Jeyamohan's Blog, page 1053
February 5, 2021
தமிழக வரலாறும் பண்பாடும்- ஒரு முழுச்சித்திரம்
தமிழ்நாட்டு அரசு எழுபதுகளில் முதுகலை பட்டப்படிப்பு வரை அனைத்து துறைகளையும் தமிழிலேயே கற்பிப்பது என்ற பெருமுயற்சி ஒன்றை எடுத்தது. அப்போது எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதல்வர்.நெடுஞ்செழியன் கல்வியமைச்சர். அதற்காக அத்தனை பாடநூல்களும் தமிழில் எழுதப்பட்டன. குறிப்பிடத்தக்க நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஏறத்தாழ இரண்டாயிரம்நூல்கள் அவ்வண்ணம் புதிதாக எழுதப்பட்டும், தமிழாக்கம் செய்யப்பட்டும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டன.
ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. தமிழில் பட்டப்படிப்பு படிக்க பெரும்பாலானவர்கள் முன்வரவில்லை, ஏனென்றால் ஆங்கிலம் வேலைவாய்ப்புச் சந்தையில் இன்றியமையாததாக இருந்தது. ஆனால் அதன்பொருட்டு உருவாக்கப்பட்ட நூல்கள் தமிழுக்கு மிகப்பெரிய அறிவுக்கொடை. நான் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி நாகர்கோயிலில் ஓர் அறைமுழுக்க அடுக்கடுக்காக அந்நூல்கள் இருப்பதை கண்டிருக்கிறேன்.
அந்நூல்வரிசையில் எந்த நூல் பழைய புத்தகச் சந்தையில் கிடைத்தாலும் வாங்கிவிடுவேன். ஐரோப்பிய வரலாறு, அமெரிக்கவரலாறு, ஆங்கில இலக்கியவரலாறு, நெப்போலியனின் வரலாறு, இந்திய அரசியல் சட்டம், இந்திய வணிகவரிச்சட்டம் என அவ்வரிசையில் பல குறிப்பிடத்தக்க நூல்கள் என்னிடம் உள்ளன.
பட்டப்படிப்புக்கு அந்நூல்கள் இன்று உதவாமல் போகலாம். ஆனால் தமிழிலேயே வரலாறு, இலக்கியம், பொருளியல், சட்டம் போன்றவற்றை படிக்க விரும்புபவர்களுக்கு அவை மிகப்பெரும் கொடை. ஒரு பொதுஅறிவுஜீவி, ஓர் எழுத்தாளன் தனக்கான அடிப்படையான அறிதலை அடைவதற்கு மிக உதவியானவை அந்நூல்கள்.ஆனால் அந்த மாபெரும் அறிவுப்பணி கவனிக்கப்படாமல், எவருக்கும் பெரிதும் பயன்படாமல் போயிற்று என்பதும், தமிழுக்கு எம்.ஜி.ஆர்.அரசு செய்த அந்தப் பங்களிப்பைப் பற்றிக்கூட எவரும் சொல்வதில்லை என்பதும் வருந்தத்தக்கது
அந்த வரிசை நூல்கள் மிக அரிதாகவே மறுபதிப்பு வந்தன. அவற்றில் ஒன்று கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய’தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’. உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக இந்நூல் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஆனால் இந்நூலில் இந்த நூல் எதன்பொருட்டு எழுதப்பட்டது, முதல்பதிப்பு எப்போது வெளிவந்தது என்ற எந்தச்செய்தியும் இல்லை. இதிலுள்ள கே.கே.பிள்ளையின் முன்னுரை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முன்னுரை ஆகியவற்றில்கூட அவை எழுதப்பட்ட ஆண்டோ நாளோ குறிப்பிடப்படவில்லை. புதிய புத்தகம்போலவே இது வெளியிடப்பட்டுள்ளது
இது தமிழில் இன்று நிலவும் மிகப்பெரிய மோசடி. பழையநூல்களை அவை மறுபதிப்பா மறுஅச்சா என்று சொல்லாமல், அவற்றின் பதிப்புவரலாறே இல்லாமல் புதிய நூல்களாக வெளியிடுவது. இது நூலக ஆணை பெறுவதன்பொருட்டு செய்யப்படுகிறது என்கிறார்கள். ஆனால் ஒரு நூல் வெளிவந்த ஆண்டு அந்நூலை புரிந்துகொள்ள மிக முக்கியமானது. இந்நூலில் கே.கே.பிள்ளை அவர்களின் முன்னுரையில் தமிழ்நாட்டு பாடநூல்நிறுவன வெளியீடாக இது வருவதற்கு நன்றி தெரிவித்துள்ள ஒரு வரி உள்ளது. அது இல்லையேல் வேறெந்த சான்றும் இல்லை. கே.கே.பிள்ளை ஏதோ சமகால அறிஞர், இந்நூல் இப்போதுதான் வெளிவருகிறது என்று வாசகர் நினைக்கத்தோன்றும்.
இதெல்லாம் வாசகர்களின் பிரச்சினைகள். இங்கே நூல்களை அச்சிட்டு வெளியிடுபவர்களுக்கு அவை பல்வேறு நூலகங்களில் தள்ளிவிடுவதற்குரிய சரக்குகள் மட்டுமே. அதுவே இந்தப்போக்குக்கு வழிகோலுகிறது
கே.கே.பிள்ளை*
தமிழக வரலாற்றைப் பற்றிய ஓர் ஒட்டுமொத்த சித்திரத்தை அடைய விரும்புபவர்களுக்கு மிக ஆதாரமான நூல் கே.கே.பிள்ளையின் இந்த ஆக்கம். அவருடைய புகழ்பெற்ற நூலான தென்னிந்திய வரலாற்றுடன் இணைந்துகொள்ளும் ஒரு படைப்பு. தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள் என்னென்ன என்று ஆராய்ந்தபடி இந்நூல் தொடங்குகிறது. தமிழகத்தின் இயற்கை அமைப்புக்கள் விளக்கப்பட்டபின் வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகத்தைப் பற்றி தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் ஒரு விரிவான சித்திரத்தை அளிக்கிறார்
சிந்துவெளிப் பண்பாட்டுடன் தமிழ்ப்பண்பாட்டுக்கு இருப்பதாக சில ஆய்வாளர்களால் சொல்லப்படும் ஊகங்களை எல்லாம் கே.கே.பிள்ளை வரலாற்றுத்தரவுகளால் நிறுவப்படாத கருத்துக்கள் என்றே கருதுகிறார். ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளை ஊகிக்கும் முயற்சிகளாக மட்டுமே தற்போதுள்ள நிலையில் கொள்ள முடியும் என்று மதிப்பிடுகிறார்.
பொதுவாக கே.கே.பிள்ளை மிகக்கறாரான ஒரு வரலாற்றாய்வாளர், வரலாற்றெழுத்தாளர். தொல்லியல்தரவுகள், இலக்கியச்சான்றுகள், பிற ஆவணச்சான்றுகளின் அடிப்படையில் முறைமையை மீறாமல் வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முனைபவர். அதனாலேயே முதல்தலைமுறை வரலாற்றாசிரியர்களுக்குப் பின் சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட தமிழக வரலாற்றாய்வாளராக அவர்தான் திகழ்ந்தார்.
இந்நூலை வாசிக்கையில் கே.கே.பிள்ளைக்கு தமிழரசியல், சைவமரபு ஆகியவற்றிலுள்ள சார்பு தெரிகிறது. ஆனால் அவர் ஒருபோதும் வெற்றுப்பெருமிதங்களை கண்டடையவோ நிறுவவோ முயல்வதில்லை. எங்குமே தன்வயமான பார்வை இல்லை. சான்றுகள் திட்டவட்டமாக இல்லாத வெறும் ஊகங்களை பொருட்படுத்துவதில்லை. ஒரு வரலாற்றாய்வாளராக அன்றி வேறெவ்வகையிலும் அவர் தன்னை முன்வைக்கவில்லை
அதனாலேயே கே.கே.பிள்ளை போன்றவர்கள் அரசியலாளர்களால் கவனிக்கப்படாமலானார்கள். ஆய்வாளர்களுக்கு வெளியே அவர் இன்று பேசப்படுவதுமில்லை.ஆனால் வரலாற்றாய்வே பெருமிதக்கதைகளை அவிழ்த்துவிடுவது என்று ஆகியிருக்கும் இன்றைய சூழலில், மதிக்கத்தக்க வரலாற்றாய்வாளர்கள் மிகமிக அருகிவிட்டிருக்கும் நிலையில், கே.கே.பிள்ளை போன்ற வரலாற்றாசிரியர்களின் நூல்கள் பொதுவாசகனுக்கு, இலக்கியவாதிக்கு மிகமிக முக்கியமானவை. அவரையே அவன் பொருட்படுத்தி வாசிக்கவேண்டும்.
இந்நூலில் வரலாற்றோட்டத்தை சுருக்கமான, கூர்மையான சொற்கள் வழியாக கே.கே.பிள்ளை வரைந்து காட்டுகிறார். வரலாற்றுப்பெரும்பரப்பில் இருந்து எதைச் சொல்லவேண்டும், எதை சொல்லத்தேவையில்லை என முடிவெடுப்பதில்தான் ஒரு வரலாற்றெழுத்தாளரின் திறமையே உள்ளது. அதில் தமிழ் வரலாற்றெழுத்தாளர்களில் கே.கே.பிள்ளையே முதன்மையானவர் என்பது என் எண்ணம்.வரலாற்றுச் செய்திகளுக்காக மட்டுமல்ல, நூற்சுவைக்காகவே நான் வாசிக்கும் நூல்கள் அவருடையவை.
“பல்லவ மன்னர்கள் உயர்ந்து நிமிர்ந்த அழகிய தோற்றமுடையவர்களாக இருந்திருக்கவேண்டும் என்று கருதுவதற்குச் சான்றுகள் உள்ளன. மாமல்லபுரத்து வராகக்குகையில் செதுக்கப்பட்டுள்ள சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன் ஆகிய அரசர்களின் தோற்றம் எடுப்பாகவும் அரசகளையுடையதாகவும் மிடுக்காகவும் காணப்படுகிறது….” என்பது போன்ற சிறு செய்திகளையும், கூடவே அரசர்களின் புகழ்பெற்ற போர்வெற்றிகளையும் அப்போரின் மெய்யான விளைவுகளையும் ஒரேவிசையில் சொல்லிச் செல்கிறார் கே.கே.பிள்ளை.அது ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது
இந்நூலில் உள்ள சிறப்பான கூறு என்பது அரசர்களை மட்டுமல்ல பெரும்பாலான போர்களில் அவற்றை முன்னின்று நடத்திய படைத்தலைவர்களின் பெயர்களையும் விரிவாகச் சொல்லிச் செல்கிறார் என்பது. மன்னர்கள் அளித்த நிவந்தங்கள், ஊர்க்கொடைகள் ஆகியவற்றிலிருந்து அந்த படைத்தலைவர்களின் செய்திகளை எடுத்து மையவரலாற்றுடன் பிணைக்கிறார்.
உதாரணமாக, இரண்டாம் நந்திவர்மனின் படைத்தலைவனாகிய உதயசந்திரன் என்பவனின் படைத்திறனை குறிப்பிடுகிறார். அவனுக்கு பாலாற்றங்கரையில் இருந்த ஒரு கிராமத்தின் உரிமையை அளிக்கிறான் நந்திவர்மன். அதன் பெயர் குமாரமங்கல வெள்ளாட்டூர் என்றிருந்ததை உதயசந்திர மங்கலம் என்று பெயரிட்டு அதை நூற்றெட்டு பிராமணர்களுக்கு கொடையளித்தான். உதயேந்திரம் செப்பேடுகளில் இருந்து உதயசந்திரனை வரலாற்று வரைவுக்குள் கொண்டுவருகிறார்.
மன்னர்களின் வரலாற்றை சொல்லிச்செல்லும் கே.கே.பிள்ளை இணையாகவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றையும் சொல்கிறார். தமிழகத்தில் மரத்தாலான ஆலயங்கள் செங்கற்றளிகளாகி கற்றளிகளாக ஆன வரலாறு, தமிழகத்தில் திருமணத்தில் தாலி கட்டுவது பத்தாம்நூற்றாண்டுக்குப்பின்னரே தொடங்கியது என்னும் செய்தி -என இந்நூல் ஒரு முழுமையான பண்பாட்டுப் பரிணாமச்சித்திரத்தையே அளிக்கிறது
தீவிரமான வரலாற்றுச் செய்தித்துளிகளை இயல்பாகக் கோத்து சொல்லிச்செல்கிறார் கே.கே.பிள்ளை. சோழர்காலத்தில் வேதம் ஓதுதல் வீணையிசையுடன் சேர்த்து செய்யப்பட்டது, இவ்வழக்கம் இன்றில்லை என்ற செய்தி ஒரு மின் என மூளையை தொடக்கூடியது.நூல்களை மனப்பாடம் செய்பவர்களுக்கு சோழர் காலத்தில் நிலக்கொடை வழங்கப்பட்டது. நாரணன் பட்டாதித்தன் என்ற பிராமணன் [சவர்ணன்] ஸ்ரீராஜராஜவிஜயம் என்ற நூலை படித்து வந்தமைக்காக அவனுக்கு முதலாம் ராஜேந்திரன் காலத்தில் நிலம் வழங்கப்பட்டதை கல்வெட்டு சொல்கிறது.
ராமேஸ்வரம் ஆட்சியாளரான கிழவன் சேதுபதி தன் உறவினர்களை மதமாற்றிய பிரிட்டோ என்ற பாதிரியாரை கொலைசெய்கிறார். ஆனால் கிறிஸ்தவர்கள் பிரிட்டோ பாதிரியார் ஏசுவை போல உயிர்த்தெழுந்தார், அற்புதங்கள் செய்தார் என்று பிரச்சாரம் செய்து மன்னருக்கு அஞ்சி திரும்ப இந்துவாக மதம் மாறியவர்களை மீண்டும் கிறிஸ்தவர்களாக ஆக்குகிறார்கள்.
அரிய செய்திகள் அவற்றின் புதிர்த்தன்மையுடனேயே பதிவாகியிருக்கின்றன. வளஞ்சியர் என்னும் வணிகக்குழுவைப் பற்றி ராஜேந்திரசோழனின் காட்டூர் கல்வெட்டு விரிவாகச் சொல்கிறது. ஆனால் அவர்கள் யார்? இவர்கள் நான்கு திசைகளின் ஆயிரம் வட்டங்கள், பதினெட்டு நகரங்கள், முப்பத்திரண்டு வேளர் புரங்கள், அறுபத்திநான்கு கடிகைத்தானங்களில் இருந்து வந்தவர்கள். இவர்கள் குழுவில் செட்டியார்கள், கவரர்கள், கந்தழிகள், பத்திரர்கள், காவுண்ட சுவாமிகள் [கவுண்டர்கள்?] என பலர் இருந்திருக்கின்றனர். வரலாற்றில் என்னவானார்கள்? இவர்கள் இன்று என்னவாக இருக்கிறார்கள்?
தொல்பழங்காலத்தில் தொடங்கி 1970களில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம் வரை வருகிறது கே.கே.பிள்ளையின் வரலாற்றுச் சித்திரம். தமிழில் ஒட்டுமொத்தமாக அனைத்துச்செய்திகளையும் முற்றிலும் நம்கபமாகவும் ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையுடனும் தொகுத்தளிக்கும் இந்நூல் இது எழுதப்பட்ட காலத்திற்கு பிறகு வந்த ஆராய்ச்சிகள், கண்டடைதல்கள் ஆகியவற்றை பற்றிய நல்லொதொரு முன்னுரையுடன் முறையான பதிப்பாக வெளிவருமென்றால் நல்லது.
அன்னியர்கள் அளித்த வரலாறு இரண்டுவகை வரலாறுகள்ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?
தமிழக வரலாறு தொடங்குமிடம் எது?
தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?
திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு
மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)
தமிழகத்தின் கற்காலங்கள்ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு
வரலாறும் கதையும்
விதிசமைப்பவர் பற்றி மீண்டும்
அன்புள்ள ஐயா,
நான் வேதியியல் மாணவர்; வயது 21. ஐன்ஸ்டீன் அல்லது ஆர்.பி. உட்வார்ட் போன்ற அறிவியலுடன் தொடர்புடைய Genius-களை நான் காணும்போது, அவற்றின் உயரங்களை எட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது, ஆனால் இதுவரை நான் ஒருபோதும் Prodigy போன்ற உள்ளார்ந்த குணங்களைக் கொண்டிருக்கவில்லை.
விதி தயாரிப்பாளர்கள் தொடர்பான உங்கள் கடிதங்களை நான் படித்தேன். ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமான உண்மை, ஆனால் என்னால் அதை நிராகரிக்கவும் முடியாது. இந்த உண்மையை நான் இறுதியில் ஏற்றுக்கொள்வேன் என்று கருதுகிறேன்
அ. ஒருவர் விதி தயாரிப்பாளர் என்பதை ஒருவர் எப்படி அறிவார்?
ஆ. அவர் ஒரு விதி சமைப்பவர் அல்ல என்ற முடிவுக்கு ஒருவர் வந்தால், அவர் தனது வாழ்க்கையை, குறிப்பாக அறிவியல் போன்ற துறைகளில் என்ன செய்ய வேண்டும்?
இ. வாழ்க்கையின் மையப்பகுதியைப் பெற முடியாவிட்டால், வாழ்க்கையின் அர்த்தத்தை அவர் எவ்வாறு உணர முடியும்?
(விஞ்ஞானம் நிறைய படைப்பாற்றல் மற்றும் ஆர்வத்தை உள்ளடக்கியது என்ற முன்னறிவிப்புடன் இவை அனைத்தையும் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்)
நான் ஒரு விதிசமைப்பவனாக இருக்கப் போவதில்லை என்றால், என் இருப்பு முழுவதிலும் எந்த அர்த்தமும் இல்லை என்ற உணர்வு எனக்கு இருக்கிறது.
கோதேவின் மிகவும் பிரபலமான மேற்கோள் ஒன்று உள்ளது:
“Whatever you can do, or dream you can, begin it. Boldness has genius, power and magic in it.”
இது அனைவருக்கும் பொருத்தமானதா?
இது உங்கள் கருத்துக்கு எதிரான ஒன்றைக் குறித்து, மேலும் அவர்கள் உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை அடைய முடியும் என்று கூறுகிறதா?
பெரிய செயல் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரை எல்லோருக்குமான அறிவுரையா?
ஒரு விதி தயாரிப்பாளராக மாற வேண்டும் என்று கனவு காண்பது சரியானதா அல்லது விதி சமைப்பது மக்கள் மீது ஊடகங்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா?
இறுதியாக, ஒரு விஞ்ஞானிக்கும் எழுத்தாளர் அல்லது ஓவியர் போன்ற ஒரு படைப்பாற்றல் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமைகள் (மற்றும் வேறுபாடுகள்) என்ன?
ராகவன் நரசிம்மன்
அன்புள்ள ராகவன் நரசிம்மன்,
இந்தவகையான கடிதங்கள் பலரிடமிருந்தும் வருகின்றன. பொதுவாக இளைஞர்களிடமிருந்து. இதற்கு திரும்பத்திரும்ப விளக்கம் அளிக்கிறேன்
விதிசமைப்பவர்கள் அல்லது தேர்வுசெய்யப்பட்ட சிலர் என்று நான் சொல்லும்போது அசாதாரண மனிதர்களை, மேதைகளை, தலைவர்களை பற்றி மட்டும் சொல்லவில்லை. அவ்வண்ணம் அனைவரும் ஆவது இயல்வதுமல்ல.அவ்வண்ணம் ஒருவர் ஆவதில் அவருடைய பிறவி இயல்பு, பெருமுயற்சி ஆகியவற்றுக்கு மேலாக ஊழின் இடமும் உள்ளது
நான் சொல்வது சாமானியர்- அல்லாதவர் என்னும் பிரிவினை. எளிய அன்றாடவாழ்க்கையின் இன்பங்களும் அதன் வெற்றிகளும் மட்டுமே போதும், அதுவே உயர்வு என எண்ணி வாழ்பவர்கள் சாமானியர்கள். அதற்கப்பால் அறிவியக்கத்தில், மானுடசேவையில் ஏதேனும் செய்யவேண்டுமென நினைப்பவர் சாமானியரல்லாதவர். அவர்கள் அனைவருமே விதிசமைப்பவர்கள்தான்.
அந்த சாமானியரல்லாதவர்களில் மிக எளியநிலையில் பணியாற்றுபவர் உண்டு. மாமனிதர்கள் உண்டு. வேறுபாடு பெரிதுதான். ஆனால் ஒட்டுமொத்தமான மானுடப்பேரியக்கத்தில் அவர்கள் இருசாராருமே துளிகள்தான். அவர்கள் அனைவரும் சேர்ந்தே அதை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐன்ஸ்டீனும் ஓர் எளிய ஆராய்ச்சியாளனும் விதிசமைப்பவனே. தல்ஸ்தோயும் உள்ளூரிலிருந்து இலக்கியத்தை ஆர்வத்துடன் படித்து சிந்தனைசெய்து எழுதும் இளைஞனும் விதிசமைப்பவனே
நான் அக்கட்டுரைகளை எழுதியது அசாதாரணமானவர்கள் மட்டுமே இங்கே வாழவேண்டும், மாமனிதர்களே மானுடர்களில் பொருட்படுத்த்தக்கவர்கள் என்று சொல்வதற்காக அல்ல. திறமையும் அறிவும் கொண்டவர்கள் தங்களுக்கு இருப்பது தகுதி மட்டும் அல்ல பொறுப்பும்கூட என உணரவேண்டும் என்பதற்காக. அந்தப்பொறுப்பை தயக்கம், தாழ்வுணர்ச்சி, வெறுமைச்சிந்தனைகளால் அவர்கள் வீணடிக்கலாகாது என்பதற்காக. வீண்கேளிக்கைகள் வெற்று ஆணவச்செயல்பாடுகளல திசைதிரும்பலாகாது என்பதற்காக.
சாமானியர்களில் ஒருவராக இல்லாமலிருக்கவேண்டும் என்னும் உங்கள் விழைவே உங்களை அவர்களில் ஒருவராக அல்லாமலாக்கிவிட்டது. எந்த சாமானியனும் தன்னை சாமானியன் அல்லாதவனாக எண்ணுவதில்லை. அப்படி ஆக முயல்வதுமில்லை. அந்த விழைவு உங்களுக்கு இருந்தால்போதும். சோர்விலா தொடர்முயற்சி உங்களை விதிசமைப்பவராக ஆக்கும். உங்கள் தளம் என்ன அதில் உங்கள் தனித்திறன் என்ன என்று கண்டுபிடியுங்கள்
விதிசமைப்பவர்கள் என்னும் கட்டுரை அறிவாளர்,திறனாளர் இருவருக்கும் அவர்களுக்கு தேவையான தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளும்பொருட்டு அறிவுறுத்துகிறது. சாமானியர் அவர்களைச் சூழ்ந்திருக்கிறார்கள். எங்களைப்போல இரு என அவர்கள் சொல்லிக்கொண்டெ இருக்கிறார்கள். இல்லையேல் கேலிசெய்கிறார்கள், பழிக்கிறார்கள். நீயும் சாமானியனே என்றும், சாமானியனுக்கு அப்பால் எவருமில்லை எல்லாரும் சமமே என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொண்டு தன்னை நிறுவிக்கொள்ள சிந்தனையாளனுக்கும் செயல்வீரனுக்கும் அந்த தன்னுணர்வு இன்றியமையாதது
உண்மையில் இந்தியசூழலில் இதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆகவேதான் பத்தாண்டுகளாக இந்த தளத்தில் வெவ்வேறு சொற்களில் இதை சொல்கிறேன். இருந்தும் ஒவ்வொரு இளைஞரும் என்னைச் சந்திக்கையில் இதைக் கேட்கிறார்கள். ஏனென்றால் இங்கே பணிவு, தன்னடக்கம் ஆகியவை உயர்ந்த விழுமியங்களாகச் சொல்லப்படுகின்றன. தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வது ஒரு நற்பண்பாக கற்பிக்கப்படுகிறது.
நம் கல்விக்கூடங்கள், குடும்பங்கள் எல்லாமே அதைத்தான் சொல்லி நிலைநாட்டுகின்றன. அந்த மனநிலை நம் திறன்களை நம்மிடமிருந்தே மறைக்கின்றது. நம்மை சிறுசிமிழ்களில் அடைக்கிறது. பெரிய பணிகளை, பெரிய அறைகூவல்களை ஏற்கவிடாமல் செய்கிறது.பெரிய இலட்சியங்களும் கனவுகளும் உருவாகாமல் ஆக்குகிறது
தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளுதல், எங்கும் பணிவு போன்ற விழுமியங்கள் அமைப்புக்குள் ஒடுங்கிப் பணியாற்றவேண்டிய ஊழியர்களுக்குரியவை. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒவ்வொரு சாமானியனுக்கும் வலியுறுத்தப்பட்டவை. மரபான ஒழுக்கவியல் அவற்றை ஒருவகை சான்றோரியல்பாக ஆக்கி நமக்கு காட்டுகிறது. அது நம்மை தாழ்வுணர்ச்சியும் வெறுமையுணர்ச்சியும் கொண்டவர்களாக ஆக்குகிறது.
அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்கள் அந்த போலிப்பணிவிலிருந்தும் தன்னடக்கத்திலிருந்தும் வெளிவந்தே ஆகவேண்டும். தான் எவர் என்று ஒர் அறிவியக்கத்தவன் அறிந்திருக்கவேண்டும். தன் பணியின் இடமென்ன தன் தகுயென்ன என்னும் தெளிவும் அது அளிக்கும் நிமிர்வும் அவனிடம் இருக்கவேண்டும். இல்லையேல் அவனால் சூழ்ந்திருக்கும் சராசரித்தன்மையை, அவர்களின் அன்றாட அற்பத்தனத்தை எதிர்கொள்ள முடியாது. ஆகவேதான் தன்னை விதிசமைப்போன் என அறிவியக்கத்தவன் உணர்ந்திருக்கவேண்டும் என்று சொல்கிறேன்
ஆனால் அது கண்மண் தெரியாத தருக்கு அல்ல. பணியவேண்டிய இடத்தில் பணிவதற்கு நம்மை தூண்டுவதும் நாம் எவர் என்னும் தன்னுணர்வுதான். ஞானம், தியாகம், பேரன்பு ஆகியவற்றின் முன் பணிவதே பண்பு. அவற்றின்முன் மட்டுமே பணிவதுதான் பண்பு.
இந்த தன்னுணர்வும் நிமிர்வும்கூட மரபிலுள்ள சிந்தனைதான். ஞானம்தேடுபவனுக்குரியது நாமார்க்கும் குடியல்லோம் என்னும் நிமிர்வு. அரவிந்தர் அவருடைய எழுத்துக்களில் இந்த படைப்பூக்கம்கொண்ட, உலகைச் சுமக்கிற, மெய்யறிஞனைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். நான் கூறுவதும் அதையே.
ஜெ
சராசரிகள் தேர்வு செய்யப்பட்ட சிலர் தேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்நிலத்தை வாசிப்பது- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
இலக்கியத்தின் நிலக்காட்சிகளை காண பதிவை வாசித்தேன். அந்த கேள்வியில் இருந்து இன்று வெகுதொலைவில் நிற்பதாக உணர்கிறேன். அதற்கு பதில் வரும் என்பதை நினைக்கவேயில்லை. இன்று படிக்கும் முன்னால் கூட என் கேள்வியாக தான் இருக்கும் என தோன்றவேயில்லை.
நீங்கள் சொல்வது போல எனக்கும் அப்படிப்பட்ட கனவுகள் வந்ததுண்டு. பிரமாண்டமான கோயில்கள், பெரும் கடலைகள், அடர் காடு, பள்ளத்தாக்கு நதிகள் என பல உண்டு. உண்மையில் இவை எவற்றையுமே நான் நேரில் பார்த்தது இல்லை. ஒவ்வொருமுறையும் அந்த கனவுகளை கண்டு எழுகையிலும் வியப்பில் பிரம்மித்து விடுவேன். அத்தனை துல்லியமாக வேறெங்கும் பார்த்தது இல்லை.
அன்று அக்கேள்வியை கேட்கையில் வெண்முரசு வாசிக்க தொடங்கவில்லை. இன்று வெண்முரசில் இந்திர நீலத்தின் துவாரகையில் இருக்கிறேன். ஆரம்பத்தில் சொற்கள் காட்சிகள் ஆவதில் தடை இருந்தது. ஆனால் நீலத்தை தொட்டதும் இருந்த சிறிய தடைகளும் உடைந்துவிட்டன. முதல் முறையாக கரியவனின் யாதவர் குலச்செல்வத்தின் உலகளந்தவனின் பாதங்களில் ராதையாக சென்றமர்ந்து வாரியெடுத்து என் கண்ணனுக்கு முலையூட்டி மகிழ்ந்தேன். இன்று வாசிக்கையில் ஒவ்வொன்றும் கணவேன்றே காண்கிறேன். மேலும் இந்த கனவில் உச்சம் சென்று தொடவே, ஆழ்திருக்கவே விரும்புகிறேன்.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள ஜெ
இலக்கியத்தில் நிலக்காட்சிகளைக் காண்பது என்ற கட்டுரை எனக்கு மிக உதவியானது. அது என்னுடைய பல சந்தேகங்களைத் தீர்த்துவைத்தது. உண்மையில் வாசிக்கத் தொடங்கும்போது எனக்கு இந்தச் சந்தேகம் இருந்தது. கதையாசிரியர் ஒரு நிலத்தைச் சொல்கிறாரே, நாம் அதை வாசிக்கவில்லையே, என்ன செய்வது என்று யோசித்திருந்தேன். நானே கற்பனைசெய்து கொண்டால் அது நல்ல வாசிப்பு அல்ல என்று தோன்றியது.ஆனால் என்னால் கற்பனைசெய்யாமல் வாசிக்கமுடியாது. நிறைய சந்தர்ப்பங்களில் என் கற்பனை அளவுக்கு அந்த உண்மையான காட்சிகள் இல்லை என்றும் பட்டது
உங்கள் கட்டுரையில் இருந்து என் வாசிப்பே சிறந்த வாசிப்பு, இப்படித்தான் வாசிக்கமுடியும் என்று தெரிந்துகொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி
செல்வக்குமார் எம்
நடனம்
அட்டையை அனுப்பிய நண்பர் ‘பிங்க் நல்ல நிறம், குழந்தைகளுக்குப் பிடிக்கும்’ என்று எழுதியிருந்தார். ‘குழந்தைகளுக்குப் பிடித்தால் சரி’ என்று நான் மறுமொழி அனுப்பினேன்.
நிறம் சரிதான், மோடியின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகூட இதே நிறத்தில்தானே இருக்கிறது. இது அக்கால சினிமாநோட்டீஸ் நிறம். எச்சில் தொட்டு விரலில் ஒட்டிக்கொண்டால் மருதாணிபோல ஆகும்.
ஆனால் அந்த நடனம்தான் கொஞ்சம் கோக்குமாக்காக இருக்கிறது. தினத்தந்தியில் பழைய ‘கருத்துப்படங்கள் கணு’ பாணியில். இன்னும் ஸ்டைலாக இருந்திருக்கலாமோ? நான் ஒரு கிறிஸ்டோபர் நோலன் பட வில்லன் அளவுக்கு எதிர்பார்த்தேன்
இருந்தாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மறுதரப்பில் ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன், திருப்பூர் தீக்குச்சி,ராஜசங்கர், ஒத்திசைவு ராமசாமி, திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர், சுரேஷ் வெங்கடாத்திரி, ஸ்டேன்லி ராஜன் அணியினரிடம் இன்னும் தரமாக எதிர்பார்க்கிறேன்.ஒரு சாம்பிளை நானே கொடுத்திருக்கிறேன்.
சல்யகீதை
இத்தருணத்தில் சில கேள்விகளை நாம் எழுப்பிக் கொள்வது நல்லது.
1, கர்ணனுக்கு ஏன் இந்த பொன்னொளிர் மாற்று வாழ்வு காட்டப்பட வேண்டும்?
அவ்வாழ்வை அவன் ஏன் தேர்ந்தெடுக்காது ஒழிய வேண்டும்?அவனுக்கு அவர் அளிக்கும் அறிதல்கள் அவனை எவ்விதம் முழுமை நோக்கிச் செலுத்துகின்றன? சல்யகீதைFebruary 4, 2021
புனைவாளனின் கவிதை
Gene Talbottமரியாதைக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
மறைந்த மூத்த எழுத்தாளர் கோவை ஞானி அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த நினைவுகளை உங்கள் தளத்தில் படிக்க நேர்ந்தது. அதில் நீங்கள் ஆரம்ப காலங்களில் கவிதை எழுதியிருப்பதாக எழுதுயிருந்தீர்கள். எனக்கான கேள்வி இங்கு என்னவெனில் ஒரு கவிஞன் எந்த இடத்தில் தன்னைக் கண்டடைகிறான். தற்போது எழுதவருபவர்களிடம் ‘போல செய்தல்’ பாணி அதிகம் இருப்பதாக நினைக்கிறேன் மற்றும் இன்னொரு மூத்த கவிஞரின் வடிவம் புதிதாக கவிதை எழுதுபவர்களிடம் தொற்றிக்கொள்கிறது.
இந்தத் தன்மையை நீங்கள் கவிதை எழுதும்போது உணர்ந்ததுண்டா? தனக்கான வடிவத்தை கவிஞன் எத்தருணத்தில் உள்வாங்கி உருவாக்குகிறான்? மேலும் தன் பழைய வடிவத்தை அதே பாணியில் எழுதி எழுதிதான் உடைக்க முடியுமா?
இப்படிக்கு,
தமிழ்மணி,
அருப்புக்கோட்டை.
அன்புள்ள தமிழ்மணி,
எழுதவருபவர் எவராயினும் அவரிடம் இருவகை மொழிநடைகள் இருக்கும். ஒன்று, சூழலில் புழங்கும் பொதுநடை. இன்னொன்று, அவருடைய அணுக்கத்திற்குரிய முன்னோடிப் படைப்பாளியின் நடை. ஏனென்றால் அவை இரண்டுமே வெளியே திகழும் மொழிநடைகள்.
பொதுநடையில் எழுதுவதே 99 விழுக்காடு எழுத்தாளர்களின் வழக்கம். அவர்கள் பெரும்பாலும் ஆற்றலற்ற படைப்பாளிகள். ஓரிரு சராசரிப் படைப்புகளுக்கு அப்பால் எழமுடியாதவர்கள். இதழியல்நடை, வணிகஎழுத்தின் நடை, சிற்றிதழ் நடை என இத்தகைய பொதுநடைகள் பல உண்டு.
சூழலில் உள்ள ஆற்றல்மிக்க எழுத்தாளரின் மொழிநடையால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் மிகப்பெரிய ஓர் அலையால் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அந்தக் கோட்டைக்குள் சிறைவைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களே நீந்தி, உடைத்து மீண்டு எழுந்தால் பெரும்படைப்பாளிகள். ஏனென்றால் அந்த ஆற்றல்மிக்க நடையிலிருந்து அவர்கள் மேலெழுகிறார்கள். மேலும் தீவிரமான ஒன்றை அடைகிறார்கள்.
எவராயினும் தங்கள் அகத்தே ஓடும் மொழியை புறமொழியில் பதியவைக்கையிலேயே தங்களுக்கான நடையை அடைகிறார்கள். அகமொழியை அப்படியே எழுதமுடியாது. அதை ஒருவகை அச்சாக ஆக்கி அதை புறமொழியில் அழுத்தி தனது நடையை உருவாக்கவேண்டும். அது புறமொழிதான் ஆனால் அகமொழியின் வடிவை அடைந்திருக்கும். அதற்கு தொடர்ச்சியான பயிற்சி தேவை. முழுமுனைப்பான, சலிக்காத முயற்சி.
அத்தகைய முயற்சி அற்ற எழுத்தாளர்கள் உண்டு. அவர்களே மிகுதி. அவர்களின் நடை இரண்டு அம்சங்களுடன் இருக்கும். ஒன்று, அது ஒழுக்கு இல்லாததாகவும் கூர்மையும் அழுத்தமும் அற்றதாகவும் இருக்கும். ஒருவகையான கரடுதட்டிய பயிலாநடை அது.
இன்னொன்று, முகநூல்நடை அல்லது வணிக எழுத்தின் நடை. அது அங்கிருந்து பேச்சுத்தன்மை, கிண்டல்கேலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டிருப்பதனால் ஒழுக்கு கொண்டிருக்கும். ஆனால் அந்த ஒழுக்குக்கு எந்த இலக்கியமதிப்பும் இல்லை. அதைக்கொண்டு எந்த உணர்ச்சியையும் உருவாக்க முடியாது. எந்தச் சிந்தனையையும் முன்வைக்க முடியாது. ஆழத்தை அடையவே முடியாது
இவ்விரு நடைகளுமே ஆசிரியனுக்குரிய தனித்தன்மை அற்றவையாக இருக்கும். நல்ல நடை என்பது கைரேகை போல. ஒருவரை அடையாளம் காட்டுவது, பிறிதொன்றிலாதது.
ஆகவே இன்னொருவரின் பாதிப்பு குறித்து அஞ்சவேண்டியதில்லை. அதை வெங்களிற்றைப் பழக்குவதுபோல் வென்றெடுக்க முயல்க. அது உங்கள் நடையை நீங்கள் அடைவதற்கான வழி. அந்த அறைகூவல்தான் உங்கள் ஆற்றலை குவிக்கச்செய்கிறது, உங்களை உச்சகட்டவிசையுடன் நிகழ்த்துகிறது.
பெரும்பாலான புனைவெழுத்தாளர்கள் எழுதவரும்போது கவிதைகளை எழுதுகிறார்கள். தன் மொழிநடையின் கூரிய பகுதிகளை தீட்டிக்கொள்ளும் பயிற்சி அது. புனைவாக விரியாத அனுபவப்புள்ளிகளை பதிவுசெய்யும் நோக்கம் கொண்டவர்களும் உண்டு. பல எழுத்தாளர்களின் கவிதைகள் புனைவுத்துளிகள்மட்டுமே
அவர்கள் கவிதையை விட்டு நகர்வது இரண்டு காரணங்களால். முதலில் உள்ள சிக்கல் கவிதைக்கு தேவையான அகஇசைத்தன்மை, மொழியால் மட்டுமே தொடர்புறுத்தும்தன்மை, தர்க்கங்களற்ற பித்துநிலை ஆகியவை அவர்களுக்கு அமைவதில்லை என்பது. ஆகவே உரைநடைப்புனைவுக்குச் செல்கிறார்கள்.<
அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. கவிதைக்கு சுட்டுவெளி என்பது அக்கவிதை எழுதப்படும் கவிச்சூழலும் மொழிச்சூழலும்தான். கவிதையை ஒரு நாடகத்தின் ஒரு வசனம் மட்டுமே என்று கொள்வோம். அந்நாடகமே சுட்டுவெளி. அதை கவிதை முன்வைப்பதில்லை. அந்த நாடகத்தின் ஒட்டுமொத்தத்தை கொண்டுதான் கவிதைகள் பொருள்கொள்ளப் படுகின்றன.
எவர் எவரிடம் ஏன் எப்போது சொன்னது என்று கவிதையெனும் கூற்றுக்கு பின்புலம் அமைவது அவ்வாறே.
தவறாகக் கால் வைத்துவிட்டோமோ
என்று பதறி
ஒரு கட்டம் பின் வாங்குகிறேன் நான்.
‘சிப்பாய்க்கு பின்வாங்கல் அனுமதி கிடையாது”
என்று நகைக்கிறாள் ராணி.
என்ற போகன் சங்கரின் வரிகள் எப்படி கவிதையாகின்றன? இவற்றைச் சொல்வது யார்? இவ்வரிகளுக்கு பொருள் அளிக்கும் புலம், இந்த வசனத்தை பொருத்திக்கொள்ளும் நாடகம் கவிதைக்கு வெளியே நம் வாசிப்பில் இருக்கிறது. இங்கே ராணி என்பது எதை சிப்பாய் என்பது எதை கட்டம் என்பது எதை என்பதை அதுதான் தீர்மானிக்கிறது
அந்த புலத்தில் வைக்கையில் எளியவரிகள் கவிதையாகின்றன
நடக்க வராத குழந்தைக்கு
நீந்த வரும்
என்ற லக்ஷ்மி மணிவண்ணனின் வரி எளிமையான ஓர் உண்மை. ஆனால் இந்த பின்புலத்தில் நடத்தல் என்பது ஓரு தனிப்பொருள் கொள்கிறது. நீந்தல் என்பது பிறிதொரு பொருள் கொள்கிறது.
ஆனால் புனைவெழுத்தாளர்கள் பலர் அந்த பொதுவான ’நாடகப்புலத்தை’ ஏற்றுக்கொள்ளாதவர்கள். அவர்கள் தங்கள் கவித்துவத்தை நிகழ்த்த தங்களுக்குரிய புலத்தை புனைந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்கள் கவிதைகளை தாங்களே எழுதும் பெருநாடகத்தின் வசனங்களாக அமைத்துக்கொள்கிறார்கள். அவை சூழலின் கவிதையுலகில் திகழ்வதில்லை. கவிதைகளாக தனித்து நிற்பதில்லை. ஆனால் அவர்களின் புனைவுலகுக்குள் கவிதைகளுக்குரிய திறப்புகளுடன் நிலைகொள்கின்றன
காவியங்களின் அழகியல் அதுதான். மேலான கவித்துவத்திற்கான களத்தை கதையால் உருவாக்கி அளிப்பதே சிறந்த காவியம் என்று சொல்லலாம். கம்பனின் சொற்பெருவெளியில்தான் ஆயிரக்கணக்கான கவிதைகள் திகழ்கின்றன. சங்கப்பாடல்களின் கவித்துவம் சங்கப்பாடல் என்னும் புலத்தில் பொருளேற்றம் கொள்கிறது. கம்பனின் வரிகள் கம்பராமாயணத்தின் புலத்தில் நிலைகொள்கின்றன
உலகமெங்கும் கவிஞர்களில் பலர் நாவலாசிரியர்களாக உருமாறியது அவ்வண்ணம்தான். விக்டர் ஹ்யூகோ, வால்டர் ஸ்காட் முதல் போரிஸ் பாஸ்டர்நாக் முதல் ராபர்ட்டோ பொலோனா வரை. அவர்களின் கவித்துவம் முழுமையாக நிகழ அவர்களே மொழியால் புனைவுப்புலத்தையும் அமைக்கவேண்டியிருந்தது.
நான் எழுதவந்தபோது கவிதைகளே எழுதினேன். ஆனால் கவிதைகள் எனக்கு போதவில்லை. நான் காவியகர்த்தன் என உணர்ந்தேன். ஆகவே நாவலுக்கு, நவீன காவியங்களுக்கு நகர்ந்தேன். கவிதை கணத்தின் மின்னல். எனக்கு கடுவெளியின் விண்மீன்பெருக்கை உருவாக்கவேண்டியிருந்தது. அதற்குரிய வடிவை தேர்வுசெய்தேன்.
ஆனால் ஒருவர் மெய்யாகவே கவிதையை அறிந்தவர் என்றால் தமிழிலுள்ள எந்த கவிஞரை விடவும் ஆற்றல்மிக்க கவிதைவரிகள், கவித்துவக் கணங்களை என் புனைவுலகில் கண்டடையமுடியும்.நேரடிக் கவிதைகளையே காணமுடியும். தமிழ் நவீனக்கவிதையின் ஒட்டுமொத்தத்தை விடவும் பெரியது அவ்வுலகு. அளவிலும் வீச்சிலும் கம்பனுடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது
ஜெ
வால்டிமர் அட்டெர்டக் – செல்மா லாகர்லொஃப்
ஹெல்க்விஸ்டின் தலைசிறந்த ஓவியமான ‘வால்டிமர் அட்டெர்டக் விஸ்பியைக் கைப்பற்றி கப்பம் வசூலித்தல்’யை கலைக்கழகத்தில் புதிதாக காட்சிக்கு வைத்திருந்தனர். ஒரு அமைதியான காலைப் பொழுதில் நான் அங்கு சென்றேன், அப்போது அந்த ஓவியம் அங்கு வந்திருப்பது எனக்குத் தெரியாது. செறிவான வண்ணங்களுடன் பல சித்திரங்களை கொண்ட அந்த பெரிய ஓவியத்திரை பார்த்தவுடன் பிரம்மிப்பை ஏற்ப்படுத்தியது. நான் வேறு எந்த படத்தையும் பார்க்கவில்லை, நேராக அதை நோக்கிச் சென்று ஒரு இருக்கையை போட்டு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தேன். ஒரு அரை மணி நேரம் மத்திய காலகட்டத்தில் வாழ்ந்தேன்.
வெகுசீக்கிரமே விஸ்பி சந்தைப்பகுதியில் நிழந்த காட்சிக்குள் சென்றுவிட்டேன். அரசன் வால்டிமர் அட்டெர்டக் கட்டளையிட்ட தங்க பானத்தால் நிரம்பியுள்ள மூன்று பீர் கொப்பரைகளையும் அதைச் சுற்றி கூடியுள்ள மக்களையும் பார்த்தேன். ஒரு செல்வச் செழிப்புள்ள வணிகன் தனது தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் குனிந்து ஒரு வீரனால் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்தேன்; அந்நகர இளைஞன் ஒருவன் அரசனைப் பார்த்து தனது கையை முறுக்குவதை பார்த்தேன்; கூர்முகம் கொண்ட துறவி தனது அரசனை உன்னிப்பாக கவனிக்கிறான்; கந்தலான ஆடையில் இருந்த பிச்சைக்காரன் தனது செம்புக்காசுகளைக் கொடுக்கிறான்; ஒரு கொப்பரைக்கு அருகில் ஒரு பெண் விழுந்து கிடக்கிறாள்; அரசன் அரியனையில் அமர்ந்துள்ளான்; படை வீரர்கள் குறுகலான வீதி வழியாக கூட்டமாக வருகிறார்கள்; உயர்ந்த மாடங்கள், சிதறிக் காணப்படும் திமிரான காவலார்கள் மற்றும் பிடிவாதமான மக்கள் அனைத்தையும் பார்த்தேன்.
ஆனால், திடீரென நான் ஒன்றை கவனித்தேன், இந்த ஓவியத்தின் மைய சித்திரம் அரசன் அல்ல, அந்நகர வாசிகள் யாரும் அல்ல, இரும்பு உடை அணிந்துள்ள, அரசனின் கேடய வீரர்களில் ஒருவன், இரும்பு தலைக்கவசத்தால் முகத்தை மூடியிருப்பவன்.
அந்த உருவத்திற்குள் கலைஞன் ஒரு வினோதமான ஆற்றலை புகுத்தியிருக்கிறான். அவனது உடலில் ஒரு முடியைக் கூட பார்க்க முடியாது; அவன் இரும்பால் உலோகத்தால் ஆனவன், முழுவதுமே. அங்கு சுற்றிலும் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கும் எல்லாவற்றிற்கும் சரியான தலைவன் ’தான்’ என்ற தோற்றத்தை அளிக்கிறான்.
”நான் வன்முறை; நான் கொடுங்கொள்ளை, விஸ்பியில் கப்பம் வசூலிப்பவன் நான். நான் ஒரு மனிதன் அல்ல; நான் வெறும் இரும்பு, உலோகம். நான் மகிழ்வது துயரிலும் தீமையிலும். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை சித்திரவதை செய்யட்டும். இன்று, விஸ்பியின் எஜமானன் நான்” என்று அவன் கூறுகிறான்.
“தெரிகிறதா, எஜமானன் நான் என்பதை உன்னால் பார்க்க முடிகிறதா?” என தன்னை காண்பவரிடம் சொல்கிறான் “உன் கண்களுக்கு எட்டும் தொலைவு வரை மக்கள் ஒருவரையொருவர் சித்திரவதை செய்துகொண்டிருக்கின்றனர், வேறெதுவுமே இங்கு இல்லை. அவர்கள் வெறுக்கிறார்கள் பயப்படுகிறார்கள், ஆனால் அடிபணிகிறார்கள். மேலும் வெற்றியடைந்தவர்களின் ஆசையோ பயங்கரமாக அதிகரிக்கிறது, இன்னமும் தங்கம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். டென்மார்கின் அரசராக இருந்தால் என்ன அவனின் படைவீரனாக இருந்தால் என்ன, இன்று ஒரு நாள் அவர்கள் எல்லோரும் என் சேவகர்கள் அல்லவா? நாளை, அவர்கள் ஆலயத்திற்கு செல்லலாம், அல்லது அவர்களின் விடுதியில் அமைதியாக மகிழ்ச்சியாக உட்காரலாம், அல்லது அவர்களின் வீட்டில் ஒரு நல்ல தந்தையாக நடந்துகொள்ளலாம், ஆனால் இன்று அவர்கள் எனக்கு சேவை செய்கிறார்கள்; இன்று அவர்கள் ராட்சசர்கள் காமுகர்கள்”.
அவன் சொல்வதை நீண்ட நேரம் கேட்கும் ஒருவனால் இந்த ஓவியம் என்ன என்பதை நன்றாக பிரிந்துகொள்ள முடியும்; மக்கள் ஒருவரையொருவர் எப்படி சித்திரவதை செய்வார்கள் என்ற பழைய கதையின் சித்திரம் மட்டுமே இது, வேறெதுவுமல்ல. மீட்புக்கான எந்தவொரு அம்சமுமே இதில் இல்லை, கொடூரமான வன்முறை மட்டுமே, வெறுப்பு மட்டுமே, ஆதரவற்ற துயரம் மட்டுமே.
விஸ்பி சூறையாடப்படாமலும் எரியூட்டப்படாமலும் இருக்க வேண்டும் என்றால் அந்த மூன்று பீர் கொப்பரைகளும் நிரப்பப்பட்டாக வேண்டும். அப்படி இருக்கும் போது ஏன் அந்த ஹான்சீட்டர்கள்* உற்ச்சாகத்துடன் வரவில்லை? ஏன் பெண்கள் நகைகளுடன் விரைந்து வரவில்லை? களிமகன்கள் ஏன் தங்கள் மதுக்கோப்பைகளுடன் வந்து கூத்தாடவில்லை? இந்த தியாகத்திற்கு ஏன் மதகுருக்கள் தங்களின் திருச்சின்னங்களுடன் ஆவலாகவும் உற்சாகமாகவும் வரவில்லை? ”உனக்காக, இது உனக்காக, எங்கள் அன்புக்குறிய நகரமே! இது உனக்காக என்ற போது நீ எங்களுக்காக படைகளை ஏன் அனுப்ப வேண்டும்! ஓ, விஸ்பி, எங்கள் தாயே, எங்கள் பெருமையே! நீ எங்களுக்கு என்னென்ன கொடுத்தாயோ அதையெல்லாம் திரும்பப்பெற்றுக்கொள்!”
ஆனால் ஓவியர் அவர்களை இப்படி பார்க்க விரும்பவில்லை, நிஜத்தில் அப்படி இருந்திருக்கவும் இல்லை. உற்சாகம் கிடையாது, வழுக்கட்டாயம், அடக்கியுள்ள எதிர்ப்பு, கூச்சல் மட்டுமே. அவர்களுக்கு அனைத்துமே தங்கம் தான், பெண்களும் ஆண்களும் தாங்கள் கொடுக்கப்போகும் தங்கத்திற்காக துயரப்பெருமூச்சு விடுகிறார்கள்.
“பார் அவர்களை!” என அரியானையின் படிகளில் நின்றிருக்கும் அந்த சக்தி சொல்கிறது “அவற்றைக் கொடுப்பதற்கு அவர்களின் இதயம் வலிக்கிறது. அவர்களுக்காக ஒருவன் பரிதாபப்படலாம்! ஆனால் அவர்களோ கீழ்தரமானவர்கள், பேராசைக்காரர்கள், ஆணவம் கொண்டவர்கள். அவர்களோ அவர்களுக்கு எதிராக நான் அனுப்பிய கொள்ளையர்களை விட உயர்ந்தவர்கள் அல்ல.”
ஒரு பெண் கொப்பரைக்கு அருகில் விழுந்துகிடக்கிறாள். தனது தங்கத்தைக் கொடுப்பதற்கு அவளுக்கு மிகவும் வலிக்கிறதோ? அல்லது குற்றவாளிகளில் ஒருவராக இருப்பாளோ? இந்த புலம்பல்களுக்கு எல்லாம் அவள் தான் காரணமா? இந்த நகருக்கு துரோகம் செய்தது அவள் தானா? ஆம், அரசன் வால்டிமரின் ஆசைநாயகியாக இருந்தது அவள் தான். உங்-ஹன்சியின் மகள் அவள்.
அவளுக்கு நன்றாக தெரியும் தான் எந்த தங்கத்தையும் கொடுக்க வேண்டியதில்லை என்று. அவள் தந்தையுடைய வீடு சூறையாடப்படாது, ஆனால் அவள் தன்னிடம் இருப்பதை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள். சந்தைப் பகுதியில் நடந்துகொண்டிருந்த இந்த துயரங்கள் அனைத்தையும் பார்த்து கடந்து அவள் இங்கு வந்திருக்கிறாள், இப்போது எல்லையற்ற மனவருத்தத்தில் விழுந்துகிடக்கிறாள்.
சில வருடங்களுக்கு முன், அவன் துடிப்பான மகிழ்ச்சியான இளைஞனாக இருந்த போது அவள் தந்தையின் இல்லத்தில் பொற்கொல்லனாக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அப்போது இதே சந்தைப் பகுதியில் இந்த மாடங்களுக்கு பின்னால் நிலவு மேலெழுந்து விஸ்பியின் அழகை ஒளிபெறச் செய்துகொண்டிருக்கும் போது அவனுடன் உலாவருவது இனிமையாக இருக்கும். அவள் அவனை பற்றி, அவளது தந்தையை பற்றி, அவளின் நகரைப் பற்றி பெருமிதம் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அவள் அங்கு விழுந்துகிடக்கிறாள், துக்கத்தால் உடைந்துகிடக்கிறாள். அப்பாவி, ஆனால் குற்றமிழைத்தவள்! ரத்தம் உறைந்துபோய் கொடூரமாக அரியனையில் அமர்ந்திருப்பவன், இந்நகருக்கு இப்பேரழிவைக் கொண்டுவந்திருக்கும் அவனா, அதே மனிதன் தானா இனிய வார்த்தைகளில் மென்மையாக அவளிடம் கொஞ்சியவன். அவனை சந்திக்கவா முந்தைய இரவு தனது தந்தையின் சாவியை திருடி ரகசியமாக நகர கதவை திறந்தாள்? பொற்கொல்ல பயிற்சி மாணவனாக இருந்த தனது ஆடவனைக் கண்ட போது அவனுக்கு பின்புறம் கையில் வாளுடன் போர் வீரன் ஒருவனும் இரும்பு கேடயமேந்திய ஒருவனும் நின்றுகொண்டிருந்தனர், அப்போது அவள் என்ன நினைத்திருப்பாள்? அவள் திறந்துவிட்ட கதவு வழியாக இரும்பு ஆறு அலையலையாக சென்றதைப் பார்த்த போது பிச்சியானாளா அவள்? மங்கையே, இனி புலம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை! உன்னுடைய நகர்த்தின் எதிரியை நீ ஏன் காதலித்தாய்? விஸ்பி வீழ்ந்துவிட்டது, அதன் பெருமையும் அழிந்துவிடும். நீ ஏன் நகர வாயிலின் முன் விழுந்து, வந்து கொண்டிருக்கும் வெள்ளத்தின் இரும்பு கால்களில் மிதிபட்டு நசுங்கிச் சாகவில்லை? அங்கு ஊடுருவி வருபவர்கள் மீது சொர்கத்தின் மின்னல் தாக்குவதை பார்ப்பதற்காகவா வாழ விரும்புகிறாய்?
ஓ மங்கையே, அவனருகில் வன்முறை நின்று அவனைக் காத்துக்கொண்டிருக்கிறது. நம்பிய ஒரு பெண்னை ஏமாற்றியதைவிட பல புனிதமான விஷயங்களை மீறியுள்ளான். கடவுளின் ஆலயத்தைக் கூட விட்டுவைக்கவில்லை அவன். இறுதி கொப்பரையை நிரப்புவதற்கு ஆலயச் சுவரில் பலபலத்துக் கொண்டிருந்த பதாகையையும் உடைத்துக் கொண்டுவந்தான்.
இந்த ஓவியத்தில் இருக்கும் சித்திரங்கள் ஒவ்வொன்றின் நடத்தைகளும் மாற ஆரம்பிக்கிறது. உயிருடன் இருக்கும் ஒவ்வொன்றுக்குள்ளும் குருட்டு பீதி நிரம்புகிறது. கொடூரமான சிப்பாய்கள் வெளிறிப் போகிறார்கள்; நகர வாசிகள் தங்களின் கண்களை சொர்க்கத்தை நோக்கி உயர்த்துகிறார்கள்: அனைவரும் கடவுளின் தண்டனைக்காக காத்து நிற்கிறார்கள்; அரியணை படிகளில் நின்றிருக்கும் வன்முறையும் அதன் சேவகனான அரசனையும் தவிர அனைவரும் நடுங்கிப்போகிறார்கள்.
அக்கலைஞன் என்னை விஸ்பி துறைமுகத்திற்கு கூட்டிச்செல்ல இன்னமும் கொஞ்ச வருடங்கள் உயிருடன் இருந்திருக்கலாம். நான் அங்கு, புறப்பட்டுச் செல்லும் கப்பல்களை கண்களால் பின்தொடர்ந்த நகர வாசிகளை கண்டிருப்பேன். அவர்கள் அலைகளைப் பார்த்து சாபம் விடுக்கிறார்கள். “அவர்களை அழித்துவிடு! அவர்களை அழித்துவிடு! ஓ கடலே, எங்கள் நண்பனே, எங்கள் செல்வத்தை திருப்பி எடுத்து வா! தேவநம்பிக்கையற்ற அவர்களுக்கு, விஷ்வாசமற்ற அவர்களுக்கு மூச்சுதிணறவைக்கும் உன்னுடைய ஆழத்தை திற” என கத்தினார்கள்.
பிறகு, கடல் மெளனமாக முனுமுனுத்தது, அரச கப்பலில் நின்றிருந்த ‘வன்முறை’ அதற்கு ஓப்புதல் அளித்து தலை அசைத்தது. “அதுதான் சரி, துன்புறுவதும் துன்புறுத்தப்படுவதுமே என்னுடைய சட்டம். புயலும் கடலும் கொள்ளைகாரர்களின் இந்த கப்பலை அழிக்கட்டும், என்னுடைய ராஜ சேவகனின் செல்வங்களையும் எடுத்துக்கொள்ளட்டும்! வெகுசீக்கிரமே புதிய பேரழிவுப் பயனங்களை நாம் மேற்க்கொள்ளப் போகிறோம்.” என்றது வன்முறை.
கடற்கரையில் நின்றுகொண்டிருந்த நகர வாசிகள் திரும்பி தங்கள் நகரைப் பார்த்தனர். தீ சீறி எரிந்துகொண்டிருந்தது; கொள்ளை அதன் வழியாக தான் கடந்து சென்றது; சூறையாடப்பட்ட வீடுகளின் கதவுகள் பிளந்து கிடந்தன. காலியான தெருக்களையும் நாசமடைந்த ஆலயங்களையும் பார்த்தனர்; ரத்தம் தோய்ந்த பிணங்கள் குறுகலான சந்துகளில் கிடந்தன, பெண்கள் பயத்தால் வெறிபிடித்தது போல் நகரில் ஓடிக்கொண்டிருந்தனர். இங்கு நடந்த விஷயத்தில் அவர்கள் செயலிழந்து நின்றனரா? அவர்களால் யாரையும் பலிவாங்க முடியாதா, யாரையும் சித்திரவதை செய்து அழிக்க முடியாதா?
சொர்கத்தில் வசிக்கும் கடவுளே, பார்! அந்த பொற்கொல்லனின் வீடு சூறையாடப்படவில்லை எரியூட்டப்படவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? அவன் எதிரியின் கூட்டாளியாக இருக்கிறானா? நகர கதவுகள் ஒன்றின் சாவியை அவன் வைத்திருந்தான் அல்லவா? ஓ, நீ, உங்-ஹன்சியின் மகளே, பதில் சொல், இதற்கு என்ன அர்த்தம்?
வெகு தொலைவில், அரசக் கப்பலில், வன்முறை நின்றுகொண்டு அவனின் ராஜ சேவகனைப் பார்த்து தன் இரும்பு தலைக்கவத்திற்குள் புன்னகைத்தது. “புயலின் சீற்றத்தைக் கேளும், ஐயா, புயலின் சீற்றத்தைக் கேளும்! நீ கொள்ளையடித்த தங்கம் வெகு சீக்கிரமே கடலுக்கு அடியில் நீ தொடமுடியாத இடத்திற்கு சென்றுவிடும். திரும்பி விஸ்பியைப் பார், என்னுடைய மதிப்பிற்குரிய தலைவனே! நீ ஏமாற்றிய பெண் இப்போது மதகுருக்களுக்கும் சிப்பாய்களுக்கும் நடுவில் நகரின் சுவருக்கு கொண்டு செல்லப்படுகிறாள். அவளை பின்தொடர்ந்து மக்கள் கூட்டம் சபித்தும் வசைபாடியும் செல்வதை உன்னால் கேட்க முடிகிறதா? பார், கொற்றன்கள் சுண்ணாம்புக் கலவையுடனும் பூச்சுக்கரண்டிகளுடனும் வருகிறார்கள்! பெண்கள் கற்களுடன் வருகிறார்கள்! அவர்கள் அனைவருமே கற்களுடன் வருகிறார்கள், அனைவரும், அனைவரும்!”
ஓ அரசே, விஸ்பியில் என்ன நிகழ்கிறது என்பதை உன்னால் பார்க்க முடியாவிட்டால், அங்கு நடப்பதை நீ கேட்டு தெரிந்துகொள்ளலாம். உன் அருகில் நிற்கும் வன்முறையை போல நீ இரும்பாலும் உலோகத்தாலும் ஆனவன் அல்ல. முதுமையின் இருண்ட நாட்கள் வரும் போது, மரணத்தில் நிழலில் நீ வாழும் போது உங்-ஹன்சியின் மகளின் சித்திரம் உன் நினைவில் ஓங்கும்.
அவள் அவளுடைய மக்களின் அவமதிப்பையும் இகழ்ச்சியையும் பெற்றதால், அவளின் முகம் மரணத்தில் மூழ்கியிருப்பது போல வெளிறியிருப்பதைப் காண்பாய். மதகுருக்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் அவள் மணி ஒலிக்கும் இடத்திற்கும் கடவுளின் துதிகள் பாடப்படும் இடத்திற்கும் இழுத்துச் செல்லப்படுவதைக் காண்பாய். மக்களின் கண்களில் அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள். தனது இதயத்தில் தான் இறந்துவிட்டதாகவே உணர்கிறாள் அவள், தான் எதைக் காதலித்தாலோ அதாலேயே கொல்லப்பட்டாள். தூணில் கட்டப்பட்டிருக்கும் அவளைக் காண்பாய், எப்படி கற்கள் அடுக்கப்படுகின்றன என்பதையும் காண்பாய், பூச்சுக்கரண்டிகளின் உரசலைக் கேட்பாய், தங்கள் கற்களுடன் முந்தியடிக்கும் மக்களின் சத்தத்தைக் கேட்பாய். “அடே கொற்றா, என்னுடையதை எடுத்துக்கொள், என்னுடையதை எடுத்துக்கொள்! பழிதீர்க்க என்னுடைய கல்லை எடுத்துக்கொள்! காற்றிலிருந்தும் வெளிச்சத்திலிருந்தும் அவளை புதைக்க என்னுடைய கல் உதவட்டும்! விஸ்பி வீழ்ந்துவிட்டது, புகழ்பெற்ற விஸ்பி! கடவுள் உன் கைகளை ஆசீர்வதிப்பார், அடே கொற்றா! பழிதீர்க்க நான் உதவுகிறேன், என்னை அனுமதி!”
சவ அடக்கத்திற்காக துதிபாடல்களும் மணியும் ஒலித்தன.
ஓ வால்டிமர், டென்மார்க்கின் அரசனே, இது நீ மரணத்தை சந்திக்கப்போகும் உனக்கான விதியும் கூட. நீ உன் படுக்கையில் வீழ்வாய், பெருவலியை கேட்பாய், பார்த்து, துன்பப்படுவாய். பூச்சுக்கரண்டிகளின் சத்தத்தை, பழிதீர்க்கும் அவற்றின் கதறலைக் கேட்பாய். மதநிந்தனையாளனின் ஆத்மாவின் சாவிற்கு ஒலிக்கும் புனித மணி எங்கே? பரந்த வெண்கல தொண்டையுடைய அவை எங்கே? கடவுளே உன்னுடைய கிருபைக்காக கூக்குறலிடும் நாக்குகள் கொண்ட அவை எங்கே? இசையுடன் மெல்ல அதிரும் ஓசை எங்கே? கடவுளின் இடத்திற்கு ஆன்மாவைக் கொண்டு செல்லும் அவ்வோசை எங்கே?
ஓ, லண்ட்டின்* பெரிய மணிகளே, எஸ்ரோமுக்கு* உதவுங்கள், சோரோமுக்கு* உதவுங்கள்!
தாமரைக் கண்ணன்கோவை.* * * * * * *
ஹான்சீட்டர்கள் (Hanseaters) – Hanseatic League என்ற வணிக கூட்டமைப்பின் உறுப்பினர்கள். இந்த கூட்டமைப்பு 11-14ஆம் நூற்றாண்டுகளில் வடமேற்கு மற்றும் மைய ஐரோப்பாவில் இருந்த வணிக குழு மற்றும் வணிக நகர்களின் கூட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு.
லண்ட் (Lund) – சுவீடனில் உள்ள ஒரு நகரம்.
எஸ்ரோம் (Esrom) – டென்மர்கில் உள்ள ஒரு நகரம்.
சொரோ (Sorø) – டென்மர்கில் உள்ள ஒரு நகரம். அரசன் வால்டிமரின் உடல் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
யதார்த்தவாதம் ஏன்?- கடிதம்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் சமீபத்தில் ரா. செந்தில்குமார் அவர்களின் இசூமியின் நறுமணம் நூல் வெளியீட்டு விழா உரையில் பேசும் போது அன்றாட யதார்த்தத்தைச் சொல்லும் தன் அனுபவக் கதைகள் சிறந்த இலக்கியமாகாது எனக் கூறியிருந்தீர்கள். ஆனால் நான் இவற்றில் நிறைய விதிவிலக்குகளை காண்கிறேன்.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் நாஞ்சில் நாடன் அவர்களுடைய ‘யாம் உண்பேம், அம்மை பார்த்திருந்தாள்’ ஆகியவை யதார்த்த தன் அனுபவக் கதைகளே. அவற்றைக் கூறும் விதமும், மொழிநடையும் அவற்றைச் சிறந்த கதைகளாகவும், என்று வாசித்தாலும் நமது மனசாட்சியைத் தொடும் கதைகளாவும் உணர வைக்கிறது. சாரு நிவேதிதா அவர்களின் ‘பிளாக் எண் 27, திரிலோக்புரி’ கதையையும் மேற்கூறிய வரிசையில் வகைப்படுத்தலாம். கதை நடந்த அன்று அன்றாட யதார்ததமாக இருந்த ஒரு நிகழ்வு இன்று அநேகமாக ஒரு வரலாற்றுப் பதிவாகின்றது.
மேலும் நாஞ்சில் நாடனின் தீதும் நன்றும் தொகுப்பில் ஒரு கட்டுரையாக உள்ள ‘ தனிமையென்னும் காடு’ கட்டுரை முதியோரின் நிராதரவான நிலையைப் பேசும் சிறப்பான சிறுகதை என்பது என் எண்ணம். அதுவும் நீண்ட காலத்திற்குப் பிறகும் கவனிக்கப்படும் என நம்புகிறேன்.
யதார்த்த தன்னனுபவ கனதகளுக்கு மேலதிகமாக உங்களுடைய புனைவுக் களியாட்டு, கதைத்திருவிழா கதைகளான ‘ நகைமுகன், கிரீட்டிங்ஸ்’ கதைகளையும் கூறலாம். ஒரு அலுவலகத்தில் அன்றாடம் அல்லது எப்பொழுதாவது நிகழும் இறுக்கமான சூழ்நிலையை ஒருவர் அறியாமல் செய்யும் முட்டாள்தானமான தவறு மற்றும் குழந்தைகளின் வருகை அவற்றின் விளையாட்டு, அறியாமை ஆகியவை மாற்றி சிரிப்பலைகளை பரப்பி தளரச் செய்வதை நாம் இன்றும் கூட காணமுடியும்.
இவற்றை சிறந்த கதைகளாக்கியது உங்களது கதை சொல்லும் திறனும், மொழிநடையும், சூழலை விவரிக்கும் முறைகளும் தான். இக்கதைகள் பரவலாக வாசிக்கப்பட்டு நிறைய எதிர்வினைகளையும் பெற்றது என்பதையும், கொரோனா காலத்தில் நேர்மறை எண்ணங்களையும், மகிழ்ச்சியையும், சிரிப்பையும் கொண்டு வந்து மிகுந்த வரவேற்பினையும் பெற்றன என்பதை நினைவு கூறுகிறேன்.
இவை குறித்து தங்களுக்கு மாற்றுக் கருத்தேதும் உண்டா? அல்லது நான் உங்களின் பேச்சை தவறாக புரிந்து கொண்டேனா?
விளக்கமளித்தால் என்னைப் போன்று குழப்பம் உள்ளவர்களுக்கு உதவும்.
என்றென்றும் நன்றியுடன்,
V. தேவதாஸ்
அன்புள்ள தேவதாஸ்
31-1-2021 அன்று காலை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் எழுத்தாளருக்கு இதே சந்தேகம் வந்தது. எங்கோ ஓர் இடத்தில் அன்றாடவாழ்க்கையை அப்படியே எழுதுவது இலக்கியமல்ல என்று சொல்லியிருந்தேன். அவர் அன்றாடவாழ்க்கையை எழுதவேகூடாது என்று நான் சொல்வதாக புரிந்துகொண்டு சந்தேகம் கேட்டார்
அந்த சந்தேகத்தை விளக்கியபின் அந்த விளக்கத்தையே மீண்டும் மிகவிரிவாக மேடையில் சொன்னேன். மீண்டும் அதே சந்தேகம் உங்களிடமிருந்து. இது, நாம் கருத்துக்களைப் புரிந்துகொள்வதில் அடையும் சிக்கல்களையே காட்டுகிறது. நமக்கு இவ்வகை விவாதங்கள் பழக்கமில்லை. ஆகவே பெரும்பாலும் நாம் ஏற்கனவே எதை எண்ணியிருக்கிறோமோ அதையே புதிய உரையாடல்களிலிருந்தும் எடுத்துக்கொள்கிறோம்.
நான் என் உரையில் அன்றாட வாழ்க்கையை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. நடைமுறைவாழ்க்கையின் சித்திரத்தை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை.தன் அனுபவத்தை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. நடந்ததை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. யதார்த்தத்தை எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லவில்லை என்பதையே அந்த உரையில் பலமுறை சொல்லியிருக்கிறேன்
நான் சொல்வது, அன்றாட வாழ்க்கையைச் சொல்லும்போது, நடைமுறை யதார்த்தத்தைச் சொல்லும்போது, தன் அனுபவத்தைச் சொல்லும்போது அதில் அந்த ஆசிரியன் மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய, அக்கதையில் மட்டுமே எழக்கூடிய ஓர் தனி அறிதல் வெளிப்பட்டாலொழிய அதற்கு இலக்கியமதிப்பு இல்லை என்று மட்டுமே.
அக்கதையில் வெளிப்படுவது எல்லாரும் அறிந்த ஒரு அன்றாடக் கருத்தாக இருந்தால் அதற்கு மதிப்பில்லை என்று மட்டுமே. அது wisdom ஆக இருந்தால்கூட பொதுவாக ஏற்கப்பட்ட common wisdom ஆக இருந்தால் அதற்கு மதிப்பில்லை. ஓர் uncommon wisdom வெளிப்பட்டால்தான் இலக்கிய மதிப்பு. இதை மட்டும்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
அந்த அரிய மெய்மை வெளிப்படுகையில் நகைச்சுவைத்தன்மை கொண்டிருக்கலாம். நெகிழ்ச்சியூட்டுவதாக இருக்கலாம். தத்துவார்த்தமாக இருக்கலாம். கவித்துவமானதாக இருக்கலாம். மிக மென்மையாக வெளிப்படலாம். மிகப்பூடகமாகக்கூட வெளிப்படலாம். ஆனால் அப்படி ஒன்று வெளிப்பட்டாகவேண்டும். அவ்வாறு ஒன்று வெளிப்படாமல் வெறுமே எல்லாரும் அறிந்த யதார்த்தம் அக்கதையிலும் இருந்தால் அதனால் வாசகனுக்கு பயனில்லை என்று சொல்கிறேன்
உலக இலக்கியத்தில் பல்லாயிரம் யதார்த்தவாதக் கதைகள் உள்ளன. தமிழில் மகத்தான பலநூறு யதார்த்தக்கதைகள் உள்ளன. நானே முந்நூறு யதார்த்தக்கதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் பல கதைகள் தன்வரலாற்றுத் தன்மை கொண்டவை. அப்படியிருக்க, யதார்த்தவாதக் கதைகள் எழுதக்கூடாது என்றோ அன்றாடவாழ்க்கையை எழுதக்கூடாது என்றோ நான் சொல்வேனா என்ன? நான் சொல்வது அதைச் சொல்வதனூடாக மேலதிகமாக என்ன வெளிப்படுகிறது என்று வாசகன் தேடுகிறான் என்று மட்டுமே. அவனுக்கு புதுமையை,நிறைவை ஊட்டும் ஒரு அறிதல் அதில் இல்லை என்றால் ஏமாற்றமடைகிறான் என்று மட்டுமே.
நீங்கள் சொன்ன எல்லா கதைகளும் முக்கியமான கதைகளாக மாறுவது அப்படி ஒரு வெளிப்பாடு,ஒரு uncommon wisdom அக்கதைகளில் நிகழ்ந்திருப்பதனால்தான்.
ஜெ
இசூமியின் நறுமணம் – காணொளி இணைப்புகள்பரதன், இரு கடிதங்கள்
பரதன்
கலைஞனின் தொடுகை
இணைகோட்டு ஓவியம்
ஆதல்
காமத்தின் கலை, பரதனின் நினைவில்…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..
அன்பும் வணக்கமும்.
பரதன் குறித்த ஒரு கட்டுரையில், தாங்கள் மிருகங்களுக்கு இல்லாத எந்த தத்துவ சிக்கலும் மனிதர்களுக்கு இல்லை. என்று பரதன் கூறியதாக சொன்னீர்கள்..
அந்த வரியை சற்று விளக்க முடியுமா..?,
நன்றி..
பாலமுருகன்
அன்புள்ள பாலமுருகன்,
அது ஒரு தத்துவம்சார்ந்த வரி அல்ல, தத்துவம் என்பதையே நிராகரிக்கும் வரி.
பரதன் ஒரு திரைப்பட இயக்குநராக எப்போதுமே காமம், வன்முறை, வஞ்சம் ஆகியவற்றையே திரைப்படமாக எடுத்தவர். அவை அடிப்படை இச்சைகள் எனப்படுகின்றன. அவை ஃப்ராய்டிய உளவியலில் id என்று சொல்லப்படுகின்றன. ஃப்ராய்ட் மனிதனின் அடிப்படை உணர்வுகள் அவைசார்ந்தவை மட்டுமே என்கிறார். அவை விலங்குகளுக்கும் உரியவை.
அடிப்படை விலங்குணர்ச்சிகள் அன்றி வேறு ஏதும் மனிதர்களுக்கு இல்லை, மனிதனும் வெறும் விலங்குமட்டும்தான் என்று பரதன் சொல்கிறார். நாம் மனிதனுக்கு இருப்பதாகச் சொல்லும் தத்துவப்பிரச்சினைகள், அறப்பிரச்சினைகள் எல்லாமே கற்பனையானவை என்றும் அடிப்படை இச்சைகளின் சிக்கல்களை நாம் இப்படி மறுவிளக்கம் அளித்துக்கொள்கிறோம் என்றும்அவர் சொல்கிறார்.
இது அவருடைய தரப்பு. அந்த காலகட்டத்தில் ஃபிராய்டியம் செல்வாக்கு செலுத்திய காலகட்டத்தில் ஓங்கியிருந்த ஒரு சிந்தனையும்கூட. அது சரியா தவறா என நீங்களே யோசிக்கலாம்
ஜெ
அன்புள்ள ஜெ
எனக்கு பிடித்தமான இயக்குநர் பரதன். அவரைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை லோகித் தாஸ் பற்றிய குறிப்பின் கீழே கண்டேன். அவரைப்பற்றி ஒரு நல்ல நூலை அவருடைய திரைக்கதையாசிரியரான ஜான் பால் எழுதியிருக்கிறதாக எழுதியிருந்தீர்கள். அது தமிழில் வந்துள்ளதா?
தமிழ்ச்செல்வன்
அன்புள்ள தமிழ்ச்செல்வன்
இல்லை, அந்நூல் மொழியாக்கம் செய்யப்படவில்லை. மொழியாக்கம் செய்யப்படவேண்டிய நூல்தான்
எனக்கும் பிடித்தமான இயக்குநர்தான் பரதன். காலம் செல்லச்செல்ல அவருடைய படங்களின் மதிப்பு கூடியபடியேதான் செல்கிறது. எழுபது எண்பதுகளில் கலைப்படங்களுக்கு – அவை சர்வதேச விழாக்களில் இடம்பெறவேண்டும் என்றால்- ஒரு செயற்கையான மந்தகதி தேவை என்று நினைக்கப்பட்டது. அன்று உருவாக்கப்பட்ட கலைப்படங்களில் எல்லாம் சூழல் சித்தரிப்பில், குளோஸப் காட்சிகளில் அந்த செயற்கையான மந்தகதி இருக்கும். அதை இன்றுபார்த்தால் தாளமுடியவில்லை.
அதைப்போல அன்றுள்ள கலைப்படங்களில் பெரும்பாலானவை அரசியல் உள்ளடக்கம் கொண்டவை. அன்று பேசப்பட்ட பொதுவான அரசியல் உள்ளடக்கமே படங்கள் சர்வதேச அரங்குக்குச் செல்ல வழியமைத்தது. சற்று மீறல், சற்று எதிர்ப்பு, கொஞ்சம் துடுக்குத்தனம் கொண்ட அரசியல் அது. அந்த அரசியல் இன்று காலாவதியாகிவிட்டது. இன்று பல அரசியல்படங்களைப் பார்க்கையில் என்ன ஏது என்று புரியவில்லை.
பரதன் அவை இரண்டையும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர் தன்னை கலைப்பட இயக்குநராகச் சொல்லிக்கொள்ளவுமில்லை. வன்முறை காமம் இரண்டிலும் அவருக்கிருந்த மோகத்தை, அவற்றில் அவர் தேடியவற்றை, கண்டடைந்தவற்றை மட்டும் முன்வைத்தார். ஆகவே அவருக்கு அவருடைய தகுதிக்குரிய இடம் அமையவே இல்லை. அவர் அதைப்பற்றிக் கவலைப்படவுமில்லை.
ஆனால் இன்று பலபடங்கள் கிளாஸிக் ஆக கருதப்படுகின்றன. முன்பு அவரை நிராகரித்த, பொருட்படுத்தாத விமர்சகர்களாலேயே கொண்டாடப்படுகின்றன
ஜெ
கர்ணனின் கேள்விகள் – இமைக்கணம்
கர்ணனின் கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை. வேத முடிபு என்றும் தத்துவ தரிசனங்கள் என்றும் தவ முனிவர்கள் கூறுவது யாருக்காக எதற்காக சாமானியன் இதனால் தன் துயரை களைய முடியுமா? கர்ணன் தன் சொந்த வாழ்விலிருந்தே அதற்கான காரணங்களை கண்டடைகிறான். குலத்தால் இழிந்தவனாக கருதப்படுபவன் அதிலிருந்து வெளியேற முடியுமா சிறுமைகளை ஒழித்து தன் சுய மரியாதையை பெற முடியுமா? நம் காலத்திற்கான கேள்விகள் இவை.
கர்ணனின் கேள்விகள் – இமைக்கணம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

