Jeyamohan's Blog, page 1040
March 1, 2021
சாம்பனின் பாடல், மூங்கில்…
அன்பு நிறை ஜெ,
தாங்களும் , வீட்டிலும் நலமா. யூ கேவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்துவிட்டது. இவ்வருடத்திலும் கணிசமான மாதங்களை தின்றுவிட்டுதான் அடங்கும் என நினைக்கிறேன்.
நண்பர் சுனில் கிருஷ்ணனின் பெரு முயற்சியால் எனது முதல் சிறுகதை தொகுப்பை பதாகையும் யாவரும் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
தொகுப்பிற்கு பெயர் சாம்பனின் பாடல்.
தொகுப்பில் நீங்கள் அரூவில் முதல் பத்து கதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்த அவனும், சாரு பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னியும் இடம் பெற்றிருக்கிறது.ஜீவ கரிகாலனிடம் உங்களுக்கு ஒரு காப்பி அனுப்ப சொல்லி இருக்கிறேன்.
எதையாவது எழுதுங்கள் என்ற உங்கள் சொல் இன்று ஒரு தொகுப்பு வெளியிடும் அளவிற்கு இட்டு வந்திருக்கிறது.அனைத்திற்கும் நன்றி ஜெ.
சூழல் சீரானவுடன் இந்தியா வரும் போது உங்களிடம் கேட்டு கொண்டு நேரில் வந்து சந்திக்கிறேன்.
நன்றி,
தன்ராஜ் மணி
சுஷீல்குமாரின் மூங்கில். பெற்றுக்கொள்பவர் செல்வேந்திரன். அளிப்பவர் யாவரும் பதிப்பகம் ஜீவகரிகாலன்அன்புள்ள தன்ராஜ் மணி,
நண்பர்கள் அனைவருமே புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ”விஷ்ணுபுரம் அமைப்பில் எல்லாருமே எழுத்தாளர்களாக ஆகிவிட்டார்கள், நான் எழுதவில்லை. கடைசியில் நான் மட்டுமே எல்லாரையும் வாசிக்கவேண்டும் போலிருக்கிறது” என்று ஈரோடு கிருஷ்ணன் சலித்துக்கொண்டார்.
[நூல் அவர் பார்வைக்கும் போகவேண்டும். நான்கு வார்த்தை எதிர்மறையாகச் சொல்லிவிட்டார் என்றால் உங்களுக்கு அமோக எதிர்காலம் என்பது தொன்மம்]
நண்பர் சுஷீல்குமாரின் மூங்கில் என்னும் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. யாவரும் பதிப்பக வெளியீடு. இந்நூல்களை அறிமுகம் செய்து ஒரு விழா ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றுகிறது. வெறும் விழாவாக இல்லாமல் தனித்தனி அமர்வுகளாக விவாதிக்கும்படியாக. சென்ற ஆண்டு வெளிவந்த 10 நூல்களுக்கு அப்படி விழா திட்டமிடப்பட்டது- கொரோனாவால் நின்றுவிட்டது
ஜெ
[image error]
ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்\
சுசித்ராவின் ‘ஒளி’ புதிய தொகுப்புகளில் முதன்மை.
தேவியின் தேசம்
[’அகதி’ என்னும் முதல் சிறுகதைத் தொகுதிக்குப்பின் சா.ராம்குமார் எழுதிய இரண்டாவது நூல் தேவியின் தேசம். அமெரிக்கப் பயண அனுபவங்கள். வழக்கமான பயணியாக அல்லாமல் இந்திய நிர்வாகத்துறையில் இருப்பவராகச் சென்றமையால் அவருடைய பார்வை தனித்துவம் கொண்டதாக உள்ளது]
தேவியின் தேசம் முன்னுரை. சா.ராம்குமார்
எல்லா மனிதர்களைப் போலவும் பயணங்களில் பெரிய ஈர்ப்புடையவன் நான். கல்லூரி காலங்கள் முதலே தனியாக பயணம் செய்வதில் கூடுதல் உற்சாகம்; தனியாக பயணம் செய்யும்போது நாம் கண்டவற்றை அங்கே எவருடனும் பகிராமல் நம்முள் அந்த அனுபவங்களைச் சேர்த்து மொத்தமாக அது ஒரு தனி அனுபவமாகத் திகழும். அந்த அனுபவும் தன்னளவில் மிக மிக ஆழமானது. நண்பர்களுடன் பயணம் செல்லும்போது உற்சாக மனநிலையில் மட்டுமே இருந்திருக்கின்றேன். அந்தச் சமயத்தில் கூர்ந்து கவனித்து அறிந்து கொள்வதில் எனக்குச் சிக்கல் இருந்ததுண்டு. ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சிபெற்று பயிற்சி காலத்தில் இருக்கும்போது இந்தியாவில் உள்ள இருபது மாநிலங்களுக்கு மேல் பயணித்திருப்பேன். பொதுவாக நாம் ஏற்கனவே பயணித்த திசையில் அனுப்பாமல் புதிய திசையில் அனுப்புவார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான நிலக்காட்சிகளை அந்தப் பயணத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் கண்டிருக்கின்றேன். இன்று நிலக்காட்சிகள் என்னை அப்படி வசீகரிப்பதில்லை. அருவிகள் மட்டும் விதிவிலக்கு. மனிதர்களும் அந்தச் சமூகத்தின் பரிணாமத்தையும் அறிந்துகொள்வது ஆர்வமூட்டுகின்றது.
அமெரிக்காவைப் பற்றி முதன் முதலில் ஐந்து வயதுக்குள்ளாகவே கேள்விப்பட்டுவிட்டிருக்கின்றேன். அப்போது மும்பை நகரும் இந்தியாவிற்கு வெளியில் இருந்ததாக நினைவு. பள்ளிக்காலங்களில் என் பொதுஅறிவு வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தது என் ஆசிரியை திருமதி ஜெயந்தி. புதிய தகவல்களை அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் சோவியத் ருஷ்யா ஒரு பெரிய தேசமாக இருந்தததையும் பின்னர் அது பிளவுண்டதையும் அறிந்தேன். அதன் பின் நான் பார்த்த ஆங்கில திரைப்படங்கள் அனைத்திலும் சோவியத் வில்லன்கள்தான் வருவர். கலை இசையில் என் தலைமுறைக்கு முன்னர் இருந்தவர்களுக்கு சோவியத் ருஷ்யாதான் முக்கிய அறிமுகமாக இருந்தது. ஆனால் என் தலைமுறைக்கு, அதாவது 1990களில் பொருளாதாரக் கொள்கைகள் தளர்வாக்கப்பட்டபின் இருந்த தலைமுறைக்கு அமெரிக்காதான் முக்கிய அறிமுகம். இசை, சினிமா, பொருட்கள் என்று எல்லாவற்றிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் மட்டுமே. அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாக 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளில்தான் முன் நகர்ந்தது.
அமெரிக்கா என்ற தேசத்தைப் பார்க்க விரும்பாத பிற தேசத்தவர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. எப்படியாவது அங்கு சென்று வாழ்க்கையைத் தொடங்கிவிட வேண்டும் என்று ஏங்கும் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறேன். ‘அமெரிக்க ஏகாதிபத்தியம்’, ‘அமெரிக்காவில் இருக்கும் நாசாவில்’, ‘அமெரிக்காவிலேயே இப்படியாக நடக்குது’, ‘அமெரிக்கா என்ன அமெரிக்கா’ என்று அவரவர் அறிந்த அளவில் ஒரு குறைந்தபட்ச சித்திரத்தை மனதிற்குள் நிர்ணயிப்பதைப் பார்த்திருக்கிறேன். 1980-90களில் பிறந்து இன்று வாழ்பவர்களுக்கு அமெரிக்கா, காட்சி ஊடகமாக மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தொலைக்காட்சித் தொடர்கள், ஹாலிவுட் செட்டுக்கு வெளியே எடுக்கப்பட்டுள்ள படங்கள், பாப் இசை, யூட்யூப் காணொளி வழியாக புகழ்பெற்றிருக்கும் நட்சத்திரங்கள் என்று இவை எல்லாம் அமெரிக்காவை சற்றே அருகே கொண்டுவந்திருக்கின்றன.
அமெரிக்கா என்ற தேசத்தின் மீது ‘சேகுவேரா’, ‘வினவு’, ‘பல இரகசிய சதி ஆவணப்படங்கள்’ மூலம் என்னுள் ஒரு படிமம் இருந்தது. ஒட்டுமொத்த முதலாளித்துவத்துவ சித்தாந்தத்தின் வடிவமாகவும் எளிய பொதுவுடைமைக்கு எதிரான வில்லனாகவும் என் மனதில் ஒரு பிம்பம் பதிவாகி இருந்தது.
ஐ.ஏ.எஸ். தேர்விற்குப் படிக்கும்போதும் பின்னர் அரசுப்பணியில் சேர்ந்தபிறகும்தான் ஒரு தேசத்தை நிர்வகிப்பது எத்தனை சிக்கலானது என்று புரிந்தது. அமெரிக்கா மீது ஒரு பெரும் மரியாதை வருவதற்கும் அதுவே காரணமாக இருந்தது. ஒரு பயணியாக, அதைவிட அரசு ஊழியனாக, பலமுறை அரசில் எடுக்கப்படும் முடிவுகள், நிகழ்வுகள் அமெரிக்காவில் எப்படி நடக்கின்றன என்பதை அறியும் ஆர்வம் இருந்தது. எடுத்துக்காட்டாக எப்படி நிலத்தைப் பகுத்து வைத்திருக்கிறார்கள், எப்படி நீர் மேலாண்மை செய்கிறார்கள் என்பது தொடங்கி ஹாலிவுட் சினிமாக்களில் அடி வாங்கும் காவல் வாகனங்களை எப்படிப் பழுது பார்க்கிறார்கள் என்பதுவரை.
மக்களாட்சியை கிட்டத்தட்ட அனைத்து அடுக்குகளிலும் எடுத்துச்சென்றுள்ள தேசம் என்றால் அதுவும் அமெரிக்காதான். மிக மிக எளிய பதவிகளுக்கு எல்லாம் தேர்தல் வழக்கம் கொண்ட தேசம்; அதிபர் முதல் மாவட்டத்தில் பிணக்கிடங்கு அதிகாரியாக பணிசெய்பவர்வரை எல்லாமே தேர்வுமுறைதான். இது ஒருபுறம் இருக்க உலகில் இருக்கும் சிறந்த திறமை கொண்டவர்கள் எல்லாம் அமெரிக்காவில் கிடைக்கும் வாய்ப்பை நோக்கி இன்றும் நகர்ந்துகொண்டே இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்து இது நடைபெற்றுவருகிறது. இன்றும் உலகில் பதியப்படும் காப்புரிமைகள் பெரும்பாலும் அமெரிக்காவில் தான் பதியப்படுகின்றன. உலகின் முதல் மக்களாட்சிக்குச் செல்வதில் எனக்கு உற்சாகம் இருந்தது.
என் சகோதரர் திரு.நந்தகுமாரும் அண்ணி திருமதி சந்தியாதேவி அவர்களும் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியப்பட்டிருக்காது. அவர்களுக்கு என் நன்றிகள். என் அண்ணனின் அன்பு மகள் இஷா அமெரிக்காவில் என் பயணத்தை மேலும் இன்பமாக்கினாள். அமெரிக்காவின் நியூஜெர்சியில் வாழும் நண்பர் பழநிக்கும் என் நன்றிகள். புத்தகத்தை சரிபார்க்க உதவி செய்து தன் கருத்துகளைப் பகிர்ந்த நண்பர் திரு.ஜா.ராஜகோபாலுக்கு என் நன்றிகள். மிகச்சிறிய ஒரு தொலைபேசி உரையாடலிலேயே இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுத ஒப்புதல் தெரிவித்த திரு.த.உதயச்சந்திரன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். ‘ஒற்றன்’ நாவல் மூலம் என்னைக் கவர்ந்து எழுததூண்டியத் திரு.அசோகமித்ரன் அவர்களுக்கும் என் மரியாதை.
இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய வசந்தகுமார் அண்ணாச்சிக்கும் என் நன்றிகள்.
சா . ராம்குமார்
பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
துள்ளுதல் என்பது…
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமா? நாங்களும் நலமே.
இக்கடிதத்தோடு என்னுடைய கவிதைத் தொகுப்பின் கோப்பை இணைத்துள்ளேன்.
தோன்றியதை அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன், அதுவும் கவிதைகளாக 2019-லிருந்து தான். வலைதளம் ஆரம்பித்தது 2020-ல், கொரோனா காலகட்டத்தில். ‘வெண்முரசில் நாகர்கள்’ கட்டுரை உங்கள் தளத்தில் வந்த போது, என் தளமும் பரவலான கவனத்தைப் பெற்றது.
அப்போது தான் பிரபு மயிலாடுதுறை என்னோடு என் கவிதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர் தந்த ஊக்கம் தான் என்னை மென்மேலும் எழுதத் தூண்டியது. பெரும்பாலான கவிதைகளுக்கு அவர் எதிர்வினையாற்றியிருக்கிறார். அவரின் எதிர்வினை வரவில்லையென்றால் அன்றைய கவிதையை big time சொதப்பியிருக்கிறேன் என்று அர்த்தம்:))
கண்திறக்காத நாய்க்குட்டியைப் போல எனக்கே என் மொழி பிடி படாத நேரமது. ஒன்றைக் காண்பித்து, ‘இது உங்கள் மொழி’ என்று அவர் சொல்லும்போது, மற்றதும் என் மொழி தானே என்று எனக்குத் தோன்றும். இப்போது கொஞ்சம் கொஞ்சம் பிடி பட ஆரம்பித்திருக்கிறது. நேர்மையைத் தவிர வேறெதையும் கைக்கொள்ளத் தேவையில்லை என்று தோன்றுகிறது.
இரண்டு format-களில் கோப்பை இணைத்துள்ளேன். திறக்க முடியும் என்று நம்புகிறேன். ஒரு ஆசிரியர் மாணவியை வழி நடத்துவது போல எனக்கும் சில வார்த்தைகளைக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பற்றுக் கோடாக வைத்துக்கொள்வேன். தொகுப்பில் ஏதாவது மாறுதல் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.
நண்பர் ரமேஷ் சுப்ரமணியன் அட்டைப்படம் வரைந்தளித்திருக்கிறார். ‘இம்’மென்று அமைந்திருக்கும் ஆழ்கடல்’ என்று தலைப்பிடலாம் என்று நினைத்திருக்கிறேன். கிண்டிலின் pentopublish திட்டத்தில் வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறேன். மார்ச் 10 அதற்கான கடைசி தேதி.
ஜெயகாந்த் முழுக்க முழுக்க எனக்கு பக்க பலமாக இருக்கிறார். Loose words-ஐ உடனுக்குடன் சுட்டிக் காட்டுவார். சிலவற்றை நான் ஏற்றுக் கொள்வதும் உண்டு:)) ஜெயகாந்த், பிரபு இருவருமே தங்கள் suggestions-ஐ சொல்லி விட்டு, final decision-ஐ என்னிடம் விட்டு விடுகிறார்கள். ஒவ்வொரு கவிதையையும் மகள்களுக்கும் வாசித்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன்:)
உங்கள் விமர்சனம் எதுவானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று கூறிக் கொள்கிறேன்.
நன்றி,
கல்பனா ஜெயகாந்த்.
‘இம்’மென்று அமைந்திருக்கும் ஆழ்கடல்
அன்புள்ள கல்பனா
உங்கள் கடிதத்தைப் படிக்காமலேயே கவிதைக்குள் சென்றேன். முதலில் உருவானது ஆச்சரியம். கவிதையில் இன்று நான் எதிர்பார்ப்பது இரண்டு அடிப்படைத் தகுதிகளை. பொதுவான கவிதைச்சூழலின் எல்லை கடத்தல், தனியான கவிமொழி கொண்டிருத்தல்
இன்றைய நவீனக்கவிதை கூறுமுறை, பேசுபொருள் ஆகிய இரண்டிலும் ஒரு பொதுத்தன்மையை அடைந்துள்ளது. அதிலிருந்து எந்த அளவுக்கு ஒரு கவிதை தனித்து மேலெழுந்துள்ளது என்பதே என் முதன்மையான கேள்வி. அந்த வேறுபாட்டையே முதன்மையாகக் கருதுகிறேன்.
இங்குள்ள கவிதையில் உலகியல் சார்ந்த சில கசப்புகள், சிலவகை கோபங்கள், தனிமையின் சோர்வுகள் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்றன. சிலவகை மீறல்கள் எழுதப்படுகின்றன. இவை ஒருவரின் தனியாளுமையின் வெளிப்பாடாக இல்லாமல் ஒரு காலகட்டத்தில் எழுதும் அனைவருக்கும் பொதுவான குரலாக அமைகையில் தேய்வழக்குகளாகின்றன. எல்லா கவிதையும் ஒரே குரல் என ஒலிக்கிறது.
இரண்டாவதாக, மொழிநடை. பயிற்சியற்ற முகநூல்நடையிலேயே இன்று பெரும்பாலானவர்கள் கவிதைகளையும் எழுதுகிறார்கள். கவிதைமொழிக்கு உள்ளிசை இன்றியமையாதது. முழுக்கமுழுக்க முகநூலிலேயே எழுதினாலும் கவிஞனின் கவிமொழிக்கு இசைமை இருக்கும் என்பதற்கு போகனின் கவிதைகள் உதாரணம். நான் கவிதையில் எதிர்பார்ப்பது மொழியின் வீச்சை. இனிமையாக,கூர்மையாக, தெளிவாக, மயக்கமாக.
இத்தொகுதியின் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையின் பெரும்பரப்பின் பொதுக்குரலுடன் இசையாமல் தனித்து ஒலிக்கின்றன. இவை அந்தரங்கமான ஒரு தேடலை திருப்பித்திருப்பி உருவகங்களாகப் புனைந்துகொள்ள முயல்கின்றன. இவற்றின் கவிமொழி அழகிய உள்ளிசைத் தன்மையுடன் உள்ளது. ஆகவே இத்தொகுதி எனக்கு நிறைவளிக்கிறது. கவிஞர்தான் நீங்கள்.
‘துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை’ ‘உச்சிக்கூடுகட்டி உயிர்புரப்பாய்’ என்பதுபோன்ற வரிகளே கவிதையில் என்னைப்போன்ற ஒருவன் எதிர்பார்ப்பது. ஒரு நாளுக்கு இருநூறு பக்கங்களுக்குக் குறையாமல் வாசிப்பவன், தத்துவம் இலக்கியம் ஆன்மிகமென்று தேடிக்கொண்டிருப்பவன், ஒருநாளுக்கு ஆறுமணிநேரம் எழுதுபவன், அதற்கப்பால் அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் இருப்பது கவிஞரின் இத்தகைய சொற்சேற்கைகளில்தானே ஒழிய எளிமையான கருத்துக்களிலோ உணர்வுகளிலோ அல்ல.
வாழ்த்துக்கள். இத்தொகுதியில் எனக்கு உகக்காத ஒரு கவிதைகூட இல்லை என்பது உண்மையிலேயே திகைப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுகிறது
ஜெ
சொல்வளர்காடு

சொல் வளர் காடு என்கிற சொற்களின் ஆழமே கதையும் கட்டுரையாக விரிந்து கொண்டே இருக்கிறது. முக்கிய உபநிஷத்துகள் அல்லது சிந்தனை முறைகள் – அவற்றில் கதைகளும் ஒரு முக்கிய அங்கமாக ஒரு எளிய கடவுச் சொல் திறக்கும் பொக்கிஷமாக, ஆழ்ந்த சிந்தனைகளுடன் – அதே சமயம் எளிய மக்களும் சிந்தனை வெள்ளத்தில்மூழ்க திளைக்க எல்லோருக்கும் இருக்கும் வாய்ப்புக்களுடன் எனினும் ஒரு சிக்கலற்ற கட்டமைப்புடன் மிகச் சிறந்த அனுபவம்.
சொல்வளர்காடுFebruary 28, 2021
கொதி[ சிறுகதை]
“கொதின்னு கேள்விப்பட்டதுண்டா?” என்று ஃபாதர் சூசை மரியான் கேட்டார்.
நாங்கள் காரில் திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தோம். நோயுற்றிருக்கும் வயோதிகரான ஃபாதர் ஞானையாவைப் பார்ப்பதற்காக. அம்பலமுக்கில் வயதான பாதிரியார்களுக்கான ஓய்வில்லத்தில் அவர் இருந்தார். ஆஸ்பத்திரியில் பலமாதங்கள் இருந்தார். அப்போதும் சென்று பார்த்திருக்கிறோம். நேற்று தன்னை திரும்ப தன் வீட்டுக்கே கொண்டுசெல்லச் சொல்லியிருந்தார். ஓய்வில்லத்தில் ஓடைக்கரையில் ஒரு பழைய ஓட்டுவீடுதான் அவருடைய வாழ்விடம். இருபதாண்டுகளாக அங்கேதான் தனிமையில் இருந்தார்.
டிரைவர் இருக்கையின் அருகே ஏசுதாஸ் அமர்ந்திருந்தான். ஃபாதர் சூசைமரியான் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் அருகே நான். வசதியான கார்தான். மீன் ஏற்றுமதிக்காரர் ஜானி ஃபெர்னாண்டோவிடமிருந்து நான் இரவல் வாங்கியது. ஃபாதர் சூசைமரியானுக்கு முதுகுவலி கொஞ்சம் உண்டு. ஆகவே தலையணையை வைத்து நன்றாகச் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
“கொதிப்புன்னு கேட்டிருக்கிறேன்… தண்ணி கொதிக்கிறது…” என்றேன்.
“டேய் ஏசுதாஸ், சொல்லுடா. கொதின்னா என்ன?” என்றார் ஃபாதர் சூசைமரியான்.
“வேற தெரியல்ல ஃபாதர்” என்றான் ஏசுதாஸ்.
“செரி, உங்க ஏரியாவிலே கொதிக்கு ஓதுறது உண்டா?”
“புரியல்ல ஃபாதர்.”
“சர்ச்சிலே எங்கியாவது கொதிக்கு ஓதுற சடங்கைப் பாத்திருக்கியா?”
“நம்ம சர்ச்சுகளிலேயா?”
“பின்ன என்ன பெந்தேகோஸ்துகாரன் ஓதுற சர்ச்சையா சொன்னேன்?”
“இல்ல ஃபாதர், கேள்விப்பட்டதே இல்லை.”
“நீ இந்த ஊருதானே?”
“ஆமா ஃபாதர், மலையடிவாரம். களியல். அம்மை அங்கதான் இருக்கா.”
“அதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லியா?”
“இல்ல ஃபாதர்.”
ஃபாதர் சூசைமரியான் “கர்த்தருக்குத் துதி” என்று சொல்லி சிலுவை போட்டுக்கொண்டார்.
“என்ன ஃபாதர் அது?” என்றேன்.
“கொதின்னா சரியான தமிழிலே தண்ணியோ வேற திரவமோ குமிழியிட்டு கொப்பளிக்கிறது. இப்ப சூடுபண்ணி கொப்பளிக்க வைக்கிறதை மட்டும்தான் கொதின்னு சொல்றோம். மற்ற அர்த்தம்லாம் பின்னாடி வந்து சேர்ந்தது. ஆனா இங்க கன்யாகுமரி மாவட்டத்திலே பேசுற தமிழ் ஒரு ஐநூறு வருசம் பழசு… பல வார்த்தைகள் அதோட அசல் அர்த்ததிலேயே இங்கே இருக்கும். பல வார்த்தைகளுக்கு காலப்போக்கிலே புதிய அர்த்தம் வந்திருக்கும். அதிலே ஒண்ணுதான் இந்தக் கொதி”
”கேள்விப்பட்டதில்லை” என்று நான் சொன்னேன்.
“மலையாளத்திலே இதே அர்த்தத்திலே புழக்கத்திலே இருக்கு…” என்றார் ஃபாதர் சூசைமரியான். “நான் இங்கே தொண்டுக்கு வந்தது எழுவத்தொண்ணிலே. அப்ப இருபத்தாறு வயசு எனக்கு. நல்ல துடிப்பான பிராயம். அப்ப விடுதலை இறையியல் எங்கபாத்தாலும் கேட்டுக்கிட்டிருந்தது. நான் ஒரு சின்ன கையெழுத்துப் பத்திரிகையெல்லாம் நடத்தி ஃபிடல் காஸ்ட்ரோவையும் ஏசுவையும் ஒப்பிட்டு கவிதையெல்லாம் எழுதிட்டிருந்தேன். நேரா போனது மலையடிவாரத்திலே நெட்டாங்கிற ஊரிலே. அங்க ஒரு சர்ச். நூறுவருசம் முன்னாடி கட்டினது. அதிலே நான் பொறுப்பு.”
ஃபாதர் சூசைமரியான் சொன்னார். நூறுவருசம் முன்னாடி அங்க மலைவாழ்மக்களுக்காக ஒரு கஞ்சித்தொட்டியும் ஆஸ்பத்திரியும் கட்டியிருக்காங்க. அப்ப அங்க இருந்தவங்களுக்காக கட்டின சின்ன சர்ச் அது. பின்னாடி கொஞ்சம் பெரிசாக்கி கல்லாலே கட்டியிருக்காங்க. ஆஸ்பத்திரி இப்ப பெரிய நிறுவனமாகியிருக்கு. ஆஸ்பத்திரியோட இணைஞ்சு இப்ப அந்த சர்ச் இருக்கு. அப்ப அந்த சர்ச்சுதான் பெரிசு. ஆஸ்பத்திரிக்கு வாரம் ரெண்டுநாள் நெடுமங்காட்டிலே இருந்து டாக்டர் ஒருத்தர் வந்திட்டுப்போவார். அதை கட்டினப்ப அங்க கொஞ்சம் வெள்ளைக்காரங்க இருந்திருக்காங்க. கொஞ்சம் ஆதிவாசிகளும் வந்திட்டிருந்திருக்காங்க. அப்ப ரொம்ப சின்ன ஊரு. ஊரே இல்லை, ஒரு மலையடிவாரத்து பாதைச்சந்திப்பு.
நான் போனப்ப குடியேற்றக்காரங்க நெறையபேர் வர ஆரம்பிச்சாச்சு. ஞாயித்துக்கிழமை மாஸுக்கு ரோட்டிலே ஆள் நிக்கும். எல்லாம் மலைகூலிக்காரங்க. பரம ஏழைங்க. பொழைக்க வழியில்லாம புள்ளைகுட்டிகளோட மலையேறி காட்டுவேலைக்கு வந்தவங்க. காட்டிலே புறம்போக்கு மண்ணை ஆக்ரமிச்சு குடிசை கட்டி, மலைக்குளிரிலே மழையிலே பாம்பு யானை பண்ணின்னு சகல தொந்தரவுகளோடே வாழுற ஜனங்க. அப்ப மலேரியா பெரிய பிரச்சினை. துள்ளப்பனின்னு சொல்லுவாங்க அங்கெல்லாம். சாயங்காலமானா உடம்பு துள்ள ஆரம்பிச்சிடறதனாலே அந்தப் பேரு. அறுபதுகளிலே ஏராளமான ரப்பர் எஸ்டேட் வந்தாச்சு. அதெல்லாம் கோட்டயம் பாலா பகுதி கத்தோலிக்கர்கள். அவங்கள்லாம் வேற சர்ச்.
நான் போனதுமே முடிவுபண்ணினது என்னோட விடுதலை இறையியலுக்கு வேலைவந்தாச்சுன்னுதான். உடைவாளை உருவுடா ரெட்சணிய வீரனேன்னு நினைச்சுக்கிட்டேன். ஏழைச் சனங்க. மூர்க்கமானவங்க. படிப்பறிவே கிடையாது. குடிப்பழக்கமும் கஞ்சாப்பழக்கமும் உண்டு. அவங்களுக்கும் மலைச்சாதி மக்களுக்கும் அடிதடிகள் நடக்கும். அப்ப அங்க சர்க்கார் பள்ளிக்கூடம்லாம் வந்தாச்சு. ஆனா புள்ளைங்களை படிக்க அனுப்ப மாட்டாங்க. மலையிலே எருமை மேய்க்க அனுப்பிருவாங்க. அங்க கடுமையா வேலைசெஞ்சேன். நினைச்ச ஒண்ணுமே நடக்கலை. ஆனா ரொம்ப வெறியோட இருந்தேன். நம்ம கடமையைச் செய்வோம், பயனை கர்த்தர் பாத்துக்கிடுவாருன்னு சொல்லிட்டே இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள ஏமாற்றமும் கசப்பும் நிறைஞ்சுட்டுது. அது ஒருநாள் சட்டுன்னு வெடிச்சுட்டுது.
அங்க நான் சர்ச்சுக்கு பின்னாடி தனியா ரெண்டு ரூமுள்ள சின்ன வீட்டிலே தங்கியிருந்தேன். ஓட்டுவீடு. சர்ச்சோட இணைஞ்ச ஒற்றை அறையிலே கோயில்குட்டி நல்லபண்டாரம் தங்கியிருந்தாரு. மலைசாதி ஆளு. நாங்க ரெண்டுபேருதான் அங்க. நல்லபண்டாரம் இல்லேன்னா ஒண்ணும் நடக்காது. அவருக்குத்தான் ஊரு தெரியும். அவரு அங்கெயே இருபத்தஞ்சு வருசமா இருக்கிறவரு. பக்கத்திலே கிறிஸ்டோ காலனியிலே அவருக்கு வீடு. கோயில்குட்டி வேலை ஒரு மக்கள் தொடர்புக்காகத்தான். அவருக்கு மலைச்சரக்கு வாங்கி விக்கிறது, மாடு வாங்கி கொண்டு வந்து விக்கிறதுன்னு பல தொழிலு. எங்களுக்குள்ள பேச்சுவார்த்தை ஜாஸ்தி கிடையாது. என்னை அவருக்கு அவ்ளவா பிடிக்காது, பிடிக்காதுங்கிறதைவிட மரியாதை இல்லை.
ஒருநாள் என்னோட நல்லபண்டாரம் இல்லை. நான் மட்டும்தான் இருக்கேன். ஒரு பொம்புளை சின்னக்குழந்தையோட வந்திட்டா. பாத்தாலே தெரியும் மலைக்கூலிப் பொம்புளை. “சாமி, எனக்க பிள்ளைக்கு கொதிக்கு ஓதிக்கெட்டுங்க” ன்னு சொல்றா.
எனக்கு என்னன்னே புரியலை. “என்னது?”ன்னு கேட்டேன்
”புள்ளைக்கு கொதி விளுந்துபோட்டுது… வயித்திலே மாந்தம். கஞ்சித்தண்ணி குடிக்காம கெடக்கு… ஓதுங்க” ன்னு சொன்னா.
“ஓதுறதா? இது சர்ச்சு. ஆண்டவரோட எடம்… எல்லா துக்கத்துக்கும் நோய்க்கும் ஆண்டவரிட்டே மன்றாடினா போரும். வா ஜெபம் செய்யுதேன்” ன்னு சொன்னேன்.
“ஜெபம் வேண்டாம், ஓதிக்கெட்டினா போரும்” னு அவ சொல்லுதா.
“இங்க அதெல்லாம் செய்யுறதில்லை… வேணுமான மருந்து தாறேன். நாளைக்கு வா. டாக்டர் இருப்பார்” னு நான் சொன்னேன்.
“இல்ல, ஓதிக்கெட்டினாத்தான் செரியாகும்… சின்ன சாமியாரு ஓதிக்கெட்டுவாரு. அவரு எங்கே?” ன்னு கேட்டா.
அப்பதான் எனக்கு விஷயம் புரிய ஆரம்பிச்சுது. “இதுக்கு முன்னாடி ஓதிக்கெட்டியிருக்கியா?”ன்னு கேட்டேன்
“ஆமா,நாலஞ்சுதடவை மூத்தவளுக்கு கெட்டியிருக்கேன்… இங்கதான் எல்லாரும் ஓதுறாங்க”
“எதுக்காக ஓதுறாங்க?”
“சாமி இந்த மலையிலே எனக்க புருசன் கொஞ்சம் கையிலே காசுள்ள ஆளு. மலை எஸ்டேட்டிலே வாச்சுமேனாக்கும். அங்கே பைசா வரும்படி உண்டு. இங்க திங்கிறதுக்கு சோறும் கறியுமுள்ள வீடு நாங்கதான். ஆனா வீட்டைச்சுத்தி சோத்துக்குச் செத்த கூட்டம். வேற எடம் போலாம்னா இந்த வீட்டை என்ன செய்ய? ஒருவாய் நிறைஞ்சு சோறு திங்க முடியாது. நாக்க ஊறவைச்சுகிட்டு வந்திடுங்க. அதுகளுக்க பார்வை இருக்கே, எரந்து திரியுத தெருநாய்க்க பார்வை. எனக்க பிள்ளை நல்லது என்னமாம் தின்னா உடனே நாக்கு நுணைச்சு கொதிபோட்டுதுக… அந்தாலே வயிறு உப்பி இப்டி சடைஞ்சு கிடந்திருது”
என் கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. “சொல்லு, கொதிக்கு ஓதினா என்ன ஆகும்?”
அவ உற்சாகமா “கொதிக்கு ஓதினா கொதிபோட்டவங்களுக்கு இந்த சீக்கு திரும்பிப் போயிரும்லா? அதுக வயிறுவலிச்சு பாடுபடும்லா? பிறவு கொஞ்சநாள் நம்மளை பாத்து எச்சி இறக்காதுல்லா?” ன்னு சொன்னா.
”சின்னச் சாமியாரு செய்யுதாரா? நீ எவ்ளவு குடுப்பே?”
“எட்டணா குடுப்பேன்…” ன்னு சொல்லி “உங்களுக்கானா ஒரு ரூவா குடுக்கேன்”ன்னு குரலை தாழ்த்தினா.
“செரி நீ இங்கே இரு… அவரு வந்தா ஓதிட்டு போ” ன்னு சொன்னேன். “நான் பள்ளிக்கூடம் வரை போகணும். வர தாமதமாகும்” சொல்லி உடனே கிளம்பிட்டேன்.
ஒருமணிநேரத்திலே நல்லபண்டாரம் வந்திட்டார். நான் அவர் வர்ரதை பாத்தேன். உடனே திரும்பி வந்தேன். நல்லபண்டரம் உள்ளே ஓதிட்டிருக்கார். சர்ச் ஜன்னல் வழியா எட்டிப்பாத்தேன். என்ன பண்ணிட்டிருக்காருன்னு.
ஒரு அகலமான பாத்திரத்திலே தண்ணிய விட்டு அது முன்னாலே குழந்தையை உக்கார வைச்சு மறுபக்கத்திலே அவரு உக்காந்திட்டிருக்கார். குழந்தை நெத்தியிலே சிலுவை போட்டுட்டு என்னமோ முணுமுணுன்னு சொல்றார். பைபிள் வசனமா இல்லை ஏதாவது மலைதெய்வத்தோட மந்திரமான்னு தெரியல்லை. குழந்தைகிட்டே அந்த தண்ணியிலே துப்பச் சொன்னார். குழந்தை மூணுமுறை துப்பிச்சு. அந்த தண்ணி நடுவிலே ஒரு சின்ன மரக்கட்டையை வைச்சு அதிலே ஒரு மெழுகுவத்தியை கொளுத்தி வைச்சார். மறுபடி மந்திரம். பிறகு ஒரு செம்பை எடுத்து மரக்கட்டையோட அந்த மெழுகுவத்தியை அப்டியே மூடினார். செம்பு தட்டிலே தொட்டுக்கிட்டிருக்கு. அதை தொட்டுட்டு மந்திரம் சொன்னார். ‘ஏசுவே கர்த்தரே!’ன்னு கூவிக்கிட்டே செம்பை மெல்ல தூக்கினார். தண்ணி துணிமாதிரி செம்புக்குள்ள இழுபட்டுது. பாதி தண்ணி செம்புக்குள்ளே மேலே ஏறிட்டுது”
நல்லபண்டாரம் குழந்தையை தொட்டு “சுத்தமா எடுத்தாச்சும்மா… பிதாசுதன் பரிசுத்த ஆவிக்கு தோத்திரம்”னார்.
“இவ்ளவு கொதி இருந்திருக்கு… நாசமாப்போறவங்க… செத்தொளிஞ்சு போகணும் சனியனுங்க”ன்னு அவ சொன்னா.
“ஏசு உடனிருப்பார்”னு நல்லபண்டாரம் சொன்னார் “பிதாசுதன் ஆவியின் நாமத்தாலே ஆமேன்.”
அவ கும்பிட்டு காசுகுடுக்கிறப்ப நான் ஆவேசமா பாய்ஞ்சு உள்ளே போய்ட்டேன். காலாலே உதைச்சு அந்த தாம்பாளத்தை தெறிக்கவிட்டேன். “வெளியே போடா நாயே… இது ஆண்டவரோட எடம். இங்க என்னடா உனக்கு வேலை? பிசாசுக்க மந்திரத்தை இங்க கொண்டு வாறியா? பொடா வெளியே”ன்னு கத்தினேன்.
அவரு திருப்பி கத்தினாரு. “நீரு போவும் வேய். வெள்ளைக்காரன் காலம் முதல் இங்க இதெல்லாம் நடந்திட்டிருக்கு… நீரு இப்ப புதிசாட்டு வந்து நொட்டுவீரா? போவும்வே…”ன்னு என்னைய பாத்து கைய நீட்டினாரு.
நான் அவரை அடிக்கப்போனேன். அந்த பொம்புளை தடுத்தா. பெரிய வாய்ச்சண்டை ஆயிடுச்சு. அவரு வெளியே போயி சட்டுன்னு சர்ச்சை பூட்டி சாவியை எடுத்துக்கிட்டார். “இது எனக்கு பெரிய சாமி குடுத்த சாவி. நான் அவருகிட்டே குடுக்கேன்… நீரு போவும்வே”ன்னு சொல்லிட்டே போய்ட்டார்.
நான் எரிஞ்சுட்டிருந்தேன். சுங்கக்காரங்களையும் பரிசேயக்காரங்களையும் எத்தனை தடவைதான் தேவாலயத்திலே இருந்து வெரட்டுறது? நேரா குலசேகரம் போனேன். அங்கே அப்ப பொறுப்பிலே இருந்தவரு ஃபாதர் ஞானையா. நான் அவரை அதுக்கு முன்னாலே நாலைஞ்சு தடவை சடங்குகளிலே பாத்ததோட சரி. நேர்ல சந்திக்கிறது அப்பதான்.
தீயோட போய் அவர் முன்னாடி நின்னேன். கத்து கத்துன்னு கத்தினேன். இப்பவே நல்லபண்டாரத்தை அனுப்பிடணும். இனி அவன் சர்ச்சு பக்கம் வரப்பிடாது. என்னென்னமோ சொன்னேன்.
ஃபாதர் ஞானையா நிதானமா கேட்டார். “சரி, சாவிய தந்திடறேன். நீங்க மலையிலே போயி இன்னொரு கோயில்குட்டியை கண்டுபிடிக்கணும்.”
“நூறுபேரு கிடைப்பாங்க”ன்னு நான் சொன்னேன்.
“ஒருத்தர்கூட கிடைக்க மாட்டாங்க”ன்னு ஃபாதர் ஞானையா சொன்னார். “அவரு வெளியே போய் ஒரு சர்ச்சு தொடங்கினா நம்ம சர்ச்சுலே நாம மட்டும்தான் இருப்போம்.”
“அதுக்காக இந்த ஷாமனிஸத்தை எல்லாம் அனுமதிக்கணுமா? பிறகு எதுக்கு சிலுவை?”
“சிலுவை சண்டை போடுறதுக்கில்லை.”
“சிலுவைப்போர் நடந்திருக்கு.” என்றேன்.
“ஆமா, ஆனா அது இந்த மாதிரி ஏழைங்க கூட இல்லை.”
“அப்ப இதெல்லாம் நடக்கட்டும்னு சொல்றீங்களா?”
“நடந்தா என்ன? நம்ம வேலை அவங்களுக்கு எதையாவது முடிஞ்சதைச் செஞ்சு குடுக்கிறது. கர்த்தரோட வார்த்தையை அவங்களுக்குக் குடுக்கிறது. அவ்ளவுதான்.”
“என்னாலே முடியாது, நான் வேற எங்கயாவது போறேன்”
“சரி… ”ன்னு அவர் அலட்டாம சொல்லிட்டார்.
“ஃபாதர் இதை நீங்க செய்வீங்களா?”ன்னு கண்ணீரோட கேட்டேன்.
“நெறைய செஞ்சிருக்கேன்…”
நான் அப்டியே திகைச்சுப்போய் பாத்தேன். அவர் ரொம்ப ஒழுக்கமான ஃபாதர்னு தெரியும். செயிண்டுன்னே அவரை கொஞ்சம் கிண்டலா கூப்பிடுவாங்க.
“ஏன்னா ,எனக்கு ஃபாதர் ப்ரென்னன் அதை செஞ்சிருக்கார்”
“ஃபாதர் பிரென்னென்னா?” என்றேன்.
”ஃப்ரெடெரிக் பிரென்னென். ஐரிஷ்காரர். அவருதான் அந்த சர்ச்சையும் ஸ்தாபிச்சவர். இந்த மலைப்பகுதிகளிலே அம்பதுவருசம் செர்வீஸ் பண்ணியிருக்கார்.”
என்னாலே பேசவே முடியலை.
“என்னோட ஊர் பக்கத்திலே வலியகுந்நுதான். தெரியுமா?”
“இல்லை.”
“அது ஒரு மலையடிவார ஊர். நான் பிறந்தப்ப அங்க எஸ்டேட் கூலிங்கதான் அதிகமும். நான் ஆயிரத்தி தொளாயிரத்தி இருபத்தொன்பதிலே பிறந்தேன். அப்பல்லாம் பஞ்சம், பட்டினி, சீக்கு. அதான இங்க வாழ்க்கை. மலைக்கிழங்கும் கொஞ்சம் வேட்டை எறச்சியும் கிடைச்சதாலே சாகாம கிடந்தோம். ஆனா அதுக்கே சண்டை அடிதடி… மண்ணிலே ஒரு நரகம்னா அதுதான்னு நான் நினைச்சுக்கிடறது உண்டு”ன்னு ஃபாதர் ஞானையா சொன்னார்.
அவரு என்ன சொல்ல வாறாருன்னு எனக்கு புரியல்லை.
“எனக்கு சின்னவயசிலே கொதியன் கோரன்னு பேரு தெரியுமா?” ன்னு ஃபாதர் ஞானையா கேட்டார்.
“கோரன்னா?”
“நான் கன்வெர்ட் ஆனப்ப ஃபாதர் பிரென்னன் போட்ட பேருதான் ஞானையா. அவரோட ஆசிரியரோட பேரு ரேமார்ட். அதுக்கு தமிழ் அர்த்தம் ஞானையா” ஃபாதர் ஞானையா சொன்னார். “நான் அவரை பாக்கிறப்ப எனக்கு ஏழு வயசு. அப்பா மலைக்கூலி. அம்மாவும் ஊரிலே காட்டுலே சுள்ளி பொறுக்குவா. ஒரு மாடு உண்டு. எட்டு பிள்ளைங்களிலே நான் கடைசி. எங்கம்மா பெத்தது பதினேழு பிள்ளைங்க. மிஞ்சினது எட்டு. நான் கடைசிக்கு முந்தினவன். எங்க வீட்டிலே அப்பல்லாம் ராத்திரி எதையாவது சமைச்சா உண்டு. மத்தபடி பிள்ளைகளுக்கு வேளைக்கு சாப்பாடு குடுக்கிற வழக்கமே இல்லை. எங்கம்மா காலையிலே கெளம்பிப்போனா சாயங்காலம்தான் வருவா. அப்பா வாரம் ஒருநாள் வருவார். பகல் முழுக்க நாங்க கோழிகள் மாதிரி கொத்திக்கொத்தி தீனிக்கு அலைவோம். எந்த முட்டையானாலும் குடிச்சிருவோம்… பாம்புமுட்டையைக்கூட”
நான் திடுக்கிட்டதிலே கை ரெண்டும் நடுங்கிட்டுது.
ஃபாதர் ஞானையா புன்னகைச்சு “பாம்புமுட்டைய குடிக்கலாம்… ரொம்ப சின்னதா இருக்கும். ஆனா நஞ்சு கிடையாது…” ன்னு சொன்னார்.
எனக்கு குமட்டல் வந்திட்டுது.
“அப்பல்லாம் காட்டிலே நிறைய கிடைக்கிறது பாம்புமுட்டைதான். ஒருநாளைக்கு அம்பது முட்டைகூட குடிச்சிருக்கோம். ஆனா முட்டைய தொட்டுப்பாக்கணும். அதுக்குள்ள குஞ்சுபாம்புக்கு உடம்பு வந்திருக்கக்கூடாது. கருவாத்தான் இருக்கணும்… அது தொட்டுப்பாத்தா தெரிஞ்சிரும். பாம்பு முட்டை தோல்மாதிரித்தான் இருக்கு… ஓடைக்கரையிலே முதலைமுட்டை கிடைக்கும். அது கொஞ்சம் வயிறார கிடைக்கும். அதையும் குடிப்போம். சின்ன பாம்புகளை பிடிச்சு தலையை வெட்டி போட்டுட்டு உரிச்சு சுட்டு திம்போம். முதலைக்குட்டிகளை பிடிச்சு கொன்னு உரிச்சு திம்போம். ஓணான்கூட திம்போம். எல்லா காய்களும் பழங்களும் திம்போம். அன்னாசிச்செடியோட குருத்து இருக்கே அதைப் பிடுங்கி திம்போம்… இன்னதுதான்னு இல்லை. தின்னா சாகக்கூடாது, அவ்ளவுதான். அப்பப்ப தின்னது பிடிக்காம வாந்தி வரும். பாம்புகடிச்சு, முதலைபிடிச்சு, நஞ்சு உள்ளபோய் செத்துக்கிட்டே இருப்பாங்க. என் சின்னத்தம்பி ஒருத்தனை மலைப்பாம்பு புடிச்சு விழுங்கிட்டுது. அந்த மலைப்பாம்பை புடிச்சு கிழிச்சப்ப தம்பி உள்ளே ஒடிஞ்சு சுருண்டு கருப்பிள்ளை மாதிரி இருந்தான். அந்த பாம்பை வெட்டி கறியா பங்கு போடுறதுக்கு ஊரிலே அடிதடி சண்டை”
ஃபாதர் ஞானையா ஒருமாதிரி சிரிப்போடே சொல்லிட்டிருந்தார். எனக்கு என்ன முகபாவனை காட்டுறதுன்னே தெரியலை.
“அப்டி ஒரு வாழ்க்கை. பசிவாழ்க்கைன்னு நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். தாறேன், படிச்சுப்பாருங்க. அந்த வாழ்க்கையிலே எல்லாருமே தீனிவெறியனுங்கதான். அதிலே எனக்கு கொதியன்னு பேருன்னா நான் எப்டி இருந்திருப்பேன்? தீனிப்பைத்தியம். எங்க எவரும் எதை தின்னுட்டிருந்தாலும் போயி வாய்பாப்பேன். கேப்பேன். அவங்க கீழே போட்டதை எடுத்து சப்பிப்பாப்பேன். துரத்தினாக்கூட போகமாட்டேன். என்னோட கொதிப்பார்வை ரொம்ப சக்தியானதுன்னு ஊர்லே பேச்சு. நான் சும்மா பாத்தாலே போரும், சாப்பிட்டவங்களுக்கு வயிறு உப்பிரும். அதுவும் நல்லதுதான். எனக்கு ஒரு துண்டாவது வீசி எறிஞ்சிருவாங்க.”
“அப்ப எங்கூர்லே ஃபாதர் பிரென்னன் வருவார். ஒரு சைக்கிள் வச்சிருந்தார். ரொம்ப சின்ன சைக்கிள். அதை ஓடையிலே எல்லாம் தூக்கி அந்தப்பக்கம் போவார். தென்னை மரப்பாலம் வழியா சைக்கிளை தூக்கி தலைமேலே வைச்சுகிட்டு நடப்பார். நல்ல வளத்தியான ஆள். அவ்ளவுபெரிய மூக்கு. அதிலே சின்னச்சின்னச் சிவப்பு பருவா இருக்கும். பச்சைக்கண், உதடே கிடையாது. பல்லு கூழாங்கல்லு நெறம். எப்பவுமே சிரிச்சுட்டே இருப்பார். ஆனா அவரை ரெத்தபூதம்னு ஊர்லே சொல்லுவாங்க. அவரைப் பாத்ததுமே பாதிப்பேர் ஓடிருவாங்க. தொப்புளை கூர்ந்து பாத்து கண்ணாலே ரெத்தத்தை உறிஞ்சிருவாருன்னு பயம்”
“ஆனா கொஞ்சம் கொஞ்சமாட்டு அவரு ஊரிலே பழகிட்டாரு. ஜெபம் பண்ணுவாரு, மருந்து குடுப்பாரு, கூடவே மந்திரமும் போடுவாரு. பேய்பிசாசுக்கு ஓதிக்கெட்டுதது, ஊதிவிடுறது எல்லாம் செய்வாரு. அப்டித்தான் ஜனங்க அவருகிட்டே நெருங்கினாங்க. நாங்கள்லாம் தூரத்திலே இருந்து பாத்து ‘ரெத்தபூதமே கூ!’ன்னு சத்தம்போட்டுட்டு ஓடிருவோம்…”னு ஃபாதர் ஞானையா சொன்னார். நான் அவர் பேசுறத பிரமைபுடிச்சு கேட்டுட்டு இருந்தேன்.
இப்ப அவரோட அந்த முகத்தை நேரிலெ பாக்கிற மாதிரி இருக்கு. அப்ப வேற மாதிரி இருப்பார். கட்டுமஸ்தான உடம்பு. சிரிப்பு மாறாத ஆளு. நல்ல கறுப்பு நெறம். நீளமுகம். பெரிய கண்ணும் பெரிய பல்லுவரிசையும் கருப்பு முகத்திலே பளிச்சுன்னு தெரியும். ஒரு மழைநாளிலே அவர் கல்லுமலை சர்ச்சிலே பிரேயர் பண்ணினது ஞாபகம் வருது. மழை இருட்டு. அவரோட பல்லும் கண்ணும் மட்டும்தான் தெரியுது… ஒரு மனுசனோட புன்னகையை அவன் உடம்பிலே இருந்து பிரிச்சு எடுத்து தனியா வைச்சதுமாதிரி
ஃபாதர் சூசைமரியான் தொடர்ந்து சொன்னார். ஃபாதர் ஞானையாவுக்கு அருமையான கனக்குரல். சில கருப்பு ஜாஸ் பாடகர்களுக்கு அப்டி குரல் உண்டு. பேசினா குரல் நம்மை அப்டியே சூழ்ந்துகிடும். குகைக்குள்ள நாம நிக்கிற மாதிரி இருக்கும். பாடினா கார்வை நம்ம வயித்திலே வந்து நிறையும். அன்னிக்கு அவரு ஒரு சம்பவம் சொன்னாரு. அதை இப்ப நினைச்சுகிட்டேன்.
ஃபாதர் ஞானையா எங்கிட்ட சொன்ன சம்பவம் இது. ஒருநாள் பிரென்னன் துரை ஊருக்குள்ள வாரப்ப நாலஞ்சுபேர் ஃபாதர் ஞானையாவை காட்டுகொடிகளாலே கையையும் காலையும் கட்டி தூக்கிட்டு போறாங்க. அவரு சின்னப்பையன் அப்ப. நல்லா அடிச்சிருக்காங்க. பையன் மயங்கி கிடக்கான். “எங்க தூக்கிட்டு போறீங்கன்னு” பிரென்னன் துரை கேட்டிருக்காரு.
“சாமி, இவன் உடம்பிலே மலைக்கூளிப் பேயி இருக்கு. இவனுக்க ஆத்மாவை அது தின்னுட்டுது. இப்ப உள்ள அதுதான் இருக்குது. அதனாலேதான் இவனுக்கு என்ன தின்னாலும் கொதி கூடிட்டே இருக்கு. ஊரிலே ஒரு குழந்தையும் ஒருவாய் சோறு திங்கமுடியல்லை. நேத்து சவுண்டனுக்க எளைய மக சுட்ட சீனிக்கிளங்கு திங்கிறப்ப இவன் அவ கீளே போட்ட தோலை எடுத்து தின்னிருக்கான். கொதி விளுந்துபோட்டு. குட்டிக்கு ராத்திரிக்கு கொடலுகுத்து வந்து துடிச்சா… காலம்பற செத்துட்டா… இனி இவனை விடமுடியாது. காட்டிலே கொண்டுபோயி போடுததுக்கு போறோம்’னு சொல்லுறாங்க.
“இந்த கூளியை இங்கே காட்டிலே விட்டா இவன் செத்ததும் அது திரும்பி இன்னொருத்தன் மேலே ஏறிடுமே”ன்னு பிரென்னன் துரை சொன்னாரு
அவனுக பயந்துட்டானுக. என்ன செய்யுறதுன்னு தெரியாம நின்னு தடுமாறினாங்க.
“எங்கிட்ட குடுங்க. நான் கூட்டிட்டுப்போயி பெரிய சாமியை வைச்சு கூளிய ஓட்டுறேன்… கூளி இங்க திரும்பி வராது” ன்னு பிரென்னன் துரை சொன்னாரு. அப்டியே பையனை குடுத்திட்டாங்க. சைக்கிளிலே வைச்சு கூட்டிட்டு வந்திட்டாரு.
ஃபாதர் ஞானையா அதுக்குப்பிறகு பதினெட்டு வருசம் பிரென்னன் துரைகூடத்தான் இருந்தாரு. சிலுவையை ஏத்துக்கிட்டு ஞானையாவா ஆனாரு. பிரென்னன் துரை அவரை படிக்கவைச்சாரு.
வளந்ததும் இவரே ஃபாதர் ஆகணும்னு பிரென்னன் துரை கிட்டே சொன்னாரு. ’இல்லே, நீ வாழ்க்கையை வாழ்ந்து பாரு… நீயும் உன் ஏழு தலைமுறையும் தின்னுகுடிச்சு சந்தோசமா இருந்தவங்க கிடையாது. நீ அப்டி இரு. அதாக்கும் கர்தருக்க சித்தம்’னு பிரென்னன் துரை சொன்னாரு. ‘நான் துறந்துட்டு வந்தேன்னா அதுக்கு காரணம் வேறே. எனக்கும் சேத்து என் அப்பா தாத்தா தலைமுறை அனுபவிச்சாச்சு.”
“இல்லே எனக்கு எதிலேயும் நிறைவு தோணல்லை. நான் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கமுடியும்’னு இவரு சொன்னாரு. ஆறுமாசம் கெடு குடுத்த பிறவு இவருக்க உறுதியைப்பாத்துட்டு பிரென்னன் துரை இவரை செமினாரியிலே சேத்துவிட்டாரு.
ஃபாதர் சூசை மரியான் சொன்னார். இதான் ஃபாதர் ஞானையாவோட கதை. அவரு எங்கிட்ட சொன்னாரு “என்னை ஏன் பிரென்னன் துரை காப்பாத்தினாருன்னு ஒரு தடவை சொன்னாரு. பசியுள்ளவனுக்குத்தான் ருசியிருக்கும். கொடும்பசியிருந்தா உலகமே இனிக்கும். நீ பசியுள்ளவன். நீதான் கர்தரோட கனியை ருசிப்பேன்னு தோணிச்சு’ன்னு. அது உண்மைதான். பசியா இருக்கேன். நானறிஞ்ச உணர்ச்சின்னா பசி மட்டும்தான்.”
நான் என்ன சொல்லுறதுன்னு தெரியாம உக்காந்திட்டிருந்தேன். ஃபாதர் ஞானையா சொன்னாரு “பாவப்பெட்ட சனங்க. பசிதான் அவங்களுக்கு எல்லாமே. அது வெறும் சோத்துப்பசி இல்லை. ஒண்ணுமே போய்விழாத அவ்ளவு பெரிய சூனியம் அவங்களுக்கு உள்ளே இருக்கு. அதை நிறைக்கிறதுக்கு உண்டான வெறியைத்தான் பசீன்னு நினைச்சுக்கிடுறானுக. கொண்டா கொண்டான்னு உடம்பும் மனசும் ஆத்மாவும் சத்தம்போடுது. அது அதலபாதாளம், ஆனா அள்ளிப்போடுதது அஞ்சுவிரல் கைப்பிடி…”
அந்த நாள் நல்லா ஞாபகமிருக்கு.வெளியே மழைக்காறலிலே மங்கலா இருக்கு. அறை பாதி இருட்டு. ஃபாதர் ஞானையாவுக்க பல்லும் கண்ணும் மட்டும் தெரியுது. அவரு பேசிக்கிட்டே போனாரு. சிலசமயம் நாம நமக்கு முன்னாடி இருக்கிறவங்களை சாமின்னே நினைச்சு பேசுவோம் இல்ல, அப்டி.
“நல்ல பசிவேணும்டேன்னு பிரென்னன் துரை சொன்னாரு. அதை நான் பிடிச்சுக்கிட்டேன். படிப்பிலே பசியோட இருந்தேன். அந்தப்பசிதான் இங்க கொண்டுவந்து சேத்துது. இங்க உக்காந்து இந்த சனங்களைப் பாக்குதேன். எறும்புக்கூட்டத்தை பாக்கிற மாதிரி இருக்கு. பசிவெறியிலே தீனி இல்லேன்னா அப்பவே செத்துடுவோம்கிற மாதிரி எறும்புகள் அலையுதத பாத்திருக்கேருல்ல, அதுமாதிரித்தான். பாவப்பட்ட ஜனங்கய்யா. பாவப்பட்ட ஜனங்க, ரொம்ப பாவப்பட்ட ஜனங்க. அதை மட்டும் சொல்லிட்டே இருங்க. இதாக்கும் ஞானமந்திரம். நல்லவங்களா கெட்டவங்களான்னு பாக்காதீங்க. அறிவுண்டா இல்லியான்னு பாக்காதீங்க. ரெட்சிக்கப்பட்டவங்களா இல்லையான்னு பாக்காதீங்க. பாவப்பட்ட ஜனங்க, பசிச்ச ஜனங்க. அதைமட்டும் பாருங்க. அவங்களை மேய்க்க நீங்க வரலை. அவங்களுக்கு குடுக்க மட்டும்தான் வந்திருக்கீங்க.”
நான் அழுதிட்டேன். ஃபாதர் ஞானையா எந்திரிச்சு வந்து என் தோளை தொட்டாரு. “சரி விடுங்க. உள்ள நல்ல போர்க் வறுக்குத மணம் வருது. வாருங்க ஓரோ பிடி பிடிப்போம்”னு சொல்லி கூட்டிட்டுப் போனாரு. போறவழியிலே எங்கோ பாத்துக்கிட்டு பேசினாரு.
“நமக்கு அப்ப முதல் இப்ப வரை வயித்துப் பசியும் ஜாஸ்தியாக்கும். பிரென்னன் துரை கூட வந்த நாள் முதல் இன்னைக்கு வரை ஒருநாள் ஒருவேளைகூட நான் இறைச்சி இல்லாம சோறு தின்னதில்லை பாத்துக்கிடுங்க. கோழியெல்லாம் நமக்கு பத்தாது. நல்ல போர்க் இல்லேன்னா பீஃப் வேணும். நல்லா கடிச்சு சவைச்சு தின்னாத்தான் தின்னமாதிரி இருக்கும். சொன்னா நம்பமாட்டீங்க, ராத்திரி பத்துமணிக்கு மூக்குமுட்ட தின்னுட்டு போயி படுப்பேன். நடுராத்திரியிலே முழிப்பு வரும். அய்யோ, சாப்பிடாம படுத்திட்டோமேன்னுதான் முதல் நினைப்பு. சமையலறையிலே சாப்பாடு இல்லியோன்னு மனசு பதைக்கும். அந்தாலே ஓடிப்போயி சட்டிபானைகளை உருட்டி அள்ளிப்போட்டு தின்னாத்தான் நிறைவு. ஒவ்வொருநாளும் காலையிலே கண்முழிக்கிறப்ப முதல் நினைவு கர்த்தாவுன்னா அடுத்த நினைவு தீனிதான்…” அவரோட முகம் அப்டி சிவந்து பழுத்தமாதிரி இருந்தது.
நான் பாத்திட்டே இருந்தேன். ஃபாதர் ஞானையா சிரிச்சுக்கிட்டே சொன்னார் “நான் அப்டி ஆயிட்டேன், என்னத்த சொல்ல? நம்மளைப் பத்தி கேட்டுப்பாருங்க. எந்த விருந்திலேயும் முதல் பந்திதான். அடிச்சுப்புரண்டு போயி உக்காந்திருவேன். சோத்தப்பாத்தா பிறகு என்னைய என்னாலே கட்டுப்படுத்திக்கிடமுடியாது. பிரசங்கத்திலே நான் சொல்லுத உதாரணமெல்லாம் தீனியப்பத்தித்தான்.கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள், சங்கீதம் முப்பத்துநாலு எட்டு. எனக்குப் பிடிச்ச பைபிள் வார்த்தை அதாக்கும். நாகர்கோயிலுகாரனுக சிரிப்பானுக. கொதியன் ஞானையான்னு இப்பமும் சிலர் சொல்லுறது உண்டு. சொல்லிட்டுப் போறானுக. நமக்கு கொதி இருக்கிறது வாயிலேயோ வயித்திலேயோ இல்ல, ஆத்மாவிலேயாக்கும்.”
நாங்க ரெண்டுபேரும் போய் உக்காந்து போர்க் எறைச்சியும் சப்பாத்தியும் சாப்பிட்டோம். ஃபாதர் ஞானையா சாப்பிடுறதைப் பாத்தா நிஜம்மாவே பயந்திருவோம். அப்டி அள்ளி அள்ளி சாப்பிடுவார். பூதங்கள் சாப்பிடுததுபோல. அவருக்கு தீனிப்பூதம்னும்பேரு உண்டு.
“எனக்கும் கொதி விழுறதுண்டு. அப்பப்ப வாயு ஏறிடும். புளிச்சஏப்பம் வந்திடும்… கொதிக்குன்னு ஒரு ஜெபம் வச்சிருக்கேன், செரியாயிடும்… நீங்க பாத்தியளே அந்த மந்திரவித்தையைக்கூட செய்யுறது உண்டு…. தண்ணியிலேன்னா பாதி தண்ணி உள்ள போகும். ஒயினிலேன்னா முழுசாட்டு உள்ளே போயிடும்”. அவர் சிரிச்சப்ப நானும் சிரிச்சேன்.
நான் கிளம்புறப்ப என் தோளிலே தட்டி ஞானையா சொன்னாரு. “தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து வாழணும்னு வேதம் சொல்லுது. எசக்கியேல் பதினெட்டு ஏழு. ஆனா பத்துபிள்ளை பெத்து ஒத்த கைப்பிடி சோறு வைச்சிருக்கிற அம்மைகிட்ட அதைச் சொல்லமுடியாது. இல்லாத கூட்டம் இது. அயலானுக்குக் குடுத்து தின்னா எல்லாரும் சேந்து சாவணும்னு இருக்கு வாழ்க்கை. அப்டித்தான் இருப்பாங்க. அம்மைகள் அப்டித்தான் இருந்தாகணும். அவங்க பிள்ளைகளை சாகாம காப்பாத்தணும்ல?”
நான் அவர் முகத்தை பாக்கலை. நான் வெளியே போறப்ப அவர் பின்னாடியே வந்து நின்னாரு. “நல்லபண்டாரம் நல்லவன். அவன்கிட்டே சொல்லிடுறேன்… மனசை பழக்கிக்கிடுங்க. தீனி திங்கிறவன் குற்றவுணர்ச்சி இல்லாம நிறைஞ்சு தின்னு சந்தோசப்படுற ஒரு காலம் வரும். அந்த நாளிலே எல்லாருக்கும் கைநெறைய என்னமாவது திங்கிறதுக்கு இருக்கும். அப்ப இதெல்லாம் மறைஞ்சிரும். பிதா-சுதன்-பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே”ன்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணினார்.
”அதுக்குப்பிறகு நான் பலமுறை ஃபாதர் ஞானையாவைச் சந்திச்சதுண்டு. நாங்க சேந்து நிறைய பயணம் செஞ்சிருக்கோம். அவரோட ஞானபுத்திரன்னு என்னைய சொல்லுவாங்க. அந்த முதல்நாளுக்கு பிறகு அவரைப்பத்தி புதிசாட்டு தெரிஞ்சுகிடிறதுக்கு எனக்கு ஒண்ணுமே இல்லை….” என்று ஃபாதர் சூசைமரியான் சொன்னார். புன்னகைத்து “மத்தவங்களுக்கு தமாஷா இருக்கும். திருவனந்தபுரம் பிஷப் ஹவுஸிலே பெரிய விருந்து. சாப்பிட்டுட்டு அப்டியே நாகர்கோயில் வாறோம். கோவளம் பக்கத்திலே ஒரு சின்ன ஓட்டலிலே வீட்டுச்சாப்பாடுன்னு போட்டிருந்தான். சாக்பீஸிலே பீஃப் பிரைன்னு எழுதியிருந்தான். இவரு அதைப் பாத்துட்டு நாக்கை நுணைச்சுக்கிட்டு வேய், நல்லாயிருக்கும் போல, சாப்பிட்டுப் போலாம்னு சொல்றார். என்ன சொல்ல? விடமாட்டார். இறங்கிப்போயி மறுபடியும் சாப்பிட்டோம். அவரோட மனசும் வயிறும் எலாஸ்டிக்காலேன்னு சொல்லுவாங்க”
ஃபாதர் சூசைமரியான் தனக்கே என சொல்லிக்கொண்டே போனார். “இங்க நோன்பிருந்து பட்டினியாலே மெலிஞ்ச பலபேர் உண்டு. ஆனா சாமானிய ஜனங்கள் ஃபாதர் ஞானையாகிட்டதான் வருவாங்க. அவருதான் அவங்களுக்கு நெறைஞ்ச சாமி. அவரு தொட்டா நோய் குணமாகும், ஜெபிச்சா ஆண்டவருக்குக் கேட்கும். அப்டி ஒரு நம்பிக்கை. அவரும் அவங்களுக்க ஆளுதான். அம்பதாண்டுகள் அவங்களுக்க எல்லா சுகதுக்கங்களிலேயும் கூட இருந்தவர். அவர் இந்த சனங்களுக்குச் செய்த அளவுக்கு செய்தவங்க யாருமில்லை.”
அதன்பின் அவர் பேசாமல் வெளியே பார்க்க ஆரம்பித்துவிட்டார். ஏசுதாசன் செல்போனை நோண்ட ஆரம்பித்தான். நான் அவர் சொன்னதை தொகுத்துக் கொள்பவன்போல யோசிக்க ஆரம்பித்து வேறெங்கோ சென்றுவிட்டேன்.
அம்பலமுக்கு சென்று சேர்ந்தபோது வெயில் ஏறியிருந்தது. நேராக சாப்பிடத்தான் சென்றோம். ஃபாதர் ஞானையா தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர் விழித்துக்கொண்டதும் அவர் வீட்டுக்குச் சென்றோம்.
ஓட்டுவீடு. வெளியே தெரிந்ததைவிட அதிக இடம் உள்ளே இருந்தது. உள்ளே தாழ்வான கட்டிலில் ஃபாதர் ஞானையா படுத்திருந்தார். அருகே ஒர் உதவியாளன் நின்றிருந்தான். கம்பவுண்டர் பையன். நாங்கள் வருவதைச் சொல்லியிருந்தார்கள். அவர் விழித்திருந்தார். அவர் உடல் முதுமையால் மிகவும் வற்றியிருந்தது. ரத்தக்குறைவால் உடலின் கருமை வெளிறியிருந்ததாக தோன்றியது. சுருங்கிய தோல் எலும்புகள்மேல் தளர்வாக படிந்த கைகள் தசைகள் வற்றி
விவாதம்,மொழி, எல்லைகள்
விவாதங்கள் நடுவே-கடிதங்கள்
விவாதமொழி- கடிதம்
இந்துவும் இந்துத்துவரும் – கடிதம்
அன்புள்ள ஜெ,
பேச்சு நாகரீகம் பற்றிய உங்கள் குறிப்பையும் அதற்கு வந்த கடிதத்தையும் பார்த்தேன். எச்சப்பொறுக்கி என்ற வசைதான் உங்களைப்பற்றி வந்த வசைகளில் உச்சம் என நினைக்கிறேன். இந்துத்துவ அமைப்பில் உயர்பொறுப்பில் இருப்பவர் ஒருவர் அப்படி வசைபாடிக்கொண்டிருக்கிறார் என்பதும் இங்கே பேசும் இந்துத்துவர்கள் அனைவரும் அவரை ஆதரிக்கிறார்கள் என்பதும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அவர்களின் நாகரீகம் அப்படி. ஒரு மார்க்ஸியர் உங்களை ஃபாஸிஸ்ட் என்று திட்டுவார். இவர்கள் இப்படி சாதியவசை தவிர என்ன சொல்லிவிடமுடியும்?
ஆனால் எனக்கு ஆச்சரியம் இடதுசாரி என்று சொல்லிக்கொண்டு ஒருவர் உங்கள் மீதான விமர்சனமாகத் தொகுக்கும் நூலில் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகளே இல்லை என்பதுதான். அதில் பலர் குட்டிக்குட்டி எழுத்தாளர்கள். இலக்கிய அங்கீகாரத்துக்கு ஏங்கி, அது கிடைக்காமல் மனம் குமைபவர்கள். பல்வேறு மொழி, இன, ஃபாஸிச குழுக்களைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளனர். இவர்களை இணைத்துக்கொண்டுதான் ஒரு விமர்சனத்தை உங்கள்மேல் உருவாக்கும் நிலையில் இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பது.
அருண். ஆர்
அன்புள்ள அருண்,
இடதுசாரி அரசியல் இன்று வழிகாட்டுதல் இல்லாமல் நசிவுற்று ஒரு வசைவெளியாக உள்ளது. பழைய பெருந்தலைகள் களத்தில் இல்லை. வாசிப்பில்லாத, வாசித்தாலும் புரிந்துகொள்ளும் திராணியற்ற சில்லுண்டிகள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே எவர்மேலும் தங்கள் கோட்பாடு, தத்துவம் சார்ந்து அழுத்தமான விமர்சனங்களை முன்வைக்க அவர்களால் இன்று இயலாது. நையாண்டிகள், இடக்குகள், வசைகள் மட்டுமே இயலும்.
இந்த விமர்சகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் சொந்தக் காழ்ப்புகளுக்கு அரசியல்நிறம் பூசி முன்வைப்பவர்கள். உதாரணம், யமுனா ராஜேந்திரனேதான். மிகப்பெரும்பாலும் இந்த விமர்சனங்களெல்லாம் அந்தந்த காலகட்டத்து தனிநபர் காழ்ப்புகள். தாழ்வுணர்ச்சிச் சிக்கல்கள்.
ஓர் உதாரணம், ஓர் ஈழத்துப் பெண்மணி. ஏதோ நாவல் எழுதியிருந்தார். அப்படி எத்தனையோ பெண்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான் அந்நாவலைப் பற்றி ஒருவரிகூட சொன்னதில்லை. அவரைப்பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. ஆனால் அவரை நான் தீவிரமாக எதிர்க்கிறேன் என அவரே கற்பனை செய்துகொண்டார். கொதிப்படைந்து எழுதி பேசி வசைபாடி பத்தாண்டுகளை கடந்துவிட்டார். இன்றும் தகித்துக் கொண்டிருக்கிறார்.
என்னிடம் பலர் கேட்பார்கள் ”அந்தம்மாவை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள்?” என்று. “என் விமர்சனத்தை எங்கே படித்தீர்கள்?” என்று கேட்பேன். திகைப்பார்கள். ”நான் ஒரு சொல்கூட சொன்னதில்லை, சொல்லப்போவதுமில்லை” என்பேன். இந்தவகையான கற்பனைப் பயங்களை எவர் எதிர்கொள்ளமுடியும்?
ஒருவித நிழல்போர் இது. தன் படைப்பை நான் ஏற்கப்போவதில்லை என்று அவர்களே எண்ணிக்கொள்கிறார்கள். அந்த எண்ணத்தை சோர்வாகவும் கசப்பாகவும் ஆக்கிக்கொள்கிறார்கள். அதன்பின் கொப்பளிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களில் மிகப்பெரும்பாலானவர்களைப் பற்றி நான் ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை. உண்மையில் பலருடைய பெயர்களையே நான் கேள்விப்பட்டதில்லை. அவர்களைப் பற்றி இனிமேலும் பேசப்போவதில்லை.
மிக அரிதாகச் சிலரைப்பற்றி ஓரிரு வரிகள் மென்கேலியாகச் சொல்லியிருப்பேன். அவர்கள் மீதான கனிவுடனேயே சொல்கிறேன். அவர்கள் எழுதியவற்றின் மேல் எனக்கு எந்த மதிப்பும் ஈடுபாடும் இல்லாமலிருக்கலாம், அவர்கள் என்னை வசைபாடுவதை நான் அறிந்துமிருக்கலாம். ஆனாலும் அந்த கனிவு உண்டு.
ஏனென்றால் எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச்சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவர். அவர் எனக்கு அணுக்கமானவர்தான்.
ஒருவரின் படைப்பிலக்கியச் செயல்பாட்டை நான் நிராகரிப்பதில்லை. ஓர் இலக்கியத்தோல்வியை கொண்டாடுவதுமில்லை. அரிதாக, சிலர் சிலவகை பாவனைகளை கொண்டு மேட்டிமை நடிக்கும்போது, அதனூடாக சில திரிபுகளை உருவாக்கும்போது மட்டும் கூர்மையாக அவர்களின் இடம் உண்மையில் எவ்வளவு என்று சுட்டுகிறேன். அதுவும் ஒன்றுக்கு இருமுறை யோசித்தபின்பு.
சூழலில் எழும் பெரும்பாலான காழ்ப்புகளின் அடியில் சாதி, மதம் ஆகியவை இருப்பதை அறிய அறிய சோர்வுறுகிறேன். அரசியல்நிலைபாடு என்று சொல்வார்கள், ஆனால் அது எந்தவகையான கொள்கையும் சார்ந்தது அல்ல. சாதி,மதம் சார்ந்த தன்னல நோக்கும் பிறன்வெறுப்பும் மட்டுமே அவர்களை இயக்குகிறது.
இந்த இணைய ஊடகம் இல்லாத காலகட்டத்தில் இதெல்லாம் பெரிதாக வெளியே தெரிந்ததில்லை. இன்று ஒவ்வொரு கருத்துக்கும் பின்னாலிருக்கும் உண்மையான ஆளுமை எது என எளிதில் காணமுடியும். ஈவேரா, அம்பேத்கர் அல்லது மார்க்ஸ் படம் வைத்துக்கொண்டு, இந்துவெறுப்பையும் இந்திய எதிர்ப்பையும் கக்குபவர் அதிதீவிர பெந்தேகோஸ்து கிறிஸ்தவர் அல்லது இஸ்லாமியர் என்று அறியும்போது அறிவியக்கம் மீதான நம்பிக்கை தளர்கிறது. இந்த போலி உணர்ச்சிகளுடன் எவரும் உரையாடமுடியாது. ஒவ்வொருவரையும் புலனறிவதும் வெட்டிவேலை.
காழ்ப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? எதிர்ப்பு என்பது கொள்கை சார்ந்தது, நிலைபாடு சார்ந்தது. அவ்வாறு எதிர்ப்பவர் எதிர்க்கப்படும் தரப்பை சரியாக தொகுத்துக்கொள்வார். எதிர்க்கப்படுபவரின் சொற்களையோ கருத்துக்களையோ மிகத்துல்லியமாக தொகுத்துக்கொள்வார். எதிர்க்கப்படுபவர் எதை முன்வைக்கிறாரோ அதற்கு மறுப்பை முன்வைப்பார்.
காழ்ப்பாளருக்கு கருத்து முக்கியமே அல்ல. அவருக்கு எதிரி மட்டும்தான் இருக்கிறார், எதிர்த்தரப்பு இல்லை. ஆகவே எதிரியை தனக்கு வசதிப்பட்டபடி புனைந்துகொள்கிறார். தான் எதிர்க்கும், வெறுக்கும் எல்லா குணாதிசயங்களும் கொண்டவராக அவரை தொகுத்துக்கொள்கிறார். அதற்கேற்ப எதிரியின் எல்லா சொற்களையும், தர்க்கங்களையும் திரிக்கிறார். அதன்பின் வசைபாட ஆரம்பிக்கிறார்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். நான் ஷோபாசக்தி பற்றிய ஒரு விவாதத்தில் சொன்னேன். ஷோபா சக்தி தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். அவரை எவரும் விமர்சனம் செய்யலாம், ஆனால் இழிவுபடுத்துவதும் அவதூறுசெய்வதும் நம் இலக்கியச்சூழலை நாமே அழிப்பதற்குச் சமம். அதைச் செய்யக்கூடாது. உளச்சிக்கல்களும் காழ்ப்புகளும் அதற்கு இடமளிக்கலாகாது.
அதை இடதுசாரி இதழ் ஒன்று இப்படி புரிந்துகொண்டிருக்கிறது. ‘எழுதுபவர்களை வாசிப்பவர்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்று ஜெயமோகன் சொல்கிறார்’ ஒரு தலையங்கமே எழுதியிருக்கிறது.எழுத்ததிகாரம் ! சொல்லதிகாரம் !!-ஆசிரியர் குறிப்பு இந்த தலையங்கம் மட்டுமல்ல இதழ் முழுக்கவே இதேவகையான அறியாமையின் களிநடனம்தான்.
காழ்ப்பும் அறியாமையும் சரிவரக்கலந்தால் உருவாகும் மழுங்கல் இது. இதனுடன் உரையாடவே முடியாது. இந்த தரப்பை மட்டும் வாசித்துவிட்டு ‘அதெப்படி, வாசிப்பவன் எழுதுபவனை விமர்சிக்கக்கூடாதா?” என்று ஒரு கூட்டம் கொந்தளிக்கும். அவர்களுக்கு ஒரே ஒருமுறை நான் சொன்னதென்ன என்று சுட்டி கொடுக்கலாம். அதன்பின் அவர்கள் ஆடி நிறைய விட்டுவிட்டவேண்டியதுதான்.
நான் பலமுறை சொன்னதுபோல இதெல்லாம் என்றுமுள்ளது. இன்று எல்லா சொற்களையும் வெளியிட வெளி உள்ளது. ஆகவே இவை மிகப்பெரிதாகத் தெரிகின்றன
ஜெ
ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்
[image error]
அன்புள்ள ஜெ,
என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான “ஆள்தலும் அளத்தலும்” தற்போது சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. “யாவரும்- பதாகை” பதிப்பகத்தார் இதை வெளியிடுகின்றனர்.
முதல் சிறுகதை வெளியானது 2016ல். அதற்கு நீங்கள் எழுதிய விமரசனம் எனக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைந்தது (சிறுகதைகள் என் மதிப்பீடு -2). அதில் இவ்வாறு கூறியிருந்தீர்கள்..
“ஆனால் இன்னொரு வகையில் அது எளிதுதான். ஏற்கனவே கதைகள் சொல்லப்பட்டுவிட்ட முறைமைகளை உணர்ந்து அத்தகைய கூறுகளை தவிர்த்து விட்டால் நம் வாழ்வில் எஞ்சுவது எதுவோ அது எல்லாமே புதிய விஷயமாகவே இருக்கும். காளிபிரசாத் அப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும் தொடர்ந்து எழுத வேண்டுமென்றும் விரும்புகிறேன்.”
இதை நான் தீவிரமாக கருத்தில் கொண்டேன். இன்று இந்த தொகுப்பை தள்ளி நின்று பார்க்கையில் எனக்கு தனிப்பட்ட முறையில் மனநிறைவை அளிக்கிறது.
இந்த தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். அவருடன் நான் தனியாக உரையாடியது ஊட்டி காவிய முகாமில்தான். அதைத் தொடர்ந்து உங்களுக்கு எழுதிய கடிதத்திலேயே அவர் எனக்கு எந்தளவு ஆதர்சமாக இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.(மொகித்தே நூல் பற்றிய கட்டுரை). நான் சிறுகதை தொகுப்பு வெளியிடுவேன் என்றும் அதற்கு அவர் முன்னுரை எழுதுவார் என்றும் அன்று நானே அறிந்திருக்கவில்லை.
அவ்வப்போது வாசிப்பது என்று இருந்தவன் அன்று ஊட்டி முகாம்நாள் புது நண்பர்களைப் பெற்றேன். என்னுடைய எழுத்தில் சிந்தனைப்போக்கில் நம் நண்பர்களுடனான உரையாடல்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்
சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர். நாஞ்சில் நாடன் அவர்களின் முன்னுரை
பண்ணைக்கு ஒருவன்- நாஞ்சில்நாடன் முன்னுரை
ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரை- காளிப்பிரசாத்
புத்தகம் ஆன்லைனில் வாங்க,
https://www.be4books.com/product/ஆள்தலும்-அளத்தலும்/
சென்னை புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கிலும் புத்தகம் கிடைக்கும். அரங்கு எண்: 95
அன்புடன்,
R.காளிப்ரஸாத்
ஒரு பயணம்
வணக்கம் சார்,
தங்கள் பயணக்குழுவை முன்னுதாரணமாகக் கொண்டு இனிதே தொடங்கியது எங்கள் பயணம். ஆம். 2019-ல் ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில் கலந்துகொண்ட சில நண்பர்கள் ஒன்றிணைந்து ஜனவரி 16, 17 தேதிகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மீனாட்சிபுரம் சிற்பங்கள், குடைவரை சிவன் கோயில், கூடல் அழகர் கோயில், நாயக்கர் மஹால், அழகர் கோயில் ஆகிய இடங்களுக்கு ஒரு சிறு பயணம் மேற்கொண்டோம். சென்னையிலிருந்து ஜெயராம், கோவையிருந்து ஆனந்த், மதுரையிலிருந்து வேலாயுதம் ஆகியோர் இணைந்து முதல் நாள் பயணத்தை தொடங்க, நான் இரண்டாம் நாள் அவர்களுடன் இணைந்து கொண்டேன்.
பயணங்களில் சிறகுகள் முளைப்பதை உணர முடிகிறது. குடும்பம் மற்றும் அலுவலகச் சூழலுடன் தொடர்பற்ற அதே நேரத்தில் நமது ஆளுமையை வளர்க்கவும் கூடிய ஒரு குழுவின் நிகரற்ற தன்மை மனதை நெகிழச் செய்து நிறைவளிக்கிறது.
பயணத்தின் முடிவில், அழகர் கோயிலின் சூழலில் அந்தி மாலையின் இளங்குளிரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஒரு இனிமையான உரையாடலை நிகழ்த்தினோம். மறக்கமுடியாத ஈரோடு சந்திப்பு உரையாடல் நினைவுகளுடன் விரைவில் மற்றொரு பயணத்திற்கான திட்டமிடலுடன் பிரிந்து சென்றோம்.
கட்டிடக்கலையும் சிற்பங்களும் நம் நிலப்பரப்பில் எங்கும் நிறைந்து மனித வாழ்வின் புதிரான வெறுமையை நீக்க சிறந்த வாய்ப்பினை அளிக்கின்றன.
இந்த பயணத்திற்குப் பிறகு எங்கள் ஊரைச் சுற்றி எத்தனை சிறப்புமிக்க கட்டிடங்கள் சிற்பங்கள் உள்ளனவோ அவற்றை எல்லாம் நேரில் சென்று புதிய கண்களுடன் பார்வையிடும் எண்ணங்கள் மனதில் உதயமாகின்றன.
உண்மையில், வாழ்வின் படிநிலைகளில் ஒரு புதிய வாசல் திறந்திருக்கிறது. எண்ணற்ற இத்தகைய மாற்றங்களுக்கும் மறுமலர்ச்சிக்குமான விதைகள் தங்கள் இணைய தளத்தில் விரவிக்கிடக்கின்றன.
தங்களின் வழிகாட்டலுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
– சுப்ரமணியம் குருநாதன்
தோழமைத் திருட்டு
அன்புள்ள ஜெ
உங்களுக்காக இந்த தகவல். இது தமிழ்மணி சிவக்குமார் என்னும் இடதுசாரி எழுத்தாளரின் பொதுவெளிப் பதிவு இது. இவர் பகத் சிங் எழுத்துக்களை “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். அச்சில் வந்து புகழ்பெற்ற அந்நூலையும், வேறுசில கட்டுரைகளையும் திருடி அப்படியே பாரதி புத்தகாலயம் நூலாக வெளியிட்டிருக்கிறது. பாரதி புத்தகாலயம் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியால் நடத்தப்படுவது. அந்த திருட்டு நூல் ‘விடுதலைப் பாதையில் பகத்சிங்’ என்ற பேரில் நூலாக வெளிவந்தது.
தமிழ்மணி சிவக்குமார் இது தன் நூலின் திருட்டு என நிரூபித்தார். அவருடைய நூலில் இருந்த சிறு எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் எல்லாமே அப்படியே பாரதி புத்தகாலய நூலில் இருந்தன. அவரே சொந்தக்கருத்துக்களாக சிலவற்றையும் பகத்சிங் வார்த்தைகளாகச் சேர்த்திருந்திருக்கிறார். அவையும் அப்படியே திருட்டு நூலில் இருந்திருக்கின்றன. பகத்சிங்கின் மூலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கக்கூட இல்லை.
இதை நீதிமன்றத்தில் நிரூபித்து நூலுக்கு தடைவாங்கினார் ஆசிரியர். ஆனால் அதன்பின்னரும் பாரதி புத்தகாலயம் அதே நூலை அப்படியே இரண்டாம்பதிப்பாகக் கொண்டுவந்து விற்றுக்கொண்டிருக்கிறது. இனி நீதிமன்ற ஆணை மீறப்பட்டதற்காக இன்னொருமுறை நீதிமன்றம் செல்லவேண்டும் என்ற நிலை.
ஆகவே வாசகர்களிடம் இதை முன்வைத்து இந்நூலை அவர் எழுதியிருக்கிறார்.
என்.ராமகிருஷ்ணன்
அன்புள்ள என்.ராமகிருஷ்ணன்,
இது இடதுசாரிகளுக்குப் புதியது அல்ல. அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றே. அவர்கள் எதையும் செய்யலாம், நியாயப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் பதிப்பகமான நியூ செஞ்சுரி பதிப்பகம் வளர்மதி, பிரபஞ்சன் உட்பட சிலருடைய நாடகங்களை அவர்கள் அறியாமல், உரிமையேதும் வாங்காமல் , நூலாக வெளியிட்டு கல்லூரியில் பாடமாக ஆக்கியது. பல பதிப்புகள் கொண்டுவந்த பின்னரே ஆசிரியர்களுக்கு அச்செயல் தெரியவந்தது. அவர்கள் நீதிமன்றம் செல்வோம் என மிரட்டினர். நல்லக்கண்ணு ‘பஞ்சாயத்து’ செய்துவைத்தார். ஒரு சிறுதொகை தர ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அதுவும் தரப்படாமல் நூல் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டது. இதை வளர்மதி எழுதியதாக நினைவு
இடதுசாரிகளுக்கு பெரிய அளவில் எங்கும் கைவைக்க இங்கே வாய்ப்பில்லை.ஆகவே பிச்சைக்காரனின் சட்டியிலிருந்து எடுக்கிறார்கள். சுஜாதாவின் ‘வந்தவன்’ என்னும் நாடகத்தில் ஏழை ஓட்டல்காரரிடம் இலவச உணவையும் வாங்கி உண்டுவிட்டு, கத்தியைக் காத்தி நூறு ரூபாயை திருடிக்கொண்டு செல்லும் இளைஞன் சொல்வான். “என் நிலைமைக்கு என்னால் உன்னைப்போன்ற அப்பாவியிடம்தான் திருட முடியும். என்னை மன்னித்துவிடு”
ஜெ
காந்தியும் தருமனும்
மிகச்செறிவான உரை. வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன் ஒரு காவியத்தில் பாத்திரப்படைப்பு குறித்து எழுதுவது எளிதான செயல் அல்ல. அதுவும் பள்ளியில் இந்தியை ஆரம்பப்பாடமாக எடுத்ததாகச் சொல்கிறீர்கள். அதற்கான சுவடே கட்டுரையில் தெரியவில்லை என்பதே உண்மை (சில எழுத்துப் பிழைகளைத் தவிர). பாத்திரப்படைப்பை ஒன்றன்பின் ஒன்றாக செறிவான முறையில் அடுக்கி ஒரு சிறந்த வாசிப்பை முன்வைத்திருக்கிறீர்கள். குறிப்பாக கம்சனையும் ராதையையும் வைத்து நீலம் எழுதப்பட்டதை பழுக்கக் காய்ச்சிப் பிறகு தண்ணீரை ஊற்றுவதற்கு நீங்கள் ஒப்பிட்டிருந்தது மிகவும் பிடித்திருந்தது.
காந்தியும் தருமனும்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

