Jeyamohan's Blog, page 1043
February 24, 2021
எழுத்தாளனின் பார்வை- கடிதம்
அன்பின் ஜெ…
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.
இந்த விஷயம் இரண்டு தளங்களில் உள்ளது. புனைவு மற்றும் அபுனைவு.
புனைவுத்தளத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களின் அடிப்படைகளில் எனக்கு எந்த விலகலும் இல்லை. நீலம் படைப்பின் முதல் அத்தியாயத்தை, பெங்களூர் ஜேபி நகரில் எனது வீட்டு முற்றத்தில் அமர்ந்து படிக்கையில் கண்களில் நீர் வழிந்த கணம் இன்றும் நினைவிலிருக்கிறது. ஒரு படைப்பாளியின் உலகமும், இலக்கிய உண்மைகளும் முற்றிலும் வேறு என்பது மட்டுமல்ல, அவை அந்தரங்கமானவையும் கூட.
அபுனைவிலும் கூட, படைப்பாளி தான் கண் முன்னே தென்படும் அநீதிகளை, அநியாயங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பதும் எனக்குச் சரியென்றே தோன்றுகிறது.
எனது விலகல் ஒரே புள்ளியில்தான். அற வீழ்ச்சிகளைக் கண்டு ஒவ்வாது குரலெழுப்பும் படைப்பாளி, கண் முன்னே நிகழும் நேர்மறையான நிகழ்வுகளைக் கண்டு எழுதுவதில்லை என்பது மட்டுமே.
இதை நீங்கள் இன்னொரு எல்லையில் கொண்டு வைத்து, அதுவும் அரசியலை மட்டும் முன் வைத்துப் பேசுவது, எனது தரப்பு என்பதாகச் சொல்கிறீர்கள். அதுவல்ல என் தரப்பு என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்தி விடுகிறேன். நான் இந்திய/ தமிழக அரசியலில் ஊழல் இல்லை என்றோ, இந்திய/ தமிழக அரசு நிர்வாகம் மிகச் சரியாக நடக்கிறது என்றோ வாதாடவில்லை.. ஒவ்வொரு விஷயத்தையும், அதன் நிறைகுறைகளை கொஞ்சம் அலசி, பின்னர் உங்கள் பார்வையை எழுதுங்கள் என்கிறேன்.
எடுத்துக்காட்டாக, கொரோனா துவக்க காலத்தில், நீங்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். நேர்மறையாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு பிஸினஸ் மேன் மாதிரி முடிவெடுக்கிறார் என. அது உங்கள் அவதானிப்பிலிருந்தும், ஒரு பத்திரிகையாளரிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் உருவானது.
அது ஒரு ரெஃப்ளக்ஷன் மட்டுமே. உள்ளுணர்வின் அடிப்படையினால் உருவானதல்ல. ஒரு படைப்பாளியாக நீங்கள் செயலாற்றும் தளமும், ஒரு குடிமகனாக கொரோனா பற்றிய உங்கள் கருத்துக்கள் உருவாகும் தளமும் மிக வேறானவை.
உங்கள் கட்டுரை வெளியான காலத்தில், இந்தியாவின் மிக முக்கியமான Epidemiologist களில் ஒருவரான, சி.எம்.சி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்.ஜெயப்ராகாஷ் முல்லையில் மிக விரிவாக இந்த வைரஸ், அதன் வீரியம், herd immunity, அரசு முன்னெடுக்க வேண்டிய பொதுநலத்துறை செயல்பாடுகள் பற்றி விரிவாகச் சொல்லியிருந்தார். அதே திசையில், ஜெயப்ரகாஷ் முல்லையிலின் மாணவரான நம் குழும நண்பர் தங்கவேல் ஒரு எதிர் வினையாற்றியிருந்தார். சரவணன் விவேகானந்தன், இந்த வைரஸின் குண்நலன்களைப் பற்றிய விரிவான தரவுகளை வைத்திருந்தார்.
இந்த மூன்று தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, ஒருவருக்குக் கிடைக்கும் சித்திரமே வேறு. இன்று 8 மாதங்களுக்குப் பிறகு உலகம் நியுசிலாந்தின் ஜெஸிண்டாவை ஏன் முன்னிறுத்துகிறது என்பதை ஜெயப்ப்ரகாஷ் முல்லையில் என்னும் நிபுணரின் கருத்துக்களை வைத்து விளங்கிக் கொள்கிறேன்.
இலக்கியம் பற்றிய எனது அறிதலுக்கு உங்கள் தரவுகளை நான் எப்படி மிக உயர்ந்த மதிப்புடன் அணுகுகிறேனோ அதேபோல, மற்ற துறையின் மிக உயர்ந்த தலைவர்களின் கருத்துக்களை பார்த்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
உங்கள் பதிலில், கண்ணும் சூத்தும் ஒன்னெனத்தகும் எனச்சொல்லும் சில ஐஏஎஸ் அதிகாரிகளைச் சொல்லியிருந்தீர்கள். அதிலிருந்து நான் என்ன புரிந்து கொள்வது? இலக்கியம் தவிர மற்ற துறைகளில், எதையும் தங்களுக்குச் சாதகமாக வளைத்துப் பேசும் சராசரிகள் மட்டுமே இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்வதா?
பால் பற்றிய விவாதங்களில் எனது தரப்பை, எதிர்த் தரவுகள் இருந்த போதும் மறுத்தேன் எனச் சொல்லியிருந்தீர்கள். நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்திலேயே, வட மாநிலங்களில் பயணம் செய்யும் போது, டெட்ரா பேக்கில் கிடைக்கும் அமுல் பாலை வாங்கிச் செல்லுங்கள் என பரிந்துரைத்திருந்தேன். ஏனெனில், வட மாநிலங்களில், பால் கலப்படம் அதிகம் உண்டு. இந்த இடத்திலேயே நீங்கள் சொன்ன அந்தக் குற்றச்சாட்ட்டில் உள்ள உண்மையை ஏற்றுக்கொள்வதைத்தான் அந்தக் கடிதம் சொல்கிறது.
ஆனால், அந்த ஒரு தரவை வைத்துக் கொண்டு, இந்தியா முழுவதும் செயற்கைப் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்.. உங்கள் நாக்கில் பட்ட அந்தப் பாலின் குமட்டலும், அதுவரை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருந்த செய்திகளும் ஒன்று சேர, அந்தக் கருத்து உங்களுக்கு ஏற்படுகிறது. அது உள்ளுணர்வல்ல. அது பால் துறை பற்றிய ஒரு முழுமையான அறிதல் இல்லாத நுகர்வோரின் கருத்து மட்டுமே.
பால் துறை பற்றிய அறிதல் உள்ள ஒரு நிபுணரோ அல்லது பொருளாதார அறிஞரோ அப்படிச் சொல்ல முடியாது. அந்த விவாதத்தில், உங்கள் தரப்பில் விவாதித்தவர்கள் அனைவருமே நுகர்வோர் அல்லது பால் உற்பத்தியாளர். மறு தரப்பில், நானும், பால் துறையில் பணியாற்றிய ஒரு வெட்ரனரி டாக்டர். இருவருமே பல ஆண்டுகள் துறையை அவதானித்தவர்கள். அந்த கடிதங்களில், நுகர்வோரின் தரப்புகளை ஏற்று, அவர்களின் பல கருத்துக்களின் உண்மையான பிண்ணனியை விளக்கியிருந்தோம்.. எடுத்துக்காட்டாக பால் பவுடர் என்றால் என்ன, க்ரீமர் என்றால் என்ன.. வீட்டில் உறை குத்தும் தயிருக்கும், தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தயிருக்கும் வித்தியாசம் என்ன என்பதைப் பொறுமையாக விளக்கியிருந்தோம்.
அது உங்களின் தரப்புக்கு எதிர்வாதமல்ல. கொஞ்சம் திறந்த மனதுடன், எழுதுபவர்கள் துறையில் அனுபவம் கொண்டவர்கள் என ஒரு புரிதல் இருந்திருந்தால், நாங்கள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டிருக்க முடியும். அதில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள்.. கலப்படப் பால் உற்பத்தி செய்யும் ஒரு ஆலையைப் பார்த்தேன் என. அதை மறுக்கவில்லை.. ஒரு நகைக்கடையில் அல்லது ஜவுளிக்கடையில் பில் இல்லாமல் பொருள் விற்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டு அது. நிகழும் வாய்ப்புகள் உண்டு என்றே துறை சார் அறிஞர்கள் சொல்வார்கள். They will know the size, extent and context of the issue. மொத்த பால்துறை எவ்வளவு பெரியது, அதில் கலப்படம் எவ்வளவு சதம்.. எந்தத் தளத்தில் கலப்படம் அதிகம் என்பதை என்பதையும் சொல்வார்கள்..
ஆனால், எவ்வளவு நுண்ணுணர்வு கொண்ட இலக்கிய வாசகராக இருந்தாலும், பால்துறை பற்றிய அறிதல் இல்லாமல் எப்படி இந்தத் துறையின் உண்மையான அலகை, பிரம்மாண்டத்தை, பிரச்சினைகளின் தீவிரத்தை உள்ளுணர்வை மட்டுமே வைத்து, சரியாகப் புரிந்து கொள்வார்? எனக்குப் புரியவில்லை.. உங்கள் ஆதர்ச வாசகரான கடலூர் சீனு கூட அபத்தமாக ஒரு தமிழ்நாளிதழ் செய்தியைத்தான் பகிர்ந்திருந்தார்.
இன்னொரு எடுத்துக்காட்டாக, பண மதிப்பிழப்பு விவாதங்கள். அது அறிவிக்கப்பட்டவுடன், பெரும் ஆரவாரம் எழுந்தது.. மக்களாட்சி என்பதால் எதிர்க்குரலும் எழுந்தது.. பல குரல்கள் வெறும் கூச்சல்கள்.. ஆனால், அதற்கிடையே அருண் குமார் என்னும் பொருளியல் அறிஞர் பேசியது – It made lot of sense. அவர், கறுப்புப் பணம் என்பது கரன்சியாக 5-6% மேலே இருக்க வாய்ப்பில்லை என்னும் வாதத்தை முன் வைத்தார். ஏனெனில், அதை முறையாக ஆய்வு செய்த அறிஞர் அவர்.. உலகின் முன்ணணிப் பொருளியல் அறிஞர்கள் அனைவருமே இது பெரிதும் பயன் தராது எனச் சொல்லியிருந்தார்கள். அதாவது, பலன்களை விட நஷ்டம் அதிகம் என. உலகில் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்த நாடுகள் யார் எனப் பார்த்தால், வெனிசூலா, ஜிம்பாப்வே போன்றவை. பேராசிரியர் ஜான் ட்ரெஸ் போன்றவர்கள், இன்னொரு பிரச்சினையை முன்வைத்தனர்.. ஊரகப் பொருளாதாரம் பெரும்பாலும் கரன்சிப் பொருளாதாரம்.. அடுத்து வரும் பருவத்தில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, இந்த நோட்டுகளுக்குப் பதில் நோட்டுகளை உடனடியாக மாற்றிக் கொடுக்கும் வசதிகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.. சில நாட்கள் கழிந்துதான் தெரிந்தது, பண மதிப்பிழப்புச் செய்யப்படும் நோட்டுகளுக்குப் பதில் நோட்டுகள் ஏற்பாடு செய்திருக்கவில்லை.. நோட்டுகள் அடிக்க 6-7 மாதங்கள் ஆகும் என்று. விளைவு, ஊரகப் பணப்புழக்கம் நின்று போனது. அது ஒரு man made crisis. ஆனால், ஒரு இலக்கியவாதியாக, மோதி நல்லது செய்வார் என்னும் நம்பிக்கையில் உங்கள் கருத்துக்களைச் சொன்னீர்கள்.. அரசியல்வாதிகள், பொருளாதார அறிஞர்கள் அனைவருமே கறுப்புப் பணத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார்கள் என்னும் வாதத்தை முன்வைத்தீர்கள். ஆனால், அது, பொருளாதாரம், பணம், நிதி நிர்வாகம் போன்ற துறைகளின் macro economic perspective இல்லாத ஒரு பார்வை என்பதுதான் உண்மை. அது உள்ளுணர்வல்ல.
நேரு முதல் மல்லையா கட்டுரையை வாசித்த நம் குழும நண்பர், நேரில் சந்திக்கையில் கேட்டார், நீங்கள் கட்டுரையில் கொடுத்திருக்கும் தரவுகள் உண்மையா என. அவர் ஒரு தொழில் முனைவரும் கூட. நீங்கள் சொன்ன கருத்துக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்கையில், நான் எனது கருத்தை மட்டும் வைத்திருந்தால், குழுமத் தற்கொலைப்படை, என்னைக் கொத்துக்கறி போட்டிருப்பார்கள்.. எனவே தான், நான் எவரும் சரி பார்க்கக் கூடிய, பொது வெளியில் உள்ள தகவல்களை முன்னிறுத்தினேன்.. அதை நண்பருக்கு விளக்கினேன்.. தேசியப் பங்குச் சந்தை மற்றும் இந்தியாவில் உள்ள பங்குச் சந்தைகள் மேலும் www.moneycontrol.com போன்ற தளங்களில் எளிதில் கிடைக்கும், நம்பகமான தகவல்கள்தாம் என அவருக்குச் சொன்னேன்.. மிக முக்கியமாக, நான் பெரிதும் மதிக்கும் என் உளங்கணிந்த எழுத்தாளருக்குச் செய்யும் மரியாதையும் கூட எனச் சொன்னேன் – I mean it. உங்கள் கருத்துக்களை எதிர்த்து வைக்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு credibility யுடன் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.. தரவுகளையும், புள்ளி விவரங்களையும் நான் வளைப்பதில்லை.. அவையே என்னை வழிநடத்துகின்றன. அறிவியல், பொருளாதாரம், வணிகம், தொழில்நுட்பம் என 99% மனிதர்கள் புழங்கும் துறைகள் அவைகளினால்தான் வழிநடத்தப் படுகின்றன.
சமீபத்தில் குமரப்பாவைப் பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.. உப்புச் சத்தியாக்கிரகம் முடிந்த காலகட்டத்தில், குமரப்பாவுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய்க்கொண்டிருந்தது.. குமரப்பாவின் பிரச்சினை மனதில்தானே ஒழிய உடலில் அல்ல என்பது காந்தியின் நம்பிக்கை.. ஆனால், குமரப்பா அதை ஒத்துக் கொள்ளவில்லை..
அந்தக் காலகட்டத்தில், காந்தியிடம் பேசி அவரை மத மாற்றம் செய்யும் நோக்கத்தோடு ஒரு கிறித்தவ அம்மையார் நாக்பூர் வருகிறார்.. காந்திக்குத் திடீரென ஒரு யோசனை.. குமரப்பாவின் உடல் நிலைக் குறைவு அவரது மன அழுத்தம் தான் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு.. அந்த கிறித்தவப் பெண்மணியை, குமரப்பாவின் மீது ஏவி, பரிசோதனை செய்ய முடிவெடுக்கிறார்..
மருத்துவர் சுசீலா நய்யாரிடம் சொல்லி, கிறித்தவப் பெண்மணி குமரப்பாவைச் சந்திக்கச் சொல்கிறார்.. சுசீலா நய்யார், குமரப்பாவின் ரத்த அழுத்தத்தை அளந்து ஆவணப்படுத்த வேண்டும். கிறித்தவப் பெண்மணி, குமரப்பாவைச் சந்திக்கும் முன்பு குமரப்பாவின் ரத்த அழுத்தம் அளவெடுக்கப்படுகிறது.. குமரப்பா அந்தக் கிறித்துவப் பெண்மணியைச் சந்தித்து முக்கால் மணி நேரம் உரையாடிய பின் மீண்டும் அவரது ரத்த அழுத்தம் அளவெடுக்கப்படுகிறது.. எதிர்பார்த்தது போலவே குமரப்பாவின் ரத்த அழுத்தம் எகிறியிருந்தது.. அடுத்த நாள், குமரப்பாவின் ரத்த அழுத்தம் மீண்டும் அளவெடுக்கப்படுகிறது.. சுசீலா நய்யார் குமரப்பாவை 2 கிலோமீட்டர் ஓடி வரச் செய்கிறார்.. ஓடி முடித்தவுடன் மீண்டும் குமரப்பாவின் ரத்த அழுத்தம் அளவெடுக்கப்படுகிறது..
இரண்டு அளவுகளும் ஒப்பிடப்படுகின்றன.. கிறித்துவப் பிரச்சாரம் செய்ய வந்த பெண்மணியைச் சந்தித்த பின்னர் எகிறிய குமரப்பாவின் ரத்த அழுத்தத்தை விட, அவர் 2 கிலோமீட்டர் ஓடிய பின்னான ரத்த அழுத்த உயர்வு மிகக் குறைவாக இருந்தது. இப்படியாக ஒரு hypothesis அறிவியற்பூர்வமாக நிருபிக்கப்பட்டது.
அபுனைவு எழுதுகையில், எதிர்மறைக் கருத்துக்கள் எழுதுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், பல தளங்களில் நேர்மறை விஷயங்களும் நடக்கின்றன. அதையும் எழுதுங்கள் என மட்டும்தான் நான் வேண்டுகோள் வைத்தேன். நீங்கள் கி.ரா மீது தொடுக்கப்பட்ட ஒரு பாசிசத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பை முன்வைத்து அப்படிச் செய்யாதீர்கள் என்கிறீர்கள்.. இரண்டும் ஒன்றா?
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா
நான் விரிவாக எழுதிவிட்டேன் – உங்கள் பதில் உங்கள் தரப்பையே மீண்டும் சொல்வதுதான். ஆகவே மேலே சொல்ல ஒன்றுமில்லை
வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். ஜனநாயகம் ரத்துசெய்யப்படும் எல்லா சூழலிலும் அரசு எதிர்க்கட்சிகளிடம் ஆணையிடுவதையே நீங்கள் சொல்கிறீர்கள் – ஆவணங்களைப் படித்து அதன்படி கருத்துச் சொல்லுங்கள், வெறுமே எதிர்க்காதீர்கள்
கி.ராஜநாராயணன் மேல் முற்போக்கு அணி தொடுத்த வழக்குக்கும் உங்கள் பேச்சுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. சோவியத் ருஷ்யாவின் நாட்களில் எழுத்தாளர்களிடம் அரசு ஆணையிட்டது – அரசையோ அரசியலையோ எதிர்க்கக்கூடாது, ஆக்கபூர்வ விமர்சனமே அனுமதிக்கப்படும். ஆக்கபூர்வ விமர்சனம் என்பது தரப்படும் செய்திகளின் அடிப்படையில் அமையவேண்டும். அது ஆக்கபூர்வமா அல்லவா என்று அரசு முடிவெடுக்கும்
நீங்கள் அரசில் இருந்து ஒரு திராவிட சர்வாதிகார அரசு வந்திருந்தால் நாஞ்சில் சிறையில் இருந்திருப்பார். நான் கொல்லப்பட்டிருப்பேன்
ஜெ
கென்யா வாழ்க்கை- வெங்கடேஷ் சீனிவாசகம்
கென்யா வந்து வரும் ஜூலையோடு ஒன்பது வருடங்களாகிறது. 2006-ல் ஓசூரிலிருந்து மும்பைக்கு மாறியபோது உடன் வேலை செய்த சேலத்து நண்பர் குடும்பத்தை சேலத்தில் விட்டுவிட்டு கென்யா கிளம்பினார். கென்யாவில் இரண்டு வருடங்கள் வேலை செய்துவிட்டு அடுத்த மூன்று வருடங்களில் உகாண்டாவையும் சவுதியையும் சுற்றி மறுபடி கென்யாவில் அவர் செட்டிலானபோது, மும்பையிலிருந்த என்னை அழைத்து “கென்யா வருகிறாயா?” என்றார்.
அதற்கு முன்பு, ஒரு மும்பை தனியார் மனிதவள நிறுவனத்திடமிருந்து ‘கென்யா கொய்மலர் வளர்ப்பு பண்ணைகளில் வேலைசெய்ய விருப்பமா?’ என்று கேட்டுவந்த இரு மின்னஞ்சல்களுக்கு, மிகுந்த யோசிப்பிற்கு பின் ‘நன்றி; இப்போதைக்கு அந்த விருப்பம் இல்லை’ என பதில் அனுப்பியிருந்தேன். காரணங்களில் முதன்மையானது ’ஆப்பிரிக்க’ நாடுகளில் ஒன்றிற்கு செல்வதற்கு மிகுந்த தயக்கம் இருந்தது. எதனால் இந்த மனப்பதிவு ஏற்பட்டதென்று தெரியவில்லை; கேள்விப்பட்ட, படித்த வன்முறைகள்; குடும்பத்தோடு செல்லும் பட்சத்தில் சமூக சூழல் ஒத்து வருமா என்ற யோசனை. மேலும் முன்முடிவான, வேலைக்கு வெளிநாடு செல்வதென்றால் மலர்த்துறையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அல்லது ஆஸ்திரேலியாவிற்கு முயற்சிக்கலாம் என்ற எண்ணம்.
2011-ல் சேலம் நண்பர் அழைத்தபோது, போய்தான் பார்க்கலாமே என்று தோன்றியது. பெண் ‘இயல்’ நான்காம் வகுப்பிலிருந்தாள். பள்ளி வசதிகள், குடும்பத்திற்கான மாத செலவுகள், பாதுகாப்பான குடியிருப்பு, மருத்துவ வசதிகள் பற்றி எல்லாம் நண்பரிடம் பேசி விவரங்கள் அறிந்துகொண்டு தெளிந்து கிளம்பியபோதும், புதுநிலம் எப்படி இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்புகளும், மெல்லிய தவிப்பும் மனதில் உடனிருந்தன. ஆப்பிரிக்க நாடுகள் சுற்றும் இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் பணிபுரியும் கோவை கல்லூரியில் உடன்படித்த காந்தியிடம் கென்யா செல்வதாக சொன்னபோது, அவன் தந்த ஒரே ஒரு அறிவுரை “தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான சூழலில் இருப்பதை தவிர்க்கவேண்டும்” என்பதுதான்.
கோவை விமானநிலையத்தில் ஏர் அரேபியா முகப்பில் பயணப் பைகளை எடைபோட்டு உள்ளனுப்பிவிட்டு டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளும்போது உதவி இளைஞன் “சார், கென்யாவுக்கா போறீங்க?; பாதுகாப்பான நாடா அது?” என்று கேட்டான் (புதிதாய் வேலைக்கு சேர்ந்திருப்பான் போலும்). புன்னகைத்தபடி “நண்பர்கள் இருக்கிறார்கள்; முதல்முறை செல்கிறேன்” என்று பதிலளித்தேன். இமிக்ரேஷனில் அழைப்புக் கடிதத்தையும், மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழையும் காட்டச் சொன்னார்கள். காத்திருப்பில் அமர்ந்திருந்தபோது, முதல் வாயில், சென்னை விமானத்திற்கான வரிசையில் அனந்த் வைத்தியநாதனும், டான்ஸ் மாஸ்டர் கலாவும் நின்றிருந்தார்கள்; ஏதேனும் கோவை நிகழ்ச்சிக்கு வந்து திரும்புகிறார்கள் போலும்; இயல் போய் ஹலோ சொல்லிவிட்டு வந்தார்.
ஷார்ஜாவில் விடிகாலை இறங்கும்போது அந்நேரத்திலும் காற்றில் மெல்லிய வெப்பமிருந்தது. விமான நிலையத்தினுள் வரி தீர்வயில்லா கடைகள் வரிசையாய் கலர் விளக்குகளோடு மின்னின. எங்கு பார்த்தாலும் பெரும்பாலும் நீண்ட வெள்ளை அங்கிகள்; கண்கள் மட்டும் திறந்துவிட்டு முழுதும் கறுப்பு நீளுடை அணிந்த பெண்கள். உள்ளேயே மும்பை உணவகம் ஒன்றிருந்தது. காபி குடித்துக்கொண்டிருக்கும்போது, ஏர் அரேபியா அலுவலர் ஒருவர் உள்ளே வந்து “சென்னை…சென்னை…சென்னை பயணிகள் யாரேனும் இருக்கிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் சத்தமாய் கூவினார். எனக்கு “சிதம்பரம்…மாயவரம்…சீர்காழீஈஈஈ…” ரைமிங் சாயலில் கேட்டது. மேஜை மேலிருந்த மெனு கார்டை புரட்டியபோது இட்லி, நெய் ரோஸ்ட், மசால் தோசையிலிருந்து, பாவ் பாஜி, தாபேலி வரை நம்மின் பெரும்பாலானவற்றின் பெயர் இருந்தது.
வான் போக்குவரத்து நெரிசலால்(!?) நைரோபி விமானம் ஒருமணி நேர தாமதம் என்ற அறிவிப்பு வந்தது. வாயில் முகப்பருகில் காத்திருக்கலாம் என்று பாதுகாப்பு சோதனைக்கு சென்றோம். நீண்ட வரிசை; ஏகப்பட்ட கெடுபிடிகள்; காவலர்கள் அனைவரும் கடுமையான முகபாவத்தோடு; அவர்கள் மொழியே மெல்லிய பதட்டம் தந்தது. ’அர்கோ’-வின் இறுதிக்காட்சி தேவையில்லாமல் எனக்கு ஞாபகம் வந்தது. சோதனைகள் முடிந்து படிகளில் இறங்கி தரைத்தளத்திற்கு சென்றபோது மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நுழைந்தது போல் இருந்தது – மக்கள் கூட்டம். குஜராத்தியும், தெலுங்கும் காதில் விழுந்தன. சக்கர நாற்காலியில் ஒரு முதுபயணியை அழைத்துவந்த ஏர் அரேபியா சிப்பந்தி நாங்கள் தமிழ் பேசுவதை பார்த்து “சார், கோயம்புத்தூர்லருந்து வர்றீங்களா? எங்க போறீங்க?” என்றார். பேசியதில் அவர் ஊர் கும்பகோணம் என்றும், ஷார்ஜா வந்து இரண்டு வருடங்களாகிறதென்றும் சொன்னார்; சம்பளம் குறைவுதான், பெரிதாய் ஒன்றும் சேமிக்க முடியவில்லை என்றார்.
மதியம் ஒரு மணிக்கு விமானம் நைரோபியில் தரையிறங்கியபோது, வெளியில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்று அறிவிப்பில் தெரிவித்தார்கள். இமிக்ரேஷனில் பணம் செலுத்தி மூன்று மாதத்திற்கான சுற்றுலா விசா வாங்கிக்கொண்டபோது (இரண்டு வருட வேலை விசா இரண்டரை மாதங்கள் கழித்து நிறுவனம் மூலம் விண்ணப்பித்து கிடைத்தது) பெண் அலுவலர் “கென்யாவிற்கு நல்வரவு; உங்கள் கென்ய நாட்கள் சிறப்பாய் அமையட்டும்” என்றார். சோதனையில் காவலர்கள் பயணப்பைகளை திறக்கச்சொல்லி மேலும் கீழும் புரட்டினார்கள். “நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசுப் பொருட்கள் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று விசாரித்தார்கள். முடித்து வெளியில் வந்தபோது, பெயரட்டையை தூக்கிப் பிடித்துக்கொண்டு அழைக்கவந்த ஓட்டுநர் நின்றுகொண்டிருந்தார். மேகமூட்டத்துடன் லேசான தூறல் இருந்தது. அந்த நண்பகலிலும் மெல்லிய குளிர்.
காரில் உட்கார்ந்ததும் “வீடு செல்ல எத்தனை நேரமாகும்?” என்று ஓட்டுநரிடம் விசாரித்தபோது “பொதுவாய் அரைமணி நேரம்தான் ஆகும்; போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்தால் ஒன்றரை மணி நேரம்கூட ஆகலாம்” என்றார். இருபக்கமும் கட்டிடங்களை பார்த்துக்கொண்டே வந்தோம். “ரேடியோ கேட்கிறீர்களா?; இந்திய சேனல்கள் இரண்டு வருகின்றன” என்று சொல்லி கார் ஸ்டீரியோ குமிழை திருகினார். டிடிஎல்ஜே(DDLJ)-வின் “கர் ஆஜா பர்தேசி தேரா…” பாட்டு ஒலித்தது. வந்த முதல் நாளேவா…நல்ல சகுனம் என்று நினைத்துக்கொண்டேன்.
நானறிந்த கென்யா, சில கிராமங்களும் சில நகரங்களும் (நைரோபி (தலைநகரம்), நகுரு, நைவாஸா, மோலோ, ஜோரோ ) மட்டுமே; வேறு நிலங்களில் மற்றுமொரு முகம் இருக்கலாம். விரிவாய் எழுத இன்னும் நுண்மையான வாழ்க்கை அவதானிப்புகள் எனக்கு குறைவு; குறுங்குறிப்புகளாய், அறிந்த கென்யாவை ( உள்ளில் பயணித்தது கொஞ்சமே!) பகிர்ந்துகொள்ளலாமென்று.
***
இந்தியர்களில், குஜராத்திகள் மிக அதிகம்; மூன்று/நான்கு தலைமுறைகளாய் கென்யாவிலிருக்கும் குடும்பங்கள் மிகுதி (முதல் தலைமுறை காலனி ஆட்சியின்போது இரயில் பாதை போடும் வேலைக்கு வந்தவர்கள்; இரண்டாம், மூன்றாம் தலைமுறை நல்ல செல்வத்தோடு செழிப்பாயிருக்கிறது); பெரும்பாலும் இளைய தலைமுறை பிரிட்டனிலோ, ஆஸ்ட்ரேலியாவிலோ படிப்பும், வேலையும். வயதான பிறகு கென்யா வந்து செட்டிலாகி விடுகிறார்கள்.
குஜராத்திகளை அடுத்து ஆந்திரா (முதல் முதலாய் மகள் ‘இயல்’-ஐ பள்ளியில் சேர்க்க, நைரோபியில் ஒரு பள்ளிக்குச் சென்றபோது, ஆந்திராவிற்குள் நுழைந்து விட்டோமா என்று சந்தேகமாய் இருந்தது – காதுகள் முழுதும் தெலுங்கு!; அதற்கு அடுத்துதான் கேரளமும், தமிழ்நாடும்.
நானறிந்த கென்யா, குறிஞ்சியும் மருதமும்; அற்புதமான காலநிலை!; முக்கிய தொழில் பயிர் – மலரும், காய்கறிகளும், மக்காச் சோளமும், தோட்டப்பயிர்களும்…; முக்கிய உணவு மக்காச்சோளமும், கீரையும், மாட்டிறைச்சியும்.
கிறித்தவர்கள் அதிகம் (இங்கு வந்த பிறகுதான் கிறித்தவத்தில் இத்தனை பிரிவுகள் இருப்பது தெரிந்தது; ஒரு கிராமத்தில் குறைந்தது மூன்று சர்ச்சுகள்); அடுத்து முஸ்லிம்கள் – சிறுபான்மை (பெரும்பாலும் ‘மொம்பாசா’ போன்ற கடற்கறை நகரங்களில்).
குழு மனப்பான்மை ((Tribalism) மிக அதிகம்; கிட்டத்தட்ட நாற்பத்தியெட்டு இனக்குழுக்கள் (TRIBES); அரசியலும், தேர்தலும், வாக்கு வங்கியும் இதை வைத்துத்தான்; 2007 தேர்தலின் போது, மிகப் பெரும் வன்முறையும், படுகொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறைகளுக்கு காரணம் அங்கே இருக்கும் பல விதமான இனகுழுக்களுக்கு இடையே அரசியல் தலைவர்களால் தூண்டப்பட்டு நிகழ்வது. 2013 – மார்ச்சில், ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. எங்கள் நிறுவனம் இருக்கும் பகுதியில் “கிகுயு” (Kikuyu) இனக்குழு மக்கள் தொகை அதிகம் (மொத்த கென்யாவிலும் இந்த இனக்குழுவே அதிகம்; முதல் ஜனாதிபதி “ஜோமோ கென்யாட்டா’ ஒரு கிகுயு!; இரண்டாவதாக “களஞ்சியன்ஸ்” (kalanjians)). தேர்தல் தொடங்கி முடிவுகள் வரும்வரை, பிற இனக்குழு சார்ந்த அனைவரும் விடுமுறை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், வன்முறை பயத்தினால். ஒரு இனக்குழு, பிற இனக்குழு சார்ந்த அரசியல் தலைவருக்கு கண்டிப்பாக ஓட்டுப்போடாது.
நானும் இங்கு வருமுன் ஆப்ரிக்கா, ஆப்ரிக்க மக்கள் என்றால் எதோ ஒற்றைப் பகுதி போலவும், ஒரு நில மக்கள் போலவும்தான் பிம்பம் கொண்டிருந்தேன். நண்பர்கள் வெவ்வேறு ஆப்ரிக்க நாடுகளில் (உகாண்டா, எத்யோபியா, டான்சானியா, ருவாண்டா) மலர், காய்கறி மற்றும் கரும்புப் பண்ணைகளை நிர்வகிப்பதால், தொடர்பிலிருப்பதால், உண்மையான சித்திரம் மெதுவாய்ப் புலப்படுகிறது.
கென்யாவை விட உகாண்டாவில் எய்ட்ஸ் விழுக்காடு அதிகம்; காரணம் வாழ்க்கை முறை; ஒரு பெண் பல ஆண்களை மணப்பதும், ஒரு ஆண் பல பெண்களை மணப்பதும் சர்வ சாதாரணம். உகாண்டாவில் சேலத்து நண்பர் இரு வருடங்கள் பணி புரிந்தபோது, வீட்டு வேலைப் பெண் அவர் மனைவியிடம் “Only one husband for 15 years???” என்று ஆச்சர்யத்துடன் கேட்டு நம்ப முடியாமல் சிரித்தாராம்.
1963 டிசம்பர் 12-ல், கென்யாவிற்கு சுதந்திரம் கிடைத்தது; உள்ளூர் மொழி “கிஸ்வாஹிலி”யாயிருந்தாலும் (தனி எழுத்துரு கிடையாது; ஆங்கில எழுத்துருதான்), பெரும்பாலும் அனைவருக்கும் ஆங்கிலம் பேசத் தெரியும்.
குடும்பத்திற்கு, குறைந்தது மூன்று குழந்தைகள்; அதிகம் எட்டு/பத்து என்று போவதுண்டு (இங்கு பணிபுரியம் இரு ஓட்டுநர்களுக்கு தலா எட்டு குழந்தைகள்); குடும்பக் கட்டுப்பாடு முன்பு பெரும்பாலும் கிடையாது. தற்போது விழிப்புணர்வு பரவலாகியிருக்கிறது.
ஸ்கூட்டர்கள் மிக மிகக் குறைவு; பெண்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதில்லை; சைனா பைக்குகள் அதிகம் (TVS, Bajaj – ம் இருக்கிறது). பொதுவாகவே சைனா பொருட்கள் மார்க்கெட்டில் மிக அதிகம் கிடைக்கிறது.
நைரோபியில் இரண்டு ஹிந்தி FM சேனல்கள் ஒலிபரப்பாகின்றன. 15000 ஷில்லிங்கிற்கு, டிஷ் மாட்டி தென்னிந்திய சேனல்கள் தருகிறார்கள்; மாதத் தவணைக் கட்டணச் சேவையில், பெரும்பாலும் ஹிந்தி மற்றும் செய்தி சேனல்கள். பெரிய வணிக வளாகங்களில் மட்டும்தான் திரைப்படங்களுக்கான திரைகள். தனியாக ஏதும் தியேட்டர்கள் கிடையாது. ஹிந்தி திரைப்படங்கள், இந்தியாவில் ரிலீஸ் ஆகும்போதே, இங்கும் ஆகின்றன. தமிழ் படங்கள், தமிழ் கலாச்சார அமைப்பின் மூலம் ஒன்றிரண்டு காட்சிகள் திரையிடப்படுகின்றன.
பெண்கள், குழந்தைகளை, நடந்து செல்லும்போது பெரும்பாலும் முதுகில் கட்டிக் கொள்கிறார்கள், துணியால். குழந்தைகள் வெகு அமைதி; 99%, இந்த ஐந்து வருடத்தில், அழும், அடம் பிடிக்கும் கென்யக் குழந்தையை நான் பார்த்ததேயில்லை. (அழுது ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற உளவியல் காரணமாயிருக்கலாம்!). நான்கு வயதுக் குழ்ந்தைகள் கூட, தோளில் பையை மாட்டிக் கொண்டு பள்ளிக்குத் தனியே செல்கின்றன.
கீழிலிருந்து, மேல் மட்டப் பெண்கள் வரை, இயன்ற அளவுக்கு, விதவிதமாய்ப் பின்னிய தலை அலங்காரங்களை வாங்கி, மாதத்திற்கு ஒருமுறையோ, வாரத்திற்கு ஒருமுறையோ மாற்றிக் கொள்கிறார்கள். (ரெடிமேட் பின்னல்கள், அங்காடிகளில் 500 லிருந்து 10000 ஷில்லிங் வரை கிடைக்கின்றன). தங்களின் இயற்கை முடி குறித்த ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை, பெண்களிடம் இருக்கிறது. முடியையும், நிறத்தையும் குறித்து மறந்தும் கூட யாரிடமும் விளையாட்டாய் கூட கமெண்ட் அடிக்காமல் இருப்பது நல்லது; மிக எளிதாய்ப் புண்படுவார்கள்.
மருந்துகள், இந்தியாவை விட மூன்று மடங்கு விலை அதிகம்; மருத்துவர் செலவும் அதிகம்; அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குறைவு; இந்தியர்கள், அறுவைச் சிகிச்சை என்றால் (அப்பெண்டிஷைடிஷ், டான்சிலிடிஷ் – க்கு கூட) இந்தியா போய் வந்துவிடுகிறார்கள். துணியும் விலை அதிகம்.
தமிழ் வார, மாத இதழ்கள் கிடைக்கின்றன – ஐந்தரை மடங்கு அதிக விலையில்.
என் சிறுவயதுக் காலங்கள், பூமணியின் (பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை) கிராமத்துப் பள்ளிக் கூடங்களாலும் (தந்தை கிராமத்துப் பள்ளி ஆசிரியர்), கிரா-வின் கரிசலாலும், கூளமாதாரியின் பனங்காடுகளாலும், நெடுங்குருதியின் வெயிலாலும் ஆனவை (சொந்த ஊர் மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் கள்ளிக்குடி சத்திரம் அருகில் ‘ஓடைப்பட்டி’ என்றொரு கிராமம்). மும்பையிலிருந்த போதாவது, அவ்வப்போது பிறந்த கிராமம் சென்று வருவதுண்டு. கென்யா வந்தபிறகு, நினைவுகள் ஏக்கங்களாகி விட்டன.
மத்திய, மேற்கு மற்றும் தெற்கு கென்யாவில் சுத்தமாய் கரிசல் கிடையாது. எங்கும் பச்சைதான். வடக்கு கென்யா மிகவும் வறண்டது; உணவுக்கும், தண்ணீருக்கும் பஞ்சம் வருவதுண்டு; சோமாலியாவின் சாயல் படிந்தது.
போக்குவரத்து பிரிவும், காவல் துறையும் மிகு ஊழல் பிரிவுகள்; Nairobi West Gate வணிக வளாக தீவிரவாத சம்பவத்தில் (கிட்டத்தட்ட முந்நூறு பேர் செத்துப்போனார்கள்; ஊடகம் 75 என்றது!), தீவிரவாதிகள் அனைவரும் தப்பிப் போனார்கள்; பிணைக் கைதிகளைக் காப்பாற்றப் போகிறோம் என்று உள்ளே புகுந்த துணை ராணுவமும், காவலும் அங்கிருந்த எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டது!. (பார்லிமென்டில் விஷயம் நாறியது!).
கிராமங்களில் மாட்டு வண்டிகள் இல்லை; கழுதைகள் பூட்டிய மிகச்சிறு வண்டிகள் பயன்படுத்துகிறார்கள்; மலர்ப் பண்ணைகளிலும்; நாங்கள் இரு வண்டிகள் உபயோகிக்கிறோம் – குப்பை அகற்றிச் செல்ல.
தாய் வழிச் சமூகம் தான்; ஆண்கள் திருமணத்தின் போது, பெண்ணின் பெற்றோருக்கு வரதட்சணை தரவேண்டும் – பெண்ணுக்கு அல்ல! (தரவில்லையென்றால் குடும்பத்தில் கெட்டவைகள் நடக்கும் என்ற மூட நம்பிக்கை உண்டு). பெண்ணைப் பெற்றவர்கள் மிகுந்த சந்தோஷம் கொண்டவர்கள் (55 வயதான எங்கள் சமையல்காரருக்கு 7 பெண்கள்; “அவருக்கென்ன, ராஜா – அவருக்கு ஏழு பொண்ணு!” என்று உடன் வேலை செய்யும் மற்றொருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்). அம்மாவும் குழந்தைகளும் மட்டும் கொண்ட குடும்பங்கள் அதிகம் (Single mothers are more); குழந்தை முக்கியம்; அப்பா முக்கியமில்லை!
2011 – ல், Ol’kalou – ல் பணி புரிந்தபோது, இயலும், மல்லிகாவும் Nakuru – ல் இருந்தார்கள் (நல்ல பள்ளி Nakuru-ல் இருந்ததால்); நான் வாரம் ஒருமுறை Nakuru போய் வந்து கொண்டிருந்தேன். (Nakuru – ல், “செக்சன் 58” ஏரியாவில் வசிப்பது, மல்லிகாவிற்கு மும்பையில் வசித்தது போலத்தான்; ஒரு வயதான குஜராத்தி தம்பதியினரின் வீட்டு காம்பவுண்டிற்குள் இருந்த இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம்; மல்லிகாவால் தனியாய் எல்லாம் செய்து கொள்ள முடிந்தது – கரண்ட் பில் கட்டுவது, பள்ளிக்குச் செல்வது, கடைகளுக்குச் செல்வது (Nakuru – ல் ஆட்டோ உண்டு; நைரோபியில் குறைவு!).
ஒரு முறை, Ol’kalou – லிருந்து, Nakuru – விற்கு, மட்டாட்டுவில் (Puplic transport – 14 seater) போகலாமென்று முடிவு செய்து (ஒரு மணி நேரப் பயணம் – 150 கென்ய ஷில்லிங்), Ol’kalou நிறுத்தத்தில், ஒரு மட்டாட்டுவில் ஏறி ஒட்டுநர் இருக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேன்; பக்கத்தில் இருக்கை காலியாயிருந்தது. பத்து நிமிடம் கழித்து ஒரு பெண் (25/30 வயதிருக்கலாம்) கையில் குழந்தையும் (ஆறு மாதங்களாயிருக்கும்), பைகளுமாய் வந்து ஏற முயன்றார்; ஏற சிரமப்பட்டதால், குழந்தையை நான் வாங்கி மடியில் வைத்துக்கொண்டு (இருக்கையில் உட்கார்ந்தபின் கொடுத்து விடலாமென்று), ஏறச் சொன்னேன்.
குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு ஏறி, அருகிருக்கையில் பைகளுடன் வசதியாய் அமர்ந்துகொண்டார்; உட்கார்ந்தவுடன் குழந்தையை வாங்கிக் கொள்வார் என்று நினைத்தேன்; கேட்கவேயில்லை!!!; குழந்தையும் அம்மாவிடம் போக வேண்டுமென்று அழவில்லை; பக்கவாட்டில் திரும்பி குழந்தையை அவ்வப்போது கொஞ்சுவதோடு சரி; முழுப் பயணத்திலும் குழந்தை என் மடியிலேயே இருந்தது; இறங்கும் போது வாங்கிக் கொண்டார்.
ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது – ஐந்து வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து கொடுக்க அரசு ஆணையிட்டது; கிராமங்களில் மருத்துவ அலுவலர்களை வீடு வீடாகச் சென்று போடுமாறு சொல்லியிருந்தது.
ஒரு “செக்ட்” – ஐச் சேர்ந்த (தலையில் வெண்ணிற டர்பன் அணிகிறார்கள்) கிராம சர்ச்சுகள் (மருத்துவர் மற்றும் மருந்துகள், தங்கள் குழுவிற்கு எதிரானவை என்று நம்புபவர்கள்) அவர்களின் மக்களைக் கூப்பிட்டு, “சாத்தான்கள் வீடு தேடி வருகின்றன; அனுமதிக்காதீர்கள்; பாதுகாப்பாயிருங்கள்” என்று அறிவுறுத்த, அவர்களின் வீடுகளுக்குச் சென்ற மருத்துவ அலுவலர்களுக்கு, சட்சட்டென்று உடனடியாய் பூட்டிக் கொண்ட வீட்டிற்குள்ளிருந்து, பிரார்த்தனைச் சத்தம்தான் கேட்டிருக்கிறது “எங்களைக் காப்பாற்றும்! எங்களின் வீடுதேடி வந்து எங்களை பாழும் நரகக் குழிக்குள் தள்ள நினைக்கும் சாத்தான்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்!”.
ஒருசில இடங்களில் கைகலப்பும் நடந்திருக்கிறது; பின்னர் மருத்துவ அலுவலர்கள், போலீஸோடு போனார்கள்
இரண்டு பெரும் டெலிகாம் நிறுவனங்கள் – Safaricom மற்றும் Airtel; பின்பு எஸ்ஸார், “யு (Yu)” என்ற பெயரில் நுழைந்தது. 2012 இறுதி வரை, சிம் கார்டு வாங்க ஒரு டாகுமெண்டும் தரத் தேவையில்லை; வீதிக்கு வீதி சிம் கார்டுகள் கிடைக்கும் – 100 ஷில்லிங்கில்; 2012 இறுதியில், அரசு உத்தரவினால், டெலிகாம் நிறுவனங்கள் அனைத்து எண்களையும் கண்டிப்பாய் பதிவு செய்யச் சொல்லியது; பதியாத எண்கள் சேவை நிறுத்தப்பட்டன.
எல்லா பெட்ரோல் ஸ்டேஷன்கள், வணிக வளாகங்களில், கேஸ் ஸிலிண்டர்கள் கிடைக்கின்றன; மண்ணெண்ணையும்.
வீடுகளில் தண்ணீருக்கு மீட்டர் உண்டு; மாதம் ஒருமுறை “Kenya Water Board” – ற்கு, உபயோகிக்கும் அளவிற்குத் தகுந்தவாறு, பணம் கட்ட வேண்டும்.
நகரங்களுக்குள் பயணிக்க, சைக்கிள்களும், “போடோ போடோ” எனப்படும் பைக்குகளும் கிடைக்கின்றன.
மலேரியா காய்ச்சல் வெகு சாதாரணம் (கென்யாவை விட உகாண்டாவில் அதிகம்); உள்ளூர் தொலைக்காட்சிகளில், மலேரியா மருந்துகளுக்கு விளம்பரம் வருகிறது!.
வருகை விசா முன்பு கிடைத்தது, விமான நிலையத்தில் (தற்போதைய நிலவரம் தெரியவில்லை). மூன்று மாதத்திற்கு 50 டாலர் ஒருவருக்கு; வேலை செய்ய அரசிடம் விண்ணப்பித்து “வேலை அனுமதி (Work Permit)” பெறவேண்டும். வருடத்திற்கு கட்டணம் 200000 கென்ய ஷில்லிங்.
கென்யா வர “மஞ்சள் காய்ச்சல் (Yellow fever)” vaccine போட்டு, சான்று அட்டை வைத்திருக்க வேண்டும். மும்பையில் Vaccine போட நானும், மல்லிகாவும், இயலும்செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருந்த மருத்துவமனை வாக்ஸின் அறைக்கு வெளியே காலை 6 மணியிலிருந்து வரிசையில் நின்றிருந்தோம் (அதற்கு முன்பே இருபது பேர் வந்திருந்தார்கள்!); பத்து மணிக்கு கதவு திறந்து இரண்டு பேருக்கு போட்டபின், ஊழியர் வந்து “Vaccine” மருந்து தீர்ந்து விட்டது; ஏர்போர்ட்டிற்குப் பக்கத்திலிருக்கும் இன்னொரு சென்டருக்குப் போகச் சொன்னார்; அங்கிருந்து ஏர்போர்ட் 15 கிமீ; டிராபிக்கில் சிக்கி போய் சேர்வதற்குள் மூடிவிடுவார்கள்; இன்னொரு நாள் வரலாமா என்று யோசித்து (கிளம்புவதற்கு மூன்று நாள்தான் இருந்தது), சரி போய்தான் பார்ப்போமே என்று அங்கு போனால், மிகப்பெரிய வரிசை!; பார்க்கிங் கிடைக்காமல் அலைபாய (3 floor parking), அங்கிருந்த பார்க்கிங் அட்டெண்டர் விஷயம் கேட்டு, 2000 ரூபாய் ஒரு வாக்சினுக்கு கொடுத்தால் (300 ரூபாய் – மருத்துவமனையில்), உணவு இடைவேளையில், டாக்டர் கார் எடுக்க வரும்போது இங்கேயே போட்டுவிடலாம் என்றார்; அட!!!; பணம் கொடுத்து இரண்டு மணி நேரத்திற்குப் பின்பு, டாக்டர் வர, காருக்குள் சென்று ஒவ்வொருவராய் ஊசி போட்டுக் கொண்டோம்; உச்சம், இயல் ஊசி போட்டுக் கொள்ளும்போது, பெருங்குரலெடுத்து அழ, பார்க்கிங்கில் ஒன்றிரண்டு பேர் திரும்பிப் பார்த்தார்கள்; டாக்டர் பயந்து போனார்!!!.
கிறித்தவத்தின் ஒரு குறுங்குழுவான “மொகரினோ”க்கள்; மற்றுமொரு குழுவான “ஜெகோவா விட்னஸ்” மற்றும் சில “ஏழாம் நாள்” குழுக்கள், வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்கின்றன; ஏழாம் நாள் ஓய்வு என்பதால் சனிக்கிழமைகளில் எந்த வேலையும் செய்வதில்லை; அவர்களின் சர்ச்சுகளின் பிரார்த்தனைக் கூட்டங்கள், சனிகளில் தான்.
கென்யாவின் முதல் ஜனாதிபதி ஜோமோ கென்யாட்டா. கென்யாவின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்; தற்போதைய நைரோபி பன்னாட்டு விமான நிலையம் இவர் பெயரில்தான்.
எய்ட்ஸை விட கேன்சருக்கு அதிகம் பயப்படுகிறார்கள்!
உள்ளூரில் எடுக்கும் திரைப்படங்கள் மிக மிகக் குறைவு (அநேகமாக ஒன்றிரண்டு); நைஜீரியத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம்.
கடைசி ஈமக் கிரியைகள் (Funeral), இறந்த பின், வாரம் அல்லது பத்து நாள் கழித்து, சர்ச்சில் கேட்டு, தேதி குறித்து, பத்திரிகை அடித்து, சுற்றம், நண்பர்கள் அனைவரையும் அழைத்து நடத்துகிறார்கள்; மிகவும் செலவு பிடிக்கும் காரியம் (எங்கள் நிறுவனத்தில் “Funeral Fund” என்று ஒன்று உண்டு – ஊழியர்களுக்கு); இறந்தபின், கடைக்காரிய நாள் வரை, உடல் பாதுகாக்க, நாள் வாடகை அமைப்புகள் இருக்கின்றன.
உள்ளூர் மக்களின் உணவு முறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று; மக்காச்சோள மாவில் களி (ஓசூர் பகுதியின் “ராகி முத்தா” (ராகிக் களி உருண்டை) போல), வேக வைத்த அல்லது சுட்ட மாட்டிறைச்சி (மசாலா சேர்க்காத!), சுகுமா எனப்படும் கீரை (நம்ம ஸ்பினாச் மாதிரி), சிவப்பு பீன்ஸ், பாசிப் பயறு, வேக வைத்த உருளைக் கிழங்கும், மக்காச் சோளமும்.
மிளகாயும், மசாலாவும் கொஞ்சமும் உள்ளூர்க்காரர்களுக்கு ஒத்துக் கொள்ளாது; ஒரு முறை, ஒரு உள்ளூர் நண்பரை, பகலுணவிற்கு அழைத்து, சாம்பாரைக் கொஞ்சமாய் சுவைத்துப் பார்க்கச் சொன்னோம்; மிளகாய் போடாத (மல்லிகா மிளகாய் உபயோகிப்பதை நிறுத்தி ஆறேழு வருடங்களிருக்கும்) அந்த சாம்பார் சாப்பிட்டதற்கே, மூக்கிலும், கண்களிலும் நீர் அவருக்கு!; “எப்படிச் சாப்பிடுகிறீர்கள்?” என்றார்!; சமையலில் எண்ணெய் உபயோகிப்பதும் குறைவு. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இயற்கை உணவுகள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள்; அவர்கள் வந்தபின் உணவைச் சமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் (மக்காச்சோளம் பயிரிட ஆரம்பித்தது ஆங்கிலேயர்களின் கால்நடைகளுக்காய்!); இப்போது கடந்த நூறு ஆண்டுகளின் இந்தியர்களின் கலப்பால், மசாலாக்கள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன. (Nakuru-ல் வீட்டிற்கு காய்கறி விற்க வரும் உள்ளூர் பெண்கள் சரளமாய் குஜராத்தி பேசுகிறார்கள்!).
நகரங்கள் தவிர, மற்ற உள் பிரதேசங்களிலும், பண்ணைகளிலும், கிராமங்களிலும், மின்கம்பங்களுக்கு பெரும்பாலும் மரத்தூண்கள்தான். மின்சார உற்பத்தி மிகுதியாக தண்ணீரிலிருந்து; கொஞ்சமாய் தெர்மல், ஜியோதெர்மல் மற்றும் காற்றாலை. அணு உலை இதுவரை கிடையாது.உட்பகுதி கிராமங்களுக்கு சரியான சாலை மற்றும் மின் வசதி கிடையாது.
சந்திப்புகளின் போது கைகுலுக்கி வணக்கம் சொல்வது (ஆண், பெண் இருவருக்கும்) வழக்கம்; முன்பின் அறிமுகமில்லாவிட்டாலும், ஒரு இடத்திற்குச் செல்லும்போது, அங்கிருக்கும் அனைவருடனும் கைகுலுக்கி வணக்கங்கள் சொல்வது மரபு. இரண்டு வருட கென்ய வாசத்திற்குப் பிறகு, ஒரு முறை விடுமுறையில் கோவை சென்றிருந்தபோது, இளங்கலை உடன்முடித்த, சில நண்பர்கள் நண்பிகள், குடும்பத்தோடு, இரவு உணவிற்குச் சந்தித்தோம். ஹலோ சொல்லிக் கைகொடுக்க மஹாவும், சரஸ்வதியும் சிரித்துக் கொண்டே கைகுலுக்கினார்கள்; எதற்குச் சிரிக்கிறார்கள் என்று கணநேரம் யோசிக்க, மல்லிகா காதில் கிசுகிசுத்த பிறகுதான் சுதாரித்தேன்!.
ஆழ்துளைக் குழாய் அமைக்கும் நிறுவனங்களில் பாதி, தென்னிந்தியர்கள்; ஆந்திரா, தமிழ்நாடு (குறிப்பாய் சேலம், ராசிபுரம்).
முன்னணி செய்தித்தாள்கள் – ஆங்கிலத்தில் Daily Nation, The Standard, The Star…; செய்தித்தாள்கள் நம் முன்னால் “ஜூனியர் போஸ்ட்” வடிவ அளவில்தானிருக்கும்; ஆனால் 45/50 பக்கமிருக்கும் தினசரி. உள்ளூர் மொழி “ஸ்வாஹிலியில்” ஒரே ஒரு தினசரிதான் பிரபலம் – “Taifa leo” (meaning ‘Nation Today’). குறைந்த பதிப்பில் “Nairobi Times’ ம், வாரம் ஒருமுறை வரும் “Aian Weekly’”-ம் உண்டு.
தனி எழுத்துரு இல்லாததால் (ஆங்கில எழுத்துக்கள்தான்), உள்ளூர் மொழி “கிஸ்வாஹிலி” கற்றுக் கொள்வது எளிது.
கிருஸ்துமஸ் கொண்டாட்ட மனநிலையும், விடுமுறை எதிர்பார்ப்புகளும் டிசம்பர் முதல் வாரத்திலேயே துவங்கிவிடும். நிறுவனங்களைப் பொறுத்து விடுமுறை 15 நாட்களிலிருந்து ஒரு மாதம் வரை நீளும். அரசு அலுவலகங்களில், டிசம்பரில் ஏதேனும் பணி நிறைவுகள்/முடித்தல் எதிர்பார்ப்பது வீண். நாங்கள் டிசம்பருக்கான பயிர் மருந்துகள், உரங்கள் நவம்பரிலேயே வாங்கிவிடுவது வழக்கம். ஏதேனும் இறக்குமதி செய்யவேண்டியதிருந்தால், டிசம்பரில் ‘Container’ துறைமுகம் (மொம்பாசா) வராமல் பார்த்துக்கொள்வது நல்லது; வந்தால் clear செய்ய மாதமாகலாம். நிறுவனங்கள் கிறிஸ்துமஸூக்கு, பணியாளர்களுக்கு பரிசு கொடுப்பதுண்டு. பெரும்பாலும் ஊதிய உயர்வும், டிசம்பரில்தான் ஆரம்பிக்கும். உள்ளூர் Kenyan சிலபஸ் பள்ளிகள், முழு டிசம்பரும் விடுமுறை. (பள்ளி புது வகுப்புகள் ஜனவரியில் துவங்கும்).
கொண்டாட்டமென்றால், புது ஆடைகளும், மது அருந்துவதும், மாமிசம் உண்பதும்தான் (ஆண்கள் தங்கள் நண்பிகளுக்கு விதவிதமான வித்தியாசமான முடிப்பின்னல்கள் பரிசளிப்பதுண்டு).
மேலதிகாரிகள், ஏன் இயக்குனர்களே வந்தால் கூட, உள்ளூர் கடைநிலைப் பணியாளர்கள் கூட எழுந்து நிற்பதில்லை; உட்கார்ந்துகொண்டேதான் வணக்கம் சொல்கிறார்கள் (வந்த புதிதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது); பெயர் சொல்லித்தான் கூப்பிடுகிறார்கள்; உயரதிகாரி என்றால் பெயருக்கு முன்னால் மிஸ்டர் போட்டுக்கொள்வது. நான் எங்கள் இயக்குநருடன் பேசும்போது சார் தான் உபயோகிப்பது வழக்கம்; என் கீழ் பணிசெய்யும் தொழிலாளர் அறையுள் வந்தால் “Mr.Naren” என்று இயக்குநரை விளிப்பார்; சுவாரஸ்யமாயிருக்கும்!.
வரிக்குதிரைகளும், மான்களும் வெகு சாதாரணமாய் சாலையோரங்களில் மேய்ந்து திரிவதுண்டு – குறிப்பாய் Nakuru – Naivasha சாலை மற்றும் Naivasha – Ol’kalou சாலை; மிக உள் சார்ந்த சில மலர் வளர்ப்பு நிறுவனங்களுக்கு செல்லும்போது ஒட்டகச்சிவிங்கிகளும் தென்படுவதுண்டு. முன்பு வேலை செய்த கம்பெனிக்கு (New Holland Flowers) முன்னால், ஒரு சின்ன கால்வாய் ஓடும் (இங்கு சின்னச் சின்னதான கால்வாய்களை ஆறு என்பார்கள்); கம்பெனிக்குள் வருவதற்கு மரப்பாலம் போட்டிருந்தோம். ஒருமுறை காட்டிலிருந்து கால்வாய் வழியாக நீர்யானை ஒன்று வந்து பாலத்திற்கடியில் நின்றுகொண்டிருந்தது. வேலைக்கு வந்தவர்கள் பயந்துபோய் பாலத்திற்கு அந்தப்பக்கமே நின்றுகொண்டிருந்தார்கள் (இரண்டாய் இருந்தால் பயமில்லை; தனியாய் இருப்பதால் தாக்கும் என்றார்கள்); வனத்துறைக்கு போன்செய்து, ஆட்கள் வந்து கால்வாயோடு ஓட்டிப்போனார்கள்.
உள்ளூரில் இந்தியர்களை “முஹிண்டி” என்றும் வெள்ளையர்களை “முஜூங்கு” என்றும் அழைக்கிறார்கள். உள்ளூர்க்காரர்களுக்கு, இந்தியர்களை விட டச்சுக்காரர்களை மிகவும் பிடிக்கிறது; வெள்ளையர்கள் மரியாதை கொடுக்கத் தெரிந்தவர்கள் என்கிறார்கள். பெரும்பாலான ஆரம்பகால மலர் வளர்ப்பு நிறுவனங்கள், டச்சுக்காரர்களால் துவங்கப்பட்டவை. இஸ்ரேல், ஹாலந்துக்காரர்களும் அதிகமாய் செட்டிலாகியிருக்கின்றனர்; பெரும்பாலான டச்சுக்காரர்கள், கென்யா வந்தபின், தங்கள் நாடுகளுக்குத் திரும்புவதில்லை. கணிசமானோர் உள்ளூர் கென்ய பெண்களை மணந்து, குழந்தைகள், குடும்பமாய் தங்கி விடுகிறார்கள்.
முந்தைய கம்பெனியில், “ரோஸ்” என்று ஒரு பெண் (26 வயதிருக்கும்; பெந்தகொஸ்தே வகுப்பு) கேண்டீனில் சமையல் செய்துகொண்டிருந்தார். (இந்திய சமையல் அனைத்தும் அத்துபடி; 10 வயதிலிருந்து, ஒரு இந்திய மேலாளர் வீட்டில் வேலை செய்து, அனைத்து இந்திய உணவுகளும் சமைக்க பழகியிருந்தார்; தோசையும், சர்க்கரைப் பொங்கலும் அட்டகாசமாய் செய்வார்!).
கொஞ்சம் விவரமாய் பேசுவார்; உள்ளூர் பழக்க வழக்கங்கள் புரிந்துகொள்ள அடிக்கடி ரோஸூடன் பேசுவதுண்டு. இன்னும் திருமணமாகவில்லை. “ஒரு இந்தியரை திருமணம் செய்துகொள்ள விரும்புவாயா?” என்றபோது அவசரமாய் மாட்டேன் என்று மறுத்தார். திருமணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாமென்றும், ஆனால் ஒரு பெந்த்கொஸ்தே கென்ய ஆணை மணப்பதற்கு முன், ஒரு இந்தியக் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமென்றார். ரோஸூக்கு இந்திய ஆண் நண்பர்கள் அதிகம்.
“கென்ய ஆணை விட இந்திய ஆண் நல்ல தேர்வு இல்லையா?; உங்கள் கென்யாவில் ஆண்கள் பல பெண்களை மணக்கிறார்களே… மணக்காவிட்டாலும், பல பெண்களோடு…; இந்திய ஆண், மணந்தால் ஒரு பெண்தான்-வாழ்வு முழுமைக்கும்.” என்று சொன்னபோது சிரித்தார். “இந்தியாவில் ஆண்கள் எப்படி என்று தெரியாது; ஆனால் கென்யா வந்தபின்னான இந்திய ஆண்களைப் பற்றி எனக்குத் தெரியும்” என்று சொல்லி மறுபடி சிரித்தார்!
நான் கவனித்த அளவில், பெரும் சதவிகித கென்ய பெண்கள் மிக பலசாலிகள்; உணவு முறையாலும், இயற்கையாலும் உடல் உறுதியானவர்கள்; மனதளவிலும் கூடத்தான் என்று நினைக்கிறேன். தனியாகவே வேலை செய்து குழந்
ஈராறு கால்கொண்டெழும் புரவி- கடிதங்கள்
இமைக்கணம் – வெண்முரசின் கனி
முஞ்சவான் மலையில் தவம் இயற்றும் யமனை சந்திக்கச் செல்லும் நாரதர் முன், அவன் காவலுக்கு நிறுத்திய யமகணங்கள் விலங்குகளாக, அவரின் தோற்றங்களாக, அவர் அறிந்த தேவர்களாக, முத்தெய்வங்களாக இறுதியாக கால வடிவாக தோன்றி தடுக்கின்றன. விலங்குகளை நான் என்றும், தன் தோற்றங்களை தேவர்கள் என்றும், தானறிந்த தேவர்களை தெய்வம் என்றும், முத்தெய்வங்களை பிரம்மம் என்றும், பெருங்காலத்தை அகாலம் என்றும் நுண் சொல் உரைத்து வெல்கிறார் நாரதர். இந்த இரு பாராக்களில் மானுட ஞான மரபின் (இந்திய ஞான மரபு என்றும் சொல்லலாம்) பரிணாமத்தின் கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறார் ஜெ.
இமைக்கணம் – வெண்முரசின் கனிFebruary 23, 2021
விவாதத்தின் நெறிமுறைகள்
ஜெ,
2009 ல் உங்கள் அமெரிக்க வருகையினை ஒட்டி கலிஃபோர்னியா ஃப்ரீமாண்டில் நாங்கள் குழுமமாக இயங்கத் தொடங்கினோம். அதன் முக்கிய பங்கு ராஜனையே சாரும்.
மாதம் ஒரு முறை நாங்கள் கூடுவதன் முக்கிய பயன் ஒரு புத்தகத்தைத் தனி அறையில் படித்துக் குருடன் யானையைப் பார்த்த கதையாக ஒரு குறிப்பிட்ட கருத்தை வளர்த்துக் கொண்டு இருந்த மனப்பான்மை விலகுகிறது. பல புதிய கோணங்கள் வெளிப்படுகிறது. கூடவே நட்பான சச்சரவுகளும் சில சமயம் வெளிப்படுகிறது. :-) அதனால் விவாதம் சில சமயம் திசை மாறுகிறது. புறவயமான கருத்தைக் கண்டு பிடிக்க முடிவதில்லை என்ற ஏக்கமே மிஞ்சுகிறது.
சமீபத்தில் ஜடாயு கலந்து கொண்ட பொழுது கம்ப ராமாயாணம் விவாதம் நடந்தது. அவரின் ஞானம் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் என்பதால் அனேகமாக ஒரு வகுப்பு மாதிரி நடந்து முடிந்தாலும் மகிழ்ச்சி தருவது என்னவென்றால் ஒரு கட்டமைப்புக்குள் அடங்கியது என்பதே. இதனால் அந்த மூன்று மணி நேரம் தரமான நேரமாக அமைந்தது.
இது போல் பிற மாதக் கூட்டங்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும்? எனக்கு இருக்கும் சில கேள்விகள்
1) இந்த மாதிரி புத்தகக் குழு விவாதிப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது எப்படி? – இப்பொழுது நடப்பது என்னவென்றால் எல்லோரும் தங்கள் கருத்துகளைத் தன் போக்கில் தோன்றியவாறெல்லாம் பேசுகிறோம். இதனால் பல கருத்துக்கள் சிதறி ஒருங்கிணைக்க முடியாமல் போய் விடுகிறது.
2) பொதுவாக ஒரு புத்தக விவாதிப்பிற்கு வேண்டிய அம்சங்கள் யாவை?
3) புத்தகத்தின் எந்தக் கூறுகளை விவாதிப்பது? உதாரணத்திற்கு, ஆசிரியரின் சரிதை, புத்தகத்தின் கதைச் சுருக்கம், கதையின் கருத்து, கருத்துக்களில் சார்பு நிலை எடுத்துக் கொண்டு குழுக்களாக பிரிந்து விவாதிப்பது போன்றவை. இவற்றில் விவாதிக்கத் தக்கவை எவை, விவாதிக்க வேண்டாதவை எவை? இது தவிர வேறு எது விவாதிக்கப் பட வேண்டியவை?
4) ஒரு case study மூலம் இதை விவரிக்க முடியுமா? உதாரணம் 18ஆம் அட்சக் கோடு என்ற புத்தகத்தை எப்படியெல்லாம் விவாதிக்கலாம்?
5) முக்கிய கேள்வி – கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்? என்ன சாதித்திருக்க வேண்டும்?
6) வேறு என்ன இதன் நோக்கமாக இருக்க வேண்டும்?
இதற்கு ஒரு கோனார் நோட்ஸ் நீங்கள் போட்டால் மிக உதவியாக இருக்கும்.
நன்றி.
bags
அன்புள்ள bags
முப்பது வருடங்களுக்கு முன்னரே பயணம், விவாதம் ஆகியவற்றைப்பற்றி நித்யா சில விதிகளை அமெரிக்க குருகுலத்திற்காக எழுதியிருந்தார். அவற்றின் நடைமுறைப்பயன்பாடுகளைக் கண்டு நானே கொஞ்சம் அவ்விதிகளைக் கொஞ்சமாக விரித்துக்கொண்டேன். அவற்றைப் பல தருணங்களிலாக நண்பர்களுக்கு எழுதியிருக்கிறேன்.
இவை விவாதங்களுக்கான நடைமுறை விதிகள். நான் நடத்திய பல்வேறு கூட்டங்கள் வழியாக அடைந்த அனுபவ அறிவு என இதைச்சொல்லலாம்.
1. ஒருவிவாதத்துக்கு எப்படியும் ஒரு மட்டுறுத்துநர் [moderator] தேவை. அவர் யார் என்பதைப் பொதுவாகத் தீர்மானிக்கலாம். ஆனால் அவர் ஒரு கட்டுப்பாட்டுச் சக்தியாக செயல்பட்டாகவேண்டும். அந்த விவாதத்தில் அவரது சொல்லுக்குப் பிறர் அடங்கியாகவேண்டும். கூடவே அவர் ஒரு சமரச சக்தியாகவும் செயல்படவேண்டும். அவர் ஒரு தரப்புக்காக செயல்படாமல் எல்லாத் தரப்பும் தங்கள் சிறந்த கருத்துக்களை முன்வைக்க உதவக்கூடியவராக இருந்தாகவேண்டும்.
2. ஓர் அமர்வுக்கு எப்போதுமே பேசுதளம் வரையறுக்கப்பட்டாகவேண்டும். [Frame of Reference] ஒரு விவாதத்தில் அந்த விவாதக்குழு எந்தத் தளத்தில் நின்றுபேசப்போகிறது என்பதை அவர்கள் பொதுவாக ஒத்துக்கொண்டாகவேண்டும். ஒரு தலைப்பு, அந்தத் தலைப்பை ஒட்டிப் பேச்சுக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள், அங்கே விவாதிக்கவேண்டிய விவாதமுறைமை ஆகியவற்றைப்பற்றிய ஒரு பொதுவான புரிதல் இது.
உதராணமாக அசோகமித்திரனின் நாவல்கள் என்ற தலைப்பில் ஒருவர் பேசலாம். அப்போது விஷயம் அசோகமித்திரனின் எழுத்து என்ற தளத்தை முதல் வட்டமாகக் கொண்டுள்ளது. இது முதல் பேசுதளம். அசோகமித்திரன் செயல்படும் நவீன இலக்கியச்சூழல் அதை உள்ளடக்கிய இரண்டாவது வட்டம், அதாவது இரண்டாவது பேசுதளம். உலகநவீன இலக்கியச் சூழல் மூன்றாவது பேசுதளம். இலக்கியம் பொதுவாக நான்காவது பேசுதளம். சமகால அரசியல் அல்லது சினிமா அல்லது வரலாறு போன்றவை பேசுதளத்துக்கு வெளியே உள்ளவை.
எப்போதுமே ஒரு தலைப்பை, ஒரு மையத்தை வைத்துக்கொண்டே பேசவேண்டும். எல்லாப் பேச்சும் கண்டிப்பாக மையத்தைத் தொடர்புகொள்வதாக மட்டுமே இருக்கவேண்டும் . ஒருபோதும் விவாதம் பேசுதளத்துக்கு வெளியே செல்ல மட்டுறுத்துநர் அனுமதிக்கக் கூடாது. மன்னிக்கவும் இது வெளியே செல்கிறது, நாம் விஷயத்துக்குத் திரும்புவோம் என அவர் திருப்பிக் கொண்டு வரவேண்டும். உண்மையிலேயே முக்கியமான விஷயம் ஒன்று பேசுதளத்துக்கு வெளியே பேச்சில் உருவாகி வந்தாலும்கூட அனுமதிக்கக் கூடாது. அதற்கு வேறு ஒரு அமர்வு வைத்துக்கொள்ளலாம். அதைச் சொல்லி விட்டு விவாதத்தைப் பேசுதளத்துக்குள் கொண்டு வந்தாகவேண்டும்
தலைப்பை ஒட்டி முதற்பேசுதளத்திலேயே விவாதம் நிகழ அனைவரும் முயலவேண்டும். அதற்கே அதிக நேரம் அளிக்கப்படவேண்டும். தேவை என்றால் இரண்டாவது மூன்றாவது தளத்துக்குச் செல்ல அனுமதிக்கலாம். மிகவும் தேவை என்றால் நான்காவது தளத்துக்குச் செல்ல அனுமதிக்கலாம். ஆனால் அளிக்கப்படும் நேரம் அந்த விகிதாச்சாரப்படியே இருக்கவேண்டும்.
அதாவது அசோகமித்திரன் பற்றிய விவாதத்தில் ஒருவர் ஞானக்கூத்தனைப்பற்றி இருபது நிமிடம் பேசலாம். ஐசக் பாஷவிஸ் சிங்கரைப்பற்றி பத்துநிமிடம் பேசலாம். கம்பனைப்பற்றி ஐந்து நிமிடம் பேசலாம். கமபனைப்பற்றி ஒருமணிநேரம் பேசி அதேபோலத்தான் அசோகமித்திரன் என சொல்வதையெல்லாம் அனுமதிக்கக்கூடாது.
3. ஓர் அமர்வுக்கு விவாதப்புள்ளிகள் [ Premises] முதலிலேயே முன்வைக்கப்படவேண்டும். அதாவது ஒருவர் அல்லது ஒரு சிறுகுழு விவாதிக்கப்போகும் விஷயம் பற்றிய தங்கள் தரப்பை அடிப்படையான வாதங்களாகத் தொகுத்து முன்வைக்கவேண்டும். நம் மரபில் இதற்குத் தோற்றுகை என்று பெயர். அந்த வாதங்களை அவர்கள் விரிவான தர்க்கங்கள் மூலம் நிறுவலாம். அங்கே உள்ள பிறர் அந்தத் தர்க்கங்களைப் பரிசீலித்து மறுதர்க்கங்களை உருவாக்கி அவர்கள் முன்வைக்கும் விவாதப்புள்ளிகளை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம்.
தோற்றுகைகள் எப்போதுமே ஒன்றில் இருந்து ஒன்றாக நீளும் சில விவாதப்புள்ளிகளாகவே இருக்கும். அதாவது அசோகமித்திரனைப்பற்றிய ஓர் அரங்கில் ஒருவர் இப்படிச் சொல்லலாம். ‘அசோகமித்திரன்தான் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர். ஏனென்றால் அவர் அன்றாட யதார்த்ததை எழுதுகிறார். அன்றாடவாழ்க்கையே பெரும் போராட்டாமாக இருக்கும் இந்தியா போன்ற ஒரு தேசத்தில் அன்றாடயதார்த்தத்தை சிறப்பாகச் சொல்வதே மிகச்சிறந்த கலையாக இருக்கமுடியும்’ இந்த மூன்று வரிகளும் மூன்று படிகள் கொண்ட ஒரு வாதமுகம், தோற்றுகை.
அதற்கு ஆதாரமாக அவர் தமிழில் எழுதப்பட்ட அன்றாட யதார்த்தக்கதைகளின் சிறப்பை விளக்கியிருக்கலாம். அன்றாட யதார்த்த அம்சமே இல்லாத தமிழ்க் கதைகள் எப்படி உண்மையான அனுபவத்தை அளிக்காமல் இருக்கின்றன என்று வாதாடலாம். உதாரணங்களைச் சொல்லலாம். அப்படி பல வாதங்களை முன்வைக்கலாம்.
விவாதத்துக்கு வந்தவர்கள் அந்த வாதங்களை எதிர்த்து மறுப்பைத் தெரிவித்து அந்த முதல்கூற்றுகளை மறுக்கலாம். உதாரணமாக அவர்கள் புதுமைப்பித்தனின் கபாடபுரம் போன்ற கதைகளை சுட்டிக்காட்டலாம். இந்திய சூழலில் வரலாறு எப்போதுமே மிகப்பெரிய அன்றாடப்பிரச்சினை என்று விளக்கலாம். வரலாற்றைத் தொன்மங்கள் மூலம்தான் சொல்லமுடியும், அதற்கு அன்றாட யதார்த்தக் கதைகள் உதவாது என்று சொல்லலாம். இப்படித்தான் நல்ல விவாதம் நகரமுடியும்.
இவ்வாறு நல்ல விவாதம் நிகழ நான் மட்டுறுத்துநராக இருக்கும் சபைகளில் நடைமுறையில் செய்பவை சில உண்டு. எப்போதுமே ஒரு மையக்கட்டுரை அல்லது உரை இருக்கும்படி செய்வேன். அது 10 நிமிடத்துக்குள் முடியக்கூடியதாக இருக்கவேண்டும். அந்தக்கட்டுரையில் தெளிவாகத் தோற்றுகைகள் சொல்லப்பட்டிருக்கவேண்டும். விரிவான வரலாற்று விளக்கமோ பட்டியல்களோ எல்லாம் இருக்கக்கூடாது. அத்துடன் அந்தக் கட்டுரையாளரிடமே ஒட்டுமொத்தமாக நீங்கள் சொல்லவருவது இதுதானே என்று கேட்டுத் தோற்றுகைகளைத் தெளிவாக்கியபின் அதன் மேல் விவாதிக்கப் பிறரை அழைப்பேன். அதுதான் தோற்றுகை, அதை ஏற்கலாம் மறுக்கலாம் ஆனால் அந்த எல்லைக்கு வெளியே செல்லவேண்டாம் எனக் கோருவேன்.
இந்த மூன்று அம்சங்களும் எந்த விவாதத்துக்கும் முக்கியமானவை. இதை நாம் பள்ளியிலேயே படித்துக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நமக்குச் சொல்லித்தருவதில்லை. ஆகவே ஒரு விவாதத்தில் சம்பந்தமே இல்லாமல் அப்போது மனதுக்கு தோன்றியதைச் சொல்கிறோம். விவாதத்தை ஒட்டுமொத்தமாகக் கடத்திக்கொண்டு செல்கிறோம். வாதங்களின் பலமே இல்லாமல் அதிரடியாகப் பேச ஆரம்பிக்கிறோம். கோபாவேசமாகப் பேசுகிறோம். தனிப்பட்ட முறையில் தாக்கி பேச ஆரம்பிக்கிறோம். பலசந்தர்ப்பங்களில் நம்முடைய அரசியல் நம்பிக்கைகளை எல்லா விவாதங்களிலும் சொல்ல ஆரம்பிக்கிறோம். சிலர் சொந்த அனுபவங்களை எல்லாப் பேச்சுகளிலும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
நிறைய தருணங்களில் இங்கே வாதிட வருபவர்கள் எல்லா திசையிலும் பரவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரமே இல்லாமல் அடுக்கியபின்னரே ஒரு விவாதக்க்கருத்தை சொல்கிறார்கள். பலவகையான முத்திரைகளுக்குப்பின்னரே பேச ஆரம்பிக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் ‘ஜெயமோகன் ஓர் இந்துத்துவ சாதியவெறியர், மலையாளமேட்டிமைவாதம் பேசுபவர், அவர் பூமணி இயல்புவாத எழுத்தாளர் என்று சொல்வதை நான் மறுக்கிறேன். இயல்புவாதம் ஓர் குறைவான அழகியல்கொள்கை’ என விவாதத்துக்கு வந்தால் நான் என்ன செய்ய முடியும்? பூமணியையோ இயல்புவாதத்தையோ எடுத்துப் பேசமுடியுமா என்ன? முதலில் அவர் சொல்லும் ஒற்றைவரியிலான முத்திரைகளை எல்லாம் நிராகரித்து விளக்கி அவரை இழுத்து பூமணிக்கும் இயல்புவாதத்துக்கும் கொண்டு வந்து நிறுத்தியபின்னரே பேச ஆரம்பிக்க முடியும். ஆனால் இதற்கே இருபது பக்கம் செலவிடவேண்டியிருக்கும். தமிழில் வேறு வழியே இருப்பதில்லை
ஆகவேதான் இந்த வகையான நெறிமுறைகளை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது. அத்துடன் சில நடைமுறை விதிகளைக் கைக்கொள்ளவேண்டியிருக்கிறது. அந்த விதிகளை இப்படிச் சொல்லலாம்
1. ஓர் எல்லைக்குமேல் கடுமையான கருத்துக்களைப் பொது விவாதங்களில் சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட தனிக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது விவாதத்துக்கு உரியதல்ல. ஒருவர் ஒரு சபையில் ‘மன்மோகன்சிங் இந்தியாவின் சாபக்கேடு’ என்றோ ‘புதுமைப்பித்தன் இலக்கியவாதியே இல்லை’ என்றோ அதிரடியாகச் சொல்லப்போனால் விவாதமே உருவாகாது. அதை அதேமாதிரியான அதிரடிக்கருத்துக்களால்தான் மறுக்கமுடியும்.வெறும் சண்டைதான் மிச்சமாகும்
2. உணர்ச்சிகரமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது. ஏனென்றால் அதன்பின் விவாதமே நிகழமுடியாது. அதேபோலப் பிறரும் உணர்ச்சிவசப்படுவார்கள்
3. விவாதத்தில் சிலசமயம் இருவர் ஒருவருக்கொருவர் பேசுவார்கள். ஒருவரை சிலர் சேர்ந்து மடக்குவார்கள். அதை மட்டுறுத்துநர் அனுமதிக்கக் கூடாது
4.விவாதத்தில் எவரும் தங்களுக்குள் தனியாகப்பேச அனுமதிக்கக்கூடாது
5.தனிப்பட்ட விஷயங்களைப் பேச அனுமதிக்கக்கூடாது.
6.விவாதம் முடிந்தபின் கண்டிப்பாக ஒரு நட்பான அளவளாவல் பொதுவாக நிகழவேண்டும். அதில் விவாத விஷயங்களை விட்டுவிட்டு வேறு பொது விஷயங்கள்தான் பேசப்பட்டாகவேண்டும்.
இந்தவகையான விதிகளை சிலர் கட்டுப்பாடு , அதிகாரம் , அடக்குமுறை, ஒழுக்கம் என்றெல்லாம் பெரிய வார்த்தைகளைப்போட்டு விமர்சிப்பார்கள். இதெல்லாம் இல்லாத ’சுதந்திர’ விவாதம் தேவை என்பார்கள். எங்கள் விவாதங்களெல்லாமே அப்படி விமர்சிக்கப்பட்டுப் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அப்படிச் சொன்னவர்கள் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொருவர் குறுக்கிட்டாலே கொந்தளிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்.
கட்டுப்பாடற்ற விவாதம் என்பது நேர விரயம். ஏனென்றால் விவாத நேரம் அனைவருக்குமானது. பிறர் நேரத்தை வீணடிக்க எவருக்கும் உரிமை இல்லை. ஆகவே நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதற்கான ஒரு சுய ஒழுங்குதான் இவை. ஹிப்பிகளின் சபைகளில்கூட இத்தகைய ஒழுங்குகள் இருந்ததை நித்யா பதிவு செய்திருக்கிறார்
இதெல்லாம் என் வழிகள். இவை நடைமுறையில் பயனளித்துள்ளது என்பதையே கிட்டத்தட்ட 20 விவாத அரங்குகளை நிகழ்த்திய அனுபவத்தில் இருந்து அறிகிறேன். பல அரங்குகளில் மிகமிகச்சூடான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன– குறிப்பாக தமிழ், மலையாள அரங்குகளில். ஆனால் நட்பின் எல்லை மீறப்படவில்லை. நேர விரயமும் நிகழவில்லை.
நித்யா சொல்வார், சிரிக்காமல் முடியக்கூடிய எந்த விவாதமும் கதவுகளைத் திறப்பதாக இருக்காது. மூடுவதாகவே இருக்கும்
*
ஒரு புத்தகத்தை எப்படி விவாதிப்பது என்று கேட்டிருக்கிறீர்கள். பல அரங்குகளில் இது சார்ந்த சிக்கல்களை நான் கண்டிருக்கிறேன். புத்தகத்தை இரு வகைகளில் விவாதிக்கலாம்.
ஒன்று, புத்தக அறிமுகம். சபைக்கு அறிமுகமில்லாத ஒரு நூலை ஒருவர் அறிமுகம் செய்யலாம். அப்போது அவர் அந்நூலின் உள்ளடக்கம், அமைப்பு ஆகியவற்றை விளக்கவேண்டும். அதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டவேண்டும். உதாரணம் ராய் மாக்ஸ்ஹாமின் ’இந்தியாவின் மிகப்பெரிய வேலி’ பற்றி நான் எழுதிய நூல் அறிமுகம். நூல் அறிமுகம் மீது விவாதமே நிகழமுடியாது. மேலதிக விளக்கங்கள் மட்டுமே கேட்கப்பட முடியும்
இரண்டு, நூல் விவாதம். அதற்கு முன்னதாகவே அந்நூலை விவாதிப்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே வாசிக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அந்நூலைப்பற்றி ஒருவர் ஒரு மையக்கட்டுரையை முன்வைப்பது நல்லது. அந்த கட்டுரையில் அவர் அந்நூலை அந்நூலைப்பற்றிய ஒரு மதிப்பீட்டை மட்டுமே முன்வைக்கவேண்டும்.வெறுமே தகவல்களை சொல்லகூடாது.
அந்தக்கட்டுரையில் அவர் அந்நூல் பற்றிச் சொல்லும் மதிப்பீடே விவாதத்துக்கான தோற்றுகை . அந்த தோற்றுகைக்கு ஆதாரமாக அவர் சில வாதங்களை முன்வைக்கலாம். அந்த வாதங்களுக்காக அவர் எந்தத் தகவலையும் சொல்லலாம். அந்த வாதங்களின் மீது விவாதசபை தங்கள் வாதங்களை முன்வைக்கலாம்.
உதாரணமாக ஒருவர் பதினெட்டாவது அட்சக்கோடு ஒரு ‘வயதடைதல்’ [Coming of age ]வகை நாவல் எனலாம். கதைநாயகன் இளமையில் இருந்து வளர்ந்து அரசியல் சூழல்கள் வழியாக அவனுடைய ஆளுமையை அடைவது வரை அது காட்டுகிறது என்று வாதிடலாம். அதற்கான காரணங்களை விவரிக்கலாம். அந்நாவலில் பல இடங்களைச் சுட்டிக்காட்டலாம். ஜெ.டி.சாலிங்கரின் The Catcher in the Rye போன்ற நாவல்களைச் சுட்டிக்காட்டி ஒப்பிடலாம். அல்லது வில்லியம் சரோயனின் My Name is Aram கதைகளின் நடையுடன் அந்நாவலின் இளமைக்காலச் சித்திரங்களை ஒப்பிடலாம்.
இப்படி ஒரு கருத்தை விவாதத்துக்காக வைக்காமல் ‘நல்ல நாவல்’ ‘வாசிக்கவேண்டிய படைப்பு’ ‘நல்ல அனுபவத்தை அளித்தது’ என்றெல்லாம் சொல்லும் கருத்துக்கள் எந்த விவாதத்தையும் உருவாக்காது. அப்படி ஏதேனும் ஒரு விமர்சனமையம் மூலக்கட்டுரைக்கு இருக்கும்படி முன்னரே திட்டமிட்டுக்கூட அமைக்கலாம்
அந்த மையத்தை மறுத்து இல்லை, இந்தியச்சூழலில் ஓரு நடுத்தர வர்க்க மனிதனுக்கு அரசியல் சார்ந்த புறமும் அரசியலே இல்லாத அகமுமாக இரட்டை வாழ்க்கை ஒன்று இருப்பதை அந்நாவல் சொல்கிறது என ஒருவர் மறுக்கலாம். அதற்கான காரணங்களை விவரிக்கலாம். அல்லது அது ஒரு நடுத்தர குடிமகனை அவனுக்குச் சம்பந்தமே இல்லாத அரசியல் அலைக்கழிப்பதைப்பற்றிச் சொல்கிறது என்று சொல்லலாம்.
இப்படி தோற்றுகை, விவாதக்களம் இரண்டையும் வரையறை செய்துகொண்டபின் விவாதிப்பதே சிறந்தது. இதற்கு வெளியே செல்லும் விவாதங்கள் எதையும் தவிர்த்தால் பல்வேறு வாசிப்புகள் அங்கே முன்வைக்கப்படும். அது நல்ல விவாதத்தை உருவாக்கும்.
கூட்டத்தின் முடிவில் உறுப்பினர்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்? என்ன சாதித்திருக்க வேண்டும்? ஒரு விவாதத்தில் ஒருவர் சொல்லும் கருத்து என்பது அவரது ஆளுமை, அவரது வாசிப்பு, அவரது அனுபவம் சார்ந்தது. அதை அவர் விவாதம் மூலம் மாற்றிக்கொள்ளமுடியாது. ஆகவே விவாதம் மூலம் எவரும் வெல்லவோ தோற்கவோ முடியாது. அந்த நோக்கமே பிழை
நல்ல வாதங்கள் முன்வைக்கப்பட்டால் அதில் பங்கெடுத்தவருக்கு ஒரேசமயம் பல கோணங்களைக் கண்ட அனுபவம் ஏற்படுகிறது. அது அவரது வாசிப்பை விரிவடையச்செய்கிறது. அத்துடன் தன் சொந்தக்கருத்தைச் சரியான சொற்றொடர்களில் முன்வைக்கும் திறன் அமைகிறது. அது அவரது சிந்தனைத்திறனை வளர்க்கிறது. ஒரு விவாதத்தில் அதிகபட்சம் எதிர்பார்க்கக்கூடியது இதுவே.
ஜெ
Nov 11, 2011 மறுபிரசுரம்
விவாதம் என்னும் முரணியக்கம்
விவாதிப்பவர்களைப்பற்றி
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
மலையாளவாதம்
விவாதங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? -கடிதம்
அந்த பார்வையாளர்கள்
கலைஞர்களை வழிபடலாமா?
சிலகேள்விகள்
விவாதங்களின் எல்லை…
இணையத்தில் விவாதம்…
எனது அரசியல்
பின்தொடரும் நிழலின் குரல் – முத்துக்குமார்
பின்தொடரும் நிழலின்குரல் வாங்க
தன்னைச் சுற்றி இறுக்கி அதலபாளத்திற்கு இழுத்துச் செல்லும் குற்றமனப்பான்மையில் இருந்து விடுபட இந்த நீதியுணர்வைத்தான் இறுகப் பற்றிக்கொள்கிறான் அருணாச்சலம். வீரபத்திர பிள்ளையின் கட்டுரைகள், கடிதங்கள் என தொடர்ந்து படிக்கும் அருணாச்சலம் மெல்ல மெல்ல தன்னை இழப்பதை இந்நாவல் சித்தரிக்கும் விதம், A height of mastery indeed.
பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு
எழுத்தின் இருள்- கடிதங்கள்
எழுத்தின் இருள்
அன்புள்ள ஜெ
எழுத்தின் இருள் ஒரு முக்கியமான கட்டுரை. நான் தொடர்ச்சியாக ஒன்றை கவனித்து வருகிறேன். உங்கள் வாசகர்களில் ஒருசாரார் உங்களை குரு என்றும் ஆசான் என்றும் சொல்கிறார்கள். நீங்கள் அதை திட்டவட்டமாக நிராகரித்துக்கொண்டே இருக்கிறீர்கள். என் எழுத்தை மட்டும் பார் என்று சொல்கிறீர்கள். அதை ஒரு போலித்தன்னடக்கமாகவோ, வெறும் கூச்சத்தாலோ சொல்லவில்லை. அது ஏன் என்பதற்கான காரணகாரிய விளக்கத்தை அளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். எழுத்தாளன் ஊடகமே ஒழிய அவன் எழுத்து அவனே அல்ல என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.
நான் என் இருபத்தேழு வயதில் முதல்முறையாக ஒரு பேரிலக்கியத்தை வாசித்தேன். நார்வேயில் பணியாற்றியபோது வாசிப்பு தவிர வேறு ஒன்றுமே செய்வதற்கு இல்லாத நிலையில் வாசிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தீவிரமாக மட்டுமே வாசித்தாகவேண்டும் என்ற நிலையை அடைந்தேன். நான் வாசித்த கிளாஸிக் என்பது மோபிடிக். அதன்பிறகு நிறைய வாசித்துவிட்டேன். ஆனால் மோபி டிக் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது
கொந்தளிக்கும் கடலில் திமிங்கலவேட்டைக்குச் செல்பவன் எழுத்தாளனேதான் என நினைக்கிறேன். அவனை அவனுடைய தரிசனமே கொல்லக்கூடும். ஆனால் அவனுடைய வேலை அதுதான். எழுத்திலுள்ள இருட்டு என்பது எழுத்தாளனின் இருட்டுதான். கொந்தளிப்பு அவனுடையதுதான். அவன் திடீரென்று ஒளியை காணக்கூடும். ஆனால் அலையும் கொந்தளிப்பும் அவனுக்கு இருந்துகொண்டுதான் இருக்கும்
ஆனால் நீங்கள் எழுதுவதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. ஓர் எழுத்தாளனை ஆன்றவிந்து அடங்கிய சான்றோனாக நினைக்கவேண்டியதில்லை. ஞானியாக நினைக்கவேண்டியதும் இல்லை. ஆனால் அவனுடைய அத்தனை இருட்டையும் கருத்தில்கொண்டு அவனை நம் வழிகாட்டியாகக் கொள்ளலாமே. அவனுடைய கொந்தளிப்புகள் நம் கொந்தளிப்புகள் அல்லவா?
நீங்கள் உங்களை ஆசிரியராக வழிகாட்டியாக நிறுத்தாமல் இருக்கலாம். நீங்கள் தேடிச்செல்வது உங்கள் பாதையை மட்டுமே என்று சொல்லலாம். ஆனால் அந்தப்பாதையை வாசகன் பின்தொடரமுடியும். அவனுக்கு உங்களுடைய குழப்பங்களும் கொந்தளிப்புகளும் ஏமாற்றத்தை அளிக்காது. உங்களுடைய சரிவுகளும் வீழ்ச்சிகளும்கூட கசப்பை அளிக்காது.
வாசகன் உங்களை ஆசிரியனாகவே நினைப்பான். அனுபவங்கள் வழியாக அழைத்துச்செல்பவனே இலக்கிய ஆசிரியன். அவன் ஞானம் வழியாக அழைத்துச்செல்பவன் அல்ல என்று சொல்லலாம். நீங்களே இதை எழுதியிருக்கிறீர்கள்
செந்தில் அறிவழகன்
அன்புள்ள ஜெயமோகன்,
நன்மனதுடையோர் பேறு பெற்றோர். அப்பேறு வெகு சிலருக்கே அமைகிறது. பெரும்பாலோர்கு நன்மை தீமை இடையே தொடர்ந்து நடக்கும் போராட்டமே வாழ்க்கை. இருளின் ஆழமோ ஒளியின் உன்னதமோ அவர்களுக்கு புலப்படுவதில்லை.
ஆனால் கலைஞர்கள் அப்படி அல்ல. முக்குணமும் சம நிலையில் இருப்பின் கலைஞன் தன்னிலையில் ஆழ்ந்து படைப்பை கைவிட நேரிடும். ஆகவே கலைஞன் இருளுக்கும் ஒளிக்கும் இடையே ஊசலாடத்தான் வேண்டும். ஆகவே இலக்கியவாதியை அவனுடைய படைப்பை வைத்து மதிப்பிடுவது ஒன்றே வழி.
நெல்சன்
அன்புள்ள ஜெ
எழுத்தின் இருள் முக்கியமான கட்டுரை. நான் என் அலுவலக நண்பர்களிடம் சார்ல்ஸ் புகோவ்ஸ்கியை முன்வைத்து ஒரு விவாதத்தில் இதையே கேட்டிருக்கிறேன். அவர் கட்டற்ற வாழ்க்கை கொண்டவர், அதனால் கலைஞர் என்றால் கதே, டால்ஸ்டாய், தாமஸ் மன் முதல் மார்க்யூஸ் லோஸா வரை எவரும் கலைஞர்கள் இல்லையா? இதெல்லாம் அபத்தமான எளிமைப்படுத்தல் என்றேன்
தீமையின் அம்சம் எப்போதும் கலைஞனிடம் உள்ளது. அதை தன் ஆழத்திற்குச் சென்று அறிபவன் கலைஞன். அவன் அடையும் அனுபவங்களில் பெரும்பகுதி அவனுக்குள் நடக்கிறது. அதை அவன் கலைவழியாகவே நாம் காணமுடியும். அவன் அதை வாழ்க்கையில் செய்யவேண்டியதில்லை. அது ஒற்றைப்படையான நடிப்பாகத்தான் முடியும்
கொல்பவனாகவும் சாகிறவனாகவும் ஒரேசமயம் இருப்பவனே நல்ல கலைஞன்
எம்.சந்திரசேகர்
மலபார்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோஹன்,
BSNL ஊழியர்கள் பணி ஓய்வு தொடர்பான உங்கள் உருக்கமான குறிப்பு மிகவும் சிந்திக்க வைத்தது.
ஆனால் BSNL SIM ஐ யாரும் தொடுவதில்லை என்ற மதிப்பீடு சரியல்ல. கடந்த பதினேழு வருடங்களாக கைபேசி உபயோகித்தவன் என்ற அனுபவத்தில் இதை எழுதுகிறேன். மற்ற அனைத்து நிறுவனங்களும் இன்று இருக்கும், நாளை காணாமல் போகும்.
45 நாள் உபயோகப்படுத்தவில்லை என்ற காரணத்தால் ஒரு பிரபல நிறுவனம் அறிவிப்பு இல்லாமல் SIM ஐ ரத்து பண்ணிவிட்டது, அதை குறை கூறவில்லை. ஆனால் 45 நாட்களுக்குபிறகு ஒரு வாரம் வேலை செய்து, ரீசார்ஜ் செய்தபோது அதை ஏற்று, சரியாக திருவனந்தபுரம் ரயிலில் ஏறியவுடன் கைபேசி செயலிழந்தது தான் கொடுமை. பின் அவர்களை தொடர்பு கொண்டு ரீசார்ஜ் தொகையை கேட்டபோது கை விரித்துவிட்டார்கள். “ஏன் ரீசார்ஜ் செய்தீர்? எங்களால் கண்டுபிடிக்கமுடியாது” என்பது அவர்கள் பதில்.
இது போல் இன்னம் எவ்வளவோ.
2005 முதல் இன்று வரை என் உபயோகத்தில் தொடர்ந்து இருப்பது இரண்டு BSNL prepaid இணைப்புக்களே. நான் பார்த்தவரை BSNL ஊழியர்கள் மட்டுமே வேலை தெரிந்து பணியாற்றுபவர்கள்.
தற்போது JIO உலக தரமான சேவையை உலகத்திலேயே மலிவான விலையில் வழங்குவது உண்மையே. ஆனால் தற்போதைய அரசு கவிழ்ந்தால் அதுவும் நின்றுவிடும்.
மோதி சேவைத்துறையில் பொதுத்துறைக்கு மாற்று இல்லை என்பதை உணர்ந்தவர். ஆகையால் பலர் நினைப்பது போல் BSNL மாற்றங்கள் அதை ஒழிக்க அல்ல, காப்பாற்றவே.
அன்புடன்
கிருஷ்ணன்
அன்புள்ள கிருஷ்ணன்
இந்தியாவின் பொதுத்துறைகள் பெரும் நஷ்டத்தில் ஓடிய காலம் உண்டு. அவற்றை தனியார்மயப்படுத்த சொல்லப்பட்ட காரணம் அது. இன்று தனியார்த்துறைகள் பெருநஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. பலநிறுவனங்கள் மூடப்படுகின்றன. வங்கிகள் திவாலாகின்றன.
இன்று இந்தியா ஒரு பொருளியல்பேரழிவின் விளிம்பில் உள்ளது. இன்று நம்மை காக்க உண்மையான பொருளியல் அறிவு கொண்டவர்கள் எவரும் அரசுத்தரப்பில் இல்லை
உங்கள் நம்பிக்கை உங்களை காக்கட்டும்
ஜெ
இனிய ஜெ சார்,
`மீண்டும் மலபார்` கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மலையாள மனோரமா பத்திரிக்கை குறிப்பில் உங்களை ‘எழுத்துகாரன்’ என்றல்லாமல் ‘சாஹித்யகாரன்’ என்று குறிப்பிட்டுள்ள நுண்ணுர்வை எண்ணி வியப்பிலாழ்ந்தேன்.
ஏனெனில், இங்கே பத்திரிக்கைகளில் `எழுத்தாளன்` என்றே குறிப்பிடுவார்கள். இலக்கியவாதி என்றல்ல, ஆனால் அந்த வேறுபாடு அங்கே தெரிந்திருக்கிறது.
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.
அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்
மலையாளத்தில் இந்த வேறுபாட்டை இலக்கியமறிந்தவர்கள் கொஞ்சம் கவனமாகவே பேணுகிறார்கள்
இலக்கியவாதி புனைவிலக்கியம் எழுதுபவர். எழுத்தாளர் என்றால் எல்லாவற்றையும் எழுதுபவர். இதழியல் நூல்கள் எழுதுபவர், வரலாற்று நூல்கள் பயணநூல்கள் சமூகநூல்கள் எழுதுபவர் என அனைவரையும் உள்ளடக்கிய சொல் அது
ஜெ
கிருஷ்ணனின் குருவி
அந்த குருவிக்கு கிருஷ்ணன் சொன்ன அதே தீர்வு தருமனின் இப்போதைய இக்கட்டுக்கும் பொருந்துகிறது தானே. துரியோதனன் தருமனிடம் ஒரு நூற்றுவர் படையையாவது தரும்படி தான் கேட்கிறான். தருமன் சொல் தேறாது மொழிந்து ஓர் பேரிடைவெளியை உருவாக்கி விடுகிறான். இப்போது கிருஷ்ணன் கேட்பது அத்தகைய ஓர் படை தான்.
கிருஷ்ணனின் குருவிFebruary 22, 2021
பாரத் என்னும் பெயர்
வணக்கம் ஜெ
இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என்றோ ‘ஹிந்துஸ்தான்’ என்றோ மாற்றக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. எனது நீண்டநாள் விருப்பம் இந்த தேசத்தின் பெயரை சட்டப்பூர்வமாகவும் ‘பாரதம்’ என்றே மாற்றவேண்டும் என்பது. ‘ஹிந்துஸ்தான்’ என்பதிலுள்ள ‘stan’ எனும் பின்னொட்டு (suffix) பாரசீக வழக்கு. ‘இந்தியா’ என்பதிலுள்ள ‘ia’ எனும் பின்னொட்டு ஐரோப்பிய வழக்கு. இவ்விரு பெயர்களும் பிறர் நமக்கு சூட்டியவை. இவையிரண்டையும் விட பாரதமே பொருத்தமானதும், நமக்கு நாம் சூட்டிக்கொண்ட பெயராகவும் இருக்கும்.
சில இந்துத்துவ அரசியல்வாதிகள் ஹிந்துஸ்தான் எனும் பெயர் சூட்டுவதனால் ‘இந்துக்களின் தனி தேசம்’ என்கிற அடையாளம் பெறுவதாகக் கருதி, இப்பெயரை ஆதரிக்கிறார்கள். இது தவறானது என்றே கருதுகிறேன். ‘ஹிந்துஸ்தான்’ என பெயர் சூட்டும் பட்சத்தில் நிச்சயம் எதிர்ப்புகள் எழும். அரசியல் அல்லது மத ரீதியிலான எதிர்ப்புகளைத் தாண்டி ‘பாரதம்’ என்ற பெயரே சரியானதாக இருக்கும்.
பிறர் நம்மக்களித்த அடையாளங்களை (பெயர், கதையாடல் உட்பட) தவிர்ப்பது அல்லது நிராகரிப்பது ஒருவகையில் நம்முடைய சுய அடையாளங்களை, கதையாடல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், அடிமை மனநிலையிலிருந்து மேலே செல்வதற்கும் வழிவகுக்கும் என்றே கருதுகிறேன். இந்தப் பெயர்மாற்றம் குறித்து உங்கள் கருத்தை அறிய ஆவல்.
நன்றி
விவேக்
வல்லபர்அன்புள்ள விவேக்,
எனக்கு இந்தப் பெயர்மாற்றம் போன்றவற்றில் பெரிய ஈடுபாடு இல்லை. எல்லா பெயர்களுமே இடுகுறித்தன்மை கொண்டவைதான். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக போடப்பட்டவை. பெயர்களுக்கு நாம் ஏற்றும்பொருள்தான் அவற்றுக்கு நிலைக்கும், மற்றபடி பெயர்களை மாற்றிக்கொள்வதெல்லாம் ஒருவகை தாழ்வுணர்ச்சி.
அத்துடன் பெயர்களின் அரசியலென்பது முடிவே அற்றது. எந்தப்பெயரும் எல்லாருக்கும் உவப்பானதாக இருக்காது. ஒருசிலர் அதை எதிர்க்கலாம். அதையொட்டி சச்சரவுகளே உருவாகும். ஒரு பெயர் நீண்டகாலமாக இருந்துவந்தால், வரலாறு சார்ந்து அதற்கு ஓர் ஏற்பு இயல்பாகவே உருவாகிறது. அதை கலைத்து மீண்டும் ஏன் சிக்கலை உருவாக்கவேண்டும்
மேலும் அரசியல் சிக்கல்கள் எளிதில் முடிந்துவிடும். கலாச்சாரச் சிக்கல்கள் மேலும் மேலும் புதுவடிவுகொண்டு வளரும். இந்தியாவை மொழிவழி மாநிலங்களாகப் பிரித்ததுதான் இன்றுவரை இங்கே பிரிவினைக்குரலும் கசப்புகளும் ஓங்கியிருப்பதற்கான மையக்காரணம். அத்தகைய ஒன்று பெயர்களின் அரசியல்
உண்மையில் இந்தியாவுக்கு தேவை என்ன? புதிய பெயரா? முதல்தேவை, பொருளியல் வளர்ச்சியும் அதை சீராக அனைவரும் அடைவதற்கான அமைப்பும். அதற்கான முயற்சிகளே இன்றைய தேவை. அதற்கு தடையாக ஆகும் எதுவுமே முதன்மையாக அழிவையே உருவாக்குபவை. இப்போது இத்தகைய தேவையற்ற கலாச்சாரப் பூசல்களை தூண்டிவிடுவது அரசியல் லாபத்தை அளிக்கலாமே ஒழிய நன்மை அளிக்காது
அதற்கு அப்பால்தான் பண்பாடு சார்ந்த செயல்பாடுகள். மரபை ‘அப்படியே’ பேணுவது மரபு சார்ந்த பெருமிதங்களைச் செயற்கையாக உருவாக்கிக்கொள்வது, பழமைவழிபாடு ஆகியவற்றை உருவாக்கினால் அது இந்தியாவை மீண்டும் நிலப்பிரபுத்துவ காலகட்டத்துகே கொண்டுசெல்லும். எந்தவகையான பிரிவினைச்செயல்பாடு பொருளியல்வீழ்ச்சிக்கே இட்டுச்செல்லும்.
அதைக் கடந்து இந்த பண்பாடு தன்னைப்பற்றிய நம்பிக்கையுடன் தன்னை ஆய்வுநோக்கில் அறியவும், நவீன அறவியலுடன் மரபை இணைத்துக்கொண்டு முன்னெடுக்கவும் உதவும் கல்விச்சூழலை உருவாக்குவது இன்றைய பணி. அவற்றை இன்று செய்வதுபோல எனக்குத்தெரியவில்லை.
மேலும் இந்தியா, பாரத் என்ற இரு பெயர்களுமே புழக்கத்தில் உள்ளன. இதில் இந்தியா என்பதை அழிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? அந்தப்பெயரும் இந்தியவரலாற்றின் வழியாக உருவாகி வந்த ஒன்றுதான். எனக்கு இந்தியப்பெருநிலம் மீது பித்து உண்டு. அந்த பித்துதான் இந்தியா என்ற சொல்லையும் விரும்பவைக்கிறது
சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் என்னை பார்க்கவந்தார். மலையாளி. அவர் ஒரு மாபெரும் மனுவில் கையெழுத்து வாங்கவந்திருந்தார். அதன் நோக்கம் சுத்தாத்வைதம் என்னும் சொல்லை புஷ்டிமார்க்க வைணவர்கள் பயன்படுத்துவதை தடைசெய்வதற்கான கோரிக்கை. வைணவம் அத்வைதம் என்ற சொல்லை பயன்படுத்துவது மோசடி என்றார் அவர். மேலும் அவர்கள் சுத்தாத்வைதம் என தங்களைச் சொல்லிக்கொள்வது வழியாக மெய்யான அத்வைதிகளை இழிவுசெய்கிறார்கள்
‘வல்லபர் ஒரு மோசடிக்காரர்” என்று கொதித்தார் நண்பர். நான் சீரியசாக ‘ஆமாம், அத்வைதம் நாயர்களுக்குரிய தனிச்சொத்து. சங்கரமடமெல்லாம் மீமாம்சகர்கள். அவர்கள் அத்வைதிகள் என்றபெயரை பயன்படுத்தக்கூடாது’ என்றேன். அவர் “ஆமாம்” என்றார். “சங்கரர் என்றெ சொல்லிக்கொள்ளக்கூடாது. நாராயணகுருவும் அத்வைதி இல்லை. சட்டம்பிசாமி மட்டும்தான் அத்வைதி” அவர் நான் கேலிசெய்வதை புரிந்துகொண்டார்.
எனக்கு பண்பாடு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபாடுண்டு.மதம் சார்ந்த தத்துவங்களிலும் ஈடுபாடுண்டு. ஆனால் அவையெல்லாமே இழ்வாழ்க்கையின், என் இருப்பின் மெய்மையை நோக்கிய என் தேடலின் பகுதியாகவே. எளிய பூசல்களில் ஈடுபாடில்லை
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


