள் அடைந்து, இன்பமும் நிறைந்து வாழ்ந்து செல்வதையே வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுவே வீடுபேறு.
ஒருவர் வாழ்வின் இறுதியில் இவ்வாழ்வில் நிறைவுற்றேன் என அகத்தே உண்மையாக உணர்வார் என்றால் அவர் வீடுபேறு அடைகிறார். குறையுடன் உணர்கிறார் என்றால் அவர் விடுதலை அடையவில்லை.
அதற்கு வாழ்ந்து நிறைவது முக்கியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று அதையே வள்ளுவர் சொல்கிறார்.
வள்ளுவர் வாழ்வைத் துறக்கச் சொல்லவில்லை. சிறக்க வாழும்படிச் சொல்கிறார். வாழாது செல்லச் சொல்லவில்லை. வாழ்ந்து நிறையவே அறிவுறுத்துகிறார்.
ஜெ
சாரு, காளிபிரசாத்
விஷ்ணுபுரம் விருது ஒரு கவனிக்க வேண்டிய ஆளுமையை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது. ஆனால் சாரு கவனிக்கப்படாத ஆளுமை கிடையாது. அவரது வாசகப் பரப்பும் பெரியது. ஆனால், அவர் முழுமையாக கவனிக்கப் படவில்லை என்பதும் உண்மை. அவர் மீதான உதாசீனம் என்றும் இருந்தபடியே இருக்கும். சாஹித்ய அகாடமி உள்ளிட்ட வேறு அங்கீகாரம் அவரது எழுத்துகளுக்கு வாய்ப்பில்லை என்றும் தனக்கு விருது என ஒன்று கிடைத்தால் அது விஷ்ணுபுரம் விருதாகத்தான் இருக்கும் என்றும் முன்பு சாரு கூட பதிவிட்டிருந்தார். அதுதான் இப்போது நிகழ்ந்தும் இருக்கிறது.
இராசேந்திரசோழன், பாலியல் விடுதலை
நான் வாசிக்க வந்த காலகட்டத்தில் இராசேந்திர சோழன் அஸ்வகோஷ் என்னும் பெயரில் எழுதிய சிறகுகள் முளைத்து என்னும் குறுநாவலுக்காக இடதுசாரிகளால் வசைபாடப்பட்டார். இன்னொரு பக்கம் அதை ஓர் இன்பக்கிளுகிளுப்பு நாவலாக ஒரு கூட்டம் வாசித்துக் கொண்டிருந்தது. அந்நாவலை இரண்டு மடங்கு நீளமானது அதற்கு அஸ்வகொஷ் எழுதிய நீண்ட முன்னுரை. தமிழில் பாலியல்விடுதலையை அல்லது பாலியல் நெறியின்மையை விரிவாக முன்வைத்த முதல்புனைவு அதுதான். ஆனால் ஆசிரியரின் கிளுகிளுப்புகள் ஏதுமற்ற நேரடியான முற்போக்கு நாவலும் கூட
இராசேந்திர சோழன் – தமிழ் விக்கி
அகிம்சைச் சந்தை
என் பெயர் கார்த்திக். நான் அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு என்னும் முன்னெடுப்பை ஒருங்கிணைத்து வருகிறேன். இந்த கூட்டமைப்பின் நோக்கம் உள்ளூர் வாழ்வாதாரங்கள், கிராமத்து பொருளாதாரம் மற்றும் காந்தி மற்றும் ஜே சி குமரப்பாவின் விழுமியங்களை முன்னிறுத்தி இளைஞர்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்துவது ஆகும். இதன் முதல்கட்டமாக அகிம்சை சந்தை என்னும் நிகழ்வை நடத்தவுள்ளோம். இந்நிகழ்வில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயற்கை உணவு, கைத்தறி நெசவு, சிறு வன உற்பத்தி பொருட்கள் மற்றும் மூலிகை மருந்துகள் என தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ளனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய மாற்றுச் சிந்தனையாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பிற தலைவர்களின் கல்வி அமர்வுகள், பயிற்சி பட்டறைகள், குழந்தைகளுக்கான கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் மாபெறும் இயற்கை கொண்டாட்டமாக இந்நிகழ்வு அமையவுள்ளது. இந்நிகழ்வை துவக்கி வைக்க பூட்டான் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி திரு ஜிகமே தின்லே அவர்கள் வர உள்ளார்.
காந்தி முன் நிறுத்திய பல விழுமியங்கள் நடைமுறை படுத்த படாவிட்டாலும், உலகம் அதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அவரது பொருளாதார சிந்தனைகள் மட்டும் எந்தவித அங்கீகாரமுமற்று உள்ளது. அதே போல காந்திய பொருளாதார கருதுக்களை முன்னிறுத்திய பொருளியல் வல்லுனரான ஜே சி குமரப்பாவின் கருத்துகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் இன்றைய காலகட்டத்திற்கு இவர்களது பொருளியல் கருத்துக்கள் மிகவும் பொருத்தமானதாகும். இதை வலியுறுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
தாங்கள் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலும் இந்த நிகழ்வை பற்றி பரவலாக பகிருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
இப்படிக்கு,
கார்த்திக்.
September 5, 2022
Ponniyin Selvan Game
திரு ஜெயமோகன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.
என் பெயர் தீபிகா அருண். கதை ஓசை (www.kadhaiosai.com) எனும் என் போட்காஸ்ட் தளத்தில் கடந்த 3.5 ஆண்டுகளாக பல கதைகளை ஒலிவடிவில் பதிவிட்டு வருகிறேன். நீங்கள் எழுதிய யானை டாக்டர், டார்த்தீனியம் உள்ளிட்ட சில கதைகளையும் பதிவிட்டுள்ளேன்.
பொன்னியின் செல்வன் நாவலை 2 வருடங்களுக்கு முன் பதிவிடும்போது கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் அந்த புதினத்தின் கதாபாத்திரங்களோடு வாழ்ந்த அனுபவத்தில் கிடைத்த ஒரு யோசனையை இப்போது செயலாக்கம் செய்துள்ளேன்.
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களைக் கொண்டு கார்டு கேம் ஒன்றை வடிவமைத்து இப்போது விற்பனைக்கு வெளியிட்டுள்ளேன் (www.timerollgames.com). நம் சோழர்களின் பெருமையை வெவ்வேறு வடிவில் உலகத்தாரிடம் எடுத்துச் செல்லவேண்டிய கடமை நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நீங்கள் பொன்னியின் செல்வன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அருமையாக கூறியிருந்தீர்கள். எப்படி உலகமெங்கும் ஹார்ரி பாட்டரையும், அவென்ஜ்ர்சயும் கொண்டாடுகிறார்களோ அது போல் நம் தமிழ் அரசர்களையும், இலக்கியங்களையும் கொண்டாட என்னால்
முடிந்த ஒரு சிறு முயற்சி இந்த விளையாட்டு. இத்துடன் விளையாட்டின் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்.
பொன்னியின் செல்வன் புதினத்தின் பாத்திரங்களாக நடித்து, அறிவுக்கூர்மையையும் திறமையையும் உபயோகித்து சக வீரர்களை வென்று அடுத்த சோழ பேரரசரை தேர்வு செய்யும் ஒரு சிறந்த இராஜதந்திரியாக மாறுவதே இவ்விளையாட்டின் குறிக்கோள்!.பொன்னியின் செல்வன் கதையை அறிந்தவர்கள் வெகு உற்சாகமாக இவ்விளையாட்டை விளையாடலாம் ஆனால் கதையை அறியாதவரும் எளிதாக ஆடும் வகையிலேயே இவ்விளையாட்டு அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.
இந்த முயற்சிக்கு உங்கள் அன்பும் ஆசிகளையும் கோரும்,
தீபிகா அருண்
தனித்தவர்களின் பெருவழி
அன்புள்ள அப்பா,
தினமும் உங்களுடன் நான் உரையாடி வருகிறேன்,உங்கள் கைப்பிடித்தே நடந்து வருகிறேன்.
வெண்முரசு தினமும் படித்து வருகிறேன், சிலசமயம் நளதமயந்தியை சிலசமயம் பீமனின் காதலை சிலசமயம் துரியோதனனின் அவன் தம்பியரின் கர்ணன் மீதான அன்பினை, சிலசமயம் தர்மனின் ஊசலாட்டத்தை, எப்போதும் அர்ஜுனனின் வீரத்தை மெய்தேடலை பயனத்தை, இளைய யாதவரின் புன்னகையை அவரின் அருகமைவை நோக்கை உணர்ந்துகொண்டே இருக்கிறேன்.
வெண்முரசை படித்து முடித்துவிட்டேன், திரும்ப திரும்ப படித்துகொண்டே இருக்கிறேன். அதிலிருந்து எவ்வளவு புரிந்துகொண்டேன் என்று தெரியவில்லை,புரிந்துகொள்வதற்கான முயற்சியில் இருக்கிறேன்.
இந்து மதம் சார்ந்து உங்களிடம் கேட்கபட்ட கேள்விகள் அதற்கான பதில்களை படிக்க நேர்ந்தது,அதிலிருந்து எனக்குள் எழும்பிய கேள்விகள் இவை
இந்துத்துவர்கள் இந்துக்கள் வித்தியாசத்தை,பாஜக வை எதிர்ப்பதற்காக இந்து மதத்தை எதிர்க்கும் அற்பத்தை பல தளங்களில் ஏற்கனவே பேசிவிட்டீர்கள்.ஆனாலும்,இந்து என்று உணரும் நான் என்னை இந்துத்துவவாதிகளிடம் இருந்து எப்படி வேறுபடுத்தி மற்றவர்களுக்கு காட்டுவது என்ற தெளிவை என்னால் அடையவே முடியவில்லை.
நான் ஒரு இந்து, ஒரு பெரிய தொடர்ச்சியின் அங்கம்.ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தபோது,அக்கோயிலின் தெய்வத்தைவிட என்னை பெரிதும் கவர்ந்தது கோயில்தான்,அங்கு நிற்கும்போது என்னை ஒருபெரிய சங்கிலியின் கன்னியாக என்னிலிருந்தும் நீளும் கன்னிகளையும் உணர்ந்து வியந்தபடியே இருந்தேன்.இந்து என்ற உணர்வும் அதனடிப்படைதான்,பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பேராலமரத்தில் வந்தனையும் ஒரு பறவையாக என்னை உணரும்போது எனக்கு ஏற்படும் புலாங்கிதம் வார்த்தைகளால் சொல்லபட முடியாதவை
ஆனால்,இங்கிருக்கும் அரசியல் சூழலில் நான் இந்து என்று சொல்லும்போது சங்கியாகிறேன். நீங்கள் உங்களை இந்துவாக முன்வைக்கும்போதெல்லாம்,நீங்கள் ஒரு பாஜக காரர் என்றே அடையாளபடுத்த படுகிறீர்கள், உங்களால் அந்த எதிர்ப்பை சமாளிக்க முடிகிறது அதற்கு பதில்கூறி அவர்கள் வாய் அடக்க முடிகிறது. நாங்கள் என்ன செய்வது? எவ்வாறு எங்கள் செயல்களில் நாங்கள் இந்து மட்டுமே, இந்துத்துவவாதிகள் அல்ல என்று நிலைநிறுத்துவது?பதில்களால் அல்ல செயல்களால் நான் எவ்வாறு ஒரு இந்து மட்டுமே என ஆகிறேன்?
எதிர்ப்புக்கு அஞ்சி ஒருபோதும் நான் இந்து அல்ல என்றோ, இந்து என்ற மதமே இல்லை என்றோ, அல்லது கடவுளே இல்லை என்றோ நான் ஒருபோதும் நினைத்ததோ பேசியதோ இல்லை. ஆனால் அதை சொல்லிவிட்டால் நான் நல்லவன் என்றும் சாதியத்திற்கு எதிரானவன் என்றும் சுலபமாக என்னை காட்டிகொள்ள முடிகிறது,என்னை போன்றோர் பலர் செய்வது அதுவே.
ஆனால்,ஒருபோதும் என்னால் நான் ஒரு இந்து ஆனால் இந்துத்துவவாதியல்ல என்று காட்டிகொள்ளவே முடியவில்லையே,அதை எங்ஙனம் செய்வது?அல்லது அப்படி காட்டிகொள்ள நினைப்பதே தேவையில்லையோ?அறிவுதளத்தில் யோசித்தால் அப்படிதான் நினைக்கதோன்றுகிறது.வாழ்க்கை சூழலில் அதை செயல்படுத்த முடியவில்லை.
எப்போதும்போல மனதுக்குள் இருக்கும் கேள்வி வார்த்தையில் பொருள்பெற்றதா என்ற சந்தேகத்துடன்,இந்த முறையாவது தயக்கமின்றி எழுதியதை உங்களுக்கு அனுப்பிவிடுவேன் என்ற நம்பிக்கையுடனும்..
இராஜேஷ்
அன்புள்ள இராஜேஷ்,ஒவ்வொரு காலகட்டத்திற்கும் விதி கடைந்தெடுக்கும் சாராம்சம் ஒன்று உண்டோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு காலகட்டத்தில் மொத்த உலகமும் போர்களால் கலகங்களால் பஞ்சங்களால் அலைக்கழிந்து அதன் விளைவாக ஜனநாயகத்தை, மானுட சமத்துவத்தை, தனிமனித உரிமையைக் கண்டடைந்தது. அதைப்போல இந்தக்காலகட்டம் உலகம் முழுக்க பலவாறாக மோதி அலைக்கழிந்து அடிப்படைவாதம் நோக்கி, எதிர்மறை மனநிலைகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதா?
ஏனெனில் உலக அரசியலே அதைத்தான் காட்டுகிறது. ஒருதேசத்தில் அல்ல, ஏறத்தாழ உலகம் முழுக்கவே எதிர்நிலை தேக்கநிலை சிந்தனைகளுக்கு செல்வாக்கு உருவாகிறது. இது சீரான, தெளிவான ஒரு போக்காக நமக்குத்தெரியாது. சீரானதும் தெளிவானதுமான போக்கு என்று இதை வரையறை செய்யவும், தர்க்கபூர்வமாக அடுக்கிக்காட்டவும் கூடியவர்கள் அரசியல் விமர்சகர்கள். என்னைப்போல் இலக்கியவாதிகளுக்கு அதில் பெரிதாக தெரிந்துகொள்வதற்கு எதுவுமில்லை. ஆகவே அக்கறையுமில்லை.
நான் பார்த்தவரை, இது மிகச்சிக்கலான ஒரு செயல்முறையாக இருக்கிறது. எறும்பு இறந்த புழுவைத்தூக்கி செல்வதை பார்த்திருப்பீர்கள். நூறு எறும்புகள் கூடி பெரிய புழு ஒன்றை குறிப்பிட்ட திசை நோக்கி இழுத்துக்கொண்டு செல்வதை கண்டு அவற்றின் ஒற்றுமையை எண்ணி நாம் வியந்திருப்போம். ஒரு ரேசர் ப்ளேடை வைத்து அந்தப்புழுவைக் குறுக்காக வெட்டினால் அதன் இரு துண்டுகளும் இருபக்கமாக இழுபடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஒவ்வொரு எறும்பும் தனக்குரிய திசையில்தான் அந்தப் புழுவை இழுக்கிறது என்ற உண்மை திகைப்பூட்டும். ஆனால் ஒட்டுமொத்த விசையாக ஒரு குறிப்பிட்ட திசைநோக்கி அந்தப்புழுக்கள் சென்று கொண்டிருக்கும். எறும்புகள் ஒவ்வொன்றும் பின்னோக்கித்தான் இழுக்கின்றன. அதன் விளைவாக அந்தப்புழு சற்று மேலெழுகிறது. அதன் உராய்வு இல்லாமலாகிறது. அதன் முகப்பைப் பிடித்து இழுக்க்கும் எறும்பின் விசை கூடுதலாக இருப்பதனால் அத்திசை நோக்கி அப்புழு நகர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது.
வரலாறும் அப்படித்தான் இயங்குகிறதோ? இங்கு ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் கருத்துக்கள் மேல் தங்கள் விசையைச் செலுத்துகிறார்கள். முற்போக்கு, அடிப்படைவாதம் இரண்டுமே அப்படித்தான். மொழி, இன, மத, வெறிகள் மற்றும் அரசியல் வெறிகள் அனைத்துமே. விளைவாக நாம் இன்று காணும் ஒரு திசை நோக்கி வரலாறு செல்கிறது. அது தேக்க நிலையின், எதிர்உளநிலையின் அரசியல்.
இங்கு இன்று ஒரு மதவெறி அதிகாரம் நிலைகொள்கிறது என்றால் அதை மதவெறியர்கள் மட்டும் உருவாக்கவில்லை. அவர்கள் நேரடியாக தங்கள் மதவெறியை, அடிப்படைவாத தர்க்கமுறையை முன்வைக்கிறார்கள். அவர்களை மிகத் தீவிரமாக எதிர்க்கும் தரப்புகள் -குறிப்பாக இடதுசாரிகள் மற்றும் மதவெறுப்பாளர்கள் மறைமுகமாகத் தங்கள் விசையை அதற்கு ஆதரவாக அளிக்கிறார்கள்.இரு சாராரும் இரு திசைகளில் இழுப்பதுபோலத் தோன்றும், ஆனால் அவர்கள் இருசாராரும் இணைந்து வரலாற்றை ஒரு திசைநோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று இன்றைய வலதுசாரி -மதவாத- தேக்கநிலை அரசியல்மேல் கடும் எதிர்ப்புடன் செயல்படும் ஒருவர் அந்த உக்கிர மனநிலையை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு, அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் நடுநிலையாளர்களை எதிர்த்து வசைபாடி, அனைவரையும் அதே மதவாத அரசியலை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறார். எனில் அவர் எவருக்காக பணியாற்றுகிறார்?. ஒட்டுமொத்த வரலாற்றில் அவருடைய விசை எதன்பொருட்டு செலுத்தப்படுகிறது?
இன்று இந்துத்துவ அரசியலின் மிகப்பெரிய ஆதரவு விசைகள் என்று நான் நினைப்பது இங்குள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகளும்; அவற்றை இந்துத்துவ அரசியலுக்கு மாற்றாக முன்னிறுத்தும் நிலைபாட்டை எடுக்கும் இடதுசாரிகளும்தான். ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் மேடைக்குச் சென்று இந்துக்கடவுள்களை வசை பாடிவிட்டு வரும் ஒரு முற்போக்காளர் அந்த உரை வழியாக சில ஆயிரம் பேரை இந்துத்துவ அரசியல் நோக்கித் தள்ளிவிடுகிறார். அல்லாஹு அக்பர் என்று பொதுவெளியில் கூச்சலிடுவதை முற்போக்கு என வாதிடும் ஓர் இடதுசாரி உண்மையில் அதன் மறுபக்கக் கூச்சல்களை நியாயப்படுத்திவிடுகிறார்.
ஆனால் அவர் வேண்டுமென்றே செய்யவில்லை. இக்காலகட்டத்தின் உணர்வு அவரில் அவ்வாறு செயல்படுகிறது. இக்காலகட்டத்தின் பொதுவான விதி அதுவென்றால் அவர் அவ்வாறு செய்வதற்கான வரலாற்றின் ஆணை அவருக்குள் இருக்கிறது. அவருடன் விவாதிக்கவே முடியாது. காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்களுடனான எந்த விவாதமும் பயனற்றதே.
இந்த அரசியல் விவாதச் சூழல் நடுநிலை அரசியல், மிதவாத அரசியல், தாராளவாத அரசியல் ஆகியவற்றுக்கு முற்றிலும் இடமில்லாததாக ஆக்குகிறது. இருதுருவங்கள் இறுகியபடியே வருகின்றன. ஒருபக்கம் நீ இந்து என்றால் இந்துத்துவ அரசியலின் தரப்பாகவே இருந்தாகவேண்டும் என்று இந்துத்துவ அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். அவர்களை எதிர்க்கும் மறுதரப்போ அதையே திரும்ப சொல்கிறது, நீ இந்து என்றால் நீ இந்துத்துவ அரசியலின் ஆதரவாளராகத்தான் இருக்க முடியும் இருக்க வேண்டும் என்று.
அதாவது இவர்கள் இந்துக்களிடம் சொல்வது இதுதான்– பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறுள்ள ஒரு மதத்தை, ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் எல்லாத் தருணத்தையும் தீர்மானிக்கக்கூடிய அதன் ஆசாரங்களை, தொன்மையான அதன் நம்பிக்கைகளை, அதில் அமர்ந்து வாழ்ந்த முன்னோர்களின் நினைவுகளை, பல்லாயிரம் ஞானியர் உருவாக்கிய மெய்மரபுகளையும் அதன் விளைவாக எழுந்த கலாச்சார அடையாளங்கள் அனைத்தையும், அதன் வெற்றிகளாக அறியப்படும் இலக்கியங்களையும் கலையையும் முற்றாக நிராகரித்துவிட்டு மட்டுமே ஒருவன் இன்று முற்போக்காக இருக்கமுடியும். இன்று முற்போக்காளன் என்றால் அவன் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை எந்த விமர்சனமும் இன்றி ஏற்கவேண்டும், கிறிஸ்தவ அடிப்படைவாதத்தின் அனைத்து திட்டங்களுடன் ஒத்துழைக்கவேண்டும், இல்லையேல் அவன் இந்துத்துவனாகத்தான் இருக்கமுடியும்– இதுதான் சாமானிய இந்துக்களை நோக்கி முற்போக்காளர்களால் சொல்லப்படுகிறது.
இந்துமதம் அழியவேண்டும், இந்து மதத்தை அழிப்போம் என்று கூவும் ஒருவர் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகப்பேசினால் அது எளிய இந்து மதநம்பிக்கையாளர்களுக்கு எப்படி பொருள்படும்? இவர்களின் அதிகார அரசியலின் பொருட்டு, இவர்கள் கக்கும் காழ்ப்புகளின் பொருட்டு, இவர்கள் முன்வைக்கும் திரிபுபட்ட வரலாற்றுச் சித்திரத்தின் பொருட்டு எத்தனைபேர் தங்கள் மரபை முற்றாகக் கைவிடுவார்கள்? கைவிட மனமில்லாதவர்கள் எங்கு செல்வார்கள்? இதை நம் முற்போக்காளர் யோசிக்க மாட்டார்களா? மாட்டார்கள். இக்காலகட்டம் அவர்களை அப்படி யோசிக்க வைக்காது.
இன்றைய துருவப்படுத்தல்கள் நடுவே ஓர் இந்து செய்வற்கு என்ன உள்ளது என்ற கேள்வி வெவ்வேறு மொழிகளில் என்னிடம் கேட்கப்படுகிறது. அவர்களிடம் கூறுவதற்கு ஒன்றே என்னிடம் உள்ளது. இது துருவப்படுத்தலின் காலம். இன்று ஏதேனும் ஒரு துருவத்தைச் சார்ந்தே இருந்தாகமுடியும் என்பது இவர்களால் நம்மிடம் சொல்லப்படுகிறது. ஆனால் நாம் எந்த நிலைபாடை எடுக்க வேண்டும் என்பதை இவர்கள் சொல்லக்கூடாது ஒருவனுடைய ஆன்மிகம் அழகியல் இரண்டையுமே அரசியல்வாதிகள் முடிவு செய்வதைப்போல கீழ்மையும் வீழ்ச்சியும் வேறொன்றில்லை. அரசியல் மானுட வாழ்க்கையின் மிகச்சிறிய பங்குதான். மானுட ஆழம் மேலும் பல்லாயிரம் மடங்கு விசைகொண்ட உணர்வுகளாலும் , உள்ளுணர்வுகளாலும் ஆனது. அரசியலுக்காக அவற்றை இழந்தோமெனில் நாம் நம்மை அகத்தே அழித்துக்கொள்கிறோம்.
எந்த தெய்வத்தை நான் வணங்கவேண்டும், எந்த மெய்மரபை நான் தொடரவேண்டும், எவ்வண்ணம் இங்கே என் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய அனுபவமும் நான் கற்ற கல்வியும், என் முன்னோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலும்தான் முடிவு செய்யவேண்டுமே ஒழிய ; இன்றைய அரசியலை வழிநடத்தும் வெவ்வேறு அதிகாரக்குழுக்கள் முடிவு செய்யக்கூடாது. ஆகவே ’நீ இந்து ஆகவே நீ இப்பக்கம் வா’ என்று என்னிடம் சொல்லும் குரலை நான் நிராகரிப்பது போலவே ‘இந்துவெனில் நீ அந்தப்பக்கம்தான் செல்வாய், அதை மறுத்துவிட்டெனில் மட்டும் இங்கே வா’ என்று சொல்லும் குரலையும் முழுமையாக நிராகரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்று இதன் நடுவே ஒரு கலாச்சார, சமூக இடத்தையும் நான் எனக்கென உருவாக்கிக்கொள்ள வேண்டும். நான் என் நம்பிக்கையால் இந்து. என் மரபால் இந்து. ஆகவே என்னுடைய அரசியலை அதன்பொருட்டு ஒருவர் விலைகொடுத்து வாங்கிவிட்டார் என்று எண்ணவேண்டியதில்லை. இந்து என்பது என் அரசியல் அடையாளம் அல்ல. நான் நம்புவது நீண்டகால இந்தியப் பாரம்பரியத்தை தானே ஒழிய, அதை அரசியலாக மறுசமையல் செய்த இன்றைய அமைப்புகளை அல்ல. அதை எதிர்க்கிறேன் என்று எண்ணி நான் என் மரபை கைவிட்டுவிட்டு எங்கும் செல்லவும் போவதுமில்லை. ஆகவே அரசியலில் எனது இடம் நடுநிலை.
திரும்பத் திரும்ப நம்மிடம் ஒன்று சொல்லப்படுகிறது – நடுநிலை என்பது போலித்தனம், நடுநிலை என்று ஒன்று இல்லை, நீ நடுநிலை என்றால் என் எதிரியின் தரப்பு. இது ஒரு முற்போக்குத்தரப்பாக இங்கே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தரப்பை உருவாக்கியவர்கள் ஃபாசிஸ்டுகள். இதைப் பேசிப்பேசி நிலை நிறுத்தியவர்கள் ஃபாசிஸ்டுகள். ஃபாசிஸத்தின் உச்ச முழக்கமே இதுதான். ஃபாசிஸத்தின் உச்ச முழக்கத்தை முற்போக்குத் தரப்பினர் கூவிக்கொண்டிருப்பது போல வேதனையூட்டும் வேடிக்கை வேறில்லை. அந்தக் கூச்சலை எந்தச் சொல்லும் மாறாமல் இங்கே வலதுசாரிகளும் இடதுசாரிகளும் போடுகிறார்கள் என்பதைக்காணுங்கள். இருவருக்கும் எதிரி என்பவன் நடுநிலையாளனே.
அவர்கள் நடுவே நின்றுகொண்டு ‘இல்லை எனது மனசாட்சிப்படியும், எனது மெய்யியல் மரபின்படியும் நான் நடுநிலையாளன். எனக்கு ஒர் அரசு தேவை எனில் அதை என் மதத்தைக் கொண்டோ பாரம்பரியத்தைக்கொண்டோ முடிவு செய்யமாட்டேன். அந்த அரசு எனக்கு என்ன பொருளியல் உறுதிப்பாட்டை வழங்கும், என் குழந்தைகளுக்கு எத்தகைய சமூகத்தை உருவாக்கி அளிக்கும், இன்றுவரை மானுடம் உருவாக்கித்தந்த உயர் ஜனநாயக விழுமியங்களை அது எவ்வாறு மதிக்கும் என்ற மூன்று கேள்விகளின் அடிப்படையில் மட்டுமே நான் அவற்றை முடிவு செய்வேன்’ என்று நான் கூறவேண்டும்.
இதை எவ்வாறு கூறுவது என்ற தயக்கத்தை நாம் அடையவேண்டியதில்லை. நமக்குத் தெளிவிருந்தால் ஒவ்வொரு முறையும் உறுதியாக ஆணித்தரமாக நம்மால் அதைச் சொல்ல முடியும். அவ்வாறு சொல்லிப் பயனில்லை என்னுமிடத்தில் அமைதியாக இருப்பதும் நம்மால் இயலும். நம்முடைய ஆன்மபலம் தான் நம்மைத் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய, நம்மைச் சூழ்ந்திருக்கும் சில்லறை மனிதர்கள் அவர்களின் அரசியல் அதிகாரத்தேவைக்கேற்ப உருவாக்கும் கோஷங்களுடன் நாம் ஒருபோதும் இணைந்துகொள்ளக்கூடாது. அது நமது ஆன்மீகச் சாவு என்றே பொருள்படும்.
நாம் நம் அகவாழ்வை இன்றைய அரசியல்கூச்சல்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்மைவிட அறிவிலும் நுண்ணுணர்விலும் மிகக்கீழ்நிலையில் இருப்பவர்கள் நம்மை வகுத்துவிட அனுமதிக்கலாகாது. அவர்கள் பெருங்கூட்டமாக இருந்து பெருங்கூச்சல் எழுப்புகிறார்கள் என்பதனால் அவர்களின் ஆற்றல் பெரிது. ஆனால் தன்னந்தனித்துச் செல்லும் ஆற்றல்கொண்டவனுக்கே அறிவியக்கச் செயல்பாடும் அழகியலும் ஆன்மிகமும் கைவரும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


