Jeyamohan's Blog, page 1054
February 3, 2021
பதியெழுதல்
அன்புள்ள ஜெ,
ஸ்ரீனிவாசன் தம்பதியினர் திருக்குறுங்குடியில் குடியேறிய செய்தியை முன்பே எழுதியிருந்தீர்கள். நான் அப்போதே நினைத்தேன். அது ஒரு மகத்தான முடிவு என்று. எல்லாராலும் அது முடியாது. மனிதவாழ்க்கையின் எல்லை குறைவு. ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறார்கள் என்று தொடர்ந்து எழுதிவருகிறீர்கள்.
ஆனால் என்ன பிரச்சினை என்றால் பெரும்பாலானவர்கள் புதிய வாழ்க்கையை கண்டு பதறுகிறார்கள். அங்கே பொருத்திக்கொள்ள முடியாமல் அலைக்கழிகிறார்கள். ஆகவே பழகிய வாழ்க்கையை பழகிய தடத்தில் வாழவே விரும்புகிறார்கள்.
நீங்கள் இதை பார்த்திருக்கலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் எப்படி மாறாமல் ஒன்றையே செய்கிறோம் என்பதையே பெருமையாகச் சொல்வார்கள். ‘காலம்ப்ற எழுந்ததுமே ஒரு காபி. அப்டியே ஒரு சின்ன வாக்கிங். நேரா சரவணபவன்லே இன்னொரு காபி’ என்று சொல்வார்கள். இதில் என்ன பெருமை என்று தெரிவதில்லை.
இயந்திரம்போல மாறாமல் வாழ்வதில் என்ன இன்பம்? ஒன்றையே மாறாமல் செய்வதில் என்ன திரில்? ஆனால் இப்படி ஒழுங்கான வாழ்க்கையே உயர்ந்தது என்றும் சீரான வாழ்க்கை என்றும் நம்மில் பலர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கையை சிக்கலில்லாமல் வாழ்ந்து தீர்ப்பதே பெரிய சவால் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் அவர்களின் அந்த முயற்சி போற்றத்தக்கது. அவருக்கு என் வாழ்த்துக்கள்
எஸ்.வரதராஜன்
அன்புள்ள வரதராஜன்
ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கான வாழ்க்கைப்பார்வை உண்டு. அப்பார்வை நீண்டகால வரலாற்றுச்சூழலால் உருவாகி வருவது. வரலாறு மாறும்போது அதுவும் மாறுபடுகிறது. ஆனால் மிகமிக மெல்லவே அது மாறுகிறது. சூழல் மாறியபின்னரும் தலைமுறைகள் மாற சிலகாலம் ஆகும் என நினைக்கிறேன்.
சிலப்பதிகாரம் பூம்புகாரைச் சொல்லும்போது பதியெழுவறியா பழங்குடி கெழீஇய ஊர் என்கிறது. ஊரைவிட்டு செல்வதை அறியாத குடிகளாலான ஊர். ஊரைவிட்டே செல்லாமலிருப்பது ஒரு பெரிய சிறப்பாக ஐந்தாம்நூற்றாண்டு முதலே நம் சமூகமனதில் ஆழப்பதிந்துள்ளது. பதி என்ற சொல்லே பதிதல் என்பதிலிருந்து வந்தது. பதிவு என்றால் வழக்கம். நிலைகொண்டது, மாறாதது பதி.
ஏன்? காரணம் மிக எளிது. அன்று சாமானியர்களுக்கு ஊரைவிட்டு செல்லாமல் வாழ்க்கை இல்லை. போரால், பஞ்சத்தால், குடிப்பூசல்களால் மக்கள் இடம்பெயர்ந்துகொண்டே இருந்திருக்கவேண்டும். பிற்பாடு நோயாலும் இடப்பெயற்சி நிகழ்ந்திருக்கவேண்டும். அரசனுடன் பூசலிட்டும் மக்கள் இடம்பெயர்ந்தனர். புலவர்களும் கைவினைஞர்களும் அலைந்து திரிந்தனர்.
நாம் வரலாற்றைப் பார்க்கையில் மக்கள் இடம்பெயர்ந்து சென்றுகொண்டே இருக்கும் சித்திரங்களைக் காண்கிறோம். பெரும்பாலான குடிவரலாறுகளில் அவர்கள் விட்டுவந்த இடங்களின் செய்திகள் உள்ளன. அவர்கள் எத்தனைமுறை கூட்டாக இடம்பெயர்ந்தனர் என்று எல்லா சாதியவரலாறுகளிலும் சொல்லப்பட்டுள்ளது.அன்று தனிநபராக இடம்பெயர்வது அரிது, எளிதில் இயல்வது அல்ல.ஆகவே கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்தனர். ஒவ்வொரு இடப்பெயர்வும் துயரக்கதை.
அச்சூழலில் ஒரே ஊரில் நிலைத்து வாழ்வதென்பது ஒரு பெருங்கொடையாக, நல்லூழாக பார்க்கப்பட்டது. அது உயர்விழுமியமாக ஆகியது. பூம்புகாரின் குடிகள் இடம்பெயரவில்லை என்றால் அவர்களுக்கு தெய்வம், மக்கள், அரசு ஆகியவற்றால் உருவாகும் எந்த இடரும் நிகழவில்லை என்று பொருள்.
மெல்லமெல்ல இங்கே பேரரசுகள் உருவாயின.சமூகநிலையில் உறுதிப்பாடுகள் அமைந்தன. நிலைபேறுள்ள சமூகங்கள் பல திரண்டுவந்தன. அவையே ஒரு நிலத்தின்மேல் முற்றுரிமை கொண்டன. அவை அந்நிலத்தை ஆண்டன. அங்கு வருபவர்கள் வந்தேறிகள், வரத்தர்கள் என்றெல்லாம் குறைவாக கணிக்கப்பட்டனர். இழிவும் செய்யப்பட்டனர்.
நம் வரலாற்றில் இப்போதும் குடிப்பெயர்வு நிகழ்ந்தபடியே உள்ளது. 1770களிலும் 1870களிலும் இரு பெரும்பஞ்சங்களின் விளைவான குடிப்பெயர்வு. அதன் பின் சென்னை முதலிய நகரங்களை நோக்கிய குடிப்பெயர்வு. விவசாயம் சார்ந்த கிராமப்பொருளியல் அழிந்தபின் இப்போது கிராமங்களிலிருந்து சிறுநகர்களுக்கும் பெருநகர்களுக்கும் குடிபெயர்ந்தபடியே இருக்கிறோம்
ஆகவே குடிபெயராமை இன்றும் ஒரு பெரிய விழுமியமாக கருதப்படுகிறது. குடிபெயராதவர்கள் உயர்ந்தவர்களாக, எந்த இடருக்கும் ஆட்படாதவர்களாக மதிக்கப்படுகிறார்கள். ‘நாங்க தலைமுறைதலைமுறையா இதே ஊருதாங்க” என்று சொல்லும்போது வரும் பெருமிதம் அதுதான்.
அன்றாட ஒழுங்கும் அப்படியே. இன்றும்கூட ஓர் ஒழுங்கான அன்றாடத்தை அமைத்துக்கொள்வது ஓர் ஆடம்பரமாகவே உள்ளது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ‘அத்து அலையும்’ வேட்டை வாழ்வு அல்லது திரட்டும் வாழ்வு. நிலைத்தவேலையில் இருப்பவர்கள்கூட பரக்கப்பரக்க பாயவேண்டியிருக்கிறது. சென்ற காலங்களில் அத்தனைபேருக்குமே இந்த அலைச்சல்தான் வாழ்க்கை
எங்களூரில் ஒரு சொலவடை உண்டு. ‘இருந்து வெத்திலை போடுதவனும் எலை போட்டு சோறு திங்குதவனும், எடம் மாறாம படுக்குறவனும் ஏழு ஜென்மப் புண்ணியம் உள்ளவன்’ சாய்ந்தமர்ந்து சாவகாசமாக வெற்றிலைபோட்டுக்கொள்வது ஒர் ஆடம்பரம். கஞ்சியாக அல்லாமல் இலையில் சோறாகப்போட்டு சாப்பிடுவது அதைவிட ஆடம்பரம். ஒரே இடத்தில் வாழ்க்கை முழுக்க படுக்கைபோட்டு படுப்பது உச்சகட்ட ஆடம்பரம்.
இந்தப்பின்னணியில் சீரான ஒழுங்கான ஓர் அன்றாடவாழ்க்கை வாழ்பவர் உயர்குடி, வசதியானவர் என்று கணிக்கப்படுகிறார். நான் சீரான வாழ்க்கை வாழ்கிறேன் என்று ஒருவர் சொல்லும்போது அலையும் வாழ்வை கடந்துவிட்டேன் என்று அறிவித்துக்கொள்கிறார்
அமைந்த வாழ்வில் இன்னொரு பக்கம் உண்டு. அகப்பயணம் மிக்கவர்கள் சீரான ஒழுங்கான புறவாழ்க்கையை கொண்டிருக்கக்கூடும். உதாரணமாக ஒருவர் ஒரு மாபெரும் அறிவார்ந்த நூல்பணியில் பத்தாண்டுகளாக ஈடுபட்டிருந்தாரென்றால் அவர் மிகச்சீரான ஒரு புறவாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பார். புறவாழ்க்கையிலிருந்து எந்த சவாலும், எந்தச் சிக்கலும் தன்னை வந்தடையலாகாது என்று நினைப்பார். அவருடைய அகப்பயணங்களை அறியாதவர் அவர் இயந்திரமாக வாழ்வதாகவே உளப்பதிவுகொள்வார்.
துறவிகள் ஒரு கட்டத்தில் ஒடுங்கும் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். எந்த ஊரிலும் தங்காமல், பல ஆண்டுகள் அலைந்து திரிந்தபின் அவர்கள் ஓர் ஊரில் தங்கி பின்னர் அங்கேயே வாழ்ந்து நிறைவுறுகிறார்கள். அவர்களின் பயணம் அகப்பெருவெளியில் நிகழ்கிறது
உதாரணமாக, மகாபாரதத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்த வித்வான் பிரகாசம் வாழ்நாள் முழுக்க ஒரே ஊரில், ஒரே தெருவில், ஒரேபோன்ற வாழ்க்கையை வாழ்ந்தவர். யோகி ராம்சுரத்குமார் ஒரே திண்ணையில் வாழ்வில் பாதியைச் செலவிட்டவர்
அதைக்கண்டு, அதுவே இலட்சியவாழ்க்கை என நம்பி சாமானியர்களும் கடைப்பிடிக்கிறார்கள். அறிவார்ந்த பயணமோ, ஊழ்கப்பயணமோ இல்லாதவர்கள் அப்படி வாழ்ந்தால் அவர்களின் உலகம் சுருங்கிக்கொண்டே செல்லும். அங்கே அவர்கள் கல்லினுள் தேரைபோல வாழ்வார்கள்
மிக வியப்பான ஒன்றுண்டு. ஒருவன் தன் புறவுலகைச் சுருக்கிக்கொண்டால் அதற்கேற்ப அகவுலகமும் சுருங்கும். அந்த புறவுலகம் கொஞ்சம் பெரிதாகவே அவனுக்கு தெரியும். மேலும் சுருங்குவான். ஒரே ஊரில் வாழலாம், ஒரே தெருவில் வாழலாம், ஒரே வீட்டில் மட்டுமல்ல ஒரே அறையில்கூட தட்டிமுட்டிக்கொள்ளாமல் வாழலாம். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எண்ணிக்கொள்ளலாம். [இப்பார்வைகொண்ட கிருஷ்ணன்நம்பியின் தங்க ஒரு என்னும் சிறுகதை சுவாரசியமானது]
புறவுலகைச் சுருக்கியவர்களின் உள்ளமும் சுருங்கியிருக்கும். அதற்கேற்ப சிந்தனை, கற்பனை எல்லாமே சுருங்கியிருக்கும். அறவுணர்வு கூட சுருங்கியிருக்கும் என்பதை கண்டிருக்கிறேன். அது ஒரு மானுடக்கீழ்நிலை. ஆனால் இந்தியர்களில் பலர் இன்று அந்த வாழ்க்கையை உகந்து தேடி அதில் அமைந்துகொண்டிருக்கிறார்கள். எப்படியாவது ஓய்வுபெற்று நிம்மதியாக ஓரிடத்தில் ‘செட்டில்’ ஆகிவிடவேண்டும் என்பதே அவர்களின் கனவு. அது பழகிப்போன, வசதியான இடம்தான். பழகிய வாழ்க்கையை மாற்றிக்கொள்வது எளிதல்ல.
சிறிய இடங்களில், ஒரேபோன்ற வாழ்க்கையை வாழலாகாதா என்று என்னிடம் கேட்டால் ‘வாழலாம், நீங்கள் வித்வான் பிரகாசம்போன்ற மாபெரும் அறிவுச்செயல்பாட்டில் இருந்தால். அல்லது நீங்கள் யோகியாக இருந்தால்’ என்று பதில்சொல்வேன்.
இரண்டு நுட்பமான வேறுபாடுகளையும் சொல்லியாகவேண்டும். ஆசாரவாதிகள் ஒரேபோன்ற இயந்திரவாழ்க்கையை வாழ்வார்கள். தாங்கள் யோகியருக்குரிய அகநிலை வாழ்க்கையை வாழ்வதாக கற்பனை செய்துகொள்வார்கள். ஆசாரவாதத்தின் உச்சத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராச்சாரியார் பயணம்செய்துகொண்டே இருந்தார், வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தார் என்பதை மறந்துவிடுவார்கள்
ஆசாரவாதி யோகி அல்ல. அவனுக்கு அகப்பயணமே இல்லை. அவன் புறவாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொள்பவன். அந்த அடிப்படையில் அகத்தையும் இறுக்கி கட்டிக்கொள்கிறான். அவன் கண்களை கட்டிக்கொண்டு, கால்களை நன்கு பழக்கி, கயிற்றில் நடந்து மறுபக்கம் செல்லும் வித்தைக்காரன் மட்டும்தான். அவன் எய்துவது ஏதுமில்லை, அவன் தீங்கற்ற ஒருவாழ்க்கையை வாழ்கிறான் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்
அதேபோல கலைஞர்கள், எழுத்தாளர்கள் தாங்கள் அகப்பயணத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு சிறுவாழ்க்கையை வாழ்வதுண்டு. வித்வான் பிரகாசம் செய்வது அறிவுப்பணி. அதற்கு புறவுலகமே தேவையில்லை. அது மொழியில், அதில்திரண்ட அறிவில் நிலைகொண்டபணி. யோகிக்கும் புறவுலகே தேவையில்லை
ஆனால் கலையும் இலக்கியமும் புறவுலகை அகத்துக்கு இழுத்து சமைத்து மீண்டும் புறவுலகுக்கு அளிக்கும் பணி. அதற்கு புறவுலகம் இன்றியமையாதது. புறவுலகை குறுகலாக வைத்துக்கொண்ட கலைஞர்கள் காலப்போக்கில் சுருங்கிவிடுவார்கள். திரும்பத்திரும்ப ஒன்றையே எழுதுவார்கள்.ச் சாரமில்லாமல் எழுதுவார்கள். மௌனி போல குறைவாக எழுதினால் தப்பிப்பார்கள்.
ஒருவாழ்க்கையில் பலவாழ்க்கையை வாழ்பவர்களே பெரியவாழ்க்கையை வாழ்கிறார்கள். சென்றகாலகட்டத்தின் பெருங்கலைஞர்கள் பலர் அப்படி வாழ்ந்தவர்கள். கலைஞர்கள் அல்ல என்றாலும் வாழ்க்கையை பயனுறுவதாக, மகிழ்வானதாக ஆக்கிக்கொள்ள அதுவே ஒரு பெரிய வழி. இந்நூற்றாண்டில்தான் சாமானியர்களுக்கும் அது வாய்க்கும் நிலை உள்ளது
ஜெ
திருக்குறுங்குடி புகைப்படங்கள் ஆனந்த் குமார்
தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பிஃபாஸிசம், தாராளவாதம்
அன்புள்ள ஆசானுக்கு
சீனுவின் கடிதத்தை தளத்தில் படித்தேன், அவரது கருதும் உங்கள் பதிலும் இங்கே அமெரிக்காவில் வசிக்கும் நம்மவர்களின் முக்கியமான நரம்பை தொட்டு விடும் என்றுதான் நினைக்கிறேன், எதிர் வினைகளை வாசிக்க ஆவலாக உள்ளேன்.
எனக்கு தனிப்பட்ட முறையில் அமெரிக்காவில் இன வெறி பற்றி அதிர்ச்சி இல்லை, நாஜி இனவெறிக்கு அறிவியல் முத்திரை குத்துவதற்காக உபயோகிக்கப்பட்ட Eugenics என்ற சித்தாந்தம் செழித்து வளர்ந்த நாடு இது, சில வகைகளில் ஜெர்மானிய இனவாதிகளுக்கு முன்னோடிகள் கூட., பலருக்கும் தெரிந்த விஷயம் தான் இது.
ஆனால் என் தனிப்பட்ட அனுபவத்தில் ஒப்பு நோக்க அமெரிக்காவில் ஐரோப்பாவை விட தினசரி வாழ்க்கையில் இனவாதம் குறைவு என்று தான் சொல்வேன், உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நகரங்களில் நான் வேலை செய்யும் போது பாஸ்போர்ட்டை பாக்கெட்டில் வைக்காமல் வெளியே கிளம்புவதே இல்லை, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி கேட்டு வாங்கி சோதனை செய்வார்கள், நம் தோல் நிறம் அப்படி. வாங்கி பார்த்து புரியாமல் திருப்பி கொடுப்பார்கள், என்னது கணினி பொறியாளனா? அதுவும் அந்த நிறுவனத்திலா? அவர்கள் எதிர்பார்ப்பது ஈழ அகதியை, பாஸ்போர்ட்டை வாங்கி கையில் வைத்துக்கொண்டு அதை பார்ப்பதற்கு முன் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்ப்பார்கள். அவர்களை குழப்புவதற்காக வேண்டுமென்றே ‘இந்தியாவில் தமிழ் நாட்டிலிருந்து’ என்று சேர்த்துச் சொல்வேன். சிக்கலில் மாட்டினால் நிறுவனம் எப்படியும் துணை வரும் என்ற தைரியம்,
ஆனால் இங்கே அமெரிக்காவில் நான் வசிக்கும் சியாட்டில் நகரத்தில் போலிஸ் துறைக்கு யாருடைய குடியுரிமை ஆவணங்களையும் பரிசோதிக்க உரிமை இல்லை. இங்கே வந்த புதிதில் முதல் முறை என் காதலியுடன்(இப்போது மனைவி) டேட்டிங் போன போது நான் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து எதையோ எடுக்க கீழே விழுந்த பாஸ்போர்ட்டை பார்த்து “உனக்கென்ன பைத்தியமா?” என்று கேட்டாள், காரணம் சொன்னதும் சிரித்து விட்டாள், அவள் இங்கேயே வளர்ந்த இந்தியப்பெண். முறை தவறிய குடியேறிகளுக்கான சரணாலய நகரங்கள் மிக அதிகமாக உள்ளது இங்கே அமெரிக்காவில் தான்(https://en.wikipedia.org/wiki/Sanctuary_city)
தாராளவாதச் சிந்தனையை ஏன் கிறித்தவ மதவெறியின் இன்றைய அவதாரம் என்று சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை, ஒற்றுமைகள் புரிகிறது, இன்று தீவிர தராளவாதியாக உலகெங்கும் ஜனநாயகத்தை மனித உரிமையை பரப்பி உலக நாடுகளை மீட்டெடுக்க இயங்கும் ஒருவரின் கடந்த கால இடம் கிறிஸ்தவ மிசனரிகள் தான்.
ஆனால் உண்மையான தராளவாதிகளின் தர்க்க முறைமைகளும், சமரசமோ கருணையோ அற்ற சுய பரிசோதனைகளும் அவர்களை அறிவியக்கங்களுக்கு அருகே அல்லவா வைக்கின்றன? அவர்களின் தாட்சண்யமே அற்ற சுய கட்டுடைப்புகளை கண்டு பல முறை வியந்துள்ளேன், ஒரு உதாரணம் அவர்களின் கருத்து முகங்களில் ஒன்றான newyorkerஇல் வந்த David Thoreau பற்றிய இந்த கட்டுடைப்பு கட்டுரை (https://www.newyorker.com/magazine/2015/10/19/pond-scum?intcid=mod-most-popular), இதன் தலைப்பை இப்போது மாற்றி விட்டார்கள் உண்மையான தலைப்பு “Pond Scum”, வாதம் வாதமாக எடுத்து வைத்து அவரை ஒரு பொய்யன் என்று சொல்லுகிறார்கள். பொறுக்கி என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறார்கள், அவர் இவர்களின் முன்னோடி அல்லவா? தவறாக புரிந்து கொண்டிருக்கிறேனா?
நீங்கள் குறிப்பிடும் அறிவியக்கத்தின் அரசியல் கிளைக்கருத்து தானே தாராளவாதம் ? இதைப்பற்றி முன்னரே எழுதி இருக்கிறீர்களா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
ஷங்கர் பிரதாப்
அன்புள்ள சங்கர்
அமெரிக்கா- ஐரோப்பாவின் தாராளவாதம்[ லிபரலிசம்] மனித உரிமைகளுக்காகவும், அடிப்படை ஜனநாயகப் பண்புகளுக்காகவும் நிலைகொள்வது என்பதிலும்; இனவெறி நிறவெறி போன்றவற்றுக்கு எதிரான சக்தி அது என்பதிலும் எனக்கு ஐயமில்லை. அதன் புறவயமான தர்க்கமுறை, அதன் அறிவுவழிபாட்டுத்தன்மை உலகுக்கு வழிகாட்டியானது. ஆகவே என்றும் அதை நான் ஆதரிக்கவே செய்வேன்.
ஆனால் அதன் அடியில், அதில் ஒருசாராரிடம், கீழைநாட்டு தொன்மையான பண்பாடுகள் மீதான ஒவ்வாமை இருந்துகொண்டே இருப்பதைப் பார்க்கலாம். இந்து பௌத்த கலாச்சாரங்களை, ஆப்ரிக்க பழங்குடிப் பண்பாடுகளை அவர்கள் மானுடநேயத்திற்கு எதிரானவையாகவும் தீமையின் தொகைகளாகவும் எந்த அடிப்படை அறிதலுமின்றி மிக எளிதாகச் சித்தரிப்பார்கள்.
சென்ற பத்தாண்டுகளில் அமெரிக்க ஐரோப்பியச் சூழலில் கீழைநாடுகள் பற்றி பேசப்பட்ட எல்லாச் செய்திகளும் இந்நாடுகளை கீழ்மைப்படுத்திக் காட்டுபவையாக, அதன்பொருட்டு மிகைப்படுத்தப்பட்டவையாக மட்டுமே இருப்பதை கொஞ்சம் கவனித்தால் நீங்கள் காணலாம். எந்தவகையான நல்ல விஷயங்களும் இந்நாடுகள், இப்பண்பாடுகளைப்பற்றி ஐரோப்பிய- அமெரிக்கப் பொதுவெளியில் பேசப்பட்டிருக்காது.
இவையெல்லாம் ‘மனிதாபிமான’ ‘ஜனநாயக’ அடிப்படையில் லிபரல்களால் பேசப்பட்டவையாகவே இருக்கும். காரணம், ‘பண்பட்ட மேலைப்பண்பாடு x பண்படாத பிறர்’ என்னும் பார்வை அவர்களிடம் ஆழத்தில் உள்ளது. பலசமயம் லிபரலிசம் என்பது மேட்டிமைப்பார்வையின் முகமூடி.
உண்மையில் கீழைநாடுகளைப் பற்றி இன்று உலகம் முழுக்க ஓங்கியிருக்கும் பார்வை இதுதான்.இந்த லிபரல்கள் கீழைநாட்டுப் பண்பாடுகளைப் பற்றிய ‘உண்மைகளை’ச் சொல்வனவாகக் கொண்டாடும் எல்லா இலக்கிய ஆக்கங்களும் இப்பண்பாடுகள் மேல் அறமற்ற தாக்குதல்களை தொடுக்கும், இழிவுசெய்யும் தன்மைகொண்டவைதான். மாறாக உதாரணம் சொல்ல ஒரு படைப்பு, ஒரே ஒரு படைப்பு கூட சென்ற அரைநூற்றாண்டில் கண்ணுக்குப் படவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கீழைநாட்டுப் பண்பாடுகள் மீது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொண்டிருந்த ஆர்வத்தையும் மதிப்பையும் இந்த லிபரல்கள் நொறுக்கிவிட்டிருக்கிறார்கள்.இப்பார்வையின் சாராம்சமாக இருப்பது கிறிஸ்தவ உலகப்பார்வைதான். கிறிஸ்தவம், குறிப்பாக சீர்திருத்தவாத கிறிஸ்தவம், உருவாக்கிய ’நாம் – பிறர்’ என்னும் பார்வை இது. கிறிஸ்தவம் என்னதான் இருந்தாலும் மனிதாபிமானம் கொண்டது ‘மற்றவை’ அப்படி அல்ல என்ற நம்பிக்கையே மேலைநாட்டு லிபரல்களிடம் உள்ளது.
இந்தப்பார்வையை உலகைவெல்ல விரும்பும் கிறிஸ்தவ ஆதிக்கம் எப்போதும் பயன்படுத்திக்கொள்கிறது. இந்த லிபரல்பார்வை கீழைநாடுகளில் ஜனநாயகம், மனிதாபிமானம், மனித உரிமை என்னும் கருத்துக்களினூடாக பரப்பப் படுகிறது. அதற்குப் பெரும் நிதி அளிக்கப்படுகிறது. அதை முன்வைக்கும் அறிவுஜீவிகள் உருவாக்கப்படுகிறார்கள். நிதியால் இங்குள்ள கல்வித்துறை ஊடுருவப்பட்டு அக்கருத்துக்கள் நிறுவப்படுகின்றன. ஊடகங்கள் கைப்பற்றப்பட்டு அக்கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
லிபரல் கருத்துக்களின் தேவையை நாம் நிராகரிக்க முடியாது. அவையே இங்கே அடிப்படை மனித உரிமைக்கான குரல்கள். ஜனநாயகத்திற்கான விசைகள். ஆனால் கூடவே ‘பேக்கேஜில்’ ஒருபகுதியாக இன்னொன்றும் வருகிறது. ஐரோப்ப்பிய அமெரிக்க லிபரல்களிடம் இருக்கும் பிறநாட்டு தொல்மரபுகளை எதிர்மறையாகப் பார்க்கும் மேட்டிமைப்பார்வை.
இவர்களால் கீழைநாடுகளின் பண்பாட்டு அடிப்படைகள் எதிர்மறையாக சித்தரிக்கப்படுகின்றன. அவை இழிவானவை, தீங்கானவை, தேங்கிப்போனவை என்ற சித்திரம் உருவாக்கப்படுகிறது. அதை ஏற்கும் அம்மக்கள் தங்கள் தொல்மரபுகளின்மேல் கசப்பும் எள்ளலும் கொள்கிறார்கள். இதை நம்மைச் சுற்றிக் காணலாம். ஒருவர் அமெரிக்க- ஐரோப்பிய லிபரலிசத்தை ஏற்றவர் என்றால் அவர் நம் மரபுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஏளனம் செய்து வசைபாடுபவராகவே இருப்பார். அவருக்கு தொல்மரபு வரலாறு எதுவுமே தெரிந்துமிருக்காது, ஆனால் கசப்புமட்டும் இருக்கும்.
இந்த கசப்புணர்வுகளை இங்கே வளர்த்து, உடனடியாக அறுவடை செய்பவர்கள் கிறித்தவ மதமாற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களே. ஜப்பான்,கொரியா, இலங்கை,வியட்நாம், பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தியா என கீழைநாடுகள் முழுக்க பௌத்தமும் இந்துமதமும் இப்படி vilify செய்யப்பட்டன, செய்யப்படுகின்றன.
அந்தத் தொல்மரபுகள் அளித்த ஆன்மிகம் அழிக்கப்பட்டுவிட்ட வெற்றிடத்தில் இந்நாடுகளில் கிறிஸ்தவம் பெருகுகிறது. ஏனென்றால் மக்களுக்கு ஆன்மிகம் தேவை. பலசமயம் அது அவர்களின் தெரிவாக இருக்காது, அவர்களுக்கு எது அளிக்கப்படுகிறதோ எது பிரச்சாரம்செய்யப்படுகிறதோ அதுவாகவே இருக்கும்.
உதாரணமாக, தென்கொரியா போன்ற நாடுகளில் பௌத்தம் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டு, படிப்படையாக ‘நாகரீகமற்றது’ என்று காட்டப்பட்டு, அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் மூர்க்கமான, மூடநம்பிக்கை மலிந்த ஒருவகை கிறிஸ்தவம் வேரூன்றிவிட்டிருக்கிறது. அது லிபரல்களால் செய்யப்பட்ட அழிவு. ஆனால் அதைப்பற்றி அமெரிக்க- ஐரோப்பிய லிபரல்களுக்கு புகார்கள் இல்லை. அவர்கள் பலர் அதன் ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். தென்கொரியா ‘நவீன’ப்படுத்தப்பட்டதாகவே அவர்கள் நம்புகிறார்கள்.
நான் தாராளவாதத்தையே ஏற்கிறேன். என் இலட்சியச் சிந்தனையாளர் பலர் அமெரிக்க- ஐரோப்பிய தாராளவாதிகளே. அவர்களை நான் எந்நிலையிலும் நிராகரிக்க மாட்டேன். இந்தியாவின் அல்லது கீழைநாடுகளின் அடிப்படைவாதம், பழமைவாதம் இரண்டையும் நிராகரிக்கிறேன். அவற்றுக்கு எதிரான சக்தியாக மேலைநாட்டு தாராளவாதத்தைப் பார்க்கிறேன்
கூடவே லிபரலிசத்தின் இந்த மேட்டிமைப்பார்வை, அது உருவாக்கும் அழிவு பற்றிய கவனமும் நமக்குத்தேவை என்று சொல்வேன்.
ஜெ
சுனில் கிருஷ்ணனின் “விஷக்கிணறு” வெளியீடு
எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் இரண்டாவது சிறுகதைத்தொகுதியான விஷக்கிணறு வெளியாகியிருக்கிறது. அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி அம்புப்படுக்கைக்காக அவர் சாகித்ய அக்காதமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்றார்.
அதன் பின் அவருடைய முதல் நாவலான ‘நீலகண்டம் ‘ வெளியாகியது. அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் பரவலான வாசிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றவை. தமிழின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் முதன்மையான சிலரில் ஒருவராக சுனில் இன்று இடம்பெற்றிருக்கிறார்
சுனில் கிருஷ்ணனசென்ற 31-1-2021 அன்று சென்னையில் நண்பர்கூடுகையில் எளிமையாக அவருடைய சிறுகதை தொகுதியை வெளியிட்டோம். காளிப்பிரசாத், சௌந்தர், யாவரும் ஜீவகரிகாலன் ஆகியோர் உடனிருந்தனர். நான் நூலை வெளியிட மருத்துவர் மாரிராஜ் பெற்றுக்கொண்டார்.
சுனீல் கிருஷ்ணன் ஒர் இளம் காந்தியச் சிந்தனையாளர் என அறியப்பட்டவர். காந்திய சிந்தனைக்காக இவர் உருவாக்கிய காந்தி டுடே என்னும் தளம் பலநூறு கட்டுரைகள் கொண்டது. காந்திய நூல்களின் தொகுப்பாசிரியராகவும் அறியப்படுகிறார். காரைக்குடியில் மரப்பாச்சி என்னும் இலக்கியக்கூடுகையையும் நடத்திவருகிறார். சுனில் கிருஷ்ணன் தொழில்முறையாக ஓர் ஆயுர்வேத மருத்துவர். காரைக்குடியில் புகழ்பெற்ற மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர்
தன் இரண்டாவது சிறுகதை தொகுதிக்கான முன்னுரைக் குறிப்பில் சுனில் இவ்வாறு சொல்கிறார்.
இக்கதைகளில் பெரும்பாலானவை வெளிவந்த காலகட்டத்தில் பல தரப்புகளில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டவை. முதன்மைக் கதையாகிய விஷக்கிணறு பற்றி இளம் எழுத்தாளரான ஸ்வேதா சண்முகம் எழுதிய குறிப்பு முக்கியமான ஒரு விமர்சனப்பார்வை. இக்கதை பற்றி வாசகசாலை அமைப்பு ஒரு விவாத அரங்கும் ஒருங்கிணைத்துள்ளது. அதில் லாஓசி, அம்பிகாபதி,இந்துமதி ஆகியோர் பேசினார்கள்.
விஷக் கிணறு முன்னுரை – சுனீல் கிருஷ்ணன்சுனீல் கிருஷ்ணனின் விஷக்கிணறு- ஸ்வேதா சண்முகம் எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன் http://www.gandhitoday.in/
வெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’
இப்படிப்பட்ட மாபெறும் வாழ்க்கைச் சூழல்களால் எழுந்த ஞானத்தை அழியா காவியமாக்கும் வியாசர் போன்ற ஆசிரியர்களுக்கு அவர்களின் சொற்களே அவர்களுக்கு அழியாப் புகழும் வீடுபேறும் ஆகும்.
உடனே, பிறப்பால் நாம் அடைந்த கட்டுப்பாடுகளை இயல்பாக எண்ணி ஏற்கும் அடிமைத்தனத்தையே இந்நூல் கூறுகிறதா என ஐயம் எழுவது தவிர்க்க முடியாதது.
வெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’
யதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
‘நித்ய சைதன்ய யதி’ மெய்ஞான நவீன வேதாந்தியை நாங்கள் கண்டடைந்தது உங்களுடைய வார்த்தைச்சொற்கள் வழியாகத்தான். உங்களது ஒவ்வொரு உரையிலும், பெரும்பாலான கட்டுரையிலும் ஏதாவதொரு கணத்தில் யதி அவர்களைப்பற்றி நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு நினைவனுபவமும் எங்கள் மனதை ஒருவித அகயெழுச்சிக்கோ, தத்துவ ரீதியிலான தன்னுணர்தலுக்கோ தூண்டுவதை உணர்ந்திருக்கிறோம். பின்தொடர வேண்டிய ஆசான்களில் ஒருவராக உங்களால் யதி அவர்கள் எங்களுக்குள் அகம்நின்றார்.
ஆகவே, குரு நித்ய சைதன்ய யதி குறித்து சிறந்த புத்தகமொன்றை தன்னறம் நூல்வெளி வாயிலாகப் பதிப்பித்து, வாசகமனதுடன் ஏங்கித்தவிக்கும் எங்களைப் போன்ற நிறைய நண்பர்களுக்கு அந்நூலைக் கொண்டுசேர்க்கவும் உளவிருப்பம் கொண்டிருந்தோம். இக்கனவை சாத்தியப்படுத்தும் செயலுக்கான உதவிநீட்சியாக, ‘யதி: தத்துவத்தில் கனிதல்’ என்னும் தலைப்போடு நித்ய சைதன்ய யதியின் அறிதலனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து கெட்டி அட்டையில் புத்தகமாக கொண்டுவரும் செயலைத் துவங்கியுள்ளோம்.
இப்புத்தகத்தை சமரசமின்றி நேர்த்தியான அச்சுத்தரத்தில் கொண்டுவரும் சாத்தியத்திற்காக, இதற்கென ஒரு புத்தக முன்வெளியீட்டுத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறோம். இதை முதன்முதலில் உங்களுக்கும், உங்களது வாசக தோழமைகளுக்கும், விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களுக்கும் அறிவித்துத் துவங்குவதில் மகிழ்வடைகிறோம். வருகிற (2021) சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகத்தை வெளியிடவும் எண்ணம் கொண்டிருக்கிறோம்.
ஒருவருடம் முன்பாக, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் வாழ்வுவரலாற்று நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகத்தைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்ட அறிவிப்பு முதன்முதலாக உங்களுடைய இணையதளத்தில் வெளியானது. அதன்வழியாக, தோழமையுறவுகள் அமைத்துத்தந்த பொருளியல் உதவிகளின் சூழ்கையால் அப்புத்தகமானது நினைத்தபடி தேர்ந்த நேர்த்தியோடு வெளிவந்து, உள்ளடக்க அளவிலும் அதை வாசித்த அனைவருக்கும் அணுக்கமான புத்தகமாக மாறியது.
இப்பொழுது, நித்ய சைதன்ய யதி அவர்களைப்பற்றிய வாழ்வறிமுக நூலான இப்புத்தகத்திற்கும் அந்த நல்நிகழ்கை நிகழவேண்டுமென்ற நற்கனவை நெஞ்சில் ஆவலுடன் சுமந்திருக்கிறோம். சமகாலத்தில் இச்சமூகத்தில் வாழ்ந்துமறைந்த நவீனவேதாந்தியான ஒரு பெருந்துறவியை, அவருடைய அனுபவ அறிதலின் சொற்கள் வழியாக அறிமுகப்படுத்தும் முதல்நிலைத்தெளிவை இப்புத்தகம் வாசிப்புமனங்களுக்கு நிச்சயம் நல்கும். அத்தகைய மெய்ஞான குருவை தமிழ்ச்சூழலில் தொடர்ந்து பேசியும் எழுதியும் அகம்சேர்த்துப் பரவலாக்கிய உங்கள் படைப்புமனதைத் தொழுகிறோம்.
இப்புத்தகத்தை அதற்குரிய செய்நேர்த்தியோடு உருவாக்கிட, இதன் முன்வெளியீட்டிற்கான நிர்ணயிப்புத் தொகையாக ரூ.400 முடிவுசெய்திருக்கிறோம். முதற்கட்டமாக, குறைந்தபட்சம் 300 நண்பர்கள் இப்புத்தகத்திற்காகத் தொகைசெலுத்தி முன்பதிவு செய்துகொண்டால், கடன்நெருக்கடிகள் ஏதுமின்றி இப்புத்தகத்தை அச்சுப்பதிப்பதற்கான பொருளியலை தன்னறம் நூல்வெளி எட்டிவிட முடியும். தன்னறத்தின் ஒவ்வொரு நகர்வுக்கும் உறுதுணையளிக்கும் அத்தனை மனிதர்களையும் மீளமீள வணங்குகிறோம்.
கரங்குவிந்த நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி
யதி: தத்துவத்தில் கனிதல்
(நித்ய சைதன்ய யதியின் அறிதலனுபவக் கட்டுரைத் தொகுப்பு)
மெய்ஞான முன்னோடிகளான நாராயணகுரு மற்றும் நடராஜகுரு ஆகியோர்களின் தத்ததுவமரபுத் தொடர்ச்சியின் நீட்சியாகத் தனது ஊழ்கத்தில் நின்றுதித்த குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடும் முயற்சியைத் துவங்கியிருக்கிறோம். தனது வாழ்வுப்பாதை குறித்தும், தத்துவதரிசனம் குறித்தும் தான் நம்பியுணர்ந்த உண்மைகளை அறிவுச்செறிவான மொழிநடையில் யதி எடுத்துரைக்கும் புத்தகமாக இந்நூல் அமையவிருக்கிறது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், நிர்மால்யா, பாவண்ணன், சூத்ரதாரி ஆகிய முதன்மைப்படைப்பாளிகள் மொழிபெர்த்துத் தொகுத்த செறிவடர்ந்த கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
முன்பதிவு செய்ய: http://thannaram.in/product/yathi-thathuvathil-kanithal/
புத்தக விலை (கெட்டி அட்டை) ரூ: 500
முன்வெளியீட்டுத் திட்டத்தில் (அஞ்சல் செலவு உட்பட) ரூ: 400
வங்கிக்கணக்கு விபரங்கள்:
THUMBI
Acc.no : 59510200000031
Bank of Baroda
Branch : Moolapalayam – erode
IFSC : BARB0MOOLAP (fifth letter is zero)
Gpay No – 9843870059
தொடர்புக்கு: 9843870059, thannarame@gmail.com
(வங்கிக்கணக்கில் நேரடியாக தொகை செலுத்தும் தோழமைகள் தங்களுடைய முழுமுகவரியை அஞ்சல் எண் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட்டு எங்களுக்கு குறுஞ்செய்தி / வாட்சப் அல்லது மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறோம்)
நன்றியுடன்,
தன்னறம்
February 2, 2021
வெண்கலவாசலின் கதை
நாட்டார்ப்பாடல்களை எப்படி வரலாறாகக் கொள்ளமுடியும்? பெரும்பாலும் அவை தரவுகளால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட பொதுவரலாற்றுடன் பொருந்துவதில்லை. அவற்றில் மிகை இருந்துகொண்டே இருக்கிறது. அவற்றை இலக்கிய ஆதாரமாகக் கொள்ளலாம் என்றால் அவற்றின் சுவடிகள் தொல்லியல் சான்றுக்கு தாக்குப்பிடிப்பவை அல்ல. வாய்மொழியை ஆதாரமாக கொள்ள ஆய்வாளர் தயங்குவார்கள்
அனைத்துக்கும் மேலாக நாட்டார்ப்பாடல்கள் சாதிய வரலாறுகளின் அடிப்படையாக அமைந்துள்ளன. அவற்றில் இருந்தே சாதிப்பெருமிதங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தில் எண்பதுகளில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அரசியலதிகாரத்தை அடைந்தபோது அனைவருமே தங்கள் சாதிப்பெருமித வரலாறுகளை எழுதத் தலைப்பட்டனர். ஒவ்வொரு சாதிக்கும் வீரநாயகர்கள் கண்டெடுக்கப்பட்டு முன்னிறுத்தப்பட்டார்கள். அவர்களின் வரலாற்றை அப்படியே வரலாற்றில் ஏற்றுவது வரலாற்றையே பலவாறாக சிதைப்பது போன்றது. ஏனென்றால் ஒவ்வொரு சாதியின் வரலாறும் இன்னொன்றுக்கு முரணானது. அவற்றை அப்படியே எடுத்தால் ஒற்றை வரலாறாக இணைத்துக்கொள்ள முடியாது
நாட்டார்ப்பாடல்கள் முன்வைக்கும் நாட்டார் வரலாற்றை இணைவரலாறு என்று கொள்ளவேண்டும். வரலாறென்பது ஒற்றை உருவம் கொண்டது அல்ல என்று கொண்டால் அது இயல்வதுதான். இவை மாற்றுவரலாறுகள். இவை மைய ஓட்ட வரலாற்றிலிருக்கும் விளக்கமுடியாத புதிர்களையோ, அதிலிருக்கும் இடைவெளிகளையோ நிரப்புவதற்கு உதவியானவை. அதேபோல இவற்றை எங்கே பொருத்துவது என்பதை மைய ஓட்ட வரலாற்றின் காலச்சட்டகத்தைக்கொண்டு முடிவுசெய்யலாம். ஒன்றையொன்று முரண்பட்டும் நிரப்பியும் முன்செல்லும் இரு ஒழுக்குகளாக இவற்றைக்கொள்ளலாம்.
திரிவிக்ரமன் தம்பிநாஞ்சில்நாட்டில் புகழ்பெற்றிருக்கும் ஒரு நாட்டார் கதைப்பாடல் வெங்கலராசன் கதை. வில்லுப்பாட்டு வடிவிலும் இது உள்ளது. இதை ஒரு நாட்டார்காவியம் என்று சொல்லலாம். தென்னாட்டின் நாட்டார்காவியங்களில் அளவிலும் வீச்சிலும் உலகுடையபெருமாள் காவியத்திற்கு அடுத்தபடியாக இதைச் சொல்லலாம்.
சோழநாட்டிலிருந்து பத்ரகாளியின் மைந்தர்களான ஒரு குடியினர் பாண்டிநாட்டை கடல்வழியும் கரைவழியும் கடந்து குமரிக்கடற்கரைக்கு வந்து சேர்கிறார்கள். அவர்களின் தலைவனின் பெயர் வெங்கலராஜன். நாஞ்சில்நாட்டிலுள்ள பறக்கை என்ற ஊரை அவர்கள் தங்கள் வாழ்விடமாக தெரிவுசெய்தனர். வெங்கலராஜன் அப்பகுதியின் அரசனாக ஆனார்
பறக்கை என்பது பக்ஷிராஜபுரம் என்று பெயர் பெற்ற வைணவத்தலம். அதன் தமிழ்ப்பெயர் பறவைக்கரசனூர்,அதன் சுருக்கமே பறக்கை. பறக்கை கோயிலில் வழிபடுவதற்காக வஞ்சிநாட்டை ஆட்சிசெய்த ராமவர்மா மகாராஜா வருகிறார். அவர் விழாவில் ஒர் அழகியைப் பார்க்கிறார். அவள் யாரென விசாரிக்கிறார். அவள் வெங்கலராஜனின் மகள் என்று தெரிகிறது
வெங்கலராஜனிடம் மகாராஜா ராமவர்மா அவர் மகளை அரசியென கேட்கிறார். குடிமாறி பெண்கொடுக்கச் சித்தமில்லாத வெங்கலராஜன் அதற்கு மறுக்கிறார். ராமவர்மா மகாராஜா கோபமடைந்து படைகொண்டு வருகிறார். வஞ்சிநாட்டின் பெரிய படையை எதிர்க்கும் படைபலம் வெங்கலராஜனிடம் இல்லை. ஆகவே அவர் தன் மகளின் கழுத்தை வெட்டி தலையை ஒரு தாம்பாளத்தில் வைத்து ராமவர்மாவுக்கு பரிசாக அளிக்கிறார். பறக்கையியிலிருந்து கிளம்பி நெல்லை சென்று பாண்டிய எல்லைக்குள் குரும்பூர் என்ற ஊரில் குடியேறிவிடுகிறார். அங்கே ஒரு சிறிய அரசை அவன் அமைக்கிறார்
இன்னொரு கதைப்பாடல் உள்ளது, அது வெங்கலவாசல் மன்னன் கதைப்பாட்டு எனப்படுகிறது. இதுவும் கிட்டத்தட்ட வெங்கலராஜன் கதைதான். ஆனால் கதை நடப்பது மணவாளக்குறிச்சி அருகே உள்ள படைநிலம் அல்லது படர்நிலம் என்ற ஊரில். அரசன் திருவிழா பார்க்க வருவது மண்டைக்காட்டு கோயிலில். ஒரு மகளுக்கு பதில் இரண்டு மகள்கள். தலைவெட்டி காணிக்கையாக்கவில்லை, இரு மகள்களையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குதிக்கிறார்
வெங்கலவாசல் மன்னன் கதை பிற்காலத்தையதாக இருக்கலாம். ஏனென்றால் மண்டைக்காடு ஆலயமே பிற்காலத்தையது. மேலும் கதையும் மிக எளிமையானதாக உள்ளது
வெங்கலராஜன் என்ற பெயர் அவருடைய இயற்பெயர் அல்ல. அந்த சிறுமன்னன் தன் மாளிகையில் வெண்கலத்தாலான பெரிய கதவை வைத்திருந்தார். ஆகவே அப்பெயர் பெற்றார். வெண்கலத்தாலான கோட்டை என்று அது புகழ்பெற்றது
தென் நாஞ்சில்நாட்டில் வந்து
சிறந்த வெங்கலக் கோட்டையிட்டு
வெங்கல கோட்டையதிலே
வீற்றிருக்கும் நாளையிலே
பங்கஜம்சேர் பூவுலகில்
பறக்கை நகரமானதிலே
மதுசூதனப்பெருமாளுக்கு
வருஷத்திருநாள் நடத்தி
பதிவாக தேரோடி
பத்தாம் நாள் ஆறாட்டும் நடத்தி
அ.கா பெருமாள்என்னும் வகையில் ஒழுக்குள்ள நாட்டுப்புற பண்ணுடன் இப்பாடல் அமைந்திருக்கிறது. திரிவிக்ரமன் தம்பி பதிப்பித்த வெங்கலராஜன் கதையின் வடிவம் இது.
குமரிமாவட்ட நாட்டாரிலக்கியங்களை பதிப்பித்த முன்னோடியான ஆறுமுகப் பெருமாள் நாடார் “வலங்கை நூல் எனும் வெங்கலராசன் காவியம்” என்ற தலைப்பில் 1979 ஆம் ஆண்டில் வெங்கலராஜன் கதையை பதிப்பித்தார். இந்த பாடல் கிபி 1605ல் [ மலையாளக் கொல்லம் ஆண்டு 781] அகஸ்தீஸ்வரம் ஆறுமுகப் புலவர் என்பவரால் இயற்றப்பட்டது என்பதற்கான சான்று பாடலில் உள்ளது.
இந்நூல் நாடார் குலத்தவரைப் பற்றியது. நாடார்கள் இந்நூலில் வலங்கை உய்யக்கொண்டார்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் சோழநாட்டில் இருந்து கிளம்பி தென்குமரி நாட்டுக்கு வந்த கதை பல்வேறு மகாபாரதப் புராணக்கதைகளுடன் கலந்து சொல்லப்படுகிறது. இவர்கள் கந்தம முனிவரிடமிருந்து தோன்றியவர்கள். வெவ்வேறு முனிவர்களின் கோத்திரங்களும் உள்ளே உள்ளன. குமரிமாவட்டத்திற்கு கதை வந்தபின்னர்தான் வரலாற்றுச்செய்திகள் துலக்கமடைகின்றன. பண்டைய திருவிதாங்கூரின் ஊர்களும் மரபுகளும் சொல்லப்படுகின்றன
[அ.கா.பெருமாள் அவர்களின் நூலில் இருந்து வெண்கலராஜனின் கதையை இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் விக்கியில் தட்டச்சி வலையேற்றம்செய்தேன்.அது முரசு அஞ்சல் எழுத்தில். யூனிகோடு மாற்றத்தில் இன்று அதில் ஆ என்ற எழுத்து காணாமலாகியிருக்கிறது. பார்க்க வெங்கலராஜன் கதை.]
வெங்கலராஜன் கதையின் வேறுசில வடிவங்களில் இன்னும் பெரிய ஒரு சித்திரம் உள்ளது. ஆய்வாளர் ராமச்சந்திரன் விரிவான கட்டுரை ஒன்றில் அதைச் சுட்டுகிறார். [வெங்கலராசன் கதையை முன்வைத்து ஓர் ஆய்வு. ராமச்சந்திரன்]
ராமச்சந்திரன்காந்தம ரிஷி வழிவந்தவர்களாளாகிய வலங்கை நாடார்கள் சோழநாட்டில் புட்டாபுரம் என்னும் ஊரில் ஆட்சி புரிந்து வருகின்றனர். சோழ அரசன் அவர்களிடம் காவேரிக்கு குறுக்காக ஓர் அணையைக்கட்ட ஆணையிடுகிறான். அதை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள். போர்க்குடியினராகிய தாங்கள் எந்நிலையிலும் தலையில் மண்சுமக்க மாட்டோம் என்கிறார்கள்.
சோழனுடன் போர் வருகிறது. எழுநூற்றுவர் எனப் பெயர் பெற்ற வலங்கைத் தலைவர்கள் புட்டாபுரம் கோட்டையிலிருந்து இடம் பெயர்ந்து செல்கின்றனர். தொண்டைநாடுக்கு ஒரு கிளை செல்கிறது. ஒருகிளை இலங்கைக்குச் செல்கிறது. இலங்கைக்குச் சென்றவர்களின் இளம்பனைக்கா எனப்படும் இடத்துக்குச் சென்று கள்ளிறக்கும் தொழில் செய்து பெருஞ்செல்வர்கள் ஆகிறார்கள்.
அந்த குலத்தைச் சேர்ந்த வீரசோழ நாடான் என்பவன் ரசவாதம் கற்றுப் பொருள் சேர்த்து அதிகாரமும் செல்வாக்கும் பெறுகிறார். அவனுக்கு வெள்ளைக்காரனின் ஆதரவு கிடைக்கிறது. வீரசோழ நாடான் ‘சாணான் காசு’ எனப்படும் பொற்காசு அடித்துப் புழக்கத்தில் விடுகிறார். தனது உருவத்தைக் காசில் பொறித்து வெளியிடுமாறு வெள்ளைக்காரன் கேட்கிறான். வீரசோழ நாடான் மறுத்ததால் வெள்ளைக்காரன் வீரசோழ நாடானைக் கொன்று விடுகிறான். வீரசோழ நாடானின் மகன் வெங்கலராசன் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களுடன் தப்பி உயிர் பிழைத்துக் கப்பலேறித் தென் தமிழகக் கடற்கரைக்கு வருகிறார்.
வெங்கலராஜன் குமரிக்கருகிலுள்ள மணக்குடிக் காயலில் கரையிறங்கிச் சாமிக்காட்டு விளையில் வெண்கலக் கோட்டை கட்டி வாழ்கிறார். கம்மாளர் உதவியுடன் காசு அடித்து வெளியிடுகிறார். ஒரு முறை சுசீந்திரம் தேரோட்டம் காண அவருடைய இரு மகள்களும் சென்றிருந்த போது திருவிதாங்கோட்டு ராஜா ராமவர்மா அவர் மகளைக் கண்டு ஆசைப்பட பூசல் உருவாகிறது. அவர் தன் மகள்களை கொன்றுவிட்டு இடம்பெயர்கிறார்
அ.கா.பெருமாளின் மாணவரான தே.வே.ஜெகதீசன் வெங்கலராஜன் கதையின் சுவடியை கண்டு எடுத்து ஒப்பிட்டு விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் தன் முனைவர்பட்ட ஏட்டை வெளியிட்டார். அது பின்னர் ’பத்ரகாளியின் புத்திரர்கள்’ என்றபேரில் தமிழினி வெளியீடாக வந்தது.
இந்தக்கதைகளை ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ள பல வரலாற்றுச் செய்திகளை ஆராயவேண்டியிருக்கிறது. சோழநாட்டில் பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கன் காலம் முதல் சாதிகள் நடுவே வலங்கை இடங்கைப்பூசல் நிகழ்ந்திருக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலகட்டத்தில் அது உச்சத்தை அடைந்து சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கே காரணமாகியது.
வலங்கை இடங்கைப் போர் என்பது சாதிகளின் தரநிலையில் உருவான மாற்றத்தால் எழுந்த பூசல் என்பது பொதுவான ஊகம். வலங்கையர் பொதுவாக போர்வீரர்கள், நிர்வாகிகள், வணிகர், நிலவுடைமையாளர். இடங்கையர் உழைப்பாளிகள்.ஆனால் இன்று கிடைக்கும் வலங்கை இடங்கை பட்டியல்களைக்கொண்டு எதையுமெ சொல்லிவிடவும் முடிவதில்லை.பறையர்கள் வலங்கையிலும் வேறுசில சாதிகள் இடங்கையிலும் இருக்கிறார்கள்.
சோழர் காலத்தில் பாசனம் பெருகி புதியநிலங்கள் வேளாண்மைக்கு வந்து, செல்வநிலைகளில் மாறுதல் ஏற்பட்டபோது பலசாதிகள் சாதிப்படிநிலைகளில் மேம்பட விரும்பின. தங்களை மேம்பட்டவர்களாக அறிவித்துக்கொண்டு உரிமைகோரின. அதை பழையசாதிகள் எதிர்த்தன. அதன்விளைவாக உருவான கலகங்களில் பலர் கொல்லப்பட்டு ஊர்கள் அழிக்கப்பட்டன. சோழர்படைகள் அந்த கலகங்களை மூர்க்கமாக அடக்கின. இச்சித்திரத்தை கே.கே.பிள்ளை விரிவாக எழுதியிருக்கிறார்.
அந்தச் சூழலையே வெங்கலராஜன் கதையின் தொடக்கம் காட்டுகிறது என்று தோன்றுகிறது. சாதிப்படிநிலை மாற்றத்தை விரும்பாமல் ஊரைவிட்டுச் சென்றவர்களின் வரலாறாக நாடார்களின் இடம்பெயர்வை அது சித்தரிக்கிறது. அவர்களில் ஈழத்துக்குச் சென்று செல்வம் சேர்த்து அங்கிருந்து திரும்பி நாஞ்சில்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். ஈழத்தில் அவர்கள் ஓரிரு நூற்றாண்டுகள் இருந்திருக்கலாம். ஏனென்றால் அவர்கள் அங்கிருந்து மீண்டும் கிளம்ப வெள்ளைக்காரர்கள் காரணமாகிறார்கள்.
ஈழத்தில் இவர்கள் போர்ச்சுக்கீசியர்களின் ஆதரவுடன் இருந்திருக்கலாம். ஆனால் ஒருகட்டத்தில் இவர்கள்மேல் போர்ச்சுக்கீசியர் ஆதிக்கம் செலுத்த முற்பட்டபோது அதை எதிர்த்து அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். நாணயத்தில் உருவம்பொறித்தல் என்பது ஆட்சிமேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்றே பொருள் தருகிறது
இவர்கள் குமரிநிலத்துக்கு வந்த காலகட்டம் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினாறாம் நூற்றாண்டாக இருக்கலாம். இக்காலப்பகுதி குமரிமாவட்ட வரலாற்றில் புகைமூட்டமானது. சோழர்களின் ஆதிக்கம் பதிமூன்றாம் நூற்றாண்டில் அழிந்தது. பதினேழாம்நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு மார்த்தாண்டவர்மாவால் வலுவாக நிறுவப்பட்டது. இவ்விரு காலகட்டங்களிலும் புதிய ஆதிக்கங்கள் உருவாக முடியாது. இந்த இடைக்காலகட்டத்தில் குமரிமாவட்டம் பல்வேறு ஆதிக்கங்களுக்கு ஆளாகி பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு சிதறிக்கிடந்தது. மதுரைசுல்தான்களும் பின்னர் மதுரைநாயக்கர்களும் இங்குள்ள ஆட்சியாளர்களிடம் கப்பம் பெற்றனர்.உலகுடையபெருமாள் கதை போன்ற கதைகள் காட்டும் காலகட்டமும் இதுவே.
இவ்வண்ணம் நாடார் சாதியினரில் அரசர்கள் உருவாக அன்று வாய்ப்புண்டா என்னும் கேள்வி எழலாம். இந்தியாவின் அரசாதிக்கம் என்பது வரம்பில்லா முடியாட்சி அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுக்க அரசனின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அரசப்படைகள் முழுநாட்டையும் காப்பதுமெல்லாம் 1729ல் மார்த்தாண்டவர்மா ஆட்சிக்கு வந்தபின்னர்தான் திருவிதாங்கூரில் நிகழ்கிறது. அது ஐரோப்பிய ஆட்சிமுறை. அதை உருவாக்க அவருக்கு அவருடைய பெரியபடைத்தலைவனும் டச்சுக்காரனுமான பெனெடிக்ட் டி லென்னாய் உதவினார்.
அதற்கு முன்பும் , சோழர்கள் ஆட்சிக்காலத்திலும் எல்லாம் இங்கிருந்த ஆட்சிமுறை ஆதிக்கத்தின்மேல் ஆதிக்கம் என செல்வது. ஒரு நிலப்பகுதியை ஒரு குலம் கைப்பற்றி முற்றுரிமைகொண்டு வாழ்கிறது. அங்கே அவர்களின் தலைவர்கள் குறுஆட்சியாளர்களாக ஆள்கிறார்கள். அப்படி பல குறுஆட்சியாளர்களின் ஆட்சிக்குமேல் சிற்றரசர்களின் ஆதிக்கம் நிகழ்கிறது. இந்த குறுஆட்சியாளர்கள் மாடம்பிகள்,நாடுவாழிகள் என்று கேரளவரலாற்றில் பதினெட்டாம் நூற்றாண்டுவரைக்கும்கூட நீடித்தனர். மார்த்தாண்டவர்மாவும் கொச்சியில் சக்தன் தம்புரானும் ஈவிரக்கமில்லாமல் அவர்களை அழித்தே முற்றதிகாரத்தை கைப்பற்றினர்.
அன்று வேணாட்டில் [பண்டைய திருவிதாங்கூர்] பல சிற்றரசர்கள் இருந்தனர். அவர்கள் கூடி ஒரு பொதுப்புரிதலின் அடிப்படையில் அரசராக ஒருவரை ஏற்றனர். ஒவ்வொரு ஓணக்கொண்டாட்டத்திற்கு முன்னரும் அப்படி அரசரை ஓணக்காணிக்கை அளித்து, ஓணவில் படைத்து, அரசராக ஏற்றுக்கொள்ளும் சடங்கு உண்டு. அந்த ஓணவில்லை பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் காணலாம். ஆகவே பதினைந்து பதினாறாம்நூற்றாண்டுகளில் ஈழத்திலிருந்து செல்வதுடன் வந்து ஒரு நிலப்பகுதியை கைப்பற்றி அங்கே குறு ஆட்சியாளர்களாக நிலைகொள்வது முற்றிலும் இயல்வதே. அவர்கள் கொஞ்சம் படைபலமும் பணபலமும் இருந்தால் சிற்றரசர்களாக ஆவதும் நிகழக்கூடியதே.
எப்போதுமே சிற்றரசர், குறுஆட்சியாளர்களுடன் அரசருக்கு இருக்கும் உறவு முரண்பாடுகள் கொண்டதுதான். அவர்களை அணைத்துப்போய் கப்பம்பெற்றுக்கொள்ளவே அரசர் முயல்வார். எதிர்த்தால் படைகொண்டுவந்து அழிக்கவும் செய்வார். குறுஆட்சியாளர்களும் சிற்றரசர்களும் வேறு துணைவர்களை தேடிக்கொண்டால் அரசரை எதிர்த்து வெல்லவும்கூடும். சங்ககாலம் முதல் நமக்கு தொடர்ச்சியாக முடிகொண்ட மூவேந்தர்களும் சிறு-குறு ஆட்சியாளர்களும் நடத்திக்கொண்ட போர்களின் காட்சி காணக்கிடைக்கிறது. வெங்கலராஜனுக்கும் வேணாட்டு அரசருக்குமான போரும் அவ்வாறான ஒன்றே
இந்தப்போரிலும்கூட சங்ககாலத் தொடர்ச்சியை காண்கிறோம். அரசர்கள் சிறுகுடி அரசர்களின் பெண்களை கோருவதும் அவர்கள் மறுப்பதும் போர்நிகழ்வதும் புறநாநூறு முதல் காணக்கிடைக்கிறது. ‘மகடூஉ மறுத்தல்’ என்னும் துறையாக அது குறிப்பிடப்படுகிறது. அதுதான் இங்கும் நிகழ்கிறது. மகாபாரதம் முதல் இப்பூசல் காணக்கிடைக்கிறது. இது வெறுமே பெண்ணைபார்த்து ஆசைப்படுதல் அல்ல. ஓரு நிலப்பகுதியை கைப்பற்றி ஆட்சி செய்யும் செல்வாக்குள்ள சிற்றரசனின் மகளை அரசன் வலுக்கட்டாயமாக மணம்செய்துகொள்வது அவனுடன் குருதியுறவு கொள்வதுதான். அவனை மணவுறவின் வழியாக தன்னைவிட்டு விலகமுடியாதவனாக ஆக்கி தன் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டுவது.
அதை பொதுவாக சிற்றரசர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அந்த புதிய அரசியின் படிநிலை ஒரு கேள்வி. வெறும் ஆசைநாயகி [கெட்டிலம்மை, பானைப்பிள்ளை என இவர்கள் சொல்லப்பட்டார்கள்] ஆக அவளை அரசர் வைப்பார் என்றால் அது பெண்கொடுத்தவனுக்கு புகழ் அளிக்காது, அதிகாரமாகவும் மாறாது. அவள் அரசியாக வேண்டும். அதில்தான் பூசல்கள் எழும், மற்ற குறுஆட்சியாளர்கள் ஏற்கமாட்டார்கள்.அப்படிப்பட்ட பூசலாக இது இருந்திருக்கலாம். வெங்கலராஜன் வேணாட்டு அரசனுக்கு தன் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு வரண்ட அரைபாலை நிலமான குரும்பூருக்கு செல்கிறார். குரும்பூர் -இத்தாமொழி வட்டாரம்தான் இன்றும் நாடார்களின் மையமாக உள்ளது.
வெங்கலராஜன் கதையில் மேலும் பலநுட்பங்களை ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். அவர்கள் ஈழநாட்டிலிருந்து வந்தார்கள் என்பது முக்கியமானது. பனையிலிருந்து பனைவெல்லம் எடுக்கும் முறையை அங்கே கற்று அங்கிருந்து இங்கே கொண்டுவந்தார்கள். பனைவெல்லம் காய்ச்சும் முறை கம்பொடியா முதலிய நாடுகளில் முன்பே தேர்ச்சியுடன் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் இலக்கியங்களில் கரும்புவெல்லம் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. பனைவெல்லம் பேசப்படவில்லை. அதற்கு தமிழில் பெயரே இல்லை. பனைவெல்லம் அல்லது கருப்புகட்டி என்பது போடப்பட்ட காரணப்பெயர்தான்.
கருப்புகட்டி செய்யும் தொழில்நுட்பம் வெங்கலராஜன் வழியாக வந்து நாடார்களை செல்வந்தர்களாக ஆக்கியது. ரசவாதம் கற்றுத்தேர்ந்து இங்கே வந்தார்கள் என்ற நுட்பமும் முக்கியமானது. அது தங்கம் காய்ச்சுவதை குறிப்பிடவில்லை. போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து பெற்ற வேதியியல் அறிவையே சுட்டுகிறது. அக்காலகட்டத்துக்கு தேவையான சில வணிக அறிதல்களாக இருக்கலாம். நாடார்கள் அக்காலத்தில் ஈழவர்கள் என்று தென்தமிழ்நாட்டில் அறியப்பட்டதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்
பத்ரகாளியின் புத்திரர்கள் என நாடார்கள் தங்களை அழைத்துக்கொண்டனர். பனைத்தொழில் விரிந்தபோது பல்லாயிரம்பேரை தொழிலுக்காகச் சேர்த்துக்கொண்டனர். அவ்வாறு மேலும் பெருகினர். அவர்களின் கதையாக எப்படி இந்த நூலை வாசிக்கலாம் என்பதை தெ.வே.ஜெகதீசனின் நூல் விரிவாக விளக்குகிறது.
நாட்டார் வரலாற்றை உரியமுறையில் இணைத்துக்கொண்டு மையவரலாற்றை வாசிப்பதே இனிவரும் காலகட்டத்தில் வரலாற்றாசிரியர்களின் பணியாக இருக்கும். சார்புகள் இல்லாமல் அதைச்செய்வதும் எளியபணி அல்ல. தமிழக வரலாற்றில் பதிநான்காம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் மிகமிகக்குழப்பமானது. சிறுசிறு அரசர்கள் தோன்றி மறைந்தனர். அதிகாரப்பூசல் உச்சத்திலிருந்தது. பொதுவாகவே படையெடுப்புகளின் காலம் இது. ஆங்கிலேயர் வருகையுடன் அந்த காலகட்டம் முடிவுற்றது. அந்த காலகட்டத்தைக் காட்டுவனவாகவே பெரும்பாலான நாட்டார் பாடல்கள் உள்ளன என்பது ஒரு நல்லூழ். அந்த சிக்கலான காலகட்டத்தை இப்பாடல்களின் சாராம்சமான செய்திகளைக்கொண்டு எப்படி புரிந்துகொள்வது என்பதே அறைகூவல்.
ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான்.
இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ. சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது. என் தணியாத பாசத்தால் ஈரமானது. என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது. குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம்.
எழுத்தாளர் ஜெயமோகன் [முன்னுரையில்..]
தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக, ‘ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது. “தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம்” என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை, எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது.
குழந்தைகள் சார்ந்தும் அவர்களில் மொழியும் அறிதலும் எவ்வாறு படிமம் கொள்கிறது என்பதுசார்ந்து அவதானிக்க விழைபவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசித்துணர வேண்டிய புத்தகம் இது. வளர்ந்த பெரியவர்களுக்கு குழந்தைகளுலகை அறிமுகப்படுத்துகிற பலநூல்கள் இதுவரை தமிழ்ச்சூழலில் வந்திருக்கக்கூடும். ஆனால், அதைச் சொல்லவந்த முறைமையில் மரபின் உள்ளார்ந்த தன்மையைக் கருத்தில்கொண்டு தனிச்சிறந்த செறிவுமொழியில் துல்லிய அனுபவக்குறிப்புகளோடு வெளிப்படுத்திய முதல்நூல் என்றும் இதனைக் குறிப்பிடலாம். வடிவமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்று அச்சுக்குச் சென்றிருக்கிற இப்புத்தகம், இவ்வருட சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியீடு அடைகிறது.
இப்படிக்கு,
தன்னறம் நூல்வெளி
விஷ்ணுபுரம் வாசிப்பு -பிரவீன்
நூலினை வாசிக்க வாசிக்க பல்வேறு இடங்களில் நம்மை அறியாமலேயே மயிர்கூச்சு அடைகிறோம். சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, அதில் சில தர்க்கத்தின் முடிச்சினை நாம் அறிந்த உவகையினாலும் , சில தரிசினத்தின் தொடக்க புள்ளியைக் கண்ட பொழுதுமாக உள்ளது. தர்க்கத்திருக்கும் தரிசினத்திற்கும் நடக்கும் இடைவிடாத கண்ணாமூச்சி ஆட்டமாக இந்நூல் உள்ளதோ என்ற சிந்தனையும் எழுகிறது. அல்லது மனித மனதிற்கு அப்பாற்பட்ட வேறொன்றை தொட முயலும் ஒரு பெரும் முயற்சியாக நான் இதைப் பார்க்கிறேன்.
விஷ்ணுபுரம் வாசிப்பு -பிரவீன்இசூமியின் நறுமணம் – காணொளி இணைப்புகள்
இசூமியின் நறுமணம் நிகழ்வின் காணொளி இணைப்புகள் உங்கள் பார்வைக்கு..
yaavarum.com ஒருங்கிணைப்பில்
ரா.செந்தில்குமார் எழுதிய “இசூமியின் நறுமணம்”
சிறுகதை நூல் வெளியீட்டு விழா
அகரமுதல்வன் உரை
லீனா மணிமேகலை உரை
சாம்ராஜ் உரை
ரா.செந்தில்குமார் ஏற்புரை
நன்றி
கபிலன்
இமைக்கணம் என்னும் மெய்நிகரி
Surreal என்றொரு சொல் உண்டு. மெய்நிகரி எனச் சொல்லலாம். ஸ்பானிய நடிகர், ஓவியர் என பன்முகத் திறமை கொண்ட சால்வடார் டாலி மெய்நிகரியத்தின் (surrealism) முக்கியமான ஆளுமை. அவரது கரையும் காலம் என்ற புகழ்பெற்ற ஓவியம், என்னால் ரசிக்க இயன்ற சென்ற நூற்றாண்டின் வெகு சில ஐரோப்பிய ஓவியங்களுள் ஒன்று. (எனது ஓவிய அறிதல் அவ்வளவு தான்!!) உண்மையில் அந்த ஓவியத்தின் பெயர் ‘Persistence of Memory’ – நினைவுகளின் நிலைத்தன்மை என்பதே. ஆனால் அதில் அவர் ஒழுகி ஓடும் கடிகாரங்களை வரைந்திருப்பதால் கரையும் காலம் என பெயரிட்டு விட்டார்கள் போல. இமைக்கணத்தை வாசிக்கத் துவங்குகையில் மனம் இயல்பாக இந்த ஓவியத்தையும், மெய்நிகரியத்தையுமே எண்ணியது. சொல்லிவைத்தாற்போன்று நாவலின் முதல் அத்தியாயமே காலம் என்பதன் தோற்றம் குறித்தே!!
உலகின் ஒவ்வொரு மதமும், அதன் ஆதார தத்துவங்களும் அவற்றுக்கே உரித்தான பிரபஞ்சத் தோற்றங்களைக் குறித்த பார்வையைக் கொண்டிருப்பவையே. இந்திய ஞான மரபின் ஆறு தரிசனங்களும் அவற்றுக்கே உரித்தான பிரபஞ்சத் தோற்றம் பற்றிய கருத்துருக்கள் கொண்டவையே. மிகச் சிறய மாறுபாடுகள் இருப்பினும், அவை அனைத்தும் துவங்குவது காலமிலியான, முடிவிலியான, குணமிலியான அது, அது என தன்னை உணர்ந்த தன்னுணர்வால் பிறந்ததே இப்புடவி என்பதே. ஆதியில் அது இருந்தது எனத்துவங்கும் ரிக் வேதப் பாடலான சிருஷ்டி கீதம் நமது ஞான மரபின் இப்பார்வையை பறைசாற்றும்.
இதையே தியானிகன் “நாங்கள் ஊழ்கத்தில்உயிர்துளித்து உளம்திரட்டி உடல்கோத்து எழுபவர்கள். முட்டைக்குள் இருக்கும் துளிக்கடலில் ஓர்சிற்றலையென மகத்தில் நாங்கள் நிகழ்கிறோம். நான் என உணர்ந்து, இது என அறிந்து, அது எனகண்டதும் உண்ணத் தொடங்குகிறோம்” என்கிறது.
இத்தகைய கருதுகோள்கள் நிறுவப்பட்டிருக்கும் காலத்தில் நிறுவப்பட இயலாதவை. இந்த அறிதல்கள் நிகழ்பவை ஒரு நீண்ட தொடர் சிந்தனைக் கண்ணியின் ஒரு, ஒரேயொரு மகத்தான கணத்தில். அக்கணத்தில் நாமறிந்தவை அனைத்தும் ஒரே நொடியில், முற்றிலும் வேறு பொருள் கொண்டுவிடும். வெண்முரசின் பல பகுதிகளைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு திறவுச்சொல் எழுந்து வரும் கணம், ஒரு அபாரமான கவிதை திறந்து கொள்ளும் கணம், நம் அணுக்கத்தினரை நெருக்கமாக அணுகியுணரும் கணம் என நாமே பலமுறை இதை உணர்ந்திருப்போம். இக்கணம் நாம் அறிந்த காலத்தில் காலத்தில் இருப்பதல்ல. ஆயினும் மெய்யான இந்த காலத்திற்கு நிகரான பிறிதொன்று. மாறிலிகளால் ஆன மெய்நிகரி. இதுவே அறிதலின் கணம். இளைய யாதவர் கூறும் தட்டும் வாயிலும், திறக்கும் கணமும் ஒருங்கமைந்த தருணம். அதுவே இமைக்கணம்.
இமைக்கணத்தில் விரியும் மெய்மைத் தேடலின் பரிணாமம்:
முஞ்சவான் மலையில் தவம் இயற்றும் யமனை சந்திக்கச் செல்லும் நாரதர் முன், அவன் காவலுக்கு நிறுத்திய யமகணங்கள் விலங்குகளாக, அவரின் தோற்றங்களாக, அவர் அறிந்த தேவர்களாக, முத்தெய்வங்களாக இறுதியாக கால வடிவாக தோன்றி தடுக்கின்றன. விலங்குகளை நான் என்றும், தன் தோற்றங்களை தேவர்கள் என்றும், தானறிந்த தேவர்களை தெய்வம் என்றும், முத்தெய்வங்களை பிரம்மம் என்றும், பெருங்காலத்தை அகாலம் என்றும் நுண் சொல் உரைத்து வெல்கிறார் நாரதர். இந்த இரு பாராக்களில் மானுட ஞான மரபின் (இந்திய ஞான மரபு என்றும் சொல்லலாம்) பரிணாமத்தின் கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறார் ஜெ.
மானுடன் ‘நான்’ என தன்னுணர்வு கொண்டு சூழலை உசாவத் துவங்கிய போதே ஞானத்தின், அறிதலின் முதல் பெரும் பாய்ச்சல் நிகழ்கிறது. நான் என உணரத் துவங்கிய பிறகு சூழ இருந்த ‘நான்களை’ உசாவத் துவங்கிய காலத்திலேயே, மானிட எல்லைக்கு மீறிய பண்புகளைக் கொண்ட தேவர்கள் உருவாகின்றனர். ஒவ்வொன்றையும் தேவர்கள் ஆக்கி அவர்கள் சூழ இருக்கையில், அவர்களை அறிந்து கடக்க முத்தொழில்களையும் செய்யும் தெய்வங்கள் உருவாயினர். இருந்தும் மானிட அறிதல் தெய்வங்களையும் மீரியவற்றை எண்ணுகையில் பிரம்மம் பிறக்கிறதுநான் என்னும் தன்னுணர்வு முதல் பிரம்மம் வரை அனைத்தும் அளவைக்கு உட்பட்டவையே. வரையறுக்கப்படக் கூடியவையே. இவையனைத்தும் காலத்தில் நின்றாடுபவையே. எனவே காலத்தையும் கடக்க எண்ணிய மனதின் முன் விரிந்ததே அகாலமென்னும் முடிவிலி.
நான் என்னும் தன்னுணர்வே தியானிகனையும், பிரபாவனையும் மெய்யுசாவத் தூண்டுகிறது. இறப்பு என்பது நிற்கையில், காலம் என்பதும் பொருளற்றுப் போகையில் உயிர் என்பதன் இருப்பும் பொருளிழந்து இன்மை என்றாகிறது. நான் என்ற தன்னுணர்வே ‘இது’, ‘இங்கு’, ‘இருக்கிறேன்’, ‘அது’ என்பனவற்றுக்கு பொருள் அளிக்கிறது. அந்த தன்னுணர்வே முதல் அசைவை உருவாக்குகிறது. அந்த சிறகசைவே காலத்தேங்கலை அசைக்கிறது. அந்த சிறகசைவை வைத்து உருவாகும் காலத்தை வெண்முரசு ‘தயங்கியபடி பிரிவின்மையில் இருந்து முக்காலம் சொட்டி வடிந்து’ வந்ததாக கவித்துவமாகச் சொல்கிறது.
இந்த அறிதல்களையே இளைய யாதவர் விலங்கு நிலையில் இருந்து மானுடரை விடுதலை செய்தது எனக் கூறுகிறார். இருப்பு என்பதை உணர ஒட்டு மொத்த உயிர்க்குலமே இணைந்து, வேண்டி அடைந்த இறப்பு என்னும் அமுது இயல்பாகவே இறப்பு, பிறப்பு என்னும் இருமையை உருவாக்கி விடுகிறது. இறப்புக்கும், பிறப்புக்கும் இடையேயான முடிவிலா இச்சுழலில் பிறந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் இருப்பை உணர்வதற்காகவே இறப்பைத் தேடி துயர் கொள்கின்றன. இச்செயல் அளிக்கும் பொருளின்மை, இறப்பு – பிறப்பு, துயர் – இன்பம், இருள்- ஒளி, தளை – விடுதலை என்ற இந்த இருபால் பிரிவு இரண்டையும் அறிந்து கடக்க உதவுவதே வேதமுடிபின் அறிதலாகிய தன் அறிதல் என்கிறார் இளைய யாதவர். இயல்பாகவே இந்த அறிதலின் அடிப்படை இறப்பு இல்லாதாகையில் இருப்பும் இன்மையாகிறது என்பதே. எனவே தான் இருப்பையும், இன்மையையும் இணைத்ததாக, அவற்றை ஒன்றாக அறிவாதாக எழுவதே எதிர்காலத்தில் வரும் கல்கி எனும் பேரறிவு என்கிறார் இளைய யாதவர்.
இமைக்கணம் – இன்றிலிருந்து என்றைக்கும்
இமைக்கணத்தின் முதல் அத்தியாயம் துவங்குவதே மீறலில் தான். மரணம் ஒழிந்த பூமி. தன் கொலைஞனை துணிந்து நோக்கும் புழு. மண்ணில் வாழ விழையும் மீன். நெருப்பை விரும்பி அணையும் குருவி. மரணமின்மை அனைத்தையும் பொருளற்றதாக்கி விடுகின்றது. நாளடைவில் இருப்புக்கும், இன்மைக்கும் வேறுபாடு இன்றி அனைத்தும் ஜடமாகி அமைந்து விடுகின்றன. இலக்கில்லாத, முறைப்படுத்தப்படாத மீறலின் விளைவு அது. இன்மையில் இருக்கும் உலகில் இருப்பை உணர்ந்த இருவர் அத்தேங்கலை அசைக்கின்றனர். மீறலை இயல்புக்கு மீட்பதே அவர்கள் தவம். துறந்து, உள்ளொடுங்கி, தனித்து, ஒறுத்து, கடந்து அறியும் மெய்மை அனைவருக்கும் சாத்தியமான ஒன்று அல்ல. அவ்வழி அனைவருக்குமானதும் அல்ல. அது மீறலே, இயல்பு அல்ல. இதற்கு நேர் எதிராக அடைந்து, விரிந்து, சூழ இருந்து, வேட்டு, வாழும் இன்பத்திலேயே (மாயையிலேயே) உழல்வதும் மீறலே, இயல்பு அன்று. ஒவ்வொருவரும் இயல்பில் இருந்து மெய்மையை அறிவதே மீட்சி. அதுவே ஒவ்வொரு மானுடனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இயல்பில் இருந்து மெய்மையை அடையும் வழியையே வேதமுடிபு உசாவுகிறது. மாயையில் வாழ்ந்து அதன் திரையை அறுத்தெறிந்து, முழுமையாக வாழ்ந்து முடிந்த ஒருவரே அவ்வழியை மானுடருக்கு உரைக்க இயலும். இதுவே ராமன் செய்யாமல் விட்டது. அதையே கிருஷ்ணன் செய்கிறார். எனவே யமன் தன் கேள்விகளை கிருஷ்ணனின் அருகமர்ந்து கேட்கிறார்.
இமைக்கணம் என்னும் உபநிடதம்:
இமைக்கணம் முதன்மையாக நாவல். அதில் பயின்று வருபவை ஞானத்தேடலின் விளைவான தத்துவங்கள். இருப்பினும் இது தத்துவ நூல் அல்ல, நாவல் தான். ஒரு வகையில் நமது உபநிஷத்துகளின் நாவலாக்கப்பட்ட வடிவம் எனலாம். நசிகேதன் யமனிடம் கேட்ட கேள்விகள் தானே கடோபநிடதத்தின் வடிவம். அவன் யமனைச் சந்திப்பதற்கு ஒரு கதை இருந்தது. கிட்டத்தட்ட அனைத்து உபநிடதங்களும் இத்தகைய கதைகளை உள்ளடக்கிய தத்துவ விவாதங்களாகவே அமைந்திருக்கின்றன. உபநிடதம் என்பதன் பொருள் அருகமர்தல். இந்த உபநிஷத்துக்களின் அமைப்பே ஏதோ ஒரு தொல் வியாசரை கீதையை அத்தகைய ஒரு நாடகீயத் தருணத்தில் சென்று பொருத்த வைத்ததன் உந்துவிசையாக இருந்திருக்கலாம்.
இமைக்கணத்தில் பாரத பெருமானுடர்கள் சுமந்தலைந்த கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும் விரிவாக வருகின்றன. அவரவர் வினாக்களுக்கு உகந்த விடைகள் அளிக்கப்படுகின்றன. இந்த விடைகள் முக்கியமாக கீதையையும், உபநிஷத்துக்கள் மற்றும் பிரம்மசூத்திரத்தையும் சார்ந்து இருக்கின்றன. இந்த விடைகள், அவை சுட்டி நிற்கும் அறிவு மிகக் கூரான மொழியில், சிறிய சொற்றொடர்களுடன், இரண்டு முதல் ஐந்து வரிகளுக்குள் வருமாறு, ஒரு சூத்திர வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் இவை வாசகரின் கவனத்தைக் கோருபவை, அவர்கள் மனதில் இருத்த வேண்டியவை. இந்த நாவலின் வடிவம் இந்த அறிவை வாசகர்கள் என்றென்றைக்கும் தங்களுக்குரிய அறிதல்களாக மாற்றி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே கேள்விகள், அவற்றுக்கு பதில்களைக் கொண்ட ஒரு இமைக்கணக் காட்சிகள், இக்காட்சிகளையும், கேட்பவரின் வாழ்கணங்களையும் உள்ளடக்கிய விரிவான பதில்கள் என்பதாக அமைந்திருக்கின்றது. இந்த காகிதச் சூத்திரங்கள் அறிவாக வேண்டுமென்றால் அவை பதிலிறுக்கும் வினாக்கள் வாசகரிடம் இருக்க வேண்டும். சாதாரண வாழ்வில் இருந்து அவற்றை வந்தடைபவர்கள் மிகக் குறைவு. அப்படி அவ்வினாக்களுக்கு வந்திருந்தாலும் அவற்றை முறையாகத் தொகுத்து, சொல்லாக்கி, மொழியிலாக்குபவர்கள் இன்னும் குறைவே. மாறாக இக்கேள்விகளைச் சுமந்தலையும் பாத்திரங்கள் என்றால், வாசகரும் அவர்களோடேயே வாழ்ந்திருப்பதால் அவர்களுக்கும் இவ்வினாக்கள் பொருள் அளிப்பவையாகவே இருக்கும். எனவே இந்த அறிதல்களை நினைவு கூர்கையில் அவை முளைத்த வினாக்களும், அவ்வினாக்கள் வேர்கொண்ட வாழ்வும் அறிபவன் கூடவே நினைவுக்கு வரும். அவ்வாழ்வும், வினாக்களும் இவ்வறிதல்களைக் கால மாற்றங்களுக்கு ஏற்பவும், அறிபவரின் தொடர் அறிதல்களுக்கு ஏற்பவும் மெருகூட்டிக்கொண்டே செல்லும். இறுதியாக மெய்மையை அடையவும் கூடும்.
எனவே வெறும் சூத்திரங்களில் உளம் கொள்ளாது, அவற்றின் வேர்களான வினாக்களை உளம் கொள்ள வேண்டும். அங்கருக்கு, பீஷ்மருக்கு, சிகண்டிக்கு அளிக்கப்பட்டவை எவை?, ஏன் அவை அவர்களுக்கு அளிக்கப்பட்டன? போன்றவற்றை ஆராய வேண்டும். அப்படிச் செய்து தொகுத்துக் கொண்டால் மட்டுமே இவ்வறிவும், இந்த நாவலும் நமக்கு திறந்து கொள்ளும். இந்த காரணங்களால் தான் கீதை என்னும் பெருநூல் ஒரு பெருங்கதையாடலில் மிகப் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கே அர்ச்சுனன் ஒருவனுக்கு உரைக்கப்பட்டதாக வந்தவற்றை விரிவாக்கி, மிகப் பொருத்தமான கதை மாந்தர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான மெய்மையாக உரைக்கப்படுவதாக எழுதுவது என்பது ஜெ வின் மேதமை. வெண்முரசு என்னும் மரத்தின் தீஞ்சுவைக் கனி என இமைக்கணத்தைச் சொன்னால் அது மிகையன்று!!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

