Jeyamohan's Blog, page 1055
February 1, 2021
மேடையர்களின் சொல்லாராய்ச்சி
அகோர நரசிம்மர்
அருகாமை
அன்புள்ள ஜெ
கரு.பழனியப்பன் தொலைக்காட்சியில் நடத்தும் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் அருகில் என்பதற்கு நேர் எதிர்ச்சொல் அருகாமை என்கிறார். அதாவது அதன்பொருள் சேய்மையாம். அகோரம் என்பது கோரம் என்பதற்கு எதிர்ப்பதம் என்கிறார். அத்தனை தன்னம்பிக்கையுடன் அத்தனை நையாண்டியுடன் அதைச் சொல்கிறார். மொழியறிவற்ற இளைஞர்கள் அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சீண்டி வசைபாடி நக்கலாக இதையெல்லாம் சொல்கிறார்.
அருகாமை என்பதைப்பற்றி நீங்கள் எழுதிய குறிப்பு நினைவுக்கு வந்தது.[அருகாமை] இணையம் குப்பைக்கூடை என்கிறார். இவர் நடத்தும் டிவி நிகழ்ச்சிகள் மாபெரும் குப்பைக்கூடைகள். இவர் சொல்வதெல்லாம் இணையத்திலிருந்து பொறுக்கி அங்கே கொண்டுசெல்லும் குப்பைமலைகள்.
இவர்கள்தான் இன்று தமிழுக்கு கற்பிக்கிறார்கள்
எம்.ராஜேந்திரன்
அகோர வீரபத்ரர்
அன்புள்ள ராஜேந்திரன்,
எப்போதும் கற்றுக்கொண்டிருப்பவன் அறிஞன். அவனே கற்பிக்கவும் தகுதி கொண்டவன். அவனுக்கு தான் கற்றவற்றின்மேல் சற்று ஐயமும், மேலும் கற்கவேண்டியவை உள்ளன என்னும் எண்ணமும் இருக்கும்.
அருகாமை என்பது அருகில் என்பதற்கு எதிர்ச்சொல் என்று சொல்லும்முன் பொருட்படுத்தத்தக்க தமிழறிஞர்கள் எவரேனும் அதற்கு சான்று உரைத்தது உண்டா என்று பார்த்திருக்கலாம். தனித்தமிழறிஞர்களான மறைமலை அடிகள் உட்பட பலரும் அச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை இணையத்திலேயே தேடிக்கண்டடைந்திருக்கலாம். குறைந்தது, பேரகராதியையாவது பார்த்திருக்கலாம்
கோரம் என்பது சம்ஸ்கிருதச்சொல். [ஹோரம்] உண்மையில் அது சொல் அல்ல, ஓர் ஒலிவெளிப்பாடுதான். பயங்கரமானது என்று பொருள்.அழகற்றது என்றல்ல. பேச்சுவழக்கில் நாம் அதை நாம் கோரம் என்று ஆக்கிக்கொண்டோம்.கோரம் என்றால் அச்சமூட்டுவது என்றே பேச்சுவழக்கிலும் பொருள். சிலர் அழகற்றது என்ற பொருளிலும் பயன்படுத்துவார்கள்.
சம்ஸ்கிருதத்தில்தான் அ என்பது எதிர்மறைப்பொருளில் சேர்க்கப்படுகிறது. உதாரணம் சுபம் – அசுபம். தமிழில் அவ்விலக்கணம் இல்லை. ஆனால் சம்ஸ்கிருதத்தில்கூட அ என்பது எப்போதும் எதிர்மறைப்பொருளில் சேர்க்கப்படுவதில்லை. அ என்னும் ஒலி வியப்பின் ஒலியாகவும் சேர்க்கப்படும். அவ்வண்ணம்தான் ஹோரம் அஹோரம் ஆகிறது.
இந்துக்களுக்குத் தெரிந்திருக்கும் அஹோர நரசிம்மர், அஹோர வீரபத்ரர் போன்ற தெய்வங்களின் பெயர்களை. பயங்கரமான, உக்கிரமான என்றுதான் பொருள். பயங்கரமற்ற உக்கிரமற்ற என்று பொருள் இல்லை. இரணியனின் குடலை உருவிக்கொண்டிருக்கும் நரசிம்மரே பொதுவாக அகோரநரசிம்மவடிவம். அசுரனைக் கொன்று வெறிகொண்டு நிற்கும் வீரபத்ரர் அகோரவீரபத்ரர் எனப்படுகிறார்.
அஹோர என்னும் சொல்லின் தமிழ் மரூஊ தான் வாய்மொழியில் அகோரம் என்று புழங்குகிறது.தமிழிலும் அச்சொல்லுக்கு அசிங்கமான என்று பொருள் இல்லை. கொடூரமான என்றுதான் பொருள். முகம் அகோரமாக இருந்தது என்றால் கொடூரமாக இருந்தது என்றுதான் குறிப்பு.
வாய்மொழிப் புழக்கமாக உள்ள சொற்களின் முதல்வடிவை கண்டடைவதென்பது சொல்லாய்விலும், நாட்டாரியலிலும் மிகப்பெரிய இடம் கொண்ட அறிவுச் செயல்பாடு. அதற்குரிய ஆய்வுநெறிகள் பல உள்ளன.முதல் நெறி, மக்களின் மொழிமேல் மதிப்பு வேண்டும் என்பதுதான். வரலாற்றையும் பண்பாட்டையும் வட்டாரத்தையும் கருத்தில்கொண்டு பொருள்கொள்ளவேண்டும் என்பது அடுத்த நெறி.
மக்களின் மொழி என்பது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. அதன் திரிபுகளும் சிதைவுகளும்கூட அறிவியக்கத்தையும் பண்பாட்டுச்செயல்பாட்டையும் காட்டுவனதான். ஆகவேதான் மக்கள்மொழியை பேரறிஞர்கள்கூட திருத்தக்கூடாது, அதை ஆராய மட்டுமே அறிஞர்களுக்கு உரிமை என்று இன்று சொல்லப்படுகிறது. அதற்கு அறிஞர்கள் தங்கள் போக்கில் விளக்கம் அளிப்பது ஒரு பண்பாட்டு அழிப்பு நடவடிக்கை.
மக்கள்மொழியில் மொழிக்கலப்பு இருக்கும். மொழித்திரிபு இருக்கும். அந்த மொழிக்கலப்புகள் பண்பாட்டு பரிமாற்றத்தின் வரலாற்றைக் காட்டும் சான்றுகள். திரிபுகள் பண்பாட்டு புழக்கத்தின் தடங்கள். தூய்மைவாதிகளான அறிஞர்கள் அதை தூயமொழியாக ஆக்குவதும், அயல்மொழிச் சொல்லின் திரிபை வளைத்து ஒடித்து அதெல்லாம் தமிழே என நிறுவமுயல்வதும்கூட பண்பாட்டை அழிப்பதே.
அண்மையில் நான் பேசிக்கொண்டிருந்த ஓர் எடுத்துக்காட்டு. ‘கேவலம்’ என்ற சொல் தமிழில் கீழ்மை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. களியக்காவிளைக்கு அப்பால், கேரளத்திற்குச் சென்றால் அதற்கு ‘வெறும்’ என்றுதான் பொருள். ‘ஞான் கேவலம் ஒரு மலையாளி’ என்று ஒருவன் சொன்னால் “நான் வெறுமொரு மலையாளி’ என்றே பொருள்
உண்மையில் ‘கேவல’ என்ற அந்த சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் ’எஞ்சுவது’, ‘தான் மட்டுமே ஆனது’ ‘வெறும்’ என்பதுதான். ஆகவேதான் சைவசித்தாந்தத்தில் வீடுபேறுக்கு ‘கைவல்யம்’ என்று சொல் உள்ளது. கைவல்யநவநீதம் போன்ற நூல்களே இங்குள்ளன.
ஆனால் இங்கே பேச்சுவழக்கில் கேவலம் என்றால் கீழ்மை என ஆகியிருக்கிறது. அது மக்களுக்கு அறிவில்லாமையால் பேசப்படுவது என சொல்பவன் அறிஞனல்ல, வெறும் ஆணவம்கொண்ட அறிவிலி. மக்கள் ஏன் அதைச் சொல்கிறார்கள் என ஆராய்பவனே அறிஞன், ஆய்வாளன்
தமிழ்ப்பண்பாட்டுச் சூழலில் தனித்துவிடப்படுதல், கைவிடப்படுதலே உண்மையான கீழ்மை என இருந்திருக்கலாம். கேவலப்படுதல் என்றால் தனிமைகொள்ளுதல், பிறரால் ஒதுக்கப்படுதல். அதன்மேல் பெரும் ஒவ்வாமை இருந்திருக்கலாம். வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடைய விரும்புபவன் தமிழன். அதிலிருந்து கேவலம் என்பதுதான் கீழ்மை என ஆகியிருக்கலாம். இது தமிழ்ப்பண்பாட்டின் நுண்ணிய உளநிலை ஒன்றைநோக்கி சுட்டுகிறது. இதை உணர்வதே மொழியாராய்ச்சியின் வழிமுறை. அதை பண்பாட்டாய்வாளர்களே செய்யமுடியும்.
ஆனால் இங்கே எந்த அடிப்படைவாசிப்பும், எந்த அறிவுப்பின்புலமும், எந்த பண்பாட்டுப்பயிற்சியும் இல்லாத அசட்டு மேடைப்பேச்சாளர்கள் தொடர்ந்து மக்கள்மொழியை நையாண்டி செய்கிறார்கள். அவற்றை தங்களுக்கு தோன்றியவகையில் திருத்துகிறார்கள், விளக்குகிறார்கள். இன்று தமிழகமெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாபெரும் அறிவுத்தளப் பேரழிவு இது.
ஜெ
ரா. செந்தில்குமார் விழா -உரை
31/01/2021 அன்று சென்னையில் நடைபெற்ற ரா.செந்தில்குமார் எழுதிய ‘இசூமியின் நறுமணம்’ என்ற சிறுகதை தொகுதி வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.
சுக்கிரி குழுமம் -கடிதம்
ஒரு தொடக்கம், அதன் பரவல்
ஆசிரியருக்கு வணக்கம்,
நலமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பயணங்கள் மற்றும் நண்பர்கள் சந்திப்புகள் மூலம் உறுதியாகியது.
உங்களது இன்றைய ஒரு தொடக்கம்,பரவல் பதிவை கண்டபின் இதை எழுதுகிறேன்.நோய்தொற்று காலத்தின் பலனாக கடந்த ஏப்ரல் மாதம் சுக்கிரி எனும் இலக்கிய குழுமம் உங்கள் நண்பர்களால் துவங்கப்பட்டு உங்களது கதைகளை வாரம்தோறும் விவாதிக்கிறார்கள்.
தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி சுக்கிரி குழுமம் ஒரு படி மேலே போய் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள ஜெயமோகனின் வாசகர்களை ஜூம் மூலம் இணைத்து உங்கள் கதைகளை விவாதிக்கிறார்கள்.ஆரம்பத்தில் ஒரு சந்திப்பில் இரு கதைகள் என விவாதிக்க தொடங்கி நடந்து கொண்டிருந்தது.இரண்டு மணிநேரம் மாஸ்டர் ஜெயமோகனின் கதைகளை விவாதித்தபின்பும் நேரம் போதாமையால் இப்போது வாரம் ஒரு கதை என ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்கு சரியாக தொடங்கி எட்டு மணிக்கு மேலும் நீள்கிறது.
இங்கே வெட்டி அரட்டை கிடையாது,கதையிலிருந்து கொஞ்சம் விவாதம் மாறும்போது மட்டுறுத்தல் உண்டு.கலந்துகொள்பவர் அந்த வாரத்திற்கான கதையை கண்டிப்பாக வாசித்துவிட்டு வரவேண்டும்.இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாசிப்பு பழக்கமுள்ள கூர் இலக்கிய வாசகர்கள் இங்கு பேசிப்பேசி மேலும் தங்களது வாசிப்பை கூர்மையாக்கினார்கள்.இலக்கிய அடிப்படைக்கூட அறியாமல் மொக்கையாக உள்ளே வந்து விவாதத்தில் கலந்து இலக்கியம் எப்படி வாசிக்க வேண்டும்,வாசிப்பில் விடுபட்டவை எவை என சுக்கிரி மூலம் நானும் கற்றுக்கொண்டேன்.
பெண்களும் இந்த விவாதங்களில் கலந்து கொண்டு விவாதித்ததோடு மட்டுமல்லாமல்,தங்களது திறமையையும் கண்டு கொண்டபின்,வீட்டிலும் அலுவலகத்திலும் திறம்பட செயல்பட இந்த விவாதாங்கள் உதவி புரிந்ததாக சொல்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் குறைந்தது இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.கடந்த சனிக்கிழமை வரை உங்களது நூறு கதைகளிலிருந்து எழுபது கதைகளை விவாதித்துள்ளோம் (ஆகாயம்).விவாதம் துவங்கும் இந்திய நேரம் மாலை ஆறு மணி ஆஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர் கார்த்திக் க்கு பின்னிரவு,அமெரிக்க நண்பர்களுக்கு அதிகாலை,ஹாங்காங் ஜெகதீஸ் மற்றும் சிங்கப்பூர் சுபாவிற்கும் பின்னிரவு நேரம் ஆனாலும் உற்சாகத்துடனும் முன்பே நூறு கதைகளையும் வாசித்திருந்தாலும் விவாதிற்காக மீள் வாசிப்பு செய்துவிட்டு பங்கேற்கிறார்கள்.
இதனால் வாசிப்பில் தங்களை மேம்படுத்தியதல்லாமல் உலகம் முழுவதும் ஒரு நட்பை உருவாக்கி தந்துள்ளீர்கள்.உலகின் எந்த நிலத்தில் பாதம் பட்டாலும் அங்கே உங்கள் வாசகர் ஒருவர் இருக்கிறார்.என்னுடைய கடந்த ஒரு மாத பயணத்தில் வங்காள விரிகுடாவில் துவங்கி இந்திய பெருங்கடல் வந்தபோது இலங்கை எழுத்தாளர் ரிஷான் ஷெரிப் “வாய்பிருந்தால் இறங்குங்கள் வீட்டிற்கு வந்து விட்டு போங்கள் என்றார்.வளைகுடா நாடுகளை கடந்து ஐரோப்பா வந்தபோது லண்டன் ராஜேஷ் அழைத்தார்.பதினைந்து நாட்கள் கழிந்து அமெரிக்கா செல்லும்போது அங்கேயும் உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் நோய்தொற்று காலத்திற்கு பின் அனைவரையும் சந்திப்பேன்.உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பசிக்கு உணவும்,தங்குவதற்கு இடமும் எனக்கு உறுதி.
இப்படி இலக்கியம் மட்டும் நீங்கள் கற்பித்ததல்லாமல் உலகம் முழுவதும் நண்பர்களையும் ஏற்படுத்தி தந்து உள்ளீர்கள்.நன்றி சொல்லி கடந்து செல்ல மாட்டேன்.காலத்திற்கும் பிடித்து கொள்வேன்.
உங்கள் வரியிலிருந்து வெவ்வேறு ஊர்களில் மட்டுமல்ல வெவ்வேறு நாடுகளிலும் இலக்கிய கூடுகைகள் நடக்கிறது.அமெரிக்காவில் மூத்தவர் சௌந்தர் மற்றும் நண்பர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பை தொடங்கி நடத்தி வாருகிறார்கள்.
சுக்கிரியில் பத்துலட்சம் காலடிகள் விவாதத்தின் போது நீங்களும் கலந்து சிறப்பிதீர்கள்.வரும் சனிக்கிழமை சுக்கிரியில் தங்கபதக்கம் கதை விவாதம் நடைபெறும்.
தொடர்புக்கு .
சந்தோஷ்-99653-15137
ஷாகுல் ஹமீது
அமெரிக்காவில் ஃபாஸிசம் கடிதங்கள்
அன்புள்ள ஜெ.
உங்களது அமெரிக்காவில் பாசிசம் கட்டுரை படித்தபோது “பின் தொடரும் நிழலின் குரல்” நினைவுக்கு வந்தது
தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அழகியலோடு படுகொலைகளை நிறைவேற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் , சித்தாந்த முகமூடி அணிந்து படுகொலைகளை அரங்கேற்றும் கம்யூனிச நாடுகள் ஆகியவற்றுக்கிடையே ஹிட்லரை மட்டுமே படுகொலைகளுக்கு இனவெறிக்கு உதாரணமாக பலர்நினைக்கிறார்கள்.
காரணம் ஹிட்லர் தோல்வி அடைந்தவர். அவர் வென்றிருந்தால் அவர் “தரப்பு நியாயங்களை” பேச அவருக்கு குரல் கொடுக்க பல நாடுகளும் சிந்தனைவாதிகளும் முன்வந்திருப்பர்
சோவியத் யூனியன் கடைசி வரை ஹிட்லரோடு நட்புணர்வோடு இருக்க முயன்றது பலருக்குத் தெரியாது
நீங்கள் சொல்வது போல , அழகியலோடு பயங்கரவாதத்தை நிறைவேற்ற ஹிட்லருக்கு அமெரிக்காதான்உதவியது
ஒட்டு மொத்த ஜனத்தொகையில் யூதர்களை மட்டும் பிரித்தறிந்து இனம்காண அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனம்தான் ப்ரொகிராம் செய்து கொடுத்தது. அதற்கான கருவிகளை வழங்கியது. அவை சரியாக செயல்படுகின்றனவா என கண்காணிப்பது , பழுதுகளை சரி செய்வது போன்ற பணிகளைச் செய்தது.
யூதப்படுகொலையில் அமெரிக்காவின் இந்தப் பங்கு மேலும் நீடித்திருந்தால் , கொலைகள் சிறுசிறு அலகுகளாக பிரிக்கப்பட்டு , குளிர்பதன அறையில் கண்ணியமான ஆடை அணிந்து கொலை செய்கிறோம் என்ற குற்ற உணர்வே இன்றி அழகியலோடு கொன்றிருப்பார்கள்நல்ல வேளை . அந்த கட்டத்துக்கு போவதற்கு முன் யுத்தம் வந்து விட்டது
என்ன ஆறுதல் என்றால் , தனது நாடு இப்படிச் செய்தது என புத்தகம் எழுதும் கருத்து சுதந்திரம் அமெரிக்காவில் இருக்கிறது
IBM and the Holocaust: The Strategic Alliance between Nazi Germany and America’s Most Powerful Corporation என்ற நூல் அரிய ஆவணமாய் திகழ்கிறது
அன்புடன்
பிச்சைக்காரன்
அன்புள்ள ஜெ,
அமெரிக்காவில் ஃபாஸிசம் என்பது ஓர் ஆழமான குறிப்பு. குறிப்பாக மதவெறி, இனவெறி,நிறவெறி போன்றவை என்றுமிருக்கும் நோய்க்கூறுகள் என்றும் ஜனநாயகம் என்பது அதற்கு எதிரான ஒரு சமநிலை சக்தி மட்டுமே என்றும் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை
ஜெயக்குமார்
இமைக்கணம்- வாக் சூக்தம்
அன்புள்ள ஜெ,
இமைக்கணத்தில் திரௌபதி கண்ட விஸ்வரூப தரிசனத்தை வாசித்தபோது ரிக்வேதத்தில் வரும் வாக் சூக்தத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டேன். கவித்துவமும் பித்தும் தணலாடும் இவ்வரிகளில் உள்ள அழுத்தமும் அதிகாரத்தொனியும் கட்டற்றத்தன்மையும் ஒவ்வொரு முறை சொல்லிக்கேட்கும் போதும் உருவாக்கும் மனவெழுச்சி சாதாரணமானதல்ல.
மொழிபெயர்க்கும் அளவுக்கு வடமொழி தெரியாதென்றாலும் அகராதியின் துணைக்கொண்டு, ஆங்கிலத்தில் கிடைக்கும் சில உரைகள், மொழிபெயர்ப்புகளை வைத்துக்கொண்டு அந்த அர்த்தம் வருமாறு தமிழில் சற்றே சுதந்திரமாக என் வாசிப்புக்காக மொழியாக்கம் செய்து வைத்திருந்தேன். போதாமைகளுடன் இருக்கலாம், என்றாலும், அதை இணைத்திருக்கிறேன்.
நன்றி,
சுசித்ரா
வாக் சூக்தம் (ரிக் வேதம் 10.125)
நான் ருத்ரர்களுடனும் வசுக்களுடனும் உலவுபவள் –
ஆதித்யர்களுடனும் பிரபஞ்சத்தின் சகல தேவர்களுடனும்
அலைபவள் நான்.
நான் மித்திரனையும் வருணனையும் தாங்குபவள் –
இந்திரனையும் அக்னியையும் அஸ்வினிக்குமர்களையும்
என்னில் கொண்டுள்ளவள் நான்.
சோமரஸத்தையும்,
வேள்விக்கூடங்களை அமைக்கும் த்வஷ்டரையும்,
அதனை காக்கும் பூஷனையும், பகனையும்
ஏந்திச்செல்பவள் நான்.
மனம்குவிந்து வேள்வி நிகழ்த்தும் அதன் யஜமானனுக்கு
பெருசெல்வமெல்லாம் வழங்குபவளும் நானேயாம்.
நான் இந்நிலத்தின் பேரரசி.
மங்களங்களும் செல்வங்களும் திரட்டுபவள்.
பிரக்ஞை வடிவானவள்.
முதன்மையாக வணங்கத்தக்கவள்.
பல்வேரு இடங்களில்
பலவடிவமாக
சிதறிப்பரந்து விரிய
ஆணையிட்டிருக்கின்றன
தெய்வங்கள் எனக்கு.
என்வழியாகத்தான்
உண்பவன் உண்கிறான்,
காண்பவன் காண்கிறான்,
கேட்பவன் கேட்கிறான்,
சுவாசிப்பவன் சுவாசிக்கிறான்.
என்னை உணராதவன் கூட
என்னிலேயே உறைகின்றான்.
கேள்!
கவனத்துடன் கேட்பவனுக்காக மட்டுமே
இதைச்சொல்கிறேன் நான்.
தேவர்களுக்கும் மானுடர்களுக்கும்
விருப்பமான இச்சொற்களை
நானே, நான் மட்டுமே,
இங்கு, இப்போது
மொழிகிறேன், கேள்.
எவன் ஒருவன்
என் விருப்பத்துக்குள்ளானவனோ
அவனை
வலிமைகொண்டவனாக,
பிரம்மத்தை அறிந்தவனாக,
ரிஷியாக,
மேதமைகளெல்லாம் பொருந்தியவனாக
ஆக்குபவள் நானே.
பிரம்மத்தின் எதிரிகள் மீது அம்புதொடுக்க
ருத்திரனின் வில்லை வளைக்கிறேன் நான்,
உயிர்களுக்கெல்லாம் போர்புரிகிறேன் –
நான்
விண்ணையும் மண்ணையும் நிறைத்துவிட்டேன்.
மலைச்சிகரத்தில் என் தந்தையை நான் பெற்றெடுக்கிறேன்
என் பிறப்பிடமோ கடலாழத்தில்.
அங்கிருந்து நான் வளர்ந்து வளர்ந்து
உலகிலெல்லாம்
இவ்வுயிர்களிலெல்லாம்
பரவிப்பரவி
வானுயர
ஓங்கி நின்று
தொட்டுவிட்டேன் அதை,
அந்த உச்சத்தை.
வாடையென வீசும்
என் மூச்சுக்காற்றினால்
நானே,
நான்மட்டுமே,
இவை அனைத்தையும்
வடித்தெடுக்கிறேன்.
ஆகவே
விண்ணையும்
மண்ணையும்
மீறிய பெரியோளாக,
பெருமாண்பு பொருந்தியோளாக திகழ்கிறேன்
நான்.
January 31, 2021
குருதியின் சதுரங்கம்
ஒருமுறை சும்மா நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது வேண்டுமென்றே மாலா சின்கா பற்றி சொன்னேன். பலருக்கு அந்தப்பெயரே தெரிந்திருக்காது என்று நன்றாகவே தெரியும். ‘நாங்கள்லாம் வேற உலகம், அந்த உலகம் இனி உங்களுக்கு கிடைக்காது’ என்ற கிழவர்களுக்கே உரிய பாவனைதான். ஆனால் நானே மாலாசின்ஹாவை பீம்பளாசியில் அமைந்த இந்திப்பாடல்களை தேடி
என்றபாட்டை கண்டடைந்து அதில்தான் முதன்முதலாகப் பார்த்தேன். தோளில் பையைப்போட்டுக்கொண்டு வரும் அந்த இயல்பான அசைவுகள் மிகவும் பிடித்திருந்தன. அவை ஒரு வங்காளப்பெண்ணுக்குரியவை. உடனே அவர் வங்காளமுகம் கொண்டிருப்பதாகப் பட்டது. கொஞ்சம் சீனச்சாயலோ என மயங்கவைக்கும் அத்தகைய முகங்கள் வங்காளத்திலுண்டு. அப்படியே அந்த சீனச்சாயல் கூடிக்கொண்டே சென்று மணிப்பூரில் மிக அழகிய ஒரு கலவையை அடைகிறது.
தேடிப்பார்த்தபோது ஆச்சரியம், மாலா சின்கா பிறப்பால் நேபாளி. இயற்பெயர் அல்டா சின்ஹா. அவருடைய அப்பா ஆல்பிரட் சின்கா வங்காளத்திலிருந்து நேபாளத்திற்கு புலம்பெயர்ந்து நேபாளி பெண்ணை மணந்துகொண்டவர். நேபாளத்திலிருந்து கல்கத்தா வந்து கல்விகற்ற ஆல்டா அங்கிருந்துதான் சினிமாவுக்கு வந்தார். அவரிடமிருக்கும் வங்காளச் சாயல், அல்லது உடற்பாவனைகள் அப்படி அமைந்தவை.
பல வட இந்திய நடிகைகளில் பட்டாணி குருதி உண்டு. சீனக்குருதியும் பட்டாணிக்குருதியும் கலக்கையில் மனீஷா கொய்ராலா போன்ற அரிய ‘அல்லாய்’கள் உருவாகின்றன.மாலா சின்ஹாவே சிலகோணங்களில் பழைய மனீஷா கொய்ராலா போல தோன்றுகிறார். குறிப்பாக நேப்பாளி என தெரிந்தபிறகு. வட இந்தியாவே பல இனங்களின் முகங்களை போட்டு சுழற்றி எடுக்கப்பட்ட கலைடாஸ்கோப்
வடஇந்திய நடிகைகளில் இப்படி முகங்களின் இனக்கலவைகளை ஆராய்வது மிகமிக ஆர்வமூட்டக்கூடிய ஒன்று. குறிப்பாக நள்ளிரவில் அமர்ந்து முகங்களின் குருதிக்கலப்புகளை தொடர்ந்து செல்லும்போது ஒருவகையில் வரலாறே நம்மைச்சூழ்ந்து விரிந்துகொண்டே செல்கிறது. திரும்பிப்பார்க்கையில் ஒரு மிகப்பெரிய வெளியில் நின்றிருப்போம்.
தாகூரும் கிரீஷ் கர்நாடும்
அன்புள்ள ஜெ,
பதில் அளித்தமைக்கு நன்றி.
உண்மையில், ஆச்சிர்யமாகவே உள்ளது. நான் தாகூரை ஒரு சொகுசு பயணி என்றே நினைத்திருந்தேன். கிரிஷ் கர்னாட் அவரை “Second Rate Playwright” என்றே கூறியது எல்லா பத்திரிகையிலும் வந்தது.
உங்கள் சுட்டிகளில் இருந்து Vamshavruksha மற்றும் ஸம்ஸ்காராவை படித்திருக்கிறேன் கோராவை படித்ததில்லை.
நன்றி
பரத்
அன்புள்ள பரத்,
நீங்கள் டாகூரின் நாடகங்களையும் கிரீஷ் கர்நாடின் நாடகங்களையும் வாசிக்கவேண்டும். கிரீஷ் கர்நாட்தான் ஓர் இரண்டாந்தர நாடகாசிரியர். தாகூர் முன்னோடி நாடகாசிரியர். முன்னோடிகளின் வடிவத்துல்லியம் கொஞ்சம் பழைமையை அடைந்திருக்கும், சாராம்சம் மேலும் துலங்கியிருக்கும். தாகூரின் நாடகங்களின் அடிப்படையான கவித்துவம் இன்றும் மிளிர்கிறது.
கிரீஷ் எழுதிய எந்த நாடகத்திலும் அன்றிருந்த எளிமையான முற்போக்கு மையக்கருத்தும், அதை வலியுறுத்தும்பொருட்டு கட்டியமைக்கப்பட்ட காட்சிகளும்தான் இருக்கும். ஐரோப்பாவில் நாடகம் பயின்றமையால் ஐரோப்பா அறுபது எழுபதுகளில் எதிர்பார்த்த நாட்டாரியல்கூறுகளை நவீனப்படுத்தி உள்ளே அமைக்கும் முயற்சி இருக்கும். ஆனால் நாட்டார்கதைகளில் உள்ள வாழ்க்கையின் புதிர் மறைந்துவிட்டிருக்கும். அங்கே ஒரு முற்போக்கு அரசியல் – சமூகவியல் கருத்து அமைக்கப்பட்டிருக்கும்.
கிரீஷ் கர்நாடின் நாகமண்டலா, ஹயவதனா போன்றவற்றில் அந்த கருத்து எட்டப்பட்டதுமே நாடகம் முடிந்துவிடும். துக்ளக் நாடகம் வெறும் பிரச்சாரப்பேச்சு. கிரீஷ் கர்நாடின் நாடகங்களில் இந்திய நாடகமரபின் எந்த தொடர்ச்சியும் இருக்காது. அவை முழுக்கமுழுக்க ஐரோப்பியவகை நாடகங்கள். இந்தியாவின் பண்பாட்டுக்கூறுகள் சிலவற்றை எடுத்து பொருத்திக்கொண்டவை.
மாறாக தாகூரின் நாடகங்கள் அந்த நாடகத்தில் அவர் முன்வைக்கும், அல்லது நாம் சென்றடையும் அரசியல்- சமூகவியல் கருத்துக்களால் நிலைகொள்ளவில்லை. அவை வாழ்க்கையில் உள்ள வசீகரமான மர்மங்களை, கேள்விகளையே முன்வைக்கின்றன. சித்ராங்கதா, சண்டாளிகா போன்ற நாடகங்கள் எழுப்பும் கற்பனைகள் முடிவில்லாதவை. ஆண்பெண் உறவின் விளையாட்டுக்களை தொட்டுச் செல்பவை. அவை கதாபாத்திரங்கள் சொல்லும் கருத்துக்களால் நிலைகொள்ளவில்லை. கவித்துவத்தால், நாடகீயமான தருணங்களால் நிலைகொள்கின்றன.
தாகூரின் நாடகங்கள் இந்தியாவின் இரண்டு நாடகமரபுகளை உள்வாங்கிக்கொண்டவை. சம்ஸ்கிருதச் செவ்வியல்நாடக மரபு, வங்காள நாட்டார் நாடக மரபு [ஜாத்ரா] . இவை இரண்டுமே யதார்த்த நடிப்பு கொண்டவை அல்ல, நடிப்பை நாட்டியமாக ஆக்கிக்கொண்டவை. சித்ராங்கதா, சண்டாலிகா இரண்டுமே நாட்டியநாடகங்களாகவே அவரால் எழுதப்பட்டன. இன்றுவரை பல்வேறு வடிவங்களில் மிகவெற்றிகரமாக மேடையில் நிகழ்த்தப்பட்டபடியே இருக்கின்றன. [ ஜாத்ரா நாடகவடிவத்தைப் பற்றிய நாவல் தாராசங்கர் பானர்ஜி எழுதிய கவி]
கிரீஷ் கர்நாட் கர்நாடகத்தின் நவ்யா இயக்கத்தின் முகம். அவர்கள் ஐரோப்பிய வழிபாட்டாளர்கள், இந்தியாவை ஐரோப்பியக் கண்களால் பார்க்கமுயன்றவர்கள், டெல்லியின் அன்றைய ‘பண்பாட்டு மேட்டிமைக்குழு’வை சேர்ந்தவர்கள். இடதுசாரிகள், ஆனால் அமெரிக்க- ஐரோப்பிய நிதிகளால் வாழ்ந்தவர்கள்.
கிரீஷ் கர்னாடு போன்றவர்கள் மிகையாக மதிப்பிடப்பட்ட சராசரி எழுத்தாளர்கள்.அவர்களை அவர்களின் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் வழியாகவும், அவர்களுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அளித்த விருதுகள் வழியாகவும்தான் நாம் மதிப்பிடுகிறோம். நம் சூழலில் இந்த பண்பாட்டு மேட்டிமைக்குழு உருவாக்கிய மதிப்பீடுகளை உடைத்து மேலே செல்லவேண்டிய தேவை இன்றுள்ளது. கூடவே தாகூர் போன்றவர்களை இவர்களின் கண்களால் பார்க்காமல் நமக்கான பார்வைகளை நாமே உருவாக்கிக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
ஜெ
ஒரு தொடக்கம், அதன் பரவல்
சென்னை கூட்டம்விஷ்ணுபுரம் என்னும் அமைப்பு ஒரு தொடக்கம். அதிலிருந்து தொடங்கிய நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு இலக்கியக்கூடுகைகளை நடத்தி வருகிறார்கள். சென்னை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் வெண்முரசு விவாதக்கூட்டத்தை நடத்திவருகிறார்கள். கோவையில் வெண்முரசு விவாதக்கூட்டம் ஒன்று இம்மாதம் முதல் தொடங்கி நடைபெறுகிறது.
சென்னை வெண்முரசு கூட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே இப்போது வெண்முரசை வாசிக்க தொடங்குபவர்களுக்காக இன்னொரு சந்திப்பு நண்பர் சந்தோஷ் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகின்றது
சென்னை கூட்டம்கோவையில் நரேன் ஒருங்கிணைப்பில் சொல்முகம் என்னும் இலக்கியக்கூடுகை நடைபெறுகிறது. சுனீல் கிருஷ்ணன் காரைக்குடியில் மரப்பாச்சி என்னும் இலக்கியச் சந்திப்பை ஒருங்கிணைக்கிறார். கே.ஜே.அசோக்குமார் தஞ்சை இலக்கியக் கூடலை நடத்துகிறார். சுரேஷ் பிரதீப் திருவாரூரில் நதிக்கரை இலக்கியவட்டம் என்னும் சந்திப்பை நடத்துகிறார். ஈரோட்டில் கிருஷ்ணன் முன்னெடுக்க ஈரோடு வாசிப்பு இயக்கம் என்னும் இலக்கியவிவாத அரங்கு உள்ளது
மரப்பாச்சி, காரைக்குடிபொதுவான இலக்கிய ஆர்வம் மட்டுமே இந்நிகழ்வுகளின் அடிப்படை. இலக்கியம் மட்டுமே முன்னிறுத்தப்படும். அரசியல் முழுமையாகவே தவிர்க்கப்படும். இலக்கியநூல்களை வாசிப்பதும் விவாதிப்பதும் மட்டுமே ஒரே செயல்பாடு. அளவை விட ஆழமே இலக்கு என்பதனால் மேலோட்டமான நூலறிமுகங்கள், எளிமையான பேச்சுக்கள் தவிர்க்கப்படும். அதற்குரிய கறாரான மட்டுறுத்தல் உண்டு. நூல்களை வாசித்துவிட்டு வந்து விவாதிப்பவர்களுக்கும், தொடர்ச்சியான இலக்கியவாசிப்பு உடையவர்களுக்குமே முக்கியத்துவம்
இந்நிகழ்வுகள் எவையுமே ‘அனைவருக்கும்’ உரியவை அல்ல. இலக்கியம் மீதான ஈடுபாடும், வாசிப்பும் அவசியம். ஆகவே பெருந்திரளை தவிர்க்கிறார்கள். ஆயினும் தொடர்ச்சியாக பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. அவர்களிடையே ஆழ்ந்த நட்பும் உருவாகி வருகிறது. அது குறித்த நிறைவும் நண்பர்களிடையே உள்ளது
சொல்முகம் கோவை30,31 தேதிகளில் மட்டும் நான்கு இலக்கியச் சந்திப்புகள். சென்னை இலக்கிய நண்பர்கள் ஒருங்கிணைக்க ரா.செந்தில்குமாரின் இசூமியின் நறுமணம் என்னும் சிறுகதை நூல்வெளியீடு சென்னையில் நடைபெற்றது.நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட அரங்கு நிறைந்த கூட்டம். அதன்பின்னான இனிய உரையாடல்கள்.
30 ஆம் தேதி பாண்டிச்சேரியில் வெண்முரசு விவாதக்கூட்டம். நீலம் நாவலை பேசுகிறார்கள். 31 ஆம் தேதி காரைக்குடியில் மரப்பாச்சி இலக்கியக்கூட்டத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராஜா கலந்துகொண்டார். இருபத்தைந்துபேர் கலந்துகொண்டனர்.அவர்களின் வழக்கமான எணிக்கை இருபதுக்குள்தான். 31 அன்று கோவையில் வெண்முரசு விவாதக்கூட்டம். முப்பதுபேருக்கு மேல் கலந்துகொண்டனர் என்று புகைப்படங்கள் அனுப்பியிருந்தனர்
சொல்முகம் கோவைவாசிப்பவர்கள் அனைவருக்குமே பேச ஆளில்லாத தனிமை உண்டு. வழக்கமான இலக்கியச் சந்திப்புகளில் வாசிப்பற்றவர்கள், முதிரா எழுத்தாளர்கள் பேசி சலிப்பூட்டுவார்கள். நம் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் இச்சந்திப்புகளின் வெற்றிக்கு, அவற்றின் தொடர்ச்சிக்குக் காரணம் அங்கே இணைமனங்களை கண்டடையமுடியும் என்பதே. வாசிப்பில் ஈடுபாடும் உண்மையான அழகியலுணர்வும் கொண்டவர்களை அறிமுகம் செய்யலாம். அந்நட்பு இந்தச் சந்திப்புகளுக்கு அப்பாலும் நீளும். பலர் சிறு பயணக்குழுக்களாகவும் ஆகியிருப்பதை காணமுடிகிறது.
ஒரு சிறுமுயற்சி மெல்ல விரிவதையே காண்கிறேன். எதுவும் தீவிரத்தால்தான் விளைவை உருவாக்குகிறது.
சொல்முகம்
நரேன் – 7339055954
சுஷீல் – 96002 74704
மரப்பாச்சி காரைக்குடி
சுனில் கிருஷ்ணன் 9994408908
drsuneelkrishnan@gmail.com
சென்னை வெண்முரசு கூடுகை
சத்யானந்த யோகா மையம்11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெருவடபழனிசென்னைஅழைக்க:- 9952965505 & 9043195217
புது வாசகர்களுக்காக வெண்முரசு கூடுகைசந்தோஷ் சரவணன்s.santhosh2007@gmail.comபாண்டிச்சேரி வெண்முரசு விவாதக்கூட்டம்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்”
முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை – 605 001
தொடர்பிற்கு : 9943951908 ; 9843010306
ஈரோடு கூட்டம்
அழகிய மணவாளன்
azhaindian@gmail.com
தஞ்சைசந்திப்பு
அசோக் குமார்
kuppa.ashok@gmail.com
அணுக்கம்- ஒரு கடிதம்
Nancy Rourke
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் பதிவைப் பார்த்து ஒருவித தலைகால் புரியாத நிலைமையில் இருக்கிறேன். அன்று இரவு முழுவதும் ஒரு படத்திற்கு தேவையான reference களை எடுத்து வைத்து விட்டு மிக பிந்தியே தூங்கச் சென்றேன். மறந்து போய் வழக்கத்திற்கும் மாறாக mobile data வை onஇல் வைத்திருந்தேன். அடுத்த நாள் காலை ஈரோடு சந்திப்பு நண்பர் கார்த்தி வாட்சப்பில் வாழ்த்துக் குறும்செய்தி அனுப்பி உங்கள் தளத்தின் சுட்டியை அளித்திருந்தார். ஏதோ நடந்துவிட்டிருக்கிறது என்ற ஊகத்துடனே போய் படித்தேன். இதை நான் எதிர்பார்க்கவில்லையென்பதால் ஒரு வித அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வு.
மகாபாரதத்தின் ஒப்பற்ற கதாபாத்திரங்களையும் காந்தி போன்ற மகத்தான ஆளுமைகளையும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்து உய்விக்கும் புனைவெழுத்துக்களையும் எழுதிய கையால் எழுதப்படுவதை விட மகத்தான பாக்கியம் இல்லை. அந்த வாய்ப்பை பெற்றுத் தந்ததாலே என் அப்பாவிடம் சமீபத்தில் உருவான கோபம் குறைந்து பேசாமல் இருப்பதைத் தவிர்த்து பேசலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அன்று முழுவதும் புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.
சென்ற இரு நாட்களாக ஒரு இருபதோ முப்பதோ தடவை இப்பதிவை வாசித்திருப்பேன். என் தங்கைக்கும் அனுப்பினேன். நான் ஒரு நாவலே எழுதி முடித்தது போல் கொண்டாடினார்கள். நீங்கள் இணைத்திருந்த சண்முகவேலின் ஓவியத்தில் உங்கள் கையில் குழந்தையாகவே நான் மாறிவிட்டது போலத் தோன்றியது. அதை நினைத்துக் கொண்டிருந்ததாலோ தெரியவில்லை முன்தினம் நள்ளிரவில் கணினியில் வரைந்து கொண்டிருக்கும் போது johnsons baby சோப்பிலும் பௌடரிலும் வரும் மணம் என்னிலிரிந்து வந்தது போல் உணர்ந்தேன்.
நான் பிறந்தவுடன் நீங்கள் அப்பா பெயரில் அனுப்பிய சிறுகதைக்குக் கிடைத்த தொகையை எனக்காகவே கொடுத்ததாக என்னிடம் சொல்லப்பட்ட போது நான் நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நீங்கள் எனக்கு “ஜெயமோகன் மாமன்” தான். பள்ளி நாட்களிலே வீட்டில் புத்தக அலமாரியில் இருந்த உங்கள் ‘திசைகளின் நடுவே’, ‘ரப்பர்’ போன்றவை வாசித்திருந்தேன். ஆனால் அப்பாவின் நண்பர்களான எந்த மாமாக்களை விடவும் அல்லது என் அப்பாவையும் விட மேலாக நீங்கள் எனக்கு முக்கியமானவராக மாறுவீர்கள் என்று எனக்கு அப்போது கொஞ்சமும் தெரியாது.
நீங்கள் கூறியது போல் உங்கள் பெயரில் மட்டுமல்ல உங்கள் ஆளுமையிலும் பாதியாகவே நான் இருக்கிறேன் என்பதே நான் உணர்ந்தது. என்னில் அப்பாதியை வளர்த்தால் இன்னொரு ‘ஜெயமோக’னாகவே இருக்கும். வெறுமனே உங்கள் எழுத்தில் வரும் உணர்வுகளைச் சொல்லவில்லை. நீங்கள் அன்றாடத்தில் எப்படி இருக்கிறீர்களோ எதையெல்லாம் கடந்து வந்தீர்களோ அதில் அப்படியே பாதி. பல உங்கள் எழுத்தில் இருந்து நேரடியாக நான் பெற்றுக் கொண்டது. பல உங்கள் எழுத்திலிருந்து நான் இயல்பிலேயே எப்படியோ அதை உறுதிபடுத்திக் கொண்டது.
இதில் பல நுண்ணிய விஷயங்களும் அடக்கம். ஒரே போல் இருக்கலாம் அதற்காக அதே நாளில் நீங்கள் சிந்தித்ததையும் உணர்ந்ததையும் கூடவா நானும் பார்க்கவும் உணரவும் முடியும்? சமீபத்திய உதாரணம் நான் 29 ஏப்ரல் 2020 இரவு ஒன்பது மணியளவில் என் அறையில் என்னைச் சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு பல்லியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தாலும் முதன்முதலாக வீடியோ எடுத்து என் தங்கைக்கு அனுப்பினேன்(screenshot களை இணைத்துள்ளேன்). 30 ஏப்ரல் 2020 அன்று காலை உங்கள் தளத்தில் பல்லியைப் பற்றிய பதிவைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
அது போல் நீங்கள் உங்கள் லக்கேஜ் பெட்டியை பஸ்ஸில் தவறவிட்டு திருவனந்தபுரம் சென்று மீட்டதற்கு மூன்று நாட்கள் முன்பு தான் நான் என் கைபேசியைத் தொலைத்திருந்தேன். நீங்கள் ஏடிஎம்’மில் பணம் எடுக்கச் சென்று மாட்டி அசடு வழிந்தது போல் பல அனுபவங்கள் எனக்கு உண்டு. நீங்கள் ‘Alcoholic anonymous’ பற்றிய உரையாடலில் ‘நான் குடிக்காத குடிகாரன்’ அதனால் குடிப்பதில்லை என்று உங்கள் நண்பர்களிடம் சொன்னதாகச் சொன்ன வரியை அதே வரியை அக்கட்டுரையை வாசிப்பதற்கு இரண்டோ மூன்றோ வருடங்களுக்கு முன்பே உணர்ந்து அதையே கோட்பாடாகக் கொண்டேன். சில முறை வைன் அருந்திவிட்டு வாந்தியெல்லாம் எடுத்திருக்கிறேன். அத்துடன் நிறுத்திவிட்டேன். பீர் கூட சாப்பிட்ட அனுபவம் இல்லை.
எனக்கு அப்போதே நன்றாக தெரிந்திருந்தது. நான் குடிக்க ஆரம்பித்தால் என்னிடம் எனக்கிருக்கும் குறைந்தபட்ச கட்டுப்பாடும் இல்லாமலாகிவிடுமென்று. அதை உங்கள் கட்டுரையை படித்தவுடன் ஆச்சரியத்துடன் உறுதிபடுத்திக் கொண்டேன். பெண்கள் விஷயத்திலும் அதுவே. வழி தவறுவதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தாலும் எனக்கும் ஒரு பெண் போதுமென்பதையே சொல்லிக் கொள்கிறேன். இனியும் அதிலிருந்து வழுவமாட்டேனென்றே நினைக்கிறேன். எந்த பெண்ணை நினைத்தாலும் நீங்களே நினைவில் வந்து தொலைக்கிறீர்கள்:)
அரசியல் கோட்பாட்டில் நான் கல்லூரியில் சேர்ந்த காலங்களில் ஏபிவிபி, ஆர் எஸ் எஸ் மற்றும் அப்பாவின் உந்தலால் விஜயபாரதம் போன்ற இதழ்களுடன் தொடர்பு உருவாகத் தொடங்கியது. ‘சுதேசி செய்தி’ இதழுக்கு கேலிச்சித்திரம் வரையும் வாய்ப்பும் வந்தது. இது போன்ற இயக்கங்களில் இருந்து கொண்டு இவர்களின் இயக்கத்தவர்களே செய்யும் பிழைகளை நாம் ஏதாவது கட்டத்தில் உணர்ந்து அதைக் கேலிச்சித்திரமாக வரைய வேண்டும் என்று தோன்றினால் இது போன்ற இயக்கங்களில் இருக்கும் வரை வரைய முடியாது என்பதை உணர்ந்து எந்த இயக்கங்களுக்குள்ளும் எப்போதும் நான் இருக்கப் போவதில்லை சுதந்திரமான கலைஞனாகவே இருப்பது என்று முடிவெடுத்தேன். அதையே நீங்களும் கூறினீர்கள். உறுதிபடுத்திக் கொண்டேன்.
இதைப் படித்தவுடன் நீங்கள் புன்னகைக்கலாம். எனக்கு இன்னும் மோட்டார் வாகனங்கள் எதுவும் ஓட்டத் தெரியாது. ப்ளஸ் டூ முடித்தவுடன் நண்பனிடமிருந்து பைக் கற்றுக் கொண்டேன். அத்துடன் பைக்குடன் எந்த தொடர்பும் இல்லை. இப்போது பயிற்சி இல்லாமல் ஓட்ட முடியாது. இங்கே சென்னையிலும் ஊருக்கு வரும் போதும் ஒரு வண்டியின் தேவையை உணர்ந்தே இருக்கிறேன். ஆனாலும் இன்று வரை பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ‘கனவில்’ இருந்துகொண்டே வண்டி ஓட்டுவது இயலாத காரியம் என்றே நினைக்கிறேன். எங்கேயாவது மோதவேண்டி வரும். இன்னொன்று நீங்களும் வண்டி ஓட்டுவதில்லை என்பதும் காரணம்.
ஆனால் சைக்கிளின் மேல் பெரிய ஈடுபாடு உண்டு. சைக்கிளைப் பார்க்கும் போது சிறு வயதில் என்ன மனநிலை ஏற்பட்டதோ அதே குதூகலம் தான் இப்போதும். விட்டால் இமயமலை வரை சைக்கிளிலேயே சென்று வருவேன். அது eco-friendly என்பதும் ஒரு காரணம் இன்னொன்று நம் உடலின் எல்லா பாகங்களும் சைக்கிள் ஓட்டும் போது செயல்படுவதாலும் நம் கவனம் முழுவதும் குவிந்திருப்பதாலும் எங்கேயும் மோதாமல் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அப்போது கிடைப்பதில் சிறந்த சைக்கிள் ஒன்றை வாங்குவேன்.
உங்கள் எழுத்துக்கள் எப்படியெல்லாம் என்னை ஒரு வாசகனை பாதித்தன என்று ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதும் அளவிற்கு விசயங்கள் உள்ளன. எதேச்சையாக உங்கள் தளத்தை 2011-ஆம் ஆண்டு வாக்கில் படிக்க ஆரம்பித்தேன். பிறகு தொடர்ந்து படித்தேன். 2015-ஆம் ஆண்டு வாக்கில் மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று படிக்க ஆரம்பித்த போது கிட்டதட்ட ஒரு வருட காலம் நுழைவுத் தேர்வுக்கான தீவிர பயிற்சியின் அயர்ச்சியாலும் நாங்கள் பெருங்குளத்தூரில் தங்கியிருந்த பெரிய வீட்டில் என் ஓவியக் கல்லூரி நண்பர்கள் பலர் படிப்பு முடித்து விட்டு வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல அவ்விடங்களை நிரப்ப ஊரில் சொகுசாக என்ஜினியரிங் படித்து விட்டும் வேலை தேடவும் வந்த ‘சாதாரணமானவர்’களுடன் எனக்கு அப்போதிருந்த தீவிரத்தாலும் என் கலைப் பயிற்சிகளுக்கு அவர்கள் தடையாக தோன்றியதாலும் ஒன்ற முடியாமல் போனது.
நான் தனியாக என் பள்ளி நண்பன் இருந்த வீட்டிற்கு மாறிவிட்டேன். கல்லூரிக்கெல்லாம் சென்று கொண்டிருந்தாலும் அப்போதைய தனிமை என்னை மிகவும் வாட்டி விட்டது. என் அறைக்கு வெளியே வீட்டு உரிமையாளரின் சொந்தக்கார பையன்கள் ஒரு கும்பல் கூடி அரட்டை அடிப்பது வழக்கம். கேரம்போர்ட் விளையாடுவதும் சினிமாக் கதை பேசுவதுமாக. என்னால் அவர்களுடன் சில நிமிடங்களுக்கு மேல் எப்போதும் பேச முடிந்ததில்லை. என் மேல் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது தாய்க்கும் என் மீது இருந்த மரியாதையாலும் நான் திறமையானவன் ஓவியன் என்றெல்லாம் எனக்கிருந்த பெயராலும் அங்கே சமாளிக்க முடிந்தது. இந்த ‘ஒன்ற முடியாமை’ தான் பெரும் பிரச்சனையாக இருந்தது.
கிட்டத்தட்ட மனநிலை பிறழ்வின் ஆரம்பத்தை எட்டியிருந்தேன். நான் அப்படியெல்லாம் இருந்ததே இல்லை. என் இயல்பான கொண்டாட்டம் குதூகலம் சிரிப்பெல்லாம் எங்கே என்று தேட வேண்டியிருந்தது. அப்போது தான் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது உங்கள் ‘பொன்நிறப்பாதை’ வாங்கினேன். கூடவே ‘மன இறுக்கத்தை போக்குவது எப்படி’ போன்ற இன்றுவரை வாசிக்காத புத்தகங்கள். ‘பொன்நிறப்பாதை’ என்னை மீட்டது என்றே சொல்லலாம். நான் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவனாக’ உணர்ந்த பிறகு என் பாதி பிரச்சினை தீர்ந்து விட்டது. எனக்கு இட்ட பணியை செயல்படுத்தும் பயணத்தை அப்போது மனதளவில் ஆரம்பித்திருந்தேன். அதற்குள் கல்லூரி இறுதி வகுப்பில் ஒரு மாணவனுடன் வார்த்தைகள் பிறழ அவன் என்னை அடிக்க நானும் அவன் மூக்கில் இரத்தம் வழிய குத்திவிட்டு ஓட வேண்டியிருந்தது.
நான் காந்தியைப் பற்றி நீங்கள் எழுதியதை தவிர பெரிதாக ஒன்றும் வாசித்தறியாதவன். எனக்கு அவர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்ற பிம்பம் என் தாத்தாவிடமிருந்து வந்து சேர்நதது. ஆனால் மற்ற மதத்தவரும் இயக்கத்தவர்களும் கூட அவரைப் பற்றி தவறாகவே பேசுவதைக் கண்டிருக்கிறேன். நீங்கள் காந்தியைப் பற்றி எழுதிய கட்டுரைகளை மிகுந்த ஆர்வமுடன் வாசித்தேன். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினாலும் அவரை ஆங்கில அதிகாரிகள் ‘டியர் காந்தி’ என்று குறிப்பிட்டு கடிதம் எழுதும் அளவிற்கு அவர்களுடன் நட்புடன் இருந்தார் என்பதும் அவர் பிரிட்டனுக்குச் சென்றபோது அவரால் வேலையிழந்த தொழிலாளர்கள் அவரைப் புரிந்து கொண்டு வரவேற்றதும் களிமண் பற்று போட்டுக் கொண்டு ஆங்கிலேயர்களைச் சந்திக்கச் சென்ற அவரது திமிரும் அவரால் ஈர்க்கப்பட்டு பெரும் செயல் வீரர்களான ஆளுமைகள் அரசியல் பொருளாதாரம் கலை என்று பல துறைகளில் நிறைந்திருப்பதும் எல்லாம் என்னைப் பெரிதாக ஈர்த்தது.
காந்தியைப் பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்தபிறகுதான் பொறுமையை நாட ஆரம்பித்தேன். உறவுகளையெல்லாம் மேலும் கனிவுடன் அணுக ஆரம்பித்தேன். விட்டுக் கொடுத்துப் போவதின் மகத்துவத்தை கற்றுக் கொண்டேன். நீங்கள் காந்தியின் வழியில் உங்களை எதிரியாகக் கருதும் அ மார்க்ஸ் அவர்களுக்கு புத்தகத்தை சமர்பித்ததை தான் என் வாழ்க்கையிலும் நான் எடுத்துக் காட்டாகக் கொள்ள விரும்புகிறேன். நீ பழையது போல உன் அப்பாவைப் போல இல்லை சென்னை சென்ற பிறகு நிறைய மாறி விட்டாய் என்று என் அம்மாவே சொல்லும் அளவிற்கு மாறியது உறவுகளையும் மேம்படுத்தியது. சென்னை அனுபவங்கள் ஒரு காரணமென்றால் உங்கள் எழுத்து அதைவிட முக்கிய காரணம்.
நான் கல்லூரியில் சேர்ந்த போது என்னை விட நன்றாக வரைபவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களிடத்தைப் பிடிக்கவும் அவர்களைத் தாண்டவும் நான் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட முதற்கனலின் சிகண்டிப் போல வெறியுடனிருந்தேன். எந்தளவிற்கென்றால் நான் சென்னையில் நான் வழக்கமாப் புழங்கும் இடங்கள் தவிர எங்கேயும் அதிகமாகப் போனதில்லை. எங்களுக்கு கடைசி மூன்று வருடங்களும் கல்லூரியின் விரிவான கல்விச் சுற்றுலா உண்டு. அதனால் மட்டும் பேலூர் முதல் ஹரித்வார் வரை இந்தியாவின் முக்கியமான பல நினைவுச்சின்னங்களையும் இடங்களையும் பார்க்க முடிந்தது. ஆனால் சென்னையில் மகாபலிபுரம் கூட பார்த்தது கிடையாது. அறையிலேயே அடைந்து கிடப்பேன். ஒன்பது பத்து மணி நேரமெல்லாம் உணவில்லாமல் இடைவெளியில்லாமல் வரைந்திருக்கிறேன். எங்கள் கல்லூரியில் 150 வருட பழைமையான பல அரிய கலை நூல்கள் அடங்கிய நூலகம் உள்ளது. அதைகூட முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளும் மனநிலையில் அப்போது இல்லை. இப்போது நினைத்தால் அதெல்லாம் பெரிய அசட்டுத்தனமாகத் தெரிகிறது.
ஒரு அக்னிவேசரின் வழிகாட்டுதல் கிடைத்திருந்தால் நான் சமநிலையைப் பேணியிருப்பேன். அதன் மூலமாக மேலும் நிறைய தெரிந்திருக்கலாம். உங்களை அப்போது வாசிக்க ஆரம்பிக்கவும் இல்லை. ஊரில் இருக்கும் வரை கராத்தே பயின்று கொண்டிருந்தேன். கற்றுத் தந்த விஜயன் மாஸ்டர் நான் மிகவும் மதிக்கும் ஆசான் களில் ஒருவர். ஆனால் சென்னை வந்த பிறகு அவரது வழிகாட்டுதல் இல்லாமலேயே தவறான பயிற்சிகளில் ஈடுபட்டதும் இடைவெளியில்லாமல் சரியான உபகரணங்கள் இல்லாமல் தரையில் படுத்துக் கொண்டே ஓவியப் பயிற்சியில் ஈடுபட்டது எல்லாம் சேர்ந்து இன்று வரைத் தொடரும் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டேன்.
வலியால் வரைய முடியாததால் தான் வாசிப்பின் பக்கம் கொஞ்சம் கவனம் திரும்பியது. எதை வாசித்தேன் என்றால் ‘த ஹிந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தமிழ் ஹிந்து’ ‘தின மணி’ இதில் ஏதாவது ஒன்றை வரி விடாமல் வாசித்துவிடுவேன். பள்ளி நாட்களில் வீட்டில் தொலைக்காட்சி இல்லாமல் இருந்ததால் நாளிதழ்கள் வார இதழ்கள் மாத இதழ்கள் என்று வாசித்துப் பழகிய பழக்கம் தான் இங்கேயும் தொடர்ந்தது. கொஞ்சம் சமாளிக்கும் அளவிற்கு ஆங்கில ஞானம் கிட்டியது. கூடவே தாய் மொழி மலையாளத்தை பழக்கப்படுத்திக் கொள்ள அவ்வப்போது மாத்ருபூமியும் மனோரமாவும். சில நாட்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளை வாசித்து விடுவேன்.
அப்போது ஸ்மார்ட் போன் இல்லையென்பதால் இப்போது bookmark செய்வதைப் போல அதில் வரும் செய்திகளை கட்டுரைகளை கலை இலக்கியம் அரசியல் புவிப்பாதுகாப்பு ஆங்கில இலக்கணம் என்று எல்லா தலைப்புகளிலும் பிரித்து தனித்தனியாக கத்தரித்து சேகரித்து வைத்துக் கொள்வேன். எனக்கு உங்கள் தளம் மேலும் அணுக்கமாவதற்கு என் பரந்துபட்ட இந்த ஆர்வம் தான் காரணமென்று நினைக்கிறேன். பல துறைகளைப் பற்றிய தெளிவான கட்டுரைகள் உங்கள் தளத்தில் தான் வாசித்தேன். அப்போது தான் ஏதோ பத்திரிகையில் சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய செய்தி வந்து சென்று உங்கள் பெயர் இருந்ததால் வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கான தொகுப்பு என்ற அர்த்தத்தில் பின் அட்டையில் எழுதியிருந்ததால் ‘பொன்நிறப் பாதை’ தொகுப்பு வாங்கி படித்தேன். இறுதியாண்டு முடித்ததும் ஊருக்கு வந்த பிறகு தோள்பட்டை வலிக்கு பிஸியோதெரபி சிகிச்சை பல முறை பெறவேண்டியிருந்தது. பிறகு கண்ணில் ‘vasculitis’ பிரச்சனை வேறு. அதற்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். வரைவதை நிறுத்தி விட்டேன்.
என்னை நான் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் பணிக்கு அழைக்கும் வரையிலான அவ்விரண்டு மூன்று மாதகாலம் உங்கள் தளமே கதியென்று கிடந்தேன். தங்கையின் மடிகணினியில் தொகுத்து வைத்த எனக்கு பிடித்தமான முக்கியமான உங்கள் கட்டுரைகள் மட்டும் சுமார் ஐநூறு இருக்கும். தோண்டத் தோண்ட நிதி கிடைக்கும் சுரங்கம் போலிருந்தது உங்கள் தளம். இலக்கியம் கலை சம்பந்தமான அடிப்படை வினாக்களையும் கேள்விகளையும் அங்கே தான் படித்தேன். பணிக்கு சேர்ந்து அடுத்த 2-3 வருடங்கள் தீவிரமாக வரைவதை நிறுத்திவிட்டேன். அவ்வப்போது வரைந்து முகநூலில் மட்டும் போட்டுக் கொண்டிருந்தேன்.
உங்கள் தளத்தை நாள் தவறாமல் படித்தேன். மெல்ல ‘இரவு’, ‘ஏழாம் உலகம்’, ‘அறம்’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘இவர்கள் இருந்தார்கள்’, ‘புறப்பாடு’, ‘சிறு கதைகள்’ என்று ஆரம்பித்து இன்று ‘வெண்முரசு’ வரை வந்து நிற்கிறேன். மற்ற எழுத்தாளர்களை அவ்வளவாகப் படித்த தில்லை என்றாலும் உங்கள் தளத்தின் மூலமாக தெரிந்து கொண்ட எழுத்தாளர்களில் ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, சு வேணுகோபாலின் ‘வலசை’, எஸ் ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’, சமீபத்தில் தாஸ்தவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ சுசீலா அவர்களின் மொழிபெயர்ப்பில். மலையாளத்தில் உங்கள் ‘நூறு சிம்ஹாசனங்கள்’, பஷீரின் ‘பிரேமலேகலங்ஙள்’, கசாக்கின்றெ இதிகாசம், எம் டி யின் ‘முத்தச்சிமாருடெ ராத்திரி’ சிறுகதை அனுபவத் தொகுப்பு போன்றவை. இப்போது வெண்முரசு தவிர ‘விஷ்ணுபுரமும்’, நாஞ்சில் நாடனின் ‘கான்சாகிப்’ தொகுப்பும், மலையாளத்தில் மாதவிக்குட்டியின் ‘நீர்மாதுளம் பூத்தகாலமும்’ வாசிக்கிறேன். நீங்கள் பதிவிட்ட ‘காவிய சுகேயம்’ தளத்தில் தினமும் சப்ததாராவலியின் உதவியுடன் ஒரு மலையாளக் கவிதையாவது வாசித்தும் கேட்டும் விடுகிறேன்.
தமிழில் உங்களுடன் தொடர்பில் இருப்பதால் இயல்பாக என்னால் சில நல்ல கட்டுரைகளாவது எழுத முடியும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் மலையாளத்தில் ஒரு ஐந்து சிறு கதைகளும் முடிந்தால் கசாக்கின்றெ இதிகாசம் போல நிலைத்து நிற்கும் ஒரு நாவலும் எழுதவேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசைகளில் ஒன்று. நான் காட்சிக் கலைகளில் குவிமயம் கொண்டிருப்பதால் அதற்கு மேல் என்னால் முடியாதென்று நினைக்கிறேன்.
எனக்கு கல்லூரியில் படிக்கும் போது கணினி செயலிகளில் பயிற்சியெல்லாம் பெரிதாக இல்லை. ஆனாலும் கற்பனைத் திறனுக்காக மட்டும் தான் என்னை நான் இப்போது வேலை செய்யும் நிறுவனத்தில்(Cognizant) வடிவமைப்பாளராக ‘campus interview’இல் தேர்ந்தெடுத்தார்கள். இங்கே பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை என்றாலும் நான் விரும்பிய வேலை இதுவல்ல. ‘எல்லையில்லா’ கற்பனைகளுக்கெல்லாம் இங்கே இடமில்லை. ஆனாலும் எனக்கு இங்கே கிடைத்த வழிகாட்டிகளும் அன்பும் நான் இங்கே விரும்பும் வரை எந்த இடரும் இன்றி தொடரலாம் என்ற நிலைமையாலும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன் தயார்படுத்த வேண்டியிருப்பதாலும் தொடர்கிறேன்.
தனியாக என் எல்லா கற்பனைகளுக்கும் வடிவம் கொடுத்துப் பார்க்கும் பொருளாதார சுதந்திரத்துடன் இயங்கும் கலைஞனாக இருக்கவே ஆசை. அதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். காட்சிக் கலையில் நான் ஒரு ‘ஜெயமோகனாக’ மாற வேண்டும். கடந்தகால கலைப் போக்குகள் நிகழ்காலக் கலைப் போக்குகள் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். உத்வேகமும் செயல்வீரனுமான ஆசிரியரை தொடர்ந்து வாசிப்பதால் அந்த தீ எனக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கிறது. இப்போது தொடர்ந்து படைப்புகள் படைக்கத் துவங்கியிருக்கிறேன். இப்போது கொஞ்சம் நாளாக ஏற்கனவே எடுத்த புகைப்படம் அல்லது படங்களின் மேல் கணினியில் வரையும் படைப்புகளை செய்து கொண்டிருக்கிறேன். அனேகமாக இக் கொரோனா காலம் முடிந்தவுடன் என் முதல் கண்காட்சி நடக்கும். இன்னும் வாசிக்கவும் பயணம் செய்யவும் கற்கவும் செயல்படுத்தவும் நிறைய உள்ளது.
என் சமீபத்திய சில படைப்புகளில் உங்கள் எழுத்தின் தாக்கம் என்ன, அந்த படைப்புகளில் உங்களை வாசிக்கும் வாசகனான என் மனவோட்டங்கள் எப்படிப் பதிவாகியுள்ளது, ஒரு படைப்பாளனாக என் மனம் எப்படியெல்லாம் செயல்படுகிறது, அதில் நான் வளர்த்துக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் வேண்டியவை எவையெவை என்பதைப் பற்றியெல்லாம் உங்களுடன் உரையாடி வழிகாட்டுதல்கள் பெறவேண்டும் என்பது என் விருப்பம். அடுத்த கடிதத்தில் அதைப்பற்றி விரிவாகக் கூறுகிறேன்.
உங்கள் ஆசியும் வழிகாட்டுதலும் வேண்டும். எனக்கு உங்களால் மட்டுமே வழிகாட்ட முடியும் என்பதே நான் உணர்ந்து கொண்டது. ஏனென்றால் நான் உங்களின் வார்ப்பாகவே என்னை உருவகித்துக் கொண்டவன்.
பணிவன்புடன்,
ஜெயராம்
அன்புள்ள ஜெயராம்
முதன்மையாக ஒன்றுண்டு. இலக்கியமோ கலையோ கடிதங்கள் வழியாக ஓர் எல்லைக்குமேல் பேசிக்கொள்ள முடியாது. ஏனென்றால் எழுத்தே புறவயமானதுதான். எங்கோ அது பொதுவான ஒரு பேச்சாக ஆகிவிடுகிறது. மொழியின் கணக்கு வந்துவிடுகிறது. சரியான உரையாடல் நேர்ப்பேச்சிலேயே இயலும்
நாம் நேரில் சந்திப்போம். எங்கள் பயணங்களில் உடன் வரலாம். அல்லது சிலநாட்கள் நான் ஈரட்டியிலும் மலைப்பகுதிகளிலும் தங்கும் எண்ணம் கொண்டிருக்கிறேன். அப்போது உடனிருக்கலாம்.
ஜெ
இமைக்கணம் ஒரு கேள்வி
அன்புள்ள ஜெ,
ஒரு கிளாசிக்கை படிக்கும் பொழுது நிறுத்தாமல் ஒரு ஒழுக்காக வாசிப்பு நிகழவேண்டும் என்று நீங்கள் சொல்வதுண்டு. அந்த ஒழுக்கு விடுபட்டு விட்டால், வாசிப்புக்கு நடுவே அதிக நாட்கள் கடந்து விட்டால் மீண்டும் அதை உள் வாங்குவது எவ்வளவு கடினம் என்பது என் அனுபவத்தில் தெரிந்துகொண்டேன். வெண்முரசை அச்சு வடிவில்தான் வாசித்து கொண்டு இருக்கிறேன். குறுதிச்சாரல் வரைக்கும் நன்றாகத்தான் வாசிப்பு சென்றது. ‘இமைக்கணம்’ முதல்மூன்று அத்தியாயங்களை வாசிக்கும் பொழுது விடுபடல் நிகழ்ந்து விட்டது. என் பணிக்கு சம்பந்தப்பட்ட இதர நூல்கள் வாசிக்க வேண்டியதால்… மீண்டும் பார்க்கலாம் என்றுதான் நிறுத்தினேன்.
ஒரு மாதம் பிறகு மீண்டும் சென்றால்… என்னால் உள் வாங்க முடியவில்லை. முதலில் இருந்து தொடங்கினேன். மீண்டும் வாசிப்பில் ஏதோ தடங்கல். இதற்கு இடையில் கரோனா தொற்று… அதில் மானசீகமாக பலவீனமாக உள்ள எனக்கு வெண்முரசின் தீவிரத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு புத்தெழுச்சி வர உங்களது தன்மீட்சி, நலம், உரையாடும் காந்தி புத்தகங்களை படித்தேன். மீண்டுவிட்டேன் என்ற நம்பிக்கை வந்த உடனேயே இமைக்கணம் தொடங்கினேன். அந்த வாசிப்பு தவத்திற்குள் செல்லும்முன்… மனதளவில் ஒருங்குவதற்காக குருதிச்சாரல் கடைசி அத்தியாயங்களை வாசித்து அதில் இருந்து நேராக இமைக்கணத்தில் குதித்துவிட்டேன். புற காரணங்கள் எந்த தடங்கல் ஏற்படுத்தாமல் அமைத்து கொண்டேன். தவம் என்றேனே… அதை அணுவணுவாக சுவைத்தேன்.
பாரதத்தின் கதை மாந்தர்களுக்கு சொல்லப்படும் கீதையை… அதன் தர்க்க விதர்க்கங்களை நான் எந்த அளவிற்கு உள்வாங்கினேன் என்று தெரியவில்லை. நான் ரசித்ததெல்லாம் உங்களின் நடையை, நிகழ்வுகளை அமைத்த முறையை, கண்ணன் ஒவ்வொருவருக்கும் காட்டும் அந்த வாழ்க்கை மாயையை! ‘உங்கள் வாழ்க்கை இப்படி நிகழ்ந்து இருந்தால் எப்படி இருக்கும்…'(மிகவும் எளிமைப்படுத்தி விடுகிறேன்… மன்னிக்கவும்) என்று காட்டும் இடங்கள் ஒரு கிளாசிக். நமக்கும் அப்படி ஒரு ஆசான் அமைந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புதிய ஒரு கோணத்தில் பார்க்கும் பார்வையை அளித்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம்தான் வந்தது. அல்லது இந்த நாவலில் மீண்டும் மீண்டும் வருவது போல் வேறெங்கோ அந்த வாழ்க்கை வாழ்கிறேனா… கனவில் வருவது அந்த வாழ்க்கையின் சிறு தெறிப்புகள் தானா! அந்த பிற வாழ்க்கைக்கு செல்லும் பாதையைத்தான் கண்ணன் காட்டுகிறானா!
கீதைதான் இமைக்கணத்தின் மையம் என்கிற பொழுதில் அதன் தத்துவர்த்திக்குள் செல்ல முடியாத எனது வாசிப்பு… குறைபட்டதுதான். விஷ்ணுபுரத்தில் இருந்தே இந்த குறை எண்ணில் உண்டு. இருந்தாலும் அந்த அத்தியாயங்களை மீண்டும் மீண்டும் வாசித்து உள்வாங்க முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அந்த சிரமமெல்லாம்… ஒரு கவித்துவமான அத்தியாயத்தை வாசிக்கும் பொழுது பறந்து சென்று விடுகின்றது. இமைக்கணத்தில் வரும் வியாசனின் அத்தியாயம் அந்த மாதிரி ஒரு தேன் அமுது. அதை ஒன்று மட்டுமே ஒரு குறு நாவலாக பிரசுரிக்கலாம். வியாசரின் வீடுபேறுக்கான விழைவும்அதை அடையவே முடியாதென்ற ஏக்கமும்… எனக்கு உங்களின் கேள்விகள் என்றே பட்டன.
நாவலை முடித்தபின் வெண்முரசு விவாத தளத்திற்கு சென்று நண்பர்களின் கடிதங்களை படித்தேன். அருணாச்சல மகராஜன் அவர்களின் கடிதம் புதிய திறப்புகளை அளித்தது. இருந்தாலும் இமைக்கணத்தின் வடிவை பற்றி எனக்கு சில கேள்விகள் உள்ளன.
முதலாவது, கண்ணன் இமைக்கண காடுக்கு செல்லும் முன்… உபப்லாவ்யத்தில் நிகழும் பாண்டவர்களின் உரையாடலில், அவை வர்ணனையில் ஒரு செயற்கைத்தன்மையை கண்டேன். ஒரு கதை சொல்லியாக நீங்கள் விவரிக்கும் காட்சி வர்ணனைகளில் இருக்கும் ஒரு யதார்த்ததன்மை அதில் இல்லை. கதை மாந்தர்களின் உரையாடல்களில் ஏதோ மிகு நாடகத்தனம். வெண்முரசில் சில நிகழ்வுகளை வேறு ஒருவர் பார்வையில் சொல்லும்பொழுதுதான் இந்த மாதிரி ஒரு செயற்கைத்தன்மையை அமைப்பீர்கள். ஆனால், இதில் அப்படி யாரும் இல்லை… சொல்வது நீங்களேதான். யுதிஷ்டரரின் அத்தியாயத்தில் இதே அவையை மீண்டும் காட்சிப்படுத்தி இருப்பீர்கள். அதில் உங்களுக்கே உரிய தீவிரம் உள்ளது. அதே யதார்த்ததன்மை. முந்தய அத்தியாயத்தில் மட்டும் ஏன் அந்த செயற்கைத்தனம்?
இரணடாவது, கண்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உரைக்கும் அத்தியாயம் முழுவதும்… வெறும் புத்தக மேற்க்கோளாகத்தான் தோன்றியது. அதில் வரும் உரைகள் அனைத்தும் கீதைக்கு அப்பட்டமான மொழியாக்கமாகத்தான் இருந்தது. இதர கதைமாந்தர்களுக்கும் கண்ணன் கீதையைத்தான் உரைத்தாலும் சாதாரணமாக கண்ணனின் சகஜமான உரையாடலாகத்தான் திகழ்ந்தது. அர்ஜுனனின் அத்தியாயத்தில் மட்டும் ஏன் இப்படி வந்தது? கீதையை உங்களின் அற்புதமான தமிழில் சுவைத்தாலும்… ஒரு நாவலின் புனைவாக இதை ரசிக்க முடியவில்லை. இது நீங்கள் உத்தேசபூர்வமாக நிகழ்த்தியதுதான்… ஏன் என்றுதான் என்னால் உள்வாங்க முடியவில்லை.
அந்த அத்தியாயம் அர்ஜுனனின் கனவு என்று எடுத்துக்கொண்டாலும்… அந்த மொழிபெயர்ப்பு தோரணை நாவலுக்குள் ஒட்டாமல்தான் உள்ளது. அர்ஜுனன் நாவலின் இறுதியில்… நானே பீஷ்மராக, விதுரராக மற்ற எல்லோருமாக சென்றேன் என்று சொல்வான். அப்படி பாத்தால் நாவல் முழுவதுமே அர்ஜுனனின் கனவுதான்… தொடக்கத்தில் வரும் திரேதாயுகத்தின் வர்ணனை உட்பட. அந்த வகையில் முதலில் வரும் உபப்லாவ்யத்தின் நாடகத்தன்மையை ஓர் அளவுக்கு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், மற்ற அத்தியாயங்களில் உங்களின் தீவிரமும்… கச்சிதமான உரையாடல்களும், கவித்துவமும் நிகழ்கிறதே! முதலிலும், அர்ஜுனன்-கண்ணனின் உரையாடலிலும் மட்டும் ஏன் அந்த செயற்கைத்தனம்?
நிச்சயமாக இதில் என் வாசிப்பு குறைப்பாடு ஏதோ உள்ளதாகத்தான் தோன்றுகிறது. அதை போக்கத்தான் இதர வாசர்களின் கடிதத்தை வாசித்தேன். ஆனால், எனக்கு அங்கு விடைகள் கிடைக்காததால் தான் உங்களிடம் கேட்கிறேன். மன்னிக்கவும்.
மிக்க அன்புடன்,
ராஜு.
அன்புள்ள ராஜு
இமைக்கணம் நாவலுக்கு ஓர் அமைப்பு உத்தேசிக்கப்பட்டது. அது ஒரு தனிநூல். ‘எவராலோ’ எழுதப்பட்டது. நேரடி நிகழ்வு அல்ல. ஒரு நூலின் மொழிநடை, அமைப்பு அதற்கு முகப்பாக அளிக்கப்பட்டது. ஆகவே ஓர் ‘எழுதப்பட்ட’ நூலுக்கான வடிவை, மொழியை அது அங்கே கொண்டது.
அந்நூலில் ஓர் இமைக்கணத்தில் கீதை நிகழ்கிறது. கீதை ஒரு ‘ஊழ்கக் கணத்தில்’ அர்ஜுனனுக்கு கிருஷ்ணனால் சொல்லப்படுவதாக இமைக்கணம் காட்டுகிறது.
இமைக்கணம் பேசுவது கீதையை மட்டும்தான். அதாவது கீதாமுகூர்த்தம் என்னும் ஒரு கணத்தை. கீதையை பார்த்தன் அறிந்துகொண்ட ஒற்றைக்கணத்தை. அதை விரித்துவிரித்துப் பார்க்கமுடியுமா என்னும் முயற்சி அந்நாவலாக ஆகியிருக்கிறது
கீதை பல பதில்களைச் சொல்கிறது. ஆகவேதான் வெவ்வேறு யோகங்களாக உள்ளது. அந்த பதில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இயல்புடையவர்களுக்கு சொல்லப்படுவன. வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் பொருள்கொள்வன. ஆனால் சாராம்சம் வேதாந்தமையமாகிய அத்வைதமே.
இப்படி சொல்கிறேன். ஒரு கோடு. அதற்கு இப்பக்கம் இருப்பது கீதை. இன்றிருக்கும் நூல்வடிவ கீதை. அதில் எந்தச் சொல்மாற்றமும் நிகழக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே சொல் சொல்லாக, மொழியாக்கங்களை ஒப்பிட்டு, அதை அப்படியே கொடுத்தேன். அது புனைவல்ல, உண்மையான கீதை.
கோட்டுக்கு அந்தப்பக்கம் இருப்பது கீதையின் விரிவாக்கம். கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் மகாபாரதத்திலுள்ள ஒவ்வொரு கதைமாந்தருக்குச் சொல்லப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? கர்மயோகத்தை யார் வழியாகப் புரிந்துகொள்ள முடியும்? ஞானயோகத்தை எவரினூடாகப் புரிந்துகொள்ள முடியும்? அவ்வழியில் கற்பனையை ஓட்டி சென்ற வழிகள் அவை.
அந்தக் கற்பனைப் பகுதிகளிலெல்லாம் உள்ளே கீதையும் வருகிறது. கீதையின் நேரடி வரிகள் அவற்றிலும் உள்ளன. ஆனால் அந்த வரிகளை நோக்கி வரும் பிறவரிகள் புனைவாக உருவாக்கப்பட்டுள்ளன. அங்கே கற்பனை இருப்பதனால் வெண்முரசுக்குரிய படைப்புமொழி செயல்படுகிறது. அந்தமொழியில் கவித்துவமான பல வரிகள் வழியாக கீதை வெவ்வேறு கோணங்களில் எட்டி எட்டி தொடப்படுகிறது. இறுதியாக கீதையே முழுமையாக முன்வைக்கப்பட்டு நாவல் முடிகிறது
எப்படியும் வெண்முரசில் கீதை வந்தாகவேண்டும். கீதை ஒரு மூலநூல். அதை மாற்றுவது பிழை. புராணங்கள் மாற்றத்திற்குரியவை. ஏனென்றால் அவை அடிப்படையில் உதாரணகதைகள். மொத்த மகாபாரதமுமே மூவாயிரம் வருடங்களாக தொடர் மறுபுனைவுகளுக்கு ஆளாகியிருக்கிறது. ஆனால் உபநிடதங்களோ கீதையோ அப்படி மாற்றத்திற்குள்ளாகவில்லை. மாற்றப்படலாகாது. வெண்முரசில் கீதை மட்டுமே அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் முன்வைக்கப்படுகிறது.
உண்மையில் இமைக்கணத்தை கீதை நேரடியாக வரும் பகுதியை தவிர்த்துவிட்டு, ‘இவ்வாறு கீதை வந்தடையப்பட்டது’ என்ற ஒற்றைவரியாக அறிந்துகொண்டு வெண்முரசு வாசகன் கடந்துசெல்லலாம். அவனுக்கு உகந்த கீதை வடிவம் ஒன்றை தனியாகவும் வாசிக்கலாம். அது எவருடைய மொழியாக்கமாகவேண்டுமென்றாலும் இருக்கலாம்
அதாவது கீதைக்கான பாதைகள் மட்டும்தான் இமைக்கணம். சென்று சேருமிடத்தில் கீதை அங்கே இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அங்கே கீதையின் முழுவடிவம் சொல்லுக்குச் சொல் மொழியாக்கமாக அமைந்துள்ளது. அது இமைக்கணத்தின் சிற்ப அமைப்புக்கு முக்கியமானது, அவ்வளவுதான்
இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். ஒரு கற்சிற்பம் நம் கண்முன் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழையது. ‘இந்தச் சிற்பத்தை எப்படிச் செதுக்கியிருப்பார்கள், எங்கே கல் எடுத்திருப்பார்கள், எவரெவர் வடிவமைத்திருப்பார்கள்?” என்று கற்பனைசெய்து பின்னால் சென்று அந்த சிற்பம் ஓரு கருத்தாக, கற்பனையாக இருந்ததில் இருந்து தொடங்கி முழுமையடைந்தது வரை உருவகித்துப்பார்ப்பதுபோல. இங்கிருக்கும் சிற்பம் உண்மையானது, மாறாதது. கற்பனை அதிலிருந்து தொடங்கி தன் பாதையை தானே விரித்துக்கொள்கிறது
இன்னொரு உதாரணம், ஓர் ஆற்றை நாம் காண்கிறோம். ஆற்றிலிருந்து தொடங்கி அதற்கு நீர்வந்துசேரும் சிற்றாறுகள் ஓடைகள் ஆகிய அனைத்தையும் கண்டறிய முற்படுகிறோம். அதன் ஊற்றுமுகத்தை அடையாளப்படுத்துகிறோம். இதுவும் பின்னால் செல்லும் பாதை. விரிந்துகொண்டே செல்லும் பாதை
கீதை கர்ணனுக்கு, பீஷ்மருக்கு, வியாசருக்கு , சுகருக்கு எப்படி பொருள்படுகிறது என்பது இமைக்கணம் என்னும் கற்பனைக்கு அடிப்படையான கேள்வி. யமனுக்கு,இந்திரனுக்கு எப்படி பொருள்படுகிறது. சாவில், வாழ்வில் எப்படி பொருள்படுகிறது. வெறும்வீரனுக்கு ,கர்மயோகிக்கு, யோகிக்கு, ஞானிக்கு, பரமஹம்சருக்கு எப்படி பொருள்படுகிறது என இமைக்கணம் விரித்துசெல்கிறது. ஆனால் கீதை அதுதான், அதே சொற்கள்தான். அதை மாற்றமுடியாதல்லவா?
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

