Jeyamohan's Blog, page 1042

February 25, 2021

கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 2

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் முதல் நாவலான “முதற்கனல்” – இன்

தீச்சாரல்

தழல்நீலம்

வேங்கையின் தனிமை

ஆடியின் ஆழம்

வாழிருள்

எனும் இறுதி ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாடல் நிகழவுள்ளது. வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு வரவேற்கிறோம்.

நாள் : 28-02-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9:30

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 23:49

புதுவை வெண்முரசு கூடுகை:-40

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 40 வது  கூடுகை 27.02.2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

கூடுகையின் பேசு பகுதி 

வெண்முரசு நூல் வரிசை 4 “நீலம்” , நிறைவு பகுதியான

பகுதி   பதினொன்று .1. குவிதல்   , 2. குலைதல்  , 3. குமிழ்தல் , 4.  அழிதல் **  அழிதல்  [** தொடர்ச்சி **]

பகுதி பன்னிரண்டு :    1. முடி , 2 . கொடி  , ஆகிய பதிவுகள்  குறித்து நண்பர் 

கடலூர் சீனு  உரையாடுவார்  .

இடம் :

கிருபாநிதி   அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம் ”  முதல்   மாடி

# 27,  வெள்ளாழர்   வீதி  , 

புதுவை  -605 001

 

தொடர்பிற்கு :-

9943951908 ; 9843010306

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 23:45

கி. ரா. விழா உரை

கோவையில் 21-2-2021அன்று டமருகம் அமைப்பு நடத்திய கி. ராஜநாராயணன் சிறுகதை தொகுதி வெளியீடு விழாவில் ஆற்றிய உரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:36

கருத்துக்களை புரிந்துகொள்ள

சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு

இனிய ஜெ சார்,

இலக்கிய வாசிப்பு எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு நீங்கள் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக ” சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு” என்ற கட்டுரையை நான் பலமுறை வாசித்து, என்னுடைய இலக்கிய வாசிப்பில் முடிந்தவரை பின்பற்றி வருகிறேன்.

ஆனால் இலக்கியமற்ற நான்-ஃபிக்ஷன் எழுத்துக்களை வாசிப்பதற்கு சிறப்பான வழிமுறை என்றிருக்கிறதா?

மூன்று குறிப்புகளை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது:

1. வாசித்ததை அதே துறையின் பிற புத்தகங்களுடன் சேர்த்து சிந்தித்துப் பார்த்து வளர்த்துக் கொள்வது.

வாசித்ததை நம் அனுபங்களுடன் பொருத்திப் பார்த்து தெளிவுப் படுத்திக் கொள்வது.புத்தகத்தைப் பற்றி ஒரு கட்டுரையாக எழுதி கருத்துக்களை செரித்துக் கொள்வது.இவற்றுடன் வேறு வழிமுறைகள் உள்ளனவா? இயன்றால் தெளிவுபடுத்த முடியுமா?அன்புடன்

கிருஷ்ணன் ரவிக்குமார்

 

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்,

கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள ஒரே வழி என்பது அவற்றை நம் சொற்களாக ஆக்கிக்கொள்வது. நம்முள் நம் கருத்துக்கள் நமது சொற்களாக உள்ளன. அவை நம்முள் ஓயாமல் விவாதங்களாக, நினைவுத்தொடராக ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தப்பெருக்கில் கலந்துவிடும் கருத்துக்களையே நாம் அடைந்திருக்கிறோம். கலக்கவில்லை என்றால் அவை நம்மை அடையவில்லை.

அவ்வாறு கலக்கவைப்பதற்குரிய சிறந்தவழிதான் மேலே சொன்னது. ஆனால் முதன்மையான வழி விவாதம். சென்னை ஈரோடு, காரைக்குடி, தஞ்சை திருவாரூர் கோவை பாண்டிச்சேரி என பல ஊர்களில் நம் நண்பர்கள் வாசித்த நூல்களைப்பற்றி சந்தித்து விவாதிக்கிறார்கள். இணையவிவாதக்குழுமங்களும் உள்ளன. விவாதங்கள் வழியாக நாம் அறிந்தவற்றை தொகுத்துச்சொல்ல ஆரம்பிக்கிறோம். நாம் வாசித்த கருத்துக்களை நம் சொந்தச் சொற்களாக, நம் கருத்துப்பரப்பின் பகுதிகளாக ஆக்கிக்கொள்கிறோம்

ஜெ

விமர்சனம் பழகுவது… எப்படி வாசிப்பது? புனைவு, புனைவல்லா எழுத்து இலக்கிய வாசகனின் பயிற்சி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:34

முகங்கள்

 

2018ல் கோவை நண்பர் நடராஜன் கோவையிலிருக்கும் புகழ்பெற்ற ஒரு புகைப்படநிறுவனத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். ஸ்டுடியோ ஃபோட்டோ என்பது இன்றும் தேவைப்படுகிறது. பெரும்பாலும் போஸ்டர்களில் அச்சிட. நூல்களிலும் அவ்வகை படங்கள் இடம்பெறுவதுண்டு. குறிப்பாக தொழிலதிபர்களின் ஆண்டறிக்கைகளில்

நான் தொழிலதிபராக என்னைக் கற்பனைசெய்துகொண்டு போஸ் கொடுத்தேன். சில புகைப்படங்கள் என் கைக்கு வந்தன.பல நடராஜனிடமே இருந்தன, தேவைக்கு எடுக்கலாமென்று

இப்போது புகைப்படங்களை அனுப்பித்தந்திருக்கிறார். போஸ் கொடுத்த போட்டோக்கள் என்றாலும் சிரிப்பு இருக்கிறது. அன்று என் தலையில் நிறைய முடியும் இருந்திருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:34

விவாதங்கள் நடுவே-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

2020 ஆண்டு உங்களுக்கு பலவகையான சின்னச்சின்ன தொந்தரவுகளால் ஆனதாக இருந்தது என்பதை காண்கிறேன். எல்லா முனைகளிலிருந்தும் தாக்கினார்கள். இந்துத்துவர் தாக்குதலும் ஏளனமும் இந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. அதோடு அவர்கள் எதையும் காத்திரமாக விமர்சிக்கவில்லை. அந்த அளவுக்கு வாசிப்பெல்லாம் அவர்களுக்கு இல்லை. சொல்லும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஏதாவது நையாண்டி செய்வது மட்டுமே அவர்களால் செய்யமுடிந்தது. அதிலும் தமிழகத்தில் இவர்களுக்கு சோ- எஸ்.வி.சேகர் பாணி எரிச்சலூட்டும் ஒரு நையாண்டி உண்டு. தாங்கள் ஏதோ அறிவின் உச்சியிலிருப்பதுபோல பாவனைசெய்துகொண்டு ஏகத்தாளமாக எழுதுவது. அல்லது சின்னச்சின்னதாக ஏதாவது தப்பு கண்டுபிடித்து அதைப்பற்றி பெரிய பெர்பெக்‌ஷனிஸ்டுகள் போல எழுதுவது. பீத்துணிபோன்ற உரைநடையில் எழுதும் இவர்களெல்லாம் பிழைகண்டுபிடிப்பதெல்லாம் ஒரு வேடிக்கைதான். இத்தகைய எரிச்சலூட்டும் சூழலிலும் நீங்கள் பொருட்படுத்தாமல் உங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டிருந்தீர்கள்.

இடதுசாரி விமர்சனம் வழக்கம்போல வசைதான். அவர்கள் மார்க்சியத்தை கரைத்துக்குடித்து களத்தில் நின்று துப்பாக்கிக்குண்டுகளை நெஞ்சில் ஏற்றிக்கொள்பவர்கள் என்று ஒருபாவனை. ஆனால் எல்லாரும் அசட்டு முகநூல் வீரர்கள். இந்த ஆண்டில் இந்த கும்பலை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் நீங்கள் எழுதவேண்டும் என விரும்புகிறேன்

ஆர்.சிவக்குமார்

 

வணக்கம் ஜெ

நீங்கள் பலநேரங்களில் இந்த அசடர்களைப் பற்றி குறிப்பிட்டதுதான். இருந்தும் உங்களுக்கு வரும் எதிர்மறையான மின்னஞ்சல் குவியல்களால் எவ்விதத்திலும் மனச்சோர்வு அடையாமல் எப்போதும் படைப்பின் தீவிரத்திலேயே உளநிலையை வைத்திருப்பது மாஸ்டர்களுக்கே உரிய அசாத்திய தன்மைதான். இல்லையெனில் ஒரு சிறிய எதிர்மறை விமர்சனமோ, இகழ்ச்சியோ சோர்வைக்கொடுத்துவிடும். உண்மையில் நம் நடுத்தரவர்க்க மனிதர்களிடம் இருக்கும் போலித்தனம்போல உலகில் வேறு எங்கும் இருக்காது போல. இவர்களின் அறிவுரைகூட பரவாயில்லை; ஆனால் ‘ஒப்பிடுதல்’ மிகவும் அபத்தமானது. உண்மையில் இவர்கள் தன்னை மிஞ்சிய எதையும்/எவரையும் ஏற்க மறுக்கிறார்கள். அதற்கு முதன்மைக் காரணம் அவர்கள் கொண்டுள்ள தாழ்வுணர்ச்சியே; ஆனால் அதை வெளியே தெரியவிடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இன்னொன்று, இவர்கள் கல்வி உட்பட எதையுமே அமைப்பு சார்ந்த, அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஒன்றையே ஏற்பார்கள், அங்கீகரிப்பார்கள், கொண்டாடுவார்கள். அசாத்திய மனிதர்களை இவர்கள் ஏற்பார்கள்; ஆனால் அந்த அசாத்தியத்தன்மை ‘அமைப்பின் கட்டுமானத்துக்குள்’ செயல்படுவதாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவோ, அறுவை சிகிச்சை நிபுணராகவோ அல்லது பாதுகாப்புத் துறை செயலராகவோ இருந்திருந்தால் இவர்கள் உங்களிடம் இப்படியா நடந்துகொள்வார்கள் ? நல்ல பிள்ளையாகப் படித்து, பள்ளியில் நூற்றுக்கு நூறு வாங்கி, பல்கலையில் ஜனாதிபதி கையால் பட்டம் பெற்று, ஒரு துறையில் கோர்ட்-சூட் அணிந்து பேட்டி கொடுக்கும், ‘அமைப்பின் செல்லப்பிள்ளையாக’ வாழ்ந்திருந்தால் உங்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதையே வேறு. மாவுக்கடை வாசலில் போற வர்ற குடிகாரன்கிட்டல்லாம் அடிவாங்கும் நிலை இருந்திருக்காது; அதைக்கண்டு ஒரு காலிக்கூட்டம் கும்மியடிக்கும் நிலையும் இருந்திருக்காது. (அந்த சம்பவத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும், உணர்வுரீதியான என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை) ஆனால் நீங்கள் அப்படியில்லையே. இங்கு சராசரி, சாமானியம், நார்மல் என்றெல்லாம் சுட்டப்படும் விஷயங்களுக்கு அப்பாற்பட்ட அசாத்தியத்தையல்லவா ஒரு இலக்கியவாதி கொண்டிருக்கிறான். தறிகெட்ட தேடலாலும், கட்டுமீறிய தன்மையாலும், முட்டிமோதி உருவாக்கிக் கொண்ட அசாத்திய போக்கல்லவா அது ? இது எப்படி இந்த அன்றாடவாதிகளுக்கு ஏற்புடையதாகும்? அவர்கள் நாக்கு அதைத் துளைத்துக்கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் கணக்கைப் பற்றிச் சொன்னது சுவாரஸ்யமான விஷயம். கணிதத்திறனும், கற்பனைத்திறனும் பல நேரங்களில் நேரெதிரானவை. கணக்கு நன்றாகக் போடுபவர் பலருக்கு கற்பனைத் திறனோ, ரசனையோ இராது. அதை என் குடும்பத்திலேயே கண்டிருக்கிறேன். அவர்கள் ஒருவித வரட்டுத் தன்மையுடையவர்களாகவே இருக்கிறார்கள். அசாத்திய கடவுள் நம்பிக்கை உடையவர்கள்; ஆனால் ஆன்மிகத் தேடல் துளியும் இல்லாதவர்கள். இங்கே கணக்கு என்பது அளவுகோலாகச் செயல்படுகிறது. ஒருவனின் கணக்கு போடும் திறமையை வைத்தே அவன் அறிவாளியா அல்லது முட்டாளா என்பது முடிவுசெய்யப்படுகிறது. சாமானியர்கள் வாழ்வில் அது பெரிய அறிவாகக் கருதப்படுகிறது. ஏன் கணக்குத் திறமை இவ்வளவு பெரிய அங்கீகாரம் பெற்றது ? அதற்கான காரணமாக நான் கருதுவது அதிலுள்ள ஆர்வமூட்டும் தன்மை; இன்னொன்று அதில் தகவல்கள் இல்லை. பிற பாடங்களில் ‘கோட்பாடுகள்’ ஒருபுறம் இருக்க, தகவல்கள் கணிசமாக இருக்கும். கணிதத்தில் அந்த சிக்கல் இல்லை. அதில் தகவல் இல்லை, கோட்பாடு என்று சொல்லப்படுவதும் இல்லை. (நான் இங்கு குறிப்பிடுவது அன்றாட பள்ளிக் கணிதத்தை) அடிப்படையான சில கணித விதிகளை தெரிந்து வைத்துக்கொண்டால் அப்படியே தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கலாம். போரடிக்காத விளையாட்டு அது. இந்த ஆர்வமூட்டும் தன்மையே அதன் மீதான மதிப்பிற்கு காரணம்.

இங்கு நீங்கள் குறிப்பிடும் ‘ஆணவம்’ என்பதைப்பற்றி இகழ்ந்தும், மிரட்டியும் வருபவர்கள் தன்னளவில் ஆணவக்காரர்கள்தான். இங்கே பலரிடம் இருக்கும் ஆணவம் என்பது தங்களிடம் இருக்கும் தாழ்வுணர்ச்சியையும், போதாமையையும் உள்ளளவில் உணர்ந்து, ஆனாலும் அதை ஏற்க முடியாமலும், கடக்கவும் முடியாமலும் திணறி, அதை ஆணவமாக ஆக்கிவைத்திருப்பதுதான். அது சற்றும்  தயக்கமின்றி எல்லாவற்றையும் இகழும். மேலும், ஒளிந்திருந்து தாக்குவதற்கு ஒரு கூட்டம் கிடைத்துவிட்டால் அது இன்னும் வலுவடையும். மற்றொரு ‘ஆணவம்’ நீங்கள் குறிப்பிட்டதுபோல தற்காப்புக்கான கவசம் மட்டுமே. இவர்கள் தன்னளவில் உண்மையிலேயே ஆணவமற்றவர்கள். திறந்த மனதோடு எல்லையற்ற தேடலும், எளிதில் நிறைவடையாத, ஆறுதலடையாத தன்மையுமே அவர்களின் உந்து சக்தி; ஆணவமல்ல. ஆணவம் உந்துசக்தியாக இருக்கவும் முடியாது.
‘அற்பத்தனத்தை ஆணவத்தால் எதிர்கொள்ளல்’ என்ற உங்கள் வரியை நினைவு கூறுகிறேன்.

நன்றி

விவேக்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:31

கதைகளைப்பற்றி…

அன்புள்ள ஜெ

ஆண்டு முடியவிருக்கிறது. 2020 ஆண்டின் என் வாழ்க்கையின் சிறந்த பகுதி எது என எண்ணிப்பார்த்தேன். இப்போது நார்மல் வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன். ஆனால் ஊரடங்குகாலம், அதன் பதற்றம், கிராமத்துக்குப் போய் தங்கியது, முற்றிலும் புதியவகையான ஒரு வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டது எல்லாம்தான். ஆனால் அதில் உச்சம் நூறுகதைகள். நூறுகதைகளை தொடர்ச்சியாக எழுத உங்களால் முடியும் என்று தெரியும், வாசிக்க என்னால் முடியும் என்பது ஆச்சரியம்தான். எத்தனை வகையான கதைகள். எவ்வளவு வாழ்க்கைச்சந்தர்ப்பங்கள். அவற்றில் திபெத் கதைகள் ஆன்மிகமான அனுபவங்கள்

நன்றி

பூபதி குமாரராஜா

அன்புள்ள ஜெ,

இச்சிறுகதை வரிசையில் என்னை சடாரென்று அடித்து வீழ்த்தியது “குருவி” சிறுகதை. மீண்டும் மீண்டு வாசித்த போதும் அதன் வீச்சு குறையவேயில்லை. மிகச்சிறந்த ஒரு வேலைப்பாட்டை ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டுமெனும் போது, அதை மாடன் பிள்ளையினால் மட்டுமே முடியுமென மேலதிகாரிக்குப் படுகிறது. தன் துறையில் அசாத்திய திறமை கொண்ட மாடன்பிள்ளை , அவ்வதிகாரியால் சில நாட்களுக்கு முன் அவமதிக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறான். ஆனால் அதற்கு அவனது அகந்தை ,குடி போன்றவையும் முக்கிய காரணம். அதனாலென்ன, அவன் கலைஞன் , சால்டரிங்கையே ஓவியமாகச் செய்பவன் . அவனை அந்த அவசர வேலையை முடித்துக் கொடுக்க அழைக்கும் போது , தன்னை அவமதித்தவர் அனைவரின் முன் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனச் சொல்கிறான். இதுவரை வாசித்த போது மாடன்பிள்ளையின் பக்கமே நிற்க முடிந்தது. இத்தனை திறைமை கொண்ட ஒருவனுக்கு இந்தச் செருக்கு சகஜமானதே, அவன் மீதென்ன பிழை என்றே தோன்றியது.

ஆனால் மாடன் பிள்ளையே இதை மறுக்கச் செய்தான். அக்குருவி செய்த கூட்டைப் பார்த்ததும், தன்னை விட ஒரு அசாத்திய வேலைக்காரன் இருக்கிறான் என கண்டு கொண்டு அவன் நெகிழ்ந்த தருணம், இச்சிறு பறவை தன்னைவிட எத்தனை நுட்பமான வேலைப்பாட்டைச் செய்திருக்கிறதென உணர்ந்து அழுத தருணம் அத்தனை உணர்ச்சிகரமானது. அவன் அக்கூட்டை வியந்து பேசுகிற எந்த வரியையுமே தொண்டை அடைத்து விம்மலில்லாமல் கடக்க முடியவில்லை. நம் அகந்தயையும் ,ஆணவத்தையும் வீசியெறிந்து இயற்கையின் இப்பேரியக்கத்திற்கு முன்பு பணிந்தே ஆக வேண்டுமென்று உணரச் செய்த கதை.

அன்புடன்,

அசோக்ராஜ்

 

அன்பு ஆசிரியருக்கு,

வீடடங்கு காலத் தனிமையை இனிமையானதாக கழித்தவர்கள் தங்களின் வாசகர்கள் மட்டும்தான். மற்றவர்கள் எங்களின் திளைப்பைக் கண்டு ஏற்கனவே அவர்களிடம் உள்ள மனவுளைச்சலை மேலும் தீவிரமாக்கிக் கொண்டார்கள்.

ஒவ்வொரு நாளும்  படித்தவுடனேயே கடிதம் எழுதவேண்டுமென்ற எண்ணம் எழும். ஆனால் கதையை படித்தவுடன் வெளியே வந்தால்தானே எழுதமுடியும். கதையைவிட்டு வெளியே வருவதற்குமுன் அடுத்த கதை வந்துவிடும். அதையும் வாசித்துவிட்டு சேர்த்து எழுதலாம் என தள்ளித் தள்ளி நிறைவையும் தாண்டியாகிவிட்டது. ஆனால் இப்போது எதைப் பற்றி எழுதுவதென மலைப்பு தோன்றுகிறது.

எதைப் பற்றி எழுதவில்லையாயினும் “மாயப்பொன்” பற்றி மட்டுமாவது எழுதிவிட வேண்டுமென இக்கடிதம். இக்கதையை படித்தவுடனேயே தோன்றியது நேசையன் தாங்கள்தான் என்று. அவன் உருவாக்குவது பிறருக்காக அல்ல. அவனுக்காகவும் இல்லை. கர்த்தருக்கான அமுதம். நீங்கள் எழுதுவது வாசகர்களுக்காக அல்ல. தங்களுக்காகவும் இல்லை. எழுதி எழுதித் தேடுகிறீர்கள் உங்களுக்கேயான ஒன்றை. அதை கண்டறியும் வரை நிறுத்தப் போவதில்லை.

நேசையனும் அப்படித்தான். தான் உருவாக்குவதை மற்றவர் எப்படி மாற்றிக் கொண்டாலும்  கவலையில்லை, நான் தரம் குறைக்கமாட்டேன் என உரைத்து அந்த மலையின் இனிமையையே  மதுவாக்குகிறான். கர்த்தருக்கான மதுவை வடித்து கடுத்தா சாஸ்தாவை அடைகிறான். யாராலும் அறியப்படாத அதனை  இனி அவன் உருவாக்கப் போவதில்லை.

அந்த லாத்தியைப் போல உங்கள் வாசகர்கள் நாங்கள் கூறிக்கொண்டிருந்தோம் விஷ்ணுபுரம் போன்ற ஒன்றை மிஞ்சி எதை எழுத முடியும்.  பின் கொற்றவை- க்கும் அறம் கதைகளுக்கும்,  பின் வெண்முரசிற்கும் அதையே சொன்னோம். இப்போது இந்தக் கதைகள். இதைவிடச் சிறந்ததாக யாரால்,  எப்படி எழுதமுடியும் என்றே மனம் திகைக்கிறது. ஆனால் நீங்கள் நிறைவடையவில்லை. இதற்கும்மேல், இதற்கும்மேல்… என்றே எழுவீர்கள். எப்படியும் அந்த லட்சியப் படைப்பை படைப்பீர்கள். ஆனால் இன்னும் பல்லாண்டுகளுக்குப் பிறகே ( பல படைப்புகளுக்குப் பின்)  அது நிறைவேற வேண்டுமென சுயநலத்தோடு வேண்டிக் கொள்கிறேன்.

மற்றுமொன்று, இக்கதைகளின் வாயிலாக எல்லா மிருகங்களும் மனதுக்கு நெருக்கமானதாக மாறிவிட்டன. யானை, நாய், குரங்கு, ஆடு, புலி, மலைப்பாம்பு மற்றும் குருவிகள். இவற்றையெல்லாம் பார்க்கும் பார்வையே மாறிவிட்டது. முன்பு யானை டாக்டர் வாசித்தவுடன் புழுக்கள் மேல் உண்டான  அருவெருப்பு  அகன்றதைப் போல.

இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடித்தபோது மனதளவில் சிறு மாற்றமாவது நிகழ்ந்ததை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். தங்களின் உள்ளூக்கம் சற்றும் குறையாமலிருக்க பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்.

 

கா. சிவா

100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96.  நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:31

தன்னறம் விருது விழா,சென்னை

தன்னறம் இலக்கிய விருது 2020விருதளிப்பு நிகழ்வு, சென்னை

நாள் 27-2-2021

பொழுது- காலை 10 மணி

இடம் -குருகுல் லுதர்ன் தியாலஜிகல் கல்லூரி புரசைவாக்கம், சென்னை

“கலை என்பது உண்மை அல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். கலை என்பது ஒரு பொய்யாகும், இது உண்மையை குறைந்தபட்சமாவது நமக்குப் புரியவைக்க உதவுகிறது. ஆனால், தனது பொய்களின் உண்மைத்தன்மையை மற்றவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்கிற விதத்தை ஒவ்வொரு கலைஞனும் அறிந்திருக்க வேண்டும். அதற்குரிய அகநேர்மை அவனுக்குள் அழியாதிருக்க வேண்டும்…”

ஓவியமுன்னோடி ஆளுமையான பாப்லோ பிகாசோ சொல்லிய தத்துவரீதியிலான வார்த்தைகள் இது. அவ்வகையில் பார்த்தால், அத்தகைய கலையில் இலக்கியம் என்பது மானுட அகத்தில் நிகழ்கிற ஒரு நிகர்வாழ்வு. எல்லா கலைஞர்களும் மேதைமை அடைவது தங்களுக்குள் உயிர்த்துடிக்கும் குழந்தைமையை இழக்காதபோதுதான் சாத்தியப்படுகிறது.

சமகாலத்தில், தமிழ்ச்சூழலில் அத்தகைய மழலைமனதை தன்னுடைய இத்தனைக்கால இருப்புக்காலம் முழுவதும் பத்திரப்படுத்திவந்த படைப்பாளுமை யூமா வாசுகி அவர்கள். எழுத்தாளர்களில் சிலரின் வாழ்வு புகழ்வெளிச்சத்தின் ஒளிபடாது தனித்தொதுங்கி, தன்னை இயல்பின்போக்கில் செலுத்திக்கொண்டு படைப்பதை மட்டுமே ஆயுள்செயலாக தக்கவைத்து இயங்கும். அத்தகைய வாழ்வெதார்த்த மனிதர்களில் யூமா வாசுகி அவர்களின் வெள்ளந்தி முகத்தை நம்மால் ஒருமுறை நேருற்றபின் வாழ்வுக்கும் மறக்கமுடியாது.

2020ம் ஆண்டிற்கான தன்னறம் இலக்கிய விருதினை ஓவியர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் யூமா வாசுகி அவர்களின் படைப்புமுகத்திற்காக வழங்குகிறோம். வருகிற 27.02.2021 சனிக்கிழமை அன்று, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள குருகுல் லூதர்ன் தியோசாபிகல் கல்லூரி மரத்தடியில், காலை 10.00 மணிக்கு இந்த விருதளிப்பு நிகழவுள்ளது.

இலக்கிய விருதுக்கான நினைவுப்பரிசோடு, தோழமையுறவுகளின் கூட்டுப்பங்களிப்பில் திரண்ட ஐம்பதாயிரம் ரூபாய் தொகையினையும், கூடவே ஒரு கணினியையும் படைப்பாளி யூமா வாசுகி அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்.

ஆயிரக்கணக்கான பார்வையிழந்த மனிதர்களுக்குத் தன் ஓவியக்கோடுகளால் கண்கள் பெற்றுத்தந்த ‘அகவிழி ஓவியர்’ மனோகர் தேவதாஸ் அய்யா மற்றும் மூத்த எழுத்தாளர் சி.மோகன், எழுத்தாளர் பாதசாரி, மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார்,மொழிபெயர்ப்பாளர் லதா அருணாச்சலம், கவிஞர் பிரான்சிஸ் கிருபா, கவிஞர் கார்த்திக் நேத்தா ஆகியோர் முன்னிலையேற்று இந்த விருதளிப்பு நிகழ்வில், படைப்பாளுமை யூமாவை வாழ்த்தவுள்ளார்கள்.

மேலும், நாடகக்கலைஞர் ராம்ராஜ் அவர்கள் தன் குழுவினரோடு, யூமா வாசுகியுடைய சிறுகதை மற்றும் கவிதைகளை மையப்படுத்தி இயக்கும் ஒரு நிகழ்த்துநாடகமும் இந்நிகழ்வில் நிகழ்கிறது. கதையாலும் கவிதையாலும் தமிழ் படைப்புச்சூழலில் கவனமுண்டாக்கிய ஒரு பெரும்படைப்பாளுமைக்கு கலையால் நன்றியுரைக்கும் ஒரு நற்தருணமாக இது அர்த்தமடைய விழைகிறோம்.

என்றோ யாருக்கோ பாக்கிவைத்த நன்றியை, என்றாவதொருநாள் யாராவதொரு மனிதரைப் பார்க்கையில் நமக்குச் சொல்லிவிடத் தோன்றும். மானுடப்பிரக்ஞையின் மகத்துவம் இது.

அவ்வகையில், இவ்விருதளிப்பின் வழியாக நாங்கள் யூமாவுக்குத் தெரிவிப்பது, இத்தனைக்கால வாழ்வில் தன் படைப்புமுகத்தின் குழந்தைத்தன்மையை சிறிதும் குறையாமல், அகச்சீழ் ஏதும் அண்டாமல் வைத்திருதமைக்கான நன்றியை மட்டுமே!

இப்படிக்கு,

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

http://thannaram.in/

https://www.facebook.com/Thannaram-Noolveli-104162358359986

——————– ———————————————————————-

யூமா வாசுகிக்கு வாழ்த்து
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:30

கூழாங்கல்

வைரம் போன்ற அருமணிகள் மண்ணின் ஆழத்தில் இருந்து அதி அழுத்தத்தால் உருவாகி, அம்மண் பிளந்து வெளிவருபவை. ஒரு வகையில் அவையும் வெறும் கற்களே. அப்படியென்றால் அக்கற்களை அருமணிகளாக்குவது எது? அதைக் கொள்பவரின் விழைவே என்று சொல்கிறது இந்திரநீலம். மானுடரின் விழைவுகள் அக ஆழத்தில் அழுந்தி, இறுகி வைரமென்றாகிறது. என்றோ முன்னுணரா திருக்கணத்தில் அது வெளிப்படுகின்றது. இந்திரநீலம் முழுவதிலும் மானுட அக இருளின் வெளிப்பாடாகவே சியமந்தகம் வழங்கப்பட்டுள்ளது.

கூழாங்கல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 10:30

February 24, 2021

நூற்கொடைகள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஒரு படைப்பை யாருக்கு சமர்ப்பணம் செய்வது என்பதில் ஏதாவது பொது விதிமுறைகள் இருக்கின்றனவா? அல்லது நீங்கள் அப்படி ஏதாவது விதிமுறைகள் வைத்திருக்கிறீர்களா? குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

மேலும், சமர்ப்பணம் என்ற சொல்லுக்கு மாற்றாகத் ‘தாள்வைப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இது சரியானது தானா?

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.

அன்புள்ள வசந்தகுமார்

பொதுவாக இந்த நூல்சமர்ப்பணங்களைப் பற்றி அவ்வப்போது சிலர் சற்றுக் கேலியாக ஏதேனும் சொல்வதுண்டு. சிலர் அதை தவிர்ப்பதை ஒரு வகை புரட்சியாகவும் சொல்லிக்கொள்வார்கள்.

வெவ்வேறு காலங்களில் நூல்கள் தொடர்பான பல நடைமுறைமைகள் இருந்துள்ளன. அவற்றுக்கு என்று சில நோக்கங்கள் உண்டு. ஒரு நூலை பொதுவில் நோக்குபெறச் செய்வதற்கும், நூலாசிரியனின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் அமைந்தவை.

பழங்காலத்தில் நூல்களின் முகப்பில் சில முன்னோட்டப் பகுதிகள் இருந்தன

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

என்று நன்னூல் அதைச் சொல்கிறது. முகவுரை என்பது ஆசிரியனால் எழுதப்படும் தன்னறிவிப்பு. பதிகம் நூலின் உட்பொருள் குறித்து பத்துப்பாடல்களில் சொல்லப்படுவது. அணிந்துரை சான்றோரால் அளிக்கப்படுவது. புறவுரை என்பது பின்னாளில் அந்நூலுக்கு அளிக்கப்படும் சிறப்புரை. தந்துரை என்பது அந்நூலைப்பற்றி புரவலர் போன்றோரால் அளிக்கப்படும் பாராட்டுரை. புனைந்துரை அந்நூலைப்பற்றிய கதை. இவையனைத்தையும் உள்ளிட்ட பொதுத்தலைப்பே பாயிரம். இதுவே பொதுப்பாயிரம் சிறப்புப் பாயிரம் என இருவகை எனப்படுகிறது

இந்தப் பாயிரப்பகுதியிலேயே அவையடக்கம் ஒரு கூறு. ஆசிரியன் தன்னுடைய எளிமையையும் தான் எதிர்கொள்ளும் சான்றோர் அவையின் சிறப்பையும் தன் பேசுபொருளின் அருமையையும் சொல்வது.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென,

ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்

காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

என கம்பனே பூனை பாற்கடலை நக்கிக் குடிப்பதுபோல நூலின் பெருமையைச் சொல்லி தன்னை தாழ்த்திச் சொல்கிறான்.

இவை தவிர காப்பு, வாழ்த்துக்கள் என பல நூல்பகுதிகள் பண்டைய நூல்களில் உண்டு. இவற்றை வெறுமே மரபுசார் உரைகள் என எடுத்துக்கொள்ள முடியாது. இவற்றில் அந்நூலாசிரியனின் உள்ளம், அவனுடைய நோக்கம், அவன்மேல் பிறர்கொண்டிருக்கும் மதிப்பு வெளிப்படுகிறது

அதைப்போல புதியகாலத்தில் நூல்களில் அணிந்துரை, பதிப்புரை, அணிந்துரை, முன்னுரை, சமர்ப்பணம், அட்டைக்குறிப்புகள் ஆகியவை நூல்முகப்புப் பகுதிகளாக உருவாகி வந்துள்ளன.

அரிய நூல்கள் என்றால் பதிப்புரை தேவை. அப்பதிப்பில் உதவியவர்களுக்கு நன்றி சொல்வதும், அப்பதிப்பின் நோக்கம், பதிப்பு நிகழ்ந்தவிதம், பதிப்பில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளும் முறைமைகளும் ஆகியவற்றைப் பற்றிய குறிப்பாக அது அமைதல் வழக்கம்.

முன்னுரையை தகுதியான ஒருவர் வழங்குவது வழக்கம். தொல்காலத்தைய பாயிர மரபின் நீட்சிதான் இது. முன்பு ஆசிரியன், மாணவன், மைந்தன், சான்றோன் ஆகியோர் நூலுக்குப் பாயிரம் அளிக்கலாம். இன்று அத்துறை முன்னோடிகளிடமிருந்து பாயிரம் பெறப்படுகிறது. மூத்தபடைப்பாளிகளுக்கு இளையோர் பாயிரம் வழங்குவதுண்டு. எனக்கே சு.வேணுகோபால், லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்கள் முன்னுரை வழங்கியிருக்கிறார்கள்.

தானே எழுதிக்கொள்ளும் முன்னுரை பலரால் விரும்பப்படுவதில்லை. நூலில் இல்லாததா முன்னுரையில் என்று கேட்பார்கள். முன்னுரை என்பது ஒரு சிறிய முகமனுரைதான். அது வாசகனை புனைவு என்னும் வீட்டுக்குள் அனுமதிக்கும் ஒரு புன்னகையும் வரவேற்பும் என கொள்ளலாம்.

கட்டுரைத் தொகுதி என்றால் அக்கட்டுரைகள் எழுதப்பட்ட காலம், அவற்றின் பின்னணி ஆகியவற்றை முன்னுரையில் குறிப்பிடலாம். அக்கட்டுரைகள் எந்த பொதுமையின்படி தொகுக்கப்படுகின்றன, எந்த மையநோக்கு கொண்டுள்ளன என்று சொல்லலாம்.

புனைவுக்கு அணிந்துரை, முன்னுரை தேவையில்லைதான். ஆனால் அப்புனைவு எழுதப்பட்ட சூழல், அப்புனைவுக்கு முன்னும்பின்னும் இருந்த உளநிலைகள், அப்புனைவுக்கு இட்டுச்சென்ற தூண்டுதல்கள் ஆகியவற்றைப்பற்றி ஆசிரியன் எழுதுவது பலவகையிலும் வாசகனை அப்புனைவை அணுக்கமாக உணரவைக்கும்.

புனைவின் ஆக்கத்தில் பங்களித்தவர்களுக்கு நன்றி சொல்லவும், புனைவுக்கு தூண்டுதலாக அமைந்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் குறிப்பிடவும் முன்னுரை தேவையாகிறது. இலக்கியச் செயல்பாடு எதுவாயினும் அது ஒரு பெருந்தொடர்ச்சியிலேயே இருக்கிறது. பெரும்படைப்புகூட பேரொழுக்கில் ஒரு கொப்புளமே.அந்த தொடர்ச்சியை தன்னகத்தே உணர்பவர்கள் அதை நன்றிகள் வழியாக முன்னுரையில் தெரிவிக்கிறார்கள்.

தி.ஜ.ரங்கநாதன்

தமிழில் மூத்தோர் அணிந்துரைகளில் பாரதியின் கண்ணன்பாட்டுக்கு வ.வே.சு.அய்யர் எழுதிய முன்னுரையும்,புதுமைப்பித்தன் கதைகளுக்கு ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதிய முன்னுரையும், ஜெயகாந்தன் கதைகளுக்கு தி.ஜ.ரங்கநாதன் எழுதிய முன்னுரையும் முக்கியமானவையாக குறிப்பிடப்படுகின்றன.

சுந்தர ராமசாமி வண்ணதாசன் சிறுகதைகளுக்கும், நாஞ்சில்நாடனின்  ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலுக்கும் கறாரான முன்னுரை எழுதியிருக்கிறார். அதை அணிந்துரை எனச் சொல்லமுடியாது- ஏனென்றால் அது விமர்சனப்பார்வைகொண்டது.

அடுத்த தலைமுறையினர் முந்தைய தலைமுறைப் படைப்பாளிகளுக்கு எழுதிய முன்னுரைகளில் க.நா.சு ஐந்திணை வெளியீடாக வந்த புதுமைப்பித்தன் கதைகளுக்கு எழுதிய நீண்ட முன்னுரை முக்கியமானது. திலீப்குமார் மௌனி கதைகளுக்கு எழுதிய முன்னுரை நீளமான ஓர் ஆய்வாகவே கொள்ளத்தக்கது. ப.சிங்காரத்துக்கு நான் எழுதிய முன்னுரை ஓர் ஆய்வுநூலளவுக்கே பெரியது.அவரை மறுகண்டுபிடிப்பு செய்து வரையறைசெய்து நிறுவும்தன்மை கொண்டது.

வ.வே.சு.அய்யர்

ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் முன்னுரைகள் மதிப்பு மிக்கவை. சுந்தர ராமசாமி ஒரு புளியமரத்தின் கதை நாவலுக்கு எழுதிய முன்னுரையில் அவர் இடதுசாரிகளிடம் கொண்ட விலக்கத்தை பதிவுசெய்தார். அது அன்று பெரிய அலைகளை உருவாக்கியது

அட்டைக்குறிப்புகள் முன்னுரையின் பகுதிகளாக அமையலாம். அணிந்துரையின் பகுதியாகவும் அமையலாம். ஒரு புத்தகக் கண்காட்சியிலோ அல்லது நூலகத்திலோ அட்டைக்குறிப்புகளை வாசிப்பதென்பது வாசகனின் இன்பங்களில் ஒன்று. நுனிப்புல்மேய்தல்தான், ஆனால் நுனிப்புல் சுவையானது, மொத்தப்புல்வெளியையும் அறிமுகம் செய்வது

இந்த வரிசையில்தான் சமர்ப்பணம் வருகிறது. அவ்வாறு ஒரு வழக்கம் இந்தியமரபில் இல்லை. அச்சுநூல்களை நாம் மேலைநாட்டு வழக்கப்படி அமைத்துக்கொண்டபோது வந்தது அது. ஐரோப்பாவில் நூல்களை dedicate செய்யும் வழக்கம் உண்டு, அதன் தமிழ்வடிவம் சமர்ப்பணம். அதை படையல், காணிக்கை, கொடை என்றெல்லாம் தமிழ்ப்படுத்திக்கொள்வதுண்டு. தாள்வைப்பு நல்ல சொல்தான், ஆனால் நண்பருக்கு ஒரு நூலை அளிக்கையில் அச்சொல் மிகையாக ஆகிவிடும். ஆசிரியர் மூத்தோர் சான்றோருக்கென்றால் சரி.

தமிழில் நூல்சமர்ப்பணங்கள் பொதுவாக ஆசிரியர்களுக்கே செய்யப்பட்டன. இன்றும் பெரும்பாலும் அப்படித்தான். அதுவே முதன்மையானது. ஏனென்றால் இலக்கியமோ தத்துவமோ மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கே கைமாறப்படுகின்றன. ஆசிரியர்- மாணவர் என்ற உறவே அதை நிகழ்த்துகிறது. உலகமெங்கும் இப்படித்தான் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கென கல்வியும் ஞானமும் சென்றுகொண்டிருக்கிறது.

தன்னை ஆழ்ந்து பாதித்த ஆசிரியர் இல்லாத ஒருவர் எத்தகுதி கொண்டவர் என்றாலும் அவரிடம் ஆழமிருப்பதில்லை. விந்தையானதோர் தற்செருக்கும், பணியவேண்டிய இடங்களில் பணியாத சிறுமையும் அவரிடமிருப்பதை காணலாம். அத்துடன் அவர் அமைப்புகள், நம்பிக்கைகளுக்கு அடிமையாகிவிடுவதை, சாதி மதம் போன்ற அடையாளங்களால் இயக்கப்படுவதையும் காணமுடிகிறது. விழுமியங்கள் வாழும் ஆசிரியரின் கொடையெனவே அமைய முடியும்.

தமிழில் புகழ்பெற்ற சமர்ப்பணங்கள் பாரதி செய்தவை. ‘ஸ்வதேச கீதங்கள் ‘ என்ற தமது முதல் கவிதைத் தொகுப்பை, 1908- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டார். அதை அவர் தன் குருவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். “கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்குப் பாரததேவியின் சம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்”

இந்த குரு யார் என்பதைப்பற்றிய விவாதங்கள் உள்ளன. பாரதியின் தேசபக்திப் பாடல்களின் இரண்டாம் தொகுதி ‘ஜன்மபூமி’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் 1909 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்தது. இந்த நூலை அவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதாவுக்குச் சமர்ப்பணம் செய்தார். “எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.” தொடர்ந்து ஞானரதமும் நிவேதிதாதேவிக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டது.

பாரதியின் இந்த சமர்ப்பணங்கள் நூலாசிரியர்களில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தின. ஏனென்றால் தமிழில் நூல்கள் வரத்தொடங்கியபோதே பாரதியின் இந்த சமர்ப்பணங்கள் நிகழ்ந்துவிட்டன.

பின்னாளில், நவீன இலக்கியம் உருவானபோது இந்த சமர்ப்பண மனநிலை சற்று கேலியாகப் பார்க்கப்பட்டது. புதுமைப்பித்தனைச் சந்தித்ததைப் பற்றி எழுதும்போது க.நா.சு ஒன்றை சொல்கிறார். அவர் நூல் ஒன்றை ‘குருவிடமிருந்து சீடனுக்கா?” என்று எழுதி அளித்தார். அப்பக்கத்தை கிழித்து வீசியெறிந்த புதுமைப்பித்தன்  “குரு சிஷ்யன் என்பதெல்லாம் நான்சென்ஸ்” என்றார்.

புதுமைப்பித்தனிடமிருந்த இயல்பான துடுக்கும் கசப்பும் இதில் வெளிப்படுகிறது. அவருடைய தனிப்பட்ட மனநிலை. ஆனால் பின்னால் வந்தவர்கள் அதையே ஒரு ’நவீன’ மனநிலையாக எடுத்துக்கொண்டார்கள். அந்த மனநிலை அசோகமித்திரனுக்கோ சுந்தர ராமசாமிக்கோ இருக்கவில்லை. சுந்தர ராமசாமி க.நா.சுவை தன் ஆசிரியராகவே இறுதிவரை எண்ணியிருந்தார்.

தன் உருவாக்கத்தில் பங்குள்ள ஆசிரியர்களுக்கே நூல்களை முதன்மையாக சமர்ப்பணம் செய்யவேண்டும். அது அவர்களுக்கு நாம் செய்யத்தக்க கைமாறு அது ஒன்றே என்பதனால்தான். வேறு எதை நாம் அளிக்கமுடியும்? அதோடு அது நம்மை நாமே வகுத்து முன்வைப்பதும்கூட

அடுத்தபடியாக நம்மை ஆட்கொண்டவர்களுக்கு நூல்களை சமர்ப்பணம் செய்யலாம். பெருங்கலைஞர்களுக்கு, சிந்தனையாளர்களுக்கு. அவர்கள் சென்றகாலத்தையவர்களாக இருந்தாலும்.

நம் வாழ்க்கையில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய, நம் மீது அன்புகாட்டி பேணிப் புரக்கும் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நூல்களை சமர்ப்பணம் செய்யலாம். அது வாசகர்களை நோக்கி நாம் சொல்வது அல்ல, நமக்கு நாமே சொல்லிக்கொள்வது. எழுத்தாளன் என்பவன் உணர்வுரீதியாக நொய்மையானவன். உலகியல்ரீதியாக திறனற்றவன். அவனை உற்றார் பேணியாகவேண்டும். பேணப்படுபவர்களே சிறப்பாக பங்களிப்பாற்றுகிறார்கள். அவர்களுக்கு எழுத்தாளன் திரும்பச் செய்வது இந்த நூற்கொடை மட்டுமே

என் அம்மா இல்லையேல் நான் இல்லை. அருண்மொழி என் வாழ்க்கையை ஒழுங்குசெய்து உடனிருப்பதனாலேயே நான் இயங்க முடிகிறது. என் அறிவியக்கச் செயல்பாடுகளை அறியாதவர்கள் என்றாலும் என் அப்பாவும் அண்ணனும் என் காவலர்கள். என் நண்பர்கள் நான் எண்ணிய எல்லாம் செய்ய என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். ஒருவகையில் தமிழிலக்கியத்தின் நீண்ட வரலாற்றில் எல்லாமே சரிவர அமைந்தவன் நானே. அவர்களுக்கே என் நூல்களை சமர்ப்பணம் செய்கிறேன். நான் அளிக்கத்தக்கது அது மட்டுமே என்பதனால்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2021 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.