Jeyamohan's Blog, page 1051

February 9, 2021

எழுத்தாளனின் பார்வை, கடிதங்கள்

எழுத்தாளனின் பார்வை அரசியலும் எழுத்தாளனும்

அன்பு ஜெ,

”எழுத்தாளனின் பார்வை” கடிதத்தைப் படித்தேன்.”புனைவென்பது நனவிலிக்குள் ஓர் ஊடுருவல் [A raid into the unconscious] ” என்ற வரி எத்துனை உண்மையென்பது உங்களின் விளக்கங்கள் வழி என்னையே சுய பரிசோதனை செய்து அறிந்தேன் ஜெ. படிக்கும்போது நான் என்ன செய்கிறேன் என்பதை/ நானே அறியாத நானைக் கூட துள்ளியமாக இவரால் எப்படி அறிய முடிகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இங்கு நான் பாலா அவர்களின் கடித்ததை வாசிக்கும்போது ஒரு சிறு புன்னகை வந்தது. முதன்முதலில் போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள் பொதுவாக உணர்ச்சிவசப்படுபவர்களாக, மிகுந்த நம்பிக்கையுடன், நேர்மறையாகவே பெரும்பாலும் இருப்பார்கள். அதுவும் முதல் இரண்டு வருடங்களில் கேட்கவே வேண்டாம். அதற்கு நேர்மறாக பயப்படுபவர்களும் உண்டு.

ஒரு வருடத்தின் புத்தக அறிவு (பெரும்பாலும் CBSE புத்தகங்கள், சில வாடிக்கையாகப் படிக்கும் தேர்வுக்கான பாடவாரி புத்தகங்கள்), செய்திவாசிப்பு, அரசு சார் நிகழ்வுகள், செயல்பாடுகளைத் தெரிந்தபின் என அவன் தன்னை முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்போது இன்னும் OPTIMISTIC ஆக மாறிவிடுவான். அதே நிலையிலேயே இவர்கள் அதிகார வர்க்கத்தில் நுழைந்தால் (CIVIL SERVANT) குடிமைப் பணியாளன் என்பதிலிருந்து ஒரு முழுமையான (GOVERNMENT SERVANT) அரசு அதிகாரியாக தன்னையறியாது மாறுவதைப் பார்க்கலாம்.

இவர்கள் OPTIMISTIC VIEW என்று சொல்லி நிதர்சனத்தையே ஏற்க மறுப்பவர்கள். ஒரு கட்டத்தில் அரசுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களாகவே அவர்கள் மாறிப்போவர்கள். ஆளும் கட்சிகளும் அதைத் தான் எதிர்பார்க்கிறது. CONSTRUCTIVE CRITISISM; GRASS ROOT DEMOCRACY, BOTTOM UP APPROACH, EMPOWERMENT etc etc மற்றும் எதையெடுத்தாலும் POLITICALLY, SOCIALLY, ECONOMICALLY, ENVIROMENTALLY, SUSTAINABLY என்ற வார்த்தைகளை உள்சேர்த்துக் கொள்வார்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் ஏற்கனவே அரசிடம் ஒரு தீர்வு, திட்டங்களின் வாயிலாக, கொள்கைகள் வாயிலாக இருக்கிறது என்றும். அதை கீழ் நிலையிலிருக்கும் அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், மக்களாலும் தான் சரியாக பயன்படுத்தவில்லை என்ற எண்ணம் இருப்பதையும் காணலாம். காலம் முழுவதும் இந்த மாயை எண்ணத்துக்குள் உழன்று அரசின் அதிகாரியாக மட்டுமே இருந்து நிதர்சனத்தை கவனிக்கத் தவறிவிட வாய்ப்புள்ளது. சிலர் மாறுவதுமுண்டு.

தரவுகள் எங்ஙனம் எடுக்கப்படுகின்றன! அறிக்கைகள் எங்ஙனம் தயாரிக்கப்படுகின்றன! என்பதை அரசு அமைப்பின் உள்ளிருந்தோ வெளியிருந்தோ கவனித்தாலே பல உண்மைகள் விளங்கிவிடும். இந்த மாயையிலிருந்து வெளிவந்து நிதர்சனத்திலுள்ள குறைகளைக் கண்டு, அதற்கு தீர்வு காணும் மிகச் சில குடிமைப் பணியாளர்கள், பல சமயம் வெளியில் தெரிவதுமில்லை, தெரியவிடுவதுமில்லை. நிதர்சன குறைபாடுகளை சுட்டுபவர்களைக் கண்டு எரிச்சலுருவதும்; ஒரு துறை சார்ந்த குறைபாடுகளுக்கான குறைகளை, தரவுகளின் வழி மட்டுமே அல்லது வல்லுனர்கள் மட்டுமே சொன்னால் தான் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்பவர்கள் கடைசி வரை GOVERNMENT SERVANT ஆக மட்டுமே இருக்கமுடியுமே ஒழிய, ஒரு போதும் PUBLIC SERVANT ஆக அவர்களால் மாற இயலாது.

நான் கூட அப்படி ஒரு optimist ஆக கல்லூரி காலங்களில் இருந்திருக்கிறேன். Pessimist களைக் கண்டாலே எரிச்சல் வரும் எனக்கு. ”ஏன் எதற்கெடுத்தாலும் அரசைக் குறை சொல்கிறார்கள்?” என்று கோபம் கொள்வேன். புத்தக அறிவினின்று நிதர்சன வாழ்க்கையை உற்றுப் பார்க்க ஆரம்பித்ததும் அவையாவும் ஆவியாகிட்டன. விவசாயத்திற்கான திட்டங்களை தேர்வுக்காக பட்டியலிட்டபோது வெறும் தலைப்பு மட்டுமே இரண்டு பக்கம் வந்தன. ஆனால் அது என் தாத்தாவின் வாழ்க்கையில், அவர் வயல்காட்டை சுற்றியிருக்கும் பல விவசாயிகளின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அவர்கள் தலைமுறை தலைமுறையாக கடினப்பட்டு, ஏமாற்றப்பட்டு, கருமமே கண்ணாக பாடுபட்டு மாண்டு போகிறார்கள்.

இந்த நிதர்சன வாழ்க்கையை ஒரு சுட்டு விரலால் PESSIMISM என்று கடந்து போக இயலாத போது தான் நான் அந்த மாயையிலிருந்து வெளிவந்தேன். இன்னும் என் பயணப்பாதையினின்று பல நிதர்சன தரிசனத்தை சொல்ல முடியும். ஆனால் அது அவரவர் கண்டடைய வேண்டியது என்பதையும் உணர்கிறேன். உணராமல் இறுதிவரை அப்படியே அதே படி நிலையில் இருந்து மாண்டு போகிறவர்கள் பற்றி புன்னகை என்பதைத் தாண்டி ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஓர் எழுத்தாளன் நிதர்சனத்தின் உச்சமானவன் அவனை OPTIMISTIC ஆக மட்டுமே இரு என்று சொல்வதென்பது அவனுடைய இடத்திலிருந்து இறங்கி கீழே வந்து பார்ப்பதான ஓர் கிணற்றுத் தவளை பார்வையை பார்க்கச் சொல்லுதலாகும். நாஞ்சில் அவர்கள் சலித்துப்போய்  சொன்ன அந்த வரிகளை நினைத்துக் கொண்டேன்.

அன்புடன்

இரம்யா.

 

அன்புள்ள ஜெ,

எழுத்தாளனின் பார்வை கட்டுரையில் ஒரு விஷயம் எனக்கு மிகமிக முக்கியமானதாகப் பட்டது. எந்த அடிப்படை வாசிப்பும் புரிதலும் இல்லாதவர்கள், நுண்ணுணர்வின் சாயலே இல்லாதவர்கள், ஓர் அரசியல்நிலைபாடு எடுத்துவிட்டதனாலேயே இலக்கியவாசகர்கள் எல்லாம் ‘அப்பாவிகள்’  அல்லது ‘அசடுகள்’ அவர்களை எழுத்தாளர்கள்  ‘கடத்திக்கொண்டு’ சென்றுவிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

படித்தவனை படிக்காத பாமரன் இளக்காரமாக நினைக்கும் இந்தச் சூழலே பரிதாபமாக இருக்கிறது. முன்பும் இப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் முகநூலில் இந்த அரசியல்பாமரர்களின் மிதப்பும் தர்க்கமும் மிக ஆபாசமாக தெரிகின்றன

சர்வேஷ்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2021 10:32

குழந்தைகளுக்கான கதைகள்

அன்பு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்…!

நான் மதுரையில் வசிக்கிறேன். என் மகன் படிக்கும் பள்ளியின் பெயர் Akshara Matriculation Higher Secondary School. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ளது. Matriculation பள்ளியாக இருந்தாலும் கூட இது சற்று வித்தியாசமான பள்ளி. 25 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டாலும், விளம்பரம் செய்து மாணவர்களைச் சேர்ப்பதில்லை. LKG யில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 350 தான். பள்ளி மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாணவர்களுக்கு கற்பதில் சுதந்திரம் அளிக்கின்றனர்.

பல தரப்பட்ட பொருளாதாரச் சூழலில் இருந்து குழந்தைகள் வருகிறார்கள். கரோனா காலகட்டத்தில் பள்ளி Online Class நடத்தவில்லை. மிகக் குறைவான அளவில் Worksheet மட்டும் கொடுக்கிறார்கள். கட்டாயக் கட்டண வசூல் செய்யவில்லை. மாறாக, ஆசிரியர்களுக்கு கரோனாக் காலத்திற்கு முந்தைய சம்பளம் வழங்குகின்றனர்.

இந்தப் பள்ளிக்கூடத்தில் Art of Story telling என்ற WhatsApp Group துவக்கி அதில் குழந்தைகளை கதைகளுக்கு அறிமுகப் படுத்துகின்றனர், கதை சொல்லப் பழக்குகின்றனர். சில பெற்றோரிடமும் அதில் பங்குகொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். சன்னமாக இலக்கியவாசனை என்னிடம் வருவதாக எண்ணி (தவறுதலாக) என்னையும் பங்குகொள்ளச் சொல்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க கிடைத்திருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி பயனுள்ள பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன். வெறும் கதைகளாக இல்லாமல்,  Ethics, Values – யை கொடுக்கிற கதைகளைச் சொல்ல விருப்பம். அதே நேரத்தில் பழைய பஞ்சாங்கமாகவும் இல்லாமல் மாணவர்களையும் ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும், அதனால் உங்களை நாடுகிறேன். இம்முயற்சியை எவ்வாறு கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று   நீங்கள் ஆலோசனை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்களே கூட ஒன்றிரண்டு கதைகளைப் பதிவேற்றி அனுப்பினால் அவர்களுடைய முயற்சிக்கு ஊக்கமாக அமையும். (இது என் ஆசை)

நீங்கள் இந்த முயற்சிக்கு எவ்விதத்திலாவது உதவினால் மிகவும் நன்றாக இருக்கும்.

அன்புடன்,

பிரகாஷ்

9442969918

 

அன்புள்ள பிரகாஷ்

நான் இப்போது கதை சொல்லும் மனநிலையில் இல்லை.

இரண்டு யோசனைகள். ஒன்று கதைகளை பெரியவர்கள் சொல்லி குழந்தைகளுக்கு கேட்கக்கொடுப்பது. இன்னொன்று குழந்தைகளை கதைகளைச் சொல்லவைப்பது

புகழ்பெற்ற கதைகள் பல உள்ளன. குழந்தைகளுக்கான கதைகள் என்றால் சுந்தர ராமசாமியின் விகாசம், ஸ்டாம்பு ஆல்பம், கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜாவந்திருக்கிறார் போன்ற கதைகளைச் சொல்வேன்

கதைகள் நிகழ்ச்சிகள் கொண்டவையாக இருக்கவேண்டும். தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்டவையாக இருக்கவேண்டும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2021 10:31

யூமா வாசுகி- கடிதம்

யூமா வாசுகிக்கு வாழ்த்து

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

தன்னறம் வாயிலாக ஒரு இலக்கிய விருது முன்னெடுப்பை இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் முயற்சிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி, முதல் விருதினை ஓவியர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான யூமா வாசுகி அவர்களுக்கு வழங்க நண்பர்கள் அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அதற்கான காணொலி ஆவணப்பதிவு ஒன்றினை பதிவுசெய்வதற்காக பட்டுக்கோட்டைக்குச் சென்று எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களைச் சந்தித்தோம். மெல்லமெல்ல தன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் பேச ஆரம்பித்தார். அப்பொழுதான் அவர் உங்களுடனான மறக்கமுடியாத சில நினைவுகளையும் எங்களோடு பகிர்ந்துகொண்டார்.

நீங்கள், நிர்மால்யா, எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஊட்டி நாராயணகுரு ஆசிரமத்திற்கு வந்திருந்த சமயத்தில் யூமா உங்களைச் சந்தித்துப் பேசியதாகச் சொன்னார். அப்போது நீங்கள் அவரிடம் ‘மலையாளம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற அக்கறையை உரிமை கலந்த குரலில் வெளிப்படுத்தியதாகச் சொல்லி அந்நாளினைப் பற்றிய நல்நினைவுகளை அகம் பகிர்ந்தார். அன்று, நீங்கள் உரைத்த சொல்லின் ஆழத்தைப் புரிந்துகொண்ட யூமா அவர்கள், அதன்பிறகு முழு அர்ப்பணிப்புடன் தன்னை அம்மொழிக்குள் ஈடுபடுத்திக்கொண்டதாகத் தெரிவித்தார். மலையாளத்திலிருந்து தான் மொழிபெயர்த்து ம் ஆண்டு வெளியாகிய ‘கசாக்கின் இதிகாசம்’ நாவல் வரைக்கும் அந்த தூண்டுதல் துணைவருவதாகச் சொன்னார்.

ஒருவகையில் ஒரு பெரும் நிறைவு எங்களுக்குள் அக்கணம் தோன்றியது. யூமாவை அத்தனை ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு மொழிபெயர்ப்பின் முகமாக உங்களால் உய்த்துணர இயன்றிருக்கிறது என்பது வியப்பளிக்கிறது. ஒருவேளை உங்கள் மனதுக்கு தோன்றிய இயல்பான ஒரு எண்ணமாகக்கூட அது இருந்திருக்கலாம். ஆனால், அந்த ஊக்கச்சொல் திறந்த படைப்புவெளி இன்று தமிழ்ச்சூழலில் மறுக்கமுடியாத படைப்பாளுமை மனிதர்களில் ஒருவராக அவரின் இருப்பை அமைத்துக்கொள்ளச் செய்திருக்கிறது. எழுத்தாளர்கள் சிருஷ்டிக்கும் எல்லோருக்குமான சொல்தெய்வத்தை இக்கணம் வணங்கிக்கொள்கிறோம்.

தனது வாழ்வனுபாவங்களை நினைவுகளாகப் பகிர்ந்துகொண்ட யூமா வாசுகி அவர்களின் வாழ்வுரையாடல் காணொலி இணைப்பு: https://www.youtube.com/watch?v=WQHkyDBhoFc&fbclid=IwAR17LjSVU6v96ouZNZGhctUW_nBQquJL-z7RpssmMvrKMILAW9XLSY-2Agg

தன்னறம் இலக்கிய விருது என்கிற இம்முன்னெடுப்புக்கான அகத்தூண்டல் என்பது நீங்களும் நண்பர்களும் இணைந்து நிகழ்த்தும் ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ தான். கவனிக்கத்தவறும் படைப்பாளுமை மனிதர்கள் குறிதான ஒரு நேர்மறை உரையாடலை இத்தகைய விருதளிப்பு நிகழ்வின் வழியாக நாம் இச்சமகாலத்திலும் முன்னெடுக்க முடியும் என்ற அகவிசை அங்குதான் உருவானது. இலக்கியம் சார்ந்த ஒரு வாசிப்பறிவு, எண்ணத் துணியும் செயல்களுக்குத் எங்ஙனம் துணையிருந்து மனவலு கூட்டுகிறது என்பதையும் நாங்கள் சிறுகச்சிறுக கற்றுக்கொண்டிருக்கிறோம்.

2020ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருதினை எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பு படைப்புமுகத்திற்காக வழங்குகிறோம். வருகிற 27.02.2021 சனிக்கிழமை அன்று, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குருகுல் லூதர்ன் தியோசாபிகல் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு இந்த விருதளிப்பு நிகழவுள்ளது. ஒரு படைப்பாளிக்கு பொதுசனத்திரளில் இருந்து கெளரவிப்பு எழுவதே நியாயதர்மம் என்பதால், இலக்கிய விருதுக்கான நினைவுப்பரிசோடு யூமா அவர்களுக்கு தோழமையுறவுகளின் கூட்டுப்பங்களிப்பில் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாய் தொகையினையும் ஒப்படைக்கவுள்ளோம்.

குக்கூ குழந்தைகள் வெளியைப் பொறுத்தவரை, எழுத்தாளர் வாண்டுமாமாவின் நீட்சியாகவே, அண்ணன் யூமா வாசுகி அவர்களைக் கருதுகிறோம். வாண்டுமாமாவை அவருடைய இறுதிநாட்களில் நாங்கள் சந்திக்க நேர்ந்தது. வாழ்வு நெருக்கடியும் நோய்மைச்சூழலும் துன்புறுத்திய காலத்திலும்கூட, வாழ்வைவிட்டுச் சிறிதும் நம்பிக்கையிழக்காத அவருடைய கனிவுப் பெருங்குரலாகவே, யூமா அவர்களின் அமைதிக்குரலையும் நாங்கள் அர்த்தப்படுத்துகிறோம். கலைஞன் நலிவடைய நேர்ந்தாலும் அவன்தன் கலையை நலிவடைய விடுவதில்லை. காரணம், அவன் அதைத் தனது ஆத்மச்சுடருக்குப் பக்கத்தில் வைத்து அணையாமல் பாதுகாக்கிறான்.

யூமா அவர்களின் மனம் இன்னமும்கூட சிறார் இலக்கியத்தை மையமிட்டே சிந்திக்கிறது. கேரளாவில் இருப்பதைப்போன்ற அரசுசார் அமைப்பு ஒன்று சிறாரிலக்கியத்திற்காக தமிழ்ச்சூழலில் நிறுவப்பட வேண்டும் என்பதைத் தன் வாழ்வின் பெருங்கனவாகக் கொண்டிருக்கிறார். என்று, யாரால் அக்கனவு நிகழும் என்பது தெரியாது; ஆனால் அந்த எண்ணத்தின் முதல்விதையும் முதல்நீரும் முதலொளியும் யூமாவுடையது. இவ்விருதின் வழியாக நாங்கள் அவருக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இத்தனை படைப்புகளை படைத்தபின்பும் தனக்குள் வாழும் குழந்தைமையைத் தொலைத்துவிடாத அந்த தூயமனதை நாங்களும் வழிதொடர முயல்கிறோம் என்பதே அது.

 

குக்கூ- தன்னறம்

யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமி மொழியாக்க விருது!

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2021 10:31

வண்ணக்கடல் அனைத்து கட்டுரைகளும்

வண்ணக்கடல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

அன்புள்ள ஜெ,

நலமாக உள்ளீர்களா ?

மழைப்பாடல்க்கு பிறகு வெண்முரசு வாசிப்பதில் ஒரு பெரிய இடைவேளை விழுந்துவிட்டது. வருத்தமாக உள்ளது. எனது மேற்படிப்பு ஒரு காரணம்(சொல்வது தவறுதான்).  இருப்பினும் தங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கடந்த ஒரு வாரமாக வண்ணக்கடலில் இருந்து துவங்கியுள்ளேன். எனக்கு இதை கேட்பது தவறாக தோன்றுகிறது. இருப்பினும் கேட்கிறேன். மன்னித்துவிடுங்கள். என்னைப்போன்று சிலர் இவ்விடைவெளியை சந்தித்து இருப்பார்கள், சிலர்  வெண்முரசுவை சிலநாட்கள் கழித்து துவங்கியிருப்பார்கள். இப்படி பின்தங்கி இருக்கும் பொழுது வாசகர் கடிதங்களை கண்டடைவதில் சற்று சிக்கல் (கடிதங்கள் வரிசையும், பகுதிகளின் வரிசையும் சிலசமயம் வேறு படும் என்று நம்புகிறேன்). ’நாவல்பெயர்_பகுதி’ என்று ஒரு Tag (venmurasudiscussions இல்) வரும் நாட்களில் இருந்தால் மிகவும் நல்லது.

தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.

அன்புடன்

ராஜேஷ்

அன்புள்ள ராஜேஷ்

பார்க்கிறேன். இதுவரை அந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை. கூடுமானவரை பழைய கட்டுரை இணைப்புகளை அளிக்கத்தான் செய்கிறேன்

ஜெ

வண்ணக்கடல் பற்றி

அசுரர் வண்ணக்கடல் நகர்களின் காட்சி ஏன் மிகுபுனைவு காலம் இடம்கர்ணனும் பீமனும்ப்ரசுராமன்ஏகலைவனின் வில்விதுரரின் தீர்க்கதரிசனம்அஸ்வத்தாமா ஆசுரம்கர்ணனின் பிம்பம் வாசிப்பின் முகங்கள்நவீன துரோணர்அதிரதன்பாரததரிச்னம்கர்ணனின் கண்ண்ணீர்தென்னகச் சித்திரங்கள் வண்ணக்கடலின் கட்டுமானம்ஆதாரதெய்வங்கள் மூன்றுகர்ணனைக்கொல்லும் குந்திசிகண்டியின் வயதுதருமனும் விதுரனும் வண்ணக்கடல் சித்திரங்கள்வண்ணக்கடல் கல்வி இந்திரவிழாஅர்ஜுனனும் அஸ்வத்தாமனும்துரோணர்வெண்முரசு படிமங்கள்பொற்கணம்கலிங்கம்சூரியன்கர்ணனின் கொடை

வியாசனும் கர்ணனும்

கர்ணனின் பெயர்

சிலவினாக்கள்

வண்ணக்கடல் பகடி

ண்ணக்கடல் ஓவியம்

குமரியும் புகரும்

கர்ணனின் கவசம்

கர்ணனும் வியாசனும்

மறுபுனைவின் வழிகள்

வண்ணக்கடல் எதிர்வினைகள்

வண்ணக்கடல் குந்தி

சாங்கிய மந்திரம் கர்ணன்

வண்ணக்கடல் நீர்வழிகள்

வதாரங்கள்

தர்சனக்கள்

செவ்வியலும் கலையும்

வண்ணக்கடல் கடிதங்கள் சில

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2021 10:30

February 8, 2021

நாஞ்சில்நாடன், பாலகுமாரன் – இலக்கியம், வணிகஎழுத்து

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

அன்புள்ள ஜெ!

நீலம் உள்ளிட்ட நான்கு வெண்முரசு நூல்களை வெளியிட்ட விழா நிகழ்ச்சிகளை மறுபடியும் நேற்று பார்க்க நேரிட்டது. அந்த விழாவில் என் மனதில் பட்ட ஒரு விஷயம் பாலகுமாரனின் வருகை. விழாவில் ஒரு மூலையில் அவர் உட்கார்ந்திருந்தார். தற்பொழுது யோகிராம் சுரத்குமார் பற்றிய உரை ஒன்றில் பவா செல்லத்துரை அவர்கள் பாலகுமாரனின் சில அகவுணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டியிருந்தார். அந்த உரையில் ஜெயமோகன் மீதான பாலகுமாரன் அவர்களின் வன்மம் நிறைந்த எதிர்வினைகளும் பதிவாகியிருந்தன. இந்தப் பின்னணியில் நீலம் வெளியீட்டு விழாவில் பாலகுமாரனின் வருகை குறித்த என் எண்ணங்களை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன்.

விழாவுக்குப் பாலகுமாரன் அழைக்கப்பட்டிருந்தாரா? அல்லது அவரது வருகை எதிர்பாராததா?விழா நிகழ்வின்போது அவர் சமநிலையில் இருந்திருப்பார் என்று எனக்குத்தோன்றவில்லை. ஒருவேளை பவா குறிப்பிடும் நிகழ்ச்சி நடந்து, பல்லாண்டுகளுக்குப்பின் நடைபெறும் நிகழ்ச்சி இது. இந்த இடைப்பட்டக் காலக்கட்டத்தில் உங்களுக்குள் ஏதேனும் நல்லெண்ணச் சந்திப்புகள் நடைபெற்றிருக்கின்றனவா? அப்படியே இருப்பினும் அவரை இன்னும் நீங்கள், உங்கள் அளவுகோல்களின்படி நாஞ்சில் நாடன் போன்ற இலக்கியவாதிகளுடன் ஒத்துநோக்கும் நிலை வரவில்லை என்றே நினைக்கின்றேன்.

ஜெ! நான் என் ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பதின்ம வயதுகளில் பாக்கெட் நாவல்களின்  வரிசையில் பாலகுமாரனை நான் வாசித்திருக்கின்றேன். ஆனால், மற்ற பாக்கெட் நாவல்களில் இருந்து அவர் கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருந்தார் என்பதே எனது கணிப்பு. அதாவது அவர் மற்றவர்களிலிருந்து தனித்துத்தெரிந்திருக்கிறார். அக்காலத்தில் எனக்கு நீங்கள் குறிப்பிடும் முதல்தர எழுத்தாளர்களோடு அறிமுகம் ஏதும் இல்லை. (உடையாரை என்னாலும் ரசிக்கமுடியவில்லை.)

பிற்காலத்தில் முதல்தர எழுத்தாளர்களோடு எனது அறிமுகம் ஆனபிறகு, முதலுக்கும் மூன்றாம் தரத்திற்கும் நடுவில் பாலகுமாரன் தத்தளிக்கிறார் என்று கருதுகிறேன்.

இங்கே எனது கேள்வி நாஞ்சில் நாடன் அவர்களோடு தொடர்புடையது. மேடையில் நாஞ்சிலாருக்கு நீங்கள் மரியாதை செய்திருந்தீர்கள். அதற்கு அவர் முழுத்தகுதி உடையவர்தாமா? பாலகுமாரனுக்கும் நாஞ்சிலாருக்கும் எனக்குப் பெரிய வேறுபாடு தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளிலான உங்கள் படைப்புக்கள் உடனான வாசிப்பில் நாஞ்சிலாரின் தரம் எனக்குள் அவ்வாறுதான் உறுதிப்பட்டிருக்கிறது. கொரானா கால உங்கள் சில கதைகளில் நீங்கள் நாஞ்சிலாரை எவ்வாறு ‘ஓவர்டேக்’ செய்துவிட்டுப் போகிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். பெண் பாத்திரங்களுடனான உறவைப் பேசும் தருணங்களில் நாஞ்சிலாரும் சருக்கியதுண்டு; பாலகுமாரனுக்கும் அது உண்டு. அது ஒரு வாசகனைக் கீழிழுக்கும் செயல். அந்த நிலையில் நீங்கள் உயர்ந்துநிற்பதைக் காண்கிறேன்.

நாஞ்சிலாருக்கு நீங்கள் என்ன அளவுகோல்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. முடிந்தால் இருவரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதமுடியுமா? எம்போன்ற வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த பொன்னீலன் நிகழ்வுக்குப்பின் குமரிமாவட்ட இளம்படைப்பாளி ஒருவரின் படைப்பு முயற்சி குறித்து (தமிழகம் முழுவதும் அவரின் ஒரு சிறுகதைத்தொகுப்பின்மூலம் அறியவும் பாராட்டவும் பட்டுக்கொண்டிருந்தார்) நாலு நல்ல வார்த்தை கூறவேண்டும் என்று உங்கள் துணைவியார் வேண்டிக்கொண்டதைக் கருத்தில் கொண்டு அந்த இளம்படைப்பாளி இன்னும் நிறைய வளரவேண்டும் என்பதைக் குறிப்பாகச் சுட்டி, பெயர்குறிப்பிடாமல் ஒரு பதிவு போட்டிருந்தீர்கள். எனது கணிப்பின்படி,  அவர் பொன்னீலனுக்கு நெருக்கமானவர் போல வெளியுலகுக்குத் தோன்றினாலும் அவர் நாஞ்சிலாரின் வழிவந்தவர். அவரின் கதைகளில் நாஞ்சிலாரின் போதாமைகளும் ஒவ்வாமைகளும் முண்டிக்கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

மறுபடி நீலம் நிகழ்ச்சிக்கு வருவோம். பாலகுமாரன் இலக்கியத்துடன் வாழ்ந்தவர்; சரியோ தப்போ அதைக்கொண்டு பிழைத்தவர். நாஞ்சிலாரைப்போலவே தமிழ்த்தொண்டு புரிந்தவர்.அவரின் இருப்பை நீங்கள் கவனப்படுத்தியிருக்கலாமோ? என்று தோன்றியது. நீங்கள் இன்னும் அவரை ஒரு நல்ல படைப்பாளியாக ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நடந்தது சரியே. ஆனால் அவரின் கடைசிக்காலத்தில் பலபத்தாண்டுகள் வாழ்ந்த இலக்கிய வாழ்வினை அங்கீகரிக்காத ஒரு கூட்டத்தில் அவரின் இருப்பு தர்மசங்கடமாக எனக்குத்தோன்றியது. விழாவில் நீங்கள் முத்தாய்ப்பாகப் பேசியதுதான் அவருக்கான பதிலாக எடுத்துக்கொள்கிறேன்:

“வருங்காலத்தில் எனது படைப்புகளை சிறுமுயற்சி என ஆகச்செய்யும் வருங்கால தலைமுறை வரவேண்டும்”  என்பதுபோலக் கூறினீர்கள். ஆனால் பாலகுமாரன் வாழுங்காலத்திலேயே (உங்களால்) தகுதியற்றவர் என்று கேட்டு நொந்துதான் போயிருப்பார் அல்லவா?

பாலகுமாரனுக்கு இல்லாத பெருமையும், மதிப்பும் நாஞ்சிலாருக்கு மட்டும் ஏன்? இதுதான் என் கேள்வி.

அன்புடன்

ராஜரத்னம்

அன்புள்ள ராஜரத்னம்,

இந்த கேள்வி ஓர் இலக்கிய உரையாடலாக ஆவதற்கு தடையாக அமையும் பல முட்கள் கொண்டது. ஆயினும் இதை உரையாடலுக்கு எடுப்பதன் நோக்கம் இதில் தெரியும் பற்று. ஒரு வாசகனுக்கு ஓர் எழுத்தாளன் மேல் இருக்கும் பற்று என்பது ஒருவகையில் புனிதமான உணர்வு. அதில் உலகியல் இல்லை. உடைமைகொள்ளுதலும் அடையாளம்நாடலும் இல்லை. அறிவார்ந்தது அது. அத்தகைய பற்றுகள் வழியாகவே இலக்கியமும் அறிவுச்செயல்பாடும் முன்னகர்கின்றன. உங்களுக்கு பாலகுமாரன் மேலிருக்கும் அந்த அன்பை நான் மதிக்கிறேன். அதில் மகிழ்கிறேன்.

சிலவிஷயங்களை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன். பாலகுமாரன் எனக்கு  நான் சினிமாவில் நுழைந்தபின் அணுக்கமானவராக ஆனார். மூத்தவர் என்றவகையில். வழிகாட்டி என்றவகையிலும். சினிமாவில் செயல்பட நல்ல ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார். அவர் செயல்படமுடியாத உடல்நிலை அடைந்த போது சில வாய்ப்புகளை எனக்கு திருப்பிவிட்டிருக்கிறார். சந்திக்கையில் அணுக்கமாகவே பேசுவோம். என்னை ‘டா’ போட்டு அழைக்கும் உரிமையை எடுத்துக்கொண்டார். நானும் அவ்வண்ணமே அவரிடம் இருந்தேன்.

அவருக்கு அவர் மீதான என் மதிப்பீடு என்ன என்று தெரியும். பெரும்பாலும் இயல்பாக எடுத்துக்கொள்வார். ஓரிருமுறை திட்டியும் இருக்கிறார். ஆனால் பாலகுமாரன் பொதுவாக இலக்கியம் போன்றவற்றிலிருந்து விலகிச்சென்றபின் நான் அவரைச் சந்தித்தேன். ஆகவே அவர் பெரிதாக எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் பொதுவாகவே அனைவருக்கும் உதவிகள் செய்பவர், பிறருக்குப் பொறுப்பேற்றுக்கொள்பவர், நட்பானவர்.

விழாவுக்கு அவரை அழைத்தேன், ஆனால் உடல்நிலை மோசம் என்று தெரிந்து வரவேண்டாம் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சிரமப்பட்டு வந்துவிட்டார். அதுவும் விழா தொடங்கியபின்பு. அவருக்கு உரிய வரவேற்பும் இடமும் அளித்தோம். மேடைக்கு அழைப்பது, அல்லது மேடையில் குறிப்பிடுவது போன்ற வழக்கங்கள் நவீன இலக்கியச் சூழலில் இல்லை. அதை அவரும் அறிவார்.அன்று அந்த அவையிலேயே சினிமா, இலக்கியம் சார்ந்த பல முக்கியமானவர்கள் இருந்தனர்.

நான் பார்வையாளனாக பல அரங்குகளுக்குச் சென்றுள்ளேன். எங்கள் அரங்குகளில் மணிரத்னம் போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். பிற விழாக்களில் ஒரு முக்கியமானவர் வந்ததுமே ஒரு கொண்டாட்டம் உருவாகும். அது நவீன இலக்கிய அரங்குகளில் இல்லை, இருக்கவும்கூடாது. அழைப்பிதழில் பெயரில்லாதவர்கள் பேசவும் கூடாது. இது சிற்றிதழ்ச்சூழலில் பலகாலமாக இருந்துவரும் மரபு.

ஆகவே பாலகுமாரன் அங்கே எவ்வகையிலும் அவமதிக்கப்படவில்லை. அவரே கசடதபற என்னும் தீவிரப்போக்குள்ள சிற்றிதழிலிருந்து வந்தவர். அவருக்கும் அதெல்லாம் தெரியும். அந்த விழாமுடிந்தபின் நேரில் சந்தித்துப் பேசிவிட்டே சென்றார்.

பாலகுமாரனைப் பற்றிய உங்கள் கேள்விக்கான பதிலை முன்னர் இத்தளத்தில் எழுதியிருக்கிறேன். அவர் அவற்றை வாசித்திருக்கிறார். “என்ன பலமா அடிக்கிறே?”என்று ஒருமுறை கேட்டார்.தன் படைப்புக்கள் காலத்தில் நிலைகொள்ளும் என நினைத்தார். இலக்கியங்கள் மக்கள் நினைவிலேயே நீடிக்கின்றன நூலகங்களிலல்ல என்பது அவருடைய கருத்து. “புதுமைப்பித்தனைவிட கல்கிதாண்டா உயிரோட இருக்கார்” என்று அவர் சொல்வார்.

பாலகுமாரனை பற்றி நான் மிகக்கடுமையான கருத்துக்களை இளமையில் சொன்னதுண்டு. ஒன்று என் இளமையின் முதிர்ச்சியின்மை. இளமை தீவிரநிலைபாடுகளை எடுக்கிறது, அதிலிருந்து அடையாளங்களை உருவாக்கிக்கொள்கிறது. இன்னொன்று, அக்காலச் சூழல். அன்று இலக்கியம் சிலநூறுபேரிடம் தேங்கியிருந்தது. சிற்றிதழ்களை வாசிப்பவர்களுக்கே இலக்கியமும் இலக்கியமதிப்பீடுகளும் அறிமுகமாகியிருந்தன. மறுபக்கம் வணிக இதழ்களில் சுஜாதா பாலகுமாரன் ஆகியோர் பேருருக்கொண்டு திகழ்ந்தனர்.

அச்சூழலில் இலக்கியம் வணிக எழுத்து என்னும் வேறுபாட்டை தீவிரமாக முன்வைக்கவேண்டியிருந்தது. அதை அன்றைய இலக்கியமுன்னோடிகள் எல்லாருமே செய்திருக்கிறார்கள். அதிலும் பாலகுமாரன் இலக்கிய உச்சம் என்றே கருதப்பட்ட காலம் அது. ஆகவே அவரை முற்றாக மறுத்தே இலக்கியமதிப்பீடுகளை முன்வைக்கவேண்டியிருந்தது. கல்கி முதல் அகிலன், நா.பா, பாலகுமாரன் வரையிலானவர்களை அவ்வண்ணம் அன்றைய சிற்றிதழ்மரபு மறுத்தது.

நான் சிற்றிதழ் சூழலில் இருந்து வந்தவன். அதிலேயே எழுதிக்கொண்டிருந்தவன். சிற்றிதழ் நடத்தியவன். நச்சிலக்கியம், நுகர்விலக்கியம், கேளிக்கை இலக்கியம் என்றெல்லாம் அன்றைய மையஓட்ட எழுத்து விமர்சிக்கப்பட்டது.அம்மதிப்பீடுகளே இன்றும் என்னிடம் உள்ளன. அவற்றையே தொடர்ச்சியாக முன்வைக்கிறேன். ஆனால் அன்றுபோல மூர்க்கமாக அல்ல. அன்றுபோல அறுதியான வகைப்பாட்டையும் இன்று செய்வதில்லை.

இன்று நான் பாலகுமாரனை எப்படிப் பார்க்கிறேன்? தமிழின் இலக்கியச்சூழலில் ஒரு வகை ‘மெல்லிலக்கியம்’ உண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன்,வண்ணநிலவன் ஆகியோர் அதன் முகங்கள். ஆண்பெண் உறவைப்பற்றிய மெல்லுணர்ச்சிகளை எழுதியவர்கள். சிலசமயம் நுட்பமாக, பலசமயம் வெறுமே வாசகர்களுக்குச் சுவையூட்டும்விதமாக. அந்தவகை எழுத்தை நீட்டி வணிக எழுத்தாக ஆக்கியவர் என்று பாலகுமாரனை மதிப்பிடுவேன். அவருக்கு முன்னோடி என்றும் சிலர் உள்ளனர். ஆர்வி, பி.எம்.கண்ணன் போன்ற சிலரை சொல்லலாம்.

அவர் எழுதியவற்றில் மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரைகள், கரையோர முதலைகள் ஆகியவை ஜானகிராமனுக்கு அணுக்கமானவை. ஓரளவு இலக்கியமதிப்பு கொண்டவை. பின்னர் அந்த வகை எழுத்தை ஒரு பயிற்சியாகச் செய்ய தொடங்கினார். அந்த மொழிநடை, வடிவம்,பார்வை ஆகியவற்றை மிகமிக இழுத்து நீட்டி எழுதினார். அவை வெறும் வணிக எழுத்துக்கள்

விதிவிலக்காக இன்று இலக்கிய அளவுகோலின்படித் தேறும் ஆக்கங்கள்  ‘அப்பம் வடை தயிர்சாதம்’ என்னும் நாவலும் ‘உடையார்’ நாவல்களின் முதல்பாகமும். அவற்றுக்கு ஓர் இலக்கியமதிப்பு உண்டு என நினைக்கிறேன். ’அப்பம் வடை தயிர்சாதம்’ கொஞ்சம் தன்வரலாற்றுத்தன்மை கொண்டது. ஒருகாலகட்டத்தை மொத்தமாக வளைத்துக்கொண்டு சொல்ல முற்படுகிறது. தலைமுறைகளின் பரிணாமம் அதிலுள்ளது. உடையார் மிகமிகப்பெரிய கனவு கொண்ட முயற்சி. அதன் அடித்தளம் மிக ஆழமானது. ஆனால் பின்னர் அது வழிதவறி அலைகிறது, ஆழமற்ற நீண்ட பேச்சுக்களாக மாறிவிடுகிறது

நாஞ்சில்நாடனையும் பாலகுமாரனையும் ஒப்பிட்டு மதிப்பீடுகளுக்கு வருவது உங்கள் ரசனை, வாசிப்புத்திறன் ஆகியவற்றைச் சார்ந்தது. அதை நான் வழிநடத்தமுடியாது. வாதிட்டு நிறுவவும் முடியாது. என் பார்வையைச் சொல்கிறேன், நீங்கள் இல்லையேல் இன்னொருவர் அதை பற்றி சிந்திக்கக்கூடும்

நவீன இலக்கிய விமர்சன மதிப்பீடுகளின்படி இலக்கியத்தின் அடிப்படைகளாக அமைவன சில உண்டு. இவை எந்த அதிகாரபீடத்தாலும் வகுக்கப்பட்டு நிறுவப்பட்டவை அல்ல. ஏற்கனவே எழுதப்பட்ட பேரிலக்கியங்களின் அடிப்படையில், அவற்றின் தொடர்ச்சியாகவும் கடந்துசெல்லலாகவும் அடுத்தகட்ட ஆக்கங்கள் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உருவாகிவந்தவை. இவற்றுக்கு இருக்கும் செல்வாக்கு என்பது இவை நுண்ணிய வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்பதே.இவற்றை எவரும் மறுக்கக்கூடாது என்றில்லை, மறுத்தால் தண்டனையும் இல்லை, ஆகவே இவை ‘அதிகாரங்கள்’ அல்ல. இவை மேலோங்கிய தரப்புகள் அவ்வளவுதான்

இந்த அளவீடுகள் ஒவ்வொரு அழகியல்வகைமைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. நாஞ்சில்நாடன், பாலகுமாரன் ஆகிய இருவரும் யதார்த்தவாத அழகியல்முறைமைக்குள் இயங்கியவர்கள். யதார்த்தவாத அழகியலின் அடிப்படைகள் என்னென்ன, அவற்றின்படி அவர்களின் வெற்றிதோல்விகள் என்னென்ன என்று பார்த்து அவர்களை மதிப்பிடலாம்

யதார்த்தவாதம் என்பதே ‘புறவயமான நம்பகத்தன்மையை’ புனைவுக்கு அளித்து அதனூடாக வாழ்க்கையின் உண்மைகளை நோக்கி வாசகனை கொண்டுசெல்லும் பொருட்டு உருவாக்கப்பட்ட அழகியல்தான். அதாவது, இது கதையல்ல உண்மை, இப்படியே இது நடந்தது என்று வாசகன் நம்பும்போதுதான் அந்த கதையிலிருந்து உண்மையான வாழ்க்கைத்தரிசனத்தை நோக்கி அவன் செல்கிறான்.அப்படி நம்பவைப்பதே யதார்த்தவாதத்தின் முதல் அறைகூவல்.

இந்த நம்பகத்தன்மை மூன்று தளங்களில் நிகழவேண்டும்.

அ.சூழல்சார்ந்த நம்பகத்தன்மை.

ஆ.கதைமாந்தர் சார்ந்த நம்பகத்தன்மை.

இ.உணர்ச்சிகள் சார்ந்த நம்பகத்தன்மை.

நுணுக்கமான தகவல்கள் வழியாக உண்மையான ஒரு வாழ்க்கைச்சூழலை காட்டுவது யதார்த்தவாதத்தில் முதன்மையானது. நுணுக்கமான தகவல்கள் என்னும்போது ஏராளமான தகவல்கள், சின்னச்சின்ன செய்திகளைச் சொல்லவில்லை. வாசகனின் கற்பனையை விரியச்செய்து அந்த நிலத்தையும் வாழ்க்கையையும் முழுமையாக உருவாக்கிக்கொள்ள உதவும் நுண்தகவல்களை சொன்னேன்

அந்தக்களத்தில் கதைமாந்தர் நம்பகமானவர்களாக உருவாக்கப்படவேண்டும். கதைமாந்தரின் பேச்சு, தோற்றம், நடத்தை  ஆகியவற்றை நுட்பமாகவும் நம்பகமாகவும் காட்டுவது முதல்தளம். இது புறவயமானது. அந்தக் கதைமாந்தரின் மனம் ஓடும் விதம், அவர்களின் குணங்கள் மாறிவரும் விதம், அதற்கேற்ப அவர்களின் நடத்தைகளில் வரும் மாற்றங்கள் ஆகியவற்றை கூர்மையாக காட்டி வாசகன் அவர்கள் உண்மையான மனிதர்களின் பதிவுகளே என்று ஏற்கவைக்கப்படவேண்டும்.

மூன்றாவதாக உணர்ச்சிகள். யதார்த்தவாதக் கதையில் மனித உணர்ச்சிகள் மூன்றுவகையில் வெளிப்படும். செயற்கையான கதைச்சூழலை உருவாக்கி அனைவருமறிந்த வழக்கமான உணர்ச்சிகளையே உச்சகட்டமாக்கி வெளிப்படுத்துவது மிகைநாடகத்தன்மை. [Melodrama] என்று சொல்லப்படுகிறது. உண்மையிலேயே மனிதர்கள் கொண்டிருக்கும் அடிப்படை உணர்ச்சிகளை தொட்டுச் சீண்டிவிடும் நோக்குடன் எழுதப்படும் உணர்ச்சிச் சித்தரிப்பு மெல்லுணர்ச்சி எழுத்து எனப்படுகிறது. [sentiments ]. இவ்விருவகையான உணர்ச்சிவெளிப்பாடும் நவீன இலக்கியத்திற்கு ஒவ்வாதவை, எதிரானவை

இலக்கியத்தரமான உணர்ச்சிவெளிப்பாடுகள் இரண்டு. அரிய உணர்வுநிலைகளும் நுட்பமான உணர்ச்சிகளும் வெளிப்படுவது ஒருவகை. இது உணர்ச்சிவெளிப்பாடு [Emotions, Pathos] என்று சொல்லப்படுகிறது. இது உண்மையான உணர்வுநிலைகள் உச்சமடைவதன் வழியாகவும், உணர்ச்சிகளின் நாடகீயமான மோதல் வழியாகவும் நிகழ்கிறது. அறம்சார்ந்த மன எழுச்சியும், ஒட்டுமொத்தப்பார்வை அளிக்கும் நிறைவுணர்வும் இன்னொருவகை உணர்ச்சிகள். இது உணர்வெழுச்சி [Sublime] என சொல்லப்படுகிறது.

இலக்கியத்தில் உள்ள உணர்ச்சிவெளிப்பாடும், உணர்வெழுச்சியும் கண்கலங்கவைக்கும், மனம்கிளரவைக்கும் உணர்வுநிலைகள்தான். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் படிப்பவர் பல கட்டங்களில் கண்ணீர் சிந்தக்கூடும். ஆனால் அதற்கும் செயற்கையாக கட்டமைக்கப்படும் மிகைநாடகத்தன்மைக்கும், மெல்லுணர்ச்சிக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு.

நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது.  ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் அவர் உருவாக்கி அளிக்கிறார்.

அவர் எழுதிக்காட்டிய நாஞ்சில்நாடு நாஞ்சில்மண்ணையே ஒருமுறைகூட பார்க்காதவர்களும் கற்பனையில் வந்து வாழ்ந்து சென்ற ஓர் இடமாக உள்ளது. ஓடையில் துணிதுவைக்கும் கல்லில் ஒட்டியிருக்கும் சிவப்பு சோப்பு ஏன் சொல்லப்படவேண்டும்? ஒரு கணத்தில் நம் கற்பனையை சீண்டி அது அந்த ஓடையையே நம் கண்முன் காட்டிவிடுகிறது

நாஞ்சில்நாடனின் கதைமாந்தர் அந்த நாஞ்சில்நாட்டிலேயே இயல்பாகக் காணக்கிடைப்பவர்கள். இயல்பான அற்பத்தனமும், அன்பும், பதற்றங்களும் கொண்டவர்கள். அசாதாரண கதாபாத்திரமான ‘பிராந்து’ முதல் சர்வசாதாரணமான கதாபாத்திரமான திரவியம் [தலைகீழ்விகிதங்கள்] வரை. அவர்கள் என்ன எண்ணமுடியுமோ அதையே எண்ணுகிறார்கள். அவர்கள் எதைப்பேசுவார்களோ அதையே பேசுகிறார்கள். அவர்கள் இயல்பாக எப்படி வளர்ச்சியடையமுடியுமோ அப்படி வளர்ச்சி அடைகிறார்கள்

அந்த நம்பகமான சூழலில் நம்பகமான மனிதர்கள் அடையும் உணர்ச்சிகளே அவர் படைப்பில் வருகின்றன. மிகப்பெரும்பாலும் அவர் உணர்ச்சிகளை நேரடியாக காட்டுவதில்லை.வாசகனுக்கு உணர்த்திவிட்டுச் செல்கிறார்  கடும்பசியுடன் இரு மகள்களின் வீட்டுக்குச் செல்கிறார் ஒருவர். அவர் சாப்பிட்டுவிட்டு வந்தார் என நினைத்து இருவருமே சாப்பிட அழைக்கவில்லை. பசியுடன் மீண்டும் தன் வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால் அவருடைய உணர்ச்சிகளை அவர் சொல்வதில்லை, வாசகனுக்கே விட்டுவிடுகிறார்

நாஞ்சில்நாடனின் படைப்புலகில் மிகைநாடகம் இல்லை. மெல்லுணர்ச்சிகளும் இல்லை. உணர்ச்சிநிலைகள் உள்ளன. சாலப்பரிந்து போன்ற சிறுகதைகள் உதாரணம். ஆனால் அவருடைய மிகச்சிறந்த கதைகள் உணர்வெழுச்சித்தன்மை கொண்டவை.  ‘யாம் உண்பேம்’ ஓர் உதாரணம். அப்படிப்பட்ட ஐம்பது கதைகளையாவது சுட்டமுடியும். அங்கே வாசகன் உணர்வது துக்கம்போன்ற உணர்ச்சிகளை அல்ல. ஒரு பெரிய அறத்தை அல்லது வாழ்க்கைமுழுமையை தரிசித்ததன் சிலிர்ப்பை. அவற்றை எழுதியமையால்தான் நாஞ்சில்நாடன் தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவர். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி வரிசையில் வைக்கத்தக்கவர். அத்தகைய கதைகள் அனைத்தைப்பற்றியும் நான் எழுதியிருக்கிறேன், வாசித்துப்பாருங்கள்.

நாஞ்சில்நாடனின் கதையுலகை இப்படி வகுக்கலாம். அவருடைய பல கதைகளில் நம்பகமான சூழல், நம்பகமான கதைமாந்தர், உலகியல்சிக்கல் ஒன்று, அதைப்பற்றிய அவருடைய பார்வை ஆகியவை இருக்கும். இவை அவருடைய சாதாரணமான கதைகள். அவருடைய உணர்ச்சிகரமான கதைகளில் நம்பகமான உணர்வெழுச்சி பதிவாகியிருக்கும். அவருடைய சிறந்த கதைகளில் ஒரு மகத்தான மானுடவிழுமியம் வெளிப்பட்டிருக்கும்.

நேர்மாறாக, பாலகுமாரன் உருவாக்கும் யதார்த்தத்திலேயே போதாமைகள் உண்டு. அவர் அதை தன் வாழ்க்கையனுபவத்தில் இருந்து, தான் பார்த்தவற்றிலிருந்து உருவாக்கவில்லை. அவருடைய சொந்த வாழ்க்கையனுபவங்கள் மெர்க்குரிப்பூக்களில் உண்டு. ஆனால் அவர் அவற்றைக்கூட இன்னொரு புலத்தில் வைத்து விரிக்கிறார், அங்கிருந்துகொண்டு ஒரு போலியான யதார்த்தத்தை உருவாக்குகிறார்

அது என்ன? தமிழில் வணிக எழுத்து உருவாகி வந்த நூறாண்டுகளில் ஏராளமான படைப்புக்கள் வழியாக ஒரு பொய்யான வாழ்க்கைப்புலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது எங்கும் இல்லை. வெறுமே வாசிப்பில், கற்பனையில்தான் உள்ளது. வாரஇதழ் கதைகளை வாசித்தால் கொஞ்சநாளில் அதே போல நாமும் எழுதமுடியும். அந்த பொய்யான உலகில் கதைச்சூழல், கதைமாந்தர் எல்லாமே பொய்யானவர்கள். வாசகனுடைய விருப்பக்கற்பனையை சார்ந்தவர்கள். எழுத்தாளன் அந்த விருப்பக்கற்பனையை தன் எழுத்தால் வளர்க்கிறான்

[இதுவே சினிமாவிலும் நிகழ்கிறது. சினிமா சென்ற நூறாண்டுகளில் ஒரு கற்பனையான வாழ்க்கைப்புலத்தை உருவாக்கியிருக்கிறது. அது பகற்கனவுகளால் ஆனது. ரசிகனின் கனவு, சினிமாக்கலைஞர்களால் வளர்க்கப்பட்டது. அதில் சாகசநாயகன், அடித்தளத்திலிருந்து சவால்விட்டு வருபவன், சுட்டிப்பெண் கதைநாயகி, ஆணவக்காரி, கிராமத்து அழகி என பல உருவங்கள். நானும்கூட சினிமாவில் அவற்றைக்கொண்டுதான் மீண்டும் சினிமாவை எழுதுகிறேன். பாலகுமாரன் நாவலெழுதியதுபோல. அந்த உலகம் என்ன, அதை எப்படி கையாள்வது என்று தெரிந்து செய்வது அது. ஆகவே அதை இலக்கியம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வதில்லை]

கல்கி,சாண்டிய்ல்யன், ஆர்வி, எல்லார்வி, பிவிஆர், சிவசங்கரி, வாசந்தி, இந்துமதி, சுஜாதா, பாலகுமாரன், ரமணி சந்திரன், முத்துலெட்சுமி ராகவன் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய ஓர் உலகம் அது. அங்கிருக்கும் மனிதர்களை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பேசப்படும் கருக்களையும் அவ்வாறே கொஞ்சம் மாற்றிக்கொள்கிறார்கள்.

பாலகுமாரனின் புனைவுலகில் அவருடைய சுயமான உலகம் குறைவு. தமிழ் வணிக எழுத்தின் பகற்கனவுப்பரப்பு உருவாக்கிய உலகமே மிகுதி. ஆகவேதான் அவரை இலக்கியத்துக்குள் கருத்தில்கொள்வதில்லை. குறிப்பாக பாலகுமாரனின் பெண்கதைமாந்தர்கள் முழுக்கமுழுக்க அந்தப் பகற்கனவைச் சார்ந்தவர்கள். அவருடைய முதல்நாவலிலேயே  சாவித்திரி , சியாமளி இருவரும் அந்த உலகிலிருந்து உருவாக்கிக் கொள்ளப்பட்டவர்கள். அவர்களை அப்படியே பிவிஆர், பி.எம்.கண்ணன், ஆர்வி கதைகளிலும் காணலாம். பிற்கால நாவல்களில் அவர்கள் முழுக்கமுழுக்க அந்த பகற்கனவுப் பிம்பங்கள்தான்

இவர்கள் குறிப்பாக எந்த நிலத்திலும் எந்த இடத்திலும் வேர்கொண்டவர்கள் அல்ல. இவர்களுக்கு தெளிவான கலாச்சார அடையாளங்கள் இல்லை. இவர்களுக்கு உட்சிக்கல்கள் இல்லை. அவர்கள் அடையும் உணர்வுகளும் மோதல்களும்கூட கற்பனையானவை. அவர்களை எந்த நிலத்திலும் உண்மையாக வாழ்பவர்களாக நினைத்துக்கொள்ள முடியாது. அதேசமயம் நாம் அன்றாடம் பார்க்கும் எல்லாரிலும் அவர்களின் ஏதேனும் சிலகூறுகள் தட்டுப்படவும் செய்யும். நாம் நிறைய வாசிக்கும் இளமையில் நம் மனதை நிறைத்திருப்பவை பகற்கனவுகள்.அந்தப்பகற்கனவுகளின் உலகின் நீட்சியாக இருப்பவை இவ்வகை எழுத்துக்கள். ஆகவே நமக்கு அவை உள்ளத்தை கொள்ளைகொள்வனவாக உள்ளன. உண்மையான இலக்கிய அறிமுகமும், அவற்றை வாசிப்பதில் சுவையும் உருவானபின்னரே இவை பகற்கனவுகள் எனத் தெரியும்

சூழலும் கதைமாந்தரும் பகற்கனவுத்தளம் சார்ந்தவை என்பதனால் இவர்கள் மெய்யான உணர்ச்சிநிலைகளை அடையமுடியாது. மிகைநாடகம், மெல்லுணர்ச்சிகளையே அடையமுடியும். ரமணி சந்திரன் போன்றவர்களில் மிகைநாடகம் ஓங்கியிருக்கிறது. பாலகுமாரனில் மெல்லுணர்ச்சிகள் ஓங்கியிருக்கின்றன. இவற்றுக்கு இலக்கியமதிப்பு இல்லை.

இப்புனைவுகள் புழங்கும் தளமே பகற்கனவு சார்ந்தது என்பதனால் இவற்றில் அறவிழுமியங்களோ  முழுமைநோக்கின் தரிசனங்களோ நிகழ வாய்ப்பில்லை. வாசகர்களால் ஏற்கப்படும் கருத்துக்களும் பார்வைகளுமே பொதுவாக முன்வைக்கப்படும். பாலகுமாரன் ஒரு படிமேல். அவர் முன்வைப்பவை பொதுவிவேகம்  [common sense] சார்ந்த பார்வைகள். அவ்வகையில் வணிக எழுத்தின் தளத்தில் அவை சற்று முதிர்ச்சியானவை.

பாலகுமாரனையும் பிறரையும் ஒப்பிடுவதைவிட அவருடைய பிற நாவல்களை அவருடைய நாவலான ‘அப்பம் வடை தயிர்சாத’த்துடன் ஒப்பிட்டாலே போதும், நான் சொல்லவருவது புரியும். அப்பம் வடை தயிர்சாதத்தில் உண்மையான வாழ்க்கைச்சூழலும் உண்மையான மனிதர்களும் இருக்கிறார்கள்.

நாஞ்சில்நாடனுக்கும் பாலகுமாரனுக்குமான வேறுபாடு இதுவே. நாஞ்சில்நாடன் தமிழ் நவீன இலக்கியத்தின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று. பாலகுமாரன் தமிழ் வணிக எழுத்தின் திறமையான வெளிப்பாடுகளில் ஒன்று

ஜெ நாஞ்சில் நாடனின் கும்பமுனி மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் – நாஞ்சில் நாடனின் கலை பசி வீற்றிருக்கும் நடுமுற்றம் பாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம் அஞ்சலி பாலகுமாரன் பாலகுமாரன் ஒரு கடிதம் பாலகுமாரன் மேலும் …. பாலகுமாரன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2021 10:35

மரம்போல்வர்- சுஷீல்குமார்

அடுத்த நாள் காலை சாமி மரத்தை வெட்டப் போகிறார்கள். அதற்கடுத்த நாள் எங்கள் புது வீட்டிற்கான கல் போடும் சடங்கு. வீடு கட்டி முடித்ததும் அண்ணனின் திருமணம். எல்லாம் சரியாக நடக்க வேண்டும். என்ன இருந்தாலும் அப்பாவின் வாழ்நாள் லட்சியமில்லையா? ஒரு மிகப் பெரிய சாதனையும் தானே? எங்களை எப்படியெல்லாம் வளர்த்தார்! ஒரு சுடுசொல் உண்டா?

மரம்போல்வர்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2021 10:34

காலக்குகை

இனிய ஜெயம்

கார்டியன் இதழில் கடந்த வாரம் வந்திருக்கும் செய்தி இது, பிரிட்டிஷ் கொலம்பிய. சேர்ந்த  தொல்பழங்கால. ஆய்வாளர்கள் அமேசான் வனத்துக்குள் உலகின் மிகப் பெரிய தொல்பழங்கால பாறை ஓவியத்தை கண்டடைந்திருக்கிறார்கள். காலம் இன்றிலிருந்து 12,000 ஆண்டுகள் முன்பு துவங்குகிறது. துருக்கியின் கோபக்லி தப்பே கோவிலின் அதே காலம். கிட்டத்தட்ட பனியுக இறுதி.

பனியுகத்தின் இறுதியில் அழிந்து போன நியாண்டர்தால் போலவே, அப்போது அழிந்து போன யானை குதிரைகளின் மூதாதைகளை இந்த ஓவியங்கள் கொண்டிருக்கிறதாம். ( கீழ்வாலை ஓவியத்தில் உள்ளதை போலவே பறவை அலகு கொண்ட கிரீடம் அணிந்த மனிதன் இதிலும் இருக்கிறான்).

லக்ஸர்ஸ் குகை, இன்னும் பெயரிடப்படாத இந்த சுவரோவியங்கள், கோபக்லி கோவில்  , மகாராஷ்டிரா பாறை வெட்டு ஓவியங்கள், கிழக்கு அமேரிக்கா நாஸ்காஸ் பிரும்மாண்ட ஓவியங்கள் பிரும்மாண்ட குத்துக் கற்கள்  இப்படி ஒரு வரிசையை தொடுத்து பண்டைய நாகரீகத்தை யூகித்தால் தலை சுற்றுகிறது.

கோபிக்லி கோவில்  உலோகங்களின் காலம் துவங்கும் முன்பு  ( அதன் தூண்களில் புடைப்பு சிற்பங்கள் )12,000 வருடங்களுக்கு முன்னால், கடினமான கற்களை உளி போன்ற பிற கருவிகளாக பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஒரு பிரும்மாண்ட கோவில் எழ, வளமான விவசாயம் செழிக்கும் உபரி உள்ளிட்ட  எத்தனை நூறு காரணிகள் தேவை என்பதை தஞ்சை பெரியகோவில் உருவான பின்புலத்தை வாசித்து அறிந்த வகையில், இந்த கொபெக்லி கோவில் எழுந்த சூழலை பொருத்தி யோசிக்க ஆச்சர்யமே மிஞ்சுகிறது.

இந்த அமேசான் ஓவிய வரிசை பன்னிரண்டு கிலோமீட்டர் நீளமுடையது எனில், பல நூறு தலைமுறைகளாக தொடர்ந்து அங்கே புனிதப் பயணமாக அன்றைய மானுடர் வெவ்வேறு எல்லைகளில் இருந்து வந்து கூடினர் என யூகிக்க எல்லா சாத்தியமும் உண்டு. யோசிக்க யோசிக்க எங்கெங்கோ சுழற்றி அடித்து, நேற்றைய இரவின் தூக்கம் போனதுதான் மிச்சம். இவர்கள் ஹோமோ இனத்தை சேர்ந்த மனிதர்கள் என்றால், இவர்களை மிஞ்சும் எதையும் இன்றைய நவீன மனிதன் செய்துவிட வில்லை. இவர்கள் நியாண்டர்தால்கள் எனில் (பொறாமையில்) நல்லவேளை செத்து ஒழிஞ்சானுக என்று தோன்றுகிறது. யாருக்கு தெரியும் அந்தக் கால இசைக்கருவிகள் கொண்டு வேகனாரை  மிஞ்சும் ஒபேரா கூட அவர்கள் வசம் இருந்திருக்கலாம். ஏன்ஷியண்ட் ஏலியன் என்றொரு தொடர் கண்டேன், உலோக காலத்துக்கு முந்திய பண்பாடு ஏலியன்களால் உருவாக்கப்பது என்பதே அந்த தொடரின் சாரம். நம்பலாம் போலத்தான் தோன்றுகிறது . :)

கடலூர் சீனு

மையநிலப்பயணம் பிம்பேத்கா

அன்புள்ள சீனு

இந்தியாவில் முக்கியமான பல குகை ஓவியங்கள் உள்ளன. எங்கள் பயணங்களில் தொடர்ச்சியாக அவற்றை பார்த்து, எழுதிவருகிறேன். எத்தனை காணொளிகள் பார்த்தாலும் மெய்யாகவே ஒரு குகையோவியத்தை பார்ப்பதென்பது மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு வரலாற்றனுபவம்

இந்தியக்குகை ஓவியங்களில் உச்சம் பிம்பேத்கா. பலவகையிலும் இதனுடன் ஒப்பிடத்தக்கது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2021 10:31

நித்யா புகைப்படங்கள்

ஜெ,

இது சவுக்கத் அவர்களின் fb பக்கம், தற்செயலாகதான் பார்த்தேன், இதில் நித்யாவின் புகைப்படங்கள் பல புதிதாக இருந்தன, இவை இதுவரை வெளிவாராதவை என்று நினைக்கிறேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=10217570368874536&id=1337091055

https://m.facebook.com/story.php?story_fbid=10217570492517627&id=1337091055

 

ராதாகிருஷ்ணன்

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

உஸ்தாத் சௌகத் முகநூலில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது

நல்ல படங்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2021 10:31

முதற்கனல் என் தத்துவநோக்கில்

அன்பு ஜெ,

முதற்கனலில் என்னைக் கவர்ந்த தத்துவார்த்த தருணங்களை இந்தக் கடிதத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

முதற்கனல் என்ற சொல்லே ஒரு கனல் ஒன்று என்னுளிருந்து புறப்படத் தயாராகுவது போல அமைந்தது. அண்ட சராசங்களின் துவக்கப் புள்ளியே கூட ஒரு முதற்கனலாகத் தான் இருந்திருக்க முடியும். அந்தக் கனலின் பிறப்பை மிக நுட்பமாக இந்த நூலின் முதல் அத்தியாயம் எடுத்தியம்புகிறது. இந்த நாவலை வாசிக்கும் போது அந்தக் கனலை அம்பையின் காதலின் கனலோ என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் ஜெ இங்கு முதற்கனலாக சொல்லியிருப்பது சுனந்தையின் காமத்தின் கனலை. ஆம்! அது அங்கு தான் தொடங்குகிறது என்றுணர்ந்த போது என் எண்ணங்கள் மடை மாறியது. மிகப் பெரும் ஓர் சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான கனலை முதற்கனல் எடுத்தியம்புகிறது.

பிரபஞ்சத்தின் தோற்றுவாய் எல்லா மதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. அறிவியலிலும் சொல்லப்பட்டுள்ளது. பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொள்ளும் பெருவெடிப்புக் கொள்கையையே கூட என்னால் ததுவார்த்த ரீதியாக ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. பைபிலிலும், குர்ஆனிலும், இந்து மதம் பொதுவாகச் சொல்லும் கடவுள் படைப்பு என்பதும் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அதை நாம் எதிர்த்தால் பாவச் செயலாக கருதுவதென்பது கூட என்னை அங்கிருந்து விலகி ஓடவே செய்திருந்தது. எதைச் சொன்னாலும் நான் அதுக்கு முன் என்ன? என்றே நினைத்திருப்பேன்.

இங்கு ஜெ காட்டும் பிரபஞ்சத் தோற்றுவாய் என்னை சிலிக்கச் செய்கிறது. ஏதுமற்ற ஓர் சூனியத்திலிருந்து பிரபஞ்சம் பிறக்கிறது. பிரபஞ்சத்தின் முதல் அசைவு நா-அகத்தின் அசைவாக சித்தரிக்கப்பட்டு “நான் இருக்கிறேன்”; “இனி” என்று விரிகிறது. நான் என்பதே அகங்காரமாகி அதன் அருப்பை நினைத்து பெருமிதம் கொள்வதே அகங்காரமாகி அது பல்லாயிரம் கோடியாக பெருகுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் தோறுவாய் ”இச்சை” என்னும் புள்ளியினின்று பிறப்பெடுக்கிறது என்னும் தத்துவம் என்னுள் கேட்டுக் கொண்ட பல கேள்விக்கான விடையாக அமைந்தது. மேலும் சிந்தித்தேன். சூனியத்திலிருந்து அடுத்து தோன்றுவது ”ஒன்று”. ஒன்றிலிருந்து எண்கள் முடிவில்லாது பெருகிக் கொண்டே செல்கிறது. அதற்கு முற்று என்பது இல்லை. இச்சையும் அப்படித்தானே. இச்சை ஒன்றாலே தான் இப்படி பல்லாயிரமாகப் பெருக முடியும். அப்படியானால் நான் என்பதைக் கடக்க முதலில் இச்சையை விட்டாக வேண்டும். புத்தரும் அதைத்தானே சொல்கிறார். அவர் கண்டடைந்த கரு அதுவாகத்தானே இருக்க முடியும்.  பைபிலில் ஏதேன் தோட்டத்திற்கு வரும் நாகம் கூட இச்சையின் வடிவம் தானே. அதைக் கைகொண்டதால் தானே மனிதன் கடவுளுக்கு நிகரான இடத்தை இழந்தான். கடவுள் தன்மையை ஒருவேளை அடைய வேண்டுமென்றால் நான் விட வேண்டியது இச்சை தானே. இச்சையை விட்டு, நான் என்பதையும் விட்டொழித்து இறுதியில் நான் சென்றடையப் போவது எங்கே? மீண்டும் அந்த ஆதிப்புள்ளியான ஒன்றுமற்ற நிலை.

ஜெ சொல்வதுபோல நான் என்று தொகுத்துக் கொண்டதை விட்டொழிக்கும் ஒரு நிலை. ஏதுமற்ற நிலை. விஷ்ணுபுரத்தின் அஜிதன் உணர்ந்ததே கூட அதைத்தான். அவன் வாழ்வுப் பயணத்தில் தேர்ந்தெடுத்தது என்பது ஞான மார்க்கத்தை. ஒரு வேளை அவன் சென்றடைய வேண்டுவது என்பது ஞானம் என தான் தொகுத்துக் கொண்ட அனைத்தையும் விட்டொழிப்பது. ”துறந்தவர்களுக்கு நான் அடிமை” என்ற உங்களின் இன்னொருவரியையும் இணைத்துக் கொண்டேன்.

இங்ஙனம் இந்த பிரபஞ்சத் தோற்றுவாயின் தத்துவமே என்னை முழுமையாக உள்ளிழுத்து முதற்கனலின் அத்தியாயத்துக்குள் விரைந்து இழுத்துக் கொண்டது. இந்த தத்துவத்தைத் தெரிந்து கொண்டேன் என்று நான் அகந்தையில் அமைந்து விட முடியுமா? முடியாது. ஏனென்றால் இச்சையை விட்டொழிப்பது அத்துனை சுலபமான காரியம் அல்லவே. காவியத்தைன் பயணந்தோறும் அதற்கான வழியையும், ”நான் ”என்பதைக் கண்டறிந்து அதை விட்டொழிக்கவுமான மார்க்கத்தை தேட முடிவெடுத்தேன். இச்சை என்பதின் உருப்பெருக்கத்தை அதன் பிரம்மாண்ட எழுச்சியை காணும் பயணத்தை இந்தப் புள்ளியினின்றே ஆரம்பித்தேன்.

இச்சையை நீங்கள் இங்கே தீமையாகவும் சொல்லவில்லை. ”அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது.” என்றீர்கள். ஞானத்தைப் பற்றிச் சொல்லும்போது ”மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாக்கப்பட்டுள்ளது” என்றும், ”ஞானம் என்பது அடைவதல்ல, ஒவ்வொன்றாய் இழந்தபின்பு எஞ்சுவது.” என்றீர்கள். கை கொண்ட ஞானத்தை செய்யும் தவறுகளுக்கான தருக்கத்தை உதிர்ப்பதற்காக பயன்படுத்துவதன் சிறுமையையும் கடிகிறீர்கள். இங்ஙனம் பீஷ்மரை, பரசுராமரை, துரோணரை உயர்ந்தோராக்கியது ஞானமே. ஆகையால் பிறப்பு எத்தகையதாயினும் உயர்வு என்பது ஞானத்தாலே வரும் என்று கொண்டேன். தொடங்கிவிட்ட இந்த என் பிறப்பு ஞானத்தை நோக்கி செலுத்த வேண்டியது என்பதையும் உணர்ந்தேன். ஞானத்தைக் கொண்டவன் ஆசையயும் தன்னகங்காரத்தையும் விட்டொழிக்கவில்லையெனில் அதுவே அவனுக்கு விஷமாக அமையும் என்று கூறுகிறீர்கள்.

மேலும் அறம் என்பது என்ன? தன்னறம், சுயதர்மம், தன்னகங்காரத்தைக் கலைவது போன்றவற்றைப்பற்றியும் பேசுகிறீர்கள். அறத்தைப்பற்றி சொல்லும்போது ”மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே” என ஒரு உபகதை மூலம் சொல்லியிருந்தீர்கள். காலங்காலமாக அறம் என்று கடைபிடித்துக் கொண்டிருக்கும் ஒன்றை நோக்கி அடுத்த தலைமுறை திரும்பினின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. என்று விளங்கவைத்த தருணம் எனக்கு மிகவும் அரியது.

”நான்” என்ற ஒன்றைக் கொண்டு சுழலும் மானுட வாழ்க்கையைப் பற்றி பல இடங்களில் சொல்கிறீர்கள். ”நான்” காணுவது என்பது நான் அறிந்தவற்றை மட்டுமே, என்னை முன்னிலைப் படுத்துவதை மட்டுமே, என் ஞானம், அறிவு என்று நான் கொண்டவற்றை மட்டுமே என்பது எத்துனை நிதர்சணமான உண்மை. பிறரில் காண்பதே கூட நான் விரும்பியதை மட்டுமே எனும்போது என் சிறுமையை உணர்ந்து கொண்டேன். என்னை நான் அயலானாகக் காண்பது போலேயே இப்போதெல்லாம் பிறரையும் எந்தவொரு முன் யூகமுமின்றி கண்டு கொண்டிருக்கிறேன். உலகத்து உயிர்கள் அனைத்தும் ஒன்றே எனக் காணும் ஒரு நிலையை எய்தச் செய்கிறீர்கள். வாழும் உலகத்தை இனியதாக்குகிறீர்கள்.

ஞானத்தைவிட தவத்தைவிட உயர்வான ஒன்றைப்பற்றிச் சொல்லும்போது அன்பை/பிரேமையைச் சொல்கிறீர்கள். ”அன்புகொண்டவர்கள் வரமுடியாத ஆழம் என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை” என்பது எத்துனை நிதர்சணமான உண்மை.

காலத்தைப் பற்றிப் பேசுகையில் அதை மாயையாக்கி நாம் திறந்து கொள்ள வேண்டிய காலம் அகண்டகாலம் என்கிறீர்கள். “முழுமுதல்காலத்தில் அனைத்தும் ஒன்றே. மூவகைக்காலம் என்பது நாம் நம் அகங்காரத்தால் பிரித்துக்கொள்வது மட்டுமே. அகண்டகாலம் நோக்கித் திறக்கும் கண்கள் கொண்டவர்கள் ஞானியர்.” இங்கு தான் காலம் என்னும் பரிமாணத்தின் தோற்றப்பிழையைக் கொண்டு நான்” என்பதி பிரித்தறிந்தேன். இன்னொரு இடத்தில், ”இப்படி இது நிகழ்ந்தாக வேண்டுமென்றிருக்கிறது. இதன் காரணங்கள் நாமறியாத இறந்தகாலத்திலும் காரியங்கள் நாம் அறிய முடியாத எதிர்காலத்திலும் உள்ளன.” என்று சொல்லியிருந்தீர்கள். அறிய முடியாத காலம் என்ற ஒன்றின் இருப்பே ஆணவத்தை முற்றிலும் அழிக்கும் புள்ளியாகக் கொண்டேன். இளைஞனே எவற்றையெல்லாம் அறிய முடியாதோ அவற்றை அறிந்துவிட்டாயா? என்று அக்னிவேசர் சிகண்டியின் முன் கேட்கப்படும் கேள்வி ஆணவத்தை முழுதழிக்கக்கூடியது.

இறுதியாக இந்த நாவலில் நான் கண்டடைந்த அற்புதமான சிந்தனை ஆடிப்பிம்பம் பற்றியது. ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் ஆடிப்பிம்பங்கள் இருக்கின்றன தான். இந்த நாவலின் பிரம்மாண்ட நாயகனான பீஷ்மருக்கான ஆடிப்பிம்பத்தை நீங்கள் சொல்லிக் கொண்டே வந்து பால்ஹிகரை அறிமுகப்படுத்தி இருவரையும் ஆடிப்பிம்பமாக நிறுத்தும் தருணம் சிலிர்க்கச் செய்தது. ”தன் ஆடிப்பாவையிடம் மட்டுமே மனிதர்கள் தோற்கிறார்கள்.” என்னும் வரிகள் மேலும் திறப்பைத் தந்தது.

அக்னிவேசர் சிகண்டிக்கு சொல்லாக கற்றுத் தரும் யாவுமே தனுர்வேதம் கற்பவனுக்கு மட்டுமின்றி எந்தவொரு மாணவனுக்குமானது. புறத்தை வெல்பவனே அகத்தை வெல்பவனாகிறான் என்று கூறிக் கொண்டே வந்து இறுதியில் சிகண்டிக்கு சொல்லும் ஆப்தமந்திரமே இந்த நாவலின் இறுதியில் என்னில் எஞ்சி நின்றது. ”அது நீயே.; மகனே நானே நீ”; “தத்வமசி”.

 

 

இரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2021 10:30

February 7, 2021

இருதிசையிலும் புதைகுழிகள்

அன்புள்ள ஜெ.

நலமாக உள்ளீர்களா?

தமிழின் செவ்வியல் இலக்கியம் தொட்டு நவீன இலக்கியங்கள் வரை வாசித்து வருகிறேன். குறிப்பாகக் குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு நித்திலக் கோவை, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், குற்றாலக் குறவஞ்சி என்று பல செவ்வியல் இலக்கியங்களைக் கற்று வருகிறேன். அதற்குப் பிரதான காரணம் என்று உங்களுடைய சங்கச் சித்திரங்கள், சொல்முகம் முதலான அபுனைவு நூல்களையும், காடு புனைவில் நீங்கள் கபிலர் மீது காட்டும் பிம்பமும் ஒரு காரணம் என்றுதான் கூறுவேன். அதுபோலத்தான் கொற்றவையும்.

அண்மையில் உ.வே.சா எழுதிய என் சரித்திரம் படிக்கும்போதுதான் தெரிந்தது மரபை மீட்க அவர் பட்ட பாடு.

எனது கேள்வி என்னவென்றால் நமது மரபினை அறிய இவற்றை நேரடியாகக் கற்பது ஒருமுறை. அதைவிட நமது சமகால ஆய்வாளர்களின் நூல்கள் துணைகொண்டு கற்பது இன்னொரு முறை. இதில் இரண்டு முறையிலும் நான் கற்கத் தொடங்கியுள்ளேன். குறிப்பாக நாட்டார் மரபுடன் வைத்து இவற்றை நோக்க என்று சில நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்.

எனினும் சில ஆய்வாளர்களின் நூல்களின் நம்பகத்தன்மை மீது குழப்பத்தை உண்டாக்கி விடுகிறது. குறிப்பாக தொ. பரமசிவன் எழுதிய நூல்கள். அவரது ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘தெய்வம் என்பதோர்’ மற்றும் ‘சமயங்களின் அரசியல்’, சுந்தர் காளியுடனான நீண்ட நேர்காணல் போன்றவற்றில் இந்த குழப்பத்தை உண்டாக்குகிறார். தமிழின் நவீனமும் புரட்சியும் ஈ.வே.ராமசாமி மற்றும் திராவிட இயக்கங்களுடன்தான் தொடங்குகிறது என்பது போன்ற சித்தரிப்புக்கள்.

அத்துடன் அவரது கட்டுரை ஒன்றில் சங்ககாலத்தில் தென்னையே இல்லை என்று அழுத்தமாகக் கூறுகிறார். இதைவிட கறுப்பு என்ற நிறம் சாதியின் நிறம் ஆக்கப்படக் காரணம் பிராமணர்களும், இந்துமத நிறுவனமயமாக்கமும் என்று ஆதாரம் இன்றி எழுதுகிறார். சங்ககாலத்தில் தெங்கு, தாழை போன்றன உள்ளது என்பதை இலக்கியம் பயிலும் யாரும் அறியலாம். அத்துடன் சிவப்பு என்பதுதான் அரசர்களின் நிறம் என்று சிலம்பும் கூறுகிறது. பின்வந்த செவ்வியல் நூலும் கூறுகிறநு. அதுபோல கறுப்பினைக் கடவுளின் நிறமாகக் கம்பரும் கண்டார் நம்மாழ்வாரும் கண்டார். இநு குறித்து இலக்கியங்களை வைத்து நான் சிறு குறிப்பும் எழுதியுள்ளேன்.

கறுப்பு

ஆனால் இந்து மதம் மீது வசை பொழிய என்றே இவர்கள் ஆய்வு எழுதுகின்றனர். இந்த இட்டுக்கட்டும் மரபில் இருந்து தப்பிக்கொள்ளவும், சரியான புரிதலை ஆய்வு நோக்கில் எட்டவும் நாம் என்ன மாதிரியான ஆய்வு நூல்களைக் கற்பது?. தங்களால் இது தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் என்ன?

சுயாந்தன்.

அன்புள்ள சுயாந்தன்,

இங்கே நீங்கள் சொல்லும் ’ஐயத்திற்கிடமான’ ஆய்வாளர்களில் இரண்டுவகையானவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையினர் நம் ’திராவிட மனு’ ராஜன் குறை போன்றவர்கள். இன்னொருவகையினர் தொ.பரமசிவம் போன்றவர்கள். முதல்வகையினர் நசிவுநோக்குகொண்ட மிகப்பெரிய அறிவியக்கம் ஒன்றின் கருவிகள். இரண்டாம்வகையினர் அந்தப்புயலில் பறக்கும் சருகுகள்

ராஜன் குறை போன்ற முதல்வகையினர் அடிப்படையில் வெறும்  ‘கருத்தியல் தொழில்முனைவோர்’ மட்டுமே. இவர்களுக்குப் பணம்கொடுப்பவர்களுக்காக வேலைசெய்பவர்கள். நேர்மை என்பது தேவையில்லை என்று முடிவுசெய்து அப்படிப் பேசி நிறுவுவதற்கான தரவுகளையும் சேர்த்து வைத்திருப்பார்கள். கல்வித்துறை முழுக்க இவர்களே காணக்கிடைக்கிறார்கள். இவர்களுக்கு தேவையான கருத்தரங்க அழைப்புக்கள், ஆய்வுக்கொடைகள் ஆகியவற்றை அளிப்பவை மேலைநாட்டு பல்கலைகழகங்களும் பல்வேறு நிதிக்கொடை அமைப்புக்களும். இவர்கள் அவை கோரும் ஆய்வை கோரும் விதத்தில் செய்து அளிப்பார்கள்.

ஐரோப்பிய அமெரிக்கப் பல்கலைகழகங்கள் இத்தகைய ஆய்வாளர்களைக்கொண்டு கீழைநாடுகள் முழுக்க ஆய்வுகள் என்றபேரில் அங்குள்ள பழைமையான கலாச்சாரம், மதம் ஆகியவற்றின்மேல் தாக்குதலைத் தொடுக்கின்றன. அந்நாடுகளின்மேல் ஐரோப்பாவும் அமெரிக்காவும் செலுத்தும் வன்மையான பொருளியல் சுரண்டலை, அதற்குரிய அரசுகளை அங்கே உருவாக்கும்பொருட்டு அவை மேற்கொள்ளும் அரசியலாடலை எல்லாம் தவிர்த்துவிட்டு அந்நாட்டுமக்களின் வறுமை மற்றும் அறியாமைக்கு முழுக்கமுழுக்க அந்நாட்டின் பண்பாடும் மதமுமே காரணம் என நிறுவ முற்படுகின்றன. அப்பண்பாட்டை வெறுக்கும் ஓர் அறிவுவட்டம் உருவாக்கப்படுகிறது. இவர்கள் எதிர்ப்பாளர்கள், கலகக்காரர்கள், புரட்சியாளர்கள் என்றெல்லாம் வேடம்கொள்கிறார்கள். இளைஞர்களைக் கவர்ந்து அந்த பண்பாட்டு எதிர்ப்பை உட்செலுத்துகிறார்கள்.

இப்பார்வைக்கு தேவையான தரவுகள் மட்டும் சேகரிக்கப்படுகின்றன. அதன் பொருட்டே நிதிக்கொடைகள் அளிக்கப்படுகின்றன. அதன் வழியாக கிடைக்கும் தரவுகளைக்கொண்டு அதற்குத் தேவையான கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. அவை நூல்களாகவும் ஆய்வேடுகளாகவும் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன. மாபெரும் ஆய்வுக்களஞ்சியமாக, அறிவுப்புலமாக தொகுக்கப்படுகின்றன. உண்மையில் பேரறிஞர்கள் பலர் வழிநடத்த பல்லாயிரம் ஆய்வாளர்கள் சேந்து உருவாக்கும் இந்த மாபெரும் அறிவுப்பரப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் கீழைநாட்டுப் பண்பாடுகளுக்கு இருப்பதில்லை. அவர்களால் பதறவும் வசைபாடவும் மட்டுமே முடியும். காலப்போக்கில் அவை முறிவடைய ஆரம்பிக்கின்றன. எந்தப்புள்ளியில் அவை குற்றவுணர்ச்சியுடன், ஒப்புக்கொள்ளும் தொனியின் பேச ஆரம்பிக்கின்றனவோ அப்போது அவை வீழ்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. அந்த இடங்களில் முதலில் தாராளவாதம் அறிமுகமாகிறது, அது ஜனநாயகம் சுதந்திரம் என்றெல்லாம் பேசுகிறது. ஆனால் மூடநம்பிக்கை நிறைந்த மதவெறி கொண்ட ஒருவகை கிறிஸ்தவம் அங்கே வந்தமைகிறது

தொண்ணூறு சதவீதம் கீழைநாடுகளின் பண்பாட்டு அரசியலின் வரைவுப்படம் இதுதான். இலங்கையும் அதே திசைதான் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பிரம்மாண்டமே அதற்கு தடையாக உள்ளது. இந்தியாவின் அறிவுலகுக்கும் இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகைக்கும் இடையே தொடர்பே இல்லை. எவர் என்ன ஆய்வைச் சொன்னாலும் அது இந்தியக்கல்விச்சூழல் என்னும் கோழிமுட்டைக்குள் அடங்கிவிடுகிறது. அங்கிருந்து ஊடகங்களை, இலக்கியத்தை பாதிக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்களும் இலக்கியமும் எல்லாம் கூட மிகச்சிறிய அறிவுவட்டத்துக்குள் செயபடுபவை மட்டுமே. ஆகவே இம்முயற்சிகள் இந்தியாவின் பொதுப்பண்பாட்டில் இதுவரைக்கும் சில சிராய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருக்கின்றன.

ஆனால் இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது.இங்கே கல்வி பரவலாகிக் கொண்டே இருக்கிறது. நடுத்தரவர்க்கம் பெருகுகிறது. இளைஞர்கள் எண்ணிக்கை பெருகுகிறது. அவர்கள் இந்தக்கல்வித்துறை, ஊடகம், அறிவுப்புலம் வழியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இன்று இந்த அறிவுப்புலத்தால் ஊட்டப்படும் மரபு எதிர்ப்பு, தற்கசப்பு கொள்கைகளையே சென்றடைகிறார்கள். அதுவே ‘நவீனமானது’ என்றும் ‘மேலைநாட்டு ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டது’ என்றும் இவர்கள் நம்புகிறார்கள். இவர்களே இன்று நம் சமூக ஊடகங்கள் முழுக்க நிறைந்திருக்கிறார்கள். மெல்லமெல்ல இந்தியாவும் அறிவார்ந்த உடைவை நோக்கிச் செல்கிறது

இந்த மாபெரும் தாக்குதலுக்கு எதிர்வினையாக எழுவது இந்துத்துவ மதவாத அரசியல், அதன் மூர்க்கமான ஒற்றைப்படையாக்கம். அதன் இயல்புகள் மூன்று.

ஒன்று, ஆன்மிகம் பண்பாடு அனைத்தையுமே சமகாலக் களஅரசியலுக்கான கச்சாப்பொருட்களாக ஆக்கிக்கொள்வது. அவற்றை அரசியலுக்கான அடையாளங்களாக மட்டுமே பார்ப்பது. அதற்கு அப்பால் அதைப் பயில, பேண ஏதும் செய்யாமலிருக்கும் பாமரத்தனமும் உதாசீனமும்.

இரண்டு, இந்துப்பண்பாட்டின் பன்மைத்தன்மை மற்றும் உள்விவாதம் ஆகியவற்றை மறுத்து அதை ஒற்றை அமைப்பாக உருவகிப்பது.

மூன்று, இந்து சமூகம் தொடர்ச்சியான சமூக, பண்பாட்டு மாற்றங்களுக்கு ஆளாகிக்கொண்டேதான் இருக்கிறது என்பதை மறுத்து அது மாசுமருவற்ற, என்றும் மாறாதப் பாரம்பரியப் பொக்கிஷம் என்று நிறுவுவது

இதன்விளைவாகத்தான் இன்று சூழலில் வேறெப்போதையும்விட இந்துப் பழமைவாதிகளின்- அடிப்படைவாதிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ராஜா ராம்மோகன் ராயின் காலத்தில் ஒலித்த எதிர்ப்புக் குரல்கள் மீண்டு வந்துள்ளன. குழந்தைமணம், தீண்டாமை, சாதிமேட்டிமைவாதம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றை ஆதரித்து மேடைகளில் தைரியமாகப் பேசுகிறார்கள். ஊடகங்களில் பரப்புகிறார்கள். வெளிப்படையாகவே சாதிமேட்டிமை பேசுகிறார்கள். உடனே அந்தப்பேச்சு சாதிகளின் பூசல்களுக்குத்தான் கொண்டுசெல்லும். இன்று இணையவெளியில் சாதிகளின் உட்க்குழுக்களுக்குள் நிகழும் பூசல்களும் வெறுப்புகளும் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. அவற்றைச் செய்பவர்கள் படித்த, உயர்நடுத்தரக்குடிகள். இந்தக்குரல்கள் இன்றைய படித்த இளைஞர்களுக்கு என்னவகையான எண்ணங்களை அளிக்கும்? அவர்களுக்கு மேலைநாட்டு ஆய்வுப்புலம் இந்தியாவைப்பற்றி அளிக்கும் இருண்ட, கசப்புநிறைந்த சித்திரத்துக்கான தெளிவான சான்றுகளாக இவர்களின் பேச்சுக்கள் உள்ளன.

இந்த இருநிலைக்கு நடுவே நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். இது விவேகானந்தர் காலம் முதலே இப்படித்தான் இருந்துள்ளது. இந்துச் சமூகச்சூழலில், பண்பாட்டில் இருந்த தேக்கங்களையும் சீர்கேடுகளையும் மிகக்கடுமையாக கண்டித்தவர் விவேகானந்தர். ஆனால் கூடவே இந்துப்பண்பாட்டின்மேல் மேலைநாட்டு அறிவியக்கம் முன்வைத்த தாக்குதலையும் அவர் எதிர்த்தார். மேலைநாட்டு அறிவியக்கச்சார்பை கண்மூடித்தனமாக சூடிக்கொண்ட பிற்காலத்தைய பிரம்மசமாஜத்தவரை எதிர்த்தார். இருபக்கமும் தாக்கப்பட்டார்.

பிரம்மசமாஜிகளின் பார்வையில் அவர் சாதிவெறியர், பழமைவாதி ,ஆசாரவாதி. இந்துப்பழமைவாதிகளின் பார்வையில் அவர் அனாசாரம் கொண்டவர், ஆன்மிகத்தைப் பேசுவதற்கான பிறவித்தகுதி அற்றவர். விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது அவரை அங்கே அழைக்கக்கூடாது என அமெரிக்காவெங்கும் பேசியவர் மஜும்தார் என்னும் பிரம்மசமாஜி. தனக்கு இந்துமதத்தின் நிறுவனங்களில் இருந்து ஒரு பரிந்துரைக்கடிதம் தேவை என விவேகானந்தர் கடிதங்களில் மன்றாடுகிறார். அதை அளிக்க இங்குள்ள மரபான அமைப்புகளுக்கு மனமில்லை.

இச்சூழல் என்றும் இங்கே இருக்கும். இந்த கத்திமுனை பயணமே உண்மையான அறச்சார்பும் ஆன்மிகத்தேடலும் கொண்ட ஒருவரின் வழியாக இருக்கும்

ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கும் அந்த மாபெரும் அறிவியக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்திய அறிவியக்கத்துக்கு நிதியோ கல்வியமைப்புகளோ பயிற்சியோ இல்லை.ஆகவே அவர்களால் இன்று ஐரோப்பிய அமெரிக்க அறிவுவட்டத்தைச் சேர்ந்த எந்த ஓர் அறிஞரையும் விரிவாக முழுமையாக ஆராய்ந்து மதிப்பிட முடியாது. அவர்களின் நிதிப்புலங்கள் என்ன, கருத்துப்பின்புலம் என்ன என்றெல்லாம் எளிதில் அறியவே முடியாது. எவர் நேரடியாக செலுத்தப்படுபவர் , எவர் செல்வாக்குக்கு ஆட்பட்ட எளியவர் என கூறுவது மிகக்கடினம்.

ஆகவே ஒட்டுமொத்தமாகவே அந்த மேலைநாட்டு அறிவுப்புலத்தை ஐயத்துடன் பார்க்கம ட்டுமே நம்மால் இன்று முடியும். இன்றைய சூழலில் புறவயமாக சேர்க்கப்பட்ட தரவுகள் மேலைஅறிவுப்புலத்திடமே உள்ளன, மறுபக்கம் இருப்பது வெற்று மூடநம்பிக்கைகளும் காழ்ப்புகளும் குறுங்குழுவாதப்பூசலும். ஆகவே அவர்களை தவிர்ப்பதும் உகந்தது அல்ல.நாம் நம்மைப்பற்றிய ஆய்வுகளை நடுநிலையாக முடித்து, நம்மைப்பற்றிய குறைந்தபட்சத் தெளிவுகளை அடைந்தபின் அவர்களை கடந்துசெல்லக்கூடும். நான் மேலை அறிவுப்புலத்தில் கருத்தில்கொள்பவர்கள் அங்குள்ள பொதுச்சூழலால் எதிர்க்கப்படும், இகழப்படும், புறக்கணிக்கப்படும் அறிவுஜீவிகளை மட்டுமே

மறுபக்கம் அடிப்படைவாதம், ஆசாரவாதம் அளிக்கும் எதிர்ப்பை நாம் வென்றாகவேண்டும். ஆனால் அது என்றும் இங்கே இருந்தது. அதற்கு தவிர்க்கவே முடியாத கருத்துப்பங்களிப்பு உண்டு. அவர்கள்தான் இங்கே மரபை நிலைநிறுத்தும் சக்தி. தூய்மைவாதிகள் இல்லையேல் எந்த மரபும் மாற்றங்களின் அலைகளில் சிக்கி அழியும். எல்லா காலத்திலும் எல்லா மாற்றங்களும் அவர்களை எதிர்த்து, அவர்களுடன் உரையாடியே வளர்ந்துள்ளன. நாராயணகுருவாக இருந்தாலும் வள்ளலாராக இருந்தாலும் விவேகானந்தராக இருந்தாலும். அவர்களை முழுமையாக விலக்க முடியாது, அவர்களுடன் விவாதிக்கவும் முடியாது, அவர்களை கவனித்து உரியவற்றை கொண்டு மற்றவற்றை விலக்கி முன்செல்லவேண்டும்.

நான் சொன்ன அந்த மாபெரும் ஐரோப்பிய, அமெரிக்க அறிவியக்கத்தின் பலியாடுகள் என்று சொல்லத்தக்க ஓர் ஆய்வாளர் கூட்டம் இங்குண்டு. அவர்களில் ஒருவரே தொ.பரமசிவன். இத்தகையவர்கள் விரிவான ஆங்கிலக்கல்வி அற்றவர்கள். உண்மையான சில ஆய்வுகளைச் செய்வார்கள். இவர்களை மேலேசொன்ன கருத்தியல் தொழில்முனைவோர் தொட்டு எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு அந்த ‘மெத்தப்படித்த’ ‘ஆங்கிலம் அறிந்த’ ‘உலகின் பார்வைக்குச் சென்றுவிட்ட’ ‘கல்வித்துறை அதிகாரம் கொண்ட’ தரப்புகள் ஆழ்ந்த ஈர்ப்பை அளிக்கின்றன. அவர்களின் அங்கீகாரம் பரவசமடையச் செய்கிறது. தன் கட்டுரை ஒன்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுமென்றால் பிறவிப்பயன் என நினைக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு பிடித்ததை இவர்கள் எழுதுகிறார்கள். அதற்காக அந்த மேலைஅறிவியக்க முகவர்கள் எழுதும் தமிழ்க்கட்டுரைகளில் இருந்து இவர்கள் ஒரு சில கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தேவையான கருத்துநிலைபாட்டை உருவாக்கிக்கொள்கிறார்கள். இவர்களுக்கு  ‘இதுதான் இன்றைய நவீன கருத்து, நவீன ஆய்வுமுறை, இவை அந்த ஆய்வுமுறையால் கண்டெடுக்கப்பட்ட தரவுகள்’ என தொழில்முனைவோர் தரப்பு உறுதி அளிக்கிறது. அவற்றை ஆராய்ந்து மதிப்பிடும் இடத்தில் இவர்கள் இல்லை.அப்படியே விழுங்கி , செரிக்காமல் உமிழ்கிறார்கள்.

தொ.பரமசிவம் அடிப்படையில் ஓர் ஆய்வாளர். அவருடைய அழகர்கோயில் ஒரு நல்ல ஆய்வுநூல். அது அவருடைய சொந்த சாதி- சமூகப்புலம் சார்ந்த ஓர் ஆய்வு அது. ஆனால் அவருடைய பிற்கால ஆய்வுகள் எல்லாமே இரண்டு கூறுகளாலானவை. ஒன்று அவருடைய விரிவான களஆய்வு மற்றும் உள்ளூர் சார்ந்த அறிதல்களின் தொகுப்பு. அவற்றை ஆராய அவர் கடைப்பிடிப்பது மேலைஅறிவியக்கத்திலிருந்து கல்வித்துறை வழியாக வந்த சில கருத்துச் சொட்டுக்களை. அவற்றை அவர் மதநம்பிக்கை போல ஏற்றுக்கொள்கிறார். கூடவே இங்கிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் சார்ந்த சாதியரசியல் இணைந்துகொள்கிறது. அது ஒரு விசித்திரக்கலவை. அதன் விளைவே கறுப்பு போன்ற அசட்டுத்தனமான எண்ணங்கள்.

தொ.பரமசிவம் போன்ற இரண்டாம்வகை ஆய்வாளர்களை நாம் முதலில் சொன்ன தொழில்முனைவோர் போல நிராகரிக்கமுடியாது, கூடாது. ராஜன் குறை போன்றவர்களிடமிருந்து ஒருவரிகூட பயனுற எடுக்கமுடியாது. எதை எடுத்தாலும் விரிவான ஒரு சதிப்பின்னல் அதற்குப்பின்னால் இருக்கும். அடிப்படையில் உழைப்பாளிகளான அசடுகள் அவர்கள். தொ.பரமசிவம் போன்றவர்கள் கூர்மையானவர்கள், அசலான களஆய்வுகளைச் செய்தவர்கள், அவர்களின் நூல்களில் நாம் கண்டடையவேண்டிய அரிய செய்திகள், உண்மைகள் எப்போதும் உண்டு. கருத்தியல் முகவர்களால் திசைதிருப்பப்படாமல் தங்கள் போக்கில் சென்றிருந்தால் அவர்கள் மிகப்பெரிய உண்மைகளை எழுதிக்காட்டியிருக்கக்கூடும். இப்போதுகூட அதற்கான திசைவழிகள் அவர்களின் நூல்களில் இருக்கக்கூடும். அவற்றை அவர்களின் நூல்களில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் முன்வைக்கும் பார்வை கருத்தியல் தொழில்முனைவோர் அளித்த நிலைபாடுகளின் வேகாவடிவமாக இருக்கும். தொழில்முனைவோரே ஒருவகை அரைவேக்காடுகள் என்னும் நிலையில் இவை கால்வேக்காடுகள். அவற்றை கடந்துசெல்லவேண்டும்

எண்ணிப்பாருங்கள், இன்று தொ.பரமசிவம் அடைந்துள்ள முக்கியத்துவம், அவரைச்சொல்லி நிகழும் கொண்டாட்டம் அவரைவிட பலமடங்கு மேலான அறிவியக்கச் செயல்பாட்டாளர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை? மிக ஆழமான ஆய்வுகளை, முறைமைசார்ந்து எழுதியவர்கள் இங்குண்டு. தொ.பரமசிவம் அந்த ஆய்வாளர்களின் அருகே கூட நிற்கமுடியாது. ஆனால் தொ.பரமசிமம் அமர்ந்த சிம்மாசனத்தின் காலடியில் அவர்கள் அமரச்செய்யப்பட்டிருக்கிறார்கள். தொ.பரமசிவம் ஆய்வுநேர்மையை பலியாக அளித்து அடைந்தது அந்த இருக்கை.

மறுபக்கத்தரப்பில்,  இங்குள்ள ஆசாரவாதத்தையும், சாதிமேட்டிமைவாதத்தையும், பழமைவாதத்தையும் விமர்சனமில்லாமல் ஏற்று அதை ஆய்வுகளென முன்வைக்கும் தேங்கிப்போன உள்ளங்கள் கொண்டாடப்படுவார்கள். அவர்கள் கல்வித்துறையில் ஓங்குவார்கள். அவர்களுக்கு அரியணைகள் உருவாக்கப்படும். அது தொடங்கிவிட்டது, இனி பெருகும். ஆச்சரியமென்னவென்றால் முதல்தரப்பில் இருந்தே இரண்டாம்தரப்புக்கு ஓடிச்சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இவ்விரு திசைகளுமே மெய்யான ஆய்வாளனுக்கு, கருத்துச் செயல்பாட்டாளனுக்கு புதைகுழிகளின் பாதையையே திறந்து வைக்கின்றன. அவனுக்கு கிடைப்பது சவரக்கத்திமுனைப் பயணம்.அதில் நடப்பவனே உண்மையான சிந்தனையாளன்.

ஜெ 

ஆய்வுலகின் அன்னியக்கரங்கள் அன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும் அந்நிய நிதி- தொகுப்புரை ஃபோர்டு ஃபவுண்டேஷன் முதலிய அன்னிய நிதியமைப்புகள்: தகவல்கள் நிதிவலையின் செயல்முறை- தகவல்கள் ஃபோர்டு ஃபவுண்டேஷனைப்பற்றி ‘நிதிப்பிள்ளை’களைப் பற்றி… தொ.ப ஒரு வினா தொ.பரமசிவம் குறித்து… தொ.ப,ஒரு விவாதம் மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2 நாடகக்காதல்,திராவிட மனு- ஒரு பெண்ணின் கடிதம்

திராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்

ரம்யா, திராவிட மனு- கடிதம்

திராவிட மனு- கடைசியாக திராவிட மனு- இரட்டை நாக்குகள் ‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள் திராவிட மனு- இரு எதிர்வினைகள் ராஜன் குறை என்பவர் யார்? ‘திராவிட மனு’
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2021 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.