அமலை, கடிதம்

அமலை

அன்புள்ள ஜெ,

பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாடல் வந்துவிட்டது. என்னளவில் இதுவே முதல் பாடல். பொன்னிநதி பாடல் நன்றாக இருந்தது. ஆனால் இத்தகைய ஒரு வரலாற்றுப் படத்திற்கு ரஹ்மானால் மட்டுமே தர இயன்ற இசை என அதை சொல்ல இயலவில்லை. ஆனால் இப்பாடல் அசர வைத்துவிட்டது.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே ஏஆரிடம் இருந்து அசத்தலான ஆல்பங்கள் என‌த் தமிழில் வரவில்லை. பிகில், சர்கார், 2.0, செக்கச் சிவந்த வானம் என அவரது ஆல்பங்கள் அனைத்தும் அவரின் பெரும் ரசிகனான எனக்கு சற்று ஏமாற்றம் அளித்தவையே. அதற்கு பொருள் அவை மோசமான இசை என்பதல்ல. அவரின் சிறந்த இசைத் தொகுப்புகளில் அவற்றிற்கு இடமில்லை, அவ்வளவுதான். ஆனால் அத்தொகுப்புகளைக் கேட்கையில் எல்லாம் ஒன்று தோன்றிக் கொண்டே இருக்கும், ஏஆர் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார் என்பது தான் அது. குறிப்பாக தாளத்தில் என்பது எனது எண்ணம். இந்த தொகுப்புகளில் எல்லாம் அவர் மெல்லிசையை அளிக்காமல் ஒரு பாடலை தாளத்தால் மட்டுமே அமைக்க முடியுமா என ஒரு சோதனையைச் செய்து பார்த்துக் கொண்டிருந்தார் என்றே தோன்றும். அந்த சோதனைகளின் விளைகனி என்றே இப்பாடலை சொல்வேன்.

இப்பாடலின் அசாரணத் தன்மை என்பது இதன் தாளக் கட்டு தான். எத்தனை வகையான தாளக் கருவிகளைக் கொண்டு பாடலின் ஃபாவத்தை அவர் அமைத்திருக்கிறார் என்பதில் இருக்கிறது அவரது மேதமை. அதிலும் அவர் பயன்படுத்தியிருக்கும் தாளக் கருவிகள். இத்தகைய வரலாற்று கால படத்திற்கு இசையமைக்கையில் இருக்கும் மிகப் பெரிய இடர் இசைக்கருவிகளின் தேர்வு. நமக்கு அன்றைய இசைக்கருவிகளைக் குறித்து கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவே. விதவிதமான முழவுகளைப் பற்றியும் முரசுகளைப் பற்றியும் வெண்முரசு விரிவாகவே சொல்கிறது. அவற்றின் ஒலிகளைப் பற்றிய கற்பனையை இன்றிருக்கும் தாள இசைக்கருவிகளின் ஒலியமைவோடு பொருத்தி ஒரு நிகர் ஒலியை உருவாக்க வேண்டும். இந்த சவாலில் அனாயசமாக ஏஆர் வென்று காட்டியிருக்கிறார். இப்பாடலில் அவர் பயன்படுத்தியிருக்கும் தந்திக் கருவிகளையும் தாளிசை ஒலியாகவே துள்ளும் படி விட்டிருப்பது பாடல் இடம்பெறும் சூழலையும், ஆதித்த கரிகாலனின் மன ஓட்டத்தையும் தெள்ளத் தெளிவாக பறைசாற்றி விடுகிறது. அனைத்துக்கும் மேலாக தவிலை முக்கியமான இசை மாற்ற சந்திகளில் அவர் பயன்படுத்தியிருக்கும் விதம், அபாரம்.

அந்த தாளத்தில் கன கச்சிதமாகச் சென்று அமர்ந்திருக்கின்றன இளங்கோ கிருஷ்ணனின் அபாரமான வரிகள். இத்தகைய தாளிசைப் பாடலுக்கென தேர்ந்தெடுத்த சொற்கள். அவை பாடகர்களின் குரலில் தாளமாகவே ஒலிக்கின்றன என்பதில் இளங்கோ கிருஷ்ணனின் மொழித்திறன் அரசப்பாதையில் கம்பீரமாக நடையிடும் பட்டத்து யானை என பொலிகின்றது.

அக முக நக
கள்ளாடிட தள்ளாடிட
வாடா தோழா

இக பர சுகம்
எல்லாமிதா
இன்னாதிதா

ஆசை தீதா
உடல் உடல் உடல்
முழுக்க

செறுகளத்து
வடு வடு வடு
இருக்க

ஒருத்தி தந்த
வடு மட்டும்
உயிர் துடிக்க

போன்ற வரிகளைக் கேட்டு அயர்ந்து விட்டேன்.

மன்னித்தோம்
அடி வீழ்ந்த பகைவரை

தண்டித்தோம்
எதிர் நின்ற கயவரை

கண்டித்தோம்
அடங்காரை சிறையெடுத்தோம்

என ஒவ்வொரு வரியும் அளந்தெடுத்து நெய்யப்பட்ட சட்டையென தாளத்தோடு அப்படி இணைந்திருக்கின்றது.

இன்னும் ஒவ்வொரு வரியையும் சுட்டி சொல்லலாம். அப்படியெனில் மொத்த பாட்டையும் எழுத வேண்டியிருக்கும். பாடலைக் கேட்க கேட்க வரிகளுக்கு அமைக்கப்பட்ட இசை என்றே தோன்றிக் கொண்டிருக்கிறது. பாடலின் முதல் வடிவை இளங்கோவும், அதன் இசையமைவை ஏஆரும் முடிவு செய்த பின்னர் வஞ்சிப்பாவின் வார்த்தைக் துண்டுகள் தயாராகி இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஏஆரின் சிக்கலான இசையமைவு கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று என தயங்காமல் சொல்லலாம். மொத்தத்தில் சோழனுக்கான இசை அரசாங்கம் அட்டகாசமாக அமையக் துவங்கிவிட்டது. (இன்று முழுவதும் லூப்பில் இது மட்டும் தான்!!!)

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.