தமிழக வரலாறும் பண்பாடும்- ஒரு முழுச்சித்திரம்

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். கே.கே.பிள்ளை.இணையத்தில் இலவசமாக கே.கே.பிள்ளை- விக்கி [கோலப்ப கனகசபாபதிப் பிள்ளை]

தமிழ்நாட்டு அரசு எழுபதுகளில் முதுகலை பட்டப்படிப்பு வரை அனைத்து துறைகளையும் தமிழிலேயே கற்பிப்பது என்ற பெருமுயற்சி ஒன்றை எடுத்தது. அப்போது எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழக முதல்வர்.நெடுஞ்செழியன் கல்வியமைச்சர். அதற்காக அத்தனை பாடநூல்களும் தமிழில் எழுதப்பட்டன. குறிப்பிடத்தக்க நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஏறத்தாழ இரண்டாயிரம்நூல்கள் அவ்வண்ணம் புதிதாக எழுதப்பட்டும், தமிழாக்கம் செய்யப்பட்டும் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டன.

ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. தமிழில் பட்டப்படிப்பு படிக்க பெரும்பாலானவர்கள் முன்வரவில்லை, ஏனென்றால் ஆங்கிலம் வேலைவாய்ப்புச் சந்தையில் இன்றியமையாததாக இருந்தது. ஆனால் அதன்பொருட்டு உருவாக்கப்பட்ட நூல்கள் தமிழுக்கு மிகப்பெரிய அறிவுக்கொடை. நான் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி நாகர்கோயிலில் ஓர் அறைமுழுக்க அடுக்கடுக்காக அந்நூல்கள் இருப்பதை கண்டிருக்கிறேன்.

அந்நூல்வரிசையில் எந்த நூல் பழைய புத்தகச் சந்தையில் கிடைத்தாலும் வாங்கிவிடுவேன். ஐரோப்பிய வரலாறு, அமெரிக்கவரலாறு, ஆங்கில இலக்கியவரலாறு, நெப்போலியனின் வரலாறு, இந்திய அரசியல் சட்டம், இந்திய வணிகவரிச்சட்டம் என அவ்வரிசையில் பல குறிப்பிடத்தக்க நூல்கள் என்னிடம் உள்ளன.

பட்டப்படிப்புக்கு அந்நூல்கள் இன்று உதவாமல் போகலாம். ஆனால் தமிழிலேயே வரலாறு, இலக்கியம், பொருளியல், சட்டம் போன்றவற்றை படிக்க விரும்புபவர்களுக்கு அவை மிகப்பெரும் கொடை. ஒரு பொதுஅறிவுஜீவி, ஓர் எழுத்தாளன் தனக்கான அடிப்படையான அறிதலை அடைவதற்கு மிக உதவியானவை அந்நூல்கள்.ஆனால் அந்த மாபெரும் அறிவுப்பணி கவனிக்கப்படாமல், எவருக்கும் பெரிதும் பயன்படாமல் போயிற்று என்பதும், தமிழுக்கு எம்.ஜி.ஆர்.அரசு செய்த அந்தப் பங்களிப்பைப் பற்றிக்கூட எவரும் சொல்வதில்லை என்பதும் வருந்தத்தக்கது

அந்த வரிசை நூல்கள் மிக அரிதாகவே மறுபதிப்பு வந்தன. அவற்றில் ஒன்று கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய’தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’. உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடாக இந்நூல் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. ஆனால் இந்நூலில் இந்த நூல் எதன்பொருட்டு எழுதப்பட்டது, முதல்பதிப்பு எப்போது வெளிவந்தது என்ற எந்தச்செய்தியும் இல்லை. இதிலுள்ள கே.கே.பிள்ளையின் முன்னுரை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முன்னுரை ஆகியவற்றில்கூட அவை எழுதப்பட்ட ஆண்டோ நாளோ குறிப்பிடப்படவில்லை. புதிய புத்தகம்போலவே இது வெளியிடப்பட்டுள்ளது

இது தமிழில் இன்று நிலவும் மிகப்பெரிய மோசடி. பழையநூல்களை அவை மறுபதிப்பா மறுஅச்சா என்று சொல்லாமல், அவற்றின் பதிப்புவரலாறே இல்லாமல் புதிய நூல்களாக வெளியிடுவது. இது நூலக ஆணை பெறுவதன்பொருட்டு செய்யப்படுகிறது என்கிறார்கள். ஆனால் ஒரு நூல் வெளிவந்த ஆண்டு அந்நூலை புரிந்துகொள்ள மிக முக்கியமானது. இந்நூலில் கே.கே.பிள்ளை அவர்களின் முன்னுரையில் தமிழ்நாட்டு பாடநூல்நிறுவன வெளியீடாக இது வருவதற்கு நன்றி தெரிவித்துள்ள ஒரு வரி உள்ளது. அது இல்லையேல் வேறெந்த சான்றும் இல்லை. கே.கே.பிள்ளை ஏதோ சமகால அறிஞர், இந்நூல் இப்போதுதான் வெளிவருகிறது என்று வாசகர் நினைக்கத்தோன்றும்.

இதெல்லாம் வாசகர்களின் பிரச்சினைகள். இங்கே நூல்களை அச்சிட்டு வெளியிடுபவர்களுக்கு அவை பல்வேறு நூலகங்களில் தள்ளிவிடுவதற்குரிய சரக்குகள் மட்டுமே. அதுவே இந்தப்போக்குக்கு வழிகோலுகிறது

கே.கே.பிள்ளை

*

தமிழக வரலாற்றைப் பற்றிய ஓர் ஒட்டுமொத்த சித்திரத்தை அடைய விரும்புபவர்களுக்கு மிக ஆதாரமான நூல் கே.கே.பிள்ளையின் இந்த ஆக்கம். அவருடைய புகழ்பெற்ற நூலான தென்னிந்திய வரலாற்றுடன் இணைந்துகொள்ளும் ஒரு படைப்பு. தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள் என்னென்ன என்று ஆராய்ந்தபடி இந்நூல் தொடங்குகிறது. தமிழகத்தின் இயற்கை அமைப்புக்கள் விளக்கப்பட்டபின் வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகத்தைப் பற்றி தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் ஒரு விரிவான சித்திரத்தை அளிக்கிறார்

சிந்துவெளிப் பண்பாட்டுடன் தமிழ்ப்பண்பாட்டுக்கு இருப்பதாக சில ஆய்வாளர்களால் சொல்லப்படும் ஊகங்களை எல்லாம் கே.கே.பிள்ளை வரலாற்றுத்தரவுகளால் நிறுவப்படாத கருத்துக்கள் என்றே கருதுகிறார். ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளை ஊகிக்கும் முயற்சிகளாக மட்டுமே தற்போதுள்ள நிலையில் கொள்ள முடியும் என்று மதிப்பிடுகிறார்.

பொதுவாக கே.கே.பிள்ளை மிகக்கறாரான ஒரு வரலாற்றாய்வாளர், வரலாற்றெழுத்தாளர். தொல்லியல்தரவுகள், இலக்கியச்சான்றுகள், பிற ஆவணச்சான்றுகளின் அடிப்படையில் முறைமையை மீறாமல் வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முனைபவர். அதனாலேயே முதல்தலைமுறை வரலாற்றாசிரியர்களுக்குப் பின் சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட தமிழக வரலாற்றாய்வாளராக அவர்தான் திகழ்ந்தார்.

இந்நூலை வாசிக்கையில் கே.கே.பிள்ளைக்கு தமிழரசியல், சைவமரபு ஆகியவற்றிலுள்ள சார்பு தெரிகிறது. ஆனால் அவர் ஒருபோதும் வெற்றுப்பெருமிதங்களை கண்டடையவோ நிறுவவோ முயல்வதில்லை. எங்குமே தன்வயமான பார்வை இல்லை. சான்றுகள் திட்டவட்டமாக இல்லாத வெறும் ஊகங்களை பொருட்படுத்துவதில்லை. ஒரு வரலாற்றாய்வாளராக அன்றி வேறெவ்வகையிலும் அவர் தன்னை முன்வைக்கவில்லை

அதனாலேயே கே.கே.பிள்ளை போன்றவர்கள் அரசியலாளர்களால் கவனிக்கப்படாமலானார்கள். ஆய்வாளர்களுக்கு வெளியே அவர் இன்று பேசப்படுவதுமில்லை.ஆனால் வரலாற்றாய்வே பெருமிதக்கதைகளை அவிழ்த்துவிடுவது என்று ஆகியிருக்கும் இன்றைய சூழலில், மதிக்கத்தக்க வரலாற்றாய்வாளர்கள் மிகமிக அருகிவிட்டிருக்கும் நிலையில், கே.கே.பிள்ளை போன்ற வரலாற்றாசிரியர்களின் நூல்கள் பொதுவாசகனுக்கு, இலக்கியவாதிக்கு மிகமிக முக்கியமானவை. அவரையே அவன் பொருட்படுத்தி வாசிக்கவேண்டும்.

இந்நூலில் வரலாற்றோட்டத்தை சுருக்கமான, கூர்மையான சொற்கள் வழியாக கே.கே.பிள்ளை வரைந்து காட்டுகிறார். வரலாற்றுப்பெரும்பரப்பில் இருந்து எதைச் சொல்லவேண்டும், எதை சொல்லத்தேவையில்லை என முடிவெடுப்பதில்தான் ஒரு வரலாற்றெழுத்தாளரின் திறமையே உள்ளது. அதில் தமிழ் வரலாற்றெழுத்தாளர்களில் கே.கே.பிள்ளையே முதன்மையானவர் என்பது என் எண்ணம்.வரலாற்றுச் செய்திகளுக்காக மட்டுமல்ல, நூற்சுவைக்காகவே நான் வாசிக்கும் நூல்கள் அவருடையவை.

“பல்லவ மன்னர்கள் உயர்ந்து நிமிர்ந்த அழகிய தோற்றமுடையவர்களாக இருந்திருக்கவேண்டும் என்று கருதுவதற்குச் சான்றுகள் உள்ளன. மாமல்லபுரத்து வராகக்குகையில் செதுக்கப்பட்டுள்ள சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன் ஆகிய அரசர்களின் தோற்றம் எடுப்பாகவும் அரசகளையுடையதாகவும் மிடுக்காகவும் காணப்படுகிறது….” என்பது போன்ற சிறு செய்திகளையும், கூடவே அரசர்களின் புகழ்பெற்ற போர்வெற்றிகளையும் அப்போரின் மெய்யான விளைவுகளையும் ஒரேவிசையில் சொல்லிச் செல்கிறார் கே.கே.பிள்ளை.அது ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது

இந்நூலில் உள்ள சிறப்பான கூறு என்பது அரசர்களை மட்டுமல்ல பெரும்பாலான போர்களில் அவற்றை முன்னின்று நடத்திய படைத்தலைவர்களின் பெயர்களையும் விரிவாகச் சொல்லிச் செல்கிறார் என்பது. மன்னர்கள் அளித்த நிவந்தங்கள், ஊர்க்கொடைகள் ஆகியவற்றிலிருந்து அந்த படைத்தலைவர்களின் செய்திகளை எடுத்து மையவரலாற்றுடன் பிணைக்கிறார்.

உதாரணமாக, இரண்டாம் நந்திவர்மனின் படைத்தலைவனாகிய உதயசந்திரன் என்பவனின் படைத்திறனை குறிப்பிடுகிறார். அவனுக்கு பாலாற்றங்கரையில் இருந்த ஒரு கிராமத்தின் உரிமையை அளிக்கிறான் நந்திவர்மன். அதன் பெயர் குமாரமங்கல வெள்ளாட்டூர் என்றிருந்ததை உதயசந்திர மங்கலம் என்று பெயரிட்டு அதை நூற்றெட்டு பிராமணர்களுக்கு கொடையளித்தான். உதயேந்திரம் செப்பேடுகளில் இருந்து உதயசந்திரனை வரலாற்று வரைவுக்குள் கொண்டுவருகிறார்.

மன்னர்களின் வரலாற்றை சொல்லிச்செல்லும் கே.கே.பிள்ளை இணையாகவே தமிழகப் பண்பாட்டு வரலாற்றையும் சொல்கிறார். தமிழகத்தில் மரத்தாலான ஆலயங்கள் செங்கற்றளிகளாகி கற்றளிகளாக ஆன வரலாறு, தமிழகத்தில் திருமணத்தில் தாலி கட்டுவது பத்தாம்நூற்றாண்டுக்குப்பின்னரே தொடங்கியது என்னும் செய்தி -என இந்நூல் ஒரு முழுமையான பண்பாட்டுப் பரிணாமச்சித்திரத்தையே அளிக்கிறது

தீவிரமான வரலாற்றுச் செய்தித்துளிகளை இயல்பாகக் கோத்து சொல்லிச்செல்கிறார் கே.கே.பிள்ளை.  சோழர்காலத்தில் வேதம் ஓதுதல் வீணையிசையுடன் சேர்த்து செய்யப்பட்டது, இவ்வழக்கம் இன்றில்லை என்ற செய்தி ஒரு மின் என மூளையை தொடக்கூடியது.நூல்களை மனப்பாடம் செய்பவர்களுக்கு சோழர் காலத்தில் நிலக்கொடை வழங்கப்பட்டது. நாரணன் பட்டாதித்தன் என்ற பிராமணன் [சவர்ணன்] ஸ்ரீராஜராஜவிஜயம் என்ற நூலை  படித்து வந்தமைக்காக அவனுக்கு முதலாம் ராஜேந்திரன் காலத்தில் நிலம் வழங்கப்பட்டதை கல்வெட்டு சொல்கிறது.

ராமேஸ்வரம் ஆட்சியாளரான கிழவன் சேதுபதி தன் உறவினர்களை மதமாற்றிய பிரிட்டோ என்ற பாதிரியாரை கொலைசெய்கிறார். ஆனால் கிறிஸ்தவர்கள் பிரிட்டோ பாதிரியார் ஏசுவை போல உயிர்த்தெழுந்தார், அற்புதங்கள் செய்தார் என்று பிரச்சாரம் செய்து மன்னருக்கு அஞ்சி திரும்ப இந்துவாக மதம் மாறியவர்களை மீண்டும் கிறிஸ்தவர்களாக ஆக்குகிறார்கள்.

அரிய செய்திகள் அவற்றின் புதிர்த்தன்மையுடனேயே பதிவாகியிருக்கின்றன. வளஞ்சியர் என்னும் வணிகக்குழுவைப் பற்றி ராஜேந்திரசோழனின் காட்டூர் கல்வெட்டு விரிவாகச் சொல்கிறது. ஆனால் அவர்கள் யார்? இவர்கள் நான்கு திசைகளின் ஆயிரம் வட்டங்கள், பதினெட்டு நகரங்கள், முப்பத்திரண்டு வேளர் புரங்கள், அறுபத்திநான்கு கடிகைத்தானங்களில் இருந்து வந்தவர்கள். இவர்கள் குழுவில் செட்டியார்கள், கவரர்கள், கந்தழிகள், பத்திரர்கள், காவுண்ட சுவாமிகள் [கவுண்டர்கள்?] என பலர் இருந்திருக்கின்றனர். வரலாற்றில் என்னவானார்கள்? இவர்கள் இன்று என்னவாக இருக்கிறார்கள்?

தொல்பழங்காலத்தில் தொடங்கி 1970களில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம் வரை வருகிறது கே.கே.பிள்ளையின் வரலாற்றுச் சித்திரம். தமிழில் ஒட்டுமொத்தமாக அனைத்துச்செய்திகளையும் முற்றிலும் நம்கபமாகவும் ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையுடனும் தொகுத்தளிக்கும் இந்நூல் இது எழுதப்பட்ட காலத்திற்கு பிறகு வந்த ஆராய்ச்சிகள், கண்டடைதல்கள் ஆகியவற்றை பற்றிய நல்லொதொரு முன்னுரையுடன் முறையான பதிப்பாக வெளிவருமென்றால் நல்லது.

அன்னியர்கள் அளித்த வரலாறு இரண்டுவகை வரலாறுகள்

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

சுசீந்திரம்

தென்னிந்தியக் கோயில்கள்

வரலாற்றை வாசிக்க…

தமிழக வரலாறு தொடங்குமிடம் எது?

தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)

தமிழகத்தின் கற்காலங்கள்

வரலாறும் இலக்கியமும்

ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு

வரலாறும் கதையும்

 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.