Jeyamohan's Blog, page 1050
February 11, 2021
செல்வேந்திரனின் ‘வாசிப்பது எப்படி?’-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். செல்வேந்திரனின்’’வாசிப்பது எப்படி’’ குறித்த தகவல் வந்ததுமே அதற்கு அனுப்பாணை பிறப்பித்திருந்தேன். அது கைக்கு வருவதன் முன்பே மகனின் கல்லூரிக்கு வெளியூர் செல்லவேண்டி வந்தது. இன்று வீடு திரும்பியபோது புத்தகம் காத்திருந்தது. முக்கால் மணிநேரத்தில் முழுக்க வாசித்தேன்.
பல இடங்களில் கண் நிறைந்தே விட்டது, இளைஞர்கள் மீது எத்தனை அக்கறை எத்தனை கனிவு, எத்தனை பரிவு அன்பு இருந்திருந்தால் இதை எழுதியிருப்பார்? அடடா இப்படி இருக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார், சில இடங்களில் கோபிக்கிறார், இன்னும் சில இடங்களில் வருந்துகிறார்.
வெறுமனே இளைஞர்களை குற்றம் சொல்லிவிட்டு புத்தகத்தை முடித்து விடவில்லை அவர்கள் என் வாசிப்பதில்லை என்று ஆராய்ந்து காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறார். வறுமை, வாசிக்கும் பழக்கமற்ற குடும்பம், பூசல்கள், அவர்களைக் கவரும், இழுக்கும், திசைதிருப்பும் ஏராளமான காரணிகளையும் பட்டியலிட்டுவிட்டு இத்தடைகளை எப்படி தாண்டுவதென்பதையும் சொல்லியிருக்கிறார்.
ஒரு தந்தையாக பிள்ளைகள் எப்படியாவது உருப்பட வழிசொல்லுவதும், ஒரு அன்னையாக குழந்தைகள் குறித்து கவலைப்படுவதும், மூத்த சகோதரனாக அறிவுரை சொல்லி கண்டிப்பதும், தோழனாக தோளில் கைபோட்டு நட்புடன் ’இதைபண்ணுடா’ என்பதுவும், குத்திக்காட்டுவது ,காயப்படுத்துவது பின்னர் அவரே காயத்துக்கு மருந்தும் தடவுவது என எந்தெந்த வழிகளிலெல்லாம் இளைஞர்களை திருத்த முடியுமோ, மாற்ற முடியுமோ அவற்றையெல்லாமே செய்கிறார்.
உண்மையிலேயே ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு பக்கத்திலும் இருப்பது இவர்களை எப்படியாவது முன்னுக்கு கொண்டுவரவெண்டுமென்னும் செல்வேந்திரனின் நெஞ்சடைக்கும் கூவல்தான். ஆச்சர்யமாக இருக்கிறது இதை எத்தனை மெனக்கெட்டு எத்தனை சிரத்தையுடன் எழுதியிருக்கிறார் என்று. எந்த பொருளாதார லாபமும் இந்த புத்தகத்தினால் அவருக்கு பெரிதாக கிடைக்கப்போவதில்லை. எத்தனை பேர் வாங்கிப்படிப்பார்கள் என்னும் உத்தரவாதமுமே இல்லை எனினும் ஒவ்வொரு வரியையும் மிககவனமாக, மிக உண்மையாக, மிக அக்கறையுடன் எழுதியிருக்கிறார்.
ஒர் ஆசிரியையாக இதோ 20 வருடங்களை நெருங்கவிருக்கிறேன் நான் படித்த அதே கல்லூரியில் அதே துறையில் இன்று பணியில் இருக்கிறேன் பெரிதாக எந்த மாற்றமுமே இல்லை, கல்லூரிச்சூழலிலும், மாணவர்களின் நடத்தை மற்றும் இயல்புகளிலும். ஸ்மார்ட் போன்களை, பைக்குகளை வைத்திருந்தாலும் மடிக்கணினி உபயோகித்தாலும், 35 வருடக்களுக்கு முந்திய மாணவர்களைப் போலவேதான் இவர்களும் இருக்கிறார்கள்.
7000 மாணவர்களில் தேடிக்கண்டுபிடித்தால் ஒரு பத்துப்பேர் வித்தியாசமானவர்களாக இருக்கக்கூடும். இது எனக்கு ஆயாசம் தரும் ஒன்று. இத்தனை வாய்ப்பு அவர்கள் முன்னே கொட்டிக்கிடக்கையில், இத்தனைபேர் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கையில் எதையுமே அறியாமல் பெற்றுக்கொள்ளாமல் இப்படி வீணாய் போகிறார்களே என்று. செல்வேந்திரன் சொல்லியிருப்பது கொஞ்சம்தான் என்பதும் இத்தனை வருடங்களாக 7000 மாணவர்களுடன் தினசரி 5 மணி நேரங்கள் இணைந்திருப்பவள் என்னும் முறையில் உணர முடிகின்றது.
சின்ன புத்தகமாக ,கச்சிதமாக சொல்லவேண்டியவற்றை மட்டும் சொல்லி அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சொல்லி இருக்கிறார். வாசிக்கவே உடல் வணங்காத காலத்தில் இது கொஞ்சம் பெரிய புத்தகமாக இருந்தால் இதையும் வாசிக்காமல் போய்விடும் அபாயமும் இருப்பதால் இது நல்லதுதானென்றூம் நினைத்தேன். சின்ன சின்ன பகுதிகளாக பொருத்தமான தலைப்பும் வைத்து எழுதியிருப்பதால் நிச்சயம் வாசிப்பார்கள் என்றும் நம்பினேன்.
மொத்தத்தையும் வாசிக்காவிட்டாலும் குறிப்பிட்ட இரண்டையாவது வாசிக்கச்சொல்லியிருக்கும் அவரின் பரிந்துரையை வாசிக்கையிலும் மனம் கலங்கினேன் .எத்தனை அக்கறையிருந்தால் இப்படி சொல்லி இருப்பார் என்று. மகிழ்ச்சியாக இருந்தது வாசிக்கையில். உடனே என் போனில் இணைந்திருக்கும் ஒரு சில மாணவர்களுக்கு புத்தகத்தை குறித்து பகிர்ந்துகொண்டு விலை 100 ரூபாய்கள் கூ ட இல்லை என்றும் குறிபிட்டு வாங்கச் சொன்னேன் நூ
லகரை நாம் மதிக்கிறோமா என்னும் பதிவின் 2 பக்கங்களையும் கல்லூரி நூலகருக்கு ஸ்கேன் செய்து அனுப்பினேன். அவர் அதை பார்த்துவிட்டாரென்னும் இரு நீல் டிக்குகள் வந்தபின்னர் 1 மணி நேரம் கழித்து என்க்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அத்தனை நேரமும் யோசித்திருப்பாராயிருக்கும். இந்தமாதிரி நிகழ்ச்சிகளை நாமும் நடத்தனும் மேம் என்று சொல்லி இருந்தார்.
வாசிக்காததினால் மாணவர்கள் எதிர்காலம் வீணாவது எத்தனை உண்மையோ அதற்கு இணையான உண்மை ஆசிரியர்கள் எதையும் வாசிக்காததும் அவர்களிடமிருந்து மாணவர்கள் எதையுமே கற்றுக்க்கொள்ள வழியில்லை என்பதுவும் கல்லூரிகளுக்கு செல்லுகையில் மாணவர்களிடம் கேட்கும் என்ன வாசித்தீர்கள் சமீபத்தில், போன்ற கேள்விகளை பேராசிரியர்களிடம் கேட்டுப்பார்த்தாலும் பெரிதாக வித்தியாசம் இருக்காது. பணியில் அமர்ந்ததும் பல ஆசிரியர்கள் முதலில் செய்வது கற்றலை நிறுத்தி அரைத்த மாவை அரைக்கும் பயிற்சி எடுத்துக்கொள்ளுவதுதான்.
கல்லூரிக்குள் பள்ளி வாசனையுடன் நுழைகையில் ஆங்கிலம் தெரியாமலிருக்கும் இவர்கள், 3 வருடங்கள் கழிந்து கல்லூரியை விட்டுவெளியே போகையிலும் ஆங்கிலம் தெரியமல்தான் போகிறார்கள். 3 வருடங்களில் ஒரு குழந்தை தன் குடும்பத்தினரின் மொழியை பேசக்கற்றுக்கொள்கையில் நீங்கள் வளந்தவர்கள், உங்களால் ஏன் ஆங்கிலமென்னும் தொடர்பு மொழியை கொஞ்சமேனும் 3 வருடங்களில் கற்றுக்கொள்ள முடியாது என்று நானும் வருடா வருடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஆங்கிலத்தை பேசுவதை விட, அடையாள அட்டை தொலைந்துவிட்டது, ஒரு நாள் விடுப்பு வேண்டும், அனுமதி வேண்டும் ஒரு புத்தகம் வேண்டும் போன்ற மிகச்சாதாரண காரியங்களுக்கு கூட ஓரிரண்டு வரிகளில் கடிதம் ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் எழுதத் தெரியாது அநேகம் முதுகலை மாணவர்களுக்கு. ஆனால் சேக்ஷ்பியரும் ஷெல்லியும் வாசித்து மனனம் செய்து பரீட்சை எழுதுவார்கள் .உலகத்தொடர்பு மொழியில் பேசவும் எழுதவும் தெரியாததை விட கடிதத்திற்கென ஒரு தாளை ஓரங்கள் கிழியாமல் நோட்டுபுத்தகத்திலிருந்து எடுக்கக்கூட தெரியாமல், அலங்கோலமான ஓரங்களுடனிருக்கும் தாளை அப்படியே கொண்டு வந்து கொடுக்கும் மாணவர்களைப்பார்த்து திகைத்து நின்றிருக்கிறேன் .
உலகம் போகும் வேகமும் திசையையும் குறித்தும் தம்மை சுற்றி இயங்கும் உலகைக் குறித்தும் எந்த சிந்தனையும் அற்றவர்களாக இருக்கும் இவர்கள் வாசித்தால் நிச்சயம் நல்ல மாற்றமேற்படும். செல்வேந்திரன் கடைசிப்பக்கங்களில் பரிந்துரைத்திருப்பவற்றில் இரண்டை வாசித்தால் கூட போதும் பின்னர் புத்தக வாசிப்பென்னும் மாயக்கரங்களில் அகப்பட்டுக்கொள்வார்கள்.
என்குரலாகவே ஒலித்த இந்த புத்தகவரிகளுக்காக என் மனமார்ந்த நன்றிகளை செல்வேந்திரனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். வரும் திங்கட்கிழமையன்றிலிருந்து முதலாமாண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வரப்போகிறார்கள். அவர்களிடமும் இப்புத்தகத்தை குறித்து பேசுவேன். கையடக்கமான புத்தகமாக இத்தனை முக்கிய செய்திகளிருக்கும் இதை வாசிக்ககிடைத்தால் அவர்களின் நல்லூழ் அது.
புத்தகம் வாசித்தால் அடிக்கும் அப்பாவுக்கு தெரியாமல் அவர் ஒளித்தும் மறைத்தும் வைக்கும் புத்தகங்களை அவரறியாமல் ரகசியமாய் வாசிப்போம் நானும் அக்காவும். என் மகன்கள் தீவிர வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதற்கு வாசிப்பு எனக்கு மறுக்கப்பட்டதும் வாசிப்பின் பயன்களை நான் அறிந்திருப்பதுவும்தான் காரணங்கள். என் மகன்களைக்குறித்து ஏதும் பெருமையாக நான் சொல்லிக்கொள்ள முடியுமென்றால் அவர்களிருவருமே புத்தகவாசிப்பென்னும் வழக்கம் கொண்டிருப்பவர்கள் என்பதை மட்டும்தான்
அன்புடன்
லோகமாதேவி
மொக்கை’ – செல்வேந்திரன்வெண்முரசு – குமரிக்கண்டம்
ஏழ்தெங்க நாட்டு பழையன் அவையில் நுழைந்த இளநாகன், உன் வெண்குடை நாய் குடை என்று பன் பாடி அதற்காக அவன் துரத்தப்படுவதால் மதுரைக்கு தப்பி ஒட அங்கு இருந்த அஸ்தினபுரம் போகிறான். இளநாகன் பஃறுளி ஆற்றைகடந்து தென் மதுரையை அடைகிறான், பஃறுளி ஆறு மறைந்த குமரிகண்டத்தில் ஓடிய ஆறு, ஏழ்தெங்க நாடும் குமரிகண்டநாடு, காட்சிகள் விரிப்பால் மனம் மிக எளிதாக குமரிகண்டத்தில் ஒன்றி விடுகிறது.
வெண்முரசு – வண்ணக்கடல்February 10, 2021
பிறழ்வெழுத்து
Marquis de Sadeஅன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி இருக்கிறது.
சமீபத்தில் “டிரான்ஸ்க்ரேசிவ் பிக்சன்” என்ற சொற்றொடரைப் படிக்க நேர்ந்தது. தமிழில் இத்தகைய படைப்புகள் வந்துள்ளனவா? இத்தகைய படைப்புகள் ஏதேனும் சமூக நன்மையை அளிக்கவல்லனவா? அல்லது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு உத்தியாகவே இத்தகைய நாவல்கள் எழுதப்படுகின்றனவா?
உங்களின் கருத்தைக் கூறுங்களேன்?
நன்றி
கணேஷ்
நியூ டெல்லி
மைக்கேல் சில்வர்பிளாட்அன்புள்ள கணேஷ்,
எந்த வகையான எழுத்தும் இயல்பாக உருவாகி வருமென்றால் அதற்கான இன்றியமையாமை அச்சமூகத்தில் உள்ளது என்பதே அர்த்தம். ஆகவே அது தேவையில்லை என்று எவரும் சொல்லமுடியாது. இலக்கியம் என்பது ஒருவகையில் ஒரு சமூகம் கனவுகாண்பது போல, அச்சத்தில் உளறுவது போல, பைத்தியத்தில் பிதற்றுவதுபோல .அது தேவையா என்பதை ஒட்டி அது உருவாவதில்லை. அது ஒரு வெளிப்பாடு.
பிறழ்வெழுத்து [ Transgressive fiction ] என்ற சொல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவான ஒரு சில எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. விமர்சகர் மைக்கேல் சில்வர்பிளாட் அச்சொல்லை உருவாக்கினார் என்கிறார்கள். பல்வேறு அக நெருக்கடிகளால் மனப்பிளவுண்டு சமூக நெறிகள் பொது நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் பிறழ்ந்து போன நிலையில் எழுதப்படும் எழுத்து இது. கட்டற்ற பாலியல், குற்றகரமான அறமீறல்கள் என அனைத்து வகைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கியது. ஒரு வகையில் நோய்க்கூறானது.
இலக்கியத்தில் இவ்வகையான ஒரு கூறு எப்போதுமே இருந்துகொண்டிருப்பதைக் காணலாம். பழைய காலகட்டத்திலேயே அக்காலத்தைய பொது எல்லைகளை மீறிய நூல்கள் இருந்துவந்துள்ளன. ஓர் உதாரணம் என்றால் தமிழில் உள்ள கூளப்பநாயக்கன் காதல்,விறலி விடுதூது போன்ற நூல்களைச் சொல்லலாம். வசைக்கவிஞரான ஆண்டான் கவிராயர் போன்றவர்கள் இன்னும் ஒரு படி கீழே.
உரைநடை இலக்கியம் உருவானபோது யதார்த்தவாத எழுத்தின் ஒரு கூறாக இந்த அம்சம் இருந்துகொண்டிருந்தது. அதை அந்தந்தக் காலகட்டத்து மரபுவாதிகள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டிருக்கிறார்கள். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாயின. ஒழுக்கவாதியான தல்ஸ்தோய் எழுதிய ‘இருட்டின் ஆற்றல்’ என்ற நாடகம் பிறழ்வுத்தன்மை கொண்டது என்று சொல்லப்பட்டது. எமிலி ஜோலா, மாப்பசான், டி.எச்.லாரன்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்களின் எழுத்துக்கள் பிறழ்வுகள் கொண்டவை என்று குற்றம்சாட்டப்பட்டன.
சில ஆசிரியர்கள் அவர்கள் எழுத்தில் உள்ள பிறழ்வுத்தன்மையாலேயே இலக்கிய அடையாளம் பெற்றனர். உதாரணம் மார்கி து சேத் [Marquis de Sade] இவரது ஒரு நூல் காதலின் வேதனை என்ற பேரில் தமிழினி வெளியிட்டாக வந்துள்ளது. வன்முறை,காமம் ஆகியவற்றின் சித்தரிப்பில் மானுட இருளை காட்டியவர் என்று அவர் கருதப்படுகிறார். கொடூரத்தில் மகிழும் உளநிலை இவர் பெயராலேயே சேடிசம் என்று அழைக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ச்சொல்லாகச் கூறப்படும் மசோக்கிஸம் என்பது ஆஸ்திரிய எழுத்தாளர் மசோக் [Leopold Ritter von Sacher-Masoch] பெயரால் அப்படி அழைக்கப்படுகிறது. ஆனால் மசோக் பிறழ்வெழுத்தாளராக எண்ணப்படுவதில்லை. ஏனென்றால் தன்னைத்தானே வதைத்து மகிழ்பவன் எந்த சமூக எல்லையையும் கடப்பதில்லை.
லாக்லாஸ்சில நூல்கள் பிறழ்வுத்தன்மையால் மட்டுமே கவனிக்கப்பட்டவை. உதாரணம் பியரி லாக்லாஸ் [ Pierre Ambroise François Choderlos de Laclos] எழுதிய Dangerous Liaisons என்ற நாவல். தீமையில் திளைக்கும் தம்பதியினரைப் பற்றிய கதை இது. அவர்கள் காமத்தில் மட்டும் இன்பம் கண்டடையவில்லை, அதைவிட கூடுதலான இன்பத்தை துரோகத்திலும் ஏமாற்றுவதிலும் கண்டடைகிறார்கள். இதன் திரை வடிவத்தின் தமிழாக்கம் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.
அதன் பின் நவீனத்துவ காலகட்டத்தில் சர்ரியலிச எழுத்துக்களில் பெரிதும் மனப்பிறழ்வுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதை ஒட்டி உருவான குரூர அரங்கு போன்ற மேடைக்கலைகள் அந்தோனின் ஆர்ட்டாட் [Antonin artaud] போன்ற கலைஞர்களை உருவாக்கின. நவீனத்துவத்தின் ஒரு முகம் தனிமனிதனின் அகப்பிறழ்வை எழுத முயன்றது. அதற்காக நனவோடை உத்தி போன்றவை உருவாக்கிக்கொள்ளப்பட்டன.
அந்தோனின் ஆர்ட்டாட்ஐரோப்பாவின் பின்நவீனத்துவ காலகட்டத்தில் பிறழ்வு என்பது ஒரு களியாட்டநிலையாக, அர்த்தங்களில் இருந்துகூட விடுபட்ட மொழியின் வெளிப்பாடாக, உன்மத்தமாகக் கருதப்பட்டது. அத்தகைய ஆக்கங்கள் பல உருவாயின.
விரிவான ஒரு பட்டியலைப் போடலாம். தமிழில் கிடைப்பனவற்றை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். நான் சொல்ல வருவது இது ஒரு புதிய விஷயமல்ல என்றும் எல்லாக் காலகட்டத்திலும் இலக்கியத்தின் ஒரு அம்சமாக இது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது என்றும்தான். இப்போது இந்தப் பெயர் அளிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்
இதை வழக்கமான பாலியல் எழுத்தாக பார்ப்பது வாசகர்களின் வழக்கம். ஆனால் வழக்கமான பாலியல் எழுத்துக்கும் இதற்குமான வேறுபாடு என விமர்சகர்கள் குறிப்பிடுவது இது முழுமையாகவே சமூக நெறிகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மனப்பிறழ்வு நிலைக்கு சமீபத்தில் நின்றுகொண்டிருக்கிறது என்பதை மட்டுமே.
அழகியல் ரீதியாக இவ்வகை எழுத்து ஒருவகை தட்டையான சித்தரிப்பைக் கொண்டிருக்கும். வர்ணனைகளோ விவரிப்புகளோ நுட்பங்களோ இல்லாத தன்மை அதற்கு இருக்கும். காரணம் அது நேரடியாகப் பேச விரும்புகிறது. ஒரு புலம்பலாக, அலறலாக, வசைபாடலாக தன்னை நிறுத்திக்கொள்ள முயல்கிறது
இவ்வகை எழுத்தில் காமத்துக்கு நிகராகவே வன்முறையும் அருவருப்பும் முக்கியமாக இடம்பெறுகின்றன. காமம், வன்முறை, அருவருப்பு ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை என்பது ஒருபக்கம். இம்மூன்றிலும்தான் நாம் எல்லைகளை வகுத்துக்கொண்டு, ஒவ்வாமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். பிறழ்வு என்பது அவற்றை கடந்துசெல்வதுதான்.
இந்தவகை எழுத்துக்கள் உருவாக்கும் அதிர்ச்சி மதிப்பு மற்றும் சிலசமயம் சட்டநடவடிக்கைகள் காரணமாக உடனடியான கவனமும் புகழும் இவற்றுக்குக் கிடைக்கின்றன. இளைய வாசகர்கள் நடுவே ஒரு சிறப்புக்கவனம் இவற்றுக்குக் கிடைக்கிறது. ஆகவே சட்டென்று ஒரு மோஸ்தராக ஆகி அதேபோலப் பலர் எழுத ஆரம்பிக்கிறார்கள். அல்லது செயற்கையான பாலியல் சுரண்டல் எழுத்துக்கு இந்த லேபிலை ஒட்டிக்கொள்கிறார்கள். பிறழ்வெழுத்து மெய்யான பிறழ்வின் உண்மைத்தன்மையாலேயே தன் பெறுமதியை அடைகிறது.
எந்தவகையில் இது முக்கியமானது என்றால் இது சமூக ஆழ்மனத்தின் அதிகம் பார்க்கப்படாத சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது என்பதனால்தான். இலக்கியம் மனித ஆழ்மனதை வெளிப்படுத்துவதற்கான, அறிவதற்கான முயற்சி என்பதனால் இதற்கான இடம் உருவாகி வருகிறது. மனித ஆழத்தின் ஒரு தளம் இது என்பதனால் தவிர்க்கவே முடியாதது.
இலக்கியம் இருவகைகளில் மனிதனின் சாராம்சமென்ன என்று ஆராய்கிறது. ஒன்று, நிகர்நிலையில் இயல்பான தளத்தில். இன்னொன்று, மீறலில் அல்லது உச்சநிலையில். இயல்பான நிலையில் மனிதனின் பெறுமதியை ஆராய்வதே யதார்த்தவாதத்தின் வழிமுறை. உச்சங்களில் வைத்து ஆராய்வது இரண்டு அழகியல்களின் வழிமுறை. கற்பனாவாதம் [ரொமாண்டிசிஸம்] மனிதப்பெறுமதியை ஓர் உச்சத்துக்கு கொண்டுசெல்கிறது. அதன் நேர் மறு எல்லைக்கு கொண்டுசென்று பிறழ்வெழுத்து மனிதப்பெறுமதியை ஆராய்கிறது
இந்தியக் கலை பிறழ்வு அம்சத்தை கலையின் ஒரு தவிர்க்கமுடியாத கூறாகவே கண்டது. நம் சிற்பக்கலையில் எல்லாவகையான பிறழ்வுகளுக்கும் ஓர் உதாரணமாவது உண்டு.சம்ஸ்க்ருத இலக்கியத்தில் அது மிகுதி என்கிறார்கள். பீபத்ஸம் என்னும் ரசம் பெரும்பாலும் பிறழ்வுத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது.
செவ்வியல் எழுத்து என்பது இந்த எல்லாவகைகளையும் உள்ளடக்கியது. அதில் யதார்த்தப்பரப்புக்குமேல் நேர்நிலை உச்சமும் எதிர்நிலை உச்சமும் இருக்கும். கம்பராமாயணத்தில் அறம்சார் மானுட எழுச்சியின் உச்சம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன் போர்ச்சித்தரிப்புகளில் கொடூரமும் பிறழ்வும் உள்ளது. மேலும் சிறந்த உதாரணம் கலிங்கத்துப்பரணி. காமத்தின் உச்சநிலையும் கொடூரம் அருவருப்பு ஆகியவற்றின் உச்சநிலையும் அதில் பிணைந்தே வருகின்றன
கரிச்சான்குஞ்சுநவீனத் தமிழிலக்கியத்தில் எல்லா வகைமைக்கும் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கவேண்டும். பிறழ்வெழுத்துக்கும் உதாரணமான கதை புதுமைப்பித்தனில் உள்ளது. கணவனின் சடலம் அருகே அவன் நண்பனுடன் உறவுகொள்ளும் பெண்ணின் கதை.[விபரீத ஆசை]அது ஏன் அப்போது எழுதப்பட்டது, எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதெல்லாமே ஒரு பெரிய மர்மங்கள்தான். அதன்பின் ஓரளவுக்கு கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்தமானுடம்’.
நனவோடை எழுத்து, தன்னோட்ட எழுத்து, மனப்பிறழ்வைப் பதிவுசெய்யும் எழுத்து போன்றவற்றை நான் இந்த வகையில் சேர்க்கவில்லை. லா.ச.ரா, நகுலன், மு.தளையசிங்கம்,சம்பத் போன்றவர்கள் அவ்வகையில் எழுதியிருக்கிறார்கள்.
அடித்தள மக்களின் வாழ்க்கையின் பிறழ்வுகளை எழுதுவது என்பது பிறழ்வெழுத்து அல்ல. ஜி.நாகராஜன் எழுதியது யதார்த்தவாத நோக்கில் எழுதப்பட்ட பிறழ்ந்த வாழ்க்கை. ஜெயகாந்தன் அதை எழுதியிருக்கிறார். என்னுடைய ‘ஏழாம் உலகம்’ அதில் குறிப்பிடத்தக்க ஆக்கம். லக்ஷ்மி சரவணக்குமாரின் உப்புநாய்கள் கருத்தில்கொள்ளப்படவேண்டிய படைப்பு.
இவையெல்லாமே பிறழ்ந்த வாழ்வின் வெளியை ஒருங்கிணைவுள்ள புனைவினூடாக காட்டுபவை. அப்புனைவுவெளியினூடாக நாம் ஒருங்கிணைவுள்ள, விழுமியங்கள் கொண்ட ஒரு படைப்பாளியைச் சென்றடைய முடியும். ஒரு பார்வையை கண்டடையமுடியும்.அந்த வகை எழுத்தை யதார்த்தவாதத்தின் ஒரு பகுதி என்றே சொல்லமுடியும். எமிலி ஜோலாவோ, அலக்ஸாண்டர் குப்ரினோ எழுதியவை அவற்றுக்கு முன்னுதாரணங்கள்
பிறழ்வெழுத்து வழியாக நாம் அந்த ஆசிரியனை நோக்கிச் செல்லமுடியாது. அந்த ஆசிரியனின் பார்வையை அடையமுடியாது. அந்தப்புனைவைக்கொண்டு நாம் ஒரு புனைவாகவே அந்த ஆசிரியனை உருவாக்கிக்கொள்ள முடியும். அவனும் அதை உருவாக்கி உருவாக்கி அழிப்பான். சேத் அப்படிப்பட்ட ஒரு புனைவுதான்.
தமிழில் இன்று பிறழ்வெழுத்தின் முதன்மை உதாரணம் சாரு நிவேதிதாதான். இந்திய அளவில் நான் வாசித்தவரை இன்னொரு படைப்பாளியை தயக்கமில்லாமல் பிறழ்வெழுத்தை உருவாக்கியவர் என்று சொல்லமுடிவதில்லை. சாரு நிவேதிதாவின் எழுத்தில் விழுமியங்கள் மட்டுமல்ல புனைவின் ஒழுங்குகள் கூட சிதறிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து எந்த உண்மையையும் நாம் கண்டடைய முடிவதில்லை. விழுந்துடைந்த கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல அதை நாம் பார்க்கிறோம். எந்த ஒரு நியதியைக்கொண்டு பார்த்தாலும் அவருடைய எழுத்து வெளியே கிடக்கிறது.
சாரு நிவேதிதா புனைவை மட்டுமல்ல அதை எழுதும் தன்னையும் புனைந்துகொண்டே இருக்கிறார். உண்மை பொய் என்ற இருமைக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர் அவர். அவரை தொடர்ந்து அத்தகைய எழுத்தை உருவாக்குபவர்கள் தமிழில் எவரும் இல்லை என்றே நினைக்கிறேன்.
இன்றைய காட்சி ஊடகம் குறிப்பாக இணையம் பிறழ்வின் எல்லா எல்லைகளுக்கும் சென்று விட்டபின் இவ்வகை எழுத்துக்களின் உண்மையான மதிப்பு என்ன என்பது ஐயமாகவே இருக்கிறது. நாளை இவை ஏதேனும் அதிர்ச்சிகளை உருவாக்குமா? மொழியில், கூறுமுறையில், படிமங்களில் இவை புதியநகர்வுகளை உருவாக்கினால் மட்டுமே இவை இலக்கியமதிப்புப் பெறுகின்றன.
மனித அகநிலை அது எவ்வகையில் வெளிப்பட்டாலும், என்ன விளைவை உருவாக்கினாலும், அது உண்மையானதும் தீவிரமானதுமாக இருக்கும்பட்சத்தில் இலக்கியத்துக்கு முக்கியமானதே. இலக்கியத்துக்கு எந்த நிபந்தனைகளும் இருக்கமுடியாது.
இலட்சியவாதம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த எழுத்துக்கு என்ன முக்கியத்துவம் இருக்கமுடியும்? அது நேர்மையான தீவிரமான அக எழுச்சியின் விளைவா என்பது மட்டுமே ஒரே செல்லுபடியாகக்கூடிய கேள்வி. அதே கேள்விதான் இந்த வகை எழுத்துக்களுக்கும்.
ஆனால் முழுமையான பிறழ்வெழுத்து தமிழில் மட்டுமல்ல பிற இந்திய மொழிகளிலும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்திய மொழிகளில் முதன்மையான பிறழ்வெழுதாளரான சாரு நிவேதிதா கூட தன்னை தொடர்ச்சியாக மறுவரையறை செய்து முன்வைக்கவேண்டியிருக்கிறது.சாருவின் ஆன்மிக, அரசியல்,அறவியல் தோற்றமளித்தல்கள் மார்கி து சேதுக்கோ, புக்கோஸ்வ்ஸ்கிக்கோ தேவைப்பட்டதில்லை. இது நம்முடைய வாசிப்புச்சூழல், நமது கூட்டு உளவியலின் அழுத்தத்தின் விளைவு
ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவர்கள் இன்று தங்களுடையெதனக் கருதும் ஜனநாயக, மதசார்பற்ற, தாராளவாத நாகரீகத்தையும் சமூக அமைப்பையும் உருவாக்கிக்கொண்டு இருநூறாண்டுகளாகின்றன. அவற்றின் முதிர்ச்சிக்காலகட்டத்தில்தான் இந்த பிறழ்வெழுத்துக்கான இடம் உருவாகிறது. நவீன நாகரீகத்துக்கு எதிரான குரல் இந்த அளவு தீவிரமாக எழுகிறது.
நாம் கடந்த முக்கால்நூற்றாண்டாகத்தான் நம் நவீன நாகரீகத்தைக் கட்டி எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறோம்.நாம் காணும் பிறழ்வுகள் முழுக்க நம் இறந்த காலத்திலேயே உள்ளன. அவற்றை நோக்கிய கொந்தளிப்பும் எதிர்ப்புமே நம் இலக்கியத்தில் பெரும்பகுதி. ஆகவே இங்கே இலட்சியவாதமே இலக்கியத்தின் முகமாக உள்ளது.
இருப்பின் சுமையை விட, பாலியல் கட்டுப்பாட்டை விட பக்கத்து வீட்டான் பசியால் இறப்பதும் அண்டை வீட்டார் மாறி மாறிக் கழுத்தை அறுத்துக்கொள்வதும்தான் நமக்கு முக்கியமாகப் படுகிறது. நமது பிரச்சினை நமது மரபைச் சலித்துச்சலித்து எடுத்து அதைக்கொண்டு நம்முடைய நிகழ்காலத்தை உருவாக்கிக்கொள்வதில் உள்ளது. நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய பிரச்சினையைத்தான் நம் எழுத்தாளர்கள் எழுதமுடியும், எழுதுகிறார்கள். அதுவே மிக இயல்பானது, வரலாற்று நியாயம் உள்ளது. பிறழ்வெழுத்து அதன் பெரும்பரப்பில் ஒரு சிறு பகுதியாக உள்ளது, அது என்றுமிருக்கும்.
ஜெ
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Nov 18, 2011
ஆகுதி-[சிறுகதை] மயிலன் சின்னப்பன்
இப்போது, தானிருக்கும் அமைதியற்ற மனநிலைக்கும் அந்த நோயாளிக்கும் ஓர் அழுத்தமான தொடர்பு இருப்பதாக ஏனோ தோன்றியது. பேனாவை ஊன்றியபடி யோசித்துக் கொண்டிருந்தாள். எதுவுமே எழுதவில்லை. ராஜூ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் காதுக்குள் கேட்டது. எத்தனை சந்தோஷமான நாளையும் அவனால் ஒரே நொடியில் ஒன்றுமில்லாமல் செய்துவிட முடிகிறது. அந்த அறிக்கையை அப்படியே விட்டுவிட்டு, எழுந்து, காவ்யாவின் படுக்கைக்குப் போனாள். சலைன் தடையின்றி இறங்கிக் கொண்டிருந்தது. அற்பமேயாயினும் அந்தக் கணத்திற்கான ஆகச்சிறந்த நிவாரணம் அது மட்டும்தான்.
ஆகுதிநான் அவர் மற்றும் ஒரு மலர்!-எம்.கே.குமார்
அன்பு ஜெ.
நலம். நலம்தானே? சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா, கடந்த 2019, ஆகஸ்டு 17 & 18 ஆகிய தேதிகளில் இரு நிகழ்வுகளுடன் நடந்துமுடிந்தது. முதன்முதலில் ஆண்டுவிழா என்ற ஒன்றை, நாங்கள் 2013-இல் ஆரம்பித்ததும், அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராய் வந்து சிறப்புரை ஆற்றியவர் நீங்கள் என்பது நினைவிலிருக்கும். அச்சிறப்புரையில் நீங்கள் குறிப்பிட்ட ‘யாருமில்லை தானே கள்வன்’ என்ற கபிலரின் பாடலும், அதில்வரும் ’குருகு’ என்ற பறவையும் மற்றும் சரஸ்-வதி தமிழ்க்கதையும் எப்போதும் நினைவிலிருப்பவை. தங்களைத்தொடர்ந்து, ஜோ டி குரூஸ், நாஞ்சில் நாடன், தமிழச்சி தங்கபாண்டியன், சாரு நிவேதிதா போன்ற படைப்பாளிகள் வாசகர் வட்ட ஆண்டுவிழாக்களைச் சிறப்பித்தனர்.
சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆண்டுவிழாவில், இரண்டு சிறப்பான அம்சங்கள் எப்போதும் உண்டு. ஒன்று, தேர்ந்த எழுத்தாளரின் இலக்கிய உரை. இரண்டாவது வாசகர் வட்ட நண்பர்களின் புத்தகவெளியீடுகள்.
இந்தமுறை சிறப்பு விருந்தினராக, கவிஞர் தேவதேவனை அழைக்கலாம் என முடிவுசெய்தோம். தேவதேவன் அகவயமாய் உரையாடுபவர், மேடையில் அவர் உணர்வெழுச்சியாய் உரையாற்றுவது சிரமம் என்று அறிந்திருந்தோம். எனவே எழுத்தாளரும் இலக்கியமேடைப்பேச்சில் சிறப்புடையவராகவும் இருக்கும் இன்னொரு எழுத்தாளரையும் அழைக்கலாம் என்றவுடன் பவா செல்லத்துரை நினைவில் வந்தார். அவருடன் வம்சியையும் அழைக்கலாம் என்ற யோசனை வந்தது. சிங்கப்பூர் நண்பர்கள் உமா கதிரவன், பாண்டித்துரை, நஸீர் மற்றும் நான் உள்ளிட்டோரின் உதவியுடன், எழுத்தாளர் அஸ்வகோஷ் குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கி, சென்னையில் வெளியிட்டிருந்தார் வம்சி. நாஞ்சில் நாடன், நீங்கள், கோணங்கி, இமையம், சு.வேணுகோபால் உள்ளிட்டோரும் அந்த ஆவணப்படத்தில் பேசியிருந்தீர்கள். சிங்கப்பூரில் அதை வெளியிடும் திட்டத்தால், இவர்களுடன் வம்சியும் இங்கு வந்தார்.
திரு தேவதேவனிடம் பேசி, அவரைச் சிங்கப்பூருக்கு அழைத்தபோதுதான், அவருக்கு கடவுச்சீட்டு இல்லை என்றறிந்தோம். எடுக்க முடியுமா என்று கேட்டோம். சரவணன், கூடலிங்கம் போன்ற விஷ்ணுபுர வாசகவட்ட நண்பர்கள், அவர் பாஸ்போர்ட் எடுக்க உதவினார்கள். சென்னை – தூத்துக்குடி பயண வசதிக்கும் உதவிபுரிந்தார்கள். சென்னையில் பவாவும் வம்சியும் அவரை இணைத்துக்கொண்டார்கள். சென்னை – சிங்கப்பூர் விமான நிலையங்களின் பயணநடைமுறை சிக்கல்களில், வம்சி, தேவதேவனை நன்கு பார்த்துக்கொண்டார். விஷ்ணுபுர நண்பர்கள், வம்சி ஆகியோருக்கு எங்கள் நன்றி.
ஆகஸ்டு 16 வெள்ளிக்கிழமை மதியம் 1230 அளவில் சிங்கப்பூர் விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள் மூவரும். நான், சரவணன் மற்றும் பவாவின் ரசிகர் என்று அவரைக் காண வந்த பானுகுமார் ஆகியோர் காத்திருந்தோம். மூவரும் வெளியில் வந்தார்கள். கட்டியணைத்துக்கொண்டோம். தேவதேவனை நேரில், கடல்தாண்டிப் பார்க்கையில் பேருவகை. காலதூரமற்று உருக்கொண்டு கண்ணெதிரில் வந்து நிற்கும் மின்னல் போல் உற்சாகமாய் இருந்தார்.
பவா சிங்கப்பூர் வருவதை முகநூலில் அறிவித்ததும், சிங்கப்பூரிலிருந்து பல அழைப்புகள் வந்தனவாம் அவருக்கு. சந்திக்க ஆவலாய் இருப்பதாய்ச் சொன்னவர்கள், வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்டவர்கள்போக, ’ஏன் வாசகர் வட்டம் நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள், நான் அந்த நிகழ்ச்சிக்கெல்லாம் வரமாட்டேனே’ என்றுகூட கவலையோடு விசாரித்தார்களாம் சிலர். பவாவும் தற்போதுதான் முதன்முறையாக சிங்கப்பூருக்கு வருவதாகச் சொன்னார்.
ஆண்டுவிழா நிகழ்ச்சியில், சித்ரா ரமேஷின் ‘ஒரு கோப்பை நிலா’ என்ற கவிதை நூல், எம்.கே.குமாரின் ‘ஓந்தி’ என்ற சிறுகதை நூல், அழகுநிலாவின் ‘பா அங் பாவ்’ என்ற சிறுவர் பாடல்கள் நூல் மற்றும் ஷா நவாஸின் “Not Unto the Taste” என்ற கவிதை மொழிபெயர்ப்பு நூல் ஆகியன வெளியீடு கண்டன. நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்கள் தேவதேவனும் பவாவும்.
’மின்னற்பொழுதே தூரம்’ என்று தூரமும் காலமும் அற்ற கவிதைவெளிக்குள் சரக்கென்று தன் பேச்சில் இறங்கினார் தேவதேவன். தாகூரின் “தண்ணீரில்லாமல் வாழ்ந்துவிட முடியும்; கவிதையில்லாமல் வாழ்ந்துவிட முடியாது என்றும், ’கவிதையை எழுதாதே, கவிதையாய் வாழ்’ ’காலமும் இடமும் அற்ற நம் வாழ்வே ஒருகவிதைதான்’ என்பன போன்ற மேற்கோளினை வைத்து ’ஏஞ்சல்’ உள்ளிட்ட கவிதைகளை வாசித்து சிற்றுரை ஆற்றினார் தேவதேவன்.
தன் சிறப்புரையில் பல்வேறு சிறுகதைகளைத் தொட்டு வாழ்வின் உன்னதங்களை எடுத்துச்சொன்னார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. பவாவின் ’கதை கேட்கலாம் வாங்க’விற்கு ஒரு ரசிகத்தலைமுறை உருவாகிவருகிறது. அனைவரும் கதைசொல்லியாக பவாவை அடையாளம் காண்கிறார்கள். முன்பெல்லாம், தன்முனைப்புப்பேச்சாளர்கள், பக்தி, பகடிசார்ந்த பேச்சாளர்களுக்குத்தான் இவ்வளவு ரசிகர்களைக் கண்டதுண்டு. புத்தகங்களை வாசிக்காது, காணொளிகளின்வழி இலக்கியம்பக்கம் வரும் ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. இவர்களில் ஓரிருவர், அக்கதையாடலில் வரும் கதைகளைத் தேடிப்பிடித்து வாசித்து சிறிது நகர்ந்து தன் ரசனையுணர்வை அடையும்போது மேலும் இது விரிவடையலாம்.
பவாவின் குரலிலிருக்கும் பாசாங்கில்லாத அந்நியோன்யம் கதையில் ஊடுபாவியிருக்கும் அன்பை, அறத்தைச் சொல்லிக்கொண்டு செல்லும்போது கேட்பவர்களிடையே ஓர் உணர்வெழுச்சியை அது எழுப்புகிறது. தேர்ந்த மலர்களைக்கொண்டு கட்டிய ஒரு பூங்கொத்தைப்போல மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. கதையிலிருந்து ஒரு சினிமா காட்சி மேலெழுந்துவருவதைப்போல, ஓர் எழுத்தாளன், ஓர் கதைசொல்லியின் கைகொண்டு மீண்டு எழுந்துநிற்கும் ஒரு எளிய வெற்றியின் அடையாளமாய் அது இருக்கிறது.
ஆகஸ்டு 18, மாலை 6 மணி அளவில், பீஷான் நூலகத்தில், எழுத்தாளர் ’அஸ்வகோஷ்’ (இராஜேந்திர சோழன்) குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் படைப்பாளியாகவும் சமூகப்பணிகளில் களப்போராட்டம்கண்ட தோழராகவும் அவருடைய வாழ்க்கை, நெகிழ்ச்சியைத் தந்தது. இத்தகையை போராட்டங்களின் முடிவில் அவருக்கு எஞ்சுவது என்ன என எண்ணும்போது, ’பின்தொடரும் நிழலின்குரல்’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. நிகழ்ச்சியில் ’அஸ்வகோஷ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்-இயக்குனர் வம்சியின் உரையும் கலந்துரையாடலும் நடைபெற்றன. எழுத்தாளர் அஸ்வகோஷின் படைப்புகள் குறித்தும் நிகழ்ச்சியில் பேசப்பட்டன. அவருடைய ’கடன்’ கதை எப்போதும் என்னால் மறக்கமுடியாதது. ’இன்றுபோய் நாளைவா’ என்பது கடனுக்கெனவே சொல்லப்பட்டதுபோலும். கிராமங்களில் கடன்வாங்க அலைவதே கடனுக்குமுன்பு பெருஞ்சுமையை வரவழைக்கும். அதை அப்படியே சொல்லும் இக்கதை. கொண்டாரெட்டியாரிடம் கடன்வாங்க பத்துநடை நடப்பான் மண்ணாங்கட்டி இக்கதையில். ‘புற்றில் உறையும் பாம்புகளும்’ பிடித்த இன்னொரு கதை.
ஆகஸ்டு 18, காலை 10 மணிமுதல் 12.30வரை, தேசிய நூலகத்தின் பாசிபிலிட்டி அறையில், கவிதை குறித்த ரசனைப்பயிலரங்கு, கவிஞர் தேவதேவன் தலைமையில் நடைபெற்றது. நானும் பாரதி மூர்த்தியப்பனும் தொகுத்தோம். தேவதேவனின் கவிதைகளில் பிடித்த கவிதைகளை, கவிதைகளில் ஆர்வமும், இப்போது சிங்கப்பூரில் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் சிலரை அழைத்து, அவர் முன்னால் வாசித்து, அதுகுறித்து மேலும் உரையாடும் சாத்தியம் அல்லது அதுகுறித்த தேவதேவனின் பார்வையை, பேச்சை ரசித்துக்கொண்டிருந்தோம். ஏறக்குறைய இரண்டறை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் தேவதேவன் பேசிக்கொண்டேயிருந்தார். ’இப்படி அமர்ந்து, இடைவெளிவிட்டு பேசுவதானால், இன்னும் பலமணிநேரம்கூட என்னால் பேசிக்கொண்டிருக்கமுடியும்’ என்றார்.
நீ கற்றது கவிதையெனில், கல்லாதது ஏதுமில்லை; கவிதையாய் வாழும்போது கவிதையைச் செய்வது அவசியமில்லை என்றும் சொன்னார். மேலும், தன்னுடைய கவிதைகள், இயல்பாக தான் வாழும் சூழலிருந்து எழுந்தவை என்றும் கவிதையில் முன்முடிவுகள் ஏதுமற்று அதனை எதிர்கொள்வது அவசியம் என்றும் சொன்னார் தேவதேவன். எந்த உணர்வானாலும் உச்சம் எய்த வேண்டும். உச்சத்திற்குப் பேர்தான் கவிதை. எந்த கஷ்டம் கொடுத்தாலும் என்னை இதிலிருந்து பிரிக்க முடியாது என்ற கவித்துவ வாழ்வை தன் ஆன்மா எப்படி பிரிக்க இயலாதபடி பிணைத்திருக்கிறது என்றும் உரைத்தார். உயிர்த்துடிப்புடன் வாழ்வதன் ஒரே வெளிப்பாடு கவிதைதான். அழகியலும் ரசனையும் தன்னை மிகவும்நேசிக்கும் மனிதனை உருவாக்கும், மேலும் அதனால் தன்னைப்போலவே பிறரையும் நேசிக்கும் மனிதனையும் அது தொடரும் என்ற ’கவிதைமதம்’ போன்றதொரு வாழ்வியல் கோட்பாட்டை அவர் தன் கவிதைகள் மற்றும் ரசனையின்வழி முன்வைத்தார். எத்தனையோ மதங்கள் இருந்தாலும் இம்மதத்தை யாராவது ஓரிருவர் பின்பற்றச்செய்துவிட்டால்போதுமே எனக்கு என்றும் ஆசைப்படுகிறார்.
‘அப்போ, ஜெயமோகன் என்னைக் கூப்பிடச்சொல்லலியா’, என்று அடிக்கடி கேட்டார். ‘இல்லை சார், ஏன் அப்படிச் சொல்லிக்கொண்டேயிருக்கிறீர்கள்‘ என்றேன். ‘இல்லை, அவரை வாசிச்சவங்கதான் என்னை வாசிச்சவங்களா சொல்றாங்க. நிறையப்பேரு அவர் என்னைப்பத்தி எழுதித்தான், என்கிட்டே வந்ததாச்சொல்றாங்க’ என்றார். உங்களை இங்கே சிலர் முன்னரே வாசித்திருக்கிறோம். ஜெயமோகனின் எரிமருள்வேங்கை போன்ற கட்டுரைகளின்வழி உங்களை மேலும் நெருங்கியிருக்கிறோம் என்றேன். ஜெயமோகன் வழியாகவே என்னை அதிகம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்து, ஜெயமோகன்தான், தேவதேவன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார் என்று சொன்னால்கூட நம்பிவிடுவார்களாயிருக்கும் என்றார். ஒரு வினாடி அமைதி நிலவ, பிறகு வாய்விட்டுச்சிரித்தோம். உண்மையாய் அப்படி நடந்தால்கூட ஆச்சர்யமில்லைதான்.
தமிழின் எழுத்துவடிவங்களை மாற்றி, எளிமையாக்கும் யோசனைகள் அவரிடம் இருக்கின்றன. சில குறியீடுகளைப் பயன்படுத்தி, தமிழில் உள்ள எழுத்துக்களைக் குறைத்து மேலும் எளிமையாக்கமுடியும் என்கிறார்.
நானும் சரவணனும் தேவதேவனை ‘உட்லண்ட்ஸ் வாட்டர் ஃப்ரொண்ட்’ என்ற மலேசியாவுக்கருகில் கடலுக்குள் இருக்கும் பாலத்திற்கு அழைத்துச்சென்றோம். நல்லா இருக்குல்லே..இந்த இடம் என்றார் தேவதேவன். கடலைச்சுற்றி விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்க, திடீரென, ‘உங்க ஏஞ்சலை இங்கு கூட்டிவாறதுண்டா?’ என்றார் என்னிடம். நானும் சரவணனும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு, ‘எந்த ஏஞ்சல் சார், ஏஞ்சல் ஒண்ணா, ஏஞ்சல் ரெண்டா, இல்லை மூன்றா’ என்றேன். வாய்விட்டு சிரித்துவிட்டார். விஷ்ணுபுர விழா, ஊட்டிமுகாம்களில் அவர் எப்போதும் சித்தபிரமைகொண்டவர் போல அமர்ந்திருப்பார். அவர் சிரிக்கும் ஒருபடம்கூட அங்கே பார்த்ததாய் ஞாபகம் இல்லை. சிங்கப்பூரில் அவர் அடிக்கடி சிரித்தார். ‘இறுதியில், எல்லா ஏஞ்சலும் ஒண்ணுதானே..ஏஞ்சல்களால் நிறைஞ்சதுதானே இந்த உலகமும்’ என்றார்.
இன்னும் சில நாட்கள் அவர் இங்கு இருக்கமட்டாரா என்று ஏங்கியதாய்ச் சொன்னார்கள் சிலர். பலர் கண்கலங்கினார்கள். மிக நிறைவான பொழுது தேவதேவனுடன்..மிக்க நன்றி என்று சிங்கப்பூரிலிருக்கும் எழுத்து நண்பர்கள் முகநூலில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
கவிதை ரசனையரங்கில் நான் கடைசியாக இந்தக் கவிதையை வாசித்தேன்.
புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்
மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது
அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .
ஒரு நிமிடம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவரும் என்னையே. காலம் கடலென மிதந்தது. ஏதாவது அர்த்தம் கேட்டுவிடுவானோ என அவரும் ஏதாவது விளக்கம் சொல்லிவொடுவாரோ என நானும் சபையும் உறைந்திருக்க, “அதை அப்படியேவிட்டுடுவோமே; யாரும் எதுவும் சொல்லாம” என்று கூட்டத்திலிருந்து குரல் கொடுத்தார் பவா செல்லத்துரை. அத்தனை பேருடைய உள்ளத்திலும் மலர்ந்துகிடந்தது அந்த மலர்.
தேவதேவனை என் ஆன்மாவுடன் உரையாடும் தோழன் என்று நீங்கள் எழுதியைப் படித்திருக்கிறேன். அன்றைய நிகழ்ச்சியின் முடிவில், அங்கு வந்திருந்த அத்தனை பேருடைய ஆன்மாவிலும் அவர் ஊடாடியிருப்பதாக, நானும் சொன்னேன். இலக்கியக்கடல், குடும்பக்கடல், பொருளாதாரக்கடல் என அலைக்களிக்கும் அத்தனை அலைகளிலும் அல்லலுற்று வந்தவர்களைக் கரையேற்றாமல், ஆழ்கடலுக்கு அழைத்துச்சென்று அவர்களை மிதக்கவிட்டு, அவர்களின் கையில் ஓர் அழகிய ரசனைமலரைக் கொடுத்துச்சென்றார் அவர். தேவதேவனின் கவிதை மலர் கூம்பியும் விரிந்தும் விளக்காகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்தலின் ருசிகாட்டி திசைகாட்டி எங்கள்முன் இப்போதும் நிற்கின்றன.
எம்.கே.குமார்
சிங்கப்பூர்
படங்களுக்கு
https://www.facebook.com/venkatachalam.ekambaram.5/media_set?set=a.2585232184834490&type=3
https://www.facebook.com/venkatachalam.ekambaram.5/media_set?set=a.2586447468046295&type=3
https://drive.google.com/open?id=18iNTfHX66qAJ6WLKCT9uilMM6SNNkXDG
எம்.கே.குமார்
மரம்போல்வர் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
சுஷீல் குமாரின் ‘மரம்போல்வர்‘ கதை வாசித்தேன். முதலில் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். கதை சுவாரசியமாக இருந்தது. இன்று வரும் கதைகளில் பல அடிப்படையான சுவாரசியத்தை இழந்துவிட்டவை. என்ன காரணத்தால் என்றால் கற்பனையே இல்லாமல் எதையாவது சொல்கிறார்கள். அதோடு கதையை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் நெடுநேரம் சும்மா எதையாவது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்கதை சுவாரசியமாக தொடங்கி கடைசி வரை வாசிக்கவைக்கிறது. அதற்காக பாராட்டவேண்டியதுதான்
இன்னொன்று, இந்தக்கதையிலுள்ள மர்மம். அந்த பெரிய மரத்தை வைத்துக்கொண்டு அக்குடும்பத்தின் இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கையைச் சொல்கிறார். ஒரு அன்புக்குரிய மரத்தை முறிக்கவேண்டியிருப்பதுதான் கதை என்றால் இது ஒரு வழக்கமான கதைதான். புளியமரத்தின் கதையில் சுந்தர ராமசாமி சொன்னதுக்குமேல் சொல்வதற்கு இல்லை. இந்தமாதிரியான கதைகள் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. மரத்தை முறிப்பது, பழையவீட்டை இடிப்பது. இதெல்லாமே ஆனந்தவிகடன் தீம்தான்
இந்தக்கதையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அந்த மரத்திற்கு இருக்கும் மிஸ்டிக் தன்மைதான். அப்பாவுக்கு அந்த மிஸ்டிக் தன்மை முக்கியம். அதனால் அந்த மரம் அவருக்கு தெய்வம். ஆனால் பிள்ளைகளுக்கு அது இடத்தை அடைத்திருக்கும் வெறும் மரம். இந்த பார்வை வேறுபாட்டைச் சொல்வதனால் இந்தக்கதைக்கு ஒரு மேலதிகமான குறியீட்டு அர்த்தம் வருகிறது. ஆகவே கதைக்கு ஓர் இலக்கிய அமைதியும் உள்ளது
ஆனால் இந்தக்கதை இன்னும்கூட மெச்சூர் ஆகியிருக்கலாம். மிஸ்டிக் மரம், அதை அடுத்த தலைமுறை தூக்கிவீசிவிடுகிறது. இவ்வளவுதான் இந்தக்கதையில் இருக்கிறது. நாஞ்சில்நாடன் சுடலைமாடனை இப்படி தூக்கிப்போட்டுவிடுவதைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறார். இந்தக்கதையில் அந்த மரம் இன்னும் ஒருபடி ஆழமாக வந்திருக்கவேண்டும். எப்படி என்று சொல்லத்தெரியவில்லை. நாஞ்சில்நாடன் கதையில் இருப்பதைவிட ஒருபடி மேலே செல்லாவிட்டால் இதை எழுதியிருக்கவேண்டாம் அல்லவா?
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
சுஷீல்குமார் இப்போது நிறைய எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர், அவருடைய தொகுதியும் வரப்போகிறது என்று நினைக்கிறேன், அவருடைய கதைகளில் குமரிமாவட்டத்தின் பண்பாட்டின் நுட்பங்கள் உள்ளன. பாவனைகள் இல்லாத யதார்த்தம் உள்ளது. ஆனால் இரண்டு பிரச்சினைகள். ஒன்று எல்லா கதைகளுமே ஒரே வடிவில் உள்ளன. துண்டு துண்டாக கதையை டாட் போட்டு எழுதுகிறார். அது வாசகனுக்குச் சலிப்பு ஏற்படுத்துகிறது.
இந்தக்கதையில் உள்ளதுபோல மிஸ்டிக் அம்சம் பலகதைகளில் உள்ளது. ஆனால் அந்த மிஸ்டிக் அம்சத்துக்கு நவீனப்பார்வையில் ஒரு விளக்கத்தை அளிப்பதில்லை. அதாவது கதையில் ஆசிரியர் உருவாக்கும் மிஸ்டிசிசம் இல்லை. ஏற்கனவே வேப்பமரம் ஒன்று அப்படி இருந்தால் என்னவகையான மிஸ்டிக் உணர்வு இருக்குமோ அதையே பதிவுசெய்கிறார். ஆசிரியரின் பங்களிப்பு என்று ஒன்று இருந்தால்தான் அது அடுத்தகட்டத்துக்குச் செல்லும். மரபிலுள்ள ஒரு தொன்மமோ படிமமோ நவீனக்கதையில் கவித்துவமான கூடுதல் அர்த்தம் அடைந்திருக்கவேண்டும்
சுஷீல்குமார் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள்
எம்.சந்திரசேகர்
மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார் மறைமுகம், மூங்கில் -கடிதங்கள்சென்னை வெண்முரசு கலந்துரையாடல் பிப்ரவரி 2021
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்..
இந்த மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறு அன்று நிகழ்கிறது.
வெண்முரசு நாவல் வரிசையின் பதினாறாவது நாவலான
“குருதிச்சாரல்” நாவல் குறித்த கலந்துரையாடல் சென்ற மாதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக அதில் வரும் இளைய யாதவரின் தூது குறித்து “பாண்டவதூதன்” என்ற தலைப்பில் நண்பர் ‘அனங்கன்’ அவர்கள் உரையாற்றுவார். வரும் ஞாயிறு அன்று (14-02-2021) மாலை 5:00 மணிக்கு கலந்துரையாடல் நிகழும்.
வெண்முரசு வாசகர்களையும் வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்
14-02-2021 மாலை 5 மணி முதல் 8 மணி வரை
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
–
சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்,
தொடர்புக்கு: 9965315137
முதற்கனல்,மழைப்பாடல் வாசிப்பு
வணக்கம்.
வெண்முரசு எழுதப்பட்ட ஆரம்ப நாட்களில் அந்த புத்தகங்களை கடைகளிலும் மாவட்ட புத்தகக் காட்சிகளிலும் தேடியதுண்டு.இன்னும் வெண்முரசு அச்சாக வில்லை என்ற பதில் கேட்டு சோர்வுற்றுள்ளேன். அப்போது ஜெமோ இணையத்தில் வெண்முரசு தொடர்ந்து வெளியாவதெல்லாம் தெரியாது. பிறகு புத்தகங்கள் அச்சானப்பின்பு அதன் பேருருவம் கண்டு சோர்ந்து போனேன். தற்போது வெண்முரசு வரிசையில் முதல் மூன்று புத்தகங்களை வாசித்து விட்டேன்.
கோவிட் கெடுபிடி உச்சத்தில் இருந்த அந்த முதல் இரு மாதங்களில் ஒரு நாள் துவங்கினேன். திடீரென்றெல்லாம் துவங்கவில்லை. வெண்முரசு வாசிப்பதற்கு முன்பே சில ஆண்டுகள் அதற்கான தயார் நிலை என்னுள் துவங்கி விட்டது. சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக என்னுள் ஒரு தயார் நிலை உருவாகியதை இப்போது உணர்கிறேன். வெண்முரசு சம்பந்தமான ஜெமோவின் இணையத்தில் உள்ள பேட்டிகள் கட்டுரைகள் என அனைத்தையும் வாசித்திருப்பேனோ என்று தோன்றுகிறது. பாரதம் மூல நூல் வியாசர் எழுதியது வெறும் 2000 பக்கத்திற்குள்ளேதான். பிறகு அவரது மாணவர்கள் பாரதத்தை பெருக்குகிறார்கள் என்ற தகவலெல்லாம் சுவாரஸ்யம்.
இடையிடையே கமல் இளையராஜா பங்கு கொண்ட வெண்முரசு வெளியீட்டு நிகழ்ச்சியையும் பார்த்துக் கொள்வேன். துவங்கிய நாட்களில் ஐந்தைந்து பகுதிகளை கங்கணம் கட்டிக் கொண்டு முதற்கனலில் வாசிப்பேன். முதற்கனல் வாசித்துக் கொண்டிருக்கும் போதே வெண்முரசு நடை வசப்பட்டு விட்டது. முதலில் நடை சற்று தடுமாற செய்ததும் மறக்க முடியாதது. இந்த நோய் காலத்தில் செவ்விலக்கிய வாசிப்பு சரியானதாக இருக்கும் என தோன்றியது வெண்முரசில் இறங்க துணிச்சலையும் ஆர்வத்தையும் தந்தது. தற்போது பேருந்து நிலையம் வங்கி என எங்கிருந்தாலும் வெண்முரசு குள்ளே என்னால் சட்டென நுழைய முடிகிறது.
முதற்கனல் மழைப்பாடல் போன்ற ஆரம்ப புத்தகங்களை வாசித்து விட்டால் தொடர்ந்து வெண்முரசு நம்மை அழைத்துச் செல்லும் என்கிறார் ஜெமோ. எனக்கு ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது இல்லை.எந்த வேலையும் இன்றி வீட்டுக்குள்ளேயே இருந்த கோவிட் காலம் தொடர்ந்திருத்தால் நிறைய தூரம் வெண்முரசில் பயணித்திருப்பேனோ என்றே தோன்றுகிறது. வாசிக்க வைத்திருக்கும் மற்ற புத்தகங்களும் வெண்முரசு விற்கு தடை போடுகின்றன. பீஷ்மர் காடுகளுக்குள் அலைவதும் தொடர்ந்து பயணம் செய்து தன்னை தகவமைப்பதும் ஆழப் பதிந்தது. எங்கோ ஓரிடத்தில் பயணத்தின் இடையே ஓய்வில் பீஷ்மர் பற்றி பீஷ்மரிடமே ஒரு பாணன் பாடுவது கதைப்பது சிறப்பு
அம்பை அம்பிகை அம்பாலிகை.. மூவரில் மிரட்டுபவர் அம்பைதான். மறுபிறவியையெல்லாம் கொணராமல் அம்பை பீஷ்மரை பழி வாங்க தனது வாரிசை வளர்த்தெடுப்பதை கூறுவது தர்க்க புத்திக்கு நல்ல தீனி. இதுபோல முக்கியமான சிக்கலான இடங்களை ஜெமோ தர்க்க ரீதியாக கடந்து செல்வது வெண்முரசுவின் பலமும் ரசனையும் ஆகும்.
விஷ்ணுபுரத்தில் ஒன்று நினைவிற்கு வருகிறது. பெரும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். அருகே செல்லும் ஒருவரை நெருப்பு இழுத்துக் கொள்ளும். தீ பூதம் இழுத்து விழுங்கிவிட்டது என கூறும் ஜெமோ அடுத்து தர்க்கத்தை துவங்குவார். பெரும் தீ எரியும் இடத்தில் காற்று காலியாகும் வெப்பத்தால். காலி இடத்தை நிரப்ப பக்கத்திலுள்ள காற்று விரைந்து வரும். அந்த இடத்தில் மாட்டுபவர்களை காற்று நெருப்புக்குள் தள்ளிவிடும். நெருப்பு பூதம் விழுங்குவதை உண்மையாக்கும் ஜெமோ வின் கைவண்ணம் இது. இது போல் வெண்முரசுவில் அவ்வப்போது ஒர் ஆச்சரியம் காத்துக்கொண்டே இருக்கிறது.
கர்ணன் குந்தியில் கருவாகும் இடத்தை அட்டகாசமாக கையாண்டிருப்பார். சூரியனுக்கு மகன் பிறப்பதா. என்ற நமட்டு சிரிப்புக்காரர்கள் இதை சரியாக வாசித்தால் கர்ணனின் பிறப்பு அவர்களுக்குள் உருவாக்கி இருக்கும் முடிச்சு அவிழும். இயேசு பிறக்கவும் ஆண் பெண் உடல் தேவை என்பார் ஓஷோ . அதை சரியாக கர்ணன் பிறப்பில் கையாள்கிறார் ஜெமோ.து
ரோணர் தன்னை தயாரித்துக் கொள்ளும் பகுதிகள் மனதில் ஆழ இறங்கின. ஒவ்வொரு ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய பகுதிகள். எப்படிப்பட்ட ஆசிரியராக இருந்தாலும் துரோணர் அவருள் ஒரு கட்டுடைப்பை இங்கே நிகழ்த்துவார் என ஒரு ஆசிரியராகிய நான் நம்புகிறேன். குறிப்பாக காயத்ரி மந்திரம் துரோணர் பயிலும் இடம். அந்த மந்திரத்தின் தமிழ் பெயர்ப்பை பல முறை வாசித்துள்ளேன். அது தரும் அமைதியும் திடமும் அனுபவிக்க வேண்டியவை. காயத்ரி மந்திரம் மூல மொழியில் ஆயிரம் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டே இருக்கும் துரோணர் எப்படியான மன அமைப்பை எட்டி இருப்பார் என என்னால் அணுமாணிக்க முடிகிறது. அந்த அவதானிப்பு ஏதோ செய்து என்னுள்ளும் சில அல்லது பல திடங்களை உருவாக்கியதை நினைவில் மீட்டுகிறேன்.
அடுத்து குந்தி. குந்தியும் சகுனியும் மோதும் இடங்களில் குந்தியே வில்லியாகப் படுகிறாள். சகுனியின் அவர் தரப்பு நியாயங்கள் ஈர்க்கின்றன. ஊரில் சாதாரண அதிகாரங்களுக்கு ஆசைபடுபவர்களே இப்படி உள்ளார்களே. அப்போது பெரிய அதிகாரங்களுக்கு ஆசைப்படுவோரின் எண்ணமும் இச்சையும் மூர்க்கமும் காய் நகர்த்தலும் இவைகளை நீங்கள் அறிய எண்ணிணால் வெண்முரசு வின் குந்தியைத் தொடர்க. விதுரர் குந்தி இடையே மெல்லிழையாய் அசைந்தாடும் காதல் அல்லது காமம் அல்லது அந்த ஈர்ப்பை எப்படி சொல்லலாம். அவ்வுணர்வும் வாசிக்க கிடைக்கும் புதையல்.
ஒரே தந்தைக்குப் பிறந்தும் திருதராஷ்டிரன் பாண்டுவிடமிருந்து விலகி நின்று விதுரர் புழுங்கும் காட்சிகள் இலக்கிய சாதனை. விதுரர் தாய் மாடத்தின் ஓரிடத்தில் சித்தம் கழன்று அமர்ந்திருப்பாள் அல்லவா. அப்படியே மனதில் அமர்ந்து விட்டாள். எத்தனை சோகம், தீர்வே சொல்ல இயலா சிக்கல் அவள் அசைவின்மையில் அசைந்து கொண்டே இருக்கின்றன. நான் வாசித்த வரையில் வெண்முரசில் பேச இன்னும் எத்தனையோ உள்ளன. மீண்டும் வருவேன்.
நன்றி.
முத்தரசன்
நெல்லையில் பேசுகிறேன்
மதார்நெல்லையைச் சேர்ந்த இளம் படைப்பாளி முகம்மது மதார் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிவருகிறார்.லக்ஷ்மி மணிவண்ணன் அறிமுகத்துடன் அவருடைய முதல் கவிதைத் தொகுதி வரும் 13-2-2021 அன்று வெளியாகிறது. நான் விழாவில் கலந்துகொள்கிறேன்.
மதாரின்
‘வெயில் பறந்தது’கவிதை நூல் வெளியீடு
வருகிற சனி திருநெல்வேலியில்.
நாள் : 13-02-2021 சனிக்கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : ரேடியண்ட் ஐ. ஏ. எஸ். அகாடமி,
போஸ்ட் ஆபீஸ் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
வரவேற்புரை : ரமேஷ்
நிறுவனர், ரேடியண்ட் அகாடமி, நெல்லை.
நூல் அறிமுக உரை : ஸ்ரீநிவாச கோபாலன்,
அழிசி பதிப்பகம்
நூலை வெளியிடுபவர் : எழுத்தாளர் ஜெயமோகன்
நூலைப் பெற்றுக் கொள்பவர் : கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்
சிறப்புரை : ஜெயமோகன்
கருத்துரை : லக்ஷ்மி மணிவண்ணன்
ஏற்புரை : மதார்
நன்றியுரை : அபிராமி நாயகம்
நிகழ்வு ஒருங்கிணைப்பு : வில்சி துரை
February 9, 2021
விடுதல்
William Blakeதிரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். உங்களின் தீவிர வாசகி நான்.
வெண்முரசில் தொடர்ந்து வந்த துறவு , துறத்தல் எந்தளவு பெண்களுக்கு சாத்தியம்? அந்த துறவு என்பது ஞான மார்க்கமாய், ஒரு தேடலாய், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் எண்ணம்.
குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும், நானில்லாமல் குடும்பம் சமாளித்துக்கொள்ளும் என்ற நிலைமை வந்ததும், குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி விட வேண்டும் என்பது என் பல வருட கனவு.
இப்பொழுது எனக்கு வயது 58. உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.இது கனவாகவே போகாமல் சாத்தியப்படுத்துவது எப்படி? காதல்- ஒரு கடிதத்திலும் வாழ்வின் லட்சியத்தையும் தேடலையும் சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
அன்புடன்,
என்
அன்புள்ள என்,
பெண்கள், ஆண்கள் எவருக்கானாலும் ஒரு கட்டத்தில் குடும்பவாழ்க்கை- உலகியல் வாழ்க்கையிலிருந்து முடிந்தவரை துண்டித்துக்கொள்வதே சிறந்த வழி. இதை நம் மரபில் வானப்பிரஸ்தம் என்கிறார்கள். வனம்புகுதல்.
உலகியல் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைச் சமாளிக்கும் ஆற்றலும் உள்ளமும் சென்றுவிட்டபின்னரும், அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் உள்ள இக்கட்டுகளை புரிந்துகொள்ளும் ஆற்றலை இழந்தபின்னரும் அங்கே சுற்றிக்கொண்டிருப்பது மிகவும் துயரையே அளிக்கும். நம்மால் அறியமுடியாத , நம்மால் கையாளமுடியாத பிரம்மாண்டங்களுடன் போரிடுவது அது.
ஆற்றவேண்டியவற்றை ஆற்றுவதற்கு ஒரு காலம் உண்டு. அங்கே தவறவிடுவது ஒரு பெரும்பிழை, பின்னர் வருந்தவேண்டியிருக்கும். ஆற்றியவை முடிந்தபின் விடுபடுவது இன்னொரு காலம். நீடித்தால் வீண்சுமைகளைச் சுமக்கவேண்டியிருக்கும். விடுபட்டாகவேண்டும், எழுதிமுடித்த நாவலில் இருந்து வெளியேறுவதுபோல.
நான் உளப்பூர்வமாக அந்த நிலைக்கு வந்துவிட்டேன். வெண்முரசு முடிவு அதை நோக்கிச் செலுத்தும் விசையாக இருந்தது.அதற்கான சில ஏற்பாடுகளைச் செய்வதிலேயே இப்போது முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறேன். அத்தகைய ‘துறவை’ மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பேன். ஆகவே உங்களுக்கும் அதையே சொல்வேன்
இங்கே துறவு என நான் உத்தேசிப்பது காவியுடையை அல்ல. முழுத்துறவை அல்ல. உலகியலை துறப்பதை. ஆனால் அதையே ஒருநாளில் ஒரே கணத்தில் முடிவெடுத்துச் செய்யலாகாது. உண்மையில் அப்படி எந்த குருநிலையிலும் வழக்கமில்லை. எல்லா அமைப்புக்களிலும் துறவு என்பது படிப்படியாக நிகழும் நிலைதான். துறவு என்னும் தகுதி இறுதியில் எய்தப்படுவது
முதலில் நமது ஈடுபாடுகளை பரிச்சீலிக்கவேண்டும். விடுபடுவது பற்றிய நம் எண்ணங்கள் என்ன? அவை வெறும் கற்பனாவாத மனமயக்கங்களா? நம்மைப்பற்றியும் புறவுலகு பற்றியும் நாம் கொண்டிருக்கும் மிகையான, தவறான புரிதல்களிலிருந்து எழுவனவா? உண்மையிலேயே நாம் என நாமே நம்பும் ஆளுமைதானா நம்முடையது?.நம்மால் நம்மை பிறிதொருவராக ஆக்கிக்கொள்ள முடியுமா?
“ஆத்மாவை ஜேபடிக்க உடலில்தான் எத்தனை கைகள்” என்று ஜே.ஜே,சிலகுறிப்புகளில் சுந்தர ராமசாமி வியக்கிறார்.நாம் மிக அதிகமாக ஏமாற்றிக்கொள்வது நம்மைத்தான். “எனக்கு கம்ஃபர்ட்ஸ் எல்லாம் முக்கியமே இல்லீங்க” என்று ஒருவர் சொல்வார். ஆனால் வசதிகளில்லாமல் சிலநாட்கள்கூட இருக்கமுடியாது. “என்னாலே எங்கயும் தனிமையா இருக்கமுடியும். எனக்கு தனிமைதான் புடிக்கும்” என்பார். ஆனால் இணையத்தொடர்பில்லாத ஒருநாள் என்பது அவருக்கு ஒரு குட்டிச் சாவாக இருக்கும்.
“கொஞ்சம் புக்ஸ், கொஞ்சம் மியூசிக், எனக்கு வேறே ஒண்ணுமே வேணாம்’என்பவர்கள் பக்கத்தில் மனிதர்கள் இல்லாமல், வம்புகளில்லாமல் வாழவே முடியாதவர்களாக இருப்பார்கள். சமூகவலைத்தளங்களில் வம்புகளை தேடி அலைந்துகொண்டும் இருப்பார்கள்.சமூகசேவை, இயற்கைவேளாண்மை, ஆன்மிகத்தேடல் போன்றவற்றில் எல்லாம் தனக்கு ஆர்வமுண்டு என்பவர்கள் பெரும்பாலும் அவற்றை ஒருவகை பகற்கனவாகவே வைத்திருப்பார்கள். அவர்களின் யதார்த்தம் வேறு.
தங்களைப்பற்றி பலசமயம் சாமானியர்களுக்கு தெரியாது.அவர்கள் அவ்வண்ணம் வந்து வாழத்தொடங்கும்போதே உண்மையில் அவர்களின் இயல்பென்ன, தேவைகள் என்ன என்று தெரியவருகிறது. “சும்மா அப்டியே துண்டை உதறிப் போட்டுட்டு கிளம்பிடணும் சார்” என்று சொன்ன ஒருநண்பர் எங்கள் பயணங்களில் ஒருமுறை ஓர் ஒட்டுத்திண்ணையில் இரவு தங்கவேண்டியிருந்தபோது உளம்நொந்து தொடர்பையே விட்டிருக்கிறார்.
துறப்பதிலுள்ள இன்னொரு முக்கியமான கூறு, அது ஒரு நம்பிக்கைநிறைந்த, உற்சாகமான, இன்னொரு வாழ்க்கைக்கான தொடக்கமாக இருக்கவேண்டும் என்பது. எதிலிருந்தாவது ’துண்டித்துக்கொண்டு’ துறப்பவர்கள் அந்த துண்டுபட்ட புண்முனை சீழ்கட்டி நோயாவதையே காண்பார்கள். எதற்கும் எதிர்வினையாக துறக்கலாகாது. மெட்ரிகுலேஷன் வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்வதுபோல இயல்பான ஒரு படிநிலையாக இருக்கவேண்டும்.
சலித்தும் கசந்தும் வெறுத்தும் துறப்பவர்கள் உண்மையில் துறப்பதே இல்லை. அவர்கள் உதறுகிறார்கள். உதறப்பட்டவை பற்றிய எண்ணமும் ஏக்கமும் அவர்களிடம் நிறைந்திருக்கும். எதைத்துறக்கிறோமோ அதில் மேற்கொண்டு வாழவே முடியாது என்னும் நிலை உருவாகி, இயல்பாகவே அடுத்த நிலைக்குச் செல்வதே துறவு எனக்கொள்ளப்படும்.
ஏனென்றால் நம்முள் துளி எதிர்நிலை இருந்தால்கூட தனிமையில் அது வளரும். ஒரு சொட்டு கசப்பு போதும் நாம் நம் சூழலை, நம் அகத்தை கசப்பு நிறைந்ததாக ஆக்கிக்கொள்வோம். துறவுசார் அமைப்புகளிலேயே இதை நான் அடிக்கடிக் கண்டிருக்கிறேன்.
அதேபோல மிகையான எதிர்பார்ப்பும் இலட்சியமும் கொண்ட துறவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. துறவு ஒரு பயிற்சி அல்ல. ஒரு பாதை அல்ல. அது இன்னொருவகை வாழ்க்கை. அது ஒருவகை ’திகழ்தல்’ மட்டுமே. அந்த வாழ்வே அதன் இலக்கு. அதனூடாக நாம் சென்றடையும் இடங்கள் இயல்பாக அமையவேண்டும். நம் இயல்புக்கும் தகுதிக்கும் ஏற்ப தானாக வரவேண்டும். ஒரு கல்லூரி வகுப்பில் சென்றுசேர்ந்து பட்டம் வாங்குவதுபோல அல்ல அது. அவ்வண்ணம் ‘ஞானியாக’ ஆகும்பொருட்டு துறந்தவர்கள் மிக விரைவிலேயே ஏமாற்றமும், அதன் விளைவான கசப்பும் தனிமையும் அடைந்திருக்கிறார்கள்.
ஆகவே நாம் முதலில் நம்மை அறியவேண்டும். அதற்கு ஒரே வழி நாமே அனுபவித்து அறிவதுதான். நாம் விழையும் வாழ்க்கையின் ‘சாம்பிள்’களை வாழ்ந்து பார்க்கவேண்டும். நித்யா இருந்தபோது குருகுலத்தில் நாளுக்கு ஒருவராவது துறவுபூணுவதற்காக வருவார்கள். முதற்சிலநாட்களிலேயே தங்களை தாங்களே கண்டு திரும்பிச் சென்றுவிடுவார்கள். சிலர் பிரம்மசாரி வாழ்க்கையிலேயே துறவை முடித்துக் கொள்வார்கள். நித்யா வேடிக்கையாகச் சொல்வதுண்டு “பல லட்சம் விந்துத்துளிகள். எல்லாமே துடித்து துடித்து நீந்துகின்றன. ஒன்றுதான் மகாசக்தியின் கருவறையை அடைகிறது”
ஆகவே நாம் நம்மை பரிசீலித்துக்கொள்ளவேண்டும். இதுவரை நாம் உலகியல் தளத்தில் மட்டுமே நம்முடைய இன்பங்களையும் நிறைவையும் அடைந்திருந்தோம் என்றால் அதை இனிமேல் விட்டுவிடுவது எளியது அல்ல. பக்தியே ஆனாலும்கூட அது உலகியலுக்கு மாற்று அல்ல. உலகியலில் இருந்து நாம் பயின்றிருப்பது ’உலகியல் பக்தி’ தான். வேண்டுதல் என்று அதற்குப் பெயர்.
உலகியலில் புழங்கியவர்கள் துறந்தால் துறந்தவாழ்க்கையை இன்னொரு வகை உலகியலாக ஆக்கிக்கொள்வார்கள். அதையும் கண்டிருக்கிறேன். விவசாயிகளான, தொழிலதிபர்களான, வணிகர்களான துறவிகளை சாதாரணமாக காணலாம். துறந்து சென்றவர்கள் சென்ற இடங்களை குடும்பச்சூழலாக, வணிகச்சூழலாக மாற்றிக்கொண்டு உழல்வது மிகமிக சாதாரணமாகக் காணக்கிடைப்பது.
உலகியலுக்கு அப்பால் சென்று செயல்படும் உள்ளம் உங்களுக்கு உள்ளதா, அதில் மெய்யான நிறைவை அடைகிறீர்களா என்பதை நீங்கள்தான் உங்களை ஆராய்ந்து கண்டறிய வேண்டும். அதற்குரிய வழி இதுவரை என்ன செய்தீர்கள் என்று பார்ப்பதுதான். இதுவரை நீங்கள் உலகியலுக்கு அப்பாலுள்ள எவற்றையெல்லாம் செய்தீர்கள்? எவற்றிலெல்லாம் மெய்யான இன்பத்தை கண்டடைந்தீர்கள்? அவற்றை நம்பி எஞ்சிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உங்களால் முடியுமா?
உலகியலுக்கு அப்பாலுள்ள வாழ்க்கை இரண்டுவகையானது. அறிவுத்தள வாழ்க்கை, சேவைத்தள வாழ்க்கை. அறிவியக்கத்தில் முழுமையாக ஈடுபடலாம். சேவையில் மூழ்கலாம். மூன்றாவது ஒன்றுண்டு, அது மெய்மைநாட்டம், அதற்கான ஊழ்கம். ஆனால் அது அடுத்தநிலை மட்டுமே. அறிவுச்செயல்பாடோ சேவையோதான் முதலில் செய்யப்படவேண்டும். அவற்றில் கனிந்தபின்னரே ஊழ்கம் நிகழவேண்டும். அவையிரண்டும் இல்லாத ஊழ்கமோ ஆன்மிகப்பயிற்சியோ வெற்றுச் சடங்காக மாறிவிடும்.
அறிவியக்கம்,சேவை இரண்டில் எது உங்களுக்குரியது? ஏற்கனவே எதை செய்துபார்த்திருக்கிறீர்கள்? எதில் மெய்யான இன்பத்தை ஏற்கனவே கண்டடைந்திருக்கிறீர்கள்?
உதாரணமாக என்னை பார்த்தால் எழுதுவது, பயணம்செய்வது, படிப்பது ஆகியவற்றில் நான் நிறைவடைகிறேன், அவையே எனக்கு முதன்மையானவை, அவற்றின்பொருட்டு என்னால் உலகியலை முற்றாகத் துறக்கமுடியும் என்று இத்தனை ஆண்டுகளில் கண்டடைந்திருக்கிறேன். என்னால் இயற்கையின் மடியில் வெறுமே இருக்கமுடியும் என்று நானே நிரூபித்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே நான் அதைநோக்கிச் செல்லமுடியும்.
ஆனாலும் நான் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன். சிறிய அளவில் செய்துபார்ப்பேன். என் இயல்கைகள் என்ன, என் தடைகளென்ன,என் எல்லைகள் என்ன என்று பார்ப்பேன். நான் மெய்யாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேனா, நிறைவடைகிறேனா என்று கூர்ந்து நோக்குவேன். மெல்லமெல்ல மேலும் என்னை முன்னகர்த்திக்கொள்வேன். மிக எச்சரிக்கையாக, மிகச் சிறிய அளவிலேயே செய்வேன். நாம் எவர் என அறிவதே முக்கியம்.
நாம் நன்கறிந்த இடங்களில் மேலே பாயலாம், அல்லாத இடங்களில் பதுங்கியாகவேண்டும். வெண்முரசை எழுதுவதற்கு நான் முன்பின் நோக்காமல் துணியலாம், அது என்னால் இயலுமென நான் அறிந்திருந்தேன். ஆனால் இன்னொரு செயலைச் செய்ய நான் ‘சாம்பிள்’ செய்துபார்ப்பேன். அதைக்கொண்டு என்னை அறிவேன். அதன்பின்னரே முடிவுசெய்வேன்.
இப்போது என்னால் ஒரு நகரத்திற்கு வெளியே, ஒரு காட்டில் வாழமுடியும் என எனக்கே நிறுவிக்கொள்கிறேன்.அதற்கான பயிற்சிகளில் இருக்கிறேன். அதன்பின்னரே அடுத்தநிலைகள். அதையே உங்களுக்கும் சொல்வேன். நீங்கள் எண்ணும் வாழ்க்கையின் ‘சாம்பிள்களை’ வாழ்ந்து பாருங்கள். அவற்றில் மெய்யான மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தால் சிறிது சிறிதாக அதை கூட்டிக்கொண்டே செல்லுங்கள்.
உலகியலில் எழும் சலிப்பினால் அதைத் துறக்க முடியாது. ஏனென்றால் துறவு அச்சலிப்புக்கான மாற்று அல்ல. துறவு இன்னும் சலிப்பை அளிக்கக்கூடும். உலகியல் அளிக்கும் சலிப்புக்கான மாற்று என்பது அச்சலிப்பை நீக்கும்தன்மைகொண்ட எளிய, செயலூக்கம் கொண்ட செயல்களே. கொஞ்சம் கேளிக்கையுடன் கலந்தவை. பல முதியவர்கள் ஆலயவழிபாடு, பக்திப்பணி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அதைப்போல பல செயல்பாடுகள் உள்ளன
உலகியல் அளிக்கும் சோர்வை வெல்ல ஓரளவு உலகியல் விலக்கம் மட்டும் போதும். உணர்வுரீதியான விலக்கம், அல்லது செயல்சார் விலக்கம். முதியவர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டியது அதைத்தான். அதுவும் ஒருவகை துறவே. ஆனால் துறவு என்பது மேலும் பெரியவற்றை நோக்கிச் செல்வது. அதற்குத்தான் நான் சொன்ன படிநிலைகளும் தன்னறிதல்களும் தேவையாகின்றன
ஜெ
வனம்புகுதல் துறவுத்தகுதி வயதடைதல் ஆன்மீகம், போலி ஆன்மீகம் 5 போரிலிருந்து மிஞ்சுதல் துறவு-கடிதம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

