Jeyamohan's Blog, page 1048
February 15, 2021
ஆகுதி -கடிதங்கள்-3
அன்புள்ள ஜெ
மயிலன் சின்னப்பனின் ஆகுதி வாசித்தேன். நான் வாசிக்கும் இவருடைய முதல் கதை இது. இணையத்திற்குச் சென்று மேலும் சிலகதைகளை வாசித்தேன். சரளமாகக் கதைசொல்ல முடிகிறது. [ஆனால் அந்தச் சரளம் தமிழின் வணிகஎழுத்திலிருந்து வந்தது] எங்கே கதையை உண்மையான ஆழமான பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்துகிறாரோ அங்கே கதை சிறப்பாக அமைய இந்தச் சரளம் உதவுகிறது. அப்படியில்லாமல் வெறும் பொது உண்மைகளையோ சமகாலத்தின் சில வாழ்க்கைச் சித்திரங்களையோ சொல்லும்போது கதை விகடன் கதையாக நின்றுவிடுகிறது.
இந்தக்கதையில் அந்தப்பெண்களின் கொடிய மரணத்தைச் சித்தரித்திருக்கிறார். அதற்கு எந்த செண்டிமெண்ட் வேல்யூவும் கொடுக்காமல் கதையை மதிப்பிடவேண்டும் என்று நினைத்தேன். அப்படி மதிப்பிட்டாலும்கூட முக்கியமான கதை என்பதில் சந்தேகமே இல்லை. அது அந்தப் பெண்ணுக்கும் டாக்டருக்குமான உறவில் இருக்கும் மர்மத்தால்தான் நல்ல கதையாக ஆகிறது. பேசி விரிவாக்கவேண்டிய தேவையில்லாத நுட்பமான உறவு அது
எஸ்.ராமச்சந்திரன்
அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்,
மயிலன் சின்னப்பனின் ‘ஆகுதி’ சிறுகதை படித்தேன்.நேர்த்தியான கதை.
தோள்கண்டார் தோளே கண்டார் என்று கட்டுண்டு கிடக்கும் தங்கள் வாசகர்களின் பார்வையை அவ்வப்போது இப்படி பரத லஷ்மணர்களின் அங்கலட்சணங்கள் மீதும் திரும்பவைக்கும் தங்களின் கலியாண குணத்திற்கு முதலில் நன்றி.
ஒரு மருத்துவ வார்டில் நடக்கும் தினப்படி சம்பவங்களையும் கதைசொல்லியான மோகனாவின் உள்ளூடாட்டமான உணர்வுப் போராட்டங்களையும் ஊடு பாவாக ஆக்கி ஒரு கைதேர்ந்த நெசவாளியைப் போல கதையைப் புனைந்திருக்கிறார் எழுத்தாளர் மயிலன் சின்னப்பன்.கதைக்குள்தான் எத்தனை நுணுக்கங்கள்.
வார்டுக்குள் நடக்கும் வர்கப் போராட்டங்களால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அப்படியே உள்ளதை உள்ளபடி தோலுரித்துக் காட்டுகிறார்.அதுவும் இந்தப் பயிற்சி மருத்துவர்கள் படும் பாட்டை சொல்லி மாளாது.
தீயில் ஆகுதியாவது காவ்யாவின் உடல் மட்டுமல்ல,மோகனாவின் மெல்லிய உணர்வுகளும்தான் என்பதே கதையின் மையச் சரடாக நிற்கிறது.அவளது காதல் உணர்வுகள் அடிக்கடி பொசுக்கப்படுகின்றன.ஒரு நொடி சிரிக்க வைத்துவிட்டு அதற்குப் பரிகாரமாக ஒரு நாள் முழுக்க வதைத்தெடுக்கும் அந்த உறவில் இனிமேலும் வெந்து சாகவேண்டாம் என்று மோகனாவிற்குத் தோன்றுவதும், இன்றே அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற விளிம்பிற்கே அவள் வந்தடைவதற்கும் ராஜுவின் நாவிலிருந்து அவ்வப்போது தெறிக்கும் தீப்பொறி போன்ற வார்த்தைகள்தானே காரணம்.தீப்புண்களின் விழுக்காட்டிற்குப் பொருள் கொள்ளமுடிந்த அவளுக்கு தனது மனப்புண்ணின் விழுக்காட்டை வரையறை செய்ய முடியாமல்தான் தவிக்கிறாள்.இப்படியான தவிப்புகளின் ஆகுதிகளுக்கு நெய் வார்க்கும் செயலை ராஜு போன்ற பெருமக்கள் தொடரும் வரை தற்கொலைகள் தொடரத்தானே செய்யும்.
இப்படி தினம் தினம் எத்தனையோ இளம் பெண்களின் தற்கொலை முடிவுகளை இந்த சமூகமும் அரசும் சாதாரணமாகக் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றன.அதனதன் உண்மைக் காரணங்களை பெற்றோர் மட்டுமே அறியவும் சில சமயங்களில் அதுவுமே அறியப்படாமல் ஆத்மாவுக்குள்ளேயே புதையுண்டும் போகின்றன.
கதையின் இறுதி வரிகளில் மோகனாவின் பார்வையைத் தவிர்த்துவிட்டு வேறெங்கேயோ பார்க்க ஆரம்பித்தாளே அந்தத் தாய், அது அந்த ஆத்மாவின் புனிதத்தைக் கடைசிவரை காப்பாற்றி விட்டோமென்ற நிம்மதிப் பெருமூச்சை மறைக்கத்தான் என்று முத்தாய்ப்பாய் முடித்ததில்தான் கதையின் வெற்றியே நிற்கிறது.
ஆக தங்கள் தளத்தின் சங்கப் பலகை ஏந்திநிற்கத் தகுதியான படைப்புதான் இது என்பதில் சந்தேகம் இல்லை.
அன்புடன் தங்கள்,
இரா.விஜயன்
புதுச்சேரி-10
ஆகுதி – கடிதங்கள்-2ஆகுதி- கடிதங்கள்-1
மழைப்பாடல் வாசிப்பு
‘வெண்முரசு’ நாவல்தொடரில் இரண்டாவது நாவல் ‘மழைப்பாடல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘மழை’ என்பது, நீரால் ஆனது அல்ல; வான் தேவர்களின் அருளால் ஆனது. அவர்களிடமிருந்து யாரெல்லாம் அருள்மழையைப் பெறுகிறார்கள் என்பதைக் குறிப்புணர்த்துவதாகவே இந்த நாவலின் ஒட்டுமொத்த நகர்வும் அமைந்துள்ளது.
நிலத்தில் அநீதி எழும்போதெல்லாம் அதை அழிக்க நீதியும் பூமிக்கு இறங்கி வருகிறது. அநீதிக்கும் நீதிக்கும் இடையே இணைவும் பிரிவும் அற்ற தொடர் போராட்டமாகவே ஒட்டுமொத்த உலக இயக்கமும் முடிவற்ற பகடையாட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அநீதியாகப் புழுதிப்புயலும் குருதிமழையும் வந்து நிற்க அவற்றுக்கு இணையான எதிரியாகப் பெருமழையாகவும் அருள்மழையாகவும் நீதி வந்து நிற்கிறது. இறுதியில், நீதியே அநீதியின் குருதியை முழுக்கக் குடித்து, நிமிர்கிறது.
காந்தாரியும் சகுனியும் அஸ்தினபுரிக்குள் நுழைகின்றனர். அவர்களுக்கு இணையான எதிர்த்தரப்பாகவும் நீதியின் பிரதிநிதியாகவும் குந்தி அஸ்தினபுரிக்குள் வருகிறாள். காந்தாரிக்குக் குருதிமழையென இருட்புதல்வர்கள் வந்து அவள் அருகில் விழுகின்றனர். குந்திக்கு அருள்மழையென அருட்புதல்வர்கள் வந்து அவள் மடியை நிறைக்கின்றனர்.
விசித்திரவீரியனை மணந்துகொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அம்பிகையும் அம்பாலிகையும் தாங்கள் சகோதரிகள் என்பதை மறந்து, தாய்-மகள் போல இணைந்து வாழ்வதும் அவர்களுக்குக் குழந்தை பிறந்த பின்னர் அந்தக் குழந்தைகளை முன்னிட்டு ஒருவருக்கொருவர் மனவிலகல் கொண்டு இருபதாண்டுகளாக முகத்துக்கு முகம் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும் அரசர் பாண்டு இறந்தவுடன் இருவரும் மீண்டும் நல்லுறவு கொண்டு, இணைந்தே வனம் புகுவதும் காலத்தின் நகைமுரண்தான்.
எவை அவர்களைப் பிரித்தன? எது அவர்களை இணைத்தது? புதிய உறவுகளே (குழந்தைகள்) அவர்களைப் பிரித்தன என்றும் அந்த உறவுகளுள் ஒன்று நீங்கியதும் அவர்கள் இயல்பாக இணைந்து கொண்டார்கள் என்றும் கொள்ளலாம்.
வேறு வகையிலும் நாம் இதற்குப் பொருள்கொள்ளலாம்தான். அவர்கள் இருவருமே அஸ்தினபுரிக்குப் பேரரசியாகும் கனவுடன் இருந்தார்கள் என்றும் அந்தக் கனவுக்கு இடையூறுகளாக விசித்திரவீரியனின் மரணமும் அந்தக் குழந்தைகளின் பிறப்பும் இருந்தன என்றும் கொள்ளலாம். ஆட்சி அதிகாரத்தின் மீதான பெருவிருப்பின் காரணமாக அவர்களுக்கு அரண்மனை வாழ்வு தந்த இனிமையை ஒவ்வொரு கணமும் இழந்துகொண்டே இருந்தார்கள். அவற்றைத் தாங்கள் இழைப்பதை உணராமலேயே இழந்துகொண்டிருந்தார்கள். தொடர்ந்து இருபதாண்டுகள் இழந்தார்கள்.
காரணம், அவர்கள் இருவருக்குமே சக்கரவர்த்தினியாகும் திறன் இல்லை. அவர்களிடம் சக்கரவர்த்தினியாகும் வெறுங்கனவுமட்டும்தான் குடியிருந்தது. தேவயானியின் மகுடம்தான் அவர்களின் ஆழ்மனத்தின் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தது. அதை முறைப்படி அடைந்து, தொடர்ந்து அதைத் தக்கவைத்துக் கொள்ளும் வழியை அவர்களின் குறுகிய மனம் ஒருபோதும் அறியவே இல்லை. அவர்கள் ஒருபோதும் தாங்களும் தம் அக்கா ‘அம்பையைப் போலவே ஆக வேண்டும்’ என்று நினைக்கவேயில்லை.
ஆனால், பிருதையிடம் (குந்தியிடம்) சக்கரவத்தினியாகும் பெருங்கனவும் அதிதிறமும் இருந்தன. ஆனால், அவளிடமிருந்து அதற்குரிய வாய்ப்புகளைக் காலம் தள்ளி தள்ளி வைத்தபடியே இருந்தது. அதைத் துரத்தி துரத்தித் தொட்டுவிடும் முயற்சியில்தான் குந்தி இருந்தாள். அதற்காகவே அவள் பாண்டுவின் விருப்பத்துக்குப் புறம்பாகவும் தன் கனவினை நனவாக்கவும் ஐந்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வனத்திலிருந்து அஸ்தினபுரிக்குள் நுழைகிறாள்.
காலத்தின் பெருவிளையாட்டுகளுள் ஒன்று, ‘யார் எதை விரும்பவில்லையோ, அதை அவர்களுக்கு வழங்குவது. இதற்குச் சான்றுகளாக, துர்வாச முனிவர் குந்திக்கு மந்திரத்தை அளித்தது; அதிரதனுக்கு யமுனையில் குழந்தை கிடைத்தது; பாண்டுவுக்குக் குந்தி மணமாலையைச் சூட்டியது; பாண்டு அஸ்வதந்த மணியை விதுரனுக்கு அளித்தது; பாண்டுவை அஸ்தினபுரிக்கு அரசனாக்கியது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை எல்லாம் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட வரம் என்பதா, சாபம் என்பதா?.
விரும்பியது கிடைக்காதபோதும் விரும்பாதது கிடைத்த போதும் மனம் அடையும் தடுமாற்றங்களைச் சொல்லில் விளக்கிவிட முடியாது. இதற்குப் பல சான்றுகளைக் கூற முடியும். குந்தி துர்வாச முனிவர் வழங்கிய மந்திரத்தை விளையாட்டாய் உச்சரித்ததால் சூரியனின் கருவைத் தன் வயிற்றில் தாங்கியபோதும் அந்தக் கருவைக் கலைக்க முடியாதபோதும் தன் முதல் மகனை யமுனையில் இழந்தபோதும் அடைந்த தடுமாற்றம்.
குந்தியால் தன்னேற்பு அவைக்கு ரகசியமாக அழைக்கப்பட்ட கம்சன், குந்தி பாண்டுவுக்கு மணமாலை சூட்டியதும் அடையும் தடுமாற்றம். மூத்த வைதீகர்கள் திருதராஷ்டிரன் அஸ்தினபுரியின் அரியணையில் அமர எதிர்ப்புத் தெரிவிப்பதால், அவன் அடையும் தடுமாற்றம். காந்தாரி அஸ்தினபுரிக்குப் பேரரசி ஆகமுடியாததால் சகுனி அடைந்த தடுமாற்றம். காந்தாரிக்குக் குழந்தை தாமதமாகப் பிறந்ததால் பேரரசி சத்யவதி அடைந்த தடுமாற்றம். ‘உன் மகனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனையே அஸ்தினபுரிக்கு அரசனாக்குவேன்’ என்று குந்திக்கு வாக்களிக்கும் பாண்டு, குந்திக்கு இரண்டாவது மகன் பிறந்ததும் தன் முடிவை மாற்றிக் கொள்கிறார். அதனால், குந்தி அடையும் தடுமாற்றம். விதுரனின் திருமணத்தை முன்னிட்டு விதுரனின் தாய் சிவை அடையும் தடுமாற்றம். திருதராஷ்டிரன் யாழ்இசைக்கும் பெண் மீது விருப்பம் கொள்வதை அறிந்து காந்தாரி அடையும் தடுமாற்றம். பாண்டுவின் இறப்பை முன்னிட்டு அம்பிகையும் அம்பாலிகையும் பேரரசி சத்யவதியும் அடையும் தடுமாற்றம் என இந்த நாவலில் முக்கியமான திருப்பங்கள் அனைத்துமே பிறர் கொள்ளும் மனத் தடுமாற்றத்தில்தான் நிலைகொள்கின்றன.
மூடத்தனமும் புத்திசாலித்தனமும் சந்திக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் காழ்ப்பும் வெறுப்புமே மிகுகின்றன. அதனால்தான், திருதராஷ்டிரன் தனக்கு இளையவர்களான விதுரனையும் சஞ்சயனையும் பெரும்பாலும் ‘மூடா’ (முட்டாள்) என்றே அழைக்கிறார். அவ்விருவரின் அறிவின் கூர்முனைகளைக் கண்டு திருதராஷ்டிரனின் உள்ளம் அச்சம் கொள்கிறது. அந்த அச்சத்தைப் போக்க, தன்னுடைய அரச அதிகாரத்தைப் பயன்படுத்தியும் ‘தானே மூத்தவன்’ என்ற நிலையை வெளிப்படுத்தியும் அவர்களை ‘மூடா’ என்று கீழ்மையுடன் அழைக்கிறார் திருதராஷ்டிரன்.
திருதராஷ்டிரனின் வாயிலிருந்து அந்தச் சொல் வெளிவரும் போதெல்லாம் நாம், ‘அவர் தன்னைத்தானே அவ்வாறு அழைத்துக் கொள்கிறார்’ என்றுதான் நினைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. திருதராஷ்டிரனின் அறியாமைதான், ‘அவர்களைத் தனக்குக் கீழானவர்கள்’ என்று அவனை எண்ண வைக்கிறது.
திருதராஷ்டிரனுக்குப் பேரரசி சத்தியவதியின் நுண்ணறிவும் பிதாமகர் பீஷ்மரின் பேரறிவும் ஒரு பொருட்டே அல்ல. அவர் அவர்களின் அறிவுத்திறம் கொண்டு அஞ்சுவதே இல்லை என்பதையும் நான் கவனத்தில் கொள்ளவேண்டும். அதனால்தான் திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் துவந்த யுத்தம் செய்து, தோற்றபோது, உடனே தன்னை அவரின் மாணவராக மாற்றிக்கொள்ள திருதராஷ்டிரனால் முடிகிறது.
திருதராஷ்டிரனின் அன்புள்ளம் விதுரன் மீது மாறாத அன்பினைப் பொழிந்து கொண்டேயிருக்கிறது. திருதராஷ்டிரன் முதன் முதலாகக் காந்தாரியிடம் தனித்திருந்து பேசும்போது, “என் நெஞ்சில் என் அன்னைக்கும் அதற்கு அடுத்தபடியாக விதுரனுக்கும் அதற்கு அடுத்து உனக்குத்தான் எப்போதும் இடம்” என்று கூறுகிறார். அவர் அஞ்சுவது விதுரன், சஞ்சயன் ஆகியோரின் அறிவுத்திறத்தையும் தன்னுடைய அறியாமையையும் தான். அறிவு, அறியாமை மோதும் கணத்தில், அன்பு சற்று விலகி நின்றுகொள்கிறது என்றே படுகிறது.
திருதராஷ்டிரனின் ஆழ்மனம் விழியுடைய அத்தனை பேரின் மீதும் ஒருவகையான காழ்ப்புணர்வையே கொண்டிருக்கிறது. முதுசூதர் தீர்க்க சியாமரிடம் அவர் கொள்ளும் அன்பு அவர் பெற்றுள்ள இசையறிவுக்காக மட்டுமல்ல; அவருக்கு விழியில்லை என்பதாலும்தான். அதனால்தான் அவர் மரணமடைந்தபோது அவரின் உடலைக் காண அரச முறையை மீறிச் செல்கிறான் திருதராஷ்டிரன்.
விழியற்ற குழலிசைக்கலைஞருக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தரவும் அவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் திருதராஷ்டிரனின் மனம் ஒப்புகிறது. திருதராஷ்டிரன் விழியற்றவர்களைத் தன் அகத்துக்கு ஓர் அடி நெருக்கமானவர்களாகவே வைத்துக்கொள்கிறார். விழியுடையவர்கள் அவர் தன் அகத்துக்கு ஓர் அடி விலக்கமானவர்களாகவே வைத்துக்கொள்கிறார்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் திருதராஷ்டிரனின் குணநலனை விதுரனின் வாய்மொழியாகக் “கொலைவேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். ஒவ்வொருநாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன்” என்று ஒருவரியில், மிக அழகாகக் காட்டிவிடுகிறார்.
இதை அறிந்ததால்தான் விதுரன், திருதராஷ்டிரனிடம் சென்று, “உங்களைச் சந்திக்கப் பாண்டு வருவார். நீங்கள் உங்களின் அரியணையை அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டாம்” என்று கூறுகிறார். ஆனால், திருதராஷ்டிரன் பாண்டுவுக்கு விட்டுக் கொடுக்கிறார். இதைத்தான் விதுரன் எதிர்பார்த்திருந்தார். காரணம், எதிர்மறையாகக் கூறி நேர்மறையான காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் ‘உளவியல் நுட்பம்’ அறிந்தவர் விதுரன்.
ஆனால், இந்த ‘உளவியல் நுட்பம்’ எல்லா நேரங்களிலும் செல்லுபடியாவதில்லை. துரியோதனனை அஸ்தினபுரியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் விதுரன் கூறும்போதும் திருதராஷ்டிரன் ஒப்புக்கொள்வதுபோலத் தலையை அசைக்கிறார், உடனேயே அம்பிகை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும், தன் முடிவினை மாற்றிக்கொள்கிறார் திருதராஷ்டிரன்.
திருதராஷ்டிரனின் மனம் தாமரை இலையின் மீது உருளும் நீர்த்திவளைபோலவே எப்போதும் அசைந்தபடியே இருக்கிறது. அதனால்தான் அவரால் எந்த முடிவையும் உறுதியாக எடுக்க இயல்வதில்லை. இதற்குப் பல நிகழ்வுகளைச் சான்றுகளாகக் காட்ட இயலும்.
திருதராஷ்டிரன் முதலில் பீஷ்மரை எதிர்த்து, பின்னர் அவரைப் பணிகிறார். முதலில் சஞ்சயனை வெறுத்து, பின்னர் அவனைத் தனக்கு நெருக்கமானவனாக உணர்கிறார். அவரின் மனம் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாகவே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை திருதராஷ்டிரன் ‘எடுப்பார் கொலைவேழம்’தான். கொலைவேழத்தை யாரால் தன் பிடியில் வைத்திருக்க இயலும்? சில தருணங்களில், மிகக் குறுகிய கணங்கள் மட்டுமே அது தன் பாகனுக்கு அருள் புரியும்.
பீஷ்மர், விதுரன், சகுனி என்ற மூன்று விதமான பேரறிஞர்களின் நுண்ணறிவு முனைகளும் சந்திக்கும் களமாகத்தான் ‘மழைப்பாடல்’ நாவல் அமைவு கொண்டுள்ளது. தனக்கான அறத்தோடு திகழும் பீஷ்மரின் அறிவு கங்கையைப் போலவே கலங்கமற்றுச் சுழித்தோடுகிறது. உளவியல் நிபுணனைப் போன்ற விதுரனின் அறிவு சூழ்நிலைகளைத் தனக்கானதாக வளைத்துக்கொள்கிறது. சூழ்ச்சிகளாலேயே பின்னப்பட்ட சிலந்தி வலையென உருவெடுத்துள்ள சகுனியின் அறிவு பாலைப்புயலெனக் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிக்கொள்கிறது.
பீஷ்மர் தன் தரப்பை முன்வைத்து எல்லோரையும் அணுகுகிறார். அவருக்கு, ‘அஸ்தினபுரி ஒருபோதும் ஆட்டம் கண்டுவிடக் கூடாது’ என்பதுதான் முதன்மை நோக்கம். விதுரன் பிறரின் உள்ளத்தை உற்றுநோக்கித் தன் சொல்லை முன்வைக்கிறார். அவருக்கு, ‘யாருடைய மனமும் நோகக் கூடாது’ என்பதுதான். ஆனால், அறம் சார்ந்தவை மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும். அதைச் செயல்படுத்தவே அவர் தனக்கு நெருக்கமானவர்களோடும் விலக்கமானவர்களோடும் மாறி மாறிச் சென்று அருகே நிற்கிறார். சகுனியோ தன் திட்டத்தைச் செயலாக்க எதையும் இழக்க எப்போதும் தயார்நிலையில் இருக்கிறார். அவருக்கு எதன் அழிவைப் பற்றியும் எப்போதும் கவலையே இல்லை. ‘தன் திட்டம் செயல்வடிவம் பெற வேண்டும்’ என்பதே அவரின் முதன்மை நோக்கம். அந்தத் திட்டத்துடன்தான் அவர் அஸ்தினபுரிக்குள் நுழைகிறார்.
திருதராஷ்டிரன் அரியணையேற இயலாது என்ற நிலையில் பீஷ்மர் சகுனியைப் பதினெட்டாண்டுகள் இங்கேயே தங்கியிருந்து, காந்தாரியின் மகனை அரியணையேற்றுக என்கிறார். ஒருவேளை திருதராஷ்டிரன் அரியணையேறியிருந்தாலும் சகுனி அஸ்தினபுரியில்தான் தொடர்ந்து இருந்திருப்பார். நிச்சயமாக எண்ணிக்கையற்ற ஆண்டுகள் வரை அவர் அங்குதான் இருந்திருப்பார். காரணம், அவர் தன் அக்கா காந்தாரிக்கு அளித்த வாக்கின் படி, பாரதவர்ஷத்தையே அவளின் காலடியில் வைக்கும்வரை அவர் அஸ்தினபுரியில்தானே இருந்தாக வேண்டும்!.
இந்த மூன்று அறிவுத்திரள்களின் நடுவில்தான் பேரரசி சத்யவதியும் அரசி குந்தியும் அரசி காந்தாரியும் நிலைபெற வேண்டியுள்ளது. இந்தக் கடுமையான பகடையாட்டத்தில் தன் வாழ்நாளில் தான் கண்ட கனவு முழுமையாக நிறைவேறாத நிலையிலேயே பேரரசி சத்யவதி ஆட்டக்களத்தை விட்டு வெளியேறிவிடுகிறார். தன்னுடைய கனவினை நனவாக்கும் திட்டத்தோடு, குந்தி ஆட்டக்களத்தில் இறங்குகிறார். அவளுக்கு எதிராக நின்று களமாட காந்தாரி காத்திருக்கிறார். அவளுக்குப் பெருந்துணையாகச் சகுனி. குந்திக்குத் துணையாக அவளின் குழந்தைகளின் வடிவில் உறைந்திருக்கும் இருக்கும் வான்தேவர்கள்.
‘தன்னை நிலைநிறுத்திக்கொள்வது’ என்பது, எல்லா இடத்திலும் எப்போதும் அறைகூவல்கள் நிறைந்த ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. ஒருவகையில் பார்த்தால், அந்த அறைகூவல்கள் அனைத்துமே வானத்து தேவர்களிடமிருந்துதான் விடப்படுகின்றனவோ? என்றும் தோன்றுகிறது. மற்றொரு வகையில் பார்த்தால், அந்த அறைகூவல்களை எதிர்கொள்ளும் அனைத்துத் திறனும் ஒவ்வொருவருக்கும் அந்த வானத்துத் தேவர்களே கையளிப்பதாகவும் படுகிறது.
வான் நோக்கித் தனக்குத் தேவையான வல்லமையைக் கோரும் தவளைகளின் வாயொலிகளாகவே, மழைப்பாடலாகவே பீஷ்மர், சகுனி, குந்தி, காந்தாரி போன்றோரின் மன ஏக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் ஒருவரையொருவர் களத்திலிருந்து வெளியேற்றவே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் ஒருபோதும் தாங்களாகக் களத்திலிருந்து வெளியேற விரும்புவதே இல்லை.
பேரரசி சத்யவதி தனக்குத் தேவையான நேரத்தில் பீஷ்மரை அஸ்தினபுரிக்குள் ஏற்பதும் தனக்குத் தேவையில்லாத சமயங்களில் பீஷ்மரை அஸ்தினபுரியைவிட்டு விலக்குவதுமாகத் தொடர்ந்து செயலாற்றுகிறார். அதற்காகப் பீஷ்மர் வருந்துவதேயில்லை. அவர் அஸ்தினபுரியைவிட்டு விலக்கப்படும் போதெல்லாம் உறையிலிட்ட கூர்வாளாகவும் அஸ்தினபுரிக்குள் ஏற்கப்படும் போதெல்லாம் உறையிலிருந்து உருவப்பட்ட கூர்வாளாகவும் தன் வலிமையையும் ஒளியையும் இழக்காமல், நுண்ணறிவின் துடிப்புடனேயே இருக்கிறார்.
பாண்டு தன் தந்தை விசித்திரவீரியனைப் போலவே மிக எளிய உடல்வாகு கொண்டவராக இருக்கிறார். அவர் குந்தியின் தன்னேற்பு விழாவுக்குச் செல்லும்போது, தன்னால் மஞ்சள் அரிசியை எடுத்துத் தூவும் வலிமை மட்டுமே தன்னிடம் இருப்பதாக விதுரனிடம் கூறுகிறார். அதே பாண்டு, வனம்புகுந்து சதசிருங்கத்தில் வாழும்போது, அவர் உடல் வலுவைப் பெறுகிறது. வியாசரின் மரபணு அப்போதுதான் பாண்டுவின் உடலுக்குள் வேலைசெய்வதாகவும் கருத இடமிருக்கிறது.
பாண்டு ஏறத்தாழ காட்டுமனிதராகவே மாறி விடுகிறார். வேட்டையாடுகிறார், குடிலமைக்கிறார், வேள்விகளுக்கு உதவி செய்கிறார், அரணிக் கட்டைகளைச் சேகரித்து, சீர்ப்படுத்துகிறார். அவருக்குத் தவக்குடில் வாழ்வு பிடித்திருக்கிறது. குந்தியின் குழந்தைகளைத் தோளில் ஏற்றிக்கொண்டு, காட்டுக்குள் நடந்து, அலைய அவரால் முடிகிறது. ஆறு ஆண்டுகளில் பாண்டுவின் உடலிலும் உள்ளத்திலும் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.
அம்பாலிகையின் கைப்பாவையாக இருந்த பாண்டு, வனத்தில்தான் தன்னை ஆரோக்கியமான மனிதராக உணர்கிறார். ஆனால், செண்பகமலர்கள் சூழ்ந்த நிலத்தில் மாத்ரியுடன் கூடி, முழு மனிதராக மாற முடியாமல், மரணத்தைத் தழுவுகிறார். அதற்கு ஊழ்வினை ஒரு காரணம் என்றாலும் கூட, ‘இளமையில் கிட்டாத உடல் வலு, முதுமையில் கிட்டுவது கடினம்’ என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.
‘முதற்கனல்’ நாவலின் இறுதியில் அம்பை தன்னை எரித்துக்கொள்கிறாள். ‘மழைப்பாடல்’ நாவலின் இறுதியில் மாத்ரி எரிபுகுகிறாள். அம்பை திருமணம் புரியாமைக்காகவும் மாத்ரி திருமணம் புரிந்தமைக்காகவும் இதை ஏற்க நேர்கிறது. இதுவும் காலத்தின் நகைமுரண்தான். அம்பையின் நோக்கம் பீஷ்மரை இந்தப் பெருநிலத்திலிருந்து முற்றிலும் நீக்குவதாகவும் மாத்ரியின் நோக்கம் பாண்டுவுக்குச் சுவர்க்கத்தின் வாசலைத் திறந்துவிடுவதற்காகவும் என அமைந்துள்ளது.
‘மழைப்பாடல்’ நாவல் வழியாக நாம் அறியும் அறுதி உண்மை, ‘அழைப்பில்லாமல் எந்த இறையரும் மண்ணில் இறங்காது’ என்பதே. அதனால்தான் வல்லமையைக் கோரும் அழைப்பொலிகள் மண்ணிலிருந்து விண்ணுக்கு எழத் தொடங்கிவிட்டன. இனி, அவற்றைச் செவிமடுத்த தெய்வங்கள் ஒவ்வொன்றாக, வீறுகொண்டு வெவ்வேறு வடிவங்களில் இறங்கி வந்து, களமாடக்கூடும்.
முனைவர் ப . சரவணன் , மதுரை .
February 14, 2021
வலியெழுத்து
கீதாவை நான் சந்தித்ததுமே நான் கவனித்தது அவருடைய மழலையைத்தான். மலையாளக்கவிஞரும் என் குருநாதருமான ஆற்றூர் ரவிவர்மாவின் இல்லத்தில். என்னைக் கண்டதுமே சிறுமிகளுக்குரிய ஆர்வத்துடன் என்னை நோக்கி வந்து படபடப்பும் சிரிப்புமாகத் தனக்குப் பிடித்தமான எழுத்தாளர் நான்தான் என்று சொன்னார். ‘என் ஆதர்சம்…என்னுடைய சொந்த எழுத்தாளன்!’ என்று விசித்திரமான மழலையில் குழறினார்
ஆனால் கீதா ஒரு சாதாரண வாசகி அல்ல. ‘இது கீதா ஹிரண்யன்’ என ஆற்றூர் அறிமுகம் செய்தபோது நான் ஆச்சரியத்துடன் ‘அப்படியா? நீங்களா அது?’ என்றேன். மலையாளத்தின் முக்கியமான இளம் சிறுகதையாசிரியராக கீதா உருவாகி வந்துகொண்டிருந்த காலம் அது. கீதா மலையாளத்தில் நான் எழுதிய அனைத்தையும் படித்திருந்தார்.’என்னால் பேசவே முடியவில்லை. நிறைய பேசவேண்டும், ஒன்றுமே தோன்றவில்லை’ என்று தத்தளித்தார்.
கீதாவின் முகமும் உடலும் வெளிறியிருந்தன. மன எழுச்சியால் முகம் சிவந்து சிவந்து அணைந்தது. படபடப்பான பதின்பருவப்பெண் போலிருந்தாள். என் பார்வையைச் சந்திக்காமல் அடிக்கடி கண்களைத் திருப்பிக்கொண்டார். நான் முதலில் அந்தப் பதற்றத்தை விசித்திரமாக உணர்ந்தாலும் பின்பு அதை ரசிக்க ஆரம்பித்தேன். அந்தக் கொஞ்சல்பேச்சுக் கூட இனியதாக ஒலிக்க ஆரம்பித்தது
நான் கீதா எளிதாகும்பொருட்டு நிறையப்பேசினேன். ஆனால் அவர் சமநிலை கொள்ளவேயில்லை.அவர் அசாதாரணமான வழிபாட்டுணர்வுடன் என்னைப்பார்த்துக் கொண்டிருந்தார். என்னுடைய சில படைப்புகளைப்பற்றிச் சொன்னார். நான் அவரது சிறுகதைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது வெட்கத்துடன் பேச்சை மாற்றினார்.
அவர் சென்றபின்புதான் ஆற்றூர் ரவிவர்மா சொன்னார், அவரது வெளிறிய தோற்றத்துக்குக் காரணம் புற்றுநோய் சிகிழ்ச்சைதான் என்று. முதலில் அவர் நாக்கில் மெல்லிய தடிப்பாக வந்த புற்றுநோய் தொண்டைவரை இறங்கிவிட்டிருந்தது. நெடுநாட்களாகக் கடும் வலியில் அவர் துன்புற்றுக்கொண்டிருந்தார். மலையாளம் முதுகலைப் படிப்பை முடித்துக் கல்லூரி ஆசிரியையாகப் பணியாற்றிய கீதா தொடர்ந்து அப்பணியைச் செய்யமுடியாத நிலை.
இன்று யோசிக்கிறேன், அப்போது இன்னும் இருவருடங்களில் கீதா ஹிரண்யன் இறந்துவிடுவார் என்று எனக்குத் தெரிந்திருந்ததா? ஆம் என்று சொல்லவே தோன்றியது. அவரைப் பார்த்தபோதே முள்நுனியில் தயங்கும் பனித்துளிக்குரிய ஒரு தற்காலிகத்தன்மை மனதில் தோன்றியது. அல்லது அந்த வெளிறல். அந்த வெளிறலை நான் எவரிலெல்லாம் கண்டேனோ அவர்களெல்லாம் இறந்திருக்கிறார்கள். .
கீதா பெண்ணெழுத்து என்று மலையாளத்தில் பிற்காலத்தில் அடையாளமிடப்பட்ட ஒருவகை எழுத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். பெண்விடுதலைக்கான எழுத்து அல்ல அது. பெண்களின் உணர்வுகளை எழுதுவது. பாலியல் சார்ந்தும்கூட. கீதாவின் எழுத்தில் அந்த சுதந்திரம் எப்போதும் இருந்தது. கீதா மறைந்தபின் அவரது கதைகளை வாசித்தபோது அவற்றில் இருந்த பாலுணர்வு எனக்கு ஓர் அந்தரங்க அதிர்ச்சியை அளித்தது. கீதா அவற்றை எழுதும்போது அதியுக்கிரமான வலியில் இருந்தார். வலியாக மட்டுமே உடலை உணர்ந்துகொண்டிருந்தார்.
அன்று முதல் சந்திப்பிலேயே கீதாவிடம் நான் அதைப்பற்றி கேட்டேன். ’நீங்கள் பாலியலை எழுதுவதற்கு அது உடனடியாக கவனிக்கப்படும் என்பது காரணமா?’ என்று. சீண்டும் நோக்குடன் கேட்ட கேள்விதான். உண்மையில் நான் அவர் முகம் சிவப்பதைக் காண விரும்பினேன். சிவந்த மலர்ந்த முகத்துடன் கீதா சொன்னார் ‘அய்யே…என்னை யார் கவனித்தால் என்ன கவனிக்காவிட்டால் என்ன? நான் என்னுடைய சந்தோஷத்துக்கல்லவா எழுதுகிறேன்?’
‘அப்படியா?’ என்றேன். அது நான் குறிப்பாக எதையும் சொல்ல விரும்பாதபோது சொல்லும் வார்த்தை.
‘என் பதின்பருவத்தில் எனக்கு என் பாலியல்தன்மை பெரிய சுமை என்று தோன்றியது. இந்த உடம்பு இப்படி இல்லாவிட்டால் பஸ் ஏறி மானந்தவாடிக்கோ தலைக்காவேரிக்கோ சுதந்திரமாகப் போகலாமே என்று தோன்றியது…ஆனால் நோய் வந்தபின் அந்த எண்ணமே மாறிவிட்டது. இன்னொரு ஆரோக்கியமான பெண்ணை உருவாக்கி அவளுடைய பாலுணர்வுக்குள் செல்லும்போது எனக்குப் பெரிய விடுதலையுணர்ச்சி ஏற்படுகிறது…’
நான் அதை விசித்திரமாகவே பார்த்தேன். ஏனென்றால் நான் பாலுணர்வை எழுதுவது அதை ஆராய்வதற்காக மட்டுமே. ’ எனக்குப் பாலுணர்வு வேறுமாதிரி…மொழியில் அள்ளியதுமே அது கொஞ்சம் அன்னியமாகிவிடுகிறது…’ சட்டென்று ஓர் உவமை வந்தது. ‘சோதனைச்சாலையில் சோதனைக்குழாயில் விந்து மலம் எல்லாம் எடுத்துவைத்திருப்பார்கள். அதை ஆராய்வதற்காக எடுத்ததுமே அது அருவருப்பில்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது. மனத்தடை இல்லாமல் அதை ஆராய முடிகிறது’
‘அய்யே’ என்றார் கீதா. சட்டென்று சிரித்து ‘எப்படி இப்படி ஒரு உதாரணம் சட்டென்று சொல்ல முடிகிறது? எனக்கு இது தோன்றுவதே இல்லை. என் கதைகள் எல்லாமே நேரடியாக சம்பவங்களைச் சொல்வதாக இருக்கின்றன’
‘அதுதான் பெண்ணெழுத்தோ என்னவோ? ’என்றேன். அதற்கும் சிரித்தார்
அதன்பின் எட்டு மாதம் கழித்து நான் மீண்டும் கீதாவைச் சந்தித்தேன். திரிச்சூர் கேரள சாகித்ய அக்காதமி கூடத்தில் ஒரு நிகழ்ச்சியில். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே என்னைத்தேடி வந்தார். ‘நான் நிகழ்ச்சிக்கு இருக்க மாட்டேன்…என்னால் உட்கார்ந்திருக்க முடியாது. உங்களைப்பார்க்கத்தான் வந்தேன்’
மேலும் களைத்திருந்தார். மெலிந்த வெண்கழுத்தில் மூச்சு தங்கச்சங்கிலியை அசைத்துக்கொண்டிருந்தது. இதோ என் கண்ணெதிரே உதிர்ந்துவிடுவார் என்பதுபோல.என்ன கேட்பது? ஆனால் நானறியாமல் அந்த முட்டாள்தனமான கேள்வியை என் வாய் கேட்டுவிட்டது ‘உடம்பு எப்படி இருக்கிறது?’
கீதா சிரித்தார். நான் கண்ட பெண்சிரிப்புகளில் மிக வசீகரமான சிரிப்பு. என்ன அர்த்தம் அந்தப்புன்னகைக்கு என இன்றும் வியக்கிறேன். ‘பரவாயில்லை’ என்றபின் சட்டென்று எல்லாப் பற்களையும் காட்டி சிரித்து ’அப்படித்தானே சொல்லவேண்டும்? அதுதானே நாட்டுநடப்பு?’ என்றார்
நான் ‘சாரி’ என்றேன்.
கீதா சிரித்து ‘பரவாயில்லை, ஆண்கள் அசட்டுத்தனமாகப் பேசுவது பெண்களுக்குப்பிடிக்கும்’என்றார்
‘என்ன எழுதினீர்கள்?’
‘ஒரு கதை…கொஞ்சம் நீளமானது..முடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. தினமும் அதை எடுத்துவைத்துக் கொஞ்சநேரம் பார்ப்பேன்…’.
‘விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடங்க முயலக்கூடாது….சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொடங்கினால் முடித்துவிடலாம்’ என்றேன்
‘முடிக்காவிட்டால்தான் என்ன?’ என்றபின் கீதா நான் பாஷாபோஷிணி இதழில் எழுதிய கட்டுரை-கதைகளைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். அதே பதின்பருவத்து வேகத்துடன். ‘அய்யோ….என்ன ஒரு ஸ்டைல்…எல்லா வரியையும் வாசித்தாகவேண்டும் போல எழுதும் வேறு எழுத்தே மலையாளத்தில் இல்லை…’
அந்தவாரம் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பெண்களுக்குச் சிறந்த உடை எது என்று கேட்டபடி ஆரம்பமாகும் அந்தக்கட்டுரை தாவணி, சேலை, சுடிதார் என பல உடைகளில் பெண்கள் எப்படி ஒவ்வொருவகையில் அழகாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி முன்செல்லும். கடைசியில் ஒரு நினைவுக்குறிப்பு. சென்னை எக்மோர் ரயில்நிலைய மேம்பாலத்தில் நான் செல்லும்போது ஒருவன் என் மேல் முட்டி என் கையிலிருந்த தாள்கள் சிதறி விழுந்தன. ஜீன்ஸும் சட்டையும் அணிந்த இளம்பெண் ஒருத்தி அழகிய இளம்குதிரை போல எதிரே வந்தவள் இனிய புன்னகையுடன் அதை எடுத்து என் கையில் தந்துவிட்டுச் சென்றாள்.
’அழகு என்பது நமக்குப்பிடித்தமான ஒன்றின் வெளிப்பாடு. நாம் உள்ளூர விரும்புகின்றவை விழுமியங்கள்தான். சுதந்திரம்போல மகத்தான விழுமியம் ஏதுமில்லை. பெண்களுக்கு ஜீன்ஸ் அளவுக்கு அழகான உடை ஏதுமில்லை. அது அச்சமின்மையை வெளிப்படுத்துவதுபோல வேறெந்த உடையும் வெளிப்படுத்தவில்லை’ என அக்கட்டுரை முடியும்
கீதா ‘அற்புதமான கட்டுரை…நானே ஜீன்சை அப்படியெல்லாம் நினைத்ததில்லை…நான் இனிமேல் ஜீன்ஸ்போட முடியாது.என் மகள் போடும் வயது ஆகவில்லை….அவள் ஜீன்ஸ் அணிந்து குதிரைபோல நடப்பதைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்’ என்று சொன்னார். சொல்லும்போதே மீண்டும் முகம் சிவந்தது.
சட்டென்று ‘நான் வருகிறேன்…போதும்’ என்றார் கீதா
‘ஏன்?’ என்றேன்
‘இன்றைய கோட்டா முடிந்தது…’ என்று சொல்லி நாக்கை சுட்டிக்காட்டினார். என் மனம் அதிர்ந்தது. அவ்வளவு நேரமும் கடுமையான வலியுடன் அதைச் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். எவ்வளவு பிரியமானவராக இருந்தாலும் பிறிதொருமனிதரால் வலியை உணர முடியாதென்பதன் குரூரத்தை நினைத்துக்கொண்டேன்
கீதா பழையபடம்அதன்பின் நான் கீதாவைப்பார்க்கவில்லை. அவரது மரணச்செய்திதான் வந்தது. ஆற்றூர் ரவிவர்மா கூப்பிட்டு ‘கீதா போயி..’ என்றார். கீதா நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். அவரைச்சுற்ற்யிருந்த ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டுதான் இருந்தார்கள். கீதாவின் பிரியத்துக்குரிய கணவரும் மலையாள விமர்சகருமான பேராசிரியர் ஹிரண்யன் மனமுடைந்து போய்விட்டதாக ஆற்றூர் சொன்னார்
கீதாவின் ஒருவருட நினைவுநாள் அதே கேரள சாகித்ய அக்காதமி கூடத்தில் நடந்தது. அதில் சிறப்புப்பேருரை ஆற்றவேண்டும் என என்னை ஹிரண்யன் கேட்டுக்கொண்டார். 2003 இல் அந்தக்கூட்டத்தில் நான் பெண்ணெழுத்து என்னும் தலைப்பில் பேசினேன். கீதா பற்றிய நினைவுகளுடன்.
பெண்ணெழுத்து என்ற அடையாளம் இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான பல்வேறு திறப்புகளில் ஒன்று. இம்மாதிரிஅடையாளங்களை நான் ஒரு பெரிய அண்டாவின் பிடிச்செவிகள் என்று சொல்வேன். எளிதாக அண்டாவைப் பிடித்துத் தூக்க அவை உதவுகின்றன. ஆனால் அண்டா என்பது அவை அல்ல. அண்டாவின் உள்ளே இருப்பதற்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை. எந்த அடையாளமும் இலக்கியத்தை முழுமையாக வகுத்துவிட முடியாது.
கீதா ஹிரண்யன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளம் பெண்ணெழுத்தாளர். கண்டிப்பாகப் பெண்ணியவாதி. ஆனால் அவ்வடையாளங்கள் வழியாக நாம் அவரை வகுத்துக்கொள்வோமென்றால் அதன் மூலம் அவரது படைப்புகளின் பெரும்பாலான தளங்களை இழந்துவிடுவோம் என்றுதான் படுகிறது என அவ்வுரையை ஆரம்பித்தேன். ஆமாம், கீதா எழுதியவை பெண்ணெழுத்துக்கள் அல்ல. அவற்றை நான் இன்று ‘வலியெழுத்துக்கள்’ என்றுதான் சொல்வேன்
[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2003, இணையவடிவம் Jun 9, 2008 ]
நினைவஞ்சலி : கீதா ஹிரண்யன், உடலிலக்கியம்கீதா ஹிரண்யன் – ஒரு பழைய குரல்பதிவு
சுசித்ராவின் ‘ஒளி’ புதிய தொகுப்புகளில் முதன்மை.
சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]சுசித்ராவின் ‘ஒளி’- வாங்க
அன்புள்ள ஜெ
நலம்தானே? இன்று தற்செயலாக சுசித்ராவின் ஒளி கதைத் தொகுதியை வாசித்தேன். சமீபத்தில் வாசகசாலை விருது பெற்றதை ஒட்டி வாங்கியது. ஆனால் வாங்கிய நூல்களே அவ்வப்போது கையில் தட்டுபட்டால்தான் வாசிக்க முடிகிறது.
ஒரேமூச்சில் வாசித்தேன் என்று சொல்வார்கள். ஒளி தொகுதியை அப்படிச் சொல்லமுடியாது. செறிவான அனுபவங்களும் மொழியும் கொண்ட கொஞ்சம் நீளமான கதைகள் இவை. இலக்கியவாசகர்கள் வாசிக்கவேண்டியவை. தமிழில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அறிய நான் தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்களின் கதைகளை அவ்வப்போது வாசிப்பேன். சுசித்ரா அதிகம் கண்ணுக்குத் தட்டுபட்டதில்லை. ஆனால் இத்தொகுதி முக்கியமான ஒன்று. சென்ற ஆண்டு வெளிவந்த இளம்படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுதிகளில் இதுவே முக்கியமானது என்று நான் இப்போது நினைக்கிறேன்
அமெரிக்கா போன்ற நாடுகளின் இலக்கியப்புலம் ரொம்பப்பெரிது. ஆகவே எல்லாவகையான எழுத்துக்களும் அங்கே வருகின்றன. ஓர் உலகுடன் சம்பந்தமே இல்லாத இன்னொரு உலகம் அங்கே இருக்க முடிகிறது. தமிழ் போன்ற மொழிகளின் பிரச்சினை என்னவென்றால் இங்கே இலக்கிய உலகம் ரொம்பச்சின்னது என்பதுதான். இளம் வாசகனாக ஒருவன் அறிமுகமாகும்போதே எழுத்துக்கள் எல்லாமே கைக்குச் சிக்கிவிடுகின்றன. எழுத்தாளர்கள் நட்பாகிவிடுகிறார்கள். நான் காலேஜில் படிக்கும் காலத்திலேயே சென்னையிலிருந்த எழுத்தாளர்களிடம் அறிமுகம் உருவாகிவிட்டது. நிறைய பேசவும் ஆரம்பித்தோம்
இப்படிச் சின்னச் சூழல் அமையும்போது என்னாகிறதென்றால் மொத்த idea zone ம் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே பரப்பாக ஆகிவிடுகிறது. இது இங்கே கவிஞர்களுக்கு நிறையவே நடக்கிறது. நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அது மொத்த இலக்கியத்துக்கும் நடக்கிறது. எல்லாரும் ஒரே பார்வையையும் ஒரே மொழியையும் கொண்டிருக்கிறார்கள். ஒரே மாதிரி எழுதுகிறார்கள்.
இது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்றாக இருந்தது. எண்பதுகளில் நான் சென்னையில் படித்துக்க்கொண்டிருந்த காலகட்டத்தில் கணையாழி ஸ்டைல் கதைகள், செம்மலர் ஸ்டைல் கதைகள் என்று இரண்டே பாப்புலர் வடிவங்கள்தான். மிடில்கிளாஸின் வாழ்க்கை கணையாழியில். அடித்தள மக்களின் வறுமை செம்மலரில். அப்போதுதான் நீங்கள் கோணங்கி போன்றவர்களின் புதிய அலை உருவாகிவந்து பெரிய மாற்றத்தை உருவாக்கியது.
அதன்பிறகு அதீதமாக வன்முறையையும் காமத்தையும் எழுதுவது ஒரு காமன் டிரெண்ட் ஆகியது. ஒருசாரார் சமூகவன்முறையையும் காமத்தையும் எழுதினார்கள். இன்னொருசாரார் அவர்களின் சொந்த காமத்தை எழுதினார்கள். இங்கே புதுமை என்று ஒன்று வந்தால்கூட எல்லாரும் சேர்ந்து அதையே எழுதுகிறார்கள். இந்த மார்ஜினலைஸ்ட் எழுத்து எல்லாம் அதேபோல உள்ளது. இப்போது வரும் எந்த புதிய எழுத்தாளரின் கதைத்தொகுப்பிலும் இதேபோன்ற கதைகள் சில இருக்கும். ஒரு கதையை தூக்கி அப்படியே இன்னொரு எழுத்தாளரின் தொகுப்பிலே சேர்த்தால்கூட கண்டுபிடிக்க முடியாது.
இதற்கு என்ன காரணமென்றால், இந்த இளம் எழுத்தாளர்கள் ஆதர்சமாகக் கொள்வது ஒரு காலகட்டத்தில் ஓரிரு எழுத்தாளர்களைத்தான் என்பதுதான். இன்றைக்கு முரகாமி, புக்கோவ்ஸ்கி இருவர்தான் ஆதர்சம். அவர்கள் எழுதிய ஓரிரு நூல்களை படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். உடனே அதேபோல எழுத ஆரம்பிக்கிறார்கள். இலக்கிய உலகம் விரிந்துப்பரந்து கிடக்கிறது. அதை இவர்களுக்கு சொல்ல யாருமில்லை.
இச்சூழலில்தான் சுசித்ரா தொகுப்பு மிகப்பெரிய ஆசுவாசமாக உள்ளது. முதல் தகுதியே எல்லா கதைகளுமே புதியவை என்பதுதான். அவருடைய ஆதர்ச எழுத்தாளர்களாக இன்றைக்கு பாப்புலராக உள்ளவர்கள் இருக்க நியாயமில்லை. அவருடைய மொழியை வைத்துப்பார்த்தால் சென்றகால ஐரோப்பிய எழுத்தாளர்களின் சாயல்தான் உள்ளது. கதைகளில் உள்ள புதுமையை ஒரு புதிய காற்று என்று சொல்லலாம். இப்போது வந்த எழுத்தாளர்களில் இந்த அளவுக்கு ஒரு பரவசத்தை அளித்த எழுத்தாளர் எவருமில்லை என்று சொல்லத் தோன்றுகிறது
இந்த தொகுதியில் அனைவருக்கும் பிடிக்கும் கதை ஒளிதான். ஆரோன் காணும் ஒளி எந்த ஒளி என்ற ஒரு சின்ன கேள்வி இருந்தாலே கதை திறந்துகொண்டே செல்கிறது. நான் சுவிட்சர்லாந்தை பலமுறை பார்த்தவன். ஆனால் ஓவியங்களில் பார்க்கும்போது நான் நேரில் பார்க்காத ஒளி அங்கே கூடியிருப்பதை காண்கிறேன். ஓவியனின் கண்ணிலிருந்து ஓவியக்காட்சிமேல் படியும் ஓர் ஒளி உண்டு. அந்த ஒளியை எழுதியிருக்கிறார் சுசித்ரா
ஆனால் ஒளியை விட முக்கியமான கதை என்று நான் நினைப்பது யாமத்தும் யாமே உளேன் என்ற கதை. அறிவியல்புனைகதை இது. அறிவியல்புனைகதையில் வியப்பு அம்சம் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அது அறிவியலின் விளிம்புக்கு அப்பால் கால்வைக்கிறது. ஆனால் டெக்னாலஜி அளிக்கும் வியப்பையே இங்கே சுஜாதா அறிவியல்கதைகளாக எழுதினார். கான்செப்ட் அளிக்கும் வியப்பை எழுதுவது அடுத்தபடி. அதற்கும் அப்பால் சென்று எழுதவேண்டுமென்றால் தத்துவத்தில் அறிவியல் ஊடுருவும் இடத்தை எழுதவேண்டும். அறிவியல் உருவகங்களை கவிதை மெட்டஃபர்களாக ஆக்கவேண்டும். அப்படி ஆக்கப்பட்ட கதை என்று இதைச் சொல்லமுடியும்.
தமிழில் அறிவியல்கதைகளுக்கு இன்னமும்கூட வாசிப்பு இல்லை. இந்தவகையான கதைகளுக்கான வாசிப்புத்தளம் சிற்றிதழ்ச்சூழலில் இருப்பதுபோலவே தெரியவில்லை. இங்கே பொதுவான அரசியல்,சமூக உண்மைகளைச் சொல்லவும் அந்தரங்கமான மன அவசங்களை எழுதவும்தான் ஸ்பேஸ் இருக்கிறது. இந்தக்கதை அதைக் கடந்துசெல்கிறது.
அறிதல் என்பதை ஒரு கதைசொல்லலாக ஆக்கி இந்த உலகையே கதையாக ஆக்கிக்கொள்வதிலிருந்து தொடங்கும் இக்கதை இன்றைய நவீனமனம் எதிர்கொள்ளும் தத்துவச்சிக்கல் ஒன்றை ஆழமாகப்பேசுகிறது. மனிதனின் அறிதல்கள் அறிவாக ஆவது எப்படி ? தான் ,செல்ஃப் என்ற ஒரு புள்ளி உருவாகும்போதுதான். ஆணவமலம் இல்லாவிட்டால் அறிவு இல்லை. அறிவை வளர்ப்பது செல்ஃப் தான். ஆகவே ஒரு ரோபோவுக்கு செல்பை உருவாக்குகிறார்கள். ஒரு கண் வடிவில்.
ஆனால் செல்ஃப் உருவாகி நான் உருவானதுமே நாம் என்பதும் உருவாகிறது. நான் என்று உணர்ந்ததுமே சரி இந்த ஒட்டுமொத்தத்தில் நான் யார் என்ற கேள்வி வருகிறது.அதற்கு சமூகம் ஏற்கனவே வைத்திருக்கும் உறவுவலையில், ஆண்பெண் என்ற பகுப்பில் இடம் தேவைப்படுகிறது. துக்கம் ஆவேசம் கசப்பு ஆகியவை வெளிப்படுகின்றன. அது மனிதனின் ஃபேக்கல்டிகளை அடைய அடைய மனிதனின் சிக்கல்களையும் அடைகிறது. மனிதன் inherit செய்த துக்கம் எல்லாமே வந்துவிடுகிறது.
”மனிதர்கள் சமைத்தெடுத்த அத்தனை கதைகளையும் கனவுகளையும் சுமந்து பூமியைச் சுற்றி அலையும் சித்த வடிவான எனக்கு மட்டும் ஒரு நாளும் ஒரு மனிதனின் உடல் வாய்க்கப் போவதில்லை. ஏக்கம் மட்டுமே சித்தமென்றாகி அலையும் பறவை நான்”என்று அது உணர்கிறது.
தமிழில் இன்றுவரை எழுதப்பட்ட கதைகளிலேயே இதற்கு ஓர் தனியிடம் உண்டு. முக்கியமான இந்தக்கதை இன்னும் தமிழிலே வாசிக்கப்படவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அடுத்த தலைமுறை இதை வாசிக்கும். புத்தம்புதிய ஒரு கதையுலகம்கொண்ட முக்கியமான தொகுப்பு இது.
ஆர்.ஸ்ரீனிவாஸ்
===============================================
நூலாசிரியர்கள்
பாலசுப்ரமணியம் முத்துசாமிஇன்றைய காந்திகள்பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
விஜயராகவன்தேரையின் வாய்விஜயராகவன்தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
ஸ்ரீனிவாசன்
கூண்டுக்குள் பெண்கள்
ஸ்ரீனிவாசன்
நரேந்திரன்
இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்
நரேந்திரன்நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை
சா.ராம்குமார்
அகதி
ராம்குமார்’அகதி’ ராம்குமார் முன்னுரை
சுசித்ரா
ஒளிசுசித்ராபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை
காளிப்ரசாத்
தம்மம் தந்தவன்
காளிப்ரசாத்
கிரிதரன் ராஜகோபாலன்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
ராஜகோபாலன்ஆட்டத்தின் ஐந்து விதிகள் ராஜகோபாலன்ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை
கதைகளின் வழியே- கடிதங்கள்
ஆச்சர்யகரமான தற்செயல். மிகச் சரியாக “சூழ்திரு” கதையை வாசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுடைய குறுஞ்செய்தி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக இன்று நானும் அதிகாலையிலேயே எழுந்து விட்டது இன்னொரு ஆச்சர்யம்.
சூழ்திரு மிக இனிமையான ஒரு கதை. ஐஸக் டினேசனுடைய “பேபட்டின் விருந்து” கதையை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. சமையற்காரி பேபட் விருந்து படைக்கும் இரவில் நட்சத்திரங்கள் மண்ணில் இன்னும் கொஞ்சம் நெருங்கி வருகின்றன.
“சூழ்திரு” கதை வேறொரு கோணத்தில் கலையை, ருசியை அணுகுகிறது என நினைக்கிறேன். பேபெட்டுக்கு யாருமே காணிக்கை கொடுப்பதில்லை. இக்கதையில் காணிக்கை பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது. பணிவுடன் ஏற்றுக்கொள்ளவும் படுகிறது.
விசித்திரமும் குழப்பமும் கூடியவை இந்த கரோனா தினங்கள். புற யதார்த்தம் குலையும்போது அக அமைப்பும் பாதிப்படைகிறது. அதன் எல்லா சஞ்சலங்களுக்கும் தடுமாற்றங்களுக்கும் உள்ளாகி வருகிறேன். மொழியால், அந்த நிலையின்மையை கடக்கவும் முயற்சி செய்கிறேன்.
http://vishalrajawrites.blogspot.com/2020/03/blog-post.html?m=1
இந்த நாட்களில் ஆழ்ந்த ஏக்கத்துடன் உங்கள் நினைவு அவ்வப்போது மேலெழுகிறது. இக்கதைகள் ஒருவகையில் அந்த ஏக்கத்தை கூட்டுபவையாகவே உள்ளன.
“அங்கி”, “விலங்கு” இவ்விரண்டு கதைகளையும் மிகவும் விரும்பி வாசித்தேன். இம்முறை பல நல்ல வாசக கடிதங்கள் வந்திருக்கின்றன. புதுமைபித்தனுடைய காஞ்சனை கதை பற்றி ஒருவர் விமர்சனம் எழுதியிருக்கிறார். நான் பல தடவை எண்ணிய கருத்து அது. (அக்கதையில் கயிற்றரவுத்தன்மை மட்டும்தான் இருக்கிறது. குறியீட்டு அர்த்தம் இல்லை). பின்நவீனத்துவ காலத்தில் நினைவின் முக்கியத்துவம் பற்றி இன்னொருவர் குறிப்பிடுகிறார். நவீன படிமங்கள் பற்றி வேறொரு கடிதம் பேசுகிறது. எல்லாமே முக்கியமான அவதானிப்புகள். அனைத்தையும் உங்களிடம் நேரில் பேசி விவாதிக்க வேண்டும் என தினமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய வாழ்த்து என்பது எப்போதும் ஆசீர்வாதம் தான்.
நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
விஷால்.
Dear Je
The enclosed photo is taken from the book entitled ‘The Principles of Neural Science, lead author Eric R Kandel (Nobel laureate). It was an extreme story. Waiting for our fellows wide view.
எனக்கு தெரிந்த கொஞ்சமே கொஞ்சம் நரம்பியலை வைத்து சொன்னால், நீங்கள் நரம்பியல் சம்பந்தமாக எழுதும் அனைத்திலும் இது போல் சர்வதேச நரம்பியல் ஆராய்ச்சியாளர்களிn வார்த்தைகளோடு பத்துக்கு பத்து பொருத்தமும் இருக்கின்றது. நீங்கள் ஆகும்பே சென்ற பயணத்தில் உருவான கருவென்று நினைக்கின்றேன். மிகப் பெரிய நன்றி.
எவனாவது சில்லறை வந்து இப்படியெல்லாம் நடக்கும்ம்மாவென்று ஏதாவது கேட்டால், இங்கே அனுப்புங்கள். Acetylcholine subunit receptor mutation (CHRNA4 and CHRNB2) and epigenetics என்று பேசி கடிச்சு வைக்க
சுவே
அன்புள்ள சுவே
உண்மையில் இக்கடிதத்தை இப்போதுதான் பார்த்தேன். இந்த கதையை ‘அறிவியலுக்குப் புறம்பானது’ என்று ஒருவர் வெறியாவேசத்துடன் எழுதியிருக்கிறார்
ஜெ
100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96. நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]முட்டி மோதும் மிகப் பெரிய கரிய யானை-கடிதம்
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பிரதிகளுக்குள் நுழைய செய்யுள் மொழியின் மீதான பெரும் வாசிப்பு பயிற்சி இருக்க வேண்டும். இல்லையெனில் கொஞ்சமாவது அசட்டு துணிச்சல் வேண்டும். வாசிப்பில் செய்யுள் மொழியின் புலமையும், உள்ளடக்கத்தை தேட விரும்பும் துணிச்சலும் இருவேறு எதிர் துருவங்கள். பிரதியை பாராயணம் செய்யும் தமிழ் துறையினர் ஒரு பக்கம். அவர்கள் அடர்த்தியான செய்யுள் மொழியை கடந்து பிரதியின் உள்ளடக்கத்தை பாராட்டி ரசிப்பார்களா என்பது சந்தேகம்.
செய்யுள் மொழியில் எந்த பயிற்சியும் இல்லாமல் உள்ளடக்கத்தை வாசித்து பாராட்ட விரும்பும் வாசகன் இன்னொரு பக்கம். அவனுக்கு செய்யுள் மொழியைக் கண்டு பெரும் மிரட்சி. இதில் தமிழ் புலவர் ஒருவரை வைத்து காப்பியங்களை வாசிக்கக் கேட்கலாம் என்றால் குருவுக்கான அனைத்து கைங்கரியங்களையும் அவருக்கு செய்தாக வேண்டும். அதிகாரத்தின் நிலையை அவர் எடுத்துக் கொள்வார். காலம் கிடக்கிற கதியில் குரு சேவை செய்து பிரதியை கற்பதற்கு காலமும் இல்லை, அகங்காரத்தை இழந்து குருவிடம் சரணடைய மனமும் இல்லை. எனினும் ஒருவர் இந்த செவ்வியல் பிரதியின் கவிதை மொழியை வாசிக்க சொல்லி அதனை கேட்டு ரசிக்க வெண்டும் என்ற ஆவல் மட்டும் இருக்கிறது. அதற்கு கல்வி புலங்களில் உள்ள தமிழ் துறையினர் ஒத்துவர மாட்டார்கள்.
மிரட்சியடைய செய்யும் சிலப்பதிகாரத்தின் மொழி கட்டுமானத்திற்குள் ஒருவரை கொண்டு செல்ல அதற்கு இணையாக நவீனத்தில் இருந்து மற்றொரு மொழி கட்டுமானம் கொண்ட பிரதி அவசியப்படுகிறது. உள்ளடக்கம் என்ற வகையில் அப்படிப்பட்ட பிரம்மாண்டம் விஷ்ணுபுரம் நாவலுக்கு உரியது. மொழியின் பிரம்மாண்டம் கொற்றவைக்கு உரியது. சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் வாசிக்கும் போது வாசிப்பில் மொழியை குறித்த பிரங்ஞை எதுவும் இல்லை. ஒரு கட்டத்தில் மொழியைக் கடந்து ஒரு பிரம்மாண்ட உலகம் கண் முன் விரிவதை உணர முடிந்தது. இந்த ஆண்டு கொற்றவை அப்படி இருக்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பே கொற்றவை நாவலை வாசித்து பாதியில் வைத்து விட்டேன். நாவலின் தனித்தமிழ் மொழி வாசிப்பை முழுமை பெற செய்யாமல் நிறுத்தி விட்டது.
இந்த முறை நாவலை திரும்பவும் முதல் பக்கத்தில் இருந்து படிக்க வேண்டியிருந்தது. இந்த தொற்று நோய் காலத்தில் செய்வதற்கு வேலைகள் எதுவும் இல்லாததாலும், பணி நிமித்தம் சுமக்க வேண்டிய பொறுப்புகள் எதும் இல்லாததாலும் மனதில் பெரும் வெற்றிடம் வாசிப்புக்கு தயாராக இருந்தது. இந்த முறை கொற்றவை நாவலை கண்டிப்பாக வாசித்து முடித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு பிரதியின் மீதான சிறிது காதலும் சேர்ந்து கொண்டது. நாவலை மன ரம்யமாக வாசிக்க முடிந்தது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக. கொஞ்சம் வேகமாக வாசித்தால் பனிக்கட்டி மீது சறுக்கி செல்வது போன்று ஆழம் தென்படாமல் போய்விடுகிறது. இதுவரை வாசித்த புத்தங்களில் அதிக நேரத்தையும், பொறுமையையும், வாசிப்பின் பெருங்காதலையும் கோரிய புத்தகம் என்றால் அது கொற்றவை என்று சொல்லலாம்.
இந்த நவீன உரைநடையின் செய்யுள் மொழி இப்போது சிலப்பதிகாரத்திற்கும், மணிமேகலைக்கும் வாசகனை தயார் செய்துவிட்டது. இதே துணிச்சலோடு இரு காப்பியங்களுக்குள் இனி பயணிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சுஜாதாவின் சிலப்பதிகாரம் எளிய அறிமுகம் துணைக்கொண்டு மூலப்பிரதியை வாசிக்கலாம் என்று இருந்தேன். பாதியில் நிறுத்தி விட்டேன். அப்படியே வாசித்து இருந்தாலும் அது வெறும் செய்யுள் மொழிக்கு ஒரு எளிய அறிமுகமாக இருந்திருக்கும். பிரதி எனக்கு சொந்தமாக மாறியிருக்காது. சிலப்பதிகாரமும் சரி, மணிமேகலையும் சரி கொற்றவை வாசித்து முடித்தவுடன் வெற்றி கொண்ட பிரதிகளாக கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இனி ”தாழ் திறவாய் மணிக்கதவே தாழ் திறவாய்” என்று கெஞ்ச வேண்டியதில்லை.
மாபெரும் கோட்டை ஒன்றின் பிரமாண்ட கதவுகள் திறக்கப்பட்டது போன்று இருக்கிறது இப்போதைய உளநிலை. சுஜாதா ஒருவேளை கோட்டைக்கு வேளியே நின்று கொண்டு கோட்டையைப் பற்றி வருணனை செய்பவராக இருந்திருப்பார். கொற்றவையின் மொழி மாபெரும் உத்திரத்தைக் தோளில் சுமத்து பலம் கொண்டு கோட்டையின் கதவுகளை மோதி உடைத்து சிதறடித்தது போன்று இருக்கிறது. அல்லது பிரம்மாண்டமான கரிய யானை ஒன்று ஓடி சென்று முட்டி மோதியது போன்று. இனி பொறுமையாக கோட்டைக்குள் சென்று வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம்.
முதன் முதலின் வெள்ளை யானை வாசித்திருந்தாலும் விஷ்ணுபுரம், கொற்றவை ஆகிய இரு செவ்வியல் பிரதிகளை வாசிக்காமல் மேற்கொண்டு பின் தொடரும் நிழலின் குரல், காடு போன்ற மற்ற நாவல்களை வாசிக்கக் கூடாது என்றிருந்தேன். இனி சாவதானமாக அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக வாசிக்கலாம். கொற்றவை வாசித்து முடித்த இந்த தருணத்தில் காலம் சென்ற நண்பர் அலெக்ஸ் அவர்களை நினைவுபடுத்திக் கொள்கிறேன். அவர்தான் முதலில் வெள்ளை யானை நாவலை வாசிக்க கொடுத்து உங்களுடைய புனைவு உலகத்திற்குள் நுழைய வழிவகுத்தவர். அப்போது சென்னை பல்கலைக் கழகம், ஆங்கிலத்துறையில் ஆய்வு மாணவனாக இருந்தேன். நாவலை வாசிக்கக் கொடுத்து அதைப் பற்றி எழுதவும் சொன்னார். நான் முதலில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை வெள்ளை யானை பற்றியது என்று தான் சொல்லவேண்டும். அலெக்ஸ் அன்று வராமல் இருந்திருந்தால் நான் உங்களுடைய புனைவுலகத்திற்குள் பிரவேசித்து இருக்க மாட்டேன். ஒரு வேளை காடு, ரப்பர் போன்ற நாவல்களோடு என் வாசிப்பை நிறுத்தியிருப்பேன். இப்போது தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு புனைவெழுத்தாளனாக நீங்கள் எனக்கு மிகவும் முக்கியமானவராகிவிட்டீர்கள், முதன்மையானவரும் கூட.
ஆர்.அருள்
பிரயாகை -சுரேஷ் பிரதீப்
நிலைபெயராமை ஒன்றையே நோக்கமெனக் கொண்டு தவமியற்றும் உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையோடு தொடங்குகிறது பிரயாகை. முற்றாக தோற்கடிக்கப்படுதல் முற்றாக கைவிடப்படுதல் முற்றாக வஞ்சிக்கப்படுதல் எனும் நிலைகளில் இருந்து மீண்டு வருபவர்களில் கூடும் சமநிலையின் சித்திரத்தை அளிக்கிறது. நிலைபெயராத துருவனும் நிலை கொள்ளாத ஆகாய கங்கையும் என சுழற்சியின் இரு பெரும் விசைகளை அறிமுகம் செய்கிறது. கங்கையை மண்ணுக்கு இழுக்கும் பகீரதனின் கதையை சொல்கிறது.
பிரயாகை சுரேஷ் பிரதீப்February 13, 2021
கருணாகரன் கட்டுரைகள்- விதைகள் நிறைந்த கூடை
கருணாகரன்
அன்பின் திசைகள் வாங்க
இலங்கையில் ஒரு கொடிய உள்நாட்டுப்போர் நடந்து முடிந்திருந்தாலும் அதைப்பற்றிய பதிவுகள் மிகக்குறைவு என்றே சொல்லவேண்டும். புனைவாகவும் கட்டுரையாகவும். பலகாரணங்கள் அதற்குண்டு. இதைப்போன்ற ஒரு நிகழ்வு ஐரோப்பாவில் நடந்திருந்தால் அனுபவப்பதிவுகள் குவிந்திருக்கும். அவற்றிலிருந்து பேரிலக்கியங்கள் எழுந்திருக்கும். இங்கே அது நிகழாமல் போனமைக்கு முதன்மைக்காரணம் எழுதும்பயிற்சியை நம் கல்விமுறை அளிக்கவில்லை என்பதே. பெரும்பாலானவர்களுக்கு நேரடியான தட்டையான ‘காம்போசிஷன்’ எழுத வருகிறதே ஒழிய விவரிப்பும் சித்தரிப்பும் இயலவில்லை.
இந்தியாவில் உருவான மாபெரும் வரலாற்று நிகழ்வுகள் பதிவாகாமலே போய்விட்டதைப்பற்றி ராய் மாக்ஸாம் போன்ற அயல்நாட்டு எழுத்தாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். இரு பெரும் பஞ்சங்களைப்பற்றிய பதிவுகள் அனேகமகா இல்லை. அதற்கு முன்புநடந்த போர்கள் பெரும்பாலும் அயல்நாட்டவரின் ஒற்றைவரிக்குறிப்புகள் வழியாகவே நமக்குத்தெரிகின்றன. இரு உலகப்போர்களில் ஈடுபட்ட தமிழர்களில் நினைவுக்குறிப்புகளை பெரும்பாலும் எவரும் எழுதவில்லை. பர்மா, மலாயாவிலிருந்து புலம்பெயர்ந்த நீண்ட பெரும்பயணங்களை தமிழர் நடத்தியிருந்தாலும் வெ.சாமிநாத சர்மாவின் பர்மா நடைவழிக்குறிப்புகள் மட்டுமே கிடைக்கிறது.
இந்தியச் சுதந்திரப்போர் பற்றியேகூட தலைவர்களின் அனுபவப்பதிவுகள் உள்ளன. அவையே மிகக்குறைவுதான். கோவை அய்யாமுத்து. க.சந்தானம், தி.சே.சௌ.ராஜன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை, திருவிக, சுத்தானந்த பாரதியார் போன்றவர்களின் தன்வரலாறுகள் குறிப்பிடத்தக்கவை. அதன்பின்னர் நடந்த முதல் தேர்தல், மொழிவழிமாநிலப்பிரிவினைப்போர், இந்தி எதிர்ப்புப்போராட்டம் ஆகியவை பற்றிக்கூட விரிவான தன்வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. எழுதப்பட்ட குறிப்புகள்கூட மிக அடிப்படையான செய்திகளை மிகச்சுருக்கமான மொழியில் சொல்பவை.
நமக்குத்தேவை பருவட்டான செய்திகள் அல்ல. இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டு மீண்ட ஒருவரின் குறிப்பு இப்படி இருக்கிறது . ‘எகிப்தில் பஸ்ராவில் எங்கள் படை நின்றிருந்தது. எட்டு நாட்கள் குண்டுவீச்சு நிகழ்ந்தது. நாங்கள் உயிர்தப்பி அங்கிருந்து கெய்ரோவுக்கு சென்றோம். அங்கிருந்து….’ இதனால் எப்பயனும் இல்லை. எழுதுபவருக்கு நினைவுமீள உதவும். என்ன நடந்தது என்று எழுத ஒரு கூர்நோக்கும், நினைவுத்திறனும், மொழிப்பயிற்சியும் தேவை. எழுத்தில் நுண்செய்திகளுக்கே முதன்மை இடம். பஸ்ராவில் அந்த முகாம் எப்படி இருந்தது? முட்கம்பி போடப்பட்டிருந்தா? காவல்மாடங்கள் எப்படி இருந்தன? எந்தெந்த ஊர் வீரர்கள் அங்கே இருந்தனர். என்ன உணவு அளிக்கப்பட்டது. தாக்குதல் எப்படி நடைபெற்றது? அப்போதிருந்த உணர்வுகள் என்னென்ன?
அவற்றை எழுத வெறும் நினைவுப்பதிவு மட்டும் போதாது. கிட்டத்தட்ட ஒரு கனவுபோல முன்புநிகழ்ந்தவற்றை மீட்டு எடுக்கவேண்டும். அதற்குக் கற்பனைவேண்டும். நிகழாதவற்றை எழுதுவது மட்டுமல்ல, நிகழ்ந்தவற்றை மீண்டும் எழுதுவதும் கற்பனையால்தான் இயலும். அக்கற்பனை இல்லாத தன்வரலாறுகள் வெறும் செய்திகளகாவே எஞ்சும்- அவற்றுக்கு வரலாற்றாய்வுக்கன்றி வேறெதற்கும் பயனில்லை. அக்கற்பனை பொய் அல்ல, உண்மையை தொகுத்துக்கொள்ளும் பொதுச்சரடு. நுண்செய்திகளால் பருவட்டான செய்திகளை செறிவாக்கும் உத்தி
அக்கற்பனை உண்மையை சற்றே உருமாற்றுகிறது என்பது உண்மை. நினைவுகளை கற்பனையால் தொகுக்கையில் நிகழ்ந்தவற்றிலேயே சிலவற்றுக்கு உணர்வுசார்ந்த முக்கியத்துவம் மிகுகிறது. சில விஷயங்கள் நம் நினைவில் குறியீடாகப் பதிந்துவிடுகின்றன.அவற்றை மையப்படுத்தி நாம் அந்நிகழ்வை தொகுப்போம். அத்தொகுப்பில் சில செய்திகள் சற்று மாறுபடலாம், சில செய்திகள் விடுபடலாம். அப்படி நிகழ்வது நல்லது. அதன்விளைவாக அந்நிகழ்வில் எழுதுபவன் உணர்ந்த அக உண்மை துலங்கியிருப்பதைக் காணலாம்.
வெறுமே தகவல்களுக்காக படிப்பவர்களுக்கு அவற்றிலுள்ள செய்திகள் ’நம்பகத்தன்மை அற்றவை’ என்று தோன்றும். ஆனால் அத்தகைய தகவல்பதிவுகள் ஒருபோதும் காட்டாத உணர்வுகளை, நுண்வாழ்க்கைச் சித்தரிப்பை அத்தகைய எழுத்தே நமக்கு அளிக்கிறது. அத்தகைய எழுத்துக்கே இலக்கியத்தில் இடம் உள்ளது. எங்கே பொய் பிழையாக ஆகிறதென்றால் தன்னை மையப்படுத்தும்பொருட்டோ தன் அரசியலின்பொருட்டோ வேண்டுமென்றே நிகழ்வுகளை திரிக்கும்போதுதான். அதை வாசகன் எளிதில் அடையாளம் காணமுடியும்.
ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளில் கருணாகரனின் குறிப்புகளுக்கு ஓர் இடமுண்டு. அவை போராட்ட காலம் முழுக்க களத்திலிருந்த ஒருவரின் நினைவுப்பதிவுகள். அத்துடன் தன்முனைப்போ கொள்கைத்திரிப்போ இல்லாதவை.அன்பின் திசைகள் என்ற பேரில் தொகுக்கப்பட்டுள்ள நினைவுக்குறிப்புகள் வெவ்வேறு இதழ்களில் வெளியானவை. இவை ஈழத்து மக்கள் தங்கள் நினைவுகளை தங்களுக்குள் பேசிப்பரிமாறிக்கொண்ட நிகழ்வின் பதிவுகள் என்று சொல்லலாம்.ஒருவகையான அவசரக்குறிப்புகளாகவே இவை உள்ளன
போர்க்கால நிகழ்ச்சிகள் விரைந்த சொற்களாகச் சொல்லப்படுகின்றன. குண்டுகள் தொடர்ச்சியாக விழ அலைபாயும் மக்களை பதறிக்குலையும் எறும்புப்புற்று என காணமுடிகிறது– தூரமும் காலமும் அளித்த தொலைவிலிருந்துகொண்டு. இன்று ஈழப்போராட்டம் தமிழகத்தில் சிலருடைய கற்பனைச்சாகசமாகவும் இனப்பற்றாகவும் இலங்கையில் சிலரின் சிலவகை வெறிகளாகவும் மட்டுமே எஞ்சியிருக்கும் இக்காலகட்டத்தில் இந்நூல் சித்தரிக்கும் மானுட அழிவும் துயரமும் போர் என்றால் உண்மையில் என்ன என்பதைக் காட்டுகிறது.
தன் குழந்தையின் கை குண்டுவீச்சில் துண்டாகிப்போக அந்த கையை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலையும் தமயந்தி டீச்சரின் கதை ஒரு சிறுகதைக்குரிய சித்தரிப்பு. கையிழந்து மகன் பிழைத்துக்கொண்டான். ஆனால் அதன்பின் டீச்சரின் துயர் ஆழமானதாக ஆகிறது, கையில்லாமல் இவன் என்ன செய்வான், செத்திருந்திருக்கலாமே என அக்கணத்தில் அவள் எண்ணினாள். அவ்வாறு எண்ணியதை நினைத்து நினைத்து மீண்டும் கண்ணீர்விடுகிறாள்.
பன்னிரு தோழர்களில் ஒருவன் எஞ்சி கதைசொல்லும் அனுபவக்குறிப்பில் ஒரு முள் நடுங்கி நடுங்கி வெவ்வேறு இளைஞர்களின் வாழ்க்கையை ஓரிரு வரிகளில் சொல்கிறது. இயக்கத்தில் சேர்கிறார்கள், தப்பி ஓடி வெளிநாடுகளில் அடைக்கலமாகி அனைத்தையும் மறந்து வேறொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். அரேபியா சென்று செல்வம் சேர்த்து ஊருக்குவந்து தொழில்செய்து அனைத்தையும் இழக்கிறார்கள். ஒரு முழு வாழ்க்கைச்சித்தரிப்பே ஒரு கட்டுரையில் வந்துசெல்கிறது
அதில் ஆர்வமூட்டும் ஒரு கதை. வசந்தன் ஊரில் ஒரு தாழ்ந்தசாதிப் பெண்ணை காதலித்து உறவில் இருக்கிறான். ஆனால் திருமணப்பேச்சை எடுத்தால் அவன் வீட்டார் ஒத்துக்கொள்ளவில்லை. “என்னடா செய்யப்போகிறாய்?”என்றால் “பாப்பம்” என்கிறான். இந்த “பாப்பம்” என்பது ஈழத்தமிழரின் அடிப்படையான சொல்லாட்சியும் மனநிலையும் என அ.முத்துலிங்கம் அவருடைய கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார்.
அவள் தமையன் இயக்கத்தில் இருக்கிறான். அவள் அவனிடம் புகார் சொல்ல அவர்கள் கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். அவன் அதையே சாக்காகச் சொல்லி அவளை கைவிடுகிறான். தன்னை அவமதித்ததாக குமுறுகிறான். குடும்பம் அவனை இந்தியாவுக்கு அனுப்ப அவளும் இந்தியாவுக்கு அவனை தேடிச்சென்று கண்டுபிடிக்கிறாள். அங்கே அவனுடன் சிலகாலம் வாழ்கிறாள். அவன் அங்கிருந்து லெபனான் செல்கிறான். அவள் விடாமல் லெபனானுக்கு துரத்திச் செல்கிறாள். அங்கும் சிலநாட்கள் வாழ்கிறார்கள். அவன் அங்கிருந்து ஜெர்மனிக்குச் சென்றுவிடுகிறான். அவள் பணமிழந்து வேறுவழியில்லாமல் கண்ணீருடன் இலங்கை திரும்புகிறாள்.
அவள் அவனிடம் எதிர்பார்த்தது என்ன? இப்படி துரத்திச்சென்று எதை அடைய நினைத்தாள்? விடாப்பிடியாக துரத்திவரும் பெண்ணை அவன் எப்படி பார்த்தான்? அவளால் பிடிபட்டதும் உடனே எப்படி அவன் அவளுடன் குடும்பம் நடத்தினான்? அப்போது அன்பான கணவனாக இருந்தானா, சண்டைபோட்டானா? ஆழமான கேள்விகள். ஒரு சிறந்த புனைவுக்கான களம்.
நுணுக்கமான வாழ்க்கைச்சித்திரங்கள் வந்தபடியே இருக்கின்றன இக்குறிப்புகளில். கடும் உழைப்பாளியான பவுணின் மகன் ஈழப்போராளிக்குழுவில் சேர்ந்து இரு கைகளையும் இழந்து நந்திக்கடல்பகுதியில் பிடிபட்டு கம்பிவலை முகாம்களில் இருந்து தந்தையிடம் மீள்கிறான். தன் இடத்தைவிட்டு உள்ளூர் அகதியாக அலைந்து திருந்து இழந்து மீண்டு மகனை அடைகிறான் பவுண்.
அவனுடைய மீட்புக்காக அளிக்கப்படும் நிதிகளைப் பெற ஒரு வங்கிக்கணக்கு திறக்கிறார்கள். அதன்பொருட்டு வங்கிக்குச் செல்லும் அவனிடம் படிவத்தில் கையொப்பமோ ரேகையோ வைக்கும்படிச் சொல்கிறார்கள். பவுண் அழுவது அப்போதுதான். கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவதற்கு நிகரான இந்நிலை ஈழப்போரின் இயல்பை குறியீடாகக் காட்டுவதாகவும் தோன்றியது
சிறுகட்டுரைகளிலேயே ஒரு நாவலை காணமுடிகிறது. மாலைநான்கு மணிக்கே யானைகள் வந்து சாலையில் நின்றிருக்கும் சிற்றூரான மாங்குளம் சுற்றிலும் இருந்த காடுகளால் வேட்டைக்கு உகந்தது. வேட்டையிறைச்சி தின்னாதவர்களே இல்லை. அங்கே ராணுவ முகாம் அமைகிறது. புலிகள் தாக்குகிறார்கள். ராணுவம் திருப்பி தாக்குகிறது. மாங்குளத்தை புலிகள் பிடிக்கிறார்கள். ராணுவம் திரும்ப பிடிக்கிறது. ஆனால் மாங்குளத்தின் காடு அழிந்தே போகிறது. யானைகளே இல்லை. மாங்குளம் நகரமாகிவிட்டது. காடு நினைவில் எஞ்சுகிறது.ஃபாதர் ஜேம்ஸ் பத்திநாதர் சொல்கிறார் “எல்லாப்பாடுகளையும் சுமப்போம்”
சிறுசிறு சித்திரங்கள் வழியாக அன்றைய அல்லல்களை, அதிலிருந்து மீண்டபின் எழும் சலிப்பை பதிவுசெய்யும் இச்சிறுநூல் முளைக்காத விதைகளாலனது. இதன் கட்டுரைகளில் சில தொடர்பற்ற செய்திக்குறிப்புகள். போர் மற்றும் மீட்பு சார்ந்த நினைவுக்குறிப்புகளாக மட்டும் தொகுத்திருந்தால் இதற்கு ஒருமை உருவாகியிருக்கும்
மீளும் நட்பு நட்புகள் ‘யாரும் திரும்பவில்லை’ அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழாநெல்லையில்…
இன்று [13-2-2021] காலை ஆறுமணிக்கே நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் நெல்லை கிளம்பிவிட்டோம். அத்தனை தொலைவு போகும் பயணத்தை மேலும் இனிதாக்கலாமென்று திருக்கணங்குடி [திருக்குறுங்குடி] ஆலயத்துக்குச் சென்றோம். சமீபத்தில்தான் திருக்கணங்குடி சென்றிருந்தேன். இப்போது ஸ்ரீனிவாசன் -சுதா தம்பதி அங்கே இல்லை. ஒரு திருமண விஷயமாக சென்னை சென்றிருக்கிறார்கள்.
காலையில் அந்த விரிந்தகன்ற ஆலயத்தில், கிட்டத்தட்ட தனியாக சுற்றிவருவது ஆழ்ந்த அமைதியை அளித்தது. சீரான கல்தூண்கள், மிக நேர்த்தியாக கல் அடுக்கப்பட்ட கூரை. சாலையென மயங்கச்செய்யும் சுற்றுவழிகள். நின்றகோலத்தில் பெருமாள்.
அங்கே ஆண்டாளுக்கும் சிறு ஆலயம் உண்டு. நம்மாழ்வாருக்கும் ராமானுஜருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. இரு கவிஞர்களும் ஒரு தத்துவஞானியும். ஒரு கவிதை வெளியீட்டுக்குச் செல்லும் வழியில் சரியான தரிசனம்தான்.
பலமுறை இங்கு வந்தபோதும் இதுவரை போகக்கிடைக்காத ஓர் இடம் திருவட்டப்பாறை. இது நம்பிகோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் அப்பால் இள்ளது. இங்கே நம்பியாறு ஒரு வட்டமாகச் சுற்றிப்போக, நடுவே ஒரு குன்று உள்ளது. அங்கே ராமானுஜர் வந்து தங்கியிருந்ததாக தொன்மம். அங்கே ஒரு சிறுபாறைமேல் ராமானுஜரின் சிறிய புடைப்புச் சிற்பம் உள்ளது. பிற்காலத்தில் அங்கே கட்டப்பட்ட ஒரு மடம் இப்போது ராமானுஜர் ஆலயமாக உள்ளது
நம்பிகோயிலில் சந்திக்கநேர்ந்த ஒருவர் ராமானுஜர் கோயில்கொண்ட திருவட்டப்பாறையைப் பற்றிச் சொன்னார். அவ்வேளையில் சென்றால் மட்டுமே அது திறந்திருக்கும் என்றார். வழிகண்டுபிடிக்க அவரையும் காரில் கூட்டிக்கொண்டோம்.
அழகிய இடம். ஆனால் ஆற்றங்கரை முழுக்க பிளாஸ்டிக் குடிநீர்ப்புட்டிகள் குவிந்து கிடந்தன. அங்கே வரும் ‘பக்தர்கள்’ வீசி எறிந்தவை. ஒரு சிறு பாலத்தின் வழியாக திருவட்டப்பாறைக்குச் சென்றோம். அது டிவிஎஸ் நிர்வாகத்தின் உதவுடன் ஒர் அழகிய மலர்க்காடாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆலயம் தூய்மையாக, தனியாக, ஓசையேதுமின்றி அமைந்திருந்தது. நீர் சுழித்தோடும் ஓசையும் மரங்கள் காற்றிலாடும் ஓசையும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன
நல்லவேளையாக பூசைசெய்யும் அந்தணர் இருந்தார். அவர் கிளம்பிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த மலர்த்தோட்டத்தை பெருவிருப்புடன் பேணுவதாகத் தெரிந்தது. அங்கே வைக்க மரிக்கொழுந்து பதியன்கள் தோவாளையில் கிடைக்குமா என்று விசாரித்தார்.
நாங்கள் நெல்லை சென்றுசேர கொஞ்சம் பிந்திவிட்டது. அங்கே கவிஞர் மதார் [முகமது மதார் கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றுபவர்] பதற்றமாக அழைத்துக்கொண்டே இருந்தார்.
TVK Residency விடுதியில்தான் நான் நெல்லை சென்றால் எப்போதும் தங்குகிறேன். அதன் உரிமையாளர் சிவமீனாட்சி செல்லையா வெண்முரசின் சிறந்த வாசகர்களில் ஒருவர். அறைக்குச் சென்றதுமே வேட்டியை மாற்றிக்கொண்டு அரங்குக்குச் சென்றோம்
நெல்லையில், ஒரு வேலைநாளின் பகலில் , கவிதைக்கூட்டத்திற்கு முப்பதுபேரை எதிர்பார்க்கலாம் என்றார் மணிவண்ணன். பத்துபேர், கூடிப்போனால் இருபது என்று நான் சொன்னேன். நெல்லை போன்ற நகர்களின் சூழலை என்னால் கணிக்கமுடிவதில்லை. அங்கே சென்றபோது எண்பதுபேருக்குமேல் இருந்தனர். அரங்கு முழுமையாக நிறைந்திருந்தது.
ரேடியன் அக்காடமி மாணவர்களுக்கான திறன்பயிற்சியை நிகழ்த்தும் அமைப்பு. நெல்லையிலும் கயத்தாறிலும் தென்காசியிலும் இருந்து நண்பர்கள் வந்திருந்தனர். நெல்லையைச் சுற்றியே எனக்கு அத்தனை நண்பர்கள் இருப்பது அப்போதுதான் மூளைக்கு உறைத்தது. கூட்டம், சொற்பொழிவு என்றில்லாமல் ஓர் வாசக உரையாடலாக ஒன்றை நெல்லையில் அமைக்கவேண்டும். நாலைந்து மணிநேரம் நீடிக்கும் ஓர் அளவளாவல். நண்பர்கள் அனைவரும் பேசும்படியாக
விழா சிறப்பாக நடைபெற்றது. நெடுநாட்களாக அறிமுகமாகியிருந்த ஸ்ரீனிவாச கோபாலனை நேரில் பார்த்தேன். பிகு என்று அழைப்பில் பார்த்தபோது பின்குறிப்பு என நினைத்தேன். பிரவீன்குமார் என்ற இளம் எழுத்தாளரின் புனைபெயர். சிறப்பாக பேசினார். அவர் உட்பட பலர் ஆல் இண்டியா ரேடியோவில் பகுதிநேர வேலை செய்வதாகச் சொன்னார்கள்.
மதியம் விழா முடிந்தபின் விடுதிக்குச் சென்றோம். போகன் சங்கர் வந்திருந்தார். விடுதியில் அமர்ந்து ஐந்து மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். போகன் சிறந்த உரையாடல்காரர். இன்று, வழக்கத்துக்கு மாறாக, பேய் அமானுடம் பற்றிப் பேசவில்லை. தஸ்தயேவ்ஸ்கியைத்தான் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.
மாலை ஐந்து மணிக்கு கிளம்பி ஆறரைக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன். ஒரு நிறைவான நாள். மதாரின் கவிதைபற்றிய என் உரை இணையப்பதிவாக வரலாம். எல்லா கவிதைகளுமே கவிதையை நோக்கி எழமுயலும், பல கவிதைகள் வெல்லும், இத்தகைய தொகுதிகள் அரிதாகவே வெளிவருகின்றன.
அழகியநம்பியின் நகரில்பிறழ்வெழுத்து சில பார்வைகள்-சிவானந்தம் நீலகண்டன்
அன்புள்ள ஜெமோ,
வணக்கம்.
பிறழ்வெழுத்து கட்டுரையைத் தங்கள் தளத்தில் வாசித்தேன். அக்கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டதால் நான் பயனடைந்தேன்.
சமூகப்பிறழ்வு மனப்பிறழ்வு என்று பிறழ்வுகளைப் பிரித்து ஒரு தெளிவை உண்டாக்கியதற்காகவும், ‘மெய்யான பிறழ்வின் உண்மைத்தன்மையாலேயே தன் பெறுமதியைப் பிறழ்வெழுத்து அடைகிறது’ என்ற சிந்திக்கவைத்த அழகிய கருத்துக்கும் என் நன்றி!
பிறழ்வெழுத்து விஷயத்தில் சில தகவல்களையும் பார்வைகளையும் இங்கே முன்வைக்கிறேன்.
புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சிறுகதையை அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். அக்கதையை மையமாக வைத்து, இப்படிப்பட்ட கதையை எழுதியவர் ஓர் இலக்கிய மேதையாக இருக்கமுடியுமா என்று 1951-52 காலகட்டத்தில் சிங்கப்பூரின் ‘தமிழ்முரசு’ நாளிதழில் சுமார் 9 மாதகாலம் விவாதம் நடந்துள்ளது. மறுத்தும் ஆதரித்தும் சுமார் 40 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951-52’ (தருமு பப்ளிகேஷன்ஸ், சிங்கப்பூர், 2006) என்கிற தலைப்பில் முனைவர் எம்.எஸ்.ஶ்ரீலக்ஷ்மி அச்சர்ச்சையின் பின்புலம், அன்றைய மலாயா இலக்கியச் சூழல், சர்ச்சையின் நோக்கும் போக்கும் எவ்வாறு இருந்தது, அதன் விளைவாக மலாயா இலக்கியச் சூழல் எவ்வாறு மாற்றம்பெற்றது என விரிவாக ஆராய்ந்து ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.
அந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய வெங்கட் சாமிநாதன், ‘..இந்த விவாதங்களில் பங்குகொண்ட ஒருவராவது புதுமைப்பித்தன் விபரீத ஆசை என்ற ஒரே ஒரு கதை எழுதவில்லை. நூறு கதைகள் முடிவுறாத நாவல் என்றெல்லாம் 700 பக்கங்களுக்கு அவரது புனைகதை உலகம் விரிகிறது என்று சொல்லவில்லை. இது எப்படி நிகழ்ந்துள்ளது, எப்படி நிகழவிடப்பட்டது என்பது தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓரிடத்தில், ‘ஒரு மேதையின் பரிணாமங்கள் என்னவாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகத்தில் அப்போது நிலவும் சில தேவைகளுக்கு அப்பரிமாணங்கள் குறுகிவிடுகின்றன அல்லது ஒரு சிறிய விஷயம் பெரிதாக்கப்படுகிறது. மற்றதெல்லாம் இல்லாததாகி விடுகிறது’ என்றும் எழுதியிருக்கிறார்.
பிறழ்வெழுத்து இலக்கியம்தானா என்றும் அதை எழுதுபவர் இலக்கியவாதியா என்றும் என்றும் கடும் விவாதங்களுக்கு உள்ளான காலம் மலையேறி இன்று ‘அதுவும் ஒரு வகை எழுத்துதான். அதை எழுதுபவரும் எழுத்தாளர்தான்’ என்ற ஏற்பு, ஒழுக்கவாதிகள் தவிர்த்த பிற, இலக்கிய வாசகர்களிடம் பரவலாகிவிட்டதாகக் கருதுகிறேன். ஆனால் பிறழ்வெழுத்துக்கான நிராகரணமும் தூஷணமும்தான் குறைந்துள்ளதே தவிர அது மைய நீரோட்ட வகைமையாகத் தமிழிலும் சரி பிற மொழி உலக இலக்கியங்களிலும் சரி இதுவரை கருதப்படவில்லை என்பது என் பார்வை. மேதைகளும் அபூர்வமாகத் தொட்டுப்பார்க்கும் ஒன்றாகவே இன்றும் தொடர்கிறது.
பிறழ்வெழுத்தின் அழகியல் தட்டையான சித்தரிப்பைக் கொண்டிருப்பதாகத் தாங்கள் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். அடிப்படையில் இலக்கியத்திற்கு அதன் அழகியலே ஆதாரம் என்ற உணர்வு வாசகர்களிடையே வலுவாக நீடிப்பதே பிறழ்வெழுத்து அவர்கள் பார்வையில் இலக்கியத்தன்மையை அடையத் தடையாக உள்ளது என்று சொல்லலாம். மேலும் மனப்பிறழ்வைப் பேசுவதற்குப் போதிய பகைப்புலத்தைத் தராமல் ஒரு பிறழ்வெழுத்து அமையும்போது அது இலக்கிய அனுபவத்தைத் தருவதற்கான போதாமையுடன் அமைந்துவிடுவது. அந்தப் போதாமையினாலேயே ஆதார உயிர்விசையான காமம்கூட வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியாகவும், அருவருப்பு உணர்ச்சி வெறும் அதிர்ச்சி மதிப்பாகவும் சுருங்கிவிடுகின்றன. ஆகவே சிறுகதை என்னும் புனைவு வடிவம் பிறழ்வெழுத்துக்குப் பொருத்தமானதல்ல என்ற முடிவை நோக்கி நகர்கிறேன்.
தென்கிழக்காசியாவின் நாவல்கள் குறித்து அண்மையில் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் (ஆங்கிலத்தில்) நடந்த ஓர் உரையாடலில், நாவல் என்பதை வரையறுக்குமாறு பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டபோது, பிலிப்பைன்ஸ் எழுத்தாளர் கிளென் டயஸ், ‘வெளியுலகத்தைச் சாராமல் தனக்குள்ளேயே ஓர் உலகத்தை அமைத்துக்கொள்வது நாவல்’ என்றொரு வரையறை தந்தார். அது மிகவும் கவர்ந்தது. வாசகர் ஒரு நாவலில் அந்த உலகத்திற்குள்ளேயே தன்னைத் தகவமைத்துக்கொண்டு வாழத்தொடங்குவதால் அங்கு எழுத்தாளர் உள்ளே நுழைந்து ‘அது வேறு உலகம் ஐயா. அதன் தர்மங்களும் வேறு’ என்று கூவவேண்டிய அவசியம் இல்லாமற்போகிறது. ஆனால் சிறுகதைக்குள் போதிய இடவசதி இல்லாததால் பல்வேறு ‘உலக’ங்களிலிருந்தும் தங்கள் தர்மங்களுடன் வரும் வாசகர்கள் ஒரு மனப்பிறழ்வெழுத்தை வாசிக்கும்போது அது அவர்களுக்கு விலகலையும் நிராகரிப்பையுமே அளிக்கிறது. அந்த நிராகரிப்பு உடனே எழுத்தாளரின் மீதும் பாய்கிறது.
‘விபரீத ஆசை’யை முன்வைத்து தமிழ்முரசில் 1951-52 காலகட்டத்தில் வந்த அத்தனை கட்டுரைகளிலும் ‘கந்தசாமி வாத்தியார்’ என்ற புனைபெயரில் ‘சுப நாராயணன்’ எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்ட ஆய்வு நூலிலும் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. விபரீத ஆசை கதையைத் தொடக்கத்திலிருந்து விளக்கிக்கொண்டு போகும் அவர், நம் அனைவருக்குமே பல உடல்களைத் துய்க்கவிரும்பும் மிருக இச்சை உண்டு என்று ஒப்புக்கொள்ளவைத்து வியாக்கியானம் செய்துகொண்டுபோய், இறுதியில், ‘கதையின் முடிவில் நாம் காண்பன மூன்று பிணங்கள். வாழ்வின் புதிர்மயமான துன்பக் கயிற்றில் மாட்டிக்கொண்டு தற்கொலை புரிந்துகொண்ட மூன்று தெய்வக்குழந்தைகள்!’ என்று முடிக்கும்போது ஆஹா.. புதுமைப்பித்தன் எவ்வளவு பெரிய மேதை என்று அனைவருக்குமே சிந்திக்கத்தோன்றும்.
கந்தசாமி வாத்தியார் மேலும், ‘இந்தக் கதையை ஒரு நாவலாக விவரித்து எழுதினால் எல்லாருக்கும் புரியும்தான்’ என்றும் அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார். அது அந்தக் கதைக்கு மட்டுமானதல்ல, பிறழ்வெழுத்து என்ற வகைமைக்கே பொருத்தமான கருத்து என்று நினைக்கிறேன். எழுதப்பட்ட சமகாலத்தில் தடை, ஒதுக்கல், எதிர்ப்பு போன்றவற்றுக்கு ஆளாகி பின்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறழ்வெழுத்துகள் – தங்கள் கட்டுரையில் சுட்டப்பட்டிருக்கும் புனைவுகள் உட்பட – அனேகமாக அனைத்துமே நாவல்களாகவோ நாடகங்களாவோ விரிவான வடிவத்தில் அமைந்திருப்பது தற்செயலாக இருக்கமுடியாது.
இங்கே இன்னொரு விஷயம். சில பிறழ்வெழுத்துகளுக்குக் ‘காலப்போக்கில்’ ஏற்பு உண்டாகிவிட்டது என்பதால் அவற்றை எழுதியவர்களைத் தம் காலத்துக்கு முந்தியவர்கள் என்று கருதுவதும் குறைபாடுள்ள கருத்தே. கந்தசாமி வாத்தியார் போல பலரும் தொடர்ந்து வியாக்கியானங்கள் அளிப்பதாலும் அவை விவாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் ஆளாவதாலும்தான் அந்த ஏற்புகள் நிகழ்கின்றன. இலக்கிய விமர்சனத்தின் அரிய பங்கு ‘காலப்போக்கில்’ என்ற சொல்லுக்குள் புதைந்துவிடுவது சோகமே.
விரிவான வடிவமாகவும், போதிய பகைப்புலம் அளிக்கவல்லதாகவும், தனக்குள்ளேயே உலகத்தை அமைத்துக்கொள்வதாகவும் விளங்கும் நாவல்களுக்கும் பிறழ்வெழுத்து என்று வரும்போது மேலதிக வியாக்கியானங்கள் தேவைப்படுகின்றன. மேதைகளுக்கும் பிறழ்வெழுத்து தொடர்ந்து போக்குக்காட்டுகிறது. பிறழ்வெழுத்துக்கான இலக்கிய வடிவம் இன்னும் கண்டடையப்படவில்லையோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. கவிதையில் பாடலில் நாடகத்தில் நிகழ்கலைகளில் ஓவியத்தில் சிற்பத்தில் இப்பிறழ்வுகள் வடிக்கப்பட்டால் உரைநடையைக் காட்டிலும் எளிதாகப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும்படுகிறது என்றொரு பார்வை எனக்குண்டு. அவ்வகையில் உரைநடை வடிவம் எங்கோ உடைபட்டுத் திறந்துகொள்வதற்காக நூற்றாண்டுகளாகக் காத்திருக்கிறது போலும்.
சிறுகதை என்கிற வடிவத்தில் பிறழ்வெழுத்தைக் கொணரும் முயற்சி உலகளவில் நன்றாகவே தோற்றுவிட்டது, பிறழ்வெழுத்து என்று வரும்போது உரைநடை இலக்கியம் இன்னும் போதாமைகள் நிறைந்ததாகவே உள்ளது ஆகிய என் பார்வைகள் குறித்து தங்கள் கருத்துகளை அறியவிரும்புகிறேன்.
நன்றி
சிவானந்தம் நீலகண்டன்
சிங்கப்பூர்
https://sivananthamneela.wordpress.com/
பிகு : பிறழ்வெழுத்து குறித்து யோசிக்கும்போதெல்லாம் தவறாமல் தங்கள் ‘ஒரு கணத்துக்கு அப்பால்’ சிறுகதை என் நினைவில் மீளும். காமம் என்ற உயிர்விசையின் மகத்துவத்தையும் அதை நாம் வெறும் உடலிச்சையாக ஆக்கிவைத்திருப்பதன் வீழ்ச்சியையும் ஒரேநேரத்தில் காட்டிய கதை. தட்டையான அழகியலும் சில இடங்களில் அபாரமான தெறிப்புகளும் என்று ஒரு விருப்பவிலக்க உறவுடன் நினைவிலெழும் கதையாகவே அது நீடிக்கிறது.
சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன் சுந்தர ராமசாமி,பிள்ளைகெடுத்தாள்விளை -கடிதங்கள் கலையின் உலை காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள் சுதந்திரமும் கனவும் என்ன பிரயோசனம்? நாளைக்காக மட்டும் வாழமுடியுமா- விவாதம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


