Jeyamohan's Blog, page 1039
March 2, 2021
கண்கூடான காந்தி
அஞ்சலி : டாக்டர் வி.ஜீவானந்தம்
டாக்டர் வி.ஜீவானந்தம் ஈரோட்டில் இன்று [2-3-2021] அன்று காலமானார். அவருக்கு அகவை 75. தமிழகச் சூழியல் செயல்பாடுகளின் முன்னோடி என்று அவரை என்றும் தமிழகம் நினைவுகூரவேண்டும்.
டாக்டர் ஜீவாவை நான் அறிமுகம் செய்துகொண்டது 1987ல், எனக்கு அப்போது இருபத்தைந்து வயது. அவருக்கு நாற்பத்தி ஒன்று வயது. நான் வீட்டைவிட்டு ஓடிப்போய் என்னென்னவோ ஆகி அலைந்து மீண்டு ஓர் இடைவெளிக்குப்பின் எழுத ஆரம்பித்திருந்தேன்.ஆனால் புனைவுகளை விட பிறவற்றில் ஆர்வமிருந்தது. காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியர்பணி. கூடவே தொழிற்சங்க ஆர்வம்
அன்று ஆளுமைகளைச் சந்திப்பதற்காக அலைந்துகொண்டே இருந்தேன். கண்ணனூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சூசிமுகி என்ற சூழியல் சிற்றிதழ் வழியாக சூழியலின் மேல் ஆர்வம் உருவாகியது. அவ்விதழ் ஒருங்கிணைத்த ஒரு விழாவுக்காக வந்திருந்த சுகதகுமாரியிடம் அறிமுகம் செய்துகொண்டேன். தொடர்ந்து அன்று நிகழ்ந்துகொண்டிருந்த சூழியல்செயல்பாடுகளில் எவ்வகையிலேனும் பங்கெடுக்க ஆரம்பித்தேன்.
அப்போது திருவாரூர் பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதிகளை ஒரு சிறுபேட்டி எடுத்தேன். சுந்தர்லால் பகுகுணா அவர்களையும் ஒரு சிறுபேட்டி எடுத்தேன். அவை தினமணி போன்ற இதழ்களில் வெளியாயின.
திருவாரூரில் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனைச் சந்திக்கச் சென்றபோது டாக்டர் ஜீவா அறிமுகமானார். அவர் ஈரோட்டில் மருத்துவராக இருக்கிறார் என்றும் சூழியல் ஆர்வலர் என்றும் தெரிந்துகொண்டேன். நான் சந்தித்த அன்றே அவர் அமைதிப்பள்ளத்தாக்கைக் காக்க சுகதகுமாரி எடுத்த முயற்சிகளைப் பற்றிய ஒரு மலையாளக் கட்டுரையை மொழியாக்கம் செய்ய முடியுமா என்று என்னிடம் கேட்டார். நான் செய்துகொடுத்தேன். என் மொழிநடையை பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதன்பின் ஜீவா எனக்கு அவருடைய துண்டுப்பிரசுரங்களை அனுப்பிக்கொண்டிருந்தார். நான் அவருக்குக் கடிதங்கள் எழுதினேன். மலையாளத்தில் இருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழியாக்கம் செய்யவேண்டிய துண்டுப்பிரசுரங்களை அனுப்பி வைப்பார். மொழியாக்கநெடி இல்லாமல் மொழியாக்கம் செய்பவன் என்று என்னைப்பற்றி அவர் சொல்வதுண்டு. அன்று அவர் நொய்யல் மாசுபாடுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தார்.
1988ல் நான் தமிழகத்தில் பாலக்கோட்டுக்கு மாற்றலாகி வந்தேன்.அதன்பின் அடிக்கடி ஈரோடு சென்று ஜீவாவைச் சந்தித்தேன்.காந்தியம் எத்தகையச் செயலூக்கத்தை, நம்பிக்கையை அளிக்கும் என்பதற்கான சான்றாக அவர் திகழ்ந்தார்.
ஜீவாவின் தந்தை எஸ்.பி.வெங்கடாசலம் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். இந்தியச் சுதந்திரப்போராட்டத்திலும், அதன்பின் கம்யூனிஸ்டுக் கட்சி நடத்திய கிளர்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். சிறைசென்றவர். அவருடைய அன்னையார் திராவிடர்கழக பின்னணி கொண்டவர். அவர்களின் திருமணத்தை நடத்திவைத்தவர் ஈ.வே.ரா அவர்கள். அன்று அது ஒரு புரட்சித்திருமணம், சீர்திருத்தத் திருமணமும்கூட. கம்யூனிஸ்டு இயக்கமும் திராவிட இயக்கமும் இணைந்த திருமணம் அது என்று அன்று பேசப்பட்டது.தோழர் ஜீவாவின் பெயர்தான் டாக்டர் ஜீவாவுக்கும் வைக்கப்பட்டது.
ஜீவா ஈவேரா அவர்களின் மடியில் வளர்ந்தவர் என்று சொல்லலாம். ஆனால் அவர் திராவிட இயக்கத்திலோ கம்யூனிச இயக்கத்திலோ ஆர்வம்கொள்ளவில்லை. அவரை இளவயதில் கவர்ந்தது மருத்துவம். திருச்சியிலும் சென்னையிலும் மருத்துவம் கற்று மயக்கவியல்நிபுணராக ஆனார். அவருடைய தம்பி குடிநோயால் உயிர்விட்டார். அதன்பின் போதையடிமைத்தனத்திலிருந்து மீட்புக்கான நலந்தா மருத்துவமனையை ஆரம்பித்தார்.
அறிவியலாளராகத்தான் டாக்டருக்குச் சூழியல் ஆர்வம் உருவாகியது. இந்தியவைலேயே சூழியல் குறித்த ஆர்வம் கொண்ட முன்னோடிச் சிந்தனையாளர்களில் அவரும் ஒருவர்.1972ல் முதல் உலகச்சந்திப்பு ரியோ டி ஜெனிரோவில் நடந்தபோதே டாக்டர் சூழியல் குறித்த ஆர்வத்தை அடைந்தார். 1979ல் அமைதிப்பள்ளத்தாக்கைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை என்.வி.கிருஷ்ணவாரியர் தலைமையில் கேரளம் முன்னெடுத்தபோதே தொடர்பு கொண்டிருந்தார்.
சூழியல் வழியாகவே டாக்டர் காந்தியிடம் வந்துசேர்ந்தார். வேறுவழியும் இருக்கவில்லை. காந்தியப்போராட்டம் ஒன்றே அவர் செய்யக்கூடுவதாக இருந்தது. எண்பதுகளின் தொடக்கத்தில் சூழியல் என்பது எவ்வகையிலும் மக்கள் ஏற்பில்லாத ஒரு கருத்து. ஊடகங்களின் கவனம் அதற்கு இல்லை. அமைப்புபலமும் இல்லை. டாக்டர் தன்னந்தனியாகவே தன் செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தார். துண்டுப்பிரசுரங்களைச் சொந்தச் செலவில் அச்சிட்டு முச்சந்திகளில் நின்று வழங்கியிருக்கிறார்.
எண்பதுகளில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் போன்றவர்களின் உதவி அவருக்கு அமைந்தது. ஆனால் ஜீவா நிதியுதவிபெறும் அமைப்புக்களின் செயல்பாடுகளுடன் எச்சரிக்கைமிக்க விலக்கத்தையும் பேணிவந்தார். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளிலிருந்து நொய்யலைப் பாதுகாக்க அவர் மேற்கொண்ட இயக்கம் மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால் இயற்கை அழிவு அப்போது மக்களை பாதிக்க ஆரம்பித்திருந்தது.
காந்தியவழிகளிலான போராட்டங்கள் வழியாக திருப்பூர் சாயப்பட்டறைகள் உருவாக்கும் சூழியலழிவு குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்கவும், அதற்கு கட்டுப்பாடுகளை உருவாக்கும் கட்டாயத்தை அரசுக்கு உருவாக்கவும் அவரால் இயன்றது. காடுகளைப் பேணுதல், பழங்குடி நலன், இயற்கை வேளாண்மை ஆகிய மூன்றும் ஒன்றுடனொன்று பிணைந்தவை என்ற எண்ணம் அவருக்கிருந்தது. வாழ்நாள் முழுக்க அவர் மேற்கொண்ட பணிகள் முதன்மையாக அத்தளத்திலேயே அமைந்திருந்தன.
காந்தியர்களுக்குரிய தெளிவும் தன்னடக்கமும் அவரிடமிருந்தது. அவர் எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரை ஈர்த்து தன் இயக்கம் ஒரு தொடர்செயல்பாடாக நிகழும்படிச் செய்தார். கூடவே, எதையும் மிகைப்படுத்திக்கொள்ளவோ எதிர்பார்ப்புகளை கட்டற்று வளர்த்துக்கொள்ளவோ இல்லை. குறிப்பான ஒரு செயல்திட்டத்துடன் முழு ஆற்றலையும் தொகுத்துக்கொண்டு போராடுவதே அவர் இயல்பு
உதாரணமாக, ஒரு சூழியல் போராட்டத்தை கையிலெடுத்தால் அதையே அவர் முன்னெடுத்தார். உடன்வருபவர்கள் தங்களுக்கு ஈடுபாடுள்ள அரசியல், சமூகப்பிரச்சினைகளை உடன்கொண்டுவந்து கலக்க முயன்றால் அந்த திசைதிருப்புதலுக்கு ஆளாக மறுத்தார். எப்போதுமே குவியம்கொண்ட செயல்களில் ஈடுபட்டிருந்தார். அதை காந்தியிடமிருந்தே கற்றுக்கொண்டிருந்தார்.
அவருடைய ஆர்வம் திகழ்ந்த இன்னொரு துறை கல்வி. ஈரோட்டின் அவருடைய குடும்பத்தவரால் தொடங்கப்பட்ட கல்விநிறுவனங்களில் ஆர்வத்துடன் செயலாற்றினார். 1980களில் அங்கேதான் அவருடைய சூழியல்கூடுகைகள் நடைபெற்றன. நான் தர்மபுரியிலிருந்து வந்து கலந்துகொண்டேன்.
அத்தனைக்கும் அப்பால் ஜீவா ஓர் இலக்கியவாசகர், பழந்தமிழிலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். இறுதிவரை தமிழ்பயின்றுகொண்டே இருந்தார்.அவருக்கு பாரதி மீது இருந்த பற்று நாள்தோறும் வளர்வது. அரிதான பாரதிவரிகளை தாளில் குறித்துவைத்து சாதாரணமாகப் பேசும்போதும் குறிப்பிடுவது அவருடைய வழக்கம்.
ஜீவா சூழியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நூல்களை மொழியாக்கம் செய்துகொண்டே இருந்தார். பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியிருக்கின்றன [டாக்டர் வி.ஜீவானந்தம் நூல்கள், 1 , டாக்ட வி.ஜீவானந்தம் நூல்கள் 2]
வாழ்நாளின் இறுதியில் ஜீவா மீண்டும் மருத்துவத்துறையில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். செலவுகுறைந்த மருத்துவமனை என்னும் கருத்தாக்கத்தை முன்னெடுத்தார். மருத்துவத்தை லாபம்தரும் தொழிலாக அன்றி குறைந்த லாபத்துடன் செயல்படும் சேவையாக காணும் மருத்துவமனைகள் அவை. ஈரோடு திருச்சி நகரங்களில் அவரும் நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிய மருத்துவமனைகள் அவ்வகையில் சிறப்பாகப் பணியாற்றின. நான் கடைசியாகச் சந்திக்கையில் அந்தியூரில் மலைக்குமேல் ஒரு மருத்துவமனை அமைப்பதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
எனக்கு ஆரம்பம் முதலே வழிகாட்டியாக, நலம்பேணுபவராக ஜீவா திகழ்ந்தார். 1995ல் அவர் ஒருங்கிணைத்த சூழியல் உலா ஒன்று தமிழிலக்கியவாதிகளிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. விளைவுகளைப் பற்றிய கவலையே இன்று சலிக்காமல் பணியாற்றிக்கொண்டிருந்தவர்.
நான் ’இன்றைய காந்தி’ நூலை ஜீவாவுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் எனக்கு இன்றைய காந்தியாகவே தெரிந்தார்.
குமிழிகள் [சிறுகதை]
இளநீலப் பட்டாலான இரவுடைக்கு மாறிக்கொண்டிருக்கும்போதுதான் லிலி அதைச் சொன்னாள். அவன் அதை அப்போது கவனிக்கவில்லை. தன் மடிக்கணினியில் அந்நாளின் இறுதி மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் “சர்ஜரியை சிங்கப்பூரிலேயே வைச்சுக்கலாம்னு இருக்கேன். எல்லாத்துக்கும் வசதி”என்றாள்
ஒருகணம் கழித்தே சர்ஜரி என்ற சொல் அவன் மண்டையைத் தாக்கியது. ”சர்ஜரியா? என்ன சர்ஜரி?”
”சரியாப்போச்சு.நான் இதுவரை என்ன சொல்லிட்டிருந்தேன்? எதையுமே கேக்கிறதில்லை. சும்மா வாயாலே உம் கொட்டுறது. ஸிக்”
ஸிக் என்பது அவளுடைய வழக்கமான வார்த்தை. சாம் மடிக்கணினியை மூடினான். “சொல்லு, யாருக்கு சர்ஜரி?”
”எங்க அம்மாவுக்கு. பரலோகம் போயி அவங்களை கூட்டிட்டுவந்து செய்யணும்…போருமா?”
“ஸாரி, ஒரு முக்கியமான இமெயில்….ஸாரி அகெயின்…சொல்லு”
“நான் ஒரு காஸ்மெட்டிக் சர்ஜரி பண்ணலாம்னு இருக்கேன்”
”அதான் ரெண்டுவருஷம் முன்னாடி பண்ணிக்கிட்டியே”
”அது மூக்கு…” என்றாள் ‘அது பக்காவா செட் ஆச்சு. அப்சல்யூட்லி நோ ரெஸிஸ்டென்ஸ். அதே டாக்டர்கிட்டேதான் இதையும் பண்ணலாம்னு இருக்கேன். பட் ஹி இஸ் நௌ இன் சிங்கப்பூர்” என்றபடி அவள் கழிப்பறைக்குள் சென்றாள். அவன் கழிப்பறை கதவின்மேல் ஒட்டியிருந்த துப்பாக்கியால் சுடுவதுபோல கைகாட்டும் மர்லின் மன்றோவின் கருப்புவெள்ளை தீற்றலோவியத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
லிலியின் மூக்கு புடைப்பாக அகன்று இருந்தது. அது அவளுக்கு ஒரு குழந்தைத்தனத்தை அளித்தது. அது அவன் திருச்சி மலைக்கோட்டையில் பெண்பார்க்கப்போன லலிதாவின் மூக்கு. அன்று அவனும் சாமிநாதன்தான். அவளை திருமணம் செய்துகொண்டபோது அவன் மிக விரும்பியது அந்த மூக்கைத்தான். அன்றெல்லாம் அந்த மூக்கைப்பிடித்து இழுப்பதும், மூக்கம்மா என்று செல்லமாக அழைப்பதும் வழக்கமாக இருந்தது. திரும்பத்திரும்ப அவள் சிணுங்கிக்கொண்டே இருந்தாள். “சும்மா மூக்கைப்புடிச்சு இழுக்காதீங்க. அதுவும் பப்ளிக் ப்ளேஸ்லே…” என்றாள் “மூக்கம்மான்னு கூப்பிடாதீங்க… அப்றம் அதுவே கேலிப்பெயரா ஆயிடப்போகுது. எனக்கு புடிக்கலை”
அவள் மூக்கை ஐரோப்பிய மூக்காக ஆக்கிக்கொள்வதாக முடிவுசெய்து அவனிடம் சொன்னபோது அவன் முதலில் நம்பவில்லை. சிரித்து கேலி செய்தான். அதன்பின்புதான் அவள் தீவிரமாக சொல்கிறாள், இறுதிமுடிவையே எடுத்துவிட்டாள் என்று தெரிந்தது. அவனால் நம்பமுடியவில்லை. முதலில் எழுந்தது ஒரு பெரும்கொந்தளிப்பு. அதை ஓர் அவமதிப்பாகவே எடுத்துக்கொண்டான்
“நீயே முடிவெடுத்தாச்சு, எங்கிட்ட ஜஸ்ட் சொல்றே, இல்ல?”
“ஏன் நான் முடிவெடுக்கக்கூடாது? இது என்னோட பாடி. யூ நோ”
“ஆமா, ஆனா நான் உன் கணவன். உன் உடம்பு மேலே எனக்கு எந்த உரிமையும் இல்லையா?”
“நான்சென்ஸ்… இன்னொருத்தர் உடம்புமேலே உரிமைகொண்டாட நீ யார்?”
அவனால் பதில்சொல்லமுடியவில்லை. அப்படி யோசித்ததே இல்லை
“சரி, என்னோட செக்ஸுவல் டேஸ்ட் இதிலே சம்பந்தப்பட்டிருக்கா இல்லியா? ஒரு லாஜிக்குக்காக கேக்கிறேன்”
“அப்சல்யூட்லி நோ. உன்னோட செக்ஷுவல் டேஸ்டுக்காக நான் மாறமுடியுமா? திடீர்னு நீ என்னை மூக்கை வெட்டிக்கோன்னு சொன்னா நான் வெட்டணுமா? உன்னோட டேஸ்ட் மாறிட்டே இருக்கும். அதுக்கு ஏத்தாப்ல நான் மாறிட்டே இருக்க முடியுமா?”
”நீ வெட்டித்தர்க்கம் பண்றே” என்றான்
“நீதான் வெட்டித்தர்க்கம் பண்றே. ஒரு அடிப்படை விஷயத்தைக்கூட புரிஞ்சுகிடமாட்டேங்கிறே. ஸீ, என்னோட உடம்பு மாறிட்டே இருக்கு. முகம் மாறிட்டே இருக்கு. அதுக்கேத்தாப்ல உன்னோட டேஸ்டும் மாறித்தான் ஆகணும்… இல்லேன்னா உறவே இல்லை. இப்ப ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகி என் மூக்கு கொஞ்சம் மாறிட்டுதுன்னா என்ன பண்ணுவே?டிவோழ்ஸா?”
“அது வேற…”
“அப்ப அட்ஜஸ்ட் பண்ணிக்குவே இல்ல? அது மாதிரித்தான் இதுவும். நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுதான் ஆகணும். ஆக்சுவலா நீ பேசிட்டிருக்கிறது ஜஸ்ட் மேல் ஈகோ. ஆம்புளைத்திமிர்னு சொன்னா இன்னும் சரியா இருக்கும். நீ அதை விட்டுட்டு யோசிச்சா ஒரு பத்துநாள் கண்ணு பழகுறது வரைக்கும் இருக்கிற தடுமாற்றம்கிறதுக்கு அப்பாலே இதிலே ஒண்ணுமே இல்லை”
“இப்ப எதுக்கு இது?” என்று அவன் குரல்தணிந்து கேட்டான். அவள் சீண்டப்பட்டுவிட்டால் அவளிடம் பேசவே அவனால் இயலாது
”நான் இப்ப போர்டிலே இருக்கேன். நெறைய மீட்டிங் போகவேண்டியிருக்கு. அங்க எல்லாருமே மும்பைவாலாக்கள். பார்சிகள், மார்வாடிகள், வெள்ளைக்காரிகள். போன மாசம் மாலினி தாருவாலா எங்கிட்ட ஐ லைக் யுவர் நோஸ், டிப்பிக்கல் டிராவிடன் நோஸ் அப்டீங்கிறா. பக்கத்திலே நின்னுட்டு அருணா கைத்தான் ‘ஸோ நோபடி கேன் கிவ் ஹெர் எ நோஸ்கட்’னு சொல்றா. ஸிக்”
அவள் மூக்கை வெட்டி ஒட்டி கூர்மையாக்கிக்கொண்டு வந்தாள். மூக்குத்துளைகள் செங்குத்தான கோடுகள் போல அமைந்திருந்தன. அவள் முகமே ஒடுங்கிவிட்டதுபோலிருந்தது.
”உங்கிட்ட இருந்த அந்த குழந்தைத்தனம் போய்ட்டுது”என்றான்
“அதை ஒழிச்சுக்கட்டணும்னுதான் செஞ்சுக்கிட்டேன்”
“அதிலே நீ படிச்ச காலேஜ், உன்னோட திருச்சி ஊரு எல்லாமே இருந்தது”
“ஃபக் ஆஃப்” என்றாள்
அவள் சொன்னதுபோல ஒருமாதத்தில் அந்த முகம் பழகிவிட்டது. பழையமுகம் நினைவிலிருந்து மறைந்தும் விட்டது. ஆனால் சாம் ஒன்றைக் கவனித்தான், அவன் மனதில் அவள் புதிய ஒருத்தியாக ஆகிவிட்டிருந்தாள். அவளையும் முன்பிருந்தவளையும் ஒருவர் என்றே எண்ணமுடியவில்லை. ஒரு அறுவைசிகிழ்ச்சை வழியாக இவளை அவளிடமிருந்து வெட்டி எடுத்து தனியாக நிறுத்தியதுபோல.
அது உடலுறவுகளின்போது இன்னும் கூர்மையாக தெரிந்தது. முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருக்கும் ஒவ்வாமை முதலில் இருந்தது. பின்னர் அதற்குப் பழகிக்கொண்டான். புதிய ஒரு பெண்ணை பழகிக்கொள்வதுபோல.
ஒரே ஒருமுறை அவன் அவள் மூக்கில் கையை வைக்கப்போனான். அவள் சட்டென்று அதை தன் கையால் தடுத்தாள். “நோ…”என்றாள்
அவன் பதறி கையை எடுத்துக்கொண்டான்
“அது ரொம்ப டெலிகேட்…குளிக்கிறப்பகூட ரொம்ப கேர்ஃபுல்லாத்தான் தொடணும்” என்றாள்
“ஸாரி’என்றாள்
“டேக் கேர்”
அவன் அதன்பின் அவள் மூக்கை தொடமுயன்றதே இல்லை. அவள் உடலில் அவன் தொடாத ஓர் உறுப்பு. ஒருமுறை அதை எண்ணி புன்னகைத்துக்கொண்டான். அந்த உறுப்புதான் ஒவ்வொருமுறையும் முன்னால் வருகிறது. சிரிக்கிறது, கோபித்துக்கொள்கிறது, அவளுடைய முகமும் அடையாளமும் ஆகித் தெரிகிறது.
கதவைத் திறந்து அவள் வெளியே வந்தாள். ஒரு மென்மையான டவலால் முகத்தை ஒற்றி ஒற்றி துடைத்தாள். காண்டாக்ட் லென்ஸ்களை கழற்றி டம்ளரில் போட்டாள். திரும்பியபோது அவள் சற்று மென்மையாக மாறிவிட்டதுபோலிருந்தது. சற்றே நீலம் தெரியும் காண்டாக்ட் லென்ஸ்களில் அவளிடம் குடியேறுவது வேறொருத்தி. ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருத்தி.
“என்ன காஸ்மெட்டிக் சர்ஜரி?”என்றான்
“சொல்லலையா?”என்றாள். தலைமயிரை சீவியபடி “சிங்கப்பூர்லே ஒரே வாரத்திலே பண்ணிடலாம். இப்ப தொடர்ச்சியா பூஜா ஹாலிடேஸ் வருது. எப்டியும் நாலுநாள் லீவு. ஒரு மூணுநாள் எக்ஸ்டெண்ட் பண்ணலாம். அதோட மூணுநாளுக்குப்பிறகு மெயில் பாக்கிறது, போன்பேசுறதெல்லாம் பண்ணலாம்…”
“என்ன சர்ஜரின்னு நீ சொல்லலை”
“அதான் சொன்னேனே, நீதான் கவனிக்கலை. செஸ்ட் டெவெலெப்மெண்ட்”
“புரியல்லை” என்றான். உண்மையாகவே புரியவில்லை
“ஸீ, இப்ப நாப்பதாயிடுச்சு… நாப்பதிலே பெண்களுக்கெல்லாம் செஸ்ட் சுருங்கி சின்னதாயிடுது. தொங்கியும் போயிடுது. அதுவும் நான்லாம் ராஜ் பிறந்ததுமே சர்ஜரி பண்ணிட்டேன். ஸோ அது ஒரு பிராப்ளமா இருந்தது. தீபா கன்னாதான் சொன்னா , இப்பல்லாம் இது ரொம்ப காமன் அப்டீன்னு. அவ நாலு வருஷம் முன்னாடியே லண்டன்போயி சர்ஜரி பண்ணிக்கிட்டாளாம்”
அவனுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. அவளை பார்த்துக்கொண்டிருந்தான்
“ப்ரெஸ்ட் ஆகுமென்டேஷன் சர்ஜரின்னு பேரு. பாஸ்னு சாதாரணமா சொல்றாங்க… ஹைலெவல் லேடீஸ்லே பாதிப்பேரு இதை பண்ணிக்கிட்டவங்கதான்”என்றாள் “எனக்கு இப்ப ஷுகர் ,பிரஷர் ,ஹார்ட்பிராப்ளம் ஒண்ணுமே கிடையாது. முன்னாடி பண்ணின காஸ்மெட்டிக் சர்ஜரியிலேயும் எந்த அலர்ஜியும் இல்லை. அப்ப சாதாரணமா பண்ணிக்கலாம்”
அவன் பேசுவதற்காக தொண்டையை கனைத்து மீட்டவேண்டியிருந்தது. “லிலி இப்ப இது எதுக்கு? எவ்ளவோ வழிகள் இருக்கு” என்றான்
“என்ன பண்றது? பேட் வைச்சுக்கிடறதா? அதைப்பாத்தாலே தெரியும், அதிலே மூவ்மெண்டே இருக்காது.அதோட குளோஸ்ட் டாப்ஸ் தான் போடமுடியும். காஷுவல் பார்ட்டிகளிலே அப்டி டிரெஸ் பண்ணிக்கிடறது இப்ப ஃபேஷன் இல்லை. எனக்கு இப்ப பிஸினஸ்லே முக்காவாசி காஷுவல் பார்ட்டிகளிலேதான் நடந்திட்டிருக்கு”
“அதாவது டிரஸ்ஸுக்கு மேலே பிரெஸ்ட்ஸ்டோட விளிம்பு தெரியணும்… அது துள்ளிட்டிருக்கணும்”
அவன் குரலில் இருந்த எரிச்சல் அவளை சீண்டியது. “ஆமா, அதான் ஃபேஷன். அதான் ஒரு சி.இ.ஓக்கு தேவையான ஸ்டைல்”
சாம் தலையை அசைத்தான்.
“என்ன தலையை ஆட்டுறே? புடிக்கலையா?”
“புடிக்கலைன்னா நீ என்ன பண்ணப்போறே? நீ என்னை கன்சிடர் பண்ணப்போறியா என்ன?”
“சென்ஸிபிளா ஏதாவது சொன்னா கன்ஸிடர் பண்ணலாம். நீ சொல்றதெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பாட்டிக்கதை. அதை நம்பிட்டிருந்திருந்தா நான் அந்த இன்ஷூரன்ஸ் மேனேஜரா இந்நேரம் நாளை எண்ணிக்கிட்டு இருந்திருப்பேன்”
சாம் பெருமூச்சுடன் மடிக்கணினியை மீண்டும் எடுத்தான்
அவள் எரிச்சலுடன் குரலை உயர்த்தினாள். “லுக், இந்த அலட்சியநடிப்பு இருக்கே, அதான் என்னை இரிட்டேட் பண்ணுது. நீ பண்ற புரோக்கர் பிஸினஸுக்கு உன்னோட தொப்பையும் தாடையும் ஓக்கே. யாரும் உன்னை பாக்கப்போறதில்லை. நான் அப்டி இல்லை. நான் சிஇஓ. மாசம் முப்பதாயிரம் ரூபா பணம்குடுத்து டிரெயினர் வைச்சு உடம்பை ஃபிட்டா வைச்சுக்கிடறேன். மாசம் பதினஞ்சாயிரம் ரூபாய் குடுத்து டயட்டீஷியனை வைச்சுக்கிடறேன்…”
”பியூட்டீஷியனையும்”
“ஆமா பியூட்டீஷியனையும்… என்னா என்னோட லுக் அப்டி இருக்கணும். மாடர்னா, கான்ஃபிடண்டா, ஸ்டிராங்கா… தொளதொளன்னு இருந்தா கிழவீன்னு ஒரே வார்த்தையிலே கடந்துபோயிடுவாங்க. இது வேற உலகம். வைல்ட் காம்பெட்டிஷனோட உலகம்… ஒருத்தரை ஒருத்தர் வேட்டையாடி கொன்னு திங்கிறதுதான் இங்க திறமையே”
“ஐ நோ” என்றான்.
“நோ,யூ டோண்ட் நோ” என்று லிலி மூச்சிரைக்க கூவியபடி எழுந்தாள். “என்னதான் இருந்தாலும் உங்களுக்கெல்லாம் பொண்ணுங்கிற எளக்காரம் மாறவே போறதில்லை. பொண்ணு அதிகாரத்திலே மேலே போனா அதிலே எரிச்சல். சொந்த மனைவியா இருந்தாலும் எரிச்சல் மாறாது.ஸிக்…”
“ஸீ நான் இப்ப என்ன சொன்னேன்?”
“ஒண்ணுமே சொல்லலை. யூ ஆர் ஜஸ்ட் கூல்… நையாண்டி வேற. முன்னாடி மூக்கு சர்ஜரி பண்ணினப்ப என்ன குதி குதிச்சே”
“அப்ப இருந்த மனநிலை வேற”
”அப்பவும் இப்பவும் அதே மனநிலைதான். ஒரு பொண்ணு திறமையாலே ஜெயிக்கமுடியும்கிற நம்பிக்கையே இல்லை”
அவன் எரிச்சலடைந்தான். “செய்றது எல்லாம் செஞ்சுக்கிடறது. ஏதாவது விமர்சனம் வந்தா உடனே பொம்புளைப்புரட்சின்னு ஆரம்பிச்சிடறது… இப்ப நீ மார்புக்குள்ள சிலிக்கன் ஜெல்லிய வைச்சு அடைச்சு தூக்கி காட்டுறது எந்த தெறமைக்காக? நீ என்ன காபரேவா ஆடப்போறே?”
அவள் முகம் சிவந்து சிறுத்தது. கண்களில் தெரிந்த வெறுப்பு அவனுக்கு கூர்மையான கத்தியால் உரசுவதுபோல ஒவ்வாமையையும் தினவையும் உருவாக்கியது
“ஸோ, நீ உன்னோட நஞ்சை கக்கிட்டே… நீ அப்டித்தான் பேச முடியும்… உன்னாலே வேற எதையுமே பேசமுடியாது. யூ…”
“ஆணாதிக்கப் பன்றி… அதானே. வேற என்ன சொல்லப்போறே?”
“எஸ்… அதேதான். வேற ஒண்ணுமே இல்லை. அதேதான்…”
“தேங்க் யூ”என்று அவன் மறுபடியும் மடிக்கணினியை எடுத்துக்கொண்டான்
அவள் எழுந்து வந்து அதை பிடுங்கி அப்பால் வீசினாள். ‘நௌ டெல்மீ. நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்? இப்ப சொன்னதுக்கு என்ன அர்த்தம்?”
“என்ன சொன்னேன்?”
”காபரேன்னு சொன்னே..”
“ஆமா, மார்பை ஆப்பரேஷன் பண்ணிகிடறது அவங்கதான்”
”வெக்கமா இல்ல? ஒரு பொம்புளைய நடுவிலே நிப்பாட்டி துணிய கழட்டவைச்சு சுத்தி உக்காந்து ரசிக்கிறது, அதுக்கொரு பேரு… ஸிக்” என்றாள்.
“இப்ப நீ சர்ஜரி பண்ணிக்கிடறது எதுக்கு? ஆம்புளைங்க பாக்கணும்னுதானே?”
”இதான் உன்னோட ஒரிஜினல் தாட். இதுக்கு வரத்தான் அப்டி சுத்தினே. நான் சர்ஜரி பண்ணிக்கிட்டா மத்த ஆம்புளைங்க பாப்பாங்க. அது உனக்கு புடிக்கலை.வெறும் பொறாமை… வேற ஒண்ணுமே இல்லை”
“சரி, வைச்சுக்கோ”
“நான் சர்ஜரி பண்ணிக்கிடறது எந்த ஆம்புளைக்காகவும் இல்லை. எல்லா ஆம்புளைங்களும் எனக்கு இந்த ஆட்டத்திலே ஜஸ்ட் ஹேங்கிங் பால்ஸ்தான்”
“அது நல்ல லைன்” என்று அவன் புன்னகைசெய்தான்
“என்ன?”
‘ஆம்புளைங்கன்னா ஜஸ்ட் ஹேங்கிங் பால்ஸ்தான்னு சொன்னது” என்றான் “குளிர்காலத்திலேயுமா?”
“ஷிட்”என்றாள். “நேஸ்டி ஜோக்”
”சரி சொல்லு, ஆம்புளைங்களை கவரணும்னு இல்லேன்னா பிறகு எதுக்கு இந்த சர்ஜரி?”
”நான் பொம்புளை. என்னோட உடம்புக்கு ஒரு ஐடியல் இருக்கு. அது எனக்கு வேணும். அதான் என்னோட பெஸ்ட் எக்ஸ்பிரஷன் ஆஃப் பாடி. என் பேச்சுமாதிரி, சிரிப்பு மாதிரி ,பார்வை மாதிரி, என்னோட பாடியும் என்னோட எக்ஸ்பிரஷன்தான். நான் அதை ஐடியலா மாத்திக்கிடணும். அதுக்குத்தான்… ”
“பொம்புளை பாடியே ஆம்புளைய அட்ராக்ட் பண்ணணும்னு டிசைன் ஆகியிருக்கிறதுதான்”
“இருக்கட்டும். என்னோட பாடி அட்ராக்ட் பண்ணுதுன்னா என்னோட குரல் பேச்சு அதெல்லாம் அட்ராக்ட் பண்ணாதா? என்னோட எஜுகேஷன், கல்ச்சர் அதெல்லாம் அட்ராக்ட் பண்ணாதா? இது மட்டும் என்ன வித்தியாசம்?”
“பேசிட்டே இருக்கலாம், ஆனா உனக்கே தெரியும்”
“இல்ல, நீங்களே பேசிப்பேசி சிந்தனையிலே ஒரு டிசைன் பண்ணி வைச்சிருக்கீங்க. அதை சொல்லிட்டே இருப்பீங்க. ஒரு பொண்ணோட பிரில்லியன்ஸை பாத்து ஒரு ஆம்புளைக்கு செக்ஷுவல் டிசையர் வரக்கூடாதா? அதனாலே உடனே அவ அசமஞ்சமா ஆயிடணுமா? இல்ல பேசாம வாயை மூடிட்டிருக்கணுமா? பொம்புளைய கறுப்புத்துணியாலே மூடிவைக்கணும்னு சொல்றவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்”
“இப்ப ஏன் ப்ளூரலிலே பேசுறே”
“நீங்கள்லாம் ஒண்ணு… ஒரே குரல்”
“நீ பேசுறது வெறும் விதண்டாவாதம்”
”இல்லை. பேஸிக்கலா கேள்வி ஒண்ணுதான். பொம்புளை தன்னை எக்ஸ்பிரஸ் பண்ணணுமா இல்லை ஒளிஞ்சுகிடணுமா? எக்ஸ்பிரஷன்னா அது எல்லா வகையிலயும்தான். எல்லா திறமையையும்தான் வெளிப்படுத்தணும். பலசாலியா, அழகா, இளமையா வெளிப்படவேண்டிய இடத்திலே அப்டித்தான் வெளிப்படணும்… வெளிப்பட்டாத்தான் ஜெயிக்கமுடியும். ஒளிஞ்சுக்கிட்டா அடிமையாத்தான் இருக்கமுடியும்… “
சாம் பெருமூச்சுவிட்டான்
“என்ன ஒண்ணுமே பேச்சை காணும்?”
“நீ ஈஸியா ஒரு போலரைஸேஷனை கொண்டுவந்திட்டே. இனிமே இதுவா அதுவான்னுதான் கேள்வி. ரெண்டுலே நீ எனக்கு ஒரு சைடை குடுக்கிறே. அதை நான் எடுத்து வாதாடணும்… அதான் நீ எதிர்பார்க்கிறே. நான் இந்த ஆட்டத்துக்கே வரல்லை”
”எதாவது ஒண்ணைச் சொல்றது, அதை கேள்விகேட்டோம்னா அதிலே நிக்காம ஒதுங்கிக்கிடறது…”என்று அவள் உதட்டைச் சுழித்தாள்
“சரி, நேரடியா இப்ப கேட்கிறேன். இது உன்னோட செக்ஸ் அப்பீலை கூட்டிக்கிடறதுதானே? உன் தொழிலிலே இது தேவைப்படுதுன்னா அது திறமையா?”
“இல்லை, இது என்னோட பெர்சனாலிட்டியை நான் கூட்டிக்கிடறது. எல்லா பெர்சனாலிட்டியிலேயும் ஒரு செக்ஸ்அப்பீல் அம்சம் கண்டிப்பா இருக்கு. அது ஹ்யூமன் நேச்சர். ஆம்புளைங்களும் அப்டித்தான். ஏன் முடி டிரான்ஸ்பிளாண்ட் பண்ணிக்கிடறீங்க? எதுக்கு பல் கட்டிகிடறீங்க? அதுவும் இதுவும் ஒண்ணுதான். இது ஏன் என்னோட தொழிலிலே தேவைப்படுதுன்னா ஆம்புளைங்களுக்கு கிளுகிளுப்பு அளிக்கிறதுக்காக இல்லை. என் சர்க்கிளிலே அப்டி கிளுகிளுப்பு அடையறவங்க யாருமில்லை. அப்டி பொண்ணு வேணும்னா அவங்களுக்கு இண்டர்நேஷனல் மாடல்ஸ் கிடைப்பாங்க”
“பின்ன எதுக்கு?”
“நான் ஒரு பிராஜக்ட் ஐடியாவை முன்வைக்கிறேன், அப்ப முதல் கேள்வியே அந்த பிராஜக்டை எட்டோ பத்தோ வருஷம் எடுத்து நடத்தி முடிக்க என்னாலே முடியுமா, அதுக்கான ஆரோக்கியமும் இளமையும் எங்கிட்ட இருக்காங்கிறதுதான். நான் ஒரு ஐடியாவை சொன்னா முதல்லே வாற சந்தேகமே நான் இந்தக்காலத்து இளந்தலைமுறையோட வேவ்லெங்க்திலே இருக்கேனா இல்லியாங்கிறதுதான். என்னாலே ஆயிரம் பத்தாயிரம் இளைஞர்களை புரிஞ்சுக்கிட்டு, அவங்களை ஒருங்கிணைச்சு ஒரு வேலையைச் செஞ்சு முடிக்கமுடியுமாங்கிறது எப்பவுமே முக்கியமான கேள்வி. அதுக்கு நான் இளமையா, துடிப்பா ,ஹெல்தியா இருந்தே ஆகணும்”
“ஆனா நீ அப்டி இருக்கியா, இல்ல அப்டி வேஷம்போடுறியா?”
“இப்ப சொன்னியே வேஷம்னு, அதான் பத்தொன்பதாம்நூற்றாண்டு ஐடியா. நான் பிரசண்ட் பண்றேன். என்னை எக்ஸ்பிரஸ் பண்றேன். அது வேஷமில்லை. எனக்கு பயமிருக்கலாம், சந்தேகமும் குழப்பமும் இருக்கலாம். ஆனா அதை நான் பிரசண்ட் பண்ணமாட்டேன். என்னை தைரியமான, தெளிவான ஆளாத்தான் புரஜக்ட் பண்ணுவேன். என்னோட எக்ஸ்பிரஷன்தான் நான். அதுக்கு அப்பாலே உண்மையிலே நான் யார்னு யாருக்கும் தெரியாது. அது முக்கியமே இல்லை”
“உண்மையிலேயே உள்ள நீ யாருன்னு முக்கியமில்லையா? இந்த பில்டிங்கிலே உள்ள கம்பிக்கு பதிலா குச்சியை வைச்சு கட்டினா ஸ்டிராங்கா இருக்குமா?”
“இது பில்டிங் இல்லை. இது மனசு. நான் எப்டி என்னை எக்ஸ்பிரஸ் பண்றேனோ அப்டி நான் படிப்படியா மாறிடுவேன். துணிச்சலான பொண்ணா நான் என்னைய காட்டிக்கிட்டா எங்கிட்ட துணிச்சல் வந்திரும். காலையிலே எழுந்து இந்த நிலைக்கண்ணாடியிலே என்னை நான் பாத்துக்கிடறேன்ல, அதான் நான். அப்பதான் நான் என்னை கிரியேட் பண்ணிக்கிடறேன்… அந்த கிரியேட்டட் பர்சனாலிட்டியைத்தான் வெளியே கொண்டுபோறேன்… அவ்ளவுதான்”
“நாம இதை இப்பவே நிப்பாட்டிக்கிடலாம்னு நினைக்கிறேன்” என்றபின் சாம் எழுந்து கழிப்பறைக்குச் சென்றான்
அவன் திரும்பி வரும்போது அவள் மார்புவரை போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டு செல்பேசியில் மின்னஞ்சல்களை பார்த்துக்கொண்டிருந்தாள்
அவன் வந்து படுத்ததும் அவள் ஒரு ஆல்பத்தை எடுத்து “இது டாக்டர் குடுத்த மாடல்ஸ்” என்றாள்
”என்ன மாடல்?”என்றான். அது ஆல்பம் அல்ல,ஒரு பெரிய புத்தகம்.
“ஸீ, பூப்ஸ்னா அது சாதாரணமா ரெண்டு ஃப்ளெஷ் பல்ப்ஸ் இல்லை. அதிலே அவ்ளவு நுட்பங்கள் இருக்கு. ஏஷியன், இண்டியன், அராப், ஆப்ரிக்கன், யூரோப்பியன்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வகை. அதுக்குள்ளே ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு இனத்துக்கும் வேறவேற வடிவங்கள் இருக்கு. ஒவ்வொரு உடம்புக்கும் அதுக்கான பிரெஸ்ட் வடிவம் இருக்கு.”
“கம்ப்யூட்டர் டிசைன் பண்ணுதாமா?”என்று அவன் கேட்டான். அவளிடம் அப்பேச்சை நிறுத்திக்கொள்ளவும் ஒரு குவளை ஒயின் அருந்திவிட்டு படுக்கவும் விரும்பினான்
“நோ நோ… கம்ப்யூட்டரை வைச்சு அப்டி மெக்கானிக்கலா முடிவு எடுக்கமுடியாது. ஆக்சுவலி இதிலே மூணு ஃபினாமினன் இருக்கு. ஒண்ணு பயாலஜிக்கல். இந்த உடம்பு அமைப்புக்கு இந்த பிரெஸ்ட் பொருத்தம்னு சொல்றது. அது பியூர்லி அனாட்டமிக்கல் பார்வை. அதிலே எலும்புக்கூடு அமைப்பைத்தான் கணக்கிலே எடுத்துக்கிடறாங்க. குறிப்பா தோள் எலும்பு, விலாவெலும்பு ரெண்டையும். அதைவைச்சு கம்ப்யூட்டர்லே டிசைன் பண்ணி இதான் இந்த உடம்புக்கான பிரெஸ்ட் ஐடியல்னு சொல்லிடறாங்க”
“அப்றமென்ன?”என்றபடி அவன் மெத்தைமேல் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டான்.
”பூப்ஸ்ங்கிறது ஜஸ்ட் ஆன் ஆர்கன்னா பிரச்சினையே இல்லியே. அது வெறும் ஒரு ஆர்கன் மட்டும்தான்னா இந்த காஸ்மெட்டிக் சர்ஜரிக்கே தேவை இல்லையே”என்றாள் லிலி “அதிலே இருக்கிற கல்சுரல் எலெமென்டுன்னா டேஸ்டுதான்… விஷுவல் டேஸ்ட். எது நமக்கு அழகுன்னு தோணுது, ஏன் தோணுதுன்னு பாக்கணும்ல? ஏஷியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் வேற வேற டேஸ்ட் இருக்கு. ஆப்ரிக்காவிலே பூப்ஸ்னாலே தொங்கி வயிறுவரைக்கும் இருக்கிறமாதிரித்தான் பெரும்பாலான சிற்பங்களிலே செதுக்கியிருக்காங்க. அவங்களுக்கு அது மதர்ஹுட் மட்டும்தான். யூரோப்லே வீனஸ் சிலையெல்லாம் பாத்தா பூப்ஸே இருக்காது. ரொம்பச் சின்னதா இருக்கும். நிப்பிள் எல்லாம் ரெண்டு டாட் மட்டும்தான். ஆனால் இந்தியாவிலே பழைய சிற்பங்களிலேயே பூப்ஸ் ரொம்ப பெரிசா இருக்கும். இடைவெளியே இல்லாம ரெண்டும் நெருங்கிட்டிருக்கும்… ஸீ… இதிலே எல்லா சிற்பங்களையும் மாடலா குடுத்திருக்கான். கிரீஸ் ,ரோம், சீனா, இந்தியா எல்லா ஊர் சிலையையும் பெயிண்டிங்கையும் காட்டுறான்… இது கஜுராகோ… பாத்தியா, இந்த அப்சரசோட பூப்ஸை… ஸோ லார்ஜ்”
“ஆமா, நாமகூட போயிருந்தோமே…”என்று அவன் ஆர்வமில்லாமல் சொன்னான்
“இப்ப என்னோட பாடின்னா இந்தியன் அனாட்டமி உள்ளது. அதிலே குறிப்பா திராவிட அனாட்டமி. என்னோட போன் ஸ்டிரக்சருக்கு எனக்கு இருக்கிற சாய்ஸ்களிலே நான் திராவிட அனாட்டமியைத்தான் செலெக்ட் பண்ணணும். அதுக்குள்ள எனக்கு நெறைய சாய்ஸ் இருக்கு. அதுக்குமேலே நான் எந்த கல்சுரல் பிளெண்ட்டை விரும்புறேன்னு இருக்கு. ஆனா நான் திராவிட ஷேப்பை விரும்பலை”
“ஏன்?”
“ஏன் திராவிட மூக்கை விரும்பலை, அதே காரணத்தாலேதான். இப்ப எது சக்ஸஸ்புல்லோ அந்தச் சாயல் இருக்கணும்.. ”
“ஓகோ”என்றான்
”எப்பவுமே அது அப்டிதான். யாரு ஜெயிச்சு மேலே இருக்கிறாங்களோ அவங்களை மாதிரி ஆகிறதுதான் ஃபேஷன். தென்னிந்தியர்கள் வட இந்தியர்கள் மாதிரி ஆகிறாங்க. வட இந்தியர்கள் வெள்ளைக்காரங்களை மாதிரி ஆகிறாங்க… நான் சின்னப்பொண்ணா இருக்கிறப்ப வெள்ளைக்காரிகளை மாதிரி சுருண்ட அலையலையான தலைமுடிதான் ஃபேஷன்.கர்லிங் அயர்ன் வைச்சு சுருட்டிக்கிடுவோம். இப்ப சீனா சக்ஸஸ்புல் நாடு. அதனாலே அமெரிக்காக்காரிகள் சீனாக்காரிகளை மாதிரி இருக்கிற சுருளையும் நீவி நீட்டி விட்டு கலர் பண்ணிக்கிடறாங்க. தலைமுடியிலே இப்ப இருக்கிற எல்லா ஃபேஷனும் சீனா மாடல்தான்…”
“அப்ப சீன மாடல்தான், என்ன?”
”இல்ல, சீனமாடல்னா ரொம்பச் சின்னதா இருக்கணும். அது என்னோட தோள் அளவுக்கு சரியா வராது. பெரிசாகவும் இருக்கக்கூடாது. நடுவிலே ஒரு பிளெண்ட் வேணும். அதான் நாலைஞ்சுநாளா யோசிச்சிட்டிருக்கேன். நாலு டிசைன் ஓக்கே பண்ணி வைச்சிருக்கேன்”
“ஓக்கே பண்ணியாச்சா?”என்று கொட்டாவி விட்டான்
“ஆமா, ஆனா குழப்பமா இருக்கு. நான் செலெக்ட்பண்ணி குடுத்தா அதைவைச்சு என்னோட விர்ச்சுவல் மாடலை அவங்க அனுப்பி வைப்பாங்க. ஆக்சுவலா பணம் குடுத்தா த்ரீடி சிற்பமா கூட பிளாஸ்டர் ஆஃப் பாரீஸிலே செஞ்சு அனுப்புவாங்க. அதைப்பாத்து ஃபைனலா ஓக்கே பண்ணிடலாம்”
“சர்ஜரின்னா என்னதான் பண்ணுவாங்க?”என்றான் சாம்
“ரெண்டு முறை இருக்கு. ஸ்டெரிலைஸ் பண்ணின சால்ட்வாட்டர் உள்ள வைக்கிறதுக்கு சலைன் மெதட்னு பேரு.ரொம்ப சின்னதா என்லார்ஜ் பண்ணினாப் போரும்னா அதைப் பண்ணுவாங்க. சாதாரணமா வைக்கிறது சிலிக்கன் ஜெல்லி… பிரெஸ்டுக்கு கீழேயோ பக்கவாட்டிலோ சின்னதா கட்பண்ணி உள்ளே இஞ்செக்ட் பண்ணுவாங்க”
”அது லைஃப் லாங் இருக்குமா?”
“ஏழெட்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்ப மாத்திக்கிடணும்”
“பிராப்ளம் ஏதாவது இருக்குமா?”
“ஒண்ணும் இருக்காது. ஆனா கேர்ஃபுல்லா இருக்கணும். பிரஷர் இருக்கக்கூடாது. சாஃப்டாத்தான் தொடணும்”
“அப்ப நான் தொடமுடியாது?”
”எந்த ஆம்புளையும் தொடமுடியாது”என்று அவள் சிரித்தாள் “இப்ப தெரியுதுல்ல, இது செக்ஷுவல் பர்ப்பஸே இல்லை…”
”ஜஸ்ட் எ டிஸ்பிளே?”என்றான்
“இல்லை, பிரசண்டேஷன், சொன்னேனே”
அவன் ‘“நைஸ்” என்றான்
அவள் அந்த புத்தகத்தை அப்பால் வைத்துவிட்டு “சாம்’என்றாள்
”சொல்லு”
“உண்மையிலேயே உனக்கு அவெர்ஷனா இருக்கா?”
”எது?”என்றான்
“இப்டி பண்ணிக்கிடறது?”
“இல்லை”
“பொய்… நீ நார்மலா இல்லை. ஸீ, இது புதியவாழ்க்கை. மிடில்கிளாஸ் பெண்கள்கூட அடுத்த தலைமுறையிலே இதைத்தான் பண்ணிக்கிடப்போறாங்க. நாம அப்பர்கிளாஸ். நாம கொஞ்சம் ஃபார்வேடா இருக்கோம்…”
“ஆமா”
“என் கரியருக்கு இது தேவைப்படுது… என்னோட ஃபோட்டோ இப்ப எல்லா கம்பெனி பிரௌஷரிலேயும் வருது…. மாசம் ஒரு இண்டர்வியூ பப்ளிஷ் ஆகுது…நான் என்னை பிரசண்ட் பண்ணணும். இப்ப ஒவ்வொருத்தர்கிட்டேயும் இந்த காலகட்டம் கேக்கிறது ஒண்ணேதான். எப்டி உங்களை பிரசண்ட் பண்ணிக்க போறீங்க? ஆக்டிவா, எனெர்ஜெட்டிக்கா, யூத்தா பிரசண்ட் பண்ணிக்கிடலாம். கால்குலேட்டிவா, பேஷியண்டா, சைலண்டா பிரசன்ட் பண்ணிக்கிடலாம்….அரகண்டா, எய்ம்லெஸ்ஸா, கிறுக்கனா எப்டி வேணுமானாலும் பிரசண்ட் பண்ணிக்கிடலாம்.”
அவளுக்கு அவள் எண்ணங்களை கோவையாகச் சொல்லித் தொகுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கனவே சொன்னபோது ஒருங்கிணைந்து வராத கருத்துக்கள் அப்போது திரண்டன.
“இப்ப சோஷியல் மீடியா எதுக்கு இருக்கு? நம்மை நாமளே பிரசன்ட் பண்ணிக்கிடத்தான். சோஷியல்மீடியா ஒவ்வொருத்தர்ட்டையும் அவங்களை ஒருவிதமா முன்வைக்க்கத்தானே சொல்லிட்டிருக்கு? இந்தியாவிலே இன்னிக்கு இருபதுகோடிப்பேர் அதைத்தான் செஞ்சிட்டிருக்கான். ஒவ்வொருத்தனும் அவனையே ஃபிக்ஷனைஸ் பண்ணிட்டிருக்கான்… ஃபோட்டோவா போடுறான். மலையுச்சியிலே, கோயில்முகப்பிலே போஸ் குடுக்கிறான். குடும்பத்தோட, நாய்குட்டியோட நின்னு சிரிக்கிறான். புரட்சிகரமா பாலிடிக்ஸ் பேசுறான். இண்டெலக்சுவலா காட்டிக்கிறான்… ஜாலியானவனா, பணக்காரனா, கேர்ஃப்ரீ ஆளா காட்டிக்கிறான். சிலபேர் பொறுக்கியா, அயோக்கியனாக்கூட காட்டிக்கிடறாங்க. அதெல்லாம் பொய் இல்லை. அவன் எதை முன்வைக்கிறானோ அதான் அவன்… அதுக்குமேலே அவனுக்கு எந்த செல்ஃபும் இல்லை. அப்டி ஒரு மாறாத செல்ஃப் இருக்குன்னு சொல்றது பொய். அப்பப்ப எப்டி முன்வைச்சுகிடறோமோ அதுதான் நாம…”
அவளால் எண்ணியதைப் பேசிப்பேசி பெரிய கொள்கையாக ஆக்கிவிடமுடியும் என அவன் அறிவான். ஆகவே சலிப்புடன் காலை ஆட்டிக்கொண்டு கேட்டிருந்தான்
அவள் சொன்னாள் “ஏற்கனவே காலாகாலமா அதைத்தான் செஞ்சிட்டிருந்தோம். ஆள்பாதி ஆடைபாதின்னு அதைத்தான் சொன்னாங்க. திண்ணையிலே உக்காந்து பேசிப்பேசி நம்மளை நாம பிரசண்ட் பண்ணினோம். ஒரு தெருவிலே இல்லேன்னா ஒரு ஊரிலே பண்ணினதை இப்ப உலகம் முழுசுக்காக பண்ணச்சொல்லுது சோஷியல்மீடியா….ஒரு மனுஷனோட பர்சனாலிட்டிங்கிறது அவன் பிரசண்ட் பண்றது மட்டும்தான். அதுக்குமேலே அவன் யாருன்னா வெறும் உயிர். வெறும் உடம்பு. வெறும் பயாலஜிக்கல் எண்டைட்டி, அவ்ளவுதான்…”
“குட்”என்று அவன் சொன்னான்
அதுவரை அவளிடமிருந்த ஆர்வம் அறுபட்டது. “நான் சொல்றதிலே உனக்கு சம்மதமில்லேன்னா ஆர்க்யூ பண்ணு… இந்த ஒத்தைச் சொல் எல்லாம் வேண்டாம்” என்று எரிச்சலுடன் சொன்னாள்
“இதோபார், நான் எப்டி ஆர்க்யூ பண்ணணும்? நீ சொல்றதை எதுத்து எது சொன்னாலும் அதெல்லாம் மேல்சாவனிசம், ஓல்ட் ஃபேஷண்ட் அர்ரகன்ஸ்… ஆனா அதை நான் சொல்லணும். அதை எதுத்து பேசி நீ ஜெயிக்கணும்… அதானே?”
“நீ ஏன் இர்ரிட்டேட் ஆகிறே? அதை மட்டும் யோசிச்சுப்பாரு”
“நான் ஒண்ணும் இர்ரிட்டேட் ஆகலை”
“பின்ன? நீ சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லியா?”
“இருக்கு. ஆனா எனக்கு கோர்வையா சொல்லத்தெரியாது. நான் ஒண்ணும் உன்னைமாதிரி இண்டெலெக்சுவல் இல்லை. ஜஸ்ட் எ டிரேடர்”
“சொல்லு, நான் இண்டலெக்சுவலைஸ் பண்ணிக்கிடறேன்”
“இதபார், பொம்புளை உடம்புமேலே ஆம்புளைக்கு எந்த உரிமையும் இல்லியா?”
“உரிமையா? என்ன நான்சென்ஸ்?”
“நான் கேக்கிறது வேற. பொம்புளை உடம்பை சார்ந்துதான் ஆம்புளையோட காமம் இருக்கு. ஆம்புளை உடம்பைச் சார்ந்துதான் பொம்புளையோட காமம் இருக்கு. என்னோட காமம் மேலே எனக்கு ஒரு உரிமை இருக்குல்ல? அப்ப பொம்புளை உடம்பு மேலே எனக்கும் ஒரு உரிமை இருக்குல்ல? சாரி, என்னாலே சரியா கேக்க முடியல்லை. இப்டி கேக்கறேன். இப்ப உன் உடம்பிலே ஒரு உறுப்பை என்னாலே தொடமுடியாது. நாளைக்கு உன் பூப்ஸை தொடமுடியாது. அப்டியே கொஞ்சம் கொஞ்சமா ஒரு காலத்திலே பொம்புளை உடம்பே ஆம்புளையாலே தொடமுடியாததா ஆயிடுமா?”
அவள் ஏதோ பேசும் முன் “இரு இரு, நான் சரியா கேக்கல்லை. இதோபார், பொம்புளைங்க ஆம்புளைங்களோட டேஸ்டை பத்தி கவலையே படாம அவங்க உடம்பை மாத்திகிடறாங்க. ஆம்புளைங்களும் தங்களை மாத்திக்கிடறாங்க. அப்ப அந்த உலகத்திலே ஆண்பெண் உறவு என்னவா இருக்கும்? ஆண்பெண் செக்ஸ் இல்லாம ஆயிடுமா? செக்ஸுவல் பிளஷருக்கு டெக்னிக்கலான வழிமுறைகள் வரலாம். இந்த உலகமே வேறமாதிரி ஆயிடலாம்”
“ஆகட்டுமே. ஸோ வாட்?”என்றாள். அவள் அந்த கோணத்தை எதிர்பார்க்கவில்லை
“ஆணும் பெண்ணும் உடம்பாலேதான் உரையாடிக்க முடியும். ஐ மீன் கம்யூனிகேஷன். அந்த கம்யூனிகேஷன் ரொம்ப டீப்பானது. அதுக்கு பல லட்சம் ஆண்டு பரிணாம வரலாறு இருக்கு. அந்த உரையாடலே இல்லாம ஆயிடுமா? என்னோட உடம்பு என்னோடது மட்டுமேன்னு சொல்றது அந்த உரையாடலுக்கு வரமாட்டேன்னு கதவை மூடிக்கிடறதுதானே?”
“உரையாடலை நிப்பாட்டிக்கிடறது பத்தி நான் சொல்லலை. அந்த உரையாடலும் என்னோட சாய்ஸ்தான் சொல்ல வர்ரேன். என்னோட மனசிலே எந்த பகுதி இன்னொருத்தர்கூட உரையாடணும்னு நான் முடிவுபண்ணுவேன். மிச்ச பகுதி என்னோட பிரைவசி. அதேமாதிரித்தான் என்னோட உடலும். தட் இஸ் ஆல்” என்றாள்.
அவன் தலையை அசைத்து “இப்பவும் நான் சரியா சொல்லலை. என்னாலே சொல்ல முடியலை. இப்டிச் சொல்றேன், என்னோட காமம் பொண்ணோட உடம்பிலே கொஞ்சம்கூட பிரதிபலிக்கலைன்னா எனக்கு அதோட என்ன தொடர்பு இருக்கும்? அது மூடின கட்டிடம் மாதிரித்தானே?” அவள் பேச வாயெடுப்பதற்குள் அவன் “இரு இரு, இதேதான் ஆம்புளை உடம்புக்கும்….அதையும் சேத்துத்தான் சொல்றேன்” என்றான்
“ஸீ, நீ பேசிட்டிருக்கிறது வெறும் ஊகம். அதுக்கெல்லாம் பிராக்டிக்கலா எந்த அர்த்தமும் இல்லை. உரையாடல்னு சொன்னியே. அந்த உரையாடல் காலகாலமா நடந்திட்டிருக்கு. ஒரே பேட்டர்ன், ஒரே ஸ்டைல். அதிலே ஒரு சுரண்டல் இருக்கு. ஒரு அடிமைத்தனம் இருக்கு. அது வேண்டாம்னுதான் சொல்றேன். உரையாடல் வேண்டாம்னு சொல்லலை. வேற வகையான உரையாடல் நடக்கலாமேன்னு சொல்றேன்
நாகர்கோயிலும் நானும்
அன்புள்ள ஜெ,
மார்ச் நான்காம் தேதி நாகர்கோயிலில் நீங்கள் பேசுவதை அறிந்தேன். நான் நாகர்கோயில் வந்து நீண்டநாட்களாகின்றது. நீங்கள் நாகர்கோயிலில் அனேகமாகப் பேசுவதே இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் பேச்சை நாகர்கோயிலில் கேட்க ஆர்வமாக இருக்கிறது. முடிந்தவரை வரப்பார்க்கிறேன்
ரவிச்சந்திரன்
அன்புள்ள ரவிச்சந்திரன்,
நான் நாகர்கோயிலில் பேசுவது மிக அரிது. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் எம்.எஸ், நாஞ்சில்நாடன், அ.கா.பெருமாள், வேதசகாயகுமார் ஆகியோருக்கு விழாக்களை நடத்தினேன். பேரா.ஜேசுதாசன் தொடங்கி அசோகமித்திரன் வரை சில அஞ்சலிக்கூட்டங்களை வேதசகாயகுமாருடனும் லக்ஷ்மி மணிவண்ணனுடனும் சேர்ந்து நடத்தினேன். குளச்சல் மு.யூசுப்புக்கு நடத்திய பாராட்டுவிழாதான் கடைசியாக. பொதுவாக இங்குள்ள இலக்கிய அமைப்புக்களுடன் தொடர்பில்லை.
இங்கே, குமரிமாவட்டத்தின் உளநிலை மிகச்சிக்கலானது. முதன்மையாக சாதி. வேளாளர்கள், நாடார்கள் என இரண்டு பிரிவு. ஒருவர் நடத்தும் விழாக்களுக்கு இன்னொரு சாரார் வரமாட்டார்கள் –அதற்கு கொள்கை கோட்பாடு என்றெல்லாம் ஏதாவது காரணம் சொல்வார்கள். அப்படி போகாமலிருப்பதே ஒரு பெருமை என்று நினைப்பார்கள்.
வேளாளர்கள் நடுவிலேயே முற்போக்காளர், மரபுவாதிகள் என்ற பிரிவினை உண்டு. நாடார்கள் நடுவே கிறிஸ்தவர், இந்து என்ற பிரிவினை. அதற்குள் சிறுசிறு குழுவினர் உண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தவர், கலையிலக்கியப் பெருமன்றத்தவர் வேறு எவர் நடத்தும் விழாக்களுக்கும் செல்லமாட்டார்கள். அவர்கள் ஒரு ரகசியக்குழு போல.
ஆகவே இங்கே இலக்கியக்கூட்டம் என்றாலே எட்டுபத்து பேர்தான். கோவையிலோ ஈரோட்டிலோ சென்னையிலோ நான் தங்கியிருக்கும் விடுதியின் அறைக்குள்ளேயே இருபதுபேருக்கு குறையாமல் எப்போதுமிருப்பார்கள். ஆகவே இது நடைமுறையில் ‘கூட்டம்’ அல்ல.
நான் சென்ற சில ஆண்டுகளாகவே பார்வதிபுரத்துடன் மட்டுமே என் வாழ்க்கையை நிறுத்திக்கொண்டவன். சென்ற 2019 ஜூனில் அந்த அடிவிழுந்த நிகழ்வுக்குப் பின் ஒரே நாளில் இந்த ஊருடனான பற்று அறுந்துவிட்டது.
அந்த அடிவிழுந்த நிகழ்வின்போது இங்குள்ளவர்களிடமிருந்து வந்த மதவெறுப்பும், கட்சிக்காழ்ப்புகளும் திகைப்பூட்டின. கிறிஸ்தவர்களும் இந்துத்துவர்களும் இணையான வெறுப்பை காட்டினர். பொய்களை திட்டமிட்டு பரப்பினர். இடதுசாரிகள் கொண்டாட்டமிட்டனர். இணையவெளியில் புனைபெயர்களில் ஏளனம் செய்தனர். என் வாசகர்கள், நண்பர்கள் வெளியே இருந்து வந்து எனக்குத் துணைநின்றனர். இங்கே வாசகர் என எவருமில்லை. இனி என் நிலம் அல்ல இது.
ஒருவகையில் அது ஒரு விடுதலை. அந்த விலக்கம் வந்தபின்னரே நான் காசர்கோடு உட்பட வேறுநிலங்களைப் பற்றி எழுதத் தொடங்கினேன்.
ஆகவே இங்கே பேசுவதில் எந்த ஆர்வமும் இல்லை. லக்ஷ்மி மணிவண்ணன் என் இளவல், அவருக்காகவே பேசுகிறேன். நான் பேசுவதைக்கேட்க அந்த அரங்குக்கு வரப்போகிறவர்கள் பத்துபேர் என்றால் எட்டுபேர் குமரிமாவட்டத்திற்கு வெளியிலிருந்தே வருவார்கள். அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் நன்று.
ஜெ
கொதி -கடிதங்கள்-1
அன்புள்ள ஜெ
கொதி சிறுகதை இந்த சிறுகதை வரிசையில் முதலாவதாக வந்து இந்த கதைகளின் ‘மூட்’ என்னவாக இருக்கப்போகிறதென்பதைக் காட்டியது. ஒரு வாசிப்புக்காலம் வரவிருக்கிறது. ஆனால் புனைவுக்களியாட்டுக் கதைகளில் இருக்கும் சிரிப்பும் கொண்டாட்டமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வாழ்க்கை பற்றிய ஒளிமிக்க பார்வை இருக்கும் என்று தோன்றுகிறது.
கதையை மிக இயல்பாக தொட்டு எடுத்து உரையாடல்கள், காட்சிச் சித்திரங்கள் வழியாக மேலே கொண்டுசெல்லும் உங்கள் திறன் வியக்கவைக்கிறது. நான் உலகின் பெரிய மாஸ்டர்களிலேயே இந்த பிரயத்தனமே இல்லாத சரளத்தை அபூர்வமாகவே பார்க்கிறேன். எழுதி எழுதி உருவாக்கிக்கொண்ட சரளம் இது.
ஃபாதர் ஞானையாவின் கதாபாத்திரத்தை அற்புதமாக நிறுவியிருக்கிறீர்கள். ஆத்மாவிலும் பசி கொண்டவர். உடலில் எழுந்த பசியை ஆத்மாவின் பசியாக ஆக்கிக்கொண்டவர். கிறிஸ்துவின் தூயரத்தத்தால் மட்டுமே ‘கொதி’ அடங்குபவர்.
கிறிஸ்தவ உருவகங்கள் வழியாக அழியாத ஆற்றல்கொண்ட சில கதைகளை எழுதியிருக்கிறீர்கள். தமிழில் அவ்வப்போது கிறிஸ்தவர்களை கதாபாத்திரங்களாக வைத்துச் சில கதைகளை சிலர் எழுதியதுண்டு. கிறிஸ்தவ இறையியலில் இருந்து கவித்துவமாக விரியும் கதைகளை வேறு எவருமே எழுதியதில்லை.
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
இரண்டு உருவகங்கள் அற்புதமாகச் சந்திக்கின்றன. ஒன்று ஒரு ஃபோக் உருவகம். இன்னொன்று கிறிஸ்தவ கிளாசிக் உருவகம்.
இன்னொருவரால் கொதி போடப்பட்டவரின் கொதியை உறிஞ்சி எடுக்கும் அந்த செம்பு ஒரு உருவகம். அது எதை உறிஞ்சுகிறது? அந்த அனல் என்ன? அந்த சடங்கையே கண்ணால் பார்க்கமுடிகிறது. அது உறிஞ்சுவது ஒரு பசித்த உயிரின் ஆசையை. அல்லது தவிப்பை.
ஏசுவின் தூயரத்தம் சகலபாவங்களையும் நீக்குவது. தேவாலயங்களில் ஹோலி கிரெயிலில் இன்றைக்கும் அருந்துகிறார்கள். ஃபாதர் ஞானையாவின் கொதியை அந்த ரத்தமே கடைசியாக நிறைக்கிறது.
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே– (1பேதுரு 1: 18-19) என்ற பைபிள் வசனம் உள்ளது. ஞானையாவின் இறுதிப்பசி அதுதான்
ராஜ்குமார்
அன்புள்ள ஜெ
கொதி என்றால் மலையாளத்தில் உணவுக்கான வெறி. கொதியன் என்று என்னையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தக்கதையை கொதிப்பு என்ற பொருளிலும் வாசிக்கலாம்
உங்கள் கதைகளில் பசியைப்பற்றி வாசிக்க வாசிக்க நெஞ்சம் நெகிழ்கிறது. நம் நாடு எத்தனைபெரிய பசிக்காலகட்டம் வழியாக தாண்டி வந்திருக்கிறது. ‘அனைவரும் குற்றவுணர்ச்சி இல்லாமல் சாப்பிடும் காலம் வரும்’ என்று ஞானையா சொல்லக்கேட்கையில் கண்ணீர்விட்டேன்
செல்வின் குமார்
கொத்துகொத்தாக நூல்கள்
உங்கள் தளம் வழியாக அறிமுகமான எழுத்தாளர்கள் பலர் இன்று அடுத்தடுத்த சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டு வேகமாக முன்சென்றுகொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் வேகமான காலகட்டம் இது என்று சொல்லலாம். இதன் உள்ளடக்கம் சார்ந்து என்னென்ன சிறப்புகள் உள்ளன, எழுத்துக்களின் கலைப்பெறுமதி என்ன என்பதெல்லாம் விரிவாக விமர்சித்தும் வாசித்தும் அறியப்படவேண்டியவை. ஆனால் இத்தனை எழுதப்படுவதும் வாசிக்கப்படுவதும் நிறைவளிக்கிறது.
போகன் சங்கர் இன்று நிலைபெற்றுவிட்ட மூத்த எழுத்தாளர் என கருதப்படுகிறார். ஆனால் அவரை நான் உங்கள் தளத்தில் வெளிவந்த பூ என்னும் கதைவழியாகவே அறிந்துகொண்டேன். அவருடைய ஆரம்பகாலக் கதை அது என நினைக்கிறேன். அவருடைய இரு தொகுதிகள் வெளிவந்துள்ளன. குறுங்கதைகள், கவிதைகள்\
சுனில் கிருஷ்ணனசுனீல் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை விருதுபெற்ற தொகுப்பு. இப்போது விஷக்கிணறு என்னும் தொகுதி வெளிவந்துள்ளது. இதிலுள்ள விஷக்கிணறு என்னும் கதையை வாசித்திருக்கிறேன். உங்கள் தளத்தில் விமர்சனமும் கண்டேன். முக்கியமான நீள்கதை
நாயகிகள் நாயகர்கள் தொகுதிக்குப்பின் சுரேஷ் பிரதீப்பின் ‘உடனிருப்பவன்; என்ற தொகுதி வெளிவந்துள்ளது. சுரேஷ் பிரதீப்பின் கதைகளின் சொல்முறை எனக்குப் பிடித்திருந்தாலும் அவருடைய பார்வைமேல் விமர்சனம் உண்டு. எதிர்மறையான பார்வை. காஃப்காத்தனமான கதைகள்.
இத்தொகுதிகள் எல்லாம் பரவலாக வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படவேண்டுமென விரும்புகிறேன்.இன்றைக்கு ஏராளமான படைப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. படைப்புக்களை தேடி வாசித்தாலொழிய என்ன நடந்துகொண்டிருக்கிறதென்றே தெரியாமல்போய்விட வாய்ப்பு மிகுதி
சிவக்குமார் எம்
அன்புள்ள சிவக்குமார்,
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி 1992ல் வெளிவந்தது- திசைகளின் நடுவே. அன்னம் வெளியீடு. 1994ல் அடுத்த தொகுதி மண் வெளிவந்தது. ஸ்னேகா பிரசுரம். சுந்தர ராமசாமி பிரமித்துப்போய் ‘ரெண்டு வருசத்துக்குள்ள அடுத்த தொகுப்பா?”என்றார்.
சுந்தர ராமசாமியின் முதல் தொகுதி 1959ல் அவருடைய 28 ஆவது வயதில் வெளிவந்த ‘அக்கரைச் சீமையில்’. தொ.மு.சி.ரகுநாதனின் முன்னுரை[இப்போது மறுபதிப்பாக வெளிவந்துள்ளது] ஐந்தாண்டுகள் கழித்து அடுத்த சிறுகதை தொகுதியான ‘பிரசாதம்’ வெளிவந்தது. [அதுவும் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. க.நா.சு முகப்புரையுடன்] அதற்கடுத்த தொகுதி ’பல்லக்குத்தூக்கிகள்’ பத்தாதாண்டுகள் கழிந்து வெளிவந்தது.
நான் 2003ல் மொத்தமாக ஏழு நூல்களை ஒரே விழாவில் வெளியிட்டேன். ஜெயகாந்தன் வெளியீட்டுரை ஆற்றினார். அடுத்த ஆண்டு பத்துநூல்களை ஒரே நாளில் வெளியிட்டேன். அன்று அப்படி நிகழ்வது அதுவே முதல்முறை. அக்காலத்தில் அது ஒரு பெரிய கலாச்சார அதிர்ச்சி. அசோகமித்திரன் அப்படி நூல்களை வெளியிடக்கூடாது என ஒரு பேட்டியில் சொன்னார். ஆனால் இன்று வழக்கமாக ஆகிவிட்டது.
இது அச்சுத்தொழில் முன்னேற்றம், செய்தித்தொடர்பு முன்னேற்றத்தின் விளைவாக உருவாகும் பெருக்கம். இதற்கிணையாகவே வாசிப்பும் வளர்ந்துள்ளது. புத்தகக் கண்காட்சிகள் வழியாகவும், இணையம் வழியாகவும். கூடவே புத்தகங்கள் பற்றிய பேச்சும் பெருகவேண்டும்
ஜெ
நீர்வழிப்படுவன
அன்புள்ள ஜெ,
சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வருகிறேன். எழுத்தாளர்களை தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். ஆனால் எவரையும் சந்திக்கவில்லை. நீங்கள் வந்திருந்தால் சந்தித்திருப்பேன். எழுத்தாளர்கள் முகநூலில் காட்டும் செயற்கை முகம் மீது எனக்குச் சலிப்பு. அதோடு புத்தகப்பிரமோ என்று அச்சுபிச்சு ஜோக்குகளாகப் போட்டுக் கொல்கிறார்கள். நீங்கள் எழுதியதை வைத்து நான் நாஞ்சில்நாடனை அறிமுகம் செய்துகொண்டேன்.அது ஒரு இனிய நினைவு. போகன் சங்கர், லக்ஷ்மி மணிவண்ணனை அறிமுகம் செய்ய ஆசை உண்டு.
இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு நீங்கள் பரிந்துரைசெய்யும் ஒரே நூல் என்றால் எதுவாக இருக்கும்? வாங்க விட்டிருக்கலாம். அதனால் கேட்கிறேன்
எம்.ரங்கநாத்
அன்புள்ள ரங்கநாத்,
தக்கலையில் ஒரு ஷோரூமில் கண்ணாடிக்குப்பின் எப்போதுமே மலிவான தோற்றம்கொண்ட புடவைகளையும் துணிகளையும் ’டிஸ்ப்ளே’ செய்திருப்பார்கள். நான் ஒருமுறை அந்த உரிமையாளரிடம் அதைப்பற்றி கேட்டேன். “நல்ல துணிகளா தொங்கவிடலாம்ல?”என்றேன்
“சார், நம்முது சின்ன கடை. இங்க வாறவங்க மலிவு துணி எடுக்க வாறவங்கதான். நல்ல துணி எடுக்கணுமானா பெரிய கடைகள் இருக்கு. இங்க மலிவான, சாதாரண துணிகள் கிடைக்கும்னு சொல்லத்தான் அப்டி டிஸ்ப்ளே பண்ணியிருக்கேன்” என்றார். விளம்பரங்கள் அவற்றுக்கான இலக்குகள் கொண்டவை. நமக்கு உகக்காத விளம்பரம் நமக்குரியது அல்ல.
நான் வாசித்த நூல்களைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறேன். ஆண்டு முழுக்க. இளம்படைப்பாளிகள், மூத்தபடைப்பாளிகள். மறக்கப்பட்ட கிளாசிக்குகள். எல்லாமே என் பரிந்துரைதான். ஆனால் ‘ஒரே நூல்’ பரிந்துரை என்றால் செய்யமாட்டேன்
[நான் பரிந்துரை செய்த எல்லா நூல்களையும் என் தளத்தில் நூலறிமுகம் என்னும் பிரிவின்கீழ் பார்க்கலாம். பார்க்க நூலறிமுகம் ]
எனக்கே ஒரு ஏழெட்டு நண்பர்கள்தான் புத்தகப்பரிந்துரை செய்வார்கள். அவர்களில் ஒருவர் அந்தியூர் மணி. அவரும் ஈரோடு கிருஷ்ணனும் இன்னும் சிலரும் மிக வலுவாகப் பரிந்துரை செய்த நூல் தேவிபாரதியின் நீர்வழிப்படூம்.
நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பது புறநாநூற்று வரி. நீரில் ஒழுகிச்செல்லும் தெப்பம்போல் வாழ்க்கை அதன் வகுக்கப்பட்ட பாதையில் செல்கிறது என்று பொருள். ஒரு கிராமத்து நாவிதரின் வாழ்க்கையைச் சொல்லும் இந்நாவல் இருத்தலியல் நோக்கிலும் ஆழமாக வாசிக்கத்தக்கது என்றார்கள்.
தேவிபாரதியின் நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ் ஆகியநாவல்கள் முன்னரே வெளிவந்துள்ளன.
ஜெ
பிரேமையின் ஆடல் –ரா.கிரிதரன்
[அகழ் மின்னிதழில் கிரிதரன் ராஜகோபாலன் எழுதியிருக்கும் கட்டுரை]நீலம் வாசிக்கும்போது பொருள் பிடிபட்டும் மொழி வழுக்கியபடியே கடந்த அனுபவம் பல பக்கங்கள் இருந்தன. கண்ணனின் பல நிகழ்வுகளை நாம் கதைகளாகக் கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆனால் தேவகி மைந்தனாகப் பிறந்து வேறொருத்தி மகனாக வளர்ந்த கண்ணன் ஒருவனில் பலராக, பலரில் தான் ஒருவனேயாகக் காட்சி அளித்ததன் மாயம் சொல்லில் அடங்காதது.
பிரேமையின் ஆடல் – நீலம் நாவல்: ரா.கிரிதரன்
March 1, 2021
வலம் இடம் [சிறுகதை]
[ 1 ]
செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?”
“என்னது?” என்றான்
“நம்ம எருமைய பாக்குதது உண்டா?”
“பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?”
“அதில்ல” என்றாள்
“போடி, போய் சோலிகளை பாரு.. எருமைக்க காரியம் நான் பாத்துக்கிடுதேன்”
குமரேசன் மூக்கணாம்கயிறு திரித்துக்கொண்டிருந்தான்.பெரும்பாலானவர்கள் நைலான்கயிறை மூக்கணாம்கயிறாக போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருமுறை போட்டால் ஏழெட்டுமாதம் கிடக்கும். ஆனால் எருமையின் மூக்கு எப்போதுமே புண்ணாகத்தான் இருக்கும். அதன் அரம் அப்படிப்பட்டது. சில எருமைகளுக்கு நைலான் பிடிக்காமலாகி மூக்கே மொத்தமாக வீங்கிவிடுவதும் உண்டு. அதுவும் நல்லதுதான் என்பார்கள். மூக்கில் ரணமிருந்தால் எருமை சுட்டுவிரல் அசைவுக்கு அடங்கி பதுங்கி நிற்கும்.
ஆனால் குமரேசன் பனைநார் முறுக்கிய மூக்குக்கயிறுதான் போடுவது. அவனே கைப்பட முறுக்குவான். பனம்பட்டையின் வழவழப்பானநாரை சுழற்றி சுற்றி இறுக்கி மூக்கணாம்கயிறு செய்தபின் கண்ணைமூடி தடவிப்பார்ப்பான். கண்ணாடியால் செய்யப்பட்டதுபோலிருக்கும். எருமையின் மூக்கில் எப்போதும் ஈரமிருக்கும். ஊற ஊற மூக்கணாங்கயிறை உருவி சுழற்றி மூக்குக்குள் இருக்கும் இடத்தை மாற்றவேண்டும். ஆனால் பனைநாரால் எருமைக்கு புண் வராது. பனையும் எருமையும் சேர்ந்தே பிறந்தவை.
செல்லம்மை அங்கேதான் நின்றிருந்தாள் என அவன் உணர்ந்தான். “என்னட்டி தீனம் உனக்கு?”என்றான்
“எருமை முன்னமாதிரி இல்ல”
“முன்ன எப்டி இருந்தது? இப்பம் எப்டி இருக்கு? சொல்லு…” என்று அவன் மூக்கணாம்கயிறை கீழே வைத்தான்
“இப்ப கேளுங்க… என்ன சத்தம்?”என்றாள்
எருமை குளம்பு மாற்றும் ஒலி கேட்டது
“அது எப்பமும் சவிட்டிக்கிட்டுதானே இருக்கும்?”
“இப்டி சவிட்டுகதில்லை… நின்னநேரம் முழுக்க சவுட்டுது… அதுக்கு என்னமோ தீனம் இருக்கு”
அப்போதுதான் அவனும் கவனித்தான். எருமை நிலைகொள்ளாமல்தான் இருந்தது. பூச்சிகடிக்கிறதா? புகைபோட்டிருந்தானே?
அவன் தொழுவுக்குப்போய் எருமையை பார்த்தான். அது அவனை திரும்பி பார்த்து ர்றேங் என்றபின் தலையை குலுக்கியது. கனத்த குளம்புகளால் தரையை உதைத்துக்கொண்டே இருந்தது.
“வயித்தை வலிக்குதோ?” என்றான் குமரேசன்
“நல்லா எரையெடுக்குதே…” என்றாள். உண்மைதான் .அது வாய்நிறைய வைக்கோலை எடுத்து நாசுழற்றி மென்றுகொண்டிருந்தது.
“பொறவு என்ன செய்யுது?”என்று அவன் கேட்டான். அது அவன் அவனிடமே கேட்டுக்கொண்டது. அவள் ஒன்றும் சொல்லவில்லை
“நீ கொஞ்சம் வேப்பெண்ணை கொண்டா” என்றான்
அவள் வேப்பெண்ணை குப்பியை கொண்டுவந்து தந்தாள். எருமைக்கு என்ன நோவு என்றாலும் உள்ளும் புறமும் வேப்பெண்ணை காக்கும் என்பது அவனுடைய புரிதல். அவனுடைய எருமைக்கு அது பெரும்பாலும் பயனளிக்கவும் செய்தது
மூங்கில் குழாயில் வேப்பெண்ணையை ஊற்றி எடுத்துக்கொண்டான். எருமையின் மூக்குக்கயிற்றை பிடித்து வாயை மேலே தூக்கி தடித்த வாழைப்பூநாக்கை ஓரமாக விலக்கி அதில் குழாயை செருகி வேப்பெண்ணையை அண்ணாக்கில் ஊற்றினான். சும்மா கொடுத்தாலே அது குடிக்கும். வேப்பெண்ணைச்சுவை அதற்கு நன்றாக பழகிவிட்டிருந்தது. நாக்கைச்சுழற்றி உறிஞ்சியபின் தரையில் விழுந்த சொட்டுகளையும் நக்கியது. கண்களிலும் செவிகளிலும் ஓரிரு துளிகள் ஊற்றினான். பின்பக்கம் அறையிலும் பூசிவிட்டு எஞ்சியதை வழித்து உடலெங்கும் பூசினான். ஒரு மாதிரி நிம்மதி ஏற்பட்டது.
கையை கழுவிவிட்டு வீட்டுக்குள் போய் “ஏட்டி கஞ்சியை எடுத்து வை” என்றான்.இரவு அவனுக்கு கிழங்கு மயக்கியதும் மீன்கறியும் கஞ்சியும்தான் வழக்கம். பலாக்காய் பருவத்தில் கிழங்குக்குப் பதில் பலாக்காய் மயக்கு. மழைக்காலத்தில் காய்ச்சில் கிழங்கு, மற்ற காலங்களில் மரவள்ளிக்கிழங்கு.
கைகழுவும்போது மீன்முள்ளும் சோறுமாக ஒரு பெரிய உருளை மணிக்கு. அது கொல்லைப்பக்கம் விறகுப்புரையில் அதற்காக காத்திருந்தது. ஏற்கனவே ஜொள்ளு ஊறி வழிந்திருந்தது. அவன் உருளையை வைப்பதற்குள் முனகியும் வாலாட்டியும் துள்ளியது
வழக்கமாக தட்டில் எஞ்சிய மயக்கிய மரவள்ளிக்கிழங்கில் ஒரு பெரிய உருளை கொண்டுவந்து எருமைக்கு கொடுப்பான். குமரேசன் அதற்கும் சேர்த்தே பரிமாறுவாள். அது அவன் வரும் காலடியோசையை கேட்டு செவி தழைத்து, கண்களை உருட்டியபடி காத்திருந்தது. அவன் நீட்டியதை நாக்கால் பெற்றுக்கொண்டது. அதன் நீண்ட கொம்புகள் அழிகளில் முட்டின. சுவையுடன் நக்கி உண்டது. அவன் தன் கையை நீட்டினான். கையை நன்றாக நக்கி தூய்மை செய்தது
எருமையின் அருகே இருந்து மீண்டும் கைகழுவச் செல்லும்போது அவன் முகம் மலர்ந்திருந்தது. எப்போதுமே தொழுவத்திலிருந்து செல்லும்போது சிரிப்பதுபோல முகத்தசைகளை விரித்திருப்பதை அவன் கொஞ்சம் கழித்துத்தான் உணர்வான். முகத்தை இறுக்கிக்கொள்வான். ஆனால் அதன்பிறகும் நெடுநேரம் அவன் மனதில் அந்த மலர்வு இருந்துகொண்டிருக்கும்.
வெற்றிலைபோட்டுக்கொண்டிருந்தபோது அந்த ஓசை கேட்கவில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். துப்பிவிட்டு வாய் கொப்பளித்து பாயை விரித்தான். விபூதி போட்டுக்கொள்கையில் எருமையின் ஓசை கேட்டது. மூச்சு சீறுகிறது, கொம்புகள் அழிகளில் முட்டுகின்றன. குளம்புகள் கல்தரையில் மாற்றி மாற்றி ஊன்றுகின்றன
மணி எருமையிடம் போய் ஏதாவது வம்புசெய்கிறதா? சோறு இறங்கினால் அதற்கு ஒரு தெனாவெட்டு வருவதுண்டு. அவன் எழுந்து போய் பார்த்தான். ஆனால் மணி அங்கே இல்லை. எருமை அவனை ஏறிட்டுப்பார்த்து “ர்றே” என்றது
அங்கே எவரும் இல்லை. அவன் எருமையைப் பார்த்தபடி கொஞ்சநேரம் நின்றான்.அதன் கன்னங்கரிய உடல் வேப்பெண்ணைப்பூச்சில் பளபளத்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் குந்திரிக்கத்தை போட்டு புகையை தூண்டிவிட்டுவிட்டு கைகளை கழுவியபடி வந்து படுத்தான்
தூக்கம் மயங்கியபோது அவன் எருமையின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தான். எருமை அதனருகே நின்றிருக்கும் இன்னொரு எருமையுடன் கொம்புகளால் முட்டிக்கொண்டு விளையாடுவதுபோல அந்த ஓசைகளில் இருந்து தோன்றியது. அப்படி நினைக்க நினைக்க அந்த சித்திரம் தெளிவடைந்தது. அவன் தூங்கிவிட்டான்
பின்னிரவில் அவன் ஒரு கனவு கண்டான். அவன் தொழுவில் இன்னொரு எருமையும் நின்றிருந்தது. அவனுடைய எருமையைப்போலவே அச்சு அசலாக ஓர் இணை எருமை. அதையே கண்ணாடியில் பார்ப்பதுபோல. தன் பிம்பத்துடன் கொம்புமுட்டி விளையாடுவதுபோல அவனுடைய எருமை அந்த இணைஎருமையுடன் குலவிக்கொண்டிருந்தது
அந்தக்கனவில் அவன் அதில் எந்த ஆச்சரியத்தையும் அடையவில்லை. அதை வழக்கமான காட்சியாகவே எடுத்துக்கொண்டான். புண்ணாக்கு பருத்திக்கொட்டை கலக்கிக்கொண்டுசென்று பதியன் தொட்டியில் ஊற்றி உப்பிட்டுக் கலக்கி வைத்துவிட்டு தன் எருமையை மட்டும் அவிழ்த்துக்கொண்டு வந்தான். அதற்கு மட்டும் நீர்காட்டினான். மற்ற எருமை உடன் வந்து அருகே நின்றது. அதன் கண்கள் இரண்டு கண்ணாடிக்குண்டுகள் போலிருந்ததன. அவன் எருமையின் கண்களில் ஓர் ஈரம் உண்டு. ஒரு மென்மையான மினுமினுப்பை அது அளிக்கும். வயதான பெண்களின் கண்களில் உள்ளதுபோல ஒரு கருணை அதில் இருக்கும்.
அவன் விழித்துக்கொண்டபிறகும் அக்கனவின் யதார்த்தத்திலேயே இருந்தான். தொழுவில் இரண்டு எருமை நிற்பதைப்போல உள்ளம் உறுதியாக உணர்ந்தது. அப்படியே தூங்கிவிட்டான். காலையில் அண்டியாபீஸ் சங்கொலி கேட்டு விழித்துக்கொண்டபோது எழுந்த முதல் எண்ணம் தொழுவில் இரண்டு எருமை நிற்கிறது என்பதுதான். திடுக்கிட்டு எழுந்து நின்றுவிட்டான். உடனே எல்லாம் தெளிவடைந்தன.
நெஞ்சு படபடக்க அவன் வெளியே சென்று தொழுவத்தைப் பார்த்தான். எருமை கொம்புசரித்து தலையை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தது. அவன் அதைப்போல அது செய்வதை அதற்குமுன் பார்த்ததே இல்லை. கொம்புகளை சரித்து சுழற்றியது, பின்னர் மூச்சு சீறியபடி எடைமிக்க குளம்புகளை எடுத்துவைத்து பின்னால் வந்தது. மீண்டும் முன்னால் சென்றது
என்ன செய்கிறது என வியந்ததுமே அவனுக்குப் புரிந்துவிட்டது, அது இன்னொரு எருமையுடன் கொம்புகோத்து விளையாடுகிறது என்று. கண்ணுக்குத்தெரியாத எருமை. அவன் உடல் அச்சத்தால் சிலிர்த்தது. முழங்கைமேல் மயிர்க்கால்கள் புள்ளிபுள்ளியாக தெரிந்தன. மூச்சு செறிந்து நின்ற நெஞ்சை கையால் நீவிக்கொண்டான்.
திடீரென்று எழுந்த வெறியுடன் ஓடிச்சென்று அதன் புட்டத்தில் அறைந்து “ஏட்டி கோட்டிக்கழுத.. என்ன செய்யுதே?” என்று கூவினான். அது நீள்மூச்சு சீறி தலையை அசைத்தது.
“என்ன செய்யுதியோ?” என்று செல்லம்மை எட்டிப்பார்த்து கேட்டாள்.
“நீ உன் சோலியப்பாருடி”
“கிறுக்கு பிடிச்சிருக்கு….” என்றாள் செல்லம்மை
மேல்மூச்சு வாங்க அருகே அமர்ந்திருந்தான். அதன் உடலை நீவி ஓரிரு உண்ணிகளை எடுத்து அப்பாலிட்டு நசுக்கினான்.
பிறகு சற்றே விலகி நின்று பார்த்தான். எல்லாம் அவனுடைய கனவென்று நிறுவிக்கொள்ள ஆசைப்பட்டான். ஓரக்கண்ணால் பார்த்தபோது எருமை இயல்பாக இருப்பதுபோலத்தான் தோன்றியது.
சாணிவழித்துவிட்டு எருமையை அவிழ்த்துக்கொண்டு ஆற்றுக்கு சென்றான். குளிர்ந்த நீரில் அதை இறக்கி அரைமணிநேரம் ஊறவிட்டுவிட்டு பல்தேய்த்தான். அதன்பின் வைக்கோல்சுருணையால் நன்றாகத் தேய்த்து குளிப்பாட்டினான். எருமைக்கு அவன் குளிப்பாட்டுவது பிடிக்கும். அதன் உடலில் அவன் தேய்க்கவேண்டுமென அது விரும்பும் பகுதி துடித்தது. இரு காதுகளையும் பற்றி உள்ளே களிம்பை தேய்த்து அகற்றினான். மூக்கிலும் கண்ணிலும் பீளை அகற்றி கழுவினான்
அவன் நீரில் மூழ்கி நீந்தி துழாவி குளிப்பதை பார்த்தபடி எருமை தலை வரை நீரில் அமிழ்ந்து காதுகளை நீரில் அளைந்தபடி கிடந்தது. அவன் நீந்தி அதனருகே சென்று அதன் கொம்பை பற்றிக்கொண்டு கால்களை நீரில் துழாவினான் . எருமை கொம்பை சரித்து அவனை அப்படியே தூக்கியது
கரையில் நாராயணன் வைத்தியர் கையில் பையுடன் சென்றார். அவனிடம் “ஏம்லே கூட்டுகாரிகூட கும்மாளமா காலம்பற?”என்றார்
“கூட்டுகாரிதானே?”என்றான்
“எட்டுமாசமாலே?”
“இல்ல ஆறுதான்”
“ஆறா… பாத்தா நல்லா நெறைஞ்சிருக்கு… பாத்துக்கலே”
அதுவரை இருந்த உற்சாகத்தை இழந்து அவன் எருமையின் வயிற்றை பார்த்தான். ஆறுமாச சினைதான். ஆனால் அனைவருமே எட்டா ஒன்பதா என்கிறார்கள். அவன் எருமைக்கு வயிறு வாட விடுவதேயில்லை. ஆகவே அது நன்றாக உருண்டு பருத்துத்தான் இருந்தது. அதனாலேயே வயிறு பெரிதாக இருக்கலாம்தான். ஆனால் அத்தனை பெரிதாக ஆகாது. எருமையின் சினைவயிறு கடைசி மூன்று மாதங்களில்தான் சரசரவென பெருக்கும். ஏதாவது நோயா? ஆனால் சென்றவாரம்கூட வைத்தியர் வந்து பார்த்தார். “நல்லா இருக்குடே, நல்லா போக்கும் வரத்தும் இருக்கு… ஒண்ணும் கவலைப்படாதே” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அவன் எருமையை கொண்டுசென்று தொழுவில்கட்டிவிட்டு வைக்கோல் பிய்த்துப்போட்டான். அதன்பின் சென்று அடுக்களை திண்ணையில் அமர்ந்து ஊறவைத்த மாங்காயும் மோர்மிளகும் சேர்த்து பழங்கஞ்சி குடித்தான். கருக்கரிவாளை எடுத்துக்கொண்டு புல்லரிந்துவர கிளம்பினான்
கரடிக்காடு எஸ்டேட் பக்கம் புதுமழையில் முளைத்த புல் இடுப்பு உயரத்திற்குச் செறிந்து நின்றது. அங்கே பெரும்பாலானவர்கள் புல்லரியச் செல்வதில்லை. பாம்புகளின் உலகம் அது. அவன் துணிந்து செல்வான். செல்லம்மை சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டாள். “போடி நல்ல கரும்புப்புல்லு இங்க… நம்ம கருப்பிக்கு இத தின்னாத்தான் நெறையும்” என்று சொல்லிவிட்டான்.
புல்லறுக்கும்போது அவன் தன்னை மறந்துவிடுவதுண்டு. அப்போது அவனே ஓர் எருமையாக ஆகிவிடுவதுபோலிருக்கும். கறுக் கறுக்கென அவனே சாறுள்ள புல்லை கடிப்பதுபோல. கொழுத்தபுல் அவனுக்கு உடம்பெல்லாம் பரவசத்தை நிறைக்கும். எத்தனை வெட்டினாலும் மனம் அடங்காது. எப்படி கொண்டுசென்று சேர்ப்பது என்றே எண்ணத்தோன்றாது. பலசமயம் நாலைந்து நடைவரை சுமக்க நேரிட்டிருக்கிறது
அவன் புல்லுக்கட்டுடன் இரண்டுமுறை வரவேண்டியிருந்தது. முதல்கட்டு புல்லை கண்டபோதே எருமை துள்ள ஆரம்பித்தது. அவன் புல்லுக்கட்டை அவிழ்த்துக்கொண்டிருந்தபோது மூச்சு சீறல் ஒலிகள் எழுந்தன. அவன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தான். எருமை நாக்கை சுழற்றி மூக்கை நக்கியது. இரண்டுமுறை மூச்சொலி எழுந்ததா?
அவன் அதை பார்த்தபடியே புல்லைக்கொண்டுசென்று போட்டான். அது ஆவலுடன் தலையை அசைத்தபடி பெரிய பிடிகளாக கவ்வி எடுத்து தின்னத்தொடங்கியது. முறுக் முறுக் என அது புல்லை மெல்லும் ஓசையும், அரைபடும் புல்லின் மணமும் எழுந்தன. சுவைத்து உண்ணும்போது அதன் உடலெங்கும் ஒரு அவசரமும் பரவசமும் தெரியும். புல்லை நோக்கி உடலை உந்தி உந்தி முன்செலுத்துவதுபோலத் தோன்றும்.
அவன் புல்லுக்கட்டை போட்டுவிட்டு அடுத்த கட்டை எடுக்க நடந்தபோது எல்லாம் வெறும் கற்பனை என நினைத்துக்கொண்டான். அதெப்படி இன்னொரு எருமை? அப்படி ஒரு விஷயம்பற்றி அவன் கேள்விப்பட்டதே இல்லை. எருமைகளுக்கு அப்படி ஒரு வழக்கம் உண்டு. அவை சின்னவயதில் இன்னொரு எருமையுடன் சேர்ந்தே வளர்ந்திருக்கும். அவற்றை பிரித்தாலும்கூட அந்த இன்னொரு எருமை இருப்பதாகவே நினைத்துக்கொள்ளும். அந்தப்பாவனைகள் அதன் உடலில் இருக்கும்.
எருமை தன்னந்தனியாக இருந்தாலும் மந்தைவிலங்குதான். அது எப்போதுமே மானசீகமாக கூட்டத்தோடுதான் இருக்கிறது. அஞ்சியதும் அது தன் கூட்டத்தை எச்சரிக்கை செய்யும். உணவு கண்டால் கூட்டத்தை அழைக்கும். அப்போது ஏராளமான எருமைகள் அதனுடன் இருப்பதாகவே தோன்றும்.
அவன் திரும்ப வந்தபோது எருமை பாதி புல்கட்டை தின்றுவிட்டிருந்தது. இரண்டாவது புல்கட்டை கொண்டுசென்று உரப்புரையில் நிழலில் போட்டுவிட்டு சற்ற்நேரம் படுத்தான். அரைத்தூக்கத்தில் எருமையின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் மயங்கி மயங்கி செல்ல ஒரு கட்டத்தில் அவன் இரண்டு எருமைகளின் குளம்பொலியை கேட்டான்
[ 2 ]
ஏழெட்டுநாளில் குமரேசன் பித்துப்பிடித்தவன் போல ஆகிவிட்டான். செல்லம்மைகூட “என்ன செய்யுது?நல்ல ஒறக்கமும் இல்லியே? ஆளு பாதி ஆயாச்சு?”என்றாள்.
“ஒண்ணுமில்ல” என்றான்
“எருமை நல்லாத்தான் இருக்கு… அதுக்கு ஒரு நரம்பு எளக்கம் இருக்கலாம். செனையெருமைக்கு அப்டி சில சீலங்கள் உண்டுண்ணு கேட்டிட்டுண்டு”என்றாள்
“ம்”என்றான்
ஆனால் அவனால் அந்த பிரமையிலிருந்து வெளியேற முடியவில்லை. அருகே நின்று எருமை செய்வதையெல்லாம் பார்த்தால் அது சாதாரணமாக எருமைகள் செய்வதைச் செய்வதுபோலத்தான் இருந்தது. ஆனால் ஓரக்கண்ணால் பார்த்தால், அப்பாலிருந்து ஓசைகளை மட்டும் கவனித்தால், இன்னொரு எருமையும் இருப்பதுபோல் இருந்தது. அரைத்தூக்கத்தில் மிகத்தெளிவாகவே இன்னொரு எருமையை உணரமுடிந்தது
காலையில் எழுந்து வரும்போது அங்கே இன்னொரு எருமையும் நின்றிருக்கும் என இயல்பாக எதிர்பார்த்து, அங்கே ஒரே எருமையை கண்டு திகைத்தான். எருமையை அவிழ்த்து ஆற்றுக்கு கொண்டுசெல்லும்போது பின்னால் இரண்டு எருமைகளின் குளம்படிகள் கேட்டன. திரும்பிப்பார்த்தால் ஒன்றுதான். அவனையறியாமலேயே இரண்டு எருமைகளுக்கு ஆணைகளை இட்டான். இரண்டிடமும் பேசினான். “இப்ப காலெடுத்துவச்சு நடந்து வாறியளா இல்லியா, சூத்திலே நாலு அடி இளுத்தாத்தான் அடங்குவீக” என்றான்
செல்லம்மை ஒருகட்டத்தில் கேட்டுவிட்டாள். “என்னென்ன சொல்லுதீய? ரெண்டு எருமை எங்க இருக்கு?”
“நீ உன் சோலிய பாருடீ”என்றான்
“மண்டை குளம்பிப்போச்சு”என்றாள்
“மண்டை உனக்க அப்பன் நேசையனுக்கு…எந்திரிச்சு வந்தா பாத்துக்க”
ஆனால் அவளிடம் இரவில் சொன்னான். “இன்னொரு எருமை இருக்குடி… சூச்சுமமா… அந்த எருமைகூட இது வெளையாடுது. அதாக்கும் வேறமாதிரி சத்தம் குடுக்குது”
“மயிரு மாதிரி பேசாதிய… இன்னொரு எருமையா?”
“உள்ளதாக்கும்டீ”
“எனக்க அளப்பங்கோடு சாஸ்தாவே…இந்த மனியனுக்கு என்னாச்சு?”
செல்லம்மை அளப்பங்கோடு சாஸ்தாவுக்கு ஒரு முந்நாழி பொங்கல் வைப்பதாக நேர்ந்துகொண்டாள். மேப்பாலை அளப்பங்கோடு தர்மசாஸ்தாவை அளப்பங்கோட்டு அப்பச்சி என்றுதான் அழைப்பது. அவர் ஆடுமாடுகளுக்கு மட்டுமான தெய்வம். குட்டி பிறந்தது முதல் எல்லா நல்லதுகெட்டதுக்கும் அங்கே வேண்டுதல் உண்டு. பேராலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் அளப்பங்கோட்டு அப்பச்சி அங்கே இருப்பதை ஒரு பசுதான் முகர்ந்து கண்டுபிடித்தது. அங்கேயே நின்றுவிட்டது. உரிமையாளன் இழுத்தாலும் அடித்தாலும் வரவில்லை. அதன்பிறகுதான் அங்கே அப்பச்சியின் சான்னித்தியத்தை கண்டுபிடித்தார்கள். அங்கே அவரை நிறுவி வழிபட ஆரம்பித்தார்கள்.
செல்லம்மை அவனிடம் “வல்லதும் நினைச்சு மனசை கெடுக்காதிக. அளப்பங்கோட்டு அப்பச்சியை நினைச்சுக்கிடுங்க. நம்ம செல்லத்துக்கு ஒரு குறவும் வராம அவரு பாத்துக்கிடுவாரு” என்றாள்.
“போடி, பெரிய பேச்சு பேசுதா”என்றான் குமரேசன்
ஒருநாள் ஒரேயடியாக உண்மையாகவே இன்னொரு எருமை கூடவே இருக்கிறது என்று முடிவெடுத்தபின் எல்லாம் சரியாகப்போயிற்று. அந்த இன்னொரு எருமை வெறும் பிரமைதானா என்று எண்ணி கண்காணிப்பதும், சோதனைசெய்வதும்தான் தொடர்ச்சியான அலைக்கழிப்பாக இருந்தது.
“ரெண்டு எருமை இருக்குன்னா அது நல்லதுதானே?”என்றான்
“வாயை மூடுங்க.. எனக்கு இந்த கிறுக்குப்பேச்சு கேக்க நேரமில்லை”
“நீ போயி சாவுடி”என்றான்
இரண்டு எருமைகளையும் குளிப்பாட்டினான். இரண்டுக்கும் தீனிபோட்டான். இரண்டையும் வருடிவிட்டு, புகைபோட்டு, பேச்சுக்கொடுத்து நெடுநேரம் தொழுவத்தில் இருந்தான். இரண்டு எருமைகளும் அவன் பேச்சை கேட்டு செவிதாழ்த்தி நின்றன. அவன் சொறிந்துகொடுப்பதற்காக தலையை தாழ்த்தி கொம்புகுழியை காட்டின. அவன் எழுந்து சென்றபோது இரண்டும் இணைந்து முக்ரியிட்டு விடைகொடுத்தன. காலையில் அவன் எழுந்து வந்தபோது கால்மாற்றி உதைத்து வால்சுழற்றி உறுமி வரவேற்றன
“ஒண்ணு வலத்து எருமை, இன்னொண்ணு எடத்து எருமை…ஒருநொகத்திலே பூட்டினா அப்டி சொருமிப்பா இருக்கும்” என்று அவன் செல்லம்மையிடம் சொன்னான். “வலத்து எருமையாக்கும் நம்ம எருமை. அதை நாம கண்ணாலே பாக்கலாம். எடத்து எருமை மறைஞ்சிருக்கு”
“சும்மா இருக்குதியளா? கேட்டா எனக்கு கிறுக்கு பிடிச்சிரும்போல இருக்கு”
“ஏட்டி இப்ப நம்ம ரெண்டு கையும் இருக்குல்லா? ஒண்ணு வலது இன்னொண்ணு எடது”
“பேசாதீக..போங்க”
அவனுடைய எருமையின் எல்லா அசைவுகளும் இடப்பக்கம் நோக்கியவை. இடப்பக்கம் ஓர் எருமை இருந்தால் மட்டுமே இந்த அசைவுகளுக்கு அர்த்தம் உண்டு. இல்லையேல் பாதிச்செயல்போல தவறாகத் தெரியும். ஆகவேதான் அங்கே அந்த இடப்பக்க எருமை தோன்றியது. இந்த எருமை இப்படி பாதி அசைவுகளை உருவாக்கவில்லை என்றால் அந்த இன்னொரு எருமை இருப்பதே தெரிந்திருக்காது.
அவன் செல்லம்மையிடம் அதைச் சொன்னான். அவள் அதை செவிகொள்ளவே இல்லை. “உள்ளதாக்கும்டி, ரெண்டு எருமை இருக்கு. எனக்கு என்ன தோணுதுண்ணா எல்லா எருமையுமே ரெண்டு எருமைண்ணாக்கும். ஒண்ணு நாம காணுத ஒரு எருமை. இன்னொண்ணு நாம சொப்பனத்திலே காணுத எருமை… இஞ்சபாரு, ஊஞ்சல் மாதிரியாக்கும். ஊஞ்சலுக்க இந்த எடம் நம்ம எருமை… ஊஞ்சல் வேகமா ஆடினா அந்த எருமைய தொட்டுட்டு வந்திருது…”
”இனி ஒரு வார்த்த சொன்னா தண்ணி கொடத்தை தூக்கி தலையிலே போடுவேன்…போங்க”
இரவில் அவன் ஒரு கனவு கண்டான். யாரோ ஒருவன் வந்து அவனுடைய எருமையை அவிழ்த்துக்கொண்டிருந்தான். அவன் ஓசைகேட்டு எழுந்து கதவைத்திறந்து பார்த்தபோது அவன் எருமையை அவிழ்த்துவிட்டான். தெரிந்தவன்தான்
“ஆருவே? ஏன்வே எருமையை அவுக்கேரு?”
அவன் பதில் சொல்லவில்லை
“வேய் கேக்குதேன்ல? எதுக்குவே எருமைய அவுக்கேரு? இது எனக்க எருமை… வேய்”
அவன் கூவி தடுப்பதை வந்தவன் கேட்கவே இல்லை. அவனும் மேலே நின்று கூச்சலிட்டானே ஒழிய கீழே போய் அவனை தடுக்க முயலவில்லை.
அவன் எருமையை அவிழ்த்துக்கொண்டு நடந்தான். ஒரு எருமையைத்தான் அழைத்துச்சென்றான்.இன்னொரு எருமை நிழல்போல கூடவே சென்றது. இரு எருமைகளின் அசைவுகளும் மிகச்சரியாக ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே அசைவுபோல தோன்றின.
உண்மையிலேயே எவரோ எருமையை அவிழ்த்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று எண்ணி உளறியடித்துக்கொண்டு அவன் விழித்தான். எழுந்து வேட்டியை கையால் பிடித்தபடி ஓடிப்போய் தொழுவில் பார்த்தான். எருமை படுத்து தூங்கிக்கொண்டிருந்தது
கனவுதான், ஆனால் கனவில் வந்தவன் யார்? அவன் தன்னைப்போலவே இருப்பதாக தோன்றியது. அவனுடைய முகம்தான். ஆனால் உடல் இன்னும் திடமானது. மீண்டும் பாயில் வந்து அமர்ந்து ஒருதரம் வெற்றிலை போட்டுக்கொண்டான். அப்போது ஞாபகம் வந்தது அது அவன் அப்பா
அப்பா இறந்துபோய் எட்டு ஆண்டுகள் ஆகின்றன. சாகும்போது எழுபது வயது. கஷ்டப்பட்டுதான் போனார். ஆனால் அவனுக்கு எட்டுவயதாக இருக்கும்போது ஒருமுறை அவருடன் அளப்பங்கோடு சாஸ்தா கோயிலுக்கு சைக்கிளில் சாமிகும்பிடச் சென்றான். அந்த அப்பாதான் எப்போதும் கனவில் வருகிறார்
அவன் மீண்டும் படுத்துக்கொண்டு சற்றுநேரம் அப்பாவை நினைத்துக்கொண்டிருந்தான். காலையில் விழிப்பு வந்ததும் எழுந்த முதல் எண்ணம் அப்பா ஏன் எருமையை அவிழ்த்துக்கொண்டு போகவேண்டும் என்பதுதான்.
எழுந்து ஓடி கதவைத் திறந்து தொழுவத்தை நோக்கிச் சென்றான். எருமை படுத்து தூங்கிக்கொண்டிருந்தது. முதற்கணம் ‘நல்லவேளை, தூங்கிக்கொண்டிருக்கிறது’ என்ற எண்ணம் வந்தது. அடுத்த கணம் நேற்றிரவு பார்த்தபோதும் அப்படியேதான் தூங்கியது என்ற நினைவு எழுந்தது. அவன் கால்கள் தளர்ந்துவிட்டன
அவன் மேலுமிருமுறை உடலை உந்தி முன்செலுத்த முயன்றான். விழுந்துவிடுவான் என தோன்றியது. “ஏட்டீ ஏட்டீ…”
”என்ன, எந்திரிச்சாச்சா அதுக்குள்ள?” என்றபடி செல்லம்மை வந்தாள். கையில் கலம் வைத்திருந்தாள்
“இது ஏம்டீ இப்டி உறங்குது?”
“உள்ள ரெண்டாம்சீவன் இருக்குல்லா?”
“இல்லடி… ஒண்ணு தொட்டு பாரு…. ஏட்டி தொட்டு பாத்து சொல்லுடி”
அதற்குள் செல்லம்மைக்கே சந்தேகம் வந்துவிட்டது. எருமையின் காதுகளில் அசைவில்லை.
“அனக்கம் இல்லியே” என்றாள்
“பாத்து சொல்லுடீ…. பாத்து சொல்லுடீ”
அவள் “எனக்க அளப்பங்கோட்டப்போ ரெட்சிக்கணுமே” என்று நெஞ்சில் கைவைத்து முனகியபடி மெல்ல சென்று அருகே நின்றாள். மூச்சொலியுடன் தயங்கினாள். குனிந்து எருமையின் செவிகளை தொட்டாள்.
“எனக்க தெய்வங்களே! சதி செய்து போட்டியளே”
“ஏட்டி ஏட்டி என்னது? என்னன்னு சொல்லுடீ”
“அய்யோ…. அய்யோ கண்ணு நெறைஞ்சு நின்னுதே… எனக்க கண்ணு நெறைஞ்சு நின்னுதே…. அய்யோ !அய்யோ! நான் என்ன செய்வேன்! எனக்க பகவதீ! என்னைப்பெத்த அம்மோ!”
அவன் தூணைப்பிடித்துக்கொண்டான். எருமை தொழுவத்தில் சளியாக கழிந்திருந்தது. அதன் வயிறு ஒரு பக்கமாக குன்றுபோல உப்பி உயர்ந்திருந்தது. அது இறந்துவிட்டது என தெரிந்ததுமே நாற்றமும் தெரியத்தொடங்கியது
செல்லம்மை அருகே அமர்ந்து அதன்மேல் தொட்டு வருடி தலையில் வைத்து அலறி அழுதாள். “எனக்கு முடியலியே… எனக்க செல்லமே.. எனக்க கருஞ்செல்லமே… எனக்க ராத்திரியே…”
அவன் “ஏட்டி, இன்னொரு எருமை எங்கடீ… அதை பாருடீ” என்றான்
“சும்மாகெட மனுசா…கிறுக்குப்பேச்சு பேசாம…அய்யோ எனக்க ஆனைக்குட்டியே…எனக்க ஐசுவரியமே”
அவன் அப்படியே தரையில் அமர்ந்தான். மெய்யாகவே அங்கே இன்னொரு எருமையும் இல்லாமலாகிவிட்டிருந்தது. தொழுவில் பெரிய கரிய குவியலாகத் தெரிந்தது எருமை அல்ல. அது வேறு ஏதோ. அவன் கைகளை ஊன்றி தவழ்ந்து ஏறி தன் அறைக்குள் போய் சுருட்டாமலிருந்த பாயில் படுத்துக்கொண்டான்.
[ 3 ]
செல்லம்மைதான் எல்லாவற்றையும் செய்யவேண்டியிருந்தது. அவளுடைய அம்மாவை அணைஞ்சகரையிலிருந்து வரச்சொல்லி கிழவியை வீட்டில் விட்டுவிட்டு அவளே எல்லா இடங்களுக்கும் அலைந்தாள். எருமைக்கு சொசைட்டியில் இன்ஷ்யூரன்ஸ் செய்திருந்ததனால் அதற்கு ஆள்வந்து பார்த்து புகைப்படங்களெல்லாம் எடுத்த பிறகுதான் அடக்கம் பண்ணவேண்டியிருந்தது. அதற்கு சொசைட்டி ஆளுக்கு ஐநூறு ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும். எருமையின் உடலையும் தோலையும் விற்று கிடைக்கும் காசில் பங்குதானே அது என்று தங்கையா நாடார் சொன்னார்.
விற்க செல்லம்மைக்கு மனமில்லை. “பிள்ளையப்போல வளத்தோம் டீக்கனாரே” என்றாள். “அதனாலே நாம இங்க வச்சிட்டிருக்க முடியுமா?மண்ணு திங்குதத மனுசப்பய திங்குதான்… என்னைய கேட்டா மனுசனைக்கூட சும்மா புதைக்கிறதும் எரிக்கிறதும் தப்பு. அதுக்கும் என்னமாம் பிரரயோசனம் உண்டுமானா செய்யணும். பண்டு ஹிட்லர் செய்தது மாதிரி”
ஊரே கூடியிருந்தது. செல்லம்மைக்கு அழவும் பொழுதில்லை .அவள் வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடினாள். ரேஷன்கார்டு நகல் எடுக்கவேண்டும். எருமைக்கு அளிக்கப்பட்ட கார்டு அசல்வேண்டும். வரிகட்டின ரசீது நகல், சொசைட்டி உறுப்பினர் அட்டை நகல். எதையும் கேட்டுத்தெரிந்துகொள்ளும் நிலையில் குமரேசன் இருக்கவில்லை. அவன் பாயில் முனகியபடியும் உளறியபடியும் படுத்துக்கிடந்தான். சன்னல்வழியாக எட்டிப்பார்த்த செம்பகப்பெருமாள் “பாவம், ஒரு லெச்சமுல்லா அப்டியே போச்சு…பதறுமே” என்றார்
“இன்சூரன்ஸ் வராதோ?”என்றார் ஆசீர்வாதம் நாடார்
“ஆமா, இன்சூரன்ஸ் வாரியில்லா குடும்ப்பான்? எதிர்கணக்கு வைக்கணும்லா?… கண்டவன்லாம் கைநக்கினது எல்லாம் போக முப்பது நின்னா யோகம்”
”பய பொன்னுபோலே வளத்தான்”
“என்னவாக்கும் சீக்கு?”
“எருமைக்கும் பலசீக்குகள் உண்டு… இப்ப அதை நாகர்கோயிலிலே கொண்டுபோனா டாக்டர்மாரு சொல்லுவாக”
அந்தவழியாகச் செல்லும்போது மட்டும் செல்லம்மை “அய்யோ , கெடக்குத கெடைய பாத்தியளா… அய்யோ எனக்க சங்கு பொறுக்கல்லையே” என்று நெஞ்சிலும் தலையிலும் அறைந்து கதறினாள்
“ஏட்டி நீ என்னத்துக்கு நெஞ்சை அடிச்சு உடைக்கே? எல்லாம் செரியாவும். போனா வரும்… விடு….வேண்டிய காரியங்களைப்பாரு ”என்றார் தங்கையா டீக்கனார்
போற்றியும் கரடி தங்கப்பன் நாயரும் சேர்ந்தே வந்தனர். “பய எப்டி இருக்கான்?கிடக்கானோ?”என்றார் போற்றி
“தளர்ந்துபோயிட்டான்” என்றார் அருமைநாயகம்
“ராப்பகலா நாகக்காட்டிலே புல்லு பறிப்பானே” என்றார் போற்றி
“அவனுக்கு நெஞ்சடைச்சிருக்கும்… போனவருசம் எனக்க கருப்பன் போனப்ப நான் ஒருவாரம்லா கிடப்பிலே கிடந்தேன்” என்றார் கரடி தங்கப்பன் நாயர்
லாசர் போட்டோஸ் லாசர் வந்து எல்லா கோணங்களிலும் எருமையை புகைப்படம் எடுத்தான். அதன்பின் தங்கையா நாடாரும் தங்கப்பன் நாயரும் அருமைநாயகமும் சாட்சிக் கையெழுத்து போட்டார்கள்.
எருமையை கால்கள் கட்டி, மூங்கில் ஊடே செலுத்தி எட்டுபேராக தூக்கினார்கள். மூங்கில் வளைந்தது. தூக்கியவர்கள் “ஏந்து…ஏந்து …விடாதே” என்று கூவினார்கள்.
”நல்ல கனம் உண்டு”
“அதிலே முக்காலும் வயித்துநீராக்கும்…அது இந்நேரம் வெசமா ஆயிருக்கும்”
”தோலுக்கு நிக்கும்”
“தொடையும் எடுத்துக்கிடுவானுக…. மத்த எறைச்சி கெட்டுப்போயிருக்கும்”
எருமையை கொண்டுபோனபோது செல்லம்மை நெஞ்சிலறைந்துகொண்டு பின்னால் ஓடி அலறி விழுந்தாள். “எனக்க பொன்னுமோளே எனக்க செல்லராத்திரியே எனக்க ஆனைக்குட்டியே எனக்க ஐசரியமே”
“ஏட்டி அவளை பிடி… எளவு மண்டைய உடைக்கப்போறா”
கிழவியால் செல்லம்மையை பிடிக்கமுடியவில்லை. பங்கஜமும் கிறிஸ்டியும் அவளை பிடித்து இழுத்து கொண்டுசென்றனர். அவள் கையை வீசி மண்டையை அறைந்து அழுதாள்
அப்போதெல்லாம் அறைக்குள் குமரேசன் புலம்பிக்கொண்டு கிடந்தான். “ரெண்டு எருமை நிக்குது… அருக்கம் நிக்குதது மத்த எருமை”
அறைக்குள் எட்டிப்பார்த்த தங்கப்பன் நாயரைக்கண்டு அவன் எழுந்து அமர்ந்தான். தலையை சொறிந்தபடி “ரெண்டு எருமையாக்கும்… ஒண்ணு வலம் ஒண்ணு எடம்” என்றான்
“என்ன சொல்லுதான்?”என்றார் தங்கப்பன் நாயர்
“அவன் நாலஞ்சுநாளாட்டு இதைத்தான் சொல்லுதானாம்… “
“நாலஞ்சுநாளாட்டா? அப்ப பயலுக்கு குறி தெரிஞ்சுபோச்சோ?” என்றார் தங்கப்பன் நாயர்
“சாவுகுறி ஏளுநாள் முன்னாடியே சொப்பனத்திலே வந்திரும்…. மனுசப்பயலுக்கு முழுசாட்டு பிடிகிடைக்காது, அம்பிடுதான்”என்றார் போற்றி
செல்லம்மையின் அம்மாக்கிழவி வந்து “வீட்டுக்கு வந்தவிக ஓரோ வாய் வெறுங்காப்பியெங்கிலும் குடிச்சிட்டு போகணும்…. வெத்திலை போட்டு போகணும்”என்றாள்
“இதுக்கெடையிலே காப்பியா?”என்றார் தங்கையா நாடார்
“அதுபின்னே வீட்டுக்கு வந்த கூட்டம்லா? வெறும்வாயோட போனா ஐசரியம் கூட எறங்கிரும்லா? இப்பமே நிறைஞ்ச மகாலட்சுமி போயிருக்கு”
“இங்கதான் கெட்டியிருக்கு… ரெண்டு எருமை..” என்றான் குமரேசன்
கிழவி பெரிய சருவத்தில் கருப்பட்டி போட்ட காப்பி கொண்டுவந்து அலுமினிய டம்ளர்களில் எல்லாருக்கும் கொடுத்தாள். பங்கஜம் பெரிய மரத்தாலத்தில் வெற்றிலை பாக்கு புகையிலை கொண்டுவந்து வைத்தாள்.
“சுண்ணாம்பு எங்கட்டி?”என்றார் போற்றி “அதையாக்கும் முதல்ல கொண்டுவரணும்…சாஸ்திரம் மாறப்பிடாது”
வெற்றிலைபோட்டுக்கொண்டு ஒவ்வொருவராக கலைந்தனர்.
“பய இப்டி கோட்டிபிடிச்சு கிடக்கானே?” என்றார் தங்கப்பன் நாயர்
“கெடக்கட்டும்…ஒரு கணக்கிலே நல்லதாக்கும். தாங்குறவனுக்குத்தான் தெய்வம் துக்கத்தை தரும். தாங்காதவனுக்கு சொப்பனத்தை குடுக்கும்…. நாலஞ்சுநாளிலே வந்திருவான்”
சொல்லிக்கொள்ள சென்றபோது செல்லம்மை “போத்தியே கெடக்குத கெடைய கண்டுதா… எனக்க ராசா கெடக்குத கெடைய கண்டுதா…” என்று கதறினாள்
“சும்மா இருடி… அவனுக்கு ஒண்ணுமில்லை. சொப்பனஜாலமாக்கும். செரியாயிரும்…”என்றார் போற்றி
“இது ஒரு நாப்பதுநாள் களியட்டு. நான் நல்ல சில்லுக்கருப்பட்டி மாதிரி எருமைக்குட்டியை உனக்கு தேடி கொண்டுவாறேன். தொளுவம் ஒளிஞ்சு கிடக்கக்கூடாது.மூத்தவ வந்து நின்னுகிடுவா” என்றார் தங்கையா நாடார்
அவர்கள் போனபின்னர் குமரேசன் எழுந்து வந்து “ஏட்டி ரெண்டு எருமையும் தண்ணி கேட்ட
நாகர்கோயிலில் பேசுகிறேன்
வரும் மார்ச் 4 அன்று நாகர்கோயிலில் லக்ஷ்மி மணிவண்ணனின் ’விஜி வரையும் கோலங்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறேன்.
நாள் மார்ச் 4
இடம் ஏபிஎன் பிளாஸா
நாகர்கோயில்
பொழுது மாலை 5 மணி
பேசுவோர்
விக்ரமாதியன், சுஷீல்குமார், ஜி.எஸ்.தயாளன்,ஆனந்த், பிகு, மதார், ஜெயமோகன் மற்றும் லக்ஷ்மி மணிவண்ணன்
விமர்சனங்களும், ரசனையும்
அன்புள்ள ஜெ
’எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச்சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவர். அவர் எனக்கு அணுக்கமானவர்தான்’ என்ற வரி ஆச்சரியமளித்தது. இது இலக்கிய மதிப்பீடுகளுக்கே எதிரானது அல்லவா? நீங்கள் இதுவரைச் சொல்லிக்கொண்டிருந்தவற்றுக்கு முற்றிலும் மாறானது. இளமையில் இப்படிச் சொல்லியிருப்பீர்களா? இப்போது திரும்ப எடுத்துக்கொள்கிறீர்களா?
அருண்.ஆர்
அன்புள்ள அருண்,
அந்த எண்ணம் இளமையில் இருந்தது இல்லை என ஒப்புக்கொள்கிறேன். அன்றெல்லாம் இலக்கிய அழகியல் சார்ந்த அளவுகோல்களை மதவெறிபோல பற்றிக்கொண்டிருந்தேன். இன்று என் பார்வை மிக விரிந்திருக்கிறது.
ஒருவர் ஒரு கவிதையை எழுதுகிறார் என்றால், ஒரு நூலை வாசிக்கிறார் என்றால், அதனாலேயே அவர் தமிழ்ச் சமூகச்சூழலில் பல்லாயிரத்தில் ஒருவர். அது எந்த தரமான கவிதையாக இருந்தாலும் சரி. அவருடையது எந்தக் கருத்தாக இருந்தாலும் சரி. அவர் ஓர் அறிவுஜீவி, அவர் ஓர் இலக்கியவாதி. அவர் என்னுடைய ‘குலம்’. இங்கே வாழும் எவரைவிடவும் எனக்கு அணுக்கமானவர் அவர்.
அவர் எழுதும் கவிதையோ அவர் சொல்லும் கருத்தோ எனக்கு உடன்பாடாக இல்லாமலிருக்கலாம். இலக்கியச்சூழலில் அப்படி பல தரப்புகள், பல போக்குகள் இருக்கலாம். என்னுடைய அழகியல்பார்வை அதிலொன்று. அதுவே அறுதியானதும் முழுமையானதும் அல்ல. அவர் இன்னொரு தரப்பைச் சேர்ந்தவர், அவ்வளவுதான்
நான் விழாக்களில் கலந்துகொள்ளும்போது எனக்கு நூல்களை பரிசளிப்பார்கள். பெரும்பாலும் இளம்கவிஞர்கள், இளம் எழுத்தாளர்கள். அவை பெரும்பாலும் முதிரா எழுத்தாக இருக்கும். நான் பெரும்பாலும் எல்லாவற்றையும் படித்துவிடுகிறேன் என்றால் நம்ப மாட்டீர்கள். அவற்றில் பெரும்பாலும் எல்லா நூல்களிலும் ஏதேனும் ஒருசில படைப்புக்கள் எனக்கு சுவாரசியமானவையாகவும் இருக்கின்றன என்றால் இன்னும் நம்ப மாட்டீர்கள்.
என் நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு, “வர வர எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சிட்டீங்க” என்று ஈரோடு கிருஷ்ணன் அடிக்கடிச் சொல்வார். உண்மைதான், கதை, கவிதை ஆகியவை தன்னளவிலேயே ரசிப்புக்குரியவைதானே? அதெப்படி ஒரு கதை கொஞ்சம்கூட நன்றாக இல்லாமல் ஆகமுடியும்?
அது நித்யா முன்பு எப்போதோ சொன்ன ஒர் அறிவுரை. அன்று அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டியில் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது இசைகற்ற ஒரு நண்பர் ஒரு பாட்டைப்பற்றிச் சொன்னபோது “அதை கேட்டாலே வாந்தி வரும்” என்றார்.
நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பாடல் எதுவாக இருந்தாலும் கேட்கப்பிடிக்கும். அதெப்படி பாட்டு வாந்திவருவதாக இருக்கமுடியும்? பாட்டு என்பதே ஓர் அரிய, இனிய நிகழ்வுதானே? நித்யா சொன்னது அப்போது புரிந்தது
அவரிடம் நான் சொன்னேன். “பாட்டு என்பது நம் மரபில் சரஸ்வதி. சரஸ்வதி எப்படி குமட்டல் அளிக்க முடியும்? இன்னும் நன்றாக இருந்திருக்கலாம், இன்னும் போக இடமிருக்கிறது என்று தோன்றலாம். அதற்கு முடிவே இல்லை. ஆனால் எப்படி அது அருவருப்பானதாக ஆகும்?”
கலையை ஒருபோதும் பழிக்கலாகாது என்று அவரிடம் சொன்னேன். அது நானே எனக்குச் சொல்லிக்கொண்டது. கலை இனியது. இலக்கியம் உயர்வானது. கலைஞர்களும் இலக்கியவாதிகளும் எவரானாலும் கலைமகள் அருள்கொண்டவர்களே.
நன்றாக இல்லை என்று சொல்லாமல் இலக்கியவிமர்சனம் இல்லை. ஆனால் ஏன் நன்றாக இல்லை என்பதற்கான காரணங்களாகவே அது அமையவேண்டும். அது ஒரு விவாதத் தரப்புதான்
எனக்கு ஓர் அழகியல்பார்வை உள்ளது. அந்தப்பார்வையுடன் நான் உள்ளே வந்து இலக்கியப்படைப்புக்களை ஆராயவில்லை. மாறாக இலக்கிய முன்னோடிகளிடமிருந்து அதை உருவாக்கிக்கொண்டேன். வாசிக்க வாசிக்க வளர்த்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து பேசி நிறுவமுயல்கிறேன்.
நான் இலக்கியக்கருத்துக்களைச் சொல்வது அந்த அளவுகோலின்படி. ஆனால் அதற்கு வெளியே உள்ளதெல்லாம் பிழை என்றோ குறைவானது என்றோ இன்று நான் நினைக்கவில்லை. என் கருத்துக்களை ஒருவர் மறுத்தார் என்றால் அதில் மேலதிகமாக நான் தெளிவுபடுத்த ஏதேனும் இருந்தால் மட்டுமே மீண்டும் எழுதுகிறேன். இல்லையேல் அது அவருடைய கருத்து என்று விட்டுவிடுகிறேன்.
என்னுடையது ஒரு தரப்பு. அறுதியானது அல்ல, ஒரு குரல்தான். நான் சொல்வது தீர்ப்பு அல்ல, ஒரு பார்வைதான். இலக்கியச்சூழலில் இப்படி பல தரப்புகள் இருக்கலாம். அவை முரண்பட்டு மோதி முன்னகரும் முரணியக்கமே கருத்துச்செயல்பாட்டில் இயல்பாக நிகழ்வது.
ஆனால் இப்போது கொஞ்சம்கொஞ்சமாக அந்த அழகியல்நோக்கை முன்வைப்பதிலும் ஆர்வமிழந்துவிட்டேன். அது தமிழில் புதுமைப்பித்தன் க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரை தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. ஒற்றைத்தரப்பாக அல்ல, ஒர் அறிவுத்தளமாக. உள்விவாதங்களுடனும் முரண்பாடுகளுடனும் வளர்ந்தது. அதை ஏறத்தாழ முழுமையாகவே நான் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


