Jeyamohan's Blog, page 1045
February 20, 2021
தல்ஸ்தோய் மனிதநேயரா?- எதிர்வினை- சுசித்ரா
தல்ஸ்தோய் மனிதநேயரா?
அன்புள்ள ஜெ, இந்தக் கட்டுரையின் துணையுடன் மிக நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடிந்தது. பல இடங்களில் புதிய திசைகள் திறந்துகொண்டன. மேலும் கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, தல்ஸ்தோயின் அழகியல்-அறவியல் பற்றிய புரிதல் ஆழமானது.
பெற்றதை தொகுத்து எழுதுகிறேன்:
மானுடவாதத்தின் லட்சிய மனிதன்
மானுடவாதம் என்ற சிந்தனைக்கும், அறிவொளிக்கால விழுமியங்களுக்கும், சீர்திருத்தவாத கிறிஸ்துவத்தின் கொள்கைகளுக்கும் இறுக்கமான தொடர்பு உள்ளது. ஆதி கத்தோலிக்க மதத்தில் மனிதன் இல்லை. கடவுள், உலகம் மட்டும் தான். சீர்திருத்தவாத கிருத்துவத்தோடு தான் மூன்றாவது கண்ணியாக மனிதன் என்ற தனியன் பிறக்கிறான்.
கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பா முழுவதும் பார்த்த மறுமலர்ச்சிக்கால ஓவியங்களையும் சிற்பங்களையும் எண்ணிப்பார்க்கிறேன். குறிப்பாக ஃப்ளோரென்ஸ் நகரில் பார்த்தவை. பதினான்காம் நூற்றாண்டில் ஜோட்டோ, ஃபிலிப்போ லிப்பி முதலிய ஓவியர்கள் தான் மடோனா கையில் இருக்கும் ஏசுவை தத்ரூபமான மனிதக்குழந்தையாக முதன்முதலாக காட்சிப்படுத்தத் தொடங்குகிறார்கள் (இணைத்துள்ள படங்கள் – 1. பர்லிங்கியரோவின் 13ஆம் நூற்றாண்டு இத்தாலிய பைசண்டைன் பாணி ஓவியம் 2. ஃபிலிப்போ லிப்பியின் 15ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக்கால ஓவியம்). ராஃபேலும் டாவின்சியும் அதை வளர்த்தெடுக்கிறார்கள். ஒருவேளை ஐரோப்பாவில் – உலகவரலாற்றிலேயே – மனிதன் என்ற கருத்து பிறந்ததே அப்போதுதான்.
1. பர்லிங்கியரோவின் 13ஆம் நூற்றாண்டு இத்தாலிய பைசண்டைன் பாணி ஓவியம்
2. ஃபிலிப்போ லிப்பியின் 15ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக்கால ஓவியம்).அதே காலகட்டத்தைச் சேர்ந்த மைகெலான்ஜெலோவின் பளிங்குகல் டேவிட் மற்றொரு “தூய மனிதனின்” வடிவம். ஆற்றலையும் உறுதியையும் அறத்தையும் வெளிப்படுத்தும் உருவம். அது கிரேக்கத் தொன்மமும் கிறிஸ்தவத் தொன்மமும் ஒரு மனித உருவில் இணையும் புள்ளி. அதே டேவிட்டின் உருவை நூறு வருடங்கள் முன்னால் டானடெல்லோ வெண்கலத்தில் வடித்திருக்கிறார். அந்த இரு சிற்பங்களைப் பார்த்தாலே அந்த நூறு வருடங்களில் “மனிதன்” என்ற கருதுகோள் அடைந்த தூரம் நமக்குத் துலக்கமாகும்.
ஐரோப்பாவில் மனிதன் என்ற கட்டமைப்பை உருவாக்கியதில் ஷேக்ஸ்பியருக்கு பெரிய பங்கு உண்டு என்று ஹரோல்ட் ப்ளூம் சொல்கிறார். அதுவரை வந்த இலக்கியம் அனைத்திலுமே பாத்திர படைப்பு என்பது ஒற்றைப்படையானதாக இருக்கும் என்கிறார். ஆனால் ஷேக்ஸ்பியர் தான் ஐரோப்பிய இலக்கிய வரலாற்றிலேயே முதன்முதலாக தனக்குள்ளே பேசிக்கொள்ளும் மனிதனை, பேச்சுக்கும் செயலுக்கும் இடையே விலக்கம் உள்ள காம்ப்லெக்ஸான, உண்மையான கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். மெக்பெத், இயாகோ, ரோஸலிண்ட் என்று பலரை சொன்னாலும் அதன் உச்சமாக அவர் சொல்வது ஹாம்லெட். (படம் பற்றி)
மானுடவாதக் கொள்கை சொல்லும் லட்சிய மனிதனில் ஏசுக்குழந்தை, டேவிட், ஹாம்லெட் மூவரால் உருவாக்கப்பட்ட ஓர் உருவகம் என்று எனக்குத் தோன்றுகிறது. குழந்தையின் கலங்கமற்ற மனது. டேவிட்டின் ஆற்றல். ஹாம்லெட்டின் உன்னதத்தன்மை. இவற்றின் வெளிப்பாடே மனிதன். மானுடவாதம் மனிதனை சாராம்சத்தில் கலங்கமற்றவன், ஆற்றல்மிக்கவன், வாழ்க்கையில் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்கையிலும் என்றும் உன்னதமானவன் என்று வகுத்துக்கொள்கிறது. (நீங்கள் கட்டுரையில் குறிப்பிடும் ஜீன் வால்ஜீன் இந்த லட்சணங்களில் பொருந்துகிற ஒரு கதாபாத்திரம்). ஆனால் அப்படி வகுத்துக்கொள்ள அதற்கு எந்த நிதர்சன ஆதாரமும் இல்லை என்று நாம் கவனிக்கிறோம். செவ்வியல் கலையின் உச்ச வெளிப்பாடுகளை இணைத்தே இந்தச் சித்திரத்தை அது வந்தடைகிறது.
(இன்றிலிருந்து பார்த்தால் நாம் எப்போதுமே மனிதர்களாகத்தானே இருந்திருப்போம், ‘மனிதன்’ எப்படி உருவாக்கப்பட்டவனாக இருக்கமுடியும் என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்படி வரலாற்றுரீதியாகப் பார்த்தால், மனிதன் கலை மூலமாகவே தன்னை கண்டுகொள்கிறான் என்று தெரிகிறது. அதாவது கலை தொட்டுக்காட்டும் உருவகங்களைக் கொண்டே மனிதன் தன்னை உருவாக்கிக்கொள்கிறான். பதினாறாம் நூற்றாண்டு இத்தாலியில் ஏழை விவசாயி ஒருவன் டேவிட்டை பார்க்க நேர்ந்திருந்தால் அவன் மனம் எப்படிப் பதறியிருக்கும்? தன் தசைகளில் வெளிப்படும் ஆற்றலையும் உறுதியயையும் அதுவரை அவன் கவனித்திருக்கமாட்டான். ஆனால் அப்பொது கண்டுகொண்டுவிடுவான். இது என் ஆற்றல் அல்லவா என்று. இப்படி கலையில் அவன் பார்க்கும் உருவம் அவன் பிரக்ஞையை விஸ்தீரணம் அடையச்செய்கிறது. அதைக்கொண்டு அவன் தான் யார் என்று வகுத்துக்கொள்கிறான். ஆக மனிதன் என்று நாம் சொல்வதும் ஒரு புனைவு கட்டுமானமே. இதுவே பெரிய பயத்தை உண்டாக்கும் ஓர் அறிதல். எப்படி விஞ்ஞானம் இந்த உலகத்தைப்பற்றி அறியாதவற்றை கண்டுபிடித்து நாம் அறிந்த உலகத்தை மேலும் மேலும் அகலமாக்குகிறதோ, அப்படி கலை மனிதனுக்குள் அறியாதவற்றை சுட்டிக்காட்டிச் சுட்டிக்காட்டி அவன் ஆழத்தை அதிகமாக்குகிறது. இன்று நான் ‘மனிதன்’ என்று சொல்வதும் ஒரு புனைவு தான். என்றால் நாளை மனிதனுக்குள்ளிலிருந்து மேலும் என்னென்ன ஆழங்கள் வரவிருக்கின்றனவோ?)
தல்ஸ்தோய் – அழகியலும் அறவியலும்
இந்த ‘லட்சிய மனிதன்’ மீது தான் தல்ஸ்தோய் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார். தல்ஸ்தோய் யதார்த்த தளத்தில் நின்று வாழ்க்கையைப் பார்த்தார். மனிதனையும் யதார்த்த அளவுகோலால் அளக்கிறார். யதார்த்தத்தில் மனிதன் எப்படியிருக்கிறான்? எளிதில் கலங்கம் கொள்பவனாக, எளிமையானவனாக, ஆற்றலற்றவனாக, ஊழின், விறுப்புறுதியின் விசைகளில் அடித்துச்செல்லப்படுபவனாக இருக்கிறான் என்று அவர் கண்டு புனைவில் நிறுவுகிறார்.
தல்ஸ்தோயின் பார்வையில் மனிதன் ‘உண்மையில்’ ஒரு கட்டுமானம் அல்ல. ஒரு ஆர்க்கிடைப் அல்ல. ஒரு இலட்சியவாத வடிவம் அல்ல. போரும் அமைதியும் போன்ற நாவலில் வரக்கூடிய பாத்திரங்களின் ‘சுய’த்திற்கு கட்டுக்கோப்பான வடிவம் இருக்கிறதா? இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது. அந்த நாவலில் பெரிய பாத்திரங்கள் அனைத்திற்கும் சில அடிப்படை குணாதிசயங்கள் இருக்கின்றன. உதாரணம், பியர் ஆரம்பம் முதலாகவே தேடல் மனோபாவம் கொண்டவனாக இருக்கிறான். ஆண்ட்ரூ ‘சினிக்கா’க இருக்கிறான். நடாஷா உயிரோட்டமுள்ளவளாக இருக்கிறாள். ஆனால் அவர்கள் அனைவருமே கதைநகர்வில் மாற்றமடைகிறார்கள். அடிப்படை குணங்கள் மாறுவதில்லை, ஆனால் அதன் வெளிப்பாடு வெவ்வேறு விதங்களில் சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடுகின்றன. வீழ்ச்சியும் உன்னதமும் கொள்கின்றன. ஆக, தல்ஸ்தோய் ‘சுயம்’ என்பதை மாற்றங்கள் நிகழக்கூடிய ஒரு அடித்தளமாகவே உருவகித்ததாக நினைக்கிறேன். அந்த ‘சுயம்’ அடிப்படையில் நல்லதோ, தீயதோ அல்ல.
மாறாக, மானுடவாதம் உருவகிக்கும் இலட்சிய மனிதனின் கட்டமைப்பில் அப்படியான மாற்றங்களைப் பற்றிய பேச்சுக்கு இடம் இல்லை. சாரம்சத்தையே அது நோக்குகிறது. சாராம்சத்தில் மனிதன் கலங்கமற்றவன், ஆற்றல்மிக்கவன், உன்னதமானவன். அதன் அடிப்படையிலேயே மனிதர்கள் சமமானவர்கள், சுதந்திரத்திற்கு உரியவர்கள். அதுவே அவன் சுயத்தின் இயல்பு. அவன் சுய இயல்பு அடிப்படையில் நன்மை குணம் கொண்டது. இதை தல்ஸ்தோய் அனேகமாக ஏற்கமாட்டார்.
மனிதனின் லட்சிய வடிவத்தைப் பற்றி தல்ஸ்தோய் எண்ணிப்பார்த்தாரா? எண்ணிப்பார்த்தார், ஆனால் அதையும் யதார்த்தமாகத்தான். நெபோலியன் அப்படி ஒரு லட்சிய உருவகம். அவனை யதார்த்தமாகவே பரிசீலிக்கிறார். அவனுடைய பலவீங்களை, மூடத்தனங்களை, காட்சிப்படுத்துகிறார். ப்ளாடன் காராடேவ் இன்னொரு லட்சிய வடிவம். அவனை மட்டுமே மெல்லிதாக ஒரு லட்சிய உருவகமாக அவர் விட்டுவைக்கிறார் என்று நினைக்கிறேன். ஆயினும் பியேர் அவன் மூலமாக அடையும் வாழ்க்கைசார் ஞானம் அவனுடைய வாழ்க்கைவட்டத்துக்குள்ளேயே யதார்த்தமாக இயல்பாக அவனுக்கு நிகழ்கிறது. ஆக மனிதன் எப்படிப்பட்டவன், வாழ்க்கையில் அவன் எப்படி இருக்கிறான் என்பது தான் தல்ஸ்தோயின் முதன்மைப் புனைவுத் தேடலாக இருந்தது என்று அறியமுடிகிறது.
மனிதன் ‘எப்படி இருந்தாகவேண்டும்’, அதை மனிதன் எப்படி அடையமுடியும் என்ற தேடல் அவருக்கு இருந்ததா? அந்த கேள்வியை நோக்கிய தேடல் வாழ்க்கையின் பிற்பாதியிலேயே அவருக்கு வருகிறது. ஓரளவு அன்னா கரீனினாவில் லெவின் கதாபாத்திரத்தில் அதைக் காணலாம். புத்துயிர்ப்பில் அவர் அந்த கேள்வியை மேலும் பரிசீலிக்கிறார். “மனிதன் எப்படி இருந்தாகவேண்டும்? தன்னுடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுபவனாக இருக்க வேண்டும்,” என்கிறார். ஆக மனிதனின் ஆதி இயல்பு பாவம்; அதை குறைக்கவும், செய்தவற்றிற்கு ஈடுசெய்வதுமே அவன் செய்யக்கூடியது என்று இந்த காலகட்டத்தில் தல்ஸ்தோய் நம்பியதாக எண்ணமுடிகிறது. மனிதன் தன்னைக் குறைத்துக்கொள்ளவே முடியும், கூட்டிக்கொண்டு எய்த எந்த இலக்கும் இல்லை என்பதே அவர் மனிதனைப் பற்றி ஒட்டுமொத்தமாக எண்ணியது என்று கூறலாம்.
இந்த இலக்கை அவர் வந்து அடைந்ததற்கு மற்றொரு காரணம், நடுவயதில் – புத்துயிர்ப்பு வெளியாவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னால், அன்னா கரினீனா எழுதிக்கொண்டிருந்த காலத்தில் – அவருக்குள் நிகழ்ந்த ஆன்மீகக் கலகங்கள். இந்தக்காலகட்டத்தில் தான் அவர் வாக்குமூலம் என்ற நூலை எழுதுகிறார். இந்த கட்டுரையை மொழியாக்கம் செய்தபோது ஊடே அந்த நூலையும் வாசித்தேன். தல்ஸ்தோய் மனிதனைப் பற்றி என்ன எண்ணினார் என்ற கேள்விக்கு, அவர் தன்னைப் பற்றியே என்ன எண்ணினார் என்ற வடிவில் ஒரு பதில் இந்த நூலில் உள்ளது. அதில் வெளிப்படும் அவருடைய குழப்பங்கள் அனைத்துமே அவருடைய அறிவுசார்ந்த, கறாரான, யதார்த்தப் பார்வையின் வழியே உருவாகிவந்தவை என்ற எண்ணமே உருவானது.
தல்ஸ்தோய்க்கு தான் ஏன் வாழவேண்டும் என்ற கேள்வி வருகிறது. வாழ்க்கைக்கு உள்ளார்ந்த அர்த்தம் இல்லை என்று அவருடைய யதார்த்த அறிவு அவருக்குச் சுட்டிக்காட்டுகிறது. இதைத் தெரியாமல் இருந்தால் வாழலாம். அல்லது தெரிந்தே சுய ஏமாற்றுச் செய்துகொண்டு புலனின்பங்களில் தன்னை கரைத்துக்கொண்டு வாழலாம். அல்லது இனி வாழ்ந்து பிரயோஜனம் இல்லை என்று தற்கொலை செய்துகொள்ளலாம். தல்ஸ்தோய் நான்காவது வழியைத் தேர்ந்தெடுக்கிறார். ஏதாவது பார்வை திறக்காதா என்ற (அவர் பார்வையில்) வீணான, கோழைத்தனமான நம்பிக்கையோடு வாழ்கிறார்.
ஒரு கட்டத்தில், இந்த உலகத்தில் தன்னைப்போல் அறிவாளிகள் அல்லாது பிற மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள், என்று கேட்கிறார். அவர்கள் கடவுளை நம்புகிறார்கள், நம்பமுடிகிறது என்பதால் அவர்கள் வாழ்கிறார்கள் என்ற பதிலைச் சென்று அடைகிறார். தானும் நம்பிக்கையாளன் ஆனால் தனக்கும் வாழ அர்த்தம் கிடைத்துவிடும் என்று மதத்திற்குள் நுழைகிறார். நம்பிக்கை அவருக்கு எளிதாக வரவில்லை. ஆனால் நம்பிக்கை மீது நம்பிக்கையை அவருக்கே உரித்தான குருட்டுத்தனமான தீர்மானத்துடன் நொறுக்கிப்பிடித்து வரவழைத்துக்கொள்கிறார் (என்ன தான் இருந்தாலும் அவர் கிறிஸ்துவைப்போல் தூய்மையான, டேவிட்டைப்போல ஆற்றல் மிக்க, ஹாம்லெட்டைப்போல உன்னதமான மனிதன் அல்லவா?)
ஆனால் யதார்த்தத்தில் அந்த நம்பிக்கையை அவரால் இயல்பாக தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்று தான் நினைக்கிறேன். அவர் அதை ஒரு கோட்பாடாக ஆக்கிக்கொண்டு தான் தன் பிற்கால வாழ்க்கையைக் கடந்தார் என்று சொல்லத்தோன்றுகிறது. அதற்குக் காரணம், அவர் அறிவொளிகாலத்தவர் என்பது தான். தல்ஸ்தோய் அறிவொளிகாலத்தின் தலைமகனார். அவர் எப்போதும் அறிவாலேயே வழிநடத்தப் பட்டவர். அறிவை அதன் உச்சபட்ச சாத்தியம் வரை சென்று தொட்டவர். அவர் அறிவின் ஒளியில் மனிதர்கள் எளிமையானவர்களாக, ஏன், வக்கிரமானவர்களாகக் கூட தென்பட்டனர். தூயவன், ஆற்றல்கொண்டவன், உன்னதமானவன் என்ற அறிவொளிக்கால இலட்சிய மனித உருவை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மனிதனைச் சார்ந்து, தன்னைச்சார்ந்து ஒரு pessimism வளர்த்துக்கொள்கிறார்.
அதை ஒரு அறவியல்நோக்காக வடித்துக்கொள்கிறார். மனிதன் இயல்பில் பாவி, தன் பாவங்களை குறைத்துக்கொள்ள தன் வாழ்வை எளிமைப்படுத்தி குறைத்துக்கொள்வதே அவன் செய்யக்கூடியது என்று. அவருடைய பிற்காலம் முழுவதுமே இந்த அறவியல் பார்வையால் வழிநடத்தப்படுவதை நாம் காண்கிறோம்.
மேற்குலகத்தில் ஜார்ஜ் ஆர்வெல் முதலியோர் தல்ஸ்தோயின் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தை ஒரு நமிட்டுச் சிரிப்புடன் எழுதிவைத்திருப்பதைக்கண்டு நாம் எரிச்சல் கொள்ளலாம். நமக்கு ஒழுக்கம் சார்ந்த கட்டுப்பாடுகள், விரதங்கள் முதலியவை அன்னியமானவை அல்ல. நம் மரபில் சிரமணர்கள் அப்படி உடலை வறுத்தி நோன்பிருந்திருக்கிறார்கள். நம்முடைய துறவு அமைப்பின் அடிதளமே மெய்மனதை அடக்கிப் பழக்கும் இவ்வித பயிற்சிகள் தான்.
ஆனால் நம் மரபில் நமக்கு வாய்க்கும் கூடுதலான ஒன்று தல்ஸ்தோய்க்கு வாய்க்காமல் போனதாக எனக்குத் தோன்றுகிறது. அது அவருக்கு பெரிய இழப்பும் கூட. அதை இயல்பான ஒரு மலர்வுணர்வு என்று சொல்லத்தோன்றுகிறது. அது உள்ளுணர்வு சார்ந்தது. அதற்கு கற்பனாவாதத்தின் ஒரு சாயல் தேவை. உலகத்தின் அழுக்குகள் அனைத்துக்கும் அடியில் எங்கோ நம் உள்ளுணர்வு உணரக்கூடிய ஒரு இசைவு. ஓர் அழகு. தல்ஸ்தோய்க்கு அந்த உள்ளுணர்வு இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவருடைய அறிவே அவருடைய பிரதான அறிவுக்கருவியாக இருந்திருக்கிறது. சில நேரங்களில், தன் உள்ளுணர்வு தலைதூக்கும் வேளையில் தன் அறிவைக்கொண்டு அதன் தலையில் தட்டி அடங்கச்செய்தாரோ என்று நினைக்கவைக்கிறது.
தல்ஸ்தோய் சிரவணபெலகோலா பாகுபலிக்கு முன் நின்றிருந்தால் என்ன சொல்லியிருபார்? நடராஜர் சிற்பம் அவருக்குள் என்ன செய்திருக்கும்? காந்தார புத்தரின் அமைதியான முகத்தைக் கண்டிருந்தால் மனிதரைப்பற்றிய அவர் உணர்வு என்னவாகியிருக்கும்? சிந்தனையென்றில்லாமல் புலன் அனுபவமாக இந்திய சித்தாந்தங்களின் சாரத்தை அவர் அடைந்தாரா? இப்படி எண்ணிக்கொள்கிறேன்.
இதெல்லாம் ஊகம். ஆனால் நமக்கு இரண்டு ஆதாரங்கள் இருக்கின்றன. ஒன்று, அழகியல். கடைசி காலம் வரை, தல்ஸ்தாய் ‘அறிதலு’க்காக எழுதிய புனைவின் அழகியல் யதார்த்தவாதமாகவே இருந்தது. அவர் கற்பனாவாதத்தை முற்றாக நிராகரித்தே தன்னுடைய யதார்த்தவாத பாணியை உருவாக்கினார். அறிவைக்கொண்டே, யதார்த்தத்தில் பொறுத்தியே, அவர் வாழ்க்கையை ஆறாய்ந்திருக்கிறார் (அவரை ஒரு rational analyst என்று சொல்லலாம்). அதை அவர் மீறவே இல்லை. இரண்டாவது, அறவியல். அவர் அறவியல் என்பது பாவ-பிராயச்சித்த கணக்குகளாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் கீதையிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகளை மட்டும் வைத்தே அவருடைய அறவியல் நிலைப்பாட்டை ஒருவரால் வகுக்கமுடியும். அதற்கு மதிப்பு இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அதில் சிக்கிக்கொண்டவரையில் அதை மீறிய ஒன்றை அவரால் பார்க்கமுடியவில்லை. தல்ஸ்தோயின் அழகியல், அறவியல் இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. வாழ்க்கையை யதார்த்தமாகப் பார்த்ததாலேயே அவர் மனிதனை, தன்னை உட்பட, பாவக்கட்டாக நோக்கினார், ஆகவே ஒழுக்கவியலை வலியுறுத்தினார். இரண்டுமே தல்ஸ்தோயின் சிறப்பியல்புகள். அவர் அடிப்படை குணநலத்திலிருந்து உதித்தவை. அவர் பலவீனங்களும் அவையே.
உங்கள் கட்டுரையிலிருந்து தூரம் சென்று, ஒட்டுமொத்தமாக தல்ஸ்தோயின் அழகியல், அறவியல் நோக்கை இப்படித் தொகுத்துக்கொண்டேன்.
*
இருந்தாலும் ஒன்று மிஞ்சுகிறது. அது தல்ஸ்தோயின் நாவல்களை மீண்டும் எண்ணிப்பார்க்கும்போது உருவாகும் சிந்தனை.
தல்ஸ்தோயின் நாவல்களை வரிசையாக பார்க்கிறபோது, அவர் போரும் அமைதியும் வழியாக வாழ்க்கையை நோக்கிய யதார்த்தமான சமநிலைப்பார்வை ஒன்றை அடைந்ததாகத் தோன்றுவதுண்டு. பியேர் மற்றும் குட்டுசோவின் பாத்திரங்கள் இரண்டுமே யதார்த்தத்தில் நின்று யதார்த்தத்தின் வழியாகவே நிறைவு கண்டவர்கள். மாறாக அன்னா கரீனீனா ஒப்புநோக்க சந்தேகமும் குழப்பங்களும் கொண்டதாக இருக்கிறது. தல்ஸ்தோயின் நாவல்களிலேயே அதிகமான கனவுத்தன்மை கொண்ட நாவல் அது. விசித்திரமான, பகுத்தறிவுக்கு அப்பார்பட்ட ஒத்துமைகள் கொண்டது. ஜுரவேதனையின் தீவிரம் வெளிப்படும் அளவில் சில இடங்கள் அமைந்திருக்கிறது. யதார்த்தவாதத்தின் கட்டில் நின்றாலும் அந்த நாவலில் வேறொரு ஆற்றல் இருக்கிறது. ஒழுக்கத்தை ஒழுங்கு மீறிய தளங்களைத் தொட்டுப் பரிசீலிக்கிறது. நிலையான பதில்களை அந்த நாவல் அளிப்பதில்லை, மேலும் கேள்விகளையே விட்டுச்செல்கிறது. போரும் அமைதியும் தல்ஸ்தாயிலிருந்து அன்னா கரினீனாவின் தல்ஸ்தோய் மாறுபடுகிறார். இவ்விறு நாவல்களின் மனநிலைகளை, அழகியல்கருவிகளை, ஒரு வாசகர் தனித்தனியாக பின் தொடர்ந்து சென்றால் இரு வேறு வாழ்க்கைப் பார்வைகளை அடையலாம் என்று நினைக்கிறேன்.
அதன் பின் தல்ஸ்தாய் மேலும் மாற்றமடைந்தார். புத்துயிர்ப்பை எழுதிய ஆசிரியர் இன்னொருவர். அந்த மாற்றத்தை பின் தொடரலாம். அவர் அழகியலை, அறவியலை, தொகுத்துச் சிந்திக்கலாம். ஆனால் அது முழு சித்திரம் அல்ல. நாவல்களில் மேலும் மிஞ்சியிருக்கிறது.
ஆக தல்ஸ்தோய் அவர் வாழ்க்கையில் அடைந்தவற்றைப் பின் தொடர்ந்து சென்று வந்த பிறகு மீண்டும் அவர் நாவல்களுக்கே திரும்புகிறேன். அவரை மீறிய ஒருவர், அவரே கண்டுகொள்ளாத ஒருவர், அவர் நாவல்களில் இருக்கிறார் என்ற நம்பிக்கையால். பிரக்ஞையை மீறீ ஆசிரியரில் நிகழ்ந்தவை அந்த நாவல்களில் இருக்கின்றன. அதில் எனக்கு ஒரு சமிக்ஞை விட்டுவைத்திருக்கிறாரா என்று மீண்டும் தேடுகிறேன்.
*
ஷேக்ஸ்பியரும் தல்ஸ்தோயும்
போன வருடம் ஷேக்ஸ்பியரை பற்றி தல்ஸ்தோய் எழுதிய விமர்சனத்தைப் பற்றி ஒரு வாசகர் கடிதம் உங்கள் தளத்தில் பிரசுரமானது. அதற்கான பதிலில், தல்ஸ்தோயின் விமர்சனத்திற்குக் காரணம் அவர்களுக்கிடையே அழகியல்ரீதியாக இருந்த தூரம் என்ற கருத்தை ஒட்டி எழுதியிருந்தீர்கள். தல்ஸ்தோய் யதார்த்தவாதி, ஷேக்ஸ்பியர் கற்பனாவாத சாயல் கொண்ட செவ்வியலாளர், என்று. இந்தக் கட்டுரையுடன் இணைத்து அந்த கட்டுரையும் வாசித்தபோது மேலதிக புரிதலுக்கு வழிவகுத்தது.
தல்ஸ்தோயின் அழகியலும் அறவியலும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால், அவர் ஷேக்ஸ்பியரை அழகியல்ரீதியாக நிராகரிக்கும் அதே வேளையில் அறவியல் ரீதியாகவும் நிராகரிக்கிறார். உதாரணத்திற்கு, அவருக்கு ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் மிகையாக பேசுவது, நீண்ட தன்னுரைகளை அளிப்பது, ஆபாச நகைச்சுவை சொல்வது முதலியவை ‘கட்டுக்கடங்காமல்’ இருப்பதாகத் தென்படுகிறது. அழகியல்ரீதியாக அது பிழை என்கிறார். மானுடர் ‘கட்டுக்கடங்கி’ இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தும் ஒழுக்கவியலுக்கு இத்துடன் சம்பந்தம் உள்ளதாக நினைக்கிறேன். ஷேக்ஸ்பியரின் ‘மண்வாசம் கொண்ட’ அழகியல் தல்ஸ்தோயை அருவருக்க வைப்பதாகத் தெரிகிறது.
அடிப்படையில், ஷேக்ஸ்பியர் லௌகீகமானவர். இறைவாதி அல்ல, மானுடவாதி. அவருடைய நாடகங்களில் வெளிப்படும் ஒட்டுமொத்த அறவியல் நோக்கு என்ன என்ற சர்ச்சை இருப்பதாகத் தெரிகிறது. அதாவது அப்படி ஒரு அறவியல் நோக்கு என்று ஒன்று அவருக்கு இருந்ததா, அல்லது மேடையின் தேவைகளுக்காக கதாபாத்திறங்கள், அவர்கள் பேசும் வசனங்கள் முதலியவற்றை தன் போன போக்கில் அவர் உருவாக்கினாரா என்று.
ஆனால் பொதுவாக, லௌகீக யதார்த்தத்தில் செல்லுபடியாகும் அறவியலையே அவர் பரிந்துரைக்கிறார் என்று சொல்லலாம். மனிதன் வாழ, செய்தாகவேண்டியதை செய்தாகவேண்டும். சூதோ தந்திரமோ போரோ. ஆனால் எந்த விதமான மிகை வெளிப்பாடும் பொதுவாக நன்மை அளிப்பதில்லை. மனிதனின் இயல்பு அது, சில நேரங்களில் ஏனென்றே தெரியாமல் மிகையாக வெளிப்படுகிறான் – ஷேக்ஸ்பியரின் இந்தப் பார்வை தல்ஸ்தோய்க்கு எரிச்சலை அளித்ததை வாசிக்க முடிகிறது.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவரை, அவருக்கு வாழ்க்கைச்சாரத்தை நோக்கிய சீரான தேடல் இருந்ததா என்று சொல்ல முடியவில்லை. வாழ்க்கை பற்றிய அபிப்பிராயங்கள் அவருக்கு இருந்தன. வெவ்வேறு கதாபாத்திரங்களின் பேச்சுகளின் வழியே வெளிப்படுபவை. உலகத்திற்கும் மனிதனுக்குமான உறவைப்பற்றியே அவர் பேசினார். ஆகவே அவர் மானுடவாதி. உலகத்தில் மனிதனின் இடம் என்ன? அவன் எப்படி செயல்படவேண்டும்? எப்போது அவன் தோற்கிறான்? போன்ற கேள்விகளை கேட்டார். மனிதனின் நிறைவு இந்த உலகத்திலே தான் நிகழ்வதாக அவர் எண்ணினார். மனிதனின் இக உலக வாழ்க்கையை மீறி அவர் சிந்தனை போகவில்லை.
வாழ்க்கைச்சாரத்தை நோக்கியத்தேடல் தல்ஸ்தோயில் இருந்தது. ஆனால் அவரிடம் இருந்தது அறிவொளி காலத்தின் ஆயுதமான தூய அறிவும், தன்னுடைய மரபிலிருந்து கிடைத்த கிறிஸ்துவ நம்பிக்கையும்தான். அதைக்கொண்டே அவருடைய ஆன்மீகத்தையும் மெய்யியலையும், நிலம் சார்ந்த அவருடைய மற்ற கேள்விகளுடன் இணைத்து, உருவாக்கிக்கொண்டார். வாழ்வில், நிலத்தில், கிறிஸ்துவ நம்பிக்கையுடன் கூடி தனக்கென்று ஓர் ஆன்மீகத்தை உருவாக்கிக்கொண்டார்.
ஆக ஷேக்ஸ்பியர், தல்ஸ்தோய், இருவருமே வாழ்க்கையில் எய்தக்கூடிய நிறவை பற்றியே பேசினார்கள். ஷேக்ஸ்பியர் அதை லௌகீகமாக அணுகினார், தல்ஸ்தோய் ஆன்மீகமான அணுகினார் என்று எளிமைப்படுத்திச் சொல்லலாம்.
ஷேக்ஸ்பியருடைய பாணி செவ்வியல் என்றாலும், அவர் பார்வை இறைநோக்கற்ற மானுடவாதமாக இருந்தது. ஆகவே அவருடைய நாடகங்களை secular bible என்று குறிப்பிடும் ஆங்கிலேயர் இருக்கிறார்கள் – பைபிலைப்போல அது அவர்களுக்கு மானுடத்தைப்பற்றி ஒரு தொன்மக்கட்டை அளிக்கிறது என்பதால். பகுத்தறிவு பேசிய இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
மாறாக தல்ஸ்தோய் ஆன்மீகவாதி. கடவுளை ஏற்றுக்கொண்டவர். மானுடவாதி அல்லர். மனிதனைப்பற்றி கறாரான யதார்த்தமான புரிதல் கொண்டவர். ஆகவே தன் ஆழம்வரை சென்று உண்மையான தேடலில் ஈடுபட்டவர். ஆனால் ஒரு தூய யதார்த்தவாதியால் செல்லக்கூடிய தூரம் மட்டுமே ஆன்மீகமாக அவரால் செல்லமுடிந்தது. அதற்கு மேல் போக தல்ஸ்தாயிடம் ஆயுதங்கள், கருவிகள் இல்லை. அறிவையும் நம்பிக்கையையும் இணைக்கத்தெரியாமல், இழுபறி வேதனையிலேயே இறந்துபோனார். ஆகவே இன்று மேற்குலகத்தின் கண்களில் ஒரு பழைய மனிதராக, வரட்டு ஒழுக்கவாதியாக, தேவையில்லாத மதப்பேச்சு பேசுபவராக, பார்க்கப்படுகிறார்.
(இந்தக்கட்டுரையில், தல்ஸ்தோய் இங்கே நமக்கு எப்படி பொருளாகிறார் என்ற கேள்வியிலிருந்து தொடங்கிகிறீர்கள். நான் ஷேக்ஸ்பியரை அதேப்போன்று எண்ணிப்பார்க்கிறேன். அவருக்கு தமிழ்நாட்டில், இந்தியாவில் பொருள் என்ன? அவர் ஆன்மீகப்பார்வைக்கு, வாழ்க்கை நோக்குக்கு, அழகியலுக்கு இன்று, இந்த நிலத்தில் மதிப்பு என்ன? ஷேக்ஸ்பியர் காலனிய பிரித்தானிய நன்கொடைகளான ரயில்கள், நிர்வாக அமைப்பு, ஆங்கில மொழி போன்றவற்றுடன் இந்தியாவுக்குள் நுழைந்தவர். அந்த பொதியை அவர் தோளிலிருந்து இறக்கி வைத்து அவரோடு மனிதருக்கு மனிதராக நாம் இன்று உரையாட முடியுமா?)
ஜார்ஜ் எலியட்ஜார்ஜ் எலியட் என்ற யதார்த்த மானுடவாதி
தல்ஸ்தோய் மானுடவாதி அல்ல. ஏனென்றால் மானுடவாதம் சொல்லும் லட்சிய மனிதனின் பிம்பத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மானுடவாத சிந்தனைக்கும் யதார்த்த மனிதனுக்கும் இடையே இருக்கும் தூரத்தை ஒரு எழுத்தாளர் பரிசீலித்திருக்கிறார். அவர் தல்ஸ்தோயின் சமகாலத்தவரான ஜார்ஜ் எலியட்.
ஜார்ஜ் எலியட் மனிதனை உலகத்தில் வைத்துப் பார்த்தாலும், அவன் வாழ்க்கையில் மதமும், கடவுள் என்ற உருவகமும் கொள்ளும் பங்கு என்ன என்ற கேள்வி அவருக்கு இருந்தது. அவருடைய சிந்தனையை மதச்சார்பற்ற மானுடவாத கிறிஸ்தவம் என்று சொல்லலாம்.
ஜார்ஜ் எலியட்டின் பார்வையை மூன்று சிந்தனையாளர்கள் வடிவமைத்தார்கள். ஒன்று, தத்துவவாதி ஸ்பினோட்ஸா. உலகத்தின் மூலக்கூறாக இருக்கும் பொருள் தான் கடவுள், ஆகவே மொத்த உலகமும் கடவுளின் வடிவம் என்ற சிந்தனை அவருடையது. இரண்டாவது டேவிட் ஸ்ட்ராஸ். யேசு கிறிஸ்து ஒரு வரலாற்று மனிதர், பைபில் சொல்லும் அற்புதங்களெல்லாம் தொன்மங்கள் என்ற வாதத்தை முதன்முதலாக முன்வைத்தவர். மூன்றாவது ஹெகெலிய சிந்தனையாளரான லுட்விக் ஃபோயர்பாக். “கிறிஸ்துவத்தின் சாரம்” என்ற நூலை எழுதியவர். அதில் கடவுள் என்பது மனிதனின் உச்ச குணங்களின் வெளிப்பாடு என்று வாதிட்டிருந்தார். கடவுள் மனிதனில், அவன் நடத்தையில், நிகழ்வதாகச் சொன்னார். மனிதனில் கருணை வெளிபட்டால், அது தான் கடவுள். இந்த பார்வை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மானுடவாத சிந்தனையாளர்கள் அனைவரையும் பாதித்தது. மார்க்ஸ் முதல் வாக்னர் வரை.
இந்த மூன்று நூல்களும் அவை தனித்தனியாக வெளியான காலத்தில் மிகவும் சர்ச்சைக்குறியவையாக இருந்தன. மூன்று நூல்களையும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் ஜார்ஜ் எலியட். உலகமே கடவுள், இயேசு ஒரு மனிதர், மனிதன் தான் கடவுள் என்ற மூன்று சிந்தனைகளும் பதமாக வெந்து கனிந்த இசைவு அவர் பார்வையில் தென்படுகிறது.
ஜார்ஜ் எலியட் பிறப்பால் சீர்திருத்தவாத கிருத்துவர். பத்தொன்பது வயதில் நம்பிக்கை உடைந்து மதத்திலிருந்தும் தேவாலயத்திலிருந்தும் விலகுகிறார். இதனால் குடும்பத்தினரோடு விலக்கம் ஏற்படுகிறது. தனியாக வருகிறார். உலகத்தில், மனிதர்களில் இருக்கும் நற்குணமே கடவுள் என்ற மானுடவாத இறையியல் சிந்தனையை அடைகிறார்.
அவர் நாவல்கள் பலவற்றில், விதிவசத்தால் சமூகத்திலிருந்து தனிமைப்படும் மனிதர்கள் தோன்றுகிறார்கள். ஆசிரியர் பார்வையில் இவர்கள் பாவப்பட்ட மனிதர்கள். மனிதன் தன்னுடைய சுற்றத்தாருடன், ஊர் உறவுடன், சேர்ந்து வாழ்கையில் நிறைவாக இருக்கிறான். மற்றவர்களுக்கு உதவியாக, கருணையுடன், வாழ முடிந்தால் அங்கே அவன் கடவுளாக ஆகிறான். தனிமைபட்ட மனிதன் கடவுளிடமிருந்தே விலகியிருக்கிறான், கடவுளாலேயே பழிக்கப்பட்டிருக்கிறான். மனிதன் மனிதனுடன் இசைந்து வாழும்போதே அவன் லட்சிய மனிதனாக ஆகிறான். இதுதான் சுருக்கமாக ஜார்ஜ் எலியட்டின் மனிதப்பார்வை.
சிலாஸ் மார்னர் நாவலில் தவறாக திருட்டுப்பட்டம் கட்டி வாழ்க்கையை இழந்த சிலாஸ் கசப்பானவனாகிறான். சமூகத்திடமிருந்து விலகி வருகிறான். பெரிய கஞ்சனாகிறான். அவன் சேகரித்து வைக்கும் தங்கமும் அவனிடமிருந்து திருடப்படுகிறது. அப்போது பனியில் அனாதையாக விடப்பட்ட ஒரு பெண்குழந்தையை கண்டடைகிறான். அவளை தத்தெடுத்து வளர்க்க அவன் முடிவுசெய்ததும் அவன் வாழ்க்கையின் திசை மொத்தமும் மாறுகிறது. குழந்தைக்காக மீண்டும் சமூகத்தில் இணைகிறான். சமூகமும் அவனை ஒரு தந்தை என்று இணைத்துக்கொள்கிறது. அந்த ஆற்றலில் அவன் புதியவனாகப் பிறக்கிறான். அவனுக்கு அடையாளமும் இடமும் உருவாகிறது. அவனுடைய மலர்வு அவன் மொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்து வளர்ந்து வாழ்கையில் அனைவரும் நிறைவு காண்கிறார்கள்.
விதியாலும், தன் உளவியலாலும், தனிமையில் கட்டுண்டிருக்கிறான் சிலாஸ். இது யதார்த்தம். ஆனால் அதை மீறிய கனிவும் ஆற்றலும் அவனுக்கு அவனுடைய சமூகத்தில் அமைகிறது. மனிதன் தன்னை விரித்துக்கொண்டால் உலகத்தை, உலகத்திலேயே நிறைவை அடையமுடியும். இது இறையிலலை மானுடமயமாக்குவதன் வழியாக விளையும் இலட்சியவாதம்.
சிலாஸ் மார்னரில் கனவுத்தன்மையோடு இந்த சிந்தனையின் வீச்சை நிகழ்த்தும் ஜார்ஜ் எலியட், அவருடைய மற்ற நாவல்களில் அதன் யதார்த்த எல்லைகளை பரிசீலிக்கிறார். ஆடம் பீட், தி மில் ஆன் தி ஃப்ளாஸ் முதலிய நாவல்களில்.
இந்த சிந்தனையில் ஜார்ஜ் எலியட் மானுடவாதத்தின் லட்சிய மனிதனின் பிம்பத்தை ஏற்றுக்கொள்வதில்லை. மனிதனை யதார்த்தத்தில் வைத்தே பார்க்கிறார். அவனுடைய நெறிமீறல்களை, மனசாட்சியுடனான போறாட்டங்களை, அறம் சார்ந்த கேள்விகளை, நுணுக்கமாக காட்சிப்படுத்துகிறார். அவருடைய கதைமாந்தர் நுண்மையான வன்முறைகளை ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக்கொள்கிறார்கள். ஆக மனிதன் யதார்த்தத்தில் சறுக்கலடையும் குணம் கொண்டவந்தான். ஆனால் ‘சாராம்ச நன்மை’ என்பது மனிதர்களுக்கிடையிலான உறவில், ஒருவரோடுஒருவர் அவர்கள் கொள்ளும் இசைவில், கருணையில் இருக்கிறதென்று அவர் கதைகள் சொல்கின்றன. அப்படி மனிதன் கருணை நோக்கித் தன்னை செலுத்திக்கொள்ளும் வேளையிலெல்லாம் அவன் தனக்கென்று ஒரு சொர்கத்தைப் படைத்துக்கொள்கிறான்.
‘தல்ஸ்தாய் மானுட நேயரா’ கட்டுரையை வாசித்தபோது, மானுடவாத அடிப்படைகள் கொண்ட பிற்கால மார்க்சிய சிந்தனை ஜார்ஜ் எலியட்டின் இந்த பார்வையையும் பரிசீலித்திருக்கலாம் என்று தோன்றியது.
சுசித்ரா
தல்ஸ்தோயின் மனிதாபிமானம்- கடிதங்கள்
மலபார் கடிதங்கள்- 2
அன்பு ஜெயமோகன்,
“மீண்டும் மலபார்” என்ற தலைப்புடன் கூடிய உங்கள் கட்டுரையை வாசித்த கையோடு எழுதுகிறேன். “மலபாருடன் என் உறவு என்பது மிக ஆழமாக வேரூன்றியது” என்ற உங்கள் சொந்த வரலாற்றுக் கூற்றினுள் ஒரு பொது வரலாறு புதையுண்டிருக்கிறது.
அல் பிருனி (973-1045, உஸ்பெக்கிஸ்தான்) என்ற யாத்திரிகர் மலையாளத்தை அல்லது மலையோரத்தை அல்லது மலைவாரத்தை மலபார் என்று எழுதும்பொழுது அவர் ஒரு புலத்தைக் குறிக்கிறார். அவருக்குப் பின்வந்த பயணிகள் மலபாரிகள் (Malabars) என்று மக்களைக் குறித்து எழுதியிருக்கிறார்கள்.
ரொபேட் நொக்ஸ் (1640-1720, இங்கிலாந்து) ஏறத்தாழ 20 ஆண்டுகள் கண்டியில் சிறையிருந்தவர். வன்னியரின் ஆட்சிக்குட்பட்ட அனுராதபுரம் ஊடாக, “அடிக்கடி வானத்தை நோக்கி கைகளை எறிந்து தம்பிரானே! தம்பிரானே!” என்று கும்பிடும் மலபாரிகளின் துணையுடன் தான் தப்பிப் பிழைத்ததாக தனது நினைவுத்திரட்டில் (An Historical Relation of Ceylon, 1681) அவர் எழுதுகிறார்.
அதே விதமாகவே இபின் பத்துத்தா (1304- 1477, மொறக்கோ) ஈழத்தமிழரை மலபாரிகள் என்று குறிப்பிடுகிறார். இலங்கையைச் சேர்ந்த பெளத்த துறவி அநகாரிக தர்மபாலா (1864-1933) கூட ஈழத்தமிழரை மலபாரிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஈழத்தமிழரையும் தென்னிந்திய மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மலபாரிகள் என்று இனங்காட்டுகிறார் மார்க்கோ போலோ (1254-1324, இத்தாலி).
ஈழத்தமிழரின் தோற்றுவாய் பெரிதும் சேரநாடே என்பதில் ஐயமில்லை. சேரநாடு கேரளமாக மாறமுன்னர், தமிழ் மலையாளமாகத் திரியமுன்னர் இவர்கள் புலம்பெயர்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. பொது ஊழி பிறக்க முந்திய காலந்தொட்டு 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இலங்கையை அடிப்படுத்தும்வரை சோழ, பாண்டியப் படையெடுப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தன. 18ம் நூற்றாண்டில் இலங்கையைத் தம்வசப்படுத்திய பிரித்தானியர் தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து இலட்சக் கணக்கான மக்களை மலையக பெருந்தோட்டப் புலத்தில் குடியமர்த்தினார்கள்.
அந்த வகையில் எம். ஜி. ஆர். கண்டியில் பிறந்ததும், ஈழத்தமிழரைப் பார்த்து “நீங்கள் மலையாளிகள் போலக் கதைக்கிறீர்களே!” என்று தமிழக நண்பர்கள் வியப்பதும் தற்செயலானவை அல்ல. சாப்பாட்டு வகைகளை வைத்து மக்கள் புலம்பெயரும் மார்க்கத்தை தடம்பிடிக்கலாம் என்று சொல்வார்கள். ஒருதடவை (1987ல்) திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தை அண்டிய ஓர் உணவகத்தில் மீன்குழம்பு, சொதி, சம்பலுடன் இடியப்பம் சாப்பிட்ட மகிழ்ச்சி எனக்கு தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை!
மணி வேலுப்பிள்ளை 2020-01-22
அன்புள்ள ஜெ
மீண்டும் மலபார் கட்டுரையை இந்த தொற்று காலகட்டத்தில் வாசிக்க ஒரு வகையான சோர்வு வந்து அழுத்திக்கொள்கிறது. வேலை வேலை என்று வாழ்ந்துவிட்டோம். எப்போதுவேண்டுமென்றாலும் பயணம் செய்யலாமே என்ற மிதப்பு இருந்தது. இன்றுதான் பயணம் என்றால் எந்த அளவுக்கு அரிய விஷயம் என்பதே நினைவுக்கு வருகிறது. எவ்வளவு இழந்துவிட்டோம் என நினைத்து ஏங்குகிறேன். நான் பல ஆண்டுகள் கேரளத்தில் பயணம் செய்தவன். இன்றைக்கு கேரள மண் கனவுபோல ஆகிவிட்டது. எல்லாம் சீராகும். அப்போது எதையும் நினைக்காமல் பயணம்செய்யவேண்டும்
ஜெயச்சந்திரன் என்
கதைகளின் ஆண்டு
அன்புள்ள ஜெ
நூறுகதைகளின் நினைவுகளுடன் ஒர் ஆண்டு நிறைவடையச் செய்கிறது. சமீபத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது தமிழில் எழுதப்பட்ட நல்லகதைகளில் பெரும்பாலானவற்றை இந்த நூறுக்குள்தான் தேடவேண்டும் என்று சொன்னேன். அவர் அதிர்ச்சியாகிவிட்டார். வாசிக்கக்கூடியவர் அல்ல. அவருக்கு இந்தக்கதைகள் இன்று வாய்மொழிக்கதையாகவே பரவி பல்லாயிரம்பேரைச் சென்றடைந்திருப்பதைப்பற்றிச் சொன்னேன். எதிர்காலத்திலும் இக்கதைகளைப்பற்றித்தான் பேச்சு இருக்கும். சூழலில் ஒரு மௌனம் இருந்தாலும் அத்தனை பேருக்கும் தெரிந்தது, இக்கதைகள் தமிழிலக்கியத்திலேயே மிகப்பெரிய ஒரு நிகழ்வு. 2020 இக்கதைகள் எழுதப்பட்ட வருடம் என்றே அறியப்படும்
என்.மாதவன்
அன்புள்ள ஜெயமொகன் அவர்களுக்கு,
உங்களின் கதைகளில் வரும் யானை படிமம் எப்போதும் உவப்பானது. அது ஆழ்மன படிமமாக இருள் கொள்ளும், ஒளியாக வரும் (உச்சவழு), கட்டுண்டு தத்தளிக்கும் (உண்ணிலச்சுமி- வாரிகுழி, கீரகாதன்-காடு). மதுரம் கதையில் கரிய எருமை ஆழ்மன படிமமாக இருமையின் தோற்றமாக அழகாக வெளிபட்டுள்ளது. அழகிய கருமை இருமையாக தோற்றம் கொள்கிறது. விழியறியாமூர்க்கத்தையே சாந்தபடுத்தவேண்டியுள்ளது மதுரமாக.
ஆனையில்லா கதையில் வீட்டில் புகுந்து சிக்கிகொள்ளும் யானையும், உங்களின் கைபட்ட ஆனைபடிமமே. எப்போதும் உக்கிரமமாக வரும் படிமம், நகைசுவையாக இருக்கிறது. உலகியலில் மாட்டிகொண்ட ஆழ்மனம். வெளியேற பெரிய முயற்ச்சி தேவையில்லை. குழந்தைதமான எளிய வழியை கண்டுகொள்தல்தான்.
எளிய அங்கத கதைகள் போல தோற்றம் கொண்ட, படிமத்தால் ஆழம் கொள்ளும் கதைகள்.
நன்றி
அன்புடன்
ஆனந்தன்
பூனா
அன்புள்ள ஆசான்
‘ஆகாயம்’ கதை மிகப்பெரிய மனஎழுச்சியை தந்தது. உங்கள் எல்லாக்கதைக்கும் அது பொருந்தும். இது இன்னும் ஸ்பெஷல்.
ஐன்ஸ்டீன் கூற்று – ” Physical concepts are free creations of the human mind, and are not, however they may seem, uniquely determined by the external world. ”
(இயற்பியல் கருதுகோள்கள் மற்றும் ‘ஐடியாஸ்’- மனித மனத்தின் விரிந்த சுதந்திரமாக படைப்புகள். அவை இந்த வெளியுலகத்தில் பார்ப்பவை கேட்பவை உணர்பவைகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை )
இதை நினைத்து கொண்டேன். இது ஒரு சர்வசாதாரண கூற்றாகவும் ஐன்ஸ்ட்டின் சொன்னதனால் அதற்கு ஒரு மேற்கோள் (quote) அந்தஸ்து கிடைத்து விட்டதாக பலர் சொல்வதுண்டு. ஆனால் இது ஆராய்ச்சி செய்யும் பலர் மறக்கும் விஷயம். நடைமுறை வாழ்வில் நிச்சயம் பின்தொடராத விஷயம்.
குமாரன் எதைக்கொண்டு எப்படி படைக்கிறான் ‘என்ன படைக்கிறான்’ என்பது என்றாவது புரியலாம் அல்லது புரியாமல் போகலாம். அவனுக்கே தெரியலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம்.
படைப்பாற்றல் என்பது எப்படி நிகழ்கிறது எந்த தளத்தில் நிகழ்கிறது என்பது மாயம் தான்.
குமாரனுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று மனம் படபடத்தாலும் அதே வேகத்தில் கதையின் கடைசி வரை அந்த சிலை யாருக்காவது புரிந்துவிடப்போகிறதோ என்றும் நினைத்தேன்.
(உங்கள் கதைகள் தொடங்கும் விதமும் முடியும் விதமும் அபாரம். சாட்டை சொடுக்குவது போல தொடங்கி சட்டென்று நின்று பின் எம்மில் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது)
இங்கு குமாரன்கள் பலர் உள்ளனர்.
எல்லோரும் ‘ஆட்டிஸ்டிக் சவண்ட்’ குறித்தும் அறிந்தவர்கள் தான். ஆனால் பெரும்பாலான கதைகளில் அவர்தம் படைப்பு அதன் உலகியல் வெற்றி என்பது கதைகளில் வந்தேதீரவேண்டும். ‘ரெயின்மேன்’ படமோ அல்லது ‘தாரே சமீன் பர்’ ரோ எல்லாவற்றிலும் அவர்களின் சாதனை நிகழ்கிறது.
ஸ்பெஷல் சைல்ட் உண்மையில் ஸ்பெஷலாக ஏதாவது செய்தே ஆகவேண்டிய நிபந்தனை.
ஆகாயம் அப்படியொன்றை நிகழ்த்தாமல் இருந்தது ‘லிபேரேட்டிங்’ ஆக இருந்தது
‘குமாரன்’ போன்றவர்கள் படைப்பது புரியாமல் ‘படைத்துவிட்டுப் போகட்டும்’ என்று அணுகும் நீலன் போன்றவர் இருக்கவேண்டியுள்ளது. அவர்கள் எந்தவிதத்திலும் கீழ்மைப்படுத்தாமலிருக்க நீலன்கள் வந்துகொண்டே இருக்கட்டும்.
இதொன்றும் புதிய fad அல்ல என்று நீங்கள் கதையிலேயே சுட்டிக்காட்டிய ‘ சேரமான் பெருஞ்சாத்தன் மாராயன்’ தொன்மம் நமக்குரைக்கின்றது.
ரிக்வேத நாஸதிய சூக்தம் நினைவுக்கு வந்தது
எங்ஙனம் உருவானது படைப்பு (சிருஷ்டி)
யாரால் தான் சொல்லமுடியும் ?
கடவுள்களும் அவர்தம் உருவங்களும் கூட
படைப்பின் பின் வந்தவர்(து) தானே
சிருஷ்டியின் மூலமுண்டு எனில் எவனவன்?
ஆகாயமாக கண்காணிக்கும்
பிரம்மமான அவனேயறிவான்
அல்லது அவனுமறியான்.
நன்றி ஆசான்
அன்புடன்
ஸ்ரீதர்
100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96. நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]நூல்களை தரவிறக்க…
ஒரு விமர்சனம்நீங்கள் இத்தனை முஸ்லிம் எழுத்தாளர்களைப் பற்றி இவ்வளவு எழுதியிருக்கிறீர்கள், அவருக்கு ஒன்றும் நினைவில் இல்லை. என்ன சதவீதத்தில் அவர்கள் எழுதியிருக்கிறார்களோ அதைவிட அதிகமாகவே நீங்கள் அவர்களைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதில் குறைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. ‘நாலு முறை விட்டுவிட்டு ஒரு மணி வரை விவாதம்’ என்று படித்தபோதே தெரிந்தது இது நீங்கள் ஒரு ‘பொறுப்பில்லாத’ காலகட்டத்தில் எழுதியது என்று. மறுபிரசுரம் என்று கடைசியில்தானே போடுகிறீர்கள். அதேபோல 2011இல் எழுதியிருக்கிறீர்கள். சின்னவயசுன்னா அப்பிடித்தான். நிற்க.
உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர் ஆபிதீன் அவர்களின் இணையப்பக்கங்களை பற்றி வாட்சப்பில் யாரோ அனுப்பியிருந்தார்கள்.
https://abedheen.wordpress.com/2012/12/20/nbt-novels22/‘பழைய புத்தகங்களை யாராவது இணையத்தில் பிரசுரித்தால் தேவலை’ என்று குறைப்பட்டிருந்தீர்கள். உங்கள் குறை நீங்கியது. ஆபிதீன் பக்கங்களில் இந்த 22 நாவல்களும் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவருக்கு ஒரு பெரிய நன்றி.
1. அக்னி நதி (Aag ka Daryah) – உருது : குர்அதுல்ஐன் ஹைதர் (தமிழாக்கம் : சௌரி)
2. அரை நாழிகை நேரம் – மலையாளம் : பாறப்புறத்து (தமிழாக்கம் : கே. நாராயணன்)
3. அழிந்த பிறகு (Alida Mele) – கன்னடம் : சிவராம காரந்த் (தமிழாக்கம் : எம். சித்தலிங்கய்யா)
4. தர்பாரி ராகம் (Raag Darbari) – இந்தி : ஸ்ரீலால் சுக்ல (தமிழாக்கம் : சரஸ்வதி ராம்நாத்)
5. ஃபாத்துமாவுடைய ஆடும் இளம் பருவத்துத் தோழியும் (Pathummavude Adum Baliyakala Sakhiyum) – மலையாளம் : வைக்கம் முகம்மது பஷீர் (தமிழாக்கம் : சி எஸ் விஜயம்)
6. ஜன்னலில் ஒரு சிறுமி (Totto-Chan) ஜப்பான் : டெட்சுகோ குயோயாநாகி (தமிழாக்கம் : அ. வள்ளிநாயகம் , சொ.பிரபாகரன்)
7. கருப்பு மண் (Nalla Regadi) – தெலுங்கு : பாலகும்மி பத்மராஜு (தமிழாக்கம் : பா பாலசுப்ரமணியன்)
8. கிராமாயணம் – கன்னடம் : ஆர்.பி. குல்கர்னி (’ராவ் பகதூர்’) (தமிழாக்கம் : எஸ் கெ சீதாதேவி)
9. கோயில் யானை (Thevarutu Aana) – மலையாளம் : ஓம்சேரி என்.என்.பிள்ளை ( தமிழாக்கம் : இளம்பாரதி)
10. முதலில்லாததும் முடிவில்லாததும் (Anadi Anantha) – கன்னடம் : ஸ்ரீரங்க. (தமிழாக்கம் : ஹேமா ஆனந்த தீர்த்தன்)
11. நான் (Mee) – மராத்தி : ஹரிநாராயண் ஆப்தே (தமிழாக்கம் : மாலதி புணதாம் பேகர்)
12. நீலகண்டப் பறவையைத் தேடி (Neelakanth Pakhir Khonje) – வங்காளம் : அதீன் பந்த்யோபாத்யாய (தமிழாக்கம் : எஸ். .கிருஷ்ணமூர்த்தி)
13. ஒரு குடும்பம் சிதைகிறது (Griha Bhanga) – கன்னடம் : எச்.எல். பைரப்பா (தமிழாக்கம் : எச்.வி.சுப்ரமணியம்)
14. பகல் கனவு (Divasapna) – குஜராத்தி : ஜிஜூபாய் பதேக்கா (தமிழாக்கம் : சங்கரராஜுலு)
15. பன்கர்வாடி (Bangarwadi) – மராத்தி : வெங்கடேஷ் மாட்கூல்கர் (தமிழாக்கம் : உமாசந்திரன்)
16. சிப்பியின் வயிற்றில் முத்து (Jhinuker Pete Mukto) – வங்காளம் : போதிசத்வ மைத்ரேய (தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி)
17. துளியும் கடலும் (Boond aur Samudra) – இந்தி : அம்ரித்லால் நாகர் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)
18. உம்மாச்சு – மலையாளம் : உரூப் (தமிழாக்கம் : இளம்பாரதி)
19. உயிரற்ற நிலா (Mala Janha) – ஒரியா : உபேந்திர கிஷோர் தாஸ் (தமிழாக்கம் : பானுபந்த்)
20. வாழ்க்கை ஒரு நாடகம் (Manaveni Bhavai) – குஜராத்தி : பன்னாலால் பட்டேல் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)
21. விடியுமா (Jagari) – வங்காளம் : ஸதீநாத் பாதுரி (தமிழாக்கம் : என். எஸ். ஜகந்நாதன்)
22. விஷக்கன்னி (Visha Kanyaka) – மலையாளம் : எஸ்.கே. பொற்றேகாட் (தமிழாக்கம் : குறிஞ்சிவேலன்)
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
வெண்முரசுக்கு நன்றி -கடிதம்
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். பல வருடங்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என நினைத்து பின்பு சீரிய காரணங்கள் எதுவும் இல்லாததாலும், உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற காரணத்தாலும் எழுதவில்லை. என் மின்னஞ்சல்களை நோக்கும் பொழுது உங்களுக்கு கடைசியாக 2009ல் எழுதிஇருக்கிறேன். பிறகு பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில் உங்களை பார்த்தேன். தயக்கத்தினால் உங்களுடன் வந்து பேச வில்லை. இப்பொழுது தான் உங்களின் மாஸ்டர் கட்டுரையை படித்தேன். வம்புக்காக பல பேர் உங்களுக்கு எழுதும் பொழுது நாமும் ஓரிரு வரிகள் எழுதலாமே என்று தோன்றியது. நோபல் பரிசு பெற்ற பால் க்ருக்மான் (krugman) ஒரு பேட்டியில், யாரும் இதுவரை கண்டிராத ஒரு தொடர்பை, ஒரு புதிய எண்ணத்தை நான் நோக்கி செல்கிறேன் என்று எண்ணி ஆராய்ச்சி செய்வதற்க்கே ஒரு ஆணவம் தேவை என்று சொல்லியிருந்தார். உங்கள் மாஸ்டர் கட்டுரை அதைத்தான் நினைவுறுத்தியது .
உங்களின் வெண்முரசு எனக்கு ஒரு பெரிய கொடை. அதற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள். வலைத்தளத்தில் சில முறை பிந்தியும், சில முறை அவசரத்திலும், கவனமில்லாமலும் படித்ததனால் இப்பொழுது மறுபடியும் இந்த்ரநீலத்தில் தொடங்கி நேரடியாக புத்தகத்தில் மறுவாசிப்பு செய்யலாம் என தொடங்கி கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் படித்து இன்றைக்கு தான் இந்த்ரநீலத்தை முடித்தேன். பிறகு ராமகிருஷ்ணரின் கத்தாமிர்தத்தை திறந்து எதோ ஒரு பக்கத்தை படிக்கலாம் என்று படித்த பொழுது அவர் வ்ரிந்தாவனம் சென்று கண்ணனை தேடி அழுத பக்கங்கள் வந்தன. மனதுக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. முடித்துவிட்டு தற்செயலாக உங்களின் வீடியோ பார்க்க நேர்ந்தது. சில கணம் ஒரு ஏமாற்றமே இருந்தது. இப்படி சட்டையும் பேண்ட்டும் அணிந்து சாதாரணமாக வாழும் ஒரு சக கால மனிதர் எழுதியதா இந்த படைப்பு என்று எண்ணிய பொழுது வெண்முரசின் சிறப்பு ஒரு படி குறைந்து விட்டது போல் இருந்தது. இன்னும் ஒரு நூறு இருநூறு வருடங்களுக்கு பிறகு, உங்களைப்பற்றிய கதைகளும் தொன்மங்களும் உருவான பிறகு, இந்த பிரச்சனை இருக்காது என்று தோன்றுகிறது. அல்லது இப்பொழுதே ஒரு ரிஷி போன்ற தாடியும், எங்கோ முடிவிலியை நோக்குகின்ற தோரணையும் கொண்டுவிட்டால் ஓரளவு சமன் செய்து விடலாம் என்று நினைக்கிறேன் :).
கடந்த இரண்டு மாதங்களாக ஏதோ வேகம் வந்ததுபோல் நிறைய்ய படிக்கிறேன். சுத்தமாக அன்றாட செய்திகளில் மனம் செல்லாமல் ஏதோ படித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. சுராவின் ஒரு புளியமரத்தின் கதை, பின்பு ஜே ஜே சில குறிப்புகள் படித்தேன். இரண்டுமே எனக்கு ஒன்றும் பெரியதாய் படவில்லை. புளியமரத்தின் கதை முதலில் நன்றாகவும் பிறகு காற்றுஇறக்கிவிட்ட பலூன் போல சென்றதாக தோன்றியது. ஜே ஜேயில் ஆங்காங்கே சில அறிய முத்துக்கள் கிடைத்தாலும் எதோ ஆசிரியர் தன அறிவு பலத்தை ஒரு கதாபாத்திரத்துக்கு கொடுத்து அதை வைத்து முன் சென்றது மாதிரி இருந்தது. பின்பு உங்களின் விமர்சனங்களை படித்தேன். புளியமரத்தின் குறியீடுகளை எப்படி விரித்துக்கொணடே செல்லலாம் என்று எழுதியிருந்தீர்கள். புரிகிறது ஆனால் மனம் ஈடுபடவில்லை. உங்கள் தளத்தை தொடர்ந்து, பூமணி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், தீ ஜா இவர்களின் சில படைப்புகளை கடந்த சில வருடங்களாக படித்துள்ளேன். உங்கள் நாவல்களிலேயே காடு, ஏழாம் உலகம், அறம், ஆழ் நதியை தேடி, இன்றைய காந்தி படித்தேன். விஷ்ணுபுரம் இரு முறை தொடங்கி முடிக்கவில்லை. படிப்பதற்கான அழைப்பு வர வில்லை என்று நினைக்கிறேன். அதே போல் ஆங்கிலத்தில் பட்டியலிட்டு பல நாவல்களை படித்தேன். ஓரளவுக்கு விரிவாக எழுதலாம், ஆனால் இவற்றிக்கெல்லாம் பிறகு, நான் ஒரு இலக்கிய வாசகனோ இல்லை அந்த இடத்திற்கு செல்ல விழைபவனோ அல்ல என்று புரிந்துகொடுள்ளேன்.
இன்றைய காந்தி என்னை வெகுவாக பாதித்தது. காந்தியை பற்றிய கண்ணோட்டத்தை அரவிந்தரின் எழுத்துக்களில் இருந்து, பின்பு அஷோகானந்தா அவரின் எழுத்துக்களில் இருந்தே பெற்றுக்கொண்டிருந்தேன். இருவருமே பெரிய ஆளுமைகளென்பதால், அக்கருத்தை அப்படியே கொண்டிருந்தேன். (அஷோகானந்தாவின் மாணவி கார்கி தான் விவேகானந்தரை பற்றி மேற்கில் பல செய்திகளை திரட்டி 6 தொகுதிகளாக வெளியிட்டிருந்தார் ). உங்களின் புத்தகம் படித்த பிறகு, காந்தி எனக்கு ஒரு உளம் கனிந்த ஆசானாகிவிட்டார். பல விஷயங்களில் என் நோக்க்கே இதனால் மாறிவிட்டது. தங்களுக்கு நன்றி.
மன்னிக்கவும் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறேன். நான் எழுதவந்தது, உங்கள் மற்றும் நான் படித்த வேறு எழுத்துக்களிலேயே வெண்முரசு போல் என்னை உள்ளிழுத்து கொண்டது வேற ஏதும் இல்லை. அது என்னில் பலமுறை எழுப்பிய நெகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவதே நானும் என் மனைவியும் பேசியதை வெளியுறைப்பது போல் ஆகும் என்று தோன்றுகிறது. பல முறை வேலை நிமித்தமாக சலிப்புடன் எழுந்த நாட்களில், உங்கள் வலைதளத்தில் வெண்முரசு படித்து பெரும் உந்துதல் பெற்றுள்ளேன். இந்த கடிதம் எழுதும் இடைவெளியில் காண்டீபம் புத்தகத்தை தொடங்கினேன். இதை நீங்கள் சித்பவானந்தருக்கு சமர்ப்பித்துள்ளீர்கள். நான் கல்லூரி முதல் ஆண்டில் அறிமுகம் இல்லாமல் கையில் கிடைத்த சித்பவானந்தரின் கீதை வ்யாக்யானம் படித்து பின்பு அதன் வழியாக சில புரிதல்களை அடைந்தேன். அதனால் அவர் எனக்கும் மிக அணுக்கமானவர். இந்த தொடர்புகளையெல்லாம் நோக்கும் பொழுது என் மீது நல்லாசிகள் விழுந்து கொண்டே இருக்கின்றது என்றே தோன்றுகிறது. நான் தான் கவனிப்பதில்லை போலும்.
மீண்டும் தங்களின் வெண்முரசு கொடைக்கும் சாதனைக்கும் வாழ்த்துக்கள். எனக்கு குழந்தைகள் இல்லை. முயற்சி செய்து இதுவரை பயனில்லை. இனியும் ஒரு குழந்தை பிறந்தால், அதற்க்கு வெண்முரசு தானாக படிக்கின்ற அளவுக்கு தமிழ் கற்றுத்தற வேண்டும் என எண்ணியுள்ளேன். அது குழந்தைக்கு நான் அளிக்கும் கொடை மற்றும் என் கடமை என்றே கருதுவேன்.
அன்புடன்,
ராஜ்
அன்புள்ள ராஜ்
சிலசமயம் சிலவற்றை ஓங்கிச் சொல்லவேண்டியிருக்கிறது- தன்னையும் தன் படைப்புக்களையும் பற்றிக்கூட. தமிழ்ச்சூழலில் எப்போதும் அதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் இங்கே பெருவாரியானவர்களுக்கு வாசிப்பு இல்லை. வாசிப்பவர்களிலேயே மிகச்சிலருக்குத்தான் அடிப்படை கலைப்புரிதலும் அறிவுத்தள அறிமுகமும் இருக்கிறது. சூழலில் உள்ள பாமரர்களை நோக்கி பேசும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அவையே பெரும்பாலான குரல்கள்.
அக்குரல்களால் நம் கலை, நம் பங்களிப்பு பலசமயம் அறிமுக வாசகர்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது. அவர்கள் வாசிக்காமலாகிறார்கள். அல்லது எளிதாக வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு இது கிளாஸிக் என்று எழுதியவனே சொல்லவேண்டியிருக்கிறது. அது பாரதி முதல் ஜெயகாந்தன் வரை அனைவருக்குமே தேவையாக இருந்திருக்கிறது. பெரிய எடை உடைய ஒன்றை தக்கை என நினைத்து தூக்கமுயல்பவர்களிடம் அதன் மெய்யான எடையைச் சொல்வதுதான் அது.
அது வெற்றுத்தற்பெருமை அல்ல, தன் தகுதியையும் இடத்தையும் அறிந்து கூறுவதே. அதைக்கூறாத கலைஞர்கள் குறைவு. அதைக்கேட்டு பாமரர்கள், அவர்களை நோக்கிப்பேசும் முதிராக்குரல்கள் எரிச்சலுறும். அவர்கள் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல. நாம் பேசுவது வாசிப்பவர்களை நோக்கி. உண்மையான ரசனையுடன் வெண்முரசை வாசிப்பவர்கள் அது எவ்வகையிலும் பெருமைக்கூற்று அல்ல என்று அகத்தே உணர்வார்கள். தன்னைப்பற்றிய அறிதலை அடையாதவன் கலைஞன் அல்ல
என்குரல் அரிதான ஒன்றை ஒருகணமேனும் கண்டுவிட்டவனின் நிமிர்வு கொண்டது. அரிதான சில உண்டு என அறிந்தவர்களுக்கு அது புரியும்
ஜெ
February 19, 2021
சமயச் சழக்கர்
அன்புள்ள ஜெ
கீழ்க்கண்ட உரையாடலை நான் முகநூலில் வாசித்தேன். உங்கள் கவனத்திற்கு இதை கொண்டுவரவேண்டும் என்று தோன்றியது. [யார் யார் என்பது தேவையில்லை. மறைத்திருக்கிறேன். ஓரு உதாரணமாகவே சுட்டிக்காட்டுகிறேன்]
ஓர் இந்துவாகிய நான் இந்து மரபையும் வழிபாட்டுமுறையையும் அறிய முயல்பவன். தொடர்ந்து ஆர்வத்துடன் அதைக் கற்கவும் ஈடுபாடு காட்டுகிறேன்
ஆனால் நான் ஊடகங்களிலே காண்பது என்னவென்றால் வெறும் அகங்காரம், காழ்ப்பு, அதைச்சார்ந்த வசைபாடல். முன்பெல்லாம் இலக்கியவாதிகள் ஏன் இப்படி சண்டைபிடிக்கிறார்கள் என்று நினைப்பேன். இன்றைக்கு ஆன்மிகவாதிகள் சண்டைபிடிப்பதை பார்க்கும்போது இலக்கியவாதிகளெல்லாம் எத்தனையோ நாகரீகமானவர்கள் என்று தோன்றுகிறது
இந்த சண்டைகளிலே மூன்றுநான்கு விஷயங்கள் கண்ணுக்குப் படுகின்றன. ஒன்று, சாதி. சாதியும் மதச்சம்பிரதாயமும் ஒன்றுக்கொன்று கலந்துகிடக்கின்றன. ஒருவர் வைணவராக இருப்பது அவர் வைணவச்சாதியில் பிறந்தததனால்தான். அவர் மத ஆசாரம் என்று சொல்வது சாதியாசாரத்தைத்தான்.
ஆகவே சாதிவெறியை அப்படியே மதவெறியாக ஆக்கிக்கொள்கிறார்கள். மற்றச் சாதிகளை வசைபாடுகிறார்கள். இழிவுசெய்கிறார்கள். அதற்கு ஆன்மிகப்பூச்சு பூசிக்கொள்கிறார்கள்.
இன்னொன்று, தான் நம்பும் தரப்பே உண்மை மற்றதெல்லாம் பொய் என்று நினைப்பது. இது ஒரு கண்மூடித்தனம். அதிதீவிர இஸ்லாமிய, கிறிஸ்தவர்களிடம் இருக்கும் நிலையும் இதுவே. தான் நம்பும் சம்பிரதாயத்தை முன்வைத்து மற்ற எல்லாம் வெட்டி என்று கம்புசுழற்றுகிறார்கள்
உண்மையில் மெத்தப்படித்த மதபண்டிதரிடம் பாடம்கேட்கச் சென்றால்கூட அவர் முக்கால்வாசி பேசுவது அவருடைய சம்பிரதாயம் அல்லாத எல்லாவற்றையும் வசைபாடுவதை மட்டும்தான். அதிலிருந்து அப்படியே சாதியாசாரத்துக்கு செல்வார். சாதி ஆசாரத்தை மதசம்பிரதாயமாக காட்டுவார்
கடைசியாக இருப்பது ‘நான் யார் தெரியுமா?’என்ற தோரணை. இந்த உரையாடலிலேயே அதுதான் உள்ளது. கொஞ்சம் ஏதாவது படித்தால்கூட உடனே வந்து சேர்வது இந்த நாற்றம்தான். அதை எடுத்துக்கொண்டு இன்னொருவரை நாறடிக்கக் கிளம்புவது. ஆபாசத்தின் உச்சம்
மனம் வருந்தி கேட்கிறேன். ஓரு நாகரீகமான இந்து இன்றைக்கு இந்து ஞானத்தை அடைவதற்கு வழியே இல்லையா?
எம்.ஆர்.
முகநூல் விவாதம் கீழே
யாராக இருந்தாலும்…சத்தியம் இதுவென நான் முடிவெடுத்தால் எதிலும் பின் வாங்கி ஓடி விட மாட்டேன். எவர் எப்படி எவ்வாறு பேசுவார் என்பது எல்லாம் நான் நன்கு அறிவேன். இங்கு பலருக்கு இருக்கும் சாஸ்திர ஞானம் எனக்கு இல்லைதான். அந்த பலரிடம் பணிவாக கேள்விகள் கேட்டே பல விஷயங்களில் தெளிவடைந்தேன்.
ஆனால் மெத்த சாஸ்திர ஞானம் உள்ளது என்பதால் சிலரின் பெயரை மென்ஷன் செய்தே இவனை அடக்கி விடலாம் என்று கனவு கண்டால்.. ஏமார்ந்து போவீர்கள். !
இதோ இப்படிதான் பதில் வரும்.
இருபது நாட்கள் முன்பு கோலாலம்பூர் தெருவில் இரண்டு மேல் நாட்டு வெள்ளைகார பக்தர்கள் பிரம்மசார்யம் விரதம் பூண்டு தெருவோரம் அமர்ந்து கிருஷ்ணர் நாமங்களை பாடி கீர்த்தனம் செய்து புத்தகம் விற்ற வீடியோ ஒன்றை பதிவிட்டேன் அல்லவா..
அவர்களை விட, அகம்பாவமாக , திமிறாக தன் சாஸ்திர ஞானங்களை இங்கு எழுதி எதிரிகளை துவம்சம் செய்து விட்டதாக நினைப்பவர் எல்லாம் பெரிய பக்தர்கள் அல்ல.
முதலில் மேலே நான் சொன்னதை செய்து விட்டு வர சொல்லவும்
அவன் வைணவனாகவே இருந்தாலும்..
*
உங்களை அடக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. யாராக இருப்பினும் ஒரு கை பார்க்கும் ஞானத்தை என் ஆழ்வார் எனக்கு அருளியுள்ளார். நீங்கள் என்னை அடக்கிவிடலாம் என நினைத்து இருவரை டேக் செய்தீர்கள். நான் எனக்கு தெரிந்த ஒருவரை டேக் செய்தேன் அதுவும் உங்கள் விளக்கத்திற்க்கு பின் அழித்துவிட்டேன் அவருக்கும் உங்களும் ஏதும் பிரச்சனையா என்பதை கூட அறியவில்லை.
*
அவர் மெத்த சாஸ்திர.ஞானம் உடையவர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பணிவு இல்லை. அகம்பாவம் அதிகம். வார்த்தை பிரயோகம் வைஷ்ணவர் பேசும் பேச்சு இல்லை.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற எழுத்து. அவரை அழைத்தாலும் அவருக்கு எவ்வாறு பதில் கொடுப்பது என்று எனக்கு தெரியும். அடுத்து, அவர் பெயரை அழித்தது
இப்போது நீங்கள் சொல்லிதான் அறிந்தேன். அழிக்காமல் அவர் வந்து எழுதி இருந்தாலும் எனக்கு அச்சம் கவலை இல்லை.
*
சாஸ்திர திமிரும் அந்தப் பரம்பொருள் தானே..!!!
*
அன்புள்ள எம்.ஆர்.
அந்த முகநூல் விவாதத்தின் கடைசிவரி கிளாஸிக். அத்வைத தரிசனத்தின் உச்சம் அதுதான்
இதில் வருந்த என்ன உள்ளது? சமயச்சழக்கு என்பது நாம் சமயம் என ஒன்றை அறிந்த காலம் முதல் இருந்து வருவது. அத்தனை ஞானிகளாலும் தொடர்ந்து கண்டிக்கப்படுவது, வெறுத்து ஒதுக்கப்படுவது. ஆனாலும் அது இருந்துகொண்டே இருக்கிறது, என்றுமிருக்கும். ஏனென்றால் அது மானுடனின் அடையாளம், ஆணவம் இரண்டுடனும் தொடர்புடையது. உடலழகு, செல்வம்,குலம்,அறிவு ஆகியவை ஆணவத்தை அளிப்பவை என நாம் என்றோ கற்றிருக்கிறோம் அல்லவா?
நீங்கள் செய்த பிழை என்பது முகநூல் வழியாக ஞானம் பெற முயன்றது. முகநூல் போன்ற சமூக ஊடகங்களுக்கு வருபவர்கள் பெரும்பாலும் பயில்முறையாளர்கள்.அரைகுறைக் கல்வியும் அதைவிட அரைகுறையான பண்பாட்டுப்பயிற்சியும் கொண்டவர்கள். அடையாளமற்ற கும்பல்துளிகள். ஆகவே வெறும் அடையாளத்தேவைக்காகப் பேசுபவர்கள். அவர்கள் ஆணவத்தை மட்டுமே முன்வைக்கமுடியும். நான் யார் தெரியுமா என்ற ஒற்றைவரியையே பல்வேறு வகைகளில் அவர்கள் எழுதிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் எவரும் எவருமே அல்ல என்பதுதான் உண்மை, அது அவர்களுக்கு தெரியும் என்பதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.
இன்றைக்கு இந்து மெய்யியலைக் கற்க இருவழிகள் உள்ளன. நீங்கள் யார், உங்கள் தேவை என்ன என்பது முதல் கேள்வி. நீங்கள் உங்களை வகுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் இயல்பு நிலைத்தன்மையை நாடுவது, அடிபணிந்து ஒழுக விரும்புவது என்றால் மரபான மெய்யறிதல்முறையே உங்களுக்கு உகந்தது. நீங்கள் தொன்மையான முறைமைகளை நாடலாம். அதற்குரிய நிறுவனங்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அங்கே எல்லாமே மாறாமல் அப்படியே கற்பிக்கப்படுகின்றன.
ஆனால் அங்கும் முறையான ஆசிரியர்களை தேடி அடையவேண்டும். அதற்கு உங்கள் நுண்ணுணர்வும் கூடவே நல்லூழும் உதவவேண்டும். அவ்வண்ணம் ஏற்றுக்கொண்டபின் அதன் நெறிகளுக்கு உட்பட்டு முற்றொழுகவேண்டும். சென்றடையலாகும்
நீங்கள் உங்களை மாற்றத்தை நாடுபவர், தேடல்கொண்டவர் என உணர்வீர்கள் என்றால் நீங்கள் மரபான அமைப்புகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்கமுடியாது. அவர்களின் ஆசாரவாதமும், பழைய அறவியலும் உங்களுக்கு ஏற்புடையனவாக இரா. நீங்கள் உங்களுக்குரிய நவீன ஆசிரியர்களையே ஏற்கவேண்டும். அவர்களும் நம் சூழலில் உள்ளனர்
நான் முதல்வகையினரை ஏற்கமுடியாதவன். அவர்களுடனான என் சந்திப்புகள் எல்லாமே கசப்பூட்டின. ஒரு காலத்தில் அவர்கள்மேல் கடும் நிராகரிப்புடன் இருந்தேன். இன்று அவர்கள் ஒரு தரப்பு அவ்வளவுதான் என நினைக்கிறேன்.
நவீன மனிதனுக்குரியது நவீன ஆன்மிகமே. அது நவீன அறவியலைக் கொண்டிருக்கும். நவீன வழிமுறைகளை கொண்டிருக்கும். நம்பிக்கைக்குப் பதிலாக அறிதலை முன்வைக்கும். ஆசாரங்களுக்கும் அனுஷ்டானங்களுக்கும் பதிலாக ஆழ்நிலைப் பயணங்களை முன்வைக்கும்
பழைமையான ஆன்மிக மரபுகள் தங்களை இறுக்கிக்கொண்டவை. மாறாமல் நிலைகொள்ள முயல்பவை. ஆகவே குறுகியவை, பிறவற்றை முற்றாக மறுப்பவை. அவை அப்படித்தான் இருக்கமுடியும், ஆகவேதான் அவை இத்தனை காலம் நீடித்தன.
ஆகவே மரபான ஆன்மிகமரபு ஒன்றில் நீங்கள் இணைந்தால் அந்த குறுகலை, பிறர்மறுப்பை தவிர்க்கமுடியாது. ஆனால் அந்த மரபுகளில் ஒரு நல்லாசிரியரை அடைந்து, அவரால் வழிகாட்டப்படும் ஒரு மாணவர் ஒருநிலையிலும் இன்னொரு மரபை மறுத்து தொடைதட்டி வாதிடமாட்டார். மட்டம்தட்ட முயலமாட்டார். ’நான் யார் தெரியுமா!’ நான் என ஒருபோதும் சொல்லமாட்டார். அது கல்விக்கு நேர் எதிரான ஆணவம் என்றே கொள்ளப்படும்.
நானறிந்த வரை மரபான குருமுறைகளில் முதலில் கட்டுப்படுத்தப்படுவதே இந்த வகையான ஆணவ வெளிப்பாடுகளைத்தான். சொல்லப்போனால் எதையும் விவாதிப்பதையே அங்கே அனுமதிப்பதில்லை. விவாதம் அறிவை மறைக்கும் களிம்பு என்பதே அக்கல்விமுறையின் புரிதல்.
விவாதம் தேவை என்றால் அவர்களுக்குள் ,இணையான இரு மாணவர்கள் ,இருவருமே கற்றுக்கொள்ளும்பொருட்டு, விவாதிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு நிறைய முறைமைகள் உண்டு. ஆசிரியரின் கண்காணிப்பும் இருக்கும்
ஒரு ஞான மரபு இன்னொரு மரபை எதிர்த்து விவாதிக்கும் தேவை ஏற்பட்டால் அந்த மரபின் தலைமை அறிஞர் சென்று, முறைப்படி நிகழும் ஒரு விவாத அரங்கில் நியாய சாஸ்திர முறைமைப்படி எதிர்த்தரப்பை மறுத்து தன் தரப்பை முன்வைப்பார்.
மூலநூல்களை பிழையறக் கற்பது, பிழைகளை விவாதிப்பது ஆகியவற்றுக்கு மரபான அமைப்புகளில் பெரிய இடம் உண்டு. ஏனென்றால் அவர்கள் மரபை மாற்றாமல் தொடர விரும்புபவர்கள். ஆனால் அதை முற்றிலும் தகுதிகொண்ட அறிஞர்கள், அதற்கான அவைகளில், தங்களுக்குள் செய்துகொள்ளும் அறிவுச்செயல்பாடாகவே நிகழ்த்துவார்கள். அவற்றை பயில்பவர்கள் பொதுவெளியில் விவாதிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
அத்தகைய விவாதங்கள் எல்லாமே சமயச்சழக்கு என்றும் அறிவுக்கும் ஞானத்துக்கும் எதிரான அழுக்கு என்றும் மட்டுமே அங்கே கருதப்படும்.ஆகவே இங்கே பொதுவெளியில் சழக்கிடுபவர்களை அந்தந்த மரபின் முகங்களாக கருதவேண்டியதில்லை. இவர்கள் பலவகை உளச்சிக்கல்கள் கொண்ட எளிய மனிதர்கள் மட்டுமே.
நவீன மெய்ஞான மரபுகள் என்பவை மரபை மறுப்பவை அல்ல. ஒரு ஞானியால், அல்லது ஞானியர் வரிசையால் தொல்மரபிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மெய்ஞானம் மரபின் ஆசாரங்கள் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு முன்வைக்கப்படும்போது ஒரு புதிய மெய்ஞானமரபு உருவாகிறது.
சென்ற இருநூறாண்டுகளுக்குள் உருவான அத்தகைய புதிய மெய்ஞான மரபுகளை நவீன மெய்ஞான மரபு என்கிறோம். வள்ளலார், நாராயணகுரு, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களிடமிருந்து தொடங்கிய அத்தகைய நவீன ஞானமரபுகள் பல இங்குள்ளன.
ஆனால் எல்லா காலகட்டத்திலும் இத்தகைய கிளைபிரிதல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இது இந்துமெய்ஞான மரபின் அடிப்படை இயல்பு. ராமானுஜர், மத்வர், சங்கரர் எல்லாருமே இப்படி பிரிந்தவர்களே. தங்கள் மெய்ஞானத்தை அதற்கு முன்பிருந்த ஆசாரங்கள், அமைப்புகளை நிராகரித்து முன்வைத்தவர்களே
இந்த கிளைபிரிதல்கள் பெரும்பாலும் அமைப்புகள் தேக்கமடைந்து, ஆசாரங்கள் வெற்றுச்சடங்குகளாகிப் பொருளிழக்கும்போது உருவாகின்றன. ஆகவேதான் இன்றைய நவீன ஆன்மிகமரபுகள் எனக்கு ஏற்புடையவையாக உள்ளன. அங்குதான் நவீன அறவியல் உள்ளது. இன்றைய உலகுக்குரிய மதிப்பீடுகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் என்றுமுள்ள மெய்ஞானம் முன்வைக்கப்படுகிறது
நீங்கள் நவீன உள்ளம் கொண்டவர் என உணர்ந்தால் நவீன ஆன்மிக மரபுகளை நாடுங்கள். அங்கு உங்கள் அறவுணர்வுக்கும் நவீனப்பார்வைக்கும் உகந்தவகையில் அதே ஆன்மிகம் கற்றுத்தரப்படும். அங்கே மூலநூல்களை எழுத்தெண்ணிப்படித்து பாடபேதம் சொல்லிப் பூசலிடுவது, ஆசார அனுஷ்டானச் சண்டைகள், ஆசாரம் பேசுவது என்ற போர்வையில் சாதிப்பூசல்கள் போன்றவை இருக்காது. சாராம்சம் சார்ந்த விவாதமும் அதற்குரிய பயிற்சிகளும் மட்டுமே இருக்கும்.
ஆனால் இங்கும் கூட பயில்முறையாளர்கள் பொதுவெளியில் பேசுவதை முழுமையாகவே கட்டுப்படுத்துவார்கள். அத்தகைய நவீன ஆன்மிக மாணவர்கள் பல்லாயிரம்பேர் தமிழகத்தில் உள்ளனர், எவர் குரலும் இப்படி இணையத்தில் ஒலிப்பதில்லை. ஏனென்றால் அந்த விவாதம் வெறும் ஆணவப்பூசலாக மாறி வெற்று வீராப்பை நிறைக்கும். எதையும் கற்கமுடியாதவர்களாக ஆக்கிவிடும்
சரி, எங்கே பொதுவிவாதம் அனுமதிக்கப்படலாம்? அனைவருக்கும் பொதுவான ஆலயவழிபாடு போன்றவற்றில் உள்ள மரபுகள் நெறிகளைப் பற்றி விவாதம் செய்யலாம். உதாரணமாக ஆலயங்களில் சித்திரை அல்ல தைதான் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடப்படவேண்டும் என ஓர் அரசாணை வருமென்றால் அது தொல்முறைமை சார்ந்ததா என்று பொதுவாக விவாதிக்கப்படவேண்டும்.சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிக்கப்படலாமா, அதற்கு ஆகம அனுமதி உண்டா என்பது பொதுவெளியில் விவாதிக்கப்படவேண்டும்.
ஏனென்றால் இவையெல்லாம் ஞானம் தொடர்பானவை அல்ல. நூலறிவு சார்ந்தவையும் அல்ல. இவை நடைமுறைப் பிரச்சினைகள்.பொதுமக்களின் புரிதலை ஒட்டி முடிவெடுக்கப்படவேண்டியவை. ஆகவே பொதுமக்கள் காண ஓரு விவாதம் நிகழ்ந்தாகவேண்டும். அவற்றை மெய்யாகவே நூலறிந்து, அவையில் ஏற்பு அடைந்தவர்கக்ளே சொல்லவேண்டும். அறியாதோர் ஊடுபுகுந்து சிலம்பக்கூடாது. அக்கருத்துக்களும்கூட தன்முனைப்பின் வெளிப்பாடாக அன்றி, முறைமைகள் காக்கப்படவேண்டும் என்ற மெய்யான அக்கறையின் குரலாகவே ஒலிக்கவேண்டும். மரியாதையின் எல்லைகள் கடக்கப்படலாகாது.
எப்போதும் சொல்லப்படக்கூடிய ஒன்று உண்டு. ஆன்மிகம் என்பது அடையாளங்களைச் சுமப்பதும் ஆசாரங்களைச் செய்வதும் அல்ல. அது ஒருவன் அகத்தே செய்துகொள்ளும் பயணம். அதற்கு ஒருங்கமைவுள்ள உள்ளமும் தொடர்ந்த ஆற்றலும் தேவை. நாம் பேசும் ஒவ்வொன்றும் அந்த அக ஆற்றலில் இருந்து பிடுங்கி வெளியே வீசப்படுபவையே. நன்றே ஆயினும், விவாதங்கள் இழப்பே. இத்தகைய சழக்குகளைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். இதில் இறங்கினால் முழு ஆற்றலும் இவ்வண்ணம் வீணானபின் காலிக்குடம் ஒன்றே எஞ்சியிருக்கும்.
ஜெ
வாசகனும் எழுத்தாளனும்
அன்புள்ள ஜெ
நேற்று குருஜி சௌந்தர் அவர்களும் செல்வா அண்ணாவும் வீட்டிற்கு வந்து சந்தித்தார்கள். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கடிதம்.
இரவு ஒன்பது மணிக்கு செல்பேசியை திறக்கையில் குருஜி சௌந்தர் அழைத்திருந்தார். மறுநாள் (17-02-2021) காலை ஒன்பதரை மணிக்கு தானும் செல்வா (செல்வேந்திரன்) அண்ணாவும் வருவதாக கூறியிருந்தார். நானும் அவரை ஒருமுறை வீட்டிற்கு வாருங்கள் என்றழைத்திருந்தேன். வருவதாக சொன்னவுடன் பரவசம் கொண்டுவிட்டேன்.
சீக்கிரமே உறங்கி வழக்கமான ஒன்பதுக்கு பதிலாக ஏழு மணிக்கே எழுந்து கிளம்பிவிட்டேன். காலை உணவருந்தி கொண்டிருக்கும் போதே ஒன்பது மணிக்கு எங்களூர் சிவன் கோயிலை வந்தடைந்து வீடு எங்கே குருஜி அழைத்தார். டவர், மாவு மில் என அடையாளம் கூறி வீட்டிற்கு வந்தனர். உள் நுழைகையில் அம்மா பொங்கல் ஊட்டி கொண்டிருந்தார்.
குருஜி படத்தை விட நேரில் பார்க்கையில் நல்ல வெண்ணிறம் கொண்டவராக இருந்தார். நீல நிற பனியன் அணிந்து சந்தன நிற கால் சட்டையுடனும் வந்திருந்தார். செல்வா அண்ணா வெண் சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்து வக்கீல் உரிய தோற்றத்தில் இருந்தார். படத்திலும் நேரிலும் ஒன்று போலவே இருந்தாலும் அவருடைய இமெயிலில் உள்ளவர் அவர் தான் என்ற போது இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை.
பேச்சு அவருடைய வாசிப்பது எப்படி நாவலின் முதல் அத்தியாயத்தில் இருந்து தொடங்கியது. வாசிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை தெரியாத மாணவன் என்பதெல்லாம் வியப்பாகவும் பொய்யாக இருக்குமோ என்றே தோன்றியது. அதற்கடுத்த நாளே என் தம்பி செய்த காரியத்தை பார்த்த பின் ஐயமெல்லாம் பறந்து விட்டது. வாழை பூவை அறுத்து வாடா என்றால் குலை விடாத பூவோடு வந்து நிற்கிறான் என்ன சொல்ல. இந்த முறை சீமான் கட்சி வைத்திருப்பதே தெரியாதே குல கொழுந்துகளை பற்றி கூறினார்.
மிகவும் கலகலப்பான மனிதர், சுவரசியமான உரையாடல்காரர். வந்த அரைமணி நேரத்தில் சக்திவேலை மைனர் சக்திவேலாக்கி விட்டார். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சிரிக்காமல் தாண்டுவதில்லை. பின் பாலை நிலப் பயணம் அவர் எழுதியவற்றில் என்னை கவர்ந்த நூலென்றும் அதில் பாலைவன தனிமையின் ஏக்கம் குறித்த பகுதி என்னை மிகவும் கவர்ந்தது என்றேன். அந்த பகுதி மற்றவற்றை போலல்லாது படைப்பூக்கமாக இருந்ததே என்னை கவர்ந்தது.
பின்னர் என்னை நேரில் பார்த்து எதோ கூற வேண்டும் என்றிர்களாமே என்றேன். அவரும் மனைவியும் இணைந்து நடத்தும் அர்த்த மண்டபம் என்னும் நிறுவனத்தையும் அதில் எனக்கு சில பணிகள் கொடுக்கலாம் என்ற எண்ணத்தையும் கூறினார். என் ஐயத்தை தெரிவித்த போது சுஜாதா நூல்களை வாசித்தல், அன்றாட செய்திகளை அறிந்து வைத்திருத்தல் போதும் என்றார். காளி, செல்வா அண்ணா என இருவருமே சுஜாதாவின் நடையை சற்று பழகி கொள்ள சொன்னார்கள். அது தேவையான அளவு கூர்மையும் அதே சமயம் பொது வாசகருக்கு புரியும் படியான எளிமையும் கொண்டிருப்பது என்பதனாலேயே தொழில்முறைக்கு உகந்தது என்றனர்.
தான் டான் பிரவுன் வகை நாவல்களை எழுத ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் கூறினார். உங்களுடைய டான் பிரவுன் கட்டுரை முன்னம் வாசித்திருந்ததால் எளிதாக இருந்தது புரிந்து கொள்வதற்கு. அவர் சொல்வது போல இன்று தமிழில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இன்றைய வணிக எழுத்தாளர்கள் வெளியே தலைக்காட்டவே அஞ்சுகின்றனர் என்பதை கேட்கையில் வருத்தமாக இருக்கிறது. இங்கு இலக்கியத்திற்கு வரும் ஒவ்வொருவரும் கல்கி, சாண்டில்யன்,பாலகுமாரன்,சுஜாதா என அவர்களின் புனைவு இன்பங்களின் வழியாகவே வருபவர்கள். நான் இவர்களில் கல்கியை மட்டும் தான் வாசித்துள்ளேன் என்றாலும் அந்த சிவகாமியின் சபதம் தான் முதல்முறையாக புனைவின்பத்தை எனக்கு கொடுத்தது.
இன்று என் தம்பி அத்தை மகள்கள் என வயதொத்தவர்கள் விரைவாக ஜாப்பனிய மங்கா, கொரிய நாடகங்களின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இதை சொல்லுகையில் செல்வா சொன்னார் நமக்கு மட்டுமல்ல ஜாப்பனுக்கும் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தகவல் எனக்கு வியப்பாகவே இருந்தது. .
செல்வா அண்ணா எதிரே நாற்காலியிலும் குருஜியும் நானும் சோபாவில் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்திருந்தோம். உரையாடல் முழுக்க செல்வா அண்ணாவால் தான் இழுத்த செல்லப்பட்டது. வாரத்திற்கோ இரு வாரங்களுக்கு ஒருமுறையோ செல்பேசியில் பேசிவிடுவதால் குருஜி என்னை கூர்ந்து நோக்கிய வண்ணம் இருந்தார்.
அம்மாவும் அப்பாவும் என்னை பற்றிய தாங்கள் பெருமிதங்களையும் தங்கள் மகனை பார்க்க வந்த மகிழ்ச்சியையும் நண்பர்கள் வந்தவுடனேயே கூறிவிடுவார்கள். இடையிடையே வாய்ப்பு உள்ள தருணத்திலும் கூறுவார்கள். அன்றைக்கு அப்பாவும் கண்கலங்கி விட்டது. வருபவர்களின் புகழ்ப்பாடல் பற்றாக்குறைக்கு.
புகழ் என்பதே பெருமைக்குரியதாக இருக்கிறது அவர்களுக்கு. அவர்களின் நின்று நோக்குகையில் அதுவும் இயல்பானதே. ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் இவற்றிற்காக நான் வாசிக்கவில்லை, எழுதவில்லை என்று எனக்கே கூறி கொள்வேன். இவற்றை செய்தலில் நான் மகிழ்கிறேன், அதன் பொருட்டே ஆற்றுகிறேன் என்று என்னிடமே கூறி கொள்வேன்.
ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு பின் இருவருமே மோர் அருந்திவிட்டு, என் வீட்டு தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு, மூவரும் புகைப்படம் ஒன்றும் எடுத்து கொண்டு விடை பெற்றுகொண்டார்கள். நிறைவான சந்திப்பு.
சில மணிநேரத்திற்கு வாட்சப் ஸ்டேஸில் என்னோடு எடுத்து கொண்ட புகைப்படம் நல்ல தூக்கலான புகழ் மொழியை போட்டு செல்வா ஒரு அதிர்ச்சி கொடுத்திருந்தார். இத்தனை மகிழ்ச்சிகளுக்கும் அச்சாரம் போட்டவர் என்பதால் ஒரு வாசகனாக, மாணவனாக உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன் ஜெ.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள சக்திவேல்
சிலநாட்களுக்கு முன் நெல்லை சென்றிருந்தேன். அங்கே என் தளத்தில் கடிதங்கள் எழுதும் இரம்யா வந்திருந்தார். அவரை நேரில் பார்த்த ஒரு நண்பர் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் என்னிடம் சொன்னார் “இந்த சக்திவேல், ரம்யா எல்லாரும் உங்களுடைய புனைபெயர்கள், நீங்களே எழுதிக்கொள்கிறீர்கள் என்று நானும் நம்பி சொல்லியிருக்கிறேன். அவர்களை நேரில் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது”
“ஏன்?” என்று நான் கேட்டேன்
“வாசகர்களுக்கு இத்தனை தெளிவான செறிவான நடை அமையாது என்பது என் எண்ணம். இங்கே எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே பத்தாண்டுகளாக முகநூலில் கொசகொசவென்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தைப்பற்றி நான்கு பத்திகள் தெளிவாக எதையாவது எழுத அவர்களால் முடியாது”
நான் புன்னகையுடன் சொன்னேன். “நல்ல வாசகன் எழுதாத எழுத்தாளன். அவன் நாளைய எழுத்தாளனாக ஆகலாம். வாசகனாகவே இருந்தும்விடலாம். ஆனால் வாசிக்கையில் அவன் எழுத்தாளனுடன் சேர்ந்தே தானும் மொழியில் பயணம் செய்கிறான்.
உங்கள் தமிழ்நடை இன்று எழுதும் பெரும்பாலானவர்களை விடவும் கூர்மையானது. அதை எல்லா பயன்பாட்டுக்கும் உரியவகையில் பயிலவேண்டியதுதான் நீங்கள் செய்யவேண்டியது
ஜெ
புதியகதைகளின் வருகை
அன்புள்ள ஜெ
சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் நண்பர்களால் எழுதப்பட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்த தொகுதிகளைப்பற்றிய கடிதங்களை வாசித்தேன். சுசித்ராவின் ஒளி, கிரிதரன் ராஜகோபாலனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை ஆகியவை தீவிரமான செறிவான கதைகளாலானவை. ராம்குமாரின் அகதி அசோகமித்திரனை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்ட எளிமையான நுட்பமான கதைகள். நம் தமிழில் அதிகமாக எழுதப்படாத நிர்வாக உலகம் பற்றிய கதைகள் என்றவகையில் அவை முக்கியமானவை
அந்நூல்களில் மொழியாக்க நூல்களை நான் முக்கியமாக கருதுகிறேன். மொழியாக்கங்கள் என்றாலே வாங்கி வாசிப்பதற்குத் தயங்கும் சூழல்தான் இங்கே உள்ளது. ஏனென்றால் ஆங்கிலச் சொற்றொடரமைப்பை அப்படியே பின்பற்றியிருப்பார்கள். அது தமிழில் சுழித்துச் சுழித்துச் செல்லும் மொழியை உருவாக்கி மண்டையை குடையவைத்துவிடும். விஜயராகவன்,ஸ்ரீனிவாசன், காளிப்பிரசாத், நரேன் நால்வருமே மிக நுட்பமாகவும் தெளிவாகவும் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். எந்த தடையுமில்லாமல் வாசிக்கத்தக்க கதைகளாக அவை உள்ளன
விலாஸ் சாரங் தமிழுக்கு புதுவரவு. அவர் இந்தியமரபை ஐரோப்பியப்பார்வையுடன் பார்ப்பவர் என்று எனக்கு தோன்றியது. ஒருவேளை சுந்தர ராமசாமி இந்திய மரபைப்பற்றி எழுதியிருந்தார் என்றால் இப்படி எழுதியிருப்பார்.
நரேன் மொழியாக்கத்தில் எல்லா கதைகளுமே இலக்கியத்தரமானவை. தமிழில் நாம் இன்று எழுதிக்கொண்டிருக்கும் கதைகளுக்கு அப்பாலுள்ள களங்களை காட்டுபவை அவை. நாம் திரும்பத்திரும்ப எழுதும் சிலகதைக்கருக்கள், சில கதையுத்திகளுக்கு அப்பால் செல்ல அவை வழிகாட்டுகின்றன. இன்றைய மேலைநாட்டு இலக்கியத்தின் மிகச்சிறந்த ’சாம்பிள்கள்’ இக்கதையில் உள்ளன. இன்றைய அமெரிக்கா கலாச்சாரங்களின் ஆய்வுக்கூடமாக உள்ளது. ஆசிய ஆப்ரிக்க தென்னமேரிக்க கலாச்சாரங்கள் வந்து அங்கே ஒன்றையொன்று சந்திக்கின்றன. அந்த உரையாடலை முன்வைக்கும் முக்கியமான கதைகள்
விஜயராகவன் மொழியாக்கத்தில் ரேமண்ட் கார்வர் போன்று சென்ற தலைமுறையைச் சேர்ந்த, இன்றைக்கும் செல்வாக்கு செலுத்தும் படைப்பாளிகளின் கதைகள் அழகாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன
இந்த தொகுதிகள் மேலும் கவனிக்கப்படவேண்டும் என விரும்புகிறேன்
எம்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ
சென்ற ஆண்டு வெளியான பத்து தொகுதிகளில் மொழியாக்கக் கதைகள் அடங்கிய இரண்டு தொகுதிகளும் மிகவும் முக்கியமானவை. திரும்பத்திரும்ப செக்காவை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் பலர். இந்தக்கதைகள் இரண்டு வகையான திசைகளை கொண்டிருக்கின்றன. நரேன் மொழியாக்கம் செய்த ’இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’ இன்றைய கதையின் போக்கு என்ன, என்னென்ன நிகழ்கிறது, என்னென்ன நிகழப்போகிறது என்று சொல்லும் கதைகளாக உள்ளது. விஜயராகவன் மொழியாக்கம் செய்த தேரையின் வாய் தொகுதியிலுள்ள கதைகள் நேற்றைய எழுத்தில் நாம் சாதாரணமாக கருத்தில்கொள்ளாத கதைகளையும் ஆசிரியர்களையும் காட்டுகின்றன. ரேமண்ட் கார்வர் தமிழிலே அதிகமாகப் பேசப்பட்டவர் அல்ல. அவரைப்போன்றவர்களின் கதைகளை இன்று வாசிக்கையில் இன்று அவரிடமிருந்தே ஒரு தொடர்ச்சி உருவாகியிருப்பதனைக் காணமுடிகிறது
செல்வக்குமார்
===================================
நூலாசிரியர்கள்
பாலசுப்ரமணியம் முத்துசாமிஇன்றைய காந்திகள்பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
விஜயராகவன்தேரையின் வாய்விஜயராகவன்தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
ஸ்ரீனிவாசன்கூண்டுக்குள் பெண்கள் ஸ்ரீனிவாசன்
நரேந்திரன்இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்நரேந்திரன்நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை
சா.ராம்குமார்அகதி ராம்குமார்’அகதி’ ராம்குமார் முன்னுரை
சுசித்ராஒளிசுசித்ராபொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை
காளிப்ரசாத் தம்மம் தந்தவன்காளிப்ரசாத்
கிரிதரன் ராஜகோபாலன்காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசைகாலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
ராஜகோபாலன்ஆட்டத்தின் ஐந்து விதிகள் ராஜகோபாலன்ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை
மோகமுள்- கடிதம்
அன்புள்ள ஜெ
தாங்கள் நலமா? இன்று மோக முள் படித்து முடித்தேன். உடனே அதனை பற்றி எழுதிவிட நினைத்ததன் விளைவு இந்த கடிதம். பிரமிள் ஒரு கட்டுரையில் காமம் தான் அடிப்படையான சக்தி, அதுதான் ஒருவனைக் கலைஞனாக்குகிறது (கவிஞனாக்குகிறது) என்கிறார். எனக்கு அப்போது இருந்த எண்ணம் காமம் வேறு, கலைகளைப் படைக்கும் சக்தி என்பது வேறு. முன்னது பாவமானது, பின்னது புனிதமானது. ஆனால் இந்த கேள்வி பல நாட்கள் என்னுள் இருந்து கொண்டிருந்தது. தனிப்பட்ட முறையில் சுதர்மா பற்றித் தேடிக்கொண்டிருக்கிற எனக்கு இது முக்கியமான கேள்வியாக இருந்தது.
ஏன் ராஜத்திற்க்கோ அல்லது அவனது கல்லூரியில் படித்த அவனது வயதை ஒற்றிய பையன்களுக்கோ பாபுவைப் போலத் தடுமாற்றம் இல்லை. ராஜம் மிகத் தெளிவான முன் முடிவுகளோடு இருக்கிறான். பெண்களை மனதில் வைத்துப் பூசிக்கிறான். பாலு தன் பூத்துக் குலுங்கும் காமத்தை அடக்க முடியாமல் தவிக்கிற ஆளாக இருக்கிறான். ஒரு பக்கம் ராஜத்தைப் போலப் பெண்களைப் பூஜிக்க முயலுகிறான், மறுபக்கம் தங்கமாளுடன் உறவும் கொள்கிறான். இது எல்லா மனிதர்களுக்குமான தவிப்பாய் இருந்தாலும், பாலுவுக்கு மித மிஞ்சி இருப்பது அவன் கலைஞனாக இருப்பதால் தான்.
காதல் என்ற புனித/சமூகம் கண்டு பிடித்த அழகான விசயமாகவோ அல்லது கலையாகவோ காமத்தை மடைமாற்றலாம் (உலகியல் வாழ்க்கையைக் கணக்கில் கொண்டு). இது இரண்டும் இல்லை என்றால் அது உடல் சார்ந்த ஒன்றாக மாறி அவன் ஆளுமையை அழித்துவிடும். வெற்றிடத்தைக் காற்று நிரம்புவதைப் போலக் காமம் நிரப்பிவிடும், கலைஞர்களுக்கு மிகப் பொருந்தும் வரி அது. காமத்தைக் கண்டு அஞ்சுகிற, தப்பானதாக நினைக்கிற சாதாரண மனிதனின் மனநிலையில் பாலு தங்கமாவைப் பார்க்கிறான். தங்கமாளுக்கு (காமத்திற்கு) அஞ்சி, தான் செய்தது யமுனாவுக்கான (காதலுக்கு) துரோகமென அவளிடமே போய் தவற்றை ஒத்துக்கொள்கிறான். அவளிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்துவிட்டுக் காத்துக்கிடக்கிறான். மறுபுறம் சங்கீத கலையைக் கற்க புது குருவைக் கண்டடைகிறான். கலையின் மூலம் அவளை மறக்க/கடக்க முயலுகிறான். (காமத்தை மடை மாற்றம் செய்கிறான்). இருந்தாலும் காதலும், கலையுமாக அவன் ஊசலாடுகிறான்.
அவன் அப்பா மற்றும் ராமண்ணா அவனிடம் காமத்தை அடக்கி கலையில் செலுத்துவதைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்பா பூடகமாகவும், ராமண்ணா நேராகவும். கலையை அடைவதென்பதில் இருக்கிற சிக்கல் பற்றிய நாவல் என்பதே என் எண்ணம்.
இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தவுடன் மனதுக்கு விலக்கமாக இருந்தது, பெண்கள் எல்லோரையும் மனதில் வைத்துப் பூசிக்கிறவன் என்ற சித்திரம். ஒருவன் வெளி உலகுக்கு அப்படி வேண்டுமானால் நடிக்கலாம் ஆனால் உள்ளூர அப்படி இருப்பார்களா என்பது சந்தேகமே? ஆண் பெண்ணை தனக்குச் சமமாக நினைப்பதே மிகப் பெரிய ஒன்று. ஒருவேளை அவன் காதலில் இருக்கும் சமயத்தில் மட்டும் அந்த பெண் வேண்டுமானால் அதி மானுடனாகத் தெரியலாம். பாலுவின், ராஜத்தின் அக மனம் இப்படி நினைக்கும் என எண்ணுவது கடினமான இருக்கிறது. ஒருவேளை நான் இந்த காலத்திலிருந்து அந்த கால மனிதனை எடை போடுவது என்பது தவறாகக் கூட இருக்கலாம்.
ராமண்ணா போல இருந்துவிட வேண்டுமென ஆசைப்படுகிறேன். வாழை மரத்தில் விழுந்த மழைத்துளியைப் பார்த்து ரசிக்கிற ஆளாக இருப்பது எப்படிப் பட்ட வரம். நத்தை ஊர்வதைப் பார்த்து அவர் அடையும் மகிழ்ச்சி. அந்த வாழ்க்கை கிடைத்துவிடாத என்ற ஏக்கம் இருக்கவே செய்கிறது. குருவுக்கும் சிஷ்யனுக்குமான உறவு எவ்வளவு முக்கியம்? உண்மையான குரு நம்மை ஞானத்தை நோக்கி நகர்த்திக்கொண்டே செல்கிறார், நம்மை அறியாமலேயே. ராமண்ணா உயிருடன் இருக்கும்வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அவர் வழியே ஞானத்தின் சில கூறுகளை அறிந்துகொள்ள முடிந்தது.
அவர் பாலுவைக் கச்சேரி பண்ண வேண்டாம், கலை என்பது காசு பண்ணுவதற்காக இல்லை, தன் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு எனச் சொல்லி அவனைக் கச்சேரி பண்ணாதே என அறிவுறுத்துகிறார். ராமுவையும், மகாராஷ்டிரா சங்கீத வித்துவானையும் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தால் புரிகிறது அது. முன்னவன் தன் முழுமை அடையாத கலைக்காக ஏங்குகிறவன், ஆனால் அதை வைத்து பணம் பண்ணுகிறான். பின்னவர் கலையை முழுமை அடைந்தவர், எனினும் தனக்கு வந்த பணத்தைக் கோவில் உண்டியலில் போட்டுவிடுபவர், இரயில் சந்தடியில் உறங்குபவர், தேசாந்திரியாக அலைபவர். உலக லாபத்திற்காகக் கலையைக் கைக்கொண்டவனா?ஞானத்தை அடைவதற்குக் கலையைக் கைக்கொண்டவனா? யார் கலைஞன்? யாருக்குக் கலை வாய்க்கும்? அதனால் என்ன பயன்? இந்த வினாவை எழுப்பிவிட்டுக் கதை எங்கோ தள்ளிப் போய்விடுகிறது. காமம்-காதல்-கலை எனக் காமத்தின் பல பரிமாணங்களைத் தொட்டு மட்டுமே செல்லுகிறது இந்தக் கதை.
நிச்சயம் ஒன்று மற்றொன்றை வெட்டி செல்லாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது, அதனால் ஆழமான தரிசனப் பார்வை கதைக்கு வாய்க்கவில்லை. இதைச் சாதாரண ஆண்-பெண் காமத்தைப் பேசும் கதை எனக் கடந்து போக வாய்ப்பில்லை. காரணம்: ராஜம் (சாதாரண மனிதன்) * பாலு (கலைஞன்) – ராமண்ணா (குரு) * பாலு (குழப்பமான சிஷ்யன்), மகாராஷ்டிரா சங்கீத வித்துவான் (கலைஞன்- ஞானி) * ராமு (கலைஞன் போல), பாலு (கலைஞன்) * தங்கம்மா (காமம்), பாலு (கலைஞன்) * யமுனா (காதல்).
கலையை அடைய ஒருவன் எவ்வளவு தூரம் தன்னை அதற்குப் பழக்கப் படுத்த வேண்டும். ராகத்தைப் பாடிப் பாடி அதன் அழகைக் கண்டுபிடிக்கிறான் பாலு. ராமண்ணா இறந்த பிறகு, அவன் தனிமையில் அமர்ந்து சாதகம் பண்ணும் போது இவ்வாறு உணர்ந்து கொள்கிறான், “கச்சேரில ஒவ்வொரு ராகத்தையும் சாதகம் பண்ண எங்க நேரம், முணு மணி நேரத்துக்குள்ள எல்லாம் அதைப் பண்ண முடியாது. கச்சேரி பின்னால ஓடின அப்புறம் எங்க ரசிக்க காசுக்காக அத கூறு போட்டு விக்கலாம்”. ஓ! இதற்காகவா நம்மைக் கச்சேரி பண்ண வேண்டுமென ராமண்ணா சொன்னார் என உணர்ந்து கொள்வான்.அதன் பின்னால் கதை காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதைப் போல மாறிவிடுவது, இதுவரை அளித்து வந்த அனைத்து சாத்தியக்கூறுகளையும் உதறிவிட்டு காதலை மட்டும் பேசு பொருளாக எடுத்துக் கொண்டதைப் போல (காமம்-காதல்) தோன்றுகிறது. அதுவும் எங்குமே எதீரிடில்லாது இருப்பது (முன்பு சொன்னதைப் போல) ஆழமில்லாததைப் போன்று இருக்கும் தோற்றதை அதற்குக் கொடுக்கிறது.
நன்றி,
மகேந்திரன்
அன்புள்ள மகேந்திரன்
மோகமுள்ளை நான் வாசிக்கும்போது ஏற்கனவே நாவல்களில் செவ்வியல்படைப்புக்களை படித்திருந்தேன். எனக்கு அன்று அது ஆழமில்லாமல் நீட்டி நீட்டி வளவளக்கும் நூலாக, காமத்தை சிட்டுக்குருவிமூக்கால் தொட்டுத்தொட்டு பறக்கும் ஒன்றாகவே தோன்றியது
இப்போது நூற்றாண்டுவிழாவை ஒட்டி ஜானகிராமனின் நாவல்களை மேலோட்டமாக மீண்டும் படித்தேன். மேலும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவரைப்பற்றி சுந்தர ராமசாமியின் கருத்தை முழுமையாக வந்தடைந்திருக்கிறேன். எளிமையான கற்பனாவாதக் கனவுகளுக்கு அப்பால் போகாத கலைஞன். முதிராப்பருவத்துக்கான எழுத்து
சிறுகதைகளில் மட்டுமே இன்று ஜானகிராமனை இலக்கியரீதியாக பொருட்படுத்த முடியும்.
ஜெ
வெண்முரசு – புரிதலின் எல்லை
அன்புள்ள ஜெ,
வெண்முரசை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் இத்தனை வேகத்துடன் நான் இதுவரை எதையுமே வாசித்ததில்லை. ஒவ்வொருநாளும் வெண்முரசை மட்டுமே நினைத்துக்கொண்டு கண்விழிக்கிறேன். பகலிலும் அதே நினைப்புதான். நாம் வாழக்கூடிய அன்றாட வாழ்க்கையில் இருந்து வெகுவாக நம்மை மேலேகொண்டுசென்றுவிடுகிறது வெண்முரசு. ஆனால் நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது .நிறைய விஷயங்களை விட்டுவிட்டு வாசிக்கிறேனா என்ற எண்ணம் உண்டு
ஏனென்றால் நான் முன்பு உங்கள் தளத்திலே கதைகள் வரும்போது அந்தக்கதைகளைப்பற்றிய வாசகர்கள் எழுதிய கடிதங்களை வாசிக்கும்போதுதான் அடடா இவ்வளவு விஷயங்களை விட்டுவிட்டோமே என்ற எண்ணம் வரும். இப்போது இதற்கு நீங்கள் வாசகர்கள் எழுதும் கடிதங்களையே போடுவதில்லை. இது ஒரு குறையாகவே எனக்குத்தெரிகிறது.ஓர் அத்தியாயத்தை வாசித்துவிட்டு பிறகு புதிய அத்தியாயத்தை வாசிக்கும்போதுதான் கதையின் சரடு அங்கேயே இருந்துகொண்டிருப்பது தெரியவந்தது.
நீங்கள் இதைப்பற்றிய விவாதங்களையும் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.
காஞ்சனா மாதவன்
அன்புள்ள காஞ்சனா,
வாசகர்கடிதங்கள் வருகின்றன. அவற்றுக்கு சுருக்கமாகப் பதிலும் போட்டுக்கொண்டிருக்கிறேன். என்ன சிக்கலென்றால் வாசகர்கடிதங்கள் வாசிப்பை ஒரு வகையில் வழிநடத்திவிடுகின்றன. இப்படியெல்லாம் வாசிக்கலாமென்பது போய் இதுதான் அர்த்தம் என்று சொல்வதுபோல ஆகிவிடுகின்றன. அதைவிட நுட்பமில்லாத வாசகர்கடிதங்கள் மேலான வாசிப்பைத் தடைசெய்யவும்கூடும். ‘முதற்கனல்’ முடிந்தபிறகு குறிப்பிடத்தக்க கடிதங்களைப் பிரசுரிக்கலாமென நினைக்கிறேன்.
மீண்டும் மீண்டும் நான் கூர்ந்தவாசிப்பைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதாவது நுட்பமாக வரிகளை வாசிப்பது ஒருபக்கம். வாசித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது இன்னொருபக்கம். இரண்டையும் செய்துகொண்டிருக்கும் வாசகர் கொஞ்சம் கொஞ்சமாக இதற்குள் சென்றுவிடமுடியும். கண்டிப்பாக எந்த ஒரு வாசகருக்கும் இதன் கணிசமான ஒரு பகுதி எட்டாமலும் இருக்கும். அது நவீனநாவல்களின் ஒரு இயல்பு, அது முழுமையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை.
நுண்ணிய வாசிப்பு பற்றிச் சொன்னேன். அது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள எல்லா வரிகளையும் வாசிப்பது மட்டும் அல்ல, வாழ்க்கையைச் சார்ந்து வினவிக்கொள்வதும்கூடத்தான். உதாரணமாக பீஷ்மர் தன்னை நிராகரித்ததனால் அம்பை வெறிகொள்கிறாள் என்பது பொதுவான ஒரு வாசிப்பு. அது மகாபாரதத்திலும் உள்ளதே. ஆனால் இந்நாவலில் நுட்பமான ஒரு புள்ளி உள்ளது. அம்பை பீஷ்மரை சாபமிடாமல் வருத்ததுடன் திரும்புகிறாள். ஆனால் அதன் பின் ஒன்று நிகழ்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகழும் நுட்பமான ஓரு விளையாட்டு. அந்தப்புள்ளியில்தான் அம்பை உக்கிரமாக தாக்கப்படுகிறாள் அதுவே அவளை பேயாக்கும் வெறியாகிறது.
அதைப்புரிந்துகொள்ள ஆணும் பெண்ணும் தங்களை நோக்கித்தான் ஆராயவேண்டும், இந்நாவலைநோக்கி ஆராய்ந்தால் அது பிடிகிடைக்காது. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உள்ள ஒரு தருணம் அது. எங்கே நாம் புண்படுகிறோம் புண்படுத்துகிறோம் என அறிவது மானுட அகங்காரத்தையே அறிவதுதான். அதை எவ்வளவு சொன்னாலும் புரியவைக்கமுடியாது. அதை உணர்த்தவே முடியும்.
இன்னும் சில விஷயங்கள் தொன்மங்களாக உள்ளன. பாற்கடல் கடையப்படும் தொன்மக்கதை, அதில் விஷம் முந்திவந்தது, இங்கே அம்பையின் கதையுடன் இணைகிறது. விஷத்தை அமுதத்தின் சோதரி என்று சொல்லும் வரி அதை பலகோணங்களில் விளக்குகிறது. மண்ணின் காமமும் வளமும் பாதாளநாகங்களே என விளக்கும்பகுதியை பலவாறாக கற்பனைசெய்தே விரித்துக்கொள்ளமுடியும்
கடைசியாகச் சில வரிகள் அதற்கான பின்புலம் உடையவர்களுக்கு மட்டும் உரியவை ‘தானறிந்த அனைத்தையும் தன் கனவுக்குள் செலுத்தி கனவுகளை மந்திரத்துள் அடக்கி மந்திரத்தை மௌனத்தில் புதைத்து அந்த மௌனத்தை பெருவெளியில் வீசி ரம்பன் அமர்ந்திருந்தான்’ என்ற வரி தியான அனுபவம் கொண்டவர்களுக்கு புரியலாம்.
எல்லாம் வெட்டவெளிச்சமாவது ஒரு நல்ல ஆக்கமல்ல. செல்லச்செல்ல விரிந்துசெல்லும் வழிகள் கொண்டதே நல்ல ஆக்கம்.
ஜெ.
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jan 24, 2014
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


