வாசகனும் எழுத்தாளனும்

அன்புள்ள ஜெ

நேற்று குருஜி சௌந்தர் அவர்களும் செல்வா அண்ணாவும் வீட்டிற்கு வந்து சந்தித்தார்கள். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கடிதம்.

இரவு ஒன்பது மணிக்கு செல்பேசியை திறக்கையில் குருஜி சௌந்தர் அழைத்திருந்தார். மறுநாள் (17-02-2021) காலை ஒன்பதரை மணிக்கு தானும் செல்வா (செல்வேந்திரன்) அண்ணாவும் வருவதாக கூறியிருந்தார். நானும் அவரை ஒருமுறை வீட்டிற்கு வாருங்கள் என்றழைத்திருந்தேன். வருவதாக சொன்னவுடன் பரவசம் கொண்டுவிட்டேன்.

சீக்கிரமே உறங்கி வழக்கமான ஒன்பதுக்கு பதிலாக ஏழு மணிக்கே எழுந்து கிளம்பிவிட்டேன். காலை உணவருந்தி கொண்டிருக்கும் போதே ஒன்பது மணிக்கு எங்களூர் சிவன் கோயிலை வந்தடைந்து வீடு எங்கே குருஜி அழைத்தார். டவர், மாவு மில் என அடையாளம் கூறி வீட்டிற்கு வந்தனர். உள் நுழைகையில் அம்மா பொங்கல் ஊட்டி கொண்டிருந்தார்.

குருஜி படத்தை விட நேரில் பார்க்கையில் நல்ல வெண்ணிறம் கொண்டவராக இருந்தார். நீல நிற பனியன் அணிந்து சந்தன நிற கால் சட்டையுடனும் வந்திருந்தார். செல்வா அண்ணா வெண் சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்து வக்கீல் உரிய தோற்றத்தில் இருந்தார். படத்திலும் நேரிலும் ஒன்று போலவே இருந்தாலும் அவருடைய இமெயிலில் உள்ளவர் அவர் தான் என்ற போது இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை.

பேச்சு அவருடைய வாசிப்பது எப்படி நாவலின் முதல் அத்தியாயத்தில் இருந்து தொடங்கியது. வாசிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை தெரியாத மாணவன் என்பதெல்லாம் வியப்பாகவும் பொய்யாக இருக்குமோ என்றே தோன்றியது. அதற்கடுத்த நாளே என் தம்பி செய்த காரியத்தை பார்த்த பின் ஐயமெல்லாம் பறந்து விட்டது. வாழை பூவை அறுத்து வாடா என்றால் குலை விடாத பூவோடு வந்து நிற்கிறான் என்ன சொல்ல. இந்த முறை சீமான் கட்சி வைத்திருப்பதே தெரியாதே குல கொழுந்துகளை பற்றி கூறினார்.

மிகவும் கலகலப்பான மனிதர், சுவரசியமான உரையாடல்காரர். வந்த அரைமணி நேரத்தில் சக்திவேலை மைனர் சக்திவேலாக்கி விட்டார். பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சிரிக்காமல் தாண்டுவதில்லை. பின் பாலை நிலப் பயணம் அவர் எழுதியவற்றில் என்னை கவர்ந்த நூலென்றும் அதில் பாலைவன தனிமையின் ஏக்கம் குறித்த பகுதி என்னை மிகவும் கவர்ந்தது என்றேன். அந்த பகுதி மற்றவற்றை போலல்லாது படைப்பூக்கமாக இருந்ததே என்னை கவர்ந்தது.

பின்னர் என்னை நேரில் பார்த்து எதோ கூற வேண்டும் என்றிர்களாமே என்றேன். அவரும் மனைவியும் இணைந்து நடத்தும் அர்த்த மண்டபம் என்னும் நிறுவனத்தையும் அதில் எனக்கு சில பணிகள் கொடுக்கலாம் என்ற எண்ணத்தையும் கூறினார். என் ஐயத்தை தெரிவித்த போது சுஜாதா நூல்களை வாசித்தல், அன்றாட செய்திகளை அறிந்து வைத்திருத்தல் போதும் என்றார். காளி, செல்வா அண்ணா என இருவருமே சுஜாதாவின் நடையை சற்று பழகி கொள்ள சொன்னார்கள். அது தேவையான அளவு கூர்மையும் அதே சமயம் பொது வாசகருக்கு புரியும் படியான எளிமையும் கொண்டிருப்பது என்பதனாலேயே தொழில்முறைக்கு உகந்தது என்றனர்.

தான் டான் பிரவுன் வகை நாவல்களை எழுத ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் கூறினார். உங்களுடைய டான் பிரவுன் கட்டுரை முன்னம் வாசித்திருந்ததால் எளிதாக இருந்தது புரிந்து கொள்வதற்கு. அவர் சொல்வது போல இன்று தமிழில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இன்றைய வணிக எழுத்தாளர்கள் வெளியே தலைக்காட்டவே அஞ்சுகின்றனர் என்பதை கேட்கையில் வருத்தமாக இருக்கிறது. இங்கு இலக்கியத்திற்கு வரும் ஒவ்வொருவரும் கல்கி, சாண்டில்யன்,பாலகுமாரன்,சுஜாதா என அவர்களின் புனைவு இன்பங்களின் வழியாகவே வருபவர்கள். நான் இவர்களில் கல்கியை மட்டும் தான் வாசித்துள்ளேன் என்றாலும் அந்த சிவகாமியின் சபதம் தான் முதல்முறையாக  புனைவின்பத்தை எனக்கு கொடுத்தது.

இன்று என் தம்பி அத்தை மகள்கள் என வயதொத்தவர்கள் விரைவாக ஜாப்பனிய மங்கா, கொரிய நாடகங்களின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இதை சொல்லுகையில் செல்வா சொன்னார் நமக்கு மட்டுமல்ல ஜாப்பனுக்கும் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தகவல் எனக்கு வியப்பாகவே இருந்தது.  .

செல்வா அண்ணா எதிரே நாற்காலியிலும் குருஜியும் நானும் சோபாவில் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்திருந்தோம். உரையாடல் முழுக்க செல்வா அண்ணாவால் தான் இழுத்த செல்லப்பட்டது. வாரத்திற்கோ இரு வாரங்களுக்கு ஒருமுறையோ செல்பேசியில் பேசிவிடுவதால் குருஜி என்னை கூர்ந்து நோக்கிய வண்ணம் இருந்தார்.

அம்மாவும் அப்பாவும் என்னை பற்றிய தாங்கள் பெருமிதங்களையும் தங்கள் மகனை பார்க்க வந்த மகிழ்ச்சியையும் நண்பர்கள் வந்தவுடனேயே கூறிவிடுவார்கள். இடையிடையே வாய்ப்பு உள்ள தருணத்திலும் கூறுவார்கள். அன்றைக்கு அப்பாவும் கண்கலங்கி விட்டது. வருபவர்களின் புகழ்ப்பாடல் பற்றாக்குறைக்கு.

புகழ் என்பதே பெருமைக்குரியதாக இருக்கிறது அவர்களுக்கு. அவர்களின் நின்று நோக்குகையில் அதுவும் இயல்பானதே. ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் இவற்றிற்காக நான் வாசிக்கவில்லை, எழுதவில்லை என்று எனக்கே கூறி கொள்வேன். இவற்றை செய்தலில் நான் மகிழ்கிறேன், அதன் பொருட்டே ஆற்றுகிறேன் என்று என்னிடமே கூறி கொள்வேன்.

ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு பின் இருவருமே மோர் அருந்திவிட்டு, என் வீட்டு தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு, மூவரும் புகைப்படம் ஒன்றும் எடுத்து கொண்டு விடை பெற்றுகொண்டார்கள். நிறைவான சந்திப்பு.

சில மணிநேரத்திற்கு வாட்சப் ஸ்டேஸில் என்னோடு எடுத்து கொண்ட புகைப்படம் நல்ல தூக்கலான புகழ் மொழியை போட்டு செல்வா ஒரு அதிர்ச்சி கொடுத்திருந்தார். இத்தனை மகிழ்ச்சிகளுக்கும் அச்சாரம் போட்டவர் என்பதால் ஒரு வாசகனாக, மாணவனாக உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன் ஜெ.

அன்புடன்

சக்திவேல்    

அன்புள்ள சக்திவேல்

சிலநாட்களுக்கு முன் நெல்லை சென்றிருந்தேன். அங்கே என் தளத்தில் கடிதங்கள் எழுதும் இரம்யா வந்திருந்தார். அவரை நேரில் பார்த்த ஒரு நண்பர் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் என்னிடம் சொன்னார் “இந்த சக்திவேல், ரம்யா எல்லாரும் உங்களுடைய புனைபெயர்கள், நீங்களே எழுதிக்கொள்கிறீர்கள் என்று நானும் நம்பி சொல்லியிருக்கிறேன். அவர்களை நேரில் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது”

“ஏன்?” என்று நான் கேட்டேன்

“வாசகர்களுக்கு இத்தனை தெளிவான செறிவான நடை அமையாது என்பது என் எண்ணம். இங்கே எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே பத்தாண்டுகளாக முகநூலில் கொசகொசவென்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தைப்பற்றி நான்கு பத்திகள் தெளிவாக எதையாவது எழுத அவர்களால் முடியாது”

நான் புன்னகையுடன் சொன்னேன். “நல்ல வாசகன் எழுதாத எழுத்தாளன். அவன் நாளைய எழுத்தாளனாக ஆகலாம். வாசகனாகவே இருந்தும்விடலாம். ஆனால் வாசிக்கையில் அவன் எழுத்தாளனுடன் சேர்ந்தே தானும் மொழியில் பயணம் செய்கிறான்.

உங்கள் தமிழ்நடை இன்று எழுதும் பெரும்பாலானவர்களை விடவும் கூர்மையானது. அதை எல்லா பயன்பாட்டுக்கும் உரியவகையில் பயிலவேண்டியதுதான் நீங்கள் செய்யவேண்டியது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2021 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.